Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 15 : பசியாற்றிய பரமன்

அந்த நீண்ட வீட்டின் வாசல் திண்ணையில் ஒருவர் படுத்திருந்தார். வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அங்கே நின்று கணபதி பசிக் கொடுமையை பிரஸ்தாபித்து ஒரு ஸ்லோகம் படித்தார். திண்ணை ஆசாமி உருண்டார். உறக்கம் உதறினார். எழுந்து உட்கார்ந்தார்.

“யாரப்பா நீங்கள்? உள்ளூர்வாசி போலத் தெரியவில்லையே! உங்களுக்கு இந்த ராவேளையில் என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“நாங்கள் ஆந்திர தேசத்தவர்கள். க்ஷேத்ராடமாக காஞ்சீபுரம் வந்தோம். பின்பு அங்கிருந்து அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்திருக்கிறோம். இதோ இவன் என்னுடைய இளைய சகோதரன். கொடும் பசியில் துடியாய்த் துடிக்கிறான். இந்த அகாலத்தில் சத்திரம்சாவடியெல்லாம் மூடிவிட்டார்கள். அன்னம் கேட்ட வீட்டிலெல்லாம் இன்றைக்கு ஏகாதசியென்று அடுக்களையை அலம்பிவிட்டு நித்திரைக்குப் போய்விட்டார்கள். உங்களால் இவனுக்கு அன்னமிட்டு பசிப்பிணியைப் போக்க முடியுமா?” என்று கேட்டார்.

“ஆஹா! இது தெய்வ சங்கல்பம். தெய்வ சங்கல்பம்” என்று பரவசமடைந்தார் அந்த திண்ணை ஆசாமி.

கணபதியும் சிவராம சாஸ்திரியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர் தொடர்ந்தார்..

”என்னுடைய மனைவி இப்போதுதான் விரதம் முடித்தாள். விரதம் முடித்த பின்னர் ஒவ்வொரு தடவையும் இரண்டு பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து தக்ஷி்ணை கொடுப்பதாக வேண்டுதல். ஏகாதசியாதலால் இரவு போஜனத்திற்கு பிராமணர்கள் கிடைக்கவில்லை என்று கவலையாய் பூஜையறையில் இருந்தாள். கொஞ்சம் இந்த திண்ணையில் அமருங்கள். உள்ளே அழைக்கிறேன்” என்று துள்ளிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினார்.

பத்து விநாடிகள் அமைதியாய் கழிந்தது. சிவராம சாஸ்திரிக்கு வயிறு கடபுடவென்று பசியில் திட்டியது.

“வாருங்கள்..வரவேண்டும்.. வரவேண்டும்..” என்று உள்ளிருந்து தம்பதி சமேதராய் அழைப்பு திண்ணைக்கு வந்தது.

அவ்வீட்டின் நடுக்கூடத்தில் திறந்த மித்தம் இருந்தது. அதன் நடுவில் காவி தீட்டப்பட்டத் துளசிமாடமும் அதனருகில் அகல் விளக்கும் சுடர் விட்டு எரிந்தது. வீடே அலம்பி துடைத்துவிட்டாற் போல துப்புரவாக இருந்தது. பூஜை முடிந்ததற்கு அடையாளமாக வாசனாதிகளின் நறுமணம் நாசியை நிறைத்தது. அவரது மனைவி மடிசார் கட்டில் கையெடுத்துக் கும்பிடும் படியாக லக்ஷ்மி கடாக்ஷமாக இருந்தார்கள். கணபதிக்கு நிறைவாக இருந்தது.

இலை போட்டு விருந்து பரிமாறினார்கள். அருகிலிருந்து தம்பதிகள் இருவரும் அனுசரணையாகப் பந்தியைக் கவனித்தார்கள். கூட்டு, கறி, பாயஸம், ரசம் என்று சிவராம சாஸ்திரி ”யதேஷ்டம்... யதேஷ்டம்” என்று மூக்கில் ஒரு பருக்கை வரும் வரை சாப்பிட்டார். கணபதிக்கு பசியேயில்லை. சாஸ்திரத்திற்கு கொஞ்சம் சாப்பிட்டுக் கையலம்பினார். சிவராம சாஸ்திரியின் அகோரப் பசி அடங்கியது.

இருவரையும் நிற்க வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர். தாம்பூலமும் தக்ஷிணையும் கொடுத்தார்கள். அங்கிருந்து விடைபெற்று இருவரும் ஒரு சத்திரத் திண்ணையில் படுத்து உறங்கினார்கள்.

பொழுது புலர்ந்தது. பட்சிகள் இரை தேடப் பறந்தன. அருணை மலையடிவாரத்தில் பரமாத்மாவிடம் சமர்ப்பிப்பதற்காக ஜீவனைக் கழிக்கும் சில ஜடாமுடி அடியார்களின் நடமாட்டம் தெரிந்தது. நேற்றிரவு தடபுடலான விருந்து அளித்தவர்களுக்கு நன்றி சொல்ல இருவரும் புறப்பட்டார்கள். அந்தத் தெருவில் பல முறைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் நேற்று பார்த்த அந்த வீடு மட்டும் அகப்படவில்லை. கணபதிக்கே தனது நினைவாற்றலின் வழுக்கலைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. தப்பாக இரண்டு வீடுகள் ஏறி இறங்கினர். மொத்தமே இருபது இருபத்தைந்து வீடுகள் இருந்த அந்த தெருவில் விஜாரித்ததில் ”அறுபது வருஷமா இங்கே இருக்கேன். நீங்க சொல்லும் அடையாளத்தில் இங்கே யாரும் ஜாகையில்லையே...” என்று ஒரு மேலுக்கு துண்டு போர்த்திய வயோதிகர் ஒருவர் சொன்னார். கணபதிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இது இறைவனின் திருவிளையாடல் என்று புரிந்தது. அந்த வீதியிலிருந்து திரும்பிப் பார்த்தால் அருணை மலை கம்பீரமாக நிற்பது தெரிந்தது.

ஜோதி ஸ்வரூபனான சிவபெருமானே அங்கே மலையாய் நிற்கிறான். உள்ளொளி பெருக்கினால் அம்மலையில் அக்னி ஸ்வரூபமாய் சிவனிருப்பது நமக்கு பிடிபடும். கோயில் கர்ப்பக்கிரஹத்தில் குடியிருக்கும் லிங்க ரூபமும் பரந்து நிற்கும் மலையும் ஈஸ்வரனே என உணர்ந்தார் கணபதி. ஹர..ஹர.. என்று சகோதரர்கள் இருவரும் அங்கிருந்தே கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். ஆத்ம பிரதக்ஷிணம் செய்தார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் கணபதி அருணாசலேஸ்வரரின் பரம பக்தரானார். அவரது தவ வாழ்வில் திருவண்ணாமலையில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது.

சிவராம சாஸ்திரியும் கணபதியும் மூன்று நாட்களுக்கு அந்த சத்திரத்தில் தங்கினர். யாத்ரீகர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் அனுமதியில்லை. கணபதி அங்கு வசிக்கும் தர்மிஷ்டர்களை இன்னும் ஒரு வாரத்திற்கு ஆளுக்கொரு நாள் அவர்களுக்கு அன்னமிட முடியுமா என்று தேடினார். நான்கு பேர் கிடைத்தனர். அவர்களும் பகல்பொழுதில் மட்டும் போஜனம் அளிக்க முன் வந்தனர்.

கணபதிக்கு ஒரு பொழுது பிடி உணவு போதும். ஆனால் இளையவர் சிவராம சாஸ்திரியால் பட்டினி கிடக்க முடியவில்லை. “நீயானும் வீட்டிற்கு செல்லேம்பா..” என்று கெஞ்சினார் கணபதி.

இந்த இக்கட்டான நிலையில் இறைவனைத் துதித்து பாடிய ஸ்லோகத்தின் சாராம்சம்.

“இறைவா! வாழ்வாதாரத்தை தர மறுக்கும் நீயா எனக்கு ஆனந்தமயமான முக்தியளிக்கப் போகிறாய்? ஒரு பொட்டு மஞ்சளை கொடுக்க மறுக்கும் வியாபாரி கடையையே தூக்கிக் கொடுத்துவிடுவானா?”

இதிலெல்லாம் சற்றும் மனம் தளராத கணபதி அண்ணாமலையில் தனது தீவிர தவத்தைத் தொடர்ந்தார். அருணாசலேஸ்வரரைத் துதித்து ஆயிரம் ஸ்லோகங்கள் அடுக்கடுக்காகப் புனைந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்லோகத்தை அருணாசலேஸ்வரர் சன்னதியில் நின்று பண்ணோடு பாடுவார். படித்தவர்களும் பாமரர்களும் நிதமும் இந்த அற்புத ஸ்லோகங்களைக் கேட்க பெருமளவில் கூடுவர். கார்த்திகை திருநாளுக்கு இரண்டு நாட்கள் முன்னர் ”ஹர சஹஸ்ரம்” என்ற இந்த ஆயிரம் ஸ்லோகங்களை பூர்த்தி செய்தார்.

ஆயிரம் ஸ்லோகங்களைப் பூர்த்தி செய்தவுடன் ஊரின் சில முக்கியஸ்தர்கள் கணபதிக்கு அங்கிருந்த சம்ஸ்கிருதப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு ஏற்பாடு செய்தனர். சிவராம சாஸ்திரியையும் போஷிப்பதாக ஊக்கமளித்தார்கள். இச்சமயத்தில் சிவராம சாஸ்திரி “அண்ணா! நான் வீட்டிற்கு திரும்புவதாக உத்தேசித்துள்ளேன்” என்று திரும்பினார். கணபதி மறுப்பேதும் சொல்லாமல் சட்டென்று ஒப்புக்கொண்டார்.

அதுவரை கணபதிக்கு தமிழில் எழுத்துக்கூட்டக் கூடப் பரிச்சியமில்லை. விண்ணில் அமாவாசையிலிருந்து அரைவட்ட நிலவு ஆவதற்குள் தமிழ் கற்றுக்கொண்டு அம்மாணவர்களுக்கு சம்ஸ்க்ருதத்தை அர்த்தப்பூர்வமாகப் போதித்தார். அவரது விசாலமான அறிவும் எதையும் கப்பென்று கற்பூரமாய்ப் பிடித்துக்கொள்ளும் திறமையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பரவ ஆரம்பித்தது. மக்கள் அவரிடம் கோஷ்டியாகக் கூட ஆரம்பித்தனர். பின்னாலேயே எப்போதும் ஐந்தாறு பேர் ஊர்வலம் வந்தார்கள். இதுபோன்ற நட்சத்திர அந்தஸ்துகள் அவரது தவத்தைக் கெடுத்தன.

ஒரு நாள் கணபதி அருணை மலையில் ஏறிய போது...

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_15‬
‪#‎கணபதி_முனி‬

நீலா டீச்சர்!

அனாமதேய நம்பரிலிருந்து ஒரு அழைப்பு.

”ஹலோ..”

"இது நீலா டீச்சர் வீடுங்களா?”

“ஆமா. நீங்க..”

“நானு ரேணுகா பேசறேங்க.. நெடுவாக்கோட்டையிலேர்ந்து..”

“யாரு நீங்க?...”

“நானு அவங்ககிட்டே படிச்சவங்க.. அவங்களோட பிரிவு உபசார விளாவுல ஒரு கவிதை எளுதி கண்ணாடி ப்ரேம் போட்டுக் கொடுத்தேங்க.. ரெண்டு பக்கமும் மயில் வரைஞ்சு.. பார்டர் கட்டி... பார்த்திருப்பீங்களே....”

“ம்... பார்த்தா மாதிரி இருக்குங்க... “

”இப்ப ஊர்லயே மகளிர் சுய உதவிக் குளுவுல இருக்கேன்.. அவங்க கிட்டே கொஞ்சம் பேச முடியுங்களா? பக்கத்துல இருக்காங்களா?”

“இல்லீங்க..”

“பக்கத்துல இல்லீங்களா?”

“பக்கத்துல இருக்காங்க.. ஆனா பேச முடியாதுங்க..”

”உடம்புக்கு சுகமில்லீங்களா?”

“ஆமா..”

“நாளிக்கு பேசச் சொல்றீங்களா?”

“இல்லீங்க நாளைக்கும் பேசறது கஷ்டம். எப்பவுமே கஷ்டம். அவங்க ரொம்ப முடியாம இருக்காங்க...”

“ஏன்.. என்னாச்சுங்க...”

“அவங்களுக்கு டிமென்ஷியா. பார்க்கின்ஸன்ஸும். சாப்பிடறதுக்கு வாயைத் திறக்கறத்துக்கே அசந்து போயிடறாங்க... ஃபோன்ல பேசறதெல்லாம் முடியாதுங்க....”

“அவங்களை அடுத்த மாசம் ஊருக்கு அளைச்சுக்கிட்டு வரமுடியுங்களா?”

“என்ன விஷயம்னு சொல்லுங்க...”

“சின்னபிள்ளையா இருந்தப்ப நாங்க படிச்ச வாத்தியாருங்களுக்கெல்லாம் ஃப்ரெண்ட்ஸெல்லாம் சேர்ந்து ட்ராபி கொடுக்கறோம். பவானந்தம் சாரு.. பிச்சைக்கண்ணு சாரெல்லாம் வர்றாங்க... சென்னையிலேர்ந்து தைரியம் டீச்சர் கூட வர்றாங்க...”

“ஓ... பவானந்தம் சார் வர்றாறா? என்னைத் தெரியும். கேட்டதாச் சொல்லுங்க..”

“நாங்களே வந்தானும் கூட்டிக்கிட்டுப் போறோம் சார்... வருவாங்களா?”

“வண்டிக்காக இல்லீங்க.. அவங்களால ரெண்டு அடி கூட தனியா எடுத்து வைக்க முடியாது.. யாராவது தாங்கிப் பிடிச்சுக்கணும்.. ரொம்ப தூரம் பிரயாணம் பண்றதுக்கு சான்ஸே இல்லை. மூளைக்கு இரத்தம் கொண்டு போற நரம்பு சுருங்கிப் போயி.... சரி.. அதை விடுங்க..”

”.....”

“ஹலோ...”

“....”

“ஹலோ.. லைன்ல இருக்கீங்களா?”

(எதிர்முனையில் சன்னமான விசும்பல் சத்தம்)

“ஹலோ...”

“சார்.. அவங்களோட போட்டோவை அனுப்ப முடியுமா? ட்ராஃபியில ஒட்டணும்..”

“ம்.. நிச்சயமா தரேன்..”

“அட்ரெஸ் தரட்டுங்களா?”

“நேர்லயே வரேன்...”

”ம்.. சரி...” கூட சொல்லமுடியமால் துக்கம் தொண்டையை அடைக்க ரேணுகாவால் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வீட்டை அடைந்து ஷூவைக் கழட்டிக்கொண்டே கேட்டேன். டிவியில் வம்சம் படுத்திக்கொண்டிருந்தது. ”சித்தி! யாரோ ரேணுகாவாம். பேசினாங்க...”

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து மையமாகப் பார்த்தாள். பின்பு தலையைத் தூக்கி விட்டத்தைப் பார்த்தாள். தேமேன்னு பரப் பிரம்மமாய் உட்கார்ந்திருந்தாள்.

சிறிது இடைவெளிக்குப் பின்னர் கொஞ்சம் சத்தமாக “நெடுவாக்கோட்டையிலேர்ந்து...” என்றேன்.

சட்டென்று கண்கள் அகல விரிந்தது. “எ...ன்...ன..வா..ம்..” என்று வார்த்தைக்கு வார்த்தை ஸ்பீட் ப்ரேக்கர் போட்டுத் திக்கித் திணறிக் கேட்டாள்.

“ரிட்டயர்ட் ஆன டீச்சருக்கெல்லாம் ட்ராஃபி தர்றாங்களாம்.. போறீங்களா?”

“ம்...போ...ரே..ன்...” என்று நடக்கத் துடிக்கும் குழந்தை மாதிரி காலை ஆட்டினாள்.

இப்போது எனக்கு கண்களில் நீர் முட்டியது. நீலா எனது அம்மாவின் தங்கை. என்னை தக்குணூன்டிலிருந்து சாதம் ஊட்டி தூக்கி வளர்த்தவள். புடவையின் அன்பு வாசனை நிறைய முதுகுக்குப் பின்னாலிருந்துக் கட்டியணைத்துக் கையைப் பிடித்து “அ”..”ஆ” எழுதச் சொல்லிக்கொடுத்தவள். நீலா சித்தியின் கையெழுத்து முத்து முத்தாகக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கும்.

ஆசிரியர் தின வாழ்த்துகள் அவளுக்குச் சொல்ல மறந்துவிட்டேன்.

“ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் நீலா டீச்சர்!”

கணபதி முனி - பாகம் 14 : கணபதியைக் காப்பாற்றிய இந்திரன்

ராஜகுடும்பம் வசிக்கும் மந்தேசா அரண்மனை கூட கோபுரங்களும் அலங்கார மாடங்களும் நிறைந்து பிரம்மாண்டமாகக் காணப்பட்டது. எழில் நிறைந்தது. உலகத்தின் ஒட்டுமொத்த வசதிகளையும் உள்ளடக்கியது. இம்மென்றால் நான்கு பேர் ஓடி வந்து உபசரிக்கவும் உம்மென்றால் ரெண்டு பேர் கைகட்டி நிற்கவும் என்று பெரிய ஆட்படையே குற்றேவலுக்குக் காத்திருந்தது.

உபாஸனை, ஜபம் தபம் போன்றவைகளை நித்யானுஷ்டங்களாகச் செய்துகொண்டு ஏனைய லௌகீக வாசனைகளிலிருந்து தள்ளியே இருப்பவர்களுக்கு இந்தமாதிரியான படாடோப அரண்மனை வாசம் சுத்தமாகப் பிடிப்பதில்லை. மந்தேசாவில் ராணிமார்கள் விசாலாக்ஷியை உள்ளங்கையில் வைத்துக் கவனித்துக்கொண்டார்கள். ஆனால் இதில் இம்மியளவும் இஷ்டமில்லாத விசாலாக்ஷி அதிவிரைவில் தனது பிறந்தகம் திரும்பினார்.

கணபதிக்கும் இந்த டாம்பீக வாழ்வு சீக்கிரத்தில் கசந்தது. அவரும் மூட்டையைக் கட்டிக்கொண்டு தனது தம்பி சிவராம சாஸ்திரியுடன் புவனேஷ்வர் சென்றார். அளவுக்கதிகமான உபசாரத்தில் அன்பான குருவையும் அவரது மனைவியையும் அரண்மனையை விட்டு விரட்டிவிட்டோமோ என்று சந்தேசாவின் ராஜகுடும்பம் மனம் வருந்தியது.

புவனேஷ்வரில் ஒரு மாத காலம் ஜபதபங்களிலும் உக்கிரமான விரதங்களினாலும் கழிந்தது. அங்கே தந்தவாணி ராஜா கணபதியை அவரது தர்பாருக்கு கணபதியை அழைத்து மரியாதை செய்ய விரும்பினார். மந்தேசா ராஜாவின் நெருங்கிய ஸ்நேகிதர் இவர். அடிக்கடி லிகிதம் எழுதி பேசிக்கொள்வார்கள். மந்தேசா மகாராஜா கணபதியைப் பற்றி தந்தவாணி அரசருக்கு எழுதியிருந்தார். ஆகையால் அவர் கூப்பிட, அந்த மரியாதைக்கு கணபதியும் அவரது தம்பி சிவராம சாஸ்திரியும் அங்கு விஜயம் செய்தார்கள். விருந்திற்கு பின்னர் தன்மண்டல் ரயில்வே ஸ்டேஷனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

மாலை மங்கி இரவு தொடங்கும் நேரம். ரயில் தண்டவாளங்கள் பக்கத்தில் இருவரும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஏதேதோ யோசனைகள். திடீரென்று பேய்க் காற்று வீசியது. எங்கிருந்தோ வந்த கருமேகங்கள் சூழ்ந்து அந்தப் பிராந்தியமே பிரளய காலம் போல கும்மிருட்டாக ஆகியது. பளிச் பளிச்சென்று அக்கொன்றும் இங்கொன்றுமாக மின்னல் வெட்டியது. பல விஷயங்களை சிந்தித்துக்கொண்டே தண்டவாளத்தோடு நடந்தவர்கள் இன்னும் நான்கடியில் எதிரில் வரும் ரயில்வே பாலத்தைக் கவனிக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் பின்னால் ஒரு சரக்கு ரயில் வந்துகொண்டிருந்தது. நடந்து கொண்டிருக்கிறார்கள். ரயில் நெருங்கிவிட்டது. இருவரும் இன்னும் கவனிக்கவில்லை. ஆபத்து. அப்போது....

அவர்களது சிந்தனையைக் கலைத்து இழுத்து வருவது போல அந்தப் பிரதேசமே ஒளிரும் வண்ணம் பயங்கரமான மின்னல் ஒன்று ஆகாயத்தில் சடசடவென்று கிளைவிட்டுப் பிரிந்து கோடி சூர்யப் ப்ரகாசமாய் வெட்டி அணைந்தது. அதைத் தொடர்ந்த காது கிழியும் இடியோசையால் அண்டப் பெருவெளியே அதிர்ந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட சகோதரர்கள் இருவரும் எதிரே பாலமும் பின்னால் வெகு அருகில் சரக்கு ரயில் வருவதையும் கவனித்துத் தண்டவாளத்திலிருந்து விலகி ஓடி தப்பித்துக்கொண்டார்கள். “தேவேந்திரன் இன்று தனது வஜ்ஜிராயுதத்தை எறிந்து காப்பாற்றினான்..” என்று இதழோரம் புன்னகை பூக்க தம்பியிடம் சொன்னார் கணபதி.

ரயில்வே ஸ்டேஷனில் எக்கச்சக்க கூட்டம். கல்கத்தா செல்லும் வண்டிதான் முதலில் ப்ளாட்ஃபார்முக்கு வருவதாக இருந்தது. அதற்கு பயணச்சீட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் தென் திசை ரயிலுக்காகக் காத்திருந்தார்கள். கல்கத்தா வண்டி சென்றபின்னர் தான் தென் திசை ரயிலுக்குப் பயணச்சீட்டு விநியோகிக்கப்படும் என்றதால் ரயில்வே ஸ்டேஷனின் மரபெஞ்சில் வெறுமனே அமர்ந்திருந்தார்கள். சிவராம சாஸ்திரி “அண்ணா! நாம் பிரயாகை செல்லலாமே!” என்று அதிரடியாக பயணத் திட்டத்தை மாற்றினார். கணபதி ”வேண்டாம்.. ஊருக்குச் செல்லலாம்..” என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அவசரவசரமாக கல்கத்தாவுக்கு பயணச்சீட்டு வாங்கி பிரயாணப்பட்டார்கள்.

அபூர்வமாக மனைவியைப் பார்க்கவேண்டும் என்று ஊருக்கு செல்ல ஆசைப்பட்ட அண்ணாவை திசை மாற்றி கல்கத்தாவுக்கு அழைத்து வந்துவிட்டோமே என்று மனம் வருந்தினார் சிவராம சாஸ்திரி. கணநேரமும் தாமதிக்காமல் உடனே மீண்டும் அங்கிருந்து ஸ்ரீகாகுளத்திற்கு பயணப்பட்டு அங்கிருந்து பொடிநடையாக ஊருக்கு சென்றுவிட தீர்மானித்து வந்து சேர்ந்தனர். ஸ்ரீகாகுளத்தில் இருவரும் கால் வைக்கும்போது மழை பொத்துக்கொண்டு கொட்டியது. வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட கணபதியின் மனம் இப்போது குளிர்ந்து மாறியது.

தென்பகுதியில் இருக்கும் எதாவது ஒரு புண்ணிய க்ஷேத்திரத்திற்குச் சென்று தவமியற்ற விரும்பினார். சிவராம சாஸ்திரி விரைந்து சென்று விஜயவாடாவிற்கு டிக்கெட் எடுத்தார். அதற்குள் அங்கிருந்து கிளம்பிய விஜயவாடா செல்லும் ரயிலில் ஓடிப்போய் ஏறிய சகோதரர்கள் இருக்கையில் அமர்ந்ததும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். ஏதோ ஒரு இறை சக்தி தங்களை இவ்விதம் இயக்குகிறது என்ற பொருள் அந்த சிரிப்பில் தொக்கி நின்றது.

ரயில் சிறிது தூரம் நகர்ந்ததுமே கணபதி முனி சடசடவென்று மேல் பர்த்தில் ஏறி சிவபஞ்சாட்சர ஜபம் செய்யத் துவங்கிவிட்டார். மறுநாள் பொழுது விடிந்தபோது விஜயவாடாவில் இறங்கி க்ருஷ்ணா நதிதீரத்தில் புண்ணிய ஸ்நானம் செய்தார்கள். அப்படியே கனகதுர்க்காவை தரிசித்தார்கள். அங்கேயிருந்த சிவகங்கை மடத்தில் தங்கினார்கள். கணபதியின் முக தீட்சண்யத்தைப் பார்த்து சிவகங்கை மடத்தின் தலைவர் அவர் ஒரு அறிஞர் என்று இனம் கண்டுகொண்டார். அவரைச் சிறப்பித்து அங்கிருந்து வழியனுப்பினார்.

விஜயவாடாவிலிருந்து காலஹஸ்தி ரயிலேறினார்கள். காலஹஸ்தீஸ்வரர் தரிசனத்துக்குப் பிறகு அங்கிருந்து காஞ்சீபுரத்திற்கும் சகோதரர்கள் இருவரும் பயணித்தார்கள். ஏகம்பரேஸ்வரரின் அருட் தரிசனம் கிட்டியது. கோயிலிலிருந்து வெளியே வந்து காஞ்சீபுரம் கடைவீதியில் நாராயண ஜோஸ்யர் என்பவரை அகஸ்மாத்தாக சந்திக்கின்றனர்.

சிறிது நேர சம்பாஷனையில் நாராயண ஜோஸ்யர் கணபதியின் கூர்மையான ஜோதிடப் பாண்டித்தியத்தைக் கண்டு அசந்து போனார். “தயை கூர்ந்து தாங்கள் எனக்கு ஜோதிஷ சாஸ்திர நுட்பங்களைக் கற்றுத் தரவேண்டும்” என்று கணபதியைப் பணிந்தார் நாராயண ஜோதிடர். பிரதி உபகாரமாக கணபதிக்கு அன்னபானங்கள் கொடுத்து அனுதினமும் கவனித்துக்கொண்டார். ஆற்றங்கரையோரமாக இருந்த ஆஞ்சநேயர் கோவிலில் சூரியன் மறையும் வரை கடும் தவம் புரிவார். இரவு நேரங்களில் நாராயண ஜோஸ்யருக்கு ஜோதிட நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பார். இப்படி தவத்திலும் ஜ்யோதிஷ உபாத்தியாயத்திலும் காஞ்சீபுரத்தில் நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது.

இதற்கிடையில் ஒரு நாள் நரசிம்ம சாஸ்திரி பணம் அனுப்பி வீட்டிற்கு வரும்படி இருவரையும் அழைத்தார். இம்முறை கணபதிக்கு வீடு திரும்ப ஆர்வமில்லை. தம்பி சிவராம சாஸ்திரி ”கணபதி நீயும் கூட வருவதாக இருந்தால் வீட்டிற்கு செல்லலாம்” என்று வைராக்கியமாக இருந்தார்.
இரவு ஜ்யோதிஷ சந்தேக நிவர்த்தி வகுப்பு முடிந்து சாப்பிடும்போது நரசிம்ம சாஸ்திரி ஊருக்கு அழைப்பதைப் பற்றி பேச்சு வந்தது. “நீங்கள் இருவரும் பஞ்சபூதத் தலங்களில் இரண்டை தரிசித்துவிட்டீர்கள். மீதமிருக்கும் மூன்றையும் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்புங்களேன்” என்று திருப்பிவிட்டார் நாராயண ஜோதிடர்.

“இன்னும் பார்க்கவேண்டியவை எவை?” என்று கேட்டார் சிவராம சாஸ்திரி.

“திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரம் அப்புஸ்தலம், திருவண்ணாமலை அருணாசலம் தேயுஸ்தலம், சிதம்பரம் ஆகாயஸ்தலம்”

“இதில் இங்கிருந்து பக்கத்தில் இருப்பது எந்த க்ஷேத்ரம்”

“திருவண்ணாமலை அருணாசலம்” என்றார் நாராயண ஜோதிடர்.

அருணாசலம் பெயரைக் கேட்டவுடனேயே கணபதியின் உடலில் ஒரு மின் அதிர்வு ஏற்பட்டது. உள்ளம் பூரித்து உவகை பொங்கியது. பக்திரசம் ததும்ப ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தி தன்னை அந்த திக்கில் இழுப்பதாகத் தோன்றியது. இலையில் இருப்பதை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு அதற்கு மேல் சாப்பிட தோன்றாமல் கை அலம்பினார்.

ஜோதிடர் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருக்கும் போது ”அருணாசலத்திற்கு செல்வோம்.. வா” என்று தம்பியின் தோளைத் தொட்டார் கணபதி. இருவரும் ஊரடங்கிய அந்த இரவில் திருவண்ணாமலைக்குக் கிளம்பினர்.

*
கணபதி தனது தம்பியுடன் அருணாசலத்தில் வந்து இறங்கியது ஒரு நவராத்திரி பண்டிகைக் காலம். கடைசி நாள். சிவாகம சம்பிரதாயத்தில் சிவன் கோயில்களில் இறைவனைத் தரிசித்த பின்னரே இறைவியை தரிசிக்கும் வழக்கம் உள்ளது. அதுபோல அண்ணாமலையிலும் அருணாசலேஸ்வரரைத் தொழத பின்னர் அபீதகுஜாம்பாளைத் தரிசிக்க வேண்டும். ஆனால் ஒரு சக்தி கணபதியைக் கொக்கி போட்டு இழுக்க நேராக அபீதகுஜாம்பாள் சன்னிதிக்கு விரைந்தார்.

புஷ்பாலங்காரத்தில் கர்ப்பகிரஹத்தில் ஜெகஜ்ஜோதியாக அருள்பாலித்தாள் அம்பாள். திருவிளக்குகள் சிந்திய ஒளியில் அபீதகுஜாம்பாள் தங்கக் கிரீடத்தில் சிரித்த முகத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சிதருவது தெரிந்தது. மல்லியும், ரோஜாவும், சாமந்தியும், சம்பங்கியும் மாலை மாலையாக அணிந்திருந்தாள். இந்தத் திருக்கோலத்தைக் கண்டு தன்னை மறந்து பரவசத்தில் ஆழ்ந்திருந்தார் கணபதி. அப்போது அம்பிகையின் கழுத்திலிருந்த சில மாலைகள் கழன்று பூமாரியாக பொழிந்தது. அது நல்ல சகுனமென்று பேரானந்தத்தில் திளைத்தார் கணபதி. மனசு கரைந்து கண்கள் ஊற்றெடுத்து கன்னங்கள் வழியாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அசைவற்று அங்கேயே இருந்த கணபதி கொஞ்ச நேரத்திற்குப் பிறகு உமையம்மையை விட்டு விலக மனமில்லாமல் ஸ்வாமி சன்னிதி சென்றார்.

அங்கே நின்ற சிறிதுநேரத்தில் பட்டென்று வெளியுலகத் தொடர்பு விட்டுப்போய் பக்தியெனும் பேரின்பசாகரத்தில் மிதந்தார். இதுவரையில்லாத அளவிற்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. “சிவராமா! நான் இந்த ஸ்தலத்தை விட்டு வருவதாக இல்லை. இங்கே தான் இனிமேல் தவமியற்றப்போகிறேன். என் தவத்திற்கான பலனை நான் இங்கு அடைவேன் என்று மனசு சொல்கிறது” என்று நெகிழ்ந்தார். அருணாசலேஸ்வரர் அவர் சன்னிதியை விட்டு அகலாதவாறு கணபதியைக் கட்டிப்போட்டார். எவ்வளவு நேரம் நிற்கிறோம் என்ற கால அளவில்லாமல் சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட நிஷ்டையில் இருப்பது போல புறம் தவிர்த்து அகத்தில் குளிர்ந்தார்.

சிவராம சாஸ்திரிக்கு வயிறைக் குடைந்து பசித்தது. ஆனால் கணபதி அண்ணாமலையார் சன்னிதியை விட்டு வெளியே வருவதாக இல்லை. “பசியில் பிராணன் போய்விடும் போலிருக்கிறது...” என்று கணபதியை சுரண்டினார் சிவராம சாஸ்திரி. இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில்லரையை எடுத்துக்கொடுத்து “எதாவது வாங்கி சாப்பிடு...” என்று கோயிலுக்கு வெளியே அனுப்பி வைத்தார். முன்னிரவு நேரம். கொடுத்த காசிற்கு ஒரு பழக்கடையில் நான்கு பூவன் பழம் வாங்கி சாப்பிட்டார். தீராப் பசி. பழத் தோலிலிருக்கும் நரம்பை உரித்துச் சாப்பிட்டும் பசி அடங்கவில்லை. இதற்குள் கோவிலிலிருந்து தரிசனம் முடித்து வெளியே வந்த கணபதியிடம் “அண்ணா.. இன்னும் அசுரப் பசியாக இருக்கிறது.,.” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டார். கணபதி கவலையுற்றார். ”சத்திரம் ஏதாவது தென்படுகிறதா என்று பார்...” என்று சொல்லிக்கொண்டே வீதியில் இறங்கினார்.

வழியில் பார்த்த ஒரு சத்திரம் ஆளில்லாமல் காற்றாடியது. வாசலில் ஒத்தையாளாய் அமர்ந்திருக்கும் பரதேசியிடம் ஏனென்று கேட்க வாயெடுக்கும் வேளையில் “ஓ! இன்றைக்கு ஏகாதசியப்பா... அன்னசத்திரம் எதுவும் இனிமேல் திறந்திருக்காது...” என்றுவிட்டு இன்னும் கொஞ்சம் சில்லரையைக் கையில் அழுத்தி பழங்கள் வாங்கிச் சாப்பிடக் கொடுத்தார். இந்த முறை எட்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டார். அப்போதும் சிவராம சாஸ்திரியின் அகோர பசி தீர்ந்தபாடில்லை. மீனாட்சி கல்யாணத்தில் குண்டோதரனுக்கு வந்த பெரும் பசியைப் போல அவருக்குப் பசித்தது. கோயிலைச் சுற்றிய சன்னிதித் தெருக்களில் “இந்தச் சிறுவனுக்கு யாரேனும் உணவிடமுடியுமா?” என்று யாசிக்க ஆரம்பித்தார். தம்பியின் பசி வேதனை அவரை போவோர் வருவோரிடம் கையேந்த வைத்தது. அன்று ஏகாதசியாக இருந்ததால் பல வீடுகளில் இராச் சாப்பாடில்லை. விளக்கணைக்கப்பட்டு கதவு அடைத்துவிட்டார்கள்.

சிவராம சாஸ்திரியின் கண்களில் பசி தெரிந்தது. இது என்ன திருவிளையாடல்? இப்போது என்ன செய்வது? என்று செய்வதறியாது கையைப் பிசைந்து நின்றார் கணபதி.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_14‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 13 : சதுரங்க ஆட்டம்: அஷ்டதிக்கஜர்கள்

... அது ஒரு மாலைப் பொழுது. தொடுவானத்தில் பொன்னிறமாக தங்கம் மலர்ந்து மனதை மயக்கும் அமைதியான சூழல். இடையறாத சிவபஞ்சாட்சர ஜபத்திற்கு பின் லேசாகக் கண்ணிமைகளைத் திறந்தார் கணபதி. பக்கத்துத் தூணோரத்தில் சார்த்தியிருந்த அவரது மூட்டை முடிச்சுகள் கலைந்து கிடந்தன. அதில் சொருகி வைத்திருந்த சொற்ப பணத்தையும் யாரோ சுருட்டியிருந்தார்கள். இடுப்பு வேஷ்டியில் முடிந்திருந்த கால்காசு அரைக்காசு சில்லரைகளும் பழைய வேஷ்டி அங்கவஸ்திரங்களும்தான் மிஞ்சின. சதாசர்வகாலமும் சர்வேஸ்வரனின் ஸ்மரணையிலே இருப்பவருக்கு பணம் காசில் துளிக்கூட நாட்டமில்லை. திரும்பவும் கண்கள் தானாக மூடியது. வாய் “நமசிவாய” என்று ஜெபிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக நிஷ்டைக்குப் போய்விட்டார்.

வைத்தியநாத் கோயிலுக்கு அன்றாடம் ஸ்வாமி தரிசிக்க வருபவர் சுரேஷ் மித்ரா. தீர்க்கமான கண்களுடன் தேஜஸ்வியாக ஊரார் வணங்கும்படியான தோற்றம். கோயிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கணபதி அனுதினமும் மும்முரமாக ஜெபம் செய்வதைப் பார்ப்பார். அவருடன் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டு அருகிலேயே சம்மணமிட்டு அமர்ந்திருப்பார். கணபதி பகல் பொழுதுகளில் ஒரு பொட்டுக் கூட இமை திறக்கவே மாட்டார். நித்யமும் இப்படியே சென்றதால், ”இன்று இவரைப் பார்த்துப் பேசியே தீரவேண்டும்” என்று தீர்மானம் பண்ணிகொண்டு ஒரு நாள் இரவு வரை அங்கேயே அசையாமல் வைராக்கியத்துடன் உட்கார்ந்திருந்தார். கணபதி கண்ணைத் திறந்தவுடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். சில நாட்கள் பழகியபின் “இராப்பொழுதுகளில் இங்கே மண்டபத்தில் படுத்து உறங்குவதை விட என் வீட்டில் நீங்கள் தங்கிக்கொள்ளலாமே!” என்று உபசாரமான அழைப்பு விடுத்தார். “சரி” என்று ஒப்புக்கொண்டு சுரேஷ் மித்ரா வீட்டில் சில இரவுகளைக் கழித்தார் கணபதி.

சுரேஷ் மித்ரா அம்பாள் உபாசகர். தீவிர சாக்தர். அவருக்கு காணும் யாவையும் சக்தி மயம். மந்த்ர மஹோததியில் தாராவின் வழிபாட்டு மந்திரங்களை தப்பும்தவறுமாக போட்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு சக்தி வழிபாட்டில் கரை கண்டவர். வம்சாவளியாக அவர்கள் தாராவைத் துதித்துக்கொண்டிருக்கும் ஒரு ரகஸிய மந்திரத்தை கணபதிக்கு உபதேசித்தார். அவரது வீட்டில் தங்கியிருந்த காலத்தில் ஒரு நாள் கணபதியின் கனவில் ஈஸ்வரன் பிரசன்னமானார். ஆனால் அவர் அப்போது என்ன சொன்னார் என்பது கணபதிக்குப் புரியவில்லை.

இந்த ஈஸ்வரானுக்கிரக சொப்பனத்திற்குப் பிறகு காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவரை நெட்டித்தள்ளியது. ஆனால் கையில் தம்படி காசில்லை. ஈஸ்வரனை நம்பித் தொழுவோரை அவன் லேசில் விட்டுவிடுவானா? காசிக்குப் போக காசுக்கு புதிய வழிபிறந்தது. கணபதி காசிக்கு காசு சம்பாதித்தது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

வைத்தியநாத்திற்கு அருகில் கார்வல் என்ற சிற்றூரில் ஒரு ஜமீன்தார் இருந்தார். அவர் ஒரு செஸ் பைத்தியம். அவருடைய பங்களாவில் எட்டு செஸ் ஆட்டக்காரர்களை ஜாகை வைத்து போஜனம் போட்டு சம்பளம் கொடுத்து அஷ்ட திக்கஜாஸ் என்று பெயரிட்டு சர்வ மரியாதைகளோடு போஷித்தார். அனைவரும் ஆட்டத்தில் விற்பன்னர்கள். சதுரங்கப் பலகையில் ரதகஜதுரகபதாதிகளுடன் குட்டி ராஜ்ஜியமே நடத்துபவர்கள். அந்த அவையில் நுழைந்த கணபதியை “இந்தக் கவிச்சிங்கத்திற்கு சதுரங்கம் ஆடத்தெரியுமா?” என்று சாதாரணமாகக் கேட்டார் அந்த ஜமீன்தார். ”ம்..பார்க்கிறேன்..” என்ற கணபதியிடம் “என்னுடைய அவையை அஷ்டதிக்கஜாஸ் என்று எட்டு சதுரங்க விற்பன்னர்கள் அலங்கரிக்கிறார்கள். அவர்களில் ஒரே ஒருவரோடு போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? அது போதும்..” என்று கொக்கிப் போட்டு இழுத்தார். பதிலுக்கு “எட்டு பேருடனும் ஒரே சமயத்தில் விளையாடுகிறேன்...” என்று சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார் கணபதி. ஜமீன்தாரால் நம்ப முடியவில்லை. ”மெய்யாகவா?” என்று மீண்டும் மீண்டும் ஐந்தாறு முறை கணபதியுடன் உறுதியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு தயாரானார்.

ஜமீன் ”யாரங்கே?” என்றதும் அவைக்கு நடுவில் எட்டு சதுரங்கப் பலகை கொண்டு வரப்பட்டு கீழே அமர்ந்திருந்த கணபதியைச் சுற்றி வைக்கப்பட்டது. பலகைக்கு ஒருவராக அஷ்டதிக்கஜாஸ் அலங்காரமாக எதிர்புறம் அமர்ந்தார்கள். எட்டு பேருடன் சுழன்று சுழன்று காய் நகர்த்தி சதுரங்கமாடினார் கணபதி. முதல் பலகையில் கறுப்பு ராஜாவுக்கு ஆடினால் அடுத்த பலகையில் வெள்ளை ராஜாவுக்கு ஆடினார். இப்படி பலகைக்குப் பலகை வித்தியாசமாக இருந்தது. எட்டு பலகையிலிருந்தும் ஒவ்வொரு சுற்றுக்கும் காய்கள் வெட்டப்பட்டு தரையில் உருண்டன. அரை நாழிகையில் அத்தனை பலகையிலும் எதிராளியின் ராஜாவுக்கு செக் வைத்திருந்தார் கணபதி. நிமிர்ந்து ஜமீனைப் பார்த்தார். அவை ஸ்தம்பித்தது. அந்த ஜமீன்தார் ”இப்படி ஒரு திறமையா?” என்று விழிகள் விரிய ஆச்சரியப்பட்டார்.

எல்லோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செய்ய, ராஜா “கணபதி! நீங்கள் ஒரு அபூர்வ பிறவி. இப்படியொரு அசாத்திய திறமைசாலியை நான் என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. எனது சமஸ்தானத்தில் இப்படி ஒரு போட்டி நடைபெற்றதும் இல்லை. இனிமேலும் நாங்கள் இதுபோலப் பார்க்கப்போவதுமில்லை. இந்த சிறிய சன்மாணத்தைஏற்றுக்கொண்டு எங்களை பெருமைப்படுத்த வேண்டும்” என்று கையிலிருக்கும் பித்தளை தாம்பாளம் நிறைய ரூபாய் நோட்டுக்களைப் பரப்பி பணிவாக நின்றார்.

கணபதி புன்னகைத்தார். பணம் அவருக்கு ஒரு பொருட்டல்ல. இல்லறத்தில் இருந்தாலும் தீவிர ஜபம் கடும் தவம் என்று முனிசிரேஷ்டராக வாழ்ந்துகொண்டிருப்பவர். ”மன்னிக்கவும்...” என்று இரு விரல்களால் பத்து ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டார். அதுதான் அந்த இடத்திலிருந்து காசிக்கு ரயில்பயணச் சீட்டின் தொகை. ”நன்றி. நான் புறப்படுகிறேன்” என்று காசிக்கு கிளம்பினார் கணபதி. இதுவரை நடந்தவைகளை நம்பமுடியாமல் அனைவரும் கணபதி சென்ற திக்கையே அதிசயமாக பார்த்துக்கொண்டே நின்றனர்.

இம்முறையும் காசியில் தவம் செய்வதற்கான அனுகூலமான சூழ்நிலையில்லை. காசியில் தன் மாமா தாத்தா பவானி சங்கரத்துடன் அயோத்திக்குக் கிளம்பினார். அயோத்தியை நெருங்கும்போது பவானி சங்கரத்திற்கு கடும் வயிற்றுப்போக்கு ஆரம்பித்தது. காசியில் உயிரை விட்டால் முக்தியடையலாம். ஆனால் அயோத்தியில் பிராணனை விட்டுவிடுவோமோ என்று தவித்தார் பவானிசங்கரம். பவானி சங்கரத்தை காசியில் விட்டுவிட்டு கான்பூருக்கு சென்று மூன்று மாதங்கள் தொடர் தவத்தில் ஈடுபட்டார். அங்கு அவர் ஒரு உன்னதமான மனிதரைச் சந்தித்தார். அவர் பெயர் லக்ஷ்மண சாஸ்திரி. பொதுஜனத்திற்கு சித்த ஸ்வாதீனமில்லாதவர் போல இருந்தாலும் அனைத்தும் கற்றுணர்ந்த மஹா ஞானி.

ஆன்மிகத்தில் உச்ச நிலையை எட்ட நிறைய குறிப்புகளை கணபதிக்கு பாடமாகப் புகட்டினார். “இவ்வுலகில் எந்த வஸ்துவைப்பார்த்தாலும் அதை பரப்பிரம்மமென உணர்” என்று அத்வைத சித்தாந்தத்தை உபதேசித்து அருளினார்.

தான் எங்கு இருந்தாலும் அந்த முகவரியை தந்தைக்கு அனுப்ப தவறியதில்லை கணபதி. ஒரு நாள் நரசிம்ம சாஸ்திரி தனக்கு கண் பார்வை மிகவும் மங்கி வருவதாகவும் உடனே கிளம்பி கலுவராயிக்கு வரும்படியும் லிகிதம் எழுதியிருந்தார். ஊருக்கு திரும்புவதற்கு போதிய பணமும் அனுப்பியிருந்தார். கலுவராயிக்குத் திரும்பிய கணபதிக்கு ஒரு ஆச்சரியம். மந்தேஸா மகாராஜா பல பரிசுகளோடு நரசிம்ம சாஸ்திரியிடம் கணபதியின் காவ்ய கண்ட சான்றிதழை பத்திரமாகச் சேர்ப்பித்திருந்தார். தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தந்தையாக குளிர்ந்திருந்தார் நரசிம்ம சாஸ்திரி.

உத்தர பாரத தீர்த்தயாத்திரைகளை முடித்துக்கொண்டு கணபதி வீடு திரும்பிய வருடம் 1900. கலுவராயி கிராமத்தில் அவரைக் காண ஒரே தள்ளுமுள்ளு. தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்று சூழ்ந்து கொண்டார்கள். அவருடைய தீர்த்தயாத்திரை மற்றும் காவ்ய் கண்ட பரீக்ஷையின் கதைகளை விரும்பிக் கேட்டார்கள். ஆர்ப்பரித்தார்கள். மாலையிட்டார்கள். வணங்கினார்கள். வாழ்த்தினார்கள். ஆசீர்வதித்தார்கள். நரசிம்ம சாஸ்திரி பெருமைக் கடலில் மூழ்கினார். மனைவி விசாலாக்ஷி மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. கொஞ்ச காலம் கலுவராயி திருவிழாக்கோலம் பூண்டது.

மந்தேசா மஹாராஜா கணபதியை தனது தர்பாரிலேயே தன்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்பினார். இங்கே நரசிம்ம சாஸ்திரி கண் பார்வை மங்கி ரொம்பவும் கஷ்டப்பட்டார். கணபதி அந்திமக்காலத்தில் இருக்கும் தன் தகப்பனாருக்கு சேவை செய்ய விரும்பினார். மந்தேசா ராஜா விடுவதாகயில்லை. பால்யத்திலேயே பெற்ற தாயை இழந்த கணபதி தந்தையை இறுதிக்காலத்தில் தவிக்கவிடக்கூடாது என்பதில் ஸ்திரமாக இருந்தார். பதினைந்து மாதங்கள் அவருக்கு அருகாமையில் அமர்ந்து அனுதினமும் பணிவிடைகள் செய்தார். அந்த நேரத்தில் பொழுதை வீணடிக்காமல் ஆயுர்வேதத்தைப் படித்துக் கரைத்துக் குடித்தார். தந்தையின் கண் நோய்க்கு மருந்தும் கண்டுபிடித்து சொஸ்தப்படுத்தினார்.

இதில் தேறிய நரசிம்ம சாஸ்திரி “அப்பா கணபதி! நீ உன் மனைவியுடன் நந்திகிராமத்திற்கு சென்று ஒரு வாரம் க்ருஷ்ணம்மா நாயுடுவோடு தங்கு. அப்புறம் அங்கிருந்து மந்தேசா சென்று எதிர்வரும் தெலுங்கு வருடப் பிறப்பை ராஜாவோடு விமரிசையாகக் கொண்டாடு” என்று ஆசீர்வதித்து இருவரையும் அனுப்பிவைத்தார். கணபதியும் விசாலாக்ஷியும் மார்ச் 1902ம் வருடம் மந்தேசாவை வந்தடைந்தார்கள்.

மந்தேசா அரண்மனையில்.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_13‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 12 : காவ்ய கண்டர்

கணபதிக்கு அம்பிகா தத்தரை வாரிவிட லட்டான வாய்ப்பு கிடைத்தது. தத்தர் இலக்கணப் பிழையுடன் பாடிவிட்டார். கணீரென்று ஒரு ஸ்லோகத்தை ஆரம்பித்தார் கணபதி.

”அமிர்தமான பொருளைக் கண்டு நகைக்கிறது உமது கவிதை. தேனைக் குறை சொல்லி அதை உண்ட அதரங்களைப் புகழ்கிறது உமது வாய். தாராவின் புகழ் பாடிக்கொண்டிருப்பதால் அவளுக்கு தனது மேனியில் பாதியினை அளித்த உமையொருபாகனை மறந்தீரோ?” என்று அம்பிகா தத்தருக்கு எசக்கவிதை பாடினார் கணபதி.

அவையில் ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. அந்தப் பண்டிதக் குழாம் அசைவற்று அமர்ந்திருந்தது. அம்பிகா தத்தர் சம்ஸ்க்ருதத்தில் பெரிய ஆள். ஊர் உலகம் மெச்சும் அறிஞர். மஹா பண்டிதர். இன்று அவரை எதிர்த்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு ஒரு இளம் பிள்ளை வார்த்தை விளையாடுகிறது. இதுவரை இப்படியாகப்பட்ட சிறுவர்களிடம் அவர் உரையாடியதில்லை. அதீதமாக உணர்ச்சிவசப்பட்டார். கண்களில் கோபம் கொப்பளிக்க கத்தினார்.

“ஓ மதம் பிடித்த யானையே! நீ அர்த்தமில்லாமல் பிளிறி தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை உசுப்புகிறாய். அது எழுந்தால் உன் மத்தகஜத்தில் ஏறி உன்னை அடித்துக் கொன்று உன் மூளையைத் தின்றுவிடும்.” கணபதியின் பெயருக்கு இணையாக மதம் பிடித்த யானையே என்று சொற்களைப் போட்டுக் கன்னாபின்னாவென்று ஏசினார். அவருடைய ஆங்காரத்தில் ஹரிசபையில் கடும் உஷ்ணம் நிலவியது.

இப்போது திட்டிப் பாடிய இந்தத் துக்கடாக் கவிதையிலும் தவறு செய்தார் அம்பிகா தத்தர். கோபம் அறிவை மறைத்தது. கணபதி இந்த இலக்கணப் பிழையையும் சுட்டிக் காட்டித் தன் பங்கிற்கு மீண்டும்

“ஓ மாமரத்தின் மீதமர்ந்த காகமே! வாயைச் சற்று மூடிக்கொண்டிரு. அப்போதுதான் உன்னைக் குயில் என்று இவ்வுலகம் போற்றும்” என்று பதில் கவிதையால் அடித்தார். ”வாயைத் திறக்காதே. திறந்தால் உன்னுடைய குட்டு வெளிப்பட்டு விடும்” என்கிற அர்த்தம் தொணிக்க பாடினார் கணபதி.

அம்பிகா தத்தரின் கோபம் சுறுசுறுவென்று உச்சிக்கு ஏறியது. எழுந்து நின்று கோபாவேசமாகத் தூண்கள் கிடுகிடுக்க

“ஏ மின்மினிப் பூச்சியே, இரவில் தானே நீ ஒளிர்வாய். பகலில் இங்கென்ன உனக்கு வேலை?” என்று கணபதியைப் பார்த்து வார்த்தைகளால் சுட்டார்.

அரங்கம் அதிர்ந்தது. யானை சிங்கம் என்று விலங்குகளை உதாரணம் காட்டி சண்டையிட்டவர்கள் இப்போது புழு பூச்சிக்கு இறங்கியிருந்தார்கள். இதற்கு கணபதியின் பதில் என்ன என்று அவையோர் அவர் அமர்ந்திருக்கும் திக்கைப் பார்த்தார்கள்.

”அட விளக்கே! கூண்டு வீட்டிற்குள்ளே மட்டும்தானே நீ ப்ரகாஸமாய் எரிவாய். வெளியே வந்தால் வீசும்காற்றினால் படபடக்கப்பட்டு கணநேரத்தில் அணைந்தொழிவாயே!” என்று அழுத்தம் திருத்தமாக இகழ்ந்தார்.

இருவரும் வாய்ச்சண்டையை விடுவதாகயில்லை. கணபதியை அம்பிகா தத்தரிடம் அறிமுகப்படுத்திய சிதிகண்டர் பொறுமை இழந்தார். விலுக்கென்று எழுந்தார். ” கவி சிரேஷ்டர்களே! இந்தச் சண்டையை இதோடு நிறுத்துங்கள். உங்களுடைய குலத்தைப் பற்றிக் கேலியாக ஆளுக்கொரு கவி புனைந்து இதை நிறுத்திக்கொள்ளுங்கள்..” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அம்பிகா தத்தர் முனுக்கென்று ஆரம்பித்தார். “தென்னகத்து அந்தணர்களெல்லாம் கள் குடித்து பெண்களின் மடியில் வீழுந்து கிடப்பவர்கள்..” என்று எக்காளமிட்டார். பதிலுக்கு கணபதி “வங்காளத்து கௌடர்களெல்லாம் மீனுக்கு விலையாக காசையோ உயிரையோ எதாகிலும் தாரை வார்ப்பார்கள்” என்று கவி படைத்தார். மீனை வைத்துக் கவுடர்களை பகடியாடினதும் அம்பிகா தத்தருக்கு பிடித்துப் போயிற்று.

“கணபதி! நீ அசாத்திய திறமைசாலியப்பா. உன்னுடைய அருவிபோல் பொழியும் கவிகளைக் கேட்டு இந்த “ஹரிசபை” இவ்வளவு நேரம் கட்டுண்டு கடந்தது. எதுகையும் மோனையும் உன் ஸ்லோகங்களில் துள்ளி விளையாடுகிறது. பலவித பாவங்களையும் ரசங்களையும் உன் கவிதையில் முடிந்து எங்களுக்கு ரசிக்கத் தருகிறாய். காதுக்கு இனிமையாகவும் மனசுக்கு இதமாகவும் புத்திக்கு அர்த்தபுஷ்டியுடனும் இருக்கிறது. உன்னைப் பெருமைப் படுத்த இச்சபை பெருமையடைகிறது” என்று பேசினார். கூட்டத்தின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

அவை நடுவில் அகண்ட தீபம் ஏற்றினார்கள். கணபதிக்கு ஆளுயர மாலை அணிவித்தார்கள். மங்கள வாத்தியங்கள் முழங்கின. ஹரிசபையின் தலைவர் “காவ்ய கண்ட” என்ற பட்டத்தை வழங்குவதாக அறிவித்தார். அனைவரும் அதை ஆமோதித்து “வாழ்க! வாழ்க!!” கோஷமிட்டார்கள். ஹரிசபை மங்களகரமாக இருந்தது. கணபதிக்குக் கிடைத்தப் பட்டம் தங்களுக்குக் கிடைத்தது போலவே அங்கு குழுமியிருந்த பண்டிதர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக்கொண்டார்கள். காவ்ய கண்டர் என்பதற்கு தனது கண்டக் (தொண்டை) குழியில் கவிதையை எப்போதும் தேக்கி வைத்திருப்பவர் என்று பெயர். அதாவது எந்தப் பொருளிலும் விரல் சொடுக்குவதற்குள் கவி பாடும் திறமை படைத்தவர்.

”பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தைக் காட்டிலும் உன்னதமாக கவிதை என்கிற வித்தை மனிதகுலத்துக்கு வாய்த்தது. இறையருள் மிஞ்சி நிற்கும் ஒருவரால்தான் இப்புவியில் அதில் சிறந்துவிளங்க முடியும். அப்படி விளங்குபவர்கள் மேன்மையானவர்கள். நவத்வீபா ஜனங்களாகிய நாங்கள் உங்களை அப்படிப்பட்ட மேன்மை பொருந்திய உத்தமகவியாக தேர்ந்தெடுக்கிறோம். விசாகப்பட்டிணம் கலுவராயி கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீமத் கணபதி சாஸ்திரியாகிய நீங்கள் காளிதாஸன் போன்ற ஆதிகாலத்துக் கவிகள் அடைந்த புகழடைந்துச் சிறந்து விளங்குவீர்கள் என்று வாழ்த்தி “காவ்ய கண்ட” என்கிற உன்னத பட்டத்தை இந்நாளில் உங்களுக்கு அளிக்கிறோம்” என்று எழுதி பட்டயம் வழங்கினார்கள்.

கணபதியை அவைக்கு அழைத்து வந்த சிதிகண்டர் பூரித்துப்போனார். கூட்டத்தின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரம் பிடித்தது. அம்பிகா தத்தர் வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருந்தார். கணபதி தவ சிரேஷ்டர். இத்தகைய புகழ்ச்சிக்கும் இதற்கு முன்னர் அம்பிகா தத்தர் தொடுத்த இகழ்ச்சிக்கும் மனதைச் சாயவிடாதவர்.

இந்தச் சான்றிதழை மந்தேசா ராஜாவிடம் அனுப்பி தனது தந்தை நரசிம்ம சாஸ்திரிக்கு அனுப்பப் பணித்தார்.
நவத்வீபாவிலிருந்து வெளியே வரும்போது அலங்கார வாசலில் ஒரு குரல் கேட்டது.
”என்னோடு வருவீர்களா காவ்ய கண்டரே?”

திரும்பிப் பார்த்த கணபதி முனிக்கு ஆச்சரியம். நவத்வீபாவில் முதன்முதலில் தனக்கு ஒரு நாள் இரவு அறையில் தங்குவதற்கு ஏற்பாடளித்த குலபின்யா நின்றுகொண்டிருந்தார்.

“எங்கே?”

“முர்ஷிதாபாத். நான் அங்கே ராஜாவின் தர்பாரில் முதன்மைப் பண்டிதனாயிருக்கிறேன். நீங்கள் அங்கே வந்து எங்களையெல்லாம் பெருமைப்படுத்தவேண்டும்” என்று வேண்டினார்.

முர்ஷிதாபாத்தில் அரசன் வெகுவிமரிசையாக பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்றான். உற்சாகமான பண்டிதர்கள் கணபதியுடன் சம்ஸ்க்ருத காவியங்கள் பேசிக் களித்தார்கள். மன்னன் மேலும் சிறிது நாட்கள் கணபதியை அரண்மனையில் தங்க ஏற்பாடு செய்தான். ஒரு வருட காலமாக தவமியற்றாமல் இருந்ததால் கணபதி சீக்கிரமாக அங்கிருந்து கிளம்ப முடிவுசெய்தார். அங்கிருந்து கிளம்பி வைத்தியாத் சென்றார். அங்கு நிலவிய தபோ சூழ்நிலையில் உடனே ”நமசிவாய” என்ற சிவபஞ்சாட்சர ஜபத்தில் இறங்கினார்.

ஒரு நாள் சலனமில்லாமல் ஆழ்ந்த ஜபத்தில் மூழ்கியிருந்த போது.......

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_12‬
‪#‎கணபதி_முனி‬

மல்லிகை இளவரசன்

ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தானாம். அவன் சிரிச்சா எட்டூருக்கு மல்லியப்பூ வாசனை வீசுமாம். ஆனா வலிய சிரிக்க வைச்சா அந்த மாதிரி மணம் வராது. அவனா மெய்மறந்து ரசிச்சு சிரிச்சாக்க வாசனை மூக்கைத் துளைக்குமாம். அப்படியிருக்கும் போது அவன் கப்பம் கட்டிக்கிட்டிருக்கிற ராஜாவுக்கு இந்த விஷயம் காதுக்கு எட்டிச்சாம். “யாரங்கே! போய் அவனை இங்கே அழைத்து வாருங்கள்...” என்று மீசை முறுக்கிக்கொண்டே வீரர்களைப் பார்த்துக் கட்டளையிட்டானாம்.

ரெண்டு பேர் வேலேந்திய கையோட அந்த ம.இ கிட்டே போய் “ராஜா கூட்டியாறச் சொன்னாங்க... வாங்க...”ன்னு அழைச்சிக்கிட்டுப் போய் தர்பார்ல நிறுத்தினாங்களாம். சக்கரவர்த்தி “ஏம்ப்பா... நீ சிரிச்சா மல்லியப்பூ வாசனை வீசுமாமே.. ஜனங்க பேசிக்கிறாங்க.. இப்ப சிரி...”ன்னு கேட்டானாம். ”பஹ்பஹ்..” சிரிக்கிறான் ம.இ வாசனை வரலை. கிச்சுக்கிச்சு மூட்டிப் பார்த்தாங்க. சிரிக்கிறான். கொஞ்சகூட மணம் வீசலை. ராஜாவுக்குப் பயங்கர கோவம் வந்திருச்சு. “டேய்.. இவன் என்னை அவமானப் படுத்தறான். நா சிரிக்கச் சொன்னா வாசனை வரலை..இவனைத் தூக்கி ஜெயில்ல போடுங்கடா..”ன்னு ஆர்டர் பண்ணினான். தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போய் ஜெயில்ல போட்டாங்க.

இந்த ம.இ இருந்த ஜெயில் அறையோட ஜன்னல் வழியா பார்த்தா ஒரு முடவனோட குடிசை இருந்ததாம். ஜன்னல் வழியா தெனமும் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தப்போ ஒரு விஷயம் கவனிச்சானாம். ராத்திரியானாக்க அந்த தேசத்து ராணி முடவனோட குடிசைக்கு வந்து அவனோட குஜால இருக்கிறத பார்த்தானாம். அப்படி வர்ற போது ராஜ போஜனம் எடுத்துக்கிட்டு வந்து அவ கையாலயே அவனுக்குப் பரிமாறுவாளாம். அவனுக்கு அப்படி ஒரு கொடுப்பினை.

ஒரு நாளு ராணி வந்து அவனுக்கு சோறு போட ரொம்ப லேட்டாயிடிச்சாம். அவனுக்கு பிபி ஏறிப்போயி கண்டமேனிக்கு அடிச்சு வெளுத்து வாங்கிட்டானாம். எல்லாத்தையும் சகிச்சுக்கிட்ட ராணி வாயைத் தொறக்காம அவனுக்கு சோறு போட்டா. அவன் சாப்பிட்டு முடிச்சவுடனே “ராணி.. எம்மேல கோவமா.. ஸாரி”ன்னு கையக் காலப் பிடிச்சிக்கிட்டுக் கெஞ்சினானாம். அதுக்கு அந்த ராணி சொன்னாளாம் “ச்சே.,.ச்சே., உங்க மேலே கோவமெல்லாமில்லை. நீங்க அடிச்சபோதெல்லாம் நான் ஈரேழு பதினாலு லோகத்துக்கும் போய்ட்டு வந்தேன்”ன்னு ஒண்ணுமே நடக்காத மாதிரி சகஜமாச் சொன்னாளாம்.

அப்போ அந்தக் குடிசைக்குப் பக்கத்துல மழைக்கு ஒதுங்கி ஒரு சலவைத் தொழிலாளி உட்கார்ந்திருந்தானாம். வெடவெடன்னு நடுங்கிக்கிட்டு சோகத்துல இருந்தான். குடிசை உள்ளாற ராணி இருக்கான்னு அவனுக்குத் தெரியாது. ”ஈரேழு பதினாலு லோகமும் போய்ட்டு வந்தேன்னு” அந்த லேடி சொன்னது இவனுக்கு காதுல விழுந்தது. உடனே பாய்ஞ்சு உள்ள நுழைஞ்சு “ஏம்மா.. ஈரேழு பதினாலு லோகமும் போனேன்னு சொன்னியே... எங்கயாவது தொலைஞ்சு போன என்னோட கழுதையைப் பார்த்தியா”ன்னு கேட்டானாம்.

இதைக் கேட்டுக்கிட்டு இருந்த ம.இக்கு சிரிப்புப் பொத்துக்கிட்டு வந்திச்சாம். ஜெயிலே அதிரும்படி சிரிச்சானாம். அப்ப கிளம்பிச்சாம் மயக்கும் மல்லிகை வாசனை. இது கற்கல்ல நடந்துச்சு.. ஜெயிலரெல்லாம் ஓடிப்போய் ராஜாவை எழுப்பி “ராஜாதி ராஜனே... இப்ப அவன் சிரிக்கிறான். வாசனை வருது பாருங்க.. ஆளை மயக்குது...”ன்னு அழைச்சுக்கிட்டு ஜெயிலுக்கு ஓடி வந்தானுங்க. அந்த ராஜாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியலை..

ஓடி வந்தான். “ஏம்ப்பா.. நான் கேட்டப்ப நீ சிரிச்ச.. அப்பெல்லாம் வாசனை வரலை. இப்ப எப்படி?”ன்னு கேட்டான். ம.இ காரணத்தைச் சொன்னான்.

இவனை ரிலீஸ் பண்ணிட்டு அந்த ராணியைத் தூக்கிச் சுண்ணாம்புக் காளவாய்ல போட்டானாம் அந்த சக்கரவர்த்தி.

***
A.K. Ramanujan தொகுத்த Folktales from India (பெங்குயின்) படித்துக்கொண்டிருக்கிறேன். இருபத்தியிரண்டு இந்திய மொழிகளில், வட்டார வழக்கில், கர்ணபரம்பரையாகச் சொல்லப்படும் நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். மூலம் கெடாமல் என்னளவில் ஒரு கதையைத் தமிழ்ப்படுத்தினேன். ஏகேயாரையெல்லாம் என்னைப் போன்ற சிறியோனுக்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீரெங்கம் எஸ்ஸார்! வாழ்க நீ எம்மான்!

மன்னார்குடி டேஸ்: ஜீவா துரை

”சாமீ.. எப்படியிருக்கீங்க?”

”நல்லாயிருக்கேன்.. நீங்க எப்டி இருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன்... ப்ளம் கேக் தரவா? சாப்டவா? வீட்டுக்கா?”

“வீட்டுக்குத்தான்...”

“பிள்ளைங்க வந்துருக்குதா?”

“ம்.. அதோ வண்டியில இருக்காங்க.. ”

”உள்ற வரச்சொல்லுங்க.. வண்டி எங்க நிக்கிது?”

“ஊஹும். எட்டிப் பார்த்தா தெரியாது. ட்ராஃபிக்கா இருக்குன்னு எஸ்பிஐ வாசல்ல நிறுத்தியிருக்கேன்... பிஸ்கெட்டெல்லாமும் குடுங்க... அஸார்ட்டடா.. சரியா?”

“கால் கிலோ போடட்டா? அரைக் கிலோவா?”

இப்படித் தொணத்தொணவென்று கேள்வி கேட்கும் இவர் பெயர் துரை. கால்கள் சக்கரமாய்ச் சுழல ஓடியாடி எல்லா கண்ணாடி சீசாவின் மூடியைத் திறந்து ரெவ்வண்டு பிஸ்கட் எடுத்து எடை போடுகிறார். ”டிங்..டிங்..” என்று சீசா மூடியின் ஜலதரங்க பின்னணி இசையுடன் அசார்ட்டடும் இன்ன பிற பேக்கரி ஐட்டங்களும் அவர் எடை போட்டு முடிப்பதற்குள் கடை வாசலிலேயே நின்று ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் ஓட்டுவோம்.

இவர் மன்னையின் ஜீவா பேக்கரிக்காரர். மேலராஜவீதியில் குள்ளப்ப முதலியார் ஜவுளிக்கடைக்கு ரெண்டு கடை தள்ளி கீழண்டை கடை. ஜீவா பிஸ்கட் பேக்கரி. ஆதிகாலத்திலிருந்து ஜீவாவும் க்ருஷ்ணா பேக்கரியும் மேலராஜவீதியின் தீனி அடையாளங்கள். க்ருஷ்ணா பேக்கரி வாசலில் கறுப்புச் சட்டைக்காரர்களின் சைக்கிள்களின் ஆதிக்கம் அதிகம். எடமேலையூர் சேகர் கறுப்புச் சட்டையானாலும் எனக்கு நெருக்கமானவர். அவருக்கு க்ருஷ்ணா என்றால் எனக்கு ஜீவா. ஜீவா துரை மிதவாதி. ஒரு கன்னத்தில் கொடுத்தால் அடுத்த கன்னத்தைக் காட்டுமளவுக்குச் சாந்தமாக இருப்பார். காலையில் நான் குளித்து வாசலில் நிற்கும்போது ஹரித்ராநதியில் குளித்துவிட்டுக் கடை திறக்க சைக்கிளில் பறப்பார் துரை.

துரை பேக் செய்துகொண்டிருக்கும் இதே அசார்ட்டட் பிஸ்கட்ஸின் ஒரு படி குறைச்சலான ஐட்டம் அப்போது வேறு ஒரு ரூபத்தில் கிடைக்கும். அதன் பெயர் ரொட்டித் தூளு. ஹரித்ராநதி கீழ்கரையில் ஒரு பேக்கரியின் கிச்சன் இருந்தது. கைலியும் முண்டா பனியனுமாய் இரண்டு அண்ணாக்கள் பீடிக் கை சகிதம் எப்போதும் ரொட்டி சுட்டுக் கொண்டிருப்பார்கள். கண்களில் ஒரு கண்டிப்பு கசியும். மருந்துக்கும் சிரிக்க மாட்டார்கள். “ரெண்டு ரூபாய்க்கு ரொட்டித் தூளு”ன்னு சில்லரையை நீட்டினால் பல வகை பிஸ்கட் கேக் தயாரிப்பிலிருந்து வெட்டிப் போட்ட மிச்சம் மீதியைப் பொருக்கி வைத்திருக்கும் தகர டப்பாவுக்குள் கையை விட்டு ரெண்டு பிடி ஒரு ஜவ்வுத்தாளில் போட்டுத் தருவார்கள்.

அந்தப் பிச்சைக்காரன் திருவோட்டிற்கு அவ்ளோ மவுசு. கும்பல் தூளுக்குப் பேயாய் அலையும். இதே ரொட்டித்தூளை ஒரு முறை துரையிடம் கேட்டதற்கு சுவைக்கக் கொடுத்ததுதான் ப்ளம் கேக். அன்று மலர்ந்தது அந்த பந்தம். பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியிலிருந்து விலகி இருந்தது ஜீவா பேக்கரி. பள்ளி விட்டதும் அங்கு போக வேண்டும் என்று ஒரு நாள் நாக்கு கேட்டது. அதற்கு முன்னர் தினமும் வீடு திரும்பும் மகாத்மியத்தைப் பற்றி இங்கே ரெண்டு ரீல் சொல்லியாக வேண்டும்.

மன்னையில் சைக்கிளுக்கு ட்ரைவர் வைத்த ராயல் ஃபேமிலி நாங்களாகத்தானிருக்கும். நேஷனல் ஸ்கூலில் படித்த ஆறாவதிலிருந்து எட்டாவது வரை கோவிந்து எனக்கு சைக்கிள் ட்ரைவராக அருட் தொண்டாற்றினார். சம்பிரதாயத்துக்கு சட்டைக்கு நடு ரெண்டு பட்டன் போட்டிருப்பார். மேலும் கீழும் காத்து வாங்கும். அதற்கு மேல் அழுக்காக அந்த வேஷ்டியில் ஒரு நூல் இருக்காது. ஓடி உந்தி சர்க்கஸ் காட்டி வேஷ்டி அவிழாமல் சைக்கிளில் ஏறும் வித்தகர் அவர். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கல்லில் ஒற்றைக் காலை ஊன்றி பகீரதத் தவமாய் நேஷனல் ஸ்கூல் வாசல் காம்பௌண்ட் ஓரம் சாய்ந்திருப்பார். ஸ்கூல் விட்டு என் தலை வெளியே தெரிந்ததும் ”சீக்கிரம் ஒக்காரு...” என்று பேதி புடுங்கும் அவசரத்துடன் பேய்த்தனமாக ஓட்டுவார். சீட் பெல்ட் இருக்கும் சைக்கிள் அந்தக் காலத்தில் தயாரிப்பில் இல்லை. எந்தக் காலத்திலும் கிடையாது என்று இன்று புரிகிறது.

அழகப்பா தாளகத்திலிருந்து நேரே பந்தலடி தாண்டி பால் சொஸைட்டி மூ.சந்தில் திரும்பி, அரிசிக்கடை சந்து பின்புறம் வந்து, மீன் மார்க்கெட் கடந்து, தாமரைக்குளம் வழியாக உப்புக்காரத் தெரு மாரியம்மன் கோயிலை கன்னத்தில் போட்டுக்கொண்டு, சின்ன கான்வெண்ட் ஏறி, வலது பக்கம் திரும்பினால் கும்பகோணம் ரஸ்தா ஹரித்ராநதிக் கரையைத் தொட்டுச் செல்லும். இதுதான் அவரது வாடிக்கையான ராஜபாட்டை. ”இன்னிக்கிதான் கடேசி. இனிமே கேட்கப்டாது”ன்னு லட்சத்திச் சொச்சம் தடவையாக ஆட்காட்டி விரலை ஆட்டி ரெண்டு ரூபாய் தாளைக் காலமே கொடுத்திருந்தாள் பாட்டி. அன்றைக்கு கேக் ஆசையில் அவரைத் திசை திருப்பிவிட்டேன்.

பந்தலடி நெரிசலில் “இப்படி சரிப்படாது சொன்னா கேட்கிறியா?” கரகரவென்று பல்லை அரைத்து உஷ்ணமானார். காலை உந்தி முந்தி நாட்டு மருந்துக் கடையை தாண்டி ஜீவாவை ஜாக்கிரதையாக அடைந்தார். துள்ளிக் குதித்து இறங்கி கடைக்குள் ஓடி ”ரொட்டித் தூளிருக்கா?” என்ற என் பாமரக் கேள்விக்கு “ப்ளம் கேக்கு சாப்பிடு..”ன்னு பேப்பரில் சுற்றித் தின்னக் கொடுத்தவர் துரை. அன்றிலிருந்து தொடர்ந்த பந்தம். க்ரீம் கேக் வாரம் ஒரு நாள். பவானி சித்தியுடன் கையைப் பிடித்துக்கொண்டு கடைத்தெருவுக்கு போனால் இரண்டு துண்டு சோழி வடிவ பிஸ்கட் நடுவில் வெள்ளையாய் க்ரீம் நசுக்கிய பிஸ்கட் பத்து வாங்கித் தருவாள். கையில் அடக்கிக்கொண்டு வழிநெடுக கொறித்துக்கொண்டே வீட்டிற்கு திரும்பலாம்.

இரவு ஏழரை மணிக்கு ஒரு முறை அகோர பசி. அப்போதுதான் சொந்த சைக்கிள் வாங்கி ஓட்டும் பாக்கியஸ்தனாகியிருந்தேன். ஜீவாவில் கேக் வாங்கலாம் என்று நெருங்கிய சமயத்தில் சைக்கிளோடு உருட்டிக்கொண்டு கடைவாசலில் தெண்டனிட்டேன். பசியில் இரண்டு செகண்ட் ப்ளாக் அவுட் ஆனது போல இருந்தது.

ஓடோடி வந்து தூக்கி முட்டிக் கைகால் தட்டிவிட்டு, தண்ணீர் தெளித்து, குடிக்கக் கொடுத்து, இன்’பன்’ ஊட்டியவர் துரை. அப்புறம் பல நாட்கள் அங்கே கேக் மொக்கியிருக்கிறேன். கேக் வாயோடு சிரித்திருக்கிறேன். ஊர்க் கதை பேசியிருக்கிறேன். மழைக்கு ஒதுங்கியிருக்கிறேன். பசியாறியிருக்கிறேன். ருசித்து ரசித்திருக்கிறேன்......

“சாமீ.. இந்தாங்க...” துரையின் கரகரக் குரல் பின்னணியில் ஓடிய காட்சிகளை வெட்டி விட்டது. யாரது ஜீவா கேக்கரி எதிரில்.....

"எதிர்த்தாப்புல வர்றது குமாரு மாதிரியிருக்கே...”

“ஆமா... குமாருதான்...”

“சைக்கிள்ல பின்னால பொட்டி கட்டிக்கிட்டு பன்னும் கேக்கும் பிஸ்கட்டும் எடுத்துக்கிட்டுப் போவாரில்ல..”

“இப்பெல்லாம் யாரும் லைனுக்கு போவறதில்லை..”

“குச்சி ஐஸ்.. பால் ஐஸ்.. பொட்டியெல்லாம்...”

“அதெல்லாம் லைன்ல பார்க்கிறது கஷ்டம் சாமீ.. சைக்கிளை மிதிச்சு.. தெருத்தெருவா போயி... அப்படியெல்லாம் கஸ்டப்பட யாருக்கும் பிடிக்கலை.. அதோ கடை உள்ற அந்தப் பொட்டியைப் பார்த்தீங்களா? அதுல ஐஸ் இருக்கு..”

“ஓ...சரி..சரி... இப்பெல்லாம் காலையில தெப்பக்குளத்துக்கு குளிக்க வர்றீங்களா?”

“இல்லீங்க.. வீட்லயே குளிச்சுக்கிறது...”

“ஏன்?”

“குளத்துல ஒரே பாசியாயிருக்கு. நாறுது.. குப்பையா ஒதுங்குது.. ஆத்தாங்கரையிலும் தண்ணியில்லை. யாரும் ஒளுங்கா பராமரிக்கிறதில்லை. யாருங்க எந்த தொளில்ல தர்ம நியாயம் பார்க்கிறாங்க..” என்று கேள்வியாய்ப் பார்த்தார். குற்றம் செய்யும் சமுதாயத்தின் மீது ஒரு தார்மீகக் கோபம் அவர் கண்களில் தெரிகிறது. குங்குமம் துலங்கும் நெற்றியும் பளீர்ச் சிரிப்பும் என்னை பற்றிக்கொண்டது.

“வரேன் துரை...”க்கு வாயெல்லாம் பல்லாக வழியனுப்பி வைத்தார். இன்னும் பத்து வருடம் கழித்து வந்து பார்த்தாலும் துரை அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருப்பார் என்றே தோன்றுகிறது. மனசுல பாரம் இல்லாமல் நேர்மையாய் வேலை பார்த்துப் பிழைக்கிறார். என்றும் மார்க்கண்டேயனாக இருப்பதில் வியப்பில்லையே!

ம்.. முக்கியமாக ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். துரை ஜீவா பேக்கரி ஓனரில்லை. நித்ய தொழிலாளி.

‪#‎மன்னார்குடி_டேஸ்‬

நெடுஞ்சாலைக் காட்சிகள்‬

கண் முன்னே காற்றுக் குதிரையாய் கடந்து மறைகிறது பென்ஸ் ஒன்று.
சட்டை கழற்றி முண்டா பனியனும் கலைந்த கேசமுமாய் பஸ் பிராயணி ஒருவன் ஜன்னலில் கவிழ்ந்திருக்கிறான்.
கட்சிக் கொடி சடசடக்க டோல் கட்டாமல் பறக்கிறது முக்கிய புள்ளியின் ஃபார்ச்சுனர்.
எல்லைக் கல்லுக்கு எல்லைக் கல் எட்டிப் பார்க்கும் கும்பகோணம் டிகிரி காஃபி.
நடு ரோட்டில் நத்தையாய் நகரும் மரவட்டைப் பூச்சியாய் சக்கரம் கொண்ட கண்டெய்னர் லாரி.
இடுக்கில் புகுந்து மரணக் கிணறு சாகசம் காட்டும் இளங்காளை ட்ரைவர்.

மன்னார்குடி டேஸ்: குரங்கு பிடித்த பிள்ளையார்

"பாழும் நெத்தியா போகாமே... நெத்திக்கு ஒத்தையாணும் இட்டுண்டு போய்ட்டு வா..”ன்னு காலங்கார்த்தாலே எழுப்பி காஃபி கொடுத்துக் கையில் ஒரு ”பலகா”வோடு தெருமுனைக்கு அனுப்புவாள் பாட்டி. ”பலகாவைத் தொடச்சுக் குடுடீ”. ரெட்டை மாட்டு வண்டியில் களிமண்ணோடு முண்டாசு கட்டியவரின் கையெல்லாம் மண்ணாக தெருவோடு போகும். இதையே வாங்கலாமேன்னுதிரும்பிப் பார்த்தால் ”வாசல்லே வரவன் கூடச் சொல்லுவன்டா. ஒரு நடை போய்ட்டு வாடா... ம்.. ஜல்தி..ஜல்தி..” என்று விரட்டிவிடுவாள்.

மன்னையில் கிழக்குத் தெரு முனையில் தெற்குத் தெரு குளத்தாங்கரையோரமாக,, ஃப்யர் சர்வீஸ் பக்கத்தில் காம்பௌண்ட் சுவரோரம் அப்படியே இன்னும் கொஞ்சம் தூரம் போனால் தேரடியில் ரெங்கசாமி முதலியார் லைப்ரரி எதிர் திடலில் என்று பிள்ளையார் சகல இடங்களிலும் வியாபித்திருப்பார். கொஞ்சம் லேட்டானால் மேலுக்கு ஒரு காசித் துண்டும் அரைக்கு வேஷ்டியுமாகக் கையில் ’பலகா’வோடு மாமாக்களின் க்யூ நீண்டுவிடும். ”சல்லிசா வேணுமின்னா சந்தைப்பேட்டைக்கிட்டே கொட்டிக் கிடக்கு...அஞ்சு ரூவாய்க்கு ரெண்டு புள்ளையார் தரான்...” என்று போக்குக் காட்டி அலைபாயும் மனதுடையவர்களைக் கும்பலிலிருந்துக் கலைப்பவர்களும் உண்டு.

அஞ்சு ரூபாய்க்கு ஆஜானுபாகுவான புள்ளையார். வலது கையால மண்ணை பசக்கென்று வார்ப்பில் அழுத்தி இடது கையால “இந்தா புள்ளையார்”ன்னு எடுத்துத் தராமாதிரி டெம்ப்ளேட்டெல்லாம் கிடையாது. ஒவ்வொரு பிள்ளையாரும் விசேஷமாகக் கையால் செய்தவை. துதிக்கை செய்யும்போது மண்ணைக் கைகளால் உருட்டி பிரிசணலால் இடம் வலமாக வருடி விடுவார். அசல் தும்பிக்கை மாதிரியே வரிவரியா விழும். தொந்திக்கு ஒரு உருண்டை. தலைக்கு ஒரு உருண்டை. கொசுறா இரண்டு காதுக்கு பிடிச்சுட்டு ரோட்டை பராக்குப் பார்த்துட்டு கீழே பார்த்தால் நிமிஷத்தில் தயாராயிடும். கால் கையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பிள்ளையாருக்கு முளைக்கும். கடைசியாக உளுத்தங்கொழக்கட்டை மாதிரி பிடிச்சு மூஞ்சுருவாய் பிள்ளையார் காலடியில் ஒட்டி “இந்தாங்க..”ன்னு பலகையில் ஏற்றிவிடுவார். அப்போதெல்லாம் பிள்ளையாருக்குக் குடை பிடிக்கும் பழக்கம் கிடையாது.

பாமணி ஆத்தங்கரை போற வழியில் ரதசப்தமிக்கு எருக்கம் இலை பறித்துக்கொண்டு வருவோம். அங்கே ஓடிப்போய் எருக்கம்பூவும் அருகம்புல்லும் பறித்துக்கொண்டு வீட்டிற்கு போனால் “குந்துமணி பறிச்சுண்டு வந்தாலும் ப்ரயோஜனம் உண்டு.. புள்ளையாருக்கு கண்ணா வைக்கலாம்.. அருகம்புல் ஆத்துலேயே மண்டிக் கிடக்கு. இதுக்காக போய் ஊர் சுத்திட்டு வரியா? பூஜை ஆரம்பிக்கவேண்டாமா?” என்று விக்னேஸ்வரனுக்குப் பதிலாக எனக்கு அர்ச்சனை பண்ணுவாள். ஒரு தடவை குந்துமணி பறிக்கும் போது லேசாக நக்கி டேஸ்ட் பார்த்தவனை “ஐயோ.. அது விஷம்டா... சாயந்தரத்துக்குள்ள உனக்குப் பரலோகம்தான்..” என்று கலாய்த்து பீதி கிளப்பிவிட்டோம். அன்று முழுவதும் கொழக்கட்டையைக் கூட வாயில் வைக்கப் பயந்து மதில்கட்டையில் தேமேன்னு அமர்ந்திருந்தான் அந்த ப்ரஹஸ்பதி. கண்களில் மரண பயம்.

வடக்குத் தெரு கிழக்குத் தெரு என்றும் புலியும் சிங்கமுமாய் தனித்தனியே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த அணிகள் ஈசான்ய மூலை பிள்ளையார் கோயிலில் ஒரு சதுர்த்தியில்தான் இணைந்தது. பிரசாதமாகக் கிடைத்த கொ.கடலை சுண்டலை பகிர்ந்து உண்டு பல்லுயிர் ஓம்பி பல காலம் மன்னையில் ஹெச்சிசி(Haridhranadhi Cricket Club) என்று கோலோச்சினோம். 3333, 2222, 1111 என்று எண்ணெற்ற ரிப்பீட் நான்கிலக்க பரிசுகள். பிள்ளையார் உம்மாச்சியின் பரிபூர்ண ஆசீர்வாதம்.

நானாவித கொழக்கட்டைகள், பாயஸம், சுழியம் என்று விதவிதமான சாப்பாட்டிற்குப் பிறகு சமூகப் பட்டிமன்றம், கவர்ச்சி நடிகை கால்மேல் கால் போட்ட பேட்டி, சிறப்புத் திரைப்படம் என்றெல்லாம் பொட்டி முன்னாடி உட்காரும் பழக்கமில்லை. அப்போது இல்லவும் இல்லை. தெருவில் இறங்கிக் கிரிக்கெட் விளையாடப் போய்விடுவோம். பிள்ளையார் கிரிக்கெட் ரெண்டும் நினைவில் நிரடினால் ஹமீது ஞாபகம்தான் பொத்துக்கொண்டு ஊற்றும். நேஷனல் ஸ்கூல் கிரிக்கெட் டீமில் எங்களுக்குக் கேப்டன். ஆறடி. மூக்குக் கண்ணாடி. முதுகில் அஞ்சு டிகிரி கூன். பதினோராம் வகுப்பு மாடியிலிருந்து ஆனந்த விநாயகர் கோயில் தேங்காய் எறி தூரம். தீபாராதனைத் தட்டோடு குருக்கள் வருவது நாம் தொட்டு ஒற்றிக்கொள்ளுமளவுக்கு பக்கத்தில் தெரியும். பள்ளிக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் ஹமீது சம்பந்தக் குருக்களிடம் விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு பக்திபாயாய் பள்ளிக்குள் மான் போலே துள்ளி வருவது கண்ணில்படும்.

அந்த வருஷ விநாயகர் சதுர்த்திக்குப் களிமண் பிள்ளையார் வாங்க நான் லேட். வீட்டில் வழக்கமாக சார்த்தியிருக்கும் இடத்தில் பலகாவைக் காணலை. அங்கே மளிகை சாமான் வாங்கும் ஒரு ஒயர்க் கூடை கிடந்தது. பாட்டி திட்டுவதற்குள் ஓடு. மூளைக்குள்ளிருந்து கட்டளை. கூடையை ஹாண்டில் பாரில் மாட்டிக்கொண்டு ஓடினேன். சோதனையாகக் கீழ்கரை முக்கில் யாரும் கடை விரிக்கவில்லை. சைக்கிளை பேயாய் மிதித்து தேரடிக்குப் போயாச்சு. ரெண்டு பேர் முன்னாடி. களிமண் பிடித்துப் பிள்ளையார் வடித்தவருக்கு சதாபிஷேகம் ஆகியிருக்கலாம். ஒத்தாசைக்கு யாருமில்லையே. நேரம் பறந்தது. என் முறை வந்தது. அவசரவசரமாக வாங்கிக்கொண்டு பாட்டி ஹரித்ராநதியில் ஸ்நானம் செய்துவிட்டு மங்கம்மா படித்துறை ஏறுவதற்குள் வீட்டிற்குள் ஆஜர். ஒயர்க் கூடையிலிருந்து பிள்ளையாரை எடுத்தால் யாரோ கசையடி கொடுத்தது மாதிரி மேனியெங்கும் வரிவரியாய் கோடுகள். ஈரமாய் இருந்த பிள்ளையாரின் மேல் ஒயர்க்கூடையின் உபயம்.

பஞ்சகச்சம் பரபரக்க வாத்தியார் புயலென நுழைந்தார். சப்ளாங்கால் போட்டு கீழே உட்காருவதற்குள் “ம்..குட்டிக்கோ...சுக்லாம் பரதரம்... மொதத் தெரு வேற போகணும்...”ன்னு வாட்சைப் பார்த்துக்கொண்டே ரன்னிங் கமெண்ட்டரியாக பூஜையை ஆரம்பித்துவைத்தார். விமரிசையாக நடந்தது. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு சிரமபரிகாரம் செய்துகொண்டிருக்கும்போது பக்கத்தாத்து ரமா பாட்டி வந்து சாம்பிளுக்கு வெல்லக் கொழக்கட்டை ருசி பார்த்தார். வெல்லக் கொழக்கட்டையின் பூர்ணத்தின் அதிருசியில் ”என்னாச்சு.. உங்காத்து புள்ளையாருக்கு உடம்பெல்லாம் தடிச்சிருக்கு....”ன்னு படு கேஷுவலாகக் கேட்டார். என் பாட்டி பதிலுக்கு ஆராதனையாகச் சொன்னாள் “அதுவொன்னுமில்லைக்கா... இது...” போன ’இது’க்கப்புறம் மீதியை இப்பதிவின் தலைப்பை ஒட்ட வைத்து வாசிக்கவும்.

சென்னைக் குறிப்பு: களிமண் காய்ந்து போய் வீட்டிற்கு வர எப்போதும் ரெடியாக இருக்கிறார். டெம்ப்ளேட்டட். பிள்ளையாருக்குக் குந்துமணி வைத்துக் கண் திறந்து கொடுக்கிறார்கள். ஐம்பது ரூபாய். கலர்க் கலர் குடை. ஒரு பிரி அருகம்புல் அஞ்சு ரூபாய். முழம் நூலில் பத்து எருக்கம்பூ தாராளமாய்க் கோர்த்துப் பத்துரூபாய். “கொடை குத்தறத்துக்கு கைப்பிடி மண் கொடுங்களேன்” என்று கேட்டால் அவர்கள் சொத்தை எழுதிக் கேட்டாற் போல ”வண்டி மண்ணு எவ்ளோ தெரியுமா?” என்று மண் எக்கனாமிக்ஸ் பேசுகிறார்கள்.

‪#‎மன்னார்குடி_டேஸ்‬

கணபதி முனி - பாகம் 11 : பிறைச்சந்திரனை முத்தமிட்ட எறும்பு

நவத்வீபா “ஹரிஸபா”வில் கணபதியின் பாண்டித்யம் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றுச் சுவர்களும் ரசிக்கும்படி அம்பிகா தத்தரும் கணபதியும் கன சுவாரஸ்யமாக தர்க்கம் செய்கிறார்கள். இங்கு புதிதாய் வருபவர்கள் அப்படி அந்த தூண் பக்கத்தில் இருக்கும் சந்து இடத்தில் சப்தமில்லாமல் அமர்ந்துகொள்ளுங்கள்.

“வருடத்தில் ஒரு நாள் கௌரி சிவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள்...”... இது இரண்டாவது சமஸ்யம் என்று கணபதியை நோக்கி கையை ஆட்டினார் அம்பிகா தத்தர்.

“விநாயகர் சதுர்த்தி அன்று விண்ணில் தோன்றும் நிலவைப் பார்த்தால் துன்பம் பல வந்து சேரும் என்று கணேசபுராணம் சொல்கிறது. நான்காம் பிறை. சந்திரசேகரனாகிய சிவன் தன் சிரசில் தாங்கியிருப்பதால் உமையம்மை அன்று ஒரு நாள் சிவபெருமானின் வதனத்தை பார்க்கமாட்டாள்....” என்று கவி பாடினார். கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது.
“ம்.. மூன்றாவது.....” இதில் கணபதி சறுக்கலாம் என்று வேடிக்கை பார்த்தார்.

”இது ஜாதகக் கட்டத்தில் வரும் புதிர். ஒரு குழந்தையின் ஜாதகத்தில் ராகு கோணத்திலும் குரு மூன்றிலும் குஜன் ஏழிலும் இருந்து சூரியன் சந்திரன் இருவரும் லக்னத்தில் சேர்ந்திருந்தால் அந்தக் குழந்தை பிழைக்காது*. இதுவே சந்திரனோடு சேர்ந்து சூரியனும் தொலைந்தது....” அவிழ்க்க சிக்கலான இந்த முடிச்சுக் கவிக்கு கணபதியின் பதில் சுடச்சுட வந்ததும் அவையோர் எழுந்து கரகோஷித்து மரியாதை செய்தனர். அரங்கத்தின் உற்சாகம் அடங்க கொஞ்ச நேரம் ஆனது.

“அமைதி....அமைதி.. இப்போது நான்காவது சமஸ்யத்துக்கு விடையளிக்கலாம்...” என்று தேர்வைப் பிடித்து நகர்த்தினார் அம்பிகா தத்தர்.

“அப்போது தாக்ஷாயினியாக உமையவள் அவதாரமெடுத்திருந்தாள். தனது தந்தை தக்ஷன் நடத்தும் யாகத்திற்கு தன் கணவனை அழைக்வில்லை என்று அறிந்ததும் தக்ஷனிடம் போய் மல்லுக்கு நின்றாள். அவர் “இடுகாட்டில் சுடலைப்பொடி பூசியலைபவனுக்கு எதற்கு மரியாதை? அவனை ஏன் கூப்பிடவேண்டும்?” என்று ஏகவசனத்தில் தூஷிக்க கோபாக்கினியில் தன்னையே பஸ்பமாக்கிக்கொண்டு சாம்பலானாள். இந்த சங்கதி சிவனார் காதுக்கு எட்டியதும் சக்தியில்லாமல் மூர்ச்சையாகிக் கீழே சரிந்தார். அப்போது அவரது ஜடாமுடியில் தாங்கியிருந்த சந்திரனும் தரையைத் தொட்டது. தேனோ இனிப்போ கிடைக்குமா என்று அந்தப் பக்கம் ஊர்ந்து கொண்டிருந்த ஒரு எறும்பு அப்போது அந்த பிறைச் சந்திரனை நக்கி முத்தமிட்டது....” என்று கவிநயம் கொஞ்ச பதிலளித்தார்.

அவை ஆச்சரியத்தில் மூழ்கியது. எல்லா சமஸ்யத்திற்கும் பளிச்பளிச்சென்று மின்னலாய்ப் பதிலளித்தார். கவி மழை பொழிந்து கூடியிருந்தவர்களின் காதுகளுக்கு தேனூட்டினார். மொத்த சபையும் எங்கேயும் நகராது கேட்டுக்கொண்டிருந்தது. அற்பசங்கைக்குக்குக் கூட ஒதுங்காமல் பலர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இப்போது அம்பிகா தத்தர் கணபதியை வைத்து அக்கூட்டத்தினருக்கு இலக்கிய விருந்து படைக்க உத்தேசித்தார். ஏதேனும் காவியத்திலிருந்து இரண்டு ஸ்லோகங்களை எடுத்துக்கொண்டு அதை அவையோர் முன்பு எளியோரும் தெளியும் வண்ணம் விஸ்தாரமாக விமர்சிக்க வேண்டும்.

முதலில் காளிதாசனின் ரகுவம்சம். ஒன்பதாவது சர்க்கத்தில் ஏழாவது ஸ்லோகம். இரண்டாவதாக பதினோராம் நூற்றாண்டில் போஜ ராஜாவின் அரண்மனையை அலங்கரித்த மம்மதா பட்டரின் காவ்யபிரகாஸத்திலிருந்து. அம்பிகா தத்தர் சைகை செய்ய கண்பதி ஸ்லோகங்களைக் அக்கக்காகப் பிரிக்க ஆரம்பித்தார். கடினமான பல ஸ்லோகங்களை பலாவிற்குள் இருக்கும் சுளை போல உறித்து தேனில் தோய்த்துச் சபை ருசிக்கக் கொடுத்தார். அறிஞர்களின் அச்சபை களை கட்டியது.

ரகுவம்ச காவியத்திலிருந்து அமிர்தங்களைப் பிழிந்து கொடுத்துவிட்டு காவ்யபிரகாஸத்திற்கு தாவினார். வெகுநேரம் பிரசங்கித்ததாலோ என்னவோ “சர்வேசம்” என்று உச்சரிப்பதற்குப் பதிலாக நா லேசாகப் பிழன்று “சர்வேசாம்” என்று கால் வைத்து நெடிலாக முடித்தார். உடனே நாக்கைக் கடித்துக்கொண்டு தவற்றைத் திருத்தி பிழையில்லாமல் மறுபடியும் பாடினார். காலையிலிருந்து இரைக்குக் காத்திருக்கும் கொக்கு போல விடாப்பிடியாக நின்ற அம்பிகா தத்தர் இதை கோட்டை விடுவாரா? லபக்கென்று பிடித்துக்கொண்டார்.

“உன் பாடலில் குறையில்லை; கட்டுரையில் சர்வஜனங்களையும் கட்டிப்போடுகிறாய்; ஆனால் பேச்சில் கோட்டை விட்டாயேப்பா? மூவுலகையும் பரிபாலணம் செய்யும் தாராவை வணங்குவதில்லையோ?” என்ற அர்த்தத்தில் சம்ஸ்க்ருத கவி பாடி எள்ளி நகையாடினார்.

சாக்தராகிய கணபதி முனிக்கு ஸ்ரீதாரா தேவியை வழிபடாதவனே என்று அம்பிகா தத்தர் சொன்னவுடன் சுறுசுறுவென்று ஏறியது. அம்பிகா தத்தரும் சரஸ்தாரா என்று பாடுவதற்கு மாறாக இலக்கணப் பிழையுடன் திரிபுவன ”சாரா தாரா”... என்று பாடிவிட்டார். கணபதி அவையைப் பார்த்து அர்த்தபுஷ்டியாகச் சிரித்தார். அம்பிகா தத்தருக்கு முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. ”என்ன?” என்று கையை ஆட்டி சமிக்ஞையினால் கேட்டார். அரங்கம் சூடு பிடித்தது. காவிய இரசிகர்களுக்கு கன்னல் விருந்து. கணபதி என்ன சொல்லப் போகிறார் என்று கூட்டம் கண் கொட்டாமல் ஆர்வமாய்க் காத்திருந்தது. நாமும் அடுத்த அத்தியாயம் வரை காத்திருப்போம்.

*ஜாதகக் கட்டங்களை விளக்கிய Vk Srinivasan க்கு நன்றி!

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_11‬
‪#‎கணபதி_முனி‬

ஆச்சா

Hardwickia binata என்ற பொட்டானிகல் பெயருள்ள ஒரு மரத்தை இந்த ஸ்டேட்டஸின் ஒட்டாகப் பார்க்கிறீர்கள். இது சித்ரகூட மலையில் இளையபெருமாள் ஏறிப் பார்த்த மரம். இராஜாஜியின் இராமாயணம் படித்துக்கொண்டிருக்கிறேன். முதல் பக்கத்திலிருந்து மளமளவென்று கதையை நகர்த்துகிறார். படிக்கும்போது எழுத்துகள் வழியாக ராமன் அடி பற்றி பின்னாலேயே காடு மலை ஆறுகளைக் கடந்து ஓடுகிறோம். அண்ணன் தம்பி பாசத்தைப் பக்கம் பக்கமாக வடிக்கிறார். ராஜாஜியின் ராமச்சந்திரமூர்த்தியைப் படிக்கும்போது சாதாரணரர்களுக்கே கருணை ஊற்றெடுக்கும். 

இராமனுக்கு பணிவிடைகள் செய்து பகவத் கைங்கர்யம் செய்யும் இளையபெருமாள் தூரத்தில் புழுதி கிளம்ப ஆச்சா மரத்தின் மேலேறிப் பார்த்தான் என்று ராஜாஜி எழுதியிருந்தார். பரதன் சதுரங்க சேனையுடன் வருவதைப் பார்த்ததும் கோபாவேசமாக “ராஜ்ஜியத்தைப் பிடிங்கிக்கொண்டதுமில்லாமல் படையெடுத்தும் வருகிறான்...” என்று குதித்தானாம்.

அரச, ஆல, வேப்ப, கருவை, கருவேப்பிலை, பூவரசு, நாவல், புளிய, மா, பலா, தேக்கு, வாழை, நெல்லி, புங்க, தென்னை, பனை, புன்னை, நாகலிங்கப் பூ, சந்தன மரங்கள் சகஜமாகத் தெரிந்தவை. பார்த்தவை. ஆச்சா மரமா? அதென்ன ஆச்சாரமான மரம் என்று கூகிளில் மூழ்கினேன். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவனுக்கு தெம்பூட்டவும் தனது வில்லாற்றலை காண்பிக்கவும் ஏழு மராமரங்களென்று இராமன் துளைத்தது ஆச்சா மரங்களைத்தானாம். இத்தகைய வலிமையான ஆச்சா மரத்தில்தான் நாகஸ்வரம் தயாரிக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. கம்பனும் ”பெரிய, ஆச்சா, விலங்கு” என்று அர்த்தம் தொனிக்க ”“மா..மா..மா..” போட்டு எழுதிய பாடலை இங்கே பார்க்க: http://www.tamilvu.org/slet/l3710/l3710ame.jsp?st=391&ed=509&mi=2&sno=872

இப்படி இந்த மரம் தேடுகையில் கிடைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வனவியல் வலைப்பக்கம் உபயோகமான ஒன்று. (அது இங்கே: http://agritech.tnau.ac.in/forestry/ntfp_hardwickia_binata.html) தமிழிலும் ஆங்கிலத்திலும் மரங்களை மட்டுமன்றி தமிழ்நாட்டின் ஆரண்ய வனப்புகளை சங்கிலியாகக் கோர்த்து பார்வைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

“ஆர்வியெஸ் சட்டையில மேல் பொத்தானைப் போடுடா... ரௌடி மாதிரித் திரியற...” என்று ஹைபிஸ்கஸ் ரோஸாசினான்ஸிஸுடன் அடிப்படை ஒழுக்கங்களையும் போதித்த மன்னை நேஷனல் ஸ்கூல் பாட்டனி பாலு சார் ஞாபகம் நினைவில் நிரடுகிறது.

‪#‎தாவரவியல்‬

ஐயப்ப தரிசனம்

கனத்த மழை. படிகளில் அருவியாய் கொட்டியது. கீழே பம்பையின் படியிரண்டை உயர்த்தியிருக்கும். அயராது சரண கோஷமிட்டு மலையேறினோம். சொட்டச் சொட்ட மழையிலும் பக்தியிலும் நனைந்தோம். பொன்னு பதினெட்டாம் படியில் கால் வைக்கச் சிலிர்த்தது. பூர்வ ஜென்மப் புண்ணியம். ஐயப்பனின் அளவு கடந்த பேரருளாலும் கோபியின் அபரிமிதமான அன்பினாலும் திவ்ய தரிசனம். கூடை கூடையாய் புஷ்பாபிஷேகம் செய்யும் பேறு பெற்றோம். சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டான். நண்பர்கள் மற்றும் உறவுகளின் க்ஷேமத்திற்கு நெஞ்சார வேண்டிக்கொண்டேன். மனசு நிறைந்திருக்கிறது

அக்கா தெய்வம்

ஏர்போர்ட் முழுக்க காக்கிகள். திரும்பிய இடத்திலெல்லாம் ஒரு கான்ஸ்டபிள் லத்தியுடன் கடமையாற்றிக் கொண்டிருந்தார். யூயெஸ்ஸிலிருந்து அக்கா தெய்வம் மீனம்பாக்கத்தில் வந்து இறங்கியது. காரில் ஏறியவுடன் சமர்த்தாக சீட் பெல்ட் அணிந்துகொண்டது. ஒழுக்கம் பழக்கத்தில் வருகிறது என்பது புரிகிறது. “இங்க தேவையில்லைதானே....” என்று கேட்டாள். “அவசியம் தேவை... இங்க பாரு...” என்று என் பெல்ட்டை இழுத்து ”பட்”டென்று அடித்துக் காண்பித்தேன். நெஞ்சருகே வலித்தது.

செல்லும் வழியில் சிக்னல் ஆம்பருக்குப் பதறி “நிறுத்துடா.. நிறுத்துடா.. போகாதே... ஆம்பர்.. ஆம்பர்...” என்று யாரோ பிக்பாக்கெட் அடித்தது போல அலறினாள். “போகமாட்டேன். கவலைப்படாதே...” என்று மெதுவாக்கி நிறுத்தினேன். வலது பக்க இண்டிக்கேட்டர் “டக்..டக்..”கியது. எங்கள் முறை வந்து வலது பக்க பச்சை ”போகலாம்..” என்று சிரித்தபோது முதல் கியரைத் தட்டி வலது பக்கம் மெதுவாகத் திரும்பினேன். எதிர்முனையில் சிகப்பிருந்தும் இருவர் பைக்கில் படுத்து எழுந்து சர்க்கஸ் காண்பித்துச் சறுக்கிப் பறந்தார்கள். 

“அடப்பாவி.. அப்டியே போய்டப் போறானுங்கடா...” என்று கொதித்தாள். 

“இந்நேரம் யூயெஸ்ஸா இருந்தா சிக்னல் வயலேஷன்னு டூ ஃபிஃப்டி டாலர்ஸ் சீட்டுக் கொடுத்து டூ வீக்ஸ் கம்யூனிட்டி சர்வீஸ் பண்ண சொல்லியிருப்பான்.”
“கம்யூனிட்டி சர்வீஸ்னா என்ன அத்தை?” பெரியவள் கேட்டாள்.

“ரொம்ப புனிதமான சர்வீஸ். ரோட்ல குப்பை அள்றது... சுத்தம் பண்றது...”

“அங்கே அவ்வளவா குப்பை இருக்காது.... நம்மூர்ல அள்ளச் சொன்னா குப்பைத் தொட்டியில குழந்தையே அள்ளலாம்...” என்றேன்.

இன்னொரு அரை ஃபர்லாங் தூரத்தில் ஆட்டோ ஒன்று அனாயாசமாக அரைவட்டமடித்தது. சடாரென்று ப்ரேக்கை அழுத்தினேன். இன்று சுதந்திர தினம். கடை கிடையாதே. சவாரியில்லாத சரக்கில்லாத ஆட்டோ இப்படி வீலிங் செய்து திரும்பாதே. சேப்பாயி குலுங்கி அடங்கித் திரும்ப கிளம்பினோம். அக்காஃபோன் வாங்கிக்கொடுத்த தெய்வம் என்னைப் பயமாய்ப் பார்த்தது.

சிரித்தேன். இரு நொடி மௌனத்திற்குப் பின்னர்...

“நம்மூருக்குள்ள கால் வச்சதுமே இதையெல்லாம் சகிச்சுக்கணும்னு தோனிடறதுடா.. ஏதோ எந்திரமா ரூல்ஸ் ரூல்ஸ்னு பேசிண்டிருந்தா... நானும் கம்ப்யூட்டரும் ஒண்ணாயிடறமாதிரி இருக்குடா..... யூயெஸ்லேர்ந்து அந்த ரோடு டிஸிப்ளின் மட்டும் கத்துண்டா பாதி ஆக்ஸிடெண்ட் குறைஞ்சுடும். பாக்கியெல்லாம் நாம நாமளாத்தான் இருக்கணும்..”

“சரிதான். இருந்தாலும் எல்லை மீறி ரோட்ல அட்டகாசம் பண்ணும்போது ச்சீ போன்னு அலுத்துடும்....”

ஒரு கடையில் தேசியக் கொடி போல பலூன் அலங்காரம் செய்திருந்தார்கள்.

“ஓ இன்னிக்கி இண்டிபெண்டஸ் டேயில்ல... ஹாப்பி இண்டிபெண்டஸ் டே டா...”

“நான் கூட வேண்டப்பட்டவங்களுக்குச் சொல்லலை... போய் எழுதிச் சொல்லணும்..”

“யாரு? ஃபேஸ்புக்கா?”

“ஆமாம்.”

சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

“நானும் ஒரு மாங்காவுக்கு வாழ்த்து சொல்லணும்டா...” என்றாள் ஐஃபோன் கொடுத்த அக்கா தெய்வம்.

“யாருக்கு?”

“உனக்குதான்.. அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே!”

”தேங்க் யூ”.

பரம சந்தோஷம்.

இசை மும்மூர்த்திகள் - திராக்ஷை:வாழை:பலா

தியாகைய்யரின் கீர்த்தனங்கள் திராக்ஷை மாதிரி.... கொத்துலேர்ந்து ஒவ்வொன்னா பறிச்சு அப்டியே வாய்ல போட்டுக்கலாம். ஈஸி. ஷ்யாமா சாஸ்திரியினுடையது வாழைப்பழம்... தோலை பக்குவமா உரிச்சு உரிச்சு சாப்பிடணும். தீக்ஷிதர் க்ருதிகள் மாதுளம் பழம் போல.. பழத்தை உரிச்சு.. பிரிச்சு... முத்துகளைத் தட்டித் தட்டிச் சாப்பிடறா மாதிரி.. கொஞ்சம் மெனக்கெடனும்... ராக ரஸத்தைப் பிழிந்து தருவதால் மும்மூர்த்திகளின் கீர்த்தனங்களைப் பழமாக பாவித்தது அற்புதம்.

கர்நாடிக் ம்யூசிக் கேட்கணும் போல இருந்தது. யூட்யூப் அலசலில் யதுகுலகாம்போஜியில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரியின் “அம்பா காமாக்ஷி” கேட்க நேர்ந்தது. டி.எம்.க்ருஷ்ணா பாடியது. உருகியது. ஊரடங்கிய பின் கேட்டது சுகானுபவமாக இருந்தது. காஞ்சி காமாக்ஷியின் சன்னிதியில் நேரில் கொண்டு போய் நிறுத்தியது. தாழம்பூ குங்கும வாசனை. யதுகுல காம்போஜி, பைரவி, தோடி மூன்றும் “ரத்ன த்ரையம்” என்று சாஸ்திரியின் பாடல்களில் போற்றத்தக்கவையாம். 

இத்துடன் இணைக்கப்பட்ட சுட்டியில் எழுதியிருந்தவைகளை முதல் பாராவில் தமிழ்படுத்தியிருக்கிறேன். கர்நாடக சங்கீதம் எனக்கு கேள்வி ஞானம்தான்.

http://youtu.be/RfRcP5rHk4g
‪#‎அம்பா_காமாக்ஷி‬

கணபதி முனி - பாகம் 10 : சொற்போர்: கற்புக்கரசி இடும்பி

இதோ ஞானசூரியனாக நடந்துவரும் கணபதி நவத்வீபா சர்வகலாசாலைக்குள் நுழைவதற்கு முன்னர் பின்வரும் இரு பாராக்களில் அதன் புகழ் பாடிவிடுவோம்.

புராதன காலத்திலிருந்து காஞ்சீபுரம், அமராவதி, நாலந்தா, உஜ்ஜயினி மற்றும் நவத்வீபா ஆகிய ஐந்தும் மேற்படிப்புக்கான பிரசித்தி பெற்ற கலாசாலைகள். முதல் நான்கும் மூடி விட்டாலும் நவத்வீபா மட்டும் துடிப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வருடந்தோரும் தேசத்தின் அனைத்து திக்கிலிருந்தும் மாணவர்களும் பண்டிதர்களும் நவத்வீபாவை முற்றுகையிட்டு பரீக்ஷையில் தேறி தத்தமது துறையின் சான்றிதழ் பெற்று ஊரில் தம்பட்டம் அடித்துக்கொள்வதை பெருமையாகக் கொண்டார்கள்.

இறுதி பட்டமளிப்பு விழா நடைபெறும் ஆயிரம் பேர் அமரும் பிரம்மாண்டமானக் கூடத்திற்கு “ஹரிஸபா” என்று பெயர். இங்கு வழங்கப்படும் பட்டயச் சான்றிதழ் அகிலமெங்கும் போற்றி புகழப்படும் ஒன்று. இந்தக் கூடத்திற்கு முன்னர் வாயிலில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு எழுதி தகுதியடைவதற்கே பிரம்மப்ரயர்த்தனம் செய்ய வேண்டும். இதன் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வு போன்ற ஹரிஸபா பரீக்ஷை மிகக் கடினமானது. பல்லை உடைக்கும். இதனால் இங்கு பட்டம் பெற கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை வித்யார்த்திகளின் வரிசை அமிர்தம் கடைந்த வாசுகியாய் நீண்டது.

அலங்கார வளைவுகளுவும் ஐவர் சேர்ந்தாலும் கைகோர்த்துக் கட்டிப் பிடிக்க முடியாத பிரம்மாண்டமான துண்கள் தாங்கிய வேலைப்பாடுகள் அமைந்த மேற்கூரையுள்ள அந்தக் கல்லூரிக்குள் தேசலான கணபதி சாந்தமாக நுழைகிறார். நுழைவுத் தேர்வுக்கான சிட்டுகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் இங்குமங்கும் விசாரணைக்காக அரக்கபரக்கச் சென்றுகொண்டிருக்கிறார்கள். பிரம்ம தேஜஸுடன் அந்தத் தூணருகில் மாணவர்களை வழிநடத்த நிற்பவர்தான் சிதிகண்ட வாசஸ்பதி. அவர்தான் நுழைவுத் தேர்வு நடத்துபவர். ஸம்ஸ்கிருதத்தைக் கரைத்துக் குடித்தவர். சாந்த சொரூபி. இரைச்சலோடு கூட்டம் சுழற்றியடித்தது. கணபதியால் அவரை நெருங்கவே முடியவில்லை. பல நாழிகைகள் காத்திருப்பில் கடந்தது. சிதிகண்டரைப் பார்ப்பதற்கு கணபதி தவமிருந்தார்.

“தம்பி.. நான் குலபின்யா... மிதிலையிலிருந்து வருகிறேன்” தோளுக்குப் பின்னால் மென்மையான குரல் கேட்டது.

மனசு ”யாரிவர்?” கேட்க நெற்றி சுருக்கத்துடன் கணபதி கைகூப்பி அவருக்கு ”வந்தனம்..” சொன்னார்.

“இவர்கள் என் மாணவர்கள். பரீக்ஷைக்கு வந்திருக்கிறார்கள். நீ தனியாகதான் வந்தாயாப்பா?”

“இரு நண்பர்களுடன் வந்திருக்கிறேன். என் பெயர் கணபதி. ஸ்ரீமான். சிதிகண்ட வாசஸ்பதியைப் பார்க்கவேண்டும். காலையிலிருந்து காத்திருக்கிறேன்...”

“நிச்சயம் இன்று அவரைச் சந்திப்பது கடினம். இன்றிரவு என்னுடன் வந்து தங்கிக்கொள். அவரை நாம் நாளைச் சந்திக்கலாம்...” என்று கணபதியையும் அவருடன் வந்த இருவரையும் அழைத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்றார் குலபின்யா.

இரவு அவரது அறையில் இருவரும் நிறைய இலக்கியம் பேசினார்கள். கொஞ்சம் விவாதித்தார்கள். அவ்வப்போது சிரித்தார்கள். கணந்தோரும் சத்விஷயங்களைச் சிந்தித்தார்கள். “ஓ! சிவகுமாரிடமிருந்து சிபாரிசுக் கடிதம் வேறு வைத்திருக்கிறாயா? சபாஷ்” என்று தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார் குலபின்யா. இரவு உணவுக்கப்புறம் மாணவர்கள் அனைவரும் ஓய்வெடுக்க சென்றார்கள்.

குலபின்யாவுக்கு புரிந்துவிட்டது. ”கணபதி லேசுப்பட்ட ஆளில்லை. ஞானச்சுடர். நிச்சயம் நாளை ஹரிசபையினரால் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடப்படப் போகிறவர்” என்று நித்திரை வராமல் புரண்டு படுத்த ஒரு சிஷ்யனிடம் கணபதியின் பெருமை பேசினார்.

பொழுது விடிந்தது. கணபதி சிதிகண்ட வாசஸ்பதியை கலாசாலை வாசலிலேயே ”நமஸ்காரம்” என்று சிரம் தாழ்த்தி கைகூப்பி வணங்கி மடக்கினார். தன்னிடமிருந்த சிவகுமாரின் சிபாரிசுக் கடிதத்தை எடுத்து நீட்டினார். “அனுமனைப் போல் அபார திறமைபடைத்தவர்” என்று சிவகுமார் கணபதியை சிலாகித்து ரெண்டு வரி எழுதியிருந்தார். பின்னால் வந்த குலபின்யாவும் ”இவர் தீர்க்கமான ஆள்... இதிகாச புரணாங்களிலும் காவியங்களிலும் கரை கண்டவராக இருக்கிறார்...” என்று கணபதியின் பெருமை பாடினார்.

சிதிகண்ட வாசஸ்பதி கணபதிக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து ”பரீக்ஷை முடியும் வரை என்னுடனேயே இருப்பா...” என்று தங்கவைத்துக்கொண்டார். அனுதினமும் தனது நித்யானுஷ்டங்களான ஜபதபங்களை விடாது செய்துவந்தார் கணபதி. சிதிகண்டருக்கு இப்படிப்பட்ட ஒரு பிள்ளையைப் பார்ப்பதில் கொள்ளை சந்தோஷம்.
இறுதிப் பரீட்சைக்கான நாள் வந்தது. தேர்வாளர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் அம்பிகா தத்தர். லோகமறிந்த பிரசித்தி பெற்ற பண்டிட். ஸம்ஸ்கிருத பராக்கிரமம் மிக்கவர். பிரதானமான சிம்மக்கை நாற்காலியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். நாலாபுறமும் கூடியிருந்த அறிஞர்களை நோக்கியபடி வரும் கணபதியுடன் சிதிகண்டாவும் ஹரிசபையினுள் நுழைகிறார்.

அங்கே அமர்ந்திருக்கும் அம்பிகா தத்தரின் காதில் விழும்படி “யாரிந்த பண்டிட்?” என்று சிதிகண்டாவிடம் கேட்கிறார் கணபதி. அதற்கு அம்பிகா தத்தர் ”கவுடத்திலிருந்து வந்திருக்கும், நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் அம்பிகா தத்தா நான்...” என்று பெயர், அவரது தகுதி மற்றும் எங்கிருந்து வருகிறார் என்கிற தகவலைத் தந்து பாதியில் நிறுத்தி கணபதி முடிப்பார் என்று கேள்வியாய் பார்த்தார். புன்னகையுடன் புருவங்களை நெறித்தார்.

அசராமல் கனைத்துக் கொண்டு கணீரென்று ஆரம்பித்தார் கணபதி. “தெக்ஷின தேசத்திலிருந்து கவிக்குலபதியான கணபதி யாம்..” என்று கவிதையாக முடித்தார். அறிவார்ந்த சபையோர் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்க ஒரு கண மௌனத்திற்கு பிறகு “அம்பிகைக்கு தத்துப்புத்திரன் நீர் (அம்பிகா தத்தா) கணபதியாகிய நான் அம்பிகையின் சத்புத்திரன்...” என்று ஒரு போடு போட்டார். அவையில் பலத்த கரவொலி எழுந்தது. ”ஜெய் கணபதி! ஜெய் கணபதி!!” என்ற ஜெயகோஷம் விண்ணைப் பிளந்தது.

அம்பிகா தத்தாவிற்கு கணபதியின் சாதூர்யமான பதில் பிடித்துப்போயிற்று. தட்டிக்கொடுத்து கவிமேடைக்கு அழைத்தார். சமஸ்யங்கள் எனப்படும் கவிப்புதிர் போட்டியை ஆரம்பித்தார். கவிதையாகக் கேட்கப்படும் புதிர் முடிச்சுகளைக் பதில் கவிதையினாலேயே அவிழ்க்கவேண்டும்.
காணக்கிடைக்காத ஒரு சொற்போருக்கு அங்கே காத்திருந்தவர்கள் தயாரானார்கள்.

”டாங்...டாங்..” என்று இரண்டு முறை கண்டா மணி அடித்து ஓய்ந்தது. அம்பிகா தத்தர் கணீரென்று ஆரம்பித்தார்.. “பூர்வாங்கமாக நான் கேட்கும் நான்கு சமஸ்யங்களுக்கு விடையளி...”

”மாமனாருக்காக மேலாடையை விலக்கியவள். ஆனால் கற்பில் சிறந்த கற்புக்கரசி அவள்...”

“வருஷத்திற்கு ஒருநாள் சிவனாரின் முகத்தைப் பார்க்க மறுக்கும் கௌரி....”

”அமாவாசையில்லாத ஒரு நாளில் சந்திரனோடு சேர்ந்து சூரியனும் தொலைந்தது.....”

“பிறைச்சந்திரனை முத்தமிட்ட எறும்பு.....”

கேள்விகளின் விஸ்தீரணத்தால் கூட்டத்தில் கனத்த மௌனம். சான்றோர்களின் அந்த அவை கப்சிப்பென்று அடக்கமாக இருந்தது.

அனாயாசமாக பதிலளித்தார் கணபதி.

“மாமனாருக்காக மேலாடையை விலக்கியவள் மஹாபாரத இடும்பி. கசக்கிப் பிழியும் வேனிற் காலத்தில் பீமனின் (வாயு புத்திரன்) மனைவி இடும்பி குளிர் காற்று (வாயு பகவான்: மாமனார்) வாங்குவதற்காக தனது மேலாடையை விலக்கினாள்...”. கூட்டம் ”ஆ”வென்று வாய் பிளந்தது. அம்பிகா தத்தர் விடவில்லை.

“ஏன் த்ரௌபதியில்லை?” என்று மிரட்டல் தொனியில் கர்ஜித்தார்.

“த்ரௌபதி ஐவருக்கு மனைவி. பீமனுக்கு மட்டும் மனைவியில்லை. அப்படியானால் பல மாமனார்கள் கணக்கில் வருவார்கள். மேலும் த்ரௌபதி ராஜபோகமாக அரண்மனையில் வளர்ந்தவள். காட்டுவாசி போல சட்டென்று மேலாக்கை கழட்டி வீசமாட்டாள்.”

அம்பிகா தத்தர் உள்ளுக்குள் ரசித்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த பண்டிதர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கண்களால் பாராட்டினார்கள்.

“உங்களுடைய கவிதையில் ஒரு சிறு திருத்தம் செய்யலாமா?” என்று விண்ணபத்துடன் நின்ற கணபதியைப் பார்த்து அதிசயத்தார். அழைத்து வந்த சிதிகண்டருக்கு கதி கலங்கிற்று. என்ன திருத்தம் செய்யப்போகிறார் என்று பண்டிதர்களும் மாணவர்களும் நிரம்பிய சபை ஆர்வத்துடன் காதைத் தீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது.

“என்ன?” என்று சபை அதிர உறுமினார் அம்பிகா தத்தர்.

“இடும்பியின் ஸ்தனவஸ்திரம் என்று எழுதிய தங்கள் கவிதையை உத்தரீயம் என்று மாற்றினால் கவித்துவம் மிகுந்து மேலும் அர்த்தபுஷ்டியாகக் காணப்படும்....”

சபை ஸ்தம்பித்தது.

“அடுத்த சம்ஸ்யத்துக்கான பதில்?”

கணபதி புன்னகை தவழ ஆரம்பித்தார்.......

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_10‬
‪#‎கணபதி_முனி‬

கடன்காரன்

மனோவுக்கு ”காதோரம் லோலாக்கு” பாடல் மூன்று டேக் வாங்கியதாம். ஜானகியம்மா ராஜாவிடம் ”மிரட்டாதே...”ன்னு சொல்லிவிட்டு “நீ பயப்படாம பாடுடா...”ன்னு தெம்பூட்டியதைக் குட்டிப் பசங்களுக்கு நேரே அரிச்சந்திரனாய் ஒப்புக்கொண்டார் மனோ. எண்பது தொன்னூறுகளில் ராஜாவின் பொற்காலமாக இருந்த திரையிசைக்கு இதுவும் ஒரு மூலகாரணம். இசைக் கலைஞர்களுக்கும் பின்னணிப் பாடகர்களுக்கும் இடையே இருந்த அன்பு ஃபெவிகால் போட்டு ஒட்டிய ”பச்ச்ச்சக்...”. தோழமை. பந்த பாசம். லட்சோப லட்சம் பேர் பார்க்க இதை டிவியில் வெளிப்படையாகப் பேசிய மனோ மனோதிடம் மிகுந்த ஆள். ஹாட்ஸ் ஆஃப்.

*

கல்யாண மண்டபத்தில் மாக்கோலம் போட்டதிலேர்ந்து கட்டுசாக்கூடை கட்டி புதுப் பொண்ணை புக்காத்துக்கு அனுப்பும் வரை ஓடியாடி வேலை செஞ்சா தொண்டை கட்டுமே... சுண்ணாம்பு தடவிய தொண்டைக் குழியிலிருந்து ”புஸ்ஸு.. புஸ்ஸு..”ன்னு வெறும் காத்து மட்டும் வருமே... அதுமாதிரி தொண்டை அடைத்திருக்கும் ஜானகியை விஜய் டிவில கூப்பிட்டு.... சோஃபால உட்கார வைச்சு... பாடச் சொல்லி பாவகாரியம் செய்கிறார்கள். புண்ணியம் செய் மனமே...மனமே...

**

”யார் சார் ஃபோன்ல...”
“கடன்காரன்...”
“அச்சச்சோ.. .. படுபாவி... எவ்ளோ தரணும்?”
”இல்லை.. நாந்தான் அவனுக்குப் பத்தாயிரம் தரணும்....”
“கலியுகத்துல கடன் கொடுத்தவன் கடன்காரனாயிடறனா?.. போச்சுடா...”
“ஹி..ஹி.. ஆமாம்.. கடன்கொடுத்தார் நெஞ்சம் போல கலங்கினான் இன்றைய வேந்தன்....”
வாய்க்கு ஜிப் போட்டுக்கொண்டேன்.

***

‪#‎அக்கப்போர்‬
‪#‎சூசி‬

தமிழ் வேதம்

குடியாத்தம் எனப்படும் குடியேற்றம் சிவனடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்த சிவ.ஆ. பக்தவச்சலம் நடத்தும் சமயச் சிற்றிதழ் தமிழ் வேதம். ”தெருவெல்லாம் தமிழ் வேதம் முழங்கச் செய்வோம்” என்பது அடிவரி. பன்னிரு திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பனுவல்களை பகுதி பிரித்து ”கடன் தீர, ஆயுள் பெருக, செய்வினை அகல” என்று உபதலைப்பிட்டு வெளியிடுகிறார்கள். மாதந்தோரும் முதல் வாரம் வெளிவரும் சஞ்சிகை. முன்னட்டை பின்னட்டை சேர்த்து முப்பத்தறே பக்கங்கள். ஒரு இதழ் பத்து ரூபாய் ஐம்பது பைசா. (ஏனிந்த ஐம்பது பைசா?) 

ஒற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நடராசர் சன்னிதி வாசலில் கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்திழுத்த மஞ்சள் அட்டையும் ரோஸில் பக்தவச்சலம் பெயரும் தெரிந்து நண்பர்களிடம் ”தமிழ் வேதத் திரட்டுன்னு ஒரு புக்குப்பா....” என்று கேட்டுக்கொண்டிருந்தேன். சிவனருள் பெற்ற ஸ்நேகிதம் ஒன்று சந்தா கட்டி புத்தகத்தை வீட்டிற்கு அனுப்பியது. பிரதி மாதம் கீழ்கண்ட பொருளடக்கத்தோடு சில புதிய பத்திகள் சேர்க்கப்பட்டு சிவானுக்கிரஹம் காட்டப்படுகிறது.

1) நாயன்மார் வரலாறு
2) திருஐந்தெழுத்தின் ஆற்றல்
3) சிந்தனைக்குச் சில
4) ஒரு அற்புத சிவாலயம்
தமிழ் வேதத்தின் பக்கங்களிலிருந்து ஒரு சொட்டுத் தேன்.
சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன்
வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கை தொழ அமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்பவைத்தேன்
வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவையான் விதித்தனவே
-- பொன்வண்ணத்தந்தாதி

சிவஜோதியில் ஐக்கியமாக ஆசைப்படும் ஆர்வலர்களுக்கு அட்ரெஸ்:
சிவ. ஆ. பக்தவச்சலம், 43, சந்நிதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியாத்தம் - 632602. வேலூர் மாவட்டம். தொலைபேசி: 04171-222946 ஆயுள் சந்தா: ரூ. 1500/-, ஆண்டுச் சந்தா ரூ. 120/-

”படிக்க நேரமில்லீங்க..” என்று அலுத்துக்கொள்பவர்கள் கூட ஆண்டுச் சந்தாவோ ஆயுள் சந்தாவோக் கட்டலாம். இந்தச் சீரிய முயற்சியை ஆதரித்ததாக இருக்கட்டும்.

‪#‎திருச்சிற்றம்பலம்‬

கணபதி முனி - பாகம் 9 : தேனூட்டிய புவனேஸ்வரியம்மன்

...அந்தக் கடிதத்தில் கணபதியை கண்கொட்டா வாய்மூடா ஆச்சரியத்தில் அடித்துப்போட்டவை இரண்டு. ஒன்று அவர் கடிதம் எழுதி கவருக்குள் மடித்து வைக்கும் போது மஞ்சமசேரென்று இருந்த காகிதம் இப்போது பளீர் வெள்ளையில் டாலடித்தது. இரண்டாவதாக இவர் படமிருந்தது கடிதத்தின் மேல் பகுதியில். அங்கே இவர் எழுதியிருந்த எழுத்துகள் எல்லாம் கீழே ஒதுக்கிவிடப்பட்டிருந்தது. கையெழுத்து சாட்சாத் இவருடையதுதான். கடிதத்தின் ஒவ்வொரு அக்ஷரமும் இவர் எழுதியதுதான். மனுஷ்ய சக்திக்கு இது எப்படி சாத்தியமாகும்? தந்தையும் மகனும் எங்கும் நிறை பரப்பிரம்மமான ஈஸ்வரனின் திருவிளையாடலை எண்ணியெண்ணி நெக்குருகிப் போனார்கள். பக்திப் பரவசம் ஊற்றெடுக்க பூஜையறையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள்.

பௌர்ணமிகளும் அமாவாசைகளும் மாறி மாறி உருண்டன. விசாலாக்ஷி கர்ப்பம் தரித்தார்கள். பிறந்தகம் சென்றார்கள். கணபதிக்கு மீண்டும் தவ எண்ணம் தலை தூக்கியது. புனிதப் பயணம் மேற்கொண்டு தவமியற்ற உத்தேசித்தார். “தயை கூர்ந்து வெகுதூரம் சென்றுவிடாதீர்கள்... “ என்று பிறந்தகம் போக மாட்டு வண்டியில் ஏறும் போது விசாலாக்ஷி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓரிஸா மாநிலத்தின் புவனேஸ்வருக்குச் செல்லத் தீர்மானித்தார்.

இம்முறையும் இவரோடு இருவர் தபஸ் புரிவதற்கு தொற்றிக்கொண்டனர். ஒருவர் கணபதியின் தம்பியின் மச்சினர் ராமா சாஸ்திரி. இன்னொருவர் காசியிலிருக்கும் மாமா தாத்தா பவானி சங்கரத்தின் மகன் லக்ஷ்மிநாராயண சாஸ்திரி. இவ்விருவருக்கும் கணபதிதான் மந்திர தீக்ஷை அளித்திருந்தார். ராமா சாஸ்திரி வைராக்கியமில்லாமல் ஒரே நாளில் புவனேஸ்வரிலிருந்து கலுவராயிக்கு திரும்பிவிட்டார். லக்ஷ்மிநாராயண சாஸ்திரி சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர். தாக்குப்பிடிக்க முடியாமல் அவரும் பின்னாலேயே வீடு திரும்பினார். கணபதிக்கு இப்போது நிம்மதி. புவனேஸ்வரில் அனந்த வாஸுதேவா கோயிலுக்குள் சென்றார். பின்புறம் இருக்கும் பிரகாரத்தில் பிறர் இம்சையில்லா ஓரிடத்தில் அமர்ந்து தவத்தைத் தொடங்கினார்.

பாஸ்கரன் மறையும் வரை ஆடாது அசங்காது பத்மாசனத்தில் தவமியற்றுவார். விண்ணில் நிலவு தோன்றியதும் கணீரென்று லலிதா சகஸ்ரநாமம் ஜெபிக்கத் தொடங்குவார். ஒன்பது முறை விடாமல் ஜெபிப்பார். ஒன்பது வாரங்களுக்கு சகஸ்ரநாமமும் ஜபமும் மாறிமாறி உச்சாடனம் செய்தார். ஒன்பதாவது வார இறுதியில் ஒரு கல் மேடையில் வாஸுதேவா கோயிலின் பின்புறம் நிலவொளியில் விஸ்ராந்தியாக அமர்ந்திருந்தார். வட்ட நிலவிலிருந்து கோடி சூர்யப்ரகாசமாக நிலவைக் கோட்டைக் கட்டிய பேரொளி ஒன்று தோன்றியது.

ஜொலிக்கும் புல்லாக்கும், ரத்ன க்ரீடமும், காதில் டாலடிக்கும் வைர தாடகங்களுமாக சர்வாலங்கார பூஷிணியாகப் புவனேஸ்வரி மாதா அந்த ஒளி வட்டத்துக்குள் அபயஹஸ்தத்துடன் காட்சி தந்தார். ஒரு மந்தகாசப் புன்னகையோடு தோன்றிய புவனேஸ்வரி மாதா கையிலிருந்த ஸ்வர்ண கிண்ணத்தில் தேன் தளும்பியது. தெய்வீகப் பரவசத்தில் ‘ஆ’வென்று அமர்ந்திருந்த கணபதிக்கு அந்தத் தேனை துளித்துளியாக ஊட்டினாள். சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியது போல. சொற்ப நேரமே நீடித்த அந்தக் காட்சி புகையாய்க் கலைந்து மீண்டும் விண்ணில் நிலா சோபனமாகத் தெரிந்தது. தனக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவத்தை அகக்கண்ணில் ஓட்டிப் பார்த்தார். நாக்கில் அமிர்தம் போல தெவிட்டாத தித்திப்பு. உதட்டருகே பிசுபிசுவென்றிருந்தது. கையால் உதடுகளைத் துடைக்க ஆள்காட்டி விரலில் ஒரு துளி தேன்!

அந்த க்ஷணத்திலிருந்து கவிதை கட்டுரை ஸ்லோகங்கள் என்று அவரெழுதிய ஆக்கங்களெல்லாம் அதிமதுரமாக இனித்தன. அவரது புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டது. புவனேஸ்வரியின் புன்னகை எப்போழுதுமே நினைவில் தங்க அவரெழுதிய காவியங்களுக்கு பலவாறு உறுதுணையாக இருந்து தீட்சண்யம் மிக்கதாக ஆக்கியது.

அன்றிரவு புவனேஸ்வர் கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. எழுபது வயது மூதாட்டி ஒருவருக்கு ஒரு கனா. அதில் அவரது கணவர் தோன்றி “இப்போது வாஸுதேவர் கோயிலுக்குப் பின்புறம் நான் அமர்ந்திருக்கிறேன்” என்று கை காட்டினார். அவரது பெயர் லம்போதர்தாஸ். சிறிய இடைவெளியில் பிள்ளையாரப்பன் (லம்போதரா) தோன்றி அதையே கூறினார். மறுநாள் காலையில் தனது மகன் பாஸ்கர் தாஸை அழைத்து தனது சொப்பனத்தைச் சொல்லி வாஸுதேவர் கோயிலின் பின்புறம் ஏதேனும் விநாயகர் விக்ரகம் புதிதாக ஸ்தாபித்துள்ளார்களா என்று பார்த்துவரச் சொன்னார். பாஸ்கர்தாஸ் அங்கே பார்த்தது “கணபதி” என்னும் தவசிரேஷ்டரை! அந்தப் பெண்மணி பாஸ்கர் தாஸை கணபதியிடம் கணபதி மந்திர தீக்ஷை வாங்கிக்கொண்டு அவருக்கு சேவை புரியச் சொன்னார். பாஸ்கர் தாஸ் அவ்விதமே செய்தார். கணபதி மேலும் நான்கு மாதங்களுக்கு புவனேஸ்வரில் கலையாத தவம் இயற்றினார்.

13-02-1899 அன்று இரவு பசு ஒன்று காளைக் கன்று ஈன்றதாகக் கனவு கண்டார். இரண்டு நாட்கள் கழித்து விசாலாக்ஷி பதினான்காம் தேதி ஆண் மகவு பெற்றதாக அவருக்கு லிகிதம் கிடைத்தது. கணபதிக்கு காசியில் மஹாதேவரின் காட்சி கிடைத்ததால் குழைந்தைக்கு மஹாதேவன் என்று பெயரிட்டார் நரசிம்ம சாஸ்திரி.

இல்லம் திரும்பிய கணபதி, விசாலாக்ஷியின் வேண்டுகோளுக்கு இணங்க வேலை தேடினார். கஞ்சம் ஜில்லாவின் கோதா அக்ரஹாரத்தில் ஸம்ஸ்கிருத பள்ளியில் பண்டிட் வேலை காலியிருந்தது. ஆனால், வேலையில் சேருவதற்கு படிப்புச் சான்றிதழ்கள் கேட்டார்கள். சான்றிதழ்கள் இல்லாமல் வேலைக்கு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து ”இது சரிப்படாது” என்று மீண்டும் தவத்துக்குக் கிளம்பினார். இம்முறை கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள தவளேஸ்வரத்தில் தவம் புரிந்தார். கொஞ்ச நாட்களுக்கு வாழைப்பழம் மட்டுமே புசித்து தவமியற்றினார். அதுவும் கிடைக்காமல் போகவே அதன் வாழைப்பழ தோலில் இருக்கும் நாரை உரித்துத் தின்றார். அதில் அவருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகி கேசனகுர்ரு என்ற கிராமத்திற்கு மருத்துவத்திற்கு சென்றார். சொஸ்தமாவதற்குள் அந்தக் கிராமத்தின் பண்டிதர் ஒருவரிடம் தர்க்கமும் வேதாந்தமும் பயின்றார். இரண்டு வருடங்கள் கடின உழைப்பில் படிக்க வேண்டிய பாடங்களை இரண்டே மாதங்களில் உள்வாங்கிக்கொண்டார்.

கலுவராயியில் முன்றே மாதத்தில் பானினி (இலக்கணம்) பயின்றார். 1900 வருடம் யுகாதியின் போது மந்தஸாவிற்கு புறப்பட்டார். மந்தஸா ஆந்திர ஒரிய எல்லையில் இருக்கும் ஊர். அவ்வூரின் ராஜா கணபதி ப்ரியர். புதுவருடந்தோரும் நடக்கும் தர்பாரில், அவ்வருடம் கணபதியின் அஷ்டாவதனம் நடந்தது. இதுவரை அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை காணாத அம்மன்னர் கணபதிக்கு பதவிகள் கொடுத்து அரண்மனையிலேயே போஷிக்க ஆசைப்பட்டார். அந்த ராஜாவின் மைந்தன் கணபதியை தனக்கு சிவ பஞ்சாட்சரம் ஓதுவிக்க வற்புறுத்தினான். “இந்த தீக்ஷைக்கு உனது தந்தையாரின் சம்மதம் மிகவும் முக்கியம்” என்று அவனை அறிவுறுத்தினார்.

ராஜா தங்களது பரம்பரை புரோகிதரை இவ்விஷயமாக அணுகினான். அவர் வைணவர். சிவபஞ்சாட்சரத்தில் அவருக்கு லவலேசம் ஈடுபாடில்லை. “நமது ராஜ குடும்பத்துக்கு அது ஒவ்வாது. அந்த மந்திரமும் புனிதமானது இல்லை” என்று விலக்கினார். சைவ சமய மார்க்கத்தில் அரசகுடும்பம் திரும்பிவிட்டால் தனக்கு தக்க மரியாதை கிடைக்காது என்று புரட்டு பேசினார். மன்னர் அவையைக் கூட்டி சிவபஞ்சாட்சரம் பற்றி விவாதித்தார். அவரால் நிரூபிக்க முடியவில்லை. இப்படியிருக்கையில் ”வாக்பந்தனா” என்ற மந்திரத்தால் கணபதியின் வாயைக் கட்டிவிட முயற்சித்தார். ஆனால் அது கணபதியை நெருங்கவில்லை. ”தூய மனத்துடனும் நற்சிந்தனையுடனும் ஜெபித்தால்தான் பலனிருக்கும்..” என்று கணபதி சிரித்தார். இறுதியில் ராஜகுமாரன் கணபதியின் சீடனானான்.

மந்தேஸா ராஜா கணபதியை நவத்வீப் பண்டித பரிஷத்திற்கு அனுப்பினார். காசிக்கு க்ஷேத்திராடனம் செல்லவிருந்த இருவரிடம் நவத்வீப்க்கிற்கு செல்லும் கணபதியுடன் சென்று அங்கே அவருக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுத்துவிட்டுக் காசிக்குச் செல்ல உத்தரவிட்டார். காசியில் அவருடன் ஸம்ஸ்கிருத விசாரணையில் ஈடுபட்ட சிவகுமார் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தை பத்திரமாக மடியில் சொருகியிருந்தார்.

நவத்வீப்பில்....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_9‬
‪#‎கணபதி_முனி‬

ஹூய்...ஹூய்...

விடுமுறை நாட்களில் அவர் ரொம்ப பிஸி. வாரநாட்களில் ஐயப்பன் கோயில் காலை ஒன்பது மணிக்கே காற்று வாங்கும். அவரை ஃப்ரீயாக்கிப் பக்தர்கள் வேலைக்குப் பறந்திருப்பார்கள். பெரிய கூட்டமிராது. ரிட்டயர்ட் ஆன தாத்தாக்களும், பையன் மாட்டுப்பெண்ணை ஆஃபிஸுக்கும் பேரன் பேத்திகளை ஸ்கூலுக்கும் கல்லூரிக்கும் அனுப்பிய சில மாமியார்களும் சன்னிதிக்கு சன்னிதி நின்று ஸ்வாமியோடு மனசு விட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். 

பொதுவாகப் பத்தரைக்கு உச்சிகாலம் மணி அடித்துவிடுவார்கள். அன்றைக்கு பத்தரை மணி. ஆஃபிஸுக்கு லேட். உச்சிகாலம் ஆகிக்கொண்டிருக்கிறது. சன்னிதி கதவு சார்த்தியிருந்தார்கள். கண்ணை மூடி “பூதநாத சதானந்த....” மனசுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். இடது பக்கத்திலிருந்து “ஹூய்..ஹூய்..” என்று மூச்சு இழுபட்டு இழுபட்டு ஒரு சிரிப்பொலி. தலையைத் திருப்பினேன். 

ஐயப்பனுக்கு நேரே ஓடு வேய்ந்த உத்தரத்தில் கட்டிய கண்டாமணியின் கயிற்றைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஒரு ஆறடி சிறுவன். கசங்கிய அழுக்கு பனியன். காலரில்லாதது. பனியனை டக்கின் செய்த அரக்கு பேண்ட். பதினெட்டு படிக்குக் கீழே இருக்கும் ஒரு அம்மணியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான். அம்மா போலிருக்கிறது. கவலையில் தோய்ந்த முகம். ”பகவானே காப்பாத்து...” தோரணையில் கையிரண்டையும் நீட்டி வேண்டிக்கொண்டிருந்தார். “உஷ்....” என்று வாயில் கைவைத்து மிரட்டிய கோயில் ஊழியருக்கும் அவனிடமிருந்து ஒரு “ஹூய்.. ஹூய்...” கிளம்பியது.

இன்னும் சன்னிதி திறக்கவில்லை. நானும் அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை ஊடுருவிப் பார்த்தான். உடனே எனக்கும் ஒரு “ஹூய்.. ஹூய்...”. ஸ்நேகமாய் பல்லைக் காட்டினேன். அவனுக்குள் குஷி பீறிட்டது. மீண்டும் உத்வேகமான “ஹூய்...ஹூய்..”. கோயில் ஊழியர் “ஏன்டா?” என்ற உக்கிரமானப் பார்வையை என் மீது வீசினார். நான் மெலிதான புன்னகையோடு ”சத்தம் போடாதே” என்று வாய்மீது விரல் வைத்து சைகை செய்தேன். அவனும் கண்ணாடி போல அதையே எனக்குச் செய்தான்.

திரும்பவும் தலையை இறக்கி பாவமாக அம்மாவைப் பார்த்தான். இம்முறை சப்தம் எழுப்பவில்லை. சன்னதிக் கதவு திறந்தது. சந்தன அலங்காரத்தில் சிரித்தான் ஐயப்பன். மணியின் நாக்கு அறுந்து கீழே விழும்படி அசுரத்தனமாக மணியடித்தான் அந்தப் பையன். விபூதி சந்தனம் வாங்கிக்கொள்ளும் போது நெருங்கி வந்து ஈஷிக்கொண்டான். செல்லமாக இடித்தான். ஒரு ”ஹூய்..ஹூய்..”. வாய் சிரித்தாலும் மனசு பாரமாக இருந்தது. பள்ளிக்குச் சென்றால் பத்தாவதில் இருப்பான்.

என் கூடவே ஒட்டிக்கொண்டு படியிறங்கினான். மஹிஷாசுரமர்த்தினியிடம் குங்குமம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். அம்மாவின் கைக்குள் கையை விட்டு ’L’ பெண்டாக்கி மடக்கியிருந்தான். குழந்தைத்தனமான சிரிப்பு. அந்த தாய்க்குதான் எவ்வளவு வலி. விதியென்று நினைத்து லேசில் விடமுடியுமா? கண்ணெதிரே அக்கம்பக்கம் சிட்டாய் பறக்கும் சிறுவர்களைப் பார்க்கும் போது எப்படியிருக்கும்?

“குடும்மா.... “ அம்மா கையிலிருந்து பொங்கல் பிரசாதத்தை பிடிங்கி வாயில் அடைத்துக்கொண்டான். வீதியில் கைகோர்த்து நடந்து போனார்கள். போன வாரத்தில் பார்த்தது. ஆறடியில் கச்சலான பசங்களை எங்கு பார்த்தாலும் அவன் நினைப்பு முட்டிக்கொண்டு வருகிறது. ஒரு நொடி மௌனமும் சோகமும் கூடவே கசிகிறது. ஐயப்பா காப்பாத்து!

கணபதி முனி - பாகம் 8 : நாஸிக் தபசு

....ஜடாமுடியுடன் ஒரு வயதான யாத்ரீகர் சொப்பனத்தில் நின்றார். ”கணபதி. இன்னும் ஏன் இங்கு நேரத்தை விரயம் செய்கிறாய்? ஸுகேது உன்னிடம் பேசியதை என்னிடமும் சொன்னார். நாஸிக்தான் பிரம்மகிரியின் நுழைவாயில். அங்கிருந்து திரியம்பகம் சென்று தவமியற்று” என்று ஆக்ஞையிட்டார்.

கனவு கலைந்தது. சட்டென்று தூக்கம் விடுபட்டது. கண் விழித்தார். அது பிரம்ம முஹூர்த்தம் முடிந்து அதிகாலைப் பொழுது. காசி விழித்திருந்தது. பவானி சங்கரத்திடம் யாத்ரீகர் சொப்பனத்தைப் பற்றிக்கூறினார். ”இது தெய்வசங்கல்பம். ஆண்டவன் கட்டளை. அப்படியே செய் கணபதி....” என்று ஆசீர்வதித்தார். தந்தை சொல் கேட்காமல் எதுவும் செய்ததில்லை கணபதி. நாஸிக் செல்ல ஒப்புதல் அளித்து நரசிம்ம சாஸ்திரியும் கணபதிக்கு எழுதியிருந்தார். பவானி சங்கரத்திடம் விடைபெற்றுக் காசியிலிருந்து மேற்கே நாஸிக்கிற்கு பயணப்பட்டார்.

நாஸிக்கை இன்னும் சிறிது அவகாசத்தில் அடைந்துவிடலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக தலைகள் தெரிந்தன. கும்பலாக நிற்கிறார்கள். ஏதோ விவகாரம் போலிருக்கிறது.

தசக்கிரீன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுத்த இடம் நாஸிக். இராமாயண காலத்திலிருந்து இன்று வரை லக்ஷ்மணனின் கோபத்துக்கு ஆளான இடம் என்று நாஸிக்வாசிகள் சொல்வார்கள். நாஸிக்கின் விளிம்பில் இளையபெருமாள் லக்ஷ்மணன் கோயில் ஒன்றும் இதற்கு அடையாளமாக இருக்கிறது.

கணபதி நாஸிக்கை அடையும் போது நகரத்துக்குள் அன்னியர்கள் பிரவேசிக்க தடை விதித்திருந்தார்கள். நகரமெங்கும் பெரியம்மை தலைவிரித்தாடியது. நோயின் உக்கிரம் கருதியும் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டும் சுகாதரத்துறையினர் வெளியூர்க்காரர்களை நகர எல்லையில் தடுத்தார்கள். பெரிய அரசமரத்தின் கீழிருந்த கிராமக் கோயிலில் பகற்பொழுதைக் கழித்தார்.

இரவு வந்தது. நிர்மலமான வானத்தில் நட்சத்திரங்கள் ரத்தினங்களாக இறைந்திருந்தன. மினுமினுப்பு காண்போரைச் சொக்கியது. நடுவில் பால் நிலா பொழிந்தது. இதமான குளிர். இதில் கணபதியின் உள்ளம் குதூகலமடைந்தது. உற்சாகத்தில் காளிதாசனின் ரகுவம்சக் காவியத்திலிருந்து சில ஸ்லோகங்களைப் பிரவாகமாகப் பாடினார். பக்கத்தில் காவலிருந்த ஒரு சுகாதாரத்துறை அதிகாரி.. “ஆஹா... அற்புதமாகப் பாடுகிறாய். இந்த ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அர்த்தம் சொல்வாயா?” என்று ரசிகனாய்ப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டார்.

சக்கரவர்த்தி ரகுவின் புத்திரன் அஜன் ஒரு ஸ்வயம்வரத்தில் பங்கு கொள்ள குதிரையில் பறந்து கொண்டிருந்தான். ஸ்வயம்வர நகரம் நெடுந்தொலைவு இருந்ததால் தனது பரிவாரங்களுடன் அன்றிரவு ஒரு மலையடிவாரத்தில் கூடாரமடித்துத் தங்கினான். பொழுது புலர்வதற்கு முன்னர் அஜனைத் துயிலெழுப்ப இந்த ஸ்லோகத்தை அவரது ஆஸ்தான பாடகர்கள் பூபாளமாகப் பாடினார்கள்.

“ராஜன்னு.. நீங்கள் துயிலும் போது லக்ஷ்மி சந்திரனோடு ஸ்நேகமாயிருந்தாள். நீங்கள் நித்திரை கலைந்து எழுந்ததால் உங்கள் முகத்தாமரையோடு போட்டி போட முடியாத சந்திரன் அஸ்தமிக்கிறான்.”

மன்னனின் முகமும் சந்திரனும் தாமரையாகப் பாடப்படுகிறது. லக்ஷ்மி பத்மாசினி.
சுகாதார அதிகாரிக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. கணபதியை நெருங்கி....

“இந்தப் பாட்டில் ஏதோ பிழை இருக்கிறது போலிருக்கிறதே... ” என்றார்.

“என்ன பிழை?”

“அஜ ராஜா சந்திரனோடு இரவைக் கழித்த லக்ஷ்மியை பகலில் தான் ஏற்றுக்கொண்டார் என்று பாடுவது கலாசாரமாகத் தெரியவில்லையே...நெருடுகிறதே....” என்று இழுத்தார்.

கணபதி வெடித்துச் சிரித்தார். விவரம் கேட்டவருக்கு சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. “தயை கூர்ந்து எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க முடியுமா?”. கற்கும் ஆர்வம் கண்களில் பொங்கியது.

”லக்ஷ்மியோடு சந்திரனும் பாற்கடலில் பிறந்ததால் சகோதரன் ஆகிறான். ஆகையால் இது தவறாகாது..” பளிச்சென்று சூட்டிகையான விளக்கமளித்தார் கணபதி.

கணபதியின் இந்தப் பதில் சுகாதார அதிகாரிக்கு ரொம்பவும் திருப்தியளித்தது. தனது வாக்சாதூர்யத்தால் மறுநாள் அங்கிருந்து சிறப்பு அனுமதியில் நாஸிக்கிற்குள் நுழைந்தார்.

நாஸிக்கில் கச்சாமுச்சாவென்று இரைச்சல். சந்தைகள். கடை வீதிகள். ஜனநெருக்கடி. தவமியற்றயிலாத சூழ்நிலை நிலவியது. விடுவிடுவென்று பதினெட்டு மைல்கள் நடந்து த்ரயம்பக க்ஷேத்திரத்திற்குள் நுழைந்தார். அங்கு மஹாதேவரைத் தொழுதார். கதிரவன் மறையும் பின் மாலை பொழுதில் குசவர்த்தாவை அடைந்தார். அங்கிருந்து பிரம்மகிரிக்கு பொடிநடை தூரம்தான். பிரம்மகிரியில்தான் கோதாவரி நதி பிறக்கிறாள். ப்ரம்மகிரியை ப்ரம்மராந்த்ரா என்பார்கள். அதாவது தெய்வீக சக்திகளை உச்சி சிரசில் உள்வாங்கி உடம்புக்குள் செலுத்தும் இடம். குசவர்த்தாவை சக்தியின் பீடமாக சிரசிலிருக்கும் ஆயிரம் இதழுள்ள தாமரை. த்ரயம்பகாதான் ஹிருதயம். அங்கேதான் சிவன் சிம்மாசனமிட்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

குசவர்த்தாவில் ஒரு ஏழை அந்தணர் வீட்டில் அன்றிரவு ஓய்வெடுத்தார். மறுநாள் காலையில் ஒரு டாக்டரிடம் அந்த அந்தணர் அழைத்துச்சென்றார். அவர் தனவந்தர். ஸம்ஸ்கிருதம் பயில்வதில் ஆர்வமும் துடிப்பும் உள்ளவர். விருந்தினரை ”அதிதி தேவோ பவ:” என்று உபசரிப்பவர். அவரின் ஒத்தாசையோடு நீலாம்பிகா கோயிலில் ஒரு தனியிடத்தை தவத்துக்குத் தேர்ந்தெடுத்தார். பதினான்கு நாட்கள் இடைவிடாமல் தொடர் தவம் புரிந்தார். டாக்டர் தனது நண்பர்களிடம் கணபதியின் ஸம்ஸ்கிருத இலக்கிய ஆளுமையை பிரஸ்தாபித்தார். அன்றிலிருந்து தினமும் இரவு டாக்டர் தனது நண்பர்களுடன் நீலாம்பிகா கோயில் மண்டபத்தில் கணபதியின் இலக்கிய சொற்பொழிவுகளை ரசித்தார்கள்.

அப்போது நாஸிக்கிலிருந்து பிரவசனம் கேட்க வந்த ராம் பாவு என்ற நண்பர் “நீங்கள் இன்று அஷ்டாவதனம் செய்ய வேண்டுகிறேன்..” என்று கை கூப்பினார். மஹாவிரதத்தோடு தவமியிற்றிக் கொண்டிருந்ததால் போதிய தேகபலம் இல்லாதிருந்தார். ஆனாலும் ஆர்வலர்களுக்காக அதைச் செய்தார். ராம் பாவு அதிசயத்தில் ஆழ்ந்தார். கணபதியை நாஸிக்கிற்கு வரும்படி நச்சரித்தார். ”நான் அங்கே உங்களது தவத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன்” என்று உறுதியளித்தார்.

நாஸிக்கில் அனுதினமும் ராம் பாவு கணபதியுடன் இலக்கியவிசாரத்தில் ஈடுபட்டாரே தவிர தவமியற்ற ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. அதிருப்தியடைந்த கணபதி நகரெங்கும் சுற்றித் திரிந்து ஒரு தனியிடம் தேடினார். அப்போது லக்ஷ்மணன் கோயில் கண்ணுக்கு அகப்பட்டது. கோயில் மண்டபத்தில் காலெடுத்து வைத்ததும் கதவு மறைவிலிருந்து மின்னலென முன்னால் வந்த அர்ச்சகர் “வாடா... திருட்டுப் பயலே... அகப்பட்டாயா...” என்று திட்டி கையைப் பிடித்துத் தரதரவென்று கோயிலுக்கு வெளியே இழுத்துப்போனார். “நானா திருடன்? ஏனிப்படி.. “ என்று கணபதி சொல்லவந்ததையும் அவர் காதுகொடுத்துக் கேட்கவில்லை. “உன்னை மாஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு போய் நிறுத்துகிறேன் பார்.. உன்னை ஜெயிலில் போடுவார்கள்.... அப்போதுதான் புத்தி வரும்...” என்று குதியாய்க் குதித்தார்.

அப்போது அக்கோயிலைக் கடந்த ராம் பாவுவின் ஸ்நேகிதர் கூச்சலைக் கேட்டுக் கோயிலுக்குள் எட்டிப் பார்த்தார். கணபதியைப் பிடித்து வைத்திருந்த அர்ச்சகரைப் பார்த்தார். கணபதியின் அசௌகரியமான முகத்தைப் பார்த்தார். அவர் கணபதியின் ப்ரவசனங்களை கேட்டு இன்புற்றவர். “நிறுத்துங்கள்.. இவரைப் பிடித்துத் தள்ளாதீர்கள்...” என்று லக்ஷ்மணன் கோயில் அர்ச்சகரைப் பாய்ந்து தடுத்தார். அர்ச்சகர் கோபமாக முறைத்தார். முகம் சிவந்தது. “எதற்காக இவரைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்?” என்று ராம் பாவுவின் நண்பர் கேட்டார். ”ராம லெக்ஷ்மண சீதாவுக்கும் ஆஞ்சநேயருக்கும் ஆபரணங்களை எடுத்து வந்தேன். இங்கே மண்டபத்தில் வைத்துவிட்டு பிரகாரக் கிணற்றில் ஜலம் எடுக்க சென்றேன். அப்போது சில ஆபரணங்களை யாரோ திருடிவிட்டார்கள். மிச்சமிருப்பவைகளை திருட வருவான் என்று நினைத்தேன். அதே போல் வந்தான். பிடித்துவிட்டேன்” என்றார்.

“இல்லை.. இவர் ஸம்ஸ்கிருத பண்டிட். தவமியிற்றும் உத்தமர்.. அருட்கலைகள் வாய்க்கப் பெற்றவர்..”

“திருடனுக்கு வக்காலத்து வாங்குகிறீரா? உம்மையும் மாஜிஸ்ட்ரேட்டிடம் பிடித்து ஒப்படைக்க வேண்டியதுதான்...” என்று அவரையும் திட்டினார்.

அதுவரை பொறுமையாக நின்ற கணபதி முனிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே முகம் சிவக்க ”இந்த நாஸிக் நகரமே அழியட்டும்...” என்று கோபாக்னியில் ஒரு ஸ்லோகம் சொன்னார்.

அந்த ஸ்லோகத்திலிருந்த மொழியும் அதை ஜபித்த தோரணையும் அர்ச்சகரை கிடுகிடுக்க வைத்தது. ”திருடன் என்று தவறாக எண்ணிவிட்டோமே” என்று மனம் வருந்தினார். ஆனால் சாபமிட்டது இட்டதுதான். கணபதியும் வருந்தினார். ஒருவர் செய்த தவற்றுக்கு ஊரைச் சபித்துவிட்டோமே என்று நொந்துகொண்டார். இச்சாபத்திலிருந்து நாஸிக் நகர மக்களைக் காக்க வேண்டி கடவுளிடம் வேண்டினார். மீண்டும் ராம் பாவு வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் தவத்துக்குத் தனியிடம் தேடினார்.

ஒரு பாழடைந்த கோயில் தென்பட்டது. நவசூட்டி என்று பெயர். அங்கு தவமியற்ற ஆரம்பித்தார். லக்ஷ்மணன் கோயிலில் நடந்த துர்சம்பவத்திற்கு தானே காரணம் என்று ராம் பாவு மிகவும் வருத்தப்பட்டார்.

இந்த பாழடைந்த கோயிலில் கணபதி தொடர்ந்து எழுபது நாட்கள் தவமியற்றினார். நித்யமும் ஒரு தம்ப்ளர் பால் மட்டும் அருந்தினார். ராம் பாவு தான் செய்த தவற்றுக்கு பரிகாரமாக தினமும் நவசூட்டி கோயிலுக்கு கணபதிக்காகப் பால் கொண்டு செல்வார். எழுபதாவது நாள் சிவபெருமான் கணபதியின் கனவில் தோன்றி “நீ திரும்பி ஊருக்குச் செல்..” என்று கட்டளையிட்டார். மறுநாள் காலையில் ஜபதபங்களை முடித்துக்கொண்டு ஊர் திரும்ப ஆயத்தமான கணபதியிடம் ராம் பாவு “நாஸிக்கில் பெரியம்மை நிறைய பேரை தீர்த்துவிட்டது. உங்களைத் திட்டிய அர்ச்சகரின் குடும்பமும் பூண்டோடு அழிந்தது. பெரும்புயல் வீசியது. மரங்களை வேரோடு பிடிங்கி கட்டிடங்களில் சாய்த்து பலர் மாண்டனர். ஊரில் இரண்டு கோயில் கூட இடிந்துவிழுந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நாஸிக்கிற்கு வெளியே பொட்டு காற்று மழை இல்லை.”

கனத்த இதயத்துடன் கணபதி அங்கிருந்து விடைபெற்றார். செகந்திராபாத்தில் இறங்கி தந்தை நரசிம்ம சாஸ்திரியைச் சந்தித்து நமஸ்கரித்தார். ”வீட்டிற்கு போகலாம்ப்பா...” என்றார் நரசிம்ம சாஸ்திரி.

“பத்ராசலம் ராமரை தரிசித்துவிட்டு வருகிறேன்...”

“குடும்பத்தை கொஞ்சம் நினைத்துப்பாரப்பா.. நீ இப்போது கிரஹஸ்தன்.. தபஸிற்குச் சென்று ஆறு மாதங்கள் ஆகின்றன... ” என்று சுனங்கினார்.

சரியென்று அவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டு தந்தையுடனேயே கலுவராயிக்கு சென்றார். வீட்டில் தன்னுடைய காசி நாஸிக் த்ரியம்பக தபோ அனுபவங்களைத் தந்தையிடம் பகிர்ந்துகொண்டார். பவானி சங்கரத்தின் காசி அகத்தில் சந்திந்த துர்க்காமந்திர் யோகி தபால்பெட்டியில் சேர்த்தக் கடிதத்தை கையில் எடுத்தார் நரசிம்ம சாஸ்திரி.

“யாரப்பா உனது படத்தை இந்தக் கடிதத்தில் அழகாக வரைந்தது?” என்ற தந்தையின் கேள்விக்கு கண்பதியின் கண்கள் ஆச்சர்யத்தில் மிளிர்ந்தது. கடிதத்தின் மேல் பாதியில் கணபதியின் படம் மிக அழகாக வரையப்பட்டிருந்தது. இதைக் கண்டவுடன் விர்ர்ர்ர்ர்ரென்று ஒருவித மின்சாரம் அவர் சரீரத்தில் பாய்ந்தது போல உணர்ந்தார். இது எப்படி? மூடிய உறையைப் பிரித்து அந்த கடிதத்தில் யோகி படம் வரைந்திருக்கலாம். பரவாயில்லை. ஆனால்.. ஆனால்.. இது எப்படி?

இது எப்படி சாத்தியமாகும்? மேனி அதிர்ந்தது. ஒரு பரவச நிலையில் இருந்தார்.. இது கடவுளின் திருவிளையாடலோ?... மீண்டும் மீண்டும் அந்தக் கடிதத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தார்... இது எப்படி சாத்தியமாகும்.. நரசிம்ம சாஸ்திரி “என்னப்பா?” என்று வினோதமாகப் பார்த்தார்... கணபதிக்கு மீண்டும் காசி க்ஷேத்திரத்தில் நடந்தவைகள் காட்சிகளாக மனக்கண்ணில் ஓடின... இது எப்படி?.. இதே கேள்வி மூச்சு விடும் போதும் இழுக்கும் போதும் தோன்றித் தோன்றி மறைந்தது....

கணபதி முனியையே ஆச்சரியத்தில் தலைசுற்ற வைத்த அது என்ன?... ஒன்பதாம் அத்தியாயத்தில்...

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_8‬
‪#‎கணபதி_முனி‬

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails