Showing posts with label பயணக் குறிப்பு. Show all posts
Showing posts with label பயணக் குறிப்பு. Show all posts

Sunday, October 22, 2017

பரசுராமேஸ்வரர்


Pandaயில்லாத பந்தாயில்லாத புபனேஷ்வர் பரசுராமேஸ்வரர். ஏழாம் நூற்றாண்டுக் கோயில். இங்கிருந்து ஐந்து நிமிட நடையில் அருள்பாலிக்கும் லிங்கராஜா Pandaக்களின் முரட்டு அரணில் இருக்கிறார். லிங்கராஜாவுக்கும் பரசுராமேஸ்வரருக்கும் மத்தியில் இருப்பவர் அனந்த வாசுதேவர். தெருவுக்கு ஒரு கோயில் தென்படுகிறது. பூஜை செய்யும் பண்டாக்களின் பிடியில் இருக்கும் கோயிலில் வழிபடுவதை விட பரசுராமேஸ்வர் போல ஏகாந்தியிடம் மனஸ் பச்சென்று ஒட்டிக்கொள்கிறது. யாருமில்லாத திறந்த சன்னிதியில் பரசுராமேஸ்வரரை "நமஸ்தே அஸ்து பகவன்..." ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்த போது மேனி சிலிர்த்தது. அரன் அவ்விடத்தில் உறைகிறார்.
ஓம் நமோ பகவதே ருத்ராய:

Tuesday, June 6, 2017

கோவைக்கு ஒரு திடீர்ப் பயணம்

ஒரு அவசர அலுவலக வேலையாக இன்று கோவை பயணம். சென்னையில் காலை ஆறரை இண்டிகோ...கோவையில் மாலை ஐந்தரை இண்டிகோ. போக ஒரு மணி வர ஒரு மணி காற்றாய் ஆகாசத்தில் பறந்தது போக மத்தபடி கேகே அண்ணா தரிசனம் ஒரு மணி நேரம்.. பாக்கியெல்லாம் வேலை.. வேலை.. . வேலை.. வேலை...வேலை...
அதிகாலையில் கொத்தவால்சாவடி போல சென்னை MAAவில் காலை மிதித்து... முதுகில் சாய்ந்து... ஒரே தள்ளுமுள்ளு கூட்டம். மேரு மலையைக் கடைந்த பின்னர் களைப்பாக வந்து சுருட்டிப் படுத்துக்கொண்ட வாசுகி பாம்பு போல ஐந்து மடிப்பில் அசையாமல் இருந்தது பயணியர் க்யூ. Departure Gate செக்யூரிட்டி நாலு தரம் ஐடி ப்ரூஃபையும் என்னையும் சந்தேகக் கண்ணோடு (உருட்டி...உருட்டி) பார்த்துவிட்டு ”பயபுள்ள முழியே சரியில்லையே ...” என்று நினைத்துக்கொண்டே “ஹாங்...” என்று சைகையால் அசிரத்தையாக உள்ளே விரட்டினார்.
ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்கும் கொடூர அரக்கனின் இதயம் போல அடுத்து இன்னும் கொஞ்சம் ஷ்ட்ரிக்ட் செக்யூரிட்டி. ”சீக்கிரம் போகனும்ப்பா... வண்டியை எடுத்துடுவான்....” என்று அங்க்ரேஜியில் கூட கெஞ்சமுடியாமல் அவர் ஹிந்தி மே போல்த்தா ஹை. ஒரு அடாசு டிடெக்டரை வைத்துக்கொண்டு... சினிமாக்களில் வரும் க்ளிஷே காட்சிகளில் காதலியை மோந்துகொண்டே மயிலிறகால் வருடும் காதலன் போல... ரசனையாக முன்னும்பின்னும் தேய்த்துக்கொண்டிருந்தார். இரண்டு கையையும் இயேசு நாதரை சிலுவையில் அறைந்தது போல விரித்து அவர் முன்னும் பின்னும் சொரிந்து கொடுத்து சுகம் ஏற்றவேண்டும் என்ற ஆசையில் எனக்கு முன்னால் விஸ்ராந்தியாக நின்றிருந்தவரை எப்போது விடுவார் என்று தெரியாமல் தவித்தேன்.
“Last call for Jambunathan" என்று ஸ்பீக்கரில் ஏலம் விடத்தொடங்க ... “ஜம்புநாதன் ஈஸியா ஜம்ப் பண்ணி போயிடுவாரு... ஆனா நம்மளைக் கூப்பிடலையே... ஆறரைக்கு தானே வண்டி எடுப்பாங்க... மணி ஆறு தானே ஆவுது... “ என்று கால்கள் பரபரக்க... எனக்கு முன்னால் இருந்த மாமாவின் ப்ரீஃப்கேஸை முட்டியால் தட்டிவிட்டேன். அறியாப் பிழை.
அக்கணமே முகம் சுருங்கி இன்ஸ்டண்ட் துர்வாசராகி சாபம் கொடுக்கும் பாவனையில் சரேலென்று திரும்பினார். “இடிச்சா முட்டிக்கு வலிக்கும். ப்ரீஃப்கேஸுக்கு வலிக்குமா?” என்று அசட்டுக்கேள்வி கேட்க நினைத்து... அவர் பார்வையைத் தவிர்க்கக் குனிந்து முட்டியைச் சூடு பறக்கத் தேய்த்துக்கொண்டேன். “இண்டிகோ ஏறும் பிரஹஸ்பதிகள் க்யூவில் இருந்தால் சீக்கிரம் ஏழாம் வாசலுக்கு ஓடிவரவும்.. இல்லையேல் உங்களை அம்போன்னு விட்டுட்டு போய்டுவோம்....” என்று ஸ்பீக்கர் கறாராய் அலற, தட்டிவிட்ட மாமவைத் தாண்டி ஓடினேன்.
கொல்லைக் கதவைப் பூட்டினோமா...பீரோ சாவியை திருடன் எடுக்க வசதியா அது மேலேயே வச்சோமோ... ஹால் ட்யூப்லைட்டை ஆஃப் பண்ணினோமா.... பாத்ரூம் கொழாயை ஸ்பிண்டில் லூஸ் ஆகிறவரை அழுத்தி மூடினோமா... என்றெல்லாம் நொடிக்கு நூறு சந்தேகம் வந்து வாசலுக்கும் உள்ளுக்கும் நடையாய் நடந்து நாலு மணிக்கு வெளியூர் போக வெளியே வந்து... ரேழிக்கும் வாசலுக்கும் கபடி ஆடி... ஐந்து மணிக்கு கிளம்பும் மு.முத்தண்ணாக்கள் போல.... கொஞ்சம் மூச்சு விட்டுப்போம்... இரைக்கிறது...
சேஃப்டி பத்தி சொல்லு... மொபைல் ஆஃப் பண்ணச் சொல்லு.. கேபின் க்ரூ.. பைலட்ஸ் யாருன்னு சொல்லு... தரைக்கு மேலே பறந்தாலும் தண்ணில உழுந்தா எப்படி சேஃப்டி ஜாக்கெட்டைக் கட்டிகணும்னு சொல்லு... என்றெல்லாம் அந்த கன்னம் ரூஜ்ஜால் சிவந்த அழகான யுவதிகளை... ( நாக்கைத் தொங்கப் போட வேண்டாம்.இதற்கு மேல் அந்த ஸ்கர்ட் போட்டப் பெண்களை நான் வர்ணிப்பதாகயில்லை.. ) பாடாய் படுத்தி ஆறேமுக்காலுக்கு ரன்வேக்கு உருட்டி வந்து.... விர்ர்ர்ர்ர்ரென்று பறக்க ஆரம்பித்தார்....
போற வழியில்.... மேகப் பஞ்சுகளுக்கு மத்தியில்.... தேவலோகத்தில் இருப்பது போன்ற பிரமையில்... எனக்குத் தாயினும் சாலப் பரிந்து சாண்ட்விட்ச் கொடுத்து... அது தொண்டையை அடைக்காமல் இதமாய் இருக்க “யூ வாண்ட் ஜூஸ்?” என்று ஐஸாய்க் கேட்டு மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜூஸும் கையில் கொடுத்து அக்கறையாய்க் கவனித்துக்கொண்ட அந்த ஹோஸ்டஸ் வாலிபிக்கு சீக்கிரமே என்னைப் போல நல்ல கணவன் ப்ராப்திரஸ்து!
கோயம்புத்தூரில் இறங்கியபோது ஏர்போர்ட் சுத்தமாக அலம்பிவிடப்பட்டிருந்தது. என்னுடைய வேலை நிமித்த சந்திப்பிற்கு ஒரு மணிநேரம் அவகாசம் இருந்தது. “கேகேண்ணா... இறங்கிட்டேன்... வந்துட்டேன்..” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டு அவரிடம் நேரில் ஞானம் பெறுவதற்கு சென்றேன். அவர் காஃபி கொடுத்தார். பின்னர் கஞ்சி கொடுத்தார்... பின்னர் விடை கொடுத்தார்... அவர் கொடுத்ததிலெல்லாம் அன்பையும் குழைத்துக் குழைத்துக் கொடுத்தார்.
கோவை ரிட்டர்ன் அடுத்த பதிவில்.....

Friday, August 19, 2016

ம்... ஏறுங்க...

ர.நி.யிலிருந்து பே.நிக்கு பஸ் வரும் என்று அரை மணி கால்கடுக்க ஆலந்தூரில் நின்றிருந்தேன். தாம்பரத்துக்கும் திருச்சிக்கும் ஐம்பது பஸ்கள் ஐந்தைந்து பயணிகளுடன் காற்று வாங்கிக்கொண்டு சென்றது. “சேலம்.. ஆத்தூர்.. கோயம்புத்தூர்...” பத்து வண்டியிலிருந்து இறங்கிக் கூவி ஆள் பிடித்தார்கள். “அண்ணே... ஏறுண்ணே....ஏசிண்ணே.. ” என்று மதுரைக்கார பாசத்தம்பி பஸ்ஸிலிருந்து கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கூப்பிட்டார். திருச்சி செல்லும் அரசுப்பேருந்து ஓட்டுனர் முழுஞாநி போல உட்கார்ந்திருந்தார்.
எங்கள் ஏரியா செல்லும் பஸ் ஒன்று மூச்சுத் திணறி வந்து நின்றது. பஸ்ஸினுள் ஏற்கனவே நூறு பேர் ஐம்பது சதவிகிதம் சுவாசித்துக்கொண்டிருந்தார்கள். புளிமூட்டை போல இன்னும் இருபது பேர் தங்களை விரும்பித் திணித்துக்கொண்டார்கள். நானும் ஏறி யாருடைய இழப்புக்கும் தயாராயில்லை. தங்கிவிட்டேன். சாரை சாரையாய் வெளியூர் செல்லும் ஸ்லீப்பர் கோச்சுகள் வந்தன. தென்தமிழக மக்கள் ஏக்கத்துடன் தங்களது ஊர் பேருந்துக்காக தேமேன்னு காத்திருந்தனர். “மாயவரம்.. கும்பகோணம்.. மன்னார்குடி.. பட்டுக்கோட்டை...” என்று ராகமாகக் குரல் வந்த பஸ்ஸிலிருந்தவர் எங்கேயோ பார்த்த முகத்தவர்.
இன்னும் எத்தனை நாழி நிற்கவேண்டுமோ என்று தவித்துக்கொண்டிருக்கும் போது இருட்டில் ரகஸியமாகப் பிரியமானவளைத் தேடுவது போல என்னை ஒட்டி ஒரு ஆட்டோ வந்தது.
“எங்க போகணும்?”
ஆட்டோவழியா... பஸ்வழியா என்று சிவாஜி ரஜினி போல பூவாதலையா போட கை சட்டைப் பாக்கெட்டுக்குள் சென்றாலும், காலின் வலி நிர்பந்தத்தினால், வாய் முந்திக்கொண்டு வீட்டு முகவரியைச் சொன்னது.
“நூத்தி இருவது”
“வேணாம்...”
“நீங்க கேளுங்க...”
“நா கேட்டாக்க கோச்சுப்பீங்க.. போடாங்..னு நாக்கை மடிச்சுக்கிட்டு... அடிக்க வருவீங்க.... வுட்ருங்க”.
உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று அறுத்துவிட்டு வேறு திசையில் பார்க்க ஆரம்பித்தேன். ப்ளாட்ஃபார்ம் ஓரத்தில் மஞ்சள் சரடு பளிச்சென்று இருந்த மாதுவிடம் கையைக் கோர்த்து அந்த உஷ்ணத்திலும் ஹாட்டாக பேசிக்கொண்டிருந்த இளம் மாப்புவைப் பார்த்துக்கொண்டிருந்த போது முதுகுக்குப் பின்னால்....
“பரவாயில்லை... கேளுங்க..”. ஆட்டோ நகராமல் அங்கேயே நின்றிருந்தது.
“எழுவத்தஞ்சு”. சிரிக்காமல் தோரணையில் கொஞ்சம் கண்டிப்பு ஏற்றிக் கேட்டேன்.
“இங்கேயிருந்து உங்க வீடு எவ்ளோ தூரமிருக்கும்?”
“எதுக்கு?”
“ச்சும்மா.. சொல்லுங்களேன்..” சிரித்தார்.
”ஆறு...ஏழு..”
“கிலோ மீட்டருக்கு பன்னெண்டு ரூவா... இப்ப சொல்லுங்க எவ்ளோ வரும்?”
“கணக்குப் பண்ணிப் பார்த்தாக் கூட நீங்க கேட்டது வராது”
“சரி... நூறு ரூவாய் தாங்க.. ஏறுங்க..”
பேரம் நடந்துகொண்டிருக்கும் போது ஒரு பஸ் புயலென நிறுத்தத்துக்கு வந்தது. பேரத்தை கைவிட்டு பஸ்ஸைப் பார்க்க ஓட எத்தனித்தேன்.
“இதெல்லாம் தாம்பரம்தான்.... பத்தே காலுக்குதான் அடுத்த பஸ்ஸு.... அதுவும் ஃபுல்லாத்தான் வரும்... அப்புறம் ஆட்டோ கேட்டீங்கன்ன நூத்தம்பதுக்கு குறைஞ்சு ஒரு பய வரமாட்டான்...”
கொக்கியில் மாட்டினேன். என்ன செய்யலாம் என்று தத்தளித்து யோசிக்கும் வேளையில் ஆட்டோகாரர் “ம்.. ஏறுங்க...” என்று உரிமையாகக் கூப்பிட்டார்.
மோடி மஸ்தான் வித்தையில் “வா இங்கே... வந்தேன்....” சொல்வது போல அவரது பேச்சுக்கு கட்டுண்டு ஏறிவிட்டேன்.
“உங்களுக்கு இந்த அட்ரெஸ் தெரியுமா?”
“தெரியும் சார் வாங்க...”
வண்டியை விரட்டி ஓட்டினார். டர்ர்ர்ர்ரென்று காதைக் கிழிக்க அலறியது ஆட்டோ. இருவரும் உம்மென்று சில நிமிடங்கள் வந்தோம். நான் மௌனத்தைக் கலைத்தேன்.
“மினி பஸ்ஸெல்லாம் வந்துட்டுதே.. உங்களுக்கு குடும்பம் நடத்தற அளவுக்கு சவாரி வருதா?”
“ரொம்ப வருசமா எதையெடுத்தாலும் ஆட்டோலாம் அளிஞ்டும்னு பேசிக்கிறாங்க.. அளிஞ்சிருச்சா? இல்லையே... எங்களுக்கு எப்பவும் போல சவாரி உண்டு சார்...”
இன்னும் ஆட்டோவின் காதைத் திருக அதிகப்படினான சப்தத்துடன் தெருக்களில் விரைந்தது ஆட்டோ.
“இப்போ வீட்டுக்கு போயிட்டிருக்கீங்களா?”
“எப்படி சார்? ஒம்பதே முக்காதானே ஆவுது.. இன்னும் பன்னெண்டு மணி வரை ஓட்டுவேன்.. “
“காலேல எவ்ளோ மணிக்கு சவாரிக்கு ஆரம்பிப்பீங்க?”
“ஏளு மணிக்கு ஸ்கூல் பிள்ளைங்க... அப்புறம் எட்டரை மணிக்கு ஆஃபீஸ் சவாரி ஒண்ணு இருக்கு.. பகல்ல ஒரு மணி வரை ஓட்டுவேன். பின்ன நாலு மணி வரைக்கும் தூங்குவேன்.. அப்புறம்.. ரோட்டுலதான்...”
“பசங்க...”
“பெரியவன் இஞ்சினியரிங் படிக்கிறான். சின்னவன் ட்வெல்த். ஒளுங்கா படிங்கடான்னு தெனமும் சொல்லிட்டு நானு ரோட்டுக்கு வந்துடுவேன். வூட்ல அவதான் கிடந்து அடிச்சிக்கிறா...”
“நல்லா படிக்கறாங்களா?”
“ம்... ஏதோ படிக்கறானுவ... இன்னும் நல்லா படிக்கணும்னு தெனமும் அவனுங்க கிட்டே பேசறேன்”
ஆட்டோகாரரின் தீவிரம் அவரது திடமான பேச்சில் தெரிந்தது.
“சின்னவன் சுட்டி சார்.. பெரியவன் கொஞ்சம் வெளையாட்டா இருக்கான். ராத்திரி சோறு தின்னும்போது எம் பொண்டாட்டிதான் படிங்கடா.. நல்லா படிங்கடான்னு அடிச்சுக்கிறா...”
கடந்து போன டாஸ்மாக் தாண்டி ஒருவர் சுவற்றில் முட்டுக்கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தார்.
“ஹையோ... சனியன் புடிச்சதுங்க.. வூட்ல பொண்டாட்டி பசங்க பேசனுமின்னு சாப்பிடாம காத்துக்கினு இருக்கும். இது இங்க சொவத்துக்கிட்டே பேசிக்கிட்டிருக்குப் பாருங்க....”
”நீங்க எதுவும்...”
“ஐயய்யே.... அப்புறம் குடும்பம் எப்படி சார் முன்னுக்கு வரும்?”
வீடு நெருங்கிவிட்டது. இறங்கினேன்.
“வேணாம் சார்.. இந்தாங்க... பிடிங்க...”
“இல்ல பரவாயில்ல... வாங்கிக்கோங்க...”
“ஊஹும்.. நாம பேசினது போதும்.....”
என் கையில் இருபது ரூபாய் தங்கியிருக்க.. நூறை வாங்கிக்கொண்டு பறந்தார். அதிகம்தான் என்றாலும் இருபதை வலுக்கட்டாயமாக அவர் பாக்கெட்டில் சொருகியிருக்கலாமோ என்று இன்னமும் என் மனசு கிடந்து அடித்துக்கொள்கிறது.

உரசுவது ஆண்...

மாநகரப் பேருந்தில் பயணிப்பது அப்படியொன்றும் சிரமமாயில்லை. இருபத்தோரு ரூபாய்க்கு, இரண்டு பஸ் மாறி, அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து எங்கள் பேட்டைக்குள் வந்துவிடமுடிகிறது. சேப்பாயி ஒரு மணி நேரத்துக்குள் கடப்பதை இரண்டு மணி நேரத்தில் முடிக்கமுடிகிறது. அதெல்லாம் பரவாயில்லை, ஆனால் ஒரு சின்ன குறுகுறு. Aisle சீட்டில் உட்கார்ந்து outsideஐ வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்தப் பக்கம் மேலே உரசுவது ஆண்தான் என்று தோள்பட்டை உணரும்போது கண்றாவியாகயிருக்கிறது. அம்புட்டுதேன். 

Tuesday, May 17, 2011

இயற்கைவசப்பட்டு...

செண்பகாவில் நாங்கள் குளித்து முடித்து ஈரத் தலையை உதறிக் கரையேறும் சமயம் ஒரு வாலிபப் பட்டாளம் "ஹீய்.....உய்...ஏய்..." என்று வானர சேனையாய் அருவிப் பகுதியில் சூறாவளி போல களம் புகுந்தது. கொளுத்தும் வெய்யிலிலும் அருவியின் ஜில்லிப்பில் மெய்மறந்து சிலிர்த்துக்கொண்டு பட்டாளத்திடம் பயந்து செண்பகாவை விட்டு வெளியே வந்தோம். சட்டையை கழற்றி தலைக்கு மேலே விசிறி போல சுழற்றி வீசிக்கொண்டே அருவியின் இரைச்சலையும் மீறி "ஹோ..." என்று எக்காளமிட்டுக்கொண்டு ஓடிய ஒரு இளரத்தம் அருவிப் பொழிவின் நட்ட நடுபாகத்திற்கு வந்து ரப்பர் பந்து போல எகிறி முன்னால் தேங்கியிருந்த குட்டை போன்ற தண்ணீரில் செங்குத்தாக குதித்து முங்கி எழுந்து ஆட்டம் போட்டது. குதித்த வேகத்தில் எதிரருவி கிளம்பியது. பேரலைகள் சலசலத்து எழுந்து அமுங்கியது. இந்தப் பயமறியா இளங்கன்றுகளின் அதிரடி வரவால் அருவி சற்றே அடங்கியது போலத்தான் இருந்தது.

அருவியில் நீராடப் போகும்போது கொக்குக்கு அருவியே மதியென சென்றதால் வரும்போது செண்பகாதேவி அம்மனை தரிசிக்கலாம் என்று கோவில் உள்ளே சென்றோம். பூசாரியைக் காணவில்லை. கம்பி போட்ட கதவுக்குள் விளக்கேற்றி அம்மனை அடைத்து வைத்திருந்தார்கள். பிரகாரத்தில் யாரோ பக்தி மணம் கமழ ஏற்றிய அகல் விளக்கில் இருந்து திரி பொசுங்கிய தீஞ்ச வாசனை அடித்துக் கொண்டிருந்தது. வெளியே இருந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு வந்த வழி திரும்பினோம்.

"இன்னும் எவ்ளோ தூரம்?" என்று கேட்டுக்கொண்டே ஒரு டிராயர் போட்ட பொடிசும் தொங்கும் நரைத் தாடி வச்ச பெரிசும் ஏறினார்கள். அடர்ந்த தாடியின் பின்னே ஏதோ ஒரு சித்தர் ஒளிந்திருந்தார். ஏறும் போது ரொம்ப தூரமாக இருந்த வழிப்பாதை இறங்கும் போது அதில் அரையளவு குறைந்திருந்தது. மாங்காய்க் கடைக்காரருக்கு கஸ்டமர்கள் கணிசமாக அதிகரித்திருந்தனர். அஞ்சு பீஸ் பத்து ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார். சத்தியத்திற்கு கட்டுப் பட்டது போல குரங்குப் படை அவரை அணுகாமல் அலகாமல் ஒரு எல்லையில் நின்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.

shenbagaway

காதலனை காற்றுப்புகா வண்ணம் ஆரத் தழுவிய பதினாறு வயது பருவக் காதலி போல மரத்தோடு இரண்டற பின்னிப் பிணைந்த இளந்தளிர் கொடிகளை தாண்டி வேகமாக இறங்கினோம். ஒரு சில இடங்களில் கரும் பாறைகளைக் கூட பல பசுங்கொடிகள் கட்டிப்பிடித்து கலப்பு மணம் செய்திருந்தன. உசரக்க ஏறுவதைக் காட்டிலும் கீழே இறங்குவதில் அதிக கவனம் தேவை என்பதை என் பெரியவளை சறுக்க வைத்து உணர வைத்தது சரளைக்கல் நிறைந்த அந்த மலைப்பாதை. உச்சிக் குளிர குளித்ததும் உடம்பில் இருந்து உஷ்ணம் பரிபூரணமாக விலகி பெரும் பசிப் பிணியை கிளப்பிற்று. மண்டபத்தில் "மத்தியான்னம் சாப்பாடு பேஷா உண்டே" என்று காலையிலேயே தொந்தி சரிந்த சட்டை போடாத குண்டு மாமா மூச்சு இறைக்க இறைக்க தோளுக்கு அங்கவஸ்த்திரம் போட்டிருந்த பல்லிபோல இருந்த ஒல்லி மாமாவிடம் சொல்லியது மூளையில் பளிச்சென்று ஃப்ளாஷ் அடித்தது. வயிறு "டிங்கிடிங்கி" என்று அவசர மணி அடிக்க பசித் தீ அணைக்க வேகமாக ஓடினோம்.

*

மாயாபஜார் எஸ்.வி.ரெங்காராவுக்கு கட்டை விரல் உயர்த்தி சவால் விடும்படியாக  காய்கறிகளுடன் சாப்பாட்டை மூக்கில் பருக்கை வர ஒரு கட்டு கட்டியபின்னர் மூன்றரை மணி சுமாருக்கு அச்சன்கோயில் ஆரியங்காவு திருத்தலங்களுக்கு பிரயாணித்தோம். மஹிந்திரா டூரிஸ்டர் வண்டியை மேலே ஒரு லகரம் கொடுத்து உள்ளே பிரமாதமாக ஜோடித்து மூலைக்கு மூலை பாக்ஸ் ஸ்பீக்கர் கட்டி 5:1 டிவிடி போட்டு அமர்க்களமாக வைத்திருந்தார் சக்திவேல். அவரே மொதலாளி அவரே தொழிலாளி. வேனில் குடும்பம் நடத்தலாம் போல அதி சுத்தமாய் இருந்தது. சென்னையில் எக்மோருக்கு ட்ராப் செய்த வேன் இதைப் பார்த்தால் தானாக திரிசூலம் மலை மேலே ஏறி தற்கொலை செய்து கொள்ளும். அஃறினை செய்து கொண்ட முதல் பிராணஹத்தி என்ற மங்காப்புகழ் பெற்றிருக்கும்.

achan1
அச்சன்கோயில் தென்காசியில் இருந்து மலை மார்க்கமாக கேரளா செல்லும் பாதையில் உள்ள சாஸ்தா கோயில். மலையில் ஏறியவுடன் டிரைவர் கை இரண்டும் பின்னிக் கொள்ளும்படி அமைந்த ஏழு கொண்டை ஊசி வளைவுகள் கடந்தவுடன் கேரளா செக் போஸ்டில் இருபது ரூபாய் கொடுத்தார். முறுக்கிக்கொண்ட கை காசு கொடுப்பதற்கு விடுதலை பெற்றது. மேலும் இரண்டு கொ.ஊசி வளைவு தாண்டி அச்சன் குடியிருந்த ஒரு பஹூத் அச்சா கோயிலை அடைந்தோம். மலைகள் சூழ்ந்த இடம் ஆதலால் பார்க்க ரொம்ப கவர்ச்சியாகவே இருந்தது. ஐந்து மணிக்கு தான் கோவில் நடை திறப்பார்கள் என்றார்கள். பேன்ட் சட்டையுடன் ஒரு பெண் தன் கிழத் தாயுடனும், நிறைமாதமாக கர்ப்பகாலத்தில் பெண்டாட்டி பட்ட கஷ்டத்தை vicarious suffering போல  இப்போது தன் மடியில் சுமந்த ஒரு நாற்பது வயது கணவர் பிள்ளைப் பாரம் இறக்கிய தன் மனைவியுடனும் கோவில் வாசலில் அமர்ந்திருந்தனர்.

கேரளக் கோவில்களின் இலக்கணத்தை துளிக்கூட மீறாமல் கே.ஜே. ஜேசுதாஸ் மலையாளத்தில் செண்டையுடன் தன் குரல் வளத்தால் போட்டியிட்டு பாடிய ஒரு பாடலை ஒலிக்கவிட்டு கதவு கிரீச்சிட திறந்தார்கள். திறக்கும்போதாவது நிச்சயம் பக்தர் கூட்டம் வந்து நம்மை நெட்டித் தள்ளும் என்ற எனது எண்ணத்தில் சாஸ்தா அரவணைப் பாயசம் அள்ளிப் போட்டார். எல்லோரும் உள்ளம் திருக்கோயில் ஊன் உடம்பு ஆலயம் என்று திருமூலத்தனமாக இருந்துவிட்டார்கள் போலிருக்கிறது. கிரீம் கலரில் சிகப்பு பட்டையடித்த கேரளா அரசாங்கத்தின் சோகையான பஸ்ஸில் வந்திறங்கிய சொற்ப பயணிகளில் ஒருவரும் கோவிலுக்கு வந்ததாக தெரியவில்லை. தாடி வைத்த மோகன்லால் டிரைவர் பீடியை வாயில் கடித்துக்கொண்டு சாயா குடிக்கப் போனார். கோவில் முகப்பில் மலையாளம் மற்றும் நல்ல தமிழில் போர்டு வைத்திருந்தார்கள். மரம் நிறைந்த மலை சூழ் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் சாஸ்தா நமக்கு அருள் புரிய வீற்றிருந்தார். வானுயர்ந்த மரத்தில் இருந்து பறவைக் கூட்டத்தின் "ஊ ..உய்.." என்ற கீதத்துடன் மனதுக்கு நிறைவான தரிசனம்.

திரும்பவும் தென்காசி வரும் வழியில் பயணித்து அடுத்த பக்கம் இருக்கும் இன்னொரு மலையில் ஏறி ஆரியங்காவு சென்றோம். "அண்ணே! எங்கயாவது டீக்கடை தென்பட்டா நிறுத்துங்க.." என்று நா வறட்சியில் கோரிக்கை வைத்த ஒட்டுமொத்த வேனையும் புறக்கணித்து அசராமல் வண்டி ஓட்டினார் முதலாளி. "அண்ணே!" என்று பத்து நிமிடம் கழித்து நினைவூட்டிய என்னிடம் "கோயில் சீக்கிரம் மூடிடுவாங்க. அதப் பார்த்துட்டு குடிக்கலாம்" என்று மலை ஏறும்போது மனதில் தோன்றியதை இப்போது என்னிடம் திருவாய் மலர்ந்தார். "அதுவும் சரிதான்" என்று வண்டியில் இருந்த பக்திப் பழமான நாலு பெரியோர்கள் கோரஸாக அவருக்கு "ஓ" போட்டார்கள்.

கொல்லம், சபரிமலை செல்லும் அந்த மலைரோடு முழுக்க சேர நாட்டு லாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தார்ப்பாய் போர்த்தியும் bare பாடியோடும் சென்ற லாரிகளின் "டர்ர்ர்ர்..." என்ற டயர் சத்தம் பாறையில் மோதி நம் காதையும் அறுத்தது. வண்ண வண்ண கைலி அணிந்து பீடி வாயோடு ஆரியங்காவு கோவிலுக்கு பக்கத்து டீக்கடையில் லாரியை ஓரமாகப் பார்க் செய்துவிட்டு "எந்தானு?" என்று ராகமாக பறைந்து கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள் செல்வதற்கு நூறு படிகளாவது இறங்க வேண்டியுள்ள ஒரு பாதையை பேவர் ப்ளாக் போட்டு சறுக்குப் பாதையாக மாற்றி புண்ணியம் கட்டிக்கொண்டார்கள். அச்சன்கோவிலை விட இது சற்றே பெரிய கோவில். நிச்சயம் சாஸ்தா தரிசனத்திற்கு கூட்டம் இருக்கும் என்று நினைத்தேன். அச்சன்கோவிலில் எங்களுடன் பார்த்த அதே திருக்கூட்டம் தான் இங்கேயும்.

ஸ்வாமி பார்த்த கையோடு வெளியே பெட்டிக் கடை போட்டிருந்த முண்டணிந்த சேச்சியிடம் சாயா வாங்கி குடித்தோம். தலை விரிகோலமாக சந்தனப் பொட்டிட்டு அரைக்கை சட்டைப் பாவாடையில் இருந்த அவரின் பெண்குட்டி ஸ்லேட்டில் கணக்குப் போட்டு எங்களிடம் காசு வாங்கிக்கொண்டது. சேர நன்நாட்டிளம் பெண்கள்!

*

kaaraiyaaru1
மணிமுத்தாறு மற்றும் முண்டந்துறை செல்வதாக மறுநாள் கிளம்பினோம். சூரியன் தலைக்கு மேலே ஸ்ட்ரா போட்டு உற்சாகத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தான். நம்மை வதைப்பதாக இருந்தாலும் நாம் சொல்வது "நல்ல(!?) வெய்யில்!". மணிமுத்தாறு ரோடு வேலைகள் நடைபெறுவதாகவும் அங்கே செல்ல முடியாது என்றும் அந்தப் பக்கமாக பறந்து வந்த ஒரு பட்சி சொல்லிற்று. காரையாறு அணைக்கட்டு வரை போய் திரும்பலாம் என்று மொதலாளியை அழைத்துக்கொண்டு கிளம்பினோம். மலையேறும் அலங்கார வளைவில் செக் போஸ்ட் ஒன்று இருந்தது. அதன் பக்கத்தில் இருந்த குளிர்பானக் கடை பையன் வேனின் எல்லா ஜன்னலிலும் பின்வருமாறு மிரட்டல் விடுத்தான். "சாப்பிட, குடிக்க இங்கயே எல்லாம் வாங்கிக்குங்க. உள்ள ஒன்னும் இருக்காது".

இது ஒரு பயங்கர வனவாசம் போல இருக்குமோ என்று எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் எழ பயமூட்டினான். அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஸ்ப்ரைட், கென்லே என்று குடிப்பதற்கு வாங்கிக்கொண்டு ஏறினோம். நல்ல காட்டுப் பிரதேசம். ஆங்காங்கே புலி வளர்ப்பு பற்றிய போர்டுகள். ஒரு மலைக்கிராமத்தில் வீட்டு வாசலில் வனமோகினிகள் போல இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஜெகன்மோகினி படத்தில் வருவது போல முட்டிக்கு கீழ் வரை கார்மேகக் கேசம் வளர்ந்திருந்தது. காரையாறு அணைக்கு அரை கிலோ மீட்டர் முன்னாலையே வண்டிக்கு அணை போட்டார்கள். ஓரங்கட்டி நடந்து போகச் சொன்னார்கள். இந்த ஏழைக்காக பெரியபதவியில் இருக்கும் ஒரு சில நல்ல இதயங்கள் ஃபோன் போட்டு வன இலாகா அதிகாரிகளிடம் வண்டியோடு மேலே செல்ல பரிந்துரைத்தார்கள்.

kaaraiyaaru

தடுப்பை தாண்டி வண்டியில் செல்லும் எங்களை நடந்து சென்றவர்கள் உளமார சபித்தார்கள். அணைக்கட்டிற்கு வந்து பார்த்தால் அதல பாதாளத்தில் ஐயனார் குட்டை போல தண்ணீர் தேங்கி இருந்தது. படகு குழாம் சிறு கடுகு போல தெரிந்தது. நடந்தோ உருண்டோ கீழே இறங்குவது அவரவர் சாமர்த்தியம். அப்படி இறங்கி அந்தப் படகேறி எதிர்முனை சென்றால் அங்கே இருப்பது பான தீர்த்தம். கொளுத்தும் வெய்யிலில் படகில் பயணித்துப் போக பெருசுகள் ஆட்சேபிக்க சிறுசுகள் (என்னையும் சேர்த்துதான்) ஆர்ப்பரிக்க ஒரு சின்ன துவந்த யுத்தம் நடந்தது. கடைசியில் பெரியவர்கள் வென்றார்கள். சிறியவர்கள் மனஸ்தாபத்தோடு இறங்கினார்கள்.

manimuthaar

இறங்கி வரும் வழியில் அந்த அணைக்கட்டில் இருந்து ஓடை போன்ற ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் வண்டியை இரண்டு பெருமரங்களுக்கு இடையே நிறுத்தி சிறுசுகள் போய் குளித்தோம். ஒரு சிகப்பு நாய் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்தது. விறகு பொறுக்கி தலை மேல் சுமந்து கொண்டு போன காட்டுச் சிறுக்கி ஒருத்தி சிரித்துக்கொண்டே ஒய்யாரமாக நடந்தாள். தண்ணீர் கொஞ்சமாகத் தானே ஓடுகிறது என்றெண்ணி காலை வைத்தால் முதலை போல வெடுக்கென்று இழுத்தது. நல்ல கரெண்ட். ஜாக்கிரதையாக அடி மேல் அடி வைத்து ஓடையின் நடுவே சென்று குளித்தோம். பான தீர்த்தம் போக முடியாத கோபத்தை ஓடையின் ஜில் அடித்து விரட்டியது. நுரைத்து ஓடிய தண்ணீரில் முகம் புதைத்து புத்துணர்ச்சி பெற்றோம்.

manimuthaar1

"நேரமாச்சு" என்று ஒரு பெரியவர் தார்க்குச்சி போட வேனில் ஏறினோம். அடுத்து நேரே நெல்லையப்பருக்கு சலாம் போட திருநெல்வேலி போவதாக ப்ளான். வழியில் அம்பையில் கௌரிஷங்கர் என்ற போர்ட் வெளுத்துப் போன (அ)உயர்தர சைவத்தில் புசித்தோம். சாப்பாட்டுக்கு உட்கார்ந்த நேரம் மின்சாரம் தடைப்பட்டு உழைத்து ஓடாய்த் தேய்ந்த சர்வர்கள் வேர்வையும் சேர்த்து எங்களுக்கு பரிமாறினார்கள். ஐயோடின் கலக்காத உப்பாக அதை பாவித்து உண்டோம். பாலம் ஏறி தக்குடு அவதரித்த புண்ணிய க்ஷேத்ரமான கல்லிடை வழியாக அவரை மனதார நினைத்துக் கொண்டு திருநெல்வேலி சென்றேன். காந்திமதியும், நெல்லையப்பரும் தம்பதி சமேதராக அற்புத தரிசனம் தந்து அருள்புரிந்தார்கள். நெல்லையப்பர் சன்னதி வாசலில் தூணைத் தட்டி இசை எழுப்ப முயன்றேன். ஓங்கி குத்தியதில் கை கன்னிவிட்டது.  ஸ்வாமி பார்த்துவிட்டு தூங்குவதற்கு நேரே மேலகரம் குபேரனை நோக்கி விரைந்தோம்.

*

முக்கியமான இரண்டு விசேஷங்களும் நடந்த நாள். மதியம் வரை இருந்து சாப்பிட்டோம். மாலை ஸ்ரீவில்லிப்புத்தூர். தமிழக அரசு சின்னத்தை அலங்கரித்த கோபுரத்தை கீற்று போட்டு மறைத்து வைத்திருந்தார்கள். உள்ளே "ஏன்?" என்று கேட்டதில் தங்கக் காப்பு போடுகிறார்களாம். அசந்துவிட்டேன். நேரே தாயார் சந்நிதி சென்றோம். எந்தத் தலத்திற்கும் இல்லாத சிறப்பாக பெருமாள் ரெங்கமன்னார் உடன் வலப்புறத்தில் ஆண்டாளும் இடப்புறத்தில் கருடாழ்வாரும் சேவை சாதித்தார்கள். கோபுரவாசலில் அழுக்குச் சட்டையுடன் துரத்தி வந்து அந்த சின்ன ஆண்டாள் விற்ற துளசி மாலையை சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்கு சாற்ற கொடுத்தோம். "எந்த ஊர்லேர்ந்து வரேள்!" என்றார். என் அப்பா "ராஜ மன்னார்குடி" என்றும் நான் "சென்னை" என்றும் ஒருசேர பதிலளித்தோம். "களவாணி" என்று கூறி சிரித்தார் பட்டர். ஆண்டாள்  பெருமாளுடன் ஐக்கியமான ஆனந்தத்தில் எங்களை மன்னித்தாள். அப்புறம் ஆண்டாளை கண்டெடுத்த பிருந்தாவனத்தை பார்த்துவிட்டு வடபத்ரசாயி சந்நிதிக்கு சென்று சேவித்தோம்.

Tenkasi Temple
வந்ததிலிருந்து தென்காசி காசி விஸ்வநாதர் லோகநாயகி அம்மனை தரிசிக்கவில்லையாதலால் நேராக தென்காசிக்கு வண்டியை விட்டோம். வழியில் மடவார் விளாகத்தில் இருந்த வைத்தியநாதர் கோபுரம் சிவசிவா என்று அழைத்தது. ஹரியும் சிவனும் ஒன்னு. அறியாதவன் வாயில மண்ணு. தரிசனம் முடித்து தென்காசி விஸ்வநாதரை தரிசித்து விடலாம் என்ற நம்பிக்கையில் வண்டி ஏறிய எங்களை மொதலாளி பழிவாங்கினார். ஐம்பது தாண்டாமல் ஓட்டினார். ஆட்டோ காரருக்கு கூட வழிவிட்டு இடது புறம் ரசமட்டம் பிடித்தது போல சீராக ஓடினார். சின்னவளுக்கு பசியெடுத்தது. எப்படியும் போய் தென்காசியில் ஸ்வாமி பார்த்து சாப்பிடலாம் என்றால் ஒன்பது மணிக்கு கோயில் வாசலில் இறக்கி விட்டு சிரித்தார். தெய்வீக சிரிப்பு.

ஆளை அலேக்காகத் தூக்கும் காற்று அடித்தது. நம்மூர் பீச்சுக் காற்று பிச்சை வாங்க வேண்டும். கோயில் பூட்டி விட்டார்கள். எதிரே புராணா லாலா கடையில் சுடச்சுட ஹல்வா போட்டார்கள். சர்க்கரைவியாதிக்காரர்கள் காத தூரம் ஓடிப்போய்விடும் அளவிற்கு அந்தப் பகுதியில் காற்றே இனிக்கிறது. நூறு ஐம்பது என்று டாஸ்மாக் வாசலில் கட்டிங் அடிப்போர் போல அல்வா சுவைக்கும் கும்பல் வாழ்க. கணையம் நன்றாக சுரக்க தென்காசி விஸ்வநாதர் அருள்புரிவாராக! கொஞ்ச நேரம் காற்று வாங்கிவிட்டு குபேரனிடம் தஞ்சம் புகுந்தோம்.

*

ilanji koil

மறுநாள் காலையில் நேரே சித்திர சபை கண்ட குற்றாலநாதரை தரிசித்தோம். குரங்கையும் எங்களையும் தவிர்த்து கோவிலில் ஈ காக்காய் இல்லை. பத்து செண்பகப்பூ பத்து ரூபாய் என்று பேரம் பேசாமல் வாங்கி அர்ச்சனைக்கு கொடுத்தோம். சாஸ்தாவிர்க்கும் ஒரு அர்ச்சனை செய்தோம். வெயிட்டிங்கில் நின்ற ஆட்டோ ஏறி இலஞ்சிக் குமரன் கோவில் சென்றோம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். வள்ளி தெய்வானையுடன் கம்பீரமாக வேலேந்தி நின்றிருந்தார். பக்கத்தில் இருவாலுக ஈஸ்வரர் அருள் புரிந்தார். அம்மன் பெயர் இருவாலுகவர்க்கினியாள். அகஸ்த்தியர் வெண்மணலில் பிடித்து வைத்த லிங்கமாம். கொள்ளை அழகு.

ilanji scene
வாசலில் காத்திருந்த ஆட்டோ ஹாரன் அடித்து கூப்பிட்டார். கரும்புத் தோகைகளுடன் விளையாண்டுகொண்டிருந்த குட்டியானைக்கு ஒரு வணக்கம் போட்டு ஏறினோம். நேராக காசி விஸ்வநாதர் தரிசனம். நல்ல பெரிய மூர்த்தம். அம்பாளையும் வணங்கி வெளியே வரும் மதிய நேரத்திலும் காற்று சிலுசிலுவென அடித்தது. அதோடு சேர்ந்து பறந்துவிடமாட்டோமா என்றிருந்தது. வேகமாக வீசினாலும் மயிலிறகால் தடவுவது போல முகத்தில் தவழ்ந்தது அந்த சிறப்புக் காற்று.

மாலையில் அதே ஆட்டோவில் தென்காசி ஸ்டேஷன் வந்தடைந்தோம். கைலி விளம்பரப் பையன் மீண்டும் சிரித்தான். "ஹோ...." என்று இருந்தது பிளாட்ஃபாரம். செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் ஏறும் போதே கரை வேட்டிகள் நிறைய ஏறினார்கள். "அண்ணே! அம்மா! தூள்!" போன்ற வாசகங்கள் பரவலாக காதில் விழுந்தது. ஐயாவிடமிருந்து அம்மாவசம் வந்த தமிழகத்தின் தலைநகரத்திர்க்கு ரயில் கூவி புறப்பட்டது.

காலை ஸ்டேஷனில் இருந்து வெளியே வரும் போது "ஐயே! கஸ்மாலம்" என்று ஒரு கிழவி கதறிய போது சென்னையின் வாசத்தை அறிந்தேன். திங்களில் இருந்து திரும்பவும் ஆபிஸ், சிக்னல், ட்ராபிக்.........

பின் குறிப்பு: இன்னமும் ஐந்தாறு பதிவுகள் எழுத சரக்கு உள்ளது. உங்களை ரொம்பவும் படுத்தாமல் இத்தோடு முடிக்கிறேன். நன்றி.

படக் குறிப்பு: அனைத்தும் அடியேன் க்ளிக்கியது.

-

Sunday, May 15, 2011

பொதிகை மலைச் சாரலிலே...


egmoreஏழு பெருசு, ரெண்டு சின்னஞ் சிறுசு, ஒரு பதின்மம், ஒரு மத்திம வயசு ஜோடி, இன்னொன்று கிருதாக்களில் வெள்ளி முளைத்த உயர் மத்திம ஜோடி என்று மஹிந்திரா வேன் திணறத் திணற அடைத்து எக்மோருக்கு வந்து சேர்ந்தபோதே இடுப்பு பாதி கழன்றுவிட்டது. நாங்கள் வாடகைக்கு அமர்த்திக்கொண்ட லொடலொட வேன், ஓனர் தன்னை ஷெட்டில் விடாததால் வசமாக மாட்டிக்கொண்ட எங்களிடம் வஞ்சம் தீர்த்துக் கொண்டது. மியூசிக் இல்லாமல், பெரியோர் சிறியோர் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இடுப்பொடிய ஒரு மணிநேரம் குலுக்கல் நடனம் ஆடினோம். அவ்வப்போது சரக்.. சரக்.. என்று வேனின் பிருஷ்ட பாகத்திலிருந்து கிளம்பிய அந்தச் சத்தம் அடிஷனல் Percussion.

லோக்கல் ட்ரிப் வேன் என்று முத்திரை குத்தி இந்தியன் தாத்தாவுக்கு தெரியாமல் ஆர்.டி.ஓ ஆபிசுக்கு பின் பக்க மூ.சந்தில் எஃப்.சிக்கு விட்டு ஃபிட்னஸ் சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறார்கள். எந்த கவுண்டமணி "செல்லும் பேப்பர்" வைத்து எந்த பன்னிசெல்வத்திடம் கையெழுத்து வாங்கிக் கொடுத்தார் என்று தெரியவில்லை. இருட்டில் குருட்டுத்தனமாக தேடுவது போல இடது கையால் துழாவித் துழாவியும், செல்லமாக ரெண்டு தடவை தலையில் குட்டியும் கியர் போட்டபோது ஒரு கன்னுக்குட்டியை தாய்ப்பசுவிடம் ஓட்டிப்போகும் லாவகம் அந்த ஓட்டுனரிடம் தெரிந்தது. "ஸ்டேஷன் போய் சேருங்களா?" என்று விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு உடைந்த துருப்பிடித்த கதவு கையில் கீறாமல் சர்வ ஜாக்கிரதையாக ஏறும்போது சந்தேகமாக கேட்டேன். பதிலுக்கு மந்தகாசப் புன்னகை பூத்தார் டிரைவர் அண்ணன். தென்காசிக்கு நான்கு நாள் பயணம். (தென்)காசிக்கு சந்நியாசியாகப் பயணப்படமால் பரிசுத்த சம்சாரியாக மூட்டை முடிச்சு காவடியாகத் தூக்கி சென்றுவந்தேன்.

வேன் சத்தம் தவிர்த்து பத்து நிமிட வாய்ப்பேச்சு மௌனத்தைக் கலைத்து "இது லாங்கே போவுது தெரியுங்களா..." என்று எஞ்சின் பெட்டியைத் தட்டிச் சொன்னார். "திருவண்ணாமலைக்கா?" என்று ஒரு அனுமானமாகக் கேட்டேன். சைதாப்பேட்டை கலைஞர் வளைவு ஓரத்தில் நின்றிருந்த வெள்ளைச் சீருடை டிராஃபிக் ஐயாவை ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டே "ஆமாம்.." என்றார். "வண்டியில விளக்கு இல்லையா?" என்றேன். இது பகல்ல பசுமாடு கேசு போலருக்கு என்று நினைத்து "ஏன்" என்று கேள்வி கேட்டார். "இல்ல... பௌர்ணமிக்கு திருவண்ணாமலை போகும் போது பாதிப்பு ஒன்னும் இல்லை.." என்றேன்.  அவர் சிரிக்காமல் பெடல் போட் போல வண்டியை ரெண்டு தடவை மிதித்து "உர்..உர்.." என்று உறும வைத்தார். நான் அடங்கிப்போய் லாரி துடைக்கும் கிளி போல் பதவிசாக அமர்ந்து ஜன்னல் வழியாக ஆபிஸ் விட்டு வீடு திரும்பும் எனதருமை கொத்தடிமை கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு வயதான சேனையை அழைத்துக்கொண்டு ஷேத்ராடம் போவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று எனக்கு அந்த மண்ணுக்கும் விண்ணுக்குமாய் நின்ற எக்மோர் ஸ்டேஷன் மாடிப்படியை பார்த்ததும் தான் புரிந்தது. எட்டாவது பிளாட்பாரத்தில் பொதிகை. தோளில் ஒரு பையை தூக்கிக்கொண்டு நின்ற வயோதிகக் கூட்டத்தில் ரெண்டு பேர் இந்த இமாலயப் படியை பார்த்தவுடன் மலைத்துப் போய் பெருமூச்சு விட்டது நீராவி ரயில் தூங்கி எழுந்து ஃப்ரெஷ்ஷாக கூவியது போல இருந்தது. எஸ்கலேட்டரில் போகலாம் என்று வேறு இரண்டு பேரைக் கூப்பிட்டத்தில் படிக்கிடையில் கால் மாட்டிக்கொள்ளுமோ என்ற மரண பீதியில் "ஸாமியே.....ய் சரணம் ஐயப்பா" மனதிற்குள் சொல்லி படியேற ஆரம்பித்தார்கள். அவரே தூக்கியும் ஏற்றியும் விட்டார்.


பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம். உட்கார்ந்தவுடன் இந்தியத் திருநாட்டின் தெரு மூலைகளில், தேர் முட்டிகளில், ட்ரான்ஸ்ஃபார்மர் அடியில், தொலைதொடர்பு பெட்டிகள் பக்கத்தில், சுரங்க நடைபாதை ஓரத்தில், குடித்தனம் இல்லாத வீட்டு வாசலில் என்று எங்கெங்கும் நீக்கமற நிறைந்து வியாபித்து இருக்கும் 'அந்த' துர்கந்தம் வீசியது. ஒவ்வொருமுறையும் காற்று புகுந்து வெஸ்டர்ன் ஸ்டைல் உள்ளேயிருந்து நாற்றத்தை இழுத்துவந்தது. மெல்லத் திறந்திருந்த கதவை இழுத்து சார்த்தியவுடன் பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு குறைந்தது. ஜல்ப்பு பிடித்துக்கொண்ட மூக்குகள் வாழ்க! சளி நல்லது.

நெட்டில் புக் செய்ததால் கோச்சுக்கு நாலு பேராய் எங்களைப் பிச்சுப் போட்டிருந்தார்கள். அப்பரும் லோயரும் சுந்தரத்தையும் சம்பந்தத்தையும் நெருங்கி அண்டவிடாமல் அட்டகாசம் செய்திருந்தது. ஒவ்வொருவரிடமும் பேசி கெஞ்சி கூத்தாடி எங்கள் கூட்டணியை தக்கவைத்துக் கொண்டோம். தாம்பரம் தாண்டியதும் இட்லி, தயிர்சாதம் கொடுத்து எல்லோரையும் தூங்கவைத்ததும் ரயில் வேகம் பிடித்தது. நிறைய பேர் கைலி மாற்றிக்கொண்டும், காற்றுத் தலையணையை ஊதி அடைத்துக்கொண்டும் மற்றுமொரு சுகமான நித்திரைக்கு தயாரானார்கள். SUBH NITHRA! சட்டையை கழற்றி விட்டு இடுப்பில் கைலியும் மேலுக்கு முண்டா பனியனுடன் நின்ற அந்த பிரஷ் மீசை ஆம்பிளை தூங்குவதர்க்கே ரயில் ஏறியது போல இருந்தார். ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்ட சந்தோஷத்துடன் கீழே இருந்த யாருக்கோ "குட் நைட்" சொல்லி கையாட்டிக்கொண்டே அயல் நாட்டு தூதுவர் போல அப்பர் பர்த் ஏறினார்.

tenkasi windmill

நெடுநாட்களுக்கு பிறகு ஜன்னலோரத்தில் உட்கார்ந்து முட்புதர்களையும், ஒற்றையடிப் பாதைகள் முடியும் மரங்களையும், கிராமந்திர படியில்லாக் குட்டைகளையும், குறுகிய ரோடுகளில் இருட்டைக் கிழித்து டூ வீலரில் செல்லும் கிராமத்து ஜோடிகளையும் பார்த்தேன். நடு நடுவே சிற்றூர்களின் மச்சு வீடுகளும், 1984 என்று நெற்றியில் ஒட்டிய மாடி வீடுகளும், வைக்கோல் வேய்ந்த குடிசைகளும் வந்து வந்து போயின. சிறு சிறு ஸ்டேஷன்களில் அழுது வடியும் ஒற்றை விளக்கோடு பச்சைக் கொடியசைக்கும் காக்கி யூனிஃபார்ம் ஊழியரும், வாலையாட்டி நிற்கும் ஒரு நாயும், நிமிர்ந்து திடகாத்திரமாய் வளர்ந்த புன்னை மரமும், எப்போதோ வந்து நிற்கப்போகும் பாசஞ்சர் ரயிலுக்காக பழக்கூடையுடன் சிமென்ட் பெஞ்சில் காத்திருக்கும் கிழவியும் வேக வேகமாக பின்பக்கமாக பறந்தார்கள். இந்த காட்சிகள் ஓராயிரக்கணக்கான கதைகளின் வித்துக்களின் பிறப்பிடம். "தடக்..தடக்"கும் நடுநடுவே ரயில் எழுப்பும் "கூ..கூ.."வும் கற்பனையில் எழும் காட்சிகளை தடம் மாற்றிக் கொண்டுபோகும் காரணிகள்.

"எலேய்! அங்கிட்டு நிக்காத!" என்ற முரட்டுக் குரல் என் காதைக் குடைந்து எழுப்பிய போது ராஜபாளையத்தில் அந்த தாராளமாக வளர்ந்த பாட்டி சிரமத்துடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். எலேய் கூப்பிட்டவர் ஏறிக் கொண்டிருந்தார். கண்ணுக்கெட்டும் தூரத்தில் முண்டு முண்டாக குறிஞ்சி நிலங்கள் தெரிந்தது. தண்டவாளங்கள் பக்கத்தில் காலைக் கடன் கழிப்பது நம் நாட்டின் தேசியப் பழக்கம் போலிருக்கிறது. ரயிலுக்கு மரியாதை கொடுத்து அசிங்கத்து மேலேயே எழுந்து சிங்கம் போல மீசை முறுக்கி நின்றார்கள். அவர்கள் வீட்டு விருந்தாளியை பார்ப்பது போல நம்மை பார்த்தார்கள். தென்காசி நெருங்குவதை ராட்சத வெள்ளை இறக்கைகளுடன் வயற்காடுகளுக்கு மத்தியில் நின்றிருந்த காற்றாலைகள் தெரிவித்தன.

agasthiyar


பொதிகை மலைக் காற்று முகத்தை வருட கைலி விளம்பரத்துடன் வரவேற்றது தென்காசி. நீலக் கலர் கட்டம் போட்ட கைலியும், சதுரம் வரைந்த சட்டையும் அணிந்த தென்னகத்து இளைஞன் அந்த விளம்பர தட்டியில் கைகூப்பி சிரித்தான். ஒரு பூணூல், ஒரு சதாபிஷேகம் என்ற இரு சாக்குகள் வைத்துக்கொண்டு நெல்லை மாவட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இரண்டுமே மேலகரத்தில் நடைபெறுபவை. மலைராஜனின் நேரடிப் பார்வையில் இருப்பது மேலகர அக்ரஹாரம். அதனருகே பீட்டர் அல்போன்ஸ் திறந்து வைத்த சமுதாய நலக்கூடத்தில் தான் இரண்டு விசேஷங்களும்.

எங்களைப் போன்ற ஏழைபாழைகள் தங்குவதற்கு குபேரன் லாட்ஜில் ஏற்பாடாகியிருந்தது. கோமதி நெல்லை சிரிப்பில் எங்களை வரவேற்றார். "கோமதி?" என்ற என் கேள்வியை ஷன நேரத்தில் பிடித்து "கோமதி நாயகம்" என்று சொல்லி சிரித்தார். கேரள எல்லையாதலால் இரண்டு மாத தாடியுடன் கைலி அணிந்து மல்லுத்தமிழனாக குட்டையாக இருந்த கோமதி நான்கு அறைகளையும் விசாலமாக திறந்து விட்டார். மேலகரத்தில் பார்க் ஷெரடானை எதிர்பார்க்காமல் குபேரனில் முத்து, பவளம், வைரம் என்று பெயிரடப்பட்ட பெயரளவில் சொகுசு உள்ள அறைகளில் பெட்டிபடுக்கைகளை மூலையில் கோபுரமாக அடுக்கினோம். கலைஞரின் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி அறைக்கு ஒன்றாக அந்த மூலைகளை அலங்கரித்தது.

திரும்பினால் முட்டி இடிக்கும் குளியலறையில் களைப்பு தீர குளித்தோம். அடுத்த அரை மணி நேரத்தில் செண்பகாதேவி அருவி செல்ல ஆயத்தமானோம். "இப்ப சீசனே இல்ல... தண்ணியே இல்ல... தனியாளாப் போவாதீங்க.. களுத்துல கைல இருக்கறதை பிடிங்கிகிடுவானுங்க..." போன்ற வசனங்கள் திருநெல்வேலி தமிழில் சரளமாக அருவியாய் வந்து விழுந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு அடைந்தால் செண்பகாதேவி இல்லையேல் மரணதேவி என்று கிளம்பினோம். கல்லால் ஆன ஒரு மருந்துக் குடுவையில் அகத்தியர் பச்சிலை அரைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சிலைவாயிலில் கொண்டு வந்து தள்ளினார் ஆட்டோக்கார். சென்னை, மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் என்று எங்கெங்கு காணினும் அதே ஆட்டோ. அதே ஓட்டம். அதே கட். அதே நெளிவு சுளிவு. அதே ஹாரன். அதே டர்ர்ர்ர்ர்.......

shenba1

வழிநெடுக பருத்தும் சிறுத்தும் நின்றிருந்த காட்டு மரங்கள் பாஸ்கரனின் சுட்டெரிக்கும் கிரணங்களை உள்ளே விடாதபடி கிளைபரப்பி இலை விரித்து போராடி எங்களை தடுத்தாட்கொண்டது. பச்சை மண்ணின் மனமும், மரத்தின் பச்சை வாசனையும் என் உள்ளுக்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த அந்தப் பச்சை கிராமத்தானை கிள்ளி எழுப்பிவிட்டது. ஆலம் விழுதுகளுடன் ஊஞ்சலாடி கிளிக் கூட்டம் மெல்லிசை பாடியது. காற்றில் படபடக்கும் இலைகள் அதற்கு கைதட்டி பாராட்டியது. கொஞ்சமாக ஓடிய சிற்றருவியின் தண்ணீர் பாறைகளை குளிர்வித்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தன. இயற்கை படைப்புகள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக பேதம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

shenba2
கொஞ்ச தூரம் ஏறியதும் எப்போது நமக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி அயர்சியாகத் தெரியுமோ அந்த இடத்தில் ஒரு குற்றாலத்தான் மாங்காய்க் கடை போட்டிருந்தார். அண்ணாச்சி பழமும், மாங்காயும் "வாங்கித் தின்!" என்று திண்ணென்று இருந்தது. அறுத்து மிளகாய்ப்பொடி போட்டு இரண்டு கையாலும் கசக்கி கொடுத்தார்.  கையில் ஏறியக் காரப்பொடியை அழுக்குத் துணியில் துடைத்துக்கொண்டு கைலியை சரிசெய்து கொண்டார். கையை சரியாக துடைத்துக் கொண்டிருக்க வேண்டுமே என்று தெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.

அமிர்தமாக இருந்த அந்த மாங்காயைத் தின்று, உதட்டோரத்தில் மிளகாய்ப்பொடி காரம் "உஸ்..உஸ்..." என்று உஸக்க வைக்க செண்பாவை நோக்கி ஜரூராக நடைபோட்டோம். இரண்டு வானரங்கள் மரக்கிளைகளின் பின்னால் இருந்து எங்கள் கை மாங்காயை பறிக்கும் ஆவலில் எட்டிப் பார்த்தது. பாவம்! மசக்கையோ என்னமோ. கையை பிராண்டிவிடுமோ என்ற பீதியில் ஒரேடியாக வாய்க்குள் அடைத்துக்கொண்டோம். அவரைத் தாண்டியதும் ஆளரவம் இல்லாத பிரதேசம் போலத்தான் தோன்றியது. செண்பகாதேவி அருவிக்கு அருகில் செல்லச் செல்ல வானரம் ஆயிரம்!

"ஷ்...ஷ்..." என்று செல்லமாக அதட்டி எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தது செண்பகா. சூரிய ஒளியில் வெள்ளிக்கம்பிகளாய் மினுமினுத்தாள். இயற்கையின் ஷவரில் எண்ணி ஐந்து பேர் மட்டுமே குளித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு அரைமணி செண்பகாவோடு ஆட்டம் போட்டோம். அந்தக் கம்பி வேலியை கையில் பிடித்துக்கொண்டு தலை குனிந்து சரணாகதி அடைந்தபோது அந்த அருவித் தண்ணீர் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. ஏறிய களைப்பு இரண்டு நிமிடத்தில் தீர்ந்தது. முதுகில் விழுந்த அருவித் தண்ணீர் மசாஜ் கிளப் இளம்பெண் போல டம்டம்டம் என்று செல்லமாக குத்தியது. அதற்கு எங்கள் தேகத்தை அர்ப்பணம் செய்து பிரேதம் போல நின்றோம். ஒரு பரிபூரண புத்துணர்ச்சி கண்டது எங்கள் மேனி.

அன்று மாலை நாங்கள் சென்ற இடங்களை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

படக் குறிப்புகள்: எழும்பூர் படம் இவர் கொடுத்தார் http://www.flickr.com/photos/myriadity/ பெரிய குரூப்பாக சென்றதால் கிளிக்க முடியவில்லை. நமீதா படம் கிடைத்த இடம் http://a2zcinenews.blogspot.com/. போன பதிவில் B&W படம் போட்டதால் இந்த பதிவில் கலர்புல்லான நமீதா படம். இதைவிட டீசென்டான நமீதா படம் இணையத்தில் யாராவது எடுத்துப் போட்டால் அவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும். தென்காசி காற்றாலைகள் படம் இங்கே கிடைத்தது http://www.flickr.com/photos/52313113@N07/. ஏனைய படங்கள் என் கை வண்ணம்.

பின் குறிப்பு: அடுத்த பதிவில் முற்றுப்பெறும். பின்ன நாலு நாள் டூராச்சே!


-

Sunday, April 17, 2011

சென்னை டூ மன்னை

Haridhra Nadhi


ஆறு மாதத்திற்கு ஒரு முறை தஞ்சைத் தரணியின் ஞாபகங்கள் பதினைந்து வருடங்களுக்கு முந்தைய காவிரி போல என் நெஞ்சில் சுழித்துக் கொண்டு ஆறாக ஓடும். அந்த ஆற்றுக்கு அணையாக ஆபிஸ் வந்து குறுக்கே நின்று பல்லைக் காட்டி சிரிக்கும். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ரெட்டை மாட்டு வண்டியாய் குடும்பத்தை சிரமமில்லாமல் இழுக்கிறோம். ஒருவருக்கு லீவ் கிடைத்தால் மற்றொருவருக்கு இருபத்து நான்கு மணிநேரம் ஆணி பிடுங்க அவசியம் இருக்கும். அம்பேத்கர், மகாவீரர் மற்றும் என் அலுவலக நண்ப மேலாளர் போன்றோரின் ஆசியால் போன வாரம் எனக்கு இயந்திரம் வைத்து போரடிக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் நெற்களஞ்சியத்திர்க்கு செல்லும் பெரும் பேறு கிடைத்தது. இந்நாளில் வெள்ளையடித்த எல்லைக்கல் நட்டு நிறைய தரிசுகள் நகர்களாக ப்ரமோஷன் பெற்றிருந்தன.
 
சொந்த வண்டியில் போனால் டங்குவார் கிழிந்துவிடும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் தேசிய கீதம் பாட வாடகைக்கு கார் அமர்த்தி மன்னைக்கு புறப்பட்டோம். வெள்ளைச் சீருடையில் வந்த பார்த்தசாரதியை வண்டியை முதலில் நேராக புள்ளிருக்குவேளூருக்கு விடச் சொன்னேன். போகும் வழியில் ஸ்ரீகாழியிலிருந்து சமுத்திரக் கரையில் இருக்கும் திருமுல்லைவாசல் என்ற சம்பந்தர் பாடல் பெற்ற சிவஸ்தலம் சென்றேன். கோயிலுக்கு நேர் எதிரே கூப்பிடும் தூரத்தில் வங்காள விரிகுடா. சுனாமியின் போது அந்த முல்லைவனேஸ்வரர் கோவிலைத் தாண்டி அலையரக்கன் ஊருக்குள் நுழைய முடியவில்லையாம்.

vaitheeswaran koil

சீர்காழியில் இருந்து மாயவரம் செல்லும் பாதையில் வரும் ஹேர் பின் பெண்டு திரும்பியதும் மேலக் கோபுரவாசலில் வழக்கம் போல ஏதோ ஒரு மாநில டூரிஸ்ட் வண்டி நின்றுகொண்டிருந்தது. அதன் பின்பக்க டயர் அடியில் அதில் வந்திருந்த பக்தர்களின் குழந்தைச் செல்வங்களின் சுச்சா கக்கா சமாஜாரங்கள் போராட்டமில்லாமல் சகஜமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. Incredible India! நாடி ஜோஸியக்காரர்கள் நிராதரவாக கொளுத்தும் வெய்யிலில் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் பெருமக்களுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்தார்கள். அதை இருவர் வாய் பிளந்து கேட்டு நம்பிக்கைச் சாறு பருகிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து தட்டி போர்டில் அகத்தியர் கமண்டலத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்.

அம்மன் சன்னதி கோபுரவாசலில் தனியாக சில்லறைக் காசு எண்ணிக்கொண்டு திருவோட்டுடன் உட்கார்ந்திருக்கும் காவி உடை பிச்சைக்கார பெருமகனைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி. பாசி ஆடையை களைந்த சுத்தமான திருக்குளம். துர்நாற்றம் இல்லாமல் பாடி ஸ்ப்ரே அடித்திருந்தது. படித்துறையில் உட்கார்ந்திருந்த பொரிக்கடைக்காரருக்கு லாபம் சம்பாதித்து தரும் "வா..வா..வா.." என்று ஆகாரத்திற்கு தண்ணீர் மட்டத்திற்கு வந்து கோயிலுக்கு வருவோர் போவோரைப் பார்த்து வாயைப் பிளக்கும் நிறைய கெண்டையும் கெளுத்தியும் வாங்கி விட்டிருக்கிறார்கள். இறங்கி தலையில் நீரை ப்ரோக்ஷனம் செய்துகொண்டோம். எக்க விடாமல் குனிய விடாமல் கசங்க விடாமல் கர்ப்பக்ரஹத்தில் இருந்து வைத்தீஸ்வரன் அருள் புரிந்தார். அடியார்களின் திருக்கூட்டம் இல்லை. நெற்றியை பரபரவென்று தூணில் தேய்த்தால் பட்டை இட்டுக் கொள்ளும் அளவிற்கு மக்கள் குங்குமத்தாலும் விபூதியாலும் தூணுக்கு அபிஷேகம் செய்திருந்தார்கள். தையல்நாயகி சன்னதி வாசலில் "அம்பாள் அருள் புரிந்தால் தான் இந்த இடத்தை விட்டு நகருவேன்" என்று சபதம் செய்து அழிச்சாட்டியமாக யாரையும் பார்க்கவிடாமல் அந்தாதி படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சமீப காலத்தில் பாட்டியான அந்த அம்மணியை தாண்டி தரிசித்துக் கொண்டு வெளியே வந்தோம். இரண்டு பேர் காலால் எத்தியதில் முட்டியை தேய்த்துக்கொண்டே ஏக கடுப்பில் இருந்தார். அங்காரகன் சந்நிதியில் நிறைய பேர் சிகப்பு வஸ்த்திரம் கொடுத்து செவ்வாயிடம் வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டார்கள். நிமிஷத்தில் கருப்பு அங்காரகன் ஒரே செக்கச் செவேலென சிகப்பானார்.

திருவாரூரில் முதல்வர் வந்த தடம் நன்றாக தெரிந்தது. இரவில் வண்டியின் தலை விளக்கில் ரோடு ஃபேசியல் போட்டது போல பளபளத்தது. அலுங்காமல் குலுங்காமல் சென்றதில் என் சிறிய பெண் சௌகர்யமாக உறங்கினாள். ரோடோரங்கள் குண்டு குழியில்லாமல் செம்மண்ணால் மட்டமாக நிரவியிருந்தன. சைக்கிள்காரர்கள் தைரியமாக ரோட்டை விட்டு இறங்கி பஸ் கார்களுக்கு மனமுவந்து வழிவிட்டார்கள். யார் முதல்வர் ஆனாலும் ஒரு முறை தேசாந்திரம் போய் வந்தார்கள் என்றால் பொதுமக்கள் முதுகு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி பாராட்டும். செல்வியில் சாப்பாடு போடுகிறார்களா என்று கேட்பதற்கு முயலவில்லை. பஸ் ஸ்டாண்ட் ஓர பிரபலமான வாசன் வாசனை இல்லாமல் போட்ட டிஃபன் ஜீரணம் ஆவதற்கு ரோட்டில் கடகடா கிடுகிடு நடுவிலே பள்ளம் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். சவளக்காரன் தாண்டும் போது அந்தப் பனைமர இடைவெளியில் தூரத்தில் பெரிய கோவில் கோபுரத்தின் விளக்கு நிலாவுடன் போட்டியிட்டுக் கொண்டிருந்தது. தூக்கத்திலும் மன்னை அற்புதமாக இருந்தது. ஊரில் நான் கால் வைத்தவுடன் நிச்சயம் குறைந்தது ஒரு நூறு பேருக்காவது நித்திரையில் புரை ஏறி இருக்கவேண்டும்.

இன்னும் இரண்டு நாட்கள் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரம் சுற்றி ஐந்தாறு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பார்த்தேன். எல்லாவற்றையும் எழுதினால் இந்தப் பதிவு குமுதம் பக்தி மற்றும் சக்தி விகடன் போன்ற ஆன்மீக பத்திரிக்கைகளுக்கு போட்டியாகிவிடும் என்று இத்தோடு இப்போது நிறுத்திக்கொள்கிறேன். அவ்வப்போது திண்ணையில் நிறைய பகிர்கிறேன்.

கடைசியாக போன வருஷத்தில் கும்பாபிஷேகம் கண்ட எங்களூர் முதல்வன் ஸ்ரீவித்யா ராஜகோபாலனை தரிசித்தேன். சிறுவயதில் நானும் என் சித்தியும் மட்டும் ஏகாந்தமாக சுற்றிவந்த விண்ணை முட்டும் மதிலெழுந்த பிரகாரங்கள் இப்போது மக்களால் நிறைந்து வழிகிறது. மன்னை மக்கள் பக்தியில் திளைக்கிறார்கள். வாசலில் என்னுடன் படித்த ராஜகோபால் "செங்கமல"த்துடன் உட்கார்ந்து பற்கள் தெரிய சிரித்தான். "சௌக்கியமா?" கேட்டதற்கு என் பெண்ணிற்கு இலவசமாக ஆசீர்வாதம் செய்யச் சொன்னான். தும்பிக்கையாழ்வாரிடம் கடன் இல்லாமல் மாமூல் இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டேன். தும்பிக்கையில் இருந்து அவன் கைலிக்கு காசை லாவகமாக மணி ட்ரான்ஸ்பர் செய்தது செங்கமலம். தூண்களில் புதிது புதிதாக நிறைய ஸ்வாமிகள் முளைத்திருக்கிறார்கள். தனது வயதான அன்பு மனைவியை துவஜஸ்தம்பம் அருகில் மங்கலான வெளிச்சத்தில் நிறுத்திவைத்து 1 MP மொபைல் கேமராவில் பத்தடி தள்ளி நின்று தோராயமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். அத்தனை வயதிலும் பக்கத்தில் நிற்க அப்படி என்ன பயமோ? அம்பாள் சன்னதி சுற்றி நிறைய ஸ்வாமி படங்கள் வரைந்திருக்கிறார்கள். ஏலுகொண்டலவாடாவை பார்ப்பது போல செம்பகலக்ஷ்மி தாயார் சந்நிதியில் "பார்த்தவங்க வெளிய வாங்க.... பார்த்தவங்க வெளிய வாங்க..." என்று இழுத்து தள்ளாத குறையாக விரட்டினார்கள். அந்தக் கூட்டத்திலும் "என்ன டீச்சர் சௌக்கியமா?" என்று என் சித்தியை நிறுத்தி விசாரித்தார் பட்டர்.

Rajagopalan

ஸ்வாமி சன்னதி நுழையும் போதே ராஜகோபாலனுக்கு கல்யாண அலங்காரம் செய்துகொண்டிருந்த என்னுடன் தெரு கிரிக்கெட் விளையாடிய பிரசன்னா "வாய்யா ஆர்.வி.எஸ்.எம்? சௌக்கியமா?" என்று எங்களூர் பாணியில் விசாரித்து "மூலவரை தரசிச்சுட்டு வா..." என்று உள்ளே அனுப்பினான்(ர்). ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் பரவாசுதேவப் பெருமாள் தங்கக் காப்பில் ஜொலித்தார். நடுவில் மாடு கன்றுகளுடன் சந்தான கோபாலன் சேவை சாதித்தார்.  வெளியே வந்து மீண்டும் கோபாலனை கண்ணார தரிசித்தேன். சிரித்த முகத்துடன் கல்யாண அவசரத்தில் இருந்தார் கோபாலன். மனமார வேண்டிக்கொண்டு "பிரசன்னா... ஒரு போட்டோ எடுத்துக்கட்டா?" என்று உரிமையுடன் கேட்டு "தாராளமா..." என்று சொல்லிவிட்டு அந்த நீல மேக ஷ்யாமளனுக்கு பின்னால் நீல ஸ்க்ரீன் போட்டான் மகானுபாவன். அசையாமல் சிரித்துக்கொண்டே எனக்கு போஸ் கொடுத்தார் ராஜகோபாலன்.

Thiruvizha Night

பின் குறிப்பு: ஐந்தாறு பாகமாக எழுதவேண்டிய மூன்று நாள் டூரை ஒரே பதிவில் வெளியிட்ட எனக்கு "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் பாரட்டிக்கொள்கிறேன்.  இப்பதிவில் வெளிவந்த படங்கள் நானே என் கண்களால் பார்த்து கைகளால் கிளிக்கியது. எடுத்துக்கொள்ள விரும்பும் நண்பர்கள் என்னுடைய வலைக்கு ஒரு தொடர்புச் சுட்டி கொடுத்து உபயோகித்துக் கொண்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.


படக் குறிப்புகள்:  
  1. ஒரு சாயுங்கால நேர ஹரித்ராநதியின் தோற்றம். 
  2. வைதீஸ்வரன் கோவிலின் சுத்தமான குளம். 
  3. ராஜகோபாலனின் எழில் மிகு கல்யாணத் திருக்கோலம்.
  4. பெரிய கோவிலின் திருவிழாக்கால இரவுக் காட்சி.
-

Thursday, May 6, 2010

கும்பமேளா = 'கும்பல்'மேளா

naga sadhu


என் இடப் பக்கம் லத்தியை சுழற்றியபடி ஒரு ஆக்ரோஷமான போலீஸ்காரர். 'மர்மஸ்தானம்' இங்குமங்கும் ஆடியபடி, ஒரு முழு நிர்வாண சாது, என் வலப்பக்கத்தில். இந்த அண்டசராசரத்தில்  எங்குமே காணக்கிடைக்காத விஷயம் இது. ஆனால் நான் இக்கணத்தில் நின்று கொண்டிருப்பது கும்பமேளாவின் ஷஹி ஸ்னான்  தினத்தில், ஹரித்வாரில். இங்கே ஆடையற்ற நிர்வாணம் ஒன்றும் 'அ'சாதாரணம் அல்ல.

ஹிந்துக்களின் முக்கியமான புனித நாளை எதிர்நோக்கி 1330 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்த நானும் எனது நண்பரும் பார்த்ததெல்லாம் மதம் விற்கும் வியாபாரிகளையும், புனித யாத்ரிகர்களையும், சாதுக்களையும், சன்யாசிகளையும், கூட்டத்தையும், ரகளை செய்யும் போலீசையும், பிச்சைக்காரர்களையும் தான். நண்பர் (நண்பி) தன் ஆன்மீக தாகத்தை தீர்துக் கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து வந்த தங்க நிற பளபளப்பான கேசம் கொண்ட பெண்மணி (Blonde). ஒரு பெரிய நகரத்திலிருந்து ஒரு புதிய விசித்திர தேசம் வந்ததுபோல நான். லட்சோபலட்சம் மக்கள் தங்கள் பாபங்களை ஒரு தலை முழுக்கின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்பி குழுமியிருந்த அந்த பிரதேசத்தில் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்ல் நாங்கள் இருவரும் ஒரு வேற்றுகிரகவாசி போல நின்றிருந்தோம். 

நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிருந்தும் மக்கள் திரளாக வந்திருந்தார்கள். ஆண்கள் குர்த்தாவிலும், வேஷ்டியிலும்; பெண்கள் கண்ணைத் தவிர முகத்தையும் தலையையும் மறைக்கும் புடவையிலும் குவிந்திருந்தார்கள். இந்தப் புனித நிகழ்விற்க்காக பலர் நீண்ட நெடுநாட்களாகவும், சிலர் தங்கள் ஆயுள் முழுவதும் காத்திருந்து இப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். "எங்கள் பாவங்களை கழுவ இதுவே கடைசி வாய்ப்பு. அடுத்த முறை இது நிகழும் பொது நாங்கள் உயிரோடிருப்போமோ இல்லையோ" என்றார் ஒரு வயதான ராஜஸ்தானி பெரியவர்.

டில்லியிலிருந்து வரும் பேருந்துகள் ஹரித்வாருக்கு ஆறு கிலோமீட்டர் வெளியேவே எல்லோரையும் இறக்கி விட்டு திரும்பிச் சென்றது. அதி முக்கியஸ்தர்கள் மட்டுமே அவர்கள் வாகனங்களில் ஊரின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எங்களுடைய தங்கும் விடுதிக்கு நாங்கள் ஆறு கி.மீ. நடந்தே சென்றோம். 

சென்றடைந்த அந்த மாலைப்  பொழுதில் நாங்கள் செல்லும் வழிகளை அடைத்து நின்ற கூடாரங்களையும்,  மத குருமார்களின் பதாகைகளையும், போஸ்டர்களையும் மட்டுமே காண நேர்ந்தது. என்னால் பாபா ராம்தேவையும், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரையும் மட்டுமே அடையாளம் காண முடிந்தது. இந்தியாவின் மிகப்பெரிய மனித சங்கமத்தை அனைவரும் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டது புரிந்தது. ஒரு ஜப்பானிய சந்நியாசி மக்களின் அனைத்து பாவங்களையும் களைந்து மறையச் செய்வேன் என்றும், இன்னும் ஏதோ ஒரு xxxபாபா (ஊர்பேர் தெரியாத பாபா) ஊட்டச்சத்து இல்லாது சூம்பிப்போன ஒரு ஆப்ரிக்க குழந்தைக்கு எதையோ ஊட்டிக்கொண்டிருந்ததை ஒரு பகுதியுலும், மற்றொரு பகுதியில் ஆதிவாசிகளிடம் உரை நிகழ்த்துவது போலவும் பதாகைகள் வழி நெடுகிலும் வைக்கப்பட்டு இருந்தன. ஆப்பரிக்க குழந்தைக்கு இவர் ஏன் ஊட்டுகிறார்?. இந்தியாவில் ஏழைகளே இல்லையா என்ன? எல்லா பாபாக்களும் டி.வியில் பிடியில் மாட்டும் போது இவர் சொல்வதை யார் கவனிக்கிறார்கள்? இது போன்ற அடிப்படை கேள்விகள் என் அடிமனதில் எழுந்துகொண்டே இருந்தது.

chilum

கூடாரங்களும் கொட்டகைகளும் ஒரேயடியாக சோர்வடைந்து  சலிப்புடன் தென்பட்டது. மக்கள் தங்கள் கூடாரங்களில் கட்டையை நீட்டி படுத்திருந்தார்கள். சில சாதுக்கள் குழுமியிருந்த மக்களிடம் தங்கள் சொல்வளத்தை காட்டிகொண்டிருந்தார்கள், மற்றும் சில பேர் தங்கள் 'சிலும்' பைப்புகளை துடைத்துக்கொண்டோ அல்லது வாயில் வைத்து ஆழ இழுத்து புகை பிடித்துக்கொண்டோ இருந்தனர். அடுத்த நாளுக்காக இரண்டு மணிநேர ஊர்சுற்றலுக்கு பிறகு எங்கள் விடுதிக்கு திரும்பினோம். திரும்பும் வழியில் நகரத்தின் பின்புற நுழைவாயில் வழியாக நகர மையத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு பஸ் வருவதைக் கண்டோம். வரும் பேருந்துகளில் எங்கு பார்த்தாலும் 'தொங்கும் மனிதர்கள்', கூரைகளில், ஜன்னல்களில், முன்னால், பின்னால், படிக்கட்டுகளில். இவர்கள் எப்படி இவ்வளவு மணிநேரம் பயணித்தார்கள்?

அதிகாலை புனிதக் குளியலுக்கு சீக்கிரமாக எழுவது என்று தீர்மானித்திருந்தோம். ஆனால் பயணக் களைப்பில் ( ஆறு மணி நேர பஸ் பயணம், டிராபிக் ஜாம் மற்றும் மாற்றுப் பாதைகளால் பதினான்கு மணிநேரம் பிடித்தது) தூங்கியதில், கூட்டத்தை நெருங்கும்போது மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அவசரம் அவசரமாக படித்துறைகளை நெருங்க நாங்கள் முற்ப்பட்டபோது புகழ்பெற்ற நாக சாதுக்களின் தரிசனம் கிடைத்தது. நாக சாதுக்கள் படித்துறைகளை கடக்கும் வரை மனித சாதுக்களாகிய நாம் காத்திருக்க வேண்டியதாயிற்று. உடம்பு முழுக்க சாம்பல் பூசி, சிவ மந்திரங்களை உரக்க சொல்லி கூட்டமாக அவர்கள் சென்றது ஒரு அச்சுறுத்தும் காட்சியாகவே இருந்தது. போலீஸ்காரர்  கூட சற்று ஒதுங்கியே தான் நின்றிருந்தார். முக்கால்வாசி பேருக்கு பெரிய தொந்தி இருந்தது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் இவர்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய 'பானை' தொந்தி?

naga sadhu

ஒரு கிராமவாசி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூட்டத்தை கிழித்து வெளியே சென்று "பீடி" என்று கத்தினார். அவரை சுற்றிய அந்த நாகாஸ் கூட்டம் புதியதாக பிரித்த அந்த பீடி பாக்கெட்டை சில நொடிகளில் காலி செய்தது. இன்னொரு பாக்கெட்டை அவர் பிரிக்க முயலும்போது அங்கே நின்றிருந்த போலீஸ்காரர் பிடித்து கூட்டத்திற்கு பின் தள்ளி பின்னால் போகச் சொன்னார். ஒரு சில நாகார்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.

குளியல் படித்துறைகளை அடைவதற்கு சாமியார் கூட்டங்களை பின்பற்றுவதற்கு முயற்ச்சித்தோம். எங்கு பார்த்தாலும் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் எங்களை வரிசையில் வரும்படி செய்தன.  நாக சாதுக்களை அடுத்து, 'போர்' சாமியார்கள் கூட்டம் ஒன்று வந்தது. கத்தி, வாள், ஈட்டி, அருவாள், சூலம் போன்றவற்றுடன். பதின்ம வயது கூட அரும்பாத ஒரு பையன் தனது மூன்றடி நீள வாளை சண்டையிடுவது போல காற்றில் இங்கும் அங்கும் சுழற்றியும், நீட்டியும், ஆட்டியபடியும் வந்து கொண்டிருந்தான். சில சமயங்களில் தரை தொடும் அவன் வாளிலிருந்து தீப்பொறி பறந்தது.
chimta


நாங்கள் அந்த சாமியார் கூட்டத்தை தொடர்ந்து செல்ல முற்படும் போது காவலர்களால் தடுக்கப்பட்டோம். "நீங்கள் அவர்கள் பின்னால் செல்லக்கூடாது" என்று தடுத்த காவலரை "ஏன்?" என்று கேட்டதற்கு,  "இந்த சாமியார்கள் வெளி ஆட்கள் அவர்களை பின் தொடர்வதை விரும்ப மாட்டார்கள். அப்படி எவரேனும் தொடர்ந்தால் கையில் இருக்கும் சிம்தாவினால்(மேலே இருக்கும் படத்தில் இருப்பது)  குத்தி விடுவார்கள்" என்றார். எனக்கு அந்த மூன்றடி கத்தி சின்னப் பையன் நினைவு வர தலை அசைத்து அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டேன். தாங்கள் முதன் முதலில் குளிப்பதற்கு ஒரு பெரிய போரையே நிகழ்த்திய சந்நியாசி கூட்டங்கள் பின்பு சில விசேஷமான இடங்களில் குளிப்பதற்காக ஆற்றில் முன்னேறி சென்றது.

kumbh mela
இப்போது ஒன்றும் செய்வதறியாது மாட்டிக்கொண்டோம். நிச்சயமாக பின்னால் செல்ல முடியாது. ஒரு மனிதக் கடல் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் தள்ளிக்கொண்டிருந்தது. காவலர்கள் எங்களை பின்னால் தள்ளிக் கொண்டிருந்தனர். லட்சம் பேருக்கு பத்து பேர் வீதமாக நின்றிருந்த அந்த போலீஸ்காரர்கள் தள்ளியும் பின் செல்லாத கூட்டத்தை பயமுறத்த சுழற்றிய லத்தி எங்கள் மேலும் பட்டது.

ஒரு முழுக்கு போடலாம் என்று சென்ற நாங்கள் எங்கள் முடிவை இப்போது மாற்றிக்கொண்டம். அத்தனை பேர் விழுந்து எழுந்த அந்த இடத்தில் தற்சமயம் குளிப்பது உசிதம் அல்ல என்று எண்ணினோம். ஏதேனும் ஆன்மிக அனுபம் கிடைத்ததா என்று வழிநெடுக யோசித்தவண்ணம் திரும்பிவிட்டோம். ஆன்மிகவாதிகளும் சாமியார்களும் ஏதோ கண்டெடுத்திருப்பார்கள், மும்பையில் வாழ்வதால் எங்களது ஆன்மாக்கள் செத்துவிட்டது போலும்.

எனது நண்பி காண்பித்த திக்கில் ஒரு இளம் பெண் தலையில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட, முற்றிலும் நனைந்த உடையில், அப்போதுதான் முங்கி எழுந்திருந்து தியானம் செய்துகொண்டிருந்தார். எனக்கென்னமோ இந்த இளம் பெண் ஒருவர் தான் அங்கே பிரார்த்தனை செய்பவர் போல் இருந்தது. மற்றவரெல்லாம் ஆற்றில் விழுந்து எழுந்தபின் புனித யாத்திரையையே மறந்துவிட்டிருந்தார்கள். துணிகளை தோய்ப்பதும், வம்பு பேசுவதும், ஓடி விளையாடும் பிள்ளைகளை துரத்தி பிடிப்பதும் அந்த இடமே ஒன்றும் புனிதமாக தோன்றவில்லை எனக்கு.

நீங்கள் நினைப்பது போல் நாங்கள் ஒன்றும் அவர்களை விட மேன்மையானவர்கள் இல்லைதான், அவர்களாவது புனித நீராடினார்கள்.

ஷஹி ஸ்னான் முடிந்த பதினான்கு மணிநேரம் கழித்து அடுத்த நாள் காலை எழுந்தவுடன், அதிவேகமாக செல்லும் அந்த நதி அவ்வளவு பேரின் அழுக்குகளையும், மாசுகளையும் இழுத்துச் சென்றிருக்கும் என்று தீர்மானம் செய்து, என் நண்பியிடம் "ஒரு முழுக்கு போட நீ தயாரா?" என்று கேட்டேன். அதை ஆமோதித்து என்னை ஆச்சர்யமடைய செய்தாள்.

இன்று நாங்கள் படித்துறைக்கு மிகச் சுலபமாக வந்தடைந்தோம். அந்த மிகக் குளிந்த நீரில் நான் குதித்து மூழ்கினேன். நீரின் அடிஆழம் செல்ல செல்ல என்னுடைய சிறுவயது பிரார்த்தனைகள் என் தலையை வெள்ளமாக நிரப்பியது. இது போன்று ஒரு புத்துணர்ச்சியை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. என்னை அடியோடு பற்றி அவளுடன் இழுத்தாள் கங்கை மாதா. ஆற்றில் குறுக்கே இருந்த அந்த இரும்பு வளையங்களை இறுகப் பற்றிக்கொண்டேன்.

தங்கியிருந்த விடுதிக்கு திரும்புகையில் எனது பெற்றோருக்கு நான் கங்கா ஸ்நானம் செய்தது பற்றி குறுஞ்செய்தி அனுப்பினேன். "நீ உன்னுடைய பாவங்களையெல்லாம் கழுவி விட்டாய். இன்றுமுதல் உன் வாழ்க்கையில் ஒரு புதுக் கணக்கை துவக்கு" என்று என் தந்தை பதில் செய்தி அனுப்பினார்.

என்னைப் பற்றி நன்றாக தெரிந்தவர் என் தந்தை.

பின்குறிப்பு: மேற்கண்ட இந்த கும்பமேளா யாத்திரைக் குறிப்பு சமீபத்தில் வெளிவந்த "ஃபோர்ப்ஸ் இந்தியா" பத்திரிக்கையில், அபிஷேக் ரகுநாத் என்பவர் எழுதியது. கட்டுரைத் தலைப்பு "Just Watching". மிக அருமையான பயணக் கட்டுரை. நாமே நேரில் கங்கைக்கரை அருகே இருப்பது போல் இருந்தது.என்னுடைய ஆங்கில அறிவிர்க்கேற்பவும், புரிதலுக்கேற்பவும்  இந்த தமிழாக்கத்தை செய்திருக்கிறேன்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails