Showing posts with label இதிகாச காதலர்கள். Show all posts
Showing posts with label இதிகாச காதலர்கள். Show all posts

Thursday, March 11, 2010

இதிகாச காதலர்கள் - II

2.புருரவஸ் - ஊர்வசி

இந்திரலோகத்தின் ஆக மொத்த யவ்வன சுந்தரிகளும் ஒரு நட்சத்திர கூட்டம் போல வானில் உலா வந்துகொண்டிருந்தனர். ரம்பை, மேனகை, திலோத்தமா, சித்ரலேகா மற்றும் பலர். ஆனாலும் நிலவை இழந்த வானம் போல் இருந்தது அவர்கள் குழு. வாடிய மலர் போல் இருந்த அவர்களது வதனங்கள் அவர்களுடைய சோகத்தை சொல்லிற்று.
சூரியனை துதித்துவிட்டு தேரில் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த அந்த வாலிபனைப் பார்த்து அந்த அப்சரஸ்கள்
"வாயு வேகத்தில் செல்லும் உங்களை பார்த்தால் கடவுளின் மித்ரனாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்."அதற்க்கு அந்த அழகிகளிடம்
"எதற்காக மிகவும் சோகத்துடன் இருக்கிறீர்கள். நான் சந்திர வம்சத்து மன்னன் புருரவஸ், உங்கள் துன்பத்தை நான் போக்குவேன்" என்றான்.
"என்னவென்று சொல்வது எங்கள் துக்கத்தை. இரவு நேரங்களில் பூலோகத்தில் சென்று கால் பதித்து திரும்புவது எங்கள் ஊர்வசியின் வழக்கம். இன்றும் அதுபோல் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது, எங்கள் ஊர்வசியை கேசி என்ற அரக்கன் கவர்ந்து சென்று விட்டான்" என்றாள் ரம்பை
"கவலைப்படாதீர்கள். நான் சென்று உங்கள் தோழியை மீட்டு வருகிறேன். எந்த பக்கமாக சென்றான் அப்பாதகன்."
"வடகிழக்காக" என்று கை காண்பித்தாள் ஊர்வசியின் உயிர்த்தோழி சித்ரலேகா.
"நீங்கள் இங்கேயே காத்திருங்கள்.. சில கணத்தில் வருகிறேன். சாரதி... அத்திசையில் தேரை செலுத்து" என்று விரைந்தான் புருரவஸ்.

சோமனுடைய மகன் புதனுக்கும் - வைவஸ்வத மனுவின் மகள் இலாவிற்கும் பிறந்தவன் புருரவஸ். தன்னுடைய பாட்டனாரின் பெயரை தன் வம்சத்திற்கு சேர்த்து சந்திரவம்சம் என்று சூடிக்கொண்டு ப்ரயாகையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். நல்ல புஜபல பராக்கிரமம் மிக்கவன். அவன் சென்ற திசையை கவலையுடன் பார்த்தவாரே அந்த கயல்விழிகள் இமயமலைச் சாரலில் உள்ள ஹேமகூட மலைநோக்கி சென்றனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மனோ வேகம் வாயு வேகத்தில் திரும்பினான் புருரவஸ். தங்களுயிர் தோழி பத்திரமாக திரும்பிவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் துள்ளி வந்தார்கள் அப்சரஸ்கள். வாடிய மலர் போன்று இருந்த ஊர்வசியை கண்டு "ஏ பெண்ணே, ஏன் இன்னும் பயத்துடன் காணப்படுகிறாய். கவலையை விடு உன் கண்ணீரை துடை" என்றாள் சித்ரலேகா.
"இவ்வளவு பயந்தாங்கொள்ளியை நான் இதுவரை கண்டதில்லை" என்று புன்முறுவல் புரிந்தான் புரு.

அவன் புன்னகையில் அந்த இடமே அவளுக்கு சொர்க்கலோகம் போல் காட்சியளித்தது. அந்த இதமான மாலைத்தென்றல் அவன் பரந்த மேனியில் பட்டு திரும்பி இவளை உரசியபோது வந்த ஆண்வாசனையில் தன்னை மறந்து கண்கள் சொருகினாள் ஊர்வசி. அவனது கூர்மையான பார்வையும், பரந்த தோளிலும் மாரிலும் துவண்டு ஆடும் பட்டாடைகளும், புஜங்களில்  ஜொலிக்கும் கங்கனங்களும் அவளை ஒரு வித காந்தசக்தியோடு இழுத்தது. இருவரும் ஒருவரையொருவர் கண்களால் பருகி நெஞ்சத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர். சித்ரலேகாவின் "ஹக்...கும்..." அவர்களை கனவுலகிலிருந்து நினைவுக்கு இழுத்து வந்தது.
"என்னம்மா ஊர்வசி, தேரிலேயே இருப்பதாக உத்தேசமா" என்றாள் சித்ரலேகா. சித்தம் களைந்து  "தேரோட்டி ... தேரை தரையிறக்கு..." என்று கட்டளையிட்டான் கட்டிளம் புருரவஸ்.

தேர்பாகன் மிகவும் லாவகமாக தேரை தரையிறக்கியும் சமன் இல்லாத தரையில் இறங்கியதால் ஒரு சிறிய அதிர்வுடன் இருபக்கமும் ஆடியபடி நின்றது. அதில் குலுங்கிய ஊர்வசி இறங்கும் போது புருரவஸ் மீது உரசியதில் இருவரும் ஒரு  மின்னல் வெட்டியதை உணர்ந்தார்கள். பிடித்து இறக்கும் கையின் ஸ்பரிசத்தால் கட்டுண்டு  விடமுடியாமல் தவித்தான். கையோடு கை ஒட்டி பிறந்தாற்போல் பிரிக்க முடியாமல் தவித்தது கண்டு அங்கே வந்த அப்சரஸ்கள் கேலி பேசி சிரித்தார்கள்.
"உம்... உம்..... நடக்கட்டும்..நடக்கட்டும்.. ஹா ஹா ஹா ....."

இந்திரலோகத்தில் அனைவராலும் சதஸ் நிரம்பியிருந்தது. பரத முனிவரின் பிரதான சிஷ்யை ஊர்வசி. அன்றையதினம் "லக்ஷ்மியின் விருப்பம்" நாட்டிய நாடகம் நடந்து கொண்டிருந்தது. லக்ஷ்மியாக ஊர்வசி ஆடிக்கொண்டிருந்தாள். ஒரு முல்லைக்கொடி வசந்த கால காற்றில் வளைந்து ஆடுவது போல் இருந்தது ஊர்வசியின் ஆட்டம். சகலரும் மெய்மறந்து நாட்டிய நாடகத்தை ரசித்தவண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் லக்ஷ்மியின் தோழி அவளிடம் "மூவுலகிலிருந்து அனைவரும் வந்தாயிற்று. இன்னும் யாரை எதிர்பார்க்கிறாய்?" என்று கேள்வி எழுப்பும் காட்சி  வந்தது. அப்போது "புருஷோத்தம்" என்று சொல்வதற்கு பதிலாக "புருரவஸ்" என்று பதிலலித்துவிட்டாள் லக்ஷ்மியாக வேடமிட்டிருந்த ஊர்வசி. அவள் மனதில் எந்நேரமும் ஓடி விளையாண்டுகொண்டிருந்தவன் வாய் வழியே வெளியே வந்துவிட்டான்.

இதைக்கண்ட பரத முனிவர் கடுங்கோபம் அடைந்தார். "நான் கற்றுக்கொடுத்ததை மறந்து வேறு நினைவோடு இருந்ததால் இக்கணம் முதல் நீ இந்த இந்திரலோகத்தில் இருக்கும் தகுதியை இழக்கிறாய்." என்று சாபமிட்டார். இதைக் கண்ட தேவேந்திரன், கேசியுடனான  யுத்தத்தில் தனக்கு உதவி புரிந்தமைக்காக  புருரவசுக்கு நன்றிக் கடன்பட்டிருந்தான்.  ஆகையால் அவளை புருரவசுக்கு மணமுடித்து அவனுடன் அனுப்பிவைத்தான்.

சில பின் குறிப்புகள்:
இப்படி காதலித்து மனம் புரிந்த புருரவஸ் ஒரு வித்யாதர பெண் உதயவதி என்பவளின் மேல் காதல் வயப்பட்ட போது ஊர்வசி தன் காலை நிலத்தில் ஊன்றி கொடியாக மாறியது தனிக்கதை. மன்னன் அயு, புருரவஸ் -ஊர்வசி தம்பதியரின் மகன். அயு-பிரபா ஜோடியின் புதல்வன் யுவராஜ் நகுஷன். நகுஷன்-வ்ரஜாவின் குலக்கொழுந்து யயாதி. நியாயமாக பார்த்தால் இந்த இதிகாச காதலர்கள் வரிசையில் முதலில் இடம் பெற்றிருக்கவேண்டிய ஜோடி இதுதான். ஆனாலும் கதையின் போக்கினால் முதலிடம் பெற்றான் யயாதி. இது எழுதுவதற்கு உபயோகமாக இருந்தது காளிதாசரின் விக்ரமோர்வசியம் எனும் நூல். 
--இதிகாச  காதலர்கள் இன்னும் வருவார்கள்

Monday, February 22, 2010

இதிகாச காதலர்கள் - I

1. யயாதி - தேவயானிசர்மிஷ்டை

இது ஒரு முக்கோண காதல் கதை அல்ல. முற்றும் கோணாத இரு காதல் ஒரு கதையில் .

மிக அடர்ந்த வனம் அது. நெடிதுயர்ந்த மரங்களும், காட்டுப் புதர்களும், குட்டையும் நெட்டையுமாகவும் உள்ள மரங்களில் சிறியதும் பெரியதுமாக கொடிகள் படர்ந்தும் காட்டுப்  பாதையை அடைத்து வளர்ந்து இருந்தது. சிகப்பும் மஞ்சளும் ஊதாவுமாக பூக்கள் பூத்த மரங்களும் அக்காட்டில் உண்டு.  நன்பகலுக்கு இன்னும் ஒரு நாழிகை  நேரமே இருந்தாலும், சூரியனின் கிரணங்களை நுழைய விடாமல் தடுத்தன அத்தாவரங்கள். பகல் இரவாக காட்சியளித்தது அந்த ஒளி புகா வனம். "விஷ்... விஷ்..." என்ற காற்றை கிழிக்கும் வாளோசையும் "டக்... டக்... டக்...டக்..." என்ற குளம்பொலி  ஓசையும் வந்த திசையில் அந்த ஆரண்ய இருட்டை கிழித்துக்கொண்டு செடிகொடிகளையும் புதர்களையும் தன் வாளால் வெட்டிவீழ்த்திக் கொண்டு  தன் வெண் நிற புரவியில் ஒரு அழகிய வீரன் விரைந்து சென்று கொண்டு இருந்தான். அந்த பகல் வேளை இருட்டில் அப்புரவியும் அதன் மேல் அவனும் பாய்ந்து சென்று கொண்டிருந்தது கார் கால இரவில் அவ்வப்போது வானில் வெட்டும் மின்னல் போல் இருந்தது. அவ்வளவு களைப்பிலும் அவனுடைய முகம் முழு சூரியனை போல் பிரகாஸமாக இருந்தது. அவன் அன்றைய வேட்டையில் ஒரு பெண் மானை தேடிப் புறப்பட்டு காட்டில் வெகு தூரம் உள்ளே வந்துவிட்டான்.

அப்போது ஆளரவமற்ற அந்த வனத்தில் "ஆ... காப்பாற்றுங்கள்.....யாரேனும் எனக்கு உதவுங்கள்..." என்று ஒரு அபயக்குரல் கேட்டது. பெண்மானை தேடி வந்தவன் ஒரு பெண்ணின் அச்சக்குரல் கேட்டு திடுக்கிட்டான். குரல் வந்த திக்கில் குதிரையை வேகமாக செலுத்தினான்.
"ஐயோ... உதவி... உதவி... யாராவது என்னை காப்பாற்றுங்கள்...." என்று மீண்டும் அழுகையுடன் அக்குரல் ஒலித்தது.
தனது அனைத்து அவயங்களையும் கூர்மையாக்கிக் கேட்ட போது, எங்கோ அருகில், அதல பாதாளத்தில் இருந்து சப்தம் வருவது போல் இருந்தது. குதிரையை விட்டிறங்கி தலையை குனிந்து நாற்புறமும் தரையில் தேடிக் கொண்டு சென்றான். ஒரு பத்து இருபது அடிகளில் ஓர் பாழும் கிணற்றைக் கண்டான். செடி கொடிகளும், முட்புதர்களும் படர்ந்திருந்த அக்கிணற்றில் இருந்துதான் அந்த உதவிக்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அக்கிணற்றின் மேலே ஊர்ந்த சில சிறிதும் பெரிதுமான அரவங்கள் ஆளை கண்டவுடன் விரைந்து கிணற்றிற்கு வெளியே ஊர்ந்து சென்றன. செடிகொடிகளை தன் வாளினால் நீக்கி கிணற்றில் தலையை தாழ்த்தி சத்தமாக
"யாரது?......" என்று கத்தினான்
"தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்... " என்றது கிணற்றுக்குரல்.
"ஏ பெண்ணே... யார் நீ... எப்படி இந்த கிணற்றுக்குள் வந்தாய்" என்றான்.
பதிலுக்கு, " நீங்கள் யார்.. உங்களால் என்னை காப்பாற்ற முடியுமா" என்று கிணறு ஈனஸ்வரத்தில் வினவியது. குரலில் மிகுந்த சோர்வு தெரிந்தது. சர்வ நிச்சயமாக ஓரிரு நாட்கள் அன்னம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று அவனுக்குப்பட்டது.
"நான் யயாதி..நகுஷனின் புத்திரன்"
"யார்.... யயாதி மகாராஜாவா?..."
"ஆம்.. ஹஸ்தினாபுர மன்னன்... யயாதி"
"ஆகா! மன்னனே என் உதவிக்கு வந்ததற்கு அந்த கடவுளுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி.... தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்."
"ம்.. நீ எப்படி இதற்குள் வந்தாய்?"
"எனக்கு பயமாக உள்ளது. நான் வெளியே வந்தபின் உங்களுக்கு என்ன நடந்தது என்று விவரிக்கிறேன். இது மிகவும் ஆழமான கிணறு. தயவு செய்து கேள்வி கேட்காது என்னை இதிலிருந்து விடிவியுங்கள்." என்று மன்றாடினாள்.
"ம். ஆகட்டும். இப்போதே உன்னை வெளிக்கொண்டு வருகிறேன்"
"என்னை எப்படி இப்போது வெளியே கொண்டு வருவீர்கள்"
"உனக்கு என் பெயர் மட்டும் தான் தெரிந்திருக்கிறது. நான் கற்ற 'தனுர் வேதம்' நீ அறிய வாய்ப்பில்லைதான்" என்றவன் வில்லில் நாணேற்றி சரமாரியாக தொடுத்து அம்பினால் ஒரு தாமரை போன்ற கூடை செய்து, அதை கொடிகளில் கட்டி கீழே இறக்கினான். ஒரு சிறிய பஞ்சு மெத்தையை தூக்குவதுபோல் மேலே தூக்கி ஒரு மலர்ந்த தாமரை கிணற்றிலிருந்து வெளியே வரக் கண்டான்.
வனத்தில் அத்தகைய வனப்பு மிக்க மலரைக் கண்டதும் பேச மறந்து நின்றான் யயாதி. தன் வசம் இழந்து நின்ற அவன், அவள் தன்னையே பார்ப்பது தெரிந்தபின்
"நீ... நீ... நீங்கள் யார்?" என்று தடுமாற்றத்துடன் கேட்டான்.
"நான் தேவயானி....சுக்ராச்சாரியாரின் மகள்" என்று அந்த அன்றலர்ந்த மலர் பேசியது.
அவள் எழிலில் முற்றும் மயங்கிய யயாதி,
"யார்.... அசுர குரு சுக்ராச்சாரியாரியன் மகளா நீங்கள்...."
"ஆம்...நீங்கள் என்ன நீங்கள் ... என்னை தேவயானி என்றே அழையுங்கள்...."
கிணற்றுத் தண்ணீரில் நனைந்து இருந்த தேவயானிக்கு அவள் அணிந்திருந்த ஈர ஆடை மேனி அழகிற்கு மேலும் அழகு ஊட்டிற்று.
அந்த ஆடை படம் பிடித்து காண்பித்த அவளழகில் தன்னை மறந்த யயாதி, ஒன்றும் செய்வதறியாது மகிழ்ச்சியில் திண்டாடினான். சிறு கணநேரம் கழித்து அவளிடம் பேச முற்பட்டபோது,
"நான் எவ்வளவு நேரம் இப்படி கிணற்றின் மேலேயே நிற்பது. நான் தரைக்கு வரலாமா" என்றது அந்த தாரகை.
அப்போதுதான் தான் அவ்வளவு நேரமாய் அவளை கிணற்றிலிருந்து தூக்கிய அம்புக் கூடையிலேயே வைத்திருக்கிறோம் என்று உரைத்தது யயாதியின் மூளைக்கு.
கை நீட்டி, இவன் கரத்தில் அவள் கரத்தை பொதிக்க, மென்மையாக கிணற்றுக்கு வெளியே கொணர்ந்தான்.
"ம்...இப்போது சொல்... நீ எப்படி இங்கே...."
அப்போது தேவயானி, தன் தகப்பனாரை குருவாக கொண்ட அசுர ராஜன் விருஷபர்வாவின் மகள் சர்மிஷ்டையுடன் ஏற்ப்பட்ட பிரச்சனையினால் இருவரும் காட்டில் வெகு தூரம் துரத்தி சண்டையிட்டதையும், சர்மிஷ்டை இவளை இந்த கிணற்றில் தள்ளிவிட்டு ஓடியதையும் விவரித்தாள்.
"அவள் செய்தது நற் காரியம் தான்..." என்றாள் தேவயானி வெட்கத்துடன்.
"எப்படி அவள் செய்தது நற்காரியாமாகும்?. உனக்கு தீங்கு இழைத்தவளை கூட நல்லவள் என்கிறாயே"
"இல்லையென்றால் நான் உங்களை தரிசித்திருக்க முடியாது"
"தரிசித்து..."
"தரிசித்து...." என்று இழுத்தாள் தேவயானியும். அவள்  தலையை குனிந்து தன் வலது கால் தரையில் கட்டை விரலால் போடும் கோலத்தில் லயித்திருந்தாள். இப்போது மண்ணே அவளை காதலிக்க தொடங்கிவிட்டது. மன்னர் மட்டும் விதிவிலக்கா என்ன? அவள் எழில் கோல அழகிலும் கால் போட்ட கோலங்களையும்  கண்டு ரசித்த யயாதி
"நான் வேண்டுமானால் மறுபடியும் உன்னை இக்கிணற்றில் தள்ளட்டா...."
"மீண்டும் கிணற்றில் இருந்து தூக்குவது நீங்களானால் எத்தனை முறை வேண்டுமானாலும் தள்ளுங்கள். அல்லது நானே கூட விழுவேன்" என்றாள் வெட்கம் ததும்ப.
இருவரும் மீண்டும் மீண்டும் சிரிக்க, தேவயானி்யின் இளமையை கண்களால் பருகியபடி யயாதி கேட்டான்
"பெண்ணே .. உன் மன ஓட்டம் எனக்கு புரிகிறது...ஆனால் உன்னை நான் மணம்  முடிக்க இயலாது"
"ஏன்.. முடியாது.. நான் அழகாயில்லையா?"
"மூவுலகத்திலும் உன்னைப் போன்ற அழகு காணக் கிடைக்காது. இந்திர சபையில் கூட உன்னை விஞ்ச ஆள் கிடையாது. அது இல்லை காரணம்"
"பின்னர் என்ன?"
"உன் தகப்பனார் கோபக்காரர். மேலும் அவர் இதை விரும்பமாட்டார்."
"இல்லை இல்லை நான் என் தகப்பனாரிடம் இதை விண்ணப்பித்து உங்களையே மணம் முடிப்பேன்" என்றாள்.
அதற்க்கு யயாதி, "நீ பிராமண குலப் பெண்.. நான் க்ஷத்ரியன். இது ஒவ்வாது" என்றான்.
"பின், லோபாமுத்திரை மனம் புரிந்தது எப்படி?" 
யயாதி இந்த கேள்வியின் காதல்  அலையில் அடித்து செல்லப்பட்டான். 
சர்மிஷ்டையுடன் ஏற்பட்ட சண்டையில் "நீ ஒரு பிச்சைக்காரன் மகள், உன் தகப்பனார் என் அப்பாவிடம் யாசகம் பெற்று தான் உன்னை வளர்க்கிறார்" என்று இழித்து பேசியதற்கு தான் நிச்சயம் யயாதியை மணந்து மஹாராணி ஆகி சர்மிஷ்டையை பழிவாங்கும் நோக்கத்தில்
"நீங்கள் என்னை என் தகப்பனாரிடம் கொண்டு சேருங்கள். நான் அவரிடம் பேசி நம் திருமணத்திற்கு அனுமதி பெறுகிறேன்" என்றாள்.
தேவயானியுடன் சுக்ராச்சாரியாரை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றான் யயாதி. தேவயானி காட்டில் நடந்தவற்றை கூறினாள். மேலும் சர்மிஷ்டை சுக்ராச்சாரியாரை இகழ்ந்ததையும் எடுத்து கூறி, காட்டில் காப்பாற்றி தன் கரம் தொட்டதாலும் அதனால் தன் நெஞ்சில் யயாதி இடம் பிடித்துவிட்டதாலும், தான் அவரை மனதால் வரித்துவிட்டதையும் கூறி மணம் முடித்து வைக்குமாறு தன் தந்தையை பணித்தாள்.
மகள் மேல் கொண்ட பாசத்தால், விருஷபர்வாவை அழைத்து தன் மகளுக்கான திருமண ஏற்பாட்டை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஊரே திருமணக்கோலம் பூண்டது. யயாதி - தேவயானி திருமணம் தேவரும் அசுரரும் பங்கு பெற்று இனிதே நடந்தேறியது.

பின்குறிப்பு: இந்த திருமணம் நடந்ததும், தன் தந்தையை பழித்த சர்மிஷ்டையை பழிவாங்கி தன் பணிப்பெண்ணாக ஹஸ்தினாபுரம் அழைத்துச் சென்றாள் தேவயானி. சர்மிஷ்டை பணிப்பெண்ணாக செல்லவில்லை என்றால் தான் இமயமலை சென்று தவம இயற்ற போவதாக சுக்ராச்சாரியார் கோபித்ததும் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கோரி சர்மிஷ்டையை தேவயானியுடன் அனுப்பினான் விருஷபர்வா. கடைசியில் தேவயானியின் பழிவாங்கும் குணத்தை அறிந்து பணிப்பெண்ணாக தன் அரண்மனை வந்த சர்மிஷடையை யயாதி காதலித்தது மீண்டும் ஒரு காதல் கதை. யயாதி-சர்மிஷ்டையின் மூலமாக பிறந்த புருவின் வம்சத்தில் வந்தவர்கள்தான் பாண்டுவும், திருதிராஷ்டரனும். இன்னும் இப்படியே சொல்லிக் கொண்டு போனால் இந்த பின் குறிப்பு 'மெகா' குறிப்பாகி அது மஹாபாரதத்தில் போய் முடியுமாதலால், இந்த காதல் கதையை இத்தோடு நிறைவு செய்கிறேன். இந்த காதல் கதை  எழுதுவதற்கு மிகவும் உபயோகமாக இருந்த வி.ச. காண்டேகரின் யயாதி (தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ) புத்தகமானது ஒரு அல்லையன்ஸ் வெளியீடு.

பின் பின்குறிப்பு: என்னமோ தெரியலை எடுத்தவுடனே இரண்டு பொண்டாட்டி கதையா அமைஞ்சிட்டுது :) :) :)
 --இதிகாச  காதலர்கள் இன்னும் வருவார்கள் 
Picture Courtesy: http://www.vskhandekar.com
 

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails