Saturday, November 29, 2014

தூங்கும் குளம்

ன்னார்குடி ஹரித்ராநதி. 



கோபில கோப்பிரளய முனிவர்களை இத்திருக்குளத்தின் கரையில் உட்கார வைத்துத் தனது எல்லா லீலைகளையும் ராஜகோபாலன் ரீடெலிகாஸ்ட் பண்ணினான் என்பது ஐதீகம். ஹரித்ரா என்றால் மஞ்சள், மஞ்சள் பூசி கோபியர்கள் கிருஷ்ண பரமாத்மாவுடன் இங்கே ஜலக்க்ரீடை செய்ததால் ஹரித்ராநதி என்ற பெயர் பெற்றது. மைய மண்டபத்தில் வேணுகோபாலன் சன்னிதி. குச்சியால் டின் கட்டியப் படகைத் தள்ளிக்கொண்டு அங்கே போவார்கள். வருஷாந்திர ஆனி மாச தெப்போற்சவத்தின் போது கோபாலன் ஒரு முறை நடுவளாங் கோயிலை எட்டிப் பார்ப்பார். அன்று கோபுரமெங்கும் சீரியல் செட் மினுமினுக்கும். நான்கு கரையும் விடியவிடிய முழித்திருக்கும். தெருவோரங்களில் “திருவிளாக் கடைங்க” முளைத்திருக்கும். குளம் நிரம்பித் தளும்பும் சமயங்களில் எப்போதாவது ஈசான்ய மூலையில் பிரேதம் ஒதுங்குவதும் உண்டு. வாழ்வோ சாவோ இந்தக் குளத்தில்தான் என்று வைராக்கியமாக இருந்திருப்பார்கள் போலும்.

சாயங்கால வேளைகளில் கூடத்து ஊஞ்சலை வீசியாடி இந்தக் குளத்தை ரசித்துக்கொண்டே லோட்டா காஃபி ருசித்தது நேற்று கண்ட சொப்பனம் போலாகிவிட்டது. ”சீப்பி சாப்பிடாதேடா தம்பி.. எச்சல்.. கீழே வைக்காம கொண்டு போய் கொல்லே குழாயடில போடு....”ன்னு பாட்டி அதட்டுவாள். ஹரித்ராநதிக்கரை நாகரீகத்தில் வளர்ந்தேன். கூவம் நதிக்கரையில் குடியேறிவிட்டேன்.

ஊஹும். விஸ்தாரமானக் குளம். தவளைக் கல் எறியாதீர்கள். அது தூங்குகிறது. என் நினைவுகள் படக்கென்று விழித்துக்கொண்டன.

Friday, November 28, 2014

பந்து ரூபத்தில் வந்த காலன்

ஃபின்லே ஸ்கூல் க்ரௌன்ட் நேஷனல் ஸ்கூல் க்ரௌன்டை விடப் பெருசு. எந்நேரமும் மூணு மேட்ச்சாவது நடக்கும். அந்தக் கடைசி பிட்ச் அநியாயத்துக்கு uneven பௌன்ஸ் ஆகும். மண்வெட்டியால கொத்திப் போட்டா மாதிரியான பிட்ச். விஜய், சூரி, பாலாஜி, முரளி, சீனுன்னு ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரோடயும் விளையாடிய ஃப்ரெண்ட்லி மேட்ச் அது. மத்தியான நேரம். பொட்டை வெய்யில். தையல் போட்ட கிரிக்கெட் பால் கிடைக்கலை. அதனால கிரிக்கெட் பாலோட ஒண்ணு விட்ட தம்பி “விக்கி ப்ராண்ட்” கார்க் பால் வாங்கி விளையாண்டோம்.

க்ரௌண்டுக்குப் போற வழியில சீனு வீடு. ஃப்ரிட்ஜ்க்குள்ளே அவனுக்காக இருக்கும் கூல்ட்ரிங்க்ஸுல பாதியைக் குடிச்சுட்டு அவனையும் சைக்கிள்ல அழைச்சுக்கிட்டு க்ரௌண்ட் போனோம். காலுக்கு Pads கிடையாது. முட்டி பேந்துசுன்னா அடுத்தநாள் ஸ்கூலுக்கு லீவ் போட்டுடலாம். ஜாலி. இடது கைக்கு மட்டும் க்ளௌஸ் போட்ருந்தோம். அப்டமன் கார்டு கட்டாயம்உண்டு. ஆனா மேட்ச்சுக்கே ஒண்ணு தான். ஒருத்தன் அவுட் ஆனப்புறம் அடுத்தாள் அதை இடது கையால வாங்கிக் கீழே தட்டிட்டு தரையில சரக்சரக்குன்னுத் தேய்ச்சுட்டு பாண்ட்டுக்குள்ளே சொருகிக்கணும்.

விக்கெட் கீப்பர் தவளையாயும் குரங்காயும் எம்பிக் குதிச்சு பிடிச்சுக்கிட்டிருந்தான். சீனு பேட்டிங். நான் ஃபாஸ்ட் பௌலர். ஒரு ஓவர் என்னை அடிச்சுத் துவம்சம் பண்ணினான். என்னோட அடுத்த ஓவரும் க்ராஸ் பேட் ஆடி, தில்லையம்பல நடராஜர் மாதிரி தூக்கிய பாதத்தோட ஆஃப் சைட்ல விழுந்த பந்தைக் கூட வாரி லெக் சைட்லயே பொளந்துக்கிட்டிருந்தான். எனக்கு சுர்ர்ருனு கோவம் வந்திருச்சு. ஹீ மேன்ல ஆகாசத்துக்குக் கத்தியைக் காட்டி பவர் எல்லாம் வாங்கிக்கிறா மாதிரி கையை மேலே உசத்தி ஒரு சுத்து சுத்திட்டு ஓடி வந்து அரைப் பிட்சுல பாலை ஓங்கிக் குத்தினேன். லெக் அண்ட் மிடிலில் விழுந்த பந்து.

கார்க் பால் பிட்ச்சுக்கு அப்புறம் இன்னொரு மடங்கு வேகம் எடுக்கும். பந்து பிட்ச்சுல குத்தினதுதான் தெரியும். அடுத்த செகெண்ட் கையிலிருந்த பேட்டை விசிறியடிச்சுட்டு மூஞ்சியைப் பிடிச்சிக்கிட்டு சீனு பிட்ச்சிலேயே குத்த வச்சு உட்கார்ந்துட்டான். பாடிலைன் கிரிக்கெட்னு பேர். எல்லோரும் அலறியடிச்சுக்கிட்டு அவன்கிட்டே ஓடினோம். பந்து நெத்தியில பட்டு புஸுபுஸுன்னு எலும்பிச்சம் பழ சைஸுக்கு வீங்கிடிச்சு. பெவிலியன் மரத்தடியில பாபி ஐஸ்காரன் குச்சி ஐஸ் பால் ஐஸ்னு வித்துக்கிட்டிருந்தான். அவன் கிட்டே ஓடிப்போயி ஒரு ஐஸ் வாங்கி வீங்கின இடத்துல வச்சு அழுத்திப் பிடிச்சிக்கிடிருந்தேன். கை நடுங்குது. உடம்பெல்லாம் உதறுது. பதறிப் போய்ட்டேன். பொட்டுல பட்டிருந்தா சீனு அன்னிக்கே பட்டுன்னு போயிருப்பான். வீட்டுக்குப் போறப்ப வீங்கின இடத்தைத் தடவிக்கிட்டே சிரிச்சான்.


 மேற்கிந்திய விவ் வெறும் மெரூன் கலர் கேப்போட இறங்கி விளாசுவார். இந்திய ஸ்ரீ ரொம்ப நாள் ஹெல்மெட் இல்லாமதான் விளையாடினார். ஹெல்மெட் போட்டும் ஃபில் ஹ்யூஸ் செத்துப்போனது ரொம்பவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இன்னும் மூணு நாள்ல பர்த்டேவாம். நவம்பர் முப்பதுல இருபத்தஞ்சு முடிஞ்சு இருபத்தாறு. பல்லுல அடி. உள்ளி மூக்கு உடைஞ்சு ரத்தம் கொட்டிச்சுன்னு இருக்கக்கூடாதா? தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்னு பௌன்ஸருக்கு குனிஞ்சுக்கிறது ஒன்னும் அவமானம் இல்லையோன்னு தோணுது.

பந்து வீசிய அபாட்டின் நிலைமை இன்னும் மோசம். மனசுக்குள்ள ”நாம ஒரு கொலைகாரனோ”ன்னு குறுகுறுப்பு இருக்கும். பௌல் பண்றத்துக்கு வரும் ரன்னப்ல ஃபில் நியாபகம் வந்தா கால் ரெண்டும் பின்னிக்கும். இது அபாட் தப்பும் கிடையாது. பேட்ஸ்மேனை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வரணும்னு நினைக்கிற பேஸ் பௌலர்களின் யுக்தி இது. ச்சும்மா மிரட்டறது.

ஃபில்லுக்கு பந்து ரூபத்தில் வந்த காலன்!

Thursday, November 27, 2014

கங்கைக் கிணறு

காவிரிக்கரை ஓரமா பெரிய க்யூ. கையில் மஞ்சப்பையோடு கூன் விழுந்த சுமங்கலிக் கிழவி, கைக்குழந்தையோடு ஒரு ஒத்தை ரூபா பொட்டுக்காரி, காதில் ஹியரிங் எய்டோடு நடை தளர்ந்த பெரியவர், வெற்று மார்போடு கறுப்பு வஸ்திர ஐயப்ப சாமி என்று பெரிசும் சிறுசுமாய்க் கலந்து கட்டி வாசுகிப் பாம்பாய் வரிசை நின்றது.

பதினோரு மணிக்குச் கொஞ்சம் சுறுசுறுப்பாக நகர்ந்தது வரிசை.

“காலேலே அந்தப் புளியமரம் தாண்டி ரெண்டு பர்லாங்கு ஜனம் நின்னுச்சி... ரோட்ல காரு பஸ்ஸு போவமுடியலை..” கழுத்து வழியே கழண்டு விழும் மோஸ்தரில் கதர் சட்டை போர்த்திக்கொண்டிருந்த தாத்தா பக்கத்து ஐயப்ப சாமியிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

“நீங்க எப்போ வந்தீங்க?” பின்னாலிருந்து மெல்லிசாக குரல் விட்டேன்.

“இப்போதான்.. பத்தரை மணிக்கு...”

கதை கேட்ட ஐயப்ப சாமி பெருசை ஏற இறங்க பார்த்துவிட்டு விரோதமாக மூஞ்சியைத் திருப்பிக்கொண்டது.

திருவிசநல்லூரில் ”கங்காவதரண மகோத்ஸ்வம்” நேற்று விமரிசையாக நடந்தது. மேற்படி டயலாக்கில் பெரியவர் சொன்ன புளியமரத்தடியில் சேப்பாயியை சொருகிவிட்டு ஐயாவாள் மடத்துக்கு குடும்ப சகிதம் வந்துசேர்ந்தேன். நல்ல கூட்டம். ஒரு தசாப்தம் முன்னர் வந்திருந்தேன். இவ்வளவு தள்ளுமுள்ளில்லை. நேரே ஆறு ஒரு முழுக்கு. அப்புறம் நேரே கிணறு. ஸ்நானம். ஐயாவாள் தரிசனம். விடு ஜூட். இது பத்து வருஷத்துக்கு முந்திய சங்கதி. இப்போது க்யூ கட்டி நிற்கிறார்கள். நல்ல சங்கதி.

சின்னவள் “எப்டிப்பா கிணத்துக்குள்ள கங்கை ரிவர் வரும்?” என்று கையை இழுத்துக் கேட்டாள். பெரியவள் “என்னப்பா போங்கு கதையா இருக்குது?” என்று கைகொட்டிச் சிரித்தாள். க்யூ இப்போது அடிப் ப்ரதக்ஷிணமாக நகரக் கதை சொல்ல ஆரம்பித்தேன்.

“ஸ்ரீதர ஐயாவாள் திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமியை தினமும் போய்ப் பார்த்துட்டு தீபார்த்தியை கண்ணுல ஒத்திண்டு வருவாராம்... அவரோட இஷ்ட தெய்வம் மகாலிங்கம்...”

“இப்ப வரும்போது பார்த்தோமே.. அந்தப் பெரிய கோயிலா?”

“ஆமா.. அந்த நாலு ரோட்டுல ரைட் சைட்ல நாம உள்ள புகுந்துட்டோம்”

“எவ்ளோ பெரிய கோயில்!” சின்னவள் விழிகள் விரித்து கண்ணால் கோயிலின் அகலநீளம் அளந்தாள்.

“ஆம்மா.. அவருக்கு அந்த ஸ்வாமி மேல அவ்ளோ பக்தி.. டெய்லி வருவார்..”

“அந்த சிவன்தான் அவர் தலையில் இருக்கிற கங்கையை அவர் கிணத்துக்கு கொண்டு வந்துட்டாரா?” பெரியவள் அட்வான்ஸாக கதைக்குள் போனாள்.

“ஊஹும். பொறுமையாக் கேட்டா சொல்றேன்.” என்றதும் பின்னாலிருந்து இடதுகைக்கு வந்தாள். வலது கையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு சின்னவள் “ம்.. சொல்லு..” என்றாள்.

“ஸ்ரீதர ஐயாவாளோட அப்பாவுக்கு ஒரு நாள் சிரார்த்தம் வந்துது. தெவசம். வாத்யார்ளாம் ஆத்துக்கு வர்றதுக்குள்ளே இவர் போய் இதோ இந்தப் பக்கம் இருக்கே இந்த காவேரி.... இதுல குளிக்க வந்தார்...”

“இந்த இடத்திலேயே வா?” என்று ரெண்டு புளிய மரத்துக்கு நடுவே கணுக்காலளவு தண்ணீர் ஓடும் காவேரியைக் காட்டி கேட்டாள் சின்னவள்.

“ஆமா.. இந்த இடத்துலதான்.. இதுலேர்ந்து நேரா அந்த சந்து வழியா அவாத்துக்குப் போய்டலாம்...”

“ம்.. அப்புறம்...”

“குளிச்சுட்டு ஈரவேஷ்டியை சுத்திண்டு மடியா ஆத்துக்கு போயிண்டிருந்தார். அப்போ இந்தத் தெரு முக்குல ஒரு வயசான ஆள்.. ஒல்லியா.. ”

“இங்கயா?” என்று தெருவோர முல்வேலிக்கு அருகே கையைக் காட்டிக் கேட்டாள் சின்னவள். “ஆமா இங்கதான்.. கதையைக் கேளு...” என்று தொடர்ந்தேன்.

”அவன் ஐயா பசிக்குது.. சோறு தர்றீங்களா?ன்னு கெஞ்சினான். ஐயாவாள் தர்மிஷ்டர். அதாவது உடனே ஹெல்ப் பண்ணிடுவார். அவனைப் பார்த்ததும் அவருக்கு பாவமா இருந்தது.. அவன் திரும்பவும் அவரைப் பார்த்து சாமி நாலு நாளா சாப்பிடலை.. பசி வயித்தைக் கிள்ளுது சாமி..ன்னு கையால வயித்தைப் பிடிச்சிண்டு கேட்டான்... அவர் உடனே அவனை வாப்பான்னு அவராத்துக்குக் கூட்டிண்டு போனார்... தெவசத்துக்கு சமைச்ச சாதத்தையெல்லாம் இந்தக் கிழவனை உட்கார வச்சுப் போட்டார். அவன் பரமதிருப்தியா சாப்டுட்டு போனான். இதை தெவசத்துக்கு ப்ராம்ணார்த்தத்துக்கு சாப்பிட வர்ற ரெண்டு பேர் திண்ணையில உக்காந்துண்டு பார்த்துண்டிருந்தா..”

“அவாளுக்கு சாப்பாடு இல்லையா?”

“சாப்பாடு இல்லைன்னு கிடையாது. தெவச சாப்பாடு வாத்யார் கூட வர்றவாதான் சாப்பிடணும். வேற யாரும் சாப்பிடக்கூடாது. அதனால.... நாங்க தெவசம் பண்ணி வைக்க வரமாட்டோம்னு வாத்யார் கூட வர்றவாள்ளாம் சொல்லிட்டா...”

முன்னாடி போய்க்கொண்டிருந்த பெரியவர் காதை இந்தப் பக்கமும் கண்ணை முன்னாடியும் வைத்திருந்தது நான் அமைதி காத்த ஒரு நிமிடத்தில் தெரிந்தது. திரும்பித் திரும்பி பார்த்தார். ஸ்நானம் செய்த ப்ரம்ம தேஜஸ் கிழவர் ஒருவர் நெற்றியில் நீறு பூசி பக்திமணம் கமழ எதிர்ப்பட்டார். கை கூப்ப வேண்டும் போல் இருந்தது.

“ம்.. சொல்லு..” சின்னவள் பற்றியிருந்த என் கையை இழுத்தாள்.

“ஐயாவாள் ரொம்ப வருத்தமா எப்படி சிரார்த்தம் பண்ணப்போறோம்னு வாசத் திண்ணையில உட்கார்ந்துண்டிருந்தப்போ.. மூனு பேர் அவாத்துக்கு வந்து உள்ள வாங்கோ தெவசம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னாளாம்... அந்தத் தெருவுல இருக்கிறவாளுக்கு ஒரே ஆச்சர்யம். வந்த மூணு பேரை அந்த ஊர்ல யாருமே அதுக்கு முன்னாடி பார்த்ததில்லையாம்.... யாருன்னே தெரியலையே.. கும்மோணத்துலேர்ந்து வந்திருப்பாளோன்னு குசுகுசுன்னு பேசிண்டிருந்தாளாம்... ரெண்டு ஹவர் கழிச்சு அந்த தெருக்காரா ஐயாவாள் ஆத்து ஜன்னல்ல எட்டிப் பார்த்தா....”

இந்த மாதிரி இடத்தில் எப்பவும் ஒரு pause கொடுப்பது எனது வழக்கம். பசங்க ரெண்டுத்துக்கும் ஆர்வம் தாங்க முடியாம...

“பார்த்தா.. “ பெரியவள்.

“பார்த்தா...” இது சின்னவள்.

கேட்டார்கள். மூன்றாவதாக “பார்த்தா...” முதுகுக்குப் பின்னாலிருந்து வந்தது. கேட்டது சங்கீதா.

”பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரும் சாப்பிட்டிண்டிருந்தாளாம்.. விஷ்ணு இலையில உட்கார்ந்துண்டு விஷ்ணுவே சாப்டாராம்... எட்டிப் பார்த்தவாளுக்கு ஒரே ஆச்சர்யம்... இருந்தாலும் ஐயாவாள் ஏதோ கண்கட்டு வித்தை பண்றார்னு நினைச்சுண்டு சாயந்திரமா ஐயாவாள் கிட்டே நீங்க அனாச்சாரம் பண்ணிட்டேள். இதுக்கு பிராயச்சித்தம் பண்ணினாதான் இனிமே உங்காத்துக்கு வைதீக காரியத்துக்கெல்லாம் வருவோம்னு சொல்லிட்டா... என்ன ப்ராயச்சித்தம்னு ஐயாவாள் கேட்டார்... அதுக்கு இன்னிக்கே நீர் கிளம்பி கங்கையில் போயி ஸ்நானம் பண்ணிட்டு திரும்பி வரணும். அப்போதான் உம்மை சேர்த்துப்போம்னு சொன்னா...”

“ஃப்ளைட்ல போய்ட்டு வந்துருக்கலாமே” என்று கேள்வி கலந்து பேசினாள் சின்னவள்.

“அப்போ அப்படியெல்லாம் வசதியில்லே... ரொம்பவும் நொந்து போய்.. திண்ணையிலேயே அன்னிக்கி ராத்திரி படுத்து தூங்கிட்டார்... அப்போ கனவுல சிவன் உம்மாச்சி வந்து.. ஸ்ரீதரா கவலைப்படாதே.. நாளைக்கு உங்காத்து கொல்லப்பக்க கிணத்துல கங்கையை வரவழைக்கிறேன்.. நீ அதுல குளிச்சு உன்னோட பாவத்தைப் போக்கிக்கிறேன்னு இவாள்ட்ட சொல்லு...ன்னு பேசிட்டு மறைஞ்சுபோய்ட்டார்... கண்ணை முழிச்சுப் பார்த்தா இன்னும் விடியலை.. விடிஞ்சதும் இவர் தெருக்காராளைக் கூப்பிட்டு.. இன்னிக்கி எங்காத்து கிணத்துல கங்கை வரா.. அதுல குளிச்சு நான் பாவத்தைப் போக்கிக்கிறேன்... நீங்களும் வேணுமின்னா பாருங்கோ...ன்னு சொன்னார்...”

“ஓ.. உடனே அண்டர்க்ரௌண்ட்ல கங்கை ஓடி வந்து இந்த கிணத்துல பூந்துடுத்தா..” பெரியவள் கதை முடித்தாள்.

“ம்.. அப்படியெல்லாம் சாதாரணமா வந்துடுமா? ஊர்ல உள்ளவாள்லாம் கிணத்தைச் சுத்தி நிக்கறா.. அதல பாதாளத்துல தண்ணி கிடக்கு...”

“கங்கே.. வந்துடுன்னு... கூப்ட்டாரா?” சின்னவள் கேட்டாள்.

“ஆமா.. வெறுமன இல்லே... கங்காஷ்டகம் படிச்சார்....எட்டுல அஞ்சாவது ஸ்லோகம் சொல்லி முடிச்சவுடனே.. கிணத்துக்குள்ளேர்ந்து குபுகுபுன்னு ஜலம் வழிஞ்சி தெருவெல்லாம் ஓடித்தாம்... ஊர்ல இருக்கிறவாளுக்கும் சேதி தெரிஞ்சு ஓடி வந்து பார்க்கறாளாம்.... அவரோட மகிமை தெரிஞ்சு போய் எல்லோரும் அவர்ட்ட எங்களை மன்னிச்சுக்கோங்கோ...ன்னு கன்னத்துல போட்டுண்டு நமஸ்காரம் பண்ணினாளாம்.... அதான் கதை...”

“அது கங்கை தண்ணின்னு எப்படிப்பா தெரிஞ்சுது...” கேள்வியின் நாயகியாக சின்னவள் கேட்டாள்.

“கங்கை ஆற்றில விடும் மங்கல பொருட்கள்லாம் அதுல மிதந்து வந்துதாம்.. அப்புறம் அந்த தண்ணி வித்தியாசமா இருந்ததாம்....” என்றதும் சமாதானமானாள்.

இதோ வந்துவிட்டோம். உள்ளே நுழைந்தோம். கிணற்றுக்கு பந்தல் போட்டு பூ மாலையெல்லாம் சூடியிருந்தார்கள். கிணற்றின் மேலே நாலு தொண்டர்கள் ஏறி நின்று தண்ணீர் இறைத்து பக்தர்கள் தலையில் ஊற்றி சேவை புரிந்துக் கொண்டிருந்தார்கள். காலையிலிருந்து தொப்தொப்பென்று கிணற்றுக்குள் விழுந்து எழுந்த வாளி ஓரத்தில் நசுங்கியிருந்தது. நான் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த பத்து நிமிடத்தில் ஐநூறு பேர் குளித்திருக்கலாம். முக்கால் கிணறு தண்ணீர் குறையாமல் தளும்பிக்கொண்டிருந்தது.

குளித்துவிட்டு கிணற்றடிக்குப் பக்கத்து மாடியில் உடை மாற்றிக்கொண்டோம். சிலர் தர்ப்பணம் செய்துகொண்டிருந்தார்கள். நெற்றிக்கு வெள்ளையடித்த ஒரு மாமா குங்குமம் தேடிக்கொண்டிருந்தார். மூன்று விரல் பிரித்து பட்டையடித்துக் கொண்டிருக்கலாம். ஐயாவாள் மடத்திற்குள் நுழைந்து தரிசனம் செய்தோம். வெளிக் கதவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர் அன்னதானத்திற்கு வசூல் செய்துகொண்டிருந்தார். யத்கிஞ்சிதம் கொடுத்தேன். ரசீதிற்கு அட்ரெஸ் போட்டு அழகாகத் தந்தார்.

வெளியே பரபரப்பாக அன்னதானம் நடந்துகொண்டிருந்தது. பக்தர் கூட்டம் அலைமோதியது. சமூக ஏற்றத்தாழ்வில்லாமல் அனைவரும் சமத்துவமாக நின்றுகொண்டிருந்தனர். பார்க்கப் பரவசமாயிருந்தது.

ஒவ்வொரு வருடம் கார்த்திகை அமாவாசை இந்தக் கிணற்றில் கங்கை வருகிறாள் என்பது ஐதீகம். இன்றளவும் பொய்க்காமல் நடக்கிறது. காவிரி வறண்டாலும் இக்கிணற்றுக்குள் வரும் வற்றாத ஜீவநதி கங்கை வறண்டு போவதில்லை. அடுத்த வருடம் கார்த்திகை அமாவாசை உங்கள் காலண்டரில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். புண்ணியம் கிடைக்கட்டும்.

கணபதி முனி - பாகம் 19 : வேத வாழ்வே தேவ வாழ்வு

”..இப்படி எழுதுவது ஒன்றும் பிரமாதமான கார்யம் இல்லை” என்று சற்று எள்ளல் கலந்து அலட்டலாகப் பேசினார் அந்த எழுத்துக்காரர்.

கூட்டம் சலசலத்தது. சிலர் ”கணபதிக்கு வேண்டப்பட்ட ஆளாயிருக்கும்..” என்று சந்தேகித்தனர். அறையின் மற்றொரு ஓரத்தில் கூடியவர்கள் ”சுதர்ஸனே எழுதிக்கொடுத்திருப்பாரோ..” என்று கிசுகிசுத்துப் புருவம் சுருக்கினர். ஆளுக்காள் இப்படிக் கட்சி கட்டிப் பேசிக்கொண்டிருந்தாலும் அனைவரும் ”எழுதற அந்த ஆள் தகிடுதத்தம் செய்யறவன் போல்ருக்கே.. சரியில்லைப்பா...” என்று தீர்மானித்தனர்.

இப்போது சுதர்ஸனே கணபதியின் திறமையை நேரடியாக அறிய முன்னுக்கு வந்தார். அஷ்டாவதனத்தின் பிற அவதானங்களுக்கான குறிப்புகளை பலரும் பல திசையிலிருந்து கணபதிக்கு கொடுத்துக்கொண்டிருக்க இடையிடையே ஒரு சம்ஸ்க்ருத எழுத்தும் அவரை நோக்கி வீசப்பட்டது. கொடுக்கப்பட்ட எழுத்துகள் வரிசையிலில்லாமல் கன்னாபின்னாவென்று சிதறியிருக்கும். அவதானங்கள் முடிந்த பிறகு அந்த எழுத்துகளை ஒன்று திரட்டி பொருட்சுவை பொங்கும் பாவாக வடிக்கவேண்டும். இதற்கு வ்யஸ்தாக்ஷரி என்று பெயர். அஷ்டாவதனக் கலையில் உச்சி சிகரம் போன்றது.

இந்த கார்யத்தை சுதர்ஸன் தன் கையில் எடுத்துக்கொண்டார். சின்னச் சின்ன துண்டுக் காகிதங்களில் ஒவ்வொரு எழுத்தாக எழுதி கணபதியிடம் காண்பித்துவிட்டு வாங்கி வைத்துக்கொள்வார். பொதுவாக ஒவ்வொரு எழுத்தாகக் கொடுத்து அஷ்டாவதனம் செய்பவரின் பார்வையில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சுதர்ஸன் அந்த துண்டுக் காகிதத்தை வாங்கி மடியில் சொருகிக்கொண்டார். சிலர் வெகுண்டனர். “இவர் செய்வது துர்கார்யம்” என்று பகிரங்கமாகக் குரல் கொடுத்தார்கள். கணபதியின் காதுக்கு எட்டியது.

“ப்ரிஸிடெண்ட் சித்தப்படியே நடக்கட்டும்...” என்று சிரித்தார் கணபதி. கண்களில் தீக்ஷண்யம் தெரித்தது. கூட்டம் அமைதியானது.

சுதர்ஸன் கொடுத்த அக்ஷரங்களைக் கோர்த்து முழு பாட்டாகப் படித்தார். அவையோர் மொத்தமும் ஆஹாக்காரம் போட்டு அசந்து போன அந்தப் பாட்டு கீழே.

அப்ஸாம் த்ரப்ஸாம் அலிப்ஸாம் சிரதரம் அசரம் க்ஷீரமத்ராக்ஷம் இக்ஷும்
த்ரக்ஷாம் ஸாக்ஷாதஜக்ஷம் மதுரஸம் அதயம் த்ராகவிந்தம் மரந்தம்
மோசாம அசமமந்யோ மதுரிமகரிமா ஸங்கராசார்யவாசம்
ஆசாந்தோ ஹந்த கிந்தைரலமபி ச ஸுதா ஸாரஸி ஸாரஸீம்னா

அவதானம் முடிந்து அவை கலையும் நேரத்தில் ஒரு ஸ்லோகத்தைக் கொடுத்து வியாக்கனம் சொல்லச் சொல்வார்கள். காவியங்களிலிருந்து ஒரு எளிய ஸ்லோகத்தைக் கையில் கொடுத்து அர்த்தம் கேட்பார்கள். ஆனால் இம்முறை சுதர்ஸன் தான் கேட்ட வ்யஸ்தாக்ஷரியின் அர்த்தம் கேட்டார். சபையோர் திடுக்கிட்டனர். கணபதி அனாயாசமாக பொருள் கூற ஆரம்பித்தார்.
“கொடுத்த பாடலில் எக்கச்சக்கத் தவறுகள். இலக்கண விதிமீறல்கள் ஏராளம்.. லோகத்தில் புழங்கும் மலிவான இலக்கியத்துக்கு இதுவே சான்று ” என்று சுதர்ஸனைக் கூர்ந்து பார்த்து ஒரு பிடிபிடித்தார்.

சுட்டிக்காட்ட முடியுமா என்று சுதர்ஸனின் கண்கள் பரபரத்தது.

ஒவ்வொன்றாக நிதானமாகச் சொல்ல ஆரம்பித்தார் கணபதி.

”சாப்பிடும் பாலாடையைக் குடித்ததாகவும் பருகும் பாலை சாப்பிட்டதாகவும்...” என்று மௌனித்தார். சபையோர் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர். ப்ரிஸிடெண்ட் ஆசனத்தில் அமர்ந்திருந்த சுதர்ஸனுக்கு ஏதோ போலாயிற்று. கரும்பு சாறு, திராக்ஷை, தேன் என்று உபயோகித்தவைகளில் தாறுமாறாக இலக்கணமே பார்க்காமல் சாப்பிட்டது, குடித்தது, உறிஞ்சியது என்று முரண்பாடாக முன்னுக்குப்பின் எழுதியிருந்ததை படித்துக் காண்பித்தார்.

பாட்டை அக்கக்காகப் பிரித்துக் காண்பித்த கணபதியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சுதர்ஸன் நெளிந்தார். தான் செய்தது பெருந்தவறு என்று உணர்ந்தார். திடுமென்று நாற்காலியிலிருந்து எழுந்தார். நான்கே தப்படியில் கணபதியை நெருங்கி அணைத்துக்கொண்டார். வேடிக்கைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கூட்டம் கரவொலி எழுப்பியது. டாக்டர் க்ருஷ்ணஸ்வாமி இருவருக்கும் பொன்னாடை போர்த்தினார். ஒரு பண முடிப்பை கணபதிக்குக் கொடுத்தார். சண்டையும் சச்சரவுமாக முடியவிருந்த இலக்கியக் கூட்டம் சௌஜன்யமாக நிறைவடைந்தது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு கணபதி தங்கியிருந்த அறையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிலைவாசல் படியில் எப்போதும் ஒரு பத்து பேர் காத்திருந்தார்கள். புகழுரைகளால் கணபதியை குளிரக் குளிர அடித்தார்கள். இவைகளிலிருந்து எப்போதுமே விலகி இருப்பதையே கணபதி விரும்பினார். மெய்கீர்த்தி கோஷங்களிலிருந்துத் தப்பித்து பஞ்சாபகேச சாஸ்திரி வீட்டில் தங்கினார். அங்கிருந்த சங்கர சாஸ்திரி என்பவர் இவரது சீடரானார்.

இதற்குள் கணபதியின் சம்ஸ்க்ருத இலக்கிய பாண்டித்யமும் அறிவாற்றலும் நினைவாற்றலும் சென்னை நகரெங்கும் காட்டுத்தீயாய்ப் பரவியது. பெரும்பாலான மாணவ சமுதாயம் அவரால் கவரப்பட்டது. மாணவர்களிடம் பாரத கலாசாரத்தைப் பற்றி வலியுறுத்திப் பேசினார் கணபதி. அனைவரும் அதைக் கட்டிக்க்காக்க முன் வரவேண்டும் என்று தூண்டிவிட்டார். சங்கர சாஸ்திரியும் பார்க்கும் மாணவ வர்க்கத்திடம் இதைப் பற்றி பேசி பெரிய மாணவர் சேனையை ஒன்று திரட்டினார்.

மாலை நேரங்களில் மெரீனாவில் கூடினார்கள். மங்கிய விளக்கொலியில் கணபதி பிரகாசமாகவும் பிரதானமாகவும் அமர சுற்றிலும் அமர்ந்து கலாசார பிரசங்கங்கள் கேட்டார்கள். பாரதத்தின் பழமையான கலாசாராத்திற்கு புத்துணர்வு ஊட்ட என்னென்ன செய்யவேண்டும் என்று விவாதித்தார்கள். மாணவர்களின் அபரிமிதமான ஈடுபாடு கணபதிக்கு இதில் மேலும் சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. வேதங்களிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறி வலிமையான முன்னணியான ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபடுவோம் என்று இளரத்தங்களை முடுக்கிவிட்டார். அவர்களது பாதையைச் செப்பனிட்டுச் சீராக்கினார்.

திருவண்ணாமலையில் ரிக் வேதம் கற்றுணர்ந்ததிலிருந்து பாரத தேசம் கலாசாரத்தில் வழுக்கிக்கொண்டிருப்பது கண்டு வெந்து போனார். சென்னை மெரீனாவில் மாணவர்களுக்கு தினமும் அவர் ஆற்றிய உரையிலிருந்து ஒரு சில பகுதிகள் கீழே.

”வேதம் படித்த ரிஷிகளின் வாழ்வியல் மனிதர்களுக்கு ஒரு முன்மாதிரி. அதில் பூலோகத்து இன்பங்களும் ஆன்மிக அனுபவமும் வேத ஈடுபாட்டோடுக் கலந்திருக்கும். இதிலிருந்து விலக விலக மானுட குலம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மேற்கத்தியர்கள் மெய்யின்பம் உணராமல் புலனின்பங்களைக் கொடுக்கும் லோகாயாத விஷயங்களில் நாட்டம் கொண்டு புதுசுபுதுசாக கண்டுபிடிக்கிறார்கள். ஸ்தூல சரீரத்திற்கு மட்டும் உற்சாகம் அளித்துப் போஷாக்காக்கப் பேயாய்ப் பாடுபடுகிறார்கள். ஆனால் புராதன காலத்து ரிஷிகள் ஆன்ம பலத்துக்கும் உரம் சேர்க்கும் வகையில் வாழ்க்கை முறையை திட்டமிட்டு வகுத்தார்கள்.

ஆரோக்கியம், அறியாமை, வறுமை ஆகியவற்றிலிருந்து மனிதகுலத்தை காப்பாற்றும் ஆற்றலை அக்காலத்து ரிஷிகளும் முனிபுங்கவர்களும் பெற்றிருந்தார்கள். அவர்களை சிந்தனையை மொத்தமாகக் குவித்து அதிலே செலுத்தினார்கள். காலங்கள் செல்லச் செல்ல மனிதர்கள் வேதங்களின் அருமையை உணராமல் வாயால் இயந்திரத்தினமான வேதங்களைச் சொல்லி சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் ஏற்படுத்தி பிரயோஜனமேயில்லாமல் மலிவுபடுத்தினர். வேத மந்திரங்களின் சான்னித்யத்தையும், பொருளையும் உணராமல் கடனுக்குத் தீ வளர்த்து யாகமும் ஹோமங்களும் செய்தார்கள். அப்போதிலிருந்து வேதத்தையும் வேத வாழ்வையும் புறந்தள்ளி ஆன்மிகத்தின் சிகரத்திலிருந்து படிப்படியாக இறங்கி தரையைத் தட்டும் நிலைக்கு வந்தார்கள்.

ஆனந்தமயமான வேத வாழ்விலிருந்து விலகி சோம்பேறித்தனமாக குடித்தனம் செய்தார்கள். சமுதாயம் இப்படித் தட்டுக்கெட்டு நிலைதடுமாறிப் போனதை ஆதாயமாகக் கொண்டு இப்புண்ணிய தேசத்தை அயல்நாட்டினர் படையெடுத்து கைப்பற்றினார்கள். மக்கள் வலிமை இழந்தார்கள். கண்ணியத்தைக் காற்றில் பறக்க விட்டார்கள். சுயமரியாதை இல்லாமல் திரிந்தார்கள். போலி கவிஞர்களும் எழுத்தாளர்களும் மக்களை திசை திருப்பி ஓட விட்டார்கள். ஒட்டுமொத்த சமுதாயமும் ஆண்டாண்டு காலமாக இந்த மண் காத்து வந்த பெருமைகளை மறந்து மடமையில் சாய்ந்தனர். பாரதம் இருளடைந்தது.”

வேத வாழ்வின் மகத்துவத்தை கணபதி வாயிலாகக் கேட்ட மாணவர்கள் பலர் மெய்சிலிர்த்தனர். அத்தகைய மகோன்னதமான வாழ்விற்கு ஈர்க்கப்பட்டனர். ஏக்கப்பட்டனர். மாணவர்களின் தொடர் ஈடுபாட்டால் கட்டுண்ட கணபதி திருவண்ணாமலை திரும்பவே மறந்தார். இரவுபகல் தொடர்ந்து மாணவர்களுடன் வேத விசாரத்தில் பொழுது பறந்தது. இந்த விடுமுறையும் முடிவுக்கு வந்தது.

ப்ரொஃபஸர் ரெங்கையா நாயுடு கணபதியை அனுதினமும் சந்தித்தார். ஈக்களைப் போல மாணவர்கள் கணபதியை மொய்ப்பதைக் கண்டார். அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி இருவரும் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தனர்.

“வரலாற்றுக்காரர்கள் கதை எழுதுபவர்களை மிஞ்சிய கல்பனா சக்தி படைத்தவர்கள்...” என்று சிரித்தார் கணபதி.

ரெங்கையா நாயுடுவுக்கு புரியவில்லை. மையமாகத் தலையாட்டினார்.

"உங்கள் வீட்டில் தங்கம் வெள்ளியிலான ஆபரணங்கள் உபயோகப்படுத்துவீர்கள். சரியா?”

”ஆம்”

“அப்படியே மண் சட்டிப் பானை மடக்கு என்று மண்பாண்டங்களும் புழக்கத்தில் இருக்கும்.. இல்லையா?”

“ம்..நிச்சயமாக.. வெயில் காலத்தில் மண்சட்டியிலிருந்து அருந்தும் குளிர் நீர் அமிர்தமாயிற்றே...”

“யாரேனும் வரலாற்று ஆய்வாள ரத்தினம் உங்கள் வீட்டுக்கு விஜயம் செய்தால் நாம் இன்னும் கற்கால மனிதர்கள் என்று நினைத்துக்கொள்வார்கள்...” சொல்லிவிட்டு இடி இடியென சிரித்தார் கணபதி. ரெங்கையா நாயுடுவுக்கு இவர் எங்கேயோ இடிக்கிறார் என்று கொஞ்சம் புரிந்தது.

“அகழ்வாராய்ச்சியாளர்கள் கருங்கல் கத்தியைக் கண்டு பிடித்தால் அது அக்கால போர்வீரர்கள் உபயோகப்படுத்தியது என்று முடிவுக்கு வரக்கூடாது.”

“கல் கத்தி வேறெதெற்கு?”

“ஏன்.. எதாவது கற்சிலையின் கையில் கொடுத்த கத்தியாக இருக்கக்கூடாதா?” என்று எதிர்கேள்வி கேட்டார். ரெங்கையா நாயுடு மௌனம் சாதித்தார். அர்த்தம் புரிந்தது. இப்போது கணபதி சூடானார். தொண்டையைச் செருமிக்கொண்டு..

“வேத காலத்து ரிஷிகள் ஆடுமாடு மேய்த்துக்கொண்டு, நதி, நிலம், நீர், ஆகாயம், மலை, வாயு, அக்னி முதலிய இயற்கையின் படைப்புகளால் கால்நடைகளுக்கு சேதாரம் வந்துவிடக்கூடாது என்று அந்த இயற்கையை தெய்வங்களாக கும்பிட்டார்கள் என்று வரலாற்று பக்கிரிகள் எழுதுகிறார்கள். ” பேச்சில் காரம் இருந்தது.

”இன்னும் சில மேதைகள் வேத மதத்தை புனருத்தாரணம் செய்விக்க வந்ததே பௌத்தம், ஜைனம், இஸ்லாம் மற்றும் கிருஸ்துவம் என்று கொடிபிடித்தார்கள். அரைகுறை ஞானம் படைத்த குறைமதிக் கவிஞகளும் எழுத்தாளர்களும் வேத மதத்தை இப்படித் திரித்து எழுவதில் ஆனந்தம் அடைந்தார்கள்.

வேதங்களின் ஸ்லோகங்கள் ஆன்மிகத்தின் உச்சம். பொது இடங்களில் நாம் கேட்கும் புராண இதிகாசங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வேதகாலத்திற்கு அப்பால் எழுதப்பட்டன புராணங்கள். பக்தியையும் இலக்கியத்தையும் வளர்க்கும் பொருட்டு எழுதப்பட்டவை இவை. கொஞ்சத்துக்கு கொஞ்சம் வேதத்தோடு தொடர்பு இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக மக்களை வேத வாழ்விலிருந்து வெகு தூரத்துக்கு இழுத்து வந்துவிட்டது.”

ரெங்கையா நாயுடு திறந்த வாய் மூடவில்லை. கணபதியின் விசாலமான வேத அறிவு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படி பொரிந்து தள்ளியபிறகு ஆழமான ஒரு மௌனத்திற்கு கணபதி சென்றுவிட்டார். பக்கத்தில் வெகுநேரம் காத்திருந்த ரெங்கையா நாயுடு வீடு திரும்பினார்.

சாயந்திரம் வழக்கம் போல மெரீனாவில் கணபதி. ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு அருகாமையில் சாந்தியாக அமர்ந்திருந்தார். காலையிலிருந்து அலைபாய்ந்த அவரது மனதிற்கு ஒத்தடம் கொடுப்பது போல இதமானக் காற்று வீசியது. ப்ரொஃபஸர் நாயுடு கணபதியின் முதுகருகே உட்கார்ந்து கடலலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அலையோசை. ஒன்றுமே பேசாமல் கணபதி. சமுத்திரத்தையே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ரெங்கையா நாயுடு. நாற்புறமும் சூழ்ந்த இந்த அமைதியைக் கலைக்க
“இன்றைக்கு ஏன் இவ்வளவு ஆதங்கப்படுகிறீர்கள்? என்னவாயிற்று?” என்று ஆதரவாகத் தோள் தொட்டார். கணபதி சற்றுநேரம் நாயுடுவை ஊடுருவிப் பார்த்தார். பின்பு.....

பி.கு: ஆங்கில மூலத்திலிருந்து தமிழ் வடிவ சம்ஸ்க்ருத ஸ்லோக உபயதாரர் ஸ்ரீமான் Ramkumar Narayanan
‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_19‬
‪#‎கணபதி_முனி‬

பரப்ரம்மம்

”உக்காரு”ன்னா உட்கார்ந்துப்பா. ”படுத்துக்கோ”ன்னா கட்டையை நீட்டிடுவா. பக்கத்துல டிவி ஓடினாலும் பார்வை உத்தரத்தில் எத்தையோ தேடும். "காஃபி இந்தா”வுக்கு “ஆ” பிளக்கையில் தொண்டைக்குள் நாலு வாய். ஆஃபீஸ் விட்டு எத்தனை மணிக்கு வந்தாலும் இரண்டொரு வார்த்தைகளாவது பேசாமல் வேறு வேலை பார்ப்பதில்லை என்று எனக்குள் சங்கல்பம்.

“ஏன் இப்பெல்லாம் பேசறதேயில்லை?” காதருகில் போய் சத்தமாகக் கேட்டேன்.

” “

“பேச மாட்டியா?”

சுழன்று அடங்கும் பம்பரம் போலத் தலையைத் திருப்பி
“எ-ன்-ன -- பே-ச-ணு-ம்-?” தொண்டைக்குள் சல்லடை சொருகியது போல ஒவ்வொரு வார்த்தையாகக் கமறல் கலந்து வந்தது.

“எதாவது பேசு”

“ “

“எதாவது..”

“ “

நாங்கள் அமைதியான இரண்டு நிமிடங்களில் டிவி சீரியலில் நூறு வார்த்தைகள். திட்டினார்கள். சபித்தார்கள். சூளுரைத்தார்கள். உன்னை விட்டேனா பார் என்று கொக்கரித்தார்கள். இங்கே அடர் மௌனம். அவளெதிரேயே முகத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

“எதாவது பேசு...”

திரும்பவும் எ-ன்-ன---பே-ச-ணு-ம்-? என்று திக்கித் திணறி வார்த்தைகள் வந்து விழுந்தன. சட்டென்று தாவாங்கட்டையைத் தூக்கிக் கேட்டேன்.

“ஐ லவ் யூ”

மின்னல் பொழுதில் அவளிடமிருந்து வார்த்தை வந்தது.

“ஐ லவ் யூ”

என்னைக் குளிப்பாட்டி, ட்ராயர் போட்டுவிட்டு, பௌடர் பூசி, வகிடெடுத்துத் தலை வாரி விட்டவள் நீலா சித்தி. சற்று முன்னர் ஐலவ்யூ சொன்னவள். பள்ளி ஆசிரியையாக பல வருடங்கள் பல வாண்டுகளுக்கு “அ-அம்மா/அன்பு” என்று பிரம்பில்லாமல் சொல்லிக்கொடுத்தவள். இப்போது முடியாமல் சுருண்டு கிடக்கிறாள். டிமென்ஷியா. பார்க்கின்ஸன்ஸ்.

ஐலவ்யூ கேட்டவுடன் அவ்வளவுதான். எழுந்து வந்துவிட்டேன். டிஃபன் சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் சூப்பர் சிங்கர் பார்த்திருப்பேன். பசங்களுடன் அந்தாக்‌ஷரி விளையாடினேன். விஸ்வரூபம் சில பக்கங்கள் படித்தேன். ஃபேஸ்புக் பார்த்தேன். இரண்டு தம்ப்ளர் நீர் பருகினேன். படுத்துவிட்டேன். இது நடந்து இரண்டு மூன்று நாட்களாவது ஆகியிருக்கும். அப்போதிலிருந்து அந்த ஐலவ்யூ இன்னமும் காதுக்குள் தம்பூரா ஸ்ருதியாய் ரீங்காரமிடுகிறது.

‪#‎நீலா_ஐ_லவ்_யூ‬

ஆண்டு விழா!

”ச்சே... சனியன்... செத்தப்பறமும் இந்த இருமல் வந்துதுப்பா...”
“Huh, atleast one animal has come"
**

முதல் வசனம், பள்ளி ஆண்டு விழாவில், சிவகாமியின் சபதத்தில் காபாலிகையாக நடித்த பெரியவள் வினயா, நாகநந்தி அடிகள் குத்தியவுடன் தரையில் விழுந்து கிடக்கும் பொழுது வந்த இருமலை அடக்கிக்கொண்டு காரில் வீடு திரும்பும் பொழுது இருமிக்கொண்டே சொன்னது.
இரண்டாவது வசனம், Alice in Wonderlandலில் வால்ரஸாக நடிக்க க்ரீன் ரூமிற்குள் நுழைந்த சின்னவள் மானஸாவைப் பார்த்து ஒரு பொடியன் அடித்த காமெண்ட்.

ஆலிவர் ட்விஸ்ட்டில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பொளந்துகட்டினார்கள். பீட்டர்..பீட்டர் என்று கல்லூரிக் காலத்தில் வயல்காட்டோரம் பேசிக்கொண்டு போனது நினைவுக்கு வந்தது. கையில் திருவோட்டுடன் பௌல் டான்ஸ் ஆடினார்கள். பௌல் ஏந்தும் ஆலிவர் ட்விஸ்ட்டின் சாம்பிள் இங்கே. http://www.youtube.com/watch?v=sZrgxHvNNUc . பலரின் ”வாட்”டைக் காணத் தவறாதீர்கள். அடுத்த முறை இதில் ஒரு வாட் உங்கள் வாய்க்கு வசப்படட்டும்.
மை ஃபேர் லேடியில் வாயில் ‘a' நுழையாத பெண் அபாரமாக நடித்தாள். "The rain in spain stays mainly in the plain" http://www.youtube.com/watch?v=uVmU3iANbgk என்கிற இந்த தொடுப்பில் இருப்பது போலவே கண்முன் தோன்றினார்கள்.

முழுக்க முழுக்க சம்ஸ்க்ருதத்தில் காளிதாசனின் சாகுந்தலம் நடித்தார்கள். அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு. என்னைப் போன்ற சம்ஸ்க்ருத அஞ்ஞானிகள் வியக்கும்படியாக இருந்தது. சகுந்தலையாக நடித்த குழந்தை பின்னிப் பெடலெடுத்தது. மோதிரம் கிடைத்த மீனவன் சென்னைத் தமிழ் போல இழுத்து இழுத்து சம்ஸ்க்ருதம் பேசினான். ரசிக்கும்படி இருந்தது. துர்வாசர் ஸ்ப்ரிங் வைத்த பாதரட்சை அணிந்தது போல பூமிக்கும் ஆகாசத்துகுமாகக் குதித்தார். பார்த்த நம் மனசு பந்தாகத் துள்ளியது.

ஷேக்ஸ்பியரையும் விடவில்லை. ஒத்தெலோ மெக்பத் என்று முக்கியமான காட்சிகளைக் கடைந்தார்கள். கடைசியில் பாவனமான ஸ்ரீமத் இராமாயணமும் அரங்கேறியது. ஆஞ்சநேயர் பையன் வேஷம் போட்டுக்கொண்டு காரிடாரில் செல்ஃபி எடுத்துக்கொண்டபோது பக்கத்திலிருந்து புன்னகைத்தேன். உதட்டைச் சுற்றி சிகப்படித்திருந்த வாயைத் திறந்து முத்துப்போன்ற வெள்ளைகளைக் காண்பித்தான். ஆஞ்சு கொள்ளை அழகு.

ராமர் பட்டாபிஷேகத்தின் போது சூலாயுதபாணியாக சிவன் வந்தார். பக்கத்தில் பார்வதியைத் தேடினார். பச்சை வண்ணமாய் குடுகுடுவென்று ஓடிவந்தது சேர்ந்துகொண்டது ஒரு வாண்டு. பரதன் பளபளவென்று இருந்தான். நடித்தவர்கள், பார்த்தவர்கள் என்று அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி அப்பியிருந்தது.

விழா முடிந்து வீட்டிற்கு வரும் போது ஒரு யூ டர்ன். வாழ்க்கையும் அப்படியே ஒரு யூடர்ன் அடித்து அண்ட்ராயர் காலத்துக்குச் செல்லாதா என்ற ஏக்கம் பிறந்த போது “அப்பா.. நான் எப்படி நடிச்சேன்..” என்று பிள்ளைகள் கோரஸாகச் சுரண்டினர்.

“சூப்பர்...”

‪#‎வாழ்க்கை_ஒரு_வரம்‬

கத்தி.. கத்தி...

”இந்தக் கத்தி ரொம்ப அழகா இருக்கே. புதுசா?”

“ச்சே..ச்சே.. இது பரம்பரை பரம்பரையா எங்க வம்சத்துக் கத்தி.. வூட்லதான் இருக்கு...”

“ஓ! ஆனா பார்க்க புத்தம் புதுசா ஜொலிக்குதே!”

“பழசுதான். பரம்பரையா இருக்கிற இந்தக் கத்தியில பிடி ஆடிச்சின்னா உடனே மாத்திடுவோம்.”

“அப்டியா? ப்ளேடும் பளபளன்னு கண்ணைப் பறிக்குது... இப்பதான் சாணம் புடிச்சா மாதிரி...”

“இல்லையில்லை.. ப்ளேடு மொக்கையாயிடுச்சுன்னா அதையும் ஓடிப்போயி மாத்திடுவோம்...”

“யோவ்! ப்ளேடையும் மாத்துவ பிடியையும் மாத்துவேன்னா அப்புறம் எப்படிய்யா இது புராதன காலத்துப் பரம்பரைக் கத்தி?”

”ப்ளேடு மாத்தினாலும் பிடியை மாத்தினாலும் பரம்பரைக் கத்தி கத்திதானுங்ளே!”

கரெக்டுதான். கேபினெட் ஒண்ணுதான். உள்ற இருக்கிற ராமை மாத்தினாலும் ப்ராசஸரை மட்டும் மாத்திட்டாலும்.. பிசி பிசிதானே! பரம்பரை கம்ப்யூட்டர்.

இந்த கத்திக் கதையைச் சொல்லி கர்ணபரம்பரையாகச் சொல்லப்பட்டு வரும் நாட்டுப்புறக் கதைகளும் அப்படித்தான் என்கிறார் ஏ.கே.ராமனுஜன். அதாவது ஆராயக்கூடாது. அனுபவிக்கணும் என்கிற க்ரேஸியின் ஒற்றை வரி வசனம் சொல்லும் பாடம்.

கணபதி முனி - பாகம் - 18 : சம்ஸ்க்ருத மெக்பத்

மாணவர் பட்டாளம் அமைதி காத்தது. அசையாமல் பொம்மை போல நின்று கொண்டிருந்தனர். கணபதியிடம் பரதக்கண்ட இலக்கியத்துக்கும் அயல்நாட்டு இலக்கியத்துக்கும் இருக்கும் வித்யாசங்களையும் நுட்பங்களையும் கேட்ட மாணவன் ஆர்வம் கொப்பளிக்க குறுகுறுவென்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். இரு நிமிட மௌனத்திற்குப் பிறகு கணபதி மெல்ல வாய் திறந்தார்.

“மன்னிக்கவும். எனக்கு அயல்நாட்டு இலக்கியங்களில் பரிச்சயம் இல்லை. நீங்கள் எதாவது ஒன்றைத் தேர்வு செய்து படித்துக் காட்டினால் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்” என்றார் வினயமாக. மாணவர்க் கூட்டம் உற்சாகமடைந்தது. பின்வரிசையிலிருந்து ஒருவன் சரேலென்று முன்னால் வந்தான். கையில் ஷேக்ஸ்பியரின் மெக்பத். அதில் வரும் பூதங்கள் போன்று உரக்கப் பேசலானான். மாணவர்கள் முழு நாடகத்தையும் படித்துக்காண்பித்து அதன் இலக்கிய ரசத்தை அவருக்கு விவரித்தார்கள்.

”நீங்கள் இப்போது நாங்கள் படித்த இக்காவியத்தை உடனே சம்ஸ்க்ருதத்தில் இயற்ற முடியுமா?” என்று ஒரு சவாலான கேள்வியைக் கேட்டான் வலது மூலையில் நின்றிருந்த ஒரு பையன்.

கணபதி சிரித்தார். ராகமாக ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தார். காட்சிகளை சிருங்காரமாக சம்ஸ்க்ருதத்தில் வாசித்துக்கொண்டே போனார். பக்கம் பக்கமாக புரண்டது. எழுந்து நடந்து கொண்டே பேசினார். மாணவர்கள் கலையாமல் நின்றிருந்தார்கள். நாற்காலில் உட்கார்ந்தார். உரையாற்றினார். மாணவர்கள் சூழ்ந்துகொண்டு கேட்டனர். நின்று கொண்டு சில ஸ்லோகங்களைப் பாடினார். அதிசயித்து வாய்பிளந்து நின்றனர். மீண்டும் நடந்தார். நேரம் மட்டும் நிற்காமல் ஓடியது. அந்த அறையின் கதவுகளும், ஜன்னல்களும், சுவர்களும் சம்ஸ்க்ருதம் பேசுமளவிற்கு சம்பாஷணைகள் தொடர்ந்தது.

மரித்த பாஷை என்று சம்ஸ்க்ருதத்தை வெறுத்து ஒதுக்கிய அம்மாணவர்கள் கணபதி காட்டிய விஸ்தீரணத்தால் அந்த மொழியின் ஆளுமையில் சிலிர்த்துப்போயினர். கணபதியின் பாண்டித்யம் அவர்களைக் கட்டிப்போட்டு வசியம் செய்தது. இதுநாள் வரை ஷேக்ஸ்பியரின் மெக்பத்தாக இருந்தது இப்போது கணபதியின் சம்ஸ்க்ருத மெக்பத் ஆயிற்று.

கணபதியின் நினைவாற்றலை சோதிக்க முற்பட்ட ஒரு மாணவன் ஆங்கில தினசரியிலிருந்து ஒரு பாராவைக் கடகடவென்று படித்தான். ”எங்கே நீங்கள் இதைச் திரும்பச் சொல்லுங்கள் பார்க்கலாம்..” என்று கை கட்டி நின்றான். கணபதி திரும்பவும் தங்குதடையில்லாமல் அதைச் சொல்லிக்காட்டிவிட்டு “மொத்தம் நானூற்று இருபது எழுத்துக்கள் இந்தப் பாராவில் இருக்கிறது” என்று உபரியாக எழுத்துக் கணக்கையும் கொடுத்தார். அனைத்து மாணவர்களும் அசந்து போனார்கள். இதற்கு மேல் அவர் முன்னால் நிற்க திராணியில்லாமல் பொதேர் என்று அனைவரும் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வந்த வழியே திரும்பினர்.

அவர்கள் சென்றபின் திருட்டுமுழியுடன் கணபதியை நெருங்கிய துரைசாமி “ஸ்வாமி என்னை மன்னிக்கவேண்டும். உங்களை சம்ஸ்க்ருதத்தில் சோதிக்க எண்ணியது எங்களது சிறுபிள்ளைத்தனம். மடமை. அறியாமல் செய்த பிழை. மன்னித்தருள வேண்டும்.” என்று கைகூப்பி நின்றார். கால்கள் வெடவெடத்தன.

துரைசாமியின் பிழை பொருத்தருளி அவரை தனது சிஷ்யனாகவும் ஏற்றுக்கொண்டார் கணபதி. பிற்காலத்தில் “சுதன்வா” என்று எல்லோரும் அறியப்படுபவரே துரைசாமி ஆகும்.

நாட்கள் நகர்ந்தது. சென்னையின் சில முக்கியஸ்தர்கள் கணபதியைக் கௌரவிக்க எண்ணினார்கள். அதற்காக பொருள் திரட்டும் முயற்சியில் இறங்கினர். அப்போது நாராயண சுதர்ஸன் என்கிற ஒரு ஆசுகவியும் சென்னையில் முகாமிட்டிருந்தார். இருவருக்கும் சேர்த்து பொருள் திரட்டி கௌரவிப்போம் என்று ஒரு குழுவினரும் கணபதிக்கே என்று ஒரு குழுவினரும் இல்லையில்லை சுதர்ஸனுக்கே என்று இன்னொரு அணியும் கட்சி கட்டிப் பேசினார்கள். முடிவில் பலப்பரீட்சை செய்து பார்த்துவிடலாம் என்று தீர்மானித்தார்கள். கெலிப்பவரின் கைக்குத் தங்கக் காப்பு போடுவதாக உத்தேசித்து களமிறங்கினார்கள்.

சுதர்ஸன் கணபதி போலவே பிறவி மேதை. தனது பதினேழாம் பிராயத்துக்குள் இரண்டு போற்றத்தக்க பாடல்களை எழுதி “பால சரஸ்வதி” என்றும் “பட்டஸ்ரீ” என்றும் பட்டங்கள் பெற்றிருந்தார்.

கௌரவிக்க வசூல் நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு நாள் காலை திருவல்லிக்கேணி மேல்நிலைப் பள்ளியில் கணபதியைச் சிறப்பிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சில சமஸ்யங்களைக் கேட்டு கணபதியைப் பூர்த்தி செய்யச் சொல்லலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. வேதம் வெங்கடராய சாஸ்திரி, ஹலஸனந்தா சாஸ்திரி மற்றும் நீலமேக சாஸ்திரி என்கிற வித்வத் குழு சமஸ்யங்களைக் கொடுத்து பதில் வாங்கும் அமர்வுக்கு நீதிபதிகளாக தயாராயினர். சமஸ்யங்கள் கணைகளாக பாய்ந்து வர பதிலுக்குப் பதில் பாடி அனைவரையும் வாயடைக்க வைத்தார். அங்குக் குழுமியிருந்த ஆசிரியர்கள் தங்களால் இயன்றதைச் சன்மானமாக அளித்து திருப்தியடைந்தனர்.

முக்கியஸ்தர்களின் கமிட்டி ஒரு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். இரசனையும் இலக்கிய ஈடுபாடும் கொண்ட வி. க்ருஷ்ணஸ்வாமி ஐயரை சிம்மாசனத்தில் அமர வைத்தார்கள். கணபதியை அக்கணமே நூறு ஸ்லோகங்களில் நளோபாக்கியணத்தை அடக்கச் சொன்னார்கள். ஒரு மணி நேரத்திற்குள் பாடி முடிக்க வேண்டும் என்று காலவரையறை வகுத்தார்கள்.

சம்மணமிட்டு அமர்ந்தார். கண்களை மூடி தியானித்தார். கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார். அவரது துவக்கம் அதியற்புதமாக இருந்தது. கடகடவென்று ஐப்பசி மழை போலப் பொழிய ஆரம்பித்தார். மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீமான் க்ருஷ்ணஸ்வாமி ஐயர் பத்து நிமிடத்தில் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.

”நன்றி கணபதி.. போதும்.. நீர் சொல்லும் வேகத்தில் இருநூற்றைம்பது இலகுவாகத் தாண்டுவீர்.. தன்யனானோம். உங்களைப் புகழ்வதில் இச்சபை பெருமையடைகிறது. ’காவ்யகண்டர்’ என்ற பட்டத்துக்கான முழு யோக்யதையும் உமக்கு இருக்கிறது. வாழ்க...”

இதிலும் ஒரு கோஷ்டியினர் அதிருப்தி அடைந்தனர். க்ருஷ்ணஸ்வாமி ஐயரின் பரீக்ஷை முறை செல்லாது என்றும் இதைவிட சிக்கலான போட்டியே கணபதியின் திறமையை நிர்ணயிக்கும் என்று வாதாடினர். க்ருஷ்ணஸ்வாமி ஐயர் வெகுண்டார்.

“கணபதி என்ன செய்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்?”

“அவரை அஷ்டாவதனம் செய்யச் சொல்லுங்கள்” காதுகளில் வைரக் கடுக்கன் மின்னும் ஒருவர் குரல் கொடுத்தார்.

“ம்.... அப்படியே ஆகட்டும்...”

“ஸ்ரீமான் சுதர்ஸன் முன்னிலையில் இது நிகழவேண்டும்..” மீண்டும் வை.கடுக்கன் குரல் ஓங்கி ஒலித்தது.

க்ருஷ்ணஸ்வாமி ஐயர் கணபதியை நோக்கிப் பார்வையைத் திருப்பினார். கணபதி இமைகளை மூடித் திறந்து கண்களால் ஒத்துக்கொண்டார்.

இம்முறை டாக்டர் எம்.டி.க்ருஷ்ண ஸ்வாமி இல்லத்தில் கூட்டம் கூடியது. கணபதில் இலக்கிய அறிவையும் மொழி ஆளுமையையும் கண்டு ரசிப்பதற்கு பெருந்திரளாக ரசிகர்கள் குழுமியிருந்தார்கள்.

சம்பிரதாய அறிமுகத்தோடு சபை துவங்கியது.

“ருக்மணி கல்யாணத்தைப் பற்றி நூறு ஸ்லோகங்கள் இயற்ற வேண்டும்...” என்று அஷ்டாவதனத்தில் முதல் அவதான பரீக்க்ஷை ஆரம்பித்தது. ”ஒரு மணி நேரத்திற்குள்...” என்று கூடுதல் விதியும் அடுத்த விநாடி சேர்க்கப்பட்டது. கணபதி சொல்லச் சொல்ல பதிவதற்கு ஒரு எழுத்துக்காரர் நியமிக்கப்பட்டார். கணபதி ஸ்லோகத்தை முடிக்கும் முன்னர் அந்த எழுத்துக்காரர் முடித்துவிட்டு அவரின் வாய் பார்த்தார். மகாபாரதத்தில் வியாஸருக்கு அமைந்த கணபதி போல இந்தக் கணபதி அமைந்த எழுத்துக்காரர் துடிப்பாக இருந்தார். ஸ்லோகம் சொல்லும் வேகத்தை கொஞ்சம் முடுக்கிவிட்டார் கணபதி. அந்த வேகத்தில் எழுதுவது மிகக் கடினம். இருந்தாலும் அந்த எழுத்துக்காரர் மளமளவென்று எழுதிக்கொண்டே போனார்.

கணபதிக்கு சந்தேகம் வந்தது. ஸ்லோகம் சொல்வதைப் பாதியில் நிறுத்திவிட்டு..

“இதுவரை எழுதியதை ஒருமுறை வாசியுங்கள்...” என்றார். அந்த எழுத்துக்காரர் கணபதி சொல்லாததையெல்லாம் கூட சேர்த்து எழுதியிருந்தார். சொன்னதை விட்டிருந்தார். சபை திடுக்கிட்டது. கணபதி குழம்பினார்.

“ஏனிப்படி செய்தீர்?” என்று அவையிலிருந்த பெரியோர்கள் சீறினர். அப்போது அந்த எழுத்துக்காரர் சொன்ன பதில்.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_18‬
‪#‎கணபதி_முனி‬

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா!

”ஒன் பியெம் ரிப்போர்ட்டிங் ஒன்லி..” என்று கையில் பாட்டரி ஸ்பீக்கர் செட்டோடு கதறிக்கொண்டிருந்தவரிடம் “டூ பியெம்மெல்லாம் வரலாமா?”ன்னு ப்ரிண்ட் அவுட்டை விசிறிக்கொண்டே கேட்டால் என்ன செய்வார்? கடுப்பாயிட்டார் அந்த செக்யூரிட்டி. எரித்துவிடுவது போல ஒரு பார்வையை வீசி “டூ பியெம்முக்கு வாங்க சார்.. நவ்ருங்க..நவ்ருங்க...” என்று விலக்கினார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு TBC 129 காட்டேஜ் வாசலில் சப்பரக்காவென்று உட்கார்ந்துகொண்டோம்.நேற்று திருமலா திருப்பதி. Sabareesh Hariharanக்கு மொட்டை. ஸ்ரீநிவாசப்பெருமாள் திவ்ய தரிசனம். திருச்சானூரில் பத்மாவதி தாயாரின் ஏகாந்த தரிசனம்.

திருமலையில் வெய்யில் அடித்தாலும் ஒரு ஜிலுஜிலு. இலவச கக்கூஸ் கூட ஃபினாயிலில் குளித்துச் சுத்தமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் துடைப்பமும் கையுமாக சீருடையயணிந்த பணியாளர்கள் வீதியோரங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். புஷ்கரணியில் இறங்கி நின்று காலைப் பார்த்தால் நகம் பளிச்சென்று தெரிகிறது. தெளிந்த நீர். ”தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையன் ஆவேனே” என்று குலசேகராழ்வார் பாடியது நினைவுக்கு வந்து மீனேதும் தென்படுகிறதா என்று கண்ணால் அலசினேன். கண்ணுக்குத் தட்டுப்படலை.

போன மாசம் அடித்த மொட்டைத் தலையில் தேங்காயெண்ணெய் வழிய ஒரு பெரியவர் முன்னால் வந்து சிரித்தார். அவர் கையிலும் பிரிண்ட் அவுட் இருந்தது. “கரெக்ட்டாதான் உள்ற விடுவாங்க சார்.. “ என்று வேஷ்டியை மடித்துக்கொண்டு படிக்கட்டில் உட்கார்ந்தார். ”நீங்க ஃபர்ஸ்ட் டைம் வர்றீங்களா?”. “மூணு மணிக்கு இன்னொருதரம் புக் பண்ணியிருக்கேன்..” என்று இன்னொரு சட்டைப் பாக்கெட்டிலிருந்து ரெண்டு ப்ரிண்ட்டை எடுத்து நீட்டினார்.

பெண்கள் சுடிதார் அணிந்திருந்தால் துப்பட்டா அவசியம். பேண்ட் அணிந்து கோயிலுக்குள் செல்லக்கூடாது. போன்ற ஆடை விதிமுறைகள் அமுலுக்கு வந்திருக்கின்றன. க்யூவின் வாலில் ரூ. 200க்கு வேஷ்டி விற்கிறார்கள். “ரேஷன் வேஷ்டி” என்றார் என் பக்கதிலிருந்த அந்தப் பெரியவர். நான் பார்த்த அரை மணியில் ஐம்பது பேராவது வாங்கியிருப்பார்கள். தொழில் முனைவோர் கவனிக்க.

வாத்யார் சுஜாதா “திமலா”வில் எழுதியதில் எண்பது சதவிகிதம் முடிந்துவிட்டது. நெட்டில் புக் செய்து வெங்கடாஜலபதியின் அருள் கிடைக்க ஏற்பாடு.

இணைய முன்பதிவு ஸ்பெஷல் எண்ட்ரி. தலைக்கு முன்னூறு ரூபாய். ஒரு லாக்கினுக்கு ஆறு டிக்கெட். யாத்ரீகர்களின் பாஸ்போர்ட் படத்தோடு (20KB க்குள் இருக்கவேண்டும்) புக் செய்து கொள்ளவேண்டும்.மதியம் பன்னிரெண்டு மணியிலிருந்து ஐந்து மணி வரை நான்கு ஸ்லாட்டுகள். ஆன்லைன் பேமெண்ட். பார்கோடோடு நம் படத்தையும் சேர்த்துத் திரையில் தரும் கன்ஃபர்மேஷன் ரசீதை இரண்டு ப்ரிண்ட் எடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று செக் செய்யும் இடத்தில் வைத்துக்கொள்வார்கள். இன்னொரு verified சீலிருக்கும் ஒரு ரசீது நமக்கு. அதற்குதான் லட்டு. இல்லையென்றால் அல்வாதான். தரிசன முன்பதிவுக்கு முன்னர் ttdesevaonline.comமில் நம்மை ரெஜிஸ்தர் செய்து கொள்ளவேண்டும்.

”ரெண்டு மணிக்குதான் துப்பாக்கி நேரத்துக்கு க்யூல விடுவோம்னு சொல்றாங்களே... தர்ஷன் டைம் மூணு மணிக்குன்னு போட்ருக்கு. ஸ்ரீநிவாசப்பெருமாள் சக்கர நேரத்துக்கு மூணு மணிக்கு தரிசனம் கொடுத்துடுவாரா?”ன்னு குசும்பாகக் கேட்டேன். பக்கத்திலிருந்த சின்னவள் பரபரவென்று என் கையைச் சொறிந்தாள்.

“என்ன?”

“அதென்ன துப்பாக்கி நேரம்?”

“gun time".

“மொக்கைப்பா...”ன்னு திட்டிவிட்டு காளிகாதேவி போல முறைத்தாள்.

பெரியவள் கேட்டாள் “அப்ப சக்கர நேரம்?”

“பெருமாள் சக்ராயுதபாணி. அவர்ட்ட துப்பாக்கி லேதும்மா..” என்று சிரித்தேன். அணியாகத் திரண்டு அடிக்க ஓடி வந்தார்கள்.

ரெண்டு மணிக்கு க்யூ திறந்தார்கள். பாண்ட் போட்டு மேலே வேஷ்டியை சுற்றிக்கொண்டவர்களை க்யூவிலிருந்து வெளியே இழுத்து பாண்ட்டை உருவிவிடச் சொன்னார்கள். காட்டேஜின் ஒரு அறை இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மொபைல் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை போர்டும் மூன்று இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. கையில் கட்டியிருந்த ஃபாஸ்ட்ராக் வாட்சை இரண்டு மூன்று முறை சோதனைக்காகத் திருப்பிப் பார்த்தவருக்கு நான் ஜேம்ஸ்பாண்ட் ரகம் என்ற சந்தேகம் தலைதூக்கியிருந்தது. வாட்சினுள் இரகசிய கேமிரா இருக்குமோ என்று என் முகத்தில் எதுவும் கள்ளத்தனம் தெரிகிறதா என்று ஊடுருவிப் பார்த்தார். தப்புதண்டா செய்யும் போது சங்கீதா என்னை பார்ப்பது போலவே இருந்தது. ”இதி...” என்று ஆரம்பித்து அவர் ஜாங்கிரி லாங்குவேஜ் பேசியதில் ”கேமரா எதுவும் இருக்கா?”ன்னு கேட்பது அவரது உடல்மொழியில் எனக்குப் புரிந்தது. கழட்டிக் கையில் கொடுத்துவிட்டேன். மூன்று முறை திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே வழிவிட்டார் அந்த து.சாம்பு.

கோபுரவாசலை அடைவதற்குள் மூன்று நான்கு பாலங்கள் வரும். பல மொழிகளில் ஒட்டி உறவாடுபவர்களின் ஊர்க்கதையெல்லாம் கேட்கலாம். திடீரென்று ஒருவர் “ஏடுகொண்டல வாடா... கோவிந்தா.. கோவிந்தா...” என்று குரலெழுப்புவார். முன்னால் பத்து பேர் பின்னால் பத்து பார் பாதி கதையில் “கோவிந்தா..கோவிந்தா...” என்று உரக்கக் கோஷமிடுவார்கள். அடுத்த நொடியில் ஒன்றுமே நடக்காதது போல மீண்டும் விட்ட இடத்தில் கதையைத் தொடர்வார்கள். ஆனால் நேற்று நடந்தது பேராச்சரியம். நேரே கோபுரவாசல் வரை குடுகுடுவென்று ஓட்டமாக ஓடி வந்துவிட்டோம். மொத்தமாக பதினைந்தே நிமிடத்தில் தரிசனம் முடித்துக்கொண்டு உள் பிரகாரத்தில் ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண சுதைச் சிற்பங்களைப் பார்த்துவிட்டு லட்டு வாங்க வெளியே வந்துவிட்டோம். பத்து நொடி தரிசனமானாலும் மனசுக்கு அப்படியொரு நிறைவு.

க்யூவில் நிற்பதற்கு முன்னால் “மூணு மணிக்கெல்லாம் சக்கர நேரத்தில் தரிசனம் தருவாரா?”ன்னு லொள்ளு பேசியது அப்போதுதான் உரைத்தது. பதினைந்தே நிமிடத்தில் வேங்கடவன் தரிசனம். “அவர்ட்ட வச்சுக்கக்கூடாதுப்பா...” என்று சிலிர்த்துக்கொண்டேன்.

கணபதி முனி - பாகம் 17 : சம்ஸ்க்ருத ஸாகரம்

கணபதி சம்ஸ்க்ருதத்தில் வர்ஷித்த ஸ்லோகம்....

ஸ்யாது ஸர்வஞ ஸிரோமணி தீதிதி தோஷப்ரதர்ஷநேபி பது:
பவதாம் ஸங்க: ஸங்கர ஹரிணத்ருஸோ ஹாஸநா ஸாஸ்த்ரி

தீதிதி என்கிற ந்யாய சாஸ்திரத்திலேயே பிழை காணும் பாண்டித்தியம் கொண்ட இந்த சாஸ்திரி உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்யட்டும் என்கிற பொருளில் அமைந்த இந்த ஸ்லோகத்தில் உள்ளர்த்தமாக இன்னொன்றும் உள்ளது. அம்பிகையின் புன்னகையை ஒப்புமைப்படுத்தும் ஒரு அற்புத விளக்கம். உதட்டில் புன்னகை தவழும் மான்விழியாள், சிவனின் வாமபாகமானவள், அவனது செஞ்சடையில் ஒளிரும் சந்திரகலையில் படிந்த கறையைக் காட்டுபவள், குருவாகயிருந்து உங்களது சந்தேகங்களைத் தீர்க்கட்டும்.

இருபொருள்படும்படிச் சிலேடையாக அமைந்த ஸ்லோகத்தில் சம்ஸ்க்ருத பண்டிதர்கள் வாயடைத்து ஸ்தம்பித்துப் போயினர். வெங்கட்டராய சாஸ்திரியைப் பற்றி கணீர்க் குரலில் கணபதி பாடிய இந்த ஸ்லோகத்தில் மயங்கிய தண்டலம் சுப்ரமண்ய ஐயருக்கு இன்னொரு ஆசை பொத்துக்கொண்டு வந்தது. கைகூப்பிக் கேட்டார்...

“சர்வேஸ்வரனான சிவபெருமான், ஜெகதீஸ்வரீயான அவரது பத்னி பார்வதி அவர்களது புத்திரர்களான கணபதி, சுப்ரமண்யர் என்று அந்த தெய்வக்குடும்பத்தைப் பற்றி ஒரே ஸ்லோகத்தில் எழுதினால் பரம சந்தோஷமடைவோம்...” என்று கணபதியிடம் விண்ணப்பித்தார். பக்கத்திலிருந்தவர்களும் அதை பலமாக ஆமோதித்தார்கள்.

அவர் கேட்டு வாயை மூடுவதற்கு முன் கணபதி ப்ரவாகமாக இன்னொரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தார்.

ஜகதீதர ஜாமாதா பவதாம் பவ்யாய பூயஸே பவது
கஞ்சிதகிஞ்சநமபி யதிவீக்ஷா விததாதி ஸக்ரஸமம்

வந்திருந்தவர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது இப்பாடல். வார்த்தைகள் துள்ளி விளையாடியதைக் கண்டு அசந்து போனார்கள்.

ஜகதீதர ஜாமாதா: (இமய)மலையின் மாப்பிள்ளை - சிவன்.
ஜகதீதரஜா மாதா: மலையவன் ஹிமவானின் மகளான அம்மா - பார்வதி. (அல்லது) இரு பிள்ளைகளுக்கு அம்மாவான ஹிமவான் புத்ரி. அவளின் கருணா கடாக்ஷம் ஆண்டியைக் கூட இந்திரலோகமாளச் செய்யும். அவளது பூர்ணமான அருள் கிடைப்பெறுக.

மூவரும் இந்த ஸ்லோகத்தை கணபதியின் அருட்பிரசாதமாக எழுதிக்கொண்டனர். “சென்னையிலேயே இன்னும் இரண்டு நாட்கள் தாங்கள் தங்க வேண்டுகிறோம்” என்று கணபதியிடம் கைகூப்பினர். அவர் வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். “சிறு விழா ஏற்பாடு செய்து உங்களை சிறப்பிக்க எண்ணுகிறோம்” என்று அவரது சிந்தனையை உலுக்கியதும் சட்டென்று மௌனம் கலைத்து ”பள்ளியின் விடுமுறையில் வருகிறேன்” என்று கைகூப்பி அனுப்பிவைத்தார்.

அவர்கள் சென்றதும் ரகுவம்ஸம் குமாரஸம்பவம் போன்ற சம்ஸ்க்ருத காவ்ய புஸ்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வாசலில் நிழலாடியது. அது ரங்கையா நாயுடு. தலைக்கு கோபுரமாக டர்பன் கட்டியிருந்தார். ராமசாமி ஐயரின் ஸ்நேகிதர். சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் தெலுங்கு ப்ரொபஸர். அவருடன் இன்னொருவரும் வந்திருந்தார்.

“வணக்கம். நான் ரெங்கையா நாயுடு..” கணபதியிடம் கை கூப்பினார்.

“வணக்கம்” தீர்க்கமான ஒரு பார்வையை அவர் மேல் மேயவிட்டார் கணபதி.

“இவரும் ரெங்கையா நாயுடு. என் ஸ்நேகிதர்” இன்னொருவரும் “வணக்கம்” என்றார். ப்ரொபஸர் ரெங்கையா நாயுடுவின் நண்பராகக் கூட வந்த ரெங்கையா நாயுடுவிடம் ஒரு ஓலைச்சுவடிக் கட்டு இருந்தது. பல சம்ஸ்க்ருத பண்டிட்டுகளிடம் அந்த ஏடுகளைப் பிரித்துக் காண்பித்து அர்த்தம் கேட்பார். தெரியவில்லை என்று உதடுபிதுக்குபவர்களை எள்ளி நகையாடி அந்த இடத்தைக் காலி செய்வார். இப்படி அவனமாப்பட்டவர்கள் டஜனுக்கு மேல். இது அவரது வாடிக்கை.

அவரது கையிலிருந்தது புஷ்டியான மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடி. மருத்துவம் மட்டும் தெரிந்தவர்களுக்கு நுணுக்கமான சம்ஸ்க்ருத அர்த்தங்கள் புரிவதில்லை. சம்ஸ்க்ருதம் மட்டும் அறிந்தவர்களுக்கு நுட்பமான மருத்துவக் குறிப்புகள் கண்ணைக் கட்டும். இப்படி ஒரு இக்கட்டான ஸ்லோகங்களை வைத்துக்கொண்டு பல சம்ஸ்க்ருத பண்டிட்டுகளின் மானத்தை வாங்கி குரூர திருப்தி பட்டுக்கொண்டிருந்தார் இந்த ரங்கையா நாயுடு.

ப்ரொபஸர் ரெங்கையா நாயுடு கண்பதியிடம் சம்பிரதாயமாக க்ஷேமலாபங்களை விசாரித்து முடித்தவுடன் கூட வந்த ரெங்கையா நாயுடு அவரது விஷமத்தனத்தை ஆரம்பித்தார்.

“அகிலமே போற்றும் தங்களது சம்ஸ்க்ருத பாண்டித்தியத்தைப் பற்றி நானறிவேன். உமது நாவில் சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்.” என்று பீடிகையோடு ஆரம்பித்தார். சரி..சரி.. விஷயத்துக்கு வாரும் என்றது சம்ஸ்க்ருத சிம்மமாக அமர்ந்திருந்த கணபதியின் கண்கள்.

“எனது தாத்தன் பூட்டன் காலத்து பொக்கிஷமாக ஒரு ஓலைச்சுவடிக் கட்டு இருக்கிறது. அதிலிருக்கும் ரகஸியங்களை அறிந்துகொள்ள பலநாட்களாக தவம் கிடக்கிறேன். பலரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஊஹும். பொருள் சொல்வார் யாருமில்லை. தாங்கள் தான் உதவ வேண்டும் ஸ்வாமி” என்று கள்ளச் சிரிப்போடு அந்தக் கட்டை நீட்டினார் ரெங்கையா நாயுடு. கணபதி உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டார்.

முதல் சுவடிலிருந்து முற்றும் சுவடு வரை அந்தக் கட்டை முழுமூச்சாகப் படித்தார். அரைமணிகூட ஆகவில்லை. கட்டை மூடி விட்டுத் தலையை நிமிர்த்தி ”ஊம் உங்களது சந்தேகங்களைக் கேளுங்கள்...” என்றார் கணபதி. ரெங்கையா நாயுடுவுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். “எனது கேள்விக்கான பதில்கள் அந்த ஸ்லோகத்தோடு இணைத்திருக்கும் பொருளோடு ஒத்திருக்கவேண்டும்”. “ம்.. நிச்சயமாக...” என்றார் தெய்வீகச் சிரிப்போடு கணபதி.

கேள்விகள் படபடவென்றுக் கேட்கப்பட்டன. ரெங்கையா நாயுடு வாயை மூடுவதற்குள் பதில்கள் சுடச்சுட பறந்தன. ப்ரொஃபஸர் ரெங்கையா நாயுடு விழிவிரிய நடுவில் உட்கார்ந்திருந்தார். கேள்வி கேட்ட ரெங்கையா நாயுடுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அரை மணிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை எப்படி புரட்டிவிட முடியும். அப்படியே புரட்டினாலும் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் மின்னல் போல பதிலளிக்க முடியுமா? அதிசயம். அபூர்வம்.

“ஒரே புரட்டலில் எப்படி இது சாத்தியம்?” என்று கேட்டார் ரெங்கையா நாயுடு. ஓலைச்சுவடி கட்டு கொண்டுவந்தவர். “இந்த கட்டில் இருக்கும் எல்லாவற்றையும் கூட என்னால் அக்ஷரம் பிசகாமல் சொல்லமுடியும். செய்யவா?” என்று ஆரம்பிக்க எத்தனித்தார் கணபதி. அப்படியே சாஷ்டாங்கமாக தெண்டனிட்டார் ரெங்கையா நாயுடு. “நீர் ஒப்பற்ற பண்டிட். உமது சிறப்புக்கும் பாண்டித்யத்துக்கும் ஈடு இணை இங்கே யாருமில்லை.” என்று புளகாங்கிதமடைந்தார். ப்ரொபஸர் ரெங்கையா நாயுடு உச்சி குளிர்ந்திருந்தார். ”ராமசாமி ஐயருக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்லவேண்டும். இப்படியாகப்ட்ட உன்னத மனிதரை எனக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்...” என்று உவகை கொண்டார்.

இந்த சம்ஸ்க்ருத வித்தையைக் காட்டிவிட்டுக் கணபதி அருணைக்குத் திரும்பினார்.

நரசிம்ம சாஸ்திரி கண்பார்வைக் கோளாறை சொஸ்தப்படுத்தும் நிமித்தம் சென்னைக்கு வந்தார். கணபதியின் ஸ்நேகித வட்டம் அவர் மீண்டும் சென்னை வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஆனால், கணபதிக்கு அவரது தந்தை வருவது பற்றித் தெரியாது. சிகிச்சை முடிந்து அவர் திருவண்ணாமலை சென்றார். நேரே ப்ராம்ண ஸ்வாமியைச் சென்று தரிசித்தார். திரும்பும் பொழுது கணபதி தனது தந்தையுடன் சென்னை வரை வந்தார்.

நரசிம்ம சாஸ்திரி கலுவராயிக்கு ரயிலேறியபின், ராமஸ்வாமி ஐயரின் வீட்டிற்கு வந்தார். அவரது இல்லம் ஒரு சின்னத் தீப்பொட்டியாக இருந்தது. பார்வையாளர்கள் போக்குவரத்து அதிகரிக்க பக்கத்தில் எஸ்.துரைசாமி என்கிற சட்டக்கல்லூரி மாணவரின் இல்லத்தில் பகல்பொழுதைக் கழித்தார் கணபதி. வரும் ஆர்வலர்களின் சந்தேககங்களுக்கும் கேள்விகளுக்கும் அவர்களைப் புண்படுத்தாமல் கணபதியளிக்கும் விளக்கங்களும் அவரது தளர்வுறாத சோர்வுராத திடகாத்திரமும் துரைசாமிக்கு பேராச்சிரிய்த்தை அளித்தது. இத்துடன் ஒரு முறை கேட்ட ஐந்தாறு பக்க பாடல்களையோ கட்டுரைகளையோ மீண்டும் சொல்லும் கணபதியின் திறனைக் கண்டு அவரொரு வணங்கத்தக்க தெய்வப்பிறவி என்று நினைத்தார் துரைசாமி.

ஒருநாள் துரைசாமி தனது நண்பர்களுடன் கணபதியின் சம்ஸ்க்ருத வித்வத்திற்கு பரீக்ஷை வைத்துப் பார்க்க எண்ணினார். கால்சராயும் சட்டையுமாக ஒரு கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டது. கணபதிக்கு முதலில் பவ்யமாகத் தாம்பூலம் தந்தார்கள். “எனக்கு தாம்பூலம் தரித்துப் பழக்கமில்லை...” என்று தடுத்தார் கணபதி. “ஓஹோ. சரி பரவாயில்லை. உங்களால் ஒரே ஸ்லோகத்தில் தாம்பூலத்தின் நன்மை தீமைகளைப் பற்றிப் பாட முடியுமா?” என்றனர். தொணியில் சவால் தொக்கியிருந்தது.
இசைந்தார். பாடினார்.

ஸுதாதிக்யம் ஸ்ப்ருஹேச்சரத்ரு: ப்பலாதிக்யம் ஸ்ப்ர்ஹேத்பிஷக்
பத்ராதிக்யம் ஸ்ப்ரஹேஜ்ஜாயா மாதா து த்ரிதயம் ஸ்ப்ருஹேத்.

(உன்) வாய் வெந்து போவதால் எதிரி சுண்ணாம்பையும், (உனக்கு) இரத்த சோகையை ஏற்படுத்துவதால் மருத்துவர் பாக்கையும், (உன்) இச்சையைத் தூண்டுவதால் மனைவி வெற்றிலையையும், இம்மூன்றையும் சம அளவில் கலந்து (நீ) தாம்பூலம் தரிப்பதை (உன்) அம்மாவும் விரும்புவார்கள்.

கரகோஷித்தார்கள். கல்லூரிப் பசங்கள் கூட்டம் அசடு வழிந்தது. இவர் எப்பேர்ப்பட்ட மகான். மடக்குகிறோம் என்று துடுக்குத்தனமான கேள்விகேட்ட நமது மடமைதான் என்ன? என்று உள்ளூர வருத்தப்பட்டார்கள்.

“பாரத இலக்கியங்களுக்கும் அயல்நாட்டு இலக்கியங்களுக்கும் இருக்கும் நுணுக்கமான வித்யாசங்கள் என்னவென்று கூறமுடியுமா?” என்று சம்பாஷணையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தினான் ஒரு குடுமி வைத்த மாணவன். கணபதி இதற்கு என்ன பதில் கூறினார் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்....

{இப்பகுதியில் இடம் பெற்றிருக்கும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களின் தமிழ் வடிவைத் தந்தருளியவர் Ramkumar Narayanan ஸ்வாமின். அவருக்கு என் ஹ்ருதயப்பூர்வமான நன்றிகள்}

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_17‬
‪#‎கணபதி_முனி‬

திருப்புகழ் கச்சேரியில் பாட்டி

ஆறரைக்கு சாலிகிராமத்தில் ப்ரோக்ராம். வீட்டிலிருந்து ஆறரைக்கு கிளம்பினோம். பாதி தூங்கிக்கொண்டிருந்த சாலைகளினால் ஞாயிற்றுக்கிழமையென்று தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டிகள் சோம்பலாக உருண்டுக்கொண்டிருந்தன. ஒரு வலதுக்கு தப்பிதமாய் இடது திரும்பி பத்து நிமிடம் சேப்பாயிக்கு கூடுதல் வேலை கொடுத்தேன். ”ணா.. சாலிக்கிராமம் காவேரி ரங்கன் நகர்...” என்று வழிகேட்டு “இப்டிக்கா லெப்ட்ல போயி ஷ்ட்ரெயிட்டா...” என்று விரோதமாக எதிர்திசையில் திருப்பிவிட்ட ஆட்டோகாரரை மன்னித்துவிடலாம். வழி தெரியாது என்றால் மானம் கப்பலேறிவிடும் என்று நம்பும் சென்னைப் பழக்கம்.

காவேரி ரங்கன் நகர் காவேரி விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா. சின்னவளும் பெரியவளும் பத்மா மாமியோடும் தோழிகளோடும் திருப்புகழ் கச்சேரி பண்ணப் போயிருந்தார்கள். முக்குக்கு முக்கு விஜாரித்து கோயிலை அடையும் போது ஸ்பீக்கரில் ”முருகா...முருகா..” கோரஸாகக் கேட்டது. கச்சேரி ஆரம்பித்துவிட்டது. சொற்ப கூட்டமிருந்தது. சன்னிதிக்கு நேரேயே நான்கு மைக், ஒரு ஸ்ருதிப் பெட்டி, ஒரு டோலக்கு ஏற்பாடாகியிருந்தது. ப்ளாஸ்டிக் சேர்களில் உட்கார்ந்திருந்தவர்களில் அநேகம் பேர் ரிடையர்ட் ஆனவர்கள். முட்டிக்கு மூவ் தடவியவர்கள்.

பச்சை ஜாக்கெட்டில் வாய் மந்திரமாக “முருகா.. முருகா..” ஒலிக்க பார்வையாளர்கள் ஓரமாக ஒரு பாட்டி. ஒரு ஜான் மல்லி சூடிய தீர்க்க சுமங்கலி. நெற்றியில் துலங்கிய திருநீரும் குங்குமமும் நம்மை மானசீக நமஸ்காரம் பண்ணச் சொன்னது. லலிதா சகஸ்ரநாமமும் கந்த சஷ்டி கவசமும் பாராயணம் செய்திருக்க வேணும். ”மாலாசை...” பாடினாலும் “பத்தியால் யானுனை...” பாடினாலும் தனக்கு மட்டும் கேட்கும்படி பாடினார்கள். சேர்ந்திசையாகத் திருப்புகழ் கேட்டு அவர் கண்களில் ஆனந்தபாஷ்பம். அவரைப் பார்க்கும் நமக்குள் பக்தி ஊறுகிறது.

ஒரு மணி நேரம் காதுக்கு தெவிட்டாத விருந்து. தெரு மணத்தது. திருப்புகழ் பாடி முடித்து வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு அடுக்கு தீபாராதனை ஆயிற்று. கண்களில் ஒற்றிக்கொண்டவுடன் பிரசாதத்துக்கு வரிசை நீண்டது. ஒவ்வொரு வாய் எலுமிச்சை சாதம், தயிர்சாதம். ஒரு கை உருளை வறுவல். காலை நொடித்தபடி வரிசைக்கு வந்த பாட்டிக்குக் கூட்டம் வழிவிட்டு முன்னுக்கு அனுப்பியது. கையில் வாங்கிக்கொண்டு கோபுரவாசலில் செருப்பைத் தேடிக்கொண்டிருந்தார். பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தேன். பாட்டியைக் காணவில்லை. வீடு எங்காவது பக்கத்தில் இருக்கக்கூடும். விடு.

யாரது? தூரத்தில் மங்கிய வெளிச்சத்தில் தாங்கித் தாங்கி நடப்பது தெரிந்தது. பின்னாலிருந்து பார்க்கும் போது இடது கை முழுசாகவும் வலது கை பாதியாகவும் தெரிந்தது. மடக்கிய வலது கையில் பிரசாதமாக இருக்கும். பேரனுக்கோ பேத்திக்கோ. வண்டியை எடுத்துக்கொண்டு போகும் வழியில் இறக்கிவிடலாம் என்று ஓடினேன். திருப்பிக்கொண்டு வரும் போது கண்ணுக்கெட்டியதுவரை யாருமில்லை. ஞாயிறு இரவு. வெறிச்சோடிய சாலை. மக்கள் வீடுகளுக்குள் அடங்கியிருந்தனர்.

 பாட்டிக்கு எந்தத் தெரு? எந்த வீடு? முருகா.

நரியப்பன் - காகாஸ்வரன்

”நாம் இனிமே இந்த மரத்துக் கிளையில் இருக்கக்கூடாது... வேற அட்ரெஸுக்கு போயிடணும்..” சிணுங்கியது பெண் காகம். ஆண் காகம் வருத்தம் தோய்ந்த முகத்துடன் “கா....” என்று ஈனஸ்வரத்தில் கரைந்தது.
”என்னுடைய முட்டைகளையெல்லாம் அந்த கரும் பாம்பு தின்றுவிடுகிறது. நமக்கு சந்ததியே இல்லாமல் செய்துவிடும் போலிருக்கிறதே...” என்று அழுதது. 

“இதே மரக்கிளையில்தான் நான் பிறந்தேன். வளர்ந்தேன். உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன். இதோ குடும்பம் நடத்துகிறேன். இங்கிருந்து என்னைக் கிளம்பச்சொல்லாதே.. ப்ளீஸ்...” என்றது.

“எனக்கென்ன பதில்?” முறைத்தது பெண் காகம்.

“இதை புத்திசாலித்தனமாக அணுக வேண்டும். என்னுடைய நண்பன் குள்ள நரியப்பனிடம் ஆலோசனை கேட்கிறேன். அவன் புத்திசாலி...” என்று கூறி சிறகடித்துப் பறந்து சென்று நரியை அழைத்து வந்தது.

சினிமாக்களில் எல்லோரும் திரை பார்க்க பின்னணி இசை ஒலிக்க காதுகளில் ரகசியம் பேசி தலையை மட்டும் ஆட்டிக்கொள்வார்களே.. அது போல நரி பேச காகம் தலையசைத்து விட்டு சிரித்தபடி பறந்தது. மரத்தின் மேல் அமர்ந்திருந்த காகாயினிக்கு எதுவும் புரியவில்லை.

சிறிது நேரத்தில் ஆண் காகம் எதையோ தூக்கிக் கொண்டு வந்து மரத்தினருகில் இருந்த பாம்புப் புற்றுக்குள் பொத்தென்று போட்டது.

“என்னது அது?” என்று விசாரித்தது மனைவி காகம் காகாயினி.

“பொறுத்திருந்து வேடிக்கையைப் பார்...” என்று ஒரு இறக்கையால் காகாயினியை அணைத்து புற்றின் மீதிருந்து கண்ணெடுக்காமல் அமர்ந்திருந்தது புருஷன் காகாஸ்வரன்.

சிறிதுநேரத்தில் ஐந்தாறு ஆட்கள் அந்தப் புற்றருகில் அவசர அவசரமாக சூழ்ந்துகொண்டார்கள். கையிலிருந்த கோடாலியாலும் ஈட்டியாலும் அந்தப் புற்றை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். பாம்பை அடித்துக் கொன்று விட்டு அங்கே பளபளவென்று ஜொலித்த வைர அட்டிகையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். பொண்டாட்டி காக்காவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

இறக்கையால் கட்டிப் பிடித்து அலகோடு அலகாக முத்தமிட்டு “எப்படி இது
நடந்தது?” என்று வெற்றிக் கதை கேட்டது.

“ராணி பக்கத்துக் குளத்திற்கு தினமும் குளிக்க வருவார்கள். அவரது நகையை கொத்திக் கொண்டுவந்து பாம்புப் புற்றில் போட்டுவிடு. வீரர்கள் ஓடி வந்து புற்றை அழித்து பாம்பையும் கொன்று போடுவார்கள். நீ இந்த மரத்தை விட்டு நகராமல் மகிழ்ச்சியாக காலம் தள்ளலாம்... என்று நண்பர் நரியப்பன் ஐடியா கொடுத்தார். பாம்பு பக்கிரி தீர்ந்தான்” என்று சொல்லி இறக்கைகளைச் சடசடத்தது.

“கா..கா...கா..கா..” என்று இருவரும் டூயட் பாடினார்கள்.

சுபம்.

*
பாட்டி வடை சுட்டக் கதையில் காகத்தை பாடச் சொல்லி ஏமாற்றிய நரி இந்தக் கதையில் அதற்கு உபகாரம் செய்து பாவத்தைக் கழுவிக்கொண்டது.

பின் குறிப்பு: இக்கதையின் மூலம் கன்னடம். ஏகே ராமானுஜன் தொகுத்து ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நாட்டுப்புறக் கதைகள் புஸ்தகத்திலிருந்து உருவினேன். கதைக் கருவைச் சிதைக்காமல் என் போக்குக்கு கேரெக்டர் பெயர் கொடுத்து எழுதி இறுதியில் க்ளைமாக்ஸ் இணைத்து சுபம் போட்டது அடியேனின் துடுக்குத்தனம்.

கணபதி முனி - பாகம் 16 : சுக்லாம்.. பரதரம்.. விஷ்ணும்... ப்ராம்மண ஸ்வாமி......

ஒரு நாள் தனது அத்யந்த சிஷ்யரான விஸ்வநாதனுடன் அருணை மலை ஏறினார் கணபதி. ”ஏனிந்த திடீர் கிரியேற்றம்?”. விஸ்வநாதனுக்கு கேள்வி மண்டையைக் குடைந்தது. மௌனமாகக் குருவைப் பின் தொடர்ந்தார் விஸ்வநாதன். மலையேறுவதின் நோக்கம் சட்டென்று புரியவில்லை. காற்று வீசி தலையைக் கலைக்க விரூபாக்ஷி குகையை வந்தடைந்தனர். கணபதி உள்ளே நுழைந்தார். யாருமில்லாமல் ”ஹோ...”வென்று இருந்தது.

”ப்ராம்மண ஸ்வாமி இங்கேதான் இருப்பார் என்று ஓடிவந்தேன் ..” கண்களைக் குகையைச் சுற்றிலும் இண்டு இடுக்கு விடாமல் தீவிரமாக ஓட விட்டார் கணபதி. ஊஹும். காணவில்லை. சற்று நேரம் இப்படியும் அப்படியும் தேடினார்கள். கீழே அண்ணாமலையாரின் கோபுரம் கம்பீரமாக விண்ணுக்கு வளர்ந்து நிற்பது தெரிந்தது. “சரி.. அவரை அடிவாரத்தில் தரிசிப்போம்...” என்று இருவரும் மலையிலிருந்து விடுவிடுவென்று இறங்கி நேரே பத்மநாபஸ்வாமி ஆஸ்ரமத்திற்கு விரைந்தனர்.

உள்ளே நுழைந்ததும் கண்ணெதிரே கௌபீனத்தோடு ஞானஸ்வரூபமாய் ப்ராம்மண ஸ்வாமி ஒரு மூலையில் சாந்தம் ததும்ப அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட உடனேயே காசியில் “துர்க்காமந்திர் யோகி” சொன்னது நினைவுக்கு வந்தது. துர்க்காமந்திர் யோகி என்ற நாமகரணத்துடன் சாட்சாத் சிவபெருமானே விஜயம் செய்து கணபதியுடன் பேசியது, கடிதத்தில் கணபதியின் கோட்டோவியத்தை வரைந்தது, போன்ற அற்புதங்களை இத்தொடரை விடாமல் படித்து வருபவர்களுக்கு நியாபகம் இருக்கலாம். அந்த யோகி “ஸ்தூலசிரஸ்” என்று அன்று காசியில் கணபதிக்கு விளக்கிய சன்னியாசத் தன்மைகள் நிரம்பப் பெற்றவராக ப்ராம்மணஸ்வாமி தெரிந்தார். கருணை பொழியும் கண்களுடன் அவரிடம் ஒரு பிரம்ம தேஜஸ் சுடர்விட்டதைக் கணபதி கண்டுகொண்டார். ஆன்மிகத்தின் உச்சத்தில் அவர் தெய்வாம்சமாக அமர்ந்திருப்பது கணபதியின் ஞானக் கண்ணுக்குப் புலப்பட்டது.

யோகிகளும் ஞானிகளும் சத்சங்கமாகக் கூடிய அந்த ஆஸ்ரமத்தில் சிறிது நேரம் இருவரின் கண்கள் மட்டுமே பரஸ்பரம் பேசிக் கொண்டன. சதஸில் நடுநாயகமாக வீற்றிருந்த பத்மநாபஸ்வாமிக்கு கணபதியின் சம்ஸ்கிருத பாண்டித்தியத்தின் அசர அடிக்கும் தன்மை தெரியும். அங்கே நிலவிய மௌனத்தைக் கலைத்து ”கணபதி! சுக்லாம் பரதரம் விஷ்ணும் என்கிற கணேச ஸ்லோகத்திற்கு பாஷ்யம் சொல்லேன்.....” என்று ஆரம்பித்துவைத்தார்.

வெல்லக்கட்டியாய் அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தார். அன்று ஆஸ்ரமத்தில் குழுமியிருந்தவர்கள் பூர்வ ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்கவேண்டும். அந்த குட்டியோண்டு நாலுவரி பிள்ளையார் ஸ்லோகத்திற்கு நானாவிதமான விளக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். அக்ஷரம் அக்ஷரமாக நிறுத்திப் பொருள் சொன்னார். பக்தஜனம் பிளந்த வாயை மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. 

இப்பிரசங்கத்திலிருந்து சூட்சுமமாக எழுந்த ப்ரவண ஸ்வரூப விக்னேஸ்வரர் அந்த ஆஸ்ரமம் முழுவதும் ஆக்கிரமித்தார். பத்மநாபஸ்வாமி பக்திப் பரவசமடைந்தார். இந்தக் கூட்டத்தில் சலனமேயில்லாமல் ஒரு மூலையில் ப்ராம்மண ஸ்வாமி சிவனேன்னு அமர்ந்திருந்தார். கொடுத்த விளக்கங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தார்ப்போல “சுக்லாம் பரதரம் விஷ்ணும்..”மை ப்ராம்மண ஸ்வாமியோடு ஒப்புமைப்படுத்தி அதிரடியான பிரவசனத்தில் இறங்கினார். ஆச்சரியத்தில் கூட்டம் நிமிர்ந்தது.

”கௌபீனம் அணிந்திருப்பதால் அவரே சுக்லாம்பரதரா. முற்றும் உணர்ந்து சர்வவியாபியாக இருப்பதால் அவரே விஷ்ணு. சந்திரனைப் போல ஜொலிக்கிறார். மனம், ஐம்புலன்கள், சிந்தனை, சுயம் ஆகியவற்றை வென்ற சதுர்புஜர். அமைதி கொஞ்சும் முகத்தவராதலால் ப்ரச்சன வதனர். தன்னிடம் சரணாகதியடைந்து தியானிப்பவர்களின் வாழ்வில் இடறும் தடைகளைக் களைகிறார்”

இதைக் கேட்கக் கேட்கப் பக்தர் கூட்டம் பேருவுவகை அடைந்தது. கரவொலி எழும்பி ஆசிரமக் கூரையைத் தட்டியது. எதற்கும் சலனமில்லாமல் அமர்ந்திருந்த ப்ராம்மண ஸ்வாமி சன்னமாக புன்முறுவல் பூத்தார். அகவொளி வாய் வழியே தவழ்ந்து வந்து பளிச்சிட்டது.

சரியாக ஒரு மாதம் கழித்து கணபதியின் மனைவி விசாலாக்ஷியும் ஐந்து வயது மகன் மஹாதேவ சாஸ்திரியும் அருணாசலத்திற்கு வந்திறங்கினார்கள். வந்த கையோடு இருவரையும் அழைத்துக்கொண்டு ப்ராம்மண ஸ்வாமியை ஆசிரமத்தில் தரிசித்து குடும்ப சகிதம் நமஸ்கரித்தார். ஆசீர்வாதம் பெற்றார். ஆனால் இன்னமும் ப்ராம்மண ஸ்வாமியை அவரே கதியென்று முழுச் சரணாகதியடைய கணபதிக்கு உத்தரவாகவில்லை. காலம் உருண்டது. கணபதி திருவண்ணாமலையில் நிலைகொண்டார்.

இதற்கிடையில் கல்பாத்தி ராமஸ்வாமி என்கிற சிஷ்யர் கணபதி அருணாசலேஸ்வரரைத் துதித்து இயற்றிய ஹரசகஸ்ரத்தை அவரது கிராமத்துக்கு படியெடுக்கக் கொண்டு சென்றார். எதிர்பாராத விதமாக அவர் அங்கேயே இறந்துவிட ஹரசகஸ்ரம் தொலைந்து போனது ஏனைய சிஷ்யர்களுக்கும் பக்தர்களுக்கும் பெருத்த ஏமாற்றம்.

*

திருவண்ணாமலையில் தபஸுக்காகத் தங்கியதிலிருந்து முறைப்படி ரிக் வேதம் கனபாடமாகக் கற்கவேண்டும் என்பது கணபதியின் அவா. காதல். வேதத்தைக் கரைத்துக் குடித்த கனபாடிகள் ஒருவரிடம் சேர்ந்து முறைப்படி ரிக் படித்தார். ஒரு வருடத்திற்குள் மனனம் செய்து சப்ஜாடாக மூளைக்குள் ஏற்றிக்கொண்டு அதற்கான பொழிப்புரைகளையும் பலர் எழுதிய பாஷ்யங்களையும் கரைத்துக் குடித்து முழுத் தெளிவு பெற்றார்.

கணபதி இப்போது வேத விற்பன்னராகிவிட்டார். வேதோக்த சடங்குகளைப் பற்றியும் இந்துமத சம்பிரதாயங்களில் ஏற்படும் இன்னபிற சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வது அவருக்கு முழுநேர வேலையாயிற்று. பஞ்சகச்சமும் கட்டுக்குடுமியுமாக ஒரு சிஷ்யப் பட்டாளம் அவர் பின்னால் எங்கும் சென்றது. அவர் புகழ்பாடவும் சொல் கேட்கவும் ஏராளமானோர் திரண்டனர். இப்போதும் அவரது தவத்தைத் தொடரமுடியாமல் போனது.

சென்னையிலிருந்து சாத்தஞ்சேரி ஏ. ராமஸ்வாமி என்பவர் கணபதியைக் காண பிரத்யேகமாக அருணாசலத்திற்கு ஒரு நாள் வந்திருந்தார். ஹை கோர்ட்டில் கிளர்க் உத்யோகம். பார்த்த கணமே தொபேரென்று நெடுஞ்சாண்கிடையாக கணபதியின் பாதங்களில் விழுந்து சேவித்தார். கணபதியின் பாதாரவிந்தங்களைத் தொடும் போது ராமசாமிக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி பொங்கியது. பூரணமான ஏதோ ஒன்று உள்ளத்தை மொத்தமாக நிறைத்தது. ஜென்மஜென்மாந்திரமாகப் பழகிய அத்யந்தர் ஒருவரை ஸ்பரிசித்தது போல உள்ளம் இனித்தது. பரமானந்தத்தில் திளைத்து தன்னை சிஷ்யனாக்கிக்கொள்ளும்படி விஞ்ஞாபனம் செய்தார். அவருடைய அதிர்ஷ்டம் “சரி.. ” என்று கணபதியும் உடனே ஒத்துக்கொண்டார்.

அவ்வப்போது இருவரும் விஸ்ராந்தியாக உட்கார்ந்திருக்கும் வேளைகளில் கோர்ட் ராமஸ்வாமியின் பூர்வாசிரமக் கதைகளைக் கேடறிந்தார் கணபதி.

“எனது பாட்டனார் பக்திப் பழம். இஷ்ட தெய்வங்களைத் துதித்து ஏராளமான கிருதிகளை இயற்றியுள்ளார். பல உபநிஷத்துக்களுக்கு ஆளை இழுத்துப்போடும் பாஷ்யங்களை எழுதியுள்ளார். தியோசாஃபிகல் சொஸைட்டியினர் அதை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். உபநிஷத் ப்ரம்மம் என்றே அவரை ஊர் அழைத்தது. தியாகப்ரம்மத்தின் தகப்பனாரின் ஸ்நேகிதர் அவர். தியாகராஜர் காஞ்சி விஜயத்தின்போது உபநிஷத் ப்ரம்மத்தின் ஆஸ்ரமத்தில் இளைப்பாறினார்...”

இவ்வாறாக பழைய ருசிகரமானச் செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கும் போது ராமஸ்வாமிக்கு கணபதி முனி போன ஜென்மத்தில் தனது பாட்டனார் உபநிஷத் ப்ரம்மம்தான் என்று ஏனோ மனசில் பட்டது. அதுவே சத்தியம் என்று தீர்மானித்தார்.

”ஸ்வாமி! எங்கள் பாட்டனாரே உங்கள் ரூபத்தில் இப்புவியில் அவதரித்திருக்கிறார் என்று எனக்குப் படுகிறது. அவரது ரத்தசம்பந்த சந்ததியினாரன எங்களுக்கு உங்கள் அருளாசி வேண்டும். மேலும் எனக்கும் மந்திர தீக்ஷை அளித்து காத்தருள பணிகின்றேன்” என்று கைகூப்பி காலடியில் அமர்ந்தார். அவருக்கு கணபதி ”கணேச மந்திர” தீக்ஷை அளித்தார்.

இதிலிருந்து பிரதி மாதம் ராமஸ்வாமி ஐயர் சென்னையிலிருந்து அருணாசலத்திற்கு வந்து கணபதியை தரிசிப்பதை வழக்கமாக்கிக்கொண்டார். ஒவ்வொரு முறையும் “நீங்கள் ஒரு முறையாவது சென்னைக்கு எங்கள் அகத்துக்கு எழுந்தருள வேண்டும்.” என்று கைகூப்பி அன்பொழுக அழைப்பார். அதற்கு இசைந்து ஒரு முறை கணபதி சென்னைக்கு வந்தார். ராமஸ்வாமி ஐயரின் அம்மா தொண்டு கிழம். கூன். கண் பார்வை போய் பல வருடங்களாகிவிட்டது. கணபதியின் காலில் விழுந்து நமஸ்கரித்தார்.

ராமஸ்வாமியின் கையைத் தொட்டுக் கூப்பிட்டு “பல வருஷத்துக்கு மின்னால் இந்தத் திருவடியின் ஸ்பரிசத்தை உணர்ந்திருக்கிறேன்” என்று சொன்னபோது அவருக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. உபநிஷத் ப்ரம்மம்தான் கணபதியாக அவதரித்திருக்கிறது என்பதை தெய்வசாட்சியாக நம்பினார். முதிய அன்னையை விட்டு அகல மனமில்லாததால் தூர பிரதேசங்களிலிருந்து வந்த பல உயரிய பதவிகளை உதறினார் ராமஸ்வாமி ஐயர். இத்தகைய தாய் பக்தியைக் கண்டு ராமஸ்வாமியை மெச்சினார் கணபதி.

கணபதி முனியின் வருகையை அறிந்து அடுத்த நாள் பஞ்சகச்சமும் குடுமியுமாக மூவர் ராமஸ்வாமி ஐயரின் கிரஹத்துக்கு வந்தனர். அதில் டாம்பீகமாக இருந்தவர் பஞ்சாபக சாஸ்திரி. வக்கீல் தொழில். தேஜஸாக இருந்தவர் வேதம் வெங்கடராய சாஸ்திரி. புகழ் பெற்ற சம்ஸ்க்ருத பண்டிட். மூன்றாமவர் பெஸ்ட் அண்ட் கோ அதிபர் தண்டலம் சுப்ரமண்ய ஐயர். எல்லோரும் பல சமாசாரங்களைப் பேசிக் கொண்டிருக்கும் போது கணபதி ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை மடமடவென்று மாரியாகப் பொழிந்தார்.

அது....

வீல் சேர்

பரபரப்பான மாலை. மௌண்ட் ரோடில் இம்மி பிசகாமல் வண்டி ஓட்டவேண்டிய கட்டாயம். மென்னியை முறிக்கும் ட்ராஃபிக். காலை அகட்டி ப்ளாட்ஃபாரமோரம் நின்றாலும் சந்து கிடைத்த கேப்பில் ஆட்டோகாரர் நுழைந்துவிடுவார். சாந்தி, தேவியெல்லாம் தாண்டிய திருப்பம். அஸெம்பிளியாகப் பிறந்து ஹாஸ்பிடலாக உருமாறியக் கட்டிடத்தின் எதிர் கரை. ”அப்டி ஓரமா நில்லுங்க.. ரொம்ப நாளி நின்னா டோ பண்ணிட்டு போயிருவேன்...” கண்டிக்கும் சார்ஜெண்ட். சர்ஜிகல் கடைகளின் மும்முரமான வியாபார நேரம்.

“வீல் சேர் ஒண்ணு வேணும்.”

“இதோ இங்க இருக்கு பாருங்க.. இப்படியா? இல்ல வேற மாடலா?”

“இது ஓகே.. வேற என்னவெல்லாம் மாடல் இருக்கு?”

“ஆள் எப்படி இருப்பாங்க..”

“ஒல்லியாதான் இருப்பாங்க.. ஆனா பெரிய வீல் வச்சது வேணாம்...”

“இருங்க கொண்டாரேன்..”

அவர் கொண்டு வருவதற்குள்...
கார்வண்ணமாக இருந்தார். வயது: ஐம்பதுகளின் கடைசியில் இருப்பார். முன் பக்கம் பளபளப்பாகச் சொட்டை விழுந்திருந்தது. அரைவாசி மீதமிருந்த பாகத்தில் முளைவிட்ட முன்னூறு மயிர்களை நாலாபக்கமும் பரவவிட்டு கபாலத்தைக் கவனமாக மூடியிருந்தார். சிரித்த முகம். முன் காலில் தையல் போட்ட கறுப்பு ஷூ. சலவை செய்த ஷர்ட் பேண்ட். இதோ வந்துவிட்டார்.

“ம்.. இதைப் பாருங்க.. சின்ன வீலு. காத்தெல்லாம் அடிக்க வேண்டாம். இம்போர்டட். மலேசியா ப்ராண்டு.”

“ஸ்டாப்பர் இருக்கா?”

“ம்.. பின்னால பிடிச்சு.. இதோ.. இங்கப் பாருங்க.. இப்படி அழுத்தினா வீல்ல ப்ரேக் பிடிச்சுடும்.”

“இதை எப்படி மடக்குவீங்க?”

“பின்னால இருக்கிற இந்த லிவரை அழுத்தினீங்கன்னா... முதுகு சாயிற பக்கம் பின்பக்கம் கவுந்துடும். அப்புறம் உட்கார்ற இடத்துல நடுப்பற கீழே அழுத்தினா ரெண்டு கையும் உள்பக்கம் மடங்கிடும். அப்படியே மடிச்சுத் தூக்கி கார்ல, பஸ்ல, ஃப்ளைட்லன்னு எங்க வேணா தூக்கிக்கிட்டுப் போவலாம். எட்டு கிலோ தான் மொத்த வெயிட்டு...இதோ இப்படி ஒத்தைக் கையால தூக்கலாம்.. ”

கிட்டத்தட்ட அசராமல் அரை மணி நேரம் வீல் சேரைப் பற்றி பிரசங்கம் செய்தார். இடையிடையே யாருக்கு வாங்குறீங்க? கொஞ்சமாவது நிப்பாங்களா? எவ்ளோ தூரம் தள்ளணும்? அடிக்கடி வெளியில கூட்டிக்கிட்டுப் போவீங்களா? டாய்லெட்டு எந்திரிச்சு போவ முடியுமா? இல்லேன்னா கம்மோடு வச்சுத் தரட்டா? போன்ற தேர்வு செய்வதற்கு ஒத்தாசையானப் பல கேள்விகள்.

“கைப்பிடியில ஏதோ பெயிண்டு போன மாதிரி இருக்கே. பரவாயில்லையா?”

“சரியாத்தான் இருக்கு. டெஸ்ட் பண்ணி எடுத்தாந்தேன்... “

“வேற பீஸு இல்லையா?”

“சரி.. நீங்களும் கூட வாங்க.. பார்க்கலாம்...”

பல சைஸ் அட்டை பெட்டிகள் கோபுரமாய் அடுக்கியிருந்த ஸ்டோர் ரூமில் இன்னொரு வீல்சேர் பாக்கெட்டைப் பிரித்தார். நிமிர்த்தி உட்காரவைத்தார். கைப்பிடி சரியாக உட்கார அடம்பிடித்தது. டக்டக்கென்று அசைத்தார். ஊஹும்.

“சொன்னேன்ல.. அது நல்ல பீஸு.. ஒரு பொட்டு பெயிண்டு போனா பரவாயில்லை... இதுல கைப்பிடியே நிக்க மாட்டேங்குது.. உருவிடுச்சுன்னா?”

”சரி.. அதையே எடுத்துக்கறேன்..”

மீண்டும் ஒருமுறை வீல்சேரை டெஸ்ட் செய்தார். பில் போட்டார்.

“கார்ல வந்தீங்களா?”

”ஆமாங்க..”

”கொண்டு வந்து தரட்டுங்களா?”

“இல்ல பரவாயில்லை... நானே தூக்கிட்டு போறேன்...”

“கூடிய சீக்கிரம் எந்திரிச்சு நடப்பாங்க.. கவலைப்படாதீங்க...”

திரும்பிப்பார்த்தேன்.

சிரித்தார். கடைக்குள்ளே திரும்பினார். அப்போதுதான் கவனித்தேன்.
வலதுகாலை லேசாக இழுத்துக்கொண்டு நடந்தார்.

ஆண்டவன் அதற்குமேல் அவரைச் சோதிக்கமாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கொலு டூர் 2014‬

”வெத்திலைப் பாக்கு வாங்கிக்க...” என்று வீடு வீடாக விஸிட் செய்யும் விருந்தின சம்பிரதாயம் ஒன்று கொலுக் காலங்களில் வழக்கில் உண்டு. ஹோம் மினிஸ்டரை அழைத்துச் செல்லும் இல்லங்களில் மினி ஜாங்கிரி, ஹல்டிராம்ஸ் சோன்பப்டி, ஒரு வாய் காஃபி, தட்டை, கொ.கடலை சுண்டல் என்று வண்டியோட்டிய நமக்கும் ஒரு ப்ளேட் சன்மானமாகக் கிடைக்கிறது.
அத்யந்த நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. ஐந்து படி, ஏழு படி, டைனிங் டேபிள் மற்றும் ஸ்டூலுடன் சேர்த்து ஒன்பது படி என்று விதம் விதமான கொலுக்கள். தேவாதி தேவர்கள் பல ரூபத்தில் காட்சி தருகிறார்கள். பார்த்த முக்கால்வாசி கொலுவில் சீரியல் பல்பை சிவன் கழுத்தில் பாம்பாகப் போட்டிருக்கிறார்கள். செட்டியார் முன் அரிசி, புளி, பருப்பு வகையறாக்கள் சொப்பு சாமான்களில் வைத்திருக்கிறார்கள். அஷ்டலக்ஷ்மி அநேகமாக எல்லா வீட்டிலும் கொலுவீற்றிருக்கிறார்கள். படிக்கொரு பிள்ளையார் வீற்றிருக்கிறார். இடுப்பில் கையோடு பாண்டுரங்கர், லக்ஷ்மி நரசிம்மர், அர்த்தநாரி, மரப்பாச்சி.... ப்ளாஸ்டிக் சம்படமாவது கட்டாயம் கிஃப்ட்டாக உண்டு.
நண்பர் சத்யாவின் வீட்டில் பசங்களுக்கு ஐஸ்க்ரீம் சுண்டல். யாருக்கு எப்படி வலைவிரிப்பது என்பது சத்யாவிற்கு கைவந்த கலை. சத்யாவின் கடைக்குட்டியை ”சு...ரு..தி..” என்று கொண்டை வைத்த வடிவேலு மாதிரி அழைத்து என் உள்ளத்தில் மகிழ்ச்சியை நிரப்பிக்கொண்டேன். சங்கீதாவின் ஸ்நேகிதி வீட்டில் ஒன்பது படி. படியோரங்களில் ஜிகினா பேப்பர் ஒட்டி ஜிலுஜிலுவென்று இருந்தது கொலு. என் புத்ரிகளின் திருப்புகழ் கச்சேரி அமோகமாக நடந்தது. அப்போது அங்கு வந்திருந்த சக ”வெத்திலைப் பாக்கு வாங்கிக்க...” பார்வையாளர் தம்பதி சமேதராகத் திருவேங்கடமுடையானைப் பற்றி அற்புதமாகப் பாடினார். செவிக்கின்பம்.
“எங்கப்பா தொன்னுத்தெட்டு வயசு வரைக்கும் இருந்தார். கடேசி வரைக்கும் டென்னீஸ் கிரிக்கெட்ன்னு விளையாடிண்டு, கேரம்ல ரெட் அண்ட் ஃபாலோ பாக்கெட் பண்ணிண்டு திடகாத்திரமா இருந்தார்...” என்று அவர் சொன்னபோது மனசுக்குள் ஒரு முறை பௌலிங் செய்ய ஓடிப்பார்த்தேன். மூச்சு வாங்கி இரைத்தது. சொன்னவர் முகத்தில் அப்படியொரு பெருமிதம். ”பாரதம்... ராமாயணம்னு டிஸ்கஸ் பண்ணுவோம். கம்பீரமா பேசுவார். பியெஸ்ஸி பிஸிக்ஸ் படிக்கறச்சே கூட அடி வாங்கியிருக்கேன்...” என்று காலர் தூக்கிக்கொள்ளும் பெருமையாகச் சொன்னார்.
திருமதி கோமதி ராஜாராம் அவர்களது வீட்டில் மனோகரமான ராதேகிருஷ்ணர் வரவேற்றார். திருவாளர் ராஜாராமிற்கு சங்கீதத்தில் அப்படியொரு லயிப்பு. வயலின், கீபோர்டு, மிருதங்கம் என்று இழுத்தல், அமுக்குதல், தட்டுதல் வாத்தியங்களைப் பூஜை போட்டு வைத்திருந்தார். நந்தினி”அம்பா தர்மசம்வர்த்தினி..” பாட நீல்கமல் ப்ளாஸ்டிக் சேரில் தாளமிட்டு அவரது வாசிக்கும் ஆசையை பூர்த்திசெய்துகொண்டார். அவரது வீட்டில் பைரவ் கூட வாலாட்டி “ஊஊஊ...” என்று ராகம் பாடுகிறது. மனைவிக்கு வெத்திலைப் பாக்கோடு எனக்கு தசமஸ்கந்தம் பரிசாகக் கொடுத்து என்னை மகிழ்ச்சியின் உச்சியில் உட்காரவைத்தார். இன்னும் நான் அங்கிருந்து இறங்கவில்லை.
அண்ணாத்தே சுரேஷ் சீனுவின் சென்னை வீட்டைச் சுற்றிலும் மன்னை மாந்தர்கள். மந்தக்காரத்தெரு மாமி ஒருவரைப் பார்த்தேன். ”ஊர்க்காராளைப் பார்த்ததும் ஊருலகம் மறந்து போயிடுமே..” என்று லேட்டாக வீடு திரும்பும்போது இடி வாங்கினேன். கீதா மன்னி அவர்கள் அவரது தந்தையார் திரு. வ.சா.நாகராஜன் கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு புஸ்தகம் கொடுத்தார்கள். நான் பிறப்பதற்கு முன்னதாக கலைமகளில் வெளிவந்த “அவர் சிரிப்பு” படித்தேன். ஒரு ஹானஸ்ட் ஆஃபீஸரின் கதை. சுருக்கென்று எழுதியிருந்தார் வ.சா.நா. மனசைத் தைத்தது. கல்கியில் வெளிவந்த ”மோர்க் குழம்பு” குடிக்கணும். சாரி படிக்கணும்.
நான் பார்த்து வளர்ந்த குழந்தை, எங்களூர் மாணிக்கம் சௌமி சென்னையில் வைக்கும் முதல் கொலு. டிசம்பரில் குட்டிக் கிருஷ்ணனோ, ராதையையோ எதிர்பார்க்கும் நேரத்திலும் ஐந்து படிக்கு கொலு வைத்து சுண்டல் செய்கிறது. பார்ப்பதற்கு மகிழ்ச்சியும் பூரிப்பும் வருகிறது. ஊரிலிருந்து சௌமியின் 90+ பாட்டியும் வந்திருந்தார். என் பாட்டியின் செட். என் பாட்டிக்கும் சேர்த்து அப்பாட்டியை நமஸ்கரித்து ”தீர்க்காயுசா இருக்கணும்டா தம்பி...” ஆசீர்வாதம் பெற்றேன்.
இது போன்ற கொலு விஸிட்களில் நிறைய பாட்டிகளையும் தாத்தாக்களையும் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. தங்களது காலத்து சம்பிரதாயங்களை விடாமல் நிறைவேற்றும் வைராக்கியத்துடன் இருக்கிறார்கள். பரஸ்பரம் பரிசுப் பொருள் பரிமாறிக்கொள்ளும் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டின் பழக்க வழக்கங்களும் மரபுகளும் அறியக் கிடைக்கிறது. அனைத்துக்கும் மேலாக எப்போதும் சார்த்திக் கிடக்கும் பட்டணத்து வீடுகளின் கதவுகள் கூட விசாலமாகத் திறந்துகொள்கிறது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails