Friday, November 28, 2014

பந்து ரூபத்தில் வந்த காலன்

ஃபின்லே ஸ்கூல் க்ரௌன்ட் நேஷனல் ஸ்கூல் க்ரௌன்டை விடப் பெருசு. எந்நேரமும் மூணு மேட்ச்சாவது நடக்கும். அந்தக் கடைசி பிட்ச் அநியாயத்துக்கு uneven பௌன்ஸ் ஆகும். மண்வெட்டியால கொத்திப் போட்டா மாதிரியான பிட்ச். விஜய், சூரி, பாலாஜி, முரளி, சீனுன்னு ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரோடயும் விளையாடிய ஃப்ரெண்ட்லி மேட்ச் அது. மத்தியான நேரம். பொட்டை வெய்யில். தையல் போட்ட கிரிக்கெட் பால் கிடைக்கலை. அதனால கிரிக்கெட் பாலோட ஒண்ணு விட்ட தம்பி “விக்கி ப்ராண்ட்” கார்க் பால் வாங்கி விளையாண்டோம்.

க்ரௌண்டுக்குப் போற வழியில சீனு வீடு. ஃப்ரிட்ஜ்க்குள்ளே அவனுக்காக இருக்கும் கூல்ட்ரிங்க்ஸுல பாதியைக் குடிச்சுட்டு அவனையும் சைக்கிள்ல அழைச்சுக்கிட்டு க்ரௌண்ட் போனோம். காலுக்கு Pads கிடையாது. முட்டி பேந்துசுன்னா அடுத்தநாள் ஸ்கூலுக்கு லீவ் போட்டுடலாம். ஜாலி. இடது கைக்கு மட்டும் க்ளௌஸ் போட்ருந்தோம். அப்டமன் கார்டு கட்டாயம்உண்டு. ஆனா மேட்ச்சுக்கே ஒண்ணு தான். ஒருத்தன் அவுட் ஆனப்புறம் அடுத்தாள் அதை இடது கையால வாங்கிக் கீழே தட்டிட்டு தரையில சரக்சரக்குன்னுத் தேய்ச்சுட்டு பாண்ட்டுக்குள்ளே சொருகிக்கணும்.

விக்கெட் கீப்பர் தவளையாயும் குரங்காயும் எம்பிக் குதிச்சு பிடிச்சுக்கிட்டிருந்தான். சீனு பேட்டிங். நான் ஃபாஸ்ட் பௌலர். ஒரு ஓவர் என்னை அடிச்சுத் துவம்சம் பண்ணினான். என்னோட அடுத்த ஓவரும் க்ராஸ் பேட் ஆடி, தில்லையம்பல நடராஜர் மாதிரி தூக்கிய பாதத்தோட ஆஃப் சைட்ல விழுந்த பந்தைக் கூட வாரி லெக் சைட்லயே பொளந்துக்கிட்டிருந்தான். எனக்கு சுர்ர்ருனு கோவம் வந்திருச்சு. ஹீ மேன்ல ஆகாசத்துக்குக் கத்தியைக் காட்டி பவர் எல்லாம் வாங்கிக்கிறா மாதிரி கையை மேலே உசத்தி ஒரு சுத்து சுத்திட்டு ஓடி வந்து அரைப் பிட்சுல பாலை ஓங்கிக் குத்தினேன். லெக் அண்ட் மிடிலில் விழுந்த பந்து.

கார்க் பால் பிட்ச்சுக்கு அப்புறம் இன்னொரு மடங்கு வேகம் எடுக்கும். பந்து பிட்ச்சுல குத்தினதுதான் தெரியும். அடுத்த செகெண்ட் கையிலிருந்த பேட்டை விசிறியடிச்சுட்டு மூஞ்சியைப் பிடிச்சிக்கிட்டு சீனு பிட்ச்சிலேயே குத்த வச்சு உட்கார்ந்துட்டான். பாடிலைன் கிரிக்கெட்னு பேர். எல்லோரும் அலறியடிச்சுக்கிட்டு அவன்கிட்டே ஓடினோம். பந்து நெத்தியில பட்டு புஸுபுஸுன்னு எலும்பிச்சம் பழ சைஸுக்கு வீங்கிடிச்சு. பெவிலியன் மரத்தடியில பாபி ஐஸ்காரன் குச்சி ஐஸ் பால் ஐஸ்னு வித்துக்கிட்டிருந்தான். அவன் கிட்டே ஓடிப்போயி ஒரு ஐஸ் வாங்கி வீங்கின இடத்துல வச்சு அழுத்திப் பிடிச்சிக்கிடிருந்தேன். கை நடுங்குது. உடம்பெல்லாம் உதறுது. பதறிப் போய்ட்டேன். பொட்டுல பட்டிருந்தா சீனு அன்னிக்கே பட்டுன்னு போயிருப்பான். வீட்டுக்குப் போறப்ப வீங்கின இடத்தைத் தடவிக்கிட்டே சிரிச்சான்.


 மேற்கிந்திய விவ் வெறும் மெரூன் கலர் கேப்போட இறங்கி விளாசுவார். இந்திய ஸ்ரீ ரொம்ப நாள் ஹெல்மெட் இல்லாமதான் விளையாடினார். ஹெல்மெட் போட்டும் ஃபில் ஹ்யூஸ் செத்துப்போனது ரொம்பவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இன்னும் மூணு நாள்ல பர்த்டேவாம். நவம்பர் முப்பதுல இருபத்தஞ்சு முடிஞ்சு இருபத்தாறு. பல்லுல அடி. உள்ளி மூக்கு உடைஞ்சு ரத்தம் கொட்டிச்சுன்னு இருக்கக்கூடாதா? தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்னு பௌன்ஸருக்கு குனிஞ்சுக்கிறது ஒன்னும் அவமானம் இல்லையோன்னு தோணுது.

பந்து வீசிய அபாட்டின் நிலைமை இன்னும் மோசம். மனசுக்குள்ள ”நாம ஒரு கொலைகாரனோ”ன்னு குறுகுறுப்பு இருக்கும். பௌல் பண்றத்துக்கு வரும் ரன்னப்ல ஃபில் நியாபகம் வந்தா கால் ரெண்டும் பின்னிக்கும். இது அபாட் தப்பும் கிடையாது. பேட்ஸ்மேனை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வரணும்னு நினைக்கிற பேஸ் பௌலர்களின் யுக்தி இது. ச்சும்மா மிரட்டறது.

ஃபில்லுக்கு பந்து ரூபத்தில் வந்த காலன்!

4 comments:

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்...
காலன் இப்படி வந்திருக்க வேண்டாம்... பாவம் சாதிக்க வேண்டிய வயசு அண்ணா...
இனி அபாட் கிரிக்கெட்டை விட்டே போகலாம்...

Yaathoramani.blogspot.com said...

காலன் எந்த சாவுக்கும்
பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை என்பார்கள்
இவரின் சாவுக்கு பந்து என்பதைப்போல...

பந்து வீசியவரின் மன நிலை என்னவாக இருக்கும்
என நினைக்க இன்னும் வேதனை அதிகமாகிறது

Anonymous said...

-//மேற்கிந்திய விவ் வெறும் மெரூன் கலர் கேப்போட இறங்கி விளாசுவார். இந்திய ஸ்ரீ ரொம்ப நாள் ஹெல்மெட் இல்லாமதான் விளையாடினார்.//--அவரை தோசை கரண்டி பேட்டிங் என்று கிண்டல் அடிச்சாங்க. ஒரு முறை பேட்டியில் அவரே உடம்பில் பால் படாமல் தட்டி விட்டால் போதும் , அந்த நேரத்தில் ஸ்டைல் எல்லாம் நினைவுக்கு வராது என்று.

வெங்கட் நாகராஜ் said...

பந்தில் வந்த காலன் - வந்திருக்க வேண்டாம்....

பந்து வீசியவருக்கு இப்போதே கௌன்சிலிங் கொடுக்க வேண்டிய நிலை.

பாவம் தான்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails