Thursday, November 27, 2014

திருப்புகழ் கச்சேரியில் பாட்டி

ஆறரைக்கு சாலிகிராமத்தில் ப்ரோக்ராம். வீட்டிலிருந்து ஆறரைக்கு கிளம்பினோம். பாதி தூங்கிக்கொண்டிருந்த சாலைகளினால் ஞாயிற்றுக்கிழமையென்று தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டிகள் சோம்பலாக உருண்டுக்கொண்டிருந்தன. ஒரு வலதுக்கு தப்பிதமாய் இடது திரும்பி பத்து நிமிடம் சேப்பாயிக்கு கூடுதல் வேலை கொடுத்தேன். ”ணா.. சாலிக்கிராமம் காவேரி ரங்கன் நகர்...” என்று வழிகேட்டு “இப்டிக்கா லெப்ட்ல போயி ஷ்ட்ரெயிட்டா...” என்று விரோதமாக எதிர்திசையில் திருப்பிவிட்ட ஆட்டோகாரரை மன்னித்துவிடலாம். வழி தெரியாது என்றால் மானம் கப்பலேறிவிடும் என்று நம்பும் சென்னைப் பழக்கம்.

காவேரி ரங்கன் நகர் காவேரி விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா. சின்னவளும் பெரியவளும் பத்மா மாமியோடும் தோழிகளோடும் திருப்புகழ் கச்சேரி பண்ணப் போயிருந்தார்கள். முக்குக்கு முக்கு விஜாரித்து கோயிலை அடையும் போது ஸ்பீக்கரில் ”முருகா...முருகா..” கோரஸாகக் கேட்டது. கச்சேரி ஆரம்பித்துவிட்டது. சொற்ப கூட்டமிருந்தது. சன்னிதிக்கு நேரேயே நான்கு மைக், ஒரு ஸ்ருதிப் பெட்டி, ஒரு டோலக்கு ஏற்பாடாகியிருந்தது. ப்ளாஸ்டிக் சேர்களில் உட்கார்ந்திருந்தவர்களில் அநேகம் பேர் ரிடையர்ட் ஆனவர்கள். முட்டிக்கு மூவ் தடவியவர்கள்.

பச்சை ஜாக்கெட்டில் வாய் மந்திரமாக “முருகா.. முருகா..” ஒலிக்க பார்வையாளர்கள் ஓரமாக ஒரு பாட்டி. ஒரு ஜான் மல்லி சூடிய தீர்க்க சுமங்கலி. நெற்றியில் துலங்கிய திருநீரும் குங்குமமும் நம்மை மானசீக நமஸ்காரம் பண்ணச் சொன்னது. லலிதா சகஸ்ரநாமமும் கந்த சஷ்டி கவசமும் பாராயணம் செய்திருக்க வேணும். ”மாலாசை...” பாடினாலும் “பத்தியால் யானுனை...” பாடினாலும் தனக்கு மட்டும் கேட்கும்படி பாடினார்கள். சேர்ந்திசையாகத் திருப்புகழ் கேட்டு அவர் கண்களில் ஆனந்தபாஷ்பம். அவரைப் பார்க்கும் நமக்குள் பக்தி ஊறுகிறது.

ஒரு மணி நேரம் காதுக்கு தெவிட்டாத விருந்து. தெரு மணத்தது. திருப்புகழ் பாடி முடித்து வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு அடுக்கு தீபாராதனை ஆயிற்று. கண்களில் ஒற்றிக்கொண்டவுடன் பிரசாதத்துக்கு வரிசை நீண்டது. ஒவ்வொரு வாய் எலுமிச்சை சாதம், தயிர்சாதம். ஒரு கை உருளை வறுவல். காலை நொடித்தபடி வரிசைக்கு வந்த பாட்டிக்குக் கூட்டம் வழிவிட்டு முன்னுக்கு அனுப்பியது. கையில் வாங்கிக்கொண்டு கோபுரவாசலில் செருப்பைத் தேடிக்கொண்டிருந்தார். பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தேன். பாட்டியைக் காணவில்லை. வீடு எங்காவது பக்கத்தில் இருக்கக்கூடும். விடு.

யாரது? தூரத்தில் மங்கிய வெளிச்சத்தில் தாங்கித் தாங்கி நடப்பது தெரிந்தது. பின்னாலிருந்து பார்க்கும் போது இடது கை முழுசாகவும் வலது கை பாதியாகவும் தெரிந்தது. மடக்கிய வலது கையில் பிரசாதமாக இருக்கும். பேரனுக்கோ பேத்திக்கோ. வண்டியை எடுத்துக்கொண்டு போகும் வழியில் இறக்கிவிடலாம் என்று ஓடினேன். திருப்பிக்கொண்டு வரும் போது கண்ணுக்கெட்டியதுவரை யாருமில்லை. ஞாயிறு இரவு. வெறிச்சோடிய சாலை. மக்கள் வீடுகளுக்குள் அடங்கியிருந்தனர்.

 பாட்டிக்கு எந்தத் தெரு? எந்த வீடு? முருகா.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails