Wednesday, December 24, 2014

கணபதி முனி - பாகம் 20 : விசாலாக்ஷியின் புனர்ஜென்மம்

மெரீனாவின் மணல்வெளியில் காற்று தலையைக் கலைக்க நாயுடுவும் கணபதி முனியும் நெடுநேரம் அமர்ந்திருந்தார்கள். கணபதியின் மனசு சஞ்சலத்திலிருந்தது. நாயுடு “என்னாச்சு?” என்று ஆதூரத்துடன் தோள் தொட்டார். கணபதி முனி தொண்டையைச் செருமிக்கொண்டு ஆரம்பித்தார்.

”குலீன: க்ஷுத்ராய ப்ரவர இதி தத்தே நிஜஸுதாம்
அநார்யன் விஞ்ஞாஸ்ச ப்ரபவ இதி காயந்தி ஸதஸ:
பலம் பாஹ்வோர்லுப்தம் ஹ்ருதம்பிச வாக்வைர்யமரிபி:
தஸாம் தேஸஸ்யைதாம் ப்ரதிபதமயம் த்யாயதி ஜன:”

பொருள்: மதிப்பும் மரியாதையுமுள்ள குடியில் பிறந்தோர் தனது பெண்ணை ஒரு தாழ்ந்த குலத்தில் வரன் தேடிக் கொடுக்கிறார். சிலர் இப்படியும் மேன்மையோடு இருக்க இன்னொருவர் பிரபுக்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் போற்றித் துதிக்கிறார். ஆண்களின் வலு குறைகிறது. பேச்சும் எதிரிகளால் கட்டப்படுகிறது. இவண் (இப்பாடலை எழுதுபவன்) இத்தாய் தேசத்தின் அவல நிலையை நினைத்து நினைத்து குமுறுகிறான்.

நாயுடு அமைதியாக அமர்ந்திருந்தார். கடலலைகள் ஆக்ரோஷத்துடன் போட்டி போட்டுக்கொண்டு கரை மோதிக்கொண்டிருந்தது. கணபதியின் முகம் பழமாய்ச் சிவந்திருந்தது. உள்ளக் குமுறல் அடங்காமல் மீண்டும் இன்னொரு ஸ்லோகம் படித்தார். வார்த்தைகள் வெடித்துச் சிதறின.

அரிபிரதயை: க்ராந்தாயை தே முஹுர்முஹுர் ருததை:
கரம் அவிகலம் தாதும் த்சேரோ ந கோபி விலோக்யதே
க்வ தவ தயிதாஸ்தே தே பூர்வே தரே பரதாதயே
யதஜித-புஜ அதுர்காஸ்தாயோஸ்தவாம்ப ந பீஇரபூத்

பொருள்: ஓ! தாய்மண்ணே! அக்கிரமக்காரர்களும் அயோக்கியர்களும் தொடர்ந்து உன் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கிறார்கள். ஒரு நாயகன் கூட இம்மண்ணில் உன்னைக் காபந்து செய்வதற்கு காணவில்லையே! உன் பயத்திற்கு நிழல் தரும் கோட்டையைப் போன்ற விரிந்த தோளுடைய பரதனைப் போல நாயகர்கள் எங்கே!

கடைசியில் அவர் கேட்ட ”எங்கே..” கடற்கரையெங்கும் எதிரொலித்தது. நாயுடுவுக்கு மெய்சிலிர்த்தது. கணபதியின் மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அவருடைய கோபத்தின் ஊற்று புரிந்து போனது. வரம் வாங்கி தாய்மண்ணைக் காக்க அவர் தவமியற்றுகிறார் என்று புரிந்து கொண்டார்கள். கணபதியின் அத்யந்த சீடர்களாகப் பின்பற்றி அவரது இலக்கை அடைய சபதமேற்றார்கள். சென்னையில் ஏற்பட்ட இந்த சத்சங்கத்தினால் மனம் குளிர்ந்தார் கணபதி.

திருவண்ணாமலைக்குத் திரும்பினார்.

வேலூர் ஊரிஸ் கல்லூரிக்கு தெலுங்கு பண்டிட் ஒருவர் அவரசமாகத் தேவைப்பட்டது. பிரின்ஸிபால் சம்பர்லன் ரெங்கையா நாயுடுவிடம் தக்க ஆளைப் சிபாரிசு செய்யும்படி பணித்தார். அன்றிரவே ராமஸ்வாமி ஐயரும் ப்ரோஃபஸர் நாயுடுவும் திருவண்ணாமலைக்கு பஸ் பிடித்தார்கள்.

“நீங்கள் இந்த உத்யோகத்தை ஏற்றுக் கொள்ளவேணும்.” என்றார் ஐயர்.

“இப்போது நீங்கள் வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் மிக அதிகம். தயவுசெய்து மனசு வைக்கணும்” என்றார் நாயுடு.

இருபுறத்திலும் நின்று கொண்டு இருவரும் வற்புறுத்தியதில் ஊரிஸ் கல்லூரியில் தெலுங்கு கற்றுக்கொடுக்கும் ஆசானாக 1904ம் ஆண்டு வேலையில் சேர்ந்தார். கணபதி ஊரிஸ் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல்நாள் அங்கிருந்த ஹை ஸ்கூல் பிரிவின் ஹெட் மாஸ்டர் தாமஸ் ஹாரி அவரின் தேஜஸில் சொக்கிப் போய் இருகையையும் குவித்து “நமஸ்காரம்..” என்று ஏக மரியாதை கொடுத்து வரவேற்றார். குழுமியிருந்த ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் ஊரிஸ் கல்லூரியின் புதிய சகாப்தம் இப்போதிலிருந்து தொடங்குகிறது என்று புரிந்து கொண்டார்கள்.

ஊரிஸ் கல்லூரியில் முதல்நாள் வகுப்பு தொடங்கிற்று. மேடையில் நின்று வருகைப் பதிவு எடுத்தார் கணபதி. கே.ஜி. சுப்ரமண்ய சாஸ்திரி என்ற பெயர் வந்தவுடன் ஒரு கணம் நின்றார்.

“உன் செல்லப் பெயர் அப்புவா?” என்றார் நிமிர்ந்து.

“ஆமாம்..” என்று ஒப்புக்கொண்ட அப்புக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.

“உன் கடனை நீ வசூலிப்பாய்....” என்று அர்த்தபுஷ்டியாகச் சொல்லிச் சிரித்தார்.
தெலுங்கில் அப்பு என்றால் கடன். இந்த அப்பு ராமஸ்வாமி ஐயரின் அம்மாவின் சகோதரிக்குப் பேரன்.

வக்கீல் உமாமஹேஸ்வர ஐயர் என்பவர் கணபதியிடம் தனக்கு சம்ஸ்க்ருதம் போதிக்கும்படி வேண்டிக்கொண்டார். மாசாந்திர தட்சணையாக பத்து ரூபாய். கணபதிக்கு கூடுதல் வரும்படி. உமாமஹேஸ்வரரின் மனைவி சுந்தரி ராமஸ்வாமி ஐயரின் மருமாள். உமாமஹேஸ்வரருக்கு ஒரு சகோதரி இருந்தார். அச்சகோதரியின் மகளை உமாமஹேஸ்வரரின் பிள்ளை கச்சபேஸ்வரருக்கு கல்யாணம் செய்வித்தார்கள். இந்தக் கல்யாணத்திற்குப் பிறகு உமாமஹேஸ்வரருக்கு ஏகப்பட்ட வீட்டுத் தொல்லைகள். கணபதியைச் சந்தித்தப் பிறகு உமாமஹேஸ்வரரும் சுந்தரியும் தங்களது இன்னல்களைத் தீர்க்கும் அருமருந்தாக அவரை எண்ணினர்.

அப்புவிற்கு உயர் வகுப்பில் படிக்கும் கல்யாணராமன் என்ற சகோதரனும் காவேரி என்கிற சகோதரியும் இருந்தார்கள். சிறுவயதிலேயே பெற்றோரை இழுந்து அனாதையானவர்களுக்கு கணபதியையும் விசாலாக்ஷியையும் அவர்களது அப்பா அம்மாவாகப் பாவித்து தொழுதனர். கணபதி அவர்களுக்கு மந்திர ஜபத்தை அப்யசித்தார்.

கணபதியும் அப்புவும் ஒரு நாள் திண்ணையில் அமர்ந்திருந்தார்கள். அப்பு ஏதோ பேச வாயெடுப்பது தெரிந்தது. ஆனால் தயக்கத்துடன் அமர்ந்திருந்தான். கணபதி “என்னப்பா அப்பு?” என்று கேட்டார்.

“குருவே! எனக்கு இரண்டு நாட்களாக சொப்பனங்கள் வருகிறது. உங்களிடம் சொல்லத் தயக்கம்...” என்று இழுத்தான் அப்பு.

“சொல்லப்பா...”

“முந்தாநாள் என்னுடைய தாத்தாவின் அப்பா உபனிஷத் ப்ரம்மம் சொப்பனத்தில் தோன்றினார்...”

“தோன்றி...”

“உங்களுடைய மனம் கோணாதபடி உங்களுக்குச் சேவை செய்யச் சொன்னார்...”

சிரித்தார் கணபதி. ”இன்னொரு சொப்பனம்?” என்று கேள்வியாய் அப்புவை ஏறிட்டார்.

“ஜடாமுடியுடன் ஒரு முனிவர் தோன்றினார். கூடவே நீங்களும் சொப்பனத்தில் வந்தீர்கள்....”

“ஓ நானுமா? ம்.. வந்து....”

“அவருக்குப் பால் கொடுக்கச் சொன்னீர்கள். நான் பால் கொடுத்தேன். அவர் வாங்கி அதைக் குடித்தார். பின்னர் அப்பனே.. உன்னைப் பிடித்திருந்த சாபம் இன்றோடு விலகியது. உன் குருவின் திருப்பாதங்களை இருகப் பற்றிக்கொள்... மேன்மை கொள்வாய்... என்று ஆசீர்வதித்து மறைந்தார்...”

கணபதியிடம் இதைச் சொல்லிவிட்டு அப்புவிற்கு இரைத்தது. தெய்வத்தின் வழிநடத்தல் இது என்று புரிந்துகொண்டான். குடத்திலிருந்து தண்ணீர் மொண்டு பருகினான். கணபதியைப் பார்த்துக்கொண்டு அவரது காலருகே தாசனாய் அமர்ந்துகொண்டான்.

சிறிதுநாட்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்தித்துவரலாம் என்று திருவண்ணாமலைக்குக் கிளம்பினார் கணபதி. ரயில்நிலையத்தில் “வண்டி சென்று அரை மணி ஆகிறது” என்றார்கள். சோகமாக வீடு திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்ததும் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கூடத்தில் பிரக்ஞையின்றி கிடந்தார் விசாலாக்ஷி. ஆயூர்வேத மருத்துவரும் விசாலாக்ஷியின் மாமாவுமான ம்ருத்துஞ்சயா ”தேகபலமில்லை.. பலஹீனமாக இருக்கிறாள்...” என்று சொல்லி மருந்து கொடுத்தார். அரை மணி ஆன பின்னரும் அசையாமல் கிடந்தார். அப்புறம் சப்தநாடியும் அடங்கி இறந்துவிட்டார்.

விசாலாக்ஷியை மடியில் இட்டு நாடி பிடித்துக் கணபதி பரிசோதித்தார். கொல்லும் அளவிற்கு விசாலாக்ஷிக்கு ஒரு வியாதியும் இல்லை. இன்ன செய்வதென்று தெரியாமல் ம்ருத்தஞ்சயாவும் கணபதியும் பேச்சற்று வாயடைத்துப்போய் நின்றிருந்தார்கள்.

திடீரென்று பக்கத்து வீட்டிலிருந்து க்ரீச்சிடும் அழுகுரல் கேட்டது. அண்டை வீட்டில் ஒரு மூதாட்டி கைலாச பதவி அடைந்துவிட்டார் என்று செய்தி வந்தது. ஒன்றும் புரியாமல் இருவரும் கையைப் பிசைந்துகொண்டு விழித்திருந்த வேளையில் இன்னொரு அதிசயம் அங்கே நடந்தது. விசாலாக்ஷிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நாடி துடிக்க ஆரம்பித்திருந்தது. நிமிடத்தில் கண் திறந்து பார்த்தார் விசாலாக்ஷி. ”என்னை விட்டுச் சென்ற ப்ராணன் மீண்டும் என் உடலில் புகுந்ததை நான் பார்த்தேன்” என்று கமறலுடன் விட்டு விட்டுப் பேசினார்.

சிறிது நேரத்தில் கண்களை மூடி ஆழ்நிலைக்கு சென்றார் விசாலாக்ஷி. மீண்டும் கண் திறந்து “அப்புவை இங்கே அழைத்துவர முடியுமா?” என்று கேட்டார். உதவிக்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஓடிப்போய் அந்த இரவு நேரத்தில் அப்புவை அழைத்துவந்தார்கள்.

அப்புவைப் பார்த்ததும் விசாலாக்ஷிக்கு விழிகளில் நீர் கோர்த்தது. வாத்சல்யத்துடன் அணைத்துக்கொண்டார். கணபதிக்கும் ம்ருத்ஞ்சயாவிற்கும் அங்கே என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.

“அப்பு சித்த நாழிக்கு முன்னால் உன்னோட அப்பா அம்மாவைப் பார்த்தேன். உன்னோட கொள்ளுத் தாத்தா உபனிஷத் பிரம்மத்தையும் கூட பார்த்தேன். அவரும் அங்கே இருந்தார். உன்னோட அம்மா உன்னை என்னோட ஜ்யேஷ்ட புத்திரனா பார்த்துக்கச் சொன்னாள்...” என்று விசாலாக்ஷி மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீருமாய் தழுதழுத்தார்கள்.

அப்பு ஜிவ்வென்று விண்ணில் பறந்தான். மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. தன்னுடைய கோத்திரத்தை உடனே மாற்றிக்கொண்டு கணபதியின் மகனாக சுவீகாரம் போனான். கல்யாணராமன் மற்றும் காவேரியோடு கணபதியின் இல்லத்துக்கு ஒரு நல்லநாளில் குடிபெயர்ந்தான்.

அப்புவுடன் கல்யாணமாகி வீட்டிற்கு வந்த காமாக்ஷி, கணபதி மற்றும் விசாலாக்ஷியிடம் “தங்கமான மருமகள்” என்று பெயர் எடுத்தாள்.

*
வேலூரில் ஆணும் பெண்ணுமாக நிறைய பேருக்கு மந்திர ஜப அப்பியாசம் செய்துவைத்தார் கணபதி. அதில் பெரும்பாலும் யுவன் மற்றும் யுவதிகள். இந்த மந்திரத்தால் பல அமானுஷ்ய சக்திகளைப் பெற்று அற்புதங்கள் பல நிகழ்த்தப்போவதாக உளறினார்கள். மந்திர ஜபத்தின் நுட்பங்களை அவர்களுக்குப் புரியும்படி போதித்தார் கணபதி. மந்திர ஜெபம் என்பது செப்படி வித்தை போன்றதல்ல என்று தெளிய வைத்தார். உமாமஹேஸ்வரர், ப்ரோஃபஸர் சிவசுப்ரமண்யம், கடைசிக் காலத்தில் ஆபத் சந்நியாசம் வாங்கிக்கொண்டு ப்ரணவானந்தாவான சர்வபள்ளி நரசிம்ஹய்யா போன்ற வயசர்களும் அவருடைய சொற்பொழிவுகளுக்கு தொடர் நேயர்களானார்கள்.
கணபதியின் அன்றைய ஆன்மிக உபன்யாசம் கேட்பவர்களுக்கு விஷய தானம் அளித்தது. வேதமும் இந்திய கலாசாரமும் கற்பித்த வாழ்வியல் முறைகளைப் புட்டுப்புட்டு வைத்தார்.

“ஆன்மிக வாழ்வின் ஆனந்தத்தில் திளைக்க வேண்டுமானால் சிற்றின்பங்களை துறக்கவேண்டும். சிற்றின்பங்களைத் துறப்பதால் தியாக மனப்பான்மையும், சகிப்புத் தன்மையும், இது போதும் என்கிற உறுதியும் , எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் பெரியமனதும் கைகூடும். நம்மை பூட்டி வைத்திருக்கும் இல்லற இன்பங்களிலிருந்து விடுவித்துக்கொள்வது இறைவனிடத்தில் பற்றுதலை ஊர்ஜிதப்படுத்தும் செயல்.

ஒரு சமயத்தின் மேன்மை அதன் வழி நடப்பவர்களின் செயலில் உள்ளது. இவ்வுலகத்தில் பல மதங்கள் தோன்றின. பல அழிந்தன. ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவங்களால் தோன்றிய மதங்கள் மொத்த மனித இனத்தை வழி நடத்த திராணியில்லாமல் தவித்த சரித்திர சான்றுகள் உள்ளன. ஆனால் வேதமதமானது எண்ணற்ற ரிஷிகளின் வாழ்வியல் முறைகளும் அவர்களது வேதவழி கண்டுபிடிப்புகளும் பொக்கிஷமாக இத்திருநாட்டில் இருக்கிறது. வேத விருட்சத்திற்கு வேத காலத்திலிருந்தே ரிஷிகள் வித்திட்டிருக்கிறார்கள். இப்படி வேதங்கள் வளர்த்த இந்த மதத்திற்கு முன்னால் ஏனைய மதங்கள் இங்கே காலூன்ற தடுமாறுகின்றன”

கணபதியின் இத்தகைய ஆற்றல் மிக்க பேச்சு நிறைய பேரைக் கட்டி இழுத்தது. இதில் சில கிறிஸ்துவர்களும் அடங்குவர். அதில் பால் ஆதிசேஷய்யா என்கிறவர் கணபதிக்கு கிறிஸ்துவத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்கிற நினைப்பில்......

சம்ஸ்க்ருத ஸ்லோகங்களின் தமிழ் வடிவ உதவி திருவாளர் Ramkumar Narayanan

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_20‬
‪#‎கணபதி_முனி‬

ஆனந்தம்.. பரமானந்தம்....

பட்டுவும் சொர்ணமும் சகோதரிகள். கல்யாணமாகாத பழுத்த முதிர்கன்னிகள். எலும்பும் தோலுமாக இருக்கும் கையில் சிகப்பும் பச்சையுமாக க்ளாஸ் வளையல்கள். எலி வாலாய் பின்னால் தொங்கும் கேசத்திற்கு பேப்பருக்குப் போடும் ரப்பர் பேண்ட். கசங்கிய அழுக்கு புடவை. ”நானொரு அப்ராணி” என்று எழுதி நெற்றியில் ஒட்டிய அகம் காட்டும் முகம். பிதுங்கிய கண்கள். வீட்டில் ”டி”யும் “லு”வும் போட்டு தெலுங்கில் பேசுவார்கள். வீடென்று அதைச் சொல்லிவிட முடியாது. ராம மடத்தில் ஒரு கள்ளிப்பெட்டி சைஸ் கூடு அது. வீடுவீடாக பத்து பாத்திரம் தேய்த்து மிச்சம் மீதி சாப்பிட்டு வீட்டு வேலைகள் செய்து கஷ்ட ஜீவனம் நடந்திவந்தார்கள்.

“திருவையாத்துக்குப் பக்கத்தில அவளுக்கு நெறைய நிலம் நீச்செல்லாம் இருந்துதுடா...” என்று பாட்டி ஆச்சரியமாகச் சொல்வாள். பட்டுக்கு உடம்புக்கு முடியாத காலங்களில் சொர்ணத்தின் பாத்திரம் தேய்க்கும் முறை. சொர்ணத்திற்கும் சிரிப்பிற்கும் விரோதம். யாரும் பல்லைப் பார்க்க முடியாது. எப்போதும் இறுகிய முகத்தில் லிட்டராய்வடியும் சோகம். எப்பவாவது அபூர்வமாகக் மிமீ சிரிப்பு. ”சொர்ணத்துக்கு கல்யாணம் ஆச்சுடா.. பாவம் வுட்டுட்டு ஓடிட்டான்.. கடங்காரப் பாவி...கட்டேல போறவன்...” என்று இன்னொரு நாள் ஊஞ்சலில் படுத்துக்கொண்டே பாட்டி வாய் வலிக்கத் திட்டினாள்.

கிணத்தடியில் கரி போட்டு வெங்கலப்பானை தேய்க்கும் போது “இப்படியாயிடுத்தேடி பட்டு...” என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவாள் பாட்டி. ”என்னவாச்சு?” என்று கேட்டால் “சொந்தக்காராள்ளாம் இவாளோட சொத்தை ஏமாத்தி எழுதி வாங்கிண்டு தொரத்தி அடிச்சிப்பிட்டா... இல்லேனா சொகுசா மஹாராணி மாதிரி இருக்கவேண்டியவடா.... ” என்று அங்கலாய்த்தாள் பாட்டி. கண்ணுக்குத் தெரியாத அவர்களது அயோக்கிய சொந்தக்காரர்களை ஈவிரக்கமில்லாமல் சுட்டுத்தள்ள வேண்டும் என்று கொதித்ததுண்டு. வருடத்தில் ஒரு வாரம் சகோதரிகள் இருவரும் வேலையில் கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்வார்கள். ஜனவரிகளில் கிணத்தடியில் பாட்டி உட்கார்ந்து சில சமயம் சாமான் தேய்க்கும் போது ”பட்டு வரலை?” என்ற கேள்விக்கு “அவாள்ளாம் த்யாகராஜ ஆராதனைக்குப் போயிருக்காடா.. ஒரு வாரம்.. அவாளுக்கு வேண்டப்பட்டவாள்லாம் இருக்கா... சாப்பாடெல்லாம் தடபுடலா இருக்கும்... பாவம்... வேறென்ன சுகத்தைக் கண்டதுகள்.. ” என்ற பாட்டியிடம் “சொந்தக்காராள்ளாம் அங்கே வருவாளா?” என்று மேல் ஸ்தாயியில் கேட்டேன். பதிலில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் மன்னை தேரடியில் எதேச்சையாகப் பட்டுவைப் பார்த்தேன். கால்களின் உத்தரவில் நடந்து சென்றுகொண்டிருந்தாள். நண்பனின் சைக்கிளில் அரை வட்டமடித்துத் திரும்பி “சொர்ணம்க்கா எப்படியிருக்கா?” என்று வழி மறித்துக் கேட்டேன். “சின்னதம்பியா?” என்று சடுதியில் அடையாளம் கண்டு சிரித்தாள். பரவலாகப் பற்களைத் தொலைத்திருந்தாள். “எப்படியிருக்கே? பவானி நீலாவெல்லாம் சௌக்கியமா?” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு சித்திகளை விஜாரித்தாள். எண்ணெய் காணாத தலை நடராஜப் பெருமானின் ஜடாமுடி போல பறந்தது. மனசுக்குள் பச்சாதாபம் சுனாமி அலை போல எழுந்தது.

சென்னைக்குத் திரும்பும் அவசரத்தில் பர்ஸுக்குள் கையை விட்டு அகப்பட்டதை எடுத்து நீட்டினேன். சில சலவை காந்திகள் என் கையில் இருந்தார்கள். வேணும் வேண்டாம்னு சொல்லாமல் அமைதியாக வாங்கிக்கொண்டாள். பட்டுவின் சுருக்குப் பையைத் தேடினேன். சிகப்புக் கலரில் இடுப்பிலிருந்து உருவி பணம் அதற்குள் போனது. மோகன் லாட்ஜ் பக்கத்திலிருந்து நடந்து வந்த லோடுமேன் பட்டு கிழவிக்குப் பணம் கொடுக்கும் என்னை வித்தியாசமாகப் பார்த்தார். ”வரேன்...” என்று பட்டுவிடம் ஒரு சிரிப்பை உதிர்த்து சைக்கிளை மிதித்தேன். ஆட்டோகிராஃப் சேரனைப் போல பட்டுவும், பாட்டியும், கிணற்றடியும், அரிசி உப்புமா கிண்டின வெங்கலப்பானையும் என்னுள் உறங்கிக்கொண்டிருந்த பால்ய பருவ நினைவுகளை ஒவ்வொரு மிதிக்கும் குழிக் கரண்டியால் கிண்டியெடுத்து வெளியில் தள்ளின. நிற்க.

இந்த மாதிரி ஒரு பட்டுவை சென்னையில் முந்தாநாள் பார்த்தேன். ஆனால் சுத்தமான ஆடைகளில் சிரித்த முகத்துடன் “வாங்க..” என்று கைகூப்பி வரவேற்ற அந்த பாட்டி பட்டுவை கொண்டு வந்து கண்முன் நிறுத்தினாள். ஆனந்தம் என்கிற முதியோர் இல்லம். நண்பர் Vinoth Davey மற்றும் அவரது மனைவி Priya Davey இருவருக்கும் பரிச்சயமான முதியோர் இல்லம். "எவ்ளோ வேணா டொனேட் பண்ணலாம்” என்றனர் இத் தம்பதியினர். அம்பத்தூரில் கடல் போன்ற ஏரியில் ஆயிரக்கணக்கான(?!) ஜனங்கள் வாக்கிங் செல்லும் பார்க்கைத் தாண்டி கள்ளிக்குப்பம் பகுதிக்குச் சென்றோம்.

”சௌக்கியமா?” என்று எதிரில் தென்பட்ட பெரியவரிடம் நலம் விசாரித்துக்கொண்டே நேரே சமையல் அறைக்கு அழைத்துச்சென்றார் வினோத். ஒரு டைனிங் ஹாலைத் தாண்டி அந்த சமையலறை இருந்தது. “நான் டிவியெஸ்லேர்ந்து ரிட்டயர்ட் ஆனவன்... சூடா காஃபி சாபிடறேளா?” என்று கைகூப்பி அறிமுகப்படுத்திக்கொண்டார் தோளில் காசித்துண்டோடு சட்டையில்லாத தாத்தா ஒருவர். “இவர்தான் இங்கே சமையல்...” என்று பின்னாலிருந்து வினோத். சமையலறையும் டைனிங் ஹாலும் சுத்தமான சுத்தம். ”ட்ரஸ்ட்டி வந்துருக்கார்...கொஞ்சம் பார்த்துட்டு வந்துடறேன்...” என்று அவரைப் பார்க்கச் சென்றார் சமையல் தாத்தா. சமையலறை போர்டில் “இன்னார் நினைவாக இன்று உணவு பரிமாறப்படுகிறது” என்று உபயதாரர் பெயர் எழுதியிருந்தது. காஃபி, ஸ்நாக்ஸ், மதிய சாப்பாடு, டின்னர் என்று வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

இரண்டு மாடிகள். மேன்ஷன் போன்ற அமைப்பு. நடுவே பெரிய துளசி மாடம். இருபுறமும் அறைகள். ஒவ்வொரு அறையிலும் ஆறேழு படுக்கைகள். கோடு போட்ட நோட்டில் ”ராம..ராம..” எழுதிக்கொண்டிருந்த பாட்டி கண் சுருக்கி என்னைப் பார்த்தது. சதமடிக்க இன்னும் பத்து வருஷம் இருக்கலாம். பக்கத்தில் வாக்கர் நின்றிருந்தது. அவருக்குத் துணையாக இன்னொரு பாட்டி தேமேன்னு உட்கார்ந்திருந்தது மனசுக்கு ஏனோ சங்கடமாக இருந்தது. இவர்களுடைய பிள்ளைகள் யார்? பேரன் பேத்திகள் என்ன செய்கிறார்கள்? இந்த இடம் இம்முதியவர்களுக்குச் சந்தோஷமளிக்கிறதா? குடும்பத்திற்குச் சுமை என்று தன்னைச் சுமந்தவர்களை இங்கே கொண்டு வந்து தள்ளிவிட்டார்களா? நடமாட முடியாமல் மொத்தமாகக் கட்டிலில் சாய்ந்து விட்டால் இவர்களுக்கு யார் கதி? இப்படி தவிக்கவிட்டு இவர்களுடைய சொந்தகங்களால் தினமும் சோறு தின்ன முடிகிறதா? கேள்விச் சிலந்திகள் மூளைக்குள் ராட்சஷ வலைப் பின்னிக்கொண்டிருந்தன.

“ஃபார்ம் வாங்கிட்டீங்களா?” என்று சிந்தனையைக் கலைத்து ஒரு பாட்டி உதவிக்கு ஓடி வந்தார். அச்சு அசல் என்னுடைய சாரதாபாட்டி மாதிரியே தெரிந்தது. லேசாக கூன். “கொண்டு வரேன்னு இன்னொருத்தங்க போயிருக்காங்க...” என்று பதிலளித்துவிட்டு தாத்தா பாட்டிகளைக் காணச் சென்றேன். அறையெங்கும் வயோதிகர்கள். முதல் மாடியில் படியருகே இருந்த அறையிலிருந்து வெளியே வந்தவர் தும்பைப்பூவாய் வெளுத்த வேஷ்டியில் இருந்தார். சட்டையில்லை. முப்பது நாள் வெண் தாடி. பொக்கை வாயால் சிரித்துக்கொண்டே கும்பிட்டார். கூப்பிய கையைப் பிடித்துக்கொண்டேன். அவரது பேரனோ மகனோ நினைவுக்கு வந்திருப்பானோ? மீண்டும் அவருடைய முகம் பார்க்க மனசு வரவில்லை. பகவானே! எனக்குள் உதறியது.

“உள்ள போகலாம்...” வினோத் ஒரு அறைக்குள் கூப்பிட்டார். சிலர் படுக்கையில் படுத்திருந்தார்கள். படுக்கைக்கு எதிரே ஷெல்ஃபில் டானிக்குகள், மாத்திரை டப்பாக்கள். சிரமப்படுத்த மனசில்லை. ”வேண்டாம்...” என்று காரிடாரில் சுற்றி வந்தேன். வயோதிகம் எவ்வளவு கொடுமையானது. வானம் தெரியும்படி இருந்த ஒரு இடத்தில் வரிசையாகச் சேர்கள் போட்டிருந்தார்கள். அதில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் இருகை சேர்த்து இடுக்கு வழியாக சூரியனைப் பார்த்து வந்தனம் செய்துகொண்டிருந்தார். அதிலென்ன ஆச்சரியம்? பாவம். சூரியன் எப்பவோ அஸ்தமித்துவிட்டான். அவரைச் சற்று நெருங்கி உற்றுப் பார்த்தேன். கண்ணிரண்டும் பொட்டாகச் சுருங்கி பெரிய ஃபுல்ஸ்டாப் மாதிரி இருந்தது. அருகிலிருந்த பாட்டி எவ்வித உணர்வும் முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தார். சிரித்துப்பார்த்தேன். ஏதோ சிந்தனை. வீட்டார் மேல் கோபமோ? ஈஸ்வரா காப்பாத்து.

”ஃபார்ம் வந்திடிச்சு...” கூப்பிட்டார்கள். உணவருந்தும் அறையில் உட்கார்ந்து பூர்த்தி செய்தேன். பர்ஸைப் பிரித்து எடுத்துக் கொடுத்தேன். ”ரசீது நாளைக்கி...” என்று பாட்டி இழுத்தார்கள். “பரவாயில்லை.. மெதுவா ஆகட்டும்...” என்று சொல்லிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன். “கீழ ப்ரேயர் ஹால் பார்த்துட்டு போகலாம்... மேல் மாடியில டிவி கூட இருக்கு..” என்றார் வினோத். காரிடார் கடந்து செல்கையில் லைப்ரரி இருந்தது. ராக் ராக்காய் நிறைய புஸ்தகங்கள். ஆர்வமிக்க தாத்தா ஒருவர் தலையை கவிழ்த்து புஸ்தகத்தில் மூழ்கியிருந்தார். அதையடுத்து டிஸ்பென்ஸரி. டிடிகே குழுமம் நன்கொடை. பரிசுத்தமாக இருந்தது. சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன் டாக்டர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

யூனிஃபார்மோடு புஸ்தகப் பை சுமந்து வந்த அப்பகுதி சிறுவர்களுக்கு ட்யூஷன் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார் ஒரு தாத்தா. கடந்து வந்ததும் ப்ரேயர் ஹால். தெய்வங்களின் திருவுருவப்படங்களுக்கு மாலையிட்டிருந்தார்கள். யாரோ ஒரு பாட்டி நிதானமாக ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்துக்கொண்டிருந்தார்கள். நானும் கும்பிட்டுக்கொண்டேன். இல்லத்தின் பெயர் ஆனந்தம். தாத்தா பாட்டிகள் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். ஆனந்தமாகத்தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். என்னாலான உபகாரம் செய்ததில் மனசுக்கு நிறைவாக இருந்தது.

“போய்ட்டு வாங்கோ...” ஆரம்பத்தில் வரவேற்ற பாட்டி மீண்டும் வாசல் வரை வந்து கைகூப்பி விடையளித்தார். ஒட்டுமொத்தமாக இல்லத்தின் அனைத்து பெரியவர்களையும் பார்க்கமுடியவில்லை. பார்த்திருந்தால் ரெண்டு வார்த்தை பேசியிருந்தால் எவ்வளவு பட்டுவோ எவ்வளவு சொர்ணமோ.

ஓவியர் கோபுலு தன் உபயமாகச் சிரித்த முகத்துடனிருக்கும் தாத்தா பாட்டி படத்தை சின்னமாக வரைந்து கொடுத்திருக்கிறார்.
உங்களுக்கும் நிறைவளிக்க.. கள்ளிக்குப்பம்.. ஆனந்தம்-முதியோர் இல்லம்... மேலதிக விபரங்கள் இங்கே http://www.anandamoldagehome.org/
‪#‎பிறர்க்கு_உதவுதல்_ஆனந்தமே‬

விஜய் சிவா - கச்சிதமான கச்சேரி

நேற்று மாலை ம்யூஸிக் அகாதமி கேண்டீனில் வீகேயெஸ்ஸுடன் வெஜ் ரோலும் ஸ்ட்ராங் காஃபியும் குடித்துவிட்டு அரங்கத்தினுள் சென்றேன். எதிர் டேபிளில் சப்புக்கொட்டிக்கொண்டு ஹார்லிக்ஸ் அல்வா சாப்பிட்டுக்கொண்டிருந்தவரைப் பற்றியெல்லாம் எழுதப்போவதில்லை. அவர் எப்பவோ அல்வா தொட்ட ஆட்காட்டி விரலை விழுங்கியிருந்தார். என்னுடைய உபயதாரர் ரசிக சிரோன்மணி Rajagopalan Venkatramanஏற்கனவே ஆஜராகியிருந்தார். பயபக்தியோடு அவரருகே சமர்த்தாக அமர்ந்துகொண்டேன்.

பாடகர் விஜய் சிவாவின் மடியில் உட்கார்ந்து கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சுவது போல இரண்டு பக்கமும் இசை பக்தாஸ் அமர்ந்திருந்தார்கள். ரெண்டு தம்பூரா. கடம் சந்திரசேகர சர்மா. வயலின் ஸ்ரீராம்குமார். ம்ருதங்கம் ஜே. வைத்தியநாதன். ஆமாம். முறுக்கு மீசையுடன் பாகவதர் கட்டிங்கில் இருப்பாரே.. அவர்தான்.. மிருதங்கத்துடன் பேசிக்கொண்டே வாசிக்கிறார் போலிருக்கிறது. அதுவும் சகஜமாகப் பேசுகிறது.

ராகமெல்லாம் அக்கக்காகப் பிரித்து விஸ்தரிக்கும்படியான வித்வத் எனக்குக் கிடையாது. சங்கீத ஆர்வமிக்க ஒரு காவிரிக்கரை ஓர பாமரனின் பார்வையில் இந்த கச்சேரியை விவரிக்க இயலுமா என்று பார்க்கிறேன். ராகதாளமெல்லாம் ராஜகோபாலன் எழுதுவார்.

நாமசங்கீர்த்தனம் யார் பாடினாலும் சட்டென்று உள்ளுக்கு இழுத்துவிடும். பதங்கள் சிறுசு. எல்லாமே நாமாவளி டைப். நாமளும் கூடவே “ராதா.. ரமணா... வனமாலி.. கோபாலா.. ” என்று கோரஸாகப் பாடிக்கொண்டே போய்விடலாம். ஆனால் கர்நாடக சங்கீதம் கேட்பதற்கு பொறுமை வேண்டும். ஆலாபனையாக ஆரம்பித்து பதம்பதமாக பாடகர் விஸ்தரித்து பாட்டுக்குள் செல்லும் போது கண்முன்னே ஸ்வர்க்கத்தைக் காட்டுவார்கள். நாமும் கண்ணை மூடிக்கொண்டு அங்கே சிறிது நேரம் சஞ்சரிப்போம். கர்நாடக சங்கீதத்தில் வரும் ப்ருகாக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதைப் பாடுவது லேசுப்பட்ட காரியமில்லை என்று அதிசயக்கும் போது ”வம்சம்” பார்க்க யாராவது எழுந்து போனால் வெறுப்பாகிறது.

காதை சிவாவுக்கு கொடுத்துவிட்டு கண்ணையும் கருத்தையும் சிவனேன்னு வாட்ஸப்பில் கொடுத்திருந்த முன்சீட்டு மாமா "will be there by sharp 8:30" என்று டெக்ஸ்டியதை மட்டும் பார்த்துவிட்டேன். அதற்கப்புறம் அவ்வப்போது பளிச்சிட்ட அந்த ஐஃபோனை பார்க்கக்கூடாது என்று சங்கல்பம் செய்துகொண்டு மேடையில் கண்ணைக் குத்தினேன். விஜய் சிவாவின் குரலில் ஒரு டெம்ப்ட்டிங் மிருது இருக்கிறது. தென்றல் நம்மைத் தடவுவது போல ஆலாபனைகளில் கிறங்கடிக்கிறார். கச்சேரியிலிருந்தே நேரடியாக எழுதியிருந்த சில கமெண்ட்டுகளை இங்கே இட்டு நிரப்புகிறேன்.

*
ஊத்துகாட்டின் மரகதமணிமயசேலா...கோபாலா... காலாடாத கை தட்டாத ஜனமில்லை... ஜூலாவில் உட்கார வச்சு வீசி ஆட்டினா மாதிரி பரம சௌக்கியமாக.....அமிர்தமாக பொழியறார் சிவா..
*
Rk shriramkumarன் ஃபிடிலுக்கு... மகுடிக்கு மயங்கின சர்ப்பமா எல்லார் தலையும் ஆடறது...
*
ஃபர்ஸ்ட் கியர் போட்டு செகன்ட் கியர் மாத்தி சடசடவென வேகம் பிடித்து டாப் கியருக்கு லகுவாகப் போகும் விஜய் சிவாவின் இசை வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இது தரையில் உருளும் வாகனமில்லை. அந்தரத்தில் ஜிவ்வென்று மிதக்கிறது. ஜி... இப்போ காம்போஜி...
*
தமிழ்த் தியாகராஜர் பாபநாசம் சிவனின் "காண கண் கோடி வேண்டும்"மில் மாணிக்கம் வைரம் நவரத்னாவில் நிரவல்.... அகாதமி தகதகவென்று ஜொலிக்கிறது.... வைத்தியநாதன் ம்ருதங்கத்திலும் ஶ்ரீராம்குமார் வயலினிலும் வெளிச்சம் காட்டி இன்னும் மினுமினுக்க வைக்கிறார்கள். இதைக் கூட நான் கண்ணை மூடிக்கொண்டு மெய்மறந்து டைப்புகிறேன்.
*
வைத்தியநாதனின் தனி... விசேஷ லய மிஷின் கன் எடுத்து பரவலா சுட்டா மாதிரி.... தத்திதொம்... அரங்கமெங்கும்..
*
நடுநடுவே வீகேயெஸ்ஸிடமிருந்து வந்து விழுந்த ஆஃப் தெ ஃபீல்ட் கமெண்ட்ஸ்...
Vk Srinivasan இங்கே கேண்டீனில் மேத்தி சப்பாத்தி, சேமியா கிச்சடி, வெஜ் ஸ்பிரிங் ரோல் முடிஞ்சு போச்சு. புதுசா ரவா கிச்சடி ரெடி.
*
Vk Srinivasan வயிற்றுக்கும் காதுக்கும் ஈயப்படுகிறது. சொர்க்கம்.
*
ஆதியந்தமில்லாத சரவெடியை முன்னாலும் பின்னாலும் கொளுத்தி விட்டா மாதிரி கடமும் ம்ருதங்கமும் சேர்ந்து முழங்குகின்றன.... காதுக்கு சுகமாக...
*
இன்னமும் சொல்லவோ.. உன் மனம் கல்லோ பாறையோ... கோபல க்ருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரத்திலிருந்து.... மனசைப் பிடித்து உலுக்குகிறார் சிவா... மாஞ்சியாம்... Rajagopalan Venkatraman சொல்றார்... நான் மாஞ்சு மாஞ்சு போறேன்.. கண்களில் நீர் வரவழைக்கும் கீர்த்தனம்... திருப்புன்கூர் திருத்தலம் கண் முன்னே வருகிறது... சபாஷ்..
*
திருப்பாவையிலிருந்து மாலே மணிவண்ணாவும்... நாம சங்கீர்த்தனமாக நாதபிந்து கலாவும்... கச்சேரியின் துக்கடா டெஸர்ட்ஸ்... ம்.. யம்மி... டேஸ்ட்டி...
*
கச்சேரி பூர்த்தியான பின்னர் நான் ஒரு ஆனியன் ரவாவும் வீகேயெஸ்ஸும் வல்லபாவும் ஸ்ட்ராங் ஹார்லிக்ஸும் குடித்துவிட்டு வந்தோம். இந்த சீசனில் நான் நேரடியாக அனுபவிக்கும் முதல் கச்சேரி.

ரோட்டுக் கச்சேரி

இரவு எட்டு மணிக்கு மேல் ஒன்பதுக்குள் போரூர்-கிண்டி சாலையில் சுபமுகூர்த்த நேரம். சென்னைக் குடிநீர் லாரிகள் ஜோடி போட்டுக்கொண்டு அந்தச் சாலையில் காதல் ஊர்வலம் வருகிறார்கள். ஐந்தடிக்கு பத்தடியில் ஒரு “துப்பாக்கி”, “கத்தி” லாரியோ... அல்லது “பில்லா”, “வீரம்” லாரியோ தவறாமல் புகை கக்கி உருள்கிறது. புகைமண்டலத்தில் மினி தேவலோகம். இத்தனை லாரிகள் ரெஸ்ட் எடுக்க சென்னையில் எங்கு நிறுத்துகிறார்கள் என்று புர்ஜ் கலிஃபா பார்த்த பட்டிக்காட்டான் போல வியந்துபோனேன். 

அவர்கள் அவர்களுக்கே பட்டா போட்டு சொந்தமாக்கிக்கொண்ட சாலையில் ராஜமரியாதையோடு தலைநிமிர்ந்து போகும் போது நாமும் மீடியேட்டர் ஓரம் கொஞ்சம் ஒண்டிக்கொண்டு டாமிடம் பயந்த ஜெர்ரி போலப் பவ்யமாக வாகனம் ஓட்டும் நிர்பந்தம். இருசக்ராதிகள் யாராவது தெகிரியமாக லாரியின் கழுத்தருகே சென்றால் “மடேர்..மடேர்..” என்று பாய்ந்து கிளி அவரது பக்கக் கதவைத் தட்டுகிறார். அப்ராணிகள் பயந்து போய் பின்சக்கரத்தில் பாய்ந்துவிடப் போகிறார்கள் என்று டரியலானேன்.

மன்னை ராஜகோபாலன் பங்குனி உற்சவத்தில் வெண்ணைத் தாழி உலகப் பிரசித்தம். அந்த திருவிழாவின் போது மேலராஜ வீதியிலிருந்து பந்தலடி வரை கூரைப் பந்தல் போட்டு ரோடில் தண்ணீர் ஊற்றி பக்தர்கள் கால் பொசுங்கிவிடாமல் பாதுகாப்பார்கள். அது நற்காரியத்துக்கு செலவழிக்கப்படும் நன்நீர். இங்கே இந்தக் குடிநீர் லாரிகள் மொத்த ரோட்டையும் ஏதோ கீழே இலை போட்டு சாப்பாடு போடுவதற்காகப் போல அலம்பி விட்டுச் செல்கிறது. வாத்தியார் பாணியில் இவர்களை பசித்த புலி தின்னட்டும் என்று சபித்துவிட்டு ”அடப்பாவிகளா..” என்று நிமிர்ந்தால் டாங்கரின் முதுகில் “குடிநீரை வீணாக்காதீர்கள்” என்ற திருவாசகம். இன்னொன்றில் “விண்ணின் கொடையே மழை.. வீணாக்கலாமா இதை” என்கிற சுரீரென்று மனதைத் தைக்கும் பாந்தமான அறிவுரை. போச்சுடா..

இடதும் வலதுமா இரண்டு லாரிச் சிங்கங்கள் ஆசையாய் அணைத்துக்கொண்டு வர புள்ளிமானாய்ப் பயந்த சேப்பாயியை ”பயப்படாதே செல்லம்...” என்று தட்டிக்கொடுத்து விரைந்து வீடு வந்து சேர்ந்தேன்.

Monday, December 15, 2014

ஞாயிறென்ன திங்களென்ன...

பிள்ளையார் கோயில்
கண்டாமணி அடிச்சுது..
அர்த்தஜாமம் ஆச்சு...
நடை சாத்தியாச்சு...
வாசலில்...
அழுக்கு மூட்டையோடு...
மூட்டையாய்ச் சுருண்டு கிடக்கும்...
பிச்சைக்காரக் கிழவிக்கு...
ஞாயிறென்ன திங்களென்ன....


கடைசிப் பெட்டியை
உள்ளே தூக்கி வச்சாச்சு..
தொங்கின ஐட்டமெல்லாம்
கடைக்குள்ளே தூங்கப் போயாச்சு...
பாதி ஷட்டர் இறக்கி
எல்லா சாமானையும்
பங்கிடு பண்ணியாச்சு...
’ஸர்ஃப்’ பனியன் போட்ட
பலசரக்குப் பையனுக்கு
ஞாயிறென்ன திங்களென்ன...

பச்சை, கற்பூரம்
மோரீஸ், புள்ளி, சிறு பழம்
தினுசு தினுசாக
வாழைப்பழம்...
ஓரத்தில் கொஞ்சம்
கொய்யாவும்...
ஒரு கூறு கமலா ஆரஞ்சும்...
நடைதளர்ந்து வீடு செல்லும்
தள்ளுவண்டி யாவாரிக்கு....
ஞாயிறென்ன திங்களென்ன...

க்ரில் கம்பிக்கு பின்னால
ஷெல்ஃப் பூரா மதுப்புட்டிகள்..
ஸ்டியாக அளக்கும் சரக்கூற்றி...
அட்டாஸ்மாக்கிலிருந்து...
சன்னமான வெளிச்சத்தில..
எட்டு போட்டு நடந்துவரும்
உற்சாகபானப் பிரியருக்கு
ஞாயிறென்ன திங்களென்ன...

சரி சரி நாழியாச்சு...
எனக்கு நாளைக்கு ஆஃபீஸுண்டு
ஞாயிறு போற்றுதும்....
திங்களும் போற்றுதும்....
‪#‎எண்ணச்_சுழல்‬

Friday, December 12, 2014

ஸ்திதப்ரக்ஞன்

ஆஃபீஸிலிருந்து நுழைந்தவுடன் ஊஞ்சலில் இம்மாத ’தமிழ்வேதம்’ ஆடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு சின்ன கையகல வெள்ளைக் கவர். ஸ்டாம்ப் ஒட்டி என் பேர் எழுதி. திருவிசலூர் ஸ்ரீதர ஐயாவாள் மடத்திலிருந்து வந்திருந்தது. விபூதி குங்கும பிரசாதம். கைகால் அலம்பிக்கொண்டு இட்டுக்கொண்டேன். ஊரார் பழித்த போதும் மனம் தளராத ஐயாவாள் ஒரு ஸ்திதப்ரக்ஞன். இன்பதுன்பங்களை லட்சியம் செய்யாவதர். மஹாபாரத உபன்யாசத்தில் ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி அண்ணா சொன்ன ஒரு கதை ஞாபகம் வந்தது.
ஸமர்த்த ராமதாஸர் வீரசிவாஜிக்கு ஆன்மிகத்திலும் அரசியலிலும் வழிகாட்டியாக இருந்தவர். சிவாஜிக்கு அவர் மேல் ஏராளமான மரியாதை. பக்தி. ராமதாஸரின் சிஷ்யர் ரெங்கநாத கோஸ்வாமி. அவர் மேலும் சிவாஜிக்கு பணிவும் அடக்கமும் இருந்தது. கோஸ்வாமியைக் கொண்டாடினார் சிவாஜி.
கோஸ்வாமிக்கென்று ப்ரத்யேக சிவிகை வைத்தார். பாதுகாப்புக்கு நான்கு வீரர்களை பாரா பார்க்கச்சொன்னார். வாய்க்கு பாதாம் ஹல்வா கிண்டித் தரச்சொன்னார். இரண்டு பெண்களை சாமரம் வீசச் சொன்னார். தூங்கும் போது கால் பிடிச்சு விட இரண்டு பேர். ராஜ மரியாதை. ஆனால் அவர் சந்நியாசி.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரெண்டு பேர் சமர்த்த ராமதாஸரிடம் “கோஸ்வாமி.. ராஜ வாழ்க்கை வாழறான்.. நீங்க சந்நியாசின்னு சொல்றேளே.....”ன்னு கேட்டார்கள். ராமதாஸர் எதுவுமே சொல்லலை.
ரெண்டு யானை, குதிரையில நாலு பேர்னு பல்லக்குல கோஸ்வாமி காட்டு வழியா போயிண்டிருந்தார். சமர்த்த ராமதாஸர் எதிர்த்தாப்ல வரார். சடார்னு பல்லக்குலேர்ந்து குதிச்சார் கோஸ்வாமி. நமஸ்காரம் பண்ணினார். “ஏம்ப்பா? என்னதிது? ராஜாவுக்கு சமான வாழ்க்கையாப் போச்சே”ன்னு கேட்டார்.
“தேவரீர் க்ருபை”ன்னு கை கூப்பினார் கோஸ்வாமி. ராமதாஸர் “நீ அனுபவிச்சுட்டு.. தேவரீர் க்ருபையா?”ன்னு கேட்டார். “இதெல்லாம் என்னத்துக்கு?”ன்னு கேட்டார். உடனே கோஸ்வாமி “ஏம்ப்பா.. எல்லோரும் போங்கோ... பல்லக்கை தூக்கிண்டு இங்கேயிருந்து கிளம்புங்கோ... எனக்கு எதுவும் வேணாம்”னு துரத்தினார். ராமதாஸர் பின்னாடியே அவரோட ஆசிரமத்துக்குப் போனார்.
நிறைய உபதேசங்கள், புராணங்கள், ஸ்லோகங்கள்னு ரெண்டு பேரும் விஸ்ராந்தியா பேசிக்கொண்டிருந்தார்கள். “சரிப்பா... நேரமாச்சு.. நான் போய் பிக்ஷை வாங்கிண்டு வரேன்.. நீ இங்கேயே உட்கார்ந்திரு.,,”ன்னு சொல்லிட்டு கிளம்பினார். இடத்தை விட்டு அசையாம கோஸ்வாமி உட்கார்ந்திருந்தார். அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் நிழல் போய் வெய்யில் வந்தது. சுளீர்னு அடிக்கிறது. அசையவேயில்லை. யோகீஸ்வரனா உட்கார்ந்திருக்கார். இவர் சொகுசா இருக்கார்னு சொன்ன ரெண்டு ப்ரகிருதிகளும் “வெய்யில் அடிக்கறதே... ஓரமா உட்கார்ந்துக்கலாமே..”ன்னு கேட்டாளாம். “ஊஹும்... ஆசார்யன் சொல்லியிருக்கார். நகர மாட்டேன்..”ன்னுட்டார்.
அப்போ வீர சிவாஜி அந்தப் பக்கமா வரான். கோஸ்வாமி வெய்யில்ல கருகிண்டிருக்கிறதப் பார்த்தான். அச்சச்சோன்னு பதறிப் போய்.. “டேய்... இங்க வாங்கோடா... மேலே பந்தல் போடு... ரெண்டு பேர் சாமரம் எடுத்துண்டு வந்து வீசுங்கோ... நாலு பேர் காவல் நில்லுடா... அந்த யானையைக் கொண்டு வந்து வாசல்ல நிறுத்து... ஒருத்தனை குதிரையில சுத்தி வரச்சொல்லு...”ன்னு ஏக தடபுடலா அமர்க்களப்படறது.
பிக்ஷை வாங்கிண்டு சமர்த்த ராமதாஸர் வரார். குடிலைச் சுத்தி ராஜ பரிவாராங்கள். கோஸ்வாமி உட்கார்ந்த இடத்தில் சிலை போல இருக்கார்.
“என்னப்பா இது.. இதெல்லாம் வேண்டாமேன்னு சொன்னேனே...”ன்னு கேட்டார்.
“தேவரீர் க்ருபை”ன்னு சிரிச்சுண்டே சொன்னார் கோஸ்வாமி.
“இது ரொம்ப அநியாயம். நீ அனுபவிக்கறத்துக்கெல்லாம் என் க்ருபைன்னு சொல்றே”ன்னு சமர்த்த ராமதாஸர் கேட்டார்.
“இது குரு கடாக்ஷம். வேண்டாம்னு விரட்டினாலும் பின்னாடி வந்துடறது”ன்னு சிரிச்சாராம் கோஸ்வாமி.
ஸ்திதப்ரக்ஞன் இப்படிதான் இருப்பான். சந்தோஷமோ துக்கமோ கஷ்டமோ நஷ்டமோ எது வந்தாலும் அப்படியே எடுத்துப்பன். என்னிக்குமே கஷ்டநஷ்டமெல்லாம் ஸ்தூலத்துக்குதான். ஆன்மாவுக்கு அழிவில்லை. மனசுக்குள்ள ஆன்மபலத்தை ஏத்திக்கணும்.
ஒரு பொடியனைக் கூப்பிட்டு “டேய்... நீ யாருடா..”ன்னா ”நான் கோகுல்”னு சொல்லுவான். சட்டை போட்டுண்டிருந்தா.. மார்மேல அதைத் தட்டித் தட்டி “கோகுல்...கோகுல் மாமா..”ன்னு சொல்லுவான். சட்டையைக் கழட்டி மூலேல வீசிட்டு வெத்து மார்போட சுத்திண்டிருக்கிறச்சே.. அந்த சட்டையைக் காட்டி அது கோகுலாடான்னு கேட்டா.. “ச்சே..ச்சே... அது சட்டை”ம்பான். கொழந்தைக்குக் கூட தெரியும்.
தூஷித்தலும் போஷித்தலும் சட்டைக்குதான்னு நாம சட்டை செய்யாமலிருக்கணும்.
ஆன்மா போற்றுதும்.

என் பாரதி

காகிதத்தில் முக்கி எடுத்த தமிழ்த் தேன் பாரதியின் வரிகள். இன்பத்தில் களிக்கவும் துன்பத்தில் உழலும் மனசுக்கு தெம்பூட்டுவதற்கும் அலமாரியில் குடியிருக்கும் பாரதியின் துணையை அடிக்கடி நாடுவதுண்டு. ஒரு புத்தகத்தை உருவி தோராயமாக எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் கண்ணை எடுக்காமல் படிக்க வைக்கும் வார்த்தை வித்தை கற்றவன் பாரதி. சிறிதும் பெரிதுமாய் தூற்றல் போட்டு காலை நடை போவதை வருணன் தடுத்தான். இன்று பாரதியின் பிறந்தநாள்.
பாரதியின் படைப்புகளின் மேலே இங்கி பிங்கி பாங்கி போட்டுக்கொண்டே விரல்களை நடமாடவிட்டதில் கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளின் பதினோராம் தொகுதியில் நின்றது. சீனி. விசுவநாதனின் உழைப்பில் வந்த தொகுப்பு. என்னிடம் ஏழுலிருந்து பன்னிரெண்டு பாகங்கள் உள்ளது. மூன்று வருடங்களாக ஒன்று முதல் ஆறு பாகங்கள் கிடைக்குமா என்று ஸ்டால் ஸ்டாலாய் புத்தகக்காட்சிக்கு புத்தகக்காட்சி அலைகிறேன். இவ்வருடமாவது இந்த வரம் நிறைவேற பராசக்தியை வேண்டுகிறேன்.
பக்கத்து நாற்காலில் உட்கார்ந்து பிரித்த பக்கத்தில் “நம்பிக்கை” என்ற கட்டுரை. தேச பக்தன் வருஷ அநுபந்தத்தில் 1920ல் எழுதியது.
இனி பாரதி....
“காக்கை, குருவி, நரி, கழுதை, மனிதன் - எந்த ஜந்துவையும் சேர்ந்தபடியாக ஐந்து நிமிஷம் கவனியுங்கள். அது ஸந்தோஷத்திலாரது. அதன் முகத்தில் நிகழும் குறிகளைக் கண்டு அதன் மனத்தில் ஏதோ ஸமாதானக் குறைவு நேர்ந்து விட்டதென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாளு எப்போதும் துன்ப நினைப்புகளுக்குக் கிரையாகி, வருத்தக் கடலில் உழலும் ஜூவனை இன்பக் கரையில் சேர்ப்பதற்குரிய தோணி ஒன்றுதான் உளது. அதன் பெயர் பக்தி.
இந்த பக்தி யாரிடத்தே செலுத்தப்படுவது? கடவுளிடத்தில்.
அக்கடவுள் எத்தன்மை யுடையான்?
எங்கும் இருப்பான்; எல்லாம் தானே யாவான்; அறிவே வடிவமாகக் கொண்டு வையகச் செயல்களனைத்திற்கும் சாட்சி மாத்திரமேயாகி நிற்பான்.
அவன் நமது பக்திக்கு வசமாய் நம் உள்ளித்திலே கோயில் கொண்டு வீற்றிருப்பான்.ல் நம்முடைய துன்பங்களை யகற்றி இன்பக் கடலை நம்முள் நாட்டுவான்.
நமக்கு உலக மெல்லாம் பேரின்ப மயமாகத் தோன்றும்.
“பிண்டமாம் உடல்நா னல்லேன்;
பிராணவா யுவும்நான் அல்லேன்;
கண்டஐம் பொறியும் அல்லேன்;
கரணமோர் நான்கும் அல்லேன்;
பண்டைய அறிவு நானென்
றுன்னருள் கொண்டு பார்க்கில்
எண்டிசை கீழ் மேலெங்கும்
ஏகனா யிருக்கின் றேனே”
என்ற பாட்டில் சிவஞான வள்ளலார் குறிப்பிட்டிருக்கும் ஞான திருஷ்டி நமக்குண்டாகிறது.
இதனால் நாம் ஈசுவரத்தன்மை யடைகிறோம்.

[பாரதியார் பிறந்த நாளான 11/12/2014 அன்று எழுதியது]

Monday, December 8, 2014

புதுக்கோட்டையிலிருந்து ராஜேந்திரன்....

புதுக்கோட்டை காலஞ்சென்ற என் மாமனார் ஊர். ஐயனார் மீசையில் ஆகிருதியானவர். பக்கத்திலிருக்கும் பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் அவர்களது குலதெய்வம். சிலப்பதிகாரக் கண்ணகி மதுரை செல்லும் வழியில் தங்கி இளைப்பாறிய கோயில். சரி தலைப்புக்கு வருவோம். அங்கே வாழ்ந்த சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாக புதுக்கோட்டையின் வரலாறு கேட்க ஆவலாக தி.நகர் தக்கர் பாபாவினுள் நுழைந்தேன். வினோபா ஹாலில் ரங்கரத்னம் கோபு ( Rangarathnam Gopu) மைக்கில் இருந்தார். கிஷோர் மஹாதேவன் ( Kishore Mahadevan ) சமர்த்தாக கடைசி வரிசையிலிருந்து சிரித்தார். தட்டிக்கொண்டு முன்வரிசைக்கு விரைந்தேன்.

தமிழ் ஹெரிடேஜ்ஜினரின் டிசம்பர் மாதப் பேச்சுக் கச்சேரியின் தேதி கொடுத்துக்கொண்டிருந்தார் கோபு. கோபுவின் சரமாரியான ரஜினி ஸ்டைல் அறிவிப்புகளுக்கு அடுத்து பத்ரி (Badri Seshadri ) இன்றைய பேச்சாளர் ராஜேந்திரனைப் பற்றி அறிமுகவுரையாற்றினார். ”ராஜேந்திரன் புஸ்தகக்கணக்கில் கைப்பட சங்கு ஊதுபவர்.... வெடி போடுபவர்..என்று புதுக்கோட்டை மனிதர்கள் பற்றி எழுதிவைத்திருக்கிறார்...” என்று பேசும் போது பத்ரிக்கு இயல்பாய் ஒரு சிரிப்பு வருகிறது. வசீகரமாகயிருக்கிறது. பார்க்க படம்.
"Town of Temples" என்று எப்படி கும்பகோணம், காஞ்சீபுரம் போன்ற ஊர்களைச் சொல்வோமோ அதுபோல “Town of Tanks" என்று புதுக்கோட்டையை அழைக்கலாம் என்றார். பல்லவன் குளம் என்கிற குளம் ஊருணியாம். ஊருணி என்றால் ஊறி நிரம்பும் அந்தக் குளத்தின் நீரை அள்ளிப் பருகலாம். அதற்கு ஒரு காவலாளி இருந்தாராம். சோப்பு போட விடாமல் பாதுகாத்து வந்தார் என்ற செய்தியைச் சொன்னார். மன்னையின் ஹரித்ராநதி, கிருஷ்ண தீர்த்தம், தாமரைக் குளம், யானை விழுந்தான் குளம், ஐயனார் குட்டை என்று நீர்நிலைகள் கண் முன்னே டிக்கர் டேப்பாக ஓடியது.
மூன்று ரூபாய் ஐம்பது காசுக்கு தன் மகளை விசாலாக்ஷியிடம் விற்ற வேலாயி கதை சொன்னார். விற்ற காசுக்கு புடவை வாங்கிக்கொண்டாளாம் அந்த அம்மணி. திரும்பவும் வீட்டு வேலைகள் செய்து மூன்றரை ரூபாய் பணம் சேர்த்து விற்ற மகளை வாங்கப் போன கதை ஒரு சிறுகதை எழுதத் தூண்டியது.
கூட்டத்திற்கு எழுத்தாளார் சா. கந்தசாமி வந்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை வெளியான பின்பு தினமணியில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். சாதாரணர்களின் சுயசரிதையில்தான் நிறைய தெரிந்துகொள்ள முடியும் அப்படியெதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை என்ற தொணியில் எழுதியிருந்த கட்டுரை அது. மராத்திய காம்ளே என்கிற காய்கறி விற்கும் பெண்ணின் சுயசரிதை பற்றி டெஹெல்காவில் ஒரு முறை படித்திருக்கிறேன். வெள்ளிக்கற்றையாய் தோளில் புரண்ட அவர் கேசத்திற்கு மேலே மகுடமாய் ஒரு சிகப்புத் தொப்பி அணிந்திருந்தார். பார்வையாளர்கள் மத்தியில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.
ராஜேந்திரன் உடன்கட்டை ஏறும் சதியைப் பற்றி பேசினார். புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானின் மூன்றாவது மனைவி உடன்கட்டை ஏறிய செய்தியில் அபின் கொடுத்து அவரை வி.ர.தொண்டைமானின் இறுதி ஊர்வலத்தில் அழைத்துச் சென்றதைச் சொன்னார். பெண்களை போகப்பொருளாக உபயோகித்த ஆணாதிக்க சமுதாயத்தின் அட்டூழியம் என்று சீறினார். பக்கத்திலிருந்து சைனா மற்றும் அயல்நாடுகளிலிலும் அமுலில் இருந்த சதியைப் பற்றி வலது காதில் ரகசியமாய் உதிரிக் குறிப்பு கொடுத்தார் கோபு.
பத்து பிள்ளைகளில் ஒருவராய் பிறந்த சுப்பையா என்கிறவர் அவர் மனைவிக்கு கோயில் கட்டினாராம். குஷ்பூவுக்கே கோயில் கட்டும் இப்புண்ணிய பூமியில் இப்போது இந்த செய்திக்கு வீரியம் இல்லாமல் போனாலும் அடுத்தது அந்த சுப்பையாவைப் பற்றி சொன்ன செய்தியில் குலுங்கிச் சிரிக்கவேண்டியதாயிற்று. அவருக்கும் பத்து பிள்ளையாம். அவரும் அவர் மனைவியும் எப்போதும் சண்டையில் இருந்தார்களாம். சுருட்ட பாயும் முரட்டுப் பொண்டாட்டியும் உபயோகப்படாது என்று சொல்வார்களாம்... என்று சொல்லி Pause கொடுத்து அதற்கான விளக்கத்தைக் கொடுக்க கன்னம் சிவந்தார்.
ஃபோர்த் ஃபார்முக்கு ஃபிஃப்த் ஃபார்முக்கும் நடந்த கால்பந்து போட்டியில் தோற்ற போதும் சோமு என்ற தனது நண்பனுக்குக் கண்ணாடி பரிசளித்தது பற்றிச் சொன்னபோது கொஞ்சம் கரைந்தார். ஊரார் நேரம் தெரிந்துகொள்வதற்கு பீரங்கியால் மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஒரு வெடியும் மீண்டும் இரவு எட்டு மணிக்கு ஒரு வெடியும் போட்டார்களாம். அந்த வெடிபோட்ட மனிதரைப் பற்றிச் சொன்னார். அப்புறம் சங்கு ஊதும் சங்குமணியைப் பற்றிச் சொன்னார். அந்த ஊரில் போட்ட ப்ராம்மண போஜனம், நவராத்திரி கன்யா பூஜை போன்றவற்றை விஸ்தரித்தார்.
காலணா அரையணா பூரி வாங்குவதற்கு புதுக்கோட்டையிலிருந்து கானாடுகாத்தான் வரை நடந்து சென்ற ப்ராம்மண பையன்கள். பூரி என்பது ப்ராம்மண போஜனத்திற்கு பிறகு வைத்துக்கொடுக்கும் தட்சணை. பூமீஸ்வரர் பள்ளியில்தான் அழ.வள்ளியப்பா மற்றும் கல்கி சதாசிவம் ஆகியோர் படித்தார்களாம்.
கடல் பகுதிகளால் சூழாத போதும் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்ட ஊர் என்ற குறிப்பைத் தந்தார். நஞ்சை நிலம் வறண்டு வெடிக்கும் போது அந்த வெடிப்புகளில் கிடைக்கும் உப்பை எடுத்துச் சுண்டக் காய்ச்சி எடுத்த உப்பை மலைமலையாய்க் குவித்துப் போராடினார்கள் என்றார். ஒரு சுபயோக சுபதினத்தில் மன்னர் பரம்பரை ஆசாமியான இரண்டாம் சிவாஜி மரித்துப்போனார் என்று சொன்னதில் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அவ்வளவு படுத்தின ஆசாமியோ?
“கார்த்திகையும் அதுவுமா எங்கியோ கூட்டத்துக்குப் போய்ட்டான்... “ என்கிற அம்மாவின் வசவு சஞ்சயனுக்கு குருக்ஷேத்திர யுத்தம் தெரிந்தது போல காட்சியாய் ஓடியது. கோபுவிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு பத்ரிக்கு கண்ணால் சொல்லிக்கொண்டு சேப்பாயின் காதில் “சீக்கிரம்” என்று ஸ்டார்ட் செய்து விரைந்தேன். மனசு மீட்டிங்கில் இருந்ததால் “Over ?" என்று கோபுக்கு சைதை தாண்டும் போது டெக்ஸ்ட் செய்தேன். ஏழே முக்காலுக்கு முடிந்ததாம். முழுவதும் இருக்க முடியவில்லை.
சாதாரண மனிதர்கள் என்று ராஜேந்திரன் பேசியதைத்தான் வாத்தியார் ஸ்ரீரங்கத்து தேவதைகளாக எழுதினார். நான் மன்னார்குடி டேஸ் என்று எழுதும் உண்மை கலந்த கதைகளும் அதை ஒட்டித்தான். எவ்வளவு வயசானாலும் ஊர் ஞாபகங்கள் நிழலாய்ப் பின் தொடர்ந்து வரும் என்பது பேராசிரியர் (தி.மு.க) போலிருந்த ராஜேந்திரனின் பேச்சில் வர்ணமயமாகத் தெரிந்தது.
சாதாரண மனிதர்கள் பற்றிய பதிவாகையால் நான் சில வருடங்களுக்கு முன்னர் “ஐவர்” என்று எழுதிய என் ப்ளாக் பத்தியிலிருந்து “பட்டக்கா”வை கடைச் சேர்ப்பாக சேர்க்கிறேன்.
ஊர்: மன்னார்குடி
இடம்: கீழப்பாலம் அய்யனார் குட்டை அருகில் 
மனுஷி: பட்டக்கா

பெயரில் பட்டக்காவாக இருந்தாலும் அது ஒரு பக்காக் கிழவி. பட்டாக இல்லாமல் கரடுமுரடாக இருக்கும் கார்மேகக் கிழவி. வரும் ஐப்பசியில் தொண்ணூறாம். லபோதிபோ என்று கத்திக்கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பார்த்தது. உடம்பில் ஒரு புடவையை சுற்றிக்கொண்டு நின்றது. ஜாக்கெட் இல்லாமல் விறகுக் கரியாய் இருந்த பட்டக்கா ஒரு வயதான கருஞ் சிலை போல ஓரத்தில் சாய்ந்திருந்தது. கண்ணும் காதும் அவள் போட்ட சாப்பாட்டிற்கு வஞ்சனை செய்யாமல் இன்னமும் உழைத்துக் கொண்டிருந்தன. என்ன ஒரு தீர்க்கமான பார்வை! இரண்டாம் முறை "ஆ.." என்று வாய்க்கு வேலை வைக்காத காது.
"என்னக்கா? எப்படி இருக்கே?" குசலம் விசாரித்தாள் அம்மா.
"ஒரு கொறவும் இல்லம்மா" என்று நொண்டியடித்துக்கொண்டே சொன்னது பட்டக்கா.
"மவன் ஒழுங்கா பார்த்துக்கரானா?" பக்கத்தில் நின்ற மாரியைப் பார்த்து வம்பு வளர்த்தது என் அம்மா.
"நீங்கெல்லாம் ஊரை விட்டு போயிட்டீங்க..." என்று கண்களில் நீர் முட்ட கையை விரித்து ஆரம்பித்ததை பார்த்து மாரி முறைத்தான்.
இதற்கு முன்னர் லாரி கிளீனர் மாரிக்கு தனியாக காசு கொடுத்திருந்தேன். பட்டக்கா நிலைமையறிந்து பர்சுக்குள் கையை விட்டதும் முட்டிக்கொண்டிருந்த நீர் தாரை தாரையாய் வழிந்தது. வேண்டாம் என்று சொன்னாலும் கையை பிடித்து பணத்தை திணிக்கையில் கட்டிப் பிடித்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதது. எலும்பும் தோலுமாக இருந்தாலும் வைரம் பாய்ந்ததாக இருந்தது. உழைத்த கட்டை. ஓய்வறியா உழைப்பாளி.

"ஏ..க்கே...ஏ...ஹே..ஹே.." என்று குச்சியை தரையில் அடித்து ஆடு மேய்த்துக்கொண்டு ஓடிய பட்டக்கா ரெண்டடிக்கு நாலடி இடத்தில் சருகு போல மடிந்து சரிந்திருந்தது ரொம்ப நேரம் என்னை தொந்தரவு செய்தது.
இப்போ.. பட்டக்கா மரிச்சாச்சு.
எழுத்தாளர் சார்வாகனை அழைத்துக்கொண்டு சென்றது Chitra Nagesh மேடம்தான் என்று நினைக்கிறேன். கண்களால் எக்கிப்பார்த்தேன். பேச முடியவில்லை.

Monday, December 1, 2014

மொட்டை மாடி இலக்கியங்கள்

திருவான்மியூரில் இன்று தமிழ் ஹெரிடேஜ் மீட்டிங். ஞானத்தின் நுழைவுவாயில் போல ஒரு சின்ன ரோட்டில்நுழைந்து இடது திரும்பி முட்டு சந்தில் ஏழெட்டு வீடு தாண்டி மாடியில் மீட்டிங். காஃபி டீ பிஸ்கட் கட்டையில் வரவேற்க அந்த மொட்டைமாடி கொட்டாய்க்குள் நுழைந்தேன். காட்டமான இலக்கிய வாசனை அடித்தது.


Badri Seshadri இறையனார் அகப்பொருள் மற்றும் மதுரைக் காஞ்சி பற்றிய சிறுகுறிப்புகள் தந்து மேலும் படிக்கத் தூண்டினார். இரண்டு பாடலையும் எடுத்துக்கொண்டு வரிக்கு வரி கவிநயம் பாராட்டப் போவதில்லை என்று ஆரம்பித்தார். குமரிக்கண்ட லெமூரியா பற்றியும் முதல் இடை கடைச் சங்கங்கள் பற்றியும் துளித்துளி சொல்லிவிட்டு எடுத்துக்கொண்ட விஷயத்துக்கு வந்தார்.

Rangarathnam Gopu வைத் தெரியும். இரண்டு மூன்று இலக்கியக் கூட்டத்தில் பழக்கமானவர். பக்கத்தில் உட்கார்ந்தால் அவரது தொடை தட்டிப் பேசுமளவிற்கு நண்பரான வரலாற்றாய்வாளர். கிழக்கு பத்ரி நாற்திசையிலும் பிரபலம். தெரியும். Balasubramanian Natarajan சார் எம்ஜியார் குல்லாவில் வந்திருந்தார். முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவரைக் கும்பிட்டேன். ஏனையோர்கள் எனக்குப் பரிச்சியமில்லாதவர்கள். இலக்கிய ஆர்வலர்கள். கூட்டம் முழுவதும் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து நிறைய கேள்விகளும் பதில்களும் முழங்கியது இரசிக்கும்படி இருந்தது.

சங்க காலத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் எழுதிவிட பொருளதிகாரம் எழுத ஆளில்லை என்றவுடன் இந்த அகப்பொருளை இறையனாரே செப்பேட்டில் எழுதி நக்கீரனார் அதற்கு உரை எழுதினாராம். பலர் இதற்கு உரையெழுத ஊமைப் பையன் ஒருவன் நக்கீரனாரின் உரைக்கு பதத்துக்குப் பதம் கண்ணீர் சொரிந்தானாம். அதுவே சிறந்த உரையென்று எடுத்துக்கொண்டார்களாம். அந்த ஊமைப் பையன் முருகன் அவதாரம் என்று பிற்பாடு கூகிள் தேடலில் கிடைத்தது.

உரையெழுதியவர் கணக்காயனார் மகன் நக்கீரனார். கணக்காயனார் என்பவர் ஆடிட்டர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சின்னக் கவுண்டரில் கேப்டன் “நீங்களெல்லாம் நினைக்கிறது போல அவரு ஸ்கூல் வாத்தியாரில்லை. குஸ்தி வாத்தியார்...” என்று பஞ்சாயத்து சொல்வது போல பின்வரிசையில் இருந்து ஒருவர் கணக்காயர் என்பது ஆசிரியர் என்றார். இறையனார்:இறைவனார், தலைவர்:தலையர் போன்ற பதங்களுக்கிடையில் ஒட்டிக்கொண்டு வரும் வித்யாசத்தை விளக்கினார். எங்கள் தலைவர், சொட்டைத் தலையர் போன்று இறையனார் என்பது பெயராகவும் இறைவனார் என்றால் கடவுளாகவும் இருக்கலாம் என்று சொன்னார். திரும்பிப் பார்த்தேன். கண்ணாடியில் சிரித்தார்.

பனிரெண்டு வருஷங்கள் பாண்டிய நாடு வறண்டுபோனது. அங்கிருந்த சங்கப் புலவர்களையெல்லாம் வேறு நாட்டிலிருந்துவிட்டு மீண்டும் செழிப்பானதும் வரச்சொன்னானாம் பாண்டி நாடன். திரும்பவும் அவர்கள் வந்ததும் எழுத்தும், சொல்லும் இலக்கணம் கண்டது. பொருளதிகாரத்தை இறைவனார் எழுதினார் என்பது கதை.

மதுரைக் காஞ்சி பற்றி பத்ரி ஆரம்பித்ததும் பக்கத்திலுள்ளவர் ”காஞ்சி...” என்று இழுத்ததும் “காஞ்சீபுரமல்ல.. இது காஞ்சித் திணையில் எழுதிய பாடல்...” என்று பத்ரி சிரித்தார். தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மாங்குடி மருதனார் இயற்றிய 782 வரி பா. மா. மருதனார் இராத் தூங்கா மதுரையை வர்ணிக்கிறார். மருதம், முல்லை, நெய்தல், பாலை, குறிஞ்சி என்று ஐவகை நிலங்களை வர்ணிக்கிறார். பாலை நிலம் என்பதை பாலைவனம் என்று தப்பர்த்தம் செய்து கொள்பவர்கள் கொஞ்சம் நிற்க. முல்லை மற்றும் குறிஞ்சியின் திரிபே பாலையாகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவுமில்லாமல் ரெண்டுங்கெட்டான் நிலப்பரப்பு பாலையெனப்படுகிறது.

மாங்குடி மருதனாரைச் சொல்லும் போது ஊரில் மாங்குடியாரை நினைத்துக்கொண்டேன். மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனின் அவைப் புலவர். எவ்வளவு மெய்கீர்த்திகள் பாடினாலும் கடைசியில் வீடுபேறு பற்றி எடுத்துச் சொல்லி “வாராது காண் கடை வழிக்கே” கணக்காக நெடுஞ்செழியனுக்கு உபதேசிக்கிறார்.

இறையனார் அகப்பொருள் மற்றும் மதுரைக் காஞ்சியின் அறிமுகம் இங்கே நடந்து கொண்டிருக்கும் போது பக்கத்து மொட்டை மாடியில் தெய்வத்தின் குழந்தை ஒருவருக்கு அவரது தாயார் நடைபயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அது கொஞ்சம் வளர்ந்த குழந்தை. பதினாலு பதினஞ்சு வயசிருக்கலாம். நீல வண்ண பனியனும் வெள்ளை கால் நிஜாரும். தலையைத் தூக்கி வாயை ”ஊ..ஊ”என்று என்னவோ பண்ணிற்று. அதன் கையைக் கோர்த்து விரல்களை நீவி விட்டுக்கொண்டு நடந்த அந்த அம்மாவின் கண்களில் வாத்சல்யமும் அன்பும் கருணையும் பொங்கிற்று. காதை இங்கே கொடுத்துவிட்டு கண்களை அங்கே அலைபாய விட்டேன். மனசும் துடித்தது. இறைவா! சக்தி கொடு.

இந்த மொட்டை மாடியில் சங்க இலக்கியங்களும் அந்த மொட்டை மாடியில் வாழ்விலக்கியமும் இன்று ஒருசேர எனக்குப் பரிமாறப்பட்டன. இரண்டுமே அமரத்துவம் வாய்ந்தவை. நெஞ்சிலிருந்து நீங்காதவை.

Saturday, November 29, 2014

தூங்கும் குளம்

ன்னார்குடி ஹரித்ராநதி. கோபில கோப்பிரளய முனிவர்களை இத்திருக்குளத்தின் கரையில் உட்கார வைத்துத் தனது எல்லா லீலைகளையும் ராஜகோபாலன் ரீடெலிகாஸ்ட் பண்ணினான் என்பது ஐதீகம். ஹரித்ரா என்றால் மஞ்சள், மஞ்சள் பூசி கோபியர்கள் கிருஷ்ண பரமாத்மாவுடன் இங்கே ஜலக்க்ரீடை செய்ததால் ஹரித்ராநதி என்ற பெயர் பெற்றது. மைய மண்டபத்தில் வேணுகோபாலன் சன்னிதி. குச்சியால் டின் கட்டியப் படகைத் தள்ளிக்கொண்டு அங்கே போவார்கள். வருஷாந்திர ஆனி மாச தெப்போற்சவத்தின் போது கோபாலன் ஒரு முறை நடுவளாங் கோயிலை எட்டிப் பார்ப்பார். அன்று கோபுரமெங்கும் சீரியல் செட் மினுமினுக்கும். நான்கு கரையும் விடியவிடிய முழித்திருக்கும். தெருவோரங்களில் “திருவிளாக் கடைங்க” முளைத்திருக்கும். குளம் நிரம்பித் தளும்பும் சமயங்களில் எப்போதாவது ஈசான்ய மூலையில் பிரேதம் ஒதுங்குவதும் உண்டு. வாழ்வோ சாவோ இந்தக் குளத்தில்தான் என்று வைராக்கியமாக இருந்திருப்பார்கள் போலும்.

சாயங்கால வேளைகளில் கூடத்து ஊஞ்சலை வீசியாடி இந்தக் குளத்தை ரசித்துக்கொண்டே லோட்டா காஃபி ருசித்தது நேற்று கண்ட சொப்பனம் போலாகிவிட்டது. ”சீப்பி சாப்பிடாதேடா தம்பி.. எச்சல்.. கீழே வைக்காம கொண்டு போய் கொல்லே குழாயடில போடு....”ன்னு பாட்டி அதட்டுவாள். ஹரித்ராநதிக்கரை நாகரீகத்தில் வளர்ந்தேன். கூவம் நதிக்கரையில் குடியேறிவிட்டேன்.

ஊஹும். விஸ்தாரமானக் குளம். தவளைக் கல் எறியாதீர்கள். அது தூங்குகிறது. என் நினைவுகள் படக்கென்று விழித்துக்கொண்டன.

Friday, November 28, 2014

பந்து ரூபத்தில் வந்த காலன்

ஃபின்லே ஸ்கூல் க்ரௌன்ட் நேஷனல் ஸ்கூல் க்ரௌன்டை விடப் பெருசு. எந்நேரமும் மூணு மேட்ச்சாவது நடக்கும். அந்தக் கடைசி பிட்ச் அநியாயத்துக்கு uneven பௌன்ஸ் ஆகும். மண்வெட்டியால கொத்திப் போட்டா மாதிரியான பிட்ச். விஜய், சூரி, பாலாஜி, முரளி, சீனுன்னு ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரோடயும் விளையாடிய ஃப்ரெண்ட்லி மேட்ச் அது. மத்தியான நேரம். பொட்டை வெய்யில். தையல் போட்ட கிரிக்கெட் பால் கிடைக்கலை. அதனால கிரிக்கெட் பாலோட ஒண்ணு விட்ட தம்பி “விக்கி ப்ராண்ட்” கார்க் பால் வாங்கி விளையாண்டோம்.

க்ரௌண்டுக்குப் போற வழியில சீனு வீடு. ஃப்ரிட்ஜ்க்குள்ளே அவனுக்காக இருக்கும் கூல்ட்ரிங்க்ஸுல பாதியைக் குடிச்சுட்டு அவனையும் சைக்கிள்ல அழைச்சுக்கிட்டு க்ரௌண்ட் போனோம். காலுக்கு Pads கிடையாது. முட்டி பேந்துசுன்னா அடுத்தநாள் ஸ்கூலுக்கு லீவ் போட்டுடலாம். ஜாலி. இடது கைக்கு மட்டும் க்ளௌஸ் போட்ருந்தோம். அப்டமன் கார்டு கட்டாயம்உண்டு. ஆனா மேட்ச்சுக்கே ஒண்ணு தான். ஒருத்தன் அவுட் ஆனப்புறம் அடுத்தாள் அதை இடது கையால வாங்கிக் கீழே தட்டிட்டு தரையில சரக்சரக்குன்னுத் தேய்ச்சுட்டு பாண்ட்டுக்குள்ளே சொருகிக்கணும்.

விக்கெட் கீப்பர் தவளையாயும் குரங்காயும் எம்பிக் குதிச்சு பிடிச்சுக்கிட்டிருந்தான். சீனு பேட்டிங். நான் ஃபாஸ்ட் பௌலர். ஒரு ஓவர் என்னை அடிச்சுத் துவம்சம் பண்ணினான். என்னோட அடுத்த ஓவரும் க்ராஸ் பேட் ஆடி, தில்லையம்பல நடராஜர் மாதிரி தூக்கிய பாதத்தோட ஆஃப் சைட்ல விழுந்த பந்தைக் கூட வாரி லெக் சைட்லயே பொளந்துக்கிட்டிருந்தான். எனக்கு சுர்ர்ருனு கோவம் வந்திருச்சு. ஹீ மேன்ல ஆகாசத்துக்குக் கத்தியைக் காட்டி பவர் எல்லாம் வாங்கிக்கிறா மாதிரி கையை மேலே உசத்தி ஒரு சுத்து சுத்திட்டு ஓடி வந்து அரைப் பிட்சுல பாலை ஓங்கிக் குத்தினேன். லெக் அண்ட் மிடிலில் விழுந்த பந்து.

கார்க் பால் பிட்ச்சுக்கு அப்புறம் இன்னொரு மடங்கு வேகம் எடுக்கும். பந்து பிட்ச்சுல குத்தினதுதான் தெரியும். அடுத்த செகெண்ட் கையிலிருந்த பேட்டை விசிறியடிச்சுட்டு மூஞ்சியைப் பிடிச்சிக்கிட்டு சீனு பிட்ச்சிலேயே குத்த வச்சு உட்கார்ந்துட்டான். பாடிலைன் கிரிக்கெட்னு பேர். எல்லோரும் அலறியடிச்சுக்கிட்டு அவன்கிட்டே ஓடினோம். பந்து நெத்தியில பட்டு புஸுபுஸுன்னு எலும்பிச்சம் பழ சைஸுக்கு வீங்கிடிச்சு. பெவிலியன் மரத்தடியில பாபி ஐஸ்காரன் குச்சி ஐஸ் பால் ஐஸ்னு வித்துக்கிட்டிருந்தான். அவன் கிட்டே ஓடிப்போயி ஒரு ஐஸ் வாங்கி வீங்கின இடத்துல வச்சு அழுத்திப் பிடிச்சிக்கிடிருந்தேன். கை நடுங்குது. உடம்பெல்லாம் உதறுது. பதறிப் போய்ட்டேன். பொட்டுல பட்டிருந்தா சீனு அன்னிக்கே பட்டுன்னு போயிருப்பான். வீட்டுக்குப் போறப்ப வீங்கின இடத்தைத் தடவிக்கிட்டே சிரிச்சான்.


 மேற்கிந்திய விவ் வெறும் மெரூன் கலர் கேப்போட இறங்கி விளாசுவார். இந்திய ஸ்ரீ ரொம்ப நாள் ஹெல்மெட் இல்லாமதான் விளையாடினார். ஹெல்மெட் போட்டும் ஃபில் ஹ்யூஸ் செத்துப்போனது ரொம்பவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இன்னும் மூணு நாள்ல பர்த்டேவாம். நவம்பர் முப்பதுல இருபத்தஞ்சு முடிஞ்சு இருபத்தாறு. பல்லுல அடி. உள்ளி மூக்கு உடைஞ்சு ரத்தம் கொட்டிச்சுன்னு இருக்கக்கூடாதா? தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்னு பௌன்ஸருக்கு குனிஞ்சுக்கிறது ஒன்னும் அவமானம் இல்லையோன்னு தோணுது.

பந்து வீசிய அபாட்டின் நிலைமை இன்னும் மோசம். மனசுக்குள்ள ”நாம ஒரு கொலைகாரனோ”ன்னு குறுகுறுப்பு இருக்கும். பௌல் பண்றத்துக்கு வரும் ரன்னப்ல ஃபில் நியாபகம் வந்தா கால் ரெண்டும் பின்னிக்கும். இது அபாட் தப்பும் கிடையாது. பேட்ஸ்மேனை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வரணும்னு நினைக்கிற பேஸ் பௌலர்களின் யுக்தி இது. ச்சும்மா மிரட்டறது.

ஃபில்லுக்கு பந்து ரூபத்தில் வந்த காலன்!

Thursday, November 27, 2014

கங்கைக் கிணறு

காவிரிக்கரை ஓரமா பெரிய க்யூ. கையில் மஞ்சப்பையோடு கூன் விழுந்த சுமங்கலிக் கிழவி, கைக்குழந்தையோடு ஒரு ஒத்தை ரூபா பொட்டுக்காரி, காதில் ஹியரிங் எய்டோடு நடை தளர்ந்த பெரியவர், வெற்று மார்போடு கறுப்பு வஸ்திர ஐயப்ப சாமி என்று பெரிசும் சிறுசுமாய்க் கலந்து கட்டி வாசுகிப் பாம்பாய் வரிசை நின்றது.

பதினோரு மணிக்குச் கொஞ்சம் சுறுசுறுப்பாக நகர்ந்தது வரிசை.

“காலேலே அந்தப் புளியமரம் தாண்டி ரெண்டு பர்லாங்கு ஜனம் நின்னுச்சி... ரோட்ல காரு பஸ்ஸு போவமுடியலை..” கழுத்து வழியே கழண்டு விழும் மோஸ்தரில் கதர் சட்டை போர்த்திக்கொண்டிருந்த தாத்தா பக்கத்து ஐயப்ப சாமியிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

“நீங்க எப்போ வந்தீங்க?” பின்னாலிருந்து மெல்லிசாக குரல் விட்டேன்.

“இப்போதான்.. பத்தரை மணிக்கு...”

கதை கேட்ட ஐயப்ப சாமி பெருசை ஏற இறங்க பார்த்துவிட்டு விரோதமாக மூஞ்சியைத் திருப்பிக்கொண்டது.

திருவிசநல்லூரில் ”கங்காவதரண மகோத்ஸ்வம்” நேற்று விமரிசையாக நடந்தது. மேற்படி டயலாக்கில் பெரியவர் சொன்ன புளியமரத்தடியில் சேப்பாயியை சொருகிவிட்டு ஐயாவாள் மடத்துக்கு குடும்ப சகிதம் வந்துசேர்ந்தேன். நல்ல கூட்டம். ஒரு தசாப்தம் முன்னர் வந்திருந்தேன். இவ்வளவு தள்ளுமுள்ளில்லை. நேரே ஆறு ஒரு முழுக்கு. அப்புறம் நேரே கிணறு. ஸ்நானம். ஐயாவாள் தரிசனம். விடு ஜூட். இது பத்து வருஷத்துக்கு முந்திய சங்கதி. இப்போது க்யூ கட்டி நிற்கிறார்கள். நல்ல சங்கதி.

சின்னவள் “எப்டிப்பா கிணத்துக்குள்ள கங்கை ரிவர் வரும்?” என்று கையை இழுத்துக் கேட்டாள். பெரியவள் “என்னப்பா போங்கு கதையா இருக்குது?” என்று கைகொட்டிச் சிரித்தாள். க்யூ இப்போது அடிப் ப்ரதக்ஷிணமாக நகரக் கதை சொல்ல ஆரம்பித்தேன்.

“ஸ்ரீதர ஐயாவாள் திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமியை தினமும் போய்ப் பார்த்துட்டு தீபார்த்தியை கண்ணுல ஒத்திண்டு வருவாராம்... அவரோட இஷ்ட தெய்வம் மகாலிங்கம்...”

“இப்ப வரும்போது பார்த்தோமே.. அந்தப் பெரிய கோயிலா?”

“ஆமா.. அந்த நாலு ரோட்டுல ரைட் சைட்ல நாம உள்ள புகுந்துட்டோம்”

“எவ்ளோ பெரிய கோயில்!” சின்னவள் விழிகள் விரித்து கண்ணால் கோயிலின் அகலநீளம் அளந்தாள்.

“ஆம்மா.. அவருக்கு அந்த ஸ்வாமி மேல அவ்ளோ பக்தி.. டெய்லி வருவார்..”

“அந்த சிவன்தான் அவர் தலையில் இருக்கிற கங்கையை அவர் கிணத்துக்கு கொண்டு வந்துட்டாரா?” பெரியவள் அட்வான்ஸாக கதைக்குள் போனாள்.

“ஊஹும். பொறுமையாக் கேட்டா சொல்றேன்.” என்றதும் பின்னாலிருந்து இடதுகைக்கு வந்தாள். வலது கையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு சின்னவள் “ம்.. சொல்லு..” என்றாள்.

“ஸ்ரீதர ஐயாவாளோட அப்பாவுக்கு ஒரு நாள் சிரார்த்தம் வந்துது. தெவசம். வாத்யார்ளாம் ஆத்துக்கு வர்றதுக்குள்ளே இவர் போய் இதோ இந்தப் பக்கம் இருக்கே இந்த காவேரி.... இதுல குளிக்க வந்தார்...”

“இந்த இடத்திலேயே வா?” என்று ரெண்டு புளிய மரத்துக்கு நடுவே கணுக்காலளவு தண்ணீர் ஓடும் காவேரியைக் காட்டி கேட்டாள் சின்னவள்.

“ஆமா.. இந்த இடத்துலதான்.. இதுலேர்ந்து நேரா அந்த சந்து வழியா அவாத்துக்குப் போய்டலாம்...”

“ம்.. அப்புறம்...”

“குளிச்சுட்டு ஈரவேஷ்டியை சுத்திண்டு மடியா ஆத்துக்கு போயிண்டிருந்தார். அப்போ இந்தத் தெரு முக்குல ஒரு வயசான ஆள்.. ஒல்லியா.. ”

“இங்கயா?” என்று தெருவோர முல்வேலிக்கு அருகே கையைக் காட்டிக் கேட்டாள் சின்னவள். “ஆமா இங்கதான்.. கதையைக் கேளு...” என்று தொடர்ந்தேன்.

”அவன் ஐயா பசிக்குது.. சோறு தர்றீங்களா?ன்னு கெஞ்சினான். ஐயாவாள் தர்மிஷ்டர். அதாவது உடனே ஹெல்ப் பண்ணிடுவார். அவனைப் பார்த்ததும் அவருக்கு பாவமா இருந்தது.. அவன் திரும்பவும் அவரைப் பார்த்து சாமி நாலு நாளா சாப்பிடலை.. பசி வயித்தைக் கிள்ளுது சாமி..ன்னு கையால வயித்தைப் பிடிச்சிண்டு கேட்டான்... அவர் உடனே அவனை வாப்பான்னு அவராத்துக்குக் கூட்டிண்டு போனார்... தெவசத்துக்கு சமைச்ச சாதத்தையெல்லாம் இந்தக் கிழவனை உட்கார வச்சுப் போட்டார். அவன் பரமதிருப்தியா சாப்டுட்டு போனான். இதை தெவசத்துக்கு ப்ராம்ணார்த்தத்துக்கு சாப்பிட வர்ற ரெண்டு பேர் திண்ணையில உக்காந்துண்டு பார்த்துண்டிருந்தா..”

“அவாளுக்கு சாப்பாடு இல்லையா?”

“சாப்பாடு இல்லைன்னு கிடையாது. தெவச சாப்பாடு வாத்யார் கூட வர்றவாதான் சாப்பிடணும். வேற யாரும் சாப்பிடக்கூடாது. அதனால.... நாங்க தெவசம் பண்ணி வைக்க வரமாட்டோம்னு வாத்யார் கூட வர்றவாள்ளாம் சொல்லிட்டா...”

முன்னாடி போய்க்கொண்டிருந்த பெரியவர் காதை இந்தப் பக்கமும் கண்ணை முன்னாடியும் வைத்திருந்தது நான் அமைதி காத்த ஒரு நிமிடத்தில் தெரிந்தது. திரும்பித் திரும்பி பார்த்தார். ஸ்நானம் செய்த ப்ரம்ம தேஜஸ் கிழவர் ஒருவர் நெற்றியில் நீறு பூசி பக்திமணம் கமழ எதிர்ப்பட்டார். கை கூப்ப வேண்டும் போல் இருந்தது.

“ம்.. சொல்லு..” சின்னவள் பற்றியிருந்த என் கையை இழுத்தாள்.

“ஐயாவாள் ரொம்ப வருத்தமா எப்படி சிரார்த்தம் பண்ணப்போறோம்னு வாசத் திண்ணையில உட்கார்ந்துண்டிருந்தப்போ.. மூனு பேர் அவாத்துக்கு வந்து உள்ள வாங்கோ தெவசம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னாளாம்... அந்தத் தெருவுல இருக்கிறவாளுக்கு ஒரே ஆச்சர்யம். வந்த மூணு பேரை அந்த ஊர்ல யாருமே அதுக்கு முன்னாடி பார்த்ததில்லையாம்.... யாருன்னே தெரியலையே.. கும்மோணத்துலேர்ந்து வந்திருப்பாளோன்னு குசுகுசுன்னு பேசிண்டிருந்தாளாம்... ரெண்டு ஹவர் கழிச்சு அந்த தெருக்காரா ஐயாவாள் ஆத்து ஜன்னல்ல எட்டிப் பார்த்தா....”

இந்த மாதிரி இடத்தில் எப்பவும் ஒரு pause கொடுப்பது எனது வழக்கம். பசங்க ரெண்டுத்துக்கும் ஆர்வம் தாங்க முடியாம...

“பார்த்தா.. “ பெரியவள்.

“பார்த்தா...” இது சின்னவள்.

கேட்டார்கள். மூன்றாவதாக “பார்த்தா...” முதுகுக்குப் பின்னாலிருந்து வந்தது. கேட்டது சங்கீதா.

”பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரும் சாப்பிட்டிண்டிருந்தாளாம்.. விஷ்ணு இலையில உட்கார்ந்துண்டு விஷ்ணுவே சாப்டாராம்... எட்டிப் பார்த்தவாளுக்கு ஒரே ஆச்சர்யம்... இருந்தாலும் ஐயாவாள் ஏதோ கண்கட்டு வித்தை பண்றார்னு நினைச்சுண்டு சாயந்திரமா ஐயாவாள் கிட்டே நீங்க அனாச்சாரம் பண்ணிட்டேள். இதுக்கு பிராயச்சித்தம் பண்ணினாதான் இனிமே உங்காத்துக்கு வைதீக காரியத்துக்கெல்லாம் வருவோம்னு சொல்லிட்டா... என்ன ப்ராயச்சித்தம்னு ஐயாவாள் கேட்டார்... அதுக்கு இன்னிக்கே நீர் கிளம்பி கங்கையில் போயி ஸ்நானம் பண்ணிட்டு திரும்பி வரணும். அப்போதான் உம்மை சேர்த்துப்போம்னு சொன்னா...”

“ஃப்ளைட்ல போய்ட்டு வந்துருக்கலாமே” என்று கேள்வி கலந்து பேசினாள் சின்னவள்.

“அப்போ அப்படியெல்லாம் வசதியில்லே... ரொம்பவும் நொந்து போய்.. திண்ணையிலேயே அன்னிக்கி ராத்திரி படுத்து தூங்கிட்டார்... அப்போ கனவுல சிவன் உம்மாச்சி வந்து.. ஸ்ரீதரா கவலைப்படாதே.. நாளைக்கு உங்காத்து கொல்லப்பக்க கிணத்துல கங்கையை வரவழைக்கிறேன்.. நீ அதுல குளிச்சு உன்னோட பாவத்தைப் போக்கிக்கிறேன்னு இவாள்ட்ட சொல்லு...ன்னு பேசிட்டு மறைஞ்சுபோய்ட்டார்... கண்ணை முழிச்சுப் பார்த்தா இன்னும் விடியலை.. விடிஞ்சதும் இவர் தெருக்காராளைக் கூப்பிட்டு.. இன்னிக்கி எங்காத்து கிணத்துல கங்கை வரா.. அதுல குளிச்சு நான் பாவத்தைப் போக்கிக்கிறேன்... நீங்களும் வேணுமின்னா பாருங்கோ...ன்னு சொன்னார்...”

“ஓ.. உடனே அண்டர்க்ரௌண்ட்ல கங்கை ஓடி வந்து இந்த கிணத்துல பூந்துடுத்தா..” பெரியவள் கதை முடித்தாள்.

“ம்.. அப்படியெல்லாம் சாதாரணமா வந்துடுமா? ஊர்ல உள்ளவாள்லாம் கிணத்தைச் சுத்தி நிக்கறா.. அதல பாதாளத்துல தண்ணி கிடக்கு...”

“கங்கே.. வந்துடுன்னு... கூப்ட்டாரா?” சின்னவள் கேட்டாள்.

“ஆமா.. வெறுமன இல்லே... கங்காஷ்டகம் படிச்சார்....எட்டுல அஞ்சாவது ஸ்லோகம் சொல்லி முடிச்சவுடனே.. கிணத்துக்குள்ளேர்ந்து குபுகுபுன்னு ஜலம் வழிஞ்சி தெருவெல்லாம் ஓடித்தாம்... ஊர்ல இருக்கிறவாளுக்கும் சேதி தெரிஞ்சு ஓடி வந்து பார்க்கறாளாம்.... அவரோட மகிமை தெரிஞ்சு போய் எல்லோரும் அவர்ட்ட எங்களை மன்னிச்சுக்கோங்கோ...ன்னு கன்னத்துல போட்டுண்டு நமஸ்காரம் பண்ணினாளாம்.... அதான் கதை...”

“அது கங்கை தண்ணின்னு எப்படிப்பா தெரிஞ்சுது...” கேள்வியின் நாயகியாக சின்னவள் கேட்டாள்.

“கங்கை ஆற்றில விடும் மங்கல பொருட்கள்லாம் அதுல மிதந்து வந்துதாம்.. அப்புறம் அந்த தண்ணி வித்தியாசமா இருந்ததாம்....” என்றதும் சமாதானமானாள்.

இதோ வந்துவிட்டோம். உள்ளே நுழைந்தோம். கிணற்றுக்கு பந்தல் போட்டு பூ மாலையெல்லாம் சூடியிருந்தார்கள். கிணற்றின் மேலே நாலு தொண்டர்கள் ஏறி நின்று தண்ணீர் இறைத்து பக்தர்கள் தலையில் ஊற்றி சேவை புரிந்துக் கொண்டிருந்தார்கள். காலையிலிருந்து தொப்தொப்பென்று கிணற்றுக்குள் விழுந்து எழுந்த வாளி ஓரத்தில் நசுங்கியிருந்தது. நான் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த பத்து நிமிடத்தில் ஐநூறு பேர் குளித்திருக்கலாம். முக்கால் கிணறு தண்ணீர் குறையாமல் தளும்பிக்கொண்டிருந்தது.

குளித்துவிட்டு கிணற்றடிக்குப் பக்கத்து மாடியில் உடை மாற்றிக்கொண்டோம். சிலர் தர்ப்பணம் செய்துகொண்டிருந்தார்கள். நெற்றிக்கு வெள்ளையடித்த ஒரு மாமா குங்குமம் தேடிக்கொண்டிருந்தார். மூன்று விரல் பிரித்து பட்டையடித்துக் கொண்டிருக்கலாம். ஐயாவாள் மடத்திற்குள் நுழைந்து தரிசனம் செய்தோம். வெளிக் கதவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர் அன்னதானத்திற்கு வசூல் செய்துகொண்டிருந்தார். யத்கிஞ்சிதம் கொடுத்தேன். ரசீதிற்கு அட்ரெஸ் போட்டு அழகாகத் தந்தார்.

வெளியே பரபரப்பாக அன்னதானம் நடந்துகொண்டிருந்தது. பக்தர் கூட்டம் அலைமோதியது. சமூக ஏற்றத்தாழ்வில்லாமல் அனைவரும் சமத்துவமாக நின்றுகொண்டிருந்தனர். பார்க்கப் பரவசமாயிருந்தது.

ஒவ்வொரு வருடம் கார்த்திகை அமாவாசை இந்தக் கிணற்றில் கங்கை வருகிறாள் என்பது ஐதீகம். இன்றளவும் பொய்க்காமல் நடக்கிறது. காவிரி வறண்டாலும் இக்கிணற்றுக்குள் வரும் வற்றாத ஜீவநதி கங்கை வறண்டு போவதில்லை. அடுத்த வருடம் கார்த்திகை அமாவாசை உங்கள் காலண்டரில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். புண்ணியம் கிடைக்கட்டும்.

கணபதி முனி - பாகம் 19 : வேத வாழ்வே தேவ வாழ்வு

”..இப்படி எழுதுவது ஒன்றும் பிரமாதமான கார்யம் இல்லை” என்று சற்று எள்ளல் கலந்து அலட்டலாகப் பேசினார் அந்த எழுத்துக்காரர்.

கூட்டம் சலசலத்தது. சிலர் ”கணபதிக்கு வேண்டப்பட்ட ஆளாயிருக்கும்..” என்று சந்தேகித்தனர். அறையின் மற்றொரு ஓரத்தில் கூடியவர்கள் ”சுதர்ஸனே எழுதிக்கொடுத்திருப்பாரோ..” என்று கிசுகிசுத்துப் புருவம் சுருக்கினர். ஆளுக்காள் இப்படிக் கட்சி கட்டிப் பேசிக்கொண்டிருந்தாலும் அனைவரும் ”எழுதற அந்த ஆள் தகிடுதத்தம் செய்யறவன் போல்ருக்கே.. சரியில்லைப்பா...” என்று தீர்மானித்தனர்.

இப்போது சுதர்ஸனே கணபதியின் திறமையை நேரடியாக அறிய முன்னுக்கு வந்தார். அஷ்டாவதனத்தின் பிற அவதானங்களுக்கான குறிப்புகளை பலரும் பல திசையிலிருந்து கணபதிக்கு கொடுத்துக்கொண்டிருக்க இடையிடையே ஒரு சம்ஸ்க்ருத எழுத்தும் அவரை நோக்கி வீசப்பட்டது. கொடுக்கப்பட்ட எழுத்துகள் வரிசையிலில்லாமல் கன்னாபின்னாவென்று சிதறியிருக்கும். அவதானங்கள் முடிந்த பிறகு அந்த எழுத்துகளை ஒன்று திரட்டி பொருட்சுவை பொங்கும் பாவாக வடிக்கவேண்டும். இதற்கு வ்யஸ்தாக்ஷரி என்று பெயர். அஷ்டாவதனக் கலையில் உச்சி சிகரம் போன்றது.

இந்த கார்யத்தை சுதர்ஸன் தன் கையில் எடுத்துக்கொண்டார். சின்னச் சின்ன துண்டுக் காகிதங்களில் ஒவ்வொரு எழுத்தாக எழுதி கணபதியிடம் காண்பித்துவிட்டு வாங்கி வைத்துக்கொள்வார். பொதுவாக ஒவ்வொரு எழுத்தாகக் கொடுத்து அஷ்டாவதனம் செய்பவரின் பார்வையில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சுதர்ஸன் அந்த துண்டுக் காகிதத்தை வாங்கி மடியில் சொருகிக்கொண்டார். சிலர் வெகுண்டனர். “இவர் செய்வது துர்கார்யம்” என்று பகிரங்கமாகக் குரல் கொடுத்தார்கள். கணபதியின் காதுக்கு எட்டியது.

“ப்ரிஸிடெண்ட் சித்தப்படியே நடக்கட்டும்...” என்று சிரித்தார் கணபதி. கண்களில் தீக்ஷண்யம் தெரித்தது. கூட்டம் அமைதியானது.

சுதர்ஸன் கொடுத்த அக்ஷரங்களைக் கோர்த்து முழு பாட்டாகப் படித்தார். அவையோர் மொத்தமும் ஆஹாக்காரம் போட்டு அசந்து போன அந்தப் பாட்டு கீழே.

அப்ஸாம் த்ரப்ஸாம் அலிப்ஸாம் சிரதரம் அசரம் க்ஷீரமத்ராக்ஷம் இக்ஷும்
த்ரக்ஷாம் ஸாக்ஷாதஜக்ஷம் மதுரஸம் அதயம் த்ராகவிந்தம் மரந்தம்
மோசாம அசமமந்யோ மதுரிமகரிமா ஸங்கராசார்யவாசம்
ஆசாந்தோ ஹந்த கிந்தைரலமபி ச ஸுதா ஸாரஸி ஸாரஸீம்னா

அவதானம் முடிந்து அவை கலையும் நேரத்தில் ஒரு ஸ்லோகத்தைக் கொடுத்து வியாக்கனம் சொல்லச் சொல்வார்கள். காவியங்களிலிருந்து ஒரு எளிய ஸ்லோகத்தைக் கையில் கொடுத்து அர்த்தம் கேட்பார்கள். ஆனால் இம்முறை சுதர்ஸன் தான் கேட்ட வ்யஸ்தாக்ஷரியின் அர்த்தம் கேட்டார். சபையோர் திடுக்கிட்டனர். கணபதி அனாயாசமாக பொருள் கூற ஆரம்பித்தார்.
“கொடுத்த பாடலில் எக்கச்சக்கத் தவறுகள். இலக்கண விதிமீறல்கள் ஏராளம்.. லோகத்தில் புழங்கும் மலிவான இலக்கியத்துக்கு இதுவே சான்று ” என்று சுதர்ஸனைக் கூர்ந்து பார்த்து ஒரு பிடிபிடித்தார்.

சுட்டிக்காட்ட முடியுமா என்று சுதர்ஸனின் கண்கள் பரபரத்தது.

ஒவ்வொன்றாக நிதானமாகச் சொல்ல ஆரம்பித்தார் கணபதி.

”சாப்பிடும் பாலாடையைக் குடித்ததாகவும் பருகும் பாலை சாப்பிட்டதாகவும்...” என்று மௌனித்தார். சபையோர் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர். ப்ரிஸிடெண்ட் ஆசனத்தில் அமர்ந்திருந்த சுதர்ஸனுக்கு ஏதோ போலாயிற்று. கரும்பு சாறு, திராக்ஷை, தேன் என்று உபயோகித்தவைகளில் தாறுமாறாக இலக்கணமே பார்க்காமல் சாப்பிட்டது, குடித்தது, உறிஞ்சியது என்று முரண்பாடாக முன்னுக்குப்பின் எழுதியிருந்ததை படித்துக் காண்பித்தார்.

பாட்டை அக்கக்காகப் பிரித்துக் காண்பித்த கணபதியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சுதர்ஸன் நெளிந்தார். தான் செய்தது பெருந்தவறு என்று உணர்ந்தார். திடுமென்று நாற்காலியிலிருந்து எழுந்தார். நான்கே தப்படியில் கணபதியை நெருங்கி அணைத்துக்கொண்டார். வேடிக்கைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கூட்டம் கரவொலி எழுப்பியது. டாக்டர் க்ருஷ்ணஸ்வாமி இருவருக்கும் பொன்னாடை போர்த்தினார். ஒரு பண முடிப்பை கணபதிக்குக் கொடுத்தார். சண்டையும் சச்சரவுமாக முடியவிருந்த இலக்கியக் கூட்டம் சௌஜன்யமாக நிறைவடைந்தது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு கணபதி தங்கியிருந்த அறையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிலைவாசல் படியில் எப்போதும் ஒரு பத்து பேர் காத்திருந்தார்கள். புகழுரைகளால் கணபதியை குளிரக் குளிர அடித்தார்கள். இவைகளிலிருந்து எப்போதுமே விலகி இருப்பதையே கணபதி விரும்பினார். மெய்கீர்த்தி கோஷங்களிலிருந்துத் தப்பித்து பஞ்சாபகேச சாஸ்திரி வீட்டில் தங்கினார். அங்கிருந்த சங்கர சாஸ்திரி என்பவர் இவரது சீடரானார்.

இதற்குள் கணபதியின் சம்ஸ்க்ருத இலக்கிய பாண்டித்யமும் அறிவாற்றலும் நினைவாற்றலும் சென்னை நகரெங்கும் காட்டுத்தீயாய்ப் பரவியது. பெரும்பாலான மாணவ சமுதாயம் அவரால் கவரப்பட்டது. மாணவர்களிடம் பாரத கலாசாரத்தைப் பற்றி வலியுறுத்திப் பேசினார் கணபதி. அனைவரும் அதைக் கட்டிக்க்காக்க முன் வரவேண்டும் என்று தூண்டிவிட்டார். சங்கர சாஸ்திரியும் பார்க்கும் மாணவ வர்க்கத்திடம் இதைப் பற்றி பேசி பெரிய மாணவர் சேனையை ஒன்று திரட்டினார்.

மாலை நேரங்களில் மெரீனாவில் கூடினார்கள். மங்கிய விளக்கொலியில் கணபதி பிரகாசமாகவும் பிரதானமாகவும் அமர சுற்றிலும் அமர்ந்து கலாசார பிரசங்கங்கள் கேட்டார்கள். பாரதத்தின் பழமையான கலாசாராத்திற்கு புத்துணர்வு ஊட்ட என்னென்ன செய்யவேண்டும் என்று விவாதித்தார்கள். மாணவர்களின் அபரிமிதமான ஈடுபாடு கணபதிக்கு இதில் மேலும் சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. வேதங்களிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறி வலிமையான முன்னணியான ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபடுவோம் என்று இளரத்தங்களை முடுக்கிவிட்டார். அவர்களது பாதையைச் செப்பனிட்டுச் சீராக்கினார்.

திருவண்ணாமலையில் ரிக் வேதம் கற்றுணர்ந்ததிலிருந்து பாரத தேசம் கலாசாரத்தில் வழுக்கிக்கொண்டிருப்பது கண்டு வெந்து போனார். சென்னை மெரீனாவில் மாணவர்களுக்கு தினமும் அவர் ஆற்றிய உரையிலிருந்து ஒரு சில பகுதிகள் கீழே.

”வேதம் படித்த ரிஷிகளின் வாழ்வியல் மனிதர்களுக்கு ஒரு முன்மாதிரி. அதில் பூலோகத்து இன்பங்களும் ஆன்மிக அனுபவமும் வேத ஈடுபாட்டோடுக் கலந்திருக்கும். இதிலிருந்து விலக விலக மானுட குலம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மேற்கத்தியர்கள் மெய்யின்பம் உணராமல் புலனின்பங்களைக் கொடுக்கும் லோகாயாத விஷயங்களில் நாட்டம் கொண்டு புதுசுபுதுசாக கண்டுபிடிக்கிறார்கள். ஸ்தூல சரீரத்திற்கு மட்டும் உற்சாகம் அளித்துப் போஷாக்காக்கப் பேயாய்ப் பாடுபடுகிறார்கள். ஆனால் புராதன காலத்து ரிஷிகள் ஆன்ம பலத்துக்கும் உரம் சேர்க்கும் வகையில் வாழ்க்கை முறையை திட்டமிட்டு வகுத்தார்கள்.

ஆரோக்கியம், அறியாமை, வறுமை ஆகியவற்றிலிருந்து மனிதகுலத்தை காப்பாற்றும் ஆற்றலை அக்காலத்து ரிஷிகளும் முனிபுங்கவர்களும் பெற்றிருந்தார்கள். அவர்களை சிந்தனையை மொத்தமாகக் குவித்து அதிலே செலுத்தினார்கள். காலங்கள் செல்லச் செல்ல மனிதர்கள் வேதங்களின் அருமையை உணராமல் வாயால் இயந்திரத்தினமான வேதங்களைச் சொல்லி சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் ஏற்படுத்தி பிரயோஜனமேயில்லாமல் மலிவுபடுத்தினர். வேத மந்திரங்களின் சான்னித்யத்தையும், பொருளையும் உணராமல் கடனுக்குத் தீ வளர்த்து யாகமும் ஹோமங்களும் செய்தார்கள். அப்போதிலிருந்து வேதத்தையும் வேத வாழ்வையும் புறந்தள்ளி ஆன்மிகத்தின் சிகரத்திலிருந்து படிப்படியாக இறங்கி தரையைத் தட்டும் நிலைக்கு வந்தார்கள்.

ஆனந்தமயமான வேத வாழ்விலிருந்து விலகி சோம்பேறித்தனமாக குடித்தனம் செய்தார்கள். சமுதாயம் இப்படித் தட்டுக்கெட்டு நிலைதடுமாறிப் போனதை ஆதாயமாகக் கொண்டு இப்புண்ணிய தேசத்தை அயல்நாட்டினர் படையெடுத்து கைப்பற்றினார்கள். மக்கள் வலிமை இழந்தார்கள். கண்ணியத்தைக் காற்றில் பறக்க விட்டார்கள். சுயமரியாதை இல்லாமல் திரிந்தார்கள். போலி கவிஞர்களும் எழுத்தாளர்களும் மக்களை திசை திருப்பி ஓட விட்டார்கள். ஒட்டுமொத்த சமுதாயமும் ஆண்டாண்டு காலமாக இந்த மண் காத்து வந்த பெருமைகளை மறந்து மடமையில் சாய்ந்தனர். பாரதம் இருளடைந்தது.”

வேத வாழ்வின் மகத்துவத்தை கணபதி வாயிலாகக் கேட்ட மாணவர்கள் பலர் மெய்சிலிர்த்தனர். அத்தகைய மகோன்னதமான வாழ்விற்கு ஈர்க்கப்பட்டனர். ஏக்கப்பட்டனர். மாணவர்களின் தொடர் ஈடுபாட்டால் கட்டுண்ட கணபதி திருவண்ணாமலை திரும்பவே மறந்தார். இரவுபகல் தொடர்ந்து மாணவர்களுடன் வேத விசாரத்தில் பொழுது பறந்தது. இந்த விடுமுறையும் முடிவுக்கு வந்தது.

ப்ரொஃபஸர் ரெங்கையா நாயுடு கணபதியை அனுதினமும் சந்தித்தார். ஈக்களைப் போல மாணவர்கள் கணபதியை மொய்ப்பதைக் கண்டார். அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி இருவரும் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தனர்.

“வரலாற்றுக்காரர்கள் கதை எழுதுபவர்களை மிஞ்சிய கல்பனா சக்தி படைத்தவர்கள்...” என்று சிரித்தார் கணபதி.

ரெங்கையா நாயுடுவுக்கு புரியவில்லை. மையமாகத் தலையாட்டினார்.

"உங்கள் வீட்டில் தங்கம் வெள்ளியிலான ஆபரணங்கள் உபயோகப்படுத்துவீர்கள். சரியா?”

”ஆம்”

“அப்படியே மண் சட்டிப் பானை மடக்கு என்று மண்பாண்டங்களும் புழக்கத்தில் இருக்கும்.. இல்லையா?”

“ம்..நிச்சயமாக.. வெயில் காலத்தில் மண்சட்டியிலிருந்து அருந்தும் குளிர் நீர் அமிர்தமாயிற்றே...”

“யாரேனும் வரலாற்று ஆய்வாள ரத்தினம் உங்கள் வீட்டுக்கு விஜயம் செய்தால் நாம் இன்னும் கற்கால மனிதர்கள் என்று நினைத்துக்கொள்வார்கள்...” சொல்லிவிட்டு இடி இடியென சிரித்தார் கணபதி. ரெங்கையா நாயுடுவுக்கு இவர் எங்கேயோ இடிக்கிறார் என்று கொஞ்சம் புரிந்தது.

“அகழ்வாராய்ச்சியாளர்கள் கருங்கல் கத்தியைக் கண்டு பிடித்தால் அது அக்கால போர்வீரர்கள் உபயோகப்படுத்தியது என்று முடிவுக்கு வரக்கூடாது.”

“கல் கத்தி வேறெதெற்கு?”

“ஏன்.. எதாவது கற்சிலையின் கையில் கொடுத்த கத்தியாக இருக்கக்கூடாதா?” என்று எதிர்கேள்வி கேட்டார். ரெங்கையா நாயுடு மௌனம் சாதித்தார். அர்த்தம் புரிந்தது. இப்போது கணபதி சூடானார். தொண்டையைச் செருமிக்கொண்டு..

“வேத காலத்து ரிஷிகள் ஆடுமாடு மேய்த்துக்கொண்டு, நதி, நிலம், நீர், ஆகாயம், மலை, வாயு, அக்னி முதலிய இயற்கையின் படைப்புகளால் கால்நடைகளுக்கு சேதாரம் வந்துவிடக்கூடாது என்று அந்த இயற்கையை தெய்வங்களாக கும்பிட்டார்கள் என்று வரலாற்று பக்கிரிகள் எழுதுகிறார்கள். ” பேச்சில் காரம் இருந்தது.

”இன்னும் சில மேதைகள் வேத மதத்தை புனருத்தாரணம் செய்விக்க வந்ததே பௌத்தம், ஜைனம், இஸ்லாம் மற்றும் கிருஸ்துவம் என்று கொடிபிடித்தார்கள். அரைகுறை ஞானம் படைத்த குறைமதிக் கவிஞகளும் எழுத்தாளர்களும் வேத மதத்தை இப்படித் திரித்து எழுவதில் ஆனந்தம் அடைந்தார்கள்.

வேதங்களின் ஸ்லோகங்கள் ஆன்மிகத்தின் உச்சம். பொது இடங்களில் நாம் கேட்கும் புராண இதிகாசங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வேதகாலத்திற்கு அப்பால் எழுதப்பட்டன புராணங்கள். பக்தியையும் இலக்கியத்தையும் வளர்க்கும் பொருட்டு எழுதப்பட்டவை இவை. கொஞ்சத்துக்கு கொஞ்சம் வேதத்தோடு தொடர்பு இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக மக்களை வேத வாழ்விலிருந்து வெகு தூரத்துக்கு இழுத்து வந்துவிட்டது.”

ரெங்கையா நாயுடு திறந்த வாய் மூடவில்லை. கணபதியின் விசாலமான வேத அறிவு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படி பொரிந்து தள்ளியபிறகு ஆழமான ஒரு மௌனத்திற்கு கணபதி சென்றுவிட்டார். பக்கத்தில் வெகுநேரம் காத்திருந்த ரெங்கையா நாயுடு வீடு திரும்பினார்.

சாயந்திரம் வழக்கம் போல மெரீனாவில் கணபதி. ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு அருகாமையில் சாந்தியாக அமர்ந்திருந்தார். காலையிலிருந்து அலைபாய்ந்த அவரது மனதிற்கு ஒத்தடம் கொடுப்பது போல இதமானக் காற்று வீசியது. ப்ரொஃபஸர் நாயுடு கணபதியின் முதுகருகே உட்கார்ந்து கடலலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அலையோசை. ஒன்றுமே பேசாமல் கணபதி. சமுத்திரத்தையே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ரெங்கையா நாயுடு. நாற்புறமும் சூழ்ந்த இந்த அமைதியைக் கலைக்க
“இன்றைக்கு ஏன் இவ்வளவு ஆதங்கப்படுகிறீர்கள்? என்னவாயிற்று?” என்று ஆதரவாகத் தோள் தொட்டார். கணபதி சற்றுநேரம் நாயுடுவை ஊடுருவிப் பார்த்தார். பின்பு.....

பி.கு: ஆங்கில மூலத்திலிருந்து தமிழ் வடிவ சம்ஸ்க்ருத ஸ்லோக உபயதாரர் ஸ்ரீமான் Ramkumar Narayanan
‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_19‬
‪#‎கணபதி_முனி‬

பரப்ரம்மம்

”உக்காரு”ன்னா உட்கார்ந்துப்பா. ”படுத்துக்கோ”ன்னா கட்டையை நீட்டிடுவா. பக்கத்துல டிவி ஓடினாலும் பார்வை உத்தரத்தில் எத்தையோ தேடும். "காஃபி இந்தா”வுக்கு “ஆ” பிளக்கையில் தொண்டைக்குள் நாலு வாய். ஆஃபீஸ் விட்டு எத்தனை மணிக்கு வந்தாலும் இரண்டொரு வார்த்தைகளாவது பேசாமல் வேறு வேலை பார்ப்பதில்லை என்று எனக்குள் சங்கல்பம்.

“ஏன் இப்பெல்லாம் பேசறதேயில்லை?” காதருகில் போய் சத்தமாகக் கேட்டேன்.

” “

“பேச மாட்டியா?”

சுழன்று அடங்கும் பம்பரம் போலத் தலையைத் திருப்பி
“எ-ன்-ன -- பே-ச-ணு-ம்-?” தொண்டைக்குள் சல்லடை சொருகியது போல ஒவ்வொரு வார்த்தையாகக் கமறல் கலந்து வந்தது.

“எதாவது பேசு”

“ “

“எதாவது..”

“ “

நாங்கள் அமைதியான இரண்டு நிமிடங்களில் டிவி சீரியலில் நூறு வார்த்தைகள். திட்டினார்கள். சபித்தார்கள். சூளுரைத்தார்கள். உன்னை விட்டேனா பார் என்று கொக்கரித்தார்கள். இங்கே அடர் மௌனம். அவளெதிரேயே முகத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

“எதாவது பேசு...”

திரும்பவும் எ-ன்-ன---பே-ச-ணு-ம்-? என்று திக்கித் திணறி வார்த்தைகள் வந்து விழுந்தன. சட்டென்று தாவாங்கட்டையைத் தூக்கிக் கேட்டேன்.

“ஐ லவ் யூ”

மின்னல் பொழுதில் அவளிடமிருந்து வார்த்தை வந்தது.

“ஐ லவ் யூ”

என்னைக் குளிப்பாட்டி, ட்ராயர் போட்டுவிட்டு, பௌடர் பூசி, வகிடெடுத்துத் தலை வாரி விட்டவள் நீலா சித்தி. சற்று முன்னர் ஐலவ்யூ சொன்னவள். பள்ளி ஆசிரியையாக பல வருடங்கள் பல வாண்டுகளுக்கு “அ-அம்மா/அன்பு” என்று பிரம்பில்லாமல் சொல்லிக்கொடுத்தவள். இப்போது முடியாமல் சுருண்டு கிடக்கிறாள். டிமென்ஷியா. பார்க்கின்ஸன்ஸ்.

ஐலவ்யூ கேட்டவுடன் அவ்வளவுதான். எழுந்து வந்துவிட்டேன். டிஃபன் சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் சூப்பர் சிங்கர் பார்த்திருப்பேன். பசங்களுடன் அந்தாக்‌ஷரி விளையாடினேன். விஸ்வரூபம் சில பக்கங்கள் படித்தேன். ஃபேஸ்புக் பார்த்தேன். இரண்டு தம்ப்ளர் நீர் பருகினேன். படுத்துவிட்டேன். இது நடந்து இரண்டு மூன்று நாட்களாவது ஆகியிருக்கும். அப்போதிலிருந்து அந்த ஐலவ்யூ இன்னமும் காதுக்குள் தம்பூரா ஸ்ருதியாய் ரீங்காரமிடுகிறது.

‪#‎நீலா_ஐ_லவ்_யூ‬

ஆண்டு விழா!

”ச்சே... சனியன்... செத்தப்பறமும் இந்த இருமல் வந்துதுப்பா...”
“Huh, atleast one animal has come"
**

முதல் வசனம், பள்ளி ஆண்டு விழாவில், சிவகாமியின் சபதத்தில் காபாலிகையாக நடித்த பெரியவள் வினயா, நாகநந்தி அடிகள் குத்தியவுடன் தரையில் விழுந்து கிடக்கும் பொழுது வந்த இருமலை அடக்கிக்கொண்டு காரில் வீடு திரும்பும் பொழுது இருமிக்கொண்டே சொன்னது.
இரண்டாவது வசனம், Alice in Wonderlandலில் வால்ரஸாக நடிக்க க்ரீன் ரூமிற்குள் நுழைந்த சின்னவள் மானஸாவைப் பார்த்து ஒரு பொடியன் அடித்த காமெண்ட்.

ஆலிவர் ட்விஸ்ட்டில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பொளந்துகட்டினார்கள். பீட்டர்..பீட்டர் என்று கல்லூரிக் காலத்தில் வயல்காட்டோரம் பேசிக்கொண்டு போனது நினைவுக்கு வந்தது. கையில் திருவோட்டுடன் பௌல் டான்ஸ் ஆடினார்கள். பௌல் ஏந்தும் ஆலிவர் ட்விஸ்ட்டின் சாம்பிள் இங்கே. http://www.youtube.com/watch?v=sZrgxHvNNUc . பலரின் ”வாட்”டைக் காணத் தவறாதீர்கள். அடுத்த முறை இதில் ஒரு வாட் உங்கள் வாய்க்கு வசப்படட்டும்.
மை ஃபேர் லேடியில் வாயில் ‘a' நுழையாத பெண் அபாரமாக நடித்தாள். "The rain in spain stays mainly in the plain" http://www.youtube.com/watch?v=uVmU3iANbgk என்கிற இந்த தொடுப்பில் இருப்பது போலவே கண்முன் தோன்றினார்கள்.

முழுக்க முழுக்க சம்ஸ்க்ருதத்தில் காளிதாசனின் சாகுந்தலம் நடித்தார்கள். அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு. என்னைப் போன்ற சம்ஸ்க்ருத அஞ்ஞானிகள் வியக்கும்படியாக இருந்தது. சகுந்தலையாக நடித்த குழந்தை பின்னிப் பெடலெடுத்தது. மோதிரம் கிடைத்த மீனவன் சென்னைத் தமிழ் போல இழுத்து இழுத்து சம்ஸ்க்ருதம் பேசினான். ரசிக்கும்படி இருந்தது. துர்வாசர் ஸ்ப்ரிங் வைத்த பாதரட்சை அணிந்தது போல பூமிக்கும் ஆகாசத்துகுமாகக் குதித்தார். பார்த்த நம் மனசு பந்தாகத் துள்ளியது.

ஷேக்ஸ்பியரையும் விடவில்லை. ஒத்தெலோ மெக்பத் என்று முக்கியமான காட்சிகளைக் கடைந்தார்கள். கடைசியில் பாவனமான ஸ்ரீமத் இராமாயணமும் அரங்கேறியது. ஆஞ்சநேயர் பையன் வேஷம் போட்டுக்கொண்டு காரிடாரில் செல்ஃபி எடுத்துக்கொண்டபோது பக்கத்திலிருந்து புன்னகைத்தேன். உதட்டைச் சுற்றி சிகப்படித்திருந்த வாயைத் திறந்து முத்துப்போன்ற வெள்ளைகளைக் காண்பித்தான். ஆஞ்சு கொள்ளை அழகு.

ராமர் பட்டாபிஷேகத்தின் போது சூலாயுதபாணியாக சிவன் வந்தார். பக்கத்தில் பார்வதியைத் தேடினார். பச்சை வண்ணமாய் குடுகுடுவென்று ஓடிவந்தது சேர்ந்துகொண்டது ஒரு வாண்டு. பரதன் பளபளவென்று இருந்தான். நடித்தவர்கள், பார்த்தவர்கள் என்று அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி அப்பியிருந்தது.

விழா முடிந்து வீட்டிற்கு வரும் போது ஒரு யூ டர்ன். வாழ்க்கையும் அப்படியே ஒரு யூடர்ன் அடித்து அண்ட்ராயர் காலத்துக்குச் செல்லாதா என்ற ஏக்கம் பிறந்த போது “அப்பா.. நான் எப்படி நடிச்சேன்..” என்று பிள்ளைகள் கோரஸாகச் சுரண்டினர்.

“சூப்பர்...”

‪#‎வாழ்க்கை_ஒரு_வரம்‬

கத்தி.. கத்தி...

”இந்தக் கத்தி ரொம்ப அழகா இருக்கே. புதுசா?”

“ச்சே..ச்சே.. இது பரம்பரை பரம்பரையா எங்க வம்சத்துக் கத்தி.. வூட்லதான் இருக்கு...”

“ஓ! ஆனா பார்க்க புத்தம் புதுசா ஜொலிக்குதே!”

“பழசுதான். பரம்பரையா இருக்கிற இந்தக் கத்தியில பிடி ஆடிச்சின்னா உடனே மாத்திடுவோம்.”

“அப்டியா? ப்ளேடும் பளபளன்னு கண்ணைப் பறிக்குது... இப்பதான் சாணம் புடிச்சா மாதிரி...”

“இல்லையில்லை.. ப்ளேடு மொக்கையாயிடுச்சுன்னா அதையும் ஓடிப்போயி மாத்திடுவோம்...”

“யோவ்! ப்ளேடையும் மாத்துவ பிடியையும் மாத்துவேன்னா அப்புறம் எப்படிய்யா இது புராதன காலத்துப் பரம்பரைக் கத்தி?”

”ப்ளேடு மாத்தினாலும் பிடியை மாத்தினாலும் பரம்பரைக் கத்தி கத்திதானுங்ளே!”

கரெக்டுதான். கேபினெட் ஒண்ணுதான். உள்ற இருக்கிற ராமை மாத்தினாலும் ப்ராசஸரை மட்டும் மாத்திட்டாலும்.. பிசி பிசிதானே! பரம்பரை கம்ப்யூட்டர்.

இந்த கத்திக் கதையைச் சொல்லி கர்ணபரம்பரையாகச் சொல்லப்பட்டு வரும் நாட்டுப்புறக் கதைகளும் அப்படித்தான் என்கிறார் ஏ.கே.ராமனுஜன். அதாவது ஆராயக்கூடாது. அனுபவிக்கணும் என்கிற க்ரேஸியின் ஒற்றை வரி வசனம் சொல்லும் பாடம்.

கணபதி முனி - பாகம் - 18 : சம்ஸ்க்ருத மெக்பத்

மாணவர் பட்டாளம் அமைதி காத்தது. அசையாமல் பொம்மை போல நின்று கொண்டிருந்தனர். கணபதியிடம் பரதக்கண்ட இலக்கியத்துக்கும் அயல்நாட்டு இலக்கியத்துக்கும் இருக்கும் வித்யாசங்களையும் நுட்பங்களையும் கேட்ட மாணவன் ஆர்வம் கொப்பளிக்க குறுகுறுவென்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். இரு நிமிட மௌனத்திற்குப் பிறகு கணபதி மெல்ல வாய் திறந்தார்.

“மன்னிக்கவும். எனக்கு அயல்நாட்டு இலக்கியங்களில் பரிச்சயம் இல்லை. நீங்கள் எதாவது ஒன்றைத் தேர்வு செய்து படித்துக் காட்டினால் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்” என்றார் வினயமாக. மாணவர்க் கூட்டம் உற்சாகமடைந்தது. பின்வரிசையிலிருந்து ஒருவன் சரேலென்று முன்னால் வந்தான். கையில் ஷேக்ஸ்பியரின் மெக்பத். அதில் வரும் பூதங்கள் போன்று உரக்கப் பேசலானான். மாணவர்கள் முழு நாடகத்தையும் படித்துக்காண்பித்து அதன் இலக்கிய ரசத்தை அவருக்கு விவரித்தார்கள்.

”நீங்கள் இப்போது நாங்கள் படித்த இக்காவியத்தை உடனே சம்ஸ்க்ருதத்தில் இயற்ற முடியுமா?” என்று ஒரு சவாலான கேள்வியைக் கேட்டான் வலது மூலையில் நின்றிருந்த ஒரு பையன்.

கணபதி சிரித்தார். ராகமாக ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தார். காட்சிகளை சிருங்காரமாக சம்ஸ்க்ருதத்தில் வாசித்துக்கொண்டே போனார். பக்கம் பக்கமாக புரண்டது. எழுந்து நடந்து கொண்டே பேசினார். மாணவர்கள் கலையாமல் நின்றிருந்தார்கள். நாற்காலில் உட்கார்ந்தார். உரையாற்றினார். மாணவர்கள் சூழ்ந்துகொண்டு கேட்டனர். நின்று கொண்டு சில ஸ்லோகங்களைப் பாடினார். அதிசயித்து வாய்பிளந்து நின்றனர். மீண்டும் நடந்தார். நேரம் மட்டும் நிற்காமல் ஓடியது. அந்த அறையின் கதவுகளும், ஜன்னல்களும், சுவர்களும் சம்ஸ்க்ருதம் பேசுமளவிற்கு சம்பாஷணைகள் தொடர்ந்தது.

மரித்த பாஷை என்று சம்ஸ்க்ருதத்தை வெறுத்து ஒதுக்கிய அம்மாணவர்கள் கணபதி காட்டிய விஸ்தீரணத்தால் அந்த மொழியின் ஆளுமையில் சிலிர்த்துப்போயினர். கணபதியின் பாண்டித்யம் அவர்களைக் கட்டிப்போட்டு வசியம் செய்தது. இதுநாள் வரை ஷேக்ஸ்பியரின் மெக்பத்தாக இருந்தது இப்போது கணபதியின் சம்ஸ்க்ருத மெக்பத் ஆயிற்று.

கணபதியின் நினைவாற்றலை சோதிக்க முற்பட்ட ஒரு மாணவன் ஆங்கில தினசரியிலிருந்து ஒரு பாராவைக் கடகடவென்று படித்தான். ”எங்கே நீங்கள் இதைச் திரும்பச் சொல்லுங்கள் பார்க்கலாம்..” என்று கை கட்டி நின்றான். கணபதி திரும்பவும் தங்குதடையில்லாமல் அதைச் சொல்லிக்காட்டிவிட்டு “மொத்தம் நானூற்று இருபது எழுத்துக்கள் இந்தப் பாராவில் இருக்கிறது” என்று உபரியாக எழுத்துக் கணக்கையும் கொடுத்தார். அனைத்து மாணவர்களும் அசந்து போனார்கள். இதற்கு மேல் அவர் முன்னால் நிற்க திராணியில்லாமல் பொதேர் என்று அனைவரும் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வந்த வழியே திரும்பினர்.

அவர்கள் சென்றபின் திருட்டுமுழியுடன் கணபதியை நெருங்கிய துரைசாமி “ஸ்வாமி என்னை மன்னிக்கவேண்டும். உங்களை சம்ஸ்க்ருதத்தில் சோதிக்க எண்ணியது எங்களது சிறுபிள்ளைத்தனம். மடமை. அறியாமல் செய்த பிழை. மன்னித்தருள வேண்டும்.” என்று கைகூப்பி நின்றார். கால்கள் வெடவெடத்தன.

துரைசாமியின் பிழை பொருத்தருளி அவரை தனது சிஷ்யனாகவும் ஏற்றுக்கொண்டார் கணபதி. பிற்காலத்தில் “சுதன்வா” என்று எல்லோரும் அறியப்படுபவரே துரைசாமி ஆகும்.

நாட்கள் நகர்ந்தது. சென்னையின் சில முக்கியஸ்தர்கள் கணபதியைக் கௌரவிக்க எண்ணினார்கள். அதற்காக பொருள் திரட்டும் முயற்சியில் இறங்கினர். அப்போது நாராயண சுதர்ஸன் என்கிற ஒரு ஆசுகவியும் சென்னையில் முகாமிட்டிருந்தார். இருவருக்கும் சேர்த்து பொருள் திரட்டி கௌரவிப்போம் என்று ஒரு குழுவினரும் கணபதிக்கே என்று ஒரு குழுவினரும் இல்லையில்லை சுதர்ஸனுக்கே என்று இன்னொரு அணியும் கட்சி கட்டிப் பேசினார்கள். முடிவில் பலப்பரீட்சை செய்து பார்த்துவிடலாம் என்று தீர்மானித்தார்கள். கெலிப்பவரின் கைக்குத் தங்கக் காப்பு போடுவதாக உத்தேசித்து களமிறங்கினார்கள்.

சுதர்ஸன் கணபதி போலவே பிறவி மேதை. தனது பதினேழாம் பிராயத்துக்குள் இரண்டு போற்றத்தக்க பாடல்களை எழுதி “பால சரஸ்வதி” என்றும் “பட்டஸ்ரீ” என்றும் பட்டங்கள் பெற்றிருந்தார்.

கௌரவிக்க வசூல் நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு நாள் காலை திருவல்லிக்கேணி மேல்நிலைப் பள்ளியில் கணபதியைச் சிறப்பிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சில சமஸ்யங்களைக் கேட்டு கணபதியைப் பூர்த்தி செய்யச் சொல்லலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. வேதம் வெங்கடராய சாஸ்திரி, ஹலஸனந்தா சாஸ்திரி மற்றும் நீலமேக சாஸ்திரி என்கிற வித்வத் குழு சமஸ்யங்களைக் கொடுத்து பதில் வாங்கும் அமர்வுக்கு நீதிபதிகளாக தயாராயினர். சமஸ்யங்கள் கணைகளாக பாய்ந்து வர பதிலுக்குப் பதில் பாடி அனைவரையும் வாயடைக்க வைத்தார். அங்குக் குழுமியிருந்த ஆசிரியர்கள் தங்களால் இயன்றதைச் சன்மானமாக அளித்து திருப்தியடைந்தனர்.

முக்கியஸ்தர்களின் கமிட்டி ஒரு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். இரசனையும் இலக்கிய ஈடுபாடும் கொண்ட வி. க்ருஷ்ணஸ்வாமி ஐயரை சிம்மாசனத்தில் அமர வைத்தார்கள். கணபதியை அக்கணமே நூறு ஸ்லோகங்களில் நளோபாக்கியணத்தை அடக்கச் சொன்னார்கள். ஒரு மணி நேரத்திற்குள் பாடி முடிக்க வேண்டும் என்று காலவரையறை வகுத்தார்கள்.

சம்மணமிட்டு அமர்ந்தார். கண்களை மூடி தியானித்தார். கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார். அவரது துவக்கம் அதியற்புதமாக இருந்தது. கடகடவென்று ஐப்பசி மழை போலப் பொழிய ஆரம்பித்தார். மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீமான் க்ருஷ்ணஸ்வாமி ஐயர் பத்து நிமிடத்தில் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.

”நன்றி கணபதி.. போதும்.. நீர் சொல்லும் வேகத்தில் இருநூற்றைம்பது இலகுவாகத் தாண்டுவீர்.. தன்யனானோம். உங்களைப் புகழ்வதில் இச்சபை பெருமையடைகிறது. ’காவ்யகண்டர்’ என்ற பட்டத்துக்கான முழு யோக்யதையும் உமக்கு இருக்கிறது. வாழ்க...”

இதிலும் ஒரு கோஷ்டியினர் அதிருப்தி அடைந்தனர். க்ருஷ்ணஸ்வாமி ஐயரின் பரீக்ஷை முறை செல்லாது என்றும் இதைவிட சிக்கலான போட்டியே கணபதியின் திறமையை நிர்ணயிக்கும் என்று வாதாடினர். க்ருஷ்ணஸ்வாமி ஐயர் வெகுண்டார்.

“கணபதி என்ன செய்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்?”

“அவரை அஷ்டாவதனம் செய்யச் சொல்லுங்கள்” காதுகளில் வைரக் கடுக்கன் மின்னும் ஒருவர் குரல் கொடுத்தார்.

“ம்.... அப்படியே ஆகட்டும்...”

“ஸ்ரீமான் சுதர்ஸன் முன்னிலையில் இது நிகழவேண்டும்..” மீண்டும் வை.கடுக்கன் குரல் ஓங்கி ஒலித்தது.

க்ருஷ்ணஸ்வாமி ஐயர் கணபதியை நோக்கிப் பார்வையைத் திருப்பினார். கணபதி இமைகளை மூடித் திறந்து கண்களால் ஒத்துக்கொண்டார்.

இம்முறை டாக்டர் எம்.டி.க்ருஷ்ண ஸ்வாமி இல்லத்தில் கூட்டம் கூடியது. கணபதில் இலக்கிய அறிவையும் மொழி ஆளுமையையும் கண்டு ரசிப்பதற்கு பெருந்திரளாக ரசிகர்கள் குழுமியிருந்தார்கள்.

சம்பிரதாய அறிமுகத்தோடு சபை துவங்கியது.

“ருக்மணி கல்யாணத்தைப் பற்றி நூறு ஸ்லோகங்கள் இயற்ற வேண்டும்...” என்று அஷ்டாவதனத்தில் முதல் அவதான பரீக்க்ஷை ஆரம்பித்தது. ”ஒரு மணி நேரத்திற்குள்...” என்று கூடுதல் விதியும் அடுத்த விநாடி சேர்க்கப்பட்டது. கணபதி சொல்லச் சொல்ல பதிவதற்கு ஒரு எழுத்துக்காரர் நியமிக்கப்பட்டார். கணபதி ஸ்லோகத்தை முடிக்கும் முன்னர் அந்த எழுத்துக்காரர் முடித்துவிட்டு அவரின் வாய் பார்த்தார். மகாபாரதத்தில் வியாஸருக்கு அமைந்த கணபதி போல இந்தக் கணபதி அமைந்த எழுத்துக்காரர் துடிப்பாக இருந்தார். ஸ்லோகம் சொல்லும் வேகத்தை கொஞ்சம் முடுக்கிவிட்டார் கணபதி. அந்த வேகத்தில் எழுதுவது மிகக் கடினம். இருந்தாலும் அந்த எழுத்துக்காரர் மளமளவென்று எழுதிக்கொண்டே போனார்.

கணபதிக்கு சந்தேகம் வந்தது. ஸ்லோகம் சொல்வதைப் பாதியில் நிறுத்திவிட்டு..

“இதுவரை எழுதியதை ஒருமுறை வாசியுங்கள்...” என்றார். அந்த எழுத்துக்காரர் கணபதி சொல்லாததையெல்லாம் கூட சேர்த்து எழுதியிருந்தார். சொன்னதை விட்டிருந்தார். சபை திடுக்கிட்டது. கணபதி குழம்பினார்.

“ஏனிப்படி செய்தீர்?” என்று அவையிலிருந்த பெரியோர்கள் சீறினர். அப்போது அந்த எழுத்துக்காரர் சொன்ன பதில்.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_18‬
‪#‎கணபதி_முனி‬

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails