Showing posts with label birthday. Show all posts
Showing posts with label birthday. Show all posts

Thursday, October 15, 2015

ஆகஸ்டு 16: பொறந்த நாள்.....


”அன்னிக்கு சுதந்திர தினம்..... ஆஃபீஸ்ல கொடியேத்திட்டு வந்தேன்.... சாயந்திரமெல்லாம் சாதாரணமாத்தான் இருந்தேன்... பாதி ராத்திரிக்கு மேலே ஆஸ்பத்திரிக்கு போனேன்..... மறுநாள் விடிகார்த்தாலே அஞ்சேகாலுக்கு நீ பொறந்தே...”
பல வருஷங்கள் கடந்தாலும்.... ஒவ்வொரு வருஷம்... இந்தப் பிள்ளையின் அம்மா சொல்லும் ராமாயணம். மன்னார்குடியில் அண்ட்ராயர் காலத்தில் வீடுவீடாக ”பர்த்டே....” என்று வெட்கம் பிடிங்கித் திங்க சிரித்து, எவர்சில்வர் ள் தெரியும் முகம் போல எட்டிப் பார்க்கிறது.
பேசினில் நாலணா எட்டணா சாக்லேட் பரப்பி நீட்டிய ஞாபகம் பேசினிற்கு
“தம்பீ... இன்னிக்கு பொறந்த நாளா... இந்த வருஷமானும் விஷமம் பண்ணாம சமத்தா இருப்பியோ?....” (உங்களுக்கெல்லாம் சாக்லேட் கொடுக்கணுமா?)
“மாமாவுக்கு ஒண்ணு நேக்கு ஸ்பெஷலா ரெண்டு....” என்று Budgeted Quantityக்கு அதிகமாக எடுத்துக்கொண்டு பாக்கெட்டுக்குள் விரல்விட்டு ”இன்னும் எவ்ளோ வீட்டுக்கு சாக்லேட் வரும்...” மிச்சத்தை எண்ண வைத்தவர்களும்...விளையாட்டுக்கு ஒட்டு மொத்த பேசினையும் கையிலிருந்து பிடிங்கிக்கொண்டு.... “பர்த்டேக்கு ட்ரீட்டாடா தம்பி...தாங்க்ஸ்” என்று வம்பிழுத்தவர்களும் இன்று தாத்தா பாட்டி ஆகிவிட்டார்கள்.
அப்புறம் புது ஃபுல் பேண்டு போட்டுக்கொண்டு அரும்பு மீசையில் சைக்கிளில் தெருத்தெருவாக வளைய வரும் ( இதற்கு ‘ஊர் சுற்றும் போதுன்னு சொல்லுங்க’ என்கிற கமெண்ட்டுகள் செல்லுபடியாகா!) போது “என்ன மாப்ள.. இன்னிக்கி ட்ரீட் எதுவும் கிடையாதா?” என்று சக அரும்பு மீசைக்காரர்கள் ஹாண்டில் பாரைப் பிடித்து நிறுத்தி அழிச்சாட்டியமாக இழுத்துக்கொண்டு போனார்கள்.
கல்லூரிக் காலத்தில் “மாப்ள! சாந்தில அண்ணாமல... இன்னிக்கி போறோம்.. ஓகேவா...” என்று தஞ்சாவூருக்கு தள்ளிக்கொண்டு போனார்கள். படத்தை மட்டும் பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு வந்தேன் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. இருந்தாலும் என் கடமை சொல்லிவிடுகிறேன்.. ஜாக்கிரதையாக சேதாரமில்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டேன்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு கிலோ ஸ்வீட்ஸ் பேக்கோடு நம்முடைய க்ஷேமத்திற்காக வாழ்த்தி ஒரு க்ரீட்டிங்ஸ் அட்டையும் தருகிறார்கள். பிரியமானவர்களில் சிலர் கேக் வெட்டினார்கள் (க்ரீமை மூஞ்சில பூசிடாதீங்க ப்ளீஸ்...)
முகப்புஸ்தகம் எனக்கு இரண்டாவது வீடு. வெர்ச்சுவலாக இங்கேதான் முப்பொழுதும் குடியிருக்கிறேன். அதற்காக யாரும் பெரும் விழா எடுத்து போஸ்டர் ஒட்டி, பேனருக்கு பாலாபிஷேகம் போன்ற பெரும் செலவுகளில் ஈடுபடவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொண்டு... இரத்ததான முகாம்... அன்னதானம்....ஏழைகளுக்கு இலவச ஐஃபோன் ஐபேட் வழங்குவது... போன்ற பொதுஜனம் போற்றும் சத்கார்யங்கள் செய்து நற்பெயர் சம்பாதித்துக்கொள்ளுங்கள் என்று விண்ணப்பிக்கிறேன். நன்றி!!
பப்பி ஷேம் ஃபோட்டோ!!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails