Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Sunday, October 22, 2017

ஆசையை அறுமின்

ரொம்ப நாள் கழித்து டிவியில் One Day Match பார்த்தேன். டாட்டா ஸ்கையில் ஸ்டார் சேனல்களுக்கு சப்ஸ்க்ரைப் பண்ணாததால் சாதா சேனலான தூர்தர்ஷனில் பார்த்தேன். ஹிந்தி பாஷை கமெண்ட்டரியாகச் சுலபத்தில் வரவேற்பறைக்குள் நுழைந்து அட்டானிக்கால் போட்டு அமர்ந்தது. மொஹீந்தர் அமர்நாத் வாயைத் திறக்காமல் மந்திரம் போலப் பேசினார். விக்கெட்டுக்கோ ஆறுக்கோ ரீப்ளே போடும் போது கட்டாயம் பார்க்க விடாமல் விளம்பரம் போட்டு சாகடித்தார்கள்.
கிரிக்கெட்டை விட்டு வெகுதூரம் வந்துவிட்டேன் என்பதற்கு சாட்சியாக டி வில்லியர்ஸ் தவிர்த்து தெ.ஆ அணியில் யாரையும் அடையாளம் காணத் தெரியவில்லை. டுமினி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆம்லாவைத் தாடியால் தெரியும். குச்சிமிட்டாயிலிருந்து நாப்கின் வரை கோலி அனைத்து விளம்பரங்களிலும் அதிகம் வருவதாலும் லொட்டைக் கையர்கள் ஷிகரையும் யுவியையும் ஏற்கனவே சில தடாலடி மாட்சுகளில் ரசித்ததாலும் இந்திய அணி வீரர்களைக் கண்டறிவதில் கஷ்டமில்லை. தோனி தெரியாது என்று நான் எசக்கேடாகச் சொன்னால் உடனே என்னை நாடுகடத்தினால்தான் இப்பாரதம் துலங்கும் என்று அரசாங்கத்திடம் முறையிட்டுக் கொடி பிடிப்பீர்கள்.
குறைவான ஓட்டங்கள் எடுத்த போட்டி என்பதால் நங்கூரம் பாய்ச்சி ஆடினார் கோலி. என்னுடைய நேரடிக் கருத்துகள் எனது பக்கத்தில் வரிசையாக இட்டிருக்கிறேன். பென்ச்சில் உட்கார்ந்தால் இந்தியர்கள் அவுட் ஆகிறார்கள் ஊஞ்சல் ஓரத்தில் ஒற்றை பிருஷ்டத்தை சொருகி உட்கார்ந்தால் ஆறும் நான்குமாக பறக்கிறது என்கிற பாழாய்ப் போற செண்டிமெண்டைக் காட்டி அண்ட்ராயர் வயசில் என்னை சிறைப்பிடித்திருக்கிறார்கள். “நாம இங்க இப்படி பண்றது எப்படிடா சின்னசாமி ஸ்டேடியத்துல விளையாடறவாளுக்கு உபயோகமா இருக்கும்” என்ற என் கேள்வியை மூர்க்கத்தனமாக உதாசீனப்படுத்திவிட்டு நான்கு பேர் சேர்ந்து தோளைப் பிடித்து அழுத்தி எழுந்திருக்கவிடாமல் பிடித்துக்கொண்டு தேசத்தொண்டு ஆற்றியுள்ளார்கள்.
குறை ஓட்ட போட்டி என்பதால் ஐந்து பேர் ஏறிய ஆம்னி பஸ் திருச்சிக்கு டிக்கெட் ஏறாதா என்ற நப்பாசையில் கிண்டியில் உருட்டுவது போல பாரத அணியினர் கட்டைப் போட்டு ஆடினார்கள். ரோஹித் அவசரத்தில் தன்வசமிழந்து விக்கெட்டை தூக்கிப் போட தவானும் கோலியும் நிமிர்த்தினார்கள். கடைசியில் யுவ்ராஜ் அனாயாசமான ஆறு ஒன்றை வானம் கிளப்பி இந்தியாவை செமி ஃபைனலுக்குள் தள்ளினார்.
பால்யத்தில் அரை நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டு கண்கொட்டாமல் பார்த்த கிரிக்கெட் இப்போது நேரமிருந்தால் பார்க்கலாம் என்ற இரண்டாம் தர நிலைக்கு வந்திருக்கிறது. அன்னிக்கி நெஞ்சத்தில் ஆசையாய்ப் பட்டது இன்னிக்கி இல்லை. இன்னிக்கி ஆசைப்படுவது நாளைக்கு இருக்குமா என்பதும் கேள்விக்குரிய விஷயம்.
ஆசையை அறுமின்! இந்தியா இறுதியில் வெல்லும் என்கிற ஆசையை அறுமின்!! 

Friday, March 18, 2016

மன்னை 614001




கொஞ்சம் அவன் இவன்னு ஏகவசனத்தில் பேசிப்போம்.. அன்னியோன்யமா இருக்கட்டும்.

”வெங்கிட்டு.. இந்த ஞாயித்துக்கிழம ஃப்ரீயா? உப்பிலிட்ட கலாக்ஷேத்ரா க்ரௌண்ட்ல கிரிக்கெட் விளையாடலாமான்னு கேட்டேன்... ஹெச்சிசி ப்ளேயர்ஸ்லாம்.. என்ன சொல்ற” என்று கோப்லிதான் மெனக்கெட்டு இதை ஆர்கனைஸ் பண்ணினான். ஹெச்சிசி என்பது ஹரித்ராநதி கிரிக்கெட் க்ளப் என்பதன் சுருக்கம். மன்னையின் இங்கிலீஷ் கவுண்டி. ஊரில் பிரதான டீம். பல 5555 ரூ, 4444 ரூ, 3333 ரூக்களைத் தட்டிச் சென்ற வெற்றி அணி.
கோப்லியின் அண்ணன் ரமேஷும் அடியேனும் ஓப்பனிங் பௌலர்கள். ரமேஷ் பேஸர். விர்ர்ரென்று காதருகில் சப்தம் வர பந்து வீசுவார். நான் மீடியம் பேஸர். மிடில் ஆர்டர் மட்டையாளன். அண்ணாமலை பல்கலையில் தற்போது வணிகவியல் பேராசிரியராக இருக்கும் கோபாலும் நானும் தெருத்தெருவாகக் கேப்டன்கள் (அட.. கிரிக்கெட் கேப்டன்தாங்க!!) வீட்டுப் படியேறி, தேவுடு காத்து, ”இன்னிக்கி மத்தியானம் ஒரு மேட்ச் வச்சுக்கலாமா?” என்று மைதானத்துக்கு இழுத்து வந்து பல போட்டிகளில் கெலித்திருக்கிறோம்.
கைப்பிடிக்கு சைக்கிள் ட்யூப் க்ரிப் போட்ட மட்டை, சதை மழித்த கருவேலங் குச்சிகள் ஸ்டம்ப்ஸ், விக்டோரியா க்ளப்பில் கதறக் கதற டென்னீஸ் ஆடிக் கழித்துவிடப்பட்ட பந்து ("ரொம்ப புஸுபுஸுன்னு எடுத்துக்காதடா... காத்துல பட்டமா பறக்கும்... தூக்கி அடிச்சா லாங் ஆன் கையில போயி பிடிச்சுக்கோன்னு லட்டு மாதிரி விழும்...பௌலிங்கலயும் குத்தி ஏத்தி பேஸ் காட்ட முடியாது.." - டென்னீஸ் பால் கிரிக்கெட் தந்திரங்கள் - 101) சகிதம் ஆறேழு சைக்கிள்களில் தொப்பியோடு மே மாத வெயில் பாழாய்ப் போகாமல் ஊர் மைதானங்களில் வாசமிருப்போம்.
கோப்லி எங்கள் தெரு ஸ்ரீகாந்த். எந்த நேரத்திலும் கவுட்டி கிழிந்து, கழுவில் ஏற்றிய தேகம் இருபாகமாகத் தரையில் விழலாம் என்று அபாயகரமாகக் காலைப் பரப்பி வைத்துக்கொண்டு காட்டடி அடித்து ஸ்ரீகாந்த் பெயர் பெற்றவன். "நீ அடிச்சாலும் சரி.. அடிக்காட்டாலும் சரி. நீ ஓப்பனிங்க் இறங்கினாதான் டீமுக்கு ராசி..." என்று அம்மன்னன் புகழ்பாடி மஞ்சள் தண்ணீர் தெளித்து பிட்ச்சுககுள் இறக்கிவிடுவோம். ராசிக்கார பயபுள்ள...
என்னுடைய மன்னார்குடி டேஸ் அத்தியாங்களில் அடிக்கடி வந்து கலாய்த்துப் போகும் ஸ்ரீராம் தன்னை ஜான்ட்டி ரோட்ஸாக இன்னமும் மனதில் வரித்திருக்கிறான். அந்தக்காலமெல்லாம் மலையேறிப் போச்சுது. ஷார்ட் கவர் பகுதியிலிருந்து பந்தை ஃபீல்ட் செய்து ரன் அவுட்டுக்காக விக்கெட் கீப்பருக்கு எறிந்த போது அது ஐந்து தடவை பிட்ச் குத்தி செத்த பந்தாக வந்தடைந்தது. "ஷோல்டர் எறங்கிடுச்சுடா.." என்று முதுகைப் பிடித்துக்கொண்டு மூஞ்சியைச் சுளித்துச் சமாதானம் சொன்னான். கோயில் கைங்கர்யத்தில் இருப்பதால் பஞ்சகச்சத்தோடு களமிறங்கிக் கலக்கினான். தனது புத்ராதிகளுடன் வந்திருந்தான். மட்டையளவு இருந்த இரண்டாமவன் அப்பன் பெயரைத் தக்க வைத்துக்கொள்வான் என்று பிரகாசமாகத் தெரிகிறது. ”யப்பா... நீ ஒண்ணுமே அடிக்கலை.. நான் ஃபோர் அடிச்சேன் பாத்தியா...ம்....” என்று வாய் ஓயாமல் லொடலொடக்கிறான். மிக்க மகிழ்ச்சி.
கோபால் எங்கள் டீமை விட எதிரணிக்காரர்கள் கொண்டாடும் கோலாகலக் கிரிக்கெட்டர். இரசிகைகள் மனதைக் கொள்ளையடிக்கும் லிப்ஸ்டிக் போடாத ரோஸ் உதட்டுக்காரன். அவன் இன்னும் கொஞ்ச நேரம் களத்தில் நின்றால் ஜெயித்துவிடலாம் என்று கும்பலாக நகம் கடித்துக்கொண்டு பெவிலியனில் நெர்வஸாக நின்றுகொண்டிருக்கிறோம். ஒரு அடாசு பௌலர் வீசிய காமாசோமா ஓவரில் எங்கேயோ பிட்ச்சோரக் கல்லில் பட்டு பந்து ஏடாகூடமாக எகிறி ஃப்ரன்ட் ஃபுட்டில் நிற்கும் கோபாலின் இடதுகாலில் படுகிறது. "ஹௌஸாட்..." அலறிய பௌலர் கூட அதை மறந்து அடுத்த பந்து போட திரும்பிவிட்டான். அம்பயர் அங்கே எதுவுமே நிகழாதது போல அசையாமல் சிலையாக நிற்கிறான்.
அப்போது அந்த அதிசயம் நடந்தது. அண்ணன் கோபால் காலையும் ஸ்டம்ப்பையும் திரும்பித் திரும்பி மனமுருகப் பார்க்கிறார். நமக்கு இங்கே வெடவெட. அவரே பிரத்யேக மானசீக ஸ்லோமோஷன் ஓட்டிப் பார்த்து, ஸ்டம்ப் விஷன் காமிராவாக தனது அகக்கண்களை உபயோகிக்கிறார்..... ஐந்தாறு வினாடிகளில் பேட்டை இடதுகைக்கு மாற்றி வலக்கை ஆட்காட்டி விரலை விண்ணுக்கு உயர்த்தி "ஸ்வயம் அவுட்" கொடுத்துக்கொண்டு விடுவிடுவென்று வெளியே வந்துவிடுவார். சத்யசந்தன். "ச்சே,,ச்சே,,, கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம்டா... அவுட்டுன்னு தெரிஞ்சா நாமளா வெளில வந்துடணும்..." என்பது அண்ணனின் உயரிய கோட்பாடு. கேடி(Not KD) குஞ்சுமோன். (ஜெண்டில்மேன்)
உப்பிலி எங்களுக்கு ரெண்டு மூனு செட் சீனியர். அவர் மட்டையை கடாசிவிட்டு ரிட்டயர்ட்டு ஆனப்புறம்தான் நாங்கள் விளையாட ஆரம்பித்தோம். வயலின் வில் பிடித்த கையால் பேட்டும் பிடிப்பார். தற்சமயம் கலாக்ஷேத்ராவில் ஃபிடில் கற்றுத் தருகிறார். மன்னையில் ஹரித்ராநதி கோதண்டராமர் சன்னிதி வாசல் பெஞ்ச் மேடையில்,குன்னக்குடி போல ஜிலுஜிலு ஜிப்பா அணிந்து, வைஷ்ணவராயினும் நெற்றி மறைத்து திருநீறு பத்து போட்டு, முதுகொடிய ஆட்டத்துடன் வயலினில் ”கொட்டாம் பட்டி ரோட்டிலே... பொண்ணு போற ஷோக்கிலே...” வாசித்து எங்களை இன்பமுறச் செய்வார். முப்போதும் கழுத்தருகே வயலின் சாய்த்துச் சாய்த்து சிறு கூன் விழுந்த முதுகோடு ஓடிவந்து அரவணைத்து எல்லோரையும் மைதானப் பிரவேசம் நடத்திவைத்தார்.
கோபாலும் ஸ்ரீராமும் அண்ணன் தம்பி. இது போன்ற மார்க்-ஸ்டீவ் 'வா'க்கள் எங்கள் டீமில் மொத்தம் ஒன்பது. நவரத்தினங்கள்.
1. ரமேஷ் - கோப்லி
2. கோபால் - ஸ்ரீராம்
3. ஸ்ரீதர் - ஸ்ரீராம்
4. சரவணன் - அசோக்
5. சுதர்ஸன் - பாபு
6. ராஜா - நந்து
7. கோபால் - உப்பிலி
8. ராஜா - வாசு
9. ரமேஷ் - ஆனந்த்

பந்தும் பேட்டுமாகத் தெருவெங்கும் கிரிக்கெட் ப்ளேயர்கள் பெருத்து போன சமயத்தில் HCC 'A' டீம் HCC 'B' டீம் என்று பிரித்து மன்னையில் டோர்ணமென்ட் விளையாண்ட காலங்கள் உண்டு.
இதில் கோபால், ஸ்ரீராம், ரமேஷ், கோப்லி, உப்பிலி, ஆர்.வி.எஸ் ஆகியோர் சென்ற ஞாயிற்றுக்கிழமை விளையாடினோம். உடம்பு இதற்கு ஒத்துழைத்தது பகவத் சங்கல்பம். மன்னை ராஜகோபாலனின் அருட்கொடை. கோபால்-ஸ்ரீராமின் அக்கா ராதா ("வெங்குட்டு... புளியோதரை சாப்பிடறயா?.." என்று அன்று அடிக்கடி படியளந்த ராதாக்கா) மகன் கார்த்தி. மன்னையில் நாங்கள் மட்டையோடு அலைந்த போது கால்சட்டையோடு வேடிக்கைப் பார்த்த பையன். இளரத்தம். வெடரன்ஸ் விளையாடுவதைக் கண்டு களிப்புற்றான்.
பன்னிரெண்டாம் வகுப்பிலேயே முன் மண்டை பாதிக்கு மேல் வழுக்கையாகி “ஏண்டா கல்யாணம் வரைக்கும் முடி இருக்குமா?” என்று கவலைப்பட்டு மேலும் முடியிழந்து, இப்போது இரண்டு குழந்தைகளுடன் குடும்பியாக இருக்கும் ஸ்ரீதரும் விளையாட வந்திருக்கலாம். பேட்ச்சில் முதன்முதலில் கல்யாணம் முடித்து இளம் தாத்தாவாக ஆகியிருக்கும் அப்புவையும் கூப்பிட்டோம். பேரனோடு கொஞ்சிக் கொண்டிருந்தானாம். சரி. பரவாயில்லை.. அடுத்த மேட்ச்சில் தேர்ட் மேனில் நிறுத்தி வைத்து தொந்தி கரைய பந்து பொறுக்க விட்டுவிடலாம்.
திங்கட்கிழமை காலையிலிருந்து முட்டிக்கு முட்டி வலிக்கிறது. இரு தொடைகளிலும் யானை ஏறி நின்றார்ப்போல குடைகிறது. தலைக்கு மேலே கையைத் தூக்கமுடியவில்லை. ஒரே பாரமாக இருக்கிறது. க்ளட்ச் போட கால் எழுந்திருக்காமல் ஒத்துழைக்க மறுக்கிறது. பேசினால் குரல் கீச் கீச்சென்று தொண்டையைக் கிழித்துக்கொண்டு வருகிறது. என்னதான் இதுபோன்று சிறுசிறு After effects இருந்தாலும் நெஞ்சு மட்டும் கல்கண்டாய் இனிக்கிறது. மனசுக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம். மூன்று மணி நேரங்கள் முழுசாய் மன்னையில் வாழ்ந்த பரமதிருப்தி!!
இது போதும்... இனிமேல் அடுத்த ஆட்டத்திற்கு அப்புறம்......
பின்குறிப்பு: மேலே குறிப்பிட்டிருந்த தலைப்பில் என்னுடைய மன்னார்குடி கிரிக்கெட் புராணங்கள் எழுதலாம் என்று விருப்பம். முயற்சி செய்கிறேன்.

Monday, October 26, 2015

சேவாக்கிற்கு சல்யூட்!

பொறந்தவனெல்லாம் ஒரு நாள் சாகத்தான் போறான் என்பது வீரமணியின் பேட்டிங் தத்துவம் என்றால் "போடாங்....” என்று கெட்ட வார்த்தையை நாக்கில் மடித்து என்னை மொத்த வருவீர்கள். இப்போ சொல்லப்போவது அதற்கு ஒத்துப்போகிறதா என்று பாருங்கள். பிட்ச்சில் விழுந்த பந்தெல்லாம் பீச்சாங்கை பக்கமே திருப்பி விளையாடுவான். மிட் விக்கெட், ஸ்கொயர் லெக், லாங் ஆன் என்று கால்பக்க பௌண்டரியே கண். விழுந்த பந்தெல்லாம் கால் திசைக்கு என்பதும் “பொறந்த...” என்கிற முதல் வரித் தத்துவமும் இப்போது முடிச்சுப்போட்டுக்கும்.
வீரமணி என்று ஒரு பேஸ்பால் ப்ளேயர். ஷாட்பூட் எறிவான். சில சமயம் ஜாவ்லின் த்ரோ. தெம்பு தேவைப்படும் எந்த விளையாட்டிற்கும் அவன் ஒரு கை. கட்டுமஸ்தான உடம்பிற்காக ஸ்கூல் கிரிக்கெட் டீமிலும் இருந்தான். பிட்ச்சில் எங்கே பந்து விழுந்தாலும் ஆன் ஸைடில் பறக்கும். ஆஃப் ஸைடிலிருக்கும் ஃபீல்டர்கள் அனைவரையும் தூக்கி ஆன்ஸைடில் போட்டாலும் அவர்கள் கவுட்டி வழியாக பௌண்டரிக்குத் துரத்தும் வித்தை தெரிந்தவன்.
சின்ன வயசில் நான் பார்த்த வீரமணி டேஷிங். அப்புறம் மால்கம் மார்ஷலை மெல்போர்ன் ஸ்டேடியத்துக்கு வெளியே சிக்ஸ் அடித்து நசுக்கிய க்ரிஷ் ஸ்ரீகாந்த் படா பேட்ஸ்மேன். மூக்கை உறிஞ்சிக்கொண்டு சூரிய நமஸ்காரத்தோடு பயபக்திப் பழம். வந்த புதுசில் இளரத்தம் பாய்ந்த சச்சின் அதிரடி ஆட்டக்காரர். ஆனால் ஆறும் நான்குமாய் ரொம்ப நாளைக்கு விளாசி விளையாடியவர் சேவாக்.
ஆட்டத்தின் முதல் பந்து, நாற்பத்தொன்பதில் இருக்கிறேன்.. ஒரு ரன்னில் அரை சதம், இன்னும் இரண்டு ரன்கள் எடுத்தால் செஞ்சுரி என்றெல்லாம் ஈனமானமில்லாம் கட்டை போட்டு விளையாடுவது சேவாக்கிற்குப் பிடிக்காத விஷயம். பந்திற்கு மரியாதை. நல்ல பந்து அடிவாங்காது. மற்றவையெல்லாம் அப்போதே கணக்கு தீர்க்கப்படும். இறங்கு. நொறுக்கு. இறங்கு..நொறுக்கு... இதுதான் சேவாக்கின் தாரக மந்திரம்.
சச்சின் இடது காலை முன் வைத்து பெண்டுலமாய் பேட்டை சுழற்றி நளினமாக ஸ்ட்ரெயிட் ட்ரைவ் விளையாடுவது கண்ணை நிறைக்கும். சேவாக் அப்படி கிடையாது. டேஷிங். டேர் டெவில். பௌன்ஸர் விழுந்தால் கோழையாய்க் குந்திக்க மாட்டார். வெளிநாட்டு மைதானமாக இருந்தால் கவர் பௌண்டரிக்கு வெளியே சட்டையில்லாமல் பெர்முடாஸ் போட்ட யாராவது காட்ச் பிடிப்பார்கள், இந்தியா என்றால், நம் நாட்டின் குளிர் சீதோஷ்ணத்திற்குத் தக்கவாறு கறுப்புக் கோட் போட்டுக்கொண்டு கூலிங் கிளாய் அணிந்து தொப்பியுடன் இருப்பவர் காட்ச் பிடித்து கை உயர்த்துவார்.
நமக்கு ஆசி வழங்குவதற்கு முன்னால் யானை துதிக்கையை பின்னால் தூக்குவது போல பேட்டை தன் தலைக்கு மேல் உபயோகித்து பந்தைக் கெந்தி விட்டு விக்கெட் கீப்பர் தலைக்கு மேலே தேர்ட் மேனில் சிக்ஸ் அடித்த சேவாக்கிற்கு அன்று யானை பலம். அசுர அடிக்கு நாற்புறமும் பந்து எல்லைக்கோட்டைக் கடந்து கேலரியில் வாசம் செய்தது. சேவாக்குக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி.
சேவாக்கிற்கு சல்யூட்!

Saturday, May 9, 2015

உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்

ஆர்வியெஸ்ஸாகிய நான் காலையிலிருந்து என்னுடைய ஃபேஸ்புக் வாலில் அப்டேட் செய்த இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை 2015 ஆட்டத்தின் தொகுப்பு. ஹைலைட்ஸ்ஸுன்னும் வெச்சுக்கலாம்.

**
ராஜாவுக்கு வெண் சாமரம் வீசுறமாதிரி தவானும் ரோஹித்தும் பேட்டை தூக்கி தூக்கி மூன்று ஓவர்கள் வீசினார்கள். கேலரியில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு ஏசி போட்டா மாதிரி இருந்தது. முதல் ஃபோர் ஷிகர் தவான் சொஹைல் கான் பந்தில் ஸ்கொயர் கட். விஜயில் தமிழ் கமெண்ட்டரி சகிக்கலை. நீங்களும் நானும் கூட திண்ணையில உட்கார்ந்து இதைவிட சுவாரஸ்யமா பேசுவோம். டிவிய பார்த்து கமெண்ட்டரி பேசினா காது கேளாதோருக்கு ந்யூஸ் படிச்சா மாதிரிதான் இருக்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹெச்டியில் கண்கள் கலராச்சு. இதை டைப்பிக்கிட்டே மேட்ச் பார்த்துக்கிட்டிருக்கேன். ரோஹித் ரெண்டு ஃபோர் அடிச்சாச்சு. ரெண்டுமே மிடில் ஆஃப் தி பேட். டாஸ் கெலித்தா பாதி ஜெயிச்சாப் போல.. ஷேவாக்கோ.. சச்சினோ இருந்தா ஸ்கோர் போர்டு மூவ் ஆகியிருக்குமோ.. ம்... இன்னும் இருக்கே...
இந்தியா 6 ஓவர்களில் 24 ரன்கள்... விக்கெட் நஷ்டமின்றி....
**
விராட் கோலியை கோலி விளையாடவேண்டாம் என்று பாரத மக்கள் சார்பில் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்.
**
சொஹைல் அரைக்குத்து. லட்டு மாதிரி வந்த பந்துக்கு கோலியின் முதல் நான்கு. ஆஃப் ஸ்டம்ப்க்கு வெளியே கோலியின் தர்மசங்கட ஸ்பாட்டை போட்டுப் போட்டுக் காண்பித்து.. அங்கே போட்டால் கோலி காலி... என்று அபசகுனமாக போட்டுக் காட்டுபவர்கள் பாகியிடம் காசு வாங்கியிருக்கலாம் என்று நம்புகிறேன். ரெஸ்ட் ரூம் போவதற்கு எழுந்த போது ரோஹித் சாய்ந்ததால் அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கிரும் கிரிக்கெட் பக்தாஸை மட்டையப்பர் காப்பாற்றுவாராக...
அஃப்ரிடியையே அடிக்கலைன்னா வேற யாரைப்பா அடிப்பீங்க... கேலரியில பல பேர் தூங்க ஆரம்பிச்சாச்சு... இருநூற்றைம்பது அடிச்சா நாற்பது ஓவர்ல ஜோலியை முடிச்சுட்டு கிளம்பிடுவாங்க...
13.4 ல் 60க்கு ஒண்ணு.
**
பந்துக்கு வலிக்குமோ பேட்டுக்கு வலிக்குமோன்னு அடிச்சா நாலு போகாது திவான். கரப்பு கரண்டினா மாதிரி ஹேர் ஸ்டைல் வேற..
ஓடி ஓடி உழைக்கிறாங்கப்பா... ஒண்ணும் ரெண்டுமா பொறுக்கறாங்க...
அஃப்ரிடியெல்லாம் காவிய பௌலராக்கிட்டாங்கப்பா... பதினேழு ஓவர்ல 82 ஃபார் 1
**
சாஸ்திரியும் கவாஸ்கரும் வெஸ்ட் இண்டீஸோட விளையாடினாங்க... முப்பது ஓவருக்கும் மேலே கற்சிலையா உட்கார்ந்திருந்தோம். அடுத்த ஓவர் சாஸ்திரி சிக்ஸர் அடிப்பாண்டா... கவாஸ்கர் தூக்கி ஆடமாட்டான்.. நிச்சயம் தரையோட ஃபோர் பாரு... இப்படி பேசிக்கிட்டே நாற்பது ஓவர் வரைக்கும் கழிச்சோம்.... பச்சக் குழந்தை கூட தூக்கி அடிக்கும் பாலுக்கு ஔட் ஆகி ரெண்டு பேரும் க்ளௌஸை கழட்டி கக்கத்துல இடுக்கிக்கிட்டே பெவிலியனுக்கு ரெஸ்ட் எடுக்க போய்ட்டாங்க.. உட்கார்ந்து உட்கார்ந்து பிருஷ்ட பாகம் வலிச்சதுதான் பாக்கி...
இன்னிக்கி அதே மாதிரி பண்ணிடாதீங்கப்பு.. லீவு வேஸ்ட்டா போயிடும்.. ஏற்கனவே ஊக்கும்.. தோணி தான் வந்து சோறு போடப் போறான்னு சமையக்கட்டுலேர்ந்து சத்தம் வருது..
**
பளபளக்கும் திருப்பாச்சி அருவாளைத் தூக்கி கழுத்தை வெட்டினா மாதிரி ஒரு ஒரு ஸ்கொயர் கட் அடிச்சார் கோலி. ஆஃப் ஸைடில் புற்களை அறுத்துக்கொண்டே பௌண்டரிக்குப் போச்சு. தவான் ஐம்பத்துநாலில் ஐம்பது ரன்கள். பாராட்டுகள்.
இருபத்து இரண்டு ஓவர்களில் 115/1. ஷிகர் தவானும் முதல் வரியில் சொன்னா மாதிரி இன்னொரு ஃபோர். பந்துக்கு தலைவலி ஆரம்பிச்சிடுச்சு.
**
ரெய்னாவுக்கு இன்னும் சரியா கனெக்ட் ஆக மாட்டேங்குது. கொசு பேட் மாதிரி விசிறிகிட்டே இருக்கார். கோலிக்கோ சக வீரர்களை க்ரீஸை விட்டு ரன் ஆசை காட்டிக் கூப்பிட்டு விக்கெட்டைக் குடிக்கும் இரத்தக்காட்டேரி புகுந்திருக்கா. இதோ இப்பக்கூட ரெய்னா ஒரு ஃபோர். ஆளில்லா இடத்தில் பறந்து
விழுந்துச்சு. சேதாரம் இல்லை. பந்தைப் பார்.. அப்புறம் பௌண்டிரியைப் பார்.... smile emoticon
37.2 ஓவர்களில் 205/2.
**
ராமு சாருக்கு ஃப்ளிக் ஆடினா பிடிக்காது. கன்னாபின்னான்னு திட்டுவார். அஸார் விளையாடறானே சார்.. அப்டீன்னு கேஷுவலாக் கேட்டுடமுடியாது. பிட்ச்ல ஓடிவந்து பொடரியில தட்டுவார். இப்போ கோலி ஃப்ளிக்ல ஃபோர். எலிகண்ட்டா இருந்தது. ஷார்ட் ஸ்கொயர் லெக்ல ஆள் இருக்காங்க.. தரையை விட்டு லைட்டா ரெண்டு அடி தூக்கினா... அவ்ளோதான்.. ஆள் காலி.. ராமு சார் ரைட்டு. முன்னூறு அடிக்கலைன்னா டவண்டைதான்.
ஸ்டேடியம் முழுக்க ஆறும் நாலுமா மூன்று ஓவராவது வேணும். இப்படி தடவித் தடவி ரன் எடுத்தா பொழைக்க முடியாது.
39 ஓவர்ல 213/2.
**
செஞ்சுரிக்கு இன்னும் ஏழு ரன் இருக்கு. அப்புறம் பாரு வாணவேடிக்கையை.. இப்படி நிறையா தடவை நான் கோபால், கோப்லி எல்லோரும் கண்கொட்டாம மேட்ச் பார்க்கும்போது பினாத்திப்போம். கரெக்ட்டா நூத்தி ஒண்ணுன்னு ரன் மொய் எழுதினத்துக்கப்புறம் பேடையெல்லாம் கழட்டிட்டு பெவிலியன்ல உட்கார்ந்து ஜூஸ் குடிப்பாங்க...
நான் கோலியைச் சொல்லலை... smile emoticon
**
லெக் ஸ்டம்புக்கு வெளியே போனா வைட் பாலைக் கன்வர்ட் பண்றத்துக்கு ஹௌஸாட் கேட்பாங்க.... பாகிஸ்தான் எதுக்குமே ஓவராக் கத்துவாங்க.. அப்படியே இப்பவும் ரெய்னாவுக்கு அப்பீல். ஒரு பால் விட்டு அடுத்த பால் ஃபைன் லெக் பௌண்டரி. அடுத்த பந்து ஸ்ட்ரெயிட் பௌண்டரி. இன்னொன்னு ஸ்கையர் லெக் பௌண்டரி. போட்டுத் தாக்கு.
ரெய்னா இது ரன் ரெயினா? smile emoticon
**
ரெய்னாவை பத்து பால் நான்ஸ்ட்ரைக்கரா வச்சு வெறுப்பேத்தி அவுட் ஆக்கின பாவத்தை சிக்ஸ் அடிச்சுக் கழுவிக்கிறார் தோணியப்பர்.
292/4 48 ஓவர்களில்...
**
வாஹ்.. வஹாப்... நாற்பத்து ஒன்பதாவது ஓவரில் 1-1-1-1-1 கொடுத்து ஒரு W எடுத்த பௌலிங்...
மேட்ச்சிற்கு திருப்புமுனையான ஓவர்.
49 ஓவர்களில்....296/5
முன்னூத்தி பத்தாவது எடுக்கலைன்னா நாக்கைப் பிடிங்கிக்கலாம்.
**
அஷ்வினின் முதல் ஓவரே மெய்டன். அன்பே வா.. அருகே வான்னு அந்தக் காலத்துல ஸ்பின்னர்ஸ் ஃப்ளைட்டிங் டெலிவரியா போடுவாங்க. மனீந்தர் சிங் அப்பப்போ கொஞ்சம் முரட்டுத்தனம் காமிச்சு பயமுறுத்துவார். மீடியம் பேஸரா இருந்து ஸ்பின்னர் ஆன அனில் கும்ப்ளே, ஸ்பின்னர் வேடத்தில் உலவும் மீடியம் பேஸரா ரிட்டயர்ட் ஆனார்.
உலகமே இடிஞ்சு விழுந்தாலும் ரவி சாஸ்திரி குழந்தைகளுக்கு காட்ச் ப்ராக்டீஸ் குடுக்கிற வேகத்துல ஸ்பின் போடுவார். எழுந்து சமையல் உள்ளுக்குப் போய் பானையில் தண்ணீ குடிச்சுட்டு வர்ற வரைக்கும் பால் அந்தரத்தில் ஃப்ளைட் ஆகும். பகவானாப் பார்த்து அவுட் ஆக்கினாதான் உண்டு. இல்லைன்னா பேட்ஸ்மேனே வெறுத்துப் போய் “சீச்சீ... இது ஒரு பொழைப்பா...”ன்னு விக்கெட்டை துறந்து வீட்டுக்குப் போய்டுவார்.
க்ரீஸ்ல நிக்க முடியாம இறங்கி விளையாடப் போய் மக்கள் அவுட் ஆகும். இப்பொல்லாம் ஃப்ளாட் டெலிவரிதான். ஷேன் வார்ன் காலம் வரைக்கும் கூட காற்றில் நளினமாக பறந்து வரும் ஸ்பின் பந்துகள் பார்த்தோம்.
இந்த நேரத்துல ஒரு விக்கெட் விழணும்.
16 ஓவர்ஸ் 72/1
**
மிஸ்பா அஷ்வினின் முதல் பந்தையே பெறுக்கி விளையாடறார். சாரைப் பாம்பு மாதிரி பேட்ல பட்டுக் கையில ஏறி கீப்பர்ட்டே போய்டும். எப்பவுமே நம்ம பசங்களுக்கு ரன் அவுட்டுக்கு த்ரோ பண்ணுங்கடான்னா விக்கெட் கீப்பரை கழைக்கூத்தாடி மாதிரி டான்ஸ் ஆடவிட்டு பாலை அனுப்புவாங்க. பச்... கைக்கு பந்தை எறிஞ்சிருந்தா மூணாவது விக்கெட். இப்போ அதே புள்ளையாண்டான் ஃபோர் ஃபோரா அடிச்சி நிமிர்த்துறான்.
**
ஃபீல்ட்ல ஒவ்வொருத்தருக்கும் பெருக்கல் குறி மாதிரி நாலு நிழல் விழ ஆரம்பிச்சாச்சு. உமேஷ் யாதவ் ஹிந்தி பட ஸ்டண்ட் நடிகர் மாதிரி இருக்கார். ஒரே ஓவர்ல ரெண்டு விக்கெட்டுக்கு டிக்கெட் கொடுத்துட்டார். சோம்பலா வந்து பௌலிங் போடற ரவீந்தர ஜடேஜாவுக்கும் ஒண்ணு விழுந்தாச்சு. ஜெயிக்கிற மாதிரி வெளிச்சம் தெரியுது. பார்ப்போம்.
பாக்: 25 ஓவர்களில் 105/5
**
அஷ்வின் ரெண்டாவது மெய்டன். பாக்கிற்கு கொஞ்சம் ப்ரஷர் ஏத்திவிட்டார். அஃப்ரிடி கர்லா கட்டை சுத்தறா மாதிரி மோஹித் ஷர்மாவுக்கு சுத்த ஆரம்பிச்சாச்சு. இலக்கை நோக்கி மிடில் குச்சியைச் சுடறா மாதிரி மோஹித் வீசறார். ஒத்தையும் ரெட்டையுமா பொறுக்கி மனசைத் தேத்திக்கிறாங்க... லைன் அண்ட் லெங்க்த் கீப்பப் பண்ணினா அஃப்ரிடியாவது மிஸ்பாவாவது...
29 ஓவர்களில் 123/5
**
இப்போ மிஸ்பாவுக்கு புள்ளி வெச்சுட்டாப் போதும். லோக்கல் மேட்ச்சுல கடைசி ரெண்டு விக்கெட் இருந்து நிச்சயம் தோல்வின்னு முடிவாயிட்டா... “டேய்.. அவுட்டாகாதே... அட்லீஸ்ட் அம்பது ஓவர் விளையாட்டிட்டு வா...”ன்னு அறிவுரை பகர்வார்கள். எதுக்குன்னா.. நாம அம்பது ஓவர் பௌலிங் போட்டு காஜி கொடுத்துருக்கோம். அதனால நாம்பளும் அம்பது ஓவர் விளையாடி அவனை பெண்டு நிமிர்த்தணுமாம். என்னே ஒரு இலட்சியம்!
மிஸ்பாவுக்கு அல்வாவா போட்டுக் கொடுத்து ”அடிடா ராசா”ன்னு பௌலிங் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
NEED 120 IN 78 BALLS
**
தோத்துடுவோம்னு ஆயிடிச்சுன்னா ஆளில்லா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் எக்ஸ்ப்ரஸ் ரயிலுக்குப் பச்சைக் கொடி காட்டறா மாதிரி மட்டையை சுழற்ற ஆரம்பிச்சுடுவாங்க.
1. மூணு குச்சியையும் விட்டுட்டு பிட்சுக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பப்பரக்கான்னு நிக்கறது.
2. பேதி புடிங்கினா மாதிரி பிட்ச்ல இறங்கி ஓடிவர்றது.
3. வலக்கை பேட்டை இடக்கைக்கு மாத்தி படகு ஓட்டறது.
4. பௌலர் ஓடி வரும்போது கண்ல தூசி விழுந்தா மாதிரி ஒதுங்கி வெறுப்பேத்தறது....
பாக்கிற்கு 66 பந்துகளில் 113 தேவை.
**
ஸொஹயில் கான் பிட்ச்சுல படுத்துகிறாமாதிரி நிக்கறார். நம்மாட்கள் அரைக்குத்து போட்டு ஃபோர் அடிக்க வைக்கிறாங்க. வைடும் நோபாலும் ரெண்டு ஓவர் எக்ஸ்ட்ரா. இடுப்புக்கு மேலே பந்து எழும்பினாலேயே நிஞ்சா படத்துல சண்டை போடறத்துக்கு முன்னாடி குனியறா மாதிரி செய்யறார் ஸொஹயில். இதுக்கு பேர்தான் மட்டையா மடங்கறதோ?!?!
பாக்கிற்கு 30 பந்துகளில் 81 தேவை.
**
ஸொஹயில் கான் மூன்று தென்னை மரம் உசரத்துக்குத் தூக்கி அடிச்சு மோஹித் ஷர்மா பந்துவீச்சில் உமேஷ் யாதவிடம் காட்ச் கொடுத்து வெளியேறினார். உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி. செஞ்சுரி அடித்த விராட் கோலி ஆட்டநாயகன். இத்துடன் இன்றைய கிரிக்கெட் வர்ணனை நிறைவுபெறுகிறது. இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
காலையிலிருந்து களைப்பின்றி வர்ணனையில் ஓடியாடி பங்கேற்ற @vijay krishnaவுக்கு விசேஷ நன்றி.

மன்னார்குடி டேஸ் - சேரங்குளம் கிரிக்கெட்

மன்னையில் பொங்கலோடு பசுநெய்யாய் சேர்ந்த இன்னொரு விஷயம் சேரங்குளம் கிரிக்கெட் டோர்ணமென்ட். சிறிய திருவடி ஆஞ்சநேயர் கதாயுதம் போல பேட்டைத் தோளில் சார்த்திக்கொண்டு மேட்சுக்குக் கிளம்புவோம். முத்துப்பேட்டை ரோட்டோரம் செல்லும் ஆற்றங்கரைக் கரையில் சைக்கிளில் பேரணி போல சேரங்குளத்தை நோக்கிப் படையெடுப்போம். நடுவில் வரும் மயானத்தில் ப்ரேதம் எரிந்தால் சுப சகுனம். வெற்றி நிச்சயம். கையில் கண்டங்கத்திரி கட்டிக்கொண்டு அபரகாரியமாக யாராவது அஸ்தியில் எலும்பு பொறுக்கிக்கொண்டிருந்தால் மேட்ச் இழுபறி. இது சுசானக்கரை ஆரூடம்.

ஆற்றைக் கடக்க ஒரு சைக்கிள் பாலம் வரும். எதிர்த்தார்போல ஈர்க்குச்சியாய் யாராவது நடந்து வந்தால் கூட ஆற்றுக்குள் குதிக்கவேண்டும் இல்லையென்றால் சர்வ மரியாதையாக பின்னால் திரும்பவேண்டும். பெர்ண்டாட் ஷாவுக்கு யாரோ அனானி சொன்ன “முட்டாள்களுக்கு நான் வழிவிடுவதில்லை...” போன்ற டயலாக்குகள் எடுபடாது. அதில் ஏறி அக்கரையடைந்தால் சேரங்குளம். அங்கிருக்கும் பெருமாள் கோயிலுக்கெல்லாம் எட்டிப் பார்த்ததில்லை. மேட்ச்சே குறி. ஜெயிப்பதே பிரதானம். நேரே ஸ்கூல் க்ரௌண்ட். பெவிலியன் மரத்தடியில் ஸ்கூல் பென்ச்சை இழுத்துப்போட்டு உட்கார்ந்திருக்கும் ஸ்கோரர். வேஷ்டியிலோ முழுக்கால்சட்டையிலோ அவரவர் சௌகரியத்துக்கு அணிந்து கொண்டு உள்ளூர் அம்ப்யர்கள். ஹெச்சிசி என்று நாமகரணம் சூட்டப்பெற்ற எங்கள் ஹரித்ராநதி கிரிக்கெட் க்ளப் மன்னையில் பிரசித்தி பெற்ற டீம். அணியினரை லிஸ்ட் பண்ணலாம் என்றால் எஃப்பியிலேயே Rajagopalan Regupathy Rajagopalan Rengarajan AR Ramesh Kannan என்று ப்ளேயர்கள் தேறுகிறார்கள். இன்னொரு போஸ்ட்டில் எங்கள் டீமோடு கிரிக்கெட் விளையாடலாம்.

சேரங்குளம் பார்த்தா மாமாவுக்கு க்ரிக்கெட் வெறி. வேஷ்டியில் பௌண்ட்ரி லைனில் ஃபீல்டிங் போல ஏதோ செய்வார். மெனக்கெட்டு பந்து வராத திசையில் அவரை நிறுத்திவைத்தால் சோதனையாக பேட்டின் எட்ஜில் பட்டு அங்கே பாய்ந்து வரும். குனிவதற்கு கொஞ்சம் சிரமம். முதுகு பிடித்துக்கொள்ளுமோ என்று பயம். மனசளவிற்கு தேகம் இடம் கொடுக்காது. நடையோட்டமாகச் சென்று ஃபீல்ட் செய்யும் போது தேவி விட்டால் “பார்த்தாஆஆஆ... “ என்று ஊருக்கே எக்கோ கேட்கும்படி அவரது சகவயது கிரிக்கெட்டர் மரத்தடியிலிருந்து இரைவார். பார்த்தா மாமா ஆர்வமிகு சேரங்குளத்தார். இப்போது எப்படியிருப்பார் எங்கிருக்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கால் மற்றும் பந்து வீசும் முனைகளில் முள்வேலியும் மட்டை திசையில் பெவிலியனும் வாய்க்கப்பெற்ற சர்வதேச அரங்கம். மாட்டை மேயவிட்டுவிட்டு முண்டாசோடு சில பெரியவர்களும், அரை நிஜாரும் மேலுக்கு சட்டையில்லாத சில பொடியன்களும் சேர்த்து செலக்ட்டடாக ஒரு ஐம்பது பேர் ஆடியன்ஸ்.

1994 ஜனவரி. பொங்கல் தினம். டோர்ணமெண்ட் ஃபைனல். மைதானமெங்கும் சரமாரியாக ரன் மழை பொழிந்துகொண்டிருந்தது. ஓட்டங்கள் நினைவில் இல்லை. வழக்கம் போல் கோபால் நிதானமாக விளையாடினான். கோப்லி ரமேஷ் ஸ்ரீராம் என்று சப்போர்ட்டுன் நானும் களமிறங்கினேன். ஆத்தா பரமேஸ்வரி ஆசியில் அடித்ததெல்லாம் கனெக்ட் ஆகி நான்கும் இரண்டும் மூன்றுமாய் ரன்கள் குவிந்தன. கடைசி ஓவரிலோ என்னமோ ஜெயித்திருந்தோம். எனக்கு மேன் ஆஃப் தெ மேட்ச் அவார்ட் வழங்கி சிறப்பித்தார்கள். ரஸ்னாவும் ஒரு உள்ளங்கை உசர கோப்பையும் பரிசு. மனசுக்குள் ஜில்ஜில்.

கேரியரில் மட்டையை சொருகிக்கொண்டு மைதானத்திலிருந்து கிளம்பி சைக்கிளில் ஏறினேன். எதிரே ஊரிலிருந்து தெரிந்த பையன் ஒருவன் சைக்கிளில் அரக்கப்பரக்க வந்து கொண்டிருந்தான்.

“என்னாச்சு?”

“உங்க அக்காவுக்கு ஆண் கொழந்தை பொறந்திருக்காம். நீங்க மாமா ஆயிட்டீங்க...”

புல்லரித்துப்போனது. வீட்டுக்குப் பையனாய் திரிந்து கொண்டிருந்ததிலிருந்து முதல் ப்ரமோஷன் மாமா. அந்த ஆண் கொழந்தை Sabareesh Hariharanக்கு இன்னிக்கி பொறந்தநாள். எங்கேயோ ட்ரீட் கொடுக்கிறானாம். “மாமா.. டின்னருக்கு வா..” என்று குழந்தை நச்சரித்துக் கூப்பிடுகிறது. போய்ட்டு வரேன். பை.

Tuesday, July 29, 2014

வள்ளல் இஷாந்தின் அருட்பெருங் கருணையினாலே.....

மெக்கல்லமும் ஸ்மித்தும் அண்ணன் தம்பியாய் கைகோர்த்துக் களத்தில் இறங்கி சென்னையின் வெற்றிக்காக விளையாடினர். வெண்ணை திரண்டு வர்ற நேரத்தில பானையை உடைக்கிறா மாதிரி மெக்கல்லமின் மிடில் அண்ட் ஆஃபை பிளந்துவிட்டார் கேவி.ஷர்மா.

கர்ண பரம்பரையில் வந்த ரன்னளிக்கும் வள்ளல், கருணைக் கடல் இஷாந்த் ஷர்மா அரைக்குழியும் முழுக்குழியுமாக வீசி ஓப்பனர் ஸ்மித்தை சிக்ஸர்ஸ்மித்தாக்கி மைதானத்தாரை மகிழ்வித்தார். முனி இஷாந்த்தின் ஜடாமுடி பந்துவீசும் போது கண்ணை மறைக்கிறது போலும், பிட்ச்சின் அங்கமெல்லாம் பந்தைக் குத்தி ரணகளப்படுத்திவிட்டார். பிட்ச்சிற்கு வாயிருந்தால் அழும்.

ஆடுகள பார்டரில் ஆடும் ச்சியர் கேர்ள்ஸ் நடனம் ச்சீச்சீ... ரகத்தில் இருந்தது. அவ்வளவு சோபிதமாக இல்லை. அடுத்தமுறை இந்தியாவில் நடந்தால் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டமெல்லாம் வைத்து “மாங்குயிலே... பூங்குயிலே...” வாசித்துக் குஷிப்படுத்தலாம். ”ச்சீ.. போடா...” சொல்லும் கலா மாஸ்டரைத்தான் சியர் கேர்ள்ஸுக்குக் கத்துக்கொடுக்கச் சொல்லணும்.

ஆறும் நான்குமாய் ரன்களை வாரி வழங்கிவிட்டு சுரேஷ் ரெய்னாவை வீழ்த்தி உப்பு தின்னத்துக்கு தண்ணிக் குடித்தார் இஷாந்த். இந்நேரம் எங்க கிரிக்கெட் கோச் ராமு சாரா இருந்தா நிச்சயம் மாட்ச் முடிஞ்சத்துக்கப்புறம் மாமரத்துக்குப் பின்னாடி தரதரன்னு இழுத்துண்டு போய் மண்டையிலேயே லொட்டு லொட்டுன்னு போடுவார்... முதுகுல நாலு சாத்து சாத்தி “இனிமே இப்டி போடுவியா.. இப்டி போடுவியா... கையை முறிச்சுடுவேன்...கம்மனாட்டி....”ன்னு கதகளி ஆடியிருப்பார்.

குருதிப்புனல் கமல் கெட்டப்பில் களமிறங்கிய தோணி இளம்புயல் ஸ்மித்தை அடிக்கவிட்டு வேடிக்கைப் பார்த்தார். ஸ்மித் சுற்றிய பக்கமெல்லாம் சோட்டா மோட்டா சிக்ஸராக பந்து போய் இறங்கியது.

ஒரு கட்டத்தில் பேதி புடுங்கியது போல வரிசையாக உள்ளே சென்றார்கள். ஸ்டேன் ஒழுக்கமாக பந்து வீசினார். நடுவில் கழன்றதைச் சமாளித்து ரவீந்தர ஜடேஜாவும் தோனியும் ஒன்றும் இரண்டுமாகப் பொறுக்கி விளையாடினார்கள்.

சீட்டாட்ட ரம்மியில் விட்டதைப் பிடிப்பது மாதிரி இஷாந்த் கடைசியில் இரண்டு விக்கெட் வீழ்த்தி முகத்துக்கு துண்டு போடாமல் மைதானத்தை விட்டு வெளியேற வழிவகுத்துக்கொண்டார். வாழ்ந்து கெட்ட குடும்பம் மாதிரி நல்லா போய்க்கிட்டிருந்த சென்னையின் வாழ்க்கையில் விக்கெட் புயல் வீசி தத்தளித்து கடைசி ஓவர் வரை வந்து.... பெட்டிங் பணத்தை உச்சத்துக்குத் தூக்கிவிட்டு.... தோனியின் நான்கால் கெலித்தது சென்னை.

இந்த ஸ்டேட்டஸை இப்படி முடிச்சுக்கலாம்....

Saturday, March 10, 2012

ராகுல் திராவிட்: ஓய்வு பெறும் இந்தியப் பெருஞ் சுவர்


டெண்டுல்கர் கங்குலி போன்று புகழின் உச்சாணிக் கொம்பிற்கு சரசரவென்று ஏறியவர் இல்லை திராவிட். அவர்கள் ஆக்‌ஷன் கிங்ஸ். பந்து வீசுபவர்களை ”ஒத்தைக்கு ஒத்தை வாடா” என்று முண்டு தட்டுவார்கள். தங்களது ஆக்ரோஷமான அடிதடி ஆட்டத்தால் அவர்களை அடக்கியாள நினைப்பவர்கள். இந்த வரிசையில் சமீபமாக முன்னந்தலையில் கேசமிழந்த வீருவும் அடக்கம். திராவிட்டின் பாணி இவர்களுக்கு எதிர்த்திசை. பந்து வீசுபவரின் திராணியை சோதிப்பது. ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்பட்ட ஷோயப் அக்தர் பௌண்டரி லைனில் இருந்து ஓடிவந்து தெம்பத்தனையும் ஒன்று திரட்டி உசுரைக் கொடுத்து பந்து வீசினால் முன்னங்காலை தூக்கி வைத்து தலையை கவிழ்த்து சர்வமரியாதையாக ஒரு “லொட்” வைப்பார். ஸ்பின்னர் வீசிய பந்து என்றால் பந்து மட்டையுடன் ஒட்டிக்கொண்டுவிடும். ஒரு இன்ச் அகலாது. அடுத்த பந்திற்கு ரா.பி.எக்ஸ் இன்னும் ஒரு 200 மீட்டர் ஓடவேண்டும். ஒரு ஓவரில் ஒரு கி.மீ நாயாய் பேயாய் அவர் ஓடிக் களைத்த பின் ஆறாவது பந்தில் ஒரு ஃபுல்டாஸோ அல்லது ஓவர் பிட்ச்சோ போட்டால் தலைவர் கவர் ட்ரைவ் அடித்து பௌண்டரிக்கு விரட்டுவார்.

பந்து வீசுபவர்களை பொறுமை இழக்கச் செய்து வெகு விமரிசையாக வெறுப்பேற்றி, சுவரின் மேல் பட்ட பந்தானது எப்படி சுவருக்கு எந்த சேதமும் விளைவிக்க முடியாமல் சிதறி ஓடுகிறதோ அதைப் போல இந்தியப் பெருஞ்சுவராய் நின்றார் திராவிட். ஆரம்ப காலங்களில் சுவராய் மட்டும் இருந்தவர் காலங்கள் உருண்டோட அனுபவமும் பயிற்சியும் கைக் கோர்க்க கான்கிரீட் சுவரானார். 

ஆசிய நாடுகளை தவிர்த்து பவுன்சி ட்ராக்ஸ் தயார் செய்யப்படும் வெளிநாடுகளில் நம்மவர்கள் மண்ணை கவ்வுவார்கள். பரதநாட்டியம் குச்சிப்புடி போல மட்டைப்புடி டான்ஸ் ஆடுவார்கள். முட்டிக்கு கீழ் வரும் பந்துகளை அனாயாசமாக அடித்துவிளையாடும் வீரர்கள் “விர்ர்ர்ர்ரூம்” என்று முகத்துக்கு நேரே சீறி வரும் பந்துகளுக்கு பயந்து ஒதுங்கிவிடுவார்கள். முகத்தில் அடிபட்டால் அப்புறம் அவலட்சணமாக விளம்பரத்தில் வரமுடியாது. டப்பு வராது. பாக்கெட் நிரம்பாது. திராவிட் மற்றும் வி.வி.எஸ். லெக்ஷ்மன் போன்றோர் இந்தக் கலையில் விற்பன்னர்கள். ஒரு முனையில் நிற்க வைத்து ஏத்து ஏத்து என்று ஏத்தினாலும் ஃபார்வேர்ட் ஷார்ட் லெக் வைத்து பவுன்ஸர் போட்டாலும் காலடியில் பந்து விழும்படி டொக்கு வைத்து விளையாடுவார்கள். முன்னால் கக்கூஸில் உட்கார்ந்திருக்கும் போஸில் திராவிட்டின் கால் புறத்தில் ஃபீல்டிங் செய்பவர் மண்ணைக் கவ்வுவார்.

திராவிட்டின் கிரிக்கெட் பயணம் நிதானமானது. கடந்து வந்த பாதை ஸ்திரமானது. அவரது முதல் ஆட்டத்திலேயே ஜெயத்தோடு தனது கிரிக்கெட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டார். ஸ்ரீலங்காவிற்கு எதிராக இந்தியாவிற்காக அவர் களமிறங்கிய முதல் ஒரு நாள் பந்தயத்தில் நமது அணி வெற்றிபெற்றது. அதில் அவர் அடித்த ஸ்கோர் ஒற்றை இலக்கம்தான். 3 ரன்கள். கிரிக்கெட்டர்களின் புண்ணிய பூமியான லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கினார். அதில் அவருக்கு 95 ரன்கள் கிடைத்து. ஐந்தில் நூறை விட்டார். 

96-ல் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவருக்கு 97-ல் தென்னாப்பிரிக்க பயணம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்நிய தேச பிட்ச்களின் அதிகப்படியான பௌன்ஸர்களை திறமையாக எதிர்நோக்குவதற்கு ஒரு உபாயம் செய்தார். சின்னசாமி ஸ்டேடிய பெவிலியன் படிகளை தற்காலிக ஆடுகளமாக்கினார். டென்னிஸ் பந்தை நனைத்து வெயிட் ஏற்றி பக்கத்திலிருந்து அரைக்குத்து குத்தி பௌன்ஸர் எறியச் சொல்லி கால் கடுக்க கழுத்து சுளுக்க பயிற்சி செய்தார். விளைவு? மட்டை மேல் பலன். அந்த சீரிஸில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அலன் டொனால்ட், லான்ஸ் குளூஸ்னர் போன்றோர் முக்கிப் பார்த்தும் முடியாது தோற்றார்கள். நன்கு பூசிய சுவராக நின்று இந்தியாவை அணைகாத்தார்.

கர்நாடக கிரிக்கெட் அசொஸியேஷனின் சம்மர் கேப்பில் பதினெட்டு வயதுக்குள் இடம்பெற்றிருந்த இளம் வீரர்களிடம் கோச் கேகி தாராபூர் கேட்ட கேள்வி “இங்க எவ்ளோ கீப்பர் இருக்கீங்க?”. ஒரு பயல் கையைத் தூக்கவில்லை. யாரும் இல்லை. ஒருவர் மட்டும் தைரியமாக கையைத் தூக்கினார். அவர் திராவிட். அவரும் கீப்பர் இல்லைதான். அப்போது வயது 13. கிரிக்கெட் ஆர்வத்தில் எதையும் செய்வதற்கு தயாராக இருந்திருக்கிறார் திராவிட். கடைசிக் காலம் வரை சப்ஸ்ட்டிட்யூட் கீப்பராக அவரை இந்திய அணி பிரமாதமாக உபயோகப்படுத்தியது.

பியூசி படிக்கும்பொழுது பெற்றோருக்குத் தெரியாமல் நண்பர் ஒருவரின் வீட்டில் ஒரு நாள் காலை பார்ட்டி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இரவில் என்றால் வீட்டில் மாட்டிக்கொள்வோம் என்று பகலில் வைத்திருந்தார்கள். திராவிட்டுக்கு பார்ட்டி என்றால் உசுர். அன்றைக்கே KSCAவின் சீனியர் டிவிஷன் லீக் மேட்சும் இருந்தது. மறுநாள் காலை பார்ட்டிக்கு திராவிட்டை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலையில் ஃபோன் செய்து “டேய்! நா மேட்சுக்கு போறேன்” என்று வருத்தமே படாமல் பார்ட்டிக்கு டாட்டா காட்டிவிட்டாராம். அதே வருடம் அக்கௌண்டன்ஸி பாடப்பிரிவில் கல்லூரியிலேயே இரண்டாவதாக வந்தார். ஒட்டுமொத்த கல்லூரிகளுக்கு மூன்றாவதாய் வந்தார். படிப்பிலும் கான்கிரீட் போல கெட்டி என்று நிரூபித்திருக்கிறார். ஹிந்தி டீச்சருக்கு மருத்துவ செலவுகள் அதிகரித்தபோது தன்னிடம் இருந்ததை தாராளமாக அவருக்கு கொடுத்து உதவியதில் அவரது தயாள குணம் தெரிகிறது.

ஃபீல்டில் டொக் வைத்து பெருமளவில் ஒன்றும் இரண்டுமாக பொறுக்கும் ராகுல் திராவிட் ரசிகர்களின் நெஞ்சங்களில் விண்ணைத் தொடும் mighty சிக்ஸராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

பட உதவி: www.skysports.com

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails