Saturday, February 22, 2014

திருஅரதைப்பெரும்பாழி




மன்னையிலோ அல்லது கும்பகோணத்திலோ தங்கியிருந்தால் மத்தியானம் தூங்கி எழுந்திருந்து ஒரு மூன்றரை மணி வாக்கில் மூஞ்சி அலம்பிவிட்டு சூடாக ஒரு காஃபி உறிஞ்சி வெயில் தாழக் கிளம்பினால் நான் இங்கே எழுதப்போகும் சிவத்தலங்களுக்குச் சௌகரியமாகச் சென்றுவரலாம். சூரியன் ஜோலியை முடித்துக்கொண்டு வானத்துக்குக் கீழே இறங்கிவிட்டான் என்றால் வயற்காட்டுக்குள் இவ்வூர்களைத் தேடிச் சென்று திரும்புவதுச் சற்று சிரமமாக இருக்கும். மேலும் இதுபோன்ற கிராமக் கோவில்கள் சீக்கிரம் நடை சார்த்திவிடுவார்கள். அர்ச்சகர்கள் பெடலுக்கு எண்ணெய் போடாத சைக்கிளில் (ஹாண்டில் பாரில் தொங்கும் சாலியான்ன நெய்வேத்திய தூக்கு) க்ரீச்..க்ரீச்..க்ரீச் என்று வெளியூர்களிலிருந்து வந்து கோவிலுக்குள் விளக்குப்போட்டு ”ஏக வில்வம் சிவார்ப்பணம்” என்று வெளிப்பிரகாரத்திலிருக்கும் வில்வ மரத்திலிருந்து ரெண்டு பிடி இலை பறித்து வில்வார்ச்சனை செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருப்பார்கள்.

முதல் பாராவின் முதல் வரியின் படி மன்னையிலிருந்து கிளம்பினேன். சௌமி காஃபி போட்டுக் கொடுத்தாள். கட்டிக்கப்போறவன் அவளுக்கு அடிமையாவதற்கு முன்னர் காஃபியடிமையாகிவிடுவான். மன்னார்குடி பால் விசேஷம் இருக்கே...சரி... வேண்டாம்.. திரும்பவும் மன்னார்குடி புராணமாகிவிட்டால் சேதுராம் க்ருஷ்ணமூர்த்தி கமெண்ட்டில் படம் போட்டு பகடி பண்ணுவார். மன்னார்குடி கும்பகோணம் சாலையில் குருஸ்தலமான ஆலங்குடியைத் தாண்டிவிடுங்கள். ஆபத்ஸகாயேஸ்வரர் ஆர்ச்சுக்கு ஒரு கும்பிடு போடுங்கள். பரமபதத்தில் 82லிருந்து இரண்டுக்கோ மூன்றுக்கோஇறக்கிவிடும் நீண்ட பாம்பின் வளைவுகள் போல சாலைத் திருப்பங்கள். கடந்து வந்துகொண்டேயிருங்கள்........எப்படா வரும் என்று நினைக்கையில்.....

அமராவதி பாலம் என்று ஓர் இடம் வரும். முன்பெல்லாம் இது ஒற்றைப் பாலம். இரு டிரைவர்கள் தங்களது ஓட்டுனர் வித்வத்தைப் பலப்பரிட்சை செய்து வெற்றிக்கொடி நாட்டி இவ்வுலகிற்கு பறைசாற்றும் இடம். வெய்யில் காயும் பகல்நேரத்திலும் “நான் கடந்து விடுகிறேன். நீ அங்கேயே நில்” என்ற அர்த்தத்தில் முகவிளக்கைப் போட்டுப் போட்டு டிம்மிடிப்பி ஸ்விட்ச்சுக்கு வலிக்கும் வரை அணைத்துப் போடுவார்கள். ஸ்டியரிங் நன்கு ஒடிக்கத் தெரிந்த திமிரில் அகராதி பிடித்த சிலர் பாதியில் ஏறி தங்களது ஹெட்லைட் எதிர் ஆள் வண்டியின் ஹெட்லைட்டுக்கு முத்தமிடும் வண்ணம் நிறுத்தி வெறுப்பேற்றுவார்கள். இப்போது எதிரும்புதிருமாக லோடு லாரியே வந்தாலும் மெதுவாகத் தாண்டிவிடும் அகலம் தாராளமாக இடம் இருக்கிறது.

சரி.. எப்படியும் நாம பாலம் தாண்டப் போவதில்லை. பாலத்துக்கு முன்னர் இடதுபுறம் காவிரியின் கிளைநதியோடு பயணிக்கும் பாக்கியம் பெற்றோம். தண்ணீர் கொஞ்சமே இருந்தாலும் ஓடும்நதி ஒரு அழகுதான். நளினமாக வளைந்து நெளிந்து வாலைக்குமரியாக ஓடிக்கொண்டிருந்தது. இடதுபுறம் பச்சைப் பசேல். வலதுபுறம் சலசலக்கும் ஆறு. கரையோரத்தில் நெடிதுயர்ந்த அரசமரங்கள். ”காவேரிக் கரையில் மரமா இருந்தா வேருக்கு யோகமடி” என்று ஷங்கர் மஹாதேவன் மனசுக்குள் சத்தமாகப் பாடினார். நேரமோ சாயங்காலம். ஏசியை அணைத்துவிட்டு ஜன்னலைத் திறந்துவிட்டாயிற்று. ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று பறக்கும் பட்சிகள். மர நிழலில் அசைபோட்டபடி ஓய்வெடுக்கும் ஆவினங்கள். ஆங்காங்கே எதிர்ப்படும் குட்டையில் வெள்ளிக் கிண்ணங்களாக எட்டிப்பார்க்கும் அல்லி மலர்கள். குலை தள்ளியிருக்கும் வாழைத் தோட்டம். இயற்கையிலேயே இறைவனைக் கண்டாயிற்று. இந்த ஒத்தையடிப்பாதை ரோட்டில் எவன் வரப்போகிறான் என்று ஒருவர் ஹீரோ ஹோண்டாவில் ஜுனியர் விகடன் படித்துக்கொண்டு எதிரே வந்தார். கிராம வழக்கப்படி ஊருக்குப் புதுசான நான் பதவிசாக ஒதுங்கிக்கொண்டேன். அவர் ரோடு. அவர் வண்டி. அவர் போறார். இடையில் நாமார்?

நீங்களே தொலைந்துவிடலாம் என்று தாறுமாறாக வண்டி ஓட்டினாலும் நேரே ஹரித்துவாரமங்களத்துக்குத்தான் சென்றடைவீர்கள். இதுபோன்று வயற்காட்டை கிழித்துக்கொண்டு போகும் ரோட்டில் உல்லாசமாகப் பயணிக்கும் போது திசை முக்கியம். சரேலென்று ஒரு கிளை ஒத்தையடிப்பாதை ரோடு பிரியும். நீங்கள் மேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தால் தென்மேற்கில் திரும்பும் ரோட்டில் ஒடித்துவிடக்கூடாது. “இப்படி போவணுமா?” என்று யாரிடமும் கேட்க முடியாது. எப்பவாவது ஆடு மாடு ஓட்டிக்கொண்டு யாதவ குல முரளீக்கள் வந்தால் கேட்கலாம். சரி. மேலே போவோம்.

ஹரித்துவாரமங்கலம் கிராமத்தை அடைந்து கிராமவாசலில் பீடியும் கையுமாக நின்றிருந்த ஒரு கைலியிடம் “சிவன் கோவில் எங்கயிருக்கு?” என்றேன். சின்ன சந்து மாதிரி ஒரு இடத்தைக் காண்பித்தார். சேப்பாயி உள்ளே நுழைந்தவுடன் எதிரே தெரிந்த குளமும் அதை ஒட்டியிருந்த கோவிலையும் பார்த்துப் பிரமித்துப்போனேன். மனசுக்குள் சிவசிவ ஒலித்தது. வயற்காட்டிற்கு நடுவில் உறையும் நண்டாங்கோயில் கற்கடேஸ்வரர் போல இவரும் இருக்கிறார். கோவில் நடை திறந்திருந்தது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம். வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைவதற்கு முன் வெள்ளை வாத்து நீந்திய திருக்குளம் “வா..வா..” என்றழைத்தது.

காலை நனைத்துவிட்டு தீர்த்தத்தைப் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டோம். கோபுரவாசலை மிதித்ததுமே எட்டூருக்கு மணம் வீசும் பாழடைந்த சிவத்தலங்களுக்கே உரித்தான வௌவால் “வாசனை”. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் ஆனதாக மெய்க்காவல் சொன்னார். “வன்னி மரம் தல விருச்சமுங்க. அதானுங்க இங்கின விசேசம்.” என்று முன்னால் வந்தார். “குருக்கள் இருக்காருங்களா?” என்று கேட்ட என்னைத் தாண்டி என் பிள்ளைகளைப் பார்த்து “உள்ள போலாமுங்க” என்றார். கொடிமரம் தாண்டி சன்னிதி நந்தியருகில் சென்ற போது மீண்டும் நான் “குருக்கள்...” என்று இழுத்தவுடன் “ஐயிரு சம்சாரத்துக்கு காலு ஒடிஞ்சிபோச்சுங்க... ரெண்டு நாளு ஆவுது. நாளக்கி வருவாரு... நா சாமிய காமிக்கிறேனுங்க..” என்று கண்ணப்பன் போலக் கூப்பிட்டார். ”ஒரு நிமிசம்...” என்று வெளியே ஓடினார்.

நான்கைந்துக் கொத்து புன்னை இலைகளைக் கொண்டு வந்து கையில் திணித்தார். “இதை அப்படியே படியில போட்டுக் கும்பிடுங்க...” என்று கர்ப்பக்கிரஹ வாசலைக் காண்பித்தார். உள்ளே ஸ்வாமி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. “ஐயிறு ரெண்டு நாளா வரலைன்னு சொன்னீங்க.. விளக்கு எரியுது” என்று ஆச்சரியமாகக் கேட்டேன். “இங்கே இன்னொரு விசேசம் என்னான்னா.. வெளக்கு எரிஞ்சுகிட்டேயிருக்கனும்ங்க... அதான் நானு ஏத்தினேன். நீங்களும் இங்கின விளக்கு போட்டு சாமி கும்பிடுங்க...குடும்பத்துக்கு நல்லது...எல்லா தோசமும் போயிரும்...”. “கையில எண்ணெயெல்லாம் கொண்டு வரலையே” என்று கையை விரித்தவனை “அந்தால ஒரு மளிய கடை இருக்கு பாருங்க.. அங்கின விளக்குக்கு ஊத்தற எண்ணெ கிடைக்கும். நீங்க வாங்கியாரீங்களா? இல்ல காசைக் குடுங்க நா வாங்கியாரேன்...” என்பவரைப் பார்க்கும் போது சிவபெருமானே கைலாயத்திலிருந்து ஒரு கைடுவை அனுப்பி தரிசனம் தர தயாராகிவிட்டான் என்று எண்ணினேன்.

கையில் ரூபாய் தாளை அமுக்கி எண்ணெய் வாங்கிவரச் சொன்னேன். விரைந்தார். அவர் வாங்கி வரட்டும். இங்கே பாருங்கள். நாம் ஸ்வாமியை தரிசிப்போம். சுயம்பு மூர்த்தி. பானம் சற்றே வளைந்து காணப்படுகிறது. தண்ணீரில்லாத தாராபாத்திரமும் ருத்ராட்ச பந்தலும் பாதாளேஸ்வரரின் சிரசுக்கு மேலே அலங்கரிக்கிறது. ஹரி வராஹ அவதாரமெடுத்து சிவனின் அடியைக் காண முடியாமல் திரும்ப வெளிப்பட்ட துவாரம் இருக்குமிடமாகையால் அரி(விஷ்ணு)+துவார+மங்கலம்(ஊர்). பெரிய வெளிச்சமில்லாத கோவில். ஒற்றைத் திரியில் எரியும் இரு விளக்கொளியில் ஏகாந்தமான தரிசனம். கையில் வாங்கிக் கொண்டு சென்ற வேஷ்டியை கர்ப்பக்கிரஹ வாசலில் வைத்தேன். “விஸ்ணு வெளியிலெ வந்த துவாரம் லிங்கத்துக்கு பின்னாடி இருக்குதுங்க.. மூடி வச்சுருக்காங்க...” என்று ஸ்தலபுராணத்தின் ஹைலைட்டைச் சொல்லியபடியே கையில் ஷாஷே எண்ணெய் பாக்கெட்டோடு வந்தார் மெய்க்காவல்.

பக்கத்தில் தண்ணீர் குடித்த அகல் விளக்குகளை எடுத்து வடித்துவிட்டு விளக்குப் போட்டோம். தண்ணீரில் விளக்கெரித்தாராம் வள்ளலார்...” என்ற என் புராண வசனத்திற்கு முறைத்தார்கள். ”நமஸ்தே அஸ்து பகவன்....” சொல்லி வழிபட்டு அலங்காரவல்லி சன்னிதியிலும் விளக்கேறினோம். கர்ப்பக்கிரஹ வாசலிலிருந்த சிம்மத்தின் பிடரியெங்கும் குங்குமம். அங்கும் புன்னையார்ச்சனை செய்து வழிபடச்சொன்னார் மெய்க்காவல். நல்ல அகண்ட பிரகாரம். வலம் வந்தோம். சுத்தமாக இருந்தது. பிரகாரத்தில் தல விருட்சம் வன்னி செழித்து இருந்தது. ஒரு காலத்தில் வன்னி வனமாக இருந்த பிரதேசமாம். மேலும் சிவனின் பஞ்ச ஆரண்ய க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. திருக்கருகாவூர் முல்லை வனம். அவளிவநல்லூர் பாதிரி. அரதைப்பெரும்பாழி அதாவது இப்போது நீங்கள் தரிசித்துக்கொண்டிருக்கும் அரித்துவாரமங்கலம் வன்னி வனம், இரும்பூளை எனப்படும் ஆலங்குடி பூளை வனம், திருக்கொள்ளம்புதூர் வில்வ வனம். இந்த ஐந்து வன க்ஷேத்திரங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது சர்வ பாப விமோசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கொடிமரத்தருகில் நமஸ்கரித்தோம். “இங்கேயிருந்து கும்பகோணத்துக்கு மறுபடியும் அமராவதி பாலம் போய்தான் போகனுங்களா.. இல்லை வேற வழி இருக்கா?” என்று கேட்டேன். “கிழக்கால போய் இடதுபக்கம் போனீங்கன்னா வலங்கைமான் போயிறலாங்க.. அப்படியே போங்க.. வளி நல்லாருக்கும்...” என்றது மெய்க்காவல். அதுவரை பரப்பிரம்மமாக மடப்பள்ளியருகே திண்ணையில் படுத்திருந்தவர் எழுந்து ”சந்திரசேகரபுரம் போய்ப் போங்க.. போற வளியில இன்னும் சிவங்கோயிலு இருக்கு...” என்றார் என்னுடைய நீறுபூத்த நெற்றியைப் பார்த்து. “சந்திரசேகரபுரம் எப்படி....” என்று மெள்ள ஆரம்பித்ததும் கோவிலுக்கு எதிர்த்தார்ப்போல இருந்த குளத்துக்கு அப்பால் சின்ன சந்தைக் காண்பித்தார். ”ரோடு எப்படியிருக்கும்?” என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும் போது சின்ன யானை ஒன்று அந்த வழியாக வந்தது. அது......

{யாத்திரை தொடரும்...}

[தவில் வித்வான் ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் நியாபகம் வந்தது. அவரைத் தேடி இங்கே 2013ம் வருஷத்திய தியாகராஜ ஆராதனையில் நாகஸ்வரக் கச்சேரியோடுப் பிடித்தேன். http://www.youtube.com/watch?v=P5F828OxPwg இப்போது பார்த்த கோவிலுக்கு இதைப் பின்னணி இசையாக வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் படித்துப்பாருங்கள். சிவபெருமான் ரிஷபாரூடராகக் காட்சி தருவார்!]

மணிநூபுரதாரி ராஜகோபால...



தஞ்சையில் டின்னர் சாப்பிட்டதோடு கடைசியாக சென்ற வாரத்தில் யாத்திரைத் தொடரை முடித்திருந்தோம். இதோ சேப்பாயியைக் கிளப்பிவிட்டேன். ஓடிவந்து ஏறிக்கொள்ளுங்கள்.... அடையுமிடம் மன்னார்குடி.
தஞ்சையிலிருந்து வடுவூர் வழியாக மன்னைக்குச் செல்வது கண்ணை மூடிக்கொண்டு பழகின தெருவில் டயர் உருட்டுவது மாதிரி. பட்டுக்கோட்டை சாலை பிடித்து பொட்டு விளக்கில்லாமல் வழி போர்டு இல்லாமல் துக்கிரித்தனமான ரோடாக இருக்கும். இடதுபுறம் லாவகமாகத் திரும்பவேண்டும். ஒரத்தநாடு 18 கி.மீ என்றெல்லாம் போர்டு நட்டு வைத்திருப்பார்கள். ஆனால் மன்னார்குடிக்கு இதுதான் வழி என்று அம்புக்குறி போட்டு எழுதியிருக்கமாட்டார்கள். ஓரவஞ்சனை. இப்போது வண்டி ஓட்டுபவனுக்குப் பலநாள் பழக்கமாதலால் ஓடுவதும் அவனிச்சையாகத் திரும்பியது.

மாமிச மலைகளாக மோதிக்கொள்ளும் ரெஸ்ட்லிங் வீரர்கள் போல முக்கால்வாசி தூரம் இருபுறமும் பரட்டையாய் விரித்த கிளைமுடித் தலையை முட்டிக்கொண்டு ரோட்டுக்குக் கூரையாய் நிற்கும் அடி பெருத்த புளியமரங்கள். காரின் முக விளக்கை அணைத்துப் போட்டால் வெளிச்சம் முடியுமிடத்தில் தெரிவதுதான் இப்புவியின் அந்தம் போலவும் கீழே பாதையில் தொடரும் தார்ரோடே ஒட்டுமொத்தமாக அறுத்துக்கொண்டு அபாயகரமாக அவ்வெளிச்சம் எட்ட முடியாத இடத்தில் முடிந்ததுபோலவும் ஒரு அந்தகார இருட்டு. வழியில் எல்லா ஊரும் அடங்கிவிட்டது. தஞ்சை ஜில்லாவின் இரவு நேர கிராமங்களில் ட்யூப் மினுக்கும் சில ஓட்டு வீட்டு வைக்கல் போர் வாசலை சன் மற்றும் ஏர்டெல் டிடிஹெச்சுகளின் தட்டுகள் அலங்கரித்துக்கொண்டிருந்தன. முள்வேலி கம்பத்தில் கட்டிய மாடுகள் உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்தன.

உள்ளே தமிழ்மாலையோ மானாட மயிலாடவோ நடந்துகொண்டிருக்கலாம். கிராமங்களின் முடிவில் இருபுறமும் வயற்காடு. மீண்டும் இன்னொரு ஊர். இன்னொரு வயற்காடு. இந்த சீன் ரிப்பீட் ஆனது. வடுவூர் ஏரியில் பிரமாதமாக ஒன்றும் தண்ணீரில்லை. ராமர் கோவில் ராஜகோபுரம் தெரிந்தது. கம்பளி போர்த்திக்கொண்டு வயசாளிகள் இருவர் கடைத்தெரு ஏடியெம் வாசலில் பீடியும் கையுமாக சூடேற்றிக்கொண்டு அமர்ந்திருந்தனர். ”ராமா...ராமா..”ன்னு வடுவூராரை மனதில் இருத்தி ஆக்ஸிலை அழுத்தினேன். விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................ஏக் தம். மன்னார்குடியின் எல்லையை அடைந்தோம்.

காளவாய்க்கரை முருகன் கோயிலுக்குப் போகும் சந்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு சாந்தி தியேட்டர் பக்கம் வண்டி திரும்பியது. சாந்தியில் பிரியாணி போட்டிருந்தார்கள். எதிர்த்தார்போல மாரீஸ் டைலர்ஸ் கடையைக் காணோம். ராஜு டீக்கடையைக் காணோம். ரோட்டோர டிஃபன் கடை ஸ்டூல்களில் ஒன்றிரண்டு பேர் அமர்ந்து இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். தட்டிலிருந்து ஆவி பறந்தது. கோபாலன் கோபுரம் விண்ணை முட்டி நின்றுகொண்டிருந்தது. தேரடி. ஃபயர் சர்வீஸ். தாஸ் கடை. ஜெயலக்ஷ்மி விலாஸ் ஸ்கூல். சின்ன கான்மெண்ட். முக்கு திரும்பியதும் “ஹோ...”வெனப் பரந்திருந்த ஹரித்ராநதி தெரிந்தது. குளமும் கரையோர மக்களும் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஒலி எழுப்பி இம்சிக்காமல் புலியாய்ப் பாயும் சேப்பாயியைப் பூனையாய்ச் செலுத்தி நுழைந்தேன்.

ஜேயீ வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார். பாலுவுடனும் ஜேயீயுடனும் சுருக்கமாக ஊர்வம்பு பேசிவிட்டு படுத்ததும் இமையிரண்டும் இழுத்து படக்கென்று மூடிக்கொண்டன. மறுகணம் உள்ளம் விழித்துக்கொண்டது. தென், மேற்கு, வடக்கு, கிழக்கு என்று கரை கரையாக நண்பர்களும் தெரிந்தவர்களும் கடை கன்னிகளும் ஞாபகத்துக்கு வந்து கும்மாளமடித்தார்கள். எப்போது தூங்கிப்போனேன் என்று தெரியாமல் ”கோபாலனைப் பார்க்க போக வேண்டாமாடா?” என்று என் சிற்றன்னை எழுப்பும் போது மன்னையின் பொழுது விடிந்திருந்தது. வாசலில் மென் பனியில் வாண்டுகளும் வயதானவர்களுமாய் அரைக்கு வேஷ்டியுடனும் தோளுக்கு ஒரு முழம் மல்லிப்பூவுடனும் பஜனை கோஷ்டிச் சென்றது. அந்த நேரத்திலும் காசித்துண்டுடன் இருவரைக் குளம் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. குளக்கரைக் குளிரில் மேனி குடைக்கம்பியாய் ஜில்லிட்டது.

சுறுசுறுப்பாகக் கிளம்பிச் சென்ற முதல் இடம் “மணி நூபுரதாரி ராஜகோபால...” ஸ்வாமி கோயில். தங்கக் கலசங்கள் மின்னும் வானுயுர்ந்த கோபுரவாசலில் சிறிய திருவடி அனுமன் சன்னிதி. சுவாதீனமாகத் தலையைக் கலைத்துப் போட்ட காற்றை அனுபவித்துக்கொண்டே வாயுபுத்திரனை தரிசிக்க படியேறினோம். ஜெம்பகேசன் சார் இருந்தார். “வாப்பா...எப்படியிருக்கே... வாங்கோ டீச்சர்... சௌக்கியமா இருக்கேளா?” என்று நலம் விஜாரித்தார். “நன்னா தரிசனம் பண்ணிக்கோங்கோ.... ஐந்திலே ஒன்று பெற்றான்..ஐந்திலே ஒன்றைத் தாவி...” என்று கம்பனின் ஒத்தாசையோடு கோபுரவாசல் அனுமனை ஆராதித்தார். ஒரு வயதான தம்பதியினர் அந்த உயர்ந்த படியில் கவனமாக ஏறுவதற்காகப் “படி..படி...அப்பயும் படி படின்னேன்.. இப்பயும் படி படிங்கிறேன்...” என்றார். சன்னிதிக்குள் ஏறிய ஒரு தம்பதிக்குப் புரியவில்லை. “அவர் தமிழாசிரியரா இருந்தார்...அதான் சிலேடை...”ன்னு சொன்னேன். சிரித்தார்கள்.

செங்கமலம் முதுமலை புத்துணர்வு முகாமிற்கு சென்றிருக்கிறாளாம். காலுக்குக் கட்டும் சங்கிலி மட்டும் தூணோடு கட்டியிருக்க யானைவாசனை மிஸ்ஸிங். மணவாள மாமுனிகள் சன்னிதியும் நேரெதிரே அமைந்திருக்கும் ஆயிரங்கால் மண்டபமும் இன்னமும் “பாட்டி...” என்று கொஞ்சம் சத்தமாக முனகினால் கூட அவள் போய்ச்சேர்ந்த கைலாயத்திற்கே கேட்கும் படி திரும்பத் திரும்பக் கூப்பிடுகிறது. அனவரதமும் அரையிருட்டில் இருக்கும் இடம். கோவிலுக்கு சைட் அடிக்க மட்டும் வருபவர்களுக்கு இது புண்ணியமான ஸ்பாட். இங்கே “தம்பி.. படி பார்த்துச் சொல்லுடா..”ம்பா பாட்டி. எம்பளது வயசுல புறப்பாடு பார்க்கவும் ராப்பத்துக்கும் ஆளாய்ப் பறந்து ஓடிவருவாள். முதல்நாள் இரவு ”காலெல்லாம் வின்வின்னுன்னு கடுக்கறதுடா..” என்று சர்வரோக நிவாரணி, பெயின் பாமான அந்தக்கால தென்னமரக்குடி எண்ணெய் தேய்த்துவிட்டுக்கொண்டு மறுநாள் காலை சர்வீஸுக்குப் போய்ட்டு வந்த ஃபியட் கார் போலத் தயாராகிவிடுவாள்.

பெருமாள் சன்னிதி துவஜஸ்தம்பம் தாண்டி இடதுபுறம் தாயார் சன்னிதி போகும் வழியில் சென்றோம். “தாயார் தான் பெருமாள்ட்ட நமக்காக ரெக்கமண்ட் பண்ணுவா...நாமெல்லாம் தாய்க்குச் சேயில்லையா... அவளைத்தான் மொதல்ல தரிசனம் பண்ணனும்”ன்னு வேளுக்குடியார் உருகுவார். தாயார் சன்னிதிக்கு முன்னாலிருக்கும் வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் ஸேவை பார்த்து ரசித்திருக்கிறோம். தாயார் சன்னிதி துவஜஸ்தம்பத்திலிருந்து இடதுபுறமிருக்கும் பிரம்மாண்டமான துளசிமாடத்தை வலம் வந்து செம்பகலக்ஷ்மி தாயார் சன்னிதியை அடைகிறோம். ஏகாந்த தரிசனம். ஒரு குங்குமார்ச்சனை செய்தோம். உள் பிரகார பிரதக்ஷிணம் முடித்துக்கொண்டு ராஜகோபாலன் சன்னிதிக்கு முன்னால் இருக்கும் ஆஞ்சநேயர் தரிசனம். வாய் பேச முடியாத ஆனால் கண்களாலும் சமிக்ஞைகளாலும் பேசும் ஃப்ரெண்ட் பட்டர் இருந்தார். கையாலேயே குசலம் விஜாரித்துவிட்டு ரெண்டு பட்டை புளியோதரைப் பிரசாதம் தந்தருளினார். அந்தப் பிரதேசமே மடப்பள்ளியானது. அப்பவே கையை வைக்க புளியோதரை வாசனை அள்ளியது. கோபாலனைப் பார்த்துவிட்டு சாப்பிடலாமென்று அனுமனடியில் கிடந்த ப்ளாஸ்டிக் கவர் கேட்டு வாங்கி பத்திரமாகப் பிரசாதத்தை இட்டுக்கொண்டு ராஜகோபாலன் சன்னிதியில் இருந்தோம்.

பார்க்கப்பார்க்க பரவசமூட்டும் அழகு ராஜகோபாலனுடையது. ஏக வஸ்திரதாரி. இடுப்புக்கும் தலைக்கு முண்டாசுமாய் ஒரே வஸ்திரத்தில் பசுக்களை மேய்க்கும் கண்ணனாகத் திருக்கோலம். வேத்ரபாணியாக கையில் சாட்டையுடன் புன்னகை தவழ நிற்கிறார். பின்னால் மூலவர் பரவாசுதேவப்பெருமாள். ஸ்ரீதேவி பூமா தேவி நாச்சியார்களுடன் தங்கக் கவசத்தில் ஜொலித்தார். ஸ்ரீராம், பிரசன்னா, துவாரகா என்று தெரிந்தவர்கள் யாரும் சன்னிதியில் இல்லை. இருந்தவர் வடுவூர்க்காரராம். முன்னால் சொன்ன மூன்று பெயர்களுக்கு நல்ல மவுசு இருந்தது அவரது விஸ்தாரமான அர்ச்சனையில் தெரிந்தது.

கோபாலனை ஒரு பத்து நிமிஷங்களுக்கு அனைத்து திருநாமங்களையும் சொல்லி அர்ச்சித்தார். மனசு குளிர்ந்தது. “தக்ஷிணத் துவாரகை, பரவாசுதேவபுரிங்கிறது இந்த க்ஷேத்ரப் பேர்.. மூலவர் பரவாசுதேவப்பெருமாள், ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக ஏக வஸ்திரதாரியா, கையிலே சாட்டை, இடுப்பிலே ச்சாவிக்கொத்து, பசு மாடு கன்னுக்குட்டிகளோட உற்சவரா சேவை சாதிக்கிறார். பக்கத்துல சந்தான கோபாலன். கையில வாங்கி பிரார்த்தனை பண்ணிக்கிறது விசேஷம். சந்தான பாக்யம், தொழில் அபிவிருத்தி, ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்யம்னு இஷ்டகார்யங்கள் பூர்த்தியாறது...”ன்னு தீபாராதனை காண்பித்தார்.

”கரார விந்தேனே பதார விந்தம்... முகார விந்தேன வினிவே ஸ்யந்தம்... வடஸ்ய பத்ரஸ்ய புடேசயானம்.. பாலம் முகுந்தம் மனஸாஸ்மராமி..”ன்னு சந்தான கோபாலனைக் கையில் தூக்கிக் கொடுத்து ஆசீர்வதித்தார். அவரது கம்பீரமான ”கரார விந்தேனே...” சன்னிதியை விட்டு வெளியே வந்து உள்பிரகாரத்தில் வைஷ்ணவராக மதம் மாறிய சிவனின் மூத்த பிள்ளை தும்பிக்கையாழ்வாரைத் தரிசித்துப் பின் விஷ்ணு மாயா என்றழைக்கப்படும் துர்க்கையையும் கன்னத்தில் போட்டுக்கொண்டு வெளியே துவஜஸ்தம்பத்தருகே நமஸ்காரம் செய்கின்ற வரை கூடவே வந்தது. காதெல்லாம் ”கரார விந்தேனே...பதார விந்தம்..” திவ்யமாகக் கேட்டுக்கொண்டேயிருந்தது. தாமரைப் போல கையும் தாமரைப் போல கால்களும் கொண்டு முகமாகிய தாமரையில் உள்ள செம்பவள வாயினால் கால் கட்டை விரலைச் சுவைத்துக்கொண்டு ஆலிலை மேல் படுத்துக்கொண்டிருக்கும் குழந்தை கிருஷ்ணனை மனமார நினைத்துப் பூஜிக்கிறேன்.

பதினெட்டு நாள் பங்குனி உற்சவத்தில் பல்லக்கிலும் வாகனத்திலேயும் முழுசாகக் குடியிருப்பார். ஊரெங்கும் ஜிங்ஜிங்கென்று ஒய்யார விஸிட். வெண்ணெய்த்தாழியில் கையில் குடத்துடன் தவழ்ந்த திருக்கோலத்தில் மேனியெங்கும் ஊரார் அடித்த வெண்ணெய். குதிரை வாகனத்தில் செட்டித்தெருவில் வையாளி ஓடுவார். சூர்யப்ரபை, சந்திரப்ரபை, பஞ்சமுக ஆஞ்சநேயர், கண்டபேரண்ட பக்ஷி, புன்னைமர வாகனம், பந்தலடியில் குறவன் குறத்தி, கீழராஜவீதி மேலராஜவீதியெங்கும் நாகஸ்வர மேளக் கச்சேரி, கரகாட்டம், ஒயிலாட்டம் என்று மன்னார்குடியே திமிலோகப்படும். டிவிகள் சமுதாயத்தை சீரழிக்காத இரவுகள் அவை. வீதியெங்கும் கூட்டம்.

கோவிலை விட்டு வெளியே வந்தோம். அடுத்து ஆனந்த விநாயகர் கோயில். சாமி தியேட்டர் கலரெல்லாம் உறிந்து களையிழந்துவிட்டது. கல்யாணம் ஆன புதிதில் சங்கீதாவுடன் சாமியில் முதல்வன் படம் ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஏ ரோவில் உட்கார்ந்து பார்த்தோம். “இதான் உங்கூர்ல ஃபர்ஸ்ட் க்ளாஸா?” என்றார்கள் பட்டணத்து அம்மணி. “ஆமாம்..” என்றேன் இளித்துக்கொண்டே அசடாட்டம். உட்கார்ந்த இடத்திலிருந்து இரண்டு பிரி நார் எடுத்துக் கையில் கொடுத்துவிட்டு திரையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். சாமியைக் கடக்கும் போது ஒரு தசாப்தத்துக்கும் முன்னால் நடந்தவைகள் மன ஸ்கீரினில் ஓடியது.

ஆனந்த விநாயகர் கோயில் குளத்தை கால்வாசிக்கு வகுந்து மண் நிரப்பியிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு தண்ணி டேங்க் பக்கத்திலிருந்த கடையில் அர்ச்சனை வாங்கிக்கொண்டு திரும்பிய போது வாசலில் அமர்ந்திருந்த திருவாளர் பிச்சையிடம் ”ஏன் மண்ணு போட்ருக்காங்க?” ன்றதற்கு “காசு போடுவியா” பார்வை பார்த்தார். வினாயகர் கோயில் ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் கும்பாபிஷேகம் ஆகியிருந்தது. சுவற்றில் பெயிண்ட் வாசனை வந்தது. சன்னிதிக்குள் செகப்புக் கலர் கடப்பாக் கல் திருப்பணி வழக்கம் போல ஆர்.ஆர். ட்ராவல்ஸ் செய்திருந்தார்கள். நேஷனல் ஸ்கூல் யூனிஃபார்மில் கூடுதலாகக் கழுத்துக்கு டை சேர்ந்திருக்கிறது. நேஷனல் பையன் விபூதியை நெற்றிக்கு இட்டுக்கொண்டு கழுத்தில் டைக்கும் கொஞ்சம் பூசிக்கொண்டதில் டையின் நடைமுறை உபயோகம் தெரிந்தது. நிறைய பேர் ஆனந்தவிநாயகர் கோவிலில் அன்னதானம் செய்வதாகக் குருக்கள் சொன்னார். “உங்க அப்பா இங்க இருக்கறச்சே....” என்று சிற்றன்னையிடம் என் தாத்தா ஸ்ரீநிவாசனைப் பற்றிச் சிலாகித்தார். எனக்கு பக்கத்திலிருக்கும் நேஷனல் ஸ்கூல் ஜன்னலில் தெரியும் பதினோரம் வகுப்பும் என் சித்திக்கு அவளது அப்பா ஸ்ரீநிவாசனின் ஞாபகமும் ஃப்ளிம் சுருளில் அடித்த வெளிச்சம் போல கோவில் சுவற்றில் படமாய் ஓடியது.

புனரமைக்கப்பட்ட சுதர்ஸன் காஃபியைப் பார்த்துக்கொண்டே கம்மாளத்தெரு முக்கில் இருக்கும் காமாக்ஷியம்மன் கோவிலுக்குச் சென்று அங்கே தரிசனம். குருக்கள் நண்பர் ப்ரகாஷ் கோவிலில்லில்லை. உழவாரப் பணிக்காக ஏகாம்பரேஸ்வரர் சன்னிதியின் நந்திக்குப் பக்கத்தில் விளக்கமாற்றால் ஒரு பையன் பெருக்கிக்கொண்டிருந்தான். கண்ணப்பன் நந்தியின் மாஸ்டர் மேலே காலையே வைத்தான். இந்தப்பன் பக்தியில் விளக்கமாற்றால் நந்திக்கருகில் பெருக்கக்கூடாதா என்ன? ஒரு குழு பிரகாரத்தில் கெஜ்ரிவால் கட்சி ஆட்கள் போல கையில் விளக்கமாற்றோடு சுற்றிக்கொண்டிருந்தார்கள். வலம் வந்து கம்மாளத்தெரு வழியாக மேலராஜவீதியுள் நுழைந்தோம். ஜீவா பேக்கரி துரைக்கு காரிலிருந்தே ஒரு ஹாய் சொன்னேன். துரைக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ரெடிமேட்ஸ்ஸில் கணேஷ் இல்லை. குஞ்சான் செட்டியார் பலகாரக் கடை மூடியிருந்தது. சோழனிலும் வீராவிலும் சொற்ப கஸ்டமர்கள் உப்பு புளி டிடெர்ஜெண்ட் சோப்பு வியாபாரம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். மன்னை கடைத்தெருவில் சேப்பாயி அன்னநடை பயின்றாள்.

கோபாலன் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டே மீண்டும் ஹரித்ராநதி அடைந்தோம். தக்ஷிணத்துவாரகை என்று போற்றப்படுவதால் தெப்பக்குளத்தை யமுனா நதியாகப் பாவித்து ஹரித்ராநதி என்று பெயர் சூட்டிக்கொண்டது. செம்பகாரண்ய க்ஷேத்திரமாக இருந்த பொழுது இங்கே வசித்து வந்த கோபில கோப்பிரளயர் என்ற இருமுனிவர்கள் கண்ணனைக் காண துவாரகைக்குப் பயணப்பட்டனர். வழியில் நாரதர் தோன்றி க்ருஷ்ண பரமாத்மா பூவுலகை விட்டு வைகுண்டம் சென்றுவிட்டதாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து மூர்ச்சையுற்றனர். நாரதர் அவர்களை செம்பகாரண்ய க்ஷேத்திரத்திலிருக்கும் ஹரித்ராநதியில் நீராடி கண்ணனை நினைத்து தவமிருந்தால் காட்சியளிப்பார் என்று அருளினார். அப்படி அவர்கள் தவத்தில் மெச்சி வசுதேவராகவும் க்ருஷ்ணனாகவும் மற்றும் தனது அனைத்து லீலைகளை இக்குளத்தில் காண்பித்தார் என்பதுவும் புராண கதை. க்ருஷ்ணன் ஆடிய அந்தக் குளக்கரையில் இந்த ஆர்.வி.சுப்ரமணியனும் விளையாண்டிருக்கிறான் என்பது விசேட செய்தி...

மூன்று மணிக்கு மேலே மன்னையிலிருந்து கிளம்பிச் சென்று தரிசித்த மூன்று அற்புதமான சிவஸ்தலங்களைப் பற்றிய சிலிர்ப்பூட்டும் பதிவு தொடரும்... நரசிம்மர் சிற்பப் படம் ஒன்றை சில நாட்கள் முன்னர் டைம்லயனில் பகிர்ந்திருந்தேன்... அந்தக் கோயில் பற்றியும் அடுத்த பதிவில்.....

(யாத்திரை தொடரும்....)

காட்டுப்பள்ளியுறை கனலே போற்றி



உச்சிகாலவேளையில் திருக்கோவில்கள் அனைத்தும் நடை சார்த்தியிருப்பார்கள் என்று கோவில் கோவிலாகச் சுற்றிய என்னுடைய சேப்பாயிக்குக் கூட தெரியும். ஆகையால் பிள்ளையார்பட்டியிலிருந்து நேரே தஞ்சைத் தரணியிற்கு தானாகவே தடம் பிடித்தாள் சேப்பாயி. வழியில் அகஸ்மாத்தாக கைப்பட்டதில் பவர் விண்டோ லேசாகத் திறந்துகொள்ள மன்மதன் தோட்டத்து முந்திரி வாசம் காரோடு சேர்த்து ஆளைத் தூக்கியது. புதுக்கோட்டை தஞ்சாவூர் வழித்தடத்தில் ஆதனக்கோட்டை மிந்திரி(என் பாட்டியின் பாஷை) ரொம்ப ஃபேமஸ். வழியோரங்களில் மரத்தடியில் கூரை போட்டுக் குடும்பத்துடன் வறுத்துக்கொண்டிருப்பார்கள். கால் கிலோ, அரைக் கிலோ பாக்கெட்டுகளை பார்வையாக அடுக்கியிருப்பார்கள். இறங்கி விலைபேசுபவர்களிடம் ஒன்றிரண்டு கால் அரை கொட்டைகளை கையில் திணித்து தின்று பார்த்துக் கமிட் ஆகச் சொல்வார்கள். கீழ் வருவது ஒரு ஆப்த நண்பனைப் பற்றிய இரு பாராக்கள். கோவிலை மட்டும் படிப்பதாக உத்தேசித்திருந்தால் நான்காவது பாராவிற்கு கண்களையும் மௌஸையும் உருட்டிவிடவும். நட்பையும் படிப்போம் என்றால் தொடர்க.

அழகியநாச்சியம்மன் பிரசாதம் இன்னமும் வயிற்றில் நிறைந்திருக்க வறுத்த முந்திரிக்கொட்டை அனாவசியம் என்று ஆக்ஸிலை அழுத்தினேன். கந்தர்வக்கோட்டை பிபிஸியெல்லில் சேப்பாயியின் வயிற்றுக்கு நிரப்பிக்கொண்டு தஞ்சையில் மூன்றாண்டுகள் இளங்கலை ஒன்றாகப் படித்த மணிவண்ணனை பார்த்துவிட்டு திருக்கோவில் உலாவைத் தொடரலாம் என்று எண்ணினேன். “மாப்ள.. புது பஸ்டாண்ட் பக்கத்துல வந்துடு. நா வண்டியில வர்றேன். குறுக்கால பஸ்ஸ்டாண்ட் உள்ளாற பூந்து வீட்டுக்குப் போயிடலாம். அப்பா கூட ஒன்னிய பார்க்கணும்னு சொன்னாங்க..” படபடவென்று பேசி முடித்தான். புது பஸ்ஸ்டாண்ட் அருகில் ஆரஞ்சு வாங்கிக்கொண்டேன். “உல்லெல்ல்லோ உல்லேலோ” என்று கிங்ஃபிஷர் விளம்பர மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர் போல கண்ணுக்கு ரேபானுடன் இருசக்கரத்தில் வந்து நின்றான். மணியின் கன்னத்தைத் தொட்டு குழந்தைக்குத் திருஷ்டிப் பொட்டு வைக்கலாம். அப்படியொரு கவர்ந்திழுக்கும் காந்தக் கலர். ஒரு மணிநேரம் பல சங்கதிகள் பேசினோம். பல நண்பர்களின் நலம் விசாரித்தோம். “எப்பவுமே இங்க தங்கற மாதிரி வரமாட்டியே!” என்று திட்டிக்கொண்டே வழியனுப்பி வைத்தான்.

ஆப்டோமெட்ரிஸ்ட்டாக ஷங்கர நேத்ராலயாவிலும் மஸ்கட்டிலும் பல வருடங்கள் உழைத்துக் கொட்டிவிட்டு போன வருடத்தில் தஞ்சையில் கண்ணாடிக் கடை விரித்தான். நாளைக்கு பூஜை போட்டு திறக்கவேண்டிய கடையை இன்றே திறக்க வைத்து சங்கீதா கையால் முதல் போணி செய்துவைத்தது ஞாபகம் வந்தது. “மாப்ள.. நல்லா போவுதுல்ல...” என்ற தயக்கமானக் கேள்விக்குக் கையைப் பிடித்துக்கொண்டு “நல்ல ராசியான கை... பிச்சுக்கிட்டுப் போவுது வியாபாரம்” என்று வாயெல்லாம் பல்லாக மகிழ்ந்தான். பரமதிருப்தி. பல்லாண்டுகளாகத் தொடர்சங்கிலியாய்த் தொடரும் நட்பு.

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் இருபுறமும் மரங்களைப் பார்த்துக்கொண்டே பயணத்தீர்களேயானால் இடையிடையே திரும்பும் இடமெல்லாம் ராஜகோபுரம் துருத்திக்கொண்டு தெரியும். பிரம்மசிரகண்டீஸ்வரர் அருள்பாலிக்கும் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் திருவையாறு சாலையிலேயே வலது புறம் ஒளிந்திருக்கும். அக்கோயிலின் இடது புறம் திருப்பூந்துருத்தி சாலையில் வண்டியைச் செலுத்தினேன். அங்கே விடுபட்டுப்போன இரண்டு பாடல் பெற்ற ஸ்தலங்களை தரிசிப்பதாக உத்தேசம். மாலை வெயில் பொன்னிறத்தில் ஒளி வீசி அப்பகுதியெங்கும் தகதக தங்கமாக்கியிருந்தது. பச்சை வயல்களுக்கு நடுவில் ஓடிய சிறு வாய்க்காலை பசும்பொன்னை உருக்கி ஓடவிட்ட பொன் வாய்க்காலாக ஜெகஜோதியாய் மாற்றியிருந்தது. சட்டென்று இறங்கி பச்சையை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டேன்.

திருப்பூந்துருத்தி பார்க்காதவர்கள் ஒருதடவை புஷ்பவனநாதரை தரித்துவிட்டு மேலே வாருங்கள். கூடு விட்டு கூடு பாயும் மணி என்கிற பாத்திரம் வரும் பாலகுமாரனின் திருப்பூந்துருத்தி நாவல் நினைவுக்கு வந்தது. அப்படியே விரைவாக அழுத்திக்கொண்டே சென்றுவிட்டீர்கள் என்றால் திருஆலம்பொழில் என்கிற நாவுக்கரசர் பாடல் பெற்ற திருத்தலத்தை தவறவிட்டுவிடுவீர்கள். திருவாலம்பொழில் அடைந்து ஊரின் எல்லையில் சாலை திரும்பும் வளைவில் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளடங்கி கோயில் இருக்கிறது. எதிர்த்தார்போல ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியவுடன் மேலுக்குச் சட்டையில்லாத ஒருவர் கோயிலினுள் ஓடினார். கோயில் கோபுரம் வேலை நடந்துகொண்டிருக்கிறது. சாரம் கட்டியிருந்தார்கள். நேரே மூலவர் ஆத்மநாதேஸ்வரர் காட்சி தருகிறார். அதற்கு முன்னர் இடதுபுறம் ஞானாம்பிகை சன்னிதி இருக்கிறது. புத்தி ஸ்திரமாகுமாம். கதவு திறந்து “சாமிய பார்த்துக்கோங்க..”ன்னு கற்பூரம் காண்பித்த மெய்க்காவல் சொன்னார். “குருக்கள் வருவாருங்களா?” என்று கேட்டதற்கு “இனிமேதானுங்க வருவாரு..” என்று அசிரத்தையாகப் பதில் சொல்லிவிட்டு அம்பாள் சன்னிதிக்கு துரிதகதியில் ஓடினார். தூண்களில் “சிவ சிவ”. வழக்கம்போல சுவர்களில் சில இடங்களில் எண்ணெய்க் கிறுக்கல். பரீட்சை நம்பர் எழுதி ”பாஸ் போடு” என்று இறைவனுக்கு கட்டளைத் தூது விட்டிருந்தார்கள்.

தரிசித்துவிட்டு கோஷ்டத்திலிருக்கும் விஷ்ணு துர்க்கையையும் மேதா தெக்ஷிணாமூர்த்தியையும் பிரகாரத்தில் தரிசித்தோம். புராணம் சொல்வதற்கு ஆளில்லை. அஷ்டவசுக்களால் வழிபடப்பெற்றது என்பது மட்டும் தெரிந்தது. வசுக்களின் தலைவன் ப்ரபாசனும் சன் டிவி மஹாபாரத ஆறடி உசர ஓஏகே சுந்தர பீஷ்மரும் ஞாபகத்துக்கு வந்தார்கள். நமஸ்கரித்து வெளியே வந்து வந்த வழியே திருவையாற்றுக்குத் திரும்பிவிடலாம் என்று நினைக்கும் போது இன்னொரு பாடல்பெற்ற ஸ்தலம் நினைவுக்கு வந்தது. காட்டுப்பள்ளியுறை கனலே போற்றி!

திருக்காட்டுப்பள்ளி இரண்டு இருக்கிறது. நாகப்பட்டிணம் மார்க்கத்தில் இருப்பது கீழைத் திருக்காட்டுப்பள்ளி. இது மேலை திருக்காட்டுப்பள்ளி. திருக்காட்டுப்பள்ளியில் டீக்கடை பழக்கடை இருக்கும் மெயின்ரோடிலிருந்து வலதுபுறம் திரும்பவேண்டும். ஆறடி ரோட்டில் மூன்றடிக்கு பாரிகேட் வைத்து தொண்டு புரிந்திருந்தார்கள். நேரே ஐந்துநிலை அக்னீஸ்வரஸ்வாமி ராஜகோபுரம் தெரிந்தது. அழகம்மை சமேத தீயாடியப்பர். இருசக்கர வாகனமேறிப் புறப்பட்ட சிவாச்சாரியார் சேப்பாயியைப் பார்த்ததும் வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு கோயிலுக்குள் வந்தார்.

நேரே மூலவர் சன்னிதி. நான்கு படி இறங்கி கர்ப்பக்கிரஹத்திற்குள் சென்று தீபாராதனை காண்பித்தார். தீபாராதனை தட்டோடு என் நெஞ்சைப் பார்த்து ஸ்தல புராணம் சொன்னார். “இங்க இருக்கிறது விசேஷமான மூர்த்தி. ஸ்வயம்புத் திருமேனி. அக்னி வந்து பூஜை பண்ணினான். இந்த க்ஷேத்ரத்துக்கே அக்னீஸ்வரம்னு பேரு. சூரியனோட ஒளி லிங்கத்துமேல படும். தெனமும். அதனால . பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடி கூட சூரியன் நேரே ஸ்வாமி மேலே படறா மாதிரி இருந்தது. இப்போ எதிர்த்தாப்ல நிறையா பெரிய பில்டிங் கட்டினதால சூரியக்கதிர் பகவான் மேலே விழல்லே. கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே காட்டுப்பள்ளியுள்ளான் கழல் சேர்மினேன்னு நாவுக்கரசர் தேவாரத்துல பாடறார். சம்பந்தரும் காட்டுப்பள்ளியுறையானை துதித்தால் அல்லலில்லைங்கிறார். பிரகாரத்துல இருக்கிற யோக குரு ரொம்ப விசேஷமானவர். குரக்காசனத்துல உட்கார்ந்திருக்கார். நவக்கிரஹங்களெல்லாம் சூரியனோட தெசையைப் பார்த்துண்டே இருக்கா.”

வலம் வரும்போது யோக குரு தரிசனம். கையில் சின் முத்திரையோடு ஒரு பக்கமாக சிரசை ஒருக்களித்து நளினமாக தக்கோல தக்ஷிணாமூர்த்திபோல காட்சியளிக்கிறார். பார்த்ததும் மெய்மறந்து போய்விடுவீர்கள். பக்கத்தில் சனகாதி முனிவர்களில்லாமல் ஏகாந்தமாக நமக்கு அருள்பாலிக்கிறார். பிரகார மண்டபத்தில் சுதைச்சிற்பமாகவும் சமீபத்தில் வடித்திருக்கிறார்கள். ஸ்தபதி ஜமாய்த்திருக்கிறார். சிரசை மட்டும் கொஞ்சம் சாய்க்காமல் விட்டுவிட்டார். பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருக்கிறது. குரு ரசிகர்கள் கட்டாயம் தரிசிக்கவேண்டிய தலம். நெற்றி நிறைய விபூதியுடன் வந்து வண்டியை திருவையாற்றுக்கு கிளப்பினேன்.

பஞ்சநதீஸ்வரர் கோயிலுக்குள் படி தாண்டி உள்ளே நுழையும் போது மணி ஏழரைக்கு மேலிருக்கும். கோயில் அமைதியாக இருந்தது. மயில் மண்டபமும் அதற்கு நேரே சுப்ரமண்யரும் தரிசனம் தந்தார்கள். ம். நீங்கள் நினைப்பது சரி. தன்னாலேயே தி.ஜாவும் மோகமுள்ளும் தியாகைய்யரும் தூணுக்குத் தூண் வந்து மறைந்தார்கள். பஞ்சநதீஸ்வரர் தரிசனம் மனசுக்கு இதமாக இருந்தது. பாணம் லிங்க வடிவில் இல்லாமல் பறவையின் சிறகு விரிந்தது போலிருந்தது. “ஸ்வாமி மணல் லிங்கம். ஸ்வயம்பு. தீண்டாத் திருமேனி. அபிஷேகம் ஆவுடைக்கு மட்டும்தான். நாங்களே தொடமாட்டோம். கோவிலை விட்டு வெளிலே போய்ட்டா திரும்ப கர்ப்பஹரத்துக்கு வரணும்னா குளிச்சுட்டுதான் வரணும். அப்புறம்தான் பாணத்தைத் தொடலாம்..” என்று ஆரத்தி காட்டினார். நிறைவான தரிசனம். ஸ்வாமியின் கருவறைக்குப் பின்னால் திருச்சுற்று வரமுடியாது. மணல் வடிவாக அங்கிருந்துதான் எழுந்தருளினார் என்பது ஐதீகம். நமது கால்தடம் அங்கே படக்கூடாது என்பதற்காக வழியை மறித்திருந்தார்கள். அரைச்சுற்றுக்குப் பிறகு ஸ்வாமி சன்னிதியிலிருந்து அம்பாள் கோயிலுக்குச் சென்றோம்.

தர்மசம்வர்த்தினி அம்மன். “உங்க தாத்தா இங்கேதான் படிச்சார்...” என்று என் பசங்களிடம் சொன்னேன். ”இங்கேயேவா...” என்று கோயிலைக் காட்டினாள் சின்னவள். திமிர் ஜாஸ்தி. ”இல்லே.. திருவையாத்திலே..” என்று சிரித்தேன். அம்மன் கோயிலுக்குள் நுழைவதற்கும் கரெண்ட் கட் ஆவதற்கும் சரியாக இருந்தது. நேரே நின்ற திருக்கோலத்தில் குத்துவிளக்கின் ஒளியில் அற்புதமான தரிசனம். மனசுக்கு இதமாக இருந்தது. “சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த...” என்று மனசுக்குள் ஸ்லோகம் ஓடியது. ”டெய்லி ஆறதா?” என்று குருக்களிடம் கேட்டேன். “இன்னிக்கி என்னமோ இப்படி படுத்தறது. ஜெனரேட்டர் போட்டுடுவா..த்தோ வந்துடும்...”ன்னார். தரிசனம் முடித்துத் திரும்பும்போது மின்சாரம் உடம்புக்கும் கோயிலுக்கும் சேர்த்துக் கிடைத்தது.

தொட்டடுத்து வரும் திருப்பழனம் இன்னும் நான் தரிசிக்காத க்ஷேத்திரம். நேரம் ஆகிவிட்டபடியால் தஞ்சைக்கு விரைந்தோம். பரிசுத்தத்தில் டின்னர். ரோட்டரி சங்க மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. கசகசவென்று வெளியில் கூட்டம். ரெஸ்டாரெண்ட் ஆளரவம் இல்லாமல் சர்வர்களும் சூப்பர்வைசர்களும் கதை பேசிக்கொண்டு ரெஸ்ட் எடுக்கும் இடமாக இருந்தது. அவர்களின் மாநாட்டைக் கலைத்து ஆர்டர் செய்தோம். சரவணபவன் ரேட். இராத்தங்கல் மன்னார்குடியில். மனசு ஆனந்தத்தில் றெக்கைக் கட்டி பறக்க ஆரம்பித்திருந்தது. அடுத்து மன்னார்குடியில் சந்திக்கிறேன்...

[யாத்திரை தொடரும்....]

ஒள்நிறத்தஒளியார்

வயிறு முட்ட பிரசாதங்களுடன் மனசு முட்ட பக்தியுடனும் பொன்னமராவதியிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு கண் அசராமல் காரின் பின்னால் ரோடு முட்ட புழுதி பறக்க விரைந்தோம். மார்கழிக் குளிரை அடித்து விரட்டும் வெய்யில் பலமாக அடித்தது. ”கார் ஜன்னலை உசர்த்தி ஏசி போட்டுக்கோ...” என்றது ஊசியாய்க் குத்தியது ஊமை வெய்யில்.

பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி குறுக்கு ரோட்டில் ஏறாமல் நேரே ஒரு பிடிபிடித்து பைபாஸ் வந்து பிள்ளையார்பட்டிக்குச் செல்வோர் கண்ணில் நிச்சயம் அந்த பெரிய கோயில் தட்டுப்படாமல் இருக்கவே இருக்காது. வால்மீகி கடுந்தவமியற்றிய போது அவரைச் சுற்றி புற்று கட்டியது. அந்தப் புற்றிலிருந்து சிவன் வெளிப்பட்டு புற்றீசராகக் காட்சியளித்தாராம். அதனால் புத்தூர் என்று வழங்கப்பட்டு மரியாதை அடைமொழியாக திரு சேர்க்கப்பட்டு திருப்புத்தூரானதாம். அதுவே நம்மைப் போன்றோரின் வாயில் சிக்கி புவின் காலை ஒடித்துத் திருப்பத்தூர் ஆன கதை.

”நம்பியாண்டார் நம்பி வாயில்” என்று ரோடோரத்திலிருந்தே தெரியும்வண்ணம் கோபுரவாசலில் சின்ன மண்டபம் கட்டி அதன் உள் நெற்றியில் பட்டையடித்தது போல வெள்ளையில் எழுதி வைத்திருப்பார்கள். பிள்ளையார்பட்டி செல்லும் திசையிலேயே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வண்டியை இடதோரத்தில் நிறுத்திவிட்டு திருப்பத்தில் காட்டு வேகத்தில் வரும் பேருந்தில் அடிபடாமல் தப்பித்து ”ஈஸ்வரோ ரக்ஷிது” என்று கோவிலுக்குள் நுழைந்துவிடுங்கள்.

கொடிமரத்திலிருந்து நேரே மூலவர் திருத்தளிநாதர் தரிசனம் தருவார். மூலவர் சன்னிதி முகப்பில் பொல்லாப்பிள்ளையார். பொல்லாத பிள்ளையாரா? என்று லிட்டரலாக அர்த்தம் கேட்டுவிடாதீர்கள். அவர் பொள்ளாபிள்ளையார். பொள்ளா என்றால் உளிபடாமல் என்று அர்த்தம். உளிபடாமல் சுயம்புவான பிள்ளையார் பொள்ளாப்பிள்ளையார். திரிந்து பொல்லாப்பிள்ளையாராகிவிட்டார். நம்பியைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். தேவாரங்களைத் தொகுத்தவர் என்று சொல்வர். பொல்லாப்பிள்ளையாருக்கும் திருநாரையூர் நம்பிக்கும் உள்ள தொடர்பு தெரிந்தவர்கள் அடுத்த பாராவை ஸ்கிப்பவும்.

தனது தந்தை தினமும் பிள்ளையாருக்கும் நிவேதனம் செய்து வருவதை பார்த்துக்கொண்டிருந்தான் சிறுவன் நம்பி. ஒரு நாள் தந்தை தனக்குப் பதிலாக “நம்பி! நீ சென்று பொல்லாப்பிள்ளையாருக்கு நெய்வேத்யம் செய்துவிட்டு வா!” என்று சொன்னார். பக்தி ஆர்வம் தலைதூக்க நிவேதனத்துடன் கோவிலுக்கு ஓடினான் நம்பி. நிவேதனத்தை வைத்துவிட்டு பிள்ளையாரைச் சாப்பிட அழைத்தான். உஹூம். பிள்ளையார் மசிவதாக இல்லை. நாம் நிவேதனம் கொடுத்தால் சாப்பிடமாட்டேன் என்கிறார் பிள்ளையார் என்று வெறுத்துப்போன நம்பி பக்கத்திலிருந்து கருங்கல் சுவரில் முட்டிக்கொண்டு உயிர்த்தியாகம் செய்யத் துணிந்தான். பிள்ளையார் பெரியமனது பண்ணி காட்சியளித்து அமுதுண்டார் என்பது புராணக்கதை.

திருவலச்சுற்றிலிருக்கும் யோக நிலையில் நாய் வாகனமில்லாமல் இருக்கும் யோக பைரவர் சன்னிதி தனிச்சிறப்பு வாய்ந்தது. சகல தோஷநிவர்த்தியாகிறது என்று வேஷ்டியின் மேல் மஞ்சள் கலர் “சிவ சிவ” துண்டு சுற்றிய மூலவர் சன்னிதி குருக்கள் அருட்பெருமைகளை எடுத்துச் சொன்னார். வால்மீகி தவமியிற்றிய இடமும் புற்றீசரும் பிரதக்ஷினம் வரும் பாதையில் தரிசனம் தருகிறார்கள். லக்ஷ்மி காண கௌரிதாண்டவமாடிய நடராஜப்பெருமானின் திருச்சபையில் ஐந்து கற்தூண்களும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் போல இசைத்தூணாக இருப்பதை ரசித்துக்கொண்டே தரிசனம் முடிந்து கொடிமரத்தருகில் நமஸ்கரித்து வெளியே வந்தோம்.

தாகமடித்தது. வாசல் பெட்டிக்கடையில் கிங் ஃபிஷர் தண்ணீர் ரெண்டு லிட்டர் பெட் பாட்டில் கேட்டேன். நெற்றி நிறைய பட்டையுடன் விபூதிபூஷணமாகக் காட்சியளித்த என்னைப் பார்த்து “முப்பத்தஞ்சு ரூவா குடுங்க..” என்றார். கிங் ஃபிஷரை ஒரு முறை கையில் வைத்துச் சுழற்றினேன். எம்மார்ப்பி இருவத்தெட்டு ரூபாய் என்று தெளிவாக அச்சடித்திருந்தது. “இருவத்தெட்டுதான் போட்ருக்கு” என்று கேட்ட என்னை ஜென்ம எனிமியாகப் பார்த்தார். ”சரி.. முப்பது ரூவா குடுங்க..” என்று ஐந்து ரூபாய்க்கு டிஸ்கௌண்ட் அசால்ட்டாகக் கொடுத்தார். ஈஸ்வரன் கோயில் வாசலிலேயே அநியாயம் நடந்தாலும் தொண்டை வறண்டதால் முப்பதைக் கொடுத்து “நீவிர் வாழ்க!” என்று வாழ்த்திவிட்டு கணபதியைக் காணக் கிளம்பினேன்.

இவ்வியாசத்தை இப்பொழுது எழுதும் போது திருத்தளிநாதரைப் பற்றிய தேவாரத் தேடலில் கிடைத்த கீழ் கண்ட பாடல் அப்பெட்டிக்கடைக்காரரை மீண்டும் நினைவில் கொண்டு வந்து நிறுத்தி “திருப்புத்துத்தூரையும் திருத்தளிநாதரையும் பத்தி திருஞானசம்பந்தர் எழுதியப் பாட்டைப் படிச்சுப் பாருய்யா...” என்று காதருகே ஃபுல் ஆம்ப்ளிஃபிகேஷனில் ஸ்பீக்கர் போட்டு அவரிடம் கேட்கவேண்டும் போல் இருந்தது. பாடலைத் தருகிறேன். அடுத்தமுறை நீங்கள் சென்றால் அவரிடம் கேளுங்கள். திருத்தளிநாதனுக்கும் கேட்கும்.

வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒண்ணி றத்த வொளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.

வெண்மையான விடையைக் கொடியாகக் கொண்டவர், வெள்ளி போன்ற நிறமுடைய மணம் பரப்பும் மலர்களை அடித்து இழுத்துக்கொண்டு வரும் தெளிந்த நீர் பாயும் திருப்புத்தூரில் வாழும் ஒளிநிறைந்தஒளியான இறைவன். (பேரொளியாய்த் திகழ்பவர்)

கற்பக விநாயகர் ஆர்ச்சைத் தாண்டி முன் வீல் இரண்டும் கோவிலைப் பார்க்க சரசரக்க ஏறிய உடனேயே தெரிந்துவிட்டது விநாயகர் மூச்சுவிடக்கூட முடியாமல் முழு பிஸியாக இருக்கிறார் என்று. முதுகு கூன் விழுந்து கேள்விக்குறியாகி என்னுடன் வந்த என் சிற்றன்னையை நினைத்துக் கவலைப்பட்டேன். நெரிசல் மிகுந்த கோவில்களுக்கே உரித்தானதான வழியெங்கும் காணப்படும் எச்சில் பிரசாதத் தொண்ணைகளும், பிளாஸ்டிக் பேப்பர்கள், காய்ந்த மாலைகளும், தேங்காயிலிருந்து உரிக்கப்பட்ட நாரும் கால்களுக்கு மெத்தையிட்டது. கம்பி போட்ட க்யூ வரிசைக் கட்டி அன்னதானம் வழங்குமிடத்தருகே வண்டியைப் பார்க் செய்துவிட்டு வடக்கு கோபுரவாசல் அருகே விக்னத்தைத் தீரப்பா விநாயகா என்று உட்கார்ந்துவிட்டோம்.

சிறிதுநேரம் கழித்துக் கிடைத்த பேருதவியால் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினால் கற்பக விநாயகருடைய காலெட்டும் தூரத்தில் உட்காரவைத்து தரிசனம் பண்ணி வைத்தார்கள். திருக்கயிலாயத்திலிருந்து மூஞ்சுரு ஃப்ளைட் பிடித்து வந்திறங்கியவர் போல ஃப்ரெஷ்ஷாக இருந்தார். காதும் தொந்தியும் வெள்ளியில் பளபளத்தது. யாரோ கொடுத்த கேரி பேக் தேங்காய் மூடிக்கு அவசரார்ச்சனை செய்து ஒதுக்கி வைத்தார்கள். தீபாராதனையில் ஜொலித்தார். ஐந்து நிமிடங்கள் அதிஅற்புத தரிசனம்.

”விநாயகருக்கான ஆறுபடை வீட்டுல இது அஞ்சாவது படை வீடுங்க” என்று விநாயகரைப் பார்க்க உதவிய அழகர் சொன்னார். சன்னிதியில் போட்ட மாலையைக் கழற்றி விட்டு மருதீசரை தரிசனம் செய்துகொண்டு வெளியே வந்தபோது மனது நிறைந்திருந்தது. ஒரு பொடியன் சதுர்தேங்காயை தொட்டிக்குள் அடித்து திரும்பவும் பொருக்கி திரும்பவும் உடைத்து திரும்பவும் பொருக்கி திரும்பவும் உடைத்து ப்ராக்டீஸ் செய்துகொண்டிருந்தான்.

ஒரு டீ குடிக்கலாம் என்று ஆர்ச் தாண்டி வண்டியை நிறுத்தினேன். ஊனமுற்றோருக்கும் திருநங்கைகளுக்கும் பாதி விலையில் உணவு வழங்கப்படும் என்று போர்டு போட்டிருந்தார்கள். “ஏன்?” என்று கேட்டால் இளக்காரமாக பார்ப்பார்களோ என்றஞ்சி என்னவாக இருக்கும் என்று காரணத்தை ஆராய்ந்து கொண்டே காஃபி என்று கொடுத்த ஒரு கப் கழனியை உறிஞ்சிக் குடித்துவிட்டு வண்டியை எடுத்தேன்.

வயிரவன் பட்டி பைரவரை பார்ப்பதற்குள் உச்சிகாலம் முடிந்து கோயில் நடை சார்த்திவிட்டிருந்தார்கள். புதுக்கோட்டை ஏரியாவிலிருந்து விலகி தஞ்சை ஜில்லாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தேன். இன்னென்ன கோயிலுக்கெல்லாம் செல்லலாம் என்று ஒரு பட்டியல் போட்டிருந்தேன். ஐஃபோனில் அதையெடுத்து ஒரு முறை சரிபார்த்துக்கொண்டிருந்தேன். மணிக்கட்டு ஃபாஸ்ட்ராக் மெதுவாகப் போனாலே சாயரட்சை நடைதிறக்கும் கோயில்களுக்கு போகலாம் என்று அறிவுறுத்தியது.

மானிடப் பதரான எனது சித்தம் இப்படியிருந்தால் சிவன் போக்கு வேறு மாதிரியாக இருந்தது. நானொரு குரு ரசிகன். ஆகையினாலேயே திருவிளநகர் வீணா தெக்ஷிணாமூர்த்தி எனது வால் ஃபோட்டாவாக பொருத்தி எப்போதும் அழகு பார்க்கிறேன். தேவாதிதேவர்களே அதிசயிக்கும் கோலத்தில் அமர்ந்திருந்த தெக்ஷிணாமூர்த்தியைப் பற்றி எனது அடுத்த ஸ்டேட்டஸ்ஸில்...

[யாத்திரை தொடரும்.....]

கோவலன் கண்ணகி இளைப்பாறிய கோயில்

மருதநிலக்காரனான எனக்கு சோழ தேசத்துக்குச் செல்வதென்றால் மதகு மேலிருந்து சுழித்து ஓடும் ஆற்றுக்குள் தலைகுப்புறப் பாயும் சிறுவர்கள்(ட்ராயரோடுதான்!) போலக் கொள்ளைப் பிரியம். எனக்குள் இருக்கின்ற பக்கா கிராமத்தான் சடாரென்று முழித்துக்கொண்டு தையத்தக்காவென்று ஆனந்தக் கூத்தாடுவான். இப்படித்தான் ஒரு மூன்று நாள் முட்ட முட்ட இயற்கையின் இன்பத்தை நுகர்ந்தேன். வழியெங்கும் பச்சை வயல்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எல்லாப் பங்குகளிலும் நட்டிருந்தார்கள். பச்சைப் பாவடைக்குப் பட்டு பார்டர் போல அறுக்கக் காத்திருக்கும் சில நெற்பயிர்கள் நிறைந்த பங்குகள். சுவாசத்தை நிரப்பி மயக்கும் மண் வாசம். மனசுக்கு ஊட்டி கொடைக்கானலிலெல்லாம் கிடைக்காத மட்டற்ற மகிழ்ச்சி.

சென்னையிலிருந்து ஆங்காங்கே வழிமறித்த டோல் கேட்டிற்கெல்லாம் இருநூற்று சொச்ச ரூபாய் கப்பம் கட்டி சேப்பாயி ஊருக்குள் ப்ரவேசிக்கும் போது மார்கழி மாதப் பனியில் புதுக்கோட்டை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தது. நண்பர்கள் துணையோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலையோர ரூமில் லாரி பஸ் சத்தங்களுக்கிடையே ரோட்டோர பைரவரின் ”ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்ற எல்லை தாண்டும் விசாரிப்புகளோடு ஐந்து மணி நேரம் கட்டையைச் சாய்த்து ஓய்வு.

உஷத் காலத்தில் பக்கத்து கோவிலிலிருந்து தனுர் மாச ஸ்பீக்கர் ”விநாயகனே வினை தீர்ப்பவனே...” என்று செவி புகுந்து எழுப்பிப் பொன்னமராவதிக்குக் கிளப்பியது. “சுடு தண்ணி கிடையாதுங்க... பக்கத்துல ஓட்டலுக்கும் நாயித்துக்கிளம லீவு.. அதனால காலையில காப்பிதண்ணியும் கிடைக்காதுங்க...” என்று இரவு ரூமுக்குள் நுழைவதற்கு முன்பே பொருப்பாளக் கிழவர் எச்சரித்துவிட்டார். சொன்ன வாய்க்கு ஒரு கடலை பர்ஃபி பரிசாகக் கொடுத்தேன். சிகரெட் புகைசூழ போதாலோகமாகக் காட்சியளித்தப் பக்கத்துப் பெட்டிக்கடையில் இந்திய கிராமத்திற்குள் நுழைந்த அமெரிக்க அக்குவாஃபினா செறிநீரும் கேரி பேக்கில் சுருட்டியப் ஒன்பது வேர்க்கடலை பர்ஃபியும் (ஒன்று லாட்ஜ் கிழவருக்குக் கொடுத்தது போக மீதிம்) ராத்திரியைக் கடத்தியது.

குளிரே அஞ்சும் படியாகக் குளித்துவிட்டு பொன்னமராவதியை நோக்கி வண்டியை செலுத்தினேன். ஏசியை அனைத்துத் திறந்த கார் ஜன்னல் வழியாக உட்புகுந்த குளிர்காற்று இதமோ இதம். இருபுறமும் செழித்து வளர்ந்த புளியமரங்கள் நான் சமீபத்தில் கண்ட கனாவை ஞாபகப்படுத்தியது. வலதுகையால் கடுக்கண் இருக்கிறதா என்று காதைத் தொட்டுப் பார்த்துச் சிரித்துக்கொண்டேன். செம்மண் இல்லாத தார்ச்சாலை இது நனா என்றும் சொப்பனமில்லை என்றும் உறுதிப்படுத்தியது.

பூட்டியிருந்த பிரம்மாண்ட பங்களாக்களும், விடுமுறையில் சட்டமடித்த வாசல் கதவு சார்த்தியிருந்த மரங்கள் சூழ்ந்த வகுப்பறைகள் கொண்ட பள்ளிகளும் கொண்ட ”பட்டி... பட்டி...”யென்று முடியும் செட்டிநாட்டு ஊர்கள் வரிசையாகக் கடந்துசென்றன. சில பங்களா முகப்பில் நெற்றிக்குத் திலகம் போல பருவகாலங்களினால் பதம் பார்க்கப்பட்ட பார்வதி பரமேஸ்வரரின் வண்ணமிழந்த சுதைச் சிற்ப வேலைப்பாடுகளும் இருந்தன. தேசாந்திரியாகச் சுற்றிக் காசு பணம் நிலம் நீச்சு என்று கட்டி ஆண்டவர்கள் கையில் எதையும் கொண்டு போக முடியாமல் கரைசேர்ந்திருப்பார்கள்.

”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே...” என்று மருதவாணன் பட்டினத்தாராகிய திருவெண்காடருக்கு உபதேசித்த மந்திரம் ஸ்டியரிங் பிடித்த எனக்கு நினைவில் ஃப்ளாஷாக வந்து போனது. எதுவுமே சாஸ்வதமில்லாத நீர்க்குமிழி வாழ்க்கை என்று கி.மீட்டருக்கு கி.மீட்டர் சிதிலமடைந்த பழைய வீடுகளும் இடிபாடுகளுடன் நின்றிருந்த தூண் விழுந்த மண்டபங்களும் நியாபகப்படுத்திக்கொண்டேயிருந்தது. ஹாரனில்லாமல் வேகமாக வந்து திரும்பிய லாரி ஒன்று அதை நிஜமென்று நிரூபித்துச் சென்றது.

ஆலமர விழுதுகளுக்குக்கிடையே சேப்பாயியை நிழலில் நிறுத்தும் போது தனுர் மாத பூஜைக்காக பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் நடைதிறந்து திருப்பள்ளியெழுச்சிப் பாடிக்கொண்டிருந்தது. கிராமதேவதையின் வாசலில் ஐயப்பமார்கள் சந்தனம் மணக்க நின்றிருந்தார்கள். பரணிசிவம் குருக்களிடம் வழியெங்கும் பேசி அபிஷேகம் மஞ்சள் காப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். வாசலில் நின்றிருந்த காவல் தெய்வம் அருவா சாமியைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம்.

பொன்னன் - அமரன் என்ற இரு சிற்றசர்களால் உருவாக்கப்பட்ட சிற்றூர்தான் பொன்னமராவதியாம். நெடுவயல் ஜமீந்தார்களால் இக்கோயில் கட்டப்பட்டது என்று தகவல்களை அடுக்கிய சிவபாலன் மேலும் ஒரு கூடுதல் விஷயத்தைச் சொல்லி பொன்னமராவதிக் கோயிலின் புராதன மகத்துவத்தை எடுத்துரைத்தார். இரண்டாம் நூற்றாண்டில் புகார் நகரத்திலிருந்து கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளுடன் மதுரைக்குப் பயணப்படும் போது இக்கோயிலில் தங்கி இளைப்பாறியிருக்கிறார்களாம். சோழன் மற்றும் பாண்டிய மன்னர்களின் எல்லையிலிருந்து மீன் கொடியும் புலிக்கொடியையும் ஒருசேரப் பார்த்த குக்கிராமம் இது.

கருப்பர், சேவுகராயர், புர்ணா புஷ்பகலாம்பாள் சமேத ஐயனார், விநாயகர், வள்ளி தேவசேவனா சமேத சுப்ரமண்யர், பைரவர் என்ற பரிவார தெய்வங்களுக்கெல்லாம் அர்ச்சனை செய்த பின்னர் நாகரிடம் வந்தோம். கனாவில் வந்தது போலவே அழகான சன்னிதி. அவருக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டு அழகியநாச்சியம்மனுக்கு அபிஷேகமும் ஒன்பது கஜம் புடவையையும் சார்த்தச் சொல்லி அழகு பார்த்தோம். சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் தெத்தியோன்னமும் பிரசாதம். அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தத்துடன் அமிர்தமாக உள்ளே இறங்கியது.

கையில் தடியுடன் ஒரு வயதானவர் கோயிலுக்குள் பிரவேசித்ததும், பிரசாதம் சாப்பிட உட்கார்ந்த கற்றளி மண்டபத்தின் ஓரத்தில் கோவலனும் கண்ணகியும் இளைப்பாற உட்கார்ந்திருப்பது போன்ற பிரமை. சிவபாலன் சொன்ன கதையின் உடனடி எஃபெக்ட்.

மீண்டும் ஒருமுறை அம்மனை தரிசித்துவிட்டு கொடிமரத்தின் கீழ் நமஸ்கரித்துவிட்டு வெளியே வந்தோம். கனவு கண்டது போல பியெம்டபிள்யூவெல்லாம் நிற்கவில்லை. சேப்பாயி விட்ட கோலத்தில் அலுங்காமல் நின்றுகொண்டிருந்தாள். ”பிள்ளையார் பட்டி பக்கத்துலதான்..” என்று சொன்ன பரணிசிவத்திடம் “பாடல் பெற்ற ஸ்தலமொன்றும் பாதி வழியில் இருக்கே..” என்றேன். பரணிசிவம் சிரித்தது. பரமசிவம் அழைத்தது....

அன்னதாதா

"கிணத்துல கங்கை வர்றன்னிக்கு இந்த தடவ ஊருக்கு போவலையா?” கார் துடைக்க நின்ற போது கண்டக்டர் கேட்டார். திருவிசநல்லூர்க்காரர். எம்டிசியிலிருந்து சமீபத்தில் ரிட்டயர்ட் ஆனவர். தெருக்கோடியில் குடியிருக்கிறார்.

“இல்லீங்க.. நீங்க போய்ட்டு வந்தீங்களா?”

“ஒரே கூட்டமான கூட்டம். காவேரில முட்டிவரைக்கும்தான் தண்ணி. பக்கத்து வூட்லலெல்லாம் க்யூவில நிக்க முடியாதுன்னு ஆத்துல உளுந்து எந்திரிச்சு வந்துட்டாங்க.. ”

“பாலம் வரைக்கும் நின்னுச்சா?”

“மேக்கால அதையும் தாண்டி...”

”கிணத்துல தண்ணி பொங்கி வழிஞ்சுதா?”

“இல்லீங்க.. கொஞ்சம் கயித்தை வுட்டுதான் இறைச்சாங்க...”

“கார்த்திகை அமாவாசை ஸ்நானத்துக்காக ஊருக்கு போனீங்களா?”

”நா அங்கினயேதானே இருக்கேன்”

“ஓ! எவ்ளோ நாளா? அதான் இங்க ரொம்ப பார்க்கமுடியல்லை. இங்க யாரும் இருக்காங்களா?”

“வீட்லலெல்லாம் இங்கதான் இருக்காங்க.. ஊர்ல கொஞ்சம் பங்கு இருக்கு..”

“எவ்ளோ ஏக்கரு?”

”ஏக்கரெல்லாமில்ல தம்பி. ஒம்பது மா இருக்கு. இந்த வருசம் நட்ருக்கேன்.” சொல்லும் போதே பிரகாசமடைந்தார்.

”நடவு ஜனம் கிடைக்குதா?”

”எங்க... கும்மோணத்துக்குப் போய்டறானுவ...கட்டட வேலைக்குன்னா ஐநூறு வருதாம்.. இல்லீன்னா கவர்மெண்ட்டுல டெய்லி வேலை வாய்ப்புத் திட்டத்துல போய் கையெளுத்துப் போட்டுப்பிட்டு காசு வாங்கிட்டு சினிமாவுக்குப் போயிடறானுங்க...”

”அச்சச்சோ.. நடவு கூலி எவ்ளோ”

”நூத்தி பத்து ரூவா. அதுவும் மெல்லமா பத்து மணிக்கு வருதுங்க.. அஞ்சு மணிக்கு போர் செட்டுல காலைக் களுவ ஆரம்பிச்சுடுதுங்க.. என்னான்னு கொஞ்சம் அதிகாரமாக் கேட்டா மறுநாளிக்கு ஆளு கிடையாது..”

”நான் பங்குக்கு போய்ட்டிருந்தப்ப நடவுன்னா ஆறு மணிக்கு ஆரம்பிச்சுடுவோம். சின்ன ஐயிரு வந்துட்டாருன்ன நடவு ஜனத்துக்கு குஷியாயிடும்....”

”ஏன்?” முகமலர்ந்து கேட்டார் கண்டக்டர்.

“நானு எல்லோருக்கும் ரெண்டு பொட்டலம், ரெண்டு டீ வாங்கிக் கொடுப்பேன்.”

வாய் விட்டுச் சிரித்தார்.

”நாத்து நட்டு... களை பறிச்சு..” எண்ணங்கள் வயலுக்கு என்னை இழுத்தது.

“நாத்து நடறதா? அந்தக் காலமெல்லாம் மலையேறிப்போச்சுது. இப்பெல்லாம் ’கேக் நாத்து’”

“அதென்ன கேக் நாத்து?”

“பாயைப் போட்டு அது மேலே விதெ நெல்லைத் தெளிச்சு வைக்கலைப் போட்டு மூடிடறது. முளை வுட்டு வளர்ந்ததும் அப்படியே கேக் மாதிரி எடுத்து வந்து நட்டுக்கிறது...”

“என்ன போட்ருக்கீங்க?”

“ஆயிரத்து ஒம்பது ரகம்.”

“எவ்ளோ நாள்?”

“நூத்தம்பது நாளு...”

“களையெடுக்க எவ்ளோ கேட்கறாங்க?”

“களையெடுக்க ஆளு போடறதில்லை. களைக்கொல்லி வாங்கி தெளிச்சுவுட்டேன். நல்லாதான் இருக்கு”

“நாங்க விவசாயம் பண்ணும் போது அதெல்லாம் போடமாட்டோம்.... பயப்படுவோம்.. ”

“ஆமா.. பயிரை அளிச்சுப்புடும்னு மாட்டோம்.. இப்பெல்லாம் அட்வான்ஸுடு ஆயிப்போச்சு தம்பி...”

“இப்படி நீங்க களையெடுக்கெல்லாம் ஆளை விடலைன்னா அப்புறம் அந்த ஜனமெல்லாம் சாப்பாட்டுக்கு எங்க போவும்?”

“ஆயிரத்தைனூறு ரூவா ஆவும். பதினைஞ்சு ஆளை இறக்கணும். நானென்ன பண்ணையா வச்சுருக்கேன்.”

எனக்கும் நியாயமாகத்தான் பட்டது. அடுத்துச் சொன்னதுதான் பெரிய அதிர்ச்சி.

“ரோட்டோரத்து பங்கு இருக்கறவனெல்லாம் ப்ளாட் போட்டுட்டான். ஃபாரின் போன ஐயருங்கெல்லாம் ஆயிரத்துக்கு வித்துட்டுப் போனவங்க அதே இடத்தை லட்சக்கணக்குல குடுத்து வாங்கிக்கிட்டு திரும்ப வர்றாங்க...”

”ரோட்டோர பங்கெல்லாம் சாகுபடி பண்றதில்லையா?”

”போய்ப் பாருங்களேன்.. “

“அறுப்புக்கெல்லாம் ஆளுங்க கிடைக்குதா?”

“அறுப்புக்கெல்லாம் இப்ப ஆளே கிடையாது. எல்லாம் மெசினுதான். வேலிக்கணக்கா வச்சுருக்க பண்ணையாருங்களே ஒரே நாள்ல அறுப்பை முடிச்சுடுட்டுக் களத்துக்கு கொண்டு போய்டறாங்க தம்பி..”

“அப்படியா? நெல்லு புடிக்க வண்டி கட்டிக்கிட்டுக் குடோனுக்குப் போறீங்களா?

”அதெல்லாமில்லை. சிறு குறுன்னு எந்த விவசாயியிருந்தாலும் நம்ம களத்துக்கு வந்து நெல்லு புடிக்கிறாங்க..”

“என்ன ரேட்டுக்கு போவுது?”

”நம்ம பங்குல இந்த வருசம் போட்டது சன்ன ரகமில்லை. ஆயிரத்து ஒம்பது ரகம். மூட்டை எளுநூத்திச் சொச்சத்துக்கு எடுத்துக்கிறாங்க..”

”எவ்ளோ கிலோ?”

“அறுவது கிலோ... ஃபர்ஸ்ட் குவாலிட்டியெல்லாம் ஆயிரத்துச் சொச்சத்துக்குப் போவுது..”.

என் அடுத்த ஐந்து நொடி மௌனத்தில் எங்கள் பங்கில் நடந்த நாத்து, நடவு, களை பறிப்பு, அறுப்பு என்று டிவியெஸ் ஃபிஃப்ட்டியில் பறந்து சென்று மூன்று போகம் விவசாயம் பார்த்த நினைப்பு தலைக்கு மேலே பிடித்த முறத்திலிருந்து நெல் தூற்றுவதுபோலச் சுழன்றடித்தது. என் மௌனத்தை இந்த உரையாடலின் முற்றுப்புள்ளியாக எடுத்துக்கொண்டு...

”சரி தம்பி... பொறவு பார்ப்போம்... காரு துடைச்சுட்டு நீங்க ஆஃபீஸுக்குக் கிளம்பணும்...” கிளம்பிய அவருக்கு லேசாக கால் சறுக்கித் தடுமாறினார்.

“பார்த்து...” என்று பதறினேன்.

“ம்... ரொம்ப வருசத்துக்கப்புறம் விவசாயம் பண்ணப் போனேன். வரப்புல கால் வச்சதும் வளுக்கிட்டுது. ஓடி வந்து புடிச்ச ரெண்டு ஆளுங்க கேட்டாங்க.. ‘பட்டணத்துக்குப் போனப்பொறவு நடக்க மறந்துப் போச்சா”ன்னு. நாஞ்சொன்னேன் ’எப்படி நடந்துக்கணும்னே நொம்ப பேருக்க அங்கின மறந்துபோச்சு’ன்னு.” என்று சொல்லிச் சிரித்துவிட்டு பால் வாங்கப் போனார்.

யானை கட்டி போரடித்த தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று புகழப்பட்ட தஞ்சை ஜில்லாவிலிருந்து வந்து ஐடியில் கால் வைத்துவிட்ட எனக்குப் பிறகு எம் பொண்ணுங்களுக்கெல்லாம் இதெல்லாம் என்னன்னு தெரியாமேப் போய்டும்... “நான் விவசாயம் பண்ணப் போறேன்”னு விஜய் டிவியில் ஒருத்தர் போல்டா சொன்னா மாதிரி எனக்குத் தெகிரியமாச் சொல்ல முடியலை.

விவசாயம் பெரிய வேலைதான். மகோன்னதமான வேலை. அன்னதானம் செய்பவர் அன்னதாதா(அன்னdhadha) என்று அழைக்கப்படுவார். ஐடி, ரியல் எஸ்டேட் என்று திடீர்ப் பணக்காரனாக ஆயிரம் வாய்ப்புகள் தேடிவந்தாலும் இன்னமும் ஆடிப் பட்டம் தேடி விதைத்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் அன்னதாதாக்கள். அனைவருக்கும் என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

மூன்று மணி மூன்று திருத்தலங்கள்


பூந்தமல்லி தாண்டி வரும் காட்டுப்பாக்கமருகே ஹாரனடித்து மூர்க்கத்தனமாக வருபவர்களுக்கு வழி கொடுத்துவிடுங்கள். கொஞ்சம் மெதுவாக போங்கள். வலதுபுறம் மஞ்சள் கலரில் எம்ப்பீ டிஸ்ட்டிலரீஸ் பில்டிங் ஒன்று தெரியும். அங்கே பச்சையாய் ஹைவேய்ஸ் டிப்பார்ட்மெண்ட் பேரம்பாக்கம், மப்பேடு என்று வரிசையாய் எழுதி போர்டு வைத்திருப்பார்கள். சிக்னல் இல்லாத திருப்பம். பார்த்துவிட்டு திரும்புங்கள். இந்தச் சாலைக்குள் நான்கு அற்புதமான க்ஷேத்திரங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றாக வரிசையாகச் செல்வோம். வாருங்கள்.

திரும்பின இடத்திலிருந்து பதினெட்டு கிலோமீட்டரில் வரும் முதல் கோவில் மப்பேடு. இடதுபுறம் வாலிபால் நெட் கட்டி ஒரு க்ரௌண்ட் வரும். அதன் பின்புறம் சிங்கீஸ்வரர் ராஜகோபுரம் தெரியும். ஆஞ்சநேயர் இங்கு வந்து சிவனைப் பாடி பூஜித்தாரர். ஆஞ்சநேயர் சிங் பண்ணியதால் சிங்கீஸ்வரராகியிருக்கலாம் என்று கோக்குமாக்காக யோசிக்கக்கூடாது. சிங்கி என்னும் நந்தி வழிபட்டதால் சிங்கீஸ்வரர் ஆனாராம். வண்டியிலிருந்து இறங்கிய உடனே “பக்கத்துலேயே சித்தர் சமாதியிருக்கு. அதையும் பாருங்க..” என்று நெற்றியில் நீரு பூசிய ஒருவர் ரெக்கமண்ட் செய்தார்.

நல்ல ஆகிருதியான லிங்கம். ஆதித்த கரிகாலனால் கட்டப்பட்ட கோயில் இது. ஆயிரத்து ஐநூறு வருஷத்திய கோவில். சமீபத்தில் கும்பாபிஷேகமாகியிருந்தது எண்ணெய் பூசிக்கொள்ளாத கற்தூண்களின் பளிச்சில் தெரிந்தது. சிங்கீஸ்வரர் சன்னிதியில் “நமஸ்தே அஸ்து பகவன்...” கோஷ்டியாகச் சொன்னோம். பொதுவாக இதுபோன்ற கோவில்களில் குருக்கள் மட்டுமே சிவபெருமானுடன் தனியாகப் பேசிக்கொண்டிருப்பார். இன்று எங்களோடு இன்னும் ரெண்டு பேர் வந்திருந்தது மனசுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது. அம்மனுக்கு தனி சன்னிதி. விநாயகர், ஆதிகேசவப் பெருமாள், புஷ்பகுஜாம்பாள் என்று வலம் முடித்து வருகையில் வாகன மண்டபத்துக்குப் பக்கத்தில் தூண் சிற்பமாக வீணையேந்திய ஆஞ்சநேயர் காட்சியளித்தார். அவருக்கு எதிரே வீரபாலீஸ்வரர் சன்னிதி. ஆஞ்சநேயருக்கு முன்னால் அமர்ந்து “நினைத்த்தெத்தனை...” திருப்புகழ் பாடினர் என் மக்கட் செல்வங்கள். இந்த வாலீஸ்வரர் 5000 வருடத்து சன்னிதி என்று போர்டு வைத்திருந்தார்கள். கர்ப்பக்கிரஹத்துக்குள் டைல்ஸ் போட்டு அழகுபடுத்தியிருந்தார்கள்.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். மூல நட்சத்திரக்காரர்களுக்கு இது விசேஷமான தலமாம். அரையில் பச்சைப் பெல்ட் கட்டிய குருக்கள் சொல்லச் சொன்னார்.

இரண்டாவதாக திருவிற்கோலம் என்று பாடல் பெற்ற ஸ்தலமான கூவத்துக்கு வந்தடைந்தோம். பக்கத்திலிருந்தௌ அக்னி தீர்த்தத்தில் கால் அலம்பிக்கொள்ளச் சென்றோம். வயற்புறங்களால் சூழப்பட்டிருக்கும் இத் திருக்குளத்தில் தவளைகளே கிடையாது. பிடித்துவிட்டாலும் ஓடிவிடும் என்று வாசலில் நின்ற ஒருவர் அதிசயத் தகவல் கூறினார். “எதுனாச்சும் குடுப்பா..” என்று கையேந்திய பாட்டிக்கு “வரும் போது தர்றேன்” என்று வாக்குறுதியளித்துவிட்டு ஆளைத்தூக்கும் காற்றை மீறி உள்ளே நுழைந்தோம். கொடிமரத்தில் கட்டியிருந்த வெங்கல இலைகள் ஆடியாடி சங்கீதமாக ஒலித்துக்கொண்டிருந்தது. “ஓம் நமசிவாய..ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... சிவாய நம ஓம்” என்று பஜித்திருந்தால் அந்த இலைகளில் ஓசை ஜால்ராவாக இருந்திருக்கும்.

திரிபுராந்தகர் இருவண்ணங்களில் காட்சி தருபவர். அதிக மழை வெள்ளம் வரும் காலங்களில் வெண்மை நிறத்திலும் போர்க் காலங்களில் சிகப்பு நிறத்திலும் மாறிக் காட்சியளிப்பவர். திருஞான சம்பந்த ஸ்வாமிகள் திருவிற்கோல தேவாரப் பதிகத்தில் இதை கீழ்வருமாறு பதிந்திருக்கிறார்.

ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாக மாகவுஞ்
செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே
.

ஆம். நீங்கள் நினைப்பது சரியே. இப்போது மழை பொழிந்துகொண்டிருப்பதால் வெண் நிறத்தில் அருள்பாலித்தார். திவ்ய தரிசனம். ”குருக்களய்யா வந்துருவாருங்க...” என்று கையை நீட்டிக் காசு கேட்டுக்கொண்டிருந்த ஆள் சொன்னாலும் எங்கிருந்தோ வந்த ஒற்றைப் பூணல் மடப்பள்ளி பையன் தீபாரதானை காட்டினான். ஸ்பஷ்டமாக ஸ்லோகம் சொல்ல வரவில்லை. திரிபுராந்தகர் காப்பாற்றுவாராக என்று மனதார வேண்டிக்கொண்டேன். அச்சிறுத்த விநாயகரை பிரகாரத்தில் தரிசித்துக்கொண்டு கடைசியில் தன்னுடைய வாகனமான நாய் இல்லாத அதிசய பைரவரை தரிசித்தோம்.

மூன்றாவதாக தரிசித்த திருத்தலம் நரசிங்கபுரம் லக்ஷ்மி நரசிம்மர். கோமண ரோட்டில் பயணித்து ஊருக்குள் வந்தால் நடுநாயகமா இருப்பது லக்ஷ்மி நரசிம்மர் கோயில். சென்ற இரு சிவத்தலங்களைப் போலில்லாமல் சொற்ப கூட்டமிருந்தது. வண்டியிலிருந்து காலைக் கீழே வைக்கும் முன் ரெண்டு மூன்று பேர் கையில் அர்ச்சனைக் கவரும் துளசியும் போடு விற்க முண்டியடித்தார்கள். இதுபோன்ற சிற்றூர்களில் இவ்வகையான விற்பனையாளர்களிடம் பேரம் பேசாமல் அர்ச்சனை செய்வது அடியேனுடைய வழக்கம். ஒரு கோயிலைச் சுற்றி உழைப்பதற்கு உட்கார்ந்தாலே காசு கிடைக்கும் என்று மக்களுக்குப் புரிய வேண்டும்.

ஆறடிக்கு இருந்தார் நரசிம்மர். க்ரீடமும் அபய ஹஸ்த கரங்களும் மின்னின. மடியில் அமர்ந்திருந்த லக்ஷ்மி பக்தர்களைப் பார்த்த வண்ணமிருந்தார். இங்கே லக்ஷ்மி நரசிம்மர் சாந்தமாக இருப்பதால் தாயார் பெருமாளைப் பார்த்துக்கொண்டிராமல் பக்தர்களுக்கு தன் அருட்பார்வையை வீசுகிறாளாம். எங்கள் குடும்ப அங்கத்தினர் அனைவரின் நட்சத்திரங்களையும் பொறுமையாகக் கேட்டு அர்ச்சனை செய்தார். இன்னும் என்னைப் பார்த்துக்கொண்டே இரு என்று லக்ஷ்மி நரசிம்மரும் தாயாரும் சொல்வது போலவே இருந்தது. துளசியோடு பச்சைக்கற்பூரம் ஏலக்காய் தட்டிப் போட்ட தீர்த்தத்தைச் சாதித்த போது மன்னார்குடி ராஜகோபாலன் மனசுக்குள் வந்துவிட்டார். சடாரி வாங்கிக்கொண்டு மரகதவல்லி சன்னிதியிலும் அர்ச்சனை செய்தோம். திவ்யமான தரிசனம்.

டீக்கடை வாசலில் நின்றிருந்தவரை “இலும்பையன்கோட்டூருக்கு இந்த ரோடு போகுங்களா?” என்று கேட்டதற்கு நேர் ரோட்டைக் காட்டாமல் வலம் இடமாகச் சுற்றிவிட்டார். ஒரு முறை வண்டியோடு சுற்றிவிட்டு மீண்டும் நேர்வழியில் இலும்பையங்கோட்டூருக்கு பயணித்தோம். கர்ப்பஸ்த்ரீக்கள் ஒரு முறை பயணித்தால் சுகப்பிரசவம் நிச்சயம். குண்டும் குழியுமாக இருந்த ரோடு முடிந்துவுடன் நல்ல ரோட்டைப் பார்த்து நீங்கள் வண்டியை விரட்டினால் இலும்பையன் கோட்டுர் கோயிலைத் தாண்டிவிடுவீர்கள். நிதானமாக வநதால் இடதுபுறம் போர்டு வைத்திருக்கிறார்கள். எனதுரையை தனதுரையாக என்று ஞானசம்பந்தர் பாடிய அற்புதத் திருத்தலம். ”தேனுமாய்... அமுதமாய்த் தெய்வமாய்..” என்ற பதிகத்தைப் பார்த்துவிட்டு கோயிலுக்குள் நுழைவோம்.

தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த் தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
வானுமா மெனதுரை தனதுரை யாக வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிர லூகங் கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.


சின்ன சிமெண்ட் ரோடு. நேரே ஓடிப்போய் கோயிலில் முடிகிறது. பெரிய க்ரில் கதவு மூடியிருந்தது. சின்ன கோயில். ஆறு வருடங்களுக்கு முன்னால் வந்த போது வேத சம்ரக்ஷணம் செய்துகொண்டிருந்த வேதபாட சாலை இப்போது மூடியிருந்தது. டூ வீலரில் வந்த ஒரு தம்பதி கையில் அர்ச்சனைக் கவருடன் ஐயரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். “வந்தாருங்களா?” என்று விஜாரித்தால் “தெர்லீங்க” என்று அப்பாவியாகப் பார்த்தார்கள். ஆடு மேய்க்கும் ஆத்தா ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. “ஐயிரு காலேலே ஏளு மணிக்கெல்லாம் வந்துட்டு போய்டுவாருங்க...” என்றார்கள். “சாவி யாருகிட்டேயிருக்கு?” என்ற என் கேள்விக்கு “அங்கே...”ன்னு ஆகாயத்துக்கு கை காண்பித்தது. வெளியிலிருந்தே தரிசித்தோம். மூலவர் தீண்டாத் திருமேனி. கண்களால் தீண்டித் தரிசித்தோம். அர்ச்சகர்கள் கூட பானம், ஆவுடை என்று எதையும் தொடமாட்டார்கள். வேஷ்டி கட்டி விடுவது கூட விசிறி போர்த்திவிட்டு மேலும் கீழும் இழுத்துவிடுவார்கள்.

போன தடவை அர்த்தஜாமத்திற்கு வந்திருந்தேன். ருத்ர உச்சாடனம் செய்து தீபாராதனை காண்பித்தான் குடுமி வைத்த ஒரு வேதபாடசாலைப் பையன். குரல் கணீரென்று இருந்தது. இப்போது கண் முன்னே அந்தக் காட்சி விரிந்து என்னைத் திருப்திப்படுத்தியது. முள்ளும் கல்லும் மெத்தையாக வலம் வந்து இன்னொரு க்ரில் கேட்டுக்குப் பின்னால் சின் முத்திரையை நெஞ்சில் பிடித்து அமர்ந்திருக்கும் ஞானயோக தெக்ஷிணாமூர்த்தி நிறைவாக இருந்தது. அம்பாள் கனக குஜாம்பாள் சன்னிதி கொஞ்சூண்டு தெரிந்தது. மஹாபெரியவாள் ஒரு மண்டலம் இந்த க்ஷேத்திரத்தில் முகாமிட்டு ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டை பண்ணியிருக்கிறார். இப்போது யாருமில்லாத அந்த இடம் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.

தக்கோலம் கூட போயிருக்கலாம். மதியம் பனிரெண்டுக்கு மேலாக ஆகிவிட்டபடியால் சென்னைக்கு வண்டியை விரட்டினோம். ஸ்வாமி பார்த்த குஷியில் நாங்களும் சேப்பாயியும் பறந்து வீடு வந்து சேர்ந்தோம். இத்திருத்தல யாத்திரையில் எங்களோடு பயணித்த ஸ்ரீநிவாசன், மஹாதேவன், வல்லபா, அனன்யா மற்றும் அஜ்ஜு அனைவரும் பக்தி ரசத்தை ருசித்திருப்பார்கள் என்பது அவர்களது சந்தோஷம் பொங்கிய முகத்திலிருந்து அப்பட்டமாகத் தெரிந்தது.

ஈஸ்வர க்ருபையில் இதுபோன்ற ஸ்தல யாத்திரைகள் நீடிக்கட்டும் என்று வேண்டிக்கொண்டு இவ்வியாசத்தை பூர்த்தி செய்கிறேன். நம: ஸிவாய:

குட்டி சொர்க்கம்

ஆஃபீஸிலிருந்து வந்ததும் வராததுமாகக் காரை நிறுத்திவிட்டு கழுத்திலிருந்து டேக்கையும் காலிலிருந்து ஷூவையும் கூட கழட்டாமல் சின்னவளுடன் ஸ்கூட்டியில் ஆளரவமற்றச் சாலையில் ஒரு ரவுண்ட் போவது காதில் உரசும் குளிர்காற்றைவிட மனசை ஜிலுஜிலுக்கச் செய்கிறது.

”இன்னும் கொஞ்ச தூரம் போ...இன்னும் கொஞ்சம் தூரம் போ...” என்று கையை முன்னால் காட்டிக்கொண்டே சென்னையை விட்டு இந்நாட்டைவிட்டு இவ்வுலகத்தை விட்டு வெளியே வேற்று கிரகத்துக்கு இந்த ஸ்தூல சரீரத்துடன் கடத்திப் போகிறாள். மரங்களுக்கிடையே வழிந்த மசமச இருட்டில் மகிழ்ச்சியாக ஆஃபீஸ் அலுப்பு தீர ஆக்ஸிலேட்டரை குறைக்காமல் அப்படியே போய்க்கொண்டிருக்க ஆசை. பனி தெரியாமல் முன்னால் குஷியாக நிற்பவளின் காதுகளில் ”ம்மா... பசிக்கிறது...” என்றேன் ரகசியமாக. ”போதும்பா..” என்று கன்னத்தைத் தொட்டுச் சட்டென்று வண்டியைத் திருப்பச் சொன்னாள்.

பசியிருக்கும் வரை சொர்க்கத்துக்குப் போவது லேசுப்பட்ட காரியமல்ல என்று இன்று புரிந்தது.

ஜீவனாம்சம்

அடி முதுகில் மூலாதாரச் சக்கரத்தில் குண்டலினி சர்ப்பமாகக் கிளம்பி துரியமெனப்படும் கபாலத்திற்கு விறுவிறுவென்று பயணப்படும் என்று குண்டலினி சக்தியேற்றம் பற்றிப் படித்திருக்கிறேன். சித்துவிளையாட்டுகள் புரிந்த சித்தபுருஷர்களுக்கு இது இலகுவாக சித்திக்குமாம். இன்று அதிகாலையில் யோகாவின் போது எனக்கு குண்டலினி பீறிட்டுக் கிளம்புவது போல ஆச்சர்யமாக இருந்தது. நாமொன்றும் சித்த புருஷனில்லையே என்று நினைத்துக்கொண்டிருக்கும் சிறிதுநேரத்திற்கெல்லாம் அடி முதுகில் வலி அதிகமாகி ”ஆஃபீஸுக்கு லீவு போடுடா ஆர்வியெஸ்” என்று அதட்டியது. அதன் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டுக் கட்டையைச் சாய்த்து உட்கார்ந்துவிட்டேன். லீவ் கொடுத்த பாஸ் வாழ்க!

மொட்டை மரம் ஒன்றை அட்டையில் தாங்கிய நாவலொன்று ரொம்ப நாளாகப் படி படியென்று புஸ்தக அலமாரியிலிருந்து தீனமாய்க் கூப்பிட்டுக்கொண்டிருந்தது. வலித்த முதுக்குச் சப்போர்ட்டாகத் தலகாணியைக் கொடுத்துவிட்டு இன்று முடித்துவிடுவது என்று தீர்மானமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

சாவித்ரி இளம் வயதிலேயே கணவனை இழந்த கைம்பெண். அண்ணா மன்னியின் ஆதரவில் அவர்களுடன் ஜீவனம் நடத்துகிறாள். இதுதான் ஆரம்பம். அண்ணா வெங்கடேஸ்வரன் சாவித்ரிக்காக கோர்ட்டில் ஏதோ கேசாடுகிறான் என்று முதல் அத்தியாயம் தொடங்குகிறது.

அப்பா தாசில்தார். சாவித்ரியை ஒரு கிராம மிராசுதார் வீட்டில் மணம் முடித்துக் கொடுக்கிறார். பால்ய விவாகம் முடிந்து ”குடும்பம் பண்ண வயசாச்சு...” என்று ஆனப்புறம் பிறந்த வீட்டிலிருப்பவளை புக்ககத்திற்கு குடித்தனம் செய்ய நாள் பார்த்து அழைத்துப்போகிறார்கள். ”குழந்தை..,குழந்தை” என்று அந்த அப்பா, அந்த அம்மா என்று எல்லோரும் புக்ககத்தில் சாவித்ரியைத் தாங்கோ தாங்கென்று தாங்குகிறார்கள். ஒருநாள் இரவு முதன் முதலாக சாவித்ரி வைத்த ரசத்தை வண்டல் மட்டும் தங்கும்படி வைத்துவிட்டு அனைவரும் உறிஞ்சி மகிழ்கிறார்கள்.

கொழுந்தன் கணபதி ரொம்பவும் சின்னப் பையன். குறைந்த காலத்திலேயே “மன்னி..மன்னி..” என்று காலைக் கட்டிக்கொண்டு சாவித்ரியிடம் ஒட்டிக்கொள்கிறான். “இனிமே எல்லாமே சாவித்ரிதான்” என்று பண்ணையாள் மருதனிடம் மொதற்கொண்டு சொல்லி அவளிடம் சர்வ பொறுப்புகளையும் கட்டிவிட்டு கையொழிந்து புக்ககத்து அம்மா நிம்மதியாக அமர்கிறாள். ஆறு மாதமாக பொறந்தாத்துக்கு போகவில்லையே என்று அனுப்பிவைக்கிறார்கள். வந்த சாவித்ரிக்கு தந்தி வந்து புக்ககத்துக்கு ஓடுகிறாள். கணவன் க்ருஷ்ணமூர்த்தி வரப்பில் நடந்துபோகையில் கால் தடுக்கி கிணற்றில் விழுந்து இறந்துவிடுகிறான். ஆறு மாத காலத்திற்குள் கணவனை இழந்த சாவித்ரி புக்காத்திலிருந்து பொறந்தாத்துக்கு வந்துவிடுகிறாள்.

அப்பா இருந்த வரையில் சாவித்ரியின் புகுந்த வீட்டிலிருந்து ஜீவனாம்சம் வாங்கக்கூடாதென்று தீவிர கொள்கையுடன் இருந்தார். அண்ணா சாவித்ரியின் புக்காத்தில் ஜீவனாம்சம் கேட்ட தொகை கிடைக்கவில்லை என்று கோர்ட்டில் கேஸ் போடுகிறான். கேஸின் தீர்ப்பு வரும் வரையில் கதையை ஜவ்வாக இழுக்காமல் அந்த அப்பா செத்துப்போய் கடிதாசு வந்தவுடன் தீண்டலான சாவித்ரி துக்கம் கேட்க புக்ககத்திற்கு போவதோடு வாசகர்களிடம் ”என்னாகுமோ?” என்ற ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பி முடித்துவிடுகிறார் கதாசிரியர்.

சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் என்கிற நாவல். புஸ்தகம் முழுவதும் சாவித்ரியின் எண்ண அலைகள் உரக்கப் பேசுவதுபோலவே கதை முழுதுவம் ஓடுகிறது. சீரியஸான கதையை வசனமாக எழுதுவதை விட வர்ணனைப் போல எழுதியிருக்கிறார். அண்ணா, மன்னி, அந்த அப்பா, அந்த அம்மா, க்ருஷ்ணமூர்த்தி, கணபதி என்று சொற்ப கேரக்டெர்கள்தான் கதையை நகர்த்துகிறது. மாமனார் மாமியார் என்கிற பதங்களை பயன்படுத்தாமல் அந்த அம்மா, அந்த அப்பா என்று எழுதியிருப்பது புதுமையாகவும் ஆத்மார்த்தமான நாட்டுப்பொண் இன்லாஸ் உறவையும் அற்புதமாக படம்பிடித்திருந்தது எனக்குப் பிடித்திருந்தது.

படித்து முடித்த பிறகு முதுகு வலி சொஸ்தமாகிவிட்டது. ஆனால், சாவித்ரியை நினைத்து மனசு வலித்தது

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து

இரண்டு பக்கமும் அடர்ந்து வளர்ந்த செழிப்பான புளிய மரங்கள். மேடுபள்ளமில்லாத செம்மண் சாலை. சூரியன் கவிழ்ந்து இருள் பரவத் தொடங்கியிருந்த முன்னிரவு நேரம். நிர்மலமான வானத்தில் தனித்து ஆட்சியிலிருக்கும் பௌர்ணமி நிலா. ஒரு குடும்பம் கொள்ளுமளவுக்கு மேலே மூடியில்லாத ஜட்கா வண்டியில் காதில் வைரக் கடுக்கனுடன் நான் முதலில் உட்கார்ந்திருக்கிறேன். ஆமாம். நான்தான். கட்டுக் குடுமி. அரையில் பட்டு பஞ்சகச்சம். மேலே பட்டு உத்தரீயம். பக்கத்தில் பட்டுப் புடவையில் சங்கீதா கைக்கு பஃப் வைத்த ஜாக்கெட்டில். அப்புறம் பின்னால் பட்டுப் பாவாடை சட்டையில் பெரியவளும் சின்னவளும். மரங்களுக்கிடையில் வரும் இடைவெளியில் ஓடி வரும் முழு நிலா அந்த செம்மண் தரையில் வெளிச்சக்கோடு போட்டு போட்டு மறைகிறது. மேல் சட்டையில்லாமல் முண்டாசோடு ஒருவன் நின்று கொண்டே குதிரை ஓட்டுகிறான்.

ஒரு பழங்காலத்து கோயில் வாசலில் போய் வண்டி நிற்கிறது. வண்டியிலிருந்து குதித்து இறங்குகிறேன். ராஜகோபுரமில்லை. சொற்ப கூட்டமிருக்கிறது. ஃபோகஸ் லைட் போல நிலா வெளிச்சத்தில் கோயில் முழுவதும் தெரிகிறது. நல்ல காற்று. உள்ளே நுழையும் முன் மண்டப கருங்கல் சுவரில் ஒரு சித்திரம். பழங்கால பச்சிலை காவிக் கலரில் வரைந்தது. புலித்தோலை அரைக்கசைத்திருக்கிறார் சிவபெருமான். சிரசில் பிறைசூடியிருக்கிறார் எம்பெருமான். ஜடையில் கங்கை எட்டிப்பார்க்கிறாள்.

அர்ஜுனனுக்குக் கொடுத்த பாசுபதாஸ்திரத்தை அம்பு தொடுத்துக் கையில் ஏந்தியிருக்கிறார். முதுகில் அம்பராத்தூளி. அவருடைய காலடியைச் சுற்றி நாக்கு தள்ளிய அசுரத் தலைகள் இரைந்து கிடக்கின்றன. உயிர்ப்பான அந்த ஓவியத்தைப் பார்த்து சிலிர்ந்துக்கொண்டே உள்ளே செல்கிறோம்.

அது ஒரு அம்மன் கோயில் என்று தெரிகிறது. கர்ப்பக்கிரஹத்துள் அரை முழம் வெண் தாடி வைத்த ஆகிருதியான குருக்கள் கணீரென்று ஸ்லோகம் சொல்லி தீபாராதனை காண்பிக்கிறார். அபய ஹஸ்தங்களோடு ஆறடிக்கும் மேலிருக்கும் அம்மன் சிலை. கர்ப்பக்கிரஹம் ஒரு அதிசய அமைப்போடு இருக்கிறது. அம்மனுக்கு வலதுபுறம் வெளி பிரகாரமெல்லாம் தெரிய திறந்தவெளியாக இருக்கிறது. வானத்தில் நிலா ஒளிர்வதை சன்னிதிக்குள்ளிருந்து பார்ப்பது மனசுக்கு ரம்மியமாக இருக்கிறது. கோயிலுக்குப் பின்னால் சலசல ஓசையுடனும் நிலா வெளிச்சம் வெள்ளிக் கம்பிகளை வாரி இறைத்த காவிரி கரைபுரண்டு ஓடுகிறது.

“ம்... குழந்தை பாக்கியம் வேணும்னு வேண்டிக்கிறவா இந்தப் பக்கம் வாங்கோ”ன்னு அழைக்கிறார். இரண்டு மூன்று பேர் அவருக்குப் பக்கத்தில் சென்று இடது புறம் கொஞ்சம் மேடாக இருந்த இடத்தில் சம்மணமிட்டு அமர்கிறார்கள்.

“இப்ப வானத்துல நிலாவைப் பாருங்கோ...”

பார்த்தவர்கள் பரவசப்படுகிறார்கள்.

“தெரியறதா?”

“ம்...அம்மன் ஜொலிக்கிறா...” என்கிறாள் ஒரு மாது.

நான் நிமிர்ந்து பார்க்கிறேன்.

பால் நிலா இப்போது வண்ண நிலவாக இருக்கிறது. ரத்தினம், பவளம் ,முத்து வைர வைடூர்யங்களால் அலங்காரம் பண்ணிக்கொண்டு அம்மன் கலகலவென்று சிரிக்கிறாள். மெய்சிலிர்த்துப் போகிறேன்.
பக்கத்தில் ஒரு பச்சை உடம்புக்காரி “ரெண்டு மாசத்துக்கு முன்னால தான் வந்தேன். இந்த மாசம் கொழந்தை பொறந்திருச்சு..” என்று கையில் துணி சுற்றி ஒரு கைக்குழந்தையை ஏந்திக் கொண்டு சிரிக்கிறாள். இரண்டு மாதத்தில் குழந்தையா என்று வாய் பிளந்து ஆச்சரியமாகப் பார்க்கிறேன்.

அம்மனை தரிசித்துவிட்டு வலது புறம் திரும்பினால் ஒரு நாகர் சன்னிதி. ஒரு பீடத்தில் உயிரோடு ஒரு நாகம் அமர்ந்திருக்கிறது. படமெடுத்து ஆசீர்வாதம் செய்யும் போஸில் மேனியெங்கும் தீபாராதனை ஒளியில் பளபளக்கிறது. பார்த்தால் பயமாக இல்லை. அனைவரும் தரிசிக்கிறோம். “யானை தும்பிக்கை வைக்கிறா மாதிரி இதுவும் பண்ணுமா?” என்று சின்னவள் குனிந்து கேட்கிறாள். சிரித்துக்கொண்டே கோயிலை விட்டு வெளியே வருகிறோம்.

ஒரே ஆச்சரியம். கோயிலுக்குள் செல்லும் போது தூண்களில் தீவட்டி சொருகியிருந்தார்கள். இப்போது வெளியே சீரியல் பல்புகள் ஒளிர்கிறது. வாசலில் அர்ச்சனைத் தட்டு மற்றும் பூக்கடைகள். பார்க்கிங் டிக்கெட்டும் கஷ்கட்டில் பையோடும் வேஷ்டியை மடித்துக்கட்டிய ஒருவர் நிற்கிறார்.

ஐராவதம் போல ஒரு வெள்ளைக் கலரில் ஒரு பியெம்டபிள்யூ வந்து நிற்கிறது. சட்டையில்லாமல் முண்டாசு கட்டிக்கொண்டு ஜட்கா ஓட்டியவன் தலைக்கு வெள்ளை தொப்பியுடன் ஒயிட் அண்ட் ஒயிட்டில் கதவு திறந்துவிடுகிறான். க்ராப்பு தலையுடன் நானும் ஃபேமிலியும் காரேறி பறக்கிறோம். ஆனால், அதே செம்மண் சாலை. பின்னால் புழுதி பறக்கிறது.

எழுந்துவிட்டேன். இதை நினைத்துக்கொண்டே ஒரு ஐந்து நிமிடம் அதிகமாக பல் தேய்த்தேன். காஃபி குடிக்கும் போது வீட்டிலுள்ளோர்க்கு வேண்டிக்கொண்ட தெய்வங்கள் எல்லாம் கண் முன் வந்தது. “கனவுல நாகர்லாம் வந்ததுன்னு சொன்னியே.... பொன்னமராவதி அழகிய நாச்சியம்மனுக்குப் போனுமோடா?” என்றாள் அம்மா.

எல்லோரும் இணைந்திருங்கள்

வாகனத்தைத் துருவித் துருவி சோதனையிட்டு சோழாவை பிரதக்ஷிணமாக வரச்சொன்னார்கள். சரி பிரதக்ஷிணம் போகலாமென்றால் சக்ராகாரமாக ஒரு ஒரு கி.மீக்குச் சுழற்றிவிட்டு, கொடுவா மீசையாள் கதவைத் திறந்து வண்டியை வாங்கிக்கொண்டு, நமக்கு கிச்சுகிச்சு ஏற்படுத்தும் வண்ணம் பாம் கீம் ஏதும் இடுப்பில் கட்டிக்கொண்டோ பாக்கெட்டில் போட்டுக்கொண்டோ வந்துவிடப்போகிறோம் என்று தலையோடு கால் டிடெக்டரால் நீவி இருகரம் குவித்து “வணக்கம்” கூறி உள்ளே விட்டார்கள்.

அழைப்பட்டையில் போட்டிருந்த ஆறரைக்கு ஆரம்பிப்பதற்கான சலனமேயில்லாமலிருந்தது ராஜேந்திரா. ராஜராஜனின் பெயரை எந்த அறைக்கு வைத்திருப்பார்கள், கரிகாலன், விஜயாலயன், சுந்தர சோழன், கண்டராதித்தன் போன்றவர்களின் நாமகரணங்களை எந்தெந்த ஹாலுக்கு சூட்டியிருப்பார்கள் என்று கற்பனைக் குதிரையில் சோழர்கள் காலத்திற்கு பயணித்துக்கொண்டிருக்கும் போது ”காஃபி சாப்பிடுங்கள்” என்று ராஜோபசாரம் செய்தார்கள். சாஸரளவு மோட்டாத் தட்டை பிஸ்கெட்டோடு.

நீலக் கலர் தீம் போலிருக்கிறது. டிஸ்கொதே ஆட உள்ளே வந்தது போல நாலாபுறமும் ஃபோகஸ் லைட்டில் நீலம் சேர்த்து சுழற்றி சுழற்றி அடித்து அரையிருட்டு ஹாலில் யாரையோ தேடிக்கொண்டிருந்தார்கள். ந்யூ இயர் பாஷ்ஷை இன்றே ஆரம்பித்தது போன்ற ஒரு தோற்றம். ஜிலுஜிலுக்கும் ஆடையில் சுருக்குப்பையோடு யுவதிகள் யாராவது உள்ளேயிருக்கிறார்களா என்று பம்பாய் பட “கண்ணாளனே..” காமிரா போல ஒரு தடவை விழியிரண்டையும் சுழற்றிப்பார்த்தேன். ஒரேயொரு ஆங்கில மாதுவைத் தவிர மருந்துக்குக் கூட அறைக்குள் மாதரில்லாத ஒரு கூட்டம்.

கம்பெனியின் அருமை பெருமைகளை விளக்கும் விதமாக ஆரம்பித்த பவர்பாயிண்ட்டில், இதோ கண்மூடிக் கண் திறந்தால் மலரப்போகும் 2015ல் வெகுஜன புழக்கத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்களைப் பட்டியலிட்டார். நெட்வொர்க்கிங்கில் Self Healing Networks - தகவல் பரப்பும் வழித்தடங்களில் கோளாறு ஏற்பட்டால் தன்னைத் தானே திருத்திக்கொள்ளும் தொழில் நுட்பம், ஒரு எம்பி ரெண்டு எம்பி இண்டெர்நெட்டுக்கே இப்போது சிங்கியடிப்பதற்குப் பதிலாக 100யெம்பி ப்ராட்பேண்டாம் - 100mbps consumer brandband. உலக இணைய வரலாற்றில் முதன் முறையாக என்று தீபாவளி ரிலீஸ் பண்ணுவார்கள். இலவச மெயில் சேவைகளில் பாப்பப் விளம்பரப்படுத்தி. ஹோம்தியேட்டரில் கம்ப்யூட்டரை இணைத்து சோஃபா பக்கத்தில் பாக்கெட் பாக்கெட்டாக சிப்ஸும் பாப்கார்னும் கொரித்து ரஜினியும் கமலும் அடுத்த ஜெனரேஷன் கதாநாயகிகளோடு ஆடுவதைக் கண்டு இரசிக்கலாம்.

எதற்கெடுத்தால் யூட்யூப், விக்கி என்று இணையத்தில் சேர்ந்து நமது கலாரசனைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குப் பதிலாக Web of M2M. இணைய இணைப்பிலிருக்கும் உங்கள் வீட்டுக் கணினியும் ஊரார் வீட்டுக் கணினியும் பேசிக்கொள்வது. பகிர்ந்துகொள்வது. இப்போதே டாரண்ட் என்ற வடிவத்தில் இது அசுரத்தனமாக ஆக்கிரமித்திருக்கிறது. இத் தொழில்நுட்பத்தில் மால்வேர், ட்ராஜன் ஆபத்துகளில்லாமல் இன்னும் கூடுதல் சொகுசுகளைச் சேர்த்துச் சுகப்பயணமாக அமையுமாம். Interactive Video. இதுவும் ஆப்பிள் வைத்திருப்பவர்கள் (நானும் என் அமெரிக்க அக்காவும்) ஃபேஸ்டைம் போன்றவைகளினால் முகத்துக்கு முகம் பார்த்து இப்பவும் பேசிக்கொள்வதுதான். ஊரில் கிடைக்கும் சகல கேட்ஜெட்டுகளிலும் இதை நிறுவி எப்போதும் பக்கத்தில் ஒருவராக பார்த்து பேசி பழகிக்கொண்டிருக்கலாம்.

தமிழில் பேசினால் எதிராளிக்கு ஆங்கிலத்தில் கேட்கும்படியாக பாக்கெட்டிலிருந்து மொழிபெயர்க்கும் ஒரு துபாஷ் இயந்திரமிருந்தால் எவ்வளவு சௌகரியமாக இருக்கும் என்று என்போன்ற அரைகுறை ஆங்கில அறிவுக்காரர்களின் வேதனைக்கு ஆறுதலாக Speech to Speech transalation. கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் போல எசகுபிசகாக மொழிப்படுத்திப் படுத்தினாலும் போதிய அவகாசம் கொடுத்தால் கவிதை கலிப்பாக்களையே மொழிமாற்றம் செய்வதற்கு மெச்சூராகிவிடும்.

கூகிள் நாமாவை மேனியில் அச்சடித்த காரில் பயணம் செய்யும் ஒரு பார்வையற்றவரைக் காண்பித்து சிக்னலுக்கு சிக்னல் நின்று செல்லும் Driverless Car அடுத்த டெக்னாலஜி என்று ஒரு ஸ்லைட். இது சந்தைக்கு வந்தவுடன் ஒரு லாட் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து தீர்க்கமான பார்வையிருந்தும் சிக்னல் ஸ்கிப் செய்பவர்களை அதில் உட்காரவைத்து அனுப்பலாமோ என்று தோன்றியது. டிபி டிபியாக ஸ்டோர் செய்துகொள்ளத் தோதான Large mobile Storage. விட்டால் நம்மாட்கள் ஒரு மொபைலில் ஒரு சர்வரே ஓட்டும் காலம் காத்திருக்கிறது. முப்பரிமாண ப்ரிண்டிங். 3D Printing.

Intelligent Optical chip என்று பயோ சிப்ஸ்கள் மூலமாக இரத்த அழுத்தம் சர்க்கரையளவுகளை அவ்வப்போது கண்டறிந்து “நீ சாப்பிட்ட ரஸமலாய்க்கு இன்னும் நாலு கிமீட்டர் ஓடணும்” என்று கட்டளையிடும். இதயத்திற்கு ரத்தம் செல்வது ஐந்து சதவிகிதம் குறைகிறது. அப்பல்லோவில் போய் படுத்துக்கொள் என்று வாத்சல்யத்துடன் சொல்வது போலக் கூட ட்யூன் செய்துவிடுவார்கள்.

சிகரம் வைத்தாற்போல மிசியோ ககூவின் Tele immersion வீடியோ காண்பித்தார்கள். சென்னையில் உங்கள் பாரியாளும் அரேபியாவிலோ அமெரிக்காவிலோ நீங்கள் இருந்தால் வர்ச்சுவலாகச் சுழன்று சுழன்று ஆடலாம். உள்ளூரில் நடக்கும் பர்த்டே பார்ட்டிகளுக்கு கடல்கடந்து வசிப்பதானாலும் தேவ ஸ்வரூபமாக கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ககூவின் களிநடனம் இங்கே: http://www.youtube.com/watch?v=Jydfe3w-GAI

மத்ததெல்லாம் நெட்வொர்க்கிங்கே ஸ்மரணையாக இருப்பவர்களுக்கான அனுபூதிகள்.

அமேஸான் காட்டு மலைப்பாம்பென ரொம்பப் பெரிதாக நீண்டுவிட்டது. ஓவர் டோஸ் ஆகும் முன்னர் தொடரும் கார்டு போட்டுவிடலாம்.

பாலகுமாரனுடன் புத்தகக் காட்சியில்!

பத்தாம் தேதி கோயில் திருவிழாவுக்கு கொடியேத்துகிற மாதிரி ஆரம்பித்ததிலிருந்து வொய்யெம்சியேவுக்கு போவதற்கு ஆளாய்ப் பறந்தேன். நேற்று அந்த வேளை வாய்த்தது. 37வது புத்தகக் காட்சி. சைதையிலிருந்து வரும் போது தேவர் சிலை சிக்னலில் யூ டர்ன் எடுக்கும் போதே நந்தனம் கல்லூரி மைதானத்திற்கு எதிரே கை போட்டு நாற்சக்கர வாகனங்களை உள்ளே கடத்திக்கொண்டிருந்தார்கள். வலது மீடியோட்டரோடு அணைத்துத் தப்பித்து மெயின் நுழைவுவாயிலுக்குச் சேப்பாயி திறமையாகக் கொண்டு சேர்த்தாள்.

உள்ளே நுழைந்தவுடன் கண்ணில் பட்டது நாய்க் கண்காட்சி. பக், அல்சேஷன், டாபர்மேன் மற்றும் பெயர் சொல்லத்தெரியாத பெரிய மனுஷர்கள் வீட்டு செல்லங்கள் நாய்கள் என்ற பெயரில் உலவியது. கையில் பிடித்துக்கொண்டு நடந்தவர்களைத் தாண்டுவதற்கு சிரமமாயிருந்தது. அரை மைக்ரோ செகண்ட் அடித்த ஹாரனைக் கரிய நிற புஷ்டியான நாயொன்று இனம் கண்டு கொண்டு “அட.. நாயே..” என்று முறைத்தது. வாலைச் சுருட்டிக்கொண்டு பதவிசாய் வண்டியை ஒட்டிக்கொண்டு போய் இரண்டு பேர் சுவற்றைப் பார்த்து நின்றுகொண்டு தலை குனிந்து நிலம் ஈரமாவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் இடமருகே நிறுத்தினேன். இயற்கை யோகாவிலிருந்த அவர்கள் நிறுத்தவில்லை.

காட்சிக்குப் போகும் வழியெங்கும் வாகனங்கள். 1500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். 1250 வாகனங்கள் வழியோரத்தில் நின்றிருந்தது. காரம் போட்ட படா அப்பளத்தைக் கடித்துக்கொண்டே வந்தவனைப் பார்த்து ஷோவுக்கு வந்திருந்த நாயொன்று நாக்கைத் தொங்கப்போட்டது. எதிர்சாரிக்கு எகிறி கடித்துக்கொண்டு தொடர்ந்தான்.

பத்திரிகையில் பணி புரிவதால் அலுவலகத்தில் நண்பர்களிடம் இலவச நுழைவுச் சீட்டுப் பிச்சையெடுத்தேன். ஊஹும். எவரும் மசியவில்லை. பத்து ரூபாய் செலவுக்காக இல்லை. டிக்கெட் வாங்கும் வரிசை மௌண்ட் ரோடு வாசல் வரை நின்றால் அதில் ஒரு அரை மணி நேரம் வீணாகுமே என்ற புத்தக ஆசையில். ஒரே கவுண்டரில் இருவர் கிழித்துக்கொண்டிருந்தார்கள். ஆயிரம் ரூபாய் சலவைத் தாளை காண்பித்து ஒருவர் டிக்கெட் கேட்டு மிரட்டிக்கொண்டிருந்தார். அடக் கடவுளே!

நுழையுமிடத்தில் இருந்த செக்கர் டிக்கெட்டில்லாமல் சொக்கனாதனே வந்தாலும் உள்ளே விடமாட்டார் போல நக்கீரத்தனமாகத் தெரிந்தார். நான்கு டிக்கெட்டுகளையும் அவர் கையில் கொடுத்ததும் “போங்க..போங்க..” என்று எண்ணிப் பார்க்காமலேயே உள்ளே விட்டபோது அவரது வெள்ளையுள்ளம் புரிந்தது. நுழைந்ததும் வலது சாரியில் கடைசி ரோவிலிருந்து பார்க்க ஆரம்பித்தேன். சிலர் அமரர் நம்மாழ்வார் புத்தகங்களை பிரித்துப் பிரித்துப் பார்த்தார்கள். அகஸ்தியர் போகரின் டு கலர் ப்ரிண்டிங் அட்டைகளை தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டும் சிலர் சித்தபுருஷர்களின் ஆசியை தேடிக்கொண்டிருந்தார்கள். ராஜ நாகம் அட்டையை அலங்கரிக்க இந்தியப் பாம்புகள் என்ற புத்தகம் கண்ணில் பட்டது. எடுக்கலாமென்றால் “இதெல்லாம படிக்கப்போறீங்க?” என்று மிஸ்ஸஸ் புஸ்புஸ்ஸென்றுச் சீறிக் கொத்தினார்கள்.

விசாவில் இரண்டு வாங்கினேன். திருமகள் வாசலில் பாலாவை ஃப்ரேமில் மாட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். நெருடியது. கேமிராவும் வாட் போரில் எதிரி மன்னனை வீழ்த்தும் வாள் போல இரண்டடி நீள மைக்குமாக பாதசாரியில் சேனல்காரர்கள் வலம் வந்துகொண்டிருந்தார்கள். நாலைந்து புத்தகங்களுடன் வீருநடை போட்டுக்கொண்டிருக்கும் போது சன் டிவிக்காரர் ”லீவு நாள்ல இந்த புக் ஃபேர்ல புக் வாக்கிறதப் பத்தி நாலு வார்த்தைச் சொல்லமுடியுங்களா?” என்று நெருங்கினார். கேட்டபடி பேசினேன். “எப்ப வரும்?” என்று அல்பமாகக் கேட்டேன். “ஏழு மணி.. சன் ந்யூஸ்ல” என்று காமிராவை மூடிக்கொண்டு “அவர் யாரோ..நான் யாரோ.” என்று போய்விட்டார். இதை எழுதும் வரை ஒளிபரப்பியதாக தெரியவில்லை. போகட்டும்.

எழுத்தாளர்கள் விண்ணப்பக்கலாம் என்று ஒரு பதாகை தொங்கியது. பிக்கலாம் என்று எழுதுவதற்கு பிடிக்கவில்லை போலும். சாப்பாடு, போகவர பயணச்சீட்டோடு மலேசியா பயணமாம். இலக்கிய எழுத்தாளர்களுக்குக் குடிக்க எதாவது வேண்டுமே. அதற்கெல்லாம் வழிவகை செய்தால் பத்து பேருக்குப் பயணச்சீட்டு எடுக்கலாமே! 120 பக்கங்களுக்கு மிகாமல் எழுதவேண்டுமாம். ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இன்னொரு ஸ்டாலில்”Improve your Enlish தமிழ் விளக்கத்துடன்” என்று இங்லீஷில் ஜியை விட்டு எழுதிய விங்லீஷ் ஸ்ரீதேவியைத் தேடினேன். அகப்படவில்லை. விவேகானந்தர் படங்களுடன் பாலகௌதமன் ஸ்டாலில் அமர்ந்திருந்தார். பசங்களுக்கு லேபிளும் விவேகானந்தரின் திருவுருவப் படங்களும் கொடுத்தார்கள்.

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போல அப்படியே வாசகக் கூட்டத்தோடு கூட்டமாக நகர்ந்து கொண்டிருக்கையில் டிஸ்கவரியில் வேடியப்பன் பிஸியாக பில் போட்டுக்கொண்டிருந்தார். ”வேடியப்பன்” என்று தொந்தரவு செய்து விஜாரித்தேன், பக்கத்திலிருந்து “நேர்ல ரொம்ப யங்கா இருக்கீங்க சார்..” என்று ஒரு கணீர்க் குரல். டீஷர்ட்டில் ஆஜானுபாகுவாக நின்றிருந்தார்.”தேங்க்ஸ்...” என்றதற்கு “டீலிங் புரியலையா?” என்று எதிர் கேள்வி கேட்டு மடக்கினார். சுதாரித்துக்கொண்டு “நீங்களும் ரொம்ப யங்கா இருக்கீங்க.. காத்தடிச்சா பறக்கிற மாதிரி இளைப்பா இருக்கீங்க...” என்று ஒன்றுக்கு பத்தாக பதில் மரியாதை செய்துவிட்டுதான் வந்தேன். யங்கா இருக்கேன் என்ற உண்மையை இந்த அண்டமறிய உரைத்தவர் ஜீவ கரிகாலன்.

அடுத்த ரெண்டாவது ரோவில் குமுதம் ஸ்டால் வாசலில் சுப்ரஜா ஸ்ரீதரன். கையைப் பிடித்து உள்ளே அழைத்துக்கொண்டு போனார். உள்ளே ப்ரியா கல்யாணராமன். நாற்காலியில் சுதா ரகுநாதன் சர்வாலங்கார பூஷிணியாக அமர்ந்திருந்தார். பக்கத்தில் வெள்ளையில் ஆர்ட் டைரக்டர் ஜி.கே. 108 திருப்பதிகள் வெளியீட்டு விழா. எனது மனைவி சங்கீதாவை சுதாவுக்கு பொன்னாடை போர்த்த ஏற்பாடு செய்தார் சுப்ரஜா ஸ்ரீதரன். கலகலவென்று பேசிக்கொண்டிருந்தோம். ”ப்பா...கால் வலிக்குதுப்பா...” என்று பெண்கள் என் இடுப்பில் குத்தினார்கள். பேர் பாதி ஸ்டால்களைப் பார்வையிடாமல் நேரே சுப்ரஜாவிடம் சென்றேன்.

ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பது கிடையாது என்று பசங்களுக்குப் புத்திமதி கூறி ஐஸ்க்ரீம் சாப்பிட அழைத்துவந்தார். டிவி அடிபடமால் இருக்க அடைத்துவரும் தெர்மாகோல் பாக்ஸை கையில் வைத்துத் தேய்த்தால் பந்துபந்தாக உதிருமல்லவா? அப்படி ஒரு ஐஸ்க்ரீம். மினி மெல்ட்ஸாம். அமெரிக்காவில் பிரபலமானது என்று சென்று வந்த மருமான் சொன்னான். ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பாலகுமாரன் வந்தார். வணக்கம் சொன்னேன். அடையாளம் சொன்னேன். புரிந்து கொண்டு “ஃபேஸ்புக்ல கொஞ்சம் புஷ்டியா இருக்கிறமாதிரி இருக்கு...” என்று சொல்லிவிட்டு பசங்களின் கன்னத்தைத் தடவி ஆசீர்வதித்தார். வீகேயேஸ் இன்று நிராயுதபாணியாக வந்தாலும் தன்னுடைய லுமியாவில் நேர்த்தியாக ஃபோட்டோ பிடித்துக் கொடுத்தார். நான் வீடு வந்து சேர்வதற்குள் என்னுடைய மெயிலுக்கும் அனுப்பி மகிழ்வித்தார். அவருக்கு என் நன்றிகள் பல!

வாங்கின புக்ஸ் கீழே கொடுத்துள்ளேன். இன்னும் ரெண்டு மூன்று வாங்கவில்லை. மீண்டும் போவேன்.

1. திருக்குறள் பரிமேலழகர் உரை
2. உயிர்ச்சுருள் - பாலகுமாரன்
3. எரியாத நினைவுகள் - அசோகமித்திரன்
4. 1945ல் இப்படியெல்லாம் இருந்தது.... - அசோகமித்திரன்
5. அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்
6. பட்டினத்தார் பாடல்கள் (விருத்தியுரை) - திரு.வி.க
7. நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) - நகுலன்
8. வாஸவேச்வரம் - கிருத்திகா
9. திருமூலரின் திருமந்திரம் - சி.எஸ். தேவநாதன்
10. ஜகத்குரு - ப்ரியா கல்யாணராமன்
11. வாஷிங்டனில் திருமணம் - சாவி
12. பாதகம் செய்பவரைக் கண்டால் - பாலகௌதமன்
13. நாய்கள் - நகுலன்
14. தமிழ் அன்றும் இன்றும் - சுஜாதா
15. வேணியின் காதலன் - சுஜாதா
16. விளிம்பு - சுஜாதா
17 வேதம் (வாழ்வின் வழிகாட்டி) - சுவாமி ராம்ஸ்வரூப்ஜி, யோகாச்சார்யா
18. காயத்ரீ மந்திரம் (பொருளும், ஹோம விதியும்) - சுவாமி ராம்ஸ்வரூப்ஜி, யோகாச்சார்யா
19. தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை
20. துளி விஷம் - ஆனந்த் ராகவ்
21. டாக்ஸி டிரைவர் - ஆனந்த் ராகவ்

ஸ்வர்க்க விளிம்பு

பாற்கடல், தேவாசுரர்கள், மத்து மந்திரமலை, வாசுகிப் பாம்பு என்றெல்லாம் ஏகத்துக்கும் மெனக்கெடாமல் இன்றைக்கு சர்க்கரைப் பொங்கல் தேவார்மிதமாக இருந்தது. ச்சாயா ஸ்வர்ஷ்லாம்பா சமேத ஸ்ரீசூரியநாராயண ஸ்வாமிக்கு நெய்வேத்தியம். இயற்கை தெய்வம் பாஸ்கரனுடன் இதர தேவாதி தேவர்களும் இன்றைக்கு எங்கள் வீட்டிற்கு வந்திருக்கக்கூடும். அடிநாக்கு வரை தித்திப்பு. ஆனால் எவ்ளோ வாய் இறங்கினாலும் திகட்டவில்லை. ஷுகர் பற்றிய அனாவசியக் கவலையெல்லாம் ”சர்வேஸ்வரா... சரணம்...” என்று பகவானிடம் விட்டுவிட்டேன். பொன் வறுவலான முந்திரியும் கிஸ்மிஸ்ஸும் பொக்கிஷமாய்ப் புதைந்து கிடந்த சர்க்கரைப் பொங்கலை தளதளவென்ற நெய்க்குழம்பில் புரட்டிஒரு வெட்டு வெட்டியாயிற்று. வலது கையில் கண்ணாடியில்லாமல் முகம் பார்க்குமளவு நெய். “மிந்திரியெல்லாம் உன் இலையிலேயே விழணுமாடா? பிறத்தியாருக்கு வேண்டாம்?”ன்னு சாரதாப் பாட்டி சிரிச்சுண்டே கேட்பாள். மிந்திரி கரண்டியில வரும்வரை கிளறிக் கிளறிப் போடுவாள்.

சாராயம் குடித்தவுடன் வரும் போதையைப் போல சாப்பிட்டு முடித்தவுடன் அப்படியொரு தூக்கம் கண்ணை அசத்தியது. ஷுகர் எகிறியிருக்கலாம். அஞ்சு பத்து நிமிஷம் கஷ்டப்பட்டு டிவி பார்த்துவிட்டு மொள்ள தள்ளாடியபடியே நடந்து வந்து படுத்துவிட்டேன்.

எழுந்ததும் “விளம்பு”வைக் கையிலெடுத்தேன். பாண்ட் பாக்கெட்டில் சொருகிக்கொண்டு காலேஜ் காண்ட்டீன், தியேட்டர் இண்டெர்வெல், கிண்டியிலிருந்து நந்தனம் பஸ் ட்ராவல், ஒரு மசால்தோசை சொல்லிவிட்டு மேஜைக்கு வரும் நேரம், கால் டாக்ஸி காத்திருக்கும் வேளை என்று கிடைக்கும் சொற்ப நேர நிமிஷங்களைக் கரைக்க தோதான சொரூபத்தில் வெளியிட்டிருக்கும் சுஜாதாவின் குறுநாவல்.

விஜயன் சாரதி என்று ஸ்பிளிட் பர்சனாலிட்டியாக ஒரே ஆள் விஜயசாரதியைக் கடைசி பாராவில் காண்பிக்கும் சுஜாதாத்தனமான க்ரிப்பிங் கதை. ஆனா சொல்ற விதத்துல இருக்கிற சுவாரஸ்யம் இருக்கே.....தொறந்த வாய்க்குள்ள டைனோசரே போய்ட்டு வரும். கதைக்கு நடுவில வசனமாய் செக்காவ் சொன்ன “I dream the dreams of ten men"ஐ வச்சுருக்கார். ப்பா... ராட்சஷன். அந்தக் கேரெட்க்டருக்கு குழந்தைலேர்ந்து நடந்ததெல்லாம் எண்ணங்களா மனசுல முட்றது. சின்ன வயசுல அம்மாவோட கெட்ட நடத்தையைப் பார்த்தாலும் அவ தனக்காகப் பட்ட கஷ்டத்துகாக அம்மா...அம்மான்னு உருகுற கேரக்டெர். சின்னோண்டு கரு. டைட்டா இழுத்துச் சொல்லி கடைசியில தலையோட கால் கதையைத் திருப்பிப் போடறதுக்கு இனிமே ஒரு ஆள் பொறந்துதான் வரணும்ப்பா...

கடைசி வரியில ஒரே ஆள்தான்னு தெரிஞ்சப்புறம் திரும்பி ஒருதடவை படிக்கத்தூண்டும் வர்ணனைகள். விளிம்பு.

சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு ஸ்வர்க்கத்தின் விளிம்புல நின்றவனை மீட்டு பூலோகத்துக்குக் கொண்டு வந்த விளிம்பு!!

சுமை

சுமை
=====
குதிரைவண்டியா அது? கண்ணைச் சற்று இடுக்கிக்கொண்டு பார்த்தேன்... ஆமாம்.. அப்படித்தான் தெரிகிறது.. பக்கத்திலிருந்த ஜிப்பா சொன்னார் “இது குதிரையில்ல...கோவேறு கழுதை...”. சிரித்தவரின் பல் கழுதையோடது மாதிரியே இருந்தது. ஸ்டேஷனிலிருந்து வருவோரை சகாய கூலியில் ஏற்றிக்கொண்டு முதுகில் சாட்டையால் அடிபட ஓடுவது மாதிரி வேகமாக நடக்கும். இந்த ராவேளையில் லொங்குலொங்கென்று ரெண்டு சிங்கிள் அடிக்கும். ஓட்டுபவனுக்கு ஒரு கட்டிங்கிற்கு ஆச்சு.

ப்ருஷ்ட பாகத்தில் வைக்கோல் குறுகுறுக்க ஏறி உட்கார்ந்தாச்சு. காலையிலிருந்து தீனியாகக் கொள்ளு வைத்தானோ இல்லையோ..சாட்டையால் உரிமையோடு விர்ர்விர்ரென்று விசிறி விசிறி அடிக்கிறான். சிலது முதுகிலும் சிலது கட்டையிலும் படுகிறது. படீர் படீர்னு அடிக்கையில் என் நெஞ்சில் சுளீர் சுளீரென்று விழுகிறது. தெனம் தெனம் நமக்கு நாக்கால் விழும் அடிகள் போலவே இருக்கிறது. இழுக்கும் குதிரையோ கழுதையோ என்னைப் போலவே ஜென்மம் எடுத்திருப்பதாகத் தோன்றியது. அன்பின் வழியது உயிர்நிலை. சொன்னது யாருப்பா? வழியெங்கும் பள்ளமும் மேடுமாக தடுமாறியது. கனைத்தது. கொஞ்சம் எக்கிப் பார்த்ததில் அது அழுதது போலக்கூட இருந்தது. கழுதையோ குதிரையோ சாட்டையடி வலிக்காதா?

சொற்ப தூரம் கடந்ததும் குதிரைக்கு கால் லேசாக நொடித்தது. சுளீர். மின்னல் போலத் தாக்கினான். பதறினேன். இறங்கிவிடுவோமா என்றெண்ணும் போது அதற்காக அதை அடித்துத் துன்புறுத்துவானோ என்ற பயம் எழும்பாமல் உட்காரவைத்தது. மனசு கனத்தது. சித்தர்கள் போல உடம்பை இக்கணமே இலவம் பஞ்சாகிக்கொள்ள முடியாதா என்று ஏக்கம் ஒருபுறம். காயமே இது பொய்யடா... காற்றடைத்த பையடா என்றார்களே.. அப்படி காற்று மட்டும் அடைத்திருக்கும் பையாகாதா என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. சீக்கிரம் போனால்தானே பொங்கிக் கொட்ட முடியும் என்ற அவசரம் ஒருபுறம்.

எவ்வளவோ நிகழ்வுகளில் இப்படித்தானே இருதலைக் கொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்டுவிடுகிறோம். அதுவும் கழுத்தில் கிடக்கும் கயிற்றால் கட்டுண்டு கிடக்கிறது, எனக்கும் அப்படியே! இன்னும் ரெண்டு தெரு கடந்தால் வந்துவிடுவோம். நம்முடைய எழுபது கிலோ பாரம் இறங்கினால் அதன் சுமையில் பேர் பாதி குறைந்துவிடும். அதற்கப்புறம் அடிக்காமல் விடுவானா அந்த வண்டிக்காரன்?

வாசலில் பூட்டு தொங்கியது. ஆளை எங்கே காணோம்? தெருவின் இரண்டு பக்கமும் கண்களால் அலசினேன். கதவிடுக்கில் லெட்டர் எதுவும் தொங்குகிறதா என்று பார்த்தேன். ஊஹும். இல்லை. இன்னும் கொஞ்சம் கழுத்தை இறக்கிப் பார்த்ததில் ஜன்னலோரத்தில் கைலி அவிழ கிடந்தான். ச்சே.

வெறுத்துப்போய் வாசல் படியிலேயே உட்கார்ந்தேன். ஓரமாய்க் கிடந்தவன் வாயிலிருந்து கோழை வடிந்தது. நாயொன்று மோப்பம் பிடித்து விலகி ஓடியது. தெருக்கோடியில் பார்த்தேன். வண்டியை விட்டு கயிற்றை அவிழ்த்து கழற்றிவிடப்பட்ட குதிரையோ கழுதையோ லாம்ப் போஸ்ட்டில் கட்டப்பட்டிருந்தது. அதன் சுமை இறங்கியதில் எனக்கு மகிழ்ச்சிதான். யார் சுமையை யார் சுமப்பார்?

காமிராக் கவிஞர்

’ப’ வரிசை டைரக்டர்கள் என்ற கோடம்பாக்கத்து தொகையியக்குனர்களில் பாலு மகேந்திரா விசேஷமானவர். வாழ்நாளெல்லாம் ராஜாவுக்காகக் காத்திருந்து படம் பண்ணியவர். ”பாலு மகேந்திரா தொப்பி” என்கிற புது அடையாளத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். பாடல்களைப் பின்னணியில் ஓடவிட்டு கதாநாயக நாயகியர்களைத் திரையில் நடக்கவிட்டவர். கேமிராக் கவிஞர் என்று சக கலைஞர்களால் மெய்க் கீர்த்தி பாடப்பெற்றவர். யதார்த்த இயக்குனர் பாலாவுக்கு குருநாதராக இருந்தவர். பிறந்தது ஸ்ரீலங்காவில். லண்டனில் படித்தார். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் கேமிராவுக்காக தங்கம் வென்றவர். கன்னடத்தில் தொடங்கினார். இப்படியாகப் பல...

”விஜி..விஜி... சீனு விஜி...விஜி...சீனு விஜி...” என்று ரயில்வே ப்ளாட்ஃபாரத்தில் சேறும் சகதியுமாகத் தெரியும் மூன்றாம் பிறை கமல்ஹாசனில் மகேந்திராவும் கலந்திருக்கிறார் என்பதை யாராலும் மறுக்கயிலாது. எண்பதுகளின் டீனேஜர்கள் ”ஓ வசந்த ராஜா..” பார்க்கும்போதெல்லாம் பாலு மகேந்திராவை நினைக்காமல் இருக்கமுடியாது. ஷோபாவிற்கு நாலணா பொட்டிட்டு அழகு பார்த்ததில் குடும்ப ஸ்திரீகள் மங்களரமாக அதே சைஸில் பொட்டிட்டு வலம் வந்தார்கள். மூன்றாம் பிறையில் சில்க் ஸ்மிதாவை வேறு பரிணாமத்தில் காண்பித்து பார்ப்பவர்கள் மனதில் கள்வெறி பொங்கச் செய்தவர். ’வீடு’ வந்த போது ஊரில் கலை ஆர்வல அண்ணாக்கள் நிறைய பேர் பார்த்துவிட்டு வீடுவீடாகத் திண்ணைகளை ஆக்கிரமித்துச் சிலாகித்தார்கள். நான் ’நாயகன்’ பார்த்துக்கொண்டிருந்த வேளையில் வீடு கட்டி லோல்படுவது போன்ற கடப்பாரையால் இதயத்தை உடைக்கும் கண்ணீர்க் கதையெல்லாம் பார்த்து அழ பிரியப்படவில்லை.

தேசிய விருது வாங்கிய பின் தூர்தர்ஷனில் போட்டதாக ஞாபகம். அதையும் ஸ்கிப் செய்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தேன். இளையராஜாவின் நத்திங் பட் விண்ட் பின்னணியில் பூராப் படமும் இன்ச் இன்ச்சாக நகர்ந்தது. இக்கால கலைப்பட இயக்குனர்கள் இதில் ரொம்பவும் ஈர்க்கப்பட்டு மூளையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ”சதிலீலாவதி” சொக்கலிங்க பாகவதர்தான் ஹீரோ. பஸ் ஏறி வளசரவாக்கத்துக்கு அதிக நெரிசலில்லாத சென்னை சாலையில் சென்றுவந்து கொண்டிருந்தார். செங்கல் செங்கல்லாக தொட்டுப் பார்த்து அழுதுகொண்டிருந்தார். இந்தப் படமெடுப்பதற்கு தன் அம்மா சிரமதசையில் வீடு கட்டியதைப் பார்த்ததுதான் உந்துகோல் என்று பின்னர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். கஷ்டப்பட்டு வீடுகட்டியவர்கள் கட்டாயம் தாரைதாரையாகக் கண்ணீர் உகுத்திருப்பார்கள். ரணப்படுத்தியிருப்பார்.

இன்னும் வளர்ந்த பிறகு கல்லூரியில் படிக்கும் போது திரைக்கு வந்தது வண்ண வண்ணப் பூக்கள். “இள நெஞ்சே வா....” என்று ஜேசுவும் ராஜாவும் கை கோர்த்துக்கொண்டு இசை ரசிகர்களைப் புரட்டிப் புரட்டி எடுத்தார்கள். இருந்தாலும் இளசுகளின் நெஞ்சை அள்ளியது “கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி...”தான். ஊரையடுத்த ஒரு காடு. அதில் பாழடைந்த ஒரு மண்டபம். அங்கே ஒரு மர்ம இளைஞி. அவளிடம் உறவாடும் ஒரு இளைஞன். பதின்மர்களுக்கு உல்லாசக் கனவில் வரும் பிரதேசம். அவருடைய அநேக படங்களில் வருவது போல சட்டையில்லாமல் பிரசாந்த். அவரது தோளை உரசி சிரித்துக்கொண்டே வினோதினி. படத்தில் கிக் எதில் இருந்ததென்றால் வினோதினி அணிந்திருந்த பிரசாந்த் சட்டையிலும் மௌனிகாவின் இந்தியா டுடே புஸ்தகத்திலும்.

எம்சீயே முடிப்பதற்கு முன்னால் சதிலீலாவதி வந்தது. காமெடியும் தனக்கு கைவந்த கலை என்று பின்னிப் பெடலெடுத்திருந்தார். கோவை சரளாவை ஹீரோயினாகப் போட்டதில் பாலு மகேந்திராவும் தனக்கு ஜோடியாக ஏற்றுக்கொண்டதில் கமலும் திரைப் புரட்சி செய்திருந்தார்கள். “பளனி.. திருப்பதி..... பேசும் சபாபதி.. குரைக்கும் சபாபதி...” என்று பொளந்து கட்டியிருப்பார். ராமன் அப்துல்லா போன்ற படங்கள் கலெக்ஷனில் சுமார் என்றாலும் ராஜாவின் இசையிலும் மகேந்திராவின் இயக்கத்திலும் மிளிர்ந்தன.

பல நேரங்களில் வசனத்தை விட காட்சி பேசினால் போதும் என்று ஃப்ரேம் ஃப்ரேமாகத் திரைப்படமெடுத்தார். இன்று ஃப்ரேமிற்குள் படமானார். கலைஞன் மறைந்தாலும் அவனெடுத்த கலைப்படைப்புகள் மூலம் அமரத்துவ நிலையை அடைகிறான். பாலு மகேந்திரா தனது காலத்தால் அழியாத படைப்புகளில் இருக்கிறார்.

தார்ரோடு கிடைக்க வழி

”குட் மார்னிங் ஸார்!”

தினமும் கார் துடைக்கும் போது அசரீரியாய்க் கேட்கும் குரல். திரும்பினால் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் நின்று கொண்டு கைலியும் சட்டையுமாய் வாக்கிங் கோலத்தில் சிரிப்பார். பக்கத்து தெருவில் வசிக்கிறார். ரிட்டயரான மனுஷ்யர். மத்யமர். அநியாயங்களுக்குக் கொதிப்பவர். பக்கம் பக்கமாக ஒரு வரி விடாமல் முழு ஹிண்டுவும் படிப்பார் என்பது அவரது அன்றாட செய்தி அலசல்களில் தெரியும்.

“சத்யா நாடெல்லாவுக்கு வருசத்துக்கு நூறு கோடிக்கு மேலே சம்பளமாமே சார்? வாழ்க்கை பூரா உழைச்சு உழைச்சு ஓடாத் தேஞ்சாலுமே நமக்கெல்லாம் இப்படி கெடைக்குமா?”
(மைக்ரோஸாஃப்ட் பற்றிச் சொல்லவேண்டாம் என்று விட்டுவிட்டேன்)

”எலெக்ஷனுக்கு முன்னாடியே பப்ளிக் எக்ஸாமெல்லாம் வச்சு முடிச்சுருவாங்கல்ல..”

அரசியலில் நாட்டம் அதிகம். எதுகை மோனையுடன் ஜோராகத் தலைப்பிடும் புலனாய்வு வாராந்திரிகளைச் சுருட்டிக் கையில் வைத்திருப்பார்.

“கேப்டன் கூட்டத்துல சரக்கு விற்பனை அமோகமாமே”

"கெஜ்ஜிரிவாலுக்கு என்னதான் வேணுமாம்? அவர்தான் கவர்மெண்ட்டு. அவரே ரோட்டுல உட்கார்ந்து போராடராரு. கருமம் சார்..”

“மோடிதான் ப்ரைம் மினிஸ்டரா வரணும் சார். நாடு அப்பவாவது உருப்படுமான்னு பார்க்கணும்..”

"என்னோட மொபைலைக் கூட ஒட்டுக் கேட்பாங்களா?” (முகத்தில் ஒரு குழந்தையின் அப்பாவித்தனம் தெரிந்தது)

”ராகுலைப் பார்த்தாலே கான்ஃபிடெண்ட் வரலையே..”

இப்படி வரிசையாக "கேள்வியும் நானே.. பதிலும் நானே..” என்று ஒரு ஐந்து நிமிஷம் கைலி கட்டிய திருவிளையாடல் பாணபத்திரரின் அடிமை சிவா’ஜி’ போலப் பேசுவார். அப்புறம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பை சொல்லிவிட்டுக் கிளம்புவார். நான் எங்கேயும் அரசியல் பேசுவதில்லை என்று சங்கல்பம் செய்திருக்கிறேன். இன்று ரொம்பச் சூடாக இருந்தார்.

”ஊர்ல இருக்கிற சந்து பொந்திலல்லாம் ரோடு போடறாங்க.. எங்க தெருவுல மட்டும் போடலை.. குண்டும் குழியுமா அப்படியே வுட்டுட்டாங்க.. காலை வச்சா சுளுக்கிக்கிது.. வயசானவங்க இந்த தேசத்துல வாழவே முடியாது போலருக்கு...” என்று ஆவேசப்பட்டார்.

“சார்! அதுக்கு ஒரு ஐடியா இருக்கு. செஞ்சீங்கன்னா உடனே ரோடு போடுவாங்க. ஆனா கொஞ்சம் மெனக்கெடணும்.. ”

“சொல்லுங்க... எங்க கொண்டு போய் மனு கொடுக்கணும்? யாரைப் பார்க்கணும்? முதலமைச்சர் செல்லுக்கு சொல்லலாமா?” என்று யாரோ முதுகைப் பிராண்டுவது போல பரபரத்தார்.

அவர் முடிக்கும் வரை அமைதியாயிருந்தேன். என்ன பதில் சொல்லப்போகிறேன் என்று ஆர்வம் கொப்பளிக்க என்னைப் பார்த்தார்!

“முதலமைச்சரை உங்க தெருவுக்கு ஒரு ஃபங்ஷனுக்கு கூப்பிடுங்க. அது போதும்”

நாளைக்கு பேசுவாரான்னு பார்க்கணும்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails