Thursday, May 14, 2015

போகாதே.......

தொடுவானத்தில் மஞ்சள் பூசியிருந்த சாயங்கால நேரம். போர்டின் தங்கமுலாமில் "காவேரி போஜனம்”. சூரிய வெளிச்சத்தில் தகதகத்தது ப்ளேட் டம்பளர் ஓசைகள் ஆர்க்கெஸ்ட்ரா நடத்திக்கொண்டிருந்ததன. கடை பரபரப்பாக இருந்தது.

”யேய்.. யாருப்பா டேபிள் ஏழு?.. கஸ்டமர் கையி காய தேடறாங்க..” 

“அசோகா ஹல்வா... சூடாயிருக்கு.. வாசல் போர்டுல எழுது.... பக்கத்துல ஆவிபறக்கிற மாதிரி சின்னதா படம் போடு...”

“ஈவினிங் ஸ்பெஷல்... அடை அவியல்... அதையும் போல்டா எழுதிடு..... தட்டு வரைஞ்சு கலர் சாக்பீஸ்ல ஓரத்துல வெல்லச்சர்க்கரையை குமிச்சா மாதிரி போடச்சொல்லு...”

“செக்கியூரிட்டியை.. டூவீலரயெல்லாம் வரிசையா போடச்சொல்லி சொல்லச்சொல்லு... என் காருக்கு கொஞ்சம் இடம் விட்டு வண்டியெல்லாம் வைக்கச்சொல்லு....”

ஒரு வருஷமாகத்தான் வாசலில் கண்ணாடிக் கதவு. அலங்கார மேஜை. குஷன் நாற்காலி. வெள்ளித் தட்டில் வட்டமாக வெட்டிய வாழை இலைப் போட்டு உணவுப் பரிமாறல். கண்ணாடி வழியே என் ஸ்வேத ஃபார்ச்சூனரை கல்லாவிலிருந்து ரசித்துக்கொண்டிருந்தேன். வெள்ளை அண்ட் வெள்ளையில் சர்வர்கள். கண்டத்தில் ”போ”வுன் கையில் கேட்ஜட்டெல் ஆர்டர் எடுப்பவர்கள். தட்டு மட்டுமே தெரியுமளவிற்கு அரையிருட்டில் பந்தி. வாரத்திற்கு வாரம் மளமளவென்று விருத்தியடைந்து இரண்டே வருஷத்தில் கொஞ்சம் காசும் வாசலில் காரும் சேர்ந்ததில் அப்பாவோட ஆசீர்வாதம் பரிபூரணமாக நிறைந்திருக்கிறது. 

சென்னையிலிருந்து திருச்சிக்குள் நுழையும் வயிறு காயாதவர்கள் கூட “காவேரில காஃபியாவது குடிச்சுட்டுப்போவோம்...” என்று காரை நிறுத்தி உள்ளே நுழைந்துவிடுவார்கள். ”ராத்திரியும் கொஞ்சம் கடையைத் தொறந்து வச்சேன்னு வச்சுக்கோ... சேல்ஸ் இன்னும் பிச்சுக்கும்...” என்ற அடாத அட்வைஸ்களுக்கு மயங்காமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். எனக்கான கஸ்டமர்கள் யார் என்று இனம் கண்டு வியாபாரம் செய்ததில், லயன்ஸ் க்ளப் ரோட்டரி சங்கத்து உள்ளூர்வாசிகள் விழா நடத்தி பாராட்டுப் பத்திரம் கொடுத்தார்கள். ஹை க்ளாஸ் விஜிடேரியன் என்ற பெயரையும் காவேரி போஜனம் சம்பாதித்துக்கொண்டது.

“அழுக்கு வேஷ்டியும்... தோளுக்குத் சேப்பு காசித்துண்டோட... வேர்வையும் வேக்காளமுமா... புகையிலே நின்னு நின்னு..  சனீஸ்ரபகவான் பிடிச்சுண்ட நளமஹாராஜா மாதிரி கறுத்துப்போயி.. படாத பாடு பட்டார்டா அந்த மனுஷன்... சமயபுரத்தம்மாவோட க்ருபா கடாக்ஷம்... இப்போ கொஞ்சம் நிமிர்ந்திருக்கோம்...” கடையடைத்து... வாசற்படியில் திருஷ்டிக்கு சூடம் ஏற்றி... இரவு வீட்டிற்குள் காலெடுத்து வைக்கும் போது அம்மாவின் நித்யபடி புலம்பல். 

பெரிய இலுப்பச்சட்டியில் அசோகா ஹல்வா கிளறி உள்ளங்கையகல நறுக்கின வாழையிலையில் சுடச்சுட கொடுப்பார் வெங்கட்ராமய்யர். ”வெறும் ஹல்வா மட்டும் எவ்ளோ நாள் போடுவே வெங்குட்டு. அவல் கடலை வறுத்துப்போட்டு கரகரன்னு மிச்சர் போடேன். பிச்சிண்டு போகும்...” என்று ஏற்றிவிட்டவர் அட்வகேட் சீனு. 

“டே கண்ணா! வக்கீல் சீனு அவ்ளோ பெரிய மனுஷ்யர். மெட்ராஸ்லே போய் காரசாரமா வழக்காடிட்டு காரைப் போட்டுண்டு வந்து ரோடோரமா உங்கப்பா கடேலே நிறுத்தி ஹல்வாவும் மிச்சரும் சாப்டுவார். காவ்ரியாத்தங்கரைக்காரனுக்கு காஃபி போட வராதாடா? ஏம்மா தர்மு.. நீ சொல்லப்டாதா.. இல்லே ஒத்தாசைக்கு அவனுக்குப் பக்கத்துல நின்னு ஆத்திக் கொடேன்.ன்னு ஒருநாள் கெளப்பி விட்டார்...”

இப்படியாக கடை விஸ்தரிப்பு, சொந்தக்காராளோட சேதிகள் என்று தினமும் என்னிடம் சொல்ல அம்மாவுக்கு ஏதோ ஒரு ராமாயணம் இருக்கும். ”நன்னிலம் பெரியப்பாவோட பெரியவ... அதாண்டா.. லீலா.. அவளோட மாமனாருக்கு சித்த ஸ்வாதீனம் இல்லாம போய்டுத்து.... தானா சுவத்தைப் பார்த்து பேசிண்டு... கைகொட்டிச் சிரிச்சிண்டு... ஸ்நானம் பண்ணிட்டுக் கட்டிண்ட வேஷ்டியைக் கழட்டி கொடில உணர்த்தரேன்னு நேத்திக்கு ஒரே ரகளையாம்.. ஜாதகமெல்லாம் நன்னா பார்ப்பாரே... அவருக்குடா.. நீ அப்போ பொடிப்பய... என்னோட மடிய விட்டு எறங்கமாட்டே....”

”அட போம்மா.. பசிக்கிறது.. சாதம் போடு.. ” இராத்திரி கைலிக்கு மாறிவிட்டு படுக்கையில் சுஜாதாவோ.. திஜாவோ.. லாசராவோ புரட்டப் போய்விடுவேன். கடல் போன்ற வீட்டில் ரெண்டே பேர். பகல் வேளையில் சுந்தரி பார்த்துப்பாள். வீடு பெருக்கி, வாசல் கோலம் போட்டு, பால் வாங்கி வைத்து, பத்துப்பாத்திரம் தேய்ச்சு, சன் லைஃபில் அம்மாவோடு சிவாஜி எம்ஜியார் பாட்டு பார்த்து... எல்லாம்.. எல்லா வேலையும்.. ஏழு எட்டு மணிக்கெல்லாம் ”நா வரேம்மா...”ன்னு வீட்டிற்கு போய்விடுவாள். 

நான் வீட்டிற்கு வரும் பதினோரு மணிக்குள் ஆயிரமாயிரம் அனுபவகக் கதைகள் அவளுக்குள் வந்து முட்டும். பேச நாதியில்லை. ராப்பகல் அகோராத்திரியாக அப்பாவின் அபார உழைப்பு. பல ஆண்டுகளாக வீட்டில் கோலோச்சிய அக்காவை விரட்டிவிட்டு தங்கை திருமகள் வீட்டிற்குள் நுழைந்தாள். அவரும் போய்ச்சேர்ந்துட்டார். வேற மனுஷா கிடையாது. நானும் அம்மாவும்தான். டீவியெல்லாம் பிடிக்காது. “எப்போப் பார்த்தாலும் குடும்பத்தைக் கெடுக்கற கதையே காட்றான்கள்... ரெங்கநாதர் இவாளுக்கெல்லாம் நல்ல புத்தி கொடுக்கப்படாதோ...”ன்னு அங்கலாய்த்து அணைத்துவிடுவாள்.

“எண்பது வயசு தாண்டமாட்டார்னு லீலா மாமனார் கரெக்ட்டா சொன்னார்டா.. “ ரெண்டாவது நாளும் நுழைந்தவுடன் அம்மாவின் புலம்பல். காதில் போட்டுக்கொள்ளாதது போல உள்ளே நுழைந்தேன். டைனிங் டேபிள் மேஜையில் கோயம்புத்தூரிலிருந்து பிரகாஷ் கல்யாணப் பத்திரிக்கை கிடந்தது. என்னோட காலேஜ் மேட். வக்கீல் சீனு மாமாவின் பையன். ”எண்பது வயசு..”ன்னு பேச ஆரம்பிச்சாலே அப்பா தவறிப்போன கதையைச் சொல்லுவாள் அம்மா. சதாபிஷேகம் முடிஞ்சு தம்பதியாய்த் திருவிடைமருதூர் போயிருந்தார்கள். கடையம் குஞ்சு மாமா பையனும் நானும் கூட வரோம்னு தலைப்பாடா அடிச்சுண்டோம். அப்பாவுக்கு இந்த மாதிரி காவலுக்கு வர்றதெல்லாம் பிடிக்காது. “ச்சே..ச்சே.. வேலயப் பாருங்கோடா.. எனக்கு தர்மூ இருக்கா...”ன்னு அம்மாவோட பிடிவாதமா தனியாக் கெளம்பிட்டார். 

“நன்னா மஹாலிங்கம் தர்சனம் ஆச்சு. வெளிப் பிரகாரம் சுத்தினா அஸ்வமேத யாகம் பண்ணின பலன்டீ... ன்னு என்னையும் அழைச்சுண்டு நெருஞ்சி முள்ளெல்லாம் கால்ல குத்தக் குத்த வேகாத வெய்யில்ல பிரதக்ஷிணம் பண்ணினார்.. சின்னக் கொழந்தையாட்டம் கோபுரவாசல் ஆனேட்ட ஆசீர்வாதம் வாங்கிண்டார்... தர்மூ நீயும் தலையைக் குனிடீன்னார்.. வெளில கோயில் தீர்த்தத்து படில செத்த நேரம் உட்கார்ந்தார்.. தர்மூ... தொண்டையை அடைக்கிறது... தண்ணீ தாகமிழுக்கறது..ன்னார்.. எதிர்த்தாத்துல போய் ஒரு சொம்பு தூத்தம் வாங்கிண்டு ஓடி வர்றதுக்குள்ளே தலை சாய்ஞ்சிடுத்து...” 

“அம்மா... லீலா மாமனார் சொன்னதால அப்பா போய்ட்டார்னு சொல்றியா?”

“இல்லேடா.. நல்லது யார் சொன்னாலும் நடக்க நாழியாகும்.. கெட்டது ஒடனே பலிச்சுடும்..”

”இப்போ என்ன அதுக்கு?”

“ஒரு காரை வாங்கிவச்சுண்டு ஊரூரா சுத்தறியே.... அவர் பிரயாணமெல்லாம் ஜாக்கிரதையா போகணும்னு சொல்லியிருக்கார்டா.... இப்போ அவர்க்கு சித்த ஸ்வாதீனம் இல்லைன்னாலும்... வாக்பலிதம் உண்டுடா அவர்க்கு.. சக்தி உபாசகர்... அதான் பயம்மா இருக்குடா...”

“போம்மா.... எதாவது சொல்லிடப்போறேன்... ஊரூரா பொழுதுபோகவா சுத்தறேன்.. ஏதோ எனக்குப் பிடிச்ச கோயில் குளம்னு சுத்திண்டிருக்கேன்...”

”வர்ற வைகாசிக்கு நாப்பதுடா... ஒனக்கொரு கல்யாணம் கார்த்தி பண்ணிப் பார்க்கவேண்டாமாடா?”

“ஆச்சரியமா இருந்தது... இத்தன நாழி பேசினதுல என் கல்யாணத்தைப் பத்தி மாதுஸ்ரீ தர்மாம்பாள் ஏதும் பேசலையேன்னு....”

“எகத்தாளம் பண்ணாதேடா.. லீலா மாமனார் லேசுப்பட்ட ஆளில்லை.. வக்கீல் சீனு மாமாவுக்கும் அவர்தான் நாள் குறிச்சார்... அப்போ அவருக்கு சித்த பிரமையெல்லாமில்லை... நாம இந்த வீடெல்லாம் வாங்கினத்துக்கப்புறம் நம்மாத்து ஊஞ்சல்ல உட்கார்ந்து காஃபி ஆத்திக் குடிச்சிண்டிருந்தார். லீலா மாமனார் ஸ்வாதீனமா ’உம்ம கையைக் கொடும்’ன்னு வெடுக்குனு வாங்கிப்பார்த்துப்பிட்டு ’ஒடம்பை நம்ம சுப்புராவ் டாக்டர்கிட்டே காமிச்சுக்கும்’னு பூடகமா சொல்லிட்டுப்போய்ட்டார். ’அடுத்த வாரத்துல காமிச்சுக்கிறேண்டா வெங்குட்டு’ன்னு அப்பாட்ட சொல்லிட்டுப் போனார்... அவாத்துல எல்லோரும் தஞ்சாவூருக்குன்னு காரைக் கிளப்பிண்டு வாசல்ல நிக்கறா...இவரைக் காணும். அப்பாவைப் பார்த்த்துட்டு வாடான்னு பிரகாஷை ஆத்துக்குள்ளே துரத்தினா அவாத்து மாமி.... அவன் அலறியடிச்சு ஓடி வந்து... அப்புறம்தான் உனக்கும் தெரியுமே...”

அம்மா தொணதொணவென்று பேசுவாள். பாவம்! இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக விடுப்பு எடுத்துக்கொள்கிறேன். அவளையும் காரில் அழைத்துக்கொண்டு ரெங்கநாதரோ, சமயபுரம் மாரியம்மனோ இல்லை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியோ அழைத்துக்கொண்டுபோய் காண்பித்துவிட்டு எங்கள் ஹோட்டலில் டின்னர் முடித்துவிடுவோம். 

போனவாரம் திருவாரூருக்குப் போய் தியாகராஜர் தரிசனம் பண்ணினேன். கமலாபுரம்கிட்டே வரும்போது கன்னுக்குட்டியொன்று துள்ளிக்குதித்து அம்மாப் பசுவைப் பார்க்க ரோடுக்குக் குறுக்காக ஓடியது. மனுநீதிச்சோழன் மின்னல்வெட்டாய் நியாபகம் வந்தான். சீட்டிலிருந்து எழுந்து ப்ரேக்கில் ஏறி உட்கார்ந்தேன். அப்பாம்மா செய்த புண்ணியம். வலதோரம் ஒரு அரசமரத்தில் உரசி நின்றது. ரியர்வ்யூ மிரர் உடைந்து தொங்கியதோடு போனது. 

“கண்ணா! அம்மா சொல்றேன்னு நினைச்சுக்காதே... வண்டியில சுத்தறத விடுடா.. லீலா மாமனார் சொன்னதுதாண்டா திரும்பத் திரும்ப ஞாபகம் வர்றது.. பிரயாணம் வேண்டாம்... ஆக்ஸிடெண்ட்ல உசிர் போகக்கூட வாய்ப்பிருக்குன்னு சொல்லியிருக்கார்டா...”

“அம்மா.. இதெல்லாம் சுத்த ஹம்பக்.. நீ புலம்பாம இரு... நாம ஸ்வாமியெல்லாம் கும்படறோம்... ஒண்ணும் ஆகாது...”

“ஜோஸியம் பொய்யின்றியா.....”

“ஜ்யோதிஷம் வேதத்தோட கண். பொய்யின்னு சொல்லலை. ஆனா க்ஷண நேரம் தப்பிப்போனாலும் கால்குலேஷன் மிஸ் ஆயிடும்மா... ஏதோ அவர் சொன்ன ரெண்டு தடவை அகஸ்மாத்தா பலிச்சுப்போச்சு... மனசைப் போட்டுக் குழப்பிக்காதே...”

டின்னர் முடித்து வீட்டில் நுழையும் போது திரும்பக் கேட்டாள்.

“கோயம்புத்தூர் கல்யாணத்துக்குப் எப்படிப் போரே?”

“என் வண்டிதான்..”

“தாயே... சமயபுரத்தம்மா.. நீதாண்டியம்மா காப்பாத்தணும்...”. உள்ளே போய்விட்டாள்.

கோயம்புத்தூரிலிருந்து திரும்பும்போதும் ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். அம்மாவுக்குத் தெரியாமல் வைத்திருந்தேன். கமலேஷ் சும்மாயில்லாமல் “மாமீ! மயிரிழையில தப்பிச்சேன்னு சொல்லுவாளே.. அந்த மாதிரி தப்பிச்சோம்...”. சமையற்கட்டுலேர்ந்து ஓடோடி வந்தாள் அம்மா. “என்ன சொன்னே? என்ன ஆச்சு?” கேள்விகளால் துளைத்தாள். இனி மறைக்கமுடியாது. “என்னாச்சுடா கண்ணா?” என்னை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள். 
“முன்னாடி லாரி போய்ண்டிருந்தது. அதுக்கு முன்னாடி ஒரு கவர்மெண்ட் பஸ். அஞ்சாறு கிலோ மீட்டர் தாண்டவே முடியலை. லாரியை ஓவர்டேக் பண்ணினேன். ரொம்ப தூரத்துல ஒரு கார் எதிர்த்தாப்ல வந்துண்டிருந்தான். பஸ்ஸையும் ஓவர் டேக் பண்ணிடலாம்னு போறச்சேதான் லாரிக்கும் பஸ்ஸுக்கும் நடுவுல ஒரு கார் இருந்தது. முன்னாடி வந்திண்டிருந்த கார் பக்கத்துல வந்துடுத்து. முன்னாலையும் போக முடியாது.. பின்னாலையும் போக முடியாது... மாட்டினுட்டேன்... அப்படியே ரைட்ல ரோட்டுக்குக் கீழே ஒரு சின்னப் பள்ளத்துல இறக்கிட்டேன்...”

அம்மா கலவரமானாள். “கண்ணா.. வேண்டாம்டா.. நடக்கிறதெல்லாம் நன்னாயில்லை. என் மனசைப் பிசையறது... ரொம்ப தூரம் போகனும்னா பஸ்ல போடா.. இல்லே ட்ரெயின்ல போ.. இப்படி போகாதேடா.. லீலா மாமனார் நினைப்பு வந்துண்ட்டே இருக்கு...”

அம்மாவை சமாதானப்படுத்தினேன். போகலைன்னு சத்தியம் பண்ணினேன். ஒரிரு வாரங்கள் ஓடியது. நாற்பது வயசுக்கு மேலே கல்யாணமெல்லாம் வேண்டாம் என்று வைராக்கியமாக இருந்தேன். ஹோட்டலிலிருந்து ராத்திரி வந்த போது ஒரு ஃபோட்டோவை முகத்துக்கு நேரே நீட்டினாள். அதிரூப சுந்தரியாக இருந்தாள். நெற்றியில் குங்குமத்தோடு விபூதியும் துலங்கியது. சாந்தமான முகம். “பொண்ணு மாம்பலமாம். பேரு வாணி. அவாளுக்கு பூர்வீகம் மாயூரமாம். மாயவரம் பக்கத்துல நீடூர்ல தோப்பு தொறவெல்லாம் இருக்காம். அதுக்கும் முப்பத்தஞ்சு ஆயிடுத்து. ஜாதகம் பார்த்துட்டேன். பொருந்திப் போறது. வர்ற ஞாயித்துக்கிழமை பொண்ணு பார்க்க வர்றேளான்னு கேட்டா? வரேன்னு சொல்லிட்டேன். ராக்ஃபோர்ட்ல புக் பண்ணிடு.”

“அடுத்த வாரத்துக்கு இப்போ கிடைக்குமா? தட்கால் ட்ரை பண்ணலாம். கிடைக்கலைன்னா என்னோட ஸ்வேதம்தான்.. “

”எனக்கு இப்பவே பயம் வயத்துல புளியைக்கரைக்கறதுடா... வேண்டாம்......”

ஞாயிற்றுக்கிழமை. சாயந்திரம் நாலரை மணி ராகுகாலத்துக்கு முன்னாடி சென்னையில் இருக்கவேண்டும். “முக்குப் புள்ளையாருக்கு ஒரு சிதறு தேங்காய் ஒடச்சுடுடா...” சொல்லிவிட்டு அம்மா முன்னால் உட்கார்ந்துகொண்டாள். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் ஃபார்ச்சுனர் வேகம் பிடித்தது. கடைப் பையன் கமலேஷ் ஏதோ பேசிக்கொண்டே வந்தான். பின்னாடி புதுமாப்பிள்ளை பிரகாஷும் அவன் பொண்டாட்டியும் களுக் களுக்கென்று சிரித்துக்கொண்டே ரகசியம் பேசினார்கள். மனசுக்கு நிறைவாக இருந்தது. 

சிறுவாச்சூர் மதுரகாளி தாண்டினோம். “அம்மா.. மதுரகாளி..” திசையைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டாள் தர்மாம்மா. “அண்ணா.. காஃபிக்கு எங்கியாவது நிறுத்தலாமே....” கமலேஷ் மௌனத்தைக் கலைத்தான். “டேய்... உன்னோடது மாதிரியில்லாம நல்ல ஹோட்டலா நிறுத்துடா.. பசிக்கிறது...” பிரகாஷ் நக்கலடித்தான். 

திண்டிவனம் தாண்டியவுடன் வஸந்தபவன். இரண்டு கார்களுக்கு நடுவில் ஃபார்ச்சூனரைச் சொருகினேன். இறங்கும்போதே “எனக்கு காஃபி போறுண்டா” என்றாள் அம்மா. “கிளம்பறச்சேயே லேட் பண்ணிட்டே... நாலரைக்கு ராகுகாலம் ஆரம்பிச்சிடும்.. இல்லேன்னா ஆறு மணிக்கு மேலே போகணும்... திரும்பவும் திருச்சி வர்றத்துக்கு ரொம்ப லேட் ஆயிடும்...”

பிரகாஷும் அவன் பொண்டாட்டியும் நெய் ரோஸ்ட் சாப்பிட்டார்கள். என்னோடும் அம்மாவோடும் கமலேஷ் காஃபி குடித்தான். “ஃப்ரெஷ் ஜூஸ் எதுவும் சாப்பிடறயா?”ன்னு பிரகாஷிடம் கேட்டேன். ”ம்...” என்று அவன் பொண்டாட்டி தலையாட்டினாள். தலையில் மல்லிகைப் பந்து சூட்டியிருந்தாள். புதுப்பொண்ணு என்று சர்வர் உத்துப்பார்த்துவிட்டுப் போனான். “மொஸாம்பி ஒண்ணும்.. பொமோகிரேனேட் ஒண்ணும் குடுங்க...சீக்கிரம்..”

“அவசரப்பட வேண்டாம் கண்ணா.. கேட்டியா.. மெதுவாவேப் போலாம்... நாலரைக்கு மின்னாடி போக முடியாது.. பரவாயில்லே...” காற்று வீசி கேசத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது. வஸந்த பவன் வாசலில் பிரகாஷுக்காக நின்றுகொண்டிருந்தேன். “புதுப்பொண்ணு மாப்பிள்ளை.. மெதுவாத்தான் வருவாங்க...” கமலேஷ் அநியாயத்துக்கு வெட்கப்பட்டுக்கொண்டு சொன்னான். சிரித்தேன். பக்கத்து பீடாக் கடையில் ஒரு நிஜாம் பாக்கு வாங்கலாம் என்று நகர்ந்தேன்.

“க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்....” தொடர்ந்து “டமார்.....” என்று மோதும் சத்தம். திரும்பி சாலையைப் பார்த்தேன். எதிர்புறத்தில் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த டஸ்டர் க்ராஸ் செய்து ஓடியவனுக்காக ப்ரேக் அடித்து மீடியேட்டரில் மோதி நின்றது. பின்பக்கத்திலிருந்து டயர் தேய்ந்து புகை கிளம்பியிருந்தது. அம்மா ஆடிப்போயிருந்தாள்.

இங்கிருந்து எதிர்சாரிக்கு ஓடினேன். கமலேஷ் பின்னாலயே ஓடி வந்தான். “பார்த்துடா...” அம்மா பதறினாள். டஸ்டரை சுத்தி வந்தேன். உள்ளே அசைவு தெரிந்தது. ஒவ்வொருத்தராக இறங்கினார்கள். பின் கதவு ஜாம் ஆகியிருந்தது. முன்னாலேறி திறந்துவிட்டேன். வயசான அம்மா. அப்பா. ஒரு சின்னப் பெண். கல்லூரியில் படிக்கலாம். ஓட்டியவன் அண்ணன் போல இருந்தான். “என்னப்பா ஆச்சு?” விசாரித்தேன். “ஸ்டுப்பிட் சார்... நின்னுக்கிட்டே இருந்தான். தபால்னு ஓடிவந்துட்டான்....” எதிர்புற மரத்தடிக்கு ஒவ்வொருத்தராக கொண்டு போய் விட்டேன். ”வண்டிக்கு பின்னால செடி குத்தி வையுப்பா.. ரோட் சர்வீஸுக்கு ஃபோன் பண்ணிட்டியா?” வண்டியின் பின்புறத்திலிருந்து இன்னமும் புகை கசிந்தது. 

ரோடு கிராஸ் செய்து வந்துகொண்டிருந்தேன். கமலேஷ் என் பின்னாலையே வந்தான். மோதிய வண்டியை ஒருமுறை பின் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். வேகமாக ஒரு நகரப்பேருந்து கடந்து சென்றான். “பேய்த்தனமா ஓட்றானுங்கல்ல?..” கமலேஷிடம் வினவினேன். அவன் சிரித்தான். “போகலாம்... லேட்டாவுது...” கூப்பிட்டான். எதிர்முனையில் அம்மா தவிப்போடு நின்றுகொண்டிருந்தாள். பிரகாஷும் அவன் மனைவியும் வந்து காத்திருந்தார்கள். இங்கிருந்தே ஆட்டோ லாக்கை திறந்து உள்ளே போகச்சொன்னேன். 

“கமலேஷ்.. நீயும் க்ராஸ் பண்ணு.. வந்துடறேன்...”

“நீங்க எங்க போறீங்க?”

“டேய்.. பின் சக்கரத்துகிட்டே தங்கச் சங்கிலி ஒண்ணு கிடக்கு. அந்தம்மாவோடதுன்னு நினைக்கிறேன் கொடுத்துட்டு வரேன்...” கமலேஷ் மீடியேட்டரில் ஏறி அந்தப் பக்கம் கடந்து செல்ல காத்திருந்தான். 

டஸ்டர் பின்னால் குனிந்து செயினை எடுக்கும் போது வெகு அருகாமையில்........ என்ன சத்தம்?....


ஏதோ.......இல்லையில்லை...


லாரி...லாரி... ஆமாம் ஜல்லி லோடு லாரி.....
................................................
 என்னையும் டஸ்டரோடு சேர்த்து அழுத்திக் கூழாக்கிச் ரத்தச்சாறை வழியவிட்டதை நான் பக்கத்து புளியமர உச்சியிலிருந்து பார்த்தேன். பிரகாஷும் மனைவியும் மோகம் களைந்து அதிர்ந்திருந்தார்கள். கமலேஷ் செய்வதறியாது நின்றிருந்தான். அம்மா “கண்ணாஆஆஆ...” என்று மூச்சுவிடாமல் அலறி மூர்ச்சையடைந்தாள். பிரேதத்தை திருச்சிக்கு கொண்டு போய் விடுவார்கள். ஆம்புலன்ஸுக்கு டஸ்டர் பையன் ஃபோன் பண்ணிவிட்டான். 

எனக்கு ”வாகன ஆக்ஸிடெண்டால சாவு”ன்னு சொன்ன லீலா மாமனார் நினைவுக்கு வந்தார். இன்னொருத்தன் ஆக்ஸிடெண்டால உனக்குச் சாவுன்னு தெள்ளத் தெளிவாச் சொல்லியிருந்தா எட்டிப் பார்த்திருக்கமாட்டேன்ல. புளியமரக் காத்து லேசாக இழுத்தது. ”அகால ம்ருத்யூ ஹரணம் சர்வ ரோக நிவாரணம்....” போன சங்கராந்திக்கு பூஜை பண்ணிய பாலை என் குழித்த கையில் உத்திரண்ணியால் விட்ட வாத்தியார் அலையலையாய் தெரிந்தார். 

பின்குறிப்பு: நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதிய கதை!

Sunday, May 10, 2015

உத்தம வில்லன்

”சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா! தீராக் கதையை கேட்பார் உண்டோ கேளாய் மன்னா!”
ஓயெம்மார் ஏஜியெஸ்ஸில் உத்தம வில்லன் முடிந்து திரும்பும் யாருமில்லா நெடுஞ்சாலை முழுவதும் இந்த இருவரிகளும் என் காதில் ரீங்காரமிட்டபடியே இருந்தது. இது கமல்ஹாசனே எழுதியதாம். சல்யூட் பாஸ். தீராக் கதைக்கு "The Genius and the Goddess"ல் அல்டஸ் ஹக்ஸ்லியின் “Reality never makes sense" வரிகள் ஞாபகம் வந்தது.
சினிமாவில் துருவ நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகன் மனோரஞ்சன். பூஜா குமார் ஆண்ட்டியை பெட்ரோல் டேங்க் மேலே உட்காரவைத்து சிங்கிள் கிஸ்க்கே லவ்வா என்று முதல் காட்சியையே முத்தக் காட்சியாக்கி வீர விளையாட்டுப் படத்தில் பாடுகிறான். நாற்பது வயதில் ஒரு ரவுண்ட் வருவோம் என்று பூஜா குமார் கனவிலும் நினைத்திருக்கமாட்டார். நளினமாக ஆடுகிறார் கமல். சுளுக்கு வந்தது போலெல்லாம் கையைக் காலை உதைக்காமல் உதறாமல் இந்த வயதில் தனக்கு எதை எவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவு வளைத்து அளவாக ஆடுகிறார். காதல் அபிநய சரக்கு இன்னமும் நிறைய கைவசம் வைத்திருக்கிறார். ச்சும்மா அள்ளுது. அதில் வீலிங் செய்யும் மோட்டார் பைக் சாகசங்களைத் தவிர்த்திருக்கலாம். மசாலாப் பட நாயகனாம். சுய நக்கல்.

ப்ரெயின் ட்யூமர். இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தன்னை புகழேணியில் ஏற்றிவிட்ட மார்க்கதரிசியின் இயக்கத்தில் ஒரு படம் பண்ண ஆசைப்படுகிறான் மனோ. அந்தப் படம் உத்தம வில்லன். சுப்பு ஆறுமுகம் ஐயாவை வில்லோடு உட்கார வைத்து அவர் பின்னால் ஜிப்ரான் ஓகே சொல்ல ம்யூசிக் போடுகிறார்கள். பாதி இடங்களில் பின்னணி இசையில்லாமல் வசனங்கள் வருகிறது. சீன் போகிற போக்கில் வாத்தியங்களோடு சேர்ந்து கொள்ளும் ஜிப்ரானிடத்தில் இசை மெச்சூரிட்டி தெரிகிறது. கேட்கும் பாடல்களிலெல்லாம் கமல் குரலே ஒலிப்பது போன்ற ஒரு பிரமை. அது பாதி மெய்யும் கூட. ஜிப்ரான் இசையில் கேளாய் மன்னாவும், கீழ் கண்ட பாடலும் செவிக்கு இனிக்கிறது.
காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
காமமாம் கடும் புனல்
கடந்திடும் படகிது
ஆசையாய் பாய் மரம்
அமைந்ததோர் படகிது
கரையை தேடி அலையும் நேரம்
உயிரும் மெழுகாய் உருகுதே

மல்யுத்தம் செய்யறவன் மல்லன். வில்யுத்தம் செய்யறவன் வில்லன் என்று ஆங்கில வில்லனை தமிழ் வில்லனாக மாற்றி வசனம் பேசுகிறார் இண்டலிஜெண்ட் கமல்.
வழக்கம் போல ரொமான்ஸ் காட்சிகளில் கோலோச்சுகிறார். காதல், பாசம், அச்சம், வெகுளித்தனம் என்று இந்தப் படம் முழுவதுமே கமலின் கண்கள் பேசுகின்றது. தனது சாவு நெருங்கிறது என்று பிள்ளையிடம் கிரிக்கெட் பாலில் கேட்ச் பிடித்து விளையாடிக்கொண்டே சொல்லும் சீன் சபாஷ் போட வைக்கிறது. அப்பா இறக்கப்போகிறார் என்று தெரிந்ததும் தேம்பும் பையனும் அவன் கழுத்தைக் கட்டிப்பிடித்து இடுப்போடு அணைத்துக்கொண்டுச் சுற்றிச் சுற்றி அழும் கமலும்.....யோவ்... நீதான்யா.... உன்னாலத்தான்... முடியும். ரொம்ப வருஷமாக நாயகனில் மகன் இறந்தபோது “ஓ”லமிட்ட கமலை மிமிக்கிரி செய்பவர்களுக்குக் கிடைத்த மற்றுமொரு தீனி சீன் இது. அபாரமான நடிப்பு.
மனோரஞ்சனின் தோள் வரை வளர்ந்த பையனாக வரும் யூத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பிட்ஸா தின்று வளர்ந்த உடல்வாகாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முப்போதும் கையில் ஐஃபோனோடு திரிகிறான். கமல் இறக்கப்போகிறார் என்று தெரிந்ததும் அழும் மனோன்மணியிடம் “யூ வாண்ட் எ ஹக்” என்று கேட்டு அணைத்துக்கொள்ளும் காட்சியில் க்ளாப்ஸ் வாங்குகிறார். யதார்த்தமாக நடிக்கிறார். வாழ்க.
இந்தப் பத்தியின் முதல் வரியில் சொன்ன வரிகள் உத்தமனாக வரும் கதாபாத்திரம் பாடுவது. உத்தமன் பாத்திரத்தில் நடிக்கும் மனோரஞ்சனை சொல்வது போல் அமைத்திருப்பது கமலின் தந்திரம். மேலும், ம்ருத்துஞ்ஜயா.. ம்ருத்துஞ்ஜயா... என்று அந்த கதாபாத்திரம் போற்றப்பட்டு சாகாமல் இருப்பதும் அதை நடிக்கும் மனோரஞ்சனாகிய கமல் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதும் இரு கதைகளையும் சாண்ட்விச்சாக சேர்த்துக்கொண்டே வருகிறது. உத்தமன் பாத்திரத்தை விஞ்சும் வகையில் நாசர் செய்திருக்கிறார். அவரது “பஹா..பஹா..” சிரிப்பும் அசமஞ்சமான ராஜாவாக வழிவதும் பிரமாதமாக இருக்கிறது. தெய்யமாட்ட பிரஹலாதன் ட்ராமா ஒத்திகையில் வரும் வசன ரகளை.
“பூதங்கள் ஐந்து மன்னா! 
“நான்கில்லை..”
”அது வேதம் மன்னா..”
”கொஞ்சம் குறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்..”
“வேதத்தையா?”
”வசனத்தைய்யா...”
இதில் க்ரேஸி முலாம் பூசிக்கொண்ட கமல் தெரிகிறார்.

“ஏம்ப்பா அவன் பெயரென்ன?”
“ஏதோ உத்தமனாம்”
“ஏம்ப்பா.... ஏதோ உத்தமா...”
“ஐயோ வெறும் உத்தமா...”
“ரெண்டு பேரா...”
“இல்ல ஒண்ணுதான்”
வசனத்தில் அவ்வை ஷண்முகி அப்பட்டமாக தெரிந்தாள்.

உத்தமன் கமல் தெய்யமாடிக் கொண்டிருக்கும் போது பாம்பு தீண்டிவிடுகிறது. அவரோடு சேர்த்து நான்கு பேரை பாடை கட்டிக் கொண்டு போய் ஆற்றங்கரை ஓரத்தில் காரியம் நடக்கிறது. பிழைத்து எழுந்துவிடும் கமலைக் கண்டு ஊரார் பேய் பிசாசு என்று அலறி ஓடுகிறார்கள். பின்பு உலக்கையால் அடித்து சவமாக ஆற்றில் மிதந்து போய் செத்த பிணத்தைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுமாப் போல என்று பட்டினத்தாரை உபயோகப்படுத்தியிருக்கார். உத்தமனாக வரும் காட்சிகளில் முகத்தில் ஒருவித அசட்டுத்தனம் தெரியும்படி நடிக்கிறார்.
குருநாதர் மார்க்கதரிசியிடம் பேசும் மனோரஞ்சன் கண்களில் மரியாதையும் உடல்மொழியில் பவ்யமும் கொண்டுவந்திருப்பது கமலின் தேர்ந்த நடிப்பு. தெய்யம் ஆடும்போது கமலின் அசுர உழைப்பும் எடுத்துக்கொண்ட பாத்திரத்தை மிளரச்செய்யும் சாகசமும் தெரிகிறது. மேலும் அந்த ஆட்டப் பின்னணியில் வரும் மாடங்களும், மலை சார்ந்த இடங்களும், மாலை வேளையின் மந்தகாச மஞ்சள் நிறமும் கண்ணைத் திரையை விட்டு அகலவிடாமல் கட்டிப்போடுகிறது. படமெங்கும் கேமிரா கவிதையாக மலர்ந்திருக்கிறது.
மனோரஞ்சனின் பிஏவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர நடிப்பில் அசத்துகிறார். ப்ரெயின் ட்யூமர் வந்ததை தனக்குக் கூட சொல்லாததை எண்ணியெண்ணி அழும் காட்சிகளில் நடிப்பில் கணம் காட்டுகிறார். அடிக்கடி தலைவலி என்று சொல்லிக்கொண்டு சரக்கு அடிக்கும் கமல் ஒரு தியேட்டர் பாத்ரூமில் கவிழ்ந்துவிட அவரை அதற்குள்ளேயே வைத்து உட்பக்கமா தாழ்ப்பாள் போட எடுத்துக்கொள்ளும் பிரயர்த்தனங்களும் அதற்கு உதவும் ஒரு சிங்குடன் சேர்ந்து சில நிமிடங்கள் கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள். ஒரு டிவி பேட்டியில் ”ஒரு கலைஞனுக்கு அடுத்த கரகோஷம் எப்போ வரும்னு தெரியாது” என்று சொல்லும் இடம் அவனுடைய சாவையும் அப்போதுதான் மனோன்மணியைப் பற்றி அவனிடம் சொன்ன ஜெயராமையும் குறிவைத்துச் சொல்லப்பட்டவை. அபாரம். ஊர்வசி ஜோடி மாற்றி சதிலீலாவதியை திரும்பச் செய்திருக்கிறார். பூர்ண சந்திர ராவாக வரும் விஸ்வநாத் (படத்தில் ஊர்வசியின் அப்பா) “தேவைப்பட்டால் கொலையும் செய்வேன்..” என்று கோலூன்றி நடக்கும் வயசில் கமலை மிரட்டும் சீனில் அசத்துகிறார்.
தான் காதலித்து கைவிடப்பட்ட யாமினிக்குப் பிறந்த மனோன்மணியிடம் தனியாகப் பேசும் கமலிடம் தெரிந்த பிராணாவஸ்தையை மொழியில் சொல்ல அடங்காது. மனோன்மணியாக நடித்த பார்வதி மேனன் தனது தாயைத் தவிக்க விட்டவனிடம் பேசுகிறோம் என்று குரலிலும் செய்கையிலும் காட்டும் அலட்சியத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் கமலிடம் புதிதாக கோடம்பாக்கம் வருபவர்கள் ஆக்டிங் கற்றுக்கொள்ளட்டும். ஆண்ட்ரியா அழகுப்பதுமையாக ஆறு சீனிற்கு ஒருமுறை கட்டாயம் வருகிறார். அர்ப்பணா என்ற பெயரில் தன்னை மனோரஞ்சனிடம் அர்ப்பணித்துக்கொள்கிறார். சாகும் தருவாயில் ஆபரேஷன் தியேட்டரில் அர்ப்பணாவைப் பார்த்துக் கண்ணடித்து உதடு குவிக்கும் கமல் பார்ப்போரின் பரிதாபத்தைக் கடைசியில் அள்ளிக்கொள்கிறார்.
தெய்யமாட்டக்காரனாக வரும் கதை சரியான பிடிமானம் இல்லாமல் ஆங்காங்கே தொங்குகிறது என்று நினைக்கத்தோன்றினாலும், “சார்.. எங்கிட்ட கதையில்லை.. என்னை மாதிரி ஒரு திமிறான ஆள்...”என்று கமல் பாலசந்தரிடம் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவதால் மன்னித்துவிடலாம். பேரா. ஞானசம்பந்தனுக்கு நடிப்பில் பேரவா போலிருக்கிறது. பட்டிமன்றத்தில் பேசுவது போலவே வசனம் பேசுகிறார். ரமேஷ் அர்விந்த டைரக்‌ஷனாம். டைட்டிலில் போட்டார்கள்.
மலையாளம், தெலுங்கு என்று இரு திராவிட மொழிகள் படமெங்கும் துண்டுத் துண்டாக வருவது வசனத்திற்கு ஜிகினா சேர்த்தது போல ஜம்மென்று இருக்கிறது. எட்டாம் நூற்றாண்டுக் காட்சிகளில் திரையில் வரும் அனைத்து ஜீவராசிகளும் தூய தமிழில் பேசுகிறது. ”ஏம்பா யாருமே தமிழ்ல பேசமாட்டாங்களா?”னு பசங்கள் திடுக்கிடும்படியாகக் கேட்டபோது பரிதாபமாக இருந்தது. “எனக்கு சிறிது தண்ணீர் வேண்டுமே. தருகிறீர்களா?” என்று தீந்தமிழில் வாட்டர் பாட்டிலைக் கேட்டு வாங்கிக் குடித்தேன்.
அவரது படங்களில் வித்தியாசம் எதாவது இருக்கும் என்று நம்பிக்கையோடு வருபவர்களை ஏமாற்றாமல் விருந்தளித்திருக்கிறார் கமல்.

Saturday, May 9, 2015

பழந்தமிழ்ப் பண்பாட்டின் சேர நாட்டு எச்சங்கள்

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை மெயில் வந்தவுடன் மே இரண்டாம் தேதியை மூளையின் ஒரு ந்யூரானில் சதக்கென்று குத்திக்கொண்டேன். தக்கர் பாபாவில் ஜெயமோகனின் ”பழந்தமிழ்ப் பண்பாட்டின் சேர நாட்டு எச்சங்கள்”. வாசகர்கள் நான்கு பக்கம் படித்து முடிப்பதற்குள் நாற்பது பக்கம் எழுதிக் குவிக்கும் ஜெமோவை இதுவரை நேரில் சந்தித்ததில்லை. ஐந்தரை மணி நிகழ்ச்சிக்கு ஐந்தேகாலுக்கு நுழைந்துவிட்டேன். தக்கர் பாபா வினோபா அரங்கத்தில் ஜேஜேயென்று கூட்டம்.

கோபுவும் பத்ரியும் அறிமுகவுரையாற்றிய பிறகு ஜெமோ பேச ஆரம்பித்தார். ஜெமோவுக்கு ஆற்றொழுக்கான நடை. பேச்சில் உறுதியும் நம்பிக்கையும் தெரிந்தது. பழந்தமிழ் பண்பாடு பற்றி பேச ஆரம்பிக்கும் முன் நமது வரலாறுகள் இயற்றப்பட்டதை விரிவாகப் பேசினார். வெளிநாட்டிலிருந்து இந்திய வரலாறு எழுதப்பட்டால்தான் அதை ரெஃபரென்ஸுக்கு எடுத்துக்கொள்ளும் உள்ளூர் அநியாயத்தைச் சாடினார்.

சூதர்கள் மன்னர் குடி பாடுவதற்காகவே இருந்தார்கள். ராஜாதிராஜர்கள் மட்டுமன்றி குட்டிக் குட்டி ராஜாக்களுக்குக் கூட அவர்களது குலவரிசையைப் பாடுவதற்கு ஆட்கள் இருந்தார்கள். இது வரலாறு சொல்வதில் முதல் வகை. இரண்டாவது வகை தொன்மங்கள். Myths. மூன்றாவதாக புராணக் கதைகள் வருகின்றன. மார்டர்ன் ஹிஸ்டரியில் இவையெல்லாம் ஒத்துக்கொள்வதில்லை.

நவீன வரலாற்றுக்குச் சான்றுகள் தேவை. ஆதாரங்கள் தேவை. படிக்கும் நான்கு பேர்களும் ஒத்துக்கொள்வது போன்ற தரவுகள் தேவை. ஆனால் நான்கு பேரால் எப்படியும் மாற்றியமைக்கும்படியும் வரலாறு அமையலாம். எனக்கு வடிவேலுவின் புலிகேசி படம் ஞாபகம் வந்தது. பூஞ்சையாய் எலிக்குட்டி போலிருக்கும் புலிகேசியை கட்டுமஸ்தான பாடியோடு வரையைச் சொல்லி “வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளட்டும்..” என்று கேலியாகச் சிரிப்பார்.

வரலாற்றின் அடுக்குகள் பற்றி ஜெமோவின் வ்யாசம் இங்கே: http://www.jeyamohan.in/74443#.VUUCrPmqo7J
குமரிமாவட்டத்தைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் தலைப்பின் உள்ளே தொபகடீர்னு குதித்தார். குமரி மாவட்டம் இன்னமும் நாகரீகத்தால் பழந்தமிழ்ப் பண்பாட்டை பல இடங்களில் பழகி வருகிறது என்பதற்கு தரவுகளை சரசரவென்று அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார். பேசும் மொழியில் வேற்று மொழிகள் கலக்காமல் புனிதத் தமிழாக இருக்கிறது என்றார். இப்படித்தானா அல்லது எனது புரிதல் அதுவா என்று ஒரு பிசுபிசுப்பு நியாபகம் இங்கே. சொற்பொழிவு கேட்டவர்கள் தெளிவுபடுத்தலாம்.

அ.கா. பெருமாளுடன் கண்ணகி கோவில்களாக சேர நாட்டில் சுற்றியதைப் பற்றி விவரிக்கையில் செங்கனூர் கோவிலில் கிழக்கு வாசல் வழியாக நுழைந்தால் சிவனும் மேற்கு வாசல் வழியாக பார்த்தால் பகவதியும் அருள்பாலிப்பதைப் பற்றி பேசினார். இன்னமும் குமரி மாவட்டத்தில் சித்திரம் வரைந்து வழிபடும் ஆதிகாலப் பழக்கம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். வரலக்ஷ்மி விரதத்திற்கு கலசத்திலும் சுவற்றிலும் படம் வரைந்து கும்பிடுவதை நானும் வல்லபாவும் பேசிக்கொண்டோம்.

பூ ஆடை உடுத்தி புதுப்புனல் நீராடுவது தொன்றுதொட்டு வரும் குமரிமாவட்ட பழக்கம். சிறுவயதில் ஜெமோவே பூ ஆடை உடுத்தி புதுப்புனல் நீராடியதைக் குறிப்பிட்டார். முகத்தில் லேசான சிரிப்பு. அவ்வருடத்திய முதல் சரக்கொன்றைப் பூப்பதை அவர் ஊரின் மஹாதேவர் கோவிலில் விழாவெடுத்துக் கொண்டாடுவதையும் அதுவே புதுவருடப் பிறப்பிற்கான அறிவிப்பாகவும் எடுத்துக்கொள்வார்களாம். கேரள நாளிதழ்களில் அதுவே தலைப்புச் செய்தியாக இடம்பெறும் முக்கியத்துவத்தைப் பற்றியும் சொன்னார்.

தமிழக கோவில்களின் ஆகம வழிபாடுகளைப் போலில்லாமல் கேரள கோவில்களின் கையசைவின் மூலம் நடக்கும் கோயில் உபசாரங்களும் தாந்த்ரீக சடங்குகள் பற்றியும் சொல்லி அதுவே ஆதி வழிபடாக இருந்தது என்றும் ஹ்ரீம். க்லீம் போன்ற ஓசைகளே மந்திரங்களானதையும் விவரித்தபோது வழிபாட்டின் வழியாக பண்பாடு தெரிந்தது.

எதையும் இலையில் சுருட்டி வேக வைத்தோச் சுட்டோ சாப்பிடுவது பழங்குடிகளின் பழக்கம். இன்னமும் குமரி மாவட்டத்தில் இலையில் சுருட்டி வைத்து செய்யப்படும் அப்பங்கள் பற்றிய விரிவான ஜெமோவின் கட்டுரை இங்கே: http://www.jeyamohan.in/5387#.VUT0tJNUyVA
பழந்தமிழர் பழக்கமான பெண்ணுக்கு மையல் கண்டால் வேலனை வரவழைத்து வெறியாட்டு நடத்துவதை தன் ஊரில் பார்த்த சான்றிருப்பதைப் பற்றிப் பேசினார்.

அருவிபோல பேசிக்கொண்டே வந்தவர், சரியாக ஒரு மணி நேரத்தில் சட்டென்று நிறுத்திவிட்டுச் சரசரவென்று மேடையிறங்கிவிட்டார். தினமணி இணையதளத்திற்கு ஒரு தொடர் எழுதித் தர முடியுமா என்று விண்ணப்பித்துக் கொண்டபோது “ஒரு புது நாவல் எழுதணும்னு பார்க்கிறேன்..அதுக்கே நேரமில்லை...” என்று சிரித்தார்.

ஐபேட், ஹாண்ட் பேக் போட்டு சீட் பிடித்து வைத்த வல்லபா, வீகேயெஸ்ஸுக்கு மனமார்ந்த நன்றிகள். ராதிகா சித்ரா நாகேஷ் மேடங்களோடு ஒரே வரிசையில் அமர்ந்து பார்த்தது மிகவும் சந்தோஷம். கட்டு புஸ்தகங்கள் எடுத்து வந்து ஆட்டோகிராஃப் வாங்கிய ராசகோபாலனாரை ஜெயமோகன் அறிவார்ந்த விஷயங்கள் சொல்லும்போது பார்த்துக்கொண்டது பரவச அனுபவமாக இருந்தது. விருமாண்டி மீசையில் வி. சந்திரசேகரன் சார் கம்பீரமாக வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து பேசிக்கொண்டிருக்கும் போது பாலு சார் சங்கீத பூஷணம் என்ற வரியில் சங்கீதத்தை பூசணும் என்று வா.விளையாடினார். வழக்கம் போல வெங்கட் சுப்ரமணி அடக்க ஒடுக்கத்துடன் அமர்ந்து சிரத்தையாகக் கண்டு களித்தார்.

இந்தக் கட்டுரை எழுத குறிப்புகள் எடுத்துக்கொடுத்த ராதிகா மேடத்திற்கு எனது விசேட நன்றிகள்.

படம்: வீகேயெஸ்

பிள்ளை விளையாட்டு

”லேடி.... ஹண்டர்... டைகர்...” என்று சொல்லிக்கொண்டே குத்துவிடுவது போல மடக்கிய விரல்களை உடுக்கையடியாக உலுக்கி...... லேடியாக இருந்தால் இடது தோள் பட்டையில் முந்தானை போடுவது போல கையை வைக்க வேண்டும், ஹண்டராக இருந்தால் விரல்களை மடக்கி துப்பாக்கி போலவும் டைகர் என்றால் புலி பாய்வது போல விரல்களை கொக்கிகளாக மடக்கியும் காண்பிக்கவேண்டும். இது இருவர் விளையாடும் கேம். இருவரும் வலது கையை உலுக்க வேண்டும் இடது கை விரல்களை ஜெயித்த பாயிண்டுகள் கணக்கிற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

“ரூல்ஸ் தெரியுமா?

“ஊஹும். தெரியாது..” ஸ்வாமிநாதஸ்வாமியிடம் வாய் பொத்தி ப்ரவண மந்திர உபதேசம் கேட்ட ஈஸ்வரனைப் போல மரியாதையாகக் கேட்டேன்.

“பாரு... நான் லேடி வச்சு.. நீ ஹண்ட்டர் வச்சா... எனக்கு ஒரு பாயிண்ட்...”

“ஏன்?”

“லேடி வந்து ஹண்டர் பொண்டாட்டி.. அவனை அடிச்சுடுவா...”

“ஓ...அப்படிப்போகுதா கதை...”

“ஆமாம்.. அது மாதிரி நீ ஹண்டர் வச்சு நான் டைகர் வச்சா.. ஒனக்கு ஒரு பாயிண்ட்...”

“ஏன்?”

“என்னப்பா... கேள்வி கேட்டுண்டே இருக்கே... புரியலையா? ஹண்டர் புலியை ஷூட் பண்ணிடுவான்.. அதனால ஒரு பாயிண்ட்..”

பிள்ளை விளையாட்டில் புலியைக் கூட தில்லாக ஷூட் பண்ணறவனை பொண்டாட்டி அடிச்சுடுவா என்கிற உயர்ந்த வாழ்வியல் தத்துவம் புரிந்தது.

”திரும்பத் திரும்ப கேக்காதே.... நான் டைகர் வச்சு நீ லேடி வச்சுண்டா... எனக்கு ஒரு பாயிண்ட்.... ஓகே.. ஆரம்பிக்கலாமா?”

ராகமாக “லேடி... ஹண்ட்டர்... டைகர்...ம்.. நீயும் சொல்லணும்.. லேடி.. ஹண்ட்டர்.. டைகர்..”.

“போப்பா.. நீ மெதுவா காமிக்கிறே...”

“நான் வச்சத்துக்கப்புறம் கையை மடக்கிறே... ஃபர்ஸ்ட்டு பத்து பாயிண்ட் எடுக்கறவா வின் பண்ணிடுவா.. ஒகே..”

ஆட்டம் தொடர்ந்தது. நான் ஒன்பது பாயிண்ட்.

“ச்சே... சனியன் காத்து எம் பக்கம் வீசுது.. அதான் தோத்துக்கிட்டிருக்கேன்...”

“எங்கடி இதெல்லாம் கத்துக்கறே....”

“எதெல்லாம்?”

“சனியன் காத்து....”

“சந்தானம் காமடிப்பா அது.. சரி.. சரி.. நீ விளையாடு...”

ஒரு ஆட்டம் ஜெயித்து அடுத்த இரண்டு ஆட்டங்கள் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய ஆட்ட பாணியைத் தெரிந்துகொண்டு ரிஃப்ளெக்ஸில் மடேர் மடேரென்று அடித்தாள். இதுபோல மானஸா கைவசம் கொத்து விளையாட்டுகள் இருக்கிறது. இந்த லீவில் மொத்தமாக ஆட வேண்டும்.

தோற்றுப்போனதில் பரம திருப்தி. ஜெயித்ததைக் காட்டிலும் பல்ப் வாங்கியதில் அதிக சந்தோஷம். அரைமணி நேரம் என்னை அண்ட்ராயர் பையனாக்கியவளுக்கு என்ன பரிசு தருவது?

”அடிச் செல்லமே..” என்று கட்டி முத்தமிட்டேன்.

தினமணி ஜங்ஷன்

காந்திஜியைப் பார்ப்பதற்கு பெரிய இடத்துப் பெண்மணிகள் சிலர் வருகிறார்கள். காந்திஜி பெரிய தலைவர்களுடன் ஒரு முக்கியமான விவாதத்தில் இருக்கிறார். நடராஜும் அவரது நண்பரும் காவல் பணியில் இருக்கிறார்கள். இவர்கள் தடுக்க அவர்கள் திமிற சலசலப்பாகிவிடுகிறது. சாயந்திரம் காந்திஜி அவர்களிடம் “ஸ்த்ரிகளிடம் உங்கள் வீரம் பலிக்கவில்லையா?” என்று சிரிக்கிறார். ”நாங்கள் என்ன செய்திருக்கவேண்டும்?” என்று கேட்ட நடராஜிடம் எல்லாவற்றுக்கும் அஹிம்சையில் வழி இருக்கிறது என்கிறார் பாபுஜி. அஹிம்சையில் என்னவாக இருக்கும் என்று மோட்டுவளையைப் பார்க்கிறீர்களா? பாபுஜி சொல்வதைக் கேளுங்கள்.

“எங்களை மிதித்துக்கொண்டு செல்லுங்கள் என்று தரையில் படுத்திருக்கவேண்டும்” என்று தீர்வு சொல்கிறாராம் காந்திஜி. சுருக்கென்று தைக்கும் காட்சி. ந. சிதம்பர சுப்ரமணியன் எழுதிய மண்ணில் தெரியுது வானம் என்கிற நாவலில் வருகிறதாம்.

Charu Nivedita தினமணி இணையதளத்தில் எழுதிவரும் பழுப்புநிறப் பக்கங்களின் லேட்டஸ்ட் அத்தியாயம். ஸ்மார்ட்ஃபோன் திரையளவு எழுதிப் படித்து இயங்கிவரும் இந்த வாட்ஸ்ஸப் உலகில் மறந்துபோன தமிழ் இலக்கியவாதிகளைப் பற்றி எழுதிவரும் முக்கிய தொடர் இது. இத்தொடர் எழுதவதற்கு தான் படும் கஷ்டங்களை எழுதும் சாரு இந்த நாவலைப் படித்த பிறகு முண்டு தட்டி முஷ்டி மடக்க மாட்டேன் என்கிறார். எவரையும் அஹிம்சாவாதியாக்கும் சாதனமாக இந்த நாவல் பயன்படும் என்பது சர்வ நிச்சயமாம்.

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/

*
டெல் அவிவ் நகரத்தின் வடிவமைப்பு காஞ்சிபுரத்தின் அடிப்படையில் அமைந்தது என்பது ஆச்சரியமான விஷயம். இங்கே கோயில் அங்கே பூங்காக்கள். பேட்ரிக் ஹெடிஸ் polymath. பல்துறை வித்தகர். மேதை. இவர் காஞ்சிபுரத்தை தெருத் தெருவாக படம் பிடித்து ஆராய்ச்சிசெய்தாராம். டெல் அவிவ் நகரத்தை வடிவமைக்க இவரைத்தான் கேட்டுக்கொண்டார்களாம். ஒரு ஊருக்கும் அதில் வசிக்கும் மக்களுக்குமானது உயிரியல் தொடர்பு என்கிறார் ஹெடிஸ். காவிரிக்கரையோர கும்மோணதஞ்சை ஜில்லாக்காரர்கள், இன்னும் மன்னார்குடியர்கள் என்றால் ஒரு படி மேலாக எனக்குள் ஒரு ஈர்ப்பு வருவது இந்த உயிரியல் தொடர்பிலிருக்கலாம்.

தேர்த்திருவிழாக்கள் வீதிகளைப் பேணுவதில் முக்கிய பங்காற்றுகிறது. இயல்பாகவே ஆக்கிரமிப்புகள் இல்லாமல் இருக்கிறது. ஹெடிஸின் முக்கியமான ஒரு கருத்து “தெருக்கள் ஆங்காங்கே ஒரு மர நிழலில் முடிந்து அங்கிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். மரத்தடியில் ஒரு சிறிய தெய்வச் சிலை இருக்கட்டும். அங்கே, பெண்கள் கூடிப் பேசவும், குழந்தைகள் இணைந்து விளையாடவும் ஒரு வெளி தேவை.” இன்னமும் சில கிராமத்துத் தெருக்களின் அமைப்பு இப்படியிருப்பதைப் பார்க்கிறோம்.

இது போன்ற அரிய விஷயங்களைத் தாங்கி வருகிறது அரவிந்தன் நீலகண்டன் Aravindan Neelakandan எழுதும் “அறிதலின் எல்லையில்...” தொடர். அநீயின் அகோர உழைப்பு தெரிகிறது. இதுவும் தினமணி இணையதளத்தில்.
இதில் ராதாகமல் முகர்ஜி என்பவர் மனித குலமும் இயற்கையும் பின்னிப் பிணையும் அத்தியாவசியத்தை வலியுறுத்தி the web of life என்று எழுதியதை அநீ கொடுத்திருக்கிறார்.

“ஒரு அத்தி மரத்துக்கும் மண்புழுவுக்கும் எலிக்கும் பறவைக்கும் ஒன்றுடன் ஒன்று பல இணைப்புகள் உள்ளன. அவை, மானுட சமூகப் பொருளாதாரம் எனும் நிலையை வந்தடைய, இன்னும் மிக அதிகமான இன்னும் நுண்ணியத் தன்மை கொண்ட இணைப்புகளாக ஆகின்றன. மனிதன் தன் அறியாமையாலும் சுயநலத்தாலும் இந்த இணைப்புகளால் நெய்யப்பட்ட வலையிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு நிற்கின்றான். ஆனால், உண்மையான சமூக முன்னேற்றம் என்பது தன்னுணர்வுடன் உணர்ந்து, மேன்மேலும் அருமையாக இயற்கையையும் சமூகத்தையும் ஒன்றோடொன்று ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் இசைவுபடுத்துவதுதான். ...உயிர் வலைப்பின்னல் (the web of life) குறித்த அறிதலும், அதனிடம் நாம் காட்டும் மரியாதையுமே மனிதனை அவனது ஆகச்சிறந்த விதிக்கு கொண்டு சேர்க்கும்”. இது 1930ல் எழுதப்பட்டதாம். இக்காலத்திற்கும் பொருந்துகிறதே!
http://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/
*
அன்புடை நெஞ்சம் என்பது தலைப்பு. என். சொக்கன் சொக்க வைக்கிறார். கபிலர், கம்பன், நற்றிணை நல்விளக்கனார், குறுந்தொகை வெண்பூதனார் என்று சகலரையும் இழுத்து பத்தியில் நிறுத்துகிறார். படிக்கப் படிக்க இனிக்கிறது. தமிழ் கொஞ்சுகிறது. இவரது பத்திகளில் உள்ள சிறப்பு என்னவென்றால் இக்கால “டமில்” பேசும் யூத்துகளைக் கவரும் வண்ணம் இருக்கும் மொழிநடை. காதல் டிப்ஸ்களாகவும் இந்த columnம்மைப் பாவிக்கலாம்.

சினிமாப் பாடல்களில் வரும் காதல் வரிகளுக்கும் காட்சிகளுக்குமான வரிமூலத்தை செவ்விலக்கியங்களிலிருந்துப் பிடித்துக்கொண்டு வந்து வாசகர்களுக்குக் காட்டுகிறார். செம்புலப் பெயல் நீராக அன்புடை நெஞ்சம் கலக்க தயாராகும் மக்களுக்காக சில வரிகளை இங்கே தருகிறேன்.

களவுக் காதலிலிருந்து கற்புக் காதலுக்கு ப்ரமோட் ஆகவேண்டுமாம். களவுக்காதல் கல்யாணம் செய்துகொள்ளாமல் ரகசியமாகச் சந்தித்து காதலிப்பது. கற்புக் காதல் கல்யாணம் செய்துகொண்டு காதலிப்பது.

இப்படியாக பக்கம் முழுக்க காதல் பேசும் அவரது பத்தியிலிருந்து சில பாராக்கள்.

‘பகல் முழுக்க அந்தத் தாமரைப்பூ வெய்யில்ல நிக்கும், எல்லா வெப்பத்தையும் வாங்கிக்கும். சாயந்திரம் சூரியன் மறைஞ்சதும், அப்படியே குவிஞ்சு மூடிக்கும், மறுநாள் காலையில சூரியன் வர்றவரைக்கும், அந்த வெய்யிலைத் தனக்குள்ளே பூட்டி வெச்சுக்கும். மொத்த உலகமும் குளிரோட இருந்தாலும், அந்தத் தாமரைக்குள்ள மட்டும் வெப்பம் இருக்கும்’.

‘அதுபோல, குளிர்காலத்துல எனக்கு அவ வெப்பம் தருவா, வெயில்காலத்துல குளிர்ச்சி தருவா.’

மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐஎன
அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத்து அன்ன சிறுவெம்மையளே!
இந்தச் சந்தனத்துக்குக் காதலில் இன்னொரு சிறப்பும் உண்டு. அன்றைய காதலர்கள் இரவு நேரத்தில் காதலியைச் சந்திக்க வரும்போது, சந்தனம் பூசிக்கொண்டுதான் வருவார்களாம். அது ஒரு குறிப்பு.

‘சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே’
என்று இளையராஜா ஒரு பாடலில் எழுதியிருப்பார். அவன் பூசியிருக்கிற சந்தனத்தில், அவளுடைய குங்குமம் சேர்கிற காட்சி அது.

நெற்றிக் குங்குமமா?
இல்லை, பெண்கள் மார்பில் குங்குமம் பூசுவார்களாம். ஆணைத் தழுவும்போது, அவன் தோளில் இருக்கிற சந்தனத்தோடு அவள் மார்பில் இருக்கிற குங்குமம் சேரும். கம்பராமாயணத்தில் ஒரு பாடல் இதை மிக அழகாக வர்ணிக்கிறது:

ஏழையர்
துணை முலைக் குங்குமச் சுவடும், ஆடவர்
மணி வரைப் புயத்து மென் சாந்தும் மாழ்கி...
இங்கே ‘ஏழையர்’ என்றால் பெண்கள், அவர்களுடைய மார்பகங்களில் பூசிக்கொண்டிருந்த குங்குமச் சுவடும், ஆண்கள் தங்களுடைய தோள்களில் பூசியிருந்த சந்தனமும் கலக்கிறது!

http://www.dinamani.com/junction/anbudai-nenjam/
தினமணி இணைய தளத்தில் ஜங்ஷன் என்கிற பகுதியை நிறுவி பல எழுத்தாளர்களை இழுத்த Partha Sarathyயின் பங்கு பெரிது. பாராட்டத்தக்கது.
வீதிகளின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் EraMurukan Ramasami அவர்களின் தொடர் ஒன்றும் இந்த மே முதல் வாரத்திலிருந்து தினமணி ஜங்ஷனில்....

சேப்பாயி இல்லாத முதல் இரவு!

மணி ஏழே முக்கால். மத்திய கைலாஷ் அருகே இருள் பரவலாகக் கவிந்திருந்தது. பெரிது சிறிது நிழலாக நின்றிருந்தவர்களுக்கு மத்தியில் ”சென்னைக் காவல்” பேரிகேடுகளைப் போட்டு ஏனோ ரயிலடியின் பின் பக்கத்து வழியை அத்துக்காக மறித்திருந்தார்கள். அதைத் தாண்டி அஞ்சனை மைந்தனின் சாகசமாக நுழைந்தவுடன் மூலையில் ஒரு கவுண்ட்டர் முன்னே சின்ன வரிசை நெளிந்து நீண்டிருந்தது.

எல்லோரும் அணியாகத் தொடை தட்டி சங்கீதம் கேட்டு மகிழ்ச்சியாக இருப்பது கண்ணில்பட்டது. நெருங்க நெருங்க யார் காதுக்குள்ளும் ஒயர் ஓடவில்லை. ஒரு கெஸ். வயர்லெஸ்ஸில் ஸாங் கேட்கிறார்களோ? நானும் போய் அந்த ரசிகக்கூட்டத்தின் வாலில் ஒட்டிக்கொண்டேன். இரு நொடிகள் கூட கடந்திருக்காது, தொடையில் தன்னிச்சையாக தாளம் போட ஆரம்பித்தேன். ஓ... காதில்”ஞொய்....”யென்று ரீங்காரமிடும் கொசுவிற்கு தாளமிடுகிறோம் என்று புரிந்தது. ஆதிதாளம் முடித்து ரூபகம் ஆரம்பிப்பதற்குள் “வேளச்சேரி ஒண்ணு” என்று ஜன்னலுக்குள் கையைவிட்டேன் இன்னொரு கையால் தாளமிட்டபடியே. நீட்டிய பத்து ரூபாய் தாளுக்குக் கையில் அஞ்சு ரூபாய் காயினோடு ப.சீட்டுக் கொடுத்தார்.

ஓரமெங்கும் காவி படிந்திருக்கும் படியேறும் வழியில் பீச்சிற்கு வேளச்சேரிக்கு என்று அம்புக்குறியிட்டு மார்க்கம் காட்டியிருந்தார்கள். ”கஸ்தூர்பாநகர்” என்று எழுதியிருந்த ப்ளாட்ஃபாரப் பலகைக்கு அடியில் இருவர் குசுகுசுத்துக்கொண்டிருந்தனர். ஆங்.. இல்லையில்லை.. அந்த இருவருமே ஆண்கள். பிரளயம் முடிந்த பூமியாக ஸ்டேஷன் இருந்தது. இடதுபுறமிருந்து வலதுபுறம் திரும்பி பார்த்தால் பத்து இருபது தலைகள் சோர்வாக நகர்வது தெரிந்தது. பச்சை பர்மனெண்ட்டாக எரிந்துகொண்டிருந்தது. தூரத்தில் பறக்கும் ரயில் நடந்து வந்துகொண்டிருந்தது. நாற்பது பேர்கள் இறங்கினால் இருபது பயணிகள் ஏறினார்கள்.

இருக்கைகள் சில காலியாக இருந்தன. அந்தப் பொட்டி முழுவதும் “ஆட்கள் தேவை” நோட்டீஸ் ஆக்ரமித்திருந்தது. சாஃப்ட்வேர் கம்பெனி டெக் லீட் சம்பளத்தில் பகுதிநேர வேலைகள் இருப்பதாக ஆசைக் கொக்கி போட்டிருந்தார்கள். ”+2 போதும்” என்பதே ஹாஷ் டேக். பிஸினெஸ் லைனை புரட்டிக்கொண்டிருந்த பெரியவர் எதிர்த்தார்ப்போலிருந்த இருக்கைகளில் காலை நீட்டி அரை அனந்தசயன போஸில் இருந்தார். பக்கத்திலிருந்தவர் ஓரக்கண்ணால் ஓசிப்பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.

“மச்சி... $%@$#@@” என்று சப்தம் வந்த திசையிலிருந்து ஒரு க்ரூப் என்னுடைய கெட்ட வார்த்தை அகராதியில் புதிய வார்த்தைகளைச் சேர்த்துப் புஷ்டியாக்கியது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தவறாமல் மின்தூக்கி வாசல் அம்பு பட்டனை பொதுஜனம் குத்திவிட்டு படியில் இறங்கியது. இரயில் ஸ்டேஷனைக் கடப்பதற்குள் காணாமல் போனார்கள். ஆனபெல் காஞ்சூரிங் பார்த்தவர்கள் தனியே நின்றால் பேதியாகும் தனிமை நிலையத்தைச் சூழ்ந்துகொண்டது. கார்ப்பரோட் கம்பெனிகளின் கோலோன் வாசனை போல சென்னையின் நகர வாசனை எல்லா நிலையங்களிலும் தாராளமாகப் பரவியிருந்தது. வேளச்சேரி தூரத்தில் மின் புள்ளிகளாய்த் தெரிய பொட்டியின் பாதிபேர் வாசலுக்கு சுறுசுறுப்பாக வந்து நின்று குதிக்க தயாரானார்கள். அனைவரையும் சேவித்து வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டேன்.

இரயில் நிற்பதற்குள் குதித்துக் கையில் கத்தியோடு கொலை செய்யது போல ஓடினார்கள். நிதானமாக நடந்து வந்துகொண்டிருந்தேன். பஸ்ஸா ஆட்டோவா என்று மனசு அலைபாய்ந்தது. ஓருடல் ஈருயிராக ஷேர் ஆட்டோவில் ஒருவர் ஏற்கனவே ட்ரைவர் பக்கத்தில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் வந்த என்னை கையைப் பிடித்து இழுக்காத குறையாக “பொன்னியம்மன் கோயில் பத்து ரூவா சார்...”. ஷேர் ஆட்டோவினுள் ஏறியபோது உள்ளே இருக்கும் கொலுப்படியில் முதுகில் மாட்டும் மூட்டையோடு ஒருவர் மொபைல் நோண்டிக்கொண்டிருந்தார். வாட்ஸ்ஸப் போலிருந்தது. டாஸ்மாக்கும் வாட்ஸப்பும் போதையேற்றும் லாகிரிவஸ்துக்கள்.

ஆட்டோ ட்ரைவர் நிலைகொள்ளாமல் தவித்தார். முன்னால் பார்த்தார். பின்னால் பார்த்தார். கொலுப்படிகளை நிறைக்குமளவிற்கு கிராக்கிகள் கிடைத்தால்தான் நகர்வார் என்பது நிச்சயம். பசி வயிற்றை பிராண்டியது. பாவக் களை ததும்பும் எங்கள் முகங்களைப் பார்த்து பத்து ரூபாய் செலவு செய்ய சிலர் முன்வந்தார்கள். கைவேலியில் கிளம்பிய ஷேர் ஆட்டோ வரிசையாய் அனைத்து பஸ் நிறுத்ததிலும் ஒவ்வொருவராக இறக்கிவிட்டார். ”சதாசிவ நகர்...” என்று ட்ரைவர் கூவி அழைத்து அந்த வாட்ஸாப் அடிமையை இறக்கும்வரை நிமிரவேயில்லை. நான் கடைசி ஸ்டாப். இறங்குவதற்கு நானூறு மீட்டர் முன்னர் பந்தாகத் துள்ளி ட்ரைவர் பக்கத்தில் ஹாக்கி பேட் போல ஒருவர் தொற்றிக்கொண்டார்.

“கடேசி ட்ரிப் தானே...” ஆர்வம் பொங்கக் கேட்டார்.

“ஆமாண்டா... துட்டு வச்சிருக்கியா?” கொஞ்சம் எரிச்சல் கலந்திருந்தது.

“சரக்குக்கு இல்லை... சைட் டிஷ்ஷுக்கு இருக்கு...” தூண்டில் போடும் தொணி.
“தூ.... $%^&#$... பேமானி... நேத்திக்கும் அதேதான சொன்ன... $#%^&*@#... எச்சி சரக்கு குடிக்கிறியே..” விளாசல்.

எந்நேரத்திலும் கைகலப்பாகிவிடும் அபாயம் இருந்தது. கெ. அகராதியில் இன்னும் ஒரு பிடி வார்த்தைகள் சேர்ந்துகொண்டது. இந்த நடையில் என்னையும் சேர்த்து ஆட்டோகாரருக்கு அறுபது ரூபாய் வருமானம். எத்தனை ட்ரிப் முடிந்தது என்று தெரியவில்லை. இறங்கி முக்கு வரையில் நடந்து வந்துவிட்டேன். ஆட்டோ நிலவரம் தெரிய திரும்பினேன். ட்ரைவர் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இறங்கி ஜர்தாகடை வாசலில் நின்றிருந்தார். டாஸ்மாக்குக்கு போவாரா மாட்டாரா என்று தெரிந்துகொண்டால்தான் நிம்மதியாக டின்னர் சாப்பிடமுடியும் என்ற உந்துதலால் அன்னநடை நடந்தேன். பத்து அடிக்கு இரண்டு முறை திரும்பினேன். மூன்றாவது தடவை பார்க்கும் போது..... வேறோரு ஆட்டோவின் ட்ரைவர் சீட்டை நட்புடன் பகிர்ந்திருந்தார். கண்களில் வாட்ஸாப் பார்க்கும் ஆர்வம் கொதித்துக்கொண்டிருந்தது. வாட்ஸாப்பா? சாரி.. டாஸ்மாக் பார்க்கும் ஆர்வம் நிலைகுத்தியிருந்தது.

**

சென்ற ஞாயிறன்று சைதாப்பேட்டை அருகில் அடிபட்ட எனது சேப்பாயியை (கார்) அட்மிட் செய்யும்படி ஆனதால் நேற்று இரவு என்னுடைய பொதுஜன போக்குவரத்து அனுபவம்! தலைப்பை தப்பர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்று உஷார்படுத்த எழுதிய பிற்சேர்க்கைப் பாரா இது.

பருகாமலே ருசியேருதே.........

புண்ணிய தீர்த்த ப்ரோக்ஷணம் போல ட்ரிஸ்லிங். ச்சர...ச்சர....ன்னு டயர்கள் ரோட்டை உரசும் சப்தம். மழைக்கு காதல் கவிதைகள் எழுதிப் பழகுபவர்கள் ”சக்கரங்கள்.. சாலைக்குக் கொடுக்கும் இச்..இச்..இச்கள்” என்றும் கவி டச் கொடுப்பார்கள். ஈஸ்வர கடாக்ஷத்தில் வடபழனி சிக்னலருகே கூட வண்டிகள் தேங்கவில்லை. தலைக்கு பாரமாய் இருக்கிறது என்று ஹெல்மெட்டை பெட்ரோல் டாங்கில் கவிழ்த்து ஒரு வீரதீர பராக்கிரமசாலி S போட்டுச் சென்றார். எனக்கு உள்ளுக்குள் ஆடியது. 

புறவுலகின் இத்தகைய ஆட்டங்களிலிருந்து விடுதலையாக 91.1 சுகமாகப் பாடியது. தொன்னூற்றோரு நாட்களுக்கு ரவுண்ட் தி க்ளாக் இளையராஜா பாடல்கள் மட்டும் என்று அறிவிப்பாளர் கதறிக்கொண்டிருந்தார். ”நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்..”லில் எஸ்பிபி காதலாகக் குழைந்தார். பாந்தமாக டூயட் பாடிய ஜானகியின் குரலில் டன் டன்னாய் இளமையைக் கொட்டி மொழுகியிருந்தது. முன்னால் முப்பதில் சென்ற ஆட்டோக்காரரை முந்த எண்ணம் வரவில்லை. ”என் வாழ்விலே தீபம் ஏற்று...” என்ற எஸ்பிபியின் சரண முடிவின் போது தபதபத்த தபேலாவுக்கு சிக்னல் போட்டமாதிரி இருந்தது. பாட்டு முடியும் வரை க்ளட்ச் கியரைப் பிடிக்க மனது மறுத்தது. எப்பவோ டிவியில் இந்தப் பாடலைப் பார்த்தது நியாபகம் வந்தது. பிரபு சாரையும் ராதா மேடத்தையும் வெள்ளிப்பனிக் கட்டிகளுக்கிடையில் லாங் ஷாட்டில் ஓடவிட்டே நிலவொன்று கண்டேனை எடுத்திருப்பார்கள். கிளம்பிடலாம் என்கிற மூட் வந்துவிட்டது. 

அந்தப் பாட்டு முடிந்து அரைமணி பல குரல்கள் ஒலித்தன. சலித்துப்போய் அதன் கழுத்தைத் திருகலாம் என்று கையைக் கொண்டு போனபோது “நிப்பாட்டுடா”ன்னு பொடரியில் தட்டுவது போல“கேளடி என் பாவையே... “ ஆரம்பித்தது. திரையில் குறும்பென்று சங்கடங்கள் செய்யும் கார்த்திக்குக்கு பின்னணியில் குறும்பாகப் பாடி எஸ்பிபி உயிர் கொடுத்துக்கொண்டிருந்தார். “ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்...”மில் என்ன ஒரு கம்பீரம்! ”ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்”மில் என்ன ஒரு நளினம்!! “என் சொர்க்கமே.. என் சொந்தமே...”யில் குரலை வளைத்து வளைத்து ஜாலம் காட்டினார்.

மூஞ்சி கைகால் அலம்பும் போது, சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கும் போது என்று ரகசியக் காதலி போல எஸ்பிபி ஞாபகம். பெண்குரலில் பிரபலமாக இருந்தாலும் சிகரத்தில் இது சிகரம். https://www.youtube.com/watch?v=rNIEALvcBQY இதை விட சிகரம் இது https://www.youtube.com/watch?v=sF_cUbV5Bwg

இரவெல்லாம் மழைக் கொட்டித் தீர்க்கும் போது மொட்டை மாடி ஓரக் கொட்டகையில் வரிசையாய் இதுபோல எஸ்பிபி பாட கவுந்தடித்துப் படுத்துக்கொண்டு மழையையே பார்த்துக்கொண்டு.. பருகாமலே ருசியேருதே.........

சாரி சேப்பாயி!

நந்தனம்-சைதாப்பேட்டை வழியில் திநகருக்குத் திரும்பும் வலதுபக்கப் பாதை. பச்சையும் சிகப்பும் படக்படக்கென்று கண்சிமிட்டிக்கொள்ளும் சிக்னல். மரணக்கிணறு வீலிங் செய்பவர்களால் கூட நாற்பதுக்கு மேல் செல்லமுடியாது. நானூறு வண்டிகளுக்கு மத்தியில் செல்லும் போது நாற்சக்கரங்கள் நான்கில் போகலாம். இன்னும் கொஞ்சம் அதிகம் என்றால் பத்தில் போகலாம். அப்படித்தான் நான் சேப்பாயியில் போய்க்கொண்டிருந்தேன். முன்னால் ஒரு நாற்பத்தைந்து பி ஊழிக்காலத்தில் உலகம் கிடுகிடுப்பது போன்ற கடமுடா சப்தத்துடன் சர்வ நிதானமாகச் சென்றுகொண்டிருந்தார். 

இதுவரை ஓகே. 45 பி டிரைவர் திடீரென்று ப்ரேக்கில் ஏறி நின்றுவிட்டார். எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளும் சேவகன் போல பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்த எனக்கு வெடுக்கென்று ஆகிவிட்டது. அரைக்கண் ரியர்வ்யூ மிரர் யாருமில்லை என்று சொல்ல சடாரென்று ஸ்டியரிங் ஒடிய வலதுபுறம் ஆனமட்டும் ஒடித்தேன். சேப்பாயியின் இடது கண் மாநகரப்பேருந்தில் இடித்துவிட்டது. 45பி எழுப்பிய சப்தத்தை விட சன்னமான சப்தம்தான் கேட்டது.

சிக்னல் தாண்டி அப்படியே மெதுவாக ஓரம் கட்டினார். நான் 45பியின் முதுக்குப்பின்னால் கொண்டுபோய் பயபக்தியோடு நிறுத்தினேன். டிரைவரும் கண்டக்டரும் ஜோடியாக இறங்கி வந்தார்கள். நானும் சீட் பெல்ட்டிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு போனெட் அருகில் வந்தேன். ஹெட்லைட் கண்ணாடி செதில்செதிலாக உடைந்துவிட்டது. போனெட்டை லேசாகத் தன்னை திறந்து கொண்டு குறட்டை விட வாய்பிளக்கும் போஸில் இருந்தது.

“ஒரு சாவுகிராக்கி டூவீலரை முன்னாடி கொண்டுவந்து கட் கொடுத்துட்டான் சார்! அவன் மேலே இடிக்கக்கூடாதுன்னு சடன் ப்ரேக் போட்டேன்....”

“சரி.. விடுங்க.. என்ன பண்றது.. உங்க மேலையும் தப்பில்லை..” என்றேன்.

“நீங்க கேப் விட்டு வந்திருக்கலாம்”

குருக்ஷேத்திரத்தில் துரோணர் காதில் விழாதமாதிரி குஞ்சரஹ சொன்ன தர்மபுத்திரன் போல பேசினார். எனக்கு மனசு தாங்கலை. “நான் நிறையா கேப் விட்டு வந்திருப்பேன். ஆனா லட்சோபலட்சம் வண்டிகள்ல அந்த கேப்ல வேற யாரும் வராம இருப்பாங்களா சார்?” கேட்டுவிட்டேன். டிரைவர் பதில் பேசவில்லை. நியாமெனப்பட்டிருக்கும். சேதாரம் எதுவும் கேட்டுவிடுவேனோ என்று அப்படி பேசியிருக்கலாம். ”பத்து மீட்டர் இடைவெளி விடவும்னு விளம்பரம் பண்றாங்க... சிட்டியில ஒவ்வொரு வண்டிக்கு பின்னாடியும் பத்து மீட்டர் இடைவெளி விட்டா.. கிண்டியில முதல் பஸ் நின்னா மூனாவது பஸ் பாரீஸ்ல நிக்கும்... என்ன சொல்றீங்க?” என்றேன். ஒரு குறுகுறுப்பார்வையை என் மேல் விட்டார். நான் சிரித்தேன். கொஞ்சம் சகஜமானார்.

“பரவாயில்லை. எடுங்க..” என்று கார்க்கதவைத் திறந்தேன். இருவரும் நகர்ந்தனர். யாரோ கட் அடித்த சாகசத் தவறுக்கு யார்யாரோ அனுபவித்தோம். சேப்பாயியை நாளை க்ளினிக் அழைத்துக்கொண்டு போகவேண்டும். நான் இன்னும் விழிப்பாக இருந்திருக்கலாம்.

சாரி சேப்பாயி!!

ரம்மிய நடனம்

நூற்றுக்குத் தொன்னூறு சதவிகிதம் “சலங்கையிட்டாள் ஒரு மாது...”வை சிறுமியரும் “உலக வாழ்க்கை நடனம் நாம் ஒப்புக்கொண்ட பயணம்..”மை செந்திலகமிட்ட வீரச் சிறுவர்களும் ஆடி பள்ளி ஆண்டு விழா மேடையை ரணகளப்படுத்துவார்கள். ”வீய்ங்..வீய்ங்...” விசிலடிச்சான்குஞ்சுகளின் அழிச்சாட்டியம் தாங்கமுடியாது. சில சமயங்களில் ஃபோகஸ் லைட் படக் படக்கென்று கண் சிமிட்டும். பல சமயங்களில் கூம்பு ஸ்பீக்கர் “கூ...”வென்று பெருங்குரலெடுத்து காதைக் கிழித்து அலறும். சிலபல சமயங்களில் சலங்கையில் மாதுவும் ஒப்புக்கொண்ட பயணமும் “ழ்..ழ்...ழ்...”ழென்று ஸ்பீக்கர் நாக்கோடு இழுத்துக்கும்.

இவையெல்லாம் இல்லாத பாவராகதாளமான பரதநாட்டியக் கச்சேரியை இன்று சாயங்காலம் கண்டு களித்தேன். ராணி சீதை ஹால். கொஞ்சம் ஆசுவாசமாய் மூச்சு விட்டால் ஸ்பீக்கரில் ”ஸ்...”கேட்கிறது. ஒலியமைப்பு பிரமாதம். அறை மிதமான குளிரூட்டப்பட்டிருந்தது. சொற்ப ரசிகர்கள் ஆர்வமாயிருந்தார்கள். சீர்காழி சிவசிதம்பரம் சீஃப் கெஸ்ட். கணீர்த் தமிழில் பேசினார். கடைசியில் “மனித்த பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே”வை நறுவிசாக ஆலாப் செய்தார். ”வர்ற ஆகஸ்ட்டில் கலாக்ஷேத்ராவில் என்னோட டான்ஸ் இருக்கு” என்று பேசிய சிக்கல் வசந்தியம்மாவுக்கு வயசு எழுபதாம். நடனமாடப்போகிறேன் என்கிற அவரது அறிவிப்பே என்னை மிரட்டி முட்டியை ஒரு தடவை பிடித்துவிடச்சொல்லிக் கேட்டது. நடிகை ஸ்ரேயா ரெட்டி கெஸ்ட்களில் நட்சத்திரம்.


முதலில் ஒரு அம்மாவும் பொண்ணும் சலங்கை பூஜை போட்டார்கள். அவர்கள் பெயரை மறந்ததற்கு வல்லாரை ஒரு மண்டலம் சாப்பிடலாம் என்று இருக்கிறேன். மன்னிக்க. முருகனின் மயில் வாகனம் போன்றும் பிள்ளையாரைப் போலவும் அபிநயம் பிடித்தது தத்ரூபமாக இருந்தது. பார்வையாளராக உட்கார்ந்து மகள் ஆடுவதை பார்க்கும் அன்னையர்கள் மத்தியில் அவரும் சேர்ந்து மேடையில் ஆடியது வியப்பூட்டியது. பாராட்டத்தக்கது. ஆடற்கலையை ஊக்கப்படுத்திய அவருடைய கணவருக்கு ஒரு ராயல் சல்யூட்.

நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்தளித்த கணேஷ் தீந்தமிழால் அசத்தினார். கந்தபுராணம், திருவாசகம், தேவாரம், ஊத்துக்காடு வேங்கடகவி என்று பலவிதமான செய்திகளை தங்குதடையில்லாமல் தந்து பார்வையாளர்களைப் பந்தாடினார். ஆட்டத்திற்காக சென்றாலும் இவரது பேச்சு ஆட்டத்தின் இடைவெளிகளை சுவையாக நிரப்பியது. நல்ல தமிழ் தொகுப்பாளர் வேண்டுவோர் இவரை அணுகவும். பக்கவாத்தியம் வாசித்தவர்கள் கர்நாடக இசைக்கச்சேரி செய்தார்கள். பாட்டா, பேச்சா, நடனமா என்று கச்சேரியின் இயல்பு மாறிக்கொண்டே இருந்தது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. லீலாலயா நாட்டிய அகாதமியின் குரு திருமதி சந்திரிகா திருப்பதியின் ஏற்பாடுகள் பாராட்டத்தக்கது. நட்டுவாங்கத்தில் நடனமாடியவர்களை கட்டுக்குள் வைத்திருந்தார்.

Ravindran Narayanan னின் இரு புதல்விகளும் ஆனந்த நடனமாடினார்கள். பிள்ளைகள் ஆடுவதை பெருமிதமாக பார்த்தபடியிருந்தார் Srividhya Ravindran. க்ருஷ்ணன் பாட்டுக்கு கோலாட்டாம் ஆடிய விஜய்ஸ்ரீயின் கைகளில் அப்படியொரு நளினம். குழு நடனத்தில் தனியே தெரிந்தார். ரம்யஸ்ரீ இதில் சீனியர். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் வாணி மஹாலில் சலங்கை பூஜைக்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். இப்போது ரம்யாவிற்கு நடனம் அகஸ்மாத்தாக வருகிறது. உலகம் என்ற பதத்திற்கு அபிநயம் பிடிக்கும்போது தலைக்கு மேலே கையை ரம்யா வட்டமடிப்பதில் பூமி சுழல்கிறது. சபாஷ்.

பரத முனிவர் பார்த்திருந்தால் பரவசப்பட்டிருப்பார். நாட்டியத் தாரகைகள் Ramyashri Ravindran னும் விஜய்ஸ்ரீயும் மேன்மேலும் மேடையேறி புகழ்பெருக தில்லையம்பலவானனை ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்! வாழ்க!! வளர்க!!

தீப்பிடித்துக் கொண்ட வானம்

“தீப்பிடித்துக் கொண்ட வானம்”
ஸ்கூட்டியில் என் புத்ரிகள் இருவரையும் அழைத்துக்கொண்டு லோக்கலாகச் சுற்றிக்கொண்டிருக்கையில் ”அப்பா.. நிறுத்து...” என்று பின்னாலிலிருந்து என் முதுகில் ப்ரேக் பிடித்துப் பெரியவள் க்ளிக்கியது 

“தங்கக் கொன்றை க்ரீடம் சூட்டிய ஸ்வேத விநாயகர்”
சேப்பாயியில் ஊர் சுற்றக் கிளம்பியபோது ”ப்பா... உன் ஃபோனை இங்கக் குடு....” என்று சொடுக்கிக் கேட்டு வாங்கிச் சின்னவள் க்ளிக்கியது .

இரண்டுமே அவர்களுடைய விருப்பக் கோணத்தில் ஐஃபோனில் எடுக்கப்பட்டவை. ”எழுதநேரமில்லா மென்னியை நெறிக்கும் சமயங்களில் கைவசமிருக்கும் படங்களை ஷேர் செய்” என்பது என் ஃபேஸ்புக்கின் அடிப்படை விதி! 


அகோரத் தபசி : அசோகமித்திரன்

ஞாயிறு மதியங்களில் அவசியம் ஒரு சிறுகதையோ நாவலோ படிக்கவேண்டும் என்கிற கட்டாய அட்டவணை ஒன்றை மானசீகமாக கடைபிடிக்கிறேன். ஒரு பத்து பக்கத்திற்குமேல் படிக்க நேரமில்லை என்று தெரிந்தால் கும்பகோணம் பதிப்பு மஹாபாரதமோ அல்லது தஸம ஸ்கந்தமோ புரட்டுவேன். அம்பரீஷனுக்காக துர்வாசரைத் துரத்திய சக்ராயுதக் கதை அப்படிதான் படித்தேன். அதை இன்னொரு பதிவில் எழுதுகிறேன். இப்போது வேறு கதை.

இன்று ”அகோரத் தபசி” மாட்டியது. அசோகமித்ரன். ஸாய் பஜனையில் பார்த்த யாரோ ஒருவரைப் பற்றிய கதை. “எல்லோரும் சாமியார்களைப் பார்க்கப் போறதே கஷ்டம் தீரறத்துக்குதானே..” என்று எழுதுகிறார். அதில் வரும் பசுபதி என்கிற பாத்திரம் கிருஷ்ணாம்பேட்டையில் பூஜை செய்யப் போகிறது. ப்சுபதியின் மனைவிக்கு உதவிக்கரம் நீட்டி இவர் க்ருஷ்ணாம்பேட்டையைத் தேடிக்கொண்டு செல்கிறார். மொத்தம் ரெண்டரை பக்கம்தான் கதை. 

கிருஷ்ணாம்பேட்டை வர்ணனையும் அங்கே வெட்டியானுடன் நடக்கும் சம்பாஷனையும் அபாரம். சாம்பிளுக்கு சில.

# இவ்ளோ பெரிய ஸ்மசானமா? உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரையுமே அங்கே சமாதி கட்டிவிடலாம் போலிருந்தது. எங்கெங்கோ பிணங்கள் எரிந்துகொண்டிருந்தது.

# ”இங்கே நேத்து முந்தினம் கறுத்த மனுஷன் ஒருத்தர் வந்தாரா?”

“நூறு பேர் வந்தாங்க.. நாங்க பொணத்தத்தான் பார்ப்போம்.. ஆணா.. பொண்ணா?”

# ”இவரு பூஜை சாமான் கொண்டு வந்திருப்பாரு.. கருப்பா உசரமா”

“ம்...ஒருத்தன் எலும்பு திருட வந்தான். போலீஸ் கொண்டு போய்ட்டாங்க”

“அந்த ஆள் பேரு எதாவது சொன்னாரா?”

“எலும்பு திருடறவனுக்கு பேர் என்ன?”

“ஏன் .. உனக்கு பேர் இல்லியா”

“என்ன பேரு சின்ன வெட்டியான், அண்ணன் பெரிய வெட்டியான்”

அனாயசமாக ஆளை அடித்துப் போடும் வசனங்கள். எவ்ளோ யதார்த்தம்! உனக்குப் பேர் இல்லியா? என்கிற கேள்விக்கு சொன்ன பதில்... அமியின் சொற்சிக்கனமும் சொற்களின் வாயிலாக படம் பிடிக்கும் காட்சிகளும்... 

கதையைப் படித்த பின்னர் வழக்கமாக ஞாயிறு மதியம் கண்கள் சொருகிக் கட்டையைச் சாய்க்கும் எண்ணம் கூட வரவில்லை.

மானஸா மஹாபாரதம்


போன மாசத்தில் ஒரு நாள் ஆஃபீஸிலிருந்து வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக தரதரவென்று மாடிக்கு இழுத்துக்கொண்டு ஓடினாள் சின்னவள். 

“ஏன்?”

“வாயேன்..”

“என்னடி.. எதாவது விஷமம் பண்ணி வச்சுருக்கியா?”

“வான்னா.. வா.... மேல பேசாதே...”

மகளின் ஆணைக்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்படுதலில் ஒரு அலாதி சுகம் இருக்கிறது. சிரித்துக்கொண்டே கப்சிப்பென்று பின் தொடர்ந்தேன்.

”இந்த க்ஷணமே வாங்கிக்கொடுத்தால்தான் ஆச்சு.. ”என்று ஆறு மாசத்துக்கு முன் ஒத்தைக்காலில் நின்று அடம்பிடித்து வாங்கிய வொயிட் போர்டில் ஒரு ஹயரார்கி சார்ட்.

“என்னடி இது?”

“மஹாபாரதா.. பூர்ண வித்யா எக்ஸாம்ப்பா... அதான் எழுதி பார்த்தேன்..”

சின்னச் சின்ன கேள்விகள் கேட்டேன். பதில்களை திரிக்காமல் அப்படியே தருகிறேன்.

“பாண்டவாஸுக்கும் கௌரவாஸுக்கும் அப்பா மாதிரி ஹஸ்தினாபுரத்தை போட்ருக்கியே”

“அவா ரெண்டுபேருக்கும் அதான் ஊரு... அங்கேதான் வளர்ந்தா...”

”பாண்டவாஸுக்கு தே காட் மேரீட். கௌரவாஸுக்கு தே டிட்டிண்ட் கெட் மேரீடா?”

“ஆமா.. எங்க பாடத்துல துரியோதனனுக்கெல்லாம் கல்யாணம் ஆகலையே...”

”அதென்ன துஸ்ச்சலையை மட்டும் எழுதியிருக்கே... பாக்கி பேரெல்லாம்..”

“நூறு அண்ணாக்களுக்கு ஒரே ஒரு தங்கச்சிப்பா.... அதான்...” முகத்தில் ’ப்ச்”சென்று பாவம் வடியச் சொன்னாள்.

”எனக்கு இது எல்லாத்துலையும் ரொம்ப புடிச்ச லைன் என்ன தெரியுமா?”

“ம்.. சொல்லுப்பா...”

“was not born in Kunthi's stomach, was born by praying to GOD"

"ப்பா... கிண்டல் பண்றியா?”

“ச்சே...ச்சே... DRAUPADI IS ALL 5'S WIFE... அது கூட சூப்பர்..”

“வாணாம்... அழிச்சுடுவேன்..”

விடுவிடுவென்று உள்ளே ஓடி கோபமாக டஸ்டர் எடுத்துவந்து அழிக்கும் முன் சட்டென்று க்ளிக்கினேன். இதில் கோடிட்டிருக்கும் சங்கதிகளை விட எனக்கு ரொம்பவும் பிடித்தது அவளுடைய அப்ரோச். பரீட்சைக்கு படிக்கும்போது தனக்கு ஏற்றார்போல அதை எழுதிவைத்துக்கொண்டது. சின்ன வயசில் இப்படியெல்லாம் டெக்னிக்காகப் படிக்கத்தெரியாமல் போய் “அக்பருக்குப் பாபர் சித்தப்பா......” என்று சொல்லி கெக்கெக்கே வாங்கியதுதான் மிச்சம்.

இரு இழப்புகள்

எல்லோரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். அஞ்சலி எழுதியே படிக்கறவனுக்கு அஞ்சலி செய்துடுவானுங்கப்பான்னு நாலு பேர் ’ப்ச்’ கொட்டி ”ஸ்...ப்பா...” என்று மெய்வருத்தம் கொண்டு சலித்துக்கொள்வார்களேன்னு நடுக்கம் இருந்தது. அப்படியானும் ”நானும் ரௌடிதான்” ரேஞ்சில் நீயும் எழுதணுமா என்கிற கேள்வி காலையிலிருந்தே காதுகளில் ”ஞொய்...”யென்று ரீங்காரமிட்டபடியே இருந்தது. என் சோதரியின் க்ளாஸ்மேட் கண்ணன் வாட்ஸாப்பில் ”ஜேகேவுக்கு எழுதலையா?” அதிசயத்து வினவினார். 

ஃபேஸ்புக்கில் பக்கம் பக்கமாக மரியாதை செய்திருக்கிறார்கள். பெரும் எழுத்தாளர்கள் சிகரத்தில் வைத்துக் கொண்டாடிய எழுத்தாளர் ஜேகே. “அவள் அப்படித்தான்...” “ஒரு மனிதன்; ஒரு வீடு; ஒரு உலகம்” என்று சின்ன வட்டமிட்டு அவரை அதில் அடக்கிவிடமுடியாது. இளைய தலைமுறையினருக்கு (நானும் ஓல்டல்ல!) ஜேகே கொஞ்சம் கடினமாக இருக்கலாம். பலா மாதிரி கொஞ்சம் உரித்துப் பார்த்தால் சுளையான படைப்புகளில் தேன் சுவை. பிரபஞ்சன் “இவர்கள் இப்படித்தான்”னில் “கடாவுக்கு நிகராகுமா?”ன்னு சிலாகித்த ஜேகேவைதான் முதல் முறை பார்த்தாராம். இரண்டாவது சந்திப்பில் “ஒரு கதை எதற்காக எழுதவேண்டும்?” என்ற ஜேகேவின் அறிவினாவிற்கு தான் சரமாரியாகச் சொன்ன பதில்களைப் பட்டியலிட்டு கடைசியில் “ஒரு சந்தோஷம் கிடைக்கிறதே.. அதற்காகவும்தான்” என்றதும் முகம் மலர்ந்து “அதை முதலில் சொல்லுங்கள்...” என்றாராம். வாஸ்தவம்தானே!

”மகனே..” என்று கூப்பிட்ட ஒரு கடைத்தெரு அப்பாவைப் பார்த்ததும் ஹென்றியின் அப்பவாகவும், கூலி வேலை செய்பவர்கள் கூட்டு ரோட்டில் எச்சில் துப்பி காலால் மணலைத் தள்ளும் போது கிருஷ்ணாராஜபுரம் பஸ் நிலையத்தில் நிற்பது போலவும் உணரவைத்தது ஜேகே. ”வாழ்வதும் வீழ்வதும் கண்ணீர் விடுவதும் துக்கப்படுவதும் மனிதர்களுக்கு மட்டுமா சொந்தம்? இல்லை. வாழ்க்கை சகல ஜீவன்களையும் அபேதமாகத்தான் போஷிக்கிறது.” தெரு முக்கில் அழுத நாய் மேற்படி வரிகளை இழுத்துவந்தது. இப்படி மாதிரிகளை அடுக்க ஆரம்பித்தால் ஆயிரமாயிரம் வரிகள் எழுதி மீண்டும் ஒருமுறை ஜேகேவின் கதைகளை மறுபதிவு செய்யுமளவிற்கு நேரமும் இல்லை. அவசியமும் இல்லை. முதிர்ந்த வாசகர்கள் கொண்டாடும் கலைஞன் அவர். அமரத்துவம் வாய்ந்த படைப்புகளால் நம்மிடையே வாழ்வார். 

**

திருச்சி விவிதபாரதியில் காலை ஆறரை மணிக்கு பாமாலை ஓய்ந்தவுடன் ஐராவத வண்ணத்தில் ஹாலில் நடுநாயகமாக வீற்றிருக்கும் அந்த “ஷார்ப்”. அடுத்து ”சஷ்டியை நோக்கச் சரவணபவனார்...” பாடிய கையோடு வெள்ளை கலர் கேசட்டை ஒன்றை விழுங்கும். ஆரம்ப “ஸ்....ஸ்..ஸ்...”க்குப் பிறகு கணீரென்று ஒரு குரல் பிசிறில்லாமல் ஆரம்பிக்கும். அதைக் கேட்பதில் மதம் தடையில்லை. இசை கேட்கும் ஆர்வமே பிரதானம். அவரது பாடல்களில் இருக்கும் பின்னணி ”ஜல்..ஜல்..சில்..சில்...”ல் பிள்ளைப்பருவத்தில் ஒரு அலாதியான மோகமும் ஈர்ப்பும் இருந்தது. 

“வள்ளல்நபி மடி தவழ்ந்த நன்மணிகள்...நல்ல வாஞ்சைமிகு ஃபாத்திமாவின் கண்மணிகள்....” எனக்கு மிகவும் பிடிக்கும். ஜனாப். ஹனீஃபாவின் குரலில் மனிதர்களை மயக்கும் ஒரு வசியம் உண்டு. இளையராஜாவின் செம்பருத்தியில் “கடலுல எழும்புற அலைகளைக் கேளடி..ஓ....மானே...”யில் கம்பீரமான குரலில் கோந்து போல ஒட்டிக்கொண்டு வடியும் சோகம் பார்வையாளனைக் கரைக்கும் வல்லமை வாய்ந்தது. பின்னர் பாடலை மட்டும் கேட்கும்போது கைலியோடு ஹனீஃபா கண்முன் வந்து போனார். எங்கள் ஏரியா மனிதர். அவரது “இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்வதில்லை...”யைப் பாடி பலர் பல மேடைகளில் பரிசில் பெற்றுள்ளார்கள்.

அவன் இல்லையென்று சொல்லாமல் ஈ.எம். ஹனீஃபாவுக்கு அருளியிருந்தான். இன்னும் கொஞ்சம் பொறுமையாக இந்தப் பொக்கிஷத்தை அழைத்துக்கொண்டிருக்கலாம். ஹனீஃபாவுக்கு செய்யும் அஞ்சலியாக கடந்த அரை மணி நேரமாக “இறைவனிடம் கையேந்திக்கொண்டிருக்கிறேன்...”. ரிப்பீட்டில்.

பெரிய அத்தை

“சாயரக்ஷை வெளக்கு வெச்ச பிறகு வாசல்ல உட்கார்ந்து தல பின்னலாமாடீ....? ம்... ஸ்ரீதேவி வருவாளா? அவ அக்காதான் வருவா...”

“ஈரத்துண்டைக் கட்டிண்டு பூஜை பண்ணப்டாதுடா... ரெண்டு வஸ்திரம் வேணும். பஞ்சகச்சம் கட்டிண்டு உத்தரீயத்தை இடுப்புல கட்டிக்கோ....”

”எச்சப் பண்ணப்டாது.. டம்பளரை முழுங்கிடாதே... ம்.. சொல் பேச்சு கேட்கமாட்டியா... ம்.. ம்...”

“பசுஞ்சாணம் கொஞ்சூண்டு கொல்லேல வச்சுக்கணும்.. பத்து தொடைக்கும்போது ரவையாணும் சேர்த்துக்கணும்...”

நடுஹாலில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு நேற்றுவரை எல்லோரையும் அரசாட்சி செய்துகொண்டிருந்தவள் இப்போது இல்லை. பெரிய அத்தை. ஜானகி. அப்பாவுக்கு மூத்தவள். மூன்று தலைமுறைக்காரி.

விறகுக் கட்டை மெத்தையில் விறட்டி போர்த்தி ஆவடி சுசானக்கரையில் சம்பிரதாயமான தகனம். குடும்பத்தில் நல்லது கெட்டதுகளை அதிகாரமாய் இடித்துச் சொல்லும் பெரியவளின் இழப்பு. ”ஸோடியம் குறைச்சல்... ரெண்டு மூனு நாள் ஏத்தினா சரியாயிடும்..” என்று டாக்டரின் வாக்குறுதியில் நேற்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ரொம்பவும் அவதியில்லை. மாட்டுப்பொண், மகள், மகன் என்று ஷிஃப்ட் போட்டு ஆஸ்பத்திரி வராண்டா கொசுக்கடியில் படுக்கவைத்து யாரையும் படுத்தவில்லை. போய்ச் சேர்ந்துவிட்டாள். பேரிழப்பு.

”பொட்”டென்று சுடுகாட்டுக் கூரை தாங்கிய பில்லரில் பானை உடைக்கப்பட்டுச் நெஞ்சருகே சிதை மூட்டும் போது முன்னை..பின்னை...அன்னை.. தீ மூள்கமூள்கவே..பட்டினத்தார் ஞாபகம் வந்தார். “கேஸ், எலெக்ட்ரிக்கெல்லாம் விட இதான் சார் சூப்பர். என்னதான் லேட்டஸ்ட்டா எது வந்தாலும் இதுதான் மனசுக்குத் திருப்தியாயிருக்கும்...” சுடுகாட்டாங்கரைக் குட்டையில் ஆசை தீரக் குளித்துக்கொண்டிருந்த எமதர்மராஜன் வாகனங்களை ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்த வேளையில் பின்னாலிருந்து ஒரு அந்நியர் உள்ளம் உருகினார்.

விட்டேத்தியாகப் பார்த்தேன். அஸ்தியாவதில் எது சூப்பர்? எதில் திருப்தி?

“அத்தே... கிரஹணம்... எத்தனை மணி வரை சாப்பிடலாம்... எப்போ விட்ட ஸ்நானம் பண்ணணும்...”. ஊஹும். வீட்டிற்குள் கேட்க ஆளில்லை.

க்வில்லிங்

"பரீட்ஷை முடிஞ்சதும் வாங்கித்தருவியா?”

“ம்.”

“காட் ப்ராமிஸ்”

“ப்ராமிஸ் காட்” என்று சின்னவள் கையில் அடித்து சத்தியம் செய்து கொடுத்திருந்தேன்.

க்வில்லிங் செட். சிங்கப்பூர் ஷாப்பிக்கு சென்று “அதோ அந்த பீட்ஸ் குடுங்க.. அந்த ஷேப்பர்.. அது.. ம்... அதுதான்.... க்வில்லிங் டூல்ஸ் இருக்கா?..” என்று தேடித்தேடி அந்தப் பொடியனை இடுப்பொடிய வேலை வாங்கியாயிற்று.

ஆஃபீஸில் ஈவினிங் ஒரு மீட்டிங்கில் இருந்தேன். ஃபேஸ்டைம் கிணிங்கிணிங்கென்று சிணுசிணுத்தது. ”எக்ஸ்க்யூஸ் மீ” சொல்லிட்டு எடுத்தேன். “அப்பா.. பார்த்தியா.. எப்டியிருக்கு.. “ என்று கொஞ்சு தமிழில் பேசி இதைக் குலுக்கிக் காட்டினாள்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் காது நுணியில் இவைகளை ஒவ்வொன்றாய் வைத்து தலையை இங்குமங்கும் ஆட்டினாள்.


எதையோ புதிதாய் செய்ததற்கான பெருமிதம் கண்களில் மின்னியது. அவள் விழியசைவில் தெய்வங்கள் சொர்க்கத்தோடு இறங்கி வீட்டிற்குள் முகாமிட்டன. மண்ணில் இதைவிட சொர்க்கமுண்டோ! என்ற வரிகள் பாடலாய் செவிகளை நிறைத்தது. இப்போது அவள் கண்மூடித் தூங்குகிறாள். இவைகள் என்னுடன் அழகியல் பேசுகின்றன. நான் உருகி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

வீதிராமர்கள்

காலையில் காரைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது காதுக்கு ருசியாக ஒரு குரல். இல்லையில்லை. குரல் ருசியைவிட நாம ருசி அபாரம். தெருக்கோடியில் இருவர் அட்டை க்ரீடம் தரித்துக்கொண்டு பட்டு அங்கவஸ்தரம் தரையில் புரள ராமர் கலரில் வந்துகொண்டிருந்தார்கள். வீடுதோறும் வாசலில் நின்று “ஜானகிராமா... சீதாராமா.. ரகுகுலதிலகா.. ரகுவீரா.. ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்கு.... ஜெய்..” போன்ற திருநாமங்களை பாடல் சாயலில் கோஷமிட்டார்கள். ராமநவமிக்காக திடீரென்று முளைத்த அவசர ராமர்கள். அசோகவனத்தில் ஜானகி சிறையிலிருக்கும் போது இராவணன் ராமன் வேடத்தில் வந்து அவளை வசியப்படுத்த எண்ணினானாம். ஆனால் வேடமேயானாலும் ராமன் உருக்கொண்டதால் பிறன்மனையாளை வசப்படுத்தும் எண்ணம் அறவே எழவில்லையாம்.“புருடா விடாதே.. ஆதாரம் காட்டு.. “ என்று கையில் அரைச் செங்கல் தூக்காதீர்கள். செவிவழிக் கதை. நீதி பெரிசு.என்னமோ வீதிராமர்கள் மேலே ஒரு அலாதி பிரியம் ஏற்பட்டது. என் வீட்டு வாசலில் ராமநாமாக்களை அவர்கள் பொழிந்தபோது நீங்கள் இதோடு பார்க்கும் இந்தப் புகைப்படம் எடுத்தேன். யத்கிஞ்சிதம் கொடுத்து வழி அனுப்பும்போது ஒரு மனுஷ ஆஞ்சநேயர் நியாபகம் வந்தார். கொசுவர்த்திச்சுருள் உங்கள் கண்ணெதிரே வட்டம் போட ஆரம்பித்தாலே உங்களை மன்னையைவிட வேறு எந்த ஊருக்கு அழைத்துச்செல்வேன். ம்.. வாருங்கள்.. 

இதோ தேரடி. மதிலழகு மிக்க மன்னை ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில். சொர்க்கவாசல். ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவித்யா ராஜகோபாலனை யானைப் பிளிறலோடு சொர்க்கவாசல் மண்டபத்தில் தரிசித்துவிட்டு வெளியே வரும் போது.. அதோ.. அந்த புன்னை மரத்தடி தாண்டி... ஆஞ்சநேயர் மாமா நின்றுகொண்டிருப்பார். உதட்டைச் சுற்றி சிகப்புக்கலர் சாயம். கதாயுதம். அரையில் ஜிகினா பதித்தத் துண்டு. ”ரெண்ட்ரூவா தாளா இருக்குபார்... அதைக் குடு..” என்று பாட்டி கை காண்பிப்பாள். குனிந்து பவ்யமாகக் கொடுத்தவுடன் கதாயுதத்தால் செல்லமாகத் தலையில் தட்டி ஆசீர்வாதம் செய்வார். ரொம்பநாள் அந்த கதையை எடுத்துச் சுழற்ற ஆசைப்பட்டிருக்கிறேன். சொர்க்கவாசல்கள் கடந்துபோயின. ஒரு சொர்க்கவாசலில் ஆஞ்சுத்தாத்தாவை காணவில்லை. எங்கே போனார் என்றுதெரியவில்லை. ஆனால் இன்று பத்துவீடு தள்ளி இந்த ராமர்கள் செல்லும்போது அவர்கள் பின்னாலேயே அதே ஆஞ்சுத் தாத்தா போவது போலிருந்தது. 

நிறைய வீடுகளில் யாரும் வெளியில் வந்து காசுபோட்டதாகத் தெரியவில்லை. நாமம் கேட்டார்களோ.. இல்லையோ.. தியாகைய்யர் ராமஸ்மரணையிலேயே முக்தியடைந்தார். 

புறவேடமிட்டிருந்தாலும் அகவேடமில்லாத வெள்ளந்தி மனிதர்கள். ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெயஜெயராம்.....

பன்னிரெண்டு விரல்

டேப், ஐபேட், எஸ் ஃபோர், லாப்பி, டெஸ்கி என்று தலைக்கு ஒன்றாய் கையில் வைத்து முப்போதும் மும்முரமாக நோண்டிக்கொண்டிருப்பதால் இணைய உபயோகம் வாங்கிய திட்டத்திற்கு மேல் அதிசீக்கிரம் கபளீகரம் செய்யப்பட்டு படுத்துவிடுகிறது. 

வரவு எட்டணா செலவு பத்தணா மாதிரி மாசக்கடைசியில் குந்தணா..குந்தணா...வாகிவிடுகிறது. ஏழு கடல் ஏழு மலை ஏழு கூவம் தாண்டி வருவது போல லாப்பியில் அடித்து... கிராஃபிக்ஸ் ஜிகினாக்கள் இல்லாத ஜிமெயிலின் பேஸிக் வர்ஷனில் லாகின்செய்து.... ட்ராஃப்டில் சேமித்து வைத்து... குடுகுடுவென்று ஓடி... எப்போதும் தன்னை சார்ஜ் ஏற்றிக்கொண்டிருக்கும் ஐஃபோனில் ஜிமெயிலுக்குப் போய்... அங்கே ட்ராஃப்ட்டிலிருந்து எடுத்து... ஐஃபோன் 3ஜியில் இணையத்தை அடைந்து.. ஃபேஸ்புக்கில் பதிவு போட்டு..... அதீத கடமையாற்றிக்கொண்டிருக்கிறேன். 

நண்பர்களின் பதிவுகளுக்குக் கமெண்ட் போடுவதற்குள் கட்டை விரல் இரண்டும் கழண்டு விடுகிறது. இரண்டு நாட்களாக எனது பதிவுகளுக்கு கருத்துரைத்தவர்களுக்கு சம்பிரதாய நன்றி நவிலல் கூட செய்யமுடியாத பாவியாகிவிட்டேன்.

”எல்லோரும் எப்போதும் குனிந்து கொண்டே கட்டை விரல்களால் எதையோ சொரிந்து கொண்டேருக்கிறார்களே.. என்னப்பா அது?” என்று ப்ரம்மா குழுமியிருந்த தேவலோக வாசிகளிடம் கேட்டாரம்.

திரிலோக சஞ்சாரியான நாரதர் முன்னே வந்து “ப்ரபோ... அதன் பெயர் ஸ்மார்ட் ஃபோன்கள்... எப்போதும் வம்பளந்துகொண்டே இருப்பதற்கான வஸ்துக்கள்... கிரிக்கெட் உலகக்கோப்பை ரொம்ப சின்னது. உலக அண்டாவை போட்டியின் பரிசாக வைத்தால்தான் இந்தியர்கள் ஜெயிப்போம்...போன்ற அக்கப்போர்களை அடுக்குவார்கள்.. சட்டென்று பொங்குவார்கள்.. பொசுக்கென்று அடங்குவார்கள்.. எதற்கும் புர்ச்சி செய்வார்கள்...“

“அப்போ.. நீர்தான் தேவலோக ஸ்மார்ட் ஃபோனா நாரதா?” என்று நாரதரைக் கட் செய்து மொக்கை ஜோக்கடித்த ப்ரம்மாவின் சத்தியலோகத்திலிருந்து கழண்டு கொள்ள எத்தனித்த நாரதரின் அங்கவஸ்திரத்தை இழுத்துப் பிடித்து ப்ரம்மா காதில் சொன்னாராம்... “இனி.. மனித ஜென்மங்களின் டிசையனை மாற்றிவிடுவோம். மொத்தமாக பன்னிரெண்டு விரல் வைத்துவிடுவோம். கைக்கு ஒரு கட்டைவிரல் எக்ஸ்ட்ரா... மண் பயனுறட்டும்... ”

நாரதர் வம்படியாக “பத்து விரலோடு பிறந்தவர்களை என்ன செய்வது?” என்று கேட்டார்.

“எனக்கு கோயில்கள் நிறைய கட்டவில்லை. சில இடங்களில் சுட்டெரிக்கும் வெயில் புயல் மழையடிக்கும் பிரகார கோஷ்டத்தில் வைத்து கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள். ஃபேஸ்புக்கிலும் வாட்ஸாப்பிலும் இன்னபிற சோஷியல் நெட்வொர்க்குகளில்
 “ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்
” என்ற என் காயத்ரி மந்திரத்தை 108 முறை ஷேர் செய்வதன் மூலம் இரு கட்டை விரல் எக்ஸ்ட்ராவாக முளைக்கக்கடவார்கள்” என்று ஆசீர்வதித்தாராம்.

இராத்திரிக்குள் 108 முறை ஷேர் செய்து இராவோடு ராவாக இரண்டு கட்டை விரல் உபரியாக வளரக்கடவீர்கள். ஓம் ப்ரஹ்மா!

தங்கமே தங்கம்

குந்துமணி தங்கம் வாங்கலாம் என்று தி.நகர் ஜிஆர்டியில் காலடி எடுத்துவைத்தால் ரேஷன் கடையில் சர்க்கரை போடும் நாள் போல கூட்டம். பத்து ஊழியர்கள் சளைக்காமல் “வணக்கம்” சொல்லி வாசலிலேயே வாத்சல்யமாக மிரட்டுகிறார்கள். மேஜைக்கு மேஜை சேர்கள் நிறைந்து வழிந்து தங்கம் நுகர்வோர் க்யூ கட்டி நிற்கிறார்கள்.

தள்ளாடிக் கம்பி பிடித்துப் படி ஏறிய ”சொர்ணா” பாட்டியின் கழுத்தில் சினிமா அடியாள் போல வடம்வடமாய் செயின் தொங்கியது. “இந்தப் பாட்டி சீக்கிரம் மேலே ஏற ஒரு வழி இருக்கு...” என்று அக்காவிடம் கிசுகிசுத்தேன். பதிலுக்கு “எப்டி? லிஃப்ட்ல போலாமாடா?” என்று எட்டூருக்குக் கேட்கச் சிரிக்கடித்தாள். பாட்டியின் வெடுக் பார்வை. ரெவ்வெண்டு படியாய் தாண்டி ஏறி ”ஊஹும்... கழுத்துலேர்ந்து ரெண்டு வடத்தை கழட்டினா போறும்... பாரம் தான் பாட்டிய கீழ பிடிச்சு இழுக்கறது..” என்று காதைக் கடித்து விட்டு கீழே பார்த்தேன். பாட்டி ஈட்டி மாதிரி என்னைப் பார்த்துக்கொண்டே இரைக்க இரைக்க இரண்டாவது மாடி ஏறிக்கொண்டிருந்தாள். கழுத்திலிருந்தவைகள் கண்ணைப் பறித்தன. நிச்சயம் “எங்க காலத்துலேல்லாம் தங்கம் ஒரு சவரன் ரெண்டு ரூபா... வெலையும் குறைச்சல்.. மாத்து குறையாமே இருக்கும்.. ” என்று புகழ் பாடும் பாட்டி என்று சொல்லவும் வேண்டுமோ?

வளையல் செக்ஷனில் அட்டிகை போட்டு அழகு பார்க்கும் இடங்களிலும் ஆளுக்கு ஒரு வாய் காஃபியும் ரெண்டு வாய் கோக்கும் தாராளமாகப் புழங்கிற்று. எடை சவரன் தாண்டாத நோஞ்சான் மோதிரம் கடுகளவு மூக்குத்தி வாங்கும் இடங்களில் ஜில் தண்ணீர் சப்ளை சகஜமாக ஓடியது. “78 பர்செண்ட் சேதாரமா?” என்று பேயாய் முழித்துக்கொண்டே ஆசாரியிடம் குடைந்த ஒருவருக்கு “கவுண்டர்லேயே கேளுங்க சார்.. அவ்ளோலாம் இருக்காது...” என்று கம்பெனி பாலிஸியைக் கடைபிடித்துக் கம்பி நீட்டினார். 45 மில்லி கோக்கை அனாயாசமாக ஒரே கல்ப்பில் இறக்கிவிட்டு “அம்மா... கோக்...” என்று புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்த பையனை கண்ணொடு கண் பார்த்தேன். உடம்பில் கோக் ரத்தமாக ஓடுவது பிதுங்கிய டீஷர்டில் தெரிந்தது. அந்தம்மா “அதோ.. மாங்கா டிசையனில்...ம்... அதையெடுங்க....”வில் முனைப்பாக இருந்தது. அப்பா காணவில்லை.

நடுக்கடையில் வேஷ்டியை விலக்கி டவுசரிலிருந்து பணம் எடுத்தவர் ராஜ்கிரண் பரம்பரை போலிருக்கிறது. ஐயனாரே பயப்படும் மீசையிலிருந்தார். கையில் அருவாள் மிஸ்ஸிங். நாக்கு நுனியில் ஆங்கிலம் பேசிய பேண்ட்-பனியன் பெண்கள் இருவர் மிரண்டு ஒதுங்கினார்கள். டவுசரிலிருந்து உருவிய கரத்தில் காந்தி கட்டுகளாகப் புரண்டார். மின் தூக்கியின் கதவு திறந்தால் உள்ளுக்குள்ளே புகும் சுலபமான வழி எது என்று சிறுவர்மணியின் “இந்த முயலுக்கு காரட்டை அடைய வழி சொல்லுங்களேன்” பாணியில் சுற்றி நின்ற இருபது பேருக்கும் ஆசை இருந்தது அவர்கள் கண்களில் ஷோ கேஸ் நகைகளைவிட அதிகமாக ஜொலித்தது. நகைச் சீட்டு கட்டுவோர்களில் நிறைய பேர் கேசம் கலைந்த மத்திம வயது ஆண்களாக இருந்தார்கள். வீட்டம்மணிகளுக்காக கஷ்டபடும் ஜீவன்களோ? (இதற்காக கமெண்ட்டில் பெண்ணுரிமையாளர்கள் கும்ம வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது)

“ஏதாவது டிஸ்கௌண்ட் மேளாவா?”

“ஏன் சார் கேட்கறீங்க?”

“கூட்டம் அம்முதே... அதான்....”

“ஞாயித்துக்கிளமைல்லா... அதான்...”

”எல்லா ஞாயித்துக்...”

“ம்... “

“இருவது நிமிஷத்துல நகை வாங்கினாலும்.. ரெண்டு மணி நேரம் பில்லுக்கு நிக்கிறோமே.. அதான் உங்க கடைக் கூட்டத்துக்கு காரணமா?”

”த்தோ.. பில்லு வந்துடும் சார்..” என்று கத்தரித்து அடுத்த கஸ்டமரிடம் தாவிய பெண்ணிடம் மேலே ஏதும் கேட்காமல் அரை மணி நின்று வெளியே வந்தேன்.
செக்யூரிட்டி இன்னொரு முறை ஷாலின் டெம்பில் கராத்தே வீரர்கள் போல பவ்யமாக குனிந்து “வணக்கம்” சொன்னார். அவர் பக்கம் திரும்பி நின்று “வணக்கம்” சொல்லிவிட்டு வந்தேன்.

வணக்கம்.

குறுஞ்செய்தி‬

“நா டிஸ்டர்ப் பண்றேனா?”.

யோகா மாஸ்டர்கள் ப்ராணாயாமம் சொல்லிக்கொடுக்கும்போது முதுகு தடவிக் கொடுத்துப் பேசுவது போல ரொம்பவும் சாத்வீகம். அமைதி ததும்பும் தவசிரேஷ்டருக்கு ஒப்பான களை சொட்டும் முகம். நெற்றியில் விபூதிக் கீற்று. அறுபத்தைந்திலிருந்து எழுபதுக்குள்ளிருக்கலாம். நான்கு முழ காவி வேஷ்டியை டப்பாக் கட்டாக கட்டியிருந்தார். கையில் பால் பாக்கெட் கூடை. அதை மீறி கறிவேப்பிலைக் கொத்து எட்டிப் பார்த்தது.

“இல்லைங்க... என்ன வேணும்?” நெற்றியைச் சுருக்காமல் கேட்டேன். ட்யூஷன் முடிந்து வீடு செல்லும் பொடிசுகள், பிழைப்புக்கு ஆஃபீஸ் கேப் பிடிக்க ஓடுபவர்கள், பின்னால் ”தொடர்ந்து வா.. தொட்டுவிடாதே....” அருளிய கோயம்பேடு காய்கறி வேன், வீடுவீடாய் பிகிலடித்து குப்பை சேகரிக்கும் துப்புரவுப் பணியாளர், பேப்பர் வாங்கி நாய் வாயில் கவ்வக் கொடுத்து கைவீசிச் செல்லும் மாமா என்று தீயாய் பற்றிக்கொண்டு திகுதிகுவென எரிந்த காலை நேர பரபரப்பு.

புராண காலத்து மொபைலை ”உங்களுக்கொன்னும் சிரமமில்லையே...” என்று என் கையில் திணித்தார். ஸ்கூல் பஸ்ஸுக்கு காத்திருந்த என் பெரியவள் அந்த மொபைலை அபூர்வமான அகழ்வாராய்ச்சிப் பொருள் போல பார்த்தாள். ரொம்ப நாள் பழக்கம் போல என்னிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தார்.

“இங்கே பாருங்கோ.. ம்... அந்த மொதல்ல இருக்கிற... ம்...ம்... மொதோ நம்பர்தான்.. அதுக்கு ஒரு மெசேஜ் கொடுக்கணும். எனக்கு இதெல்லாம் தெரியாது.. நா அந்தக் காலத்து மனுஷன்... உங்களுக்கு எதாவது வேலையிருந்தா வுட்டுடுங்கோ.. சிரமப்பட வேண்டாம்... நான் யார்ட்யாவது பார்த்துக்கிறேன்.. இல்லைன்னா...”

கண்களில் ஒருவித தவிப்பு தெரிந்தது. ஏதோ தலைபோகிற அவசரம் போலிருக்கிறது. கைகளை ஷாக் அடித்தது போல உதறிக்கொண்டார்.

“அப்பா.. பஸ் வந்துடுத்து.. டிஃபன் பேக்கைக் குடு....” கையிலிருந்து வாங்கிக்கொண்டு பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போக பஸ்ஸேறினார்கள். வ்ர்ர்ர்ர்ரூம்... பஸ் போயாச்சு.

பஸ் நிறுத்தத்தில் நானும் அவரும்தான். காலையில் குடித்த காஃபி என் நாசியில் ஏறும் அளவிற்கு நெருங்கி வந்து நின்றுகொண்டார்.

“ம்.. சொல்லுங்க சார்...”

“வயசுக்கு மரியாதையில்லை சார்!”

”என்னாச்சு...”. பயந்துவிட்டேன்.

“மாங்கு மாங்குன்னு.... இங்கேர்ந்து வண்டலூர் தாண்டி போய் வேலை பார்த்தேன்.. ஊஹும்.. மரியாதை இல்லை சார்...ஊஹும்.. ” இப்படியும் அப்படியும் தலையை சுளுக்கும்படி ஆட்டினார்.

“கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க.. என்னாச்சு?”

“அது வேணாம் சார்.. ஒரு மெசேஜ் மட்டும் அடிச்சுக் குடுங்க சார்.. அனுப்பணும்...”

“என்னன்னு?”

“மூனு தடவை மெசேஜ் பண்ணியும் உன்கிட்டேயிர்ந்து பதிலில்லை.”

“சரி...”

“என் வயசுக்காவது நீ மரியாதை தந்திருக்கலாம்....”

“ம்.. அப்புறம்...”

“நான் வந்துபோனத்துக்கு கன்வீனியன்ஸானும் குடு....”

“கன்வீனியென்ஸில்லை.. கன்வேயென்ஸ்....”

“ம்.. அத்தையாவது கொடு....”

கர்ம சிரத்தையாக அடிக்க ஆரம்பித்தேன். தெருவில் போவோர் வருவோரை குரைத்துக் கலாய்க்கும் ஏரியா தாதா கறுப்பு நாய் உற்றுப்ப் பார்த்துக்கொண்டே கடந்ததை என் ஓரக்கண்ணால் பார்த்தேன்.

இப்போது முதுகுப் பின்னால் வந்துவிட்டார். “சார்... டியர் கணேஷ்....னு ஆரம்பத்துல சேர்த்துக்கோங்கோ.... சின்னப் பையந்தான்... இருந்தாலும் டியர் போடாம எழுதினா நன்னாயிருக்காது....”

மெஸேஜ் அடித்துக்கொண்டிருந்தேன். “சார்.. டியர் கணேஷ்.. போட்டுடுங்கோ.. இல்லைன்னா மரியாதையா இருக்காது...”

நிமிர்ந்து சிரித்தேன். T9 வசதி இல்லாத சாதா ஃபோன். ஸ்மார்ட் ஃபோன்களில் விளையாடி எஸ்ஸெம்மெஸ் சுகம் கண்ட விரல்கள் அந்த மொபைலில் தட்டுவேனா பார் அழுத்துவேனா பார் என்று ஸ்ட்ரைக் செய்து எனக்கு வேடிக்கைக் காட்டியது. அவருக்கு மெஸேஜ் சேவை செய்துவிட்டு வாக்கிங் வேறு போக வேண்டும். சூரியன் யாருக்கும் கவலையில்லாமல் வான் மேலே ஏறி விரைந்து வந்துகொண்டிருந்தான். நிமிடங்கள் நொடியில் கரைந்தன.

“சார்.. உங்களுக்கு இதுல அடிக்க வருதில்லை.. இல்லைன்னா.. சொல்லுங்க...”
நிமிர்ந்து பார்த்தேன். ஒன்றும் பேசவில்லை. அவரது முகத்தில் கவலையை அள்ளி பூசியிருந்தார். கணேஷைக் க்ரஷ் பண்ணிக்கொண்டிருந்தார்.

மூன்று தடவை மெஸேஜ் செய்தும் பதிலில்லையை ஆங்கிலப் படுத்திக்கொண்டிருந்தேன். “பையன் சிடியெஸ்ல இருக்கான். பொண்ணு தஞ்சாவூர்க்காரருக்கு வாக்கப்பட்டு மலேஷியால சௌக்கியமா இருக்கா... நானும் பொண்டாட்டியும்தான் இங்க.. ரிடையர் ஆனப்றம் வேற வேலைக்கெல்லாம் போக வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சுண்டா.. நாந்தான்.. ச்சும்மா விட்டத்தைப் பார்த்துண்டு தேமேன்னு உட்காண்டு என்ன பண்ணப்போறோம்னு....” வீட்டு ஜாதகம் படிக்க ஆரம்பித்தார்.

வயசுக்காணும் மரியாதை கொடுத்திருக்கலாம்மை தடவித்தடவி டைப்பிக்கொண்டிருந்தேன்.

“சார்.. ஆரம்பத்துல டியர் கணேஷ் போட்டுக்கோங்கோ.. இல்லைன்னா நல்லாயிருக்காது....”

”என்ன சார்.. இன்னிக்கி வாக்கிங் போகலையா...” ரோஜாப்பூ பூக்காரர் நியாபகப்படுத்திவிட்டு சைக்கிளை விரைவாய் மிதித்தார். லிங்கம் ஸ்டோர்ஸில் கீரையும் வெண்டைக்காயும் வாங்கிக்கொண்டு நைட்டிப் பெண்கள் நகர ஆரம்பித்தார்கள்.

“டியர் கணேஷ்.. போட்ருக்கீங்களா?” முதுகுக்குப் பின்னாலிருந்து புஸ்புஸ்ஸென்று ஸர்ப்பமாய் மூச்சு விட்டு என் கழுத்து வேர்வையைக் காய வைத்தார்.

மொத்தமும் டைப்பிவிட்டேன். குறுஞ்செய்தி பெரும் வேலை வாங்கியது. “வயசுக்காவது மரியாதை கொடுத்திருக்கலாம்...” என்று முதலில் இருந்து வாழ்க்கை ஒரு வட்டமாக ஆரம்பித்தார்.

”சார்.. அனுப்பியாச்சு.....”

“போயிடுச்சுங்களா? நீங்க இவ்ளோ நேரம் செலவு பண்ணி அடிச்சதுனாலேயாவது.. அவர் கன்வீனியன்ஸ் கொடுக்கிறாரான்னு பார்க்கலாம்....”

“சார்.. அது கன்வேயன்ஸ்...”

“ஆமா.. கன்வீனியன்ஸ்.....”

இதற்கு மேல் திராணியில்லை.” விடை கொடுங்கள் தயாபரா” போலப் பார்த்தேன். “நன்றி சார்.. இந்த காலத்துல வயசுக்கு யாரு மரியா.....”

அவரது நன்றிக்கு நன்றி சொல்லி பத்தடி நகர்ந்திருந்தேன். பித்து பிடித்தது போல எதிர் திசையில் நடந்துகொண்டிருந்தார். காசு கேட்பதிலும் திரும்பத் திரும்ப “டியர் கணேஷ்....” போடச்சொன்ன அந்தப் பெரியவர்.... காலை வாக்கிங் முடிந்து..... நாள் முழுக்க அலுவலகத்தில் வேலைப் பார்த்து... குட் நைட் சொல்லி படுக்கும் வரை இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறார்.

யார் அந்த கணேஷ்? அவர் கன்வீனியென்ஸுக்கு வேலை பார்க்காமல் இந்த வயசுக்காவது மரியாதை கன்வேயன்ஸ் கொடுத்திருக்கலாமோ?

பிஷ்கட்

”வெங்கடசுப்ரமண்யம்....”

தீனமாகவும் தீர்க்கமாகவும் ஒரு குரல். கார்க் கதவை மூடிவிட்டு குரல் வந்த திசைக்கு பார்வையைத் துரத்தினேன். எதிர் வீட்டு ரங்கநாத தாத்தா வாசல் க்ரில் கதவில் சாய்ந்து நின்றிருந்தார். டீக்காக ட்ரெஸ் செய்துகொண்டு ”எப்படியிருக்கேள்....” என்று மிடுக்கு நடை போட்டவர். அப்புறம் வாக்கிங் ஸ்டிக்கில் தார்ரோட்டைத் ”டக்...டக்”கி சைகையிலேயே சௌக்கியமா கேட்டுநடந்தார். இப்போது க்ரில் கேட்தான் எல்லை. தாண்டுவதில்லை. ”முடியலை.... கொண்டு போய் தள்றது...” என்று சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் விரக்தியாக சிரித்துக்கொண்டே சொன்னார்.

“சொல்லுங்கோ...”

“இந்த பிஷ்கட்லாம் வேணும். மேலே இருக்கிற நம்பரைக் கூப்ட்டா ஆத்துக்கே வந்து தந்துடுவன்.. கேன் தண்ணி போடறவந்தான்..” பேசும் போது வார்த்தைக்கு வார்த்தை கர்..கர்...கர்...கர்ரென்று நெஞ்சு சளி ஸ்ருதிப் பொட்டி போல இழுத்தது. கையில் கொடுத்த கசங்கிய ரூல்டு பேப்பரில் மாரி கோல்ட் 1, ஹார்லிக்ஸ் பிக் 1, ந்யூட்ரி சாய்ஸ் 1, ஒரு பாக்கெட் வேர்க்கடலை, பனாமா ப்ளேடு 1, ஒரு பெரிய சாஷே தே.எண்ணெய், ஹமாம் சோப்பு 1 இப்படி ஒரு குட்டி லிஸ்ட்.

984xxxxxx...நம்பரில் கூப்பிட்டேன். “கடைல ஆளில்லைங்க... ஆறு மணிக்கு மேலே வாரேன்னு சொல்லுங்க...”. டொக்.

“கடையில ஆளில்லையாம்..”

“ஆளில்லையா?.... சரி...” குரல் ஃபேட் அவுட் ஆகி தேய்ந்தது. 

“நான் போய் வாங்கிண்டு வரேன்.. நோ ப்ராப்ளம்...”

“சிரமம் வேண்டாம். ஆத்துல யாருமில்லை அதான்....”

பசிக்கிறதோ என்னமோ? “பரவாயில்லை.. போய்ட்டு வரேன்....” 

லிஸ்ட்டைக் கொடுத்து ஒவ்வொரு சாமானாக வாங்கிக்கொண்டிருந்தால், கடைக்கு ஆள் வந்துவிட்டது. 

“சார்.. தாத்தாவுக்கு நானே கொண்டு போய் கொடுத்திடறேன்.. நீங்க போய்ட்டுவாங்க...”

*
ஆஞ்சுவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. நங்கநல்லூர் ஆதிவ்யாதி ஹர ஸ்ரீ பக்தாஞ்சநேயர். சன்னிதி சார்த்தியிருந்தது. குப்பென்று கிளம்பிய துளசி வாசம் பக்தி டோஸ் ஏற்றியது. சாயரக்ஷை நடந்துகொண்டிருந்தது. நடை திறக்காமல் வீடு கிளம்பும் அவசரக்காரர்களுக்கு கொண்டக்கடலை சுண்டல் விநியோகம் நடந்தது. ”ஸ்ரீராம ராம ராமேதி.. ரமே ராமே மனோரமே....” என்று கோதண்டராமரைத் தரிசித்துக்கொண்டு மூலவர் தரிசனத்துக்காக காத்திருந்தோம். “முதுகு பிடிச்சிண்டிடும்...அப்பாட்டேர்ந்து இறங்குடி.. இறங்கு...” என்று கேஜி படிக்கும் பெண்ணை இழுத்து... ஒரு பத்து நிமிஷத்திற்கு “முதுகு பிடிச்சிண்டிடும்....பாப்பா சொன்னாக்கேளு.. ப்பா சொன்னாக் கேளுங்கோ...”தான் திரும்பத் திரும்ப ராமஜபம். நான்கு பக்தர்கள் இடைவெளியில் தாண்டி பத்திரமாக நின்றுகொண்டேன். அப்பாவும் பெண்ணும் சொன்னதைக் கேட்டார்களா என்று அறியும் அல்ப ஆர்வம் தொத்தியிருந்தது. கட்டுப்படுத்தி ”புத்திர்பலம் யசோதைர்யம் நிர்ப....ஹனுமத் ஸ்மராணாத் பவேது”. மனசு ரிப்பீட் மோடில் மந்திரம் ஜெபித்தது.

நாகசுரம் கோயிலை பூரணமாக நிறைத்தது. மல்லாரியில் அடுக்கு தீபார்த்தி முடிந்து கிளம்பியாயிற்று. வேணுகோபாலன் சன்னிதியில் தீர்த்தம் வாங்கிக்கொண்டு ஓட்டைக்குள் ஒளித்திருந்த சுகந்த குங்குமத்தை மோதிர விரலால் நோண்டி எடுத்து இட்டுக்கொண்டு பிரசாதம் இடத்திற்கு வந்தால் இன்னமும் கொ.சுண்டல்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆளுக்கு முப்பது கடலை. பிஞ்சுக் கைக்கு பதினஞ்சு. வெளியே வந்து கையலம்பிக்கொண்டு வீட்டிற்கு நகர்ந்தோம். 

பூணூல், வடாம், ஊதுபத்தி ஒரு தாத்தா விற்றுக்கொண்டிருந்தார். தலை நரைத்து ரங்கநாத தாத்தா சாயலில் இருந்தார். தேகபலம் கொஞ்சம் இருந்தது அவர் கடை விரித்திருந்த விதத்தில் புரிந்தது. பிஷ்கட் சாப்பிடுவாரா என்று கேட்க ஆசையாயிருந்தது. அங்கே தாத்தாவுக்கு பிஷ்கட் வந்திருக்குமா? பரபரத்து சேப்பாயியை விரட்டினேன்.

ஷட்டருக்குள் வண்டியை விடுவதற்குள் நேராகப் பார்த்தேன். கீழ்ப்படி டஸ்ட்பின்னருகில் மஞ்சமசேரென்று மேரி கோல்ட் ராப்பர் கிழிந்து கிடந்தது. 

பரம திருப்தி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails