Saturday, May 9, 2015

தி ஜட்ஜ்

”சபரி.. செமையா படம் பார்க்கிற மூட்ல இருக்கேன்.. ஏதாவது நல்ல படம் வச்சுருக்கியா?”

”மாமா.. ராபர்ட் டௌனி ஜூனியர் நடிச்சுருக்கான்.. அம்பது வயசு... அயர்ன் மேன்.. ஷெர்லாக்ஹோம்ஸ்லல்லாம் நடிச்ச ஆளு.. ஃபர்ஸ்ட் க்ளாஸ் மூவி.. பாரு...”

மருமான் Sabareesh Hariharan புண்ணியத்தில் நல்ல ஆங்கிலப் படங்கள் ஒரு கொத்து பார்த்திருக்கிறேன். நல்ல ரசிகன். கல்லூரியில் படிக்கும் போதே ஞானஸ்வரூபனாக இருக்கிறான். நாம் தோள் மேலேயும் மார் மேலேயும் போட்டு ”பட்டுக் குட்டி... ஜில்லு.. குல்லு..” என்று உச்சிமோந்து கொஞ்சிக் குலாவி வளர்த்த குழந்தைகளின் ரசனைகள் நல்ல ஸ்திதியில் இருப்பது நமக்கு பெருமை பூசிய சந்தோஷம். பெருமிதம்.

அவனுடைய சிபாரிசின் பேரில் டேவிட் டாப்கின் இயக்கத்தில் The Judge பார்த்தேன். அற்புதமான படம். குடும்ப படம். நான்கு அண்ணா தம்பிகள் ஒரே மாதிரி வெள்ளையில் தொளதொளா குடும்ப சட்டைப் போட்டு “லாலாலி... லாலாலி...” என்று கோரஸாகப் பாட்டுப் பாடி... குடும்ப வில்லனை பழிக்குப் பழி வாங்கி... ஒரே குடும்ப பாட்டில் கலெக்டர் ஆகி.. ஒரே குடும்ப மொக்கை காமடி... ஒரே குடும்ப ராக பாட்டில் கழுத்தை அறுக்காமல்.... மெல்லிய குடும்ப பின்னணியும்... கொஞ்சம் சஸ்பென்ஸும்.. கொஞ்சம் பப்பி லவ்... கொஞ்சம் பிள்ளைப் பாசம்... கொஞ்சம் சின்னப்பிள்ளைத்தனம்.. கொஞ்சம் ரொமான்ஸ்... கொஞ்சம் சகோதரத்துவம்... கொஞ்சம் ஹீரோயிஸம்.. கொஞ்சம்.. கொஞ்சம்.. வாட் நாட்?

கச்சாமுச்சாவென்று புஸ்புஸ் கிராஃபிக்ஸில் பளீர் ஒளியில் கண்வலி வரவழைத்து படார் ஒலியில் செவிடாக்கும் டப்பாப் படங்களுக்கு மத்தியில் அழுத்தமானக் கதையையும் அதற்கேற்ற நடிகர்களும் வலிமையான திரைக்கதையையும் திரைச்சூழ்சிலைக்கேற்ற இசையும் காட்சியோடு கரைந்து போகும் வசனங்களையும் வைத்து எடுக்கப்படும் சாதாரண படங்களே வெள்ளித்திரையில் அசாதாரணமாகக் கோலோச்சுகின்றன என்று திரைச்சினிமாவின் சூத்திரமாக கோயிந்து ஒருவர் அசால்ட்டாகச் சொன்னார்.
ஹங்க் பாமர் சிகாகோவில் சிகரத்திலிருக்கும் அட்வகேட். ஜித்தன். எப்படியாகப்பட்ட கேஸிலும் க்ளையண்ட்டை விடுவிக்கும் அசாத்திய திறன் படைத்தவர். அவரது தந்தை ஜோஸஃப் பாமர் சொந்த ஊரான கார்லின்விலேயில் நீதிபதியாக இருக்கிறார். நீதித்தராசின் முள்ளை ஸ்திரமாக நடுவில் நிறுத்தி பெருமையுடன் தலைநிமிர்ந்து வாழ்பவர்.

அண்ணா தம்பி மூன்று பேரில் ஹங்க் நடுவர். தந்தை ஜோஸஃப் பாமருடன் எப்போதுமே ஒரு உரசல். சிறுவயதில் காரைக் கொண்டு போய் மோதி மூத்தவர் டேலின் ப்ரகாசமான பேஸ்பால் வாய்ப்பை கெடுத்துக்குட்டிச் சுவராக்கிவிட்டார் என்று ஹங்க்கைக் கறுவிக்கொண்டே இருக்கிறார் ஜோஸஃப். மேலும் அந்த வழக்கில் தானே நடுவராக இருந்து மனுநீதி சோழன் போல தன் சொந்த பிள்ளையை சிறுவர் சிறைக்கு அனுப்புகிறார். அப்புறம் ஒரு உள்ளூர் வழக்கில் ஹங்க்கைப் போன்ற சிறுவனுக்கு ஒரு முறை தீர்ப்பில் சலுகைக் காட்டியும் மறுமுறையும் அதே தவறு செய்ததால் இருபது வருடங்கள் சிறைதண்டனை விதித்தும் தீர்ப்பளித்து தர்மதேவனாகிறார்.

இச்சூழ்நிலையில் தனது தாயார் இறந்துபோன செய்தி கிடைத்து கோர்ட்டிலிருந்து பாதியில் சொந்த ஊருக்கு வருகிறார் ஹங்க். அன்னையின் சாவிலும் தந்தை பாமர் ஹங்க்குடன் முகம் கொடுத்துப் பேச மறுக்கிறார். தமிழில் எழுதினால் சிதைந்துவிடும் வாய்ப்புகள் அதிகமிருப்பதால் சினிமாடோகிராஃபரின் பெயரை இங்கே அப்படியே தருகிறேன். Janusz Kamiński. சின்ன ஊரான கார்லின்விலேயின் நீல வானத்தை, அதே வண்ண அமைதியான ஏரியை, சுற்றிலும் படர்ந்திருக்கும் மரம்செடிகொடிகளின் பச்சைகளை வண்ணம் கெடாமல் குளிர்ச்சியாகக் காட்டுகிறார். ஆங்கிலப் படங்களில் கழுகுப் பார்வையாக ஆகாசத்திலிருந்து ஒரு ஊரையும் அதன் இயற்கைச் சூழலையும் காட்டுவது மரபாகயிருக்கிறது. இருபக்க பயிர்களுக்கிடையே கிழித்துக்கொண்டு போகும் தார்ச்சாலை நம்ம மாயவரம் சுற்றுப்பகுதியை ஹாலிவுட்டில் காட்டுகிறது.

அம்மாவின் துஷ்டிக்கு வந்துவிட்டு வழக்கம்போல ஏற்படும் வாய்த்தகராறோடு சிகாகோவிற்கு திரும்புகிறார் ஹங்க். விமானம் கிளம்புவதற்கு முன்னர் க்ளென் ஹங்க்கைக் கூப்பிட்டு தந்தையை போலீஸில் விசாரிக்கின்றனர் என்று கூப்பிடுகிறார். வந்து பார்த்தால் இவர் இருபது வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த அந்த குற்றவாளி விடுதலையாகி வந்து பின்னர் அவனைக் காரேற்றிக் கொன்றுவிட்டார் என்பது வழக்கு. இங்கிருந்து சூடுபிடிக்கிறது படம். ஹங்க் அவரது தந்தைக்காக வாதாடுகிறார். நீதிபதி தந்தைக்கு இளம் குற்றவாளியாக இருந்த ஹங்க்கை இன்னமும் பிடிக்கவில்லை. சட்டக்கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றதை சொல்லி தந்தையை குளிரிவிக்கப் பார்க்கிறார். ஊஹும். இடையில் தன்னுடைய பால்ய ஸ்நேகியின் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள். பேசுகிறார்கள். கிஸ்ஸுகிறார்கள். அந்த ஸ்நேகிதியின் பெண்ணை அதற்கு முன்னர் ஒரு பாரில் பார்த்து கட்டிப்பிடித்துக்கொள்கிறார். அது தனக்குப் பிறந்த பெண்ணோ என்கிற சந்தேகம் அவரை குற்றக் குறுகுறுப்படையவைக்கிறது. வேண்டாம் இந்த சினிமாவின் கதையை சொல்வதை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

எத்துனை வாய்த் தகராறு வந்தாலும் அப்பா-மகன் பாச சீன்களைக் கொட்டிவைத்திருக்கிறார்கள். நீதியரசராக நடித்த ராபர்ட் டுவல்லுக்கு ஹாலிவுட் ஃப்லிம் அவார்ட்களில் Best Supporting Actor கிடைத்திருப்பதை அறிகிறோம். யதார்த்தமான நடிப்பு. பின்னணி இசை படத்திற்கு பக்கபலம். பல இடங்களில் இசை சரளமாக வசனம் பேசுகிறது. காட்சிகளைக் கெட்டிப்படுத்துகிறது.

க்ளைமாக்ஸ்? நான் எழுதப்போவதில்லை. ஒன்றுமட்டும் சொல்வேன். தமிழ்சினிமாத்தனமான முடிவு இல்லை. நாம் ஏன் இதுபோன்ற படங்கள் எடுப்பதில்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை. நல்ல படங்கள் வெற்றியடைவதில்லை என்று இயக்குநர்களும், எங்கள் பார்வையில் இது நல்ல படமாக இல்லை என்று ரசிகர்களும் ஆதிகாலத்து இக்கட்டான கேள்வியான கோழியா? முட்டையா? என்று கருத்து அடிதடியில் காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறோம்.]

தி ஜட்ஜ் படத்தின் சில காட்சிகள் அடங்கிய சின்ன பிட்டு இங்கே: https://www.youtube.com/watch?v=wXWe0IM_sEM#t=77

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails