Showing posts with label மானஸா. Show all posts
Showing posts with label மானஸா. Show all posts

Sunday, October 22, 2017

பிரார்த்தனை செய்வோம்

ஊர் சோம்பலாக விடிந்திருக்கிறது. ஆறு நாட்கள் பயணப்பட்டுப் பணி செய்து மேனி களைத்தவர்கள் சற்றுக் கூடுதல் ஓய்வாகப் படுக்கையில் சுருண்டிருக்கும் ஞாயிறின் முன்காலைப் பொழுது.
நானும் சின்னவளும் இருசக்கர வாகனத்தில் தலைகோதும் இளங்காற்றில் போய்க்கொண்டிருந்தோம். சவாரி இல்லாத ஆட்டோ ஊர்ந்து செல்லும் பத்து கி.மீ வேகத்தில் எங்கள் ஸ்கூட்டி சாலைக்கு வலிக்காமல் ஊர்ந்துகொண்டிருந்தது. மகளுடன் அப்படிச் செல்வதில் ஒரு அலாதி ஆனந்தம் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. ஆப்பில் இயங்கும் வாடகைக் கார் ஒன்று எங்களை முந்திச் சென்றது. எதிர் திசையில் ஒரு வயோதிக மாநகரப் பேருந்து ஊரை எழுப்பும் பேரொலியுடன் தடதடவென ரோட்டு ரயிலாய்க் கடந்தது. படுத்து எழுந்து வித்தை காட்டாமல் சில டூவீலர்கள் சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று மிதமான வேகத்தில் டுர்ர்ர்ர்ர்ர்ர்ரிக்கொண்டிருந்தார்கள்.
சில நொடிகளில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு கூட்டம் சட்டென்று கூடியது. அக்கம் பக்கம் சென்றவர்கள் அவசராவசரமாகக் குழுமிவிட்டார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அங்கே யாருமில்லை. என்னவோ அசம்பாவிதம் போலிருந்தது.
“அப்பா... ஏதோ ஆக்ஸிடெண்ட்...”
சின்னவள் கண்களில் மிரட்சி. சம்பவ இடத்துக்குப் பக்கத்தில் சென்றேன். இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்திருந்த வயதான அம்மணி மல்லாக்க சரிந்துவிட்டார்கள். யாரும் இடிக்கவில்லை. யானைப் பள்ளம் வெட்டிய ரோடு சதி செய்துவிட்டது. சக்கரம் சுழல வாகனம் தரையில் ஆகாயம் பார்க்கப் படுத்திருந்தது. வண்டி ஓட்டியவர் கைலி தொடைக்கு மேலேற முன்னால் கவிழ்ந்திருந்தார். அவர்களது துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டம் என்னவென்றால் சற்று முன்னால் சென்ற மாநகரப் பேருந்தின் சக்கரத்திலிருந்து தப்பித்ததுதான்.
நாங்கள் இறங்கும் முன் இளைஞர் இருவர் வண்டியைப் போட்டுவிட்டு ஓடிப்போய் தூக்கினார்கள். பின் மண்டையை வலது கையால் பொத்திக்கொண்டு எழுந்திருந்தார் அந்த அம்மா. பொத்திய விரல்களுக்கிடையில் நெளிந்த கோடாய் இரத்தம் தாராளமாக வழிந்தது. ஒரு வருடத்திற்கு முன்னால் இதே போல இருசக்கரவாகனத்தில் மல்லாக்க விழுந்து மண்டையில் அடிபட்டு என் சித்தி அகால மரணமடைந்ததும் அரசு ஆஸ்பத்திரி பிணவறையும் மின்னல் வேகத்தில் மூளையில் படம் படமாகப் பளிச்சிட்டது. மூக்கில் பினாயில் நாற்றம் வரை வந்துவிட்டது.
“ச்சோ..ச்சோ.. அப்பா.. ரத்தம்பா.. பாவம்ப்பா...” பதறினாள் சின்னவள்.
“ம்... என்ன செய்யலாம்?” கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டேன்.
“ஆம்புலன்ஸ் கூப்பிடலாமா?”
நினைத்துக்கொண்டிருக்கும் போதே இன்னொருவர் டயல் செய்தார். அந்த வண்டியில் வந்த இருவருக்கும் வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கைத்தாங்கலாக அந்த அம்மாவைக் கொண்டு போய் ஒரு கடை வாசலில் உட்காரவைத்தார்கள். யாரோ வாட்டர் பாட்டில் திறந்து தண்ணீர் பருகக் கொடுத்தார்கள். இந்த இங்க் ஃபில்லர் ட்ராப் மழைக்கெல்லாம் காரணம் இதுபோல் சிலர் பரோபகாரியாக இருப்பதுதான் என்று நினைத்துக்கொண்டேன்.
நிலைமை கட்டுக்குள் இருப்பது போல இருந்தது.
“சரி.. நாம போலாமா?”
“ம்... போலாம்...”
வழிநெடுக சின்னவள் வாயைத் திறக்கவில்லை. விபத்தும் வழிந்த இரத்தமும் கொடுத்த அதிர்ச்சியின் காரணமாக இருக்கலாம். சென்ற காரியத்தை முடித்துக்கொண்டு அடுத்த பதினைந்து நிமிடங்களில் இருவரும் அதே வழியில் திரும்பினோம். இருபது நிமிடங்களுக்கு முன்னால் அங்கே அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான தடயமே இல்லை.
“அங்க யாரும் இருக்காளாப்பா?”
“இல்லை.. எழுந்து போயிட்டாங்க.. இருந்தாலும் இரத்தம் வந்திருக்கு.. டாக்டர்ட்டே போகணும்..”
“நான் ப்ரே பண்ணினேன் தெரியுமா? அதான் ஒண்ணும் ஆகலை.. ”
சின்னவள் சொன்னதும் “சின்னத்துக்கு தெரிஞ்சது.. நமக்கு தெரியலையே..” என்ற குற்ற உணர்ச்சி மேலோங்கியது ...
“என்னன்னு ப்ரே பண்ணினே?”
“சாமியே.. காப்பாத்து..அவங்களுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது... அவ்ளோதான்...”
“சூப்பர்டி குட்டி...”
“ஸ்கூலுக்குப் போயிட்டு பஸ்ல வரும்போதெல்லாம் அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு ஒண்ணு ரெண்டு ஆம்புலன்ஸ் பாம்..பாம்..னு கத்திண்டே போகும்.. அப்பெல்லாம் கூட நான் வேண்டிப்பேன்..”
நெகிழ்ந்துபோனேன். ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் படு சுட்டி. விஷமத்தனம் அதிகம். ஒன்றும் பேசாமல் ஒரு நூறு மீட்டர் வந்திருப்போம். திரும்பவும் சின்னவளே பேசினாள்.
“ப்பா.. ஆத்துல நான் விஷமம் பண்றதைத்தானே நீ நினைக்கிறே .. இன்னமும் நீ என்னைப் புரிஞ்சுக்கணும்ப்பா...”
ஏதோ பெரிய மனுஷி போல பேசினாள். உள்ளூர சிரிப்பாக வந்தது. ஆனால் நான் பதில் ஏதும் சொல்லவில்லை. இப்போது வரை திரும்பத்திரும்ப அவள் ப்ரே பண்ணினேன் என்றதும் என்னைப் புரிஞ்சுக்கணும்ப்பான்னு சொன்னதும் திரும்பத் திரும்ப ஸ்க்ராட்ச் ஆன சிடிபோல காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இன்று கற்றுக்கொண்டது, பிறருக்காக பிரார்த்தனை செய்வோம். எப்போதும். எங்கேயும்.

பெஸ்கி விஸ்கி

சின்னவள் டீச்சர் போல...
”வீரமாமுனிவரோட இயற்பெயர் தெரியுமா?”
“கான்ஸ்டன்டைன் அப்டீன்னு வரும்....”
“மூணு பேர் வரும்ப்பா...”
“ஆமா.. அப்புறம் ஜோஸஃப்....அப்புறம்..”
“கடைசியா இன்னும் ஒண்ணு.”
“தெர்ல பாப்பா... மறந்துட்டேன்..”
“பெஸ்கி...”
“ஆங்.. கரெக்ட்டு.. கான்ஸ்டன்டைன் ஜோஸஃப் பெஸ்கி”
“கடேசி பேரை ஈஸியா ஞாபகம் வச்சுக்கலாம்...”
“எப்டி?”
“விஸ்கிய ஞாபகம் வச்சுண்டா... பெஸ்கின்னு எழுதிடலாம்...”
“ரைட்டு. ஆனா... விஸ்கின்னே எழுதிட்டா?”
“அடபோப்பா.. ஆசிரியை பேப்பர்ல சுழிச்சு... பொலி போட்ருவாங்க... ”

Tuesday, June 6, 2017

நட்பே பரிசு

பெரியவளுக்கு நாளைக்கு மேத்ஸ் எக்ஸாம். சின்னவ கையைப் பிடிச்சு இழுத்துக் கடைக்குக் கூப்பிடறா...
"சீக்கிரம் வாடீ”
“இந்த சம்மை போட்டுட்டு வரேன்..”
“நாளைக்கு அவளுக்கு மேத்ஸ்... வெயிட் பண்ணு வரட்டும்.” - அதட்டும் குரலில் நானு.
“அவளோட ஃப்ரெண்டுக்கு கிஃப்ட் வாங்கணும்னா.. இன்னிக்கி சன்டே.... கடையெல்லாம் சீக்கிரம் மூடிடுவான்...”
அதுக்கு பெரியவ... “ப்ளீஸ் இருடீ...”
“வேணா ஒண்ணு பண்ணு... Happy Birthday ன்னு சும்மா சொல்லிட்டு... என்னோட ஃப்ரெண்ட்ஷிப்பே உனக்கு ஒரு கிஃப்ட்தான்... தனியா கிஃப்ட் வேணுமான்னு அவள்ட்டே நாளைக்குக் கேட்டுடு..”
பொடிசு என்னமா பேசுது!! ROFL!! :-)

திரும்பச் சொல்லாத மாடு

”அப்பா.. இங்க பாரு..”
“ம்..”
“தெரியும்ங்கிறத்துக்கு Opposite என்ன?”
“தெரியாது”
“தெரியாதா? ஹைய்யோ.. இது கூடத் தெரியாதா?.”
சின்னவள் கைகொட்டிக் குலுங்கிச் சிரிக்கையில் ஒரு வாரத்திற்கான டென்ஷனும் அயர்ச்சியும் மறைந்துபோய் திங்களுக்கான புத்துணர்ச்சியை மனசு பெற்றுவிடுகிறது..
“இன்னொன்னு கேட்கட்டா?”
“ம்.. கேளு...”
“ஒருத்தங்கிட்ட ரெண்டு மாடு இருக்கு. ஒண்ணு பேரு ‘திரும்பச் சொல்லாத’ இன்னொன்னு பேரு ‘திரும்பச் சொல்லு’. அவன் என்ன பண்றான் ‘திரும்பச் சொல்லாத’ங்கிற மாட்டை வித்துட்டான்.இப்ப அவன் கிட்டே எந்த மாடு இருக்கும்?”
“திரும்பச் சொல்லு..”
”திரும்பவும் சொல்லணுமா?” என்று கேட்டுவிட்டு ‘ஒருத்தங்கிட்ட ரெண்டு மாடு இருக்கு...” என்று இரண்டு விரலைக் காண்பித்துச் சொல்ல ஆரம்பிக்கும் அழகில் மயங்கி இன்னும் நூறு தடவையானும் ‘திரும்பச் சொல்லு..” சொல்லலாம் என்று இருக்கிறேன்.
”அந்த மாட்டுக்காரன் கிட்டே எந்த மாடு இருக்கும்?”
“திரும்ப சொல்லு”
வாழ்வின் இன்பமயமான தருணங்கள் மிகவும் சுலபமாகக் கிடைக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு வேறெங்கோ அலைகிறோமோ?

Thursday, June 1, 2017

ரெண்டு தட்டு தட்டு...

மானஸாவுடன் ஸ்கூட்டியில் கிளம்பும் போது ஹெட்லைட் எரியவில்லை. ஸ்கூட்டியின் கழுத்தருகே கிச்சுக்கிச்சு மூட்டுவது போல பதவிசாகத் தடவிக்கொண்டிருந்தேன். ஊஹும். நோ ரிசல்ட்.
“அப்பா.. முன்னால ரெண்டு தட்டு தட்டு...”
“ஏன்?”
“வண்டியையும் ஹஸ்பண்டையும் ரெண்டு தட்டு தட்டினாதான் ஒழுங்கா வேலை செய்யுமாம்....”
“யாருடி உனக்கு இந்த மாதிரியெல்லாம் அடாவடியா சொல்லித்தரா?”
“கலக்கப் போவது யாருல சொன்னாங்கப்பா...”
“ரெண்டு தட்டுல வேலை செய்யலைன்னா...”
“நாலு தட்டு...”
இதுக்கு மேல நான் தட்டுக் கணக்குக் கேட்கலை. டு பவர் இன்ஃபினிட்டி தட்டுவாங்கோ...
”ஹஸ்பண்ட தட்டு”ன்னு மானஸா சொன்னத்துக்கப்புறம் ஆம்பிளைப் பசங்களைப் பார்த்தா பாவமா இருக்கு! வாழ்க வையகம்!! :-)

Wednesday, March 8, 2017

குமாரின் தேசபக்தி

குமார். வயது 45 இருக்கலாம். தள்ளுவண்டி பழக்கடைக்காரர். காரில் வந்து இறங்கி கார்டு தேய்க்கும் பெரிய பழமுதிர்ச்சோலையிலிருந்து ஒதுங்கி நடைபாதை ஓரக் கடைக்காரர். உட்காராமல் வியாபாரம் செய்யும் கடின உழைப்பாளி.
“ஆயிரம் ரூபா ஐநூறு ரூபா வித்ட்ரா பண்ணினதால உங்களுக்கு ப்ராப்ளம் இருக்கா?”
“ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு சொன்னதப் பத்தி பாப்பா கேட்கறாங்க” என்று சிரித்தார் குமார்.
கேள்வி சின்னவளோடது.
.
“அப்பா.. ஒரு ப்ராஜெக்ட். Demonitisation பத்தி.... Different Vendors க்கிட்டேயிருந்து feedback கேட்டு எழுதணுமாம். ஸ்கூல்ல சொல்லியிருக்கா” என்றவளை கற்பூரவள்ளி வாங்குவதற்கு அழைத்துவந்தபோது கேட்டாள்.

“முன்னூறு ரூவாய்க்கி பளம் வாங்குறவங்க.. சில்ற தட்டுப்பாடுங்கிறதுனால... இருநூறு ரூவாய்க்கு வாங்கிட்டு.. மிச்சம் நூறு ரூவாயை பர்ஸுல சொருகிக்கிட்டுப் போயிடறாங்க... கொஞ்சம் இளப்புதான்..”
“வீட்டுல செலவுக்கெல்லாம் Problem இல்லாம இருக்கா?”
“அதெல்லாமில்லை.. சொல்லப்போனா... வீண் செலவு கொறஞ்சிருச்சி...”
“ஐநூறு ஆயிரம் rupees நோட்டுல்லாம் திரும்பவும் வேணூமா? வேணாமா?”
“ஐம்பது நாள் பொறுத்துக்கோங்கன்னிருக்காரு... ,மோடி... ஐம்பது நாளென்னா அஞ்சு மாசம் கூட காத்துக்கிடக்கலாம்.. இந்தியா வல்லரசாயிடும்ங்கிறாங்களே! பொறுத்துக்குக்க வேண்டியதுதானே சார்! அப்படியே எழுதிக்கோம்மா...”

Friday, September 16, 2016

போர்வை

"அப்பா... பைனரி டு டெஸிமல் இன்னொரு ஸம் சொல்லு...”
சின்னவள் ஆளை உலுக்கினாள். அப்போதே சரிந்து படுத்திருந்த எனக்கு கண்ணிரெண்டும் சொருகியது. நல்ல தூக்கம்.
அண்ட்ராயர் வயசில் படிக்கும் போது கையிலிருக்கும் புத்தகத்தை தொபகடீர்னு நழவவிட்டு திட்டுவாங்கியிருக்கிறேன். “எல்லாம் படிச்சப்பறம் தயிர் சோத்தைப் போடுங்கோன்னா.. யாரு கேக்கறா? இப்போ... மாந்தம் வந்த கொழந்தைக்கு சொருகறா மாதிரி தம்பிக்கு கண்ணு சொருகறது பாரு...” என்று பாட்டி எட்டூருக்குச் சிரிப்பாள்.
சின்னவள் என்னன்னமோ சந்தேகம் கேட்டாள். என்னவோ வாய்க்கு வந்தபடி உளறினேன். கண்களின் இமைகளிரண்டும் பாட்டில் பாட்டிலாக ஃபெவிகால் தடவியது போல பச்சென்று ஒட்டிக்கொண்டது. எப்போது கண் அயர்ந்தேன் என்று தெரியாது. கொஞ்ச நேரத்தில்...
“அப்பா.. அப்பா.. நேராப் படு... ம்.. மேலே.. தலகாணிக்குப் போ... ம்..ம்..” என்று பிஞ்சு விரல்கள் தலையைக் கலைத்தது. அரைத்தூக்கத்திலும் மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷம். மேடம் சொன்னபடிஎழுந்திருக்காமல் உருண்டு உருண்டு மேலே ஏறி தலகாணிக்குத் தலைகொடுத்து கண் மூடினேன். உடனே தூங்கியிருந்தால் என் வாழ்நாளின் சொர்க்க நிமிடத்தை இழந்திருப்பேன். என்ன நடந்தது தெரியுமா?
பாசக்காரக் குட்டி எழுந்திருந்து அருகிலிருந்த போர்வையை எடுத்து, ”உன்ன அவ்ளோ பிடிச்சிருக்கு...” போல கையிரண்டையும் விரித்துப் பிரித்து, என் மேல் கழுத்துவரைப் போர்த்திவிட்டாள்.
"ராசாத்தி... என் செல்லமே.."
என் பெண்ணே என் அம்மாவான தருணம்!!

Friday, August 19, 2016

மகளிடம் மண்டியிடு

ராத்திரி எப்போது வீட்டுக்குள் நுழைந்தாலும் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஒரு சுற்று வருவதற்கு எதாவது ஒரு வேலை வைத்திருப்பாள் சின்னவள்.
“அப்பா... பௌச் வாங்கிண்டு வரலாம் வா...”
“ஊஹும்.. நிறையா வாங்கிக்கொடுத்தாச்சு... போதும்...”
“இன்னிக்கி எனக்கு பர்த்டே... ராத்திரி வேற கேட்டுட்டேன்... ராத்திரி என்ன கேட்டாலும் கொடுத்துடணும்னு பாட்டி சொல்லுவா...”
கிழவி மாதிரி பேச்சு. பெரிய மனுஷாள் தோரணை வேறே...
மங்கலான வெளிச்சத்தில் ஸ்டேஷனரி ஷாப். காலை எட்டிலிருந்து இரவு பத்து மணி வரை ஷட்டர் ஏற்றியிருக்கும் கடை. ஓனர் களைத்துப்போய் ஒன்றிரண்டு காண்பித்தார்.
”ட்ரான்ஸ்பேரண்ட்டா வேணும்.. வேற கலர்..” வகைகளை அடுக்க ஆரம்பித்தாள்.
“ட்ரான்ஸ்பேரண்ட்ல என்னடி கலர்?”
“ஓரத்து பார்ட்ர்ல.... ஜிப்கிட்டே... இதெல்லாம் உனக்குப் புரியாதுப்பா”
“இதுல புரிய என்ன இருக்கு?”
“நீ சும்மா இரு.. செலக்ட் பண்றேன்... காசு மட்டும் குடு..”
பெற்ற பெண்ணிடம் அடிபணிவதில் வரும் சுகம் அலாதியானது. கட்டிய பெண்ணிடம் கீழ்ப்படிந்து நடப்பதிலும் க்ஷேமம் ஏற்படும் என்பது கிரஹஸ்தர்களின் பாலபாடம்.
ஒன்றைத் தேர்ந்தெடுத்து, காசு கொடுத்துவிட்டு, வீட்டிற்கு திரும்பும் போது
“தாங்க்ஸ் ஃபார் தி கிஃப்ட்” என்று கண்ணடித்தாள்.
சொக்கிப்போனேன்.
தீர்க்காயுஷ்மான் பவ மானஸா!

ஓ.... பேபி.. பேபி...

”Baby, I am perfect for you"
"Baby... I am perfect for you"
"என்னடி பாட்டு இது?... பாக்கி பேருக்கெல்லாம் அவன் imperfectஆ? ”
“ப்பா.. ஒனக்கு இதெல்லாம் புரியாது... இந்தா கேளு....”
கீழே க்ளிப் போட்டுக்கொண்டு கண்ணில் நீர் வழியக் கதறுபவர்களைக் கேட்டால் எனக்கு அலர்ஜி. ஐஃபோனிலிருந்து முளைத்திருந்த இயர் ஃபோனை என் காதில் சொருகியதும் மேற்கண்ட வரிகளைப் பாடித் துடியாய்த் துடித்தான் ஒரு இளைஞன். அகண்ட நாம பஜனை போல நடக்கும் போதும் படிக்கும் போதும் ஸ்கூல் பஸ் ஏறும் போதும் மானஸா முணுமுணுத்துக்கொண்டிருக்கிறாள்.
“குட்டி... என்னடி ஆல்பம் இது?”
“One direction... சொன்னேன்ல உனக்குப் புரியாதுன்னு...”
“ஓ.. பேபின்னு யாரைச் சொல்றான்... அவனோட பொண்ணையா? அவன் அம்மாவையா?”
“பேபின்னா.. உங்கூர்ல பொண்ணா? அம்மாவா?.. ஐயே... அது அவனோட லவ்வர்...”
“லவ்வரா? உன்னை நானு அப்பப்ப பேபின்னு கூப்பிடுவேன்ல... “
”ப்பா... பயங்கர ஜோக்கு.. எல்லோரும் சிரிங்கப்பா... “
“இல்லைம்மா.. பேபின்னா லவ்வரா இருக்கணும்னுல்ல.... திருனவேலி பக்கம் நிறையா பேருக்கு அம்மாவா இருந்தாலும் பேபிதான்... பொண்ணா இருந்தாலும் பேபிதான் பேரு.. உங்கம்மாவ வேணா கேட்டுப்பாரு...அப்படிதான் பேரு வச்சுக் கூப்டுவாங்க...”
“ப்பா.. மரண மொக்க போடாதே... நீ அம்மாவை பேபின்னு கூப்டதில்லே...சொல்லு.. ”
“ச்சே.ச்சே... நீ பக்கத்துல நின்ருப்ப... உன்னை பேபின்னு கூப்ட்ருப்பேன்... ”
”Love and Love only" புத்தகத்தை ஷாலினியும் விஜய்யும் ஒரே சமயத்தில் கையிலெடுத்து கண்களால் காதலைப் பரிமாறிக்கொள்ளும் காதலுக்கு மரியாதை “ஓ.. பேபி..பேபி...” பாட்டு எனக்கு மட்டும் மனசுக்குள் கேட்டது. கண்ணை மூடிக்கொள்ளுங்கள். உங்களுக்கும் கேட்கலாம்!

Monday, February 1, 2016

பூலோக சொர்க்கம்

”வுடமாட்டேன்.... ”

ஓடிவா... சாத்திட்டேன்.... ”

“ஓடிவா... இப்ப வா... ”

“ஊஹும்.. சார்த்திட்டேன்....ஹெஹ்ஹே...ஹா..ஹா..”

மொட்டை மாடிக் கதவை திறந்து... மூடி.... திறந்து.... மூடி.... சீண்டிச் சீண்டி விளையாடிக்கொண்டிருந்தாள் சின்னவள்.

“என்னைத் தாண்டி உள்ளே வந்துடு பார்ப்போம்...”

மொட்டை மாடியிலிருந்து ஓடி வரும்போது கதவை சார்த்திவிட்டு மறுபக்கத்திலிருந்து எக்காளமான சிரிப்பு. எனக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது. பால்யத்தில் இதுபோல இன்ஸ்டண்ட் விளையாட்டுகள் ஏராளம்.

திரும்பவும் கதவு திறந்தாள். மிதமான மொட்டை மாடிக் காற்று. தூரத்தில்முதுகைக் காண்பித்து நின்றிருந்தேன்.

“ஒன்..டூ...த்ரீ...ஃபோர்...” பாக்ஸிங் நடுவர் தோரணையில் அவள் சப்தம் கேட்டது.

எண்ணிக்கொண்டே இருக்க விட்டேன். வேண்டுமென்றே வெளியே ஆகாயத்தை வேடிக்கைப் பார்த்தேன். வாய்கொள்ளாச் சிரிப்பு.

”ட்வண்டீ...... போப்பா... வெறுப்பேத்தற...” என்று அசால்ட்டாய் நிற்கும் போது திபுதிபுவென்று ஓடி கதவைத் திறந்து வீட்டிற்குள் புகுந்துவிட்டேன்.

அவள் உடனே நேரே உள்ளே ஓடிப்போய் இன்னொரு கதவின் பின்னால் இருந்து எட்டிப் பார்த்து...

“இப்ப இங்க வா பார்ப்போம்... இது செகண்ட் லெவல்... ஃபர்ஸ்ட் லெவல்ல ஜெயிச்சுட்டே...”

முறுக்கிக்கொண்டு திரும்பவும் மொட்டை மாடிக்கே சென்று விட்டேன். ஆனால் போகும் போது ரகஸியமாக மொட்டை மாடிக் கதவின் உள்பக்க மேல் தாழ்ப்பாளை தூக்கிவிட்டேன்.

திரும்பவும் ஓடிவந்து முதல் கதவருகே நின்று ”இந்த லெவலை திரும்பவும் நீ தாண்டணும்.. அப்பதான் நீ வின்னர்... ஸ்டார்ட்... ஒன்.. டூ..த்ரி...ஃபோர்.... ஃபைவ்...”

அவள் சிரித்துக்கொண்டே நிற்குமிடம் சொர்க்கத்தின் கதவு.

ஓடிவந்தேன். கதவைச் சார்த்துவதற்கு எத்தனித்தாள். மேல்தாழ்ப்பாள் மூட விடமால் தடுத்ததால் நானும் உள்ளே வந்துவிட்டேன். அடுத்த லெவலான ரூமை நோக்கி ஓடினாள். பின்னாலேயே நானும் நுழைந்து இரண்டாம் லெவலையும் முடித்தேன்.

“யூ வொன் தெ மாட்ச்”

மகராசி... கழுத்தை இருக்கக் கட்டிக்கொண்டு சிரித்தாள்.

இதுவல்லவோ பூலோக சொர்க்கம்.

(இப்போது இருவரும் சமர்த்தாகக் கம்ப்யூட்டர் ஸயின்ஸ் படிக்கிறோம். நாளைக்கு பாழாய்ப்போற எக்ஸாம்.. )

Sunday, August 2, 2015

கோப்பு

அனுதினமும் நாங்கள் இருவரும் ட்ராஃபிக் கடலோடி திரவியம் தேடித் திரும்பும் போது இதுபோல அகாலமாகிவிடுகிறது.
"அப்பா! ட்ரான்ஸ்பரன்ட் ஃபைல் இருக்கா?" ஓடிவந்து இடித்தாள் சின்னவள்.
"ஏன்?"
"Answer Sheets file ப்பா"
"அப்டீன்னா?"
"இருக்கா.. இல்லியா? ரீஸன் அப்புறம் சொல்றேனே" பெரியமனுஷாள் தோரணையில் பதில்.
"பசிக்கறது.. சாப்டுட்டு வரேனே.. ப்ளீஸ்..."
"ஓகே. நா மாடிக்குப் போய் தேடி வக்கறேன். டின்னர் முடிச்சிட்டு வாப்பா.."
சாப்பிட்டு சித்திக்கு சிஷ்ருஷைகளை செய்துவிட்டு மாடிக்குத் தாவி ஓடினேன்.

படுக்கையின் மேலே ஒரு கிழிந்த பேப்பர் ஆடியது. பறக்காமல் இருக்க அதன் மேல் ஹேர் க்ளிப் இரண்டும் ஸ்கெட்சும் பேப்பர் வெயிட்டாய். படித்தேன்.
புன்னகையோடு குனிந்து நெற்றியில் முத்தமிடும்போது காதருகே "ஃபைல் கெடச்சுதா?" என்று கிசுகிசுப்பாய்க் கேட்டேன்.
மெதுவாய் இமை திறந்து பதுமையாய் வாய் திறந்து "இதோ இருக்குப்பா.. அங்க இருக்கிற பேப்பரையெல்லாம் இதுக்குள்ளே எடுத்து வச்சுடேன்.. ப்ளீஸ்.." சொல்லிக்கொண்டே தூங்கிப்போனாள்.
முழுநாளும் கசக்கிப்பிழியப்பட்ட மனசு சட்டென மலர்ந்து தேனாய் இனித்தது. குட்டி சொர்க்கம் என்னைச் சூழ்ந்தது.
செல்லமே நீ வாழ்க!!

PCயப்பன்

நாற்பது வயசுக்குப் போனால் நாற்பத்தைந்து வயசுக்கு வீடு திரும்புவது போல ஆஃபீஸிலிருந்து ரொம்ப லேட். தெருவுக்குள் நுழையும் போதே பைரவர்கள் தீவிர எல்லைக்காவல் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். சேப்பாயியை ஷெட்டிற்குள் ஏற்றி ஜோஜோ தட்டி தூங்கவைத்துவிட்டு நான் பெற்ற செல்லங்களைப் பார்க்க பரபரப்பாக மாடியேறினேன். தூங்கியிருப்பார்களோ? அறை விளக்கு வெள்ளி வாள் போல கதவின் இடுக்கு வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. சின்னது இந்நேரம் ரெண்டாம் ஜாமம் போயிருக்கும். பெரியவ முழுச்சிண்டிருப்பா.
“குட்டீ. நீ இன்னும் தூங்கலையா?” அறை மூலையில் மும்முரமாகத் தலை தூக்கமால் வேலை செய்துகொண்டிருந்த சின்னவளிடம் கேட்டேன்.
“ம்.. இல்லப்பா... “ பதிலில் தீப்பொறி தெறித்தது. என் கேள்வி இம்சை செய்திருக்கவேண்டும்.
"என்னடி இது... தயிருஞ்சாம் மாதிரி Gumம்மெல்லாம் கை பூரா ஈஷிண்டு.... ”
“க்ராஃப்ட் வொர்க்.. நாளைக்கு சப்மிட் பண்ணனும்... போதுமா?” ஜீனோ போல வார்த்தைகள் விழுந்தன.
“இல்லே... நெறையா பேப்பரெல்லாம் வேறே தரை பூரா பரப்பி வச்சுருக்கே.... இப்பவே மணி பத்துக்கு மேலே..... இதுக்கப்புறம் கிராஃப்ட் ஒர்க் பண்ணிட்டு எப்போ படுத்துப்பே... கார்த்தால எப்போ எழுந்துப்பே...”
அரைநொடி திரும்பினாள். அலட்சியமாக அரைப் பார்வையை அள்ளி என் மீது வீசினாள். பெயிண்ட் ப்ரஷ்ஷை பாலெட்டில் தோய்த்து வெட்டி வைத்திருந்த ஒரு பேப்பருக்கு வர்ணம் பூசப் போய்விட்டாள். வயிறு ”பசிக்குதுடா.. சோம்பேறி...” என்று ஓலமிட கைகால் முகம் அலம்பிவிட்டு சாப்பிட ஓடினேன். சித்தநேரம்கூட நின்று பிள்ளையின் ஆட்டத்தை ரசிக்க முடியாத பிஸியப்பன். PCயப்பன்.
டின்னர் முடித்துக்கொண்டு மேலே வந்தேன். ஏஸி சப்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. ஸிஎஃப்ஃபெல் பளீரென்று ஒளிர்ந்தது. ஓசையில்லாமல் கதவைத் திறந்தால் படுக்கையில் சின்னவள் ஒருக்களித்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். எழுப்பாமல் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அலங்காரமேஜைக்குக் கீழேயிருந்த லேப்டாப்பை இலக்கியப் பணிக்காகத் தூக்கினேன். தலையை நிமிர்த்தும்போது இத்தோடு இணைத்திருக்கும் வஸ்து கண்ணில் பட்டது. இவ்வையகம் முழுவதும் எப்போதுமே இன்பம் மட்டுமே பெருகட்டும்!! இதைப் பார்த்ததும் இரவு இனித்தது.


Saturday, May 9, 2015

பிள்ளை விளையாட்டு

”லேடி.... ஹண்டர்... டைகர்...” என்று சொல்லிக்கொண்டே குத்துவிடுவது போல மடக்கிய விரல்களை உடுக்கையடியாக உலுக்கி...... லேடியாக இருந்தால் இடது தோள் பட்டையில் முந்தானை போடுவது போல கையை வைக்க வேண்டும், ஹண்டராக இருந்தால் விரல்களை மடக்கி துப்பாக்கி போலவும் டைகர் என்றால் புலி பாய்வது போல விரல்களை கொக்கிகளாக மடக்கியும் காண்பிக்கவேண்டும். இது இருவர் விளையாடும் கேம். இருவரும் வலது கையை உலுக்க வேண்டும் இடது கை விரல்களை ஜெயித்த பாயிண்டுகள் கணக்கிற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

“ரூல்ஸ் தெரியுமா?

“ஊஹும். தெரியாது..” ஸ்வாமிநாதஸ்வாமியிடம் வாய் பொத்தி ப்ரவண மந்திர உபதேசம் கேட்ட ஈஸ்வரனைப் போல மரியாதையாகக் கேட்டேன்.

“பாரு... நான் லேடி வச்சு.. நீ ஹண்ட்டர் வச்சா... எனக்கு ஒரு பாயிண்ட்...”

“ஏன்?”

“லேடி வந்து ஹண்டர் பொண்டாட்டி.. அவனை அடிச்சுடுவா...”

“ஓ...அப்படிப்போகுதா கதை...”

“ஆமாம்.. அது மாதிரி நீ ஹண்டர் வச்சு நான் டைகர் வச்சா.. ஒனக்கு ஒரு பாயிண்ட்...”

“ஏன்?”

“என்னப்பா... கேள்வி கேட்டுண்டே இருக்கே... புரியலையா? ஹண்டர் புலியை ஷூட் பண்ணிடுவான்.. அதனால ஒரு பாயிண்ட்..”

பிள்ளை விளையாட்டில் புலியைக் கூட தில்லாக ஷூட் பண்ணறவனை பொண்டாட்டி அடிச்சுடுவா என்கிற உயர்ந்த வாழ்வியல் தத்துவம் புரிந்தது.

”திரும்பத் திரும்ப கேக்காதே.... நான் டைகர் வச்சு நீ லேடி வச்சுண்டா... எனக்கு ஒரு பாயிண்ட்.... ஓகே.. ஆரம்பிக்கலாமா?”

ராகமாக “லேடி... ஹண்ட்டர்... டைகர்...ம்.. நீயும் சொல்லணும்.. லேடி.. ஹண்ட்டர்.. டைகர்..”.

“போப்பா.. நீ மெதுவா காமிக்கிறே...”

“நான் வச்சத்துக்கப்புறம் கையை மடக்கிறே... ஃபர்ஸ்ட்டு பத்து பாயிண்ட் எடுக்கறவா வின் பண்ணிடுவா.. ஒகே..”

ஆட்டம் தொடர்ந்தது. நான் ஒன்பது பாயிண்ட்.

“ச்சே... சனியன் காத்து எம் பக்கம் வீசுது.. அதான் தோத்துக்கிட்டிருக்கேன்...”

“எங்கடி இதெல்லாம் கத்துக்கறே....”

“எதெல்லாம்?”

“சனியன் காத்து....”

“சந்தானம் காமடிப்பா அது.. சரி.. சரி.. நீ விளையாடு...”

ஒரு ஆட்டம் ஜெயித்து அடுத்த இரண்டு ஆட்டங்கள் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய ஆட்ட பாணியைத் தெரிந்துகொண்டு ரிஃப்ளெக்ஸில் மடேர் மடேரென்று அடித்தாள். இதுபோல மானஸா கைவசம் கொத்து விளையாட்டுகள் இருக்கிறது. இந்த லீவில் மொத்தமாக ஆட வேண்டும்.

தோற்றுப்போனதில் பரம திருப்தி. ஜெயித்ததைக் காட்டிலும் பல்ப் வாங்கியதில் அதிக சந்தோஷம். அரைமணி நேரம் என்னை அண்ட்ராயர் பையனாக்கியவளுக்கு என்ன பரிசு தருவது?

”அடிச் செல்லமே..” என்று கட்டி முத்தமிட்டேன்.

தீப்பிடித்துக் கொண்ட வானம்

“தீப்பிடித்துக் கொண்ட வானம்”
ஸ்கூட்டியில் என் புத்ரிகள் இருவரையும் அழைத்துக்கொண்டு லோக்கலாகச் சுற்றிக்கொண்டிருக்கையில் ”அப்பா.. நிறுத்து...” என்று பின்னாலிலிருந்து என் முதுகில் ப்ரேக் பிடித்துப் பெரியவள் க்ளிக்கியது 

“தங்கக் கொன்றை க்ரீடம் சூட்டிய ஸ்வேத விநாயகர்”
சேப்பாயியில் ஊர் சுற்றக் கிளம்பியபோது ”ப்பா... உன் ஃபோனை இங்கக் குடு....” என்று சொடுக்கிக் கேட்டு வாங்கிச் சின்னவள் க்ளிக்கியது .

இரண்டுமே அவர்களுடைய விருப்பக் கோணத்தில் ஐஃபோனில் எடுக்கப்பட்டவை. ”எழுதநேரமில்லா மென்னியை நெறிக்கும் சமயங்களில் கைவசமிருக்கும் படங்களை ஷேர் செய்” என்பது என் ஃபேஸ்புக்கின் அடிப்படை விதி! 


மானஸா மஹாபாரதம்


போன மாசத்தில் ஒரு நாள் ஆஃபீஸிலிருந்து வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக தரதரவென்று மாடிக்கு இழுத்துக்கொண்டு ஓடினாள் சின்னவள். 

“ஏன்?”

“வாயேன்..”

“என்னடி.. எதாவது விஷமம் பண்ணி வச்சுருக்கியா?”

“வான்னா.. வா.... மேல பேசாதே...”

மகளின் ஆணைக்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்படுதலில் ஒரு அலாதி சுகம் இருக்கிறது. சிரித்துக்கொண்டே கப்சிப்பென்று பின் தொடர்ந்தேன்.

”இந்த க்ஷணமே வாங்கிக்கொடுத்தால்தான் ஆச்சு.. ”என்று ஆறு மாசத்துக்கு முன் ஒத்தைக்காலில் நின்று அடம்பிடித்து வாங்கிய வொயிட் போர்டில் ஒரு ஹயரார்கி சார்ட்.

“என்னடி இது?”

“மஹாபாரதா.. பூர்ண வித்யா எக்ஸாம்ப்பா... அதான் எழுதி பார்த்தேன்..”

சின்னச் சின்ன கேள்விகள் கேட்டேன். பதில்களை திரிக்காமல் அப்படியே தருகிறேன்.

“பாண்டவாஸுக்கும் கௌரவாஸுக்கும் அப்பா மாதிரி ஹஸ்தினாபுரத்தை போட்ருக்கியே”

“அவா ரெண்டுபேருக்கும் அதான் ஊரு... அங்கேதான் வளர்ந்தா...”

”பாண்டவாஸுக்கு தே காட் மேரீட். கௌரவாஸுக்கு தே டிட்டிண்ட் கெட் மேரீடா?”

“ஆமா.. எங்க பாடத்துல துரியோதனனுக்கெல்லாம் கல்யாணம் ஆகலையே...”

”அதென்ன துஸ்ச்சலையை மட்டும் எழுதியிருக்கே... பாக்கி பேரெல்லாம்..”

“நூறு அண்ணாக்களுக்கு ஒரே ஒரு தங்கச்சிப்பா.... அதான்...” முகத்தில் ’ப்ச்”சென்று பாவம் வடியச் சொன்னாள்.

”எனக்கு இது எல்லாத்துலையும் ரொம்ப புடிச்ச லைன் என்ன தெரியுமா?”

“ம்.. சொல்லுப்பா...”

“was not born in Kunthi's stomach, was born by praying to GOD"

"ப்பா... கிண்டல் பண்றியா?”

“ச்சே...ச்சே... DRAUPADI IS ALL 5'S WIFE... அது கூட சூப்பர்..”

“வாணாம்... அழிச்சுடுவேன்..”

விடுவிடுவென்று உள்ளே ஓடி கோபமாக டஸ்டர் எடுத்துவந்து அழிக்கும் முன் சட்டென்று க்ளிக்கினேன். இதில் கோடிட்டிருக்கும் சங்கதிகளை விட எனக்கு ரொம்பவும் பிடித்தது அவளுடைய அப்ரோச். பரீட்சைக்கு படிக்கும்போது தனக்கு ஏற்றார்போல அதை எழுதிவைத்துக்கொண்டது. சின்ன வயசில் இப்படியெல்லாம் டெக்னிக்காகப் படிக்கத்தெரியாமல் போய் “அக்பருக்குப் பாபர் சித்தப்பா......” என்று சொல்லி கெக்கெக்கே வாங்கியதுதான் மிச்சம்.

க்வில்லிங்

"பரீட்ஷை முடிஞ்சதும் வாங்கித்தருவியா?”

“ம்.”

“காட் ப்ராமிஸ்”

“ப்ராமிஸ் காட்” என்று சின்னவள் கையில் அடித்து சத்தியம் செய்து கொடுத்திருந்தேன்.

க்வில்லிங் செட். சிங்கப்பூர் ஷாப்பிக்கு சென்று “அதோ அந்த பீட்ஸ் குடுங்க.. அந்த ஷேப்பர்.. அது.. ம்... அதுதான்.... க்வில்லிங் டூல்ஸ் இருக்கா?..” என்று தேடித்தேடி அந்தப் பொடியனை இடுப்பொடிய வேலை வாங்கியாயிற்று.

ஆஃபீஸில் ஈவினிங் ஒரு மீட்டிங்கில் இருந்தேன். ஃபேஸ்டைம் கிணிங்கிணிங்கென்று சிணுசிணுத்தது. ”எக்ஸ்க்யூஸ் மீ” சொல்லிட்டு எடுத்தேன். “அப்பா.. பார்த்தியா.. எப்டியிருக்கு.. “ என்று கொஞ்சு தமிழில் பேசி இதைக் குலுக்கிக் காட்டினாள்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் காது நுணியில் இவைகளை ஒவ்வொன்றாய் வைத்து தலையை இங்குமங்கும் ஆட்டினாள்.


எதையோ புதிதாய் செய்ததற்கான பெருமிதம் கண்களில் மின்னியது. அவள் விழியசைவில் தெய்வங்கள் சொர்க்கத்தோடு இறங்கி வீட்டிற்குள் முகாமிட்டன. மண்ணில் இதைவிட சொர்க்கமுண்டோ! என்ற வரிகள் பாடலாய் செவிகளை நிறைத்தது. இப்போது அவள் கண்மூடித் தூங்குகிறாள். இவைகள் என்னுடன் அழகியல் பேசுகின்றன. நான் உருகி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மானஸ இசை

”பூப்பூக்கும் ஓசை.... இது நல்லாயிருக்கா..”

“அது போன வருஷம் பாடியாச்சாம்.....”

“மேகம் கருக்குது....மின்னல் அடிக்குது... சக்க்சச்கக்சா...”

“இது வேற க்ரூப் பாடறாங்கப்பா...”

“நன்னாரே...நன்னாரே.....”

“லவ் சாங்கெல்லாம் கூடாது..”

“இது லவ் சாங்கில்லை... குருல ஐஸ்வர்யா ராய்..... மழையில.. “

“ஓ.. அதுவா.... என் ஃப்ரெண்டுக்குப் பிடிக்காது...சொன்னா அழுதுருவாப்பா... ”

“ஐஸ்வர்யா ராயைப் பிடிக்காதா? பாட்டு பிடிக்காதா?”

“அப்பா.. மொக்கை போடாதேப்பா.. உருப்படியா ஒரு பாட்டு சொல்லு...வர்ற கார்னிவலுக்கு பாடணும்..”

“எனக்குத் தெரிஞ்சது இவ்ளோதான்.. நீயே கண்டுபிடிச்சு பாடு... பஸ் வந்தாச்சு... ”
எனக்கும் சின்னவளுக்கும் நேற்று காலையில் நடந்த உரையாடல்.

மீண்டும் நேற்று இரவு.

“அப்பா.. பாட்டு செலக்ட் பண்ணியாச்சு...”

“என்ன பாட்டு?”

”வா....ன்.. மேகம்.. பூப்பூவாய் தூவும்.....”

“புன்னகை மன்னன்...”

“ஆமாம்.. மிஸ்ஸே செலகட் பண்ணிக் குடுத்தாங்க...யூட்யூப்ல போடு.. ட்யூன் கேட்டுக்கறேன்...”

இன்று காலை.

”அப்பா.. மறக்காம ஹாண்ட்ஸ் ஃப்ரீயைக் கையில எடுத்துக்கோ....”

“ஏன்?”

“ஸ்கூல் பஸ் வர்றதுக்குள்ள ஒரு தடவை ரெண்டு தடவை கேட்கணும்... மெட்டு மறக்கக்கூடாது.... “

கையைச் சொடுக்கிக்கொண்டே ஹம்மிங் செய்தாள் சின்னவள். பஜனைப் பாடலோ சினிமாப் பாடலோ... பாடுவதில் டெடிக்கேஷன் இருக்கிறது. அவளது பிஞ்சு விரல்கள் சொடுக்குவதும் கனிவான ஹம்மிங்கும் என்னைத் தரதரவென்று சொர்க்கத்திற்கு இழுத்துச் செல்கிறது.

அடிச் செல்லமே!

Wednesday, September 17, 2014

வெங்கடாசல நிலையம்

”அப்பா வெங்கடாசல நிலையம் வைய்யேன்...” 

சின்னவள் கெஞ்சலாகக் கேட்கிறாள்.

”ஜேஸுதாஸ் வைக்கட்டா?”

“ஊஹும்.. சாக்ஸ்ப்பா.. கட்ரியா... கத்ரியா... ஒருத்தரச் சொல்லுவியே... ஒரு தடவை காஞ்சீபுரம் மடத்துல பார்த்தோமே.... கோபால்....ம்....”

“கத்ரி கோபால்நாத்...”

“ம்... அவரேதன்... நீ கூட முன்னாடி உன் செல்ஃபோன் ரிங் டோனா வச்சிருந்தியே... அதுப்பா.. ப்ளீஸ்,,,”

தட்டியவுடன் யூட்யூப் ஜீனி கொண்டுவந்தது.

கண்களை மூடிக் கேட்டேன். புரந்தரதாஸர் க்ருதி. சிந்துபைரவி. ஒவ்வொரு முறையும் “வெங்கடாசல நிலையம்...” வாசிக்கும் போதும் காற்றாய் பறந்து ஏழுமலையானைத் தரிசிக்கிறேன்.

மகர குண்டல...... புரந்தர விட்டல....
ஆஹா..ஆஹா.... கத்ரி கோபால்நாத்... ”

கோவிந்தா.. கோபாலா...”ன்னு கதற வைக்கிறார்... அவரது மூச்சினால் நம் செவி கொடுக்கும் முக்திக்கு வழி.

அடுத்தது “அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்...” வைங்கோ....இது வாமபாகம். வச்சாச்சு... சுதாவின் குழையும் குரலில்...
.
இந்த ஏழேழு பிறவிக்கும்... இன்ப நிலை தந்தான்.... ஊத்துக்காடு வேங்கடகவி.. மன்னார்குடி ராஜகோபாலனைப் பார்த்துப் பாடியது....

என்றும் திகட்டாத வேணுகாணம்... ராதையிடம்...

ஒரு பதம் வைத்து.. மறு பதம் தூக்கி... நின்றாட... மயிலின் இறகாட... மகர குழையாட.. ம்..ம்... சேர்ந்து நம் மனமும் ஊஞ்சலாடுது....அனுபவியுங்கள்..

http://www.youtube.com/watch?v=O2ETR7DyKUQ
http://www.youtube.com/watch?v=bq_8f3Yxv0w

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails