Showing posts with label பழையனூர் நீலி. Show all posts
Showing posts with label பழையனூர் நீலி. Show all posts

Monday, February 1, 2016

பாகம் 2: பழையனூர் நீலி

அந்த வயதானவர் மெதுவாகப் படிதாண்டி கோயிலை விட்டு கண்ணிலிருந்து மறையும் வரைக் காத்திருந்தார். பின்னர் தொடர்ந்தார்....

"அடுத்த ஜென்மத்துல அந்த பிராம்மணப் பொண்ணு ஒரு வணிகர் வீட்ல பொறந்தது. நம்மளை மோசம் பண்ணிக் கைவிட்டு கொலை பண்ணினவனை பழிதீர்க்கணும்னுங்கிற ஆவேசத்துல அந்தாளோட குலத்துலேயே பொறந்துச்சு.. ஆரம்பத்திலேர்ந்தே அதோட நடவடிக்கையெல்லாம் அமானுஷ்யமாவே இருந்துச்சு.. அதோட பேச்சு சரியில்லை.. ஏடாகூடமா எதாவது செய்யும்... வீட்ல ரொம்ப பயந்தாங்க... ருதுவாயிட்ட பிற்பாடு ஒரு நா... தற்செயலா எச்சியை முளிங்கிட்டு.... அதனால.... கருத்தரிச்சிருச்சு....”

சுற்றி நின்று கதை கேட்டவர்களுக்கு ஒரு சின்ன ஜெர்க். தழுவக்கொழுந்தீஸ்வரர் சன்னிதி மூடியிருந்தது. அணைந்த திரியின் பொசுங்கும் வாசம். தூரத்தில் தெரிந்த தென்னை பேய்க்காற்றுக்கு பிசாசாய் தலையசைத்தது. கோபுரத்துக்கு வெளியே சத்தமாய்க் கேட்டு எதிரொலித்த “ஹேய்க்...க்க்...”கைத் தொடர்ந்து ஒத்தை மாட்டுவண்டி ஒன்று மெதுவாய்க் கடந்தது. கதை சொல்லிக்கொண்டிருந்தவர் எச்சில் முழுங்கி ஆரம்பிக்கும் வரை அடர் நிசப்தம்!

“எச்சில் முழுங்கியா?” என்னவோ மாதிரியா இருக்கே என்று நான்.

“ம்... ஆமா.... ஏற்கனவே நொம்ப பயந்து போன அதோட அப்பாம்மா வீட்டை விட்டு துரத்திட்டாங்க... அது ஊர் ஊரா நீலியா அலைய ஆரம்பிச்சுட்டுது.. இப்படி திரிஞ்சிக்கிட்டிருந்த அதுக்கு பத்து மாசத்துல ஒரு புள்ளையும் பொறந்திச்சு... அந்தப் புள்ளை யாரு தெரியுமா?”

தடதடவென்று அருவியாய்க் கதைக் கொட்டிக்கொண்டிருக்கும் போதே திடீர் திருப்பங்கள் வச்சு... நிறுத்தி நிறுத்திச் சாகடித்தார் அந்த மனுஷர்.. “யாரு?”ன்னு கேட்காவிட்டால் வாயைத் திறக்கமாட்டார் போலத் தோன்றியது. நெற்றியில் சுடர்விட்ட குங்குமமும் அவரது முகவெட்டும் எனக்கு யாரையோ நினைவு படுத்தியது. மூளையைச் சல்லடையாக அலசிப் பார்த்தாலும் அகப்படவில்லை.

கதை கேட்டுக்கொடிண்டிருக்கும் கூட்டத்திலிருந்து ஒரு “யாரு?” ஈனஸ்வரத்தில் வந்தது.

“அந்தப் புள்ளைதான் அதோட மொதோ ஜென்மத்துல கூடப்பொறந்த தம்பியா இருந்தவன்... இந்த ஜென்மத்துல புள்ளையா பொறந்திருச்சாம்.....”

இப்படி பல ட்விஸ்ட்டுகள்...... யாரும் நின்ற இடத்தை விட்டு அசையாமல் கதை கேட்டார்கள்.

“ஆனா... அப்போ பொறந்த பச்சப்புள்ளையைக் தன் கையாலேயே கழுத்தைத் திருகி குளத்தோரமா வீசிட்டு... இந்தம்மா போன ஜென்மத்துல தன்னைக் கொன்ன ஆளை தேடிக்கிட்டு இந்தப் பக்கமா வந்திச்சு.... இந்த நீலி யாரைத் தேடிச்சோ.... அவரு பெரிய வணிகருக்கு மகனாப் பொறந்து.. கைலையும் காதுலையும் கழுத்துலயும் வைர வைடூர்யமா பூட்டிக்கிட்டு மின்னுறாரு.. தகதகன்னு சாயந்திர வெய்யிலு பட்ட தங்க மலை மாதிரி டாலடிச்சுக்கிட்டு இருக்காரு... பட்டு கட்டிக்கிட்டு... அத்தரு பூசிக்கிட்டு ஷோக்கா... மைனர் கணக்கா.... வியாபாரத்துல வேற பெரிய ஆளா.... இப்படி ஊர் ஊரா போய்க்கிட்டிருந்தாரு.. பல ஊருக்கு வாணிபம் செய்யப் போனவரு இந்த வழியா வரும்போது... பழி வாங்க சுத்திக்கிட்டிருந்த அந்தம்மா இவரைப் பார்த்துட்டுது.. ”

பார்த்துட்டுதுன்னு சொல்லிட்டு நெற்றி சுருக்கி மெலிதாய்ச் சிரித்தார். பற்களில் காவி. திரும்பவும் என் மூளையில் ஒரு மின்னல் வெட்டு. ஊஹும். இதே சாயலில் யாரோ... யாரோ.. யாரையோ.. சமீபத்தில் பார்த்திருக்கிறேன்.. யாரென்று தெரியவில்லை... போகட்டும்.. எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் நெருங்குகிறது. பார்வையாளர்கள் பரபரப்படைந்தார்கள். 

“உடனே ஓடிப்போய்.... நாந்தான் உங்க பொண்டாட்டின்னு கையைப் பிடிச்சுக்குது... அவருது இது கிட்டேயிருந்து அவுத்துக்கிட்டு ஓடறாரு... இது விடாம விரட்டுது.. ஊர் வீதியிலெல்லாம் ஒரே ஓட்டமா இருக்கு.. ஊர்க்காரவங்கள்ல நிறையா பேரு வேளாளருங்க.. வாணிபம் செய்யறவங்க.. இவருக்குத் தெரிஞ்சவங்க.. இவர்கிட்டே போய்... ஏங்க பொண்டாட்டியை தனியா விடலாம்ங்கலான்னு மத்யஸ்தம் பேசறாங்க....அவரு.. இல்லையில்லை.. இவ என் பொண்டாட்டி இல்லைன்னு வாதாடிப்பார்க்கிறாரு.... ஊஹும்.. ஒண்ணும் வேலைக்காவலை.. இது பொம்பளையில்லீங்களா... அளுது ஆர்ப்பாட்டம் பண்ணி அவர் கூட சேர்ந்துருது..... ஆனா பாருங்க அவரை ஒண்ணுமே அதால செய்யமுடியிலை....”

இப்போ யாராவது ”ஏன்?” கேட்டால்தான் இந்தக் கதை மேலும் நகரும். கிராமப்புறங்களில் கதைசொல்லியின் உத்தி இது. கதையை கூர்ந்து கவனிக்கிறார்களா என்று அறியும் முறை. கதையில் ஈடுபாடு கூட்டும் தந்திரம். காற்றில் வெளியே மரத்தின் இலைகள் சலசலத்தது.

“ஏன்?” அவருக்கு முதுகுக்குப் பின்னாலிலிருந்து ஒரு குரல். அவருக்குத் திருப்தி. முகத்தில் தெரிந்தது.

“ஒரு சோசியக்காரரு அவர் பொறந்தப்பியே பூதபைசாசங்களினால ஆபத்து வரும்னு கணிச்சு... ஒரு மந்திர வாளைக் கையில கொடுத்திருந்தான்... அது இருக்கிற வரையில அவரை ஒண்ணும் பண்ணமுடியாது பார்த்துக்கோங்க...இந்தப் பொம்பளை ஆர்ப்பாட்டம் பண்ணித் திரும்பவும் ஊரைக் கூட்டிச்சு....என்னம்மா உங்கூட ஒரே விவகாரமாப் போச்சுது.. என்ன வேணும்னு ஊர்ப்பெரியவங்க கேட்டாங்க... அதுக்கு அந்தப் பொம்பளை... நீங்களே இந்த நியாயத்தைக் கேளுங்க... பொண்டாட்டியோட தங்கும் போது இவர் கையில அந்த வாள் எதுக்குங்க? எனக்கு பயமாயிருக்கு...ன்னு கேட்டிச்சு...”

என்ன ஆகுமோ என்று அனைவரும் தவிக்கும் முக்கியமான தருணத்தில்... ”ஹேய்..” என்று கோயிலுக்குள் நுழைந்த ஒரு ஆட்டுக்குட்டியை விரட்டினார். ”ம்மே”. துள்ளிக்கொண்டு ஓடியது. ”அந்த வாளை அவர் தூக்கிப்போட்டுடுவாரா?” என்ற கேள்வி எல்லோர் மூளையையும் அரித்தது. 

“அப்போ பஞ்சாயத்து பண்ணின பெருசு ஒண்ணு... யேம்ப்பா.. உன் பொஞ்சாதி அவ்ளோ சொல்லுதே... அந்த வாளை தூக்கிப்போடுப்பான்னாரு.. அதுக்கு அவரு.. ஐயா... நா பொறந்தப்பவே ஒரு சோசியக்காரரு மந்திரம் செஞ்சு இந்த வாளைக் கொடுத்தாரு.. இதை எங்கினியாவது மறந்து வச்சுட்டு நீ தூரக்க போயிட்டன்னா... உன்னிய பேய் அடிச்சுரும்னு சொல்லியிருக்காங்க.. அதனால...ன்னு அந்தாளு இழுத்தாரு.. அதுக்கு அந்த பொம்பளை.. பாருங்க.. பெரியவங்க நீங்க சொல்லிக் கூட இவரு கேட்கமாட்டேங்கிறாரு...ன்னு வம்பு பண்ணுது...யப்பா.... நீ ஒண்ணும் கவலைப்படாதே.. உனக்கு ஒண்ணும் ஆவாது... இங்க பாரு.. இந்த சாட்சிபூதேஸ்வரர் சாட்சியா சொல்றோம்.. உன்னோட உயிருக்கு ஏதாவது ஆச்சின்னா.. நாங்க எல்லோரும் தீயில பாஞ்சு உசுரை மாய்ச்சுக்கிறோம்.. அதுக்கு இந்த சாட்சிபூதேஸ்வரர் சாட்சி..ன்னு பஞ்சாயத்து பண்ணினவங்க உணர்ச்சிகரமா பேசினாங்க....”

தோளில் தொங்கிய துண்டால் வாயைத் துடைத்துக்கொண்டார். இவரை எங்கேயோ பார்த்த ஞாபகம். எங்கே என்று பிடபடவில்லை. ஆகட்டும். கதையை கவனிப்போம்...

“அவரும் இதை நம்பி ஊர்ப் பெரியவங்க கிட்டே வாளைக் கொடுத்துட்டு அந்தம்ம்மா கூட போயிட்டாரு.. அவ்ளோதான்.. அன்னிக்கி ராத்திரியே அந்த நீலி இவரைக் கொன்னு போட்டுட்டு.... இந்த ஊரை விட்டு ஓடிப்போச்சு... காலையில இவரு செத்துப்போயி கிடக்கிறதைப் பாத்த எல்லோருக்கும் அதிர்ச்சி... நீங்க ஊருக்குள்ள வரப்போ ஒரு மண்டபம் பார்த்தீங்கல்ல...சாட்சிபூதேஸ்வரர் கோயிலுக்கு எதிர்த்தாப்ல.. அந்த மண்டபம் இருக்கிற இடத்துல விறகுக் கட்டையை கும்பாரமா அடுக்கி.... தீ மூட்டி.. அறுபத்து ஒம்போது பேரும் உள்ள குதிச்சிட்டாங்க.. இன்னும் ஒருத்தர் பாக்கி... “

“ஐயா.. எழுபத்திரண்டுன்னு சொன்னீங்க.. இப்ப எழுபது பேருதான் கணக்கு வருது...”

“சிலபேர் எழுபதுங்கிறாங்க.. சில பேர் எழுபத்திரண்டுன்னு சொல்றாங்க.. நமக்கு கதைதானே முக்கியம்....மிச்சமிருந்த ஒருத்தரு... வயல்ல ஏர் உழுதுகிட்டிருந்தாரு... ஒரு ஆளு ஓடிப்போயி.. நீலியினால அந்த வியாபாரி கொலையானதையும்... அறுபத்தொன்பது வேளாளர்கள் தீப்பாய்ந்ததைச் சொன்னாரு...அவ்ளோதான்.. அவருக்கு எங்கிருந்தோ ஒரு ஆவேசம் வந்து... அந்த ஏர் கலப்பையைத் தூக்கி தன்னோட வயித்துல குத்திக்கிட்டி அங்கினெயே செத்துப்போயிட்டாரு....”

பெருமூச்சு விட்டுக்கொண்டார். அதே ஜென்மத்துக் கதை ஒன்று இருப்பதாக சொல்லியிருந்தார். எனக்கு அதைக் கேட்கவும் ஆசை..

”பெரியவரே...அதே ஜென்மத்துலேயும் இவரைக் கொல்றதா ஒரு கதை இருக்குன்னு சொன்னீங்களே... அது...” 

கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார்.

“அது ஒண்ணுமில்லை.. இவரு கொன்னு போட்டப்புறம் அது நீலியா மாதிரி இவரு பின்னாலையே ஊருக்குள்ள வந்துடுது.. அப்புறம் ஊரார் கிட்டே பேசி இவரு பொண்டாட்டி மாதிரி பக்கத்துல வந்து... கொன்னு போட்ருது.. அதான் அதே ஜென்மத்துக் கதை.. அது அவ்ளோ சுவாரஸ்யமில்லை பார்த்துக்கோங்க....”

கதை முடிந்தவுடன் கோயிலுக்குள் பேய் சினிமா பார்த்த எஃபெக்ட்டுடன் வெளியே வந்தோம். கோயிலுக்கு வெளியே விசாலமான அடிபெருத்த மரம். என்ன மரம் என்று நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்னர் நீலியும் அந்த ஆளும் இங்கேயெல்லாம் ஓடியிருப்பாங்களோ... இந்த மரத்து மேல அந்த நீலி குடியிருந்துருக்குமோ என்றெல்லாம் சில்லரைத்தனமான எண்ணங்கள் சத்தமில்லாமல் ஓடியது. யாரும் பேசவில்லை. கார் ஏறிவிட்டோம்.

காருக்குள்ளும் அமைதி. ஆரம்பத்தில் ஊருக்கு வழிகேட்ட இடத்துக்கு வந்தோம். தாராளமாக தலைவிரித்திருந்த வேப்பமரம் அங்கேயே நின்றிருந்தது. வலதும் இடதுமாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு நிமிஷம். ஆ....ஆ... கதை சொன்னவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று மின்னல் வெட்டிக்கொண்டே இருந்ததல்லவா? கண்டுபிடித்துவிட்டேன். இப்போது எங்கே என்று தெரிந்துவிட்டது. அதெப்படி? சிலிர்த்துவிட்டது. எண்ணங்கள் உறைந்து போய் ஏஸி காருக்குள் குப்பென்று வியர்த்தது.

நான் ஊருக்குள் செல்லும்போது வழிகேட்டவரும்.. அங்கே கதை சொன்னவரும் ஒரே ஆள். ஒரே ஆளாக இருக்கமுடியாது என்றால் ஒரே சாயல். இரட்டைப் பிறவி? சொந்தம்? ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லுவார்களே.. அந்த ஏழில் இருவர்? மண்டையைக் குடைந்தது. முன்னால் சென்ற வண்டியிலிருந்து டீஸல் புகை சுருள் சுருளாக மேலே எழுந்தது. ரோட்டிலிருந்து விண்ணுக்கு எழும்பிய அந்த புகையிலிருந்து நீலி சிரிப்பது போலிருந்தது.

(முற்றும்)

பாகம் 1: பழையனூர் நீலி

"பழையனூர்க்கு இந்த வழிதானுங்களே?” என்று காரிலிருந்து எக்கி கழுத்து ஒடிய வழி கேட்டேன். எங்கோ கிராமத்திற்குள் தலைதெறிக்க ஓடும் அந்த தார்ரோடுமில்லாத மண்ரோடுமில்லாத ரெண்டுங்கெட்டான் பாதையின் நடுவில் குத்தி வைத்திருந்த வழிகாட்டும் பலகை துருப்பிடித்து கால்கள் வலுவிழந்து இத்துப்போயிருந்தது. அதில் பெயிண்ட் போன மண்ணூர் என்று கேள்விப்படாத, ஐந்தாறு தெருக்கள் சப்தமில்லாமல் சௌஜன்யமாகக் குடியிருக்கும் குக்கிராமத்தின் பெயர் சொரிசொரியாகத் தெரிந்தது. சாலையோரத்தில் தாராளமாகத் தலைவிரித்திருந்த வேப்பமரத்திற்கு கீழே தோளில் துண்டோடு நின்ற எழுபது வயது பெரியவரிடம் இந்த ஓபனிங் சீன் கேள்வி சென்று சேர்ந்தது. 

”எங்கியும் திரும்பாமே நேரே மெயின்ரோட்லயே போங்க...” என்று கை நீட்டிய பெரியவர்க்கு கிராமத்துக்கே உண்டான வஜ்ரம் போல தேகம். தோள்பட்டை முட்டை உழைத்த கட்டை என்று காட்டியது. நரைத்த தலை. நெற்றியில் லேசான குங்குமத் தீற்றல். கண்களில் ஒளி. அவர் சொன்ன மெயின் ரோட்டில் எதிரில் இன்னொரு பெரிய நாற்சக்கர வாகனம் வந்தால், இருவரும் ரியர் வ்யூ மிரரை மடக்கி ஷாலின் படங்களின் சண்டை நாயகர்கள் போல குனிந்து பரஸ்பரம் மரியாதை கொடுத்து பவ்யமாக உருட்டி முன்னேற வேண்டும். 

உள்ளே செல்லச் செல்ல கொஞ்சம் விசாலமான பாதை. ஒண்றரை கிலோ மீட்டருக்குள், கொண்டையில் டிஷ் ஆண்டனா சொருகி, உதிரியாய் இருந்த வீடுகளுக்கு இடையிடையே நவ கன்னிகள் (சப்தகன்னிகள் இல்லையோ?) ஆலயம், சாட்சிபூதேஸ்வரர் கோயில், தீப்பாய்ந்த அம்மன் ஆலயம் என்று இடதும் வலதுமாய் வரிசையாய் சின்னச் சின்னதாய் கிராமத்துக் கோயில்கள் வந்து போயின. பழையனூரிலிருந்து திருவாலங்காட்டுக்கு திருவுலாவாகத் திரும்பும் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியைப் போற்றி வரவேற்று ஒவ்வொருவரும் வீட்டு வாசலிலும் பிரம்மாண்டமானக் கோலமிட்டிருந்தார்கள். கோலக் கலை விற்பன்னர்கள் கலரில் கண் நிறைத்தார்கள்.

எதிர்புறம் வாகனம் வராத புண்ணியத்தில் வாய்க்கா வரப்பில் இறங்காமல் பழையனூர் அடைந்தோம். பழையனூரில் தழுவகொழுந்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் கிளம்பினார் இரத்தின சபாபதி. செங்குத்தாக விண்ணுக்கு உயர்த்திய காலைக் கண்டு களிப்புற்று மனமார தரிசித்துக்கொண்டு அரையிருட்டில் இருந்த ஆனந்தவல்லி கோயிலுக்குள் சென்றோம். 

தழுவகொழுந்தீஸ்வரர் கண்ணப்பனைப் போல தழுவிக்கொள்ளும் எழிலோடு இருந்தார். தரிசித்து திரும்பியபோது அர்த்த மண்டபத்தில் ஒரு பெரியவர். ஊர்க்காரர் என்பது அவரது நெற்றியில் அச்சடித்து ஒட்டியிருந்தது. அவர் நின்றிருந்த தூணோரம் ஒதுங்கி “ஐயா... இந்த எழுபத்திரண்டு வேளாளர்கள் தீப்பாய்ந்த கதை ஒண்ணு சொல்றாங்களே...” என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.

கண்களில் ஆர்வம் மிதக்க கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார்.

“அது ஒரு பிராம்மணாள் வீட்டுப் பொண்ணுங்க..” 

எது? என்கிற கேள்வி என்னோடு வந்த அனைவருக்கும் ஒரு சேர எழுந்து அவரைத் தூணோடுக் கட்டிப்போட்டு கதை சொல்ல வைத்தது.

“நம்மூரைச் சேர்ந்த ஒரு வணிகருங்க... கல்யாணமானவரு.. காசிக்குப் போறாரு.... அங்க ஒரு பிராமணர் வீட்டுல தங்கறாரு... அவருக்கு அழகா ஒரு பொண்ணு இருக்கு.. இவருக்குப் பார்த்தவுடனே புடிச்சுப்போயிடுது.... தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சுன்னு உண்மையைச் சொல்லாம.. அந்தப் பொண்ணையும் கட்டிகிடறாரு..”

அண்ட்ராயர் பையன் ஒருவனும் இப்போது அவருக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டான். ஆனந்தவல்லியைத் தரிசிக்க வந்த இன்னொரு கோஷ்டியும் இந்தக் கதை கேட்பதில் சேர்ந்துகொண்டார்கள்.

“கலியாணம் முடிஞ்சு அந்த பிராமணப் பொண்ணும் அதோட தம்பியும் இவரோட ஊருக்கு வாராங்க..... இங்க பழையனூறு பக்கத்துல வந்துட்டாங்க....”

”அப்பவும் இந்த ஊரு பழையனூறு தானோ...”

“ஆமாங்க.. அது திருவாலங்காடு... இது பழையனூரு....அப்போ அது காடு.. இப்போ அது ஊரு....அப்போ இது ஊரு...” என்று அது-இது-எது விளையாண்டார். திடீரென்று விழிகள் வாசலுக்குத் தாவ, அவசரத்தில் வேஷ்டிக் கட்டியிருந்த ஒரு இளைஞனைக் கூப்பிட்டு... “பித்தாள தாம்பாளத்து எடுத்துப்போடா... நா பின்னால வரேன்....” என்று கழுத்து நரம்புகள் புடைக்க கூம்பு ஸ்பீக்கர் டெசிபலில் கூப்பாடு போட்டார்.

“அது காடு.. இது ஊரு... நல்லாயிருந்துதுங்க...” என்று விட்ட இடத்தை எடுத்துக் கொடுத்தேன்.

“காரைக்கால் அம்மையார் இங்க வந்து கொழுந்தீஸ்வரரைப் பாடிட்டு... தலையாலையே நடந்து ஆலங்காடு போனாங்க....”

“ம்... “

“ஆமா... காரைக்கால் அம்மையார் தலையாலயே நடந்து போனதால தேவார மூர்த்திகள் யாருமே நம்ம கால் சுவடு பட்டா பாவமின்னு ஆலங்காட்டுக்குப் போயி வடராண்யேஸ்வரரைப் பாடலை.. இங்கேயிருந்தே அவரைப் பாடிட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க...”

“அவ்ளோ சிறப்பும் பெருமையும் வாய்ந்த தலம்...”

“நாம நீலி கதையில இருக்கோம்..” என்று அவரே தொடர்ந்தார்...

”இப்போ தான் அந்த வணிகருக்கு உதறல் எடுக்குதுங்க... ஏற்கனவே கட்டிக்கிட்ட பொண்டாட்டி இது யாரு புதுசான்னு கேட்டா என்னா சொல்றது?ன்னு பயம்... மச்சினனைப் பார்த்து “ரொம்ப தாகமா இருக்குது... தண்ணி எடுத்தா...”ன்னு குளத்துக்கு அனுப்புறாரு... அந்தம்மாவை ஒரு மரத்து ஓரத்துல உட்காரச்சொல்லிட்டு... பின்னாடியே வந்து மச்சினனை தள்ளிக்குள்ளாற வச்சி அழுத்திக் கொன்னுப்புட்டாரு..”

திகில் இசை இல்லாமல், பெப் ஏற்றாமல் பொசுக்கென்று ஒரு கொலை. சின்னப்பையன் கொலை சீன் வந்ததும் கொஞ்சம் மிரண்டான். என்னோடு கதை கேட்க நின்ற சிலர் கையில் பிடித்திருந்த குட்டிப் பசங்களுடன் வேறு கதை பேசிக்கொண்டு சிவசிவாவென்று கோயில் பிரதக்ஷிணம் சென்றனர்.

”...,கொன்னுப்புட்டு திரும்பவும் மரத்தடிக்கு வந்து பொண்டாட்டி கூட உட்கார்ந்து கதை பேசிக்கிட்டிருந்தாரு... ரொம்ப நாழியா தம்பி ஆளையேக் காணோமேன்னு அந்தம்மா பதறிப்போய் ’வாங்க ரெண்டு பேரும் போயி பார்ப்போம்’னு இவரைக் கூப்பிடறா... இவரும் அந்தம்மா கூட குளத்தாங்கரைக்குப் போறாரு... ரெண்டு பேருமா குளத்துல இறங்கி கொஞ்ச நேரம் தேடறாங்க..... அப்போதான் இவரு அந்தம்மாவையும் குளத்துல குப்புற அழுத்தி கொலை செஞ்சுடறாரு....”

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் இன்னொரு கொலை. ரெட்டைக்கொலை கேட்ட பசங்களின் கண்களில் பீதி. கதை சொன்னவரின் ஏற்ற இறக்கமும் சில இடங்களில் நிறுத்தி.... சில நொடிகள் கழித்து... மீண்டும் மெதுவாக ஆரம்பித்து.... சப்தம் கூட்டி.... என்று கதைச் சிலம்பம் சுழற்றினார். கிராமத்துப் பெரியவர்களுக்கென்றே இருக்கும் கதை சொல்லும் த்வனி.. 

“இதோட அந்தம்மாவோட ஜென்மம் முடிஞ்சுடுது..... அப்போ சாவுற போது அடுத்த ஜென்மம் எடுத்து உன்னைப் பழிவாங்கறேன்னு சபதம் போட்டிச்சு..ன்னு சில பேர் சொல்றாங்க.. இன்னும் சில பேரு இந்த வணிகரோட பின்னாடியே நீலியா வந்து உசிரை எடுத்துடுச்சின்னும் சொல்றாங்க... இப்போ நானு மறுஜென்மக் கதை சொல்றேன்”

கோயில் வாசலில் நிழலாடியது. அவருடைய சொந்தமாகக் இருக்கக்கூடும். அழுக்கில்லாத வேஷ்டியும் மேலுக்குத் தும்பைப்பூ நிற துண்டு மட்டுமே போர்த்தியிருந்தார். “நீயி... ஆலங்காட்டுக்கு வரலை... சாமி போயிட்டிருக்கு.....” என்றார். “நீலி கதை கேட்டாரு... பாதி சொல்லிட்டேன்.. மீதியை சொல்லிட்டு வாரேன்... நீங்க போங்க முன்னாடி.. ” என்று அனுப்பிவைத்தார்.

நீலியின் மீதி அடுத்த பாகத்தில்.....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails