மார்கழியில் வரும் மற்றுமொரு மஹா உற்சவம் திருவாதிரை. திருவாதிரை சிவபெருமானின் நட்சத்திரம். திருவாதிரை என்ற உடன் சிவபெருமான் மனதுக்கு வருகிறாரோ இல்லையோ நிச்சயம் நாவிற்கு தின்ற களி நினைவுக்கு வந்துவிடும். மீண்டும் ஒரு திருவிளையாடல் எடுத்தால் "பிரிக்க முடியாதது என்னவோ?" என்ற தருமி கேள்விக்கு அந்த ஆலவாயன் "களியும் கூட்டும்" என்று நடிகர் திலகம் சிவாஜி ஸ்டைலில் பதில் சொல்வது போல காட்சி அமைக்கலாம். ஐந்து, ஏழு என்று ஒத்தைப்படையில் காய்கறிகள் நறுக்கிப் போட்டு மணமாக செய்வது கூட்டு. தினமும் செய்யும் சாம்பாரை தண்ணீர் கொஞ்சம் குறைத்து கெட்டியாக செய்தால் அதுதான் களிக் கூட்டு. சாம்பாரை நீர்க்க வைத்தால் அது ரசமா என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்கக் கூடாது. எங்கள் வீட்டில் அது எப்போதும் சாம்பாராகவே பரிமாறப்படும். பொருளின் வடிவம் முக்கியமில்லை, தன்மை தான் முக்கியம் என்று பெரியமனது பண்ணி உள்ளே தள்ளிவிடுவோம். களி செய்வது ஒன்றும் பெரிய பிரமாதம் இல்லை. அரிசியை கொஞ்சம் வறுத்து பின்பு அதை உடைத்து வெல்லம் இட்டு பொங்கல் போல் செய்து நெய் முந்திரி பருப்பு ஏலக்காய் தூவி அடுப்பிலிருந்து இறக்கினால்... நிறுத்துப்பா.. நிறுத்துப்பா... உன் அடாவடி தாங்க முடியலை. "நாக்குக்கு மோட்சத்தில்" சமையர்க்கட்டுக்குச் சென்று ஒரு சுடு தண்ணீர் கூட வைக்கத் தெரியாதுன்னு சொல்லிட்டு வலையுலக மரகதக் கிச்சன் குவீன் புவனேஸ்வரி மேடம் இருக்கும்போது நீ எங்களுக்குக் களி பண்ண சொல்லித் தரியா என்று மக்கள் ஆர்ப்பாட்டம் ரோட் ரோக்கோ என்று போராட்டம் செய்வதற்கு முன் நான் இந்த மேட்டரில் இருந்து ஜகா வாங்கிக் கொள்கிறேன்.
திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலமான பாமணி எங்கள் வீட்டுக்கு பின்னால் பாமணியாற்றைக் கடந்து சென்றால் இருக்கும் ஒரு தேவாரத் திருத்தலம். ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் பல்லக்கில் புறப்பாடு செய்யப்பட்டு வெகு விமரிசையாக திருவாதிரை கொண்டாடப்படும். பல்லக்கில் நடராஜாவை அலங்காரமாக வைத்து திருச்சபை நடனம் ஆடிக்கொண்டே திருச்சுற்று வருவார்கள். காணக் கண்கோடி வேண்டும். திருவாதிரை முதல் நாள் அபிஷேகப்பிரியனை அந்த சபாபதியை வெகுவாக கவனித்து மறுநாள் அர்ச்சனை ஆராதனை என்று தடபுடலாக பிரார்த்தனைகள் நடக்கும். இந்தத் திருவாதிரை நன்னாளில் ராமநாதபுரம் அருகில் உள்ள உத்தரகோசமங்கை மரகதக் கல் நடராஜர் கண் முன் வருகிறார். அதி அற்புதமான மூர்த்தம். திருவாலங்காடு ஊர்த்துவ தாண்டவ நடராஜரும் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு மூர்த்தி.
சிதம்பரத்தில் பொற்சபையில் அம்பலவாணன் ஆடியது ஆனந்த நடனம். பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் என்ற முனிவர்களின் கடும் தவத்தின் பயனால் அவர்களுக்கு இந்த நடனம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அந்தத் திருநடனமும் இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் நடந்தது தான். நித்யஸ்ரீ காதில் ஜிமிக்கி ஆனந்த நடனம் ஆட பாடும் பாட்டு...
தா தை என்றாடுவார்... அவர் தத்தித்தை என்றாடுவார்....
சுதா மாமியும் ஜிமிக்கி ஆடி அதிர பாடிய... போ சம்போ சிவ சம்போ... கங்காதர சங்கரா.. கருணாகரா.... நிர்குண பரப்ரும்ம ஸ்வரூப....
இத் திருவாதிரை நல்லாளில் சிவபெருமானை துதித்து சகலரும் சகல நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழ என் உள்ளங் கவர் கள்வன் அந்த ஈசனை வேண்டி வணங்குகிறேன்.
நமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...
பட உதவி: http://poetrypoem.com/cgi-bin/index.pl?poemnumber=1036522&sitename=viswabrahma&displaypoem=t&item=poetry
-