Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Friday, August 27, 2010

டைட்டில் ஐடியாக்கள்

cinema reelகாலையில் கையொடிய கார் ஓட்டிக்கொண்டு வந்தபோது காதில் விழுந்த படத்தலைப்பு ராமர். கொஞ்சநாள் முன்னாடி தான் ராவணன் வந்துட்டு போனார். இப்ப ராமர் வரார். இன்று போய் நாளை வா என்று இலங்கை வேந்தனை கூப்பிடுவாரோ? தெரியவில்லை. கோலிவுட்டில் ஒரே இதிகாச புராண தலைப்புகளாக வைத்து வெளுத்துக் கட்டுகிறார்கள். ஹிட் பாடல் வரிகளில் இருந்து எடுத்த தலைப்புகள் போய் இப்போது இராமாயண டிரெண்ட். தம்பி பொண்டாட்டியை அண்ணன் கவர நுகர முயற்சி செய்யும் படம் எஸ்.ஜெ. சூர்யாவின் வாலி (இப்ப எஸ்.ஜெ. சூர்யா எங்க போனார்?).  சீதை மாதிரி இல்லாத ஐஸை விக்ரம் சிறை பிடிக்கும் மணியின் படத்திற்கு பெயர் ராவணன். ரஜினி-மலபார் மம்மூட்டி நடித்த தளபதியைக் கூட 'கர்ணன் (அ) சூரிய புத்திரன்' என்று வைத்திருக்கலாம். இவையன்றி வாமனன், பரசுராம், நரசிம்மா என்று பகவானின் தசாவதாரப் பெயர்கள் வேறு. இன்னும் கொஞ்ச வருடம் முன்னாடி இயக்குனர் இமயம் தன் கொடுக்கை வைத்து ரிலீஸ் செய்த அல்லி அர்ஜுனா அப்புறம் இப்போது ஆக்ஷன் கிங் நடித்த தம்பி அர்ஜுனா. இப்படி ஒரேடியாக இதிகாச தலைப்பு வைத்து படுத்தும் டைர..டக்ட்டர்களுக்காக மேலும் டைட்டில்ஸ்க்கான ஐடியாக்களை அள்ளி வீசலாம் .

சகுனி
நிறைய சமீபத்திய படங்களில் மாமா வேடத்தில் வரும் நடிகர்கள் ஹீரோவின் காதலுக்கு அடிஉதை பட்டு அல்பமாக துணை போவார்கள். மாப்பிள்ளையுடன் வாடா போடா ரேஞ்சுக்கு பேசிக்கொண்டு பாதி படத்தை நிரப்புவார்கள். வயல் வாய்க்கால் வரப்பு விவகாரத்தில் துரி(மாடர்ன் துரியோதனன்) ஆசைப்பட்டதை அவன் சித்தப்பு பசங்களிடம் இருந்து  இந்த காலத்திற்கு ஏற்ப ரம்மி விளையாடி நிலபுலன்களை கெலித்துக்கொடுக்கலாம். ஊர் நடுவே கிராமத்தின் பஞ்சாயத்து நடக்கும் பெரிய ஆலமரத்தடியில் ஜமக்காளம் விரித்து ஊரார் முன்னிலையில் காலையில் இருந்து சாயந்திரம் வரை ரம்மி அண்ட் ஷூட் ஆடி அத்தனையையும் அபகரித்து துரிக்கு கொடுக்கலாம். இந்த படத்தில் மாமாவுக்குதான் பிரதான பாத்திரம். சகுனி - தி மாமா என்று தலைப்புக்கு கீழ் டாக்லைன் கொடுக்கலாம். படம் பிச்..ச்...சுகிட்டு போகும்.

தருமு
சொல்லவேண்டியதேயில்லை. அண்ணன் தம்பி அஞ்சு பேர். எல்லாருக்கும் மூத்தவன் தருமு. பெரியப்பா பசங்க கிட்ட எல்லாத்தையும் இழந்துட்டு சிட்டி பக்கமா வந்து ஒரு சின்ன டீக்கடை போட்டு பொழச்சுக்கிறான். இராப்பகல் உழைப்புல ஒரு அஞ்சு வருஷத்ல டீக்கடை தருமு இண்டர்நேஷனல் ஃபைவ்  ஸ்டார் ஹோட்டலா ஆயிடுது. அந்த காசை எடுத்துகிட்டு பெரிய பென்ஸ் காரில் கிராமத்து பக்கம் போய் உட்டதை புடிக்கறான். பங்கு தரமேட்டேன்னு சொன்னவங்களை தன் தம்பிகளின் அதிரடிப் படை கொண்டு அடிச்சு துவம்சம் பண்ணி எல்லாத்தையும் மீட்கறான். கடைசியில் திரௌபதி யாருக்கு சொந்தம் அப்படின்னு ஒரு நாட் வச்சு நாட்டாமை சீன் வச்சு பிரிச்சு மேயலாம்.  படம் அள்ளிக்கும்.

விபீஷ்ணா
பக்கத்து வீட்டுக்காரன் பத்தினியை அபகரிச்ச சொந்த அண்ணனின் அராஜக செயலைக் கண்டித்து நொந்து போய் பக்கத்து வீட்டுக்கே சென்று பர்மனன்டாக குடியேறும் ஒரு நல்ல தம்பியின் நீதிக்கதை. படம் முழுக்க அறிவுரைகளை அள்ளி வீசும் கேரக்டர். ஆங்காங்கே அண்ணன்-தம்பி பாசப் பிணைப்பு காட்சிகளும் உண்டு. கண்களில் நீர் முட்ட முட்டதான் படம் பார்க்கமுடியும். பக்கத்து வீட்டு புருஷனுக்கு அண்ணனின் வீக்னெஸ் எடுத்து சொல்லி அதற்க்கு தகுந்தார்ப் போல் காய் நகர்த்தும் ராஜதந்திர காட்சிகள் நிச்சயம் கைதட்டல் பெரும். காமாந்தகர்களுக்கு ஒரு நீதிபோதனை படம் என்று விளம்பரப்படுத்தி நிறைய காசு பார்க்கலாம். க்ளைமாக்சில் குடியேறிய வீட்டை தனக்கு சொந்தமாக்கிகொள்ளும் சீன் ரசிகப் பெருமக்களை "பச்... பச்.." கொட்டவைக்கும்.  அபாரம். 

ஜடாயு
முழுக்க முழுக்க நம்ம ராம. நாராயணன் சப்ஜெக்ட். லோ பட்ஜெட். இந்த முறை யானை, சர்ப்பம்,  குரங்குக்கு பதில் ஒரு பெரிய பறவையை க்ராஃபிக்ஸில் காண்பித்து, அதற்க்கு கூலிங் கிளாஸ், கோட்டு போட்டு அந்தரத்தில் பல டைவ் அடிக்க விடலாம். தன் மானுட சிநேகிதரின் மருமகளை விசேஷ விமானத்தில் கடத்தும் காமுகன் ஒருவனோடு வான் யுத்தம் நடத்தி, விமான ரெக்கையால் தன் ரெக்கையை துண்டிக்கப்பட்டு, துடி துடித்து கிழே விழும் போது மொத்த கொட்டகையும் தாரை தாரையாய் கண்ணீர் வடிக்கும். படத்தின் நடு நடுவே சிறு பிள்ளைகள் ஜடாயு மேல் ஏறி ஆகாயத்தில் பறந்து பாடும் "சொன்ன பேச்சை கேட்கணும் ஜடாயு மாமா..." போன்ற பாடல்களும் நிச்சயம் உண்டு. இது கடவுள் நாராயணன் சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட். வேப்பிலைக்கு வேலையில்லை. ஆனால் நிறைய துளசி செடிகள் வெட்டப்படலாம். ஜாக்கிரதை.

சூர்ப்பனகை
ஆண்டி ஹீரோயின் சப்ஜெக்ட். எவ்வளவு நாள் தான் ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட் படம் எடுக்கறது. ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த உத்தம புருஷனை அடைய ஒருத்தி எடுக்கும் பல டகால்டி வேலைகளை காட்டும் படம். வித விதமான டிசைனில் காஸ்ட்யூம் அணிந்து தேமேன்னு ரோடில் சமர்த்தாக சென்றுகொண்டிருக்கும் ஒரு மகோன்னத ஆசாமியிடம் வம்பு செய்யும் காட்டு சிறுக்கியின் ஒருதலைக் காதல் கதை. சதா சர்வகாலமும் அவனை படுத்திக்கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த அவன் விட்ட குத்தில் மூக்கு பேந்து போய் இரத்தம் வர, அவளுடைய அடியாள் அண்ணன்மார்கள் கோதாவில் இறங்கி ரவுண்டு கட்டும் கதை. இந்தக் ராட்சஷ காதல் பேயிடம் இருந்து எப்படி ஹீரோ எஸ்கேப் ஆனான் என்பதுதான் கதை. சில்வர் ஜுபிலி நிச்சயம்.

இப்படி பல தலைப்புகள் கைவசம் இருக்கிறது கதையோடு. தலைப்பு பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த தருணத்தில் கூச்சம் இல்லாமல் அணுகினால் படங்களுக்கு தக்க பெயர் தரப்படும்.
மேற்கண்ட படம் எடுத்த இடம்: rpifellowship.com

Monday, August 16, 2010

இன்று தமிழக பிரபலத்தின் பிறந்தநாள்

தமிழ் நாட்டின் பிரபலம் ஒருவருக்கு இன்று பிறந்தநாள். நமது நிருபர் 'நேர்மை' நாராயணின் நேரடி பிறந்த நாள் ரிப்போர்ட்.

happybirthday

பிறந்த நாள் கொண்டாட்டம்
ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரே அதிர்வேட்டும் வானவேடிக்கையுமாக இருந்தது. காலையில் இருந்து சின்னஞ் சிறுசுகளில் இருந்து பல் போன பெருசுகள் வரை  மக்கள் வெள்ளம் அலைகடலென திரண்டு கியூவில் நின்று அவரை தரிசித்துவிட்டு வாழ்த்துப்பெற்று/சொல்லி  சென்றது. அந்த வழியாக ஒரு ஈ காக்கா அவர் இல்லம் தாண்டி பயணிக்கமுடியாமல் போக்குவரத்து தடைபட்டு அந்த ஏரியாவே அல்லோகலப்பட்டது. அனைத்து கோயில்களிலும் விசேஷ பிரார்த்தனைகளும், அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. அடையார் ஆனந்த பவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற முன்னணி இனிப்புக் பலகாரக்கடைகள் இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முற்றுகையிடப்பட்டு மொத்தக் கொள்முதல் செய்யப்பட்டு ஊருக்கே இனாமாக வழங்கப்பட்டது. காலையில் ஸ்நானம் செய்து பயபக்தியுடன் பெருமாள் பிரசாதம் போல் ஸ்ரீ கிருஷ்ணா மைசூர் பாக்கு கால் கிலோ சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்லும் ஆராவமுதன் "சார். நா இன்னிக்கி நினைச்சே பார்க்கலை. கால் கிலோ யார் சார் ஃப்ரீயா தருவா. அவர் பேரை சொல்லி வாங்கி குடுத்துட்டு போனா. அவர் நன்னா இருக்கணும். பகவான் அவருக்கு ஒரு குறையும் இல்லாமா வைக்கணும்" என்று கண்களில் நீர் தளும்ப நம்மிடம் கூறினார்.

அசம்பாவிதம்
அவர் வசிக்கும் தெருவின் கோடியில் "அகவை ---ல் அடியெடுத்து வைக்கும் அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்", "உடல் மண்ணுக்கு உயிர் உனக்கு" மற்றும் "எங்களின் காட்ஃபாதரே" போன்ற ஆளுயர கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவரிடம் ஆசி வாங்கும் கூட்டத்தின் தள்ளுமுள்ளு அதிகம் காரணமாக ஒருவரோடொருவர் முட்டி மோதி அந்த கட்அவுட்டுகள் சரியத்தொடங்கின. நல்லவேளையாக அங்கு ரோந்துப்பணியில் நின்றிருந்த ஸி.ஆர்.பி.எஃப் காவலர்கள் தாங்கிப்பிடித்து உதவிக்கரம் நீட்டினார்கள்.

கலை நிகழ்ச்சிகள் 
புலி வேஷம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கரகாட்டம் என்று அவரது சொந்த ஊரிலிருந்து வேன் பிடித்து வந்து ஒரு ஆட்டம் ஆடினார்கள். இதற்கென்று பிரத்தியேகமாக போடப்பட்டிருந்த சேர் மேல் ஏறிநின்று இதை இரண்டு மணிநேரம் வேடிக்கை பார்த்து ரசித்தார். அவ்வப்போது கையை அசைத்தும், சிரித்தும் தன்னுடைய முழு ஈடுபாட்டை காட்டினார். சினிமாக் கவிஞர் சிந்தன் இவரை வாயார புகழ்ந்து பாடி பரிசல் பெற்று சென்றார்.
விருந்து
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த அனைத்து மக்களுக்கும் தெருஒரத்தில் அகழி போன்று பள்ளங்கள் தோண்டி ஆளுயர அடுக்குகளில், பாத்திரங்களில் ஆஜானுபாகுவான சமையல்காரர்கள் விருந்து சமைத்தார்கள். அசைவப் பிரியர்களுக்காக இவர்கள் அறுத்த ஆடுகளின் சத்தம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.  ரத்த ஆறே ஓடியது. கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு காய்கறி லாரி திருப்பிவிடப்பட்டு சமையல் நடந்தது. சாப்பிடுவதற்கு பசியூட்டியாக கிரேட் கிரேட்டாக டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டன.

பரிசுகள்
பிறந்தநாள் பரிசாக ஆடு, கோழி போன்ற பலதரப்பட்ட ஜந்துக்களும் தரப்பட்டன. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அன்பர் ஒருவர் அங்கே அவர் எதிரே நின்று தலையை மொட்டை அடித்துக்கொள்ள ஆரம்பித்ததும் அங்கே சிலநேரம் பரபரப்பு நிலவியது. பக்கத்தில் இருந்த பந்தோபஸ்த்து அதிகாரிகள் அவரை அங்கு அப்புறப்படுத்தினார். பின்னர் விசாரித்ததில் அவர் கொப்பனாம்பட்டு கண்டராதித்தன் என்றும், சற்று மனநிலை சரி இல்லாதவர் என்றும் தெரியவந்தது.

விழா நிறைவு
வருகை தந்து சிறப்பித்த அனைத்து பொதுமக்களுக்கும் தன்னுடைய நன்றியை அந்தப் பிரபலம் தெரிவிக்க, பி.நாள் விழா இனிதே நிறைவுற்றது. பேட்டிக்காக நாம் அவரை நெருங்கியபோது பிறந்த நாள் வேலைப் பளு அதிகம் உள்ளதால் பின்னொருநாளில் சந்திக்கலாம் என்று அன்புடன் கூறி அன்பளிப்பு கொடுத்து வழியனுப்பிவைத்தார்.

எல்லாம் சரி... யாரு சார் அந்த பிரபலம் அப்படின்னு கேட்கறீங்களா..... கீழே உள்ள பாக்ஸ் உள்ளே மௌஸ் கொண்டு செலக்ட் செய்து பாருங்கள் தெரியும்.


ஹி.... ஹி... அது நான் தான். இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள்..


வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

பட உதவி: www.pagalguy.com

Wednesday, August 4, 2010

சுய பெரியபுராணம்

சும்மா தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தை சொறிஞ்சு   தொடர் பதிவுன்னு ஸ்ரீமாதவன் கிளப்பி விட்டிருக்கிறார். பெரிதாக பிரஸ்தாபிக்க இது ஒன்றும் பெரியபுராணம் இல்லை இது ஒரு சுயபுராணம். கூடிய மட்டும் அவையடக்கத்துடன் எழுதுவதற்கு முற்படுகிறேன். எவ்வளவு பேர் இதனால் ரணகளப் பட்டு வேதனைப் பட போகிறார்கள் என்று பார்ப்போம். மாதவா எங்கயோ போய்ட்டப்பா.....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆர்.வி.எஸ். மற்றும் பிராக்கெட்டில் ஒரு எம். நான் யாருக்கும் பிராக்கெட் போடுவதில்லை, சில பேர் என்னை எம் சேர்த்துக் கூப்பிடுவதால் யாம் ஆர்.வி.எஸ்.எம் ஆனோம்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இந்தப் பூவுலகில் துன்பங்கள் குறையவும், இன்பங்கள் பெருகவும் லோகச் ஷேமத்திற்காக ஆர். வெங்கடசுப்ரமணியன் என்ற திருநாமத்துடன் அவதரித்து நடமாடிக்கொண்டிருந்த என்னை, ஆறாம் வகுப்பு படிக்கும் போது பியூன் கலியபெருமாள் சின்ன சைஸ் வருகைப் பதிவேடு வாங்கி வந்து, பதிவேட்டில் ஒரு வரிக்குள் அடங்காமல் வந்த என் பெயரை சுருக்கி, வால் போல நீண்ட வெங்கடசுப்ரமணியனை  ஆர்.வி.எஸ்.எம் ஆக்கினார் என் ஆறாம் வகுப்பு ஆசிரியர்.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
உண்மையில் வலைப்பதிவில் காலடி எடுத்து வைப்பது என்பதே தவறு. கையடி என்று வேண்டுமானால் சொல்லலாம். பதிவை கையால் விசைப்பலகையில் அடித்துதான் ஏற்றுகிறோம். ஆகையால் 2007 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27  ம் தேதி சுபயோக சுபதினத்தில் ஊரெங்கும் எல்லோரிடமும் அடிபடும் ப்ளாக் நம்மாலும் அடிபடட்டும் என்று ஆரம்பித்தேன். வெறும் மன்னை ஆர்.வி.எஸ் என்று இருந்த ப்ளாக் பெயர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக பெயர் சொல்லும் பிள்ளையாக இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் துவங்கியது.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு தமிளிஷ், தங்க்லீஷ், தமிழ்மணம் போன்று எந்த ஒரு திரட்டிகளிலும் என்னை சேர்த்துக்கொள்ளாமல் இருந்தேன். பதிவுலகில் எல்லோரும் நிம்மதியாக ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டே காலத்தை போக்கி வந்தனர். அக்கம்பக்கம் இருந்த நண்பர் குழாமை படுத்திக்கொண்டிருந்தேன். அதற்குப் பின்னர் தான் ஒரு பெரும்பாலான மக்கள் சுதந்திரமாக இருப்பதை கண்டறிந்து, திரட்டிகளில் என்னை ஐக்கியமாக்கிகொண்டு பதிவு போட ஆரம்பித்தேன். ஒரு முறை என்னுடைய ரயில் பயணங்களில் (ஜட்டியுடன்) என்ற பதிவு யூத்புல் விகடனால் தெரிவு செய்யப்பட்டு அவர்களது வலையில் முதல் பக்கத்தில் இடம் பெற்றது. இந்த செய்தியை எனக்கு திரு. ஸ்ரீராம், எங்கள் ப்ளாக் தெரியப்படுத்தி மகிழ்ச்சியூட்டினார். 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஆரம்பத்தில் நம்ம வாத்தியார் சுஜாதா அவர்கள் சொன்னது போலவும், உண்மை கலந்த நாட்குறிப்புகள் புத்தகத்தில் திரு. அ.முத்துலிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போலவும், நம்மை கவர்ந்த, நாம் பங்குபெற்ற, பார்த்த, ரசித்த, கே(கெ)ட்ட விஷயங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பகிர்கிறோம். மொத்தமும் உண்மை சொல்லும் சொந்தக் கதைகள் அவ்வளவாக சுவாரஸ்யமாக இருப்பது இல்லை. ஆகையால் 100  % உண்மையும் அல்ல, பொய்யும் அல்ல.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
உலகத்திலேயே பெரிய சந்தோசம் என்னன்னா அடுத்தவங்களை சந்தோஷப்'படுத்தி' பார்க்கறது தான் அப்படின்னு முருங்கைக்காய் இயக்குனர் திரு. பாக்கியராஜ் சொல்வார். அதுபோல மத்தவங்க சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதப்படும் ப்ளாக் இது. இந்தக் கதைகளும், கட்டுரைகளும் அம்பலத்தில் ஏறுவதற்கு தகுதியா, அல்லது இதுதான் சம்பாதித்து கொடுக்குமா. இது கொஞ்சம் அதிகப்படியான கற்பனை. என்ன வில்லத்தனமா கேள்வி கேக்கறாங்கப்பா. :)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
லைஃப்ல எப்போதுமே ஒன்னுக்கு ரெண்டு இருந்தா சந்தோஷம்தான், அகமுடையாள் தவிர. (அப்பாடி, இனிமே பொண்டாட்டி படிச்சாலும் பரவாயில்லை!!) எப்போ பார்த்தாலும் கணினி முன் அமர்ந்து தட்டிக்கொண்டே இருக்கும் வேலை பார்ப்பதால், என்னுடைய கணினி அறிவுத்திறனை பெருக்குவதர்க்காகவும் அதை மற்றவர்களுக்கு காட்டுவதற்கும் இந்த வலைப்பதிவுடன் ஆங்கிலத்தில் ஒரு டெக்னிகல் ப்ளாக் எழுதுகிறேன். தமிழ் இலக்கிய பணிக்கிடையில் நேரம் கிடைக்கும் போது அதையும் முயற்சி செய்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
யார் மீதும் நமக்கு கோபம் பொறாமை பொச்சரிப்பு போன்றவை எப்போதுமே ஏற்ப்பட்டதில்லை. ஏனென்றால் "பல் உள்ளவன் புண்ணாக்கு தின்கிறான்" மற்றும் "கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளி முடிகிறாள்" போன்ற ஜென் தத்துவங்கள் அடங்கிய சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவன் நான்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
எங்கள் ப்ளாக், ஸ்ரீராம் என்று ஞாபகம். அவருக்கு என் நன்றி. இப்போதெல்லாம் அவர் பாராட்டுவது இல்லை. ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று நினைத்திருக்கலாம். பொதுவாகவே சில விஷயங்களில் நான் கொஞ்சம் psychic. ஏதோ எழுதறோமா, நாலு பேர் படிக்கறாங்களா அது போதும். அதுக்காகத்தான் மீட்டர் வச்சிருக்கேன். அது ஏற ஏற நம்மை கடியும் மொக்கையும் தன்னோட வளர்ச்சியை அதுவே பார்த்துக்கொள்கிறது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்... 
 எல்லோரும் கட்டாயம் இந்த புனித ஸ்தலத்திற்கு வாருங்கள். கொஞ்சம் புராணம், கொஞ்சம் புனைவு, ஒரே ஒரு கவிதை, சில கட்டுரைகள், சில சுவாரஸ்ய நெட் அலசல்கள், சில கெட்ட வார்த்தைகள், கொஞ்சம் ராஜா, கொஞ்சம் ரஹ்மான், நிறைய யூடுயூப் என்று போய்க்கொண்டிருக்கிறது. ஆகையால் பின்னூட்டமோ, இன்ட்லியில் ஓட்டோ போட்டால் சந்தோஷப்படுவேன். வேறொன்றும் இல்லை சொல்வதற்கு.  

இப்படி ஒரு மொக்கை போடுவதற்கு கூப்பிட்ட ஸ்ரீமாதவனுக்கு நன்றி. எனக்கு யாரை பந்திக்கு கூப்பிடுவது என்று தெரியவில்லை. என் வலையில் சிக்கும் அனைவரும் தொடர் போடலாம். அதற்க்கு முழு அங்கீகாரம் இருக்கிறது. நன்றி.

Thursday, July 15, 2010

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..

blogதீவிரமாக சரசரவென நூறு பதிவுகளைக் கடந்த தீராத.வி.பிள்ளையைப் பற்றி ஊரெங்கும் தீப்பிடித்தார்ப்போல ஒரே தீப்பொறி பறக்கும் பேச்சு. ஒரே வாக்கியத்தில் எவ்வளவு தீ. ப்ளாக் பத்திக்கும் போலருக்கு. விட்டுடுவோம். நேற்று மாலை கூடுவாஞ்சேரி ஆட்டோ ஸ்டாண்டில் கூட ரெண்டு பேர் தந்தி படித்துக்கொண்டு மடக்கியது போக தொங்கவிட்ட காலை ஆட்டிக்கொண்டு இது பற்றி பேசியதாக அதிகாரப்பூர்வ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிண்டி மேம்பாலம் ஏறி வடபழனி நோக்கி இறங்கிய இடத்தில் நம் பேரன் பேத்தி காலத்தில் வரப்போகிற சென்னை மெட்ரோ ரயிலின் பாதை போடும் தடுப்புகளையும் இடர்பாடுகளையும் தாண்டி இரண்டு வெளியூர் சொகுசு பஸ், இரண்டு உள்ளூர் மாநகர பஸ், நான்கு ஆட்டோ, ஒரு எல் போர்டு சிகப்பு ஆல்டோ, இரண்டு சைக்கிள், கம்பி ஏற்றி நுனியில் சிகப்புதுணி சுற்றாத ஒற்றை மாட்டு வண்டி, பத்து டன் தண்ணீர் போத்தல்கள் எடை ஏற்றிய ஒரு குட்டி யானை, ரோடிலேயே ஆபிஸ் செல்லும் ரெண்டு பேரை இலவசமாக துணியோடு குளிப்பாட்டித் எஸ்டேட் திரும்பும் மெட்ரோ வாட்டர் லாரி என்று சகலவிதமான இடையூறல்களுக்குக்கிடையில் நாலைந்து பேர் என் கார் கண்ணாடியை தட்டி திறக்கச் சொல்லி "நூறு ஆச்சு எதுவும் சிறப்புப் பதிவு கிடையாதா?" என்று கொள்ளை ஆர்வமாக மனம் திறந்து கேட்க நம்முடைய ஆர்வக் கோளாறு ஆரம்பமாகியது. அதோடு மட்டுமல்லாமல் ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ, ரெடிஃப் என்று மெயில் பேதம் பார்க்காமல் அனைத்து இலவச பொது மெயில் சர்வர்களிலும் குவிந்த எண்ணற்ற கணக்கிலடங்கா கேள்விகளுக்கு குலுக்கலில் எடுத்து பதில் சொல்லாமல் குலுக்கல் நடிகை (நம்மோட மனதை குலுக்கும்/உலுக்கும் நடிகை என்ற அர்த்தத்தில் படிக்கவும்) குமீதாவை நானாட நீ ஓட  நிகழ்ச்சியின் தேநீர் ஓய்வு நேரத்தில் அணுகி, கையை காலைப் பிடித்து (கெஞ்சி கேட்டதைத்தான் இவ்வாறு எழுதியுள்ளோம் என்று தீ.வி.பி வாசகர்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்) அவரது பொற்கரங்களால் கிளிக்கி தேர்ந்தெடுக்கச் சொல்லி பதில் அளித்துள்ளேன்.  கிளி சீட்டு எடுப்பது போல அவர் தேர்ந்தெடுத்த சில மெயில்களுக்கு என்னுடைய அவையடக்கமான பதிலை படித்து இன்புறுக.


சுடலை.சுண்டல்@கிண்டல்.காம் கேட்டது....
நீங்க எப்போலேர்ந்து எழுத ஆரம்பிச்சீங்க?

நான் வடுவா ஒன்றாம் வகுப்பு படிக்கறதிலிருந்து எழுதிக்கிட்டு வரேன். நீ நல்லாவே எழுதலை, காக்கா கிறுக்கலா இருக்கு, காண சகிக்கலை அப்படீன்னு அப்பவே எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சகாயமேரி டீச்சர் அவங்க தலையில அடிச்சுகிட்டே சொல்லுவாங்க.

வெட்டியான்@சும்மாகிடந்தசங்கு.காம் ஊதியது...
பதிவு எப்போலேர்ந்து எழுதுறீங்க சார்?

2007 நவம்பர்ல இந்த பதிவு மூலமாக ப்ளாக் உலக சரித்திரத்திலேயே எவருமே என்ட்ரி ஆகாத வகையில் உள்நுழைந்து உலகப் பிரசித்தி அடைந்தேன்.  அந்தப் பதிவு மக்கள் மத்தியில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியதால சுமார் மூன்று வருட இடைவெளிக்கு பின் இந்த வருஷம் பிப்ரவரி முதல் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கேன்.

படைப்பாளி@நையபுடைப்பவர்கள்.காம்  புடைத்தது...
உங்களோடது எந்த மாதிரி படைப்புகள்?

மேல், கீழ், முன் மற்றும் பின்நவீனத்துவங்கள் அனைத்தும் எழுத்தில் கொண்டுவர ஆசைப்படுகிறேன். உப்புசப்பு இல்லாமல் எழுதாதே முடிந்தால் கொஞ்சம் கரம் மசாலா போட்டு காரமாக எழுது என்று என் நண்பர் எழுத்துலக தாதா சா.....தா குருபோதனை செய்துள்ளார். அவருக்கு குருவணக்கம் செய்யும் பொருட்டு அப்பப்போ அசைவமும் சைவத்தோடு சேர்த்து எழுதுகிறேன். நான் அக்மார்க் தூய தமிழில் எழுதினால் பத்துப்பாட்டு எட்டுத்தொகை போல் உள்ளது என்று தாய்லாந்தில் சியாங் மாய் பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றிக்கொண்டு தமிழ் ஆராய்ச்சி செய்யும் தூக்டா எனக்கு பாராட்டு கடிதத்துக்கு பதில் என்னைப் பற்றி எட்டுப் பக்க கட்டுரை வரைந்து எனக்கு மெயில் அனுப்பியுள்ளார். விரைவில் அதுவும் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

காமவம்பன்@குசும்பு.காம் வம்படித்தது..
நீங்க காரோட்டும் போது ரோட்ல போறவர பொண்ணுங்களை வச்சகண் வாங்காமவும் இமைக்காமலும் திருட்டுத்தனமா கள்ளப்பார்வை பார்க்குறதாகவும், சில சமயங்கள்ல சடார்னு பின்னால திரும்பி பார்த்து கழுத்து சுளுக்கிகிட்டதாகவும் அதனாலதான் உங்க வலைதளத்துக்கு தீராத விளையாட்டு பிள்ளை அப்படின்னு பொருத்தமா ஒரு பெயர் சூட்டினதா ஊர்ல எல்லாரும் கும்பலா கூடி நின்னு பேசிக்கிறாங்களே அது உண்மையா?

இந்தக் கேள்விக்கான விடையை சில மாதங்களுக்கு முன்னாடியே மயிலை மாங்கொல்லையில் போஸ்டர் அடித்து கலாமை கூப்பிட்டு மேடை போட்டு ஒரு பொதுக்கூட்டத்துல சொல்லிட்டேன். அது இங்க இருக்கு. படித்து புரிந்துகொள்ளுங்கள்.

வாலிபகுறும்பன்@வயசுப்பையன்.இன் லிருந்து...
நீங்க எழுதற கார்த்திக்கின் காதலிகள் தொடர் பற்றிய ஒரு கேள்வி. எல்லோரும் அது உங்களோட உண்மைக்கதை சொந்தக்கதை நொந்தக்கதை என்கிறார்களே... இதைப் பற்றி உங்கள் கருத்து...

இந்த கதைகளுக்கான குறிச்சொல்லே புனைவு அப்படின்னு தான் போட்டிருக்கேன். பொதுவா கதைன்னு சொன்னாலே இந்த சமூகம் கை கால் மூக்கு நாக்கு வச்சு பேசும். இதுல என்னை வச்சு பேசுது. அதோட மட்டுமல்லாமல் என்னை நேர்ல பார்க்கிறவங்களுக்கு என்னோட தகுதி என்ன என்பது நல்லா தெரியும். கதையில வர எல்லாப் பொண்ணுங்க கூடவும் இந்த நையாண்டி உலகம் எவ்வளவுதான் இணைத்து கிசுகிசு பேசினாலும், என் தங்கத் தாரம் சொல்றா "உங்க மன்மதனையொத்த அழகுக்கு நான் ஒருத்தி மாட்டிகிட்டதே அதிகம்"ன்னு.

உயிரைவாங்கும்நண்பன்@கால்வாரி.காம் வாரிவிட்டது..
நீங்க ப்ளாக் எழுதறதப் பற்றி உங்கள் நண்பர்கள் கருத்து.. யாராவது ஒரு நண்பரின் உள்ளக்கருத்தோடு எடுத்துக் கூற முடியுமா?

சமய சந்தர்ப்பங்கள் பார்க்காம எந்நேரமும் ஜில்லெட் மாக் 3 சவர பிளேடு மாதிரி என் நண்பர்களை வாயாலேயே வகுந்ததின் விளைவாக, ஐயா சாமி தாங்கமுடியலை, நீ இதையெல்லாம் ப்ளாக்கா எழுதுப்பா ராஜா. நாங்கெல்லாம் அங்க போய் படிச்சிக்கிறோம் அப்படின்னு சொன்னாங்க. அவங்களோட ஊக்கத்தின் சிறப்புப் பரிசாக அவங்களுக்காகத்தான் இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்தேன். 
உங்களோட உள் கேள்விக்காக சிநேகிதர் ஒருவரின் கருத்துக்காக நண்பர் ரவியிடம் தொலைபேசியில் கேட்டபோது....
(கேள்வி கேட்ட பின்னர் அவர் குரல் சற்று கம்மி குமுறியது. நம் போன் கேள்விக்கு வெறிகொண்டு அவர் எழுதிய மின் மடலை அக்ஷரம் பிசகாமல் அப்படியே வாசகர்களின் பார்வைக்கு கீழே தந்துள்ளோம்)
  
எப்போதுமே ஓயாம ஒரு ரூபா காயினை தகர டப்பால போட்டு ஆட்டற மாதிரி  பேசிக்கிட்டே இருப்பான். நம்மால காது கொடுத்து கேட்க முடியலைன்னு ப்ளாக் எழுதுன்னு சொல்லிட்டோம். ஆனா இப்பதான் ஹிம்சை ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு. முன்னாடியெல்லாம் ஒரு முறை ஒரு விஷயத்தை சொல்வான். இப்போ ஒரு தடவை சொல்லிட்டு இதையெல்லாம் ப்ளாக்ல எழுதியிருக்கேன் படிங்க, படிங்கன்னு நச்சரிக்கறான். ரத்தம் வர சொரியறான். ஒரு ப்ளாக் எழுதி ஊர் முழுக்க போன் போட்டு "மாமா இது எழுதியிருக்கேன்", "மச்சான் அது எழுதியிருக்கேன் படிங்கடா" அப்படின்னு வேற பிடுங்கறான். தொல்லை தாங்காம  சரி படிச்சோம் அப்படின்னு சொல்லி தப்பிக்கப் பார்த்தா போர்டு எக்ஸாம் மாதிரி அவன் எழுதின ப்ளாக்லேர்ந்து கேள்வி வேற கேட்டு நாம படிச்சோமான்னு டெஸ்ட் வச்சு படுத்தறான். இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலமோ?
(மரண தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நண்பரின் கண்ணீர்த் துளிகள் மின்மடலிலும் கூட கொஞ்சம் ஈரம் செய்திருந்தது)
அநியாயவாதி@குடும்பத்தில்கும்மியடிப்பவர்.காம்  கும்மியடித்தது...
இதைப் பற்றி உங்க மனைவி என்ன நினைக்கறாங்க?

ரொம்ப பெருமையா இருக்கு அப்படின்னு முதல்ல சொன்னாங்க. எதுக்கு அப்படின்னு கேட்ட போது முன்னாடியெல்லாம் உங்களுக்கு எதிர்த்தாப்ல, கூப்பிடற தூரத்தில இருக்கறவங்களை தான் பேசிப் பாடா படுத்துவீங்க. இப்ப ப்ளாக் ஆரம்பிச்சு பிரபஞ்சத்ல இருக்குற சகலவிதமான தமிழ் எழுதப் படிக்க தெரிந்த ஜீவராசிகளையும் படுத்த முடியும் அப்படின்னு நீங்க நிரூபிச்சதால உங்களை கட்டிகிட்டதற்காக நான் ரொம்பவே பெருமைப்படறேன். அப்படின்னு சொல்லும்போது அந்தப் பெருமை அவ கண்கள்ல மின்னுறதை நான் கண்கூடாக பார்த்தேன்.

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. பதில் எழுதி(அடித்து) கை வலிப்பதாலும், இது எப்போதுமே எவர் கிரீன் சப்ஜெக்ட் என்பதால் இருநூறு, முன்னூறு, ஐநூறு, ஆயிரம் போன்ற நூற்பதிவுகள் கொண்டாட்டத்திற்கு கவனித்து கொள்ள(ல்ல)லாம்  என்று இப்போதைக்கு இப்பதிவு இத்துடன் நிறைவடைகிறது. 

(அப்பாடி! end கார்டு போட்டான்டா என்று ஏகமனதாக எல்லோரும் பெருமூச்சு விடுவது பெரிய ஆலமரத்தையே சாய்த்துவிடும் போலிருக்கிறது. சே. விவஸ்தையே கிடையாது end சொல்லியும் இன்னும் எழுதறான்பா... அவன் கையிலேர்ந்து கீபோர்டை பிடுங்குங்கப்பா.. என்று நாலு பேர் ஓடி வருகையில்.. நான் எஸ்கே..................ப்)
பட உதவி: http://blogs.worldbank.org/

Monday, July 12, 2010

பாலுடன் ஒரு நேர்காணல்

தமிழகத்தில் உள்ள எல்லா பிரபல அரசியல் வார இதழ்களின் முக்கியஸ்தர் பேட்டி பாணியில் எழுதப்பட்டது இது.

PAULசக ஆரூடகர்களான கிளி, குரங்கு, நான்கு கால், ஐந்தறிவு ஜீவன்கள் போன்றவர்களை காட்டிலும் தன்னுடைய சக்சஸ் ரேட் அதிகமாக இருப்பதால் அந்த மெதப்போடு இருந்த ஜெர்மனியின் ஆக்டோபஸ் பால் தன்னுடைய வெற்றிக்களிப்பில் ஜாலியாக தனது எட்டாவது கரத்தால் மாலை நேர சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த  அந்த நேரத்தில் நாம் உள்ளே நுழைந்தோம். அப்பாயின்மென்ட்  இல்லாமல் யாரையும் பால் பார்ப்பதில்லை என்று அதன் உதவியாளர் தடுத்தும் ஆர்வ மிகுதியால் செருப்பால் அடித்தாலும் பரவாயில்லை ( ஆக்டோபஸ் அணியும் செருப்பு ஒன்றும் பெரியதாய் இருக்காது என்ற எண்ணத்திலும், மேலும் எப்போதும் தண்ணியிலே இருப்பதால் அழுக்காகவும் இருக்காது என்பதாலும்) என்று உள்ளே நுழைந்தோம். பிறந்ததிலிருந்தே ரொம்பவும் சொகுசாக கரடு முரடு  அலையடிக்கும் கடலில்லாமல் கண்ணாடிக் கட்டிலில் இருந்து பழகியதால் நன்றாக பள பள வென்றிருந்தது.  தான் கெலித்த ஹாலந்து மற்றும் ஸ்பெயின் விளையாடிய இறுதிப்போட்டியின் ஹைலைட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தது.  ஒரு மாலை வணக்கத்துடன், ஜோதிட சக்ரவர்த்தி, ஜோதிட சிரோன்மணி, உதைப்பந்து தீர்ப்பு தந்த உத்தமர், தண்ணீரில் அவதரித்த தவப்பால் ( தவப்புதல்வனுக்கு பதிலாக),  அவர்களுடனான பேட்டி இனிதே ஆரம்பமாகியது.

நாம்: வணக்கம், திரு.. திருமதி..  எப்படி சொல்றது.. பால் அவர்களே.
பால்: மாலை வணக்கம். அன்பு மானிடப் பிறப்பே....

நாம்: நன்றி பால், நல்லவேளை உடன்பிறப்பே என்று சொல்லவில்லை. தப்பித்தேன்.
பால்: அப்ப. ரத்தத்தின் ரத்தமே சொல்லட்டுமா?

நாம்: ஐயா ஆக்டோபஸ், ஆளை விடுங்கள். உங்களோட பிறப்பு பற்றி..
பால்: எனக்கு உங்கள மாதிரி கர்ப்ப வாசம் கிடையாது. கிட்டத்தட்ட சுயம்பு மாதிரி. பொறந்ததே நீங்க பார்க்கிற இந்தக் கண்ணாடி கூண்டில தான். பொறந்தப்பவே வானத்திலிருந்து கொஞ்சம் ஒளி தெரிஞ்சதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் ஒருத்தர் ஆய்வு செய்து இப்போ சொல்லியிருக்கார்.

நாம்: உங்களுக்கு இந்த அதிசய மற்றும் அபூர்வ சக்தி இருப்பது எப்போது உங்களுக்கு தெரிஞ்சுது?
பால்: அந்த சம்பவம் நடக்கும் போது எனக்கு ஆறு மாசம் இருக்கும். ஒருநாள் என்னை எடுத்து வளர்க்கிற உயிரியல் பூங்கா காப்பாளர் வீட்டுல அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒரே தகராறு. அவரோட நாலு பையன்ல ஒருத்தனோட சாயல் மட்டும் பார்க்க வித்தியாசமாக  இருக்கான் என்றும் தன்னுடைய வாரிசு இல்லை  அப்படின்னு அவரோட வீட்டுக்காரம்மாகிட்ட கத்தி கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தாரு. நிறைய நேரம் சண்டை போட்டு ஒரு குழப்பத்துல என்னோட கண்ணாடி கூண்டுல ஒரு பக்கம் இவர் படத்தையும், அடுத்த பக்கம் இவரோட வேலை செய்யும் இன்னொரு  அந்த டொக்கு நோஞ்சான் அசிஸ்டண்ட் படத்தையும் தொங்கவிட்டு, ரெண்டுத்துலயும் எனக்கு பிடிச்ச சாப்பாடு போட்டு  ஆர்வமா சாப்பிடச் சொன்னாரு. அப்ப நான் கரெக்டா இவர் படம் இருக்கும் பக்கத்திலேர்ந்து எடுத்து சாப்பிட்டேன். அவருக்கு ஒன்னும் புரியலை.

நாம்: (மிகவும் ஆர்வமாக..) அப்புறம்..அது அவர் பையன் தானா?
பால்:டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்தாரு.  அப்படியே ஷாக்காயிட்டாரு.  நான் சொன்னது சரியாயிடுச்சு.  அந்த ஒரு பையன் மட்டும் தான் அவருக்கு பொறந்ததாம். மத்ததெல்லாம் இல்லையம்.
நாம்: ( கிளைமாக்ஸ் கேட்டு அதிர்ந்து இருக்கையை விட்டு எழுந்தே விட்டோம்..)
பால்: உட்காருங்க.. உட்காருங்க.. இதெல்லாம் சாதாரணம். மேல கேளுங்க..

நாம்: இவ்வளவு அருள் இருக்கிற நீங்க ஏன் இப்போ எல்லாம் வெறும் புட்பால் முடிவுகள் மட்டும் கணிச்சு சொல்லிக்கிட்டு வரீங்க? எங்கயாவது கோயில் பக்கம் போய் உட்கார்ந்தா நிறைய சில்லரை தேறுமே.
பால்: அந்த அதிபயங்கர குடும்ப கலவரத்திற்கு பின்னர், அந்த உயி.பூ.காப்பாளரின் மனைவியும் அந்த அசிஸ்டன்ட்டும் சேர்ந்து ஆக்டோபஸ் வறுவல் கிட்னிக்கு மற்றும் நம்ம உறவுக்கு நல்லது நாம வறுத்து சாப்பிடலாம் அப்படின்னு திட்டம் தீட்டியது தெரிந்ததால் அத்தோடு என் குடும்ப கணிப்புகளை நிறுத்திக்கொண்டேன். என்னை திருத்திக்கொண்டேன்.

நாம்: புட்பால் தவிர இன்னும் வேறெந்த விளையாட்டுக்கெல்லாம் ஆருடம் சொல்ல முடிவெடுத்திருக்கிறீர்கள்.
பால்: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் கிரிக்கெட் என்னும் விளையாட்டிற்கு முடிவு கணித்துச் சொல்லக் கேட்டிருக்கிறார்கள். நேற்று ஒரு ஐந்தாறு புக்கீக்கள் வந்து குசலம் விசாரித்து ஏழெட்டு 'சி' பேரம் பேசிவிட்டு போயிருக்கிறார்கள். இப்போது தான் அதுபற்றிய புராதன வீடியோ கோப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பேரம் மடிந்தால் விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளிவரும்.

அதற்குள் பாலைப் பார்ப்பதற்கு பெரிய க்யு வரிசை நிற்பதால் நம்மை ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லி விரட்டியடித்தார்கள். நாம் வெளியே வருகையில் PETA -விலிருந்து இரண்டு பேர் நின்றிருந்தார்கள். பாலின் இந்தியப் பயன்பாடுகளை எண்ணிக்கொண்டே வந்தோம். அந்த சிந்தனையில் உதிர்ந்த முத்துக்களில் சில...

பாலை பின்பற்றி, குருவாக ஏற்று, பால் ஜோதிடம் என்று யாராவது போர்டு போட்டு உட்காரலாம்.

அப்படி பால் ஜோதிடம் சொல்வோரிடம், ஆண்பால், பெண்பால், இடைப்பால்  என்று எல்லோருக்கும் சொல்வார்களா என்று கேட்டு வம்புக்கிழுக்கலாம்.

சின்னக் கவுண்டர், நாட்டாமை போன்ற நீதிமான்களால் கூட தீர்க்க முடியாத பல சிக்கலான வழக்குகளில் பால் கொண்டு நீதி வழங்கலாம்.

கிரிக்கெட்டில் மூன்றாவது அம்பயருக்கு பதிலாக பால் கொண்டு தீர்ப்பு அறிவிக்கலாம்.

மருத்துவமனைகளில் மொத்த பணத்தையும் கவுண்டரில் கட்டச் சொல்லி சில உயிர் போகும் பல கேசுகளுக்கு "இனிமே ஆண்டவன் தான் காப்பாத்தணும்" என்பதற்கு பதிலா "இனிமே பால் தான் காப்பாத்தணும்" என்று சொல்கிற நிலைமை வரலாம்.

பால் புகழ் நாடெங்கும் பரவி, பால் ரசிகர் மன்றம் மற்றும் பால் சாமி கோயில் அமைக்கப்படலாம்.

கடைசியாக பால் சில படங்களில் நடித்து அவை வெற்றிபெற்று, தேர்தலில் நின்று  இந்தியப் பிரதம மந்திரி ஆகலாம். யார் கண்டார்.

நாம் இதோடு நம்ம மொக்கையை நிறுத்திக்கலாம்.

பட உதவி: http://www.threadless.com/

Tuesday, July 6, 2010

மூளை முடிச்சுகள்


 வண்டி ஓட்டும்போது லெப்ட்ல கட் பண்ணனுமா இல்லைன்னா ரைட்லயா, ஆட்டோகாரனை திட்டனுமா முறைக்கனுமா, நடைவண்டி மாதிரி கார் ஓட்டுற அந்த பழத்தை முந்தனுமா வேண்டாமா, பக்கத்து வீட்டு ஆன்டி ஷகிலா மாதிரி இருக்கா, அந்த சுருட்டைத்தலையன் பைக் பின்னாடி உட்கார்ந்து போறது எதிர்த்த வீட்டு பி.ஈ படிக்கற பொண்ணா, ஏன் இன்னிக்கி ரசத்துல உப்பே இல்லை, அஞ்சும் மூனும் எட்டுதானா, நமக்கு இருக்கிற புத்தி ஏன் பக்கத்து வீட்டு ஆளுக்கு இல்லை குப்பையை நம்ம வீட்டு வாசல்ல வந்து கொட்டறான், அற்ப சங்கைக்கு எங்க ஒதுங்கணும், ரோடுல என்னென்ன செய்யணும், வீட்டுல நாலு சுவத்துக்குள்ள என்னென்ன செய்யணும், ராமராஜன் படம் பார்கலாமா கூடாதா, எக்ஸாமுக்கு இந்த சாப்ட்டர் படிக்கலாமா இல்லன்னா சாஸ்ல விடலாமா, நாம எப்படி வித்தியாசமா லவ் லெட்டர் கொடுத்தா அந்த பிஃப்டி கே.ஜி தாஜ்மஹால் ஏத்துக்கும், அவங்க அப்பன் அருவா எடுத்து வெட்ட வருவானா, அம்பது வயசுல நமக்கு ஜீன்ஸ் டீ ஷர்ட் போட்டா நல்லா இருக்குமா அதை கண்ணாடில பார்த்தோமா, அத பார்த்துட்டு ரோட்ல நாலு பேர் நடமாட முடியுமா...............

.............இருக்குற வேலையை விட்டுட்டு பறக்குற வேலைக்கு மனு போடலாமா, இலக்கியத்துக்கும் இலக்கணத்தும் தலைக்கனத்துக்கும் என்ன சம்பந்தம் அல்லது வித்தியாசம், அம்மா யாரு, அன்னை யாரு, ஐயா யாரு, பொண்டாட்டி யார், ரெண்டாவது பொண்டாட்டி யாரு, பத்தினி யாரு, மேட்டர் பார்ட்டி யாரு, இந்த மாசத்துக்கு எவ்வளவு ரூபா இருந்தா வண்டி ஓடும், யாரு முதலாளி, யார் பாஸ், யாரு மொட்டை பாஸ், இன்னிக்கு ஷேர் மார்க்கட் கரடியா, மாடா, மனுஷனா, நம்ம குலசாமி யாரு, சூப்பர் கம்ப்யூட்டர், ஜெட் ரயிலு, சார்டெட் பிளேனு, அரசியல்வாதி எல்லாம் ஏன் வெள்ளைல இருக்காங்க, நீல் மெட்டல் பனால்கா குப்பைத்தொட்டி, சென்னை கார்போரேஷன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான், பாடும் நிலா எஸ்.பி.பி,  கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, வைரமுத்து, தியாகராஜர் கீர்த்தனை, கர்நாடிக் மியூசிக், திருவையாறு, கள்ளக்காதலன் கொலை, பாங்கில கொள்ளை, வில்ஸ் சிகரெட், பான்பராக் குட்கா, கஞ்சா, சுண்டிசோறு இதுல எது போதை அதிகம் தரும், இராப்பிச்சைக்காரன் யாரு, அம்பானி யாரு அதிலயும் அனில்யாறு முகேஷ் யாரு, தோனி-பள்ளித்தோழி கல்யாணம், சானியா மிர்சா- ஷோயப் இன்டர்நேஷனல் நிக்காஹ், ஒபாமா ஏன் அமெரிக்க தேர்தல்ல நிக்கும்போது ஆஞ்சநேயர் சிலை கைல வச்சிருந்தார், எப்ப தூங்கணும், எப்ப எழுந்திருக்கணும், நாம ஏன் இப்படி எல்லாம் பதிவு எழுதிக்கிட்டு இருக்கோம்...........

இப்படி நம்மோட சகல சௌபாக்கியத்திற்கும் காரணகர்த்தாவாக இருக்கிற மூளையின் ந்யூரான்களின் தோற்றம் தான் மேலே இருக்கும் படத்தில்... .............. 

 பட உதவி: http://kottkegae.appspot.com/images/1899-neurons.jpg

Sunday, June 20, 2010

ராவணன் - ஒரு உண்மை ரிப்போர்ட்


மணி என்னிலேர்ந்து ஜூன் 18 முதல் அப்படின்னு விளம்பரம் போட ஆரம்பிச்சாரோ அன்னிலேர்ந்து நானும் டிக்கெட் பிச்சை எடுத்துப் பார்க்கிறேன் ஒன்னும் பேர மாட்டேங்குது. பல பிரஸ் நண்பர்கள் கிட்ட கூட திருவோடு ஏந்தி பார்த்துட்டேன். என்னிக்கு வேணும் அப்படின்னு கேட்டுட்டு, எந்த நாளுக்கு கேட்கறோமோ அன்னிக்கி கிடைக்கறது கஷ்டம், ஆனா பார்க்கலாம் அப்படின்னு ஒரு ஸ்டாண்டர்ட் டயலாக் விடும் போது ஒரு பாணம், ஒரு மனைவி, ஒரு சொல் அப்படின்னு வாழ்க்கைல இருக்கணும்னு எ.கா இருந்துட்டுப்போன த்ரேதா யுக ராமன், பத்து தலை ராவணனுக்கு மேலோக டிக்கெட் கொடுத்தவண்டதான் சினிமா டிக்கெட் கேட்கணும் போலருக்கு.   நவீன ராம, ராவணாதிகளை பெரிய ஸ்க்ரீன்ல பார்க்கலாம்னா முடிய மாட்டேங்குதே. எஃப்.எம் ரேடியோக்கல்ல பாடல்களுக்கு நடுவில் விக்ரம் "ஏலே, ராவணன்லே...." என்று அடித்தொண்டையில் கமறி பேசும்போது "ஏலே, கிடைக்கலலே...." என்று சொல்லி பார்த்துக்கொள்கிறேன்.
 
என் கிட்ட ஹை ஸ்பீட் இன்டெர்நெட் இருக்கு, சிரிக்கிற காந்தி படம் போட்ட தாள் இருக்கு, சத்யத்ல போய் பார்க்கறத்துக்கு ஒரு நாலு கால் வண்டி இருக்கு, நாக்கை தொங்க போட்டு நாலு மணி நேரம் ஸ்க்ரீன் நோக்க கொள்ளை ஆசை இருக்கு. இவ்வளவு "இருக்கு" இருக்கிற இந்த பரம ஏழைக்கு டிக்கெட் மட்டும் தான் இல்லை, படம் பார்ப்பதற்கு. நான் பெரிய எழுத்தாளன் இல்லை, ஆகையால் யாரும் ஒசியில் டிக்கெட் ஏற்பாடு செய்யவேண்டாம் என்று வலது கை ஆள் காட்டி விரலை நீட்டி முன்னும் பின்னும் ஆட்டி கேட்டுக்கொள்கிறேன்.
 சுகாசினி வசனம், சிவன் கேமரா, பிரம்மாவும் பெருமாளும் தயாரிப்பு அப்புடி இப்புடின்னு  பதிவுலக ஜாம்பவான்களின் பட விமர்சனங்களை படித்து பார்க்கிறபோது, படம் பப்படமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் ரெண்டு நாள் போனா சத்யம் தியேட்டர்லேர்ந்து ஆந்த்ரா பக்கத்துல இருக்கிற பட்டாபிராம் வரை வீட்டுக்கு வந்து கதவை தட்டி டிக்கெட் கொடுப்பாங்க போலிருக்கு. இடைத்தேர்தல்ல ஓட்டுபோட காசு கொடுக்குற மாதிரி. பார்க்கலாம் பாலம் கட்டின D. ராமன் B. E (நம்ம சீதா புருஷன் தான்), காதில் விழுந்ததான்னு.

இதுல என்ன உண்மை ரிப்போர்ட்ன்னு கேட்டா, நான் இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்த பின்பு என்னுடைய கலை விமர்சனம் பதிவேற்றம் செய்யப்படும்.

பட உதவி: www.behindwoods.com

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails