Wednesday, August 4, 2010

சுய பெரியபுராணம்

சும்மா தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தை சொறிஞ்சு   தொடர் பதிவுன்னு ஸ்ரீமாதவன் கிளப்பி விட்டிருக்கிறார். பெரிதாக பிரஸ்தாபிக்க இது ஒன்றும் பெரியபுராணம் இல்லை இது ஒரு சுயபுராணம். கூடிய மட்டும் அவையடக்கத்துடன் எழுதுவதற்கு முற்படுகிறேன். எவ்வளவு பேர் இதனால் ரணகளப் பட்டு வேதனைப் பட போகிறார்கள் என்று பார்ப்போம். மாதவா எங்கயோ போய்ட்டப்பா.....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆர்.வி.எஸ். மற்றும் பிராக்கெட்டில் ஒரு எம். நான் யாருக்கும் பிராக்கெட் போடுவதில்லை, சில பேர் என்னை எம் சேர்த்துக் கூப்பிடுவதால் யாம் ஆர்.வி.எஸ்.எம் ஆனோம்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இந்தப் பூவுலகில் துன்பங்கள் குறையவும், இன்பங்கள் பெருகவும் லோகச் ஷேமத்திற்காக ஆர். வெங்கடசுப்ரமணியன் என்ற திருநாமத்துடன் அவதரித்து நடமாடிக்கொண்டிருந்த என்னை, ஆறாம் வகுப்பு படிக்கும் போது பியூன் கலியபெருமாள் சின்ன சைஸ் வருகைப் பதிவேடு வாங்கி வந்து, பதிவேட்டில் ஒரு வரிக்குள் அடங்காமல் வந்த என் பெயரை சுருக்கி, வால் போல நீண்ட வெங்கடசுப்ரமணியனை  ஆர்.வி.எஸ்.எம் ஆக்கினார் என் ஆறாம் வகுப்பு ஆசிரியர்.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
உண்மையில் வலைப்பதிவில் காலடி எடுத்து வைப்பது என்பதே தவறு. கையடி என்று வேண்டுமானால் சொல்லலாம். பதிவை கையால் விசைப்பலகையில் அடித்துதான் ஏற்றுகிறோம். ஆகையால் 2007 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27  ம் தேதி சுபயோக சுபதினத்தில் ஊரெங்கும் எல்லோரிடமும் அடிபடும் ப்ளாக் நம்மாலும் அடிபடட்டும் என்று ஆரம்பித்தேன். வெறும் மன்னை ஆர்.வி.எஸ் என்று இருந்த ப்ளாக் பெயர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக பெயர் சொல்லும் பிள்ளையாக இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் துவங்கியது.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு தமிளிஷ், தங்க்லீஷ், தமிழ்மணம் போன்று எந்த ஒரு திரட்டிகளிலும் என்னை சேர்த்துக்கொள்ளாமல் இருந்தேன். பதிவுலகில் எல்லோரும் நிம்மதியாக ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டே காலத்தை போக்கி வந்தனர். அக்கம்பக்கம் இருந்த நண்பர் குழாமை படுத்திக்கொண்டிருந்தேன். அதற்குப் பின்னர் தான் ஒரு பெரும்பாலான மக்கள் சுதந்திரமாக இருப்பதை கண்டறிந்து, திரட்டிகளில் என்னை ஐக்கியமாக்கிகொண்டு பதிவு போட ஆரம்பித்தேன். ஒரு முறை என்னுடைய ரயில் பயணங்களில் (ஜட்டியுடன்) என்ற பதிவு யூத்புல் விகடனால் தெரிவு செய்யப்பட்டு அவர்களது வலையில் முதல் பக்கத்தில் இடம் பெற்றது. இந்த செய்தியை எனக்கு திரு. ஸ்ரீராம், எங்கள் ப்ளாக் தெரியப்படுத்தி மகிழ்ச்சியூட்டினார். 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஆரம்பத்தில் நம்ம வாத்தியார் சுஜாதா அவர்கள் சொன்னது போலவும், உண்மை கலந்த நாட்குறிப்புகள் புத்தகத்தில் திரு. அ.முத்துலிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போலவும், நம்மை கவர்ந்த, நாம் பங்குபெற்ற, பார்த்த, ரசித்த, கே(கெ)ட்ட விஷயங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பகிர்கிறோம். மொத்தமும் உண்மை சொல்லும் சொந்தக் கதைகள் அவ்வளவாக சுவாரஸ்யமாக இருப்பது இல்லை. ஆகையால் 100  % உண்மையும் அல்ல, பொய்யும் அல்ல.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
உலகத்திலேயே பெரிய சந்தோசம் என்னன்னா அடுத்தவங்களை சந்தோஷப்'படுத்தி' பார்க்கறது தான் அப்படின்னு முருங்கைக்காய் இயக்குனர் திரு. பாக்கியராஜ் சொல்வார். அதுபோல மத்தவங்க சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதப்படும் ப்ளாக் இது. இந்தக் கதைகளும், கட்டுரைகளும் அம்பலத்தில் ஏறுவதற்கு தகுதியா, அல்லது இதுதான் சம்பாதித்து கொடுக்குமா. இது கொஞ்சம் அதிகப்படியான கற்பனை. என்ன வில்லத்தனமா கேள்வி கேக்கறாங்கப்பா. :)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
லைஃப்ல எப்போதுமே ஒன்னுக்கு ரெண்டு இருந்தா சந்தோஷம்தான், அகமுடையாள் தவிர. (அப்பாடி, இனிமே பொண்டாட்டி படிச்சாலும் பரவாயில்லை!!) எப்போ பார்த்தாலும் கணினி முன் அமர்ந்து தட்டிக்கொண்டே இருக்கும் வேலை பார்ப்பதால், என்னுடைய கணினி அறிவுத்திறனை பெருக்குவதர்க்காகவும் அதை மற்றவர்களுக்கு காட்டுவதற்கும் இந்த வலைப்பதிவுடன் ஆங்கிலத்தில் ஒரு டெக்னிகல் ப்ளாக் எழுதுகிறேன். தமிழ் இலக்கிய பணிக்கிடையில் நேரம் கிடைக்கும் போது அதையும் முயற்சி செய்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
யார் மீதும் நமக்கு கோபம் பொறாமை பொச்சரிப்பு போன்றவை எப்போதுமே ஏற்ப்பட்டதில்லை. ஏனென்றால் "பல் உள்ளவன் புண்ணாக்கு தின்கிறான்" மற்றும் "கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளி முடிகிறாள்" போன்ற ஜென் தத்துவங்கள் அடங்கிய சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவன் நான்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
எங்கள் ப்ளாக், ஸ்ரீராம் என்று ஞாபகம். அவருக்கு என் நன்றி. இப்போதெல்லாம் அவர் பாராட்டுவது இல்லை. ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று நினைத்திருக்கலாம். பொதுவாகவே சில விஷயங்களில் நான் கொஞ்சம் psychic. ஏதோ எழுதறோமா, நாலு பேர் படிக்கறாங்களா அது போதும். அதுக்காகத்தான் மீட்டர் வச்சிருக்கேன். அது ஏற ஏற நம்மை கடியும் மொக்கையும் தன்னோட வளர்ச்சியை அதுவே பார்த்துக்கொள்கிறது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்... 
 எல்லோரும் கட்டாயம் இந்த புனித ஸ்தலத்திற்கு வாருங்கள். கொஞ்சம் புராணம், கொஞ்சம் புனைவு, ஒரே ஒரு கவிதை, சில கட்டுரைகள், சில சுவாரஸ்ய நெட் அலசல்கள், சில கெட்ட வார்த்தைகள், கொஞ்சம் ராஜா, கொஞ்சம் ரஹ்மான், நிறைய யூடுயூப் என்று போய்க்கொண்டிருக்கிறது. ஆகையால் பின்னூட்டமோ, இன்ட்லியில் ஓட்டோ போட்டால் சந்தோஷப்படுவேன். வேறொன்றும் இல்லை சொல்வதற்கு.  

இப்படி ஒரு மொக்கை போடுவதற்கு கூப்பிட்ட ஸ்ரீமாதவனுக்கு நன்றி. எனக்கு யாரை பந்திக்கு கூப்பிடுவது என்று தெரியவில்லை. என் வலையில் சிக்கும் அனைவரும் தொடர் போடலாம். அதற்க்கு முழு அங்கீகாரம் இருக்கிறது. நன்றி.

3 comments:

மதுரை சரவணன் said...

தகவலுக்கு நன்றீ.

Madhavan Srinivasagopalan said...

Nice one..

RVS said...

thanks madurai saravanan and Madhavan.

anbudan RVS

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails