Tuesday, August 17, 2010

தொகுப்பாளினிகளுக்கு எஸ்.பி.பியின் தமிழ்ப் பாடம்

கே. பாலச்சந்தரின் பொய் என்ற படம் பொய்த்துப்போனது வாஸ்த்தவம் தான். ஆனால் சில பல காட்சிகளில் கே.பி சார் தெள்ளென தெரிந்தார். சரி, இப்போது விஷயம் அந்த படத்தைப் பற்றி அல்ல. சகட்டுமேனிக்கு டி.வி பெருத்துப்போன இந்த டி.வி ஆதிக்கம் நிறைந்த கலியுகத்தில் எந்த சானல் திருப்பினாலும், ஜோடியாகவோ அல்லது தனியொரு ஆளாகவோ பேண்ட் சட்டை அல்லது பண்டிகை காலங்களில் பட்டு ஸாரி கட்டிக்கொண்டு பாட்டு தொகுத்து போடுபவர்கள் ஏராளம். "ஹளோ...", "சொள்ளுங்க..", "நள்ளா இருக்கீங்கலா....", "சாப்டீங்கலா..." என்று இவர்கள் வாயில் கிடந்து லோடு லாரியில் அடிபடுவது போல அடிபடும் தமிழின் பாடு இருக்கிறதே... அய்யய்யோ... சொல்லியும் கேட்டும் காதில் இரத்தம் வராத குறைதான். கூடவே ஒரு கெக்கே பிக்கே என்று ஒரு சிரிப்பு வேறு.  மிக நன்றாக உச்சரிப்பவர்கள் சொற்பமே. இவர்களுக்கு இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் நிஜமாகவே ஒரு 'ள'கரப் பயிற்சி வகுப்பு வித்யாசாகர் மற்றும் எஸ்.பி.பி துணை கொண்டு பொய் படத்தில் எடுத்திருக்கிறார். பாடும் நிலாவின் தமிழ் மொழி உச்சரிப்பு ஆளுமை இந்தப் பாடலில் நன்கு தெரிகிறது. பாடல் முழுவதும் எஸ்.பி.பி வாயில் 'ள' புகுந்து விளையாடுகிறது. 



ளகரம் மாதிரி ழகரம் கூட நம்மூர் ஆசாமிகளுக்கு சுலபத்தில் வருவதில்லை.  வாயில் நுழையாமல் படுத்துகிறது. யாராவது " 'ழ' ஃபவுண்டேஷன்" என்று ஆரம்பித்து எல்லோரையும் உட்காரவைத்து ழ சொல்லிக்கொடுத்தால் பரவாயில்லை. முந்தானை மூடிச்சு தீபா டீச்சராக வந்தால் எல்லோரும் உட்கார்ந்து ஜொள் ஒழுக "ழ" கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதுசரி இந்த மேற்கண்ட பாடலை இப்போதிருக்கும் இளவட்ட பாடகர்கள் யாராவது முயன்றால் முடியுமா?

pada udhavi: lib.uchicago.edu

2 comments:

ஸ்ரீ.... said...

மற்ற பாடகர்களுக்கும் பாலசுப்ரமணியம்தான் வகுப்பெடுக்க வேண்டும். நல்ல பாடல். நீங்கள் குறிப்பிட்டுள்ள விதம் நேர்த்தியானது.

ஸ்ரீ....

RVS said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்ரீ..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails