ஜமீந்தார் கதைகளில் வருவது போல கிராமத்தின் பெயர் நீலமங்கலம். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோடில் இடது திரும்பினால் மண்வாசனையோடு பல கிராமங்கள் கடக்கவேண்டும். இடுப்புக்கீழே ட்ரௌஸர் இறங்கிய சட்டை போடாத பையன், “ஹேய்..ஹேய்..” என்று பிரம்புக்கையோடு ஆடு மேய்க்கும் ஆயா, தூரத்தில் ட்ராக்டர் ஓட்டி வரும் முண்டாசு கட்டிய இளைஞன், பசுமையெங்கும் தெரிய நடுவில் சிம்மாசனத்தில் அமர்ந்த ராஜா போல அரசமரம் என்று வழிநெடுக இயற்கையின் அட்டகாசம்.
ஈசூர் வந்தவுடன் இடதுபுறத்தில் “PAULAR RIVER" என்கிற போடு வழிகாட்டும். அங்கே செல்லாமல் வலது திரும்பினால் உங்கள் கார் மட்டுமே பயணிக்கும் ஒரு தனிவழிச்சாலை. விவசாயம் நடக்கிறது. இரண்டு புறமும் நட்டிருக்கிறார்கள். பச்சைபசேல் என்று ரம்மியமாக இருக்கிறது. சட்டை துறந்து இடுப்பு வேஷ்டியுடன் வரப்பில் இறங்கி கால் நனைக்க மாட்டோமா என்று துடிக்கும் மனசு.
அதே சாலையில் மூன்று கி.மீ சென்றால் ஒரு குன்று தெரியும். அதுதான் குன்னத்தூர்மலை. கிராமத்தின் பெயர் நீலமங்கலம். கிளைவிரித்து நிற்கும் மரத்தடியில் உளித்தழும்புகளோடு பழமையான நந்தி பார்க்கும் வானம் பார்த்த லிங்கத்தின் தெருவோடு சென்றால் வருவது மஹாகாளேஸ்வரர் கோயில். புண்ணிய நதிகளிலிருந்தும் இன்ன பிற க்ஷேத்திர தீர்த்தங்களிலிருந்துமாக 234 இடங்களிலிருந்து ஜலம் ஏற்றி வந்து குளம் கட்டியிருக்கிறார்கள்.
அங்கிருந்து மலையில் மஹா நாராயணர் திருக்கோயில் தெரிகிறது. அங்கே காவிக் கொடி படபடத்துப் பறப்பது கண்ணில் படும்போது நம்முள்ளே ஒரு துள்ளல் ஏற்படுகிறது. கிராமத்தினுள் சென்று வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் மலையின் அடிவாரத்தை அடைகிறோம். படிக்கட்டின் ஓரத்தில் பனைமரம் சூழ ஒரு பச்சைக் குட்டை. “ஸ்ரீ ஸ்ரீநிவாசா... ஸ்ரீ ஸ்ரீநிவாசா...” என்று அசரீரிபோல மேலிருந்துப் பாடல் ஒலிக்க மலையேறுகிறோம்.
கொஞ்ச தூரம் படிக்கட்டுகளும்... கொஞ்ச தூரம் ராம்ப் போலவும்...சௌகரியமாக ஏறமுடிகிறது. கோவிந்தா.... நாராயணா என்று மாலை வெய்யிலில் ஏறும் பொழுது மனசுள் பக்தி நிறைந்து வாழ்க்கையில் ஏற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மலர்கிறது. மேலே சன்னிதி அடைவதற்குள் மூன்று திருப்பங்கள் வருகிறது. வயதானவர்கள் அமரத் தோதாக சிறு சிமெண்ட் கட்டையை ஒவ்வொரு திருப்பத்திலும் வடிவமைத்திருக்கிறார்கள். வலுவுள்ள திடகாத்திரமான இளைஞர்கள் பத்து நிமிடத்தில் உச்சிக்குச் சென்று மஹா நாராயணர் தரிசனம் செய்துவிடுவார்கள்.
”ஆதி நாராயணர்தான் ரொம்ப வருசமா இந்த மலைக்கோயில்ல இருந்த தெய்வம். சில வருசங்களுக்கு முன்னாடி யாரோ சில விசமிங்க சிலையை ஒடச்சி தூர வீசிட்டாங்க... அவரைத்தான் நீங்க அங்கே பார்த்தீங்க...” என்று ”நீரோட்டம்” மணி சொன்னார். தும்பைப் பூ போல வெள்ளையாடையில் இருந்தார்.
மஹா நாராயணர் சன்னிதி தாண்டி பாறைகளுக்கு நடுவில் சற்றே சிதிலமடைந்த நிலையில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார் ஆதி நாராயணர். கற்களுக்கு மத்தியில் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் கொடுத்தார். கதிரவனின் கிரணங்கள் அவரது சிரசுக்கு மேலே ஒளிமழை பொழியத் தட்டுத் தடுமாறி அந்த பாறைகளுக்குள் இறங்கி நின்று சேவித்தோம். அற்புதமான மூர்த்தம். முகலாயர்கள் காலத்தின் போது அழிக்கப்பட்டவைகள் போதாதென்று சமீப காலத்தில் கூட இதுபோன்ற அக்கிரமங்கள் நடப்பது ஜீரணிக்கமுடியாமல் இருக்கிறது. இருந்தும் அனைவரையும் ரக்ஷிக்கும் தெய்வம் அவனொருவன் தான்.
சுற்றிலும் இயற்கை எழிலை ரசித்துக்கொண்டிருக்கும் போது அமைதியாயிருந்த நீரோட்ட மணியிடம்....
“நீங்க இந்த கிராமத்து ஆளுங்களா? எவ்ளோ வருஷமா இருக்கீங்க? ”
“ஆமாங்க... இது நம்ம சொந்த ஊருங்க... சுத்துப்பட்டு கிராமங்களுக்கு போர் போடுறத்துக்காக நீரோட்டம் பார்த்து சொல்லுவேன் .. போன வாரம் கூட ஒரு இடம் பார்த்து சொன்னேன்... இந்தக் கோவிலுக்குக் கூட கிணறு.. போருக்கெல்லாம் நாந்தான் இடம் குறிச்சுச் சொன்னேன்.. குருஜி நீரோட்ட மணின்னுதான் கூப்பிடுவாரு..” என்று கண்கள் விரியச் சிரித்தார். நெற்றியில் சந்தனம் துலங்கியது.
ஆதி நாராயணரைத் தரிசித்த பின்னர் ஒரு சின்ன இறக்கத்தில் பட்டாபிஷேக இராமர் சன்னிதி. தொடுவானத்தில் அக்கினிப் பிழம்பாக சூரியன் இறங்கிக்கொண்டிருக்கிறான். இங்கே இராமருக்கு அபிஷேகம் நடந்தது. மூர்த்தி சிறுசு. ஆனால் கீர்த்தி பெருசு. லக்ஷணமாக வடிக்கப்பட்ட பட்டாபிஷேகக் காட்சி கண்ணை விட்டு அகலாது. கூட்டமாய் மலையைச் சுற்றிச் சென்ற பறவைகளுக்கும் இறை தரிசனம் கிடைத்தது. கற்பூரார்த்தி காட்ட முடியாமல் காற்று பலமாக வீசியது. தாம்பாளத்தால் மறைத்துக்கொண்டு காட்டினார். நிறைவான தரிசனம்.
“அதோ கிளக்கால தெரியுது பாருங்க.. அதுதான் திருக்களுக்குன்றம் மலை. கார்த்திகையன்னிக்கி ஜொலிக்கும். அப்புறம் வரிசையா வெளக்கு தெரியற இடம் கல்பாக்கம் பக்கத்துல...” என்றார்.
“பரமேஸ்வரமங்கலம்.. நத்தம்.. அணைக்கட்டு.. அந்த ஏரியா வருங்களா?”
“ஆமா சார்.. எப்படி கரெக்டா சொல்றீங்க?”
“நாங்க போயிருக்கோம் மணி சார். பரமேஸ்வரமங்கலத்துல பாலாத்துக்கு நடுவுல சிவன் கோயிலு...”
”ஆமா சார்... நிறைய கோயிலு போயிருக்கீங்க போல்ருக்கு...”
இப்போது மஹா நாராயணர் சன்னிதி. முன்னிரவு நேரம் ஆரம்பமாகியிருந்தது. மலையைச் சுற்றி கும்மிருட்டு. சன்னிதியில் மட்டும் ட்யூப் வெளிச்சம். எங்களுக்காகவே இம்மலையில் எம்பெருமான் எழுந்தருளீயது போல நாங்கள் மட்டுமே இருந்தோம். பிரத்தியேகமான மலை. விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலிக்க அபிஷேகம். பால், தயிர், ஸ்நானப் பொடி, இளநீர், பழரசம் என்று விதம்விதமாக குளிர்வித்தோம். அர்ச்சனை ஆரத்தி நடைபெற்றது. அலங்காரப்பிரியனுக்கு மேனியெங்கும் திருக்காப்பு சார்த்தி கற்பூரஜோதியில் தகதகத்தார்.
வழிபாடு முடிந்து இறங்கும் போது கிழக்கில் பூர்ண சந்திரன் மஹா நாராயணர் தரிசனத்திற்கு வந்திருந்தான். இருட்டில் இறங்குவதற்கு அவனே டார்ச்சாய் ஒளி பாய்ச்சினான். நீரோட்ட மணி “கோவிந்தா..கோபாலா.. கிருஷ்ணா..” என்று நாமாவளி சொல்ல நாங்களும் பின் பாடினோம். மின்சாரமில்லாத காலங்களில் தீவட்டி ஏந்தி காடுமலைப் பாதைகளில் சுற்றிவருவது போல செல்ஃபோன் தீவட்டி அடிக்க கீழே வந்திறங்கினோம்.
கார் பக்கத்தில் குட்டை தூங்கிக்கொண்டிருந்தது. பூர்ண சந்திரனின் ஒளி மழையில் ஊரே நிழலாய்த் தெரிந்தது. சேப்பாயியை உசுப்பி மீண்டும் மஹாகாலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அர்த்தஜாம தீபாராதனை தரிசித்துக்கொண்டு இல்லம் திரும்பினோம்.
ஜியெஸ்டி ரோடு ஏறுவதற்குள் வந்த ரயில்வே கிராஸிங்கில் நின்றுகொண்டிருந்தபோது ரோடோர மரங்களுக்கிடையில் தெரியும் நிலவொளியின் துணையில்.... தூரத்தில் நீலமங்கலம் மலை தெரிந்தது. மஹா நாராயணரை தனியே விட்டு அனைவரும் இறங்கியிருப்பார்கள். அவரும் சன்னிதி விட்டு சுதந்திரமாக வெளியே வந்து நம்மையும் இவ்வுலகத்தையும் காத்து ரக்ஷிக்க கீழே பார்த்துக்கொண்டிருக்கலாம். எதிரே தெரியும் திருக்கழுக்குன்ற சுடலைப்பொடி பூசியவனுடன் குசலம் விசாரித்து சம்பாஷித்துக்கொண்டிருக்கலாம்.
இரவு நேரங்களில்... ஆளில்லா கிராமத்து சாலை பயணம் மனதைக் கிறங்கடிக்கும். ஸ்வாமி தரிசனம் ஆன பின்பு கார் வெளிச்சத்துக்கு இருபுறமும் வந்து போகும் கட்டிடங்களும் சிறுதெய்வக் கோயில்களும் என்னன்வோ கதை சொல்லும். ஜியெஸ்டி ஏறி சிங்கபெருமாள் கோயில் நெருங்கியதிலிருந்து வாகன நெருக்கடி கழுத்தை நெறித்தது. மறைமலைநகர் தாண்டியவுடன் வந்த அடையார் ஆனந்தபவனில் இரவு சிற்றுண்டி அருந்தினோம். பெரியவா மகிமை பேசும் பி. ஸ்வாமிநாதனைச் சந்தித்துக் கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக்கொண்டோம்.
பதினொன்னரைக்கு படுக்கையில் சரிந்த போது மஹா நாராயணர் கதாயுதபாணியாகக் கண்ணுக்குள் வந்தார். ஊரோடு நான் தூங்கினாலும் மனசு மட்டும் மலையில் இருந்தது. இன்னொருமுறை போக வேணும்!