Tuesday, June 6, 2017

துணி காயப் போடுவது எப்படி? - அட்வான்ஸ்டு லேர்னர் சீரிஸ்

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ”கொத்தவரங்காய் நறுக்குவது எப்படி?” என்று ஒரு வாழ்க்கைப் பாடப் பதிவிட்டிருந்தேன். அசட்டுத்தனமாகக் கிரஸ்தாஸ்ரமத்தில் மாட்டிக்கொண்ட பிரஹஸ்பதிகளுக்கான காவிய போஸ்ட் அது. ”கூடமாட ஒத்தாசையா இருப்பன்..” என்று அம்மாக்களின் வார்த்தைக்கேற்ப கீரை ஆய்தலோ... காய் நறுக்குதலோ.. உருளைக் கிழங்கு தோலுரிப்பதோ... சுண்டைக்காய் நசுக்குவதோ.. இப்படி ஏதாவது ஒரு கடினமான காரியத்தைப் புருஷார்த்தமாக செய்து தலைவியிடம் பாராட்டுப்பெற்று காலர் தூக்கலாம். காய் நறுக்குவதோ... பால் காய்ச்சுவதோ...இன்ன பிற மேலே குறிப்பிடப்பட்டவை கேவலம் பால பாடங்கள். தேர்ச்சி சுலபம். அர்ச்சனை குறைச்சல்.

அட்வான்ஸுடு லேர்னர்ஸ் சீரிஸில் அடுத்ததாக இன்றைய வகுப்பில் நாம் பார்க்க இருப்பது “துணி காயப்போடுதல்...”. மிகவும் சாதாரணமாகத் தோன்றும் இப்பாடம் அனுபவம் வாய்ந்தவர்களால் கூட சொதப்பக்கூடியது. கொடிக்கம்பு பிடித்து மடியாக உள்கொடியில் உணர்த்தும் லெவலுக்கு உயர்ந்து விடுதல் சூப்பர் சீனியர் பிரிவு. அதுபற்றி இப்போது தாவங்கட்டையில் முட்டுக் கொடுக்கும் கவலையில்லாமல் மேலே படிக்கவும்.
தோய்க்கும் இயந்திரம் வந்த பிறகு ஒரு நாளைக்கு இரண்டு ஈடாவது துணிகள் போட்டு எடுக்க வேண்டிய நிர்பந்தமாகிவிட்டது. வீட்டில் நமது வாயை அடைத்துவிட்டார்கள் என்பதை அடையாளமாக உணர்த்தும் விதமாக வாஷிங் மெஷினின் வாயை பந்து போல் துணியை அடைத்து மெஷினை ஸ்விட்ச் ஆன் செய்யும் போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டு “இப்டி போட்டா துணில அழுக்கு போகுமா... முக்கால் போட்டுட்டு.. பாக்கிய எடுத்து ரெண்டாம் தடவை போடணும்..” என்று அனுபூதி கிடைக்கப்பெற்றதிலிருந்து வா.மெஷின் போட கற்றுக்கொண்டேன். அப்படி சொல்வதை விட... வா.மெஷினில் துணி போடக் கற்றுக்கொண்டேன்.
“ஒணத்திடுங்கோ...” என்று ஒரு நாள் தாக்கீது வந்த பின்னர், பிளாஸ்டிக் பக்கெட் கொள்ளாமல் அந்த துணிகளை எடுத்துக்கொண்டு மொ.மாடிக்கு செல்லும் போது நடந்த ட்ரெயினிங் செஷன் பாதிக்கப்பட்டோரின் பயன்பாடுக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
படிக்கட்டில் காலடி எடுத்து வைக்கும் போது
“எல்லாத் துணியையும் நன்னா உதறிட்டுப் போடுங்கோ...”
“ம்...”
மூணாம் படி.
“ஷர்ட்டெல்லாம் உல்டா பண்ணிப் போடுங்கோ... இல்லேன்னா கலர் ஃபேடாயிடும்...”
”ம்...”
ஈரத்துணியோடு இருக்கும் பக்கெட்டின் எடை ஒரு பக்கம் அழுத்த இடை கெஞ்ச ஏறும் போது வரும் அடுத்த அறிவுரை...
“எட்டு மொழத்தை நாலாப் போடாம... ரெண்டாப் போடணும்... அப்போதான் சீக்கிரம் காயும்...”
“சரி..”
ஏழாம் படி.
“கர்சீஃப்... ஜட்டியெல்லாம்... பறந்துடப்போறது.. க்ளிப்பைக் கண்டிப்பா போடுங்கோ....”
“ம்.. போட்டுடறேன்...”
“ரெண்டு துணியை பக்கத்துல போட்டு.. அதோட ஓரத்துக்கு க்ளிப் போடக்கூடாது. அதுல மிச்சம் பண்ணி என்ன பண்ணப் போறேள்?”
“சரியாப் போடறேம்மா...” அந்தப் போடறேம்மாவில் சலிப்போடு அழுத்தம் தெரியாமல்... வி.எஸ்.ராகவன் போல குழைவாக “போடறேம்மா..” என்று சொன்னால் உங்களுக்கு நன்நடத்தை சான்றிதழ் வழங்கப்படும்.
பத்தாம் படி.
“என்ன எல்லாத்துக்கும் ம்... சரின்னு... “
இதென்னடா வம்பாப் போச்சுது... வேற எதுனா கேட்போம்...
“மரக் கிளிப்பா... ப்ளாஸ்டிக் கிளிப்பா... எதுப்பா போடணும்?” இந்தக் கேள்வி கேட்கும் போது ஒரு வெகுளித்தனம் ஒட்டியிருக்கவேண்டும். கிண்டல் தொணியில் கேட்டால் உங்களுக்கு விடிமோட்சமே கிடையாது.
“இதென்ன அச்சுப்பிச்சு கேள்வி? கிளிப்பு எதா இருந்தா என்ன? பறக்கக்கூடாது அவ்ளோதானே...” படாரென்று பதில் கிட்டும். இப்போது முகத்தோடு முகம் பார்த்துச் சிரித்துக்கொள்ளவும்.
மொ.மாடிக் கதவு திறக்கிறேன். க்ரீச்...க்ரீச்..க்ரீச்...
“பேண்டெல்லாம் நல்லா விரிச்சு போடணும்.. அதுவும் உல்ட்டா பண்ணிடணும்....”
”சரிம்மா...” முகம் தெரியாமல் குரலை மட்டும் விட்டாயிற்று.
பக்கெட்டிலிருந்து துணிகளை எடுக்கும் போது அது ஒன்றின் கீழ் ஒன்றாக சிக்கிக்கொண்டு வெளியே வர அடம்பிடிக்கிறது. தலைக்கு மேலே வெயில் சுட்டெரிப்பதால் கடுப்பாகி....சரி.. மெண்டலாகி... கைக்கு வந்தபடி உருவி.... அப்படியும் இப்படியுமாக கொடியில் போட்டு... அப்பாடா என்று க்ளிப் போட எத்தனிக்கும் போது... பரீட்சை ஹாலுக்குள் பிரவேசிக்கும் பறக்கும் படை போல.. இல்லத்தரசி எண்ட்ரீ கொடுத்த இன்ஸ்பெக்ஷனில் மாட்டிக்கொண்டு பேய் முழி முழித்தது ஒரு சரித்திரம்.
மேலே காட்டப்பட்ட சம்பாஷணை வாயிலாக ஆணாக அவதரித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். இதைப் படித்த பின்னரும் “ச்சும்மா.. காயப்போடணும்.. அவ்ளோதானே.. இதுக்கென்ன இவ்ளோ அலப்பறை...” என்றெல்லாம் ஜம்பமாகப் பேசித் திரிவது துர்லபம். பிரம்மச்சாரியாக இருப்பவர்கள் இப்போதே ப்ராக்டீஸ் எடுத்துக்கொண்டால் கல்யாணத்திற்குப் பிறகு “எல்லா நாளும் இனிய நாளே...”.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails