Thursday, September 29, 2011

எங்க வீட்டுக் கொலுஇந்த கொலுப் படிக்கு நிச்சயம் ஒரு எழுபது வயது இருக்கும். ஒன்பது படி. மேலேர்ந்து முதல் படியில் வலது ஓரத்தில் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் லக்ஷ்மிக்கு ஒரு அறுபது வயது இருக்கும். என்னுடைய அம்மாவின் சிறுவயதில் வாங்கிய லக்ஷ்மியாம். ஐந்தாவது படியில் இடது கோடியில் ஸ்டைலாக நிற்கும் நளனுக்கும் நிச்சயம் ஐம்பது வயது தாண்டியிருக்கும். அப்புறம் செட்டியார், தசாவதாரம், மரப்பாச்சி போன்றவர்களும் இந்தக் கொலுவில் வயதானவர்கள் தான். ஆனால் பொலிவுடன் இருக்கிறார்கள். சரியா?மேற்கண்ட படத்திலிருப்பவை புதிது. புதிதென்றால் ஒரு ஐந்து வருடத்திற்குள் வாங்கியது. மன்னார்குடி ராஜகோபாலன் கருட சேர்வை. பக்கத்தில் ரிஷபாரூடராக சிவபெருமான் அருள்பாலிக்கும் ப்ரதோஷ அபிஷேகக் காட்சி. வலதுபுறத்தில் ராதேகிருஷ்ணர் காதல் ஊஞ்சல் ஆடுகிறார். அவருக்கு முன்னால் ஒரு கல்யாணம் நடக்கிறது. வீதியின் முனையில் தள்ளுவண்டியில் காய்கறி வருகிறது. இக்காலத்தில் காண முடியாத காட்சி.

இந்த கொலுவிற்கான முன்னேற்பாடுகளை இங்கே அழுத்திக் காண்க.

முகப்புத்தகத்தில் பகிர்ந்ததை இங்கே எனது ப்ளாக் தோழர்களுக்காக.......

இப்படங்களை உபயோகிப்பவர்கள் இந்த பதிவிற்கு ஒரு சுட்டி கொடுத்தால் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷம் பெறுவார்கள்!! :-)

எல்லோருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!!

-

Tuesday, September 27, 2011

மாடவீதி பொம்மைகள்

திருமகள் கால் பிடித்துவிட ஜுவல்லரி வாசலில் ஹாயாக சயனகோலத்தில் இருந்தார் விஷ்ணு. ஜுவல்லரி ஷட்டர் தலையை முட்ட ஆதிக்கு கொஞ்சம் டென்ஷன். நாராயணனின் நாபியிலிருந்து ஒரு கம்பி கிளம்பியிருந்தது. ஆனால் அதில் லோட்டஸ் அண்ட் ப்ரம்மா மிஸ்ஸிங். மாட்டுத்தொழுவத்தில் பிறந்த யேசுபிரான் மாதிரி வைக்கோல் சுற்றி கீழே கிடந்தார் வெண்ணை கிருஷ்ணர். காமதேனுக்களும், கோபிகா ஸ்த்ரீகளும், முனி புங்கவர்களும் தங்கள் செட்களை விட்டு தனித்தனியே இரைந்து குவிந்திருந்தார்கள். ஆதி சங்கரர் செட்டில் சிஷ்யர்கள் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தனர். மடியில் லெக்ஷ்மியை அமர வைத்துக்கொண்ட நரசிம்மர் செட்டியாரைப் பார்த்து கர்ஜித்துக்கொண்டிருந்தார். மீராவின் தம்புராவை எடுத்து கைக்கு சொருகிக்கொண்டிருந்தார் ஒரு நவராத்திரி பக்தர்.

இவையெல்லாம் நேற்று முன் தினம் மாடவீதியில் கண்ட நவராத்திரி கொலு பொம்மைக் கடை காட்சிகள். கபாலீஸ்வரர் கோவில் முன்னால் வண்டி நிறுத்துவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. சென்னைக்கு இருசக்கரம் தான் தலை சிறந்த வாகனம்.அதுவும் கஜமுகனின் வாகனம் போன்று இருத்தல் நலம். பாதி இடங்களில் இரண்டு சைக்கிளை தலையோடு தலை சேர்த்து வைக்கும் அகலம் தான் தெரு. அதிலும் நாலு வீடுகளில் பக்க நிறுத்தானை போட்டு நடு வீதிவரை வாகனம் நிறுத்தி துணி காயப் போட்டுவிடுகிறார்கள். மீதி வீடுகளில் மக்கள் வாசலில் நின்று வம்பளக்கிறார்கள்.

“அப்டியே முன்னாடி வா”

“கொஞ்சம் லெப்ட்ல போ”

“ரைட்டு ஒடி”

”ஏ..ஏ.. பேக்கில பாரு”

“அங்க நிக்காத”

“அப்டியே ஷ்ட்ரெயிட்டா ரிவர்ஸ் வா”

“ம்..ம்.. போதும்...போதும்... நிப்பாட்டு”

என்ற அபரிமிதமான மரியாதை பொங்கி வழியும் ஏக வசனங்களில் உதவி பெற்று வண்டியை ராசி சில்க்ஸ் அருகில் விட்டு வருவதற்குள் கை தனியாக கழண்டு விட்டது. டோக்கன் கொடுக்காமல் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு அடுத்தாளை திட்டுவதற்கு கிளம்பிவிட்டார் அந்த இள வயது டோக்கனர்.

போன வருடம் கொலு வைக்க முடியாதலால் (ஒரு அபர காரியம்) இந்த வருடம் நவராத்திரி பட்ஜெட் டபுள். வீட்டிற்கு நவராத்திரி விஜயம் செய்வோருக்கு மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சரோஜாதேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா, முழுத் தேங்காயைப் போட்ட உடன் பொத்துக்கொள்ளும் ப்ளாஸ்டிக் கூடை, பத்து ரூபாய் வெங்கடாஜலபதி தங்கச் சிலை, தட்டு மாதிரியும் இல்லாமல் பேசின் மாதிரியும் இல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் பாத்திரம் (லேடீஸுக்கே அது என்னவென்று விளங்காது), ராகவேந்திரர் லாமினேட்டட் படம் (அசப்பில் ரஜினி மாதிரி இருக்கும் ப்ரிண்ட்), ஆஜானுபாகுவான ஆகிருதியான மாமிகளுக்கு சுண்டி விரல் கூட நுழைக்க முடியாத சில்வர் ப்ளேட்டட் குங்குமச் சிமிழ் என்று சகலமும் கொடுத்தாயிற்று.

“..ண்ணா.. காசு கூடப் போனாலும் பரவாயில்ல, இந்த தடவை டிஃப்ரெண்ட்டா எதாவது வாங்கறோம்” என்று என்னையும் செலக்‌ஷன் கமிட்டியில் சேர்த்துக்கொண்ட என் மனைவியின் மதியூகத்தை என்னவென்று சொல்வது. வார்த்தைகளில் அடங்கா! வார்த்தைகளுக்கும் அடங்கா!!

திரும்பவும் சிமிழ், தட்டு, அடுக்கு விளக்கு, அண்டா விளக்கு, சின்ன குத்துவிளக்கு மொதற்கொண்டு பார்த்தாயிற்று. அம்மணி பார்த்தவைகளை வாங்குவதென்றால் சம்பளக் கவரை திருவாளர் கடைக்காரரிடம் கொடுத்து சேவித்துவிட்டு பொருட்களை வாங்கி வரவேண்டும். இப்போது நிச்சயம் களத்தில் இறங்குவதற்கான தருணம் வந்துவிட்டது. தர்ம நியாயங்கள் தோற்றுப் போகும் போது எம்பெருமானின் அவதாரம் போல உள்ளே இறங்கினேன். கையைக் கடிக்காமல் பட்ஜெட்டிற்குள் எது அடங்கும் என்று மூளையைக் கசக்கி கடையை இரண்டு ரவுண்டு வந்தேன். மருத்துக்குக் கூட ப்ளாஸ்டிக் ஜாமான் இல்லாத பரிசுத்தமான சுற்றுச்சூழலுக்கு ஆத்ம நட்புக் கடை. ஷேமமாக இருக்கவேண்டும்.

ஒரு ஐட்டம் எடுத்து ”இதுல ஐம்பது வேணும்” என்றால் “மொத்தமே இங்க இருக்கிறது தான் சார்!” என்று நெட்டித் திரும்பி அடுத்த கஸ்டமரை பார்க்க சென்று விட்டது அந்த நீலச் சட்டை பொடிசு. கடை முழுக்க காஸ்ட்லி ஐட்டங்களை நிரப்பி பொதுச் சேவை புரிந்துகொண்டிருந்தார் அந்தப் புண்ணியவான். இங்க்லீஷ் பாட்டு பாடி “போயிட்டு வரேன் தம்பி” என்று விளக்குமாறும் கையுமாக வீடு கூட்டும் பெண்மணி நடிக்கும் விளம்பரத்தில் வரும் ஆங்கிலம் போதிக்கும் நிறுவனரும் அங்கே வந்திருந்தார். அவரும் நாலைந்து எடுத்துப் பார்த்து கையைக் கடிக்க போட்டுவிட்டு போய்விட்டார்.

மாட்டிக்கொண்ட நான் நூறு ரூபாய்க்கு கொஞ்சம் கம்மியாக ஒரு வெண்கல விளக்கை எடுத்து பார்த்தேன். கொஞ்சம் தேய்த்ததில் அந்தப் பெண் வந்து ”என்னா சார் தேச்சுப் பார்க்கிறீங்க?” என்றது. “இந்த அற்புதவிளக்கின் உள்ளேயிருந்து பூதம் வந்தால் கொஞ்சம் பணம் கேக்கலாம்னு இருக்கேன்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். ”இந்த விளக்கு பேர் என்ன?” என்ற கேள்விக்கு ”குபேர விளக்கு” என்று வந்த பதிலால் திருப்தியடைந்து “ஒரு ஐம்பது கொடுங்க” என்று வாங்கிக்கொண்டால் “..ண்ணா இது கூட நல்லாயிருக்கில்ல” என்ற குரல் வந்த திக்கில் வேறு டிசையனில் ஒரு விளக்கை கையில் பிடித்து கை விளக்கேந்திய காரிகையாக நின்றுகொண்டிருந்தாள் என் மனைவி.

அந்த விளக்கு அப்புறம் ஒரு சின்னத் தட்டு என்று கொலுவுக்கு “வச்சுக் கொடுக்கும்” சாமான்கள் பையை நிரப்ப அந்த தெய்வீகக் கடையை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தும் “இந்த வருஷமும் புது பொம்மை எதாவது வாங்கனும்” என்று கையில் பிரம்பு இல்லாமல் கண்டீஷனாக சொல்லிவிட்டார்கள்.


மாடவீதி ஜேஜேயென்று இருந்தது. எல்லாக்கடை வாசலிலும் தேவாதி தேவர்கள் முகாமிட்டிருந்தார்கள். வாண்டுகள் பொம்மை பார்க்க பெருமளவில் குவிந்திருந்தார்கள். காதுக்கும் மூக்குக்கும் வைர வைடூரியம் அணிந்திருந்த செல்வச் சீமாட்டிகள் செண்ட் வாசனையுடன் “அத்த எடுப்பா! இத்த எடுப்பா.. அந்த ஓரம் லெஃப்ட்ல.... ஹா..ஹாங்.. ஜஸ்ட் அபோவ் தட்” என்று என்னை போன்ற ரெண்டாம் கிளாஸிடம் இங்க்லீஷில் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஸ்வாமி பெயர் சொல்லிக் கேட்டால் சட்டென்று எடுத்து தந்துவிடப்போகிறார்கள். சிலரது டாட்டா சுமோவும், ஸ்கார்ப்பியோவும் அந்த இரண்டு முழம் ரோட்டில் அவர்களுக்காக அந்தக் கடையெதிரில் காத்திருந்ததுதான் உட்சபட்ச அயோக்கியத்தனம்.

மாடவீதி சரவணபவன் மாஸ்டருக்கு அன்றைக்கு நிச்சயம் தோசை வார்த்துப்போட்டு கைக்கு மாக்கட்டு போடவேண்டியிருக்கும். கடை உள்ளே சாப்பாட்டுப் போர் மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடை வாசலில் குருக்ஷேத்திரத்தில் படைத் தேர்கள் போல வாகனங்கள் கொடிபிடித்து நின்றுகொண்டிருந்தது. வாசலில் நின்றிருந்த அந்த நேபாள ரெஃப்ரி டிராஃபிக் ஜாமை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பம்பரில் அடிபடாமல் இன்னொறு வண்டியின் டிக்கியில் நசுங்கி மக்கள் கொலு பொம்மை பார்த்தார்கள். வாங்கவில்லை. வாங்கியவர்கள் எண்ணிக்கை ரொம்பக் குறைச்சல். காதெங்கும் துளை போட்ட பெரிய அம்மா ஒருத்தர் “கடசீ நாளைக்கு வந்தா பேர் பாதி விலைக்கு வாங்கலாம்” என்று வாடிக்கையாளர் தந்திரம் சொல்லிக்கொண்டே போனார். பக்கத்தில் அதை செவிமடுத்தது அவருடைய மாட்டுபொண்ணாக இருக்கவேண்டும். பொதுவெளியிலாவது தலையாட்டி வைப்போமே என்று பூம்பூம் ஆட்டிக்கொண்டே பின்னால் சென்றது.

இந்த முறை பரவலாக ஆலிங்கனங்கள் கண்ணில் பட்டது. வருடாவருடம் இந்தியன் வங்கி ஏடிஎம் உள்ளே செல்லமுடியாதபடி கடை விரிக்கும் வாடிக்கை பொம்மைக்காரர் “போன தடவை ஆலிங்கனம் இருக்கா இருக்கான்னு கேட்டாங்க. ஆஞ்சநேயர்-பிள்ளையார் மட்டும்தான் போயிருக்கு. ராமரு-குகன், சுதாமா-கிருஸ்ணரு அல்லாம் அப்டியே இருக்கு” என்று குறைப்பட்டுக்கொண்டார். அன்னபூரணியை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கேட்டால் யானை விலை குதிரை விலை சொன்னார். கொஞ்சம் மார்டனாக சொல்லவேண்டும் என்றால் ஐ-7 ப்ராஸஸர் விலை சொன்னார். வேண்டாம் என்று நகர்ந்தால் குரலை உயர்த்தி கட்டி இழுத்தார். “நீங்க கேளுங்க” என்றார். பாதிக்கு பாதி கேட்டால் பேரம் படியுமா? என்ற ஆசையில் கேட்டதற்கு “சார்! அநியாயமா கேட்காதீங்க.. நாங்களும் லாபத்துக்காகத் தானே உட்கார்திருக்கோம்” என்றவருக்கு அதே பதிலை ஒரு வார்த்தையை மட்டும் மாற்றிச் சொன்னேன் ”உட்கார்ந்திருக்கோம்”க்கு பதிலாக “நின்னுக்கிட்ருக்கோம்”னு.

பத்து பதினைந்து கடைகளில் ஸ்கான் செய்து பாண்டுரங்கர், ரஹ்மாயி மற்றும் அன்னபூரணி மூவரையும் வீட்டிற்கு அழைத்துவந்தாயிற்று. போன வருடம் ஸ்கிப் ஆனதை இந்த வருடம் ஈடு கட்ட வேண்டும் என்று சூப்பர் ஸ்டார்-ஷங்கர் காம்பினேஷன் பட பட்ஜெட் போல வீட்டு சுப்ரீம் சக்தி கொலு மெகா பட்ஜெட் போட்டுவிட்டார்கள்.

ஆங். ஒரு விஷயம். நிறைய தேடிப்பார்த்துட்டேன். இந்த வருஷம் கொலு ஸ்பெஷல் என்று நிச்சயம் இந்த மகானின் பொம்மை புதிய வரவாக இருக்கும் என்று நினைத்தேன். உஹும். இல்லை. பெருச்சாளிகளுக்கு எதிராக போராடும் அந்த நிகழ்கால மகான் யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்ப்போம்.

இப்பதிவிற்காகப் படமெடுத்தது பாம்பல்ல ஆர்.வி.எஸ் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமோ?

-

Friday, September 23, 2011

இளமுருகு::தமிளு::இராமசாமிஇளமுருகு
----------------
என்னையும் அந்த முனை உடஞ்ச சிமெண்ட் பென்ச் மேல படுத்திருக்கிற விகாரமான சொரி நாயையும் தவிர்த்து இந்த பஸ் ஸ்டாப்ல வேற யாருமே இல்லை. நா மட்டும் தனியா ஊருக்கு போற ரூட் பஸ்ஸுக்கு காத்துக்கிட்ருக்கேன். ஈசான மூலையில வானம் கண் மையாக் கருத்திருக்கு. அதோ அந்தக் கண்ணுக்கெட்ற தூரத்தில அந்த ரெட்டை மொட்டை மாட்டு வண்டி திரும்பற தார்ரோட்டு வளைவுக்கு அப்பால பளிச் பளிச்சுன்னு மேகத்த குத்திக் கிழிச்சுக்கிட்டு மின்னல் வெட்டுது. டமார் டமார்னு காது கிழிய அதிர்வேட்டா பொளக்குது வானம். சாரக் காத்து ஆளத் தூக்குற மாதிரி பலமா வீசுது. கிழக்கால பொத்துக்கிட்டு ஊத்துது. ஒரே சிலுசிலுன்னு இருக்கு. ரொம்ப நேரமாயிட்டுதோன்னு பார்த்தா மணி நாலு தான் ஆவுது.

சாயந்திரம் நாலு மணிக்கே கும்மிருட்டா இருட்டிக்கிட்டு வந்துடிச்சு. தார்ரோட்டைச் சுத்திலும் பச்சைப் பசேல்னு வயக்காடு. மூணு போகம் வெளையுற பூமி. குருவை நட்ருக்காங்க. ஆத்தில புதுத் தண்ணி. வரப்பு ஓர வாய்க்கால்ல தண்ணி சலசலன்னு கோரைப்புல்லை ஆட்டிவுட்டுக்கிட்டே வெள்ளமாப் பாயுது. பக்கத்துல யாருமே இல்லையா அதனால எங்கயோ காக்காங்க கூட்டமா கத்தற சத்தம் நல்லாக் கேக்குது. கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை “ஹோ...”ன்னு அலறி வீசுற ஒவ்வொரு பேய்க் காத்துக்கும் இந்த “இரத்தினத்தம்மாள் நினைவு பேருந்து நிறுத்தம்” மேல உரசிச் சாஞ்சுகிட்டிருக்கிற அந்தப் பெரிய பூவரசு மரம் தலையை சிலுப்பிக்கிட்டு ஆட்டமாய் ஆடுது. எப்படியும் இந்தத்தடவ அவளப் பார்த்திடலாம்னு நினைச்சு தான் இங்க வந்தேன். இன்னிக்கும் முடியல. ஒவ்வொரு தடவயும் லீவுக்கு ஊருக்கு வர்ற போது பாக்கனும்னு ட்ரை பண்றேன். முடியமாட்டேங்குது.

மேல் சட்டை பட்டன் கழண்டு என்னோட பாவப்பட்ட நெஞ்சு போல படபடன்னு காத்துல அடிச்சுக்குது. பக்கத்து கிராமத்துக்கு “பாபி ஐஸ்” பொட்டிக் கட்டி குச்சி ஐஸ் விக்கப் போனவன் சைக்கிளை காத்து அலேக்கா தூக்க மிதிக்க முடியாம தூரத்தில ஆடி அசஞ்சு வரான். ஊர்ல சுந்தரத்தம்மா வூட்ல சண்ட வந்தப்போ அவுங்க தம்பி சம்சாரம் “நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்கடா.. நாசமத்துப் போயிடுவீங்க”னு மண்ண வாரி தூத்துனது போல ரோட்லேர்ந்து புழுதியும் குப்பையையும் காத்து வாரி சுத்தி சுத்தி அடிக்குது. பேலன்ஸ் இல்லாம அவனோட ஹைதர் அலி காலத்து சைக்கிள் அது இஷ்டம் போல ரோட்டை அளக்குது. மட்கார்டு, செயின் கார்டு, பாருக்கெல்லாம் செவப்பு பெயிண்ட் அடிச்சு வச்சுருக்கான். சைக்கிள் மிதிச்சு களைச்சுப் போயி வந்தவன் யாருமே இல்லாத அத்துவான ரோட்டில தனியாளா ஒதுங்கி நிக்கிற என்னப் பார்த்தவுடனே

“யாரு.. மாட்டாஸ்பத்திரி டாக்டர் தங்கராசு மவனா?”

ஒத்தக் கண்ணை இடுக்கிப் பார்த்த ஐஸ்காரனுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சிடிச்சி. ஆள் உயரம் கம்மியா சைக்கிள் பார் உசரத்துக்கு இருந்ததால சர்க்கஸ்காரன் சாமர்ஸட் அடிக்கிற மாதிரி குதிச்சு இறங்கினான். குதிச்ச வேகத்துல ஹவாய் செருப்பு வார் பட்டுனு விட்டிடுச்சு. பஸ் ஸ்டாப் சுவத்தில ஒட்டியிருந்த “முத்து” ரஜினி முகத்து மேல பின்னால ஐஸ் பொட்டி கட்டின வண்டியை சாச்சுப்புட்டு செருப்பைக் கையில எடுத்து வாரை நுழைச்சுகிட்டே என்னைப் பார்த்து ஈன்னு இளிச்சான்.

“தம்பி எங்க இம்புட்டு தூரம்?”

“இல்ல.. இங்க கொஞ்சம் வேலை இருந்திச்சு... அதான்..”

“இந்த வயக்காட்டுல அப்டி என்ன வேல” வாரை நுழைக்க முடியாம இடுப்புல அரணாக்கயிரில தொங்கிகிட்டு இருந்த ஊக்க எடுத்து செருப்போட சேர்த்து போட்டுவிட்டான்.

“அப்பாவுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்க இருக்காங்க. அவங்களைப் பாக்கலாம்னு....” தயங்கித் தயங்கி இழுக்கறேன் நானு. ச்சே.. என்ன மனுஷன் நானு. எவனோ ஒரு குச்சிஐஸ்காரன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்றேன்.

“இங்க யாரு தம்பி ஒங்களுக்கு தெரிஞ்சவங்க இருக்கப் போறாங்க? இங்கேருந்து வடக்கால கண்டியர் பங்கு தாண்டினா கீளயூரு. தெக்கால ஊர்லாம் ரொம்ப தொலவு. நடந்து போவ முடியாது. கீளயூருல யாரையாவது பாக்க வந்தீங்களா?”

அவன் உடற மாதிரி இல்ல. பதிலுக்கு பதில் எதிர் கேள்வி கேக்கறான். எனக்கு செம எரிச்சல். என்னன்னுட்டு இவன்ட்ட சொல்லுவேன். அவள இவனுக்கு தெரியுமா? இல்ல யாருன்னு சொன்னா புரிஞ்சுப்பானா. சுத்தக் கேனப்பய..

“இல்லிங்க... நமக்கு தெரிஞ்ச ஒருத்தங்க...”

“தம்பி.. இருவது வருசமா சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சனங்களுக்கு நாந்தான் பொட்டியில கட்டிக்கிட்டு போயி ஜில்லிப்பு குடுக்கறேன். “பாம்..பாம்”னு சத்தம் கேட்டவுடனே அரையிலேர்ந்து டவுசர் அவுர ஓடிவந்து எங்கிட்ட பால் ஐஸ் வாங்கிச் சாப்டவனெல்லாம் இப்ப சிங்கப்பூர்ல சொகமா இருக்கானுவ. எனக்கு தெரியாம யாரு இங்கின புதுசா குடி வந்துடப்போறாங்க......... சொல்லுங்க தம்பி”ன்னு சொல்லிட்டு வெட்கமே இல்லாம கைலியை அண்ட்ரவர் தெரிய வாரிசுருட்டித் தூக்கி மூஞ்சியை துடச்சிக்கிட்டான்.

யாரு யாருன்னு விடாம அரிக்கிறான். யார் எக்கேடு கெட்டுப் போனா இவனுக்கு என்ன... ஐஸ் வித்தோமா.. வீட்டப் பாக்க போனமான்னு இல்லாம... பாவி! அடச்சே இந்த சமயத்தில பஸ்ஸு வேற வரமாட்டேங்குது....

போச்சு. ஒன்னு ரெண்டு தூத்தலா மழ ஆரம்பிச்சுடுச்சு. இந்த ஐஸ்காரன் இப்போதைக்கு கிளம்பமாட்டான். அப்படியே நனஞ்சுக்கிட்டே பொடிநடையா கிளம்பவேண்டியதுதான்..

“தம்பி... தம்பி... என்ன கிளம்பிட்டீங்க” ஐஸ் விக்கறதுக்கு கூவுகிற மாதிரியே என்னைக் கூப்புடறான்... என்னோட சட்டை நனைந்தாலும் பரவாயில்ல.. நான் அவனை சட்டை செய்வதாயில்லை.....

தமிளு
----------

புல்லுக்கட்டு இல்லனா கூட எம்பின்னாடியேத் தான் முட்டிகிட்டே வரும் இந்த கொழுத்துக் கருத்த ராமு. போற வளியில பூரசு மரத்லேர்ந்து இல பறிச்சிப் போட்டா துள்ளிக்கிட்டு குசியாத் தின்னும். எங்கூட வாரதா இருந்தா அதோட புள்ளக்குட்டிங்களைக் கூட பின்னால வருதான்னு பாக்காது. “ம்.மே..ம்..மே”ன்னு செல்லமா கனைச்சுக்கிட்டே ரெண்டு காலுக்கு நடுவுல வந்துப் பாயும். முந்தாநாளு வந்த கோவத்துல ரெண்டு போட்டேன். பெருமாளு டீக்கடை வரைக்கும் ரோசமா பாஞ்சு ஓடிப்போயிட்டு திரும்பவும் வந்து திண்ணையில பேசாம படுத்துகிச்சு. பொல்லாது. அஞ்சறிவு இருந்தாலும் அம்புட்டு அன்பு எம்மேலே. இவ்ளோ பிரியமா இருக்கறதுகள எப்படி அடிச்சி சாப்பிட மனசு வரும்.ஆயிர்ரூவாயிக்கு தரியான்னு பாக்கும்போதெல்லாம் கேக்கறாரு அப்துல்லா பாய். நா முடியாதுன்னுட்டேன்.

கால் முட்டியில அடிபட்டு போன வாரம் நாயித்துக்கிளம ஒரே அலறலா அலறிச்சு. ஓடிப் போயி டவுனு ஆஸ்பத்திரில கட்டு போட்டுகிட்டு வந்தேன். அதுக்கு முத வாரம் புளுக்கைகு பதிலா தண்ணி தண்ணியா ஒரே களிசல். என்னத்த தின்னு வச்சுதுன்னு தெரியல. பொளுது விடிஞ்சதும் ஆசுபத்திரிக்கு தூக்கிகிட்டு ஓடினேன். இதுவரைக்கும் ரெண்டு மூனு தடவ ஆசுபத்திரிக்கு அளச்சிக்கிட்டு போயிருக்கேன். டாக்டர் ஐயா போனதுக்கப்புறம் ஏதோ இராமசாமி ஐயா அங்க டவுனுல இருக்கிறதுனால நம்ம பொளப்பு ஓடுது.

ஒன்னுத்துக்கும் உதவாத அப்பங்காரன் உசுரோட இருந்தா என்ன செத்தா என்ன. எப்போ பாத்தாலும் பாட்டிலும் கையுமா ஒரே குடி. சாப்பாட்டுக்கு பொறவு தண்ணி குடிக்க கூட வொயினு பாட்டிலுதான் சவத்துக்கு. உடம்பில ரத்ததுக்கு பதிலா சாராயமா ஓடுது. வாயிலேர்ந்து எச்சி ஒளுகிக்கிட்டு, செம்பட்ட தலையோட, எப்பவுமே இடுப்புலேயே நிக்காத வேட்டி. அம்மாவ ரத்தம் குடிக்கிற அட்டப்பூச்சி மாதிரி உறிஞ்சி கால்ல போட்ருந்த தம்மாத்தூண்டு மெட்டி வரைக்கும் எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமா உருவிட்டான். இவந் தொந்தரவு தாங்காம ஒரு நா கர்கள்ல அரளி விதய அரச்சிக் குடிச்சிப்புட்டு உசிர உட்டுப்புட்டா என்னப் பெத்த மவராசி. தாவணி போட்ட சின்னப் புள்ளயா இருக்கேன்னு பாவப்பட்டு தொணைக்கு வந்த சின்னம்மாவை ஒரு நா போதயில கைய புடுச்சி இளுத்துப்புட்டான் எங்கப்பன் படுபாவி!

குய்யோ முறையோன்னு அளுதுகிட்டு “டீ தமிளு... இந்தக் குடிகாரபய கூட ஒரு நிமிசங் கூட இருக்காதடீ. நீயும் கண்காணாம எங்கனா ஓடிப்போயி பொளச்சுக்க”ன்னு மூக்க சிந்திக்கிட்டே ராவோட ராவா அதும்பாட்டுக்கு ஊட்டுக்கு ஓடிப் போயிரிச்சு. அன்னியிலேர்ந்து இன்னிக்கி வர இந்தாளுக்கு சோறாக்கிப் போட்டு கவனச்சிக்கிட்டு வரேன். ”எப்பப் பாத்தாலும் குடிக்கிறியே... உம் பொண்டாட்டியத்தான் இதுக்கு பரிகொடுத்தே உம் பொண்ணையுமா”ன்னு அக்கம்பக்கத்துல நாலு பேர் நாயம் கேட்டதுக்கு திரும்பவும் போய் குடிச்சிப்புட்டு வந்து வேட்டி அவுர ரோட்ல நின்னுக்கிட்டு கெட்ட கெட்ட வார்த்தல திட்டிக்கிட்டு ஒரே கூச்சல். பேசறதுல பாதி வார்த்த குளறுது. “இழ யாழுக்கு பொழ்ந்ழா. அதச் சொழ்ழாம இவழ பெழ்ழவ போழ்ட்டா”னு கன்னாபின்னானு பினாத்தல்.

டவுனுல அரிசி மண்டி ராமசாமி ஐயா எங்க ஊருல கொஞ்சம் மருவாதயான ஆளு. பட்டாளத்துல வேலை பாத்துட்டு இப்ப இங்கின அரிசி கட வச்சுருக்காரு. சிகிரெட்டு பத்த வக்கிற தடிமாடுங்க கூட ராமசாமி ஐயாவப் பாத்து அத கீளப் போட்டு கால்ல நசுக்கிடும். அம்புட்டு மருவாத. ரொம்ப தங்கமான மனுசன். அவரு கூட ரெண்டு மூனு தடவ எங்கப்பனப் பஞ்சாயத்துப் பண்ணிப் பார்த்தாரு. உஹும் மனுசன் திருந்திற வளியா தெரியலை. பத்தாதுக்கு ஊரு பூரா செத்துப்போன எங்கம்மாவையும் என்னையும் பத்தி அசிங்க அசிங்கமா உளறவேண்டியது. இதனால எனக்கு மட்டுமா அவமானம், பாவம் அந்த ஐயாவுக்கும் மானம் போவுது.

எப்படியாவது இதுக்கு ஒரு வளி பொறக்கணும்னு நானும் இந்த பேச்சியம்மாவை வேண்டிகிட்டுதான் இருக்கேன்! ஆத்தா கண்ணு தொறந்தா எதுவும் நடக்கும்....... மள விட்டுதான் ஊட்டுக்கு கிளம்பனும்... மண்டபத்துல ஒரு லைட்டு கூட கெடையாது. பூசாரியோட வெள்ள மீசய அரை வெளக்குல பாத்தாலே பயம்மா இருக்கு...கருத்த ராமு கிடந்து தவிப்பான்...

இராமசாமி
----------------

பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மனோன்மணி விலாஸ் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு ’ஆ’ பிரிவில் நான் மாவட்டத்திலேயே முதல் மாணாக்கனாக ஜொலித்த போது எனது தந்தையார் தவறிவிட்டார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? நான் இப்படித்தான். என்னை ‘தமிழ்’ இராமசாமி என்ற அடைமொழியுடன் தான் ஊரார் அழைப்பார்கள். தூய தமிழில் திகட்ட திகட்ட இலக்கியம் பேசுவது எனக்கு அச்சு வெல்லத்தை பொன்னி அரிசியுடன் கலந்து தின்பது போலப் பிடிக்கும். உடனே சமஸ்க்ருதம் கலக்காமல் பேசுவீர்களா? பௌர்ணமியை முழுநிலவு என்று தான் விளிப்பீர்களா? துட்டு என்பது சுந்தரத் தெலுங்கா? என்று கேள்விக் கணை தொடுக்கக்கூடாது. எனக்குத் தெரிந்த வரை நான் சுத்தத் தமிழ் பேசுகிறேன். இராணுவத்தில் நாட்டுக்காக தொண்டாற்றிய போது மேலதிகாரிகள் இந்திப் பயிலச் சொன்னார்கள். மறுப்பேதும் சொல்லாமல் கற்றுக்கொண்டேன். தமிழ் எனக்கு அம்மா என்றால் இந்தி சிறிய தாயார். இரண்டும் கலந்து மணிப்ரவாளமாகக் கூட பேசத்தெரியும். இருந்தாலும் நான் ஒரு தமிழ் ப்ரியன். அவ்வளவுதான். வெறியனல்ல.

இரசீது, கடைப் பெயர்ப்பலகை, அரிசியின் ரகங்கள் மற்றும் விலைப்பட்டியல் போன்ற அனைத்தையும் எனது கடையில் தூய தமிழில் பார்த்துவிட்டு என் மீது பிரியத்துடன் மருத்துவர் ஐயா எனக்கு ஆத்ம நண்பரானார். நல்ல கெட்டிக்கார மருத்துவர். தமிழ்ப் பித்தர். சைவத் திருமுறைகள் அனைத்தையும் நடுநிசியில் எழுப்பிக் கேட்டாலும் மனப்பாடமாக ஒப்பிப்பார். ”நால்வர் காட்டிய வழி“ என்று ஒரு ஐம்பது பக்க புத்தகத்தை எழுதி சொந்தச் செலவில் அச்சேற்றினார். உத்தமமான கொள்கைகள் கொண்டவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல வாடிய மிருகங்களைக் கண்டு வருந்துபவர். வாய் பேசமுடியாத விலங்கினங்களின் நோய் தீர்ப்பது அரிதான காரியம். அதை மிகச் செவ்வனே செய்வார்.

பொதுவாகவே உயிர்களிடத்தில் பேரன்பு செலுத்தும் அவருக்கு வாழ்க்கையில் அடிமட்டத்தில் அடிபடும் ஏழை ஜீவன்களைக் கண்டால் மனம் பாகாய் இளகி விடும். காட்டிலும் மேட்டிலும் ஆடுமாடு மேய்த்துக் கஷ்ட ஜீவனம் நடத்தும் மக்களுக்கு இலவசமாக நிறைய உதவிகள் புரிவார். சித்திரைத் திருவிழாவின் கடைசியில் தேரோட்டம் நடைபெறும் சமயத்தில் கீழையூர் இரத்தினம் ஒரு கிடேரி கன்றுக்குட்டி வேண்டும் என்ற ஆசையில் அவளது காறாம் பசுவை கால்நடை மருத்துவமனைக்கு ஓட்டிக்கொண்டு வந்தாள். அடுத்த வேளை சோற்றுக்கே திண்டாடும் நிலையிலும் பசுவை பராமரிக்கும் அவளது ஜீவகாருன்ய குணம் அவருக்குள் இருந்த தயாள குணத்தை கொம்பால் முட்டித் தூண்டியது. மாட்டிற்கு இலவச வைத்தியம் செய்தார்.

அடுத்த வேளைக்கு பொங்குவதற்கு அரிசி வாங்க என்னைக் கைக் காட்டினார் தங்கமான மனசுக்காரர் தங்கராசு. அரிசி மண்டியில் மதியம் போக்கற்று உட்கார்ந்திருந்தபோது பவளவாய் திறந்து முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி அழகாக அசைந்து வந்தாள் இரத்தினம். அப்போது
”நாற்குணமும் நாற்படையா, ஐம்புலனும் நல்லமைச்சா,
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா, வதன மதிக்குடைக்கீழ் 
ஆளுமே பெண்மை அரசு ”
என்று புகழேந்தியாரின் நளவெண்பாவில் மூழ்கி சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தேன். அட்சரம் பிசகாமல் அந்த வரிகளை ஒப்புமைப்படுத்துதல் போல எதிரே அழகின் அரசாட்சிக்கு அத்தாட்சியாக நின்றாள்.

நானும் என்னால் இயன்றதைக் கொடுத்துதவினேன். கிராமத்திலிருந்து நகரத்திர்க்கு வரும்போதெல்லாம் என் அங்காடிக்கும் ஒரு எட்டு வந்து எட்டிப் பார்த்துப் போனாள். ஒரு முறை பார்த்ததற்கு மறுமுறை இன்னும் அழகாகத் தெரிந்தாள். நாளுக்கு நாள் மெருகேறினாள். ஊரிலும் கால்நடை மருத்துவமனையிலும் அவள் தலை அடிக்கடி தென்பட்டதால் தங்கராசு வீட்டில் அரசல்புரசலாக இரத்தினத்தைப் பற்றி அவதூறு பேச ஆரம்பித்தார்கள். இரத்தினத்தின் கணவன் ஒரு கண்கண்ட அசுரன். அவன் அவளது துர்பாக்கியம். வேளாவேளைக்கு சாப்பிடுவதற்கு பிரச்சனை ஏதும் இல்லை என்று தெரிந்ததும் கட்டவிழ்த்துவிட்ட காளையாக எங்கும் திரிந்தான். எல்லா நேரத்திலும் குடித்துக் கும்மாளமடித்தான். கும்மாளமடிப்பதோடு திருப்தியடையாமல் அவளையும் போட்டு அடித்துத் துவைத்தான் அழகை ஆராதிக்கத் தெரியாத அந்த மூர்க்கன்.


அவனுடைய இம்சை பொறுக்கமுடியாமல் ஒரு நாள் ஆசிரியை தேவியின் வீட்டு அரளி விதையை அரைத்து அவள் ஓட்டி வந்த அந்த பசுவின் சீம்பாலில் கரைத்து குடித்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டாள். இரத்தினம் இறந்த முதல் வருட நினைவு நாளன்று கீழையூரில் நிழற்குடை திறந்த அன்று இரவு தங்கராசும் ஒரு விபத்தில் இறந்தார். இருவருடங்களில் வைரமாக இருந்த இரத்தினம் மற்றும் தங்கம் இரண்டையும் இழந்து தவித்தேன். இரத்தினத்தம்மாள் இறந்து ஐந்து வருடங்கள் ஆகியும் இளமுருகு வீட்டில் கொதிப்பு அடங்கவில்லை. சரி... மணி ஒன்பது அடிக்கிறது. வீட்டில் தருமு காத்திருப்பாள். கிளம்பலாம் என்று கடையை அடைத்தேன். கொத்துசாவியை பையில் போட்டுக்கொண்டு வாசலில் இறங்கி எனது இருசக்கர வாகனத்தை உதைக்கும் போது

“என்ன மாமா வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா?” அட. நம்ம இளா.

“என்னப்பா இப்படி தொப்பலா நனஞ்சுகிட்டு வரே” என்ற கேள்விக்கு “ஹும்” என்று விரக்தியாகச் சிரித்தான். கீழையூரிலிருந்து வருகிறான் என்று புரிந்துகொண்டேன்.

“என்னிக்கு ஊருக்கு?” என்று கேட்டு அவனை பிற குசலங்கள் விசாரித்து திசைதிருப்பி வீட்டுக்கு அனுப்பினேன்.

மரகதம் தியேட்டர் தாண்டும் போது இரவுக் காட்சிக்கு கூட்டம் ரோடு வரை தவமிருந்தது. ஒரே நாளில் கடல் நீரனைத்தையும் நிலத்தில் கொண்டு வந்து சேர்ப்பது போல மழை கனமாகப் பிடித்துக்கொண்டு கொட்டித் தீர்க்கிறது. இது போல ஒரு அடர்மழை நாள் இரவில் அரிசி மண்டியில் இரத்தினத்துடன் ஏற்பட்ட அந்தரங்கப் பழக்கம் படிப்படியாக வளர்ந்து தமிழ்செல்வி என்று அவளுக்கு ஒரு பிள்ளை கொடுக்கும்வரை வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இறக்கும்வரை இரத்தினத்தை உள்ளங்கையில் வைத்து தாங்கினேன், தமிழ்செல்வியைப் பார்க்கும்போதெல்லாம் அவளைப் பெற்றவன் என்ற வகையில் அவள் தனிமையை எண்ணி எண்ணி உள்ளுக்குள் புழுங்குகிறேன். உருகுகிறேன். ஊர் மரியாதையை ஏற்க எண்ணவெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருகிறது.

இரத்தினத்துடனான எனது பழக்கம் தனக்கு வீட்டில் பூசல் உண்டாக்கியது என்றறிந்து என் சட்டையைப் பிடித்து “படுபாவி! நீ நல்லாயிருப்பியா?” என்று சண்டையிட்ட தங்கராசுவை திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டியது நான் தான் என்ற இரகசியத்தைப் இப்போது உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். தயை கூர்ந்து யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். தங்கராசுவை எப்படி எங்கே கொன்றேன் என்று கதை கேட்கவும் உட்கார்ந்துவிடாதீர்கள். இதோ எனது வீடு வந்துவிட்டது. தருமு வாசலில் காத்திருக்கிறாள்! தமிழ் வாழ்க. என்னுடைய பிள்ளை ’தமிழு’ம் வாழ்க!!

பின் குறிப்பு:  மூன்று கதாபாத்திரங்கள் வழியாக இந்தக் கதையை நகர்த்தியுள்ளேன். இதுவும் என்னுடைய புதுமுயற்சி. ஒவ்வொரு பாத்திரமும் கடைசியில் ஒன்றாக கோர்க்கப்பட்டுள்ளது.

பட உதவிக்கு இணையத்திற்கு ஒரு நன்றி. கிரடிக்ட் கொடுப்பதற்கு வலைத்தளம் மறந்துவிட்டேன்!

-

Sunday, September 18, 2011

எங்கேயும் எப்போதும்தளபதியும் குணாவும் ஒரு சேர தீபாவளிக்கு ரிலீஸ் ஆன போது ரசிகக் கண்மணிகள் என் கையைப் பிடித்து FDFS-க்கு இழுத்தார்கள். முதல் ஒரு வாரத்திற்கு படம் பார்க்க முடியாது. திரைக்கு காகிதார்ச்சனை செய்வார்கள். கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம், “தலைவா!! தலைவா” என்று புளகாங்கிதத்தில் திரையைப் பார்த்து உணர்ச்சி பொங்க இரைந்து, படம் ரிலீஸ் ஆனதற்கு மொட்டையடித்து நேர்த்திக் கடன் புரிந்து நாயக புண்ணியம் கட்டிக்கொள்வார்கள். கமல், ரஜினி, விஜய், அஜீத் போன்ற நட்சத்திர ஹீரோக்கள் நடிக்காத படம் என்பதால் முதல் வார ஹிம்சை அதிகம் இருக்காது என்ற நம்பிக்கையில் சென்றேன். வீணாகவில்லை. ஜெய்யின் சிரிப்பு வசீகரமானது. கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையின் சிரிப்பு அது. அதற்காகவும்தான்.

பொதுவாக ஒருவரி நூல் போன்ற கதைகளைப் பெரிய படுதாவாக விரிப்பதற்கு சிலர் சிரமப்படுவார்கள். ததிக்கினத்தோம் போட்டுத் தடுமாறிவிடுவார்கள். இல்லை வழவழாகொழகொழா என்று வாழைப்பழ ஜூஸ், வெண்டைக்காய் மோர்க்குழம்பு போல கொழப்பிவிடுவார்கள். ஆனால் தேசிய நெடுஞ்சாலை பேருந்து மோதல் என்ற ஒரு வரியை மையமாக வைத்து திரைக்கதையை இழை இழையாய்ப் பின்னியிருக்கிறார் இந்த இயக்குனர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தியேட்டரை அடையும் முன் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நாலு பேருடன் ”போடாங்.......”னு உதார் சண்டைப் போட்டு, லேட்டாக, விளக்கணைத்து டைட்டில் போட்டவுடன் தியேட்டர் இருட்டில் நாலு பேர் காலை மிதித்து நசுக்கி,  தட்டுத் தடுமாறி சேரில் உட்கார்ந்திருப்பவர் மடியில் பச்சென்று உட்கார்ந்து தடவித் தடவி வந்து அமருபவர்களை, டைம் லாப்ஸில் இரண்டு பேருந்துகளை அதிவேகமாக முட்டிக்கொள்ள வைத்து எடுத்தவுடனேயே மிரட்டிவிடுகிறார்கள். தினத்தந்தி அலுவலகத்தில் ப்ரஸ்ஸை நிறுத்தி அன்றைய தலைப்புச் செய்தியை மாற்றவைக்கும் ஒரு கோர விபத்து.

மோதிக்கொள்ளும் பஸ்களிலிருந்து கால் செத்துப்போகாத வடிவேல் கணக்காக முன் கண்ணாடியை சில்லுச்சில்லாகப் பொத்துக்கொண்டு விழும் ஒருவர் விபத்துக்குள்ளான இரு பேருந்துக்கும் இடையில் சிக்கிச் சட்னியாவதைக் காண்பிக்கும் போது குடும்பம் குட்டிகளோடு செல்பவர்கள் குட்டிகளின் கண்களை மறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொய்யான சினிமாவில் கூட நிஜமாகவே காணமுடியாத ஒரு மோசமான நிகழ்வு. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதை கடைசியில் ஒரு சடன் ப்ரேக் போட்டு க்ளைமாக்ஸில் அவிழ்க்கிறார் இயக்குனர். எதனால் என்று யாரும் எதிர்பார்க்காத பாராட்டப்பட வேண்டிய ஒரு சிறு முடிச்சு. வெரி குட்.

ஒரு அரசுப் பேருந்து திருச்சியில் இருந்து சென்னைக்குப் புறப்படுகிறது. கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திலிருந்து ஐராவத ”ஸ்கை ரைடர்” ஒன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு பறக்கிறது. விழுப்புரத்திற்கு அருகே இரண்டும் தலையோடு தலை ஒன்றோடொன்று முட்டிக்கொள்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே மோத விட்டு ”4 மணி நேரத்திற்கு முன்பு” என்று ஒரு ஃப்ளாஷ் பேக் ஓட்டுகிறார்! அந்தப் பேருந்துகளில் பயணிப்பவர்களின் குடும்பப் பின்புலங்கள், பயண காரணங்கள் காண்பிக்கப்படுகிறது. கோயம்பேட்டையையும் திருச்சி நகர பேருந்து நிலையத்தையும் லாங் ஷாட்டில் பருந்துப் பார்வையில் காண்பிக்கும் இடங்களில் அமர்க்களப்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர்.

அந்த நான்கு மணிநேர மினி ப்ளாஷ்பேக்குக்குள் இன்னொரு ஆறு மாத கால ஜெயண்ட் கொசுவர்த்தி சுருள் ப்ளாஷ்பேக்! அந்த ஜெயண்ட் ப்ளாஷ்பேக்கில் இரண்டு காதல் ஜோடிகளின் ஆத்மார்த்த காதல் கதை. திருச்சியிலிருந்து தொண்ணூறு சதம் மதிப்பெண் எடுத்து சென்னைக்கு இண்டெர்வியூவுக்கு வரும் பெண்ணாக அனன்யா. தலைக்காவிரி பெண். அழகாக திருதிருவென்று முழிக்கிறார். தென் தமிழகத்திலிருந்து வரும் பெண்களின் நகரப் பூச்சாண்டி பயத்தை மூலதனமாக வைத்து அனன்யா காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர். அவருடைய டி.ஸி.எஸ் நேர்முகத்துக்கு வழித்துணையாக உதவி புரிய வருகிறார் ஷர்வானந்த். பக்கத்து வீட்டு படித்த பையன் போன்ற களையான தோற்றம்.

“கோவிந்தா..கோவிந்தா...சென்னையில புதுப் பொண்ணு” என்று அனன்யா ஷேர் ஆட்டோவில் இடிபடும் போது உடனடி ஹிட் சாங் ஒன்றை ஓட்டிவிடுகிறார்கள். பஸ்ஸில் பயணிக்கும் போது தலையை விரித்துப் போட்ட கருப்புப் பனியன் பெண் ஒன்று பாய் ஃப்ரெண்ட் ஒருவனை ”டேய் கட் பண்ணு... அப்பா லைன்ல வராரு”  என்று கட் செய்துவிட்டு இன்னொருத்தனுக்கு லைன் போடுவதைப் பார்த்து பயமுறும் காட்சியில் அனன்யா கண்களில் ஒருவித மிரட்சி தெரிகிறது. சாலைகள் தான் படத்தின் பாதி நேர லொகேஷன். ஒன்று சென்னைக்குள் ஆட்டோ அல்லது பஸ்களில் இல்லையென்றால் ஹைவேயில் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளில். சாஸ்திரத்திற்கு திருச்சி மலைக்கோட்டையில் இரண்டொரு சீன் வைத்திருக்கிறார்.

ஜெய்யும் - அஞ்சலியும் காதலிக்கிறார்கள். மெஷின் டூல்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஜெய் எதிர் சாரியில் இருக்கும் கூந்தல் பெரியதாக வளர்ந்த ஒரு பெண்ணுக்கு தினமும் காலை கை ஜாடை காண்பிக்கிறார். அந்தக் கன்னிகை அணியும் உடைக்கு மேட்சாக சட்டை அணிந்து வேலைக்கு சென்று காதல் விரதம் இருக்கிறார். சில நாட்களில் அம்மா, பெண் வித்தியாசம் தெரியாமல் கை காண்பிக்கிறார். காதலிக்குக் கட்டுப்பட்ட ஜெய்யை மெய்யாலுமே விரட்டிக் காதலிக்கிறார் அஞ்சலி. விரட்டுவது என்றால் உங்க வீட்டு விரட்டு எங்க வீட்டு விரட்டு கிடையாது. கையில் குச்சி எடுத்துக்கொண்டு பின்னால் விளாசி விரட்டாமல் விட்டது ஜெய் செய்த புண்ணியம்.

காதல் என்பது கையோடு கை கோர்த்து மாரோடு மார் கட்டிப்பிடித்து அலைவது இல்லை என்றும், காதலித்தால் என்னென்ன பிரச்சனையை சமாளிக்க வேண்டுவரும் என்று பரஸ்பரம் தெரிந்து கொண்டு பின்னர் காதலிக்கலாம் என்று சொல்லும் அஞ்சலி HIV டெஸ்ட் வரை ஜெய்யிக்கு எடுத்துப் பார்ப்பது காதல் விரட்டலின் உச்சம். தன்னை ஆறு வருடம் பின்னால் நாக்கை தொங்கப்போட்டு துரத்தியவனிடம் அனுப்பி அடி வாங்க வைப்பது கொஞ்சம் ஓவர். அஞ்சலி கேரக்டர் பில்டப் இமாலய சைஸ் அதிகம். சொர்ணாக்கா போல கிட்டத்தட்ட “அதிரடி காதலி”யாக வருகிறார் அஞ்சலி. காதலி அஞ்சலிக்கு அடங்கிய அமெரிக்கையான பிள்ளையாக ஜெய். என்ன பவ்யம். என்ன குழைவு. ”உங்க மேல கோவமே படமாட்டேங்க” என்று அஞ்சலியிடம் சொல்லும் போது பார்க்கும் வெள்ளந்தியான பார்வை. சூப்பர்ப். கடைசி வரையில் அஞ்சலியை “ங்க...ங்க...” என்று வார்த்தைக்கு வார்த்தை மரியாதை சேர்த்துதான் பேசுகிறார்.

சத்யா என்ற அறிமுக இசையமைப்பாளரின் இசை இரண்டு பாடல்களில் தலையாட்ட வைக்கிறது. “மாசமா... ஆறு மாசமா..” என்ற பாடலை அவரே பாடியும் இருக்கிறார். அந்தப் பாடல் முழுவதும் ஜெய் ரஜினியைப் போல கை காலை அசைக்கிறார். பாடல் முழுக்க ரோடில் ஓடிக்கொண்டே வருவோர் போவோருடன் சேர்த்து இடது தோள்பட்டையை குலுக்கி உலுக்கி நெஞ்சில் குத்திக்கொள்கிறார் ஜெய். அதை நடனம் என்று அழைக்கிறார்கள் போலும். இறக்கையில்லாமல் “உஸ்...உஸ்...” என்ற சத்ததில் ஷாலின் படங்கள் குடுமிகள் போல விண்ணில் பறந்து தாக்கும் சண்டைக் காட்சிகள் இல்லாததால் காது பிழைத்தது. பின்னனி இசை பரவாயில்லை.

இன்றைய திருச்சிப் பெண்கள் அனன்யா மாதிரி அசமந்தமாக இருப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி அல்ல 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மதிப்புக் கேள்வி. இருந்தாலும் அவரது அசட்டுத்தன்மை ரசிக்கும்படி இருக்கிறது. ஊர் பெயர் தெரியாத பெண்ணுக்காக ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு உதவி புரிய ஊர் சுற்றுவது ரொம்ப மோசம் என்று அனன்யாவை விட்டே ஷர்வானந்துக்கு சொல்லவைக்கும் டைரக்டர் மிகவும் விஷமி. சென்னையைக் கயவாளிகள் குடியிருக்கும் பகுதி போல சித்தரித்து விடக்கூடாது என்று ஷர்வானந்தை விட்டே வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் அருமை பெருமைகளுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கிறார்கள்.

“ஏண்டி! ஒரே ஒரு தடவை உனக்கு வழித் துணைக்கு வந்தவனை எப்படி கல்யாணம் கட்டிப்பே?” என்ற கேள்விக்கு “அக்கா! மாமா உண்ணை பொண்ணு பார்க்க வந்தப்ப நீ டீ குடுத்தே... மாமாவுக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க... உன்னை அவரை பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க... ரெண்டு பேரும் பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க... ஒரு டீ குடுக்குற நேரத்தில உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க இல்ல.. அவன் என் கூட ஒரு நாள் முழுக்க சென்னையை சுத்தியிருக்கான். எனக்குத் தெரியாதா?” என்ற கேள்வியில் காதல் சூத்திரம் சொல்கிறார் வசனகர்த்தா. சில இடங்களில் மின்னல் வெட்டியது போல பளிச்சென்று இருக்கிறது வசனம்.

மிகச் சிறந்த படத்திற்கு கடைசி கால் மணி நேரம்  நகம் கடிக்கும் அல்லது சீட் நுனிக்கு கொக்கிப் போட்டு அழைக்கும் க்ளைமாக்ஸ் என்பார்கள். ஆனால் இப்படம் உட்கார விடாமல் எழுந்து நிற்க வைத்துவிடுகிறது. தொண்ணூறு சதம் படம் நகர்த்த தெரிந்தவர் கடைசி பத்து சதம் படுத்திவிட்டார். இரண்டு காதலர்கள், ஒரு ஆக்ஸிடெண்ட், விரசமில்லா சீன்கள், சில சுவையான காதல் காட்சிகள், டிஷ்ஷும் டிஷ்ஷும் இல்லாமல் அழகாக ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தரமான தயாரிப்புக்கு ஏ.ஆர். முருகதாஸுக்கு ஒரு நன்றி. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

என்னது? அந்த ஆக்ஸிடெண்ட் எப்படி ஆனது என்று கேட்கிறீர்களா? கதை முழுவதையும் சொல்லிவிட்டால் ஜெய் கோபித்துக் கொள்வார். தியேட்டரில் போய் பாருங்களேன்!!

பின் குறிப்பு: படம் முடிந்ததும் ஜெய்யிடம் பேசினேன். என் நண்பருக்கு நண்பர் அவர். ”நல்லா நடிச்சிருக்கீங்க” என்றேன். மனிதர் அப்படியே உருகிவிட்டார். ”கண்கள் இரண்டால்...” சிரிப்பு இங்கே தெரிந்தது. அவருடைய நம்பர் தெரிந்த யார் கூப்பிட்டாலும் சகஜமாகப் பேசுவார் என்றார் என் நண்பர். அலட்டல் இல்லாத ஜெய்யிக்கு இந்தப் படமும் அமோக வெற்றியைத் தரட்டும். வாழ்த்துகள்.

பட உதவி: www.cinejosh.com

-

Friday, September 16, 2011

ஆண்கள் இடது! பெண்கள் வலது!!

திண்ணைக்கச்சேரி என்று ஒரு பகுதி இந்த வலைப்பூவில் நான் எழுதிவந்ததாக திடீரென்று ஞாபகம். புதுவருஷ ஆரம்பத்தில் இனிமேல் சிகரெட் பிடிக்கமாட்டேன் என்றும், புது டைரி வாசனை இருக்கும் வரை தினக்குறிப்பு எழுதுவதும் போல தி.க ஆரம்பித்ததும் ”எழுத்து ஜுர” வேகத்தில் எழுதியது. இனிமேல் அடிக்கடி எழுதவேண்டும் என்று சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டேன். துக்கடாக்கள் நிறைய சேர்ந்துவிடுகிறது.

************** வாக்கிங் விஷுவல்ஸ் **************

இப்போது தினமும் காலையில் தவறாமல் வாக்கிங் போகிறேன். நடக்க சோம்பேறித்தனப்பட்டால் கொலஸ்ட்ரால் குபுகுபுவென்று நிறைய சேர்ந்துவிடுகிறது. ஏற்கனவே வாய்கொழுப்பு வேறு அதிகம். அனுதினமும் அதே மக்களை திரும்பத் திரும்ப பார்க்கிறேன். ஏழு மணிக்குள் கர்ம சிரத்தையாகக் கடை திறக்கும் ஒரு மெடிக்கல் ஸ்டோர்காரர், காலேஜ் பஸ் வருவதற்குள் கையில் திறந்த புஸ்தகத்தோடு படிக்காமல் பக்கத்தில் அரட்டையடித்துக் கொண்டிருக்கும் யுவதி, அரை வாளி அழுக்குத் தண்ணீர் எடுத்து நேற்றையப் பூக்களில் தெளித்து இன்றைக்குப் புதியதாக்கிக் கொண்டிருக்கும் பிள்ளையார் கோவில் வாசல் பூக்காரி, அரை இன்ச் பவுடர் பூசி அலுவலக பஸ்ஸை நிற்க வைத்து டிபன் பாக்ஸும் கையுமாக வியர்க்க விறுவிறுக்க ஓடிவரும் குடும்பஸ்திரீ......

ஆபிஸ் பஸ் வரும் வரை சாலையோரக் கழக கொடிக்கம்பத்தில் சாய்ந்து கொண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவை எட்டாக மடித்து பிட் செய்தி வாசிக்கும் சந்தனப் பொட்டுக்காரர், முன்னங்கால் ஒன்று இல்லாவிட்டாலும் சந்தோஷமாக சக தோழர்களுடன் கட்டிப்புரண்டு விளையாடும் தெருநாய், பல்ஸரில் வீடுவீடாய் பேப்பர் விசிறும் ஹாக்கர், கூட்ரோடு டீக்கடை வாசலில் அன்றைய வேலைக்காக காத்திருக்கும் சித்தாள், பெரியாள் மற்றும் கொத்தனார்கள், கறைபடிந்த பையில் தூய ஆவின் பால் விநியோகிக்கும் பால்காரர், ஹாரனில் வைத்த கை எடுக்காமல் வண்டியோட்டும் பொறியியல் கல்லூரி இளந்தாரி பேருந்து ஓட்டுனர், டாஸ்மாக் உ.பானக் கடை மூடியிருந்தாலும் ஸைடில் இருக்கும் பார்க்குள்ளிருந்து பாம்பு ஊர்வது போலத் தள்ளாடியபடி வரும் காலைக் காப்பிக்கு பதில் கட்டிங் அடிக்கும் முதியவர்...............

தினம்தினம் வழக்கமான இதே காட்சிகள்.

சனிக்கிழமைகளில் தெருவில் என்னையும் அந்தத் தெரு நாயையும் தவிர்த்து வேறு ஈ காக்காயைக் காணோம். ஞாயிற்றுக்கிழமை நானும் வாக்கிங்கிற்கு லீவ்.

************ நார்வேயின் நாயகர்கள் *************

ஒரு அலுவலக திட்டப்பணிக்காக நார்வே நாட்டிலிருந்து இருவர் என்னுடன் பணியாற்றுவதற்கு வந்து இறங்கியிருக்கிறார்கள். மல்யுத்த புஜம் தெரியும் டீ ஷர்ட்டுடன் என்னைப் போன்று ஒரு Norwegian இளைஞனும், வைன் என்ற சப்பை மூக்கு குச்சிக் குச்சி முடி தாய்லாந்து பையனும் தினமும் சொய்ங்...சொய்ங்... என்று ஆங்கிலத்தை டீ போல ஆற்றுகிறார்கள். ஒரு வயலினை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் மாற்றி மாற்றி இழுப்பது போலிருக்கிறது அந்த தாய்லாந்து இளைஞனின் ஆங்கிலம். நார்வே இளைஞன் அந்நாட்டு பிரதமரின் சம்பளம் மற்றும் சொத்து விபரம் எல்லோருக்கும் தெரியும் என்றார். தேர்தல் நேரத்தில் நம்மூர் பெருச்சாளிகள் தேர்தல் ஆணையத்திடம் “ஒரு சைக்கிள், இருபதாயிரத்து பத்து ரூபாய் ரொக்கம், ரெண்டு கோடு போட்ட அண்ட்ராயர்” என்று ஏழைகளாக சொத்து விபரம் தாக்கல் செய்வது ஞாபகம் வந்தது.

*********** நைட் - எலீ விசீல் ***************


தமிழ்வாசகன் என்ற இணையக் குழும சத்சங்கத்தில் உறுப்பினரான பிறகு இப்புஸ்தகத்தின் வாசனை கிடைத்தது. முப்போதும் புஸ்தகமும் கையுமாக இருக்கும் மனிதர்களின் சகவாசம் கிட்டியது என் பேறு. என்னுடைய முகப்புத்தக நண்பர்களுக்கு இதை அறிமுகம் செய்திருந்தேன். மனிதன் நாகரீகமடைந்து வெகு நாட்களுக்கு அப்புறம் நிகழ்ந்த ‘ஹிட்லரின் கொலைக்களன்’களில் அவதியுற்றவர் இதன் ஆசிரியர் எலீ விசீல். நாஜிக்களின் அக்கொடுமையை அனுபவித்தபோது அவர் பதின்மங்களில் இருந்தார் இப்போதும் உயிரோடு இருக்கிறார். 

ட்ரான்ஸில்வேனியாவில் இருக்கும் சிகெட் என்ற ஊரில் தனது தாய், தந்தை மற்றும் இரண்டு அக்கா ஒரு தங்கையுடன் வசித்துவந்தவர் ஹிட்லரின் ஜு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சிக்கி அடிமைப்பட்டுச் சின்னாபின்னமான கதை. ஒரு மர்ம நாவலுக்கு இணையாக தனது வேதனைகளை படு வேகமாகப் பகிர்ந்திருக்கிறார் இந்த நோபல் பரிசு பெற்ற எலீ விசீல். ஹிட்லரின் வதை முகாம்கள் எப்படி அவருடைய ஊருக்குள் அடியெடுத்து வைத்தார்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று வரலாற்று ஆவணமாகச் சொல்கிறார்.

ஆசையாசையாய் குருவியாகச் சேர்த்த சொத்துக்களையெல்லாம் அப்பப்படியே போட்டுவிட்டு தலைக்கு மூடியில்லாத ரயில் வண்டிகளில் கால்நடைகள் போல ஒரு போகிக்கு நூறு பேர் என்று நெருக்கி ஏற்றிக்கொண்டு வதைமுகாம்களுக்கு அழைத்துச் சென்றார்களாம். மனிதர்களற்று வெறிச்சோடிப்போய் ஊரிலிருந்த வீடுகள் அனைத்தும் கொல்லையோடு வாசல் திறந்து கிடந்தது என்கிறார். அவர்கள் வந்தடைந்த முதல் முகாம் Birkenau. அங்கே “Men to the Left! Women to the Right!!" என்ற நாஜிப்படையின் ஆணையில் குடும்பம் பிரிகிறது. விசீலின் அம்மா, அக்கா தங்கைகள் ஒரு பக்கமும், அவரும் அவரது தந்தையும் இன்னொரு புறம் வருகிறார்கள். அதற்கப்புறம் அவர்களை தான் பார்க்கவேயில்லை என்கிறார் வேதனையுடன்.

Birkenau வில் இருந்து Auschwitz முகாமிற்கு மாற்றப்படுகிறார்கள். திடகாத்திரமானவர்களுக்கு மரியாதை. பலவீனமானவர்களுக்கு இறுதி மரியாதை. இதுதான் அவர்களது கொள்கையாக இருந்தது. குழி வெட்டுவது, உற்பத்தியான ப்ளாஸ்டிக் எலெக்ட்ரிகல் சுவிச்சுகளை எண்ணுவது என்று கடினமும் சுலபமுமாகப் பலவிதமான வேலைகள். ஒரு ரொட்டித் துண்டும் கொஞ்சம் வெண்ணையும். இதைத் சாப்பிட்டு உயிரோடும் வேலைக்கு அஞ்சாமல் இருப்பவர்களுக்கும் அவர்களது உயிர் உத்திரவாதம்.  இல்லையேல் ஒரு தோட்டாச் செலவில் ரொட்டியை மிச்சப்படுத்திவிடுவார்கள். கொன்ற குழந்தைகளை ஒரு ட்ரக்கில் கொண்டு வந்து எரியும் நெருப்பிலிட்டது இன்னமும் அவரது மனதில் அனலாய் இருக்கிறதாம்.

கையில் வயலினுடன் திரிந்த ஒரு வதை முகாம் நண்பன் தான் நிற்பதற்கு கூட இடம் இல்லையெனினும் வயலினுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்ற உன்னத நோக்கத்தில் தூக்கிப் பிடித்தப்படி இருக்கிறான். ஒரு நாள் இரவு ரோல் காலிற்கு பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில் பீத்தோவன் வாசிக்கிறான். அவனது அந்த வயலின் எல்லோர் செவியையும் இசையால் நிரப்புகிறது. அன்று அனைவரது நெஞ்சையும் நெகிழ வைக்கும் கச்சேரியாக அது அமைகிறது. அந்த வதை முகாமில் துன்பத்திலிருந்த அனைவருக்கும் சொல்லவொனா மனமகிழ்ச்சி. அசதியில் தூங்கிப் போகிறார் எலீ விசீல். காலையில் எழுந்து பார்க்கும் போது காலடியில் வயலினுடன் இறந்து போயிருக்கிறான் அந்த கலைஞன். இன்னமும் மெழுகுவர்த்தி ஒளியில் வயலின் இசை கேட்டால் அதே ஞாபகம் என்கிறார்.

அடுத்த வதை முகாமிற்கு குளிரக்குளிர அழைத்துப்போகிறார்கள். அப்போது ஒரு இரயில் வண்டியின் போகி இன்னும் கூடுதலாக இருபது பேர் பிடிக்கிறது. எலும்பும்தோலுமாக வண்டியிலேற்றப்படுகிறார்கள். இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் பயணிக்கிறார்கள். அப்போது ஒரு ஆளில்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி “பக்கத்தில் செத்த பிணம் இருந்தால் தூக்கி வெளியே வீசியெறியுங்கள்” என்ற கட்டளை வருகிறது. ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் ஐந்தாறு பிணங்களை வெளியே எறிகிறார்கள். அப்போது கழிவிரக்கத்தை விட உட்கார இடம் கிடைத்தே என்று மகிழ்ந்தவர்கள் ஜாஸ்தி என்கிறார்.

ஒரு ஜெர்மன் நகரத்திற்குள் வண்டி நுழைந்தவுடன் ஜுவில் கொரில்லாவுக்கு வாழைப்பழம் தூக்கிப் போடுவதைப் போல ஒரு ஜெர்மானியன் ரயில் பெட்டிக்குள் விட்டெறிகிறான். பெட்டிக்குள் ஒரே அடிதடி. ஒரு கிழவன் மிகவும் ஜாக்கிரதையாக ஒரு வாழைப்பழத்தை எடுத்து சட்டைக்குள் பதுக்கிக் கொண்டு அதே பெட்டியிலிருக்கும் தனது மகனை அழைக்கிறான். எலீ விசீலும் அதே பெட்டியிலிருக்கிறார். இதற்காகத் தான் தனது மகனை அழைக்கிறார் என்று அறிந்து கொண்டு அந்த கிழவன் மற்றும் அவரது மகன் மீதும் பாய்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் ஒரு வாழைப்பழத்திற்காக அவ்விருவரும் பலி. ஆளில்லாத இடத்தில் பிணங்களை வீசியெறிந்துவிட்டு பயணம் தொடர்கிறது....

இரவு முழுவதும் பனியில் ஓடியே இன்னொறு வதை முகாமிற்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள். “டப்” என்று சத்தம் கேட்டால் ஓடிவர முடியாத ஒருவனை சுட்டுவிட்டார்கள் என்று அர்த்தம். இப்படியாக போகிறது நைட். ஒரு அறுபதாண்டிற்கு முன்னால் இப்படி ஒரு அசிங்கமான நிகழ்வு மனித இனத்திற்குள் நடந்திருக்கிறது என்பது ஒரு அவமானகரமான விஷயம்.


பின் குறிப்பு: இனிமேல் தி.கச்சேரியில் நான் அவ்வப்போது படிக்கும் புஸ்தகங்கள் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கிறேன். எழுதுவதற்கு மனதுக்கு ஆசையாயிருந்தாலும் வேலைப்பளு காரணமாக கைக்கு ஒழியவில்லை. முடிந்தவரை அடுத்த பதிவு சீக்கிரம் இட முயற்சிக்கிறேன்.

படக் குறிப்பு:  படம் கிடைத்த இடம் உலகப் பொதுஅறிவுக் களஞ்சியம் விக்கிப்பீடியா. மேற்கண்ட படத்தில் Buchenwald முகாமில் கீழிருந்து இரண்டாவது வரிசையில் இடது புறத்திலிருந்து ஏழாவது ஆளாக எலீ விசீல் எட்டிப்பார்க்கிறார்.


-

Sunday, September 11, 2011

மலையாளக் கரையோரம்

ஓணத்திற்கு விசேஷமாய் இந்த இசைத்தொகுப்பை வெளியிட ச்சிந்திச்சு. பக்‌ஷே தாமஸமாயி. இசைக்கு மொழி கிடையாது. ஒரு புல்லாங்குழலுக்கோ வயலினுக்கோ கிட்டாருக்கோ பாஷை உண்டா? ஒரு அமெரிக்க குழந்தை “ம்...க்க்ர்..ர்ர்..ம்...” என்று ஜொல்லொழுக மழலையிட்டால் இரசிப்போம் இல்லையா அது போல இதையும் இரசிக்கலாம்.

இந்த முறை பாடல் பதிவிட்டு ஒரு மாமாங்கம் ஆகிவிட்டதாக சகோதரி கோவை2தில்லி குறைப்பட்டுக்கொண்டார்கள். அந்த கோயமுத்தூர் அம்மணியின் குறை தீர்க்க எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த சில சேர நன்னாட்டு பாடல்கள் உங்கள் செவிகளுக்கும் மனதுக்கும் இதமாய்...

தாஸேட்டன் என்று அன்போடு அழைக்கப்படும் ஜேசுண்ணாவின் குரலுக்கு மயங்காதோர் உண்டோ? மலையாளத்தில் யார் பாடினாலும் அது ஜேசுதாஸ் மாதிரி இருக்கு என்று என் நண்பனொருவன் பிதற்றினான். நிச்சயம் எல்லோரோடும் ஒப்புமைப்படுத்தக்கூடிய குரல் அல்ல அது. இப்பதிவில் எம்.ஜி.ஸ்ரீகுமாரின் சில பாடல்களும் அடக்கம்.

இதில் நிறைய லாலேட்டனுடைய பாடல்களைத் தந்திருக்கிறேன். கொஞ்சம் வினீத்தும். வடக்கன்வீர கதாவில் மட்டும் முகம்மது குட்டி மாதவிக் குட்டியுடன் நடித்தது.

முதலில் கிலுக்கம்!!

கிலுகில் பம்பரம்... சம்சகம்... ம்..ம்..ம்.. சம்சகம்..அதே கிலுக்கத்திலிருந்து.... மீனவேனலில்...இது ஒரு அற்புதமான பாடல். சரணங்களுக்கிடையில் வீணையின் துணையில் ஆளைக் கொள்ளை கொள்ளும் பாடல். ஸ்ரீவித்யா வீணை வாசிப்பது போல அபிநயிக்கும் கோபிகே நின்விரல்.....கோபிகா வசந்தம்.... கௌதமி கர்நாடகப் பாடகரான மோகன்லாலுடன் ப்ரேமையாய் நடித்த ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா...
கொச்சு மோனாக வினீத்தும் கொச்சு மோளாக மோனிஷையும் நடித்த இந்தப் பாடல் இரு இளசுகளின் காதல் விருந்து. நம் கண்களுக்கும் தான்... செவிக்கும் வைத்துக்கொள்வோமே!! மஞ்சள் ப்ரசாதவும்...பரதத்திலிருந்து கோபாங்கனே... சுரமுரளியில் ஒழுகும்..... ராதிகே வரு..வரு... ஓமணே வரு...வரு... நீலாம்பரியில்.......
காலாபாணியிலிருந்து மலையாள ஆலோலங்கிளி தோப்பிலே.... தமிழில் எஸ்.பி.பி குழைந்திருப்பார்!!... எம்.ஜி.ஸ்ரீயுடையது கொஞ்சம் ஸ்ட்ரைட்டாக இருக்கிறது.,.. பிரியதர்ஷனின் காமிராவுக்காகவே ஆயிரம் தடவை  பார்க்கலாம்...தூக்கிக் கட்டிய குடுமியுடன் மம்மூட்டியும் காந்தக் கண்ணழகி மாதவியும்.. ஒரு வடக்கன் வீர கதாவில்.. சந்தன லேப சுகந்தம்.... 


நெடிமுடி வேணு மேக்கபில்லாத ரம்பாவுக்கு கர்நாடக இசைக் கற்றுக்கொடுக்கும்... ஆந்தோளனம்... வினீத் மலையாள ராமராஜனாக நடித்த சர்க்கம் படத்திலிருந்து.....

எண்டே கேரளம்!!!

அடுத்த முறை தீந்தமிழ் பாடல்களோடு......

-

Thursday, September 8, 2011

லிஃப்ட் மாமா


"ஸார்! ஸார்!! என்னை சைதாப்பேட்டையில இறக்கிவுட்றீங்களா?”

“இல்லீங்க... நான் கிண்டி வரைக்கும்தான் போறேன்”

“சரி அப்ப கிண்டியில இறக்கி விடுங்க..” 

“இல்லீங்க எனக்கு அதுக்கு முன்னாடி ஆதம்பாக்கத்தில ஒரு சின்ன வேலை இருக்கு. அத முடிச்சிட்டு அப்புறம் தான் கிண்டி போவேன்”

“சரி அப்ப ஆதம்பாக்கத்தில இறங்கிக்கிறேன்”

விடாக்கொண்டனாக வண்டியில் தொற்றிக் கொள்வதற்கு நெற்றி பூரா பட்டையோடு நின்றார் அந்த மொட்டை மாமா. குழைத்துப் பூசியிருந்த பழனி சித்தனாதன் ஜவ்வாது விபூதி அரைக் கிலோ மீட்டருக்கு மணத்தது. அது மொட்டை மாதிரியும் இல்லை கிராப் மாதிரியும் இல்லை. ஒரு பத்து நாள் முடி வளர்ந்த முக்கால் மொட்டை அது. ஆங்காங்கே லேசாகத் தூவினாற் போல கருப்பு முடி. அடித்த வெய்யில் தலையில் சதும்பத் தடவிய தேங்காயெண்ணையில் பட்டுத் தெறித்தது. தோளில் போர்வையை மடித்துக் கை வைத்துத் தைத்த மாதிரி ஒரு ஜோல்னாப் பை. உபரி சாமான்களால் அரைப் பை நிரம்பியிருந்தது. அன்றைய ‘தி ஹிந்து’ சோனியாவுக்கு கட்டுப்பட்ட மன்மோஹன் படத்துடன் ஜோ.பைக்கு வெளியே அடங்காமல் துருத்திக்கொண்டிருந்தது.

தோளை அழுத்திப் பிடித்து பில்லியனில் ஏறும் போது மூவ் தடவியும் முட்டி வலிக்கும் வேதனையில் “ராமா..ராமா” என்று முனகினார். இரண்டு புறமும் காலைப் போட்டுக்கொண்டு முன்னும் பின்னுமாய் சீட்டில் அரைத்து அட்ஜஸ்ட் பண்ணி, வேஷ்டியை தூக்கி இழுத்து தொடை நடுவில் சொருகிக்கொண்டு லிஃப்ட் கொடுத்த மகானுபாவனை நகர்த்திப் பெட்ரோல் டேங்க்கிற்கு ஏற்றிவிட்டார்.

இவரை அடிக்கடி நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். காவிப் பற்களைக் காட்டி, ட்ரைவர் - கண்டக்டர் இருவர் மட்டும் உல்லாசப் பயணம் செல்லும் காலிப் பேருந்து அருகில் நின்றாலும், ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறி இறங்குவதற்கு ஸ்லோவாக டூவீலரில் செல்லும் அனைவரையும் தம்ஸ் அப் காண்பித்து நிறுத்துவார். ஒருவராகச் செல்லும் அனைத்து இருசக்கரமும் இவரைப் பொருத்தவரையில் தர்மசக்கரம். நான்குக்கு மூன்று பேர் அவருடைய தயவு கெஞ்சும் முகத்துக்கு தாட்சண்யம் பார்த்து “ம்.. ஏறிக்கிங்க” என்பார்கள். இவரது ”ராம ராமா”வுக்கும், “ஹம்மாடி”க்கும் அவ்வளவு மவுசு. பெரியவர் சிரமப்படுகிறார் என்று கிழக்கே போகவேண்டிய சஹ்ருதர்யர் ஒருவர் திசை மாறி தெற்கே பயணித்து இவரை வீட்டு வாசற்படியில் போன வாரம் இறக்கிச்சென்றார்.

“நா அந்தப் பக்கம் போகணும். நீங்க இங்க இறங்கிக்கிறீங்களா?” வலுக்கட்டாயமாக ஆதம்பாக்கத்தில் ரிலையன்ஸ் தாண்டி இறக்கி விட்டான்.

ஒரு முறை காலை ஊன்றி அரைவட்டமடித்து வந்த வழியே திரும்பியவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஏதோ ஒரு காகிதம் காற்றில் பறந்து வந்து அவர் காலடியில் தஞ்சமடைந்தது. அதை முட்டி வலிக்கக் குனிந்து எடுத்தார் லிஃப்ட் மாமா.

“தம்பி! தம்பி! நில்லுங்க!!” தொண்டைக் கிழிய உரக்கக் கத்தினார். வெறுமனே குரல் ஒருமுறை தெருவில் அலைந்து ஓய்ந்தது. வீதியில் சென்ற ஐந்தாறு வேறு தம்பிக்களும் சில தங்கைகளும் கூட திரும்பிப் பார்த்தார்கள். அவன் திரும்பவேயில்லை. உஹும். பலனில்லை. க்ஷண நேரத்தில் பறந்துவிட்டான்.

பறந்து வந்து காலடியில் விழுந்த காகிதம் ஏதோ புகைப்படம் போல இருந்தது. திருப்பிப் பார்த்தார். மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தார். எடுத்துச் சட்டைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டார். லிஃப்ட் கேட்பதற்கு பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே நடையைக் கட்டினார்.

***

”உங்களுக்கு எவ்ளோ தடவ சொன்னாலும் புத்தியில்லை. பல்லை ’ஈஈ...’ன்னு காட்டி இளிச்சுண்டு கண்ட கண்டவா பின்னாடி கையைக் காட்டி லக்கேஜ் மாதிரி ஏறி ஊர் சுத்தறத்துக்கு “அக்கடான்னு” ஆத்தில உக்காரப்படாதோ! அப்டி எந்த ராஜா எந்த பட்டணத்துக்கு வரான்னு இப்படி அலையறதுன்னேன்” என்று பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டாள் லல்லி மாமி. வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் அக்கம்பக்கம் யாரிடமும் வம்பு பேசக்கூடாது என்று டி.வி நியூஸில் இருந்து கண்ணை எடுக்காமல் லலிதா ஸகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிருந்தவள் வாசலில் புல்லட் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். கருங்குரங்கு மாதிரி சடை வைத்து காதில் கடுக்கன் போட்ட எவனோ ஒருவன் “நாளைக்கும் என் கூடவே வாங்கோ மாமா”னு அனுகூலமாய்ச் சொல்லி இறக்கிவிட்டு போனதும் பேயாய் ஆரம்பித்தாள்.

“இப்ப என்னாச்சு! மாசம் பூரா எல்லா இடத்துக்கும் லிஃப்ட்ல போனதில முன்னூறு ரூபா அம்பது காசு சேவிங்ஸ். தாராளமா ரெண்டு கிலோ காஃபிப் பொடி வாங்கலாம், டிகாஷன்ல ஜலம் விடாம ரெண்டாந்தரம் மூனாந்தரம் காஃபி குடிக்கலாம்” திறமையை புள்ளிவிவரமாக மாற்றி குடும்பத்தின் எக்கானமிக்கு தனது அரிய பங்களிப்பின் சிறப்பை எடுத்துரைத்தார்.

மாமிக்கு பொத்துக்கொண்டு வந்தது. “.....ணா. நா ரொம்ப பொமையா இருக்கேன்! வாயக் கிளறாதீங்கோ. உமியில அரிசி பொறுக்கற கும்பல்னு நீங்க தாலி கட்டறத்துக்கு முன்னாடியே எங்காத்ல எல்லாரும் தலைப்பாடா அடிச்சுண்டா. கேட்டாரா என் தோப்பனார். இப்டி ஒரு ’தொத்து’வியாதிக்கு கட்டி வச்சுட்டு கண்ணை மூடிட்டார்” என்று ஆத்துப்போனாள்.

”இப்ப என்னடி உங்காத்துப் பழம் பெருமை பாழாப் போறது. மனுஷன் அஞ்சாறு வண்டி ஏறி இறங்கி காலெல்லாம் விட்டுப்போய் வந்துருக்கேன். விண்விண்னு வலிக்கறது. ஒரு வா காப்பிக்கு வழியைக் காணும். நிலவாசப்படி தாண்ட விடாம குதிராட்டம் நின்னுண்டு சாயரட்சை நேக்கு ஸகஸ்ரநாம அர்ச்சனையா? வழியை விடுடி” மாமி தோளில் இடித்துக்கொண்டு உள்ளே வந்து கை கால் அலம்பிக்கொண்டு தோளில் காசித்துண்டோடு ஈஸிச் சேரில் சாய்ந்தார்.

ஒத்தரூபா குங்குமப்பொட்டு தீர்க்கசுமங்கலி பூக்காரி வந்து முக்கால் முழம் அளந்து முழுமுழத்துக்கு காசு வாங்கிக்கொண்டு போனாள். ஈஸி சேர் அசையாமல் இருந்தது. பக்கத்திலிருந்து ஒரு சுமங்கலிப் பொண்டுகளுக்கு தம்பதி சமேதராய் கூப்பிட வந்தார்கள். மாமியின் எகத்தாள “ஏண்ணா”க்கு கூட ஈஸி சேர் அசையாமல் இருந்தது. நாளைக்கு ஹேரம்ப விநாயகர் பஜனை மண்டலியில் எங்கோ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் என்று கூப்பிடவந்தார்கள். வளையல் ஜலஜலக்க பட்டுப்புடவை சரசரக்க மல்லிகை எட்டூருக்கு மணக்க மணக்க “மாவாவுக்கு என்ன இப்பவே தூக்கமோ?” என்ற வக்கீலாத்து மாமியின் வம்பு விஜாரிப்புக்கும் ஈஸி சேர் ஆடாமல் அசையாமல் இருந்தது.

ஆபிஸில் இருந்து ஒன்பது மணிக்குத் தான் வந்தாள் பூரணி. செருப்பை அவிழ்த்து ஸ்டாண்டில் சொருகிவிட்டு தோல்பையை கழற்றி சோஃபாவில் எறிந்தபோது காலைத் தூக்கி முக்காலி மேல் நீட்டிக்கொண்டு டி.வியில் தங்கம் பார்த்துக்கொண்டிருந்தாள் லல்லி மாமி.

“சாப்ட்டியா?”

“இல்லடி. இன்னும் இந்த மனுஷர் சாப்ட வரக்காணும். ஏழெட்டு வண்டியேறி ஊர் சுத்திட்டு வந்ததில அசதியா ஈஸி சேர்ல கட்டையை நீட்டி தூங்கியாறது”

“நீ அப்பாவைக் கூப்டியா?”

“ஊக்கும். என்னத்துக்கு. காலாகாலத்துக்கு ஆத்துக்கு வரமா ஊர் சுத்தின களைப்புல கண்ணை அசந்தாச்சு. வயத்துக்கு மணியடிச்சதுன்னா தன்னால சாப்ட வரார்.”

“என்னம்மா நீ! டெய்லி எட்டு மணிக்கெல்லாம் சாப்பிடுவார். இன்னமும் தூங்கறார்ங்கிற. எதாவது சண்ட கிண்ட போட்டியா?”

“அப்பறம். போடாம.. சாயரட்சை ஆறு மணிக்கு வாசல்ல வெளக்கு வச்சதும் வைக்காததுமா ஒரு கருங்குரங்கோட வண்டியில வந்து ஆத்து வாசல்ல இறங்கறார்! எவ்ளோ நாளைக்கு சொல்லியாச்சு! கண்டவா பின்னாடியெல்லாம் இதுமாதிரி பிச்சைக் கேட்டு உட்கார்ந்துண்டு வராதீங்கோன்னு. கேட்டாரா?”

“ச்சே அதுக்காக சண்டை போடுவியா? அவருக்கே உடம்பில ஏகப்பட்ட ப்ராப்ளம். பி.பி. ஷுகர்னு. இதுல நீ வேற எனக்கு கல்யாணம் பண்ணலையான்னு கேட்டு நித்யமும் அவரைப் பிச்சுப் புடுங்கிற. பாவம் தனியாளாய் அப்பா என்னதான் பண்ணுவார்?”

“வந்துட்டாடியம்மா. அப்பாச் செல்லம். போயி நீயே எழுப்பி அழைச்சுண்டு வா. நா தட்டை எடுத்து வக்கறேன். சாப்டுட்டு உள் அலம்பிவிட்டுட்டு படுத்துக்கணும்”

ஹால் ஓரத்தில் பெடஸ்டல் ஃபேன் காற்றை வீசியடித்துக்கொண்டிருந்தது. பக்கவாட்டிலிருந்து அவரது சாந்தமான முகம் குளிர் நிலவாகத் தெரிந்தது. மேலுக்கு காசித்துண்டோடு ஒரு பக்கம் தலையைச் சாய்த்து படுத்திருந்தார் பூரணியின் அப்பா. 

“அப்பா”

அசையவில்லை. பூரணிக்கு கொஞ்சம் அச்சமாக இருந்தது. இன்னொரு முறை அசைத்தாள்.

“அப்பா”

உஹும். பிடித்து லேசாக உலுக்கினாள். கண்ணத்தில் டப்டப்பென்று தட்டினாள். அசைவில்லை. ரத்தநாளங்கள் வெடித்துவிடும் போல இருந்தது. கையைப்பிடித்து முக்குக் கடைக்கு அழைத்துப் போய் ஃபைவ்ஸ்டார் வாங்கிக் கொடுத்தது ஞாபகம் வந்தது. ரெட் கலர் எஸ்.எல்.ஆர் சைக்கிள் வாங்கிக்கொடுத்து பின்சீட்டை பிடித்துக்கொண்டே “பார்த்து...பார்த்து.. நேராப் பாரு.. முதுகை நிமிறு” என்று வேஷ்டி அவிழ சாலையெங்கும் ஓடி வந்தது, மேஜர் ஆனதற்கு ஐந்து மாடி நகைக்கடைக்கு அழைத்துச் சென்று “அண்ணா.. ரொம்ப ஆறதே” என்ற அம்மாவின் சிணுங்கலையும் பொருட்படுத்தாமல் “நம்ம குழந்தைக்குத் தானே”ன்னு தேர் வடம் மாதிரி ரெட்டை வடம் செயின் வாங்கிப்போட்டு அழகு பார்த்தது.....

.....ட்யூஷன் போகும்போது தெருமுனையில் காலிப்பசங்கள் பின்னாடியே வந்து “பூரணி... நீ தான் என் இதயராணி” என்று கிண்டல் செய்ததில் ஒரு வாரம் ஆபீசுக்கு பர்மிஷன் சொல்லிவிட்டு நாலு மணிக்கே வந்து சைக்கிளை தள்ளிக்கொண்டே நடந்து துணைக்கு வந்தது, முதல் நாள் காலேஜில் கொண்டுபோய் விட்டுவிட்டு பக்கத்து பஸ் ஸ்டாப்பில் சாயந்திரம் வரைக்கும் கையோடு கொண்டுவந்திருந்த “பொன்னியின் செல்வ”னைப் படித்துக்கொண்டு தேமேன்னு உட்கார்ந்திருந்தது என்று சீன் பை சீனாக நினைவடுக்குகளில் நீந்தி வந்தது. அப்பா அன்பின் திருவுருவம். பிரியப் பிசாசு. ஒரு நாள் கூட அதட்டியது கிடையாது. அதிர்ந்து பேசியது கிடையாது. “கொழந்தைக்கு என்ன வேணும்?” என்று தலையைத் தடவி கேட்கும் போது அப்படியே மனசு விட்டுப்போய்டும். ”இது ஒன்னே போதும்”னு சொல்லத்தோணிடும்.

அப்பா எழுந்திரு. ப்ளீஸ் எழுந்திரு. அன்பின் திருவுருவமே எழுந்திரு. வானத்தின் நீலம் போல அவரோடு ஒட்டியிருந்தது பாசம். அம்மாவின் அத்தனை வசவுகளையும் சிரித்துக்கொண்டே சமாளிப்பார். “அவளுக்கு முடியலைம்மா!!” என்று சொல்லிவிட்டு கோயிலைப் பார்க்க போய்விடுவார்.

அப்பா “உன் செல்லம் வந்துருக்கேன்!!” எழுந்திறேன். ப்ளீஸ். ஒவ்வொரு பிடியா பிசிஞ்சு கையில போடேன் . நான் சாப்பிடறேன். வாப்பா... வா...

மீண்டும் கண்ணத்தில் டப்டப்பென்று தட்டினாள். உள்ளங்கை இரண்டையும் இறுகக் கோர்த்து எலும்பும் தோலுமாய்த் தெரிந்த நெஞ்சுக் கூட்டில் வைத்து அரைத்தாள். “ப்..பா.....ப்...ப்பா......” பூரணிக்கு இரைத்தது. வானம் கீழேயும் பூமி மேலேயும் பறந்தது.

“பா....பா...”

உஹும். அப்பா கடைசிவரை எழுந்திருக்கவேயில்லை.

“அப்..................பா..............”  கிறீச்சிட்டு அலறினாள்.

ஈஸி சேரின் துணிக்கும் கட்டைக்கும் நடுவில் அப்பாவின் தலை தொங்கியது.

இந்த அலறலைக் கேட்டு அடுக்களையிலிருந்து பூரணியின் அம்மா கொலுசு அதிர ஓடி வந்து எட்டிப்பார்த்தாள். லிஃப்ட் மாமா அசையவே இல்லை.

சுவற்றோரத்து நைலான் கொடி ஹாங்கரில் மாட்டிய அவரது வெள்ளைச் சட்டைப் பையில் இருந்து வெளியே எட்டிப்பார்த்த ஃபோட்டோவில் பூரணியும் காலையில் அவருக்கு லிஃப்ட் கொடுத்த இளைஞனும் காதலாய்ச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்!

பட உதவி: http://www.flickr.com/groups/fatherslove/pool/tags/blackandwhite/

-

Sunday, September 4, 2011

அண்ணாவுக்கு ஆசையாய் ஒரு கடிதம்


மேரே ப்யார் அண்ணா,

நமஸ்கார். நீங்கள் இந்தியாவின் ஊழல் அரக்கனை சம்ஹாரம் செய்யப் போராடினீர்கள். உண்ணா நோன்பிருந்து சத்யாகிரஹப் போராட்டம் நடத்தினீர்கள். நவீன இந்தியா கண்ட முழு ஆடை காந்தியாக திகழ்கிறீர்கள். ஏழைச் சொல் அம்பலம் ஏறாது என்பதற்கு மாறாக ஜனங்களுக்கான லோக் பால் மசோதாவை பாராளுமன்றத்தில் அரியணை ஏற வைத்தீர்கள். ராம் லீலா மைதானத்திலமர்ந்து லஞ்ச ராவணனை ஒழிக்கும் திட்டத்துக்கு வக்காலத்து வாங்கினீர்கள். அருந்ததி ராய் போன்ற புத்திஜீவிகளின் அறிவுசார் எதிர்ப்பைச் சமாளித்து வெற்றி பெற்றீர்கள். நமது பாரதத்திலிருந்து ஒளிபரப்பப்படும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் வாரத்திற்கு மேல் (ஒரு சனி, ஞாயிறு உட்பட) அயராது முழு நேரப் பணியாற்றினீர்கள். பத்திரிக்கை அன்பர்களின் பத்து நாள் செய்திப் பசிப்பிணி போக்கியருளினீர்கள். 

லஞ்சம், ஊழல் போன்ற தீய சக்திகள் இந்தியாவின் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக தக்காளி சட்னி போல நசுக்குபவை என்பதை ஆட்டோகாரர் முதல் ஆட்டோமொபைல் கம்பெனி நடத்தும் முதலாளி வரையிலும் உளமார உணரவைத்தீர்கள். “மம்மீ...டாடீ” மட்டுமே சொல்லத் தெரிந்த எல்.கே.ஜி பயிலும் மழலைகளைக் கூட “ஐ அம் அண்ணா” என்று டி-ஷர்ட், தொப்பி போட வைத்து பேச சக்தியளித்தீர்கள். மன்மோகன் சிங் மற்றும் அவரது சகாக்களின் தூக்கத்தைக் கெடுத்தீர்கள். போராட்டம் என்றால் கல்லெறி, பஸ் கண்ணாடி உடைப்பு, தீ வைத்தல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவைகளைத் தவிர்த்து வேறு என்னவென்று தெரியாத இளைஞர் பட்டாளத்துக்கு அறவழிப் போராட்டத்தின் லைவ் டெமோ தனியாளாய் காட்டினீர்கள். அனைத்திற்கும் நன்றிகள். வாழ்த்துகள்.

காவிக் கறையும் படிந்த அரசு அலுவலகத்தில் குண்டு ஊசி குத்துபவரிலிருந்து குளு குளு அறையில் இனிஷியல் மட்டும் போடும் பொதுத்துறை அதிகாரி வரை அனைவரையும் இந்த ஜன் லோக் பால் வட்டத்திற்குள் வளைக்கவேண்டும் என்ற உம்முடைய நோக்கம் சிறப்பானதே! சில சந்தேகங்கள்.

  1. இதுவரை திட்டம் போட்டுத் திருடியக் கூட்டத்தை இந்த லோக் பால் சட்டத்திற்குள் கொண்டு வர முடியுமா?
  2. ”நீங்க எங்களுக்கு இந்த ஆர்டர் கொடுத்தீங்கன்னா, உங்களோட பொண்ணுக்கு எங்க கம்பெனியில கியாரண்டியா வேலை தரோம்” போன்ற பண்ட மாற்று டீல்கள் இதற்குள் அடங்குமா?
  3. ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் எண்ணெற்ற கோடி ரூபாய்கள் இந்தியாவிற்குள் வந்தால் லிட்டர் பெட்ரோல் லிட்டர் மினரல் வாட்டர் விலைக்கு வாங்கலாமாம். அதற்கு எதாவது வழி உண்டா?
  4. அரசுத்துறையில் இருப்போர் லஞ்சம் வாங்கினால் மட்டும் தான் இது எடுபடுமா இல்லை தனியார்த் துறையில் இருப்போரையும் இதில் தூண்டிலிட்டு மாட்டலாமா?
  5. தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் திருவாளர் அல்பாசை பொதுஜனத்தின் மேலும் இச்சட்டம் பாய வாய்ப்பு உள்ளதா?
  6. சுங்கச்சாவடி என்று பத்தடிக்கு ஒரு தரம் தாராளமாக ஒரு சூப்பர் டீலக்ஸ் சொகுசு ஏர் பஸ் பயணக் கட்டணத்தை வசூலிக்கும் தங்க நாற்கர சாலை பராமரிப்பாளர்களை கூண்டில் நிறுத்த முடியுமா?
  7. சிறு சிறு காரணம் காட்டி ”உஹும்.. சரியில்லை.. ரிஜெக்ட்டட்” என்று சரியாக எட்டுப் போட்டாலும், துட்டுக் கேட்டால் பாலுக்கு போவேன் என்று சொல்லப் போகும் ”அண்ணா காந்தியவாதி”களை லைசென்ஸ் தராமல் ஹிம்சிப்பவர்கள் இதற்குள் அகப்படுவார்களா?
  8. லஞ்சம் வாங்காமல் தனக்கு வேண்டியப்பட்ட பந்துக்களின் பொது விதிமீறல்களை வேடிக்கை பார்க்கும் ஆபீசர்களுக்கும் இது பொருந்துமா?
  9. ஜன் லோக் பாலில் மூலாதாரமாக இருக்கும் எழுவர் குழுவின் நாணயக் கற்பை யார் மேற்பார்வையிடுவார்?
  10. போஃபர்ஸ் வழக்குகள் போல வெளிநாட்டினர் லஞ்சம் கொடுக்கல் வாங்கலில் தேசம் தாண்டி கடல் கடந்து ஈடுபட்டால் அவர்களையும் ஒரு கொக்கி போட்டு உள்ளே இழுத்து போட முடியுமா?
அண்ணா! ஒரு விஷயம் தெரியுமா? இதுவெல்லாம் லோக் பாலில் வர முடியாதோ என்று ஐயப்பட்டு என் சிற்றறிவு சிந்தனை செய்யும் போதெல்லாம் நிறைய 420 ஐடியாக்களாக வந்து குவிகிறது. ஆகையால் ஒரு கலக்கமான உள்ளத்தோடு இக்கடிதத்தை இத்தோடு நிறைவு செய்கிறேன்.

பாரத் மாதா கீ ஜெய்!!

வந்தே மாதரம்!!!

இப்படிக்கு,

(நீங்கள் யோக்கியதை இல்லை என்று பலர் நீரூபிக்க முயன்றாலும்)

தங்கள் மீது மிகுந்த மரியாதையுள்ள,

இந்தியக் குடிமகன்.

பட உதவி: http://www.indiaecho.com

ஒரு கேள்வி : ஒரு பதில்
இந்த லெட்டரை அண்ணா படிப்பாரா?
கஞ்சனூர் கடைத்தெருவில் நின்று கொண்டு “ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே!!” என்றும், “ஓபாமாவை நான் ஒன்று கேட்கிறேன்....” என்றும் கூம்பு ஸ்பீக்கர் கட்டி கோலி சோடா மீட்டிங்கில் தலைமை தாங்கி பேசுவதைப் போல இதை லைட்டாக எடுத்துக்கொள்ளவும். நன்றி

படிக்கும் பலே அண்ணாக்கள் பதில் சொன்னாலும் சரி!
-

Friday, September 2, 2011

உயிர் இணைப்பு

ஆட்கள் தெரிந்தும் தெரியாமலும் மை பூசினாற்போல அரை நிழலாய்த் தெரியும் மங்கலான வெளிச்சம். காக்கி வாடை பலமாக வீசும் விசாரணை அறை. அரைவட்டமாக பெஞ்ச் செய்து கம்ப்யூட்டர்களை ஆர்க்காக அடுக்கியிருந்தார்கள்.  ஒரு மலையாள தேசத்து “எந்து பறைஞு” ”ஞ.. ஞீ.. ஞு” என்று மூக்கால் பேசும் தாடி வைத்த மஃப்டி ஆள், பின் மண்டையில் பத்து கரப்பு ஸ்கௌட் முகாமிட்டு கரண்டினாற் போல ஒட்ட கிராப் அடித்த ஒருவர், ஸீசன் நேரத்துக் குற்றாலமாய் முகத்தில் கடமையுணர்ச்சி பொத்துக்கொண்டு வழியும் நாற்பது ஒன்று, ஸர்வீஸஸ் எக்ஸாம் முதல் ரேங்கில் பாஸ் செய்த டெக்னிகல் ஆபீசர் என்று குற்றங்களை கண்டுபிடித்து அலசி ஆராயும் உயர்மட்ட அதிகாரிகள் க்ரூப் அந்த எல்.இ.டி மானிட்டரை குத்திட்டுப் பார்த்து வட்டமிட்டு உட்கார்ந்திருந்தது.

அவர்களோடு சேர்ந்து அந்த வரிசையின் கடைசிச் சேரின் விளிம்பில் தொட்டுக்கோ துடைச்சுக்கோ என்று அந்த ப்ரகிருதியும் தேமேன்னு உட்கார்ந்திருந்தான். அவனை முழுசாப் பார்த்தால் உங்களுக்கு அப்படித் தெரியாது. ”இவனா இப்படி செய்தான்?” என்று கேட்டுவிட்டு “ச்சே..ச்சே... இது அபாண்டம் சார்!” என்று வாயைப் பிளந்து துலுக்காணத்தம்மன் கோயிலில் பொங்கலிடும் மஞ்சள் பெண்டிர் குலவை இடுவது போல அடித்துக்கொள்வீர்கள்.

”ஈயாளோ இங்ஙன ச்செய்து?!” என்ற ம.தேச சாயா ஒட்டிய தாடி மூடிய வாயிலிருந்து  அம்பு போல புறப்பட்ட வினாவிற்கு கரப்பு கிராப் ஆள் பூம்பூம் மாடு போல ஆமோதித்தான்.

“இது போல நடக்குமா?” நாற்பதின் விழியகல அடுத்த கேள்விக்கு விடையளிக்க பொம்மலாட்டத்தில் ஆட்டி விட்டது போல கடைசிச் சேரில் காத்திருந்தவன் தலையை ஆட்டினான்.

“இஸ் இட் போஸிபிள்?” வெள்ளைச் சட்டைப் போட்ட டெக்னிகல் ஆளை நோக்கி ’ஓ’வை அழுத்தி ஆங்கிலத்தைச் சிரமப்படுத்திக் கேட்டது மலையாளம். காம்பௌண்டை ஒட்டி டீக்கடை நடத்தும் நாயரும் அவரும் ரெட்டைப் பிள்ளைகள் போல இருந்தார்கள். பேசினார்கள். சிரித்தார்கள். தாடி வைத்திருந்தார்கள்.

“இவரு ஏதோ பெரிய எட்டுக்கு மூனு டப்பா கேட்டாரே அதை அங்கிருந்து கொண்டாந்துட்டீங்களா?” தூரத்தில் நிழலாய் நின்ற ஒருவரைப் பார்த்து ஏவினார் சீட் கொள்ளும்படி உட்கார்ந்திருந்த தொந்தியில்லா தலைமைக் காக்கி ஒருவர். வயிற்றில் வித்வான் போல கடம் தூக்கினால் வேலைக்கு கல்தா கொடுத்துவிடுவார்கள். இன்ச் அப்ரைஸர் என்ற விசேட ஊழியர் ஒருவர் மூலம் காவல் நிலையம் தோறும் அனுதினமும் பானை வயிறு அளக்கப்பட்டது. காவல் தொந்திக்கு கடும் சட்டம் இயற்றிவிட்டார்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது நெற்றி வியர்வை கிரௌண்டில் சிந்த நித்யபடி எக்ஸர்ஸைஸ் கட்டாயமாக்கப்பட்டது. தலையைக் குனிந்து தரையைப் பார்த்தால் கால் மணிக்கட்டு தெள்ளத் தெளிவாகத் தெரியவேண்டும் என்பது எழுதாத விதி.

“எஸ் ஸார்! ஆள் போயிருக்கு ஸார்! எடுத்துருப்பாங்க ஸார்! வந்து கிட்டே இருக்கு ஸார்!” என்று வார்த்தைக்கு ஒரு விரைப்புடன் நாவால் “ஸார்” என்கிற பதத்தை இஸ்திரி போட்டு உருவிவிட்டான் ஏவலுக்கு கட்டுப்பட்ட கழி தாங்கிய நிலைவாசல் காக்கி.

வாசலில் மழை சொட்டச் சொட்ட அந்த உயரதிகாரிகள் காவல் பரிபாலனம் செய்யும் அலுவலகம் நனைந்துகொண்டே அன்றைக்கு ஒரு ஆச்சரியமான நிகழ்வுக்கு காத்திருந்தது. மின்னல் ஆடிய டிஸ்கொதே நடனத்திற்கு இடி ஆதி தாளம் திஸ்ர நடையில் வாசித்தது. இக்கட்டுப்பாடு அறையின் கண்காணிப்பு கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து வீதிகளின் விசேஷங்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தது. இருளில் ஓரமாக ஜோடியாக ஒதுங்கியவர்கள் நடுரோட்டுக்கு கொண்டுவரப்பட்டார்கள். ஆளில்லாத தெருமுனையில் பேய் பிசாசுக்கு ஐஸ்க்ரீம் விற்றவன் பொட்டியோடு வேனில் ஏற்றப்பட்டான்.

ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் மின்சாரம் கூட ரிமோட்டாக ஊட்டப்படுகிறது. பவர் ஹப் சாதனம் ஓரிடத்தில் வைக்கப்பட்டு காற்றலைகளில் மின்சாரம் பறக்கவிடப்பட்டு கம்ப்யூட்டர்கள் அதை எலக்ட்ரிக் சென்ஸார் என்ற ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தன. அவைகள் ஒயர்களில் கட்டுண்டு கிடக்காத ஆத்ம சுதந்திரம் பெற்றன. ஆனால் பூமிப்பந்தில் மழை, காற்று, புயல், பூகம்பம், சுனாமி, குளிர் போன்று எதுவுமே துளிக்கூட மாறவில்லை.

உயரதிகாரி கேட்ட ”அந்த பெரிய டப்பா” வரும் வரை ”குற்றம் நடந்தது என்ன?” என்று இக்கதையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

**

கச்சலாக ஒடிந்து விழுவது போன்ற தோற்றம். மொத்தமாக ஜீன்ஸ் பனியன் மற்றும் தொடை சதைக் கறியுடன் சேர்த்து ஒரு நாற்பது கிலோ தேறுவான். தெரு நாய் கண்டால் நிச்சயம் துரத்தாமல் விடாது. கார்ட்டூனில் வரும் பொப்பாய் பொண்டாட்டியின் கரங்கள் போன்று ஈர்க்குச்சிக் கைகள். இடையோ சாமுத்ரிகா லக்‌ஷணம் அட்சரம் பிசகாமல் பொருந்திய பெண்களைப் போல தேடினாலும் கிடைக்காது. முப்பது இன்ச் சைஸ் பேண்ட் வாங்கி புது பெல்ட்டில் புதியதாக ஆணியால் ஓட்டைப் போட்டு இறுக்கி ப்ளீட் வைத்த அரக்குக் கலர் பட்டுப் பாவாடைப் போல கட்டிக் கொள்வான். பாங்க் அடித்த அகோரி போன்று கண்கள் எப்போதும் சொருகிய மோன நிலையில் மூடி இருக்கும். பழுப்பேறிய வெள்ளை ஸ்போர்ட்ஸ் ஷு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலை நரைத்தும் கலைந்தும் இன்னமும் தனக்கு ஒரு கல்யாணம் காட்சி காணாதவன். விஞ்ஞானி லுக்.

அவன் புதுசு புதுசாக கண்டுபிடித்து அற்புதங்கள் நிகழ்த்தும் கம்ப்யூட்டர் என்ஜினியர். கணினியின் கருப்பையில் இருக்கும் ஒவ்வொறு பிட்டும் பைட்டும் அவனிடம் மனம் திறந்து பேசும். கைநிறையக் கணினித் தந்திரங்கள் கற்று வைத்திருந்தான். கீபோர்டில் விரல்கள் ஒரு தேர்ந்த பியானோ கலைஞனைப் போல விளையாடும். அஸாத்ய சாதகம். மௌஸ் மௌனமாக இதைப் பக்கத்தில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும். முக்கால்வாசி நேரம் கிளிக் செய்யாமல் கன்சோலில் அம்புட்டு ஜோலியையும் கச்சிதமாக முடித்துவிடுவான். 

ஒரு நாள் காலை தெருக்கோடியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடி போர்ஷனில் ஜாகையிருக்கும் ரிடையர் மிலிட்டரி ஆபீஸர் பாச்சு மாமா  “டேய்! அவனைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம்? அவன் ஐ.ஐ.டியில ஐ.டியில கோல்ட் மெடலிஸ்ட். ஒன்னாவதுலேர்ந்து அவுட்ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட். நீங்கல்லாம் கிளாஸை விட்டு எப்போதும் அவுட்ல ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட். சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இங்க்லேண்ட்லேர்ந்தெல்லாம் அவனைக் கொத்திண்டு போறதுக்காக அவாத்து வாசல்ல கழுகாக் காத்துண்டிருந்தா. பழியாக் கிடந்தா. இந்த அபிஷ்டு அத்தையெல்லாம் அப்ப கோட்டை விட்டுடுத்து. இப்ப கிடந்து இங்க நூறு இருநூறுக்கு அல்லாடறது” என்று வண்டிவண்டியாய் சொல்லிக்கொண்டே போனார். அங்கில்லாத அவன் கழுத்து ஒடியும் வரை பாரமாக புகழாரம் சூட்டினார். 

மென்பொருள் துறையில் கனகதாரா ஸ்தோத்திரம் வாசிக்காமல் லக்‌ஷ்மீ குபேர யந்திரம் வைக்காமல் காசு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது என்று அரசாங்கம் அத்துறையை கைப்பற்றிக் கொண்டு தனியார் நிறுவனங்களை அஞ்சு பைசா பத்து பைசா பிசாத்துக் காசு கொடுத்து வீட்டுக்கு விரட்டிவிட்டார்கள். அவர்களும் வம்பெதற்கு என்று பொட்டி கட்டிக்கொண்டு அயல்தேசம் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.

இல்லையென்றால் அவனுக்கு கண்ணைக் கவரும், நெஞ்சையள்ளும் அழகுப் பெண்கள் ”யேய்... வாட் யா..” என்று பேண்ட்ரியில் டீக் குவளையுடன் சினுங்கி தஸ்புஸ்ஸென்று பீட்டர் விடும் ஏதாவது வழுவழு கண்ணாடித் தரையும் திரைச்சீலை தொங்கும் கேபினும் கொண்ட சீமைத் துரைமார்கள் கம்பெனியில் நித்யப்படி டரைவரோடு காரும், வாரயிறுதில் குடம் குடமாக பீரும் கொடுத்து ஷேமமாக வைத்துக் கொண்டிருப்பார்கள். கார்ப்படி, வீட்டுப்படி, சலவைப்படி, சாப்பாட்டுப்படி என்று சகலத்திற்கும் குஷன் சேரில் உட்காரவைத்து ராஜா போலப் படியளந்திருப்பார்கள்.

அப்பா, அம்மா, தங்கை என்ற 800 சதுர அடி சிங்கிள் பெட்ரூமில் ஒருவரோடொருவர் தலை கால் இடிக்க படுத்துறங்கும் பொட்டிப்பாம்பாக அடங்கும் ஒரு மைக்ரொ குடும்பம். காலையில் ஸி.டி ப்ளேயரில் விஷ்ணு சஹஸ்ர நாமம், இட்லி, தோசை தொட்டுக்க சட்னி, மத்தியானம் கரமது, சாத்தமது, தெத்தியோன்னம், இரவில் சப்பாத்தியோ, கோதுமை தோசையோ அப்புறம் சித்த நாழி டி.வியில் சீரியல், ஆறு மணி நேர தூக்கம், மறுபடியும் அதிகாலை ஐந்து மணி அலாரம், விஷ்ணு சகஸ்ர நாமம், இட்லி என்று அவன் மத்தியதர வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கேசவனின் இப்படியான அதிஷேமமான சராசரி அன்றாட வாழ்க்கையில் புயல் வந்து வீசியது போல அந்த நிகழ்ச்சி ஒரு நாள் நடந்துவிட்டது.

வழக்கம்போல அன்றைக்கும் சக்கரத்தாழ்வாரைக் கும்பிட்டுவிட்டு நெற்றி நிறைய ஸ்ரீசூர்ணமும் நெஞ்சு நிறைய பயபக்தியோடுதான் அலுவலகம் செல்ல படியிறங்கினான். சர்க்கார் நடத்தும் அதி நவீன சரக்குக் கடையை கடந்தவுடன் வரும் வலது கை திருப்பத்தில் மூச்சுக்கு முன்னூறு தரம் “..த்தா” என்று கெட்டவார்த்தை பேசும் திடகாத்திரமான இரண்டு பேர் இவனை உருட்டுக்கட்டையோடு வழிமறித்தார்கள். பூப்பறிக்க கதாயுதம் ஏந்தி வந்தார்கள். அதில் ஆஜானுபாகுவாக ஹிப்பி வைத்திருந்தவன் தெனாவட்டாகக் குரல் விட்டான் “யேய்.. நீ என்னமோ கம்ப்பூட்டர்ல பெரீய்ய பிஸ்த்தாமே! எங்கூட வா ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டி இருக்கு”. கண்ணை உருட்டி பார்த்துவிட்டு அங்கிருந்து நழுவ எத்தனித்தான் கேசவன். உடனே பக்கத்தில் கட்டக்குட்டக்க கர்லாக்கட்டை மாதிரி இருந்தவன் “...த்தா... சொன்னது காதுல வுலலை.. நீ என்ன டமாரமா.. கய்தே வாடான்னா.. எஸ்கேப் ஆவ பார்க்கிறியா? ” என்று கரகரத்தான். கையைப் பிடித்து மிரட்டியபடியே தரதரவென்று இழுத்தான். அவனது ”கய்தே”யின் ஸ்பஷ்டமான் உச்சரிப்பு  அவன் தொழில்முறை அடியாள் என்பதை நூற்றுக்கு நூறு ஊர்ஜிதப்படுத்தியது.

“என்னை விடுங்கோ! நேக்கு ஒன்னும் தெரியாது.. நாராயணா” என்று கையை உதறி அம்மாஞ்சியாய் மன்றாடினான் கேசவன்.

“யார்ரா...அது நாராயணா.. உன்னோட அடியாளா? தோ.. பார்ரா.....” என்று கையால் அழகு காண்பித்து எகத்தாளமாக ஹிரன்யகசிபு போல சிரித்தார்கள்.

“நாராயணா.. நாராயணா” என்று படபடவென்று பட்டாம்பூச்சியாய் அடித்துக் கொண்ட மனதிற்குள் கைகூப்பி சேவித்தான். அட்ரிலின் அளவுக்கு அதிகமாக ஆறாய் சுரந்தது. வியர்வையில் போட்டிருந்த காட்டன் சட்டை தொப்பலாக நனைந்தது. உஹும் பலனில்லை. ஆண்டவனும் காப்பாற்றவில்லை அடியாளும் விடவில்லை.

ஒரு ஆளரவம் இல்லாத அத்துவான காட்டிற்கு கடத்திச் சென்றார்கள். வெளிப்புற சுவர்கள் பாசியேறி, திறந்தால் “க்ரீச்”சைக் கூட சன்னமாக அழத்தெரியாத துருப்பிடித்த கிரில் கம்பி கேட்டும் அது ஒரு நூறு வயசான பேய் பங்களா என்பதற்கு கட்டியம் கூறியது. அந்த வீட்டின் மதிலை ஒட்டியிருந்த யூக்கிலிப்டஸ் மரங்கள் உதிர்த்திருந்த இலைச்சருகுகளில் சரசரக்க நடந்தார்கள். தலைவலித் தைலம் வாசம் குப்பென்று ஆளைத் தூக்கியது.

விசாலமான நிலைவாசல் தாண்டியதும் ஐந்தாறு பிக்கினி லேடீஸ் அவனைப் பார்த்து அசிங்கமாக சிரித்துக் கொண்டே காட்டக் கூடாததையெல்லாம் காட்டிக்கொண்டே ஹால் சோஃபாவில் இருந்து எழுந்து விழுந்தடித்துக் கொண்டு மிச்சம் மீதமிருந்த ஆடை நழுவ உள்ளே ஓடினார்கள். அவர்களுக்குப் பின்னால் அரைகுறையாய் ஆடையணிந்த ஒருவன் மாடு போல “ஹை..ஹை..” என்று கையை உயர்த்தி அவர்களைப் பிருஷ்டத்தில் செல்லமாகத் தட்டி ஓட்டிக்கொண்டே துரத்தினான். அந்தப் பெண்டிர் துளிக்கூட லஜ்ஜையே இல்லாமல் நாக்கை வெளியே நீட்டியும், துருத்தியும் அசிங்க அசிங்கமாக பல சேஷ்டை சைகைகள் செய்தார்கள். இவனுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது.

ஜீரோ வாட் எரியும் பக்கத்து அறையில் இருந்து மாரில் பொசுபொசுவென்று சுருட்டை மயிர் தெரிய சட்டை போடாமல் பெர்முடாஸ் மட்டும் போட்டுக்கொண்டு வலது காதில் வளையம் போட்டவன் ஒருவன் சூயிங்கம் வாயோடு வெளிப்பட்டான். அவன் முகத்தில் பணக்காரத்தனம் தெரிந்தது. நடையில் சர்வாதிகாரத்தனம் தெரிந்தது. செய்கையில் கயவாளித்தனம் இருந்தது. ஏதோ கெட்டகாரியம் செய்து நாலு காசு பார்ப்பவன் என்று முகத்தில் வர்ச்சுவலாக அடித்து ஒட்டியிருந்தது. அந்த பேட் பாய்ஸ் குழுவினர் அரசாங்கத்திற்கு தெரியாமல் ஏய்த்துப் பிழைக்கிறார்கள் என்பது சர்வ நிச்சயம்.

“வாட் மேன்.. ஒழுங்கா கூப்டா வரமாட்டியா.. நீ வரலை உன் தங்கச்சியை இப்ப சிலுப்பிக்கிட்டு போனாளுங்களே அவளுக மாதிரி பின்னாடித் தட்டி ஓட்டச் சொல்லட்டா” என்று சொல்லிவிட்டு நடுவிரலை அசிங்கமாக  ஆட்டிக் காண்பித்தான். அப்போது அவன் விரலை ஆட்டியதை விட இடுப்பை ஆட்டியது இன்னும் படு அசிங்கமாக இருந்தது. கேசவன் பகவானை நினைத்துக் கண்களை மூடிக்கொண்டான்.

” உன்னோட ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆயிடிச்சா?”

“எ-ந்-த  ப்-ரா-ஜெ-க்-ட்?”

”ஏதோ இண்டெர்நெட்ல அனுப்புறதுக்கு புதுசா கண்டுபிடிச்சிருக்கியாமே”

“என்னது?”

”ஒழுங்கா கேட்டா சொல்லமாட்டே. குடுக்கறதைக் குடுத்தா தன்னால சொல்லுவ”

”நீங்க எதை சொல்றேள்னு புரியலை” என்று மருளப் பார்த்தான் அந்தக் கால் சட்டைக்காரனை.

”நீ ப்ராக்டீஸ் செய்யும் அந்த கூண்டை எடுத்துக்கிட்டு வந்தாச்சு... அங்கே பார்” என்று அறை மூலையில் காட்டினான்.

எவர் சில்வர் பிரேமில் ஏழடி உயரத்திற்கு நின்று குளிக்க தோதாக ஒரு கண்ணாடி கேபின் போல நிறுத்தியிருந்தார்கள்.  ஒரு தடியாள் சீட்டியடித்து இஷ்ட பாடலை பாடிக்கொண்டு உள்ளே தாரளமாக குளிக்கக்கூடிய அகலம் கொண்ட அறை அது.

உயிருள்ள ஆட்களை ஸ்கான் செய்யும் லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானர் என்பது, அப்படியே ஒரு முழு ஆளை உள்ளே அனுப்பினால் செல் செல்லாக படி எடுத்து Human Cell Zipping (HCZ) compression algorithm ல் சுருக்கி பூஜ்யம் ஒன்றாக்கி டிஜிடெல் பைலாக கம்ப்யூட்டருக்குள் கொண்டு வந்து விடலாம். அப்படி சுருக்கிய ஃபைலை ஈமெயிலில் அட்டாச் செய்தால் அண்டபகிரெண்டம் எங்கும் பாஸ்போர்ட், விஸா இல்லாமல் ஒயர்கள் வழியாக பயணிக்கலாம். சோதனை முயற்சியாக முந்தா நாள் லேபிள் துணைக்கு உட்கார்ந்திருந்த புஸ்ஸி கேட் அட்டாச்மெண்ட் இன்னமும் ட்ராஃப்டில் டெலீட் ஆகாமல் பத்திரமாக தூங்குகிறது.

பகீரென்று ஆகிவிட்டது அவனுக்கு. இவர்களுக்கு எப்படி இந்த ஸ்கானர் கிடைத்தது. அலுவலக அற்பர்கள் எவரோ இதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறார்கள். இதை கொஞ்சம் புத்தியை செலவழித்துதான் சமாளிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

“இப்ப என்ன பண்ணனும்?” பாதி வார்த்தைகளை மென்று விழுங்கி பேசினான்.

”இப்ப உள்ள ஓடினாளுவளே அவளுங்களை உடனே அமெரிக்கா அனுப்பனும். அனுப்பிடு”

“உஹும்... முடியாது... நா மாட்டேன்...”

“டேய்.. சொன்னா கேட்கமாட்டே!”

”இல்ல இதே மாதிரியான இன்னொரு ஆப்ஜெக்ட் ஸ்கானர் ரிசீவிங் எண்ட்ல இருந்தாதானே அவங்களை வெளியில எடுக்க முடியும்?”

“உன் கேள்வி நல்லாத் தான் இருக்கு. உனக்கு இத செஞ்சு குடுத்தானே உன்னோட ஹார்ட்வேர் தோழன் அவனை ரெண்டு மாசத்துக்கு முன்னாலையே வளைச்சாச்சு. இப்போ அவன் அமெரிக்காவுல வெள்ளக்காரி தோள் மேல கைபோட்டு உட்கார்ந்து பீர் குடிச்சுகிட்டு இருக்கான். இதே ஸ்கானரை அங்க ரெடியா செஞ்சு வச்சுக்கிட்டு அதோட டிவைஸ் ட்ரைவர் சகிதம் இன்ஸ்டால் பண்ணிட்டு எப்படா மெயில்ல மயிலுங்க வரும்னு காத்துக்கிட்டு இருக்கான்”

ரத்த நாளங்களில் விருவிருவென்று மின்சாரம் ஏறியது. இனியும் இந்த தேசத்தில் மற்றுமொறு அநியாயப் புரட்சி நடக்க இடம் கொடுக்கக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானம் செய்தான்.

“சரி. ஒவ்வொருத்தரா வரச்சொல்லுங்க. டிவைஸ் ட்ரைவர் வேணுமே? ஆபீஸ்ல தானே இருக்கு”

“மச்சி.. அல்லாத்தையும் கொண்டாந்துட்டோம். அங்க பாரு” என்று கால்சட்டைக்காரன் கைகாட்டிய இடத்தில் புலம் பெயர்ந்திருந்தது Intel Inside போட்டிருந்த கேசவனின் கம்ப்யூட்டர் தனது கீபோர்டு,மௌஸ் மற்றும் தனது பரிவாரங்களுடன்.

ஒவ்வொருவராக அழைத்து வந்து கூண்டில் நிறுத்தினார்கள். பாதத்தில் இருந்து உச்சி வரை அரை நொடியில் செல்செல்லாக உருவி அவர்கள் நின்ற இடத்தை வெற்றிடமாக்கியது. ஒவ்வொரு ஜிப் பைலுக்கும் க்ளாரா, சாந்தா, கீவா என்று அர்த்தப்பூர்வமாகப் பெயரிடச்சொன்னான். இப்போது மெயிலில் ஒரு சொடுக்கலில் அட்டாச் செய்துவிட்டால் அழகிகளை அங்கே அனுப்பிவிடுவார்கள். ஒரு கணம் என்ன செய்வதென்று யோசித்தான். ஆளை உயிரோடு ஜிப்பாக்கும் அந்த அதிசய சாஃப்ட்வேரின் பக்கதுணையான ஒரு டி.எல்.எல் ஃபைலை கம்ப்யூட்டரின் வேறிடத்திற்கு ஒதுக்கினான்.

கடைசியாக ஒரு பேரிளம் பெண் ஒருத்தியை கொண்டு வந்து லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரில் நிறுத்தி

“உம்... இழுத்துப் போடு” என்று விரட்டினான்.

“இல்ல... வொர்க் ஆக மாட்டேங்குது.. ஏதோ கரப்ட் ஆயிடுச்சு”

“எதாவது சதி பண்றியா? மவனே உயிரோட வெளிய போமாட்டே! ஜாக்கிரதை” கண்களில் வெறி தெறிக்க கத்தினான்.

“இல்லங்க.. ஏதோ ஆயிடிச்சு... ஒரு நிமிஷம் அந்த ஸ்கானர் கேபினுக்குள்ள சென்ஸார் எதாவது அடச்சிருக்கான்னு பார்க்க முடியுமா?” கெஞ்சினார்போல கேட்டான்.

அரைடிராயருடன் அவசரவசரமாக உள்ளே சென்றான். கால் நிஜார் போட்ட வாழைத்தண்டு கால் நீண்ட அந்த அழகியை உரசியபடி ஸ்கானர் கேபினுக்குள் உட்கார்ந்து எழுந்து சுற்றும் முற்றும் தனக்கு கொஞ்சம் கூட பரிச்சியமில்லாத சென்ஸார்களை தடவித் தடவிப் பார்த்தான். எழுந்து நின்று கண்ணாடி வழியாக கேசவனைப் பார்த்து ஒன்றும் இல்லை என்ற தோரணையில் கையை ஆட்டினான். ஆட்டிக் கொண்டே இருக்கும் போதே ஸ்கானர் இயங்க ஆரம்பித்தது. கால் கரைவது போல உணர்ந்தான். அங்கே என்ன நடக்கிறது என்று அவனது புலன்கள் விழித்துக்கொள்வதற்குள் அந்த கொக்குக் கால் அழகியோடு அவனும் சேர்த்து ஒரு காக்டெயில் டிஜிட்டல் ஃபைலாக கம்ப்யூட்டருக்குள் சுருண்டிருந்தான்.

அனைத்து ஃபைல்களையும் மெயிலில் இணைத்தான். பக்கத்தில் கிடந்த சாட்டிலைட் போனால் காவல்துறை தலைமையகத்திற்கு ஃபோன் போட்டு விவரம் சொல்லிவிட்டு காந்திருந்தான். சற்று முன்னர் வந்த தொலைபேசி அழைப்பின் நகரம், வீதி, வீட்டு எண் என்ற விவரங்களை ஆன்லைனில் பெற்றுக்கொண்டு ”பாம்..பாம்..பாம்..” என்று சைரனொலிக்க இரண்டு அதிவேக ஏர்-ஜீப்களில் அடுத்த பத்து நிமிடங்களில் வந்திறங்கினர். அப்புறம் இப்போது நீங்கள் பார்க்கும் இந்த காவல் நிலையத்தில் பாதி சேரில் சங்கோஜமாக உட்கார்ந்திருக்கிறான்.

**


“இத நீங்க டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டீங்களா?” டெக்னிகல் ஆள் மூலாதாரக் கேள்வியைக் கேட்டான்.

“ம்.”

“எத வச்சு”

“ஒரு புஸ்ஸி கேட் என்னோட மொபைல் போனை அப்புறம் ஒரு  கில்லட் ரேசர்  ”

“ஜிப் ஆச்சா?”

“ஜிப் ஆயி மறுபடியும் அன் ஜிப் பண்ணி வெளியில எடுத்தேன்”

“யார் ஐ.டிக்கு மெயில் அனுப்பினீங்க?”

“என்னோட ஐடியில ட்ராஃப்ட்ல இருக்கு.”

அந்த கண்ணாடிப் பொட்டி கொண்டு வந்து பக்கத்தில் நிறுத்தப்பட்டது. தேவையான சாஃப்ட்வேர் அதை இணைத்த கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டது. செப்பிடு வித்தை காண்பிக்கும் மோடி மஸ்தானை சுற்றி தாயத்து கட்டிக்கொள்ள நிற்கும் கும்பல் போல பக்கத்தில் ஒரு குழுவினர் நின்று வேடிக்கைப் பார்த்தனர்.

ட்ராஃப்ட்டில் இருந்து ஒவ்வொரு ஃபைலாக தரவிறக்கினான்.
"Process" என்ற ஃபோல்டருக்குள் காப்பி செய்தான்.
லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரை ஆன் செய்து ரீசிவர் மோடுக்கு மாற்றினான்.
”1%...............30%....................64%................81% Completed” என்று ப்ராஸஸ் தத்தி தடுமாறி நடந்து கொண்டிருந்தது.

"100% Completed" என்ற செய்தி திரையில் வந்து விழுந்தவுடன் லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரில் “மியாவ்” சத்தம் கேட்டது. ஒரு பூனை கோலிக் குண்டு கண்களை உருட்டி பார்த்து மிரட்சியுடன் ஸ்கானர் கூண்டுக்குள் அலைந்தது.

வெற்றிப் புன்னகை பூத்தான் கேசவன். அடுத்தடுத்த ப்ராஸசிங்கில் கில்லட் ரேஸரும் மொபைல் போனும் தொப் தொப்பென்று வெளியே வந்து விழுந்தது.

க்ளாரா ஃபைலை ப்ராஸஸ் செய்ய எடுக்கும் போது வயோதிகர்கள் அடிக்கொருதரம் நின்று நின்று நடப்பது போல சிரமமாக முனகியது.

1%...................................................................................
......
......
......
13%..................................................................................
......
......
......
.....
72%......................................................................................
.....
.....
.....
......
100%  Completed.

என்கிற செய்தி வந்து ஸ்கிரீனில் அலைமோதியது.

அந்தக் கண்ணாடி பொட்டியில் வினோதமான ஒரு உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

க்ளாராவின் கை இருந்தது. கால் இருந்தது. தலை இருந்தது. முகத்தில் கண் இருக்கவேண்டிய இடத்தில் இமை இருந்தது. இமையிடத்தில் கண் இருந்தது. வாய் மூக்கின் இடத்தை பிடித்துக்கொண்டது. மூக்கு நடு நெற்றியில் திலகமாக ஜொலித்தது. முதுக்கு பின்னால் நடு சென்ட்டரில் ப்ருஷ்டம் மாட்டியிருந்தது. இடுப்பில் ஸ்தனங்கள் குடியேறியிருந்தன. அங்க அவயங்களை ஆங்காங்கே பிய்த்து பிய்த்து ஒட்டவைத்தது போன்ற ஒரு அவலட்சணமான தோற்றம்.

வேடிக்கை பார்த்த கும்பலுக்கு சப்த நாடியும் அடங்கியது. கேசவனுக்கு தலைகால் ஒன்றும் புரியவில்லை. மீண்டும் ஒரு முறை ஆப்ஜெக்ட் ஸ்கானரை “ஸ்கான்” மோடுக்கு மாற்றி க்ளாராவை கம்ப்யூட்டர் உள்ளே ஸ்ட்ரா போட்ட இளநீராய் உறிஞ்சிவிட்டான்.

”என்னாச்சு?” பதறினார் தோள்பட்டையில் ஸ்டார் மின்னிய அதிகாரி.

“இல்லை.. கம்ப்ரஷன் அல்காரிதம் கொஞ்சம் சொதப்பிடுச்சு... பைட்ஸ் அர்ரே டிஸாடர்... ஸி.ஆர்.ஸி செக் இல்லாம சுருக்கியதினால் விரிப்பதில் ப்ராப்ளம்...” என்று வரிசையாக டெக்னிக்கலாக புலம்பித்தீர்த்தான்.

கேசவனையே பார்த்துக்கொண்டு அனைத்து ஆபீசர்களும் அலர்ட்டாக நின்றுகொண்டிருந்தனர்.

க்ளாரா மற்றும் மீதமிருந்த டூ பீஸ் ஹுக்கர் பெண்கள் இறந்தார்களா இல்லை உயிரோடு மெயிலில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார்களா? இது கொலையா இல்லை.........

அப்படியே உறைந்து போய் நின்றார்கள்!!!

பின் குறிப்பு:  இந்தக் கதை வல்லமையில் வெளிவந்துள்ளது.
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails