Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, September 4, 2011

அண்ணாவுக்கு ஆசையாய் ஒரு கடிதம்


மேரே ப்யார் அண்ணா,

நமஸ்கார். நீங்கள் இந்தியாவின் ஊழல் அரக்கனை சம்ஹாரம் செய்யப் போராடினீர்கள். உண்ணா நோன்பிருந்து சத்யாகிரஹப் போராட்டம் நடத்தினீர்கள். நவீன இந்தியா கண்ட முழு ஆடை காந்தியாக திகழ்கிறீர்கள். ஏழைச் சொல் அம்பலம் ஏறாது என்பதற்கு மாறாக ஜனங்களுக்கான லோக் பால் மசோதாவை பாராளுமன்றத்தில் அரியணை ஏற வைத்தீர்கள். ராம் லீலா மைதானத்திலமர்ந்து லஞ்ச ராவணனை ஒழிக்கும் திட்டத்துக்கு வக்காலத்து வாங்கினீர்கள். அருந்ததி ராய் போன்ற புத்திஜீவிகளின் அறிவுசார் எதிர்ப்பைச் சமாளித்து வெற்றி பெற்றீர்கள். நமது பாரதத்திலிருந்து ஒளிபரப்பப்படும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் வாரத்திற்கு மேல் (ஒரு சனி, ஞாயிறு உட்பட) அயராது முழு நேரப் பணியாற்றினீர்கள். பத்திரிக்கை அன்பர்களின் பத்து நாள் செய்திப் பசிப்பிணி போக்கியருளினீர்கள். 

லஞ்சம், ஊழல் போன்ற தீய சக்திகள் இந்தியாவின் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக தக்காளி சட்னி போல நசுக்குபவை என்பதை ஆட்டோகாரர் முதல் ஆட்டோமொபைல் கம்பெனி நடத்தும் முதலாளி வரையிலும் உளமார உணரவைத்தீர்கள். “மம்மீ...டாடீ” மட்டுமே சொல்லத் தெரிந்த எல்.கே.ஜி பயிலும் மழலைகளைக் கூட “ஐ அம் அண்ணா” என்று டி-ஷர்ட், தொப்பி போட வைத்து பேச சக்தியளித்தீர்கள். மன்மோகன் சிங் மற்றும் அவரது சகாக்களின் தூக்கத்தைக் கெடுத்தீர்கள். போராட்டம் என்றால் கல்லெறி, பஸ் கண்ணாடி உடைப்பு, தீ வைத்தல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவைகளைத் தவிர்த்து வேறு என்னவென்று தெரியாத இளைஞர் பட்டாளத்துக்கு அறவழிப் போராட்டத்தின் லைவ் டெமோ தனியாளாய் காட்டினீர்கள். அனைத்திற்கும் நன்றிகள். வாழ்த்துகள்.

காவிக் கறையும் படிந்த அரசு அலுவலகத்தில் குண்டு ஊசி குத்துபவரிலிருந்து குளு குளு அறையில் இனிஷியல் மட்டும் போடும் பொதுத்துறை அதிகாரி வரை அனைவரையும் இந்த ஜன் லோக் பால் வட்டத்திற்குள் வளைக்கவேண்டும் என்ற உம்முடைய நோக்கம் சிறப்பானதே! சில சந்தேகங்கள்.

  1. இதுவரை திட்டம் போட்டுத் திருடியக் கூட்டத்தை இந்த லோக் பால் சட்டத்திற்குள் கொண்டு வர முடியுமா?
  2. ”நீங்க எங்களுக்கு இந்த ஆர்டர் கொடுத்தீங்கன்னா, உங்களோட பொண்ணுக்கு எங்க கம்பெனியில கியாரண்டியா வேலை தரோம்” போன்ற பண்ட மாற்று டீல்கள் இதற்குள் அடங்குமா?
  3. ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் எண்ணெற்ற கோடி ரூபாய்கள் இந்தியாவிற்குள் வந்தால் லிட்டர் பெட்ரோல் லிட்டர் மினரல் வாட்டர் விலைக்கு வாங்கலாமாம். அதற்கு எதாவது வழி உண்டா?
  4. அரசுத்துறையில் இருப்போர் லஞ்சம் வாங்கினால் மட்டும் தான் இது எடுபடுமா இல்லை தனியார்த் துறையில் இருப்போரையும் இதில் தூண்டிலிட்டு மாட்டலாமா?
  5. தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் திருவாளர் அல்பாசை பொதுஜனத்தின் மேலும் இச்சட்டம் பாய வாய்ப்பு உள்ளதா?
  6. சுங்கச்சாவடி என்று பத்தடிக்கு ஒரு தரம் தாராளமாக ஒரு சூப்பர் டீலக்ஸ் சொகுசு ஏர் பஸ் பயணக் கட்டணத்தை வசூலிக்கும் தங்க நாற்கர சாலை பராமரிப்பாளர்களை கூண்டில் நிறுத்த முடியுமா?
  7. சிறு சிறு காரணம் காட்டி ”உஹும்.. சரியில்லை.. ரிஜெக்ட்டட்” என்று சரியாக எட்டுப் போட்டாலும், துட்டுக் கேட்டால் பாலுக்கு போவேன் என்று சொல்லப் போகும் ”அண்ணா காந்தியவாதி”களை லைசென்ஸ் தராமல் ஹிம்சிப்பவர்கள் இதற்குள் அகப்படுவார்களா?
  8. லஞ்சம் வாங்காமல் தனக்கு வேண்டியப்பட்ட பந்துக்களின் பொது விதிமீறல்களை வேடிக்கை பார்க்கும் ஆபீசர்களுக்கும் இது பொருந்துமா?
  9. ஜன் லோக் பாலில் மூலாதாரமாக இருக்கும் எழுவர் குழுவின் நாணயக் கற்பை யார் மேற்பார்வையிடுவார்?
  10. போஃபர்ஸ் வழக்குகள் போல வெளிநாட்டினர் லஞ்சம் கொடுக்கல் வாங்கலில் தேசம் தாண்டி கடல் கடந்து ஈடுபட்டால் அவர்களையும் ஒரு கொக்கி போட்டு உள்ளே இழுத்து போட முடியுமா?
அண்ணா! ஒரு விஷயம் தெரியுமா? இதுவெல்லாம் லோக் பாலில் வர முடியாதோ என்று ஐயப்பட்டு என் சிற்றறிவு சிந்தனை செய்யும் போதெல்லாம் நிறைய 420 ஐடியாக்களாக வந்து குவிகிறது. ஆகையால் ஒரு கலக்கமான உள்ளத்தோடு இக்கடிதத்தை இத்தோடு நிறைவு செய்கிறேன்.

பாரத் மாதா கீ ஜெய்!!

வந்தே மாதரம்!!!

இப்படிக்கு,

(நீங்கள் யோக்கியதை இல்லை என்று பலர் நீரூபிக்க முயன்றாலும்)

தங்கள் மீது மிகுந்த மரியாதையுள்ள,

இந்தியக் குடிமகன்.

பட உதவி: http://www.indiaecho.com

ஒரு கேள்வி : ஒரு பதில்
இந்த லெட்டரை அண்ணா படிப்பாரா?
கஞ்சனூர் கடைத்தெருவில் நின்று கொண்டு “ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே!!” என்றும், “ஓபாமாவை நான் ஒன்று கேட்கிறேன்....” என்றும் கூம்பு ஸ்பீக்கர் கட்டி கோலி சோடா மீட்டிங்கில் தலைமை தாங்கி பேசுவதைப் போல இதை லைட்டாக எடுத்துக்கொள்ளவும். நன்றி

படிக்கும் பலே அண்ணாக்கள் பதில் சொன்னாலும் சரி!
-

Tuesday, August 23, 2011

அன்னமில்லாமல் அண்ணா!

கடந்த ஆறு நாட்களாக அன்ன ஆகாரம் இல்லாமல் அண்ணா ஹசாரே ஊழலுக்கும், நம் நாட்டில் லாவண்யமாக நாட்டியமாடும் லஞ்சத்திற்கும் எதிராகக் கொடிபிடித்து இந்த இரண்டாவது இன்னிங்ஸ் ”சாகும் வரை உண்ணாவிரதம்” மேற்கொண்டிருப்பது ஊரறிந்த விஷயம். ஆனால் அண்ணாவுக்கு ஆதரவாக அவரை உண்ணாவிரதக் கோலத்தில் காண வரும் ஊழல் எதிர்ப்பாளர்களும், தன்னார்வ தொண்டர்களும் தீவிர உண்ணும் விரதம் மேற்கொள்கிறார்களாம்.


எதை விடுப்பது எதை எடுப்பது என்று திணறும் அளவிற்கு வண்டி வண்டியாக வீட்டில் செய்த பலவகையான பட்சணங்களும், உணவு வகையறாக்களும், உணவு விடுதிகளிலிருந்து பார்ஸல் கட்டிக் கொண்டு வருவதுமாக ராம் லீலா மைதானம் பஃபேக்களினால் நிரம்பி வழிகிறது.
பக்கோரா, கச்சோரி, இந்தியர்களின் பிரதான கொரிப்பு தின்பண்டமான சமோஸா, பரோத்தா, ரஸகுல்லா, வடக்கத்திய நம்கீன், பிஸ்கோத்து, வாழைப்பழம், டீ, மாம்பழச் சாறு என்று தடபுடலாக அறுசுவை உண்டியோடு மைதானம் அமர்க்களப்படுகிறது.

தன்னார்வலர்கள் உணவுப் பொட்டலங்களை வினியோகிக்கும் அதே வேளையில் ”வீட்டு சாப்பாடு” எடுத்து வந்த அன்பர்களும் ஆசையோடு அதை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டார்கள். தன்னார்வலர்கள் தங்களிடமிருந்த உணவுப் பதார்த்தங்களை “இன்னும் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக்கோங்க” என்று ஊட்டி விடாத குறையாக கையைப் பிடித்து வற்புறுத்தினார்கள். #ப்ளீஸ் நோட் ”பிரசாதம்”.

ஒரு கச்சோரியை கடித்துக் கொண்டே பார்வையாளர் ராஜேஷ் தவான் கூறியதாவது:
“ரெண்டாவது தடவையா நான் இந்த சிற்றுண்டியைச் சாப்பிடுகிறேன். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று கூறினாலும் கேட்காமல் கையில் திணிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் சாப்பிடுகிறேன்” என்றார் வாயெல்லாம் கச்சோரியாக.

மைதானம் பண்டிகை மற்றும் திருவிழா போன்றவைகள் நடைபெறும் இடம் போல காட்சியளிக்கிறது. ”ஐ அம் அண்ணா” என்று குல்லா அணிந்தவர்கள் மத்தியில் சிலர் தீவிரமாக மூவர்ணக் கொடியை அசைத்தவாறு இருந்தார்கள். வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு மீந்து போன சமோஸாக்களும், வாழைப்பழங்களும் குப்பைத் தொட்டிகளை நிரப்பின. கொறிக்க தீனிகளுடன் மைதானத்தின் இன்னொறு மூலையில் இளம் சிறார்கள் பட்டம் விட்டு பரவசமடைந்தார்கள்.

நாம் சந்தித்த பலர் அண்ணாவை அறிந்திருந்தாலும், “சும்மா பார்த்துட்டு போகலாம்” னு வந்ததாக கூறினார்கள். ”அண்ணாவை நான் டி.வியில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். எங்க அம்மாவும் அப்பாவும் அவரைப் பற்றி அடிக்கடி வீட்டில் பேசியிருக்கிறார்கள். அவங்க ரெண்டு பேரும் அண்ணாவைப் பார்க்க போரோம் என்றதும் நானும் என்னுடைய சகோதரனும் ”நாங்களும் வருகிறோம்” என்று அவர்களுடன் தொற்றிக்கொண்டோம். ”சரி” என்று ஒத்துக்கொண்டு கூட அவர்களுடன் அழைத்து வந்தார்கள். இப்பொழுது எங்களுக்கு நன்றாக பொழுது போகிறது” என்று தென் தில்லியிலிருந்து உண்ணாவிரதம் வேடிக்கைப் பார்க்க வந்த அங்கூர் கோபால் கூறினார்.

பத்து பாத(க)க் குறிப்புகள்(Foot notes):

  1. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் முதற் பக்க செய்தியை பெருமையுடன் தமிழ்ப்‘படுத்தியது’  உங்கள் ஆர்.வி.எஸ்.
  2.  வயிறார பசிக்கு அன்னமிடுவோருக்கு அன்னதாதா என்று பெயர்! இவர் சாப்பிடாமல் விரதமிருந்து அண்ணா தாதாவாகிவிட்டார்.
  3. அண்ணா ஹசாரேவுக்கு ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டதாம். வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்துக்கு பத்து கிலோ கூடிவிடுமோ?
  4. ஹிந்துவில் அருந்ததி ராய் அண்ணா ஹசாரேவுக்கு உதவுவது அக்கா மாலா கம்பெனியார் என்கிறார். கடவுளுக்கே வெளிச்சம்.
  5. ஊழலை எதிர்த்து அண்ணா போராடுகிறார். அண்ணாவை எதிர்த்து அரசாங்கம் மல்லுக்கு நிற்கிறது. இதன் மூலம் நாங்கள் ஊழலைக் கைவிட மாட்டோம் என்று மக்களுக்கு மத்திய சர்க்கார் பறைசாற்றுகிறது. அடடா... இதிலாவது என்னவொறு கண்ணியம்.
  6. அண்ணா ஹசாரே ராகுல் அல்லது பிரதம மந்திரி ஆபீஸிடம் மட்டும் தான் பேசுவேன் என்கிறாராம். ராகுல் தான் அடுத்தது என்று இவரே ட்ரெண்ட் செட் பண்ணுகிறாரோ!!
  7. சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது அண்ணாவுடன் சென்று அமரும் ஜடாமுடி கார்ப்போரேட் சாமியார்கள்  ஏன் முழு நேரம் வாயையும் வயிற்றையும் கட்டி உட்காரக் கூடாது?
  8. தில்லி இமாம் திருவாளர் புகாரி முஸ்லீம் சகோதரர்களை அண்ணாவை விட்டு தள்ளியிருக்க சொல்கிறார். என்ன என்று காரணம் கேட்டால் “பாரத் மாதா கீ ஜெய்” மற்றும் “வந்தே மாதரம்” என்ற கோஷங்கள் இஸ்லாத்திற்கு எதிரானது என்கிறார். தாய் மண்ணையும், தாயையும் கூட வணங்குவதை இஸ்லாம் ஏற்பதில்லை என்கிறார்.
  9. தலை நகர் தில்லியில் அண்ணா சாப்பிடாமல் உட்கார்ந்ததிலிருந்து டிராஃபிக் விதிமீறல்கள் நிறைய நடக்கிறதாம். காந்தி படம் போட்ட குல்லாயுடனும், தேசியக் கொடியை ஒரு கையிலும் ஏந்தி ஒரே வண்டியில் மூவர் பயணிப்பது போன்றவைகள் சகஜமாக நடக்கிறதாம். கேட்டால் பிரச்சனை என்று போக்குவரத்து போலீசார் வேடிக்கை பார்க்கிறார்களாம். #சென்னையில் அடக்க ஒடுக்கமாக எல்லோரும் அனைத்து சமயங்களிலும் வாகன ஊர்தி ஓட்டுவது அனைவரும் அறிந்ததே!!
  10. அன்னை சோனியா காந்தி தக்க சமயத்தில் உள்ளூரில் இல்லாதது இந்த அண்ணா விவகாரத்தில் தங்களுக்கு பெரிய பின்னடைவு என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஹையோ...ஹையோ...
இந்தக் கட்டுரை அதீதத்தில் வெளியாகியுள்ளது.

பட உதவி: http://www.crickblog.com/

-

Monday, March 21, 2011

கூட்டணி (அ)தர்மம்

அது ஒரு அடர்ந்த வனம். அந்த அத்துவானக் காட்டில் ஒரு குள்ள நரி தன்னுடைய நண்பர்களான புலி, எலி, ஓநாய் மற்றும் கீரிப்பிள்ளையுடன் சுகஜீவனம் நடத்தி வந்தது. ஒரு நாள் அந்தக் காட்டில் நன்கு புஷ்டியாக வளர்ந்த ஒரு மானைக் கண்டார்கள். அடித்து ஐந்து நாட்களுக்கு உட்கார்ந்து சாப்பிடும்படியான நல்ல வாட்டசாட்டமான மான் அது. அந்தப் பகுதியின் மான் கூட்டத் தலைவன் போல இருந்தது. கண்ணெதிரே வேட்டையை பார்த்ததும் நாக்கை சப்புக்கொட்டினாலும் அந்த மானுடைய ஓடும் திறனும், சக்தியும் இவர்களை அதை நெருங்கவொன்னாதவாறு கட்டிப்போட்டு இருந்தது. நித்யமும் அதைப் பார்த்து "ஹும்....." என்று சேர்ந்தார்ப்போல் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இந்தக் கூட்டணி வேடிக்கைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டது.

KanikaNeedhi

எப்படியும் அந்த மானை ருசிக்கும் நோக்கோடு குள்ளநரி ஒருநாள் ஒர் அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டியது. நண்பர்கள் அனைவரும் உட்கார்ந்து கூடிப் பேசும்போது குள்ளநரி ஒரு அபாரத் திட்டம் வகுத்து பின்வருமாறு பேசியது:
"தோழர்களே! நம்மிடம் மிக வலிமை வாய்ந்தது புலிதான். அவரால் தான் இந்த மானை அடித்து வீழ்த்தமுடியும்  இருந்தாலும் மான் மிகவும் இளமையாகவும் உறுதியாகவும் இருக்கிறது. முழு வலுவுடன் நன்றாக துள்ளிக்குதித்து மிகவேகமாக ஓடுகிறது. மேலும் நம்மைவிட கொஞ்சம் புத்திசாலியாகவும் தெரிகிறது. ஆகையால் புலி நினைத்தாலும் கனவில் கூட அதை அடித்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு துளிக்கூட இல்லை. ஆகையால் நான் ஒரு உபாயம் கூறுகிறேன். அந்த மான் தூங்கிக்கொண்டிரும் போது உருவில் சிறியதாக இருந்தாலும் நம் எலியார் சென்று அந்த மானின் காலைக் கடித்துவிட்டு வந்துவிடட்டும். கால் கடிபட்டவுடன் அந்த மானால் முன்னைப்போல் வேகமாக ஓடமுடியாது. காலை இழுத்துக்கொண்டு நொண்டி நொண்டித்தான் ஓடும். அந்த சந்தர்ப்பத்தில் நம் புலியார் ஓடிச்சென்று அதை அடித்துக் கொன்று விடுவார். அதற்குப் பிறகு நாம் அனைவரும் அதை பங்கு போட்டு கூட்டாக தின்னலாம்." என்று கதை, திரைக்கதை அமைத்து இயக்கம் புரிந்தது.

நினைத்தபடியே முதல் நாள் எலியார் புகுந்து மானின் காலைக் கடிக்க, அது மறுநாள் ஓடுவதற்கு திணற, புலியார் துரத்தி அடித்துக் கொன்றுவிட்டார். இப்போது எல்லோரும் விருந்துக்கு ரெடி. செத்துக்கிடக்கும் மானின் அருகில் உட்கார்ந்து கொண்ட குள்ளநரி, "நண்பர்களே! நான் இதை பத்திரமாக பாதுகாத்துக் கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் இந்த இரையை அருந்துவதற்கு முன் கைகளை அங்கிருக்கும் மடுவில் அலம்பிக்கொண்டு சுத்தம் செய்து திரும்பி வாருங்கள். அப்புறம் நான் போய் கைகள் கழுவிக்கொண்டு வந்தவுடன் எல்லோரும் சேர்ந்து இதை உண்ணலாம்" என்று தந்திரமாக வழிநடத்தியது.

எதிர்பார்த்தபடியே வேகவேகமாக முதலில் திரும்பியது வலுவான புலி. குள்ளநரி முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தது. "என்னாயிற்று? ஏன் சோகமாக இருக்கிறாய்? நாம் நினைத்தபடியே மானை வீழ்த்திவிட்டோம். எல்லோரும் மகிழ்ச்சியாக உண்ணலாமே" என்று புலி குஷியாக அலம்பிய கைகளை தட்டிக்கொண்டே கேட்டது. அதற்கு குள்ளநரி "அதை ஏன் கேட்கிறீர்கள் புலியாரே, இந்த எலி சொன்ன வார்த்தையை என்னால் தாங்க முடியவில்லை. நெஞ்சு பொறுக்கவில்லை. அதனால் தான் சோகமாக இருக்கிறேன்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறியது.
"என்ன சொல்லிற்று? என்று பதிலுக்கு உறுமியது புலி.
"இந்தத் தீனி என்னால் தான் உங்களுக்கு கிடைத்தது. நான் மட்டும் மான் காலைக் கடிக்காவிட்டால் இந்த கிழப் புலி அடித்திருக்குமா என்று என்னிடம் சவால் விட்டுக் கேட்டது. கேவலம் அப்படி ஒரு எலி கேட்ட பின்பும் நாம் இதை உண்ணவேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று ஒரு பொய்யைச் சொன்னது.
"எனக்கு இன்னமும் தெம்பு இருக்கிறது. இப்படி ஒரு அற்ப பதரான எலியின் உதவியில் எனது வயிறை கழுவ நான் விரும்பவில்லை. என் சொந்த முயற்சியால் எனக்கு விருப்பப்பட்ட விலங்கை அடித்து சாப்பிடுவேன்" என்று வீராப்புடன் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தது புலி.

அடுத்தது வெகு ஜாலியாக கல்யாண சாப்பாடு சாப்பிடும் ஆசையில் சீட்டியடித்தபடி குதித்து வந்தது எலி.  "சற்றுமுன் தான் கீரிப்பிள்ளை வந்தது. புலி தனது அழுக்கு காலினால் இந்த மானை அடித்ததால் இதன் உடம்பில் விஷம் ஏறியுள்ளதாம். இதை சாப்பிட்டால் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்றும் மிகவும் பசியாக இருப்பதால், நீ வந்தவுடன் உன்னை அடித்து நாங்கள் சாப்பிடலாம் என்றும் பிரியப்படுகிறது" என்று எலியிடம் ஒரு புருடா விட்டது குள்ளநரி. இதைக் கேட்ட மாத்திரத்தில் அலறியடித்துக்கொண்டு தனது வலைக்குள் போய் புகுந்துகொண்டது எலி.

இரையை சாப்பிட சித்தமாக வந்த ஓநாயிடம் "என்னவோ தெரியவில்லை புலி உன்னிடத்தில் மிகவும் கோபமாக உள்ளது. உன்னை தனது குடும்பத்தோடு உண்பதற்காக மனைவியை அழைத்து வருவதற்காக என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறது. இதற்கு மேலும் நீ இங்கு இருக்கிறாயா அல்லது தப்பித்து ஓடுகிறாயா. உனக்கு வசதி எப்படி." என்று மிரட்டியது. அரண்டு மிரண்ட ஓநாய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடிவிட்டது.

கடைசியாக வந்த கீரிப்பிள்ளையை பார்த்து, "டேய் கீரி! இதுவரை வந்த எல்லோரையும் என்னுடைய புஜபல பராக்கிரமத்தால் அடித்து துரத்தி விட்டேன். வா! வந்து என்னுடன் முதலில் மோது. நீ ஜெயித்தால் பிறகு நீ ஒருவனே அனைத்தையும் சாப்பிடு" என்று முண்டா தட்டி சண்டைக்கு அழைப்பு விடுத்தது. புலியை கூட தனி ஒருவனாக இவன் ஜெயித்து விட்டானே என்று நம்பிய அந்த முட்டாள் கீரியும் பயந்து ஓடிவிட்டது. எல்லோரையும் விரட்டி விட்டு நிம்மதியாக தான் ஒருவனே அந்த முழு மானையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு சந்தோஷமடைந்தது அந்த குள்ளநரி.
மேற்கண்ட கதை ஐந்தாவது வேதமாகிய மஹாபாரதத்தில் ஆதி பர்வத்தில் கணிக நீதியில் இடம் பெற்றது. துரியோதனன் என்னதான் மோசமான ஒரு பிள்ளையாய் இருந்தாலும் அவன் மீது தந்தைப் பாசம் கொண்டு வலிமை மிகுந்த பாண்டவர்களை எதிர்த்து போர் புரிவதா அல்லது சமாதானமா என்று குழம்பிய திருதிராஷ்ட்ரன் கணிகர் என்ற அரசியல் ஆசானிடம் ஆலோசனை கேட்டார். அப்போது ஒரு மன்னனானவன் கூட்டாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் கூறிய கதை தான் இது.

தற்போது நடந்து வரும் அரசியல் பேரங்களில், இந்தக் கதையில் இருந்து நமக்கு விளங்கும் கருத்தை தமாஷாக கீழ்கண்ட சமன்பாடுகளில் நாம் சரிபார்த்துக் கொள்ளலாம். புத்திக் கூர்மை படைத்த மக்கள் இன்னும் பல வழிகளில் அவரவர்களுடைய கற்பனைக்கு ஏற்ப இந்தக் கூற்றை சமன்படுத்திக் கொள்ளலாம்.
  1. வசிக்கும் நாடு = அடர்ந்த வனம் 
  2. வாக்குரிமை பெற்ற மக்கள் = மான்
  3. பெரிய கழகங்கள் = கு.நரி 
  4. பெ.கழகங்களை அண்டிப் பிழைக்கும் சிறிய கட்சிகள் =  புலி, எலி, கீரிப்பிள்ளை, ஓநாய்
  5. மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள்  = மானை எலி கடித்தல்
சென்ற பதிவு மிகவும் தக்குடுயூண்டு... ச்சே.. தக்கினியூண்டு இருந்ததாக புகார் கூறியவர்கள் இப்பதிவில் சந்தோஷப்பட்டுக்கொள்ளவும். போன பதிவு சிறியதாக இருந்ததால் அகமகிழ்ந்தவர்கள் இப்பதிவில்....... தயவு செய்து அடிக்க வரவேண்டாம்.

படம்: கூகிளில் வேட்டையாடி இந்த மிருகங்களின் படங்களை எடுத்து பிகாசாவில் இட்டு ஒரு கலக்கு கலக்கி அடியேனே கொலாஜ் பண்ணிய ஓர் அற்புத படம். அற்புதம், அதி அற்புதம் என்பதெல்லாம் ஒருவருக்கொருவர், மனசுக்கு மனசு வித்தியாசப்படுபவை என்பதை யாம் அறிவோம். நன்றி.

-

Sunday, January 30, 2011

மீனவன்ஜி

ஒவ்வொரு பதிவிலும் சமூகத்தில் நிகழும் அவலத்தை கோபக்கனல் தெறிக்க எழுதும் பொன்மாலைப் பொழுது கக்கு-மாணிக்கம் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் சிங்கள வெறியர்கள் பற்றி எழுத உரிமையோடு கேட்டிருந்தார். அரசியல் மற்றும் நிகழ்காலத்தில் நடைபெறும் எந்த ஒன்றையும் பற்றியும் இதுவரை எழுதாமல் இருந்தேன். இருந்தாலும் அநியாயமாக அக்கிரமமாக தாக்குதல் நடத்தும் ஸ்ரீலங்கா அரக்க சேனையை கண்டிக்கும் விதமாக இந்தப் பதிவு.



படகோட்டியில் எம்.ஜி.யாரின் மிகப் பிரபலமான பாடல்

"தரைமேல் பிறக்கவைத்தான்.. 
எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான் 
கரைமேல் இருக்கவைத்தான் 
பெண்களை கண்ணீரில் குளிக்கவைத்தான்"   என்பது.

தப்படித்து அழுது பாடும் அந்தப் பாடல் நம் மீனவ நண்பர்களின் எக்கால சோகத்திற்கும் பறை சாற்றும் பாடல்.  தமிழனுக்கு தண்ணீரில் கண்டம் என்று நினைக்கிறேன். நெய்தல் நிலம் சிங்கள வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மீனவர்கள் தங்கள் ஜீவாதாரமான தொழிலை தொடர முடியாமல் முடங்கிப் போயிருக்கிறார்கள். நிச்சயம் இலவச டி.வி சோறு போடாது. மும்பை கடலில் மீன் பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி ஹிந்தி பேசும் மீனவன்ஜி ஒருவன் மேற்கு கடற்கரை ஓரம் குண்டடி பட்டிருந்தால் டெல்லிக்கு அடுத்த கணம் கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நாம் குடும்பங்களை இழந்து கதறி அழுதால் கூட "முஜே தமிள் நஹி மாலும் ஹை.." என்ற தோரணையில் செவிமடுக்காமல் நமது நாட்டில் காட்டாட்சி நடத்துகிறார்கள். 

எதற்கெடுத்தாலும் பேச்சு வார்த்தை, சுமூகத் தீர்வு என்று நயாபைசாவிர்க்கு பிரயோஜனம் இல்லாத நடவடிக்கைகள் எடுத்து நாட்கள் கடத்தி விவகாரத்தை நீர்த்து போகச் செய்துவிடும் தந்திரம் நிறைந்த குள்ளநரிகள் நிறைந்தது இந்த அரசியல் கூட்டம். பரப்பளவிலும் எண்ணத்திலும் குறைவாக உள்ள ஸ்ரீலங்காவிடம் இந்திய அரசாங்கம் ஏன் இப்படி பயந்து சாகிறது என்பது யாருக்குமே விளங்காத புரியாத புதிர். குடும்ப நலனும், கட்சி நலனும் பிரதானமாக கொண்ட இந்திய அரசியல் கட்சிகள் நாட்டு நலன் என்று ஒன்று உள்ளதையே ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டார்கள்.

தமிழர் நலன் ஒன்றே எங்கள் மூச்சு என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் "தமிழுணர்வு" மேலோங்கும் கட்சிகள் கூட இது போன்ற சம்பவங்களுக்கு ஒரு ஸ்திரமான போராட்டமோ அல்லது நாடு தழுவிய கண்டனத்தையோ மேற்கொள்ளாதது இன்னும் ஆச்சர்யமான ஒன்று. கொள்ளையடிக்கும் கூட்டணிகள் அமைந்த பிறகு வாய்க்கு வந்தபடி மேடை போட்டு பேசுவார்கள். இப்போது ஒருவருக்கு ஒருவர் கையை காண்பித்து உன் குத்தமா என் குத்தமா என்று குற்றத்தை இன்னொருவர் மேல் ஏவி விட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் எவ்வளவு நாள் இந்த அவலம் தொடரும்?

இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. எந்தக் கட்சி இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்கிறதோ அவர்களுக்கு எங்கள் ஓட்டு என்று உறுதியான ஒரு முடிவை அறிவித்தோம் என்றால் ஏதோ எறும்பு கடித்தது போல உணர்ந்து ஏதாவது உருப்படியான முயற்சிகள் மேற்கொள்ளலாம். அப்படியும் அடித்த காசில் தேர்தல் தினத்தன்று மக்கள் கையில் கொஞ்சம் பேப்பரில் சிரிக்கும் காந்தியை அழுத்தி கவனித்து முன்னேறிவிடுவார்கள்.

எல்லை தாண்டினார்களா இல்லையா என்பது முக்கிய விவாதம் அல்ல. கடல் அன்னை இயற்கையின் வரம். சுட்டு வீழ்த்த மீனவர்கள் தீவிரவாதிகளோ கடத்தல்காரர்களோ இல்லை. தங்கள் பிள்ளை குட்டிகளின் பசிப்பிணி போக்க கடலிறங்குகிரார்கள். இதில் எங்கே வந்தது வேட்டையாடும் படலம். "சோனியாஜி.... மன்மோகன்ஜி..... ராகுல்ஜி... இது தமிழன்ஜி... மீனவன்ஜி... பச்சாவ்..." (நம் ஆட்சியாளர்களிடம் கேட்டாலும் அவர்களும் அங்கே சென்று இப்படித்தான் கெஞ்சுவார்கள்) என்று அவர்கள் பாஷையில் புரியும்படி சொன்னாலாவது செவி சாய்ப்பார்களா என்று பார்ப்போம்.

-
 

Friday, October 15, 2010

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி

கொலு டயத்தில  இந்த டைட்டில் கொடுத்தா நிச்சயமா என்ன எதிர்பார்த்து வருவீங்கன்னு தெரியும். காலையில் அலுவலகம் வரும்போது பிடித்தது இது. காமெராவில் சொன்னேன். எனக்கு அரசியல் தெரியாது. இதில் இருக்கும் பன்னாட்டு அரசியல் தலைவர்களை அடையாளம் கண்டு பின்னூட்டமிடுங்களேன். வித்தியாசமான வால் போஸ்டர் என்பதால் பதிவுலகத்தில் பகிர்ந்தேன். என்னமா யோசிக்கறாங்கப்பா. நவராத்திரி பற்றிய பதிவு தயாராகிக்கொண்டிருக்கிறது. விரைவில் அந்தப் பதிவு பதியப்படும்.


jaya


பின் குறிப்பு: தயவு செய்து அநாகரீக அரசியல் கமெண்டுகளை தவிர்க்கவும். ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி  இல்லை.  நான் ஒரு அப்பிராணி. எனக்கு அரசியல் தெரியாது.

இதை உருவாக்க ஃபோட்டோ ஷாப்பில் உழைத்த அந்த கண்மணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
-

Saturday, July 10, 2010

சனிக்கிழமை சங்கதி - அரசியல் ஏழைகள்

பொதுவாக சம்பளம் வாங்குபர்கள் கம்பனிக்கு எவ்வளவு செலவு என்பதை CTC ( Cost to Company) என்று கூறுவார்கள். இதுவும் CTC தான். Cost to Country. உலகெங்கிலும் மனிதகுலத்திற்கு சேவை(?) செய்யும் இன்றைய மாண்புமிகு அரசியல்வாதிகளின் சம்பளங்களை பட்டியலிட்டிருக்கிறது தி எகானமிஸ்ட் என்ற சஞ்சிகை. அகில உலகத்தில் அதிக சம்பளம் வாங்குவது எந்த நாடு தெரியுமா? கென்யா நாட்டு பிரதம மந்திரி ரைலா ஒடிங்கா. ஆனால் மனிதர் பெரிய மனுஷர். இந்த முறை அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு அளித்த $430000 சம்பள உயர்வை பெருந்தன்மையாக வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் தங்களுக்கும் இருபத்தைந்து சதவீதம் உயர்வு அளித்துக்கொண்டிருக்கிரார்கள். மன்னருக்கு கொடுத்து மந்திரிகளும் சம்பாதித்திருக்கிறாகள். 

இந்த சம்பளங்களின் மதிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவிகிதம், மற்றும் மக்களின் பொருள் வாங்கும் சக்தி போன்றவற்றை வைத்துக்கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள். ரைலா ஒடிங்கா வாங்கும் சம்பளம் அவர் நாட்டு மக்கள் வாங்குவதை காட்டிலும் 240  மடங்கு அதிகமாம்.  சீன அதிபர் வாங்கும் சம்பளம் நாற்பது மடங்கு அதிகம். எல்லோரை காட்டிலும் மிகவும் குறைவாக சம்பளம் வாங்குபவர் நமது நாட்டு பிரதமர், அரசியல் சந்நியாசி ( அப்படித்தான் போட்டிருக்கிறார்கள் அந்த பத்திரிக்கையில்),  திரு. மன்மோகன் சிங் அவர்கள். கீழே பட்டியலை பார்க்கவும்.

politician salary

நம்மூர் அரசியல்வாதிகள் மக்கள் சேவையில் ஊறிப்போனவர்கள், ஒத்தை ரூபாய் வாங்கிக்கொண்டு ஊருக்கு சேவகம் பண்ணுபவர்கள். சம்பளம் வாங்காமல் அவர்கள் உழைப்பதைக் கண்டு தொண்டர்களே ஆளுயர பண மாலைகளும், தங்க கிரீடமும், வெள்ளி செங்கோலும் அளித்து அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு கஞ்சிக்கு வழி செய்கிறார்கள். என்ன செய்வது பாவம்.அரசியல் ஏழைகள்.

சில அப்பாவி கேள்விகள்:
ஒரு சின்ன வருத்தம், இதிலும் இந்தியா கடைசி தானா? இன்னொரு கேள்வி, இதேபோல் தேசவாரியாக கிம்பள பட்டியலை யாராவது வெளியிடுவார்களா?

பின்குறிப்பு:  இந்த சம்பளப் பட்டியலைப் பார்த்துவிட்டு கென்யா நாட்டுக்கு பிரதமந்திரியாக வேண்டும் என்ற அரசியல் கனவோடு  கொட்டாம்பட்டி கொமாரு ஒரு புதிய அகில உலக கட்சி ஆரம்பித்திருப்பதாக ஒரு செய்தி அடிபடுகிறதே  நெசம்மாவா?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails