Showing posts with label ரஹ்மான். Show all posts
Showing posts with label ரஹ்மான். Show all posts

Tuesday, June 6, 2017

சாரட்டு வண்டில சீரொட்டொளியில

ஆஃபீஸில் இப்படி அப்படி நகரவிடாமல் காலையிலிருந்து ராத்திரிவரை கை ஒழியாமல் வேலை. முகப்பு விளைக்கைத் தூண்டி வண்டியை நகர்த்தும் போது இடது கையால் ஆடியோவைத் தட்டிவிட்டேன். ”சாரட்டு வண்டில சீரொட்டொளியில” என்று ரஹைனாவின் அடிக்குரல் கேட்டது. காற்று வெளியிடை. ரஹ்மான் விருந்து. ஃப்லிம் மேக்கர் மணிரத்னம் படம். திப்புவும் பாடியிருக்கார்.
குதிரையின் குளம்பொலியின் டக்..டக்கை காதுக்கு இதமாக ஸ்பாஞ்ச் வைத்து அமுக்கியது போல ஒரு மென்மையான ரிதமிக் beatல் துவங்கிய பாடல். இனிமையாக இருந்தது. ஆங்காங்கே கொஞ்சம் “A"த்தனமான வரிகள் தூவியிருந்தது. ”மன்மதன் நாட்டுக்கு மந்திரியே..” என்று “அந்தி மழை பொழிகிறது”வில் எழுதிய வைரமுத்து இப்பாடலில் “அவன் மன்மதன் காட்டு சந்தனம் எடுத்து மார்பில் அப்பிக்கிட்டான்...” என்று எழுதியிருக்கிறார். மன்மதனின் நாடு எது? காடு எது?
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பிளையை பொண்ணு கிண்டிக் கிழங்கெடுப்பா.... என்ற வரியில் கிண்டிக் கிழங்கெடுப்பது எப்படி என்று ஆராய்ச்சியில் அலையவிட்டார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு வரி....
”இவ குரங்கு கழுத்தில் குட்டியைப் போல தோளில் ஒட்டிக்கிட்டா.....”

ஆஹா! கேட்டதும் நெஞ்சுக்குள் காதல் பூக்குதே!! 

Tuesday, August 3, 2010

எந்திரன் - சிலிகான் சிங்கம் பராக்... பராக்...

வாய் உண்டு ஆனால் வயிறில்லை
பேச்சு உண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
பவர்தான் உண்டு திமிரே இல்லை
இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் கார்க்கி என்ற பாடலாசிரியர். இதுவரை என்ன எழுதியிருக்கிறார் என்று எனக்கு தெரியாது.  வைரமுத்துவின் வாரிசு என்று தகவல். கள்ளிக்காட்டிர்க்கு பிறந்த ஒரு கவிதைக் காடு.  நான்கே வார்த்தைகளில் ஒரு ரோபோவின் இலக்கணத்தை வருணித்திருக்கிறார். ரோபோ என்ற தலைப்பிற்கு ஏற்றாற்போல் வார்த்தைகளிலும் இசையிலும் ஒரே உலோக நெடி. ரஹ்மான் பாய்ஸ்க்கு பிறகு துள்ளலாக அடித்து பல வாத்தியங்களின் பெண்டை நிமிர்த்தியிருக்கிறார். கேட்க கேட்க "உயிருள்ள" ஒரு ஐசக் அசிமோவின் ரோபோ முன் உட்கார்ந்திருக்கும் எஃபக்ட். பாடல்களுக்கு வருவோம்.
endhiran

1. புதிய மனிதா: எஸ்.பி.பி மற்றும் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பாடியது.
வந்தேண்டா பால்காரன், அதாண்டா இதாண்டா,  நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன், ஒருவன் ஒருவன் முதலாளி, என்ற ரஜினி-எஸ்.பி.பி-படத்தின்-முதல்-பாடல் ராசிக் கூட்டணியின் வெற்றிச்சக்கரத்தில் மற்றுமொரு பாடல் புதிய மனிதா. ரோபோவை வரவேற்கும் பாடலாக அமைந்திருக்கும் போல தெரிகிறது. இதில் வழக்கம் போல் ரஹ்மான் எலெக்ட்ரானிக் இசை தட்டியுள்ளார். ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி, எழுதியது வைரமுத்து. சரணத்தில் எடுத்தவுடன் "நான் கண்டது ஆறறிவு" என்று தூக்கி எடுக்கும் எஸ்.பி.பி வயதானாலும் இன்னும் குரலுக்கு இளமை இருப்பது கண்கூடு. 

2. காதல் அணுக்கள்:  விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் பாடியது. பழைய மேற்கிந்திய தீவுகள் அணி பங்குபெறும் கிங் பிஷேர் விளம்பர பாணியில் ஆரம்பித்து, காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என்று கேள்வி கேட்டு சூடு பிடித்து நடு நடுவில் வரும் அந்த 
"ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஒஸ்சாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி " 
 என்ற இடங்கள் வி.தா.வருவாயா "ஹோ சோனாவை" நினைவூட்டினாலும் மிகவும் அட்டகாசமாக வந்திருக்கிறது. விஜய் பிரகாஷும் ஸ்ரேயாவும் அனுபவித்து பாடியிருக்கிறார்கள். அனுபவித்து ஆசையாய் எழுதியது வைரமுத்து. நிச்சயம் சூப்பர் ஹிட்.

3. இரும்பிலே ஒரு இருதயம்:  ரஹ்மானுக்கு ரஹ்மானே பாடியது. ஆரம்பத்தில் ஜாக்சன், மடோன்னா ஆல்பங்களில் கேட்கும் அந்த மேற்க்கத்திய பாணி ஆங்கிலத்தில் ஆரம்பித்து, ஒன்றிரண்டு "உர்... டர்..." விட்டு பாடல் ஆரம்பிக்கிறது. பாடல் எழுதிய கார்க்கி கொஞ்சம் கம்ப்யூட்டர்காரர் போல் தெரிகிறது. கீழ் காணும் வரிகளில் அது ஊர்ஜிதமாகிறது பாருங்கள்.
மின்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
கூகிள்-கள் காணாத
தேடல்கள் என்னோடு
அட்டகாசம். இதுபோன்ற ஒரு பீட் மியூசிக் ரஹ்மானுக்கு ஹல்வா சாப்பிடுவது போல. கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் தமிழ் சேர்ந்து செய்த கலவை. இளஞர்கள் இளைஞிகள் மத்தியில் ஹிட் ஆகும் போல தெரிகிறது. ரோஜாவை கையில் வைத்திருப்பது போன்ற அந்த டைட்டில் ரோபோ வரும் பாட்டு என்று நினைக்கிறேன்.



4. சுட்டி டான்ஸ் ஷோகேஸ்:  என் போன்று கூலி வேலை செய்து பிழைப்பவர்கள் பார்ப்பார்கள் என்று நம்பி தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் கலைஞசூரியஜெய தொலைக்காட்சிகளில் மூளைக்கு ஒருவராய் ஒரு வாத்தியத்தோடு உட்கார்ந்தும் நின்றும் அந்த வாத்தியம் கிழியும்/உடையும் வரை வாசிக்கும் ஃப்யூஷன் போன்ற பாணியில் அமைந்த குறும் பாடல். பிரவின் மணி, யோகி பி போன்றோர் சேர்ந்து "தகிட தகிட" சொல்லி பாடியிருக்கிறார்கள். கேட்கலாம்.

5.  அரிமா அரிமா: ஹரிஹரன், சாதனா சர்கம்,  நரேஷ் ஐயர், பென்னி தயாள் போன்ற  பாடகப் பட்டாளமே பாடிய பாடல். பாடல் ஆரம்பிக்கும் போதே ட்ரம்பெட் கொண்டு நம்மை உள்ளே இழுக்கும் ரஹ்மானுக்கு எவ்வளவு பாராட்டு சொன்னாலும் தகும். தெனாலி படத்தில் ஒஜாரே பாடலில் உச்ச ஸ்தாயியில் கொடுக்கும் ட்ரம்பெட்டை மெலடி வாசிக்க விட்டிருக்கிறார் இந்தப் பாடலில். நடு நடுவே வரும் இந்த காற்றுக் கருவியை நிச்சயம் காது கொடுத்து ரசிக்க வேண்டும்.

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில் சட்டென்று ஆசை பொங்கிற்றே   
என்று ரோபோவிற்க்கு வந்த ஆசையை சொன்ன இடத்திலும், பதிலுக்கு ஐஸின் காதலாக 
மேகத்தை உடுத்து மின்னல் தான் நானென்று ஐசுக்கே ஐசு வைக்காதே 
 போன்ற இடத்திலும் வைரமுத்து வார்த்தைகளில் ஐஸ் வார்த்தைகளால் நம்மை குளிப்பாட்டுகிறார்.  ஹரி, சாதனா இருவர் பாடினாலே இனிக்கும் பாட்டு ஐயர், தயாள் என்று இன்னும் இரண்டு பேர் கச்சைகட்டி பாட இறங்கியதில் ஐயங்கார் விட்டு அக்காரவடிசலாக இருக்கிறது. இந்தப் பாடலும் தூக்கல் ரகம்.

6. கிளிமஞ்சாரோ: எடுத்தவுடன் ஹிட் ஆகும் ரகம். விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு உடனடி உத்திரவாதம். சிறார்களுக்கும், குத்து ரசிப்பவர்களுக்கும் ஒரு அழகான ராகத்தில் குத்துகிறார் ரஹ்மான்.  பா.விஜயின் பாடலுக்கு ஜாவேத் அலியும், சின்மயியும் பாடியிருக்கிறார்கள். சின்மயி குரு படத்தின் "மையா மையா" விற்கு பிறகு மாற்று குரலிசை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி என்னை மேய்ந்துவிடு மொத்தம் 
 என்ற பாடலில் "மொத்தம்" என்ற வார்த்தை "மட்டம்" என்று தொனிக்க பாடிய குறை தவிர நன்றாகத்தான் பாடியிருக்கிறார் சின்மயி.

7. பூம் பூம் ரோபோ டா: யோகி பி, தன்வி ஷா, ஸ்வேதா மோகன் பாடிய கார்கி எழுதிய பாடல். ராப் இசை அமைப்பதில் வல்லவரான ரஹ்மான், இதில் யோகி பியை வைத்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார். இந்தப் பதிவின் ஆரம்ப வரிகளை உள்ளடக்கிய பாடல்.
ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ ஐசக் நியூட்டனின்  லீலையோ ரோபோ ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் மூளையோ ரோபோ
 கார்க்கியின் அறிவியல் ஞானமும், தமிழும் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் இது போன்ற இடங்கள் இவரது பாடல்களில் ஏராளம். பாராட்டப்பட வேண்டிய கவிஞர். வைரமுத்து பட்டை தீட்டிய வைரம் என்று நினைக்கிறேன். இன்னொரு ஜூனியர் வைரமுத்து திரைத்துறைக்கு தயார். வருக வருக. நல் வாழ்த்துக்கள்.

பட உதவி:  www.endhiran.org

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails