Tuesday, July 29, 2014

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
சதுர்முக பாணன் தைக்கும் சட்டை
காமக் கனலில் கருகுஞ் சருகு
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை
நீரிற் குமிழி நீர்மேல் எழுத்து

---வரிக்கு வரி நிச்சயமில்லாத வாழ்வுடா இதுன்னு பட்டினத்தார் பிடறியில் அடித்து சொல்லும்போது அரையில் கட்டியிருக்கும் காவியோட எழுந்து வீதியில கடகடன்னு இறங்கிடலாமான்னு....... சரி.. ஆஃபீஸுக்கு கிளம்பணும்..

காடுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றமே!

”வேதகிரி என்னும் திருக்கழுக்குன்றம் தான் இப்படி வேதமே மலையான இடம் என்பார்கள். நான் அங்கே கிரி பிரதக்ஷிணம் பண்ணினபோது, கூட வந்தவர்கள் “தேவ தேவ தேவ மஹாதேவ” என்று பஜனை பண்ணினார்கள். நான் அதை “வேத வேத வேத மஹாவேத” என்று மாற்றிக் கொடுத்தேன்!” என்கிறார் தெய்வத்தின் குரலில் மஹாபெரியவா. அந்த வேதகிரீஸ்வரனைத் தரிசிக்க நேற்று கோஷ்டியாகப் படையெடுத்தோம்.

வீகேயெஸ்ஸும், ஆர்வியும் குடும்ப சகிதம் கோயிலுக்கு வந்திருந்தார்கள். அனன்யா மஹாதேவன் ஒரு எவர்சில்வர் தூக்கு மெது வடையோடு (ஐயப்ப சாமிக்கு வெங்காயம் போடாமல் ஸ்பெஷலாக ஒரு டப்பா) வந்திருந்தார். கெஞ்சு தமிழில் சாப்பிட வாங்க என்றும் ந்யுமராலஜிக்காரர்களின் கிடுக்கிப்பிடி ஆட்டுவிப்பால் ஆங்கிலத்தில் SAPPDA VANGA என்று பாஷை தெரியாதவன் பேசுகிற மாதிரி எழுதிய விடுதியில் மூணரை மணிக்கு காஃபிக்கு நிறுத்தினோம். பில்லும் டிஃபனும் காஃபியும் ஓகே! வாங்கி சாப்பிடலாம். செங்கல்பட்டு வரை பம்பர் டு பம்பர் ட்ராஃபிக். பக்கத்துக் காரில் பெர்முடாஸ் போட்டுக்கொண்டு பாப்கார்ன் கொரிப்பது பர்ஃபெக்ட்டாக தெரிகிறது.

செங்கல்பட்டில் புகுந்து கோணல்மாணலாக பேருந்துகள் நின்ற பஸ்ஸ்டாண்ட்டை சர்வ ஜாக்கிரதையாகக் கடந்து நேரு சிலை தாண்டிய அடுத்த லெஃப்ட் கல்பாக்கம் செல்லும் சாலை. மேம்பாலம் ஏறி இறங்கி ஒரு பதினைந்து நிமிட அழுத்தலில் புணருத்தாரணம் செய்வதற்கு கீற்றில் மறைத்த வேதகிரீஸ்வரர் கோபுரம் மலை உச்சியில் தெரிந்தது. வழிநெடுக இருபுறமும் பச்சைத் திட்டுகள். நடுவில் ஏதோ மூலிகைப்பண்ணை வந்தது. நேரே மலைக்கோவில் வேதகிரீஸ்வரர் கோவிலுக்குப் பக்கத்திலிருந்த பிள்ளையார் கோயில் பின்புறம் சேப்பாயியையும் கூட வந்த இரு வெள்ளையம்மாக்களையும் நிறுத்தினோம். ரூ.25 பார்க்கிங் டிக்கெட். கக்கத்தில் கேஷ் பேக் சொருகியவர் பாய்ந்து வந்து வசூலித்தார்.

மலைப்பாதை வாசலில் மல்லியரும்பு தொடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் பல டினாமினேஷன்களில் டிக்கெட் கிடந்தது. மலையேற ரெண்டு ரூபாய், டிஜிடல் கேமிரா ஐம்பது ரூபாய், வீடியோ கேமிரா இருநூற்று ஐம்பது ரூபாய் என்று மனப்பாடமாய் ரேட்டுகளை ஒப்பித்தது. “அஞ்சு மணிக்குதான் தொறப்பாங்க...” என்று கைவேலையாக இருந்தது. கஷாயம் உடுத்திய ஒரு கிழவனார் மலைப்பாதைக் கதவை திறந்துவிட்ட போது மணி நாலே முக்கால். எங்களது திருக்கோஷ்டியில் எல்லா வயதிலும் பக்தர்கள்.

ஒண்ணாவது படிக்கும் குட்டியோண்டு மேதாவிலிருந்து பொறியியல் முதலாமாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் தம்புடு ஹரி கிச்சு வரை மாணவச் செல்வங்களும், ஆர்வியின் தாயார், வல்லபாவின் தாய் தந்தையார் என்று பெரியவர்கள் வரிசை ஆரம்பித்து என்னைப் போன்ற யுவன் வரைக்கும் அடங்கிய கதம்பக் குழு. ஐநூறு படிக்கட்டுகள். அழும் குழந்தைகளுக்கு காட்பரீஸ் கொடுப்பது போல நூறு படிகள் சாய்மானமாக போட்டு உள்ளே இழுத்துவிடுகிறார் வேதகிரீஸ்வரர். கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் கொடுத்தவர் கடைசி நூறு படிகளில் நம் பக்தியை அளந்தார்.

கடை நூறு படிக்கட்டுகள் நேரே விண்ணுக்கு முட்டிக்கொண்டு செங்குத்தாக நின்றது. வேதகிரீஸ்வரனை வேண்டிக்கொண்டு மஹா தேவவும்.. மஹா வேதவும் மனசுக்குள் சொல்லிக்கொண்டே ஏறினேன். ஆர்வியின் அம்மாவிற்கு வைராக்கியம் ஜாஸ்தி. வயதில் பெரியவர். “இவ்ளோ தூரம் வந்துட்டு மலையேறாம எப்டி ஆத்துக்கு போறது?” என்று ஈஸ்வர பக்தியில் ஏற ஆரம்பித்தார். மலையில் ஏற்றி விடுவதும் வாழ்க்கையில் கை தூக்கி விடுபவனும் அவனல்லவோ? ஹிருதயம் வாய் வழியாக வெளியே வந்துவிடுவது போல இரைத்தது. மணிவாசகப் பெருமான் நாயினும் கடையேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டது நியாபகம் வந்தது. ஐநூறைக் கடந்தால் ஆனந்தமாக இருந்தது.

ஜில்லென்று காற்று. கண்ணுக்கெட்டிய இடங்களிலெல்லாம் சிறுசிறு குன்றுகள். போர்செட் வைத்திருக்கும் தெம்புள்ள விவசாயிகள் சிலர் பயிரிட்ட பச்சைச் சதுரங்கள். பச்சைச் செவ்வகங்கள். பூச்சி பூச்சியாய் நகரும் மனிதர்கள். பாட்டரி பொம்மை போல் ஓடும் பஸ்கள். தாழக்கோயில் பக்தவத்சலேஸ்வரரின் ராஜ கோபுரங்கள். சங்கு தீர்த்தம். பெரிய குளத்தில் சென்னையின் அடிபட்ட சாலைகளில் தேங்கியிருக்கும் குட்டை போல நீர் கிடந்தது. குளத்தோர வறண்ட பிரதேசங்கள் குட்டிக் குட்டி கிரிக்கெட் மைதானமாகியிருந்தது. எதிலும் உச்சத்தில் இருப்பது எப்போதும் சுகம்தானே! கிறக்கத்தில் ரசித்துக்கொண்டிருக்கும் போது முதுகுக்குப் பின்னால் ”கிர்க்..கிர்க்...” என்ற சப்தம். திரும்பினால் இரண்டு வானரங்கள் கையில் ஏதாவது கிடைக்குமா என்று சுற்றிச் சுற்றி வந்தது.

வேதகிரீஸ்வரர் நிறைவான தரிசனம். வெள்ளி நாகாபரணத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தரிசனம் கண்டவுடன் மலையேறிய அலுப்பு அறுத்துக்கொண்டு போனது. கர்ப்பக்கிரஹத்தில் வேதகிரீஸ்வரருக்குப் பின்னால் சோமாஸ்கந்தர் சிற்பம் இருக்கிறது. பூப்போட்டு வைத்திருந்தார்கள். “சோமாஸ்கந்தருக்கு தீபாராதனை காமிங்கோளேன்.. தரிசிச்சிக்கிறோம்...” என்று விண்ணப்பம் போட்டார் வீகேயெஸ். ஒரு தடவை தட்டைச் சுற்றினார். ”ஈஸ்வரா..” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டோம். பேண்டும் சட்டையுமாய் ஒரு இளைஞன் சத்தமாக திருமுறை படித்தான். திருத்தமான தமிழில். கற்சுவர்களில் எதிரொலிக்க சத்தமாக. தமிழ் வேதம் காதில் ஒலிக்க தீபாராதனை பார்த்தது கயிலையில் ஏறி ஸ்வாமி தரிசனம் பண்ணிய நிறைவைக் கொடுத்தது.

சர்க்கரைப்பொங்கல் நெய்வேத்தியம் பண்ணி வட்டமிடாத கழுகுகளுக்குப் பதிலாக பக்தர்களுக்குக் விநியோகித்துக் கொண்டிருந்தார் மொட்டையடித்த சிவநேயர் ஒருவர். யாவர்க்குமாம் ஒரு பச்சிலையில் வைத்துக் கொடுத்ததை ஓரத்தில் வைத்துவிட்டு ஃபோட்டோ பிடிக்க உட்கார்ந்ததில் ஏறிய போது சுற்றிச் சுற்றி வந்த குரங்கார் அவரது வயத்துக்கு எடுத்துக்கொண்டார். ஆஞ்சநேயருக்கு சிவப்பிரசாதம்.

சடசடவென்று இறங்கிவிட்டோம். “வாழ்க்கையிலும் சரி.. மலையிலும் சரி.. ஏற்றது கஷ்டம்... ஆனா ரெண்டுத்துலயும் இறங்கறது ரொம்ப சுலபம்.... மடமடன்னு இறக்கிவிட்டுடும்...” என்று ஜெயகமலாவிடம் தத்துவார்த்த ரம்பம் போட்டேன். ”ஹி...ஹி..” என்று சிரித்து சகித்துக்கொண்டார்கள். இறங்கிய இடத்தில் 1913, பிப்ரவரி மீ(மீயின் சுழியில் சாட்டையைப் போல இன்னும் ரெண்டு மூணு சுழி போட்டு) என்று தேதியிட்ட ஒரு சுவாரஸ்யமான கல்வெட்டு. சென்னை திருவட்டீஸ்வரன் பேட்டை பிள்ளையார் கோவில் வீதி 11வது நெ வீட்டிலுள்ள ம.வடமலை கிராமணி மனைவி ம. செல்லம்மாள்..... என்று யாரோ மலைக்கோயிலுக்கும் தாழக்கோயிலுக்கும் எழுதி வைத்த காலை சந்திக்கான நிவந்தம் ஒன்று. சிறுகதைக்கு தேறும் என்று எண்ணிய போது இரா. முருகன் சார் விஸ்வரூபத்தில் நாலைந்து அத்தியாயங்களை இதே திருக்கழுக்குன்றத்தில் மகாலிங்கைய்யனை வைத்துப் பின்னிப் பெடலெடுத்தது நினைவில் முட்டியது. அவரது புனைவில் வந்த மாட்டு வண்டி வருகிறதா என்று அனிச்சையாகத் தேடினேன். அவரது எழுத்தின் பலம்.

ராஜகோபுர வாசலிலிருந்து பார்க்கும் போதே பக்தவத்சலேஸ்வரர் சீரியல் பல்புகள் “சிவ..சிவ..” மினுக்க கடாட்சம் புரிய காத்திருந்தார். ஓதுவாரோடு உள்ளே நுழைந்தோம். ”மஹேஸ்வராய நம: சம்புவே நம: சசிசேகராய நம:” என்று சிவாச்சாரியார் வில்வார்ச்சனை செய்தார்கள். சிவமே.. சிவமே.. என்று மனம் குழைய சன்னிதியில் நின்றோம். சம்பந்தரின் ”தோடுடையானொரு...”வை ஓதுவார் கம்பீரமாக பாடினார். குரலில் வயது தெரியவில்லை. பிசிறில்லாமல் இருந்தது. மலைக்கோயிலில் வேதகிரீஸ்வரர் சன்னிதியிலும் ஒரு இளைஞர் பாடினார். சன்னிதிக்கு சன்னிதி இப்படி தேவாரமொலிக்கத் தரிசனம் மனதிற்கு நிறைவாக இருந்தது. ஸ்வாமி சன்னிதி திருவலம் வந்தபின் கண்ணாடி போட்ட ஒரு பேழைக்குள் சங்குகள் வைத்திருந்தார்கள். “கடல்லதான் சங்கு பிறக்கும். இந்த க்ஷேத்திரத்தில சங்கு தீர்த்தத்தில் பன்னெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை சங்கு பிறக்குது. ரெண்டாயிருத்து பதினொன்னுல பிறந்தது இது...” என்று லேட்டஸ்ட்டை மேல் கண்ணாடியில் குத்திக் காட்டினார். “கும்பிட்டுக்கோங்க....”. உள்ளங்கையகல சங்கு அது. வெண்சங்கின் வளைவுகளில் இளஞ்சிவப்பு வரிகள் ரேகையாய் ஓடியிருந்தது. சங்கே முழங்கு!

மண்டபத் தூண்களில் உளி விளையாடியிருந்தது. சிலைகளுடன் பேச வல்லபா சென்ற போது நான் ஓதுவாரிடம் கொஞ்சம் ஸ்தல புராணக் கதை கேட்டேன். “இப்போ நீங்க பார்த்த சங்கு ரொம்ப விசேஷம். மார்க்கேண்டய மகரிஷி இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட பாத்திரமில்லாம தவிச்சப்ப... சிவபெருமானே சங்கு உற்பத்தி செஞ்சு தந்தாரு.. அதிலேர்ந்து பன்னெண்டு வருஷத்துக்கு ஒரு சங்கு இந்த சங்கு தீர்த்தத்துல பொறக்குது... சங்கு பொறக்கப் போவுதுன்னா குளத்துல குபுகுபுன்னு நுரை பொங்கும்... அதான் அடையாளம்.. நீங்க மலைக்கோயில்லேந்து பார்த்தேன்னு சொன்னீங்களே.... அந்தக் குளம் தான் சங்கு தீர்த்தம்..”

“இப்போல்லாம் கழுகு வர்றதில்லைன்னு கேள்விப்பட்டேன்...”

“ஆமாங்க.. ராமேஸ்வரத்துல ஸ்நானம் செஞ்சுட்டு திருக்கழுக்குன்றத்துல சாப்பிட்டுட்டு காசியில அடைக்கலம் ஆவும்னு கர்ணபரம்பரையா சொல்லுவாங்க.. சமீபமா வர்றதில்லீங்க.. பூசா விருத்தான்னு ரெண்டு முனிவருங்க சாபத்துனால கழுகா இங்க பறந்தாங்க... ”

”ராமேஸ்வரத்துலேர்ந்து காசிக்கு போற என்ரூட்ல கழுக்குன்றத்துல இறங்கி லன்ச்சா?”

சிரித்தார்.

”அந்தச் சுதைச் சிற்பத்தைப் பார்த்தீங்களா.. மணி வாசகப் பெருமான் தலைமேலே சிவபெருமான் கால் வச்சுக்கிட்டிருக்காரு பாருங்க..”

”ம்... இதுக்கெதாவது வரலாறு இருக்குங்களா?”

“ஆமா.. திருப்பெருந்துறையில மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருவடி தீக்கை (தீக்ஷை) அருளினாரு... மணிவாசகப்பெருமான் சிதம்பரத்துல முக்தி அடையறதுக்கு முன்னாடி இங்க கழுக்குன்றில இன்னொரு தடவை தீக்கை அளிச்சாரு... அதை மணிவாசகப் பெருமானே குரு தரிசனம்னு திருவாசகத்துல ‘கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே...’ன்னு பாடியிருக்காரு.. கணக்கு இல்லாத திருக்கோலமாம்... ரெண்டு அர்த்தம் வருது.. ஒண்ணு... எண்ண முடியாம நிறையா திருக்கோலம்.. இன்னொன்னு அடிமுடி காண முடியாம கணக்கில்லாத உயரமா நின்ற திருவுரும்னும் அர்த்தம் வரும்.. ”

பெரியவரின் விளக்கம் நிறைவாக இருந்தது.

“இந்த தலத்துல ஈசன்கிட்டேயிருந்து சுந்தரருக்கு பொன் கிடைச்சுது..”

“சுந்தரர்தான் ஈசனோட கஜானாவைக் காலி பண்ணினவர் போல.. பொன்னார் மேனியனேன்னு ஐஸ் வச்சு காசு பார்த்தவர்.. காஞ்சிபுரம் ஓணகாந்தன் தளியில.. அப்புறம்.. முருக நாயனார் சரித்திரத்துல வர்ற திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம்ல பொன் செங்கல்.. அப்புறம் விருத்தாசலத்துல பன்னீராயிரம் பொன் வாங்கி திருவாரூர் கமலாலய்த்துல எடுத்துக்கிட்டதுன்னு எல்லா இடத்திலேயும் சிவனை அரிச்சு அரிச்சுப் பொன் வாங்கி செலவு செஞ்சவரு... சிவனோட செல்ல பக்தர்...”

வாய் விட்டுச் சிரித்தார் ஓதுவார். “ஒண்ணுமே வேணாம்னு ஒரு துண்டோட திரிஞ்ச பட்டினத்தாரும் கழுக்குன்றத்தைப் பத்தி ’கழுக்குன்றிலீசா உயிர்த்துணை நின் பதமே’ன்னு பாடியிருக்காரு... அருணகிரியாரும் தேவேந்திரனின் அமராவதி மாதிரி அழகோடு விளங்கும் திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளேன்னாரு திருப்புகழ்ல... ”

கலைவண்ணம் கண்ட சிலா ரூபங்களை கண்டு மகிழ்ந்த திருக்கோஷ்டியினர் சேர்ந்து கொள்ள திருவலம் வந்தோம். ஆர்வி வாய் திறக்காமல் சிவபக்தியுடன் வலம் வந்தார். திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதியில் பாலாலயம் செய்திருந்தார்கள். அத்தி மரத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து அலங்காரம் செய்திருந்தார்கள். திவ்ய தரிசனம். போன வாரம் திருவொற்றியூரில் திரிபுரசுந்தரி. இந்தவாரம் கழுக்குன்றில் திரிபுரசுந்தரி. புண்ணியம் செய்திருக்கிறோம்.

திரிபுரசுந்தரி சன்னிதிக்கு எதிரே பிரத்யக்ஷ வேதகிரீஸ்வரர் சன்னிதி. “மலைக்கு மேலே ஏற முடியாதவங்க இங்கேயே வேதகிரீஸ்வரரை தர்சனம் பண்ணலாம். மலையில இருக்கிற வேதகிரீஸ்வரரை இந்திரன் பூஜை பண்றான். மலைக்கோயில்கர்ப்பக்கிரஹம் சில சமயம் மின்னல் தாக்கிப் பொத்துப்போயிடும். அப்டி ஆகியிருந்தா அன்னிக்கி இந்திரன் வந்து பூஜை பண்ணியிருக்கான்னு அர்த்தம்.. மின்னல் தாக்கறதை ஊர்ல இருக்கிற என்னைப் போல சிலர் பார்த்திருக்கோம். மறுநாள் கர்ப்பக்கிரஹத்துக்குள்ள நுழையவே முடியாது.. அப்படியே தகிக்கும்...” என்று ஆச்சரியமான தகவலைத் தந்தார்.

நடன சபாபதி சன்னிதிக்கு வெளியே தூணில் வடித்துள்ள மஹிஷாசுரமர்த்தினி சிலா ரூபம் சிற்பவேலைப்பாட்டின் உன்னதம். அந்தப் பக்க தூண்கள் ஒவ்வொன்றிலும் ஒரு அற்புதம் காணக் கிடைத்தது. “பல்லவர் காலமோ?” என்று பெரியவரை வினவினேன். “உலகளந்த சோழபுரம்னு கல்வெட்டு இருக்கு... சோழர், பாண்டியர், பல்லவர்னு எல்லா காலக்கட்டத்திலும் கைங்கர்யங்கள் நடந்திருக்கு...கல்வெட்டுகள் இருக்கு... ” என்றார்.

கொடிமரமருகே நமஸ்கரித்து ஓதுவாருக்கு மன நிறைவுடன் நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டோம். வெளியே இப்போது இருட்டியிருந்தது. சிவசிவவென்று மழை தூற ஆரம்பித்தது. இருபது நாற்பது என்று வண்டி வேகம் பிடிக்க சில நொடிகளில் ஊர் பின்னால் போயிருந்தது. சித்தமெல்லாம் சிவமயமாக ஓட்டிக்கொண்டிருக்கும் போது “அடுத்த வாரம் எந்த கோவில்ப்பா?” சின்னவள் கேட்டாள். அடுத்த வாரம்.....

#திருத்தல_யாத்திரை

கணபதி முனி - பாகம் 2 : குழந்தைப் பருவம்

தெய்வக் குழந்தைகள் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவைப் போல பால்யத்தில் பல லீலாவினோதங்களை நிகழ்த்துவார்கள் என்பது உலக வழக்கு. நரசிம்ம சாஸ்திரியும் கணபதி வ்யவஹாரத்தில் அப்படியே நம்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு நேர்மாறாக நடந்தது.

குழந்தை கணபதிக்கு பிறந்ததிலிருந்தே சீக்கான சீக்கு. அடிக்கடி சுகவீனம். கல்லீரல் மண்ணீரல்களில் தொடர் உபாதை. மாதத்தில் பாதி நாட்கள் விட்டு விட்டு ஜுரம். இதோடு சேர்த்து கொடிய வலிப்பு நோய் வேறு. எப்போதும் பிடித்து வைத்த பிள்ளையார் போல ஒரேயிடத்தில் உம்மென்று மந்தமாக உட்கார்ந்திருந்தார். உறவினர்கள் நரசமம்பாவின் சூரியதேவன் கொடுத்த அக்னிக் கலசக் கனவை நினைவுபடுத்தி “சொப்பனத்தில வந்தா மாதிரி அப்படி ஒன்றும் அதிசயமா எதுவும் நடக்கவில்லையே!” என்று தொங்கு முகத்துடன் திண்ணையில் அமர்ந்து கவலைப்பட்டார்கள். நரசிம்ம சாஸ்திரி கவலையில் ஆழ்ந்தார்.

ஆறு வயதாகும் போது ஒருநாள் வழக்கம் போல கணபதிக்கு வலிப்பு ஏற்பட்டது. குழந்தை விலுக்விலுக்கென்று இழுத்துக்கொண்டு துடியாய்த் துடித்தான். அவ்வழியே சென்ற கிராமத்து வயசாளி இதைக் கண்டு பரிதாபப்பட்டு “கரெண்ட்டு சாக் வெச்சா சொஸ்தமாயிடும்பாங்க...வெச்சுப் பாருப்பா...” என்று குருட்டு உபாயம் சொன்னார். சூரியநாராயணரையும் துண்டி கணபதியையும் மனமார ப்ரார்த்திக்கொண்டு நெற்றியிலும் வயிற்றிலும் மின்சாரத்தால் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் நரசிம்ம சாஸ்திரி. தெய்வபலத்தால் பிழைத்தார் கணபதி. அப்போதிலிருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் கணபதியிடம் ஒரு சுறுசுறுப்புத் தீயாய் தொற்றிக்கொண்டது. எல்லா பாடங்களிலும் துறுதுறுவென்று சூட்டிகையாக விளங்கினார். புத்தி கூர் தீட்டப்பட்டது.

கிராமத்துப் பள்ளியொன்றில் ஆசிரியராக இருந்த கணபதியின் சித்தப்பா ப்ரகாஸ சாஸ்திரிதான் அவருக்கு பிரதான குரு. அக்ஷராப்பியாசம் பூர்த்தியான பிறகு வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தைதான் பூர்வாங்கமாகக் கையிலெடுத்தார். பால காண்டமோ சிவ சஹஸ்ரநாமாவோ எத்தனை பக்கமாக இருந்தாலும் ஒரு தடவை படித்ததை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அக்ஷரம் பிசகாமல் திரும்பச் சொல்லும் திறன் கணபதிக்கு இயற்கையாகவே இருந்தது.

பத்து வயதே நிரம்பிய பாலகனாக இருந்த பொழுதிலும் பல காவியங்கள், கணிதம் வான சாஸ்திரம் போன்றவைகளில் சுலபமாகப் பாண்டித்யம் பெற்றார். அச்சிறுவயதிலேயே அவருக்கு பஞ்சாங்கம் கணிக்கத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் சுலபத்தில் பஞ்சாங்கம் கணித்து எழுத புது முறையைக் கையாண்டு அவரது ஆச்சாரியர்களை அசத்தினார். சுத்திப் ப்ரக்ரணம் என்று எளிய முறை பஞ்சாங்கம் கணிப்பதை எப்படி நிறுவுவது என்று புரியும்படி எழுதினார். இந்த அற்புதங்களெல்லாம் பத்து வயதில்!! அநேக குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்கும் தின்பண்டங்களுக்கும் அழும் வயதில் இது போன்ற பல அபாரமான செயல்களை நிகழ்த்திக் காட்டினார். ஒரு பானைக்கு ஒரு சோறாக ஒன்று கீழே..

ஜ்யோதிஷத்தில் அவர் பிறவி மேதை. பக்கத்து வீட்டிலிருந்த ஒரு சிறுமிக்கு ஜாதகப்படி நாளைக்கு ஆபத்து என்று எச்சரித்தார். கணபதியின் ஜ்யோதிஷ வித்வத் தெரிந்த அந்தச் சிறுமியின் தந்தை சுதாரித்துக் கொண்டார். மறுநாள் சூர்யோதயத்திலிருந்து பெண்ணை கண்கொத்திப் பாம்பாக பாதுகாத்தார். வீட்டின் சமீபமாக ஓடிக்கொண்டிருந்த கால்வாய்க் கரையருகே விளையாடிய அந்தச் சிறுமி எப்படியோ அதில் விழுந்துவிட்டாள். தண்ணீரில் இழுவை அதிகம் இருந்ததால் அச்சிறுமியை அடித்துக்கொண்டு வளைந்து வளைந்து பூதாகார நாகமாய் விரைந்தது கால்வாய். நல்லவேளையாக ஆண்டவன் அருளால் சற்று தூரத்தில் நாணல் புதர் ஓரத்தில் சுயநினைவற்று ஒதுங்கிய சிறுமியைக் கரையோரமாகத் துரத்திக் கண்டுபிடித்து தூக்கி வந்து காப்பாற்றினார்கள். அவருக்கு கணபதி கையெடுத்துக் கும்பிடும் தெய்வமாகத் தெரிந்தான்.

பத்து வயதிலேயே சமஸ்கிருதத்தில் காவியங்கள் இயற்றும் புலமை பெற்றார் கணபதி. தனது குரு ப்ரகாஸ சாஸ்திரியின் எதிரில் சம்மணமிட்டு அமர்ந்து ஒரு மணி நேரத்தில் ”பாண்டவ திருதிராஷ்ட்ர சம்பவா”வை முப்பத்து நான்கு ஸ்லோகங்களில் கடகடவென்று எழுதி அசத்தினார். ஆறு வயதில் ஒன்றுக்கும் உபயோகமில்லாத சொத்தைப் பிள்ளை என்று ஊரார் எண்ணிய கணபதியின் பத்து வயதிலேயே அவரது அபார திறமைகளைக் கண்டு உள்ளம் பூரித்தனர் நரசிம்ம சாஸ்திரியும் நரசமம்பாவும். இளம் பிராயத்திலேயே குரு ப்ரகாஸ சாஸ்திரியை மிஞ்சிய பலே சிஷ்யனானார் கணபதி முனிவர்.

கணபதி பிறந்து நான்காவது வருடத்தில் அன்னபூர்ணா என்ற தங்கையும் அதற்குப் பின்னர் மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிவராம சாஸ்திரி என்ற தம்பியும் பிறந்தார்கள். மீண்டும் நரசமம்பா கர்ப்பவதியானார்கள். இம்முறை வயிற்றுக்குள் இரட்டையர்கள். பிரசவிக்கும் நேரம் நெருங்குகிறது. மேனியெங்கும் நோக படுக்கையில் கிடந்த நரசமம்பா கணபதியை அழைத்து தனது பிரசவம் பற்றித் திக்கித் தடுமாறி ஆரூடம் கேட்கிறார்... கணபதி கண்ணை மூடி பட்டென்று சொன்னது அப்படியே நடந்தது. கணபதி சொன்னது என்ன?

[இன்னும் வரும்....]

#காவ்ய_கண்ட_கணபதி_முனிவர்_அத்தியாயம்_2

#கணபதி_முனி

கணபதி முனி - பாகம் 1 : அவதாரம்

ஆந்திரபிரதேசம். ஸ்ரீகாகுளம் ஜில்லா. பொப்பிலிக்கு அருகே இயற்கை எழில் சூழும் அமைதியான கலுவராயி கிராமம். சமஸ்கிருதத்தில் கலுவ என்றால் குமுதம். தமிழில் தாமரை; உபலம் என்றால் ராயி. தமிழில் கல். பரம்பரையாக வசிக்கும் உள்ளூர்க்காரர் ஒருவர் சொன்னார் “இந்தூர்ல ஒருத்தருக்கு அதிசயமா கல்லுலேர்ந்து தாமரைப்பூ பூத்திச்சுங்க... அதனால கிராமத்துக்கு பேரு கலுவராயிங்க...”

கல்லில் தாமரைப் பூத்ததோ இல்லையோ; ஒரு அவதார புருஷர் தாமரையாய் பிறந்த புண்ணிய பூமி கலுவராயி. இவரது பூர்வீகர்கள் பதினாறாம் நூற்றாண்டில் கும்பகோணம் பக்கமிருக்கும் வலங்கைமானில் இருந்து கர்னூல் ஜில்லா நந்தியாலுக்குக் குடிபெயர்ந்தவர்கள். பின் நந்தியாலிலிருந்து நத்தபகலாவிற்கு பெயர்ந்தார்கள்.

அய்யலசோமையாஜுலு என்பது இவர்களது குலப் பெயர். இந்த வம்சத்தில் ஜெகன்னாத சாஸ்திரி என்பவர் கலுவராயியைத் தொட்டடுத்த நந்தபலகா கிராமத்திற்கு ஜாகை போனார். கண்டி சர்வப்ப சாஸ்திரி என்பவர் கலுவராயி கிராமத்தின் தலைவர். பெரும் தனவந்தர். நந்தபலகாவில் படிக்க வந்த ஜெகன்னாத சாஸ்திரியின் தேஜஸைக் கண்டு தனது மகளை அவருக்கு கன்னிகாதானம் செய்துவைக்க விரும்பினார். காசிக்கு க்ஷேத்திராடனம் சென்ற சர்வப்ப சாஸ்திரி அங்கேயே பிராணனை விட்டார். உயிர் பிரியும் தருவாயில் மனைவியிடம் “அந்த ஜெகன்னாதனையே நம் மகளுக்கு மணம் முடித்து வை..” என்று தனது கடைசி ஆசையை தெரிவித்தார். ஊருக்குத் திரும்பிய சர்வப்ப சாஸ்திரியின் மனைவி ஜெகன்னாத சாஸ்திரியை தனது மகளுக்கு பாணிக்கிரஹனம் செய்வித்து சர்வப்ப சாஸ்திரியின் சகல சொத்துகளுக்கும் அதிபதியாக்கினார். வருடங்கள் பல உருண்டோடின.

ஜகன்னாத சாஸ்திரியின் ஒரே மகன் பீம சாஸ்திரி. பீம சாஸ்திரிக்கு நரசிம்ம சாஸ்திரி, சர்வேஸ்வர சாஸ்திரி, ப்ரகாஸ சாஸ்திரி என்று மூன்று புத்திரர்கள். நரசிம்ம சாஸ்திரியின் குணமும், கொள்கையும், படிப்பும் மிக்கவர். அக்கிராம மக்கள் அவரிடம் கைகூப்பி வாய்பொத்தும் அளவுகடந்த மரியாதை கொண்டிருந்தார்கள். நரசிம்ம சாஸ்திரி பாரத தேசமெங்கும் க்ஷேத்திராடனம் செய்யப் பிரியப்படுவார். வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை அகவொளி பெருக்கிய மானுடர்களாலேயே காப்பாற்ற முடியும் என்று நம்பினார். அகவொளி பெருக்குவதற்கு ஸ்திர பலமாகத் திகழ்வது வேதங்கள் என்பது அவரது திண்ணம். அப்படி வேதவித்துக்களாக இருந்த ரிஷிகள் போல தனக்கு தெய்வத்தன்மையோடு பிள்ளைச் செல்வம் வாய்க்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார்.

நரசமாம்பாவிற்கு ஆண் மகவு பிறந்தது. பீம சாஸ்திரி என்று பெயரிட்டார்கள். லவலேசம் கூட தெய்வாம்சம் பொருந்தியதாக அக்குழந்தை இல்லை. நரசிம்ம சாஸ்திரி சோர்வுற்றார். பிறந்த குழந்தைக்கு அடிக்கடி சுகவீனம் ஏற்பட்டது. குற்றுயிரும் கொலையுயிருமாக அக்குழந்தை போராடியபோது அரசவல்லியில் இருக்கும் சூரியநாராயணரிடம் மொட்டை போடுவதாக பிரார்த்தனை செய்துகொண்டார்கள். குழந்தை படிப்படியாகத் தேறியது. அரசவல்லிக்குச் சென்று மொட்டை போட்டு அன்று ராத்தங்கினார்கள்.

விடியற்காலையில் ஒரு அழகான தேவதை நரசமாம்பாவிடம் தங்கக் கலசத்தில் கொழுந்துவிட்டெரியும் அக்னியோடு கையில் கொடுத்துவிட்டு மாயமாய் மறைகிறாள். கையில் வாங்கிய அக்னிக் கலசத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது குழந்தையாக உரு மாறுகிறது. அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. கண்ணைத் திறந்தால் அது வெறும்கனவு. வீட்டிற்கு திரும்பும் வழியில் நரசிம்ம சாஸ்திரியிடம் இக்கனவைச் சொல்ல “அக்னியின் அம்சத்தோடு நமக்கு ஒரு பிள்ளை பிறக்கப்போகிறான். சூரியநாராயணரின் சக்தி சொரூபமே அழகான தேவதையாக உருவெடுத்து கலசத்தோடு வந்திருக்கிறது..” என்று கூறினார்.

சில மாதங்களில் நரசமாம்பா கருவுற்று தனது பிறந்தகம் சென்றார். நரசிம்ம சாஸ்திரி காசிக்கு பயணம் மேற்கொண்டார். பெரும்பாலான தூரத்தைக் கால்நடையாகவே கடக்க வேண்டிய காலம் அது. ஒரு மாதத்திற்கும் மேல் பயணப்பட்டு காசியை அடைந்தார். ஒரு தம்பளர் பாலோடு தினமும் துண்டி கணபதி கோயிலில் தியானத்தில் ஈடுபட்டார். ஒரு வாரம் கடந்து ஒரு நாள் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருக்கும் போது துண்டி கணபதியின் மடியிலிருந்து ஒரு குழந்தை சிரித்துக்கொண்டே தோன்றி தவழ்ந்து தவழ்ந்து வந்து இவரது மடியில் ஏறி உட்கார்ந்தது. அந்த க்ஷணம் இவர் சந்தோஷத்தில் திளைத்தார். ஆசையோடு கண்ணைத் திறந்து பார்த்தால் மடியில் அக்குழந்தையைக் காணோம். அவர் தூங்கவில்லை. இதுவும் கனவல்ல. இது நடந்தது 17-11-1878.

ஊரில் தனது மனைவி நரசமாம்பாவிற்கு மகன் பிறந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். துண்டி கணபதியை நமஸ்கரித்து ஊருக்குத் திரும்பினார். ஒன்றரை மாதத்தில் அவரது மாமனாரின் ஊரை அடைகிறார். துண்டி கணபதியின் மடியிலிருந்து தன் மடிக்கு குழந்த வந்த அன்றுதான் தனக்கும் குழந்தை பிறந்தது என்பதையறிந்து மட்டில்லா மகிழ்ச்சியடைந்தார். நரசமம்பாவும் “இவன் பிறந்த போது சிரசைச் சுற்றி ஒளிவட்டத்தைக் கண்டேன்” என்று கூறினார்.

பிறந்த குழந்தைக்கு சூரிய கணபதி என்று நாமகரணம் சூட்டினார்கள்.

பிற்காலத்தில் அந்தக் குழந்தை சூரியவைக் கத்தரித்துவிட்டு கணபதி சாஸ்திரியாக இருந்தது. அய்யலசோமையாஜுலு குல மரபினருக்கு கௌண்டின்யர், மைத்ரவருணர் மற்றும் வசிஷ்டர் போன்றோர் கோத்திர ரிஷிகள். கணபதி சாஸ்திரி வசிஷ்டரை தனது பெயருக்கு முன்னால் சேர்த்து வசிஷ்ட கணபதி சாஸ்திரியானார். பின்னர் அவரது தபஸை அறிந்த பெரியோர் வசிஷ்ட கணபதி முனி என்று ஆக்கினார்கள். இவருடைய குரு ரமண மகரிஷி “நாயனா” (என்றால் தெலுங்கில் அப்பா) என்று அழைத்தார். இவரது சீடர்களும் நாயனா என்றே அழைத்தார்கள்.

இவரே, வசிஷ்ட கணபதி முனி (அ) ஸ்ரீ நாயனா.

[நாளை தொடரும்....]

பின்குறிப்பு: குண்டுரூ லக்ஷ்மிகாந்தம் சுந்தரத் தெலுங்கில் எழுதிய நாயனாவை Dr. ஜி. கிருஷ்ணா என்பவர் ஆங்கிலத்தில் ”Ganapai Muni - Nayana" என்று மொழிபெயர்த்தார். அதை படித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் இந்த திவ்ய சரித்திரத்தை எழுதும் முயற்சி இது. அதன் விளைவே இப்பதிவும். இதன் புத்தக உரிமை யாருக்கேனும் இருந்தால் அதை இதன் மூலம் நான் மீறினால் தயை கூர்ந்து சுட்டிக்காட்டி தடுத்துவிடுங்கள். நிறுத்திவிடுகிறேன். துளிக்கூட வியாபார நோக்கில் இப்பணியில் நான் ஈடுபடவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்புத்தகத்தில் பக்கத்துக்குப் பக்கம் அற்புதங்கள் நிகழ்கின்றன. ஸ்ரீரமணர் என்று திருவண்ணாமலை ப்ராம்மணசாமிக்கு பெயர் சூட்டியவர் கணபதி முனி. என்னை கணபதி முனி பக்கம் திருப்பிவிட்ட Baskaran Sridharan அவர்கட்கு கோடி நன்றி!

#கணபதி_முனி

அன்னமிட்ட கை

கோயிலில் அர்த்தஜாம பூஜை முடிந்து குருக்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டார். ”ராமலிங்கம்... ஏம்ப்பா... ராமலிங்கம்...”. ஊஹும். சலனமேயில்லை. சன்னிதி ஓரத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்த இராமலிங்கம் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. “மெய்க்காவல்.. ராமலிங்கம் எழுந்து ஆத்துக்கு போனப்புறம் கோபுரவாசல் சின்னக் கதவையும் பூட்டிடுப்பா..” என்று பித்தளை நெய்வேத்திய தூக்கும் கையுமாக வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.

இராமலிங்கத்திற்கு எத்தனை நேரம் வடிவுடையம்மனை மனதில் நிறுத்தி அந்த சன்னிதியில் தியானத்தில் அமர்ந்திருந்தோம் என்று தெரியாது. இமையைத் திறந்த போது பிரம்மாண்ட மதிலருகே மங்கலாக வெளிச்சம் தெரிந்தது. மற்ற இடங்களில் காரிருள். மெய்க்காவல் கோபுரவாசலில் முதுகைச் சாய்த்து தலை தொங்க தூங்க ஆரம்பித்திருந்தது அந்த சன்னமான ஒளியில் நிழலாகத் தெரிந்தது. எழுந்து சென்று “கதவைச் சார்த்திக்கோப்பா...” என்று தோளைத் தொட்டுச் சொல்லிவிட்டு ஆளரவமற்ற திருவொற்றியூர் வீதிகளில் தனியாளாகக் கிளம்பினார்.

இராமலிங்கம் அப்போது அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். அண்ணிதான் தினமும் அவருக்கு அன்னமிடுவார். அன்று நேரம் கிட்டத்தட்ட நள்ளிரவை நெருங்கிவிட்டதால் வாசல் கதவு சார்த்தியிருந்தது. உள்ளே தூங்கிக்கொண்டிருப்பவரை தொந்தரவு செய்ய மனம் ஒப்பாத இராமலிங்கம் திண்ணையில் துண்டை விரித்து படுத்துக்கொண்டார்.

பாதி தூக்கத்தில் யாரோ எழுப்புவது போலிருந்தது. கண்ணை விழித்துப் பார்த்தால் அண்ணி நிலைவாசப்படியருகே நின்றுகொண்டிருந்தார். முகம் மலர்ந்து தெய்வீகமாக சிரித்தார். “என்ன அண்ணி.. அர்த்த ராத்திரி தாண்டிவிட்டதே.. இன்னமும் நீங்கள் தூங்க வில்லையா?” என்று பரிவுடன் கேட்டார். ”இன்று ஏன் உனக்கு இவ்வளவு தாமதம்?” என்று கேட்ட அண்ணியிடம் “வடிவுடையம்மனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில் மனதிற்குள் நினைத்து கண்களை மூடி தியானித்தேன். நேரம் போனதே தெரியவில்லை” என்றார். அர்த்தபுஷ்டியாக சிரித்த அண்ணி “ஏனப்பா.. உனக்கு அன்னமிடாமல் ஒருநாளும் நான் தூங்கியதில்லையே.. நீ ஏன் என்னைக் கதவைத் தட்டி எழுப்பவில்லை?” என்று வாத்சல்யத்துடன் கடிந்து கொண்டார்.

இப்படி நேரங்கெட்ட நேரத்தில் அண்ணியாரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டோமே என்று இராமலிங்கத்திற்கு மனதை பிசைந்தது. இந்த சிந்தனையில் குனிந்து நிமிர்ந்த இராமலிங்கத்திற்கு பெரிய ஆச்சரியம். தன்னெதிரே வாழையிலை விரித்திருந்தது. அண்ணியார் தண்ணீர் தெளித்து வகைவகையாகப் பரிமாறினார். அன்று அவருக்கு அகோரப் பசி. விதம் விதமாக பரிமாற நன்றாக விருந்து சாப்பிட்டார். ”அண்ணி.. இன்று சாப்பாடு அபார ருசியாக இருக்கிறது...” என்று பாராட்டினார். அதற்கு அண்ணி “இருக்காதா என்ன... தேவலோகத்திலிருந்து வந்து சமைத்தார்கள்....” என்று சொல்லிவிட்டு ”களுக்”கென்று சிரித்தார். நன்கு பசியாறிய இராமலிங்கமாகிய வள்ளலார் திண்ணையோரத்திலேயே கைகளை கழுவி விட்டு மீண்டும் நித்திரைக்குப் போனார்.

தூக்கம் வராமல் புரண்டு படுத்த வள்ளலார் வீட்டின் வாசல் கதவைத் திறந்து அண்ணியார் எட்டிப்பார்ப்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். “ஏனப்பா.. ராமலிங்கம். எப்போ வந்தே.. எழுப்பக்கூடாதா... நீ ஏன் ஒன்றும் சாப்பிடாமல் தூங்குகிறாய்.. பசிக்கவில்லையா...” என்று வாஞ்சையோடு கேட்டார். இராமலிங்கத்திற்கு திடுமென்று தூக்கி வாரிப்போட்டது.

“அண்ணி... நீங்கள் தான் சற்று முன்பு சாப்பாடு போட்டீர்களே.. நான் கூட தேவாமிர்தமாக இருந்தது என்று ருசித்துச் சாப்பிட்டேனே...” என்று இராமலிங்கம் கேட்கக் கேட்ட அண்ணிக்கு ஒன்றுமே புரியவில்லை. புருவத்தைச் சுருக்கி “ஒன்றும் விளங்கவில்லையேப்பா..” என்று கேட்டவுடன் இராமலிங்கத்திற்கு அனைத்தும் புரிந்து போயிற்று. தனக்கு அர்த்தராத்திரியில் அன்னமிட்டது வடிவுடையம்மன்தான் என்று அறிந்துகொண்டார். கண்களில் இருந்து தாரைதாரையாய் கண்ணீர் சொரிந்தார். தெய்வபலம் தனக்கு இருப்பதை உணர்ந்தார். ”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய...” வள்ளலார் ”மாணிக்கமே...மாணிக்கமே...” என்று கசிந்துருகிப் பாடிய நூற்றியிரண்டில் ஒரு பாடல்....

அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே

நேற்றைக்கு எழுதிய திருவொற்றியூர் மகாத்மியத்தில் நான் தவறிய ஒரு திவ்ய சரித்திரம். “இதையும் பதிவு செய்திருக்கலாமே...” என்று கேட்ட Rajan Raj அவர்கட்கு நன்றி!

வள்ளலாரின்_பசிப்பிணி_போக்கிய_வடிவுடையம்மன்

ஒற்றியூருடைய கோவே!

சிவானந்தத்தில் திளைக்க திருக்கழுக்குன்றம் போகலாம் என்று ஒரு வாரமாக முடிவு செய்து நேரெதிர் திசையில் ஒரு ஆகர்ஷன சக்தி கவர்ந்து இழுக்க திருவொற்றியூருக்குக் கிளம்பினோம். ஆல் இண்டியா ரேடியோ வாசலில் குடும்ப சகிதம் காருக்குள் காத்திருந்தார் வீகேயெஸ். சேப்பாயியை செல்லமாக விரட்டிப் போய் சேர்ந்துகொண்டேன்.

பாரீஸ் கார்னரில் கார்ப்போரேட் அலுவலகங்கள் தூங்கும் இன்னொரு ஞாயிற்றுக்கிழமை. கடந்து வட சென்னை சாலையில் ஒடிக்காமல் ஓட்டினால் வலது பக்கம் ”ஹோ..”வென ஆர்ப்பரிக்கும் சமுத்திரம். கரையோற பாறையில் சடார் சடாரென்று ஆக்ரோஷத்துடன் அடித்து வீரம் காண்பிக்கும் ஆண் பெண் அலைகள். ரோட்டுக்கு பார்டர் கட்டியது போல அழுக்குடன் கண்டெய்னர் லாரிகள். உள்ளே குளிக்காமல் ஸ்டியரிங் மேல் தலை கவிழ்த்த ட்ரைவர்கள். பாரம் தாங்காமல் விழுப்புண் பட்ட சாலைகள். பத்திரமாக ரோட்டை விட்டு இறங்காமல் அப்படியே சீராக ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் திருவொற்றியூர் வந்துவிட்டது.

மெயின் ரோட்டிலிருந்து இறங்கி ஒற்றியூருக்குள் நுழையும் போதே பட்டினத்தாருக்குப் பேய்க்கரும்பு இனித்து முக்தியடைந்த தலமாயிற்றே என்று பக்தி தலைக்கேறி மனசு “நமசிவாய... நமசிவாய...நமசிவாய...” என்று பஞ்சாட்சரம் ஓதியது. ”மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில் நடப்பவர்” என்று திருவொற்றியூர் பதிகத்தில் பட்டினத்தடிகள் ஒற்றியூரின் மகாத்மியம் பாடிய இடங்களில் கார் சக்கரங்கள் உருள மாமதில்களைத் தாண்டி நிறுத்தும்போது மணி பத்தே முக்கால். ”பதினோறு மணிக்கு வடிவுடை அம்மனுக்குத் திரை போட்டுடுவாங்க.. அப்புறம் அரை மணி ஆவும்” என்று கோபுரவாசல் தாண்டு போதே அன்புக்கட்டளை விதித்து பக்தி மார்க்கமாக அம்பாள் சன்னிதி பக்கம் விரட்டினார் கோயில் ஊழியர் ஒருவர். வடிவுடையை தரிசித்த சில பக்தர்கள் பரவசம் பொங்க சன்னிதி வாசல் பிரசாத ஸ்டாலை மொய்த்துக்கொண்டிருந்தார்கள்.

அரக்கு கலர் புடவையில் சர்வாலங்கார பூஷிணியாகக் காட்சியளித்தாள் வடிவுடையம்மன். மினுமினுக்கும் மூக்குத்தியும் காதுக்கு அகிலாண்டேஸ்வரி மாதிரி தகதகக்கும் தாடகங்களும் ஜிலுஜிலுவென ஜொலிக்கும் க்ரீடமுமாக ஜெகஜோதியாக காட்சியளித்தாள். ரோஜா சம்பங்கி என்று வெள்ளையும் ரோஸுமாகவும் பல சுகந்தங்களில் மாலை மேல் மாலையென புஷ்பாலங்காரமாக சார்த்தியிருந்தார்கள்.

என்ன ஒரு அழகு! சொக்க வைக்கும் பேரழகு!! காமதகனம் செய்த சொக்கனே மயங்கமாட்டானா? தாழம்பூ குங்கும வாசனை பக்தி சாகரத்தினுள் மூக்கைப் பிடித்து இழுத்து மூழ்கடித்தது. கை கூப்பி கண்ணை மூடி தியானிக்கையில் ஆதிசங்கரர் கர்ப்பக்கிரக ஓரத்தில் தோளில் சார்த்திய தண்டத்துடன் நின்று கொண்டு ”சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்” என்று சௌந்தர்ய லஹரி பாடுவது போல ஒரு கனா. சில நொடிகளில் பின்னணியாக இளையராஜாவின் குரலில் “ஜனனி..ஜனனி..” இறையிசையாகப் புறப்பட்டு வந்தது.

தியாகராஜர் “கன்னதல்லி”யில் நீயிருக்க எனக்கு என்ன குறை? வெண்ணையிருக்க நெய்க்கு யாரேனும் கவலைப்படுவார்களா என்று திருவொற்றியூர் திரிபுரசுந்தரி மீது பஞ்சரத்தினமாக ஐந்து பாடல்கள் பாடியிருக்கிறார். கன்னதல்லியில் ரஜ்ஜு பை என்று வருகிற “பழுதையில் பாம்பு” அர்த்தத்தில் Murthy Subra சமீபத்தில் எழுதிய வெண்பா ஞாபகம் எட்டிப் பார்த்தது. ஞானசக்தி சொரூபமாக காட்சியளித்தவளுக்கு ஒரு குங்குமார்ச்சனை செய்து கொண்டு வலம் வந்தோம்.

திரை போடுவதற்கு முன் தரிசிப்பதற்கு ஒரே தள்ளுமுள்ளு. உட்பிரகாரத்தில் நாலடி உசரத்திற்கு திருவுடை, வடிவுடை, கொடியுடை அம்மன்களின் படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டியிருந்தார்கள். தொட்டுத் தொட்டு அழுக்காக்கிக்கொண்டிருந்த பக்தகோடிகளுக்கு அசராமல் அருள்பாலித்துக்கொண்டிருந்தாள். மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் இம்மூன்றிலும் அருள்பாலிக்கும் திருவுடை, வடிவுடை, கொடியுடை என்கிற தேவிமார்கள் இச்சா, ஞான, கிரியா சக்தி சொரூபமாக ரட்சித்துக்கொண்டு இருப்பதாக ஐதீகம். பௌர்ணமியில் இம்மூன்றையும் தரிசிப்பவர்கள் சொல்லொணா அற்புத பலன்களைப் பெறுவார்கள் என்பது உறுதியாம். கூடவே வந்த தாணுலிங்கம் அம்மன் புகழ் பாடி அடித்துச் சொன்னார். சமரச சன்மார்க்க வள்ளலார் வடிவுடை மாணிக்க மாலையாக கட்டளை கலித்துறையில் 102 பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் சொக்க வைக்கும் ஒரு பாடல். சாம்பிள்.

கடலமுதே செங்கரும்பே அருட்கற்பகக் கனியே
உடல்உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே
அடல்விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே.

கடலோரத்திலிருக்கும் அமுதே (அ) கடலில் கிடைத்த அமிர்தத்த்துக்கு நிகரானவளே என்று ஆரம்பித்து.. உடலுக்குள் இருக்கும் உயிரே.. உயிர்க்குள் உணர்வே... என்று பாடியதோடு நிற்காமல், ஞான ஒளி ஏற்றும் ஞான சக்தியாக இருப்பதால் அந்த உணர்வுக்குள் ஒளியே... ஞானமலரே... என்று தமிழ்ச் சிலம்பு எடுத்து தாராளமாகச் சுழற்றியிருக்கிறார். நூற்றிரெண்டு பாடலும் மாணிக்கப் பரல்கள்!

அம்மன் சன்னிதியிலிருந்து கோயிலை வலம் வரும் போது முதலில் வருபவர் ஸ்ரீசூரியன். வானத்தில் அப்போது மறைந்திருந்தவனை சன்னதியில் பார்த்து சொற்ப பேர் கன்னத்தில் படபடவென்று போட்டுக்கொண்டார்கள். அந்த வரிசை ஓரத்தில் சகஸ்ரலிங்க சன்னிதி. லிங்கத்துள் ஆயிரம் லிங்கம். அப்புறம் நேரே ஸ்ரீதியாகராஜர் சன்னிதி. இங்கிருக்கும் தியாகேசர் உட்கார்ந்த வண்ணம் திருநடமிடுகிறாராம். பக்கத்தில் திரிபுரசுந்தரியும் நடுவில் குட்டியோண்டு பாப்பாவாக ஷண்முகரும். கற்பூரத் தட்டை ஒருமுறை சுழற்றி விட்டு நமக்குக் காண்பித்தார் சிவாச்சாரியார். தியாகேசர் சிரித்தார். சிவஸ்வரூபமாக கௌலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் யோகத்தில் இருப்பது போன்று தியாகரஜாருக்குப் பின்னால் ஒரு சன்னிதி. குருக்களும் யோக நிலை போலிருக்கிறது. கேட்டாலும் யோக நிலையில் ஈசன் என்பதோடு நிறுத்திக்கொண்டார்.

இவர்களை திருவலம் வந்த பின்னர் நாம் நுழைவது ஆதிபுரீஸ்வரர், புற்றிடம் கொண்டார், படம்பக்கநாதர், தியாகராஜர், எழுத்தறியும் பெருமான் என்றெல்லாம் பல திருநாமங்கள் கொண்ட ஈஸ்வரன் சன்னிதி. பிரம்மாண்டமான லிங்கம். சதுர ஆவுடை. சுயம்புத் திருமேனி. தங்கக் காப்பிட்டிருக்கிறார்கள். கார்த்திகை மாதப் பௌர்ணமி சமயத்தில் மூன்று நாட்கள் திறந்து வைத்து பிரம்மா, விஷ்ணு மற்றும் வாசுகி மூவரும் தொட்டு வழிபடுவதாக புராணம். இம்மூன்று நாட்களில் புனுகு, சாம்பிராணி தைல அபிஷேகங்கள் நடைபெறுகிறது. வீகேயேஸ், வல்லபா, வல்லபாவின் தாய் தந்தையார், அஜ்ஜு, ஹரி, வினயா, மானஸா, நான், சங்கீதா எல்லோரும் கோரஸாக “நமஸ்தே அஸ்து பகவன்” என்ற ஸ்ரீருத்ர ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டோம். விடையன்... படையன்... சடையன்...தோடுடையன் என்று சம்பந்தர் தமிழில் தவிடுபொடியாகப் பாடியிருக்கிறார். திருநாவுக்கரசர் பாடிய தேவாரமொன்று இதைப் படிப்பவர்கள் மகிழ...

வெள்ளத்தைச் சடையில் வைத்த (கங்கையை...)
வேத கீதன்றன் பாதம் (வேத கீதன் உந்தன் பாதத்தை..)
மெள்ளத்தான் அடைய வேண்டின் (அடைய வேண்டுமென்றால்)
மெய்தரு ஞானத் தீயாற்
கள்ளத்தைக் கழிய நின்றார்
காயத்துக் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியு மாகும்
ஒற்றியூ ருடைய கோவே

மெய் தரும் ஞானத் தீயால் (நமது) கள்ளத்தைக் கழிக்க நின்றாராம்.. நமது காயத்துக்குள் கலந்து உள்ளத்தில் ஒளியுமான ஒற்றியூரைடைய கோவே என்று பாடுகிறார். பரவசத்தில் ஆழ்ந்து போகிறோம். மாலை சார்த்தி அழகு பார்த்தோம். அர்ச்சனை செய்து ஆரத்தி எடுத்துக்கொண்டு விபூதி நெற்றியை நிறைக்க வலம் வந்தோம்.

பிரகாரத்தில் கலிய நாயனாரின் வரலாற்றைச் சித்தரிக்கும் படமிருந்தது. இந்த இடத்தில் அதைச் சொல்லிவிடுகிறேன். சின்ன கதைதான். கேளுங்கள். ஒரு பிரதக்ஷிணத்திற்குள் ஒரு பாராவில் அடங்கிவிடும்.

முருக நாயனார் புஷ்ப கைங்கர்யம் செய்தது போல விளக்குக்கு எண்ணெய் போடும் கைங்கரியத்தினால் கலிய நாயனாராகியவர். தன்னுடைய செல்வம் அத்தனையும் விற்று விளக்குப் போட்ட பெருமான். கடைசியில் வீதிக்கு வந்தாலும் எண்ணையாட்டும் செக்கில் பிழைப்பு நடத்தி விளக்குக்கு எண்ணெயிட்டார். அந்த தொழிலும் நசிந்து விட வேறு உபாயமின்றி தவித்த போது மனைவியை விற்று விளக்குப் போடலாம் என்று எண்ணி விற்க முற்பட்டார். வாங்குவோர் இல்லை. கடைசியில் திருவிளக்கில் திரிகளை போட்டு கழுத்தை அறுத்து உதிரத்தால் விளக்கேற்ற முற்படும் போது கருணாமூர்த்தியான சிவபெருமான் ரிஷபாரூடராகத் தோன்றினார். அவரது கையைப் பிடித்து நிறுத்தி தனது திருவடி நீழலில் சேர்த்துக்கொண்டார்.

வட்டப்பாறை அம்மன் சன்னிதிக்குள் ஒரு இருபது பேர் கூட்டாக தரிசனம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். வெளியே காத்திருக்கும் வேளையில் அம்மனின் சான்னித்தியத்தை உணர முடிந்தது. “நொம்ப சக்தி வாய்ந்த அம்மன் பார்த்துக்கிடுங்க.. கம்பரு இராத்திரியெல்லாம் ராமாயணம் எளுதுவாராம். அதுக்கு தீப்பந்தம் புடிச்ச அம்மனிது” என்றார். ஸ்தல புராண புத்தகத்திலும் அப்படியே போட்டிருந்தார்கள். தேரெழுந்தூரில் பிறந்த கம்பர் திருவொற்றியூரில் ராமாயணம் எழுதினாரா? எழுத வந்தாராம். சதுரானை பண்டிதர் என்கிற மலைநாட்டு சர்வமொழி வித்தகர் வான்மீகி ராமாயணத்தை பகல் முழுவதும் படித்துக்காட்டி அர்த்தம் சொல்ல இரவில் தமிழில் எழுதினாராம். இதற்கு ஆதாரமாக வடிவுடையம்மன்.ஓஆர்ஜி இணைய தளத்தில் கம்பர் வட்டப்பாறையம்மன் தீப்பந்தம் பிடித்ததை எழுதியிருப்பதாக கீழ்கண்ட பாடலைப் பதிவிட்டிருக்கிறார்கள்.

ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே
வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை - பற்றியே
நந்தாது எழுதற்கு நல்லிரவில் மாணாக்கர்
பிந்தாமல் பந்தம் பிடி

அடுத்து ஆடல்வல்லானின் சபை. குருக்கள் மும்முரமாக ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். சந்தடி கேட்டுத் திரும்பி எழுந்து தீபாராதனை காண்பித்தார். விபூதி தரித்துக்கொண்டு “அது என்ன புத்தகம்?” என்று அக்கறையாக விசாரித்தேன். “தமிழ் வேதத் திரட்டு” எஸ் மகாலிங்கம் என்று மஞ்சள் அட்டையில் எழுதியிருந்தது. தேவாரப் பதிகங்களிலிருந்து பரிகாரம் தரும் தேர்ந்தெடுத்த பாடல்களை குண்டு குண்டாகஅச்சிட்டிருந்தார்கள். பலன்களுடன். மிஷின் அளவு ஆஃபீஸிருக்கும் சிற்றூர் ப்ரிண்டர்ஸ் அடித்தது. தேடிப்பார்த்து வாங்கணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வலம் வந்தோம்.

இப்போது வெளிப்பிரகார சுற்று. தென்மேற்கில் கோசாலை இருக்கிறது. நெருங்கினாலே சாப்பிட ஏதேனும் கிடைக்குமா என்று ஆவினங்கள் நாக்கை மூக்கில் நுழைத்துக்கொண்டு திமிறி வருகிறது. அங்கிருந்த பச்சையிலைகளைக் கொடுத்துவிட்டு வலம் வந்தோம். இதே ஸ்தலத்தில் தான் மகிழ மரத்தினடியில் சுந்தரரையும் சங்கிலியாரையும் சுந்தரேஸ்வரன் மணம் முடித்து வைத்தானாம். அவ்வைபவத்தை இன்னமும் மகிழடி சேவை என்று வருடந்தோறும் மாசி மகத்தில் கொண்டாடுகிறார்கள்.

திருவொற்றியீஸ்வரருக்கு தனிக்கோயில். சன்னிதிக்குள் நுழையும் முன் மண்டபத் தூண்களில் அனைத்து ரிஷிகளும் சித்தர்களும் தவமியற்றுகிறார்கள். பேய்க்கரும்புடன் பட்டினத்தடிகளும் அவரது சீடரான மெய்ஞானப் புலம்பலில் எக்காலம். எக்காலம் என்று பாடிய பத்திரகிரியாரும் ஒரு தூணைப் பகிர்ந்துகொண்டார்கள். தும்புருவும் நாரதரும் ஒரு தூணில் சிவஸ்மரணையுடன் நிற்கிறார்கள். இப்படி இறைத் தமிழுக்கும் சமயத்துக்கும் தூணாக இருந்தவர்களை தூண்களில் சிலையாக வடித்திருந்தார்கள். நத்தவனத்தை பராமரிக்கும் தாணுலிங்கம் தான் பயிரிட்ட வெண்டி, கத்தரிச் செடிகளைக் காட்டினார். பூத்துக் காய்த்திருந்த செடிகளைப் பார்க்கும் போது அப்படியொரு சந்தோஷம் அவருக்கு. நமக்கும்தான். க்ரூப் ஃபோட்டோ பிடித்துக்கொண்டோம்.

பிரதக்ஷிணம் முடிப்பதற்கு முன் இடதுபுறம் பைரவர் சன்னிதி. பூனை ஒன்று ராஜா போல உலாத்திக்கொண்டிருந்தது. அர்ச்சகர் யாருமில்லை. இப்போது வாசலில் நடை சார்த்திவிட்டார்கள். பைரவரைக் கன்னத்தில் போட்டுக்கொண்டு வரும் போது திகில் தொடர்களில் வரும் பிசாசுக் கிழவி போல சடைவார் குழலோடு ஒரு அம்மணி தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். நடுங்கிப் போய் நாலடி தள்ளி ஓடிவந்தாள் மானஸா. ஏகபாத மூர்த்தியின் தரிசனத்தோடு கொடிமரத்தருகில் நமஸ்கரித்தோம். கடைசியில் தாணுலிங்கத்திற்கு டாட்டா காட்டிவிட்டு ”சகல ஐஸ்வரியங்களும் தரும்” வடிவுடையம்மனின் படத்தோடும் இரண்டு பட்டை பிரசாதத்தோடும் வீடு வந்து சேர்ந்தோம்.

பின் சிறுகுறிப்பு: ஆங்காங்கே கட்டுரையில் குறிப்பிடப்பட்ட தாணுலிங்கம் கோயில் ஊழியர். சுசீந்திரத்துக்காரர். தன்னார்வலராக இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஒற்றியூரன் கோயிலில் மகேசன் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

மற்றுமொரு குறிப்பு: இந்தப் பக்கத்துக்கு நீங்கள் புதிதென்றால் இரண்டு போஸ்ட்டுகளுக்கு முன்னர் திருவொற்றியூர் கோபுரம் இட்டிருக்கிறேன். தரிசித்து அருள் பெறவும்.

திருவாசகத் தேன்

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய்,
விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே
நின் பெரும்சீர் பொல்லா வினையேன்
புகழுமாறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

அவனருளாலே அவன் தாள் வணங்கி நாம் கேட்கும்போதோ... வாசிக்கும் போதோ.... திருவாசகத்துக்கு உருகார்... ஒரு வாசகத்துக்கும் உருகார்...

மூவுலகிற்கும் சிவனுக்கு அடிமுடி காணா விஸ்வரூப பேனர் வைப்பது போல திருவாசகத்தில் உருகும் மாணிக்கவாசகரின் சில பன்ச்கள் கீழே...

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதியே
மலர்ந்த மலர்ச்சுடரே
தேனார் அமுதே
பெருங்கருணைப் பேராறே (ப்பா... கருணை கசிந்தாலே நனைஞ்சிடுவோம்... இது பெருங்கருணை பேராறு... எப்படியிருக்கும்!!!.....)
ஆரா அமுதே
அளவிலாப் பெம்மானே
ஒளிக்கும் ஒளியானே
என் ஆருயிறாய் நின்றானே
சோதியனே
தோன்றாப் பெருமையனே
நோக்கரிய நோக்கே
நுணுக்கரிய நுண் உணர்வே
காவலனே
காண்பரிய பேர் ஒளியே
தில்லை உள் கூத்தனே
தென்பாண்டி நாட்டானே

தருமபுரம் சுவாமிநாதனையே கேட்ட காதுகளுக்கு ஓதுவார் சத்குருவின் சிவபுராணம் அடங்கிய ”திருஐந்தெழுத்து” ஆடியோ சிடி தெவிட்டாத தெள்ளமுது. கேட்கக் கேட்க மனசை மத்தாய்க் கடையும் கம்பீரமான குரல். வரிக்கு வரி உருக வைக்கும் மாணிக்கவாசகர். ”வேகம் கெடுத்தாண்ட..”வில் வரும் வேகத்தில் சத்குரு கொடுக்கும் ஆக்ஸிலேட்டர் நம்மைக் கைலாயத்திற்கு அழைத்துச்செல்லும். யாருமற்ற நெடுவழிச் சாலையில் பயணிக்கும் போது இதை செவிமடுத்தால் அண்டப் பெருவெளியில் ஆனந்தமாக மிதந்து சிவஜோதியைத் தரிசிக்கலாம்.

”விடையவன்... படையவன்... சடையவன்.. தோடுடையவன்..” என்று சம்பந்தர் பாடிய ஒற்றியூர் சிவன் மாணிக்கத் தியாகேசர்-வடிவுடையம்மன் ஜோடியைப் பற்றி எழுதணும்.

வயிறாயணம்

டின்னருக்கு தோசைதான் டிஃபன். மிருதுவான தோசையை மூன்று விரலால் வலிக்காமல் விண்டு விண்டு இலையோரத்தில் சிற்றாராய் ஓடிக்கொண்டிருந்த மணத்தக்காளி வெத்தக் குழம்பில் தோய்த்து தோய்த்து வக்கணையாக இறக்கினேன். தோசையின் வெதுவெதுப்பான சூடும் வெத்தக்குழம்பின் புளிப்பு+உறைப்பு+மணத்தக்காளியின் துளி கசப்பு+அரை அச்சு வெல்லத்தின் அசட்டுத் தித்திப்பு சேர்த்து.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ருஜியை வர்ணிக்க வார்த்தையில்லைப்பா...

எவ்ளோ விள்ளல் எவ்ளோ குழிக்கரண்டி வெத்தக்கொழம்புன்னு கணக்குவழக்கில்லை. பாட்டியாயிருந்தா தோசை வார்த்து வார்த்து கை அசந்து போய் “டேய் தம்பி! வயிறா வண்ணாஞ்சாலயாடா”ன்னு தோசைக் கரண்டியை சூலமாக்கி மிரட்டியிருப்பாள். நாக்கும் வாயும் வாகனத்தின் முன் சக்கரம் பின் சக்கரம் மாதிரி அப்படியொரு ஒத்துழைப்பு. துளிக்கூட அசரவேயில்லை. கடைசியில் குழம்பாறு வத்திப்போச்சு. வட்ட வட்ட தோசையால் வயிறு முட்ட முட்ட நிறைஞ்சுபோச்சு. தரையில் கையை ஊன்றாமல் ஸ்டடியாக எழுந்தாச்சு.

லைஃப்ல போதும்னு சொல்ற ஒரே விஷயம் சாப்பாடுதான். திரும்ப திரும்ப நேரம் தவறாமல் மொசுக்குற விஷயமும் சாப்பாடுதான். கழைக்கூத்தாடியின் குட்டிப் பொண்ணு கம்பி மேலே நடக்கும் போது “பாவம்! எல்லாம் வயித்துப் பொழைப்புக்கு”ன்னு பரிதாபப்படுவார்கள். காஃபி, டீ, சமோசா, பஃப், தமிழ்நாடு தாலி, பட்டர் நாண், ஜூஸ், பர்கர், பிட்ஸா என்று நாள் பூராவும் வெகுவாக கவனிக்கப்படுவது வயிறுதான். சென்ஸிடிவ் வயிறு வாய்த்தவர்கள் “இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது” என்று ஔவைப் பாடலை ஒவ்வொரு விருந்துக்கு பின்னரும் ஜெலுசில்/ஈனோவோடு நினைவுகூர்வார்கள்.

ஆண்களின் சாமுத்ரிகா லட்சணப்படி உருண்டை வயிறர்கள் குபேரனைப் போல செல்வந்தர்களாகவும், அதே பேய் உருண்டை காலை நோக்கி இறங்கி பிரசவ நேரம் நெருங்கிய கர்ப்பஸ்திரீகள் போலிருந்தால் ஓட்டாண்டியாகி விடுவார்களாம். வயிறில்லாமல் அந்த இடம் நேராக துடைத்து விட்டாற்போல இருந்தால் அவர்களுக்குப் பிக்கல் பிடுங்கலற்ற வாழ்வாம். எங்கேயோ படித்தது.

புஸ்தக அலமாரியில் கையைவிட்டு குன்ஸாகக் கிடைத்தது வாத்தியாரின் “ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்”. புக் கிரிக்கெட் மாதிரி பொசுக்கென்று பக்கத்தைத் திருப்பினேன். வலது பக்கத்தில் போல்ட் பண்ணி போட்டிருந்த பேயாழ்வாரின் நா.தி.பி பாடல்.

மண்ணுண்டும்-பேய்ச்சி-முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுந்த வெகுண்டு ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்
வயிற்றினொடு ஆற்றா மகன்

எத்தனை சாப்பிட்டாலும் மறுபடி இன்னமும் ஏதாவது சாப்பிடக் கொடேன் என்று ஏங்குவது வயிறு. வயிற்றுக்காக பல வேஷங்கள் போடுவதை பஜ கோவிந்தத்தில் சங்கரர் “உதர நிமித்தம் பகுக்ருத வேஷம்” என்கிறாராம். உலகங்களையெல்லாம் எடுத்து உண்டு, பேய்ச்சியின் பாலையும் உண்டான். அவள் உயிரையும் உண்டான். அதிலும் திருப்திப்படாமல் ஆய்ச்சியின் வெண்ணெயையும் உண்டு அவளால் கயிற்றில் கட்டப்படுகிறான்.

என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள். அந்த சிரசு டொட்டொய்ங்னு கீழே தொங்காமல் நிமிர்த்திக் காப்பது ஒரு சாண் வயிறு.

முருக நாயனார், ருத்ர பசுபதி நாயனார்

”பூக்காரன் வரலைடா... பஜாருக்குப் போனா ஒரு மொழம் மல்லிப்பூ வாங்கிண்டு வா...இல்லேன்னா கதம்பம் சாமந்தி எது கிடைக்கிறதோ... ஒரு மொழமாவது... மறந்துடாதே... ஸ்வாமிக்கு சார்த்தணும்...”. ஒரு நாள் கூட ஸ்வாமிக்கு புஷ்பமிடாமல் இருந்ததில்லை பாட்டி. எண்பளத்தெட்டு வயசு வரை. மன்னையில் வாசலில் சம்பங்கி கொடி இருந்தது. கும்மென்று மணக்கும். ஊசியில் நூலைக் கோர்த்துத் அடிமேலாய் பூவைக் குத்தித் தொடுத்து மாலைகட்டிக் கொடுத்தால் தண்ணீரில் நனைத்துவிட்டு அன்னபூரணிக்கு போட்டு அழகு பார்ப்பாள். “கஜானனம்... பூதகனாதி...ம்... சொல்லு...” என்று தார்க்குச்சி போடுவாள். ”பாத பங்கஜம்...” சொன்னவுடன் ஒரு சின்னக் கட்டி கல்கண்டும் நாலு கிஸ்மிஸ்ஸும் கையில அழுத்தி “வாய்ல போட்டுக்கோ...”ன்னு பூஜைரூமை விட்டு அனுப்புவாள்.

சாயந்திர வேளைகளில் குளத்தைப் பார்த்து வாசற்படியில் உட்கார்ந்திருக்கும் போது நமக்கு யோகமிருந்தால் எப்பவாது பக்தி கதைகள் சொல்லுவாள். அப்படி சொல்ல ஆரம்பித்தால் பாட்டி வேஷம் போட்டுண்ட ராமகிருஷ்ண பரமஹம்சர் மாதிரி மங்கலாகத் தெரிவாள். “பூ வாங்கிண்டு வாடான்னு... வாங்கிண்டு வாடான்னு தலதலயா அடிச்சுக்கிறேனே... ஒருத்தர் ஈஸ்வரனுக்கு பூ கைங்கர்யம் பண்ணியே அறுபத்து மூவர்ல ஒருத்தராயிட்டார். நோக்குத் தெரியுமோடா?” என்று பீடிகையோடு ஆரம்பிப்பாள். சர்ர்ர்ர்ர்ர்ன்னு ஏழு மணி சோழன்(அரசுப் பேருந்து) ஒன்று நடை தளர்ந்து பஸ் ஸ்டாண்டைப் பார்க்கப் போகும். இப்போது “ம்..” கொட்ட ஆரம்பித்தால் அரை மணி அப்படியும் இப்படியுமாக பல விஷயங்களை அலசி ஒரு கதாகாலட்சேபம் பண்ணுவாள். கையில் சப்ளாக்கட்டையில்லாமல்.

“திருப்புகலூர் சிவன் கோயிலுக்கு பூ பறிச்சுண்டு வந்து மாலை தொடுத்துக் கொடுத்து கைங்கர்யம் பண்ணிண்டிருந்தார் முருக நாயனார். நீங்கெல்லாம் பறிக்கறேளே.. இடது கையில ஒண்ணு.. வலது கையில ஒண்ணு... இலையை பிச்சு.. கிளையை ஒடிச்சு.. அப்படியெல்லாமில்லை. பூ பறிக்கிறதுக்கு நிறையா நேமநிஷ்டைகள் இருக்கு. ஸ்நானம் பண்ணிட்டு பூ பறிச்சு கூடையில போட்டுண்டு வரச்சே நாபிக்குக் கீழே தணிச்சு கொண்டு வரப்டாது. அதுக்கு மேலேயே தூக்கிப் பிடிச்சுண்டு வரணும். நித்யமும் வெடிகார்த்தாலே எழுந்து ஸ்நானம் பண்ணி நித்யகர்மாக்கள் பண்ணிட்டு அப்படியே கூடை நெறைய பூவெல்லாம் பறிச்சுண்டு வந்து பிரகாரத்துல உட்கார்ந்துண்டு அவர் கையாலே தொடுத்து ஸ்வாமிக்கு கொடுப்பாராம். இந்தக் கைங்கர்யம் பண்ணிண்டிருக்கும் போது சுந்தரர் அவருக்கு ஃப்ரெண்ட் ஆயிடறார். ஆச்சாள்புரத்துல சுந்தரர் கல்யாணத்துக்கும் இவர் போறார். அங்க சுந்தரர் கல்யாணத்துக்கு வந்தவா எல்லோரையும் சேர்த்து கைலாயத்துக்கு அழைச்சுண்டு போயிடறார். அதுல முருக நாயனாரும் போயிடறார்.” குளம் காற்றில் சிற்றலைகளை எழுப்புவது தெருவிளக்கின் வெளிச்சம் குளத்தில் விழுந்த இடத்தில் வெள்ளிக் கம்பிகளாகத் தெரியும். அரை நிமிடம் நிசப்தம். மீண்டும் தொடருவாள். “திருப்புகலூர்ல இன்னொரு விசேஷம் நடந்துருக்கு. சுந்தரருக்கு சிவபெருமான் செங்கல்லை தங்கமா மாத்திக் கொடுத்துருக்கார். சுந்தரர் பார்யாள் பரவையார் தான தர்மம் நிறையா பண்ணுவா. அப்படி தர்மம் பண்றத்துக்கு காசு வேணுமோன்னோ... அதுக்காக திருப்புகலூர் வரச்சே சுந்தரர் கிட்டே காசு கேட்டா. அவர்ட்ட ஏது காசு. ஆகட்டும்மா கார்த்தால பார்க்கலாம்னு தலைக்கு ஒரு செங்கல்லை வச்சுண்டு ப்ரகாரத்துல படுத்துண்டார். கார்த்தாலே எழுந்து பார்த்தா தலைக்கு வச்சுண்ட செங்கல் சொக்கத் தங்கமாயிடுத்து. அவருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். உச்சி குளுந்து போய் ஈஸ்வரனைப் பாட்டா பாடித் தள்ளிட்டார்.”

ஈஸ்வரனுக்குப் பூ கைங்கர்யம் பண்ணுவதின் மகத்துவத்தைப் பற்றி அந்த வயதில் புரிந்துகொண்டதில் மனசுக்கு இனம் புரியாத ஒரு திருப்தி இருக்கும். இன்னொரு நாள் ஸ்லோகம் சொல்லும் போது காமாசோமாவென்று அசிரத்தையா இருந்தால் பூஜை ரூமிலேயே உட்கார வைத்துக் கதை சொல்லுவாள். “கஜானனம் சொல்றத்துக்கே உங்களுக்கெல்லாம் வாய் கோணிண்டு அலுத்துக்கறதே... பெரிய்ய்ய ஸ்லோகமான ஸ்ரீருத்ரத்தை தெனமும் ஒருத்தர் ஜெபிச்சு மோட்சத்துக்குப் போனார். அதுவும் சும்மா உட்கார்ந்துண்டு சொல்ல மாட்டார். நம்ம ஹரித்ராநதி மாதிரி ஒரு குளத்துல கழுத்தளவு தண்ணியில இறங்கி நின்னுப்பார்.. கண்ணை மூடிப்பார்... ரெண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டுப்பார்.. கைலாசத்துலேர்ந்து சிவபெருமான் பார்த்தா நன்னா தெரியும்.. நெத்தி நெறையா பட்டை பட்டையா இட்டுண்டு இவர் நிக்கறது... அப்படியே “ஓம் நமோ பகவதே ருத்ராயா...”ன்னு ஜெபிக்க ஆரம்பிச்சுடுவார்.. ஒரு தடவை ரெண்டு தடவை இல்லை... ராத்திரி படுத்துக்கறதுக்கு கரைக்கு வருவார்... ஆத்துல போய் மோருஞ்சாதமா சாப்டுட்டு படுத்துண்டுடுவார்... கார்த்தாலே எழுந்து சந்தியெல்லாம் பண்ணிட்டு திரும்பவும் தொண்டை முழுகிற அளவுக்கு குளத்துல இறங்கி ஸ்ரீருத்ரம் ஜெபிக்க ஆரம்பிப்பார்.. இப்படி தெனம் பண்ணி கைலாசத்துக்குப் போனார்..”

“அவர் பேரென்ன பாட்டி?”

“ருத்ர பசுபதி நாயனார்...”

“நா சின்னதம்பிதானே...பசுபதி இல்லையே...”

“கட்டேல போறவனே... நல்லது சொன்னாலும் பரிகாசம் பண்றே... படவா....”

குரு பூர்ணிமா

”கட்டை விரலை வெட்டிக் குடுன்னு கேட்ட ஒருவர் குருவா? என்னய்யா இது நாட்ல அந்யாயமா இருக்கே!”

“அவர் குருதாங்க...”

“இதுவா குருவின் லக்ஷணம்?”

“கதை தெரியாதா? ’நீங்கதான் என் மானசீக குரு. என்ன தட்சணை வேணும்.. ப்ளீஸ் கேளுங்க...’னு ஒத்தைக்கால்ல நின்னான் ஏகலைவன். உன்னிடமிருக்கும் சிறந்ததைக் கொடுன்னு கேட்டார் துரோணர்”

“ம்.. அப்புறம்...”

“வில்லாளிக்குச் சிறந்தது அவனது கட்டை விரல். சட்டுன்னு வெட்டிக் கொடுத்துட்டான்...”

“யோவ்... நீயென்ன துரோணருக்கு சப்பைக் கட்டா? ”

“இல்லீங்க.. இது கிருபானந்தவாரியார் மகாபாரதச் சொற்பொழிவுல சொன்னது... இதுல ஏகலைவன் எவரெஸ்ட்டுக்குப் போய்ட்டான். துரோணர் மேலேயும் துளி பழி இல்லை... இதையே இன்னொரு மாதிரியும் சொல்வாங்க...”

“எப்படி?”

”நாட்டுல துப்பாக்கி வச்சுக்கணும்னா லைசன்ஸ் வேணும்..ஓகேவா?”

“ஆமாம்..”

“அது மாதிரி அந்த காலத்துல சில வித்தைகள்.. ராஜாவுக்கு மட்டும்தான் தெரியணும்னு இருந்தது.....”

“அதனால...”

“நாயோட வாயை அம்பாலக் கட்டுற வித்தையை க்ஷத்திரியனான அர்ஜுனனுக்கு துரோ சொல்லிக்கொடுத்தார் ப்ரோ..”

“சரி ப்ரோ...... கத்துக்கொடுக்கட்டும்.. அதுக்கு இவன் கட்டை விரலை ஏன் வெட்டணும்? ப்ரோ... ”

“அதான் சொன்னேனே ப்ரோ... லைசன்ஸ் இல்லாம துப்பாக்கி வச்சுக்கிற மாதிரி.. இந்த வில் வித்தையை கிராதனான ஏகலைவன் துரோவுக்கு தெரியாம மானசீகமாகக் கத்து வச்சுக்கிட்டான்..”

“என்னது? கிராதகனா?...”

“கிராதன்பா.. கிராதன்னா.. வேடன்னு அர்த்தம்.. கண்ணப்ப நாயனாரும் கிராதன்தான்.. இப்ப புரியுதா?”

“ஓ.. கிராதன்தான்... கிராதகன்னு மருவியிருக்குமோ... சரி...சரி.. மேட்டருக்கு வா....துரோணரை ஜஸ்டிஃபை பண்ணு.. அவர் பக்கம் கொடி பிடி...”

“ராஜாவுக்கு சமமா ஒரு வித்தையை சாமான்யன் இன்னொருத்தன் நாட்ல வச்சுக்கிட்டா.. அது ரொம்ப அபாயகரமான விஷயம்.... எல்லாம் நாசமப்போயிடும்...”

“எப்படி சொல்ற?”

“ராணுவத்துல இருக்கிற முக்கியமான வெப்பனை உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் வச்சுகிட்டு திண்ணையில ஒக்காந்திருந்தா... நீ சும்மாயிருப்பியா? உனக்கு அது சேஃபா?”

“ஐயய்யோ.. நா செத்தேன்... வெளிய தல காட்டவே முடியாதே... ”

“அந்த லாஜிக்தான் இங்கேயும்..ராஜ்ய பரிபாலனம் செய்யும் ராஜகுலமான க்ஷத்ரிய அர்ஜுனனுக்குத் தெரிஞ்ச தனுர் வித்தையை வேடுவனான ஏகலைவனுக்குத் தெரிஞ்சா.. வேற எதாவது அல்ப விஷயங்களுக்கு உபயோகிச்சுட்டான்னா... தொந்தரவுதானே... அதான் கறாரா விரலை வாங்கிட்டார்...”

“முன்னாடி.. அவனே தன்னிச்சையாக் கொடுத்தான்னு சொல்லிட்டு.. அதை வாரியார் சொன்னார்னு சொன்னே... இதை யாரு சொன்னா?... உன்னோட குருவி மூளைக்கு இதெல்லாம் எட்டாதே!!,,, சொல்லு.. சொல்லு.. யாரு சொன்னா? ”

“இது பக்தர்களால அண்ணான்னு அன்போடு அழைக்கப்படற ஸ்ரீக்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளோட மகாபாரத ப்ரவசனத்துலேர்ந்து...”

**

குரு. எந்த வித்தைக்கும் குரு கிருபை தேவைப்படுகிறது. குருவே சரணம். தெய்வத்திற்கு ஒரு படி மேல். பிதாவுக்கு அடுத்த படி. வியாஸாச்சாரியாள் ஆதி குரு.

இப்ப கொஞ்சம் பரமாச்சார்யாள் சொன்னது....

குருபரம்பரை பற்றி குருமார்களின் வரிசையொன்றை தெய்வத்தின் குரலில் மஹாபெரியவா பட்டியலிடுகிறார். அதி சுவாரஸ்யம். அத்வைத சம்பிரதாயத்தில் தேவர்களான தெக்ஷிணாமூர்த்தி, தத்தர், நாராயணர், பிரம்மாவும் அதற்குப் பிறகு விசிஷ்டர், சக்தி, பராசரர் மற்றும் வியாஸர் என்று சந்ததியாய் தோன்றிய ரிஷிகளும் குருமார்கள். வியாஸரின் புத்திரரான சுகப்பிரம்மம் பிரம்மச்சாரி. அங்கிருந்து பிள்ளை வழியாக வந்த குருமார்கள் வம்சம் அறுபட்டுப் போய் அதற்குப் பிறகு சன்னியாசிகளும் சீடர்களாகி குருமார்களாக தொடர்கிறார்கள். கௌடபாதர், கோவிந்த பகவத்பாதாள், சங்கர பகவத்பாதாள் ....

சித்தர் பாட்டு ஒண்ணு.....

குரு மேனி கண்டு, குரு நாமம் செப்பி, குரு வார்த்தைக் கேட்டு, குரு உரு சிந்தித்தலைப் பற்றி திருமூலரின் திருமந்திரமான கீழ்வரும் பாடல் அற்புதமானது.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே

யோக முத்திரையுடன் அருள்பாலிக்கும் தென்முகக் கடவுளான சிவகுருவானாலும், பிரம்புடன் வகுப்பறை பாடம் சொல்லித்தரும் உபாத்தியாய குருவானாலும் இருவருமே ஞானகுரு. அறிவு புகட்டுபவர்கள்.

எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அனைத்து குருமார்களுக்கும் என் நமஸ்காரங்கள். வாழ்வியல் பாடமெடுத்தவர்களுக்கு வந்தனங்கள். லட்சம் கிரந்தம் எழுதிய வியாஸருக்கு தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். ஸ்பெஷல் சல்யூட்!

மன்னார்குடி மாந்தர்கள்!

மன்னார்குடியர்கள் சர்வலோகத்திலும் வியாபித்திருப்பார்கள் என்பது இன்று கண்கூடாகத் தெரிந்தது. எப்படியென்று சொல்கிறேன். சின்னவளும் பெரியவளும் திருப்புகழ் பாடுவதற்கு நங்கைநல்லூர் சென்றார்கள். சாரதியாக சென்றிருந்தேன். எட்டுக்கு பத்து ரூமில் இருபது பேர் முருகனருள் முன்னிற்க ”சந்ததம் பந்தத்...... தொடராலே....சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே” பாடினார்கள். ”இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி.... இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே”யும் “பத்தியால் யானுனைப் ...... பலகாலும்....பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி”யிலும் செவி இனித்தது.

திருப்புகழ் பாடியவர்களுக்கு பந்தி பரிமாறினார்கள். மைசூர் போண்டோ, காராமணி சுண்டல், அசோகா அல்வா. ஒரு வாய் காஃபி. “மாலை போட்ருக்கேன்... ஒரு போது...” என்று கழன்றுகொண்டேன். “ஒரு வா காஃபியானும் சாப்டுங்கோ..”ன்னு துரத்தி வற்புறுத்தல். தப்பித்து வெளியே ஓடி வந்தேன். நிலைவாசப்படியில் நிறுத்தி “ராமூர்த்தி பையனா?” என்று ஒரு குரல். “எம் பேரு சூர்யா.. மேலரெண்டாம் தெருவுல இருந்தோம்.. அப்புறம் மூணாம் தெருவுலேயும் வக்கீல் ஸிபியாத்துக்குப் பக்கத்துலயும் இருந்தோம்...உங்கப்பாவுக்கு நன்னாத் தெரியும்...” நெற்றியில் கேபியெஸ் விபூதியும் கையில் “முருகா சரணம்” மஞ்சப்பையுமாக ஒரு பாட்டி நின்றிருந்தார்கள். கையெடுத்துக் கும்பிட்டேன். பேச நா எழவில்லை. “அலமேலுவைக் கேட்டதா சொல்லு...” என்று அம்மாவையும் விஜாரித்துவிட்டு எம்சியார் செப்பலை மாட்டிக்கொண்டு மறைந்துபோனார்கள்.

“நீங்க மன்னார்குடியா? நேஷ்னல் ஸ்கூலா?” என்று கேள்வியெழுப்பிக்கொண்டே இன்னொரு ராணி சுங்குடி மாமி க்ராஸ் செய்தார்கள். சிரித்தேன். சொன்னேன். மன்னார்குடி வீதிவீதியாக மனக்கண் முன் வந்துகொண்டிருக்கிறது.

சுண்டைக்காய் வெத்தக் குழம்பு

மன்னையில் காற்றடி காலங்களில் வாசலிலிருந்து கொல்லை வரை கதவுகள் படார்படாரென்று அடித்துக்கொள்ளும். அதற்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு ரக்பி பால் சைஸில் பாதிக்கு ஒரு கருங்கல் மொழுக்கென்று இடுக்கியிருக்கும். பெரும்பாலும் மாசாந்திர துவாதசியன்று அந்தக் கல்லுக்கு வேலை. பச்சை சுண்டைக்காயை அந்தக் கல்லால் மொச்மொச்சென்று நசுக்கிப் போட்ட வெத்தக்குழம்புக்கு ஒரு அலாதி ருஜி. லேசான கசப்பு நாக்கில் புரளும். ஆறு முட்டை நல்லண்ணெய் போட்டுப் பிசைந்துச் சாப்பிட கவளம் கவளமாக வேகமாக உள்ளுக்குப் போகும். தொட்டுக்க (முளைக்)கீரைத் தண்டு (மெல்லீஸானது) மோர்க்கூட்டு அட்டகாசமான கோம்போ. தமிழும் சுவையும் போல.

ஒரு தடவை மோர்க்கூட்டு+குழம்புஞ்சாம் சாப்பிட்டுவிட்டு “பாட்டீ! இன்னும் கொஞ்சம் சாதம்.. வெத்தக் கொழம்பு”ன்னு கூச்சல் போட வைக்கும். ரெண்டாம் தடவை ஒரு சிப்பல் சாதத்துக்குத் தொட்டுக்க நறுக்மொறுக்குன்னு நாலஞ்சு ஜவ்வரி வடாம். “இதாண்டா சாஸ்வதமான சொர்க்கம்”ன்னு ப்ரூவ் ஆகி மூன்றாம் தடவையாக் குழம்புஞ்சாம் ரிப்பீட் கேட்க வாயெழும் சமயத்தில் “போரும்.. மோருஞ்சாம் சாப்பிடலைன்னா நெஞ்சு எரிச்சல் வரும்டா..” என்பாள் பாட்டி. கையில் கரண்டியை கண்டிப்புப் பொங்க ஆட்டிக்கொண்டே.

கல்லோரலில் தண்ணீர் ஊற்றி தெப்பமாக மிதக்க விட்ட சில்வர் சொம்பு மோரில்..... கால் லிட்டர் தட்டில் ஊற்றிக் குழைவாப் பிசைஞ்சு... “தொட்டுக்க கொழம்பு ஊத்து...”ன்னு கேட்டு வாங்கி.... சோத்துக்கரையெழுப்பிக் கட்டிய குளத்துக்குள் குழம்பை விட்டு நிரப்பி... வாய்க்கு வாய்... ஒரு பச்சை சுண்டைக்காய் கச்ச்க்..கச்சக்னு கடிபட்டால் பரம ஆனந்தம். அமிர்தம். நாக்குக்கு மோட்சம்.

மூக்கில் ஒரு பருக்கை வரும் வரை கட்டு கட்டிவிட்டு... கையலம்பி.. வேஷ்டியில் துடைத்துக்கொண்டு..... வாசனை சுண்ணாம்பு தடவிய ரெண்டு வெத்திலை...ரெண்டு சிட்டிகை கைசீவல்... துளி ரஷிக்லால் பாக்கு... ஜீரணத்துக்கு கொதப்பிவிட்டு... வாய் கொப்பளித்து... டம்பளர் தூத்தம் குடித்துவிட்டு.... வாசல் திண்ணையில் ”அக்கடா”ன்னு காசித் துண்டை கீழே விரித்து பத்து நிமிஷம் கண் அசந்தால் கூட ஸ்தூல சரீரத்தோடு ஸ்வர்க்கத்தின் வாசற்படியை மிதித்து தேவாதிதேவர்களுக்கு “ஹலோ எவரிபடி” என்று கையசைத்துப் பூலோகம் திரும்பலாம்.

இன்னிக்கு வீட்டில் பச்சை சுண்டைக்காய் வெத்தக்குழம்பு டே! ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தால் புலனடக்கம் வேண்டும்.. குறிப்பாக நாவடக்கம் முக்கியம் என்றாலும்..... ச்சே.... இந்த
நாக்கை அறுக்க!!

தத்வமஸி

சபரிமலைக்கு விரதமிருக்கிறேன். ஹரிஹரபுத்ரன் ஐயன் ஐயப்பன். அபிஷேகப் ப்ரியனான சிவாம்சமும் அலங்கார ப்ரியனான விஷ்ணுவாம்சமும் நிறைந்த பரம்பொருள். பரமேஸ்வரனின் ஞானமும் ஸ்ரீமன் நாராயணனின் மோகினி ஸ்வரூப லாவண்யமும் சேர்ந்து மகா தேஜஸோடு சைவ-வைஷ்ணவ பேதம் பார்க்க முடியாத ஜோதி ஸ்வரூபனாக அவதரித்தவன் ஐயப்பன்.

பம்பா நதி தீரத்தில் ஸ்நானம் செய்துவிட்டு மேலே ஏறும் சிறியபாதைதான் எங்களது. பதினான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐயப்ப விரதம். வரும் ஆடி( ஆகஸ்ட்) மாசம் மலையேற்றம். அதுவரையில் இராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள், நளோபாக்கியாணம் சாவித்ரி உபாக்கியாணம் போன்ற புண்ணிய சரித்திரங்கள், புவனம் போற்றும் குருமார்களின் புனித வரலாறுகள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பிரபந்தங்கள் போன்றவற்றிலிருந்து இச்சிறியோனின் அறிவுக்கு எட்டியவைகளையும் அடியேனுக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களையும் பகிரப்போகிறேன். நோ கலாய்த்தல். நோ நையாண்டி. நோ நக்கல். நோ அக்கப்போர். பக்தியோகமாக எழுதத் திராணியிருக்கும் வரை எல்லாமே பக்கா சைவ/வைஷ்ணவ/கௌமார/காணாபத்ய/சாக்த/சௌமார ஷன்மத போஸ்ட்ஸ்!

காலையில் எங்கள் பேட்டையிலுள்ள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருந்தேன். பதினெட்டுப் படிகளுக்கு முன் ”தத்வமஸி” என்று கோயில் முகப்பில் போர்டு தொங்கியது. சாந்தோக்கிய உபநிஷத்தில் ஸ்வேதகேதுவிற்கு அவனது பிதாவும் குருவுமாகிய உத்தாலக ஆருணி ஒன்பது முறை தத்வமஸி என்று அழுத்தம் திருத்தமாக உபதேசித்திருக்கிறாராம். தத்+த்வம்+அஸி என்று பதம் பிரித்து தெய்வத்தின் குரலில் வியாக்யானம் செய்திருக்கிறார் மஹா பெரியவா. தத்-பரமாத்மாவான ப்ரம்மம், த்வம்-ஜீவாத்மாவாகிய ஸ்வேதகேது(அல்லது எழுதும் நான்; படிக்கும் நீங்கள்), அஸி-இருக்கிறாய். நீயே ப்ரம்மமாக இருக்கிறாய் என்று உபதேசிக்கிறார்.

அஷ்டாவக்ர கீதையில் ப்ரம்ம ஞானம் பெறுவது பற்றி ஜனக மகாராஜா வேதாந்த நூல் ஒன்றில் படித்தது பற்றி இப்படியாக வரும். ”குதிரையின் சேணத்தில் ஒரு காலை வைத்து இன்னொரு காலை விசிறி குதிரையின் முதுகில் போடும் நேரத்திற்குள் ப்ரம்ம ஞானம் ஏற்படும்”. இதைத் தெளிவாக்காத பண்டிதர்களையும், முனிவர்களையும் பிடித்துச் சிறையில் அடைத்தான் ஜனகன். அஷ்ட இடங்களில் கோணலாக இருக்கும் அஷ்டாவக்கிரர் அம்மன்னனின் சபைக்கு வந்து அனைவரையும் விடுவித்து அவனுக்கு ப்ரம்ம ஞானம் வழங்கிய கதை மிகப் பிரசித்தம்.

மன்னையில் ஒரு முறை ஐயப்பன் பூஜைக்கு கோலம் போடும் போது யாரோ ஒரு மாமி சரணம் “ஐ”யப்பாவுக்கு பதில் ஐயின் கொம்பைச் சுழித்து “ஜ”யப்பா என்று எழுதியிருந்தார்கள். வாசலில் நின்று சிரித்தவர்களைப் பார்த்து ”ஐயப்பனை நம்பினால் ஜெயம்தானே, அதைத்தான் கோலப்பூர்வமாக எழுதியிருக்கிறார்கள்” என்று மாற்றிப்படித்துக் காண்பித்து ஒப்பேற்றினேன்.

”சார்! சபரிமலைக்குப் போறீங்களாமே! எப்போ டிஸம்பர் ஜனவரில மகரஜோதிக்கா?” என்று ஆர்வமாகக் கேட்ட அலுவலக நண்பரிடம் “சந்நியாசம் போற அளவுக்கு இன்னமும் வைராக்கியம் வரலைங்க... அடுத்த மாசம் சபரிமலைக்கு போறேன்...” என்று அடக்கமாக முடித்துக்கொண்டேன். இரவு ஸ்நானம் செய்து ஐப்பனுக்கு சரணம் சொல்லிவிட்டேன். புலியின் மேல் கனகாம்பீர்யமாக உட்கார்ந்து கொண்டு வில்லாளி வில்லனாக வீரமணிகண்டனான ஐப்பனுக்கு கற்பூரார்த்தி ஆயிற்று. கற்பூர ஜ்வாலை படும் ஐயப்பன் படம் மனசுக்கு இதமாக இருக்கிறது. ஊதுபத்தி தாழம்பூவாய் மணத்தது. நாற்பது நாட்கள் நலமாகக் கழிய ப்ரார்த்தித்துக்கொண்டேன்.

பூதநாத ஸதானந்த சர்வ பூத தயாபரா, ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ!!

#ஸ்வாமியே_சரணம்_ஐ(ஜ)யப்பா!

காசு.. பணம்.. துட்டு.. மணி..மணி...

இடது கையில் லாவகமாகப் பிடித்துக்கொண்டார். தலையை ஒய்யாரமாகச் சாய்த்து வலது கையால் “சரக்..சரக்..சரக்..”கென்று எண்ணினார். மீண்டும் வலது கையில் கொத்தாக பிடித்துக்கொண்டார். இடது கையால் சரக்...சரக்..சரக்... மீண்டும் இடது கைக்கு மாற்றி ஒரு சரக்..சரக்..சரக்.. மீண்டும் வலதுக்கு மாற்றும் போது நண்பருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.. ”போதும்பா.. குடு.. சரியாத்தான் இருக்கும்...” கல்லா ஆசாமி அப்படி மாஞ்சு மாஞ்சு எண்ணிய வெயிட்டான பணம்..... சில்லறையாக நூத்தி முப்பத்தேழு ரூபாய்.

இப்படி மந்திரித்துவிட்டது போல பணம் எண்ணுவது சிலருக்கு சீக்கு. சிலருக்கு சாக்கு. (”கணக்கு குறைஞ்சா நீங்களா வந்து கட்டுவீங்க?”) கார் சர்வீஸ் சென்டர் கேஷியர் சுத்த மோசம். கை மாற்றி கை அசராமல் ஆயிரம் தடவை எண்ணுவார். அவர் எதிரே சகஸ்ர கைகளுடன் சாட்சாத் விஷ்ணுவே விஸ்வரூபம் எடுத்து வந்தாலும் கைக்கு ஒரு நோட்டுக் கொடுத்து எண்ணச் சொல்லுவார். அந்தக் கேஷியர் மாற்றி மாற்றி எண்ணும் போது நமக்கு கை கடுக்கும். கால் வலிக்கும். கண்ணைக் கட்டும். ஒரு தடவை ஏழாயிரத்து நூத்தைம்பது ரூபாய் சில்லறையாகக் கொடுத்துவிட்டு நான் பட்ட பாடு நாய் கூட படாது. பணத்தை விட்டு கண்ணை எடுக்காமல் எண்ணிக்கொண்டேயிருந்தார். சளைக்கவேயில்லை.

சர்வீஸ் அட்வைஸரிடம் வாய் விட்டு கேட்டுவிட்டேன். “ஏம்ப்பா. நான் வேணா கஸ்டமர் வெயிட்டிங் ரூம்ல போய் ரெஸ்ட் எடுத்துக்கட்டா? இவர் எண்ணி முடிச்சப்புறம் கூப்பிடுப்பா...”. “ஏங்க சரியாதான் இருக்கு... ரெசிப்ட்டைக் குடுங்க...” என்று அவரிடம் எனக்காகப் பரிந்த சர்வீஸ் அட்வைஸரிடம் “நீங்க கட்டக் கடேசியா ஒரு தடவை எண்ணிக் குடுத்துடுங்களேன்.. ப்ளீஸ்” என்று நீட்டினார். அப்படியே அந்தக் கல்லாப்பெட்டியில் மடக்கிப் போட்டு ஜீனி பூதம் போலப் பல்லாயிரக்கணக்கான வருஷங்களுக்குப் பூட்டி விட ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.

மன்னையின் ஒரு அரசு வங்கிக் கேஷியர் ஒருவர் இதற்கெல்லாம் பல படிகள் மேல். எண்பதுகளிலேயே இந்தக் கவுண்ட்டிங் நோயின் இறுதிக் கட்டத் தாக்கத்தில் இருந்தார். அவர் பணம் எண்ணிக் கொடுத்தால் அப்போதுதான் ஆர்பிஐயினர் சுடச்சுட அச்சடித்து காய வைக்காமல் கையில் கொடுத்தது போல இருக்கும். ரிடையர் ஆகும்போது நாக்கு வறண்டு சொட்டு சலைவா கூட இல்லாமல் “நோ ஸ்டாக்” விழுந்துவிடும் அபாயம் அவருக்கு இருந்தது. நம் கைக்கு வரும் நோட்டு பூரா பிசுபிசுன்னு எச்சில் ஒட்டும்.

மடி ஆசாரமாக வந்த மாமா ஒருத்தர் இந்த கேஷியர் கையால பணத்தை வாங்காமல் “கோயிலுக்கு போயிண்டிருக்கேன். எச்சக் கையோட போக முடியுமா? பூரா நோட்டையும் ஈரத்துணியால சுத்தமா துடைச்சுத் தரச்சொல்லுங்கோ...”ன்னு மானேஜரிடம் மல்லுக்கு நின்னார். “உன் நாக்கிலேயே இருக்கு.. அறுத்துப் போட்டுடுவியா?” என்று குபீரென்று கிளம்பி எதிர் கேள்வி கேட்டார் கேஷியர். “அப்டீன்னா. கார்த்தால கொல்லைப்புறம் போற வரைக்கும் உன் உடம்பிலேயே வெளிக்கி இருக்கு. அதுக்காக இடுப்புக்குக் கீழே வெட்டிப் போட்டுடுவியா?” என்று பதிலுக்கு இவர் எகத்தாளமாகக் கேட்க பழி சண்டை. ரத்தக்களறியாகாமல் கூட்டத்தினர் விலக்கிவிட்டார்கள். நோட்டையெல்லாம் துளிர் வெற்றிலையை துடைப்பது போலக் கர்சீப்பால் துடைத்துக் கொடுத்தார் மானேஜர்.

வீதிவீதியாக வீடுவீடாக ஃபைனான்ஸ் வசூலுக்கு வரும் அன்பர் ஒருவர் ஐந்து விநாடிகளில் பத்து நோட்டு மாயாஜாலம் போல எண்ணுவார். என்றைக்காவது விரலாவது நோட்டாவது கிழிந்து தொங்கப்போகிறது என்று அச்சப்படுவேன். சில முன்னெச்சரிக்கை முத்தண்ணாக்கள் நோட்டை இரண்டுபுறமும் ஸ்கேன் செய்து, சீரியல் நம்பர்களைப் படித்து மனப்பாடம் செய்துகொண்டு, காந்தி சிரிப்பதைப் பார்த்துத் தானும் சிரித்து, பத்து தாள்களை பதினைந்து நிமிடம் எண்ணி வரிசையில் நிற்பவர்களின் பிபியை ஏற்றிவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.

இப்படி நூத்தி முப்பத்தெழு ரூபாய்க்கு ஹோட்டல் கொடுக்கும் தன் முழு மாசச் சம்பளத்துக்கும் எண்ணிய அந்த மகானுபாவரை உங்களிடம் காண்பித்தால் துரத்தித் துரத்தி அடிப்பீர்கள். இல்லியா பின்ன.... எவ்ளோ பெரிய வ்யாசம் எழுத எனக்கு சப்ஜெக்ட் குடுத்துட்டார் அந்த மனுஷர்!!

டென்னீஸ் பந்து வாழ்க்கை

ட்யூஸும் அட்வாண்ட்டேஜுமாய் விம்பிள்டன் ஃபைனல் நான்காவது செட்டில் அலைபாய்ந்தது. கிழட்டுச் சிம்மம் போல ஃபெடரர் கோர்ட்டின் மூலைக்கு மூலை பாய்ந்து பாய்ந்து ஆடினார். ஜோகோவிச்சை அசையவிடாமல் பாய்ந்த ஃபெடரரின் ஏஸைத் தொடர்ந்து டிவியின் விளிம்பில் “ஏஸ்” ஸ்கோர்கார்டு போட்டார்கள். ஃபெடரர் 25. ஜோகோவிச் 7. முன்னாளில் கோரன் இவானிசெவிச் ஏஸ்களுக்கு நான் அடிமை. ராமபாணம் மாதிரி. ராக்கெட்டில் பட்ட பந்து எதிர்புறமிருக்கும் எல்லைத் தடுப்பானின் உறுதியைச் சோதித்துத் திரும்பி நெட்டில் மோதி விழும்.

தட்டச்சிக்கொண்டிருக்கும் போதே நான்காவது செட்டை கைப்பற்றி தேங்காய்ப்பூ துண்டால் முகம் துடைத்துக்கொண்டிருக்கிறார் ஃபெடரர். போட்டி ஃபைவ் செட்டர். விம்பிள்டன் கோப்பை இறுதிக்கான லக்ஷணம். ஏற்கனவே நான்கு மணி நேரம் கடந்துவிட்டது. இவான் லெண்டிலும் போரிஸ் பெக்கரும் களமிறங்கிய ஃபைனல் ஒன்று மறக்கமுடியாதது. கோர்ட்டிலேயே பெக்கர் முன் முடி சிரைத்து, பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு, ஏழெட்டு முறை டீஷர்ட் மாற்றினார். ஐந்து மணிநேரத்துக்கும் மேல் ஆடினார்கள்.

கடைசி செட். இப்போது ஜோகோவிச் ஏஸ். கோர்ட்டின் வலது பக்க மூலையில் ஃபெடரர். தேர்ட்டி லவ். கரகோஷங்கள் விண்ணைப் பிளக்க க்ராஸ் கோர்ட்டின் புற்கள் அனைத்தும் பந்தாலும் ஷூக்காலாலும் மஸாஜ் செய்யப்படுகின்றன. இப்போது ஃபெடரர் ஏஸ். இந்தப் பக்கம் தேர்ட்டி லவ்.

லவ் கேம் எடுத்தார் ஃபெடரர். சரி.. மேட்சைப் பார்ப்போம். ஃபெடரர் பாயிண்ட்டோ கேமோ எடுத்தால் “டப்...டப்...டப்..”பும் தவறவிட்டால் “ஓ...ஓஓ..”வும் கோர்ட்டில் எதிரொலிக்கிறது.

ஃபெடரரோ ஜோகோவிச்சோ பாரத நாட்டவர் இல்லை. நகக்கடி டென்ஷன் இல்லாமல் கேமை இரசிப்போம்.

டென்னீஸ் பந்து மாதிரிதான் சிலருக்கு வாழ்க்கை. ஆஃபீஸில் அடி.பட்டு வீட்டிற்கு திரும்பினால் அங்கேயும் இடி. இப்படியாக வாழ்க்கைச் சக்கரத்தின் அசராத ராலி. என்று தத்துவார்த்தமாக முடித்துக்கொள்கிறேன்.

ஷரப்போவா Vs சச்சின் : தெரியாது Vs தெரியும்

ஷரப்போவாவுக்கு என்னைத் தெரியாது
எனக்கு சச்சினைத் தெரியும்

ஷரப்போவாவுக்கு சச்சினைத் தெரியாது
எனக்கு ஷரபோவாவைத் தெரியும்.

சச்சினுக்கு என்னைத் தெரியாது
என்னை ஷரப்போவாவுக்குத் தெரியாது.

எனக்கு என்னையே தெரியாது
உனக்கு உன்னைத் தெரியுமா?

அக்காஃபோன்

எந்தூரு மார்க்கெட்டுலயும் இப்படி ஒரு ஃபோன் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. ஊராருக்கெல்லாம் அது ஐஃபோன். எனக்கு அது அக்காஃபோன். அக்காவின் கட்டுக்கடங்கா கரையுடைக்கும் பேரன்பு iPhone 5Sஆக அமெரிக்காவிலிருந்து கொட்டியது. கீபேடை பாந்தமாக அமுக்கும் போது அது சன்னமாக “க்கா..க்கா...” என்றே மெலடியாக ஒலிக்கிறது. என்னுடைய ஐஃபோன் வழி ஃபேஸ்புக் லைக்குகளிலெல்லாம் அருமை அக்காவின் லைக்கும் அடங்குகிறது என்றறிக.

இதற்கு முன்னால் iPhone 4Sல் கதைத்துக்கொண்டிருந்தேன். அதுவும் திருஅக்காவின் உபயமே! இந்த மெய்கீர்த்தியை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் டெல் இன்ஸ்பிரான் அக்கா இட்ட பிச்சை. இப்படி அக்காவின் பாச கேட்ஜெட் மழையைப் பார்த்துவிட்டு நண்பரொருவர் ஸ்டமக் பர்னிங்கோடு “உங்க அக்கா என்னை தம்பியா ஸ்வீகாரம் எடுத்துப்பாங்களான்னு கேளுங்களேன்... ப்ளீஸ்..” என்று கெஞ்சுகிறார். ஷேர் செய்ய முடியாத அன்பு. கடையேழு வள்ளல்களில் அரசியர் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய எட்டாவது வள்ளலாக இடம் பிடித்த கடையெட்டாவது வள்ளல், எனது உடன்பிறந்த சகோதரி Krithika Hariharan யக்கோவ் அவர்கள்.

“மலர்ந்தும் மலராத... பாதி மலர் போல..” பாட்டு உங்கள் காதுக்குள்ளும் ரீங்காரமிட்டால் நீங்களும் பாசமலர்தான்!

மழை...நெரிசல்..இறைவா..

பக்கத்து வீட்டுக் கோகுல் (வயசு 3) நடுவாசல்ல வந்து நின்னு சொட்டு உச்சா போனால் கூட சென்னை நகரமெங்கும் ட்ராஃபிக் ஜாம் ஆகிவிடுகிறது. ஒரே ”பாம்..பாம்.” “த்தோடா.. போப்பா முன்னால...”. ”லெஃப்ட்ல வாங்கு...” “இன்னும் ரெண்டு அவுரு ஆவுமாம்ப்பா..” ”ஒண்ணு போ.. இல்லே ஒத்து...” போன்ற பாஷைகள் நிறைந்த சென்னையாகிவிடும்.

கல்யாண வீட்டில் பன்னீர் தெளிப்பது போல வானம் லேசாகத் தூறல் போட்டால் இருசக்கராதிகள் ஆக்ஸிலைத் திருக அச்சப்படுகிறார்கள். நியாயம்தான். அசந்தால் மேன்ஹோலை திறந்து வைத்து ஸ்வாகா செய்துவிடுவார்கள்.

கௌரவாதிகள் பீமனுக்கு சாப்பாட்டில் விஷத்தை வைத்துக் குண்டு கட்டாகக் கல்லைக் கட்டி அவனைக் கடலில் எறிந்த போது அவன் நேரே ஜிங்குன்னு போய் பாதாளலோகத்தில் இறங்கினானாம். அங்கு ஆட்சி செய்த நாகராஜா வைர வைடூர்யங்களைப் பரிசளித்து நாலு நாள் விருந்தாளியாக வைத்து ஈடு ஈடாகக் கொழக்கட்டையெல்லாம் பண்ணிப் போட்டுக் குஷிப்படுத்தி பூலோகம் அனுப்பினானாம். நாமெல்லாம் பீமனல்ல. வெறும் மேன். மேன்ஹோலில் விழுந்தால் நேராக மேலோகம்தான். யம கிங்கரர்கள் எண்ணெய்ச் சட்டியில் நம்மை ஜட்டியோடு இறக்கி ராஜோபசாரம் செய்வார்கள். டேக் கேர் மேன்.

போரூர் பகுதியில் மீட்புப் பணிகள் நடப்பதற்கு தொந்தரவாக இருக்கக்கூடாதென்று கோயம்பேடு திசையில் வண்டியை விட்டேன். கோயம்பேட்டிற்கு ஐந்தாறு கி.மீக்கு முன்பே எதிரே சுனாமி வருவதுபோல மக்கள் சின்னாபின்னமாகத் தெறித்து வண்டியோட்டினார்கள். ஊருக்கு உழைக்கும் நல்லவர் இருவர் “ரெண்டு பக்கமும் வண்டியெல்லாம் முட்டிக்கிட்டுக் நிக்கிது. அப்படியே திரும்பிப் போய்டுங்க..” என்று உதவிக் குரல் கொடுத்தனர். நின்ற மேனிக்கு அப்படியே திரும்பிய சில ஆர்வக்கோளாறு அபிஷ்டுக்கள் பின்னால் நின்ற வண்டியின் பம்பரை பதம் பார்த்து பேரம் பேச நின்றார்கள். பேரம் படியும் போது அவர்களுக்குப் பாதை தெரியக்கூடும்.

குல தெய்வமான ஏழுமலையானை வேண்டிக்கொண்டு இன்ச் இன்ச்சாக சக்கரத்தைத் திருப்பி கைகள் ஸ்டியரிங்கோடு பின்னிக்கொள்ள வளைத்து வந்த வழியே திரும்பினேன். எப்போது மழை வந்தாலும் தத்தளிக்கும் கோயம்பேட்டை மீட்கும் கட்சிக்குதான் அடுத்த தேர்தலில் எனது வெற்றி வாக்கை அளிப்பேன். கோயம்பேட்டைக் காபந்து செய்பவர்களே கோட்டையை ஆளட்டும்.

“எங்கடா வந்திண்டிருக்கே?”

“போரூர்மா...”

“அச்சச்சோ.. ஏன்டா?”

“கோயம்பேடுல ட்ராஃபிக் ஜாம்”

“அதெப்படி உனக்குத் தெரியும்?”

“போய்ட்டு திரும்பி வந்தேன்...”

“அங்க போய்ட்டு ஏன் போரூருக்கு திரும்பி வந்தே?”

“தாண்டி போக முடியாமதான்...”

“திரும்ப முடிஞ்சுதா?”

“ம்... “

“திரும்ப முடிஞ்சுது.. தாண்ட முடியலையாடா?”

“ஆமா.”

“ஏன்?”

“வண்டி ஒரு டன் வெயிட்டுமா. நானென ஆஞ்சநேயரா.. சஞ்சீவ பர்வதத்தை தூக்கறா மாதிரி வண்டியையும் சேர்த்து தூக்கிண்டு வர்றதுக்கு...”

“நக்கலாடா?”

“இல்லம்மா..”

“கிண்டலா?”

“நான் திரும்பவும் கோயம்பேட்டுக்கே போய்டறேன்மா.. வச்சுடட்டுமா?”

என்னைப் பெற்ற தெய்வத்துடன் சம்பாஷித்தது.

ஃபோனை எடுத்தால் ஐம்பது கேள்விக்கு மிகாமல் அசராமல் கேட்கும் நற்குணம் வாய்த்த நல்லாள். காலிரண்டையும் கழற்றி வீசிவிடும்படி வலித்தது. சிக்னல் போடாமல் ஹெட் சிக்னல் செய்து பாபம் செய்தவர்கள், ஸ்விஃப்ட்டை நடைவண்டியாய் பாவித்து நடுரோட்டில் ஓட்டும் உத்தம வயோதிகர்களைப் பரிகசித்தவர்களை, டாங்க்கர் டாங்க்கராகத் தண்ணீரைக் காசுக்கு விற்றவர்களை, மீட்டரையும் சிக்னலையும் துச்சமாக மதிக்கும் ஆட்டோவாலாக்களை, இழுத்து வந்து மழைக்காலத்தில் சென்னையில் காரோட்ட விடவேண்டும் என்ற ஆங்காரத்துடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தேன்.

“கோயம்பேட்டுக்கே போய்டறேன்னு சொன்னே!” கையில் சாம்சங்கில் கேண்டி க்ரஷ் சாகாவுடன் அம்மா.

ச்சே! நா போறேம்பா... நா போறேன்...

இறைவா! ட்ராஃபிக்கிலிருந்து என்னை காப்பாற்று. ஆட்டோக்களையும் மாநகர பஸ்களையும் நானே பார்த்துக்கொள்கிறேன்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!!

வாய்க்கு இதமான இளஞ்சூடு வெங்காய பகோடாவும் ஆவி பறக்கும் ஸ்ட்ராங் ஃபில்டர் காஃபியும் மழையின் சாஸ்வதமான தோழமைகள். சென்னையின் கான்க்ரீட் காட்டில் கொட்டும் மழையை விட மன்னையில் பொழியும் மழை மனசுக்கு ரம்மியமானது.

நான்கு திசைகளிலும் ”ஹோ”வென்று பரந்து விரிந்த ஹரித்ராநதியில் விசிலடிக்கும் காற்றுடன் கைகோர்த்துக்கொண்டு மழை போடும் எண்ணிலடங்கா புள்ளிக் கோலம்........ தெற்கிலிருந்து வடக்கிற்கு காற்றடித்தால் நேர்ப்புள்ளி. வடகிழக்காகவும், தென்மேற்காகவும் வீசும் காற்று குளற்று நீரில் ஓடியோடி இடுக்குப்புள்ளி வைக்கும்.

தான் தூறலின் போது வைத்த புள்ளியை அடித்து பெய்யும் போது இணைக்கும் காட்சியை யுகாந்திரமாய் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். ஒரு பெருமழைக்கு ஆயிரமாயிரம் நீர்க் கோலங்கள். சிக்குக் கோலம், அன்ன பட்சி, தேர், கத்திரிக்கா, கை கோர்க்கும் பேபிகள், பொங்கல் பானை, சிவலிங்கம், க்ருஸ்துமஸ் மரம் என்று நான்கு கரையிலிருக்கும் ஜன்னல் தோறும் பொங்கி வழியும் எண்ணம் போல பல வடிவக் கோலங்கள்.

கொடி கோவைக்காயை நறுக்கி அழித்த கல் ஸ்லேட் போல மழை நின்ற பின் காட்சியளிக்கும் எழில் குளம் இன்னொரு மழையைக் கோலம் போட தவறாமல் அழைக்கும். மழை திரும்பவும் புள்ளி வைக்கும். இணைத்துக் கோலம் போடும். குதூகலிக்க வைக்கும்.

தேவக் கொடையான அம்மழைக் கோல குளத்தழகை என் போன்ற நரர்கள் அல்பமாக ஒரிரு பாராக்களில் அடக்கமுடியாது.

அந்தர்பல்டி

டாக்டர் நாயர் ரோட்டின் நடுவில் யானைக்குப் பள்ளம் வெட்டியிருந்தார்கள். அப்பாவி சிங்கமாய் தெரியாமல் மாட்டிக்கொண்டேன். இருபது கி.மீ வேகத்தில் மொள்ளமாய் ஊர்ந்து வந்துகொண்டிருந்த போது “டொம்”மென்று பின்னால் சத்தம். இறங்கினேன். பம்பரின் நடுவில் சிகப்பு பெயிண்ட் உதிர்ந்திருந்தது. டிவியெஸ் 50ன் ப்ளூ கலர் பெட்டி கழண்டு பாண்டி ஆடிக்கொண்டிருக்க அதை ஓட்டியவர் கைலியை மடித்துக்கட்டிக் கொண்டு கீழே சில்லரை பொறுக்கிக்கொண்டிருந்தார். ஆளைப் பார்த்தால் அடாவடியாகத் தெரியவில்லை.

“ஏம்ப்பா... எதுவும் அடியா?” என்று கேட்டுக்கொண்டே நெருங்கினேன். பம்பரிலிருந்து சிகப்புக் கலர் அவரது உதட்டில் ஈஷிக்கொண்டிருந்தது.

“இல்லீங்க...”. கீழுதடை மடித்து காதலில் அகப்பட்டு வெட்கும் கன்னி போலப் பற்களால் மறைத்துக்கொண்டார்.

“சைக்கிளை விட மெதுவா போய்க்கிட்டிருக்கேன். இரண்டு பேர் ஃபாஸ்ட்டா நடந்தே முந்திட்டாங்க.. இதுலயே வந்து விடறயேப்பா..”

“ப்ரேக் பிடிக்கலீங்க....இங்க பாருங்க...” பிடித்துக் காட்டிய இடத்தில் ஹாண்டில் பாருடன் ப்ரேக் ஆர்ம் பச்சென்று ஒட்டிக்கொண்டது. டப்டப்பென்று சப்ளாக்கட்டையாய் அடிக்கும்படி ரெண்டு தடவை டெமான்ஸ்ட்ரேட் பண்ணினார்.

“ஓரமா வேகமாப் போக வேண்டியதுதானே. இப்படி நடுப்பற வந்து விட்டியேப்பா...”

பின்னால் ரெண்டு மூனு வாகனங்கள் அணிவகுத்து இந்த ஆக்ஸிடெண்ட்டுக்கு ஆர்க்கெஸ்ட்ரா வாசிக்க ஆரம்பித்தார்கள். பல ஸ்வரங்களில் ஹார்ன் சப்தம். எக்கேடோகெட்டுப் போங்கடா என்று சைக்கிளார் ஒருவர் சரிந்து கிடந்து டிவியெஸ் 50ஐ பலாத்காரமாக தாண்டி அந்தப் பக்கம் போனார்.

வண்டியை ஓரங்கட்டினேன். திரும்பவும் இறங்கி மோதியவரைப் பார்க்க இறங்கினேன். உடைந்த பெட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு கிளம்ப ஆயத்தமாயிருந்தார்.

“ஏம்பா... மெதுவா வரவேண்டியதுதானே...” திரும்பவும் அதே பல்லவியை ஆரம்பித்தேன்.

“ப்ரேக் இல்லீங்க...” பாவமாகச் சொன்னார். இப்போது உதட்டில் ரெண்டு பொட்டு இரத்தம் நின்றது.

”வாயில....” என்றதும் துடைத்துக்கொண்டு அடியுதட்டை வாய்க்குள் சொருகி பற்களால் பாதுகாத்தார்.

“இந்த ஓரத்துல சைக்கிள்காரன் அந்த ஓரத்துல ஆட்டோக்காரன்.. நான் வேறெப்படிப் போவேன்...” என்று சிணுங்கினார். இரண்டு விளக்குகளுக்கு நடுவில் புகுந்த சின்னத்தம்பி கவுண்டமணி நியாபகம் வந்தார். வண்டி சொட்டையானதற்கு காசு கேட்கப்போகிறேன் என்று பயந்தார்.

“நீங்க ஏன் சடார்னு ப்ரேக் பிடிச்சீங்க?” லாயர்தனமாக ஒரு கேள்வி கேட்டார்.

“முன்னாடி பள்ளம். நான் ப்ரேக் பிடிக்காம இருந்திருந்தா பின்னால் வந்த நீங்க அப்டியே அந்தர்பல்டி அடிச்சிருப்பீங்க...”

“ஹாங்காங்.. இப்பவும் பல்டிதான் அடிச்சேன்..”

பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.

“சரி! இப்ப என் வண்டியை சொட்டையாக்கிட்டீங்களே.. இதுக்கு என்ன பண்றது?”

அவருக்கு எங்கிருந்தோ அசுர பலம் வந்தது. டிவியெஸ் 50ஐ தள்ளிக்கொண்டே ஓடி ஸ்டார்ட் செய்தார். எம்பி உட்கார்ந்தார். திரும்பிப் பார்க்காமல் பறந்துவிட்டார்.

மேனியெங்கும் விழுப்புண்களோடு இருக்கும் சேப்பாயிக்கு மருத்துவம் பார்க்கவேண்டும். பாவம்! அவருக்கும் உதட்டு இரத்தம் நின்றிருக்கக்கடவது.

வாசனைகளின் வணிகம்

”பக்கத்துல உக்கார்ந்திருக்கற ஸ்ரீதர்ஷிணிட்டேர்ந்து ஒரே நாத்தம். என்னடி சாக்ஸ்ஸை தோய்க்கவேயில்லையா?ன்னு கேட்டு மிஸ் திட்டினாங்க. அதுக்கு பின்னாடி உக்கார்ந்திருந்த மிதுன் மூக்கைப் பிடிச்சுண்டு “கப்பு.. கப்பு...”ன்னு கிண்டல் பண்ணி அவளைப் பார்த்து சிரிச்சு... அதுக்கு அவ ’ஓ’ன்னு அழுதாப்பா...”

”மிஸ் உன்னை என்ன சொன்னாங்க?”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... கமகமன்னு வாசனையா இருக்குன்னாங்க...”

சின்னவளின் ஸ்கூல் பிரதாபம். ரொம்ப நாளைக்கு முன்னால் Trading of Smellsன்னு படிச்சது ஃப்ளாஷடித்தது. பஸ் ஏற்றிவிட்டு ஓடோடி வந்து புஸ்தக அலமாரியில் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் புத்தகத்தைத் தட்டி எழுப்பி....

And Every Wednesday the perfumed young lady slips me a hundred-crown note to leave her alone with the convict. And by Thursday the hundred crowns are already gone in so much beer. And when the visiting hour is over, the young lady comes out with the stink of jail in her elegant clothes; and the prisoner goes back to his cell with the lady's perfume in his jailbird's suit. And I'm left with the smell of beer. Life is nothing but trading smells.

"Life and also death, you might say", interjected another drunk, whose profession, as I learned at once, was gravedigger. "With the smell of beer I try to get the smell of death off me. And only the smell of death will get the smell of beer off you, like all the drinkers whose graves I have to dig."

இரண்டாவது பாராவின் ஆங்கில வெட்டியானின் வசனத்தைப் படிக்கும் போது பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நள்ளிரவில் சென்ட்ரல் அரசு பொது மருத்துவமனையில் மார்ச்சுவரியருகில் அமர்ந்திருந்தது ஞாபகம் வந்தது.

“சார்! ஒரு ஆப் வாங்கிட்டு வந்துருங்க” என்று ஆர்டர் கொடுத்துவிட்டு “அப்படியே ஒரு பாக்கெட் பில்டர் சிகிரெட்டும்..” என்று ஆப்புக்கு தொட்டுக்கக் கேட்டார். ஏற்கனவே அவரிடமிருந்து ஆல்கஹால் நெடி!

ஆப்பென்றும் ஆக்ஸ் நினைவில் வந்தது. தன் மேனியில் அடித்துக்கொள்ளும் வாசனா திரவியத்திற்கு கவுண்ட்டர் வைத்து எண்ணுமளவிற்குக் கூட்டமாக பெண்கள் ஒரு படையாய் திரண்டு அந்த ஆடவனின் பின்னால் சுற்றும் விளம்பரம் எந்தப் பெண்ணியப் புலிகள் கண்ணிலும் படவில்லை.

மனதைக் கொள்ளையடித்த அந்த ஆங்கில பாராக்கள் Italo Calvinoவின் IF ON A WINTER'S NIGHT A TRAVELLER நாவலிலிருந்து...

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே...

கல்யாணபுரம் ஆராவமுதன்

காலையில் வாக்கிங் கெட்டுது. சின்னவளுக்கு ஷூ கைங்கர்யம் செய்துகொண்டிருந்த போது கணீரென்று டிவியிலிருந்து ”ப்ரஹ்லாத சரித்திரத்தை நாரதர்...” என்று ஒரு கர்ஜிக்கும் குரல். நெருப்பென நின்ற நெடுமாலாக ஆகிருதியான சரீரம். கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி. கையில் சப்ளாக்கட்டை. நெற்றியில் திருமண். பேச்சின் இடையிடையே வால் மிளகை(?) வாய்க்குள் இப்படியும் அப்படியும் நகர்த்திக்கொள்கிறார்.

மார்கழி சீசனில் டிக்கெட் போட்டு அகாடமியில் வாய்ப்பாட்டு கச்சேரி செய்யுமளவிற்கு செழிப்பான சாரீரம். சமஸ்கிருதம், செந்தமிழ், இங்க்லீஷ் என்று கலந்து கட்டி மணிப்பிரவாள நடை. ”இதுதான் ப்ரைமரி.. மத்ததெல்லாம் செகண்டரின்னு பகவத் நிந்தனைல ஈடுபடறான் ஹிரன்யகசிபு...” என்று காலேட்சபத்துக்கு நடுப்பற ரசிகாளை புன்னகைக்கிற வைக்கிற ஸ்டைலிஷ் இங்க்லீஷ். பாகவத ஸ்லோகங்களையும் இடையிடையே கம்பனின் பாசுரங்களையும் ராகமாக இழுத்து நிரவலில் நம்மை மயக்கும் போது அந்த வயலின் வாசித்த அம்மணி நன்கு ஒத்துழைத்தார். வயலினும் அவர் குரலும் ”நாராயணா....” என்ற சொக்குப்பொடியில் பிசிறில்லாமல் ஐக்கியமாகி நம்மை மெய்மறக்கச் செய்வதும் இறைநிலையே!

”சந்தனக் காட்டுல நீயெங்கடா முள்ளுச் செடியா பொறந்தேன்னு ப்ரஹ்லாதனைப் பார்த்து அவனோட வாத்யார்கள் கேக்கறாளாம்.. அசுர குலம் சந்தனக் காடாம்.. எப்டி... அசுர குலம் சந்தனக் காடாம்.. நான் சொல்லலை.. பாகவத ஸ்லோகம் இது... ஹிரன்யகசிபு அப்டி மிரட்டி வச்சுருக்கான்...ஆனா பாருங்கோ... ஹரிங்கிற பகவன் நாமாவை யார் சொன்னாலும் தெவிட்டாமல் இனிக்கும். ஹரி இல்லைன்னு சொல்றவன் கூட வெளியில ஹரின்னு சொல்லமாட்டேனே தவிர்த்து காதுல விழுந்தா வேண்டாம்னு சொல்லமாட்டான். ருசியான நாமம். ஹரின்னா சிம்மம் என்று ஒரு கூட அர்த்தம் உண்டு.. வாத்யார்கள் ஹரிநாமம் சொல்லக்கூடாதுன்னு சொன்னாலும் ப்ரஹ்லாதன் சொல்றச்சே வேண்டாம்னு சொல்லலையாம்.. அவனா சொல்றதை நிறுத்தினதும்.... நிறுத்துடான்னு ஃபுல்ஸ்டாப் வச்சாலாம்...”

ஹிரி நாமாவைப் பற்றி சிலாகிச்சதும் ஜேசுதாஸ் பாடிய “என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்.. ஸ்ரீ ரங்க நாயகன்..” பாடல் பிரத்யேகமாக என் செவிக்கு மட்டிலும் கேட்டது. அதில் “ஹரி..ஹரி..ஹரி.. என தினம் ஸ்மரி...” என்று வரும் வரிகள் இந்த ஹரிகதா காலேட்சேபம் நடத்திய கல்யாணபுரம் ஆராவமுதன் ஸ்வாமி பாடியதைச் சத்தியமாக்கும்.

”எஸ்பிபி அப்பாவும் இப்படி நின்னுண்டே தான் ஹரிகதா சொல்லுவாராம். கேள்விப்பட்ருக்கேன்..” என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டே ஃபேஸ்புக் ஜோதியில் இருக்கிறாரா என்று மேய்ந்தேன். ம்.. இருக்கிறார். ஸ்நேகிதனாகி ஐக்கியமாகலாம் என்ற ஆசையில் விண்ணப்பித்திருக்கிறேன்.

வாக்கிங் கெட்டாலும், ’ஹரி’க்கிங் கிடைச்சுது.

விட்டல விட்டல

”கோபால ஹரி. ஹரி.. கோவிந்த ஹரி... ஹரி....”.

“என்னடி குட்டி கார்த்தாலையே பஜனை?”

“விஜய் டிவில அந்த பாட்டி பாடினாளே... அதான்...சூப்பர்ப்பா.. எவ்ளோ ஃபாஸ்ட்டா பாடறாப்பா.. கோபால ஹரி..ஹரி.. கோவிந்த ஹரி..ஹரி..”

ஸ்கூல் பஸ்ஸிற்கு காத்திருந்தபோது இடைவிடாமல் பஜித்த சின்னவளின் குரலில் தெய்வம் கண் முன் நின்றது. “ஹரி..ஹரி...” என்று அவள் சங்கீதமாய் விடைபெற்றுச் சென்ற பின்னர் வீட்டில் இன்னமும் மும்முரமாய் பஜனை நடந்து கொண்டிருந்தது.

“யாரும்மா இந்த பாட்டி? இவ்ளோ எனர்ஜியோட பாடறா?”

“கல்யாணி மார்க்கபந்துடா..”

இப்போது ராமகிருஷ்ண ஹரியும் விட்டல விட்டல பாண்டுரங்காவுக்கும் வந்திருந்தார். டோலக்கும் மிருதங்கமும் போட்டி போட்டுக்கொண்டு முழங்கின. ”எழுந்து விட்டலா.. விட்டலான்னு ஆடுடா”ன்னு இழுக்கும் லயம். கீபோர்ட் வாசிக்கும் கைகளை அவ்வப்போது திரைமுழுக்க காண்பித்து தொந்தரவு செய்தார்கள். நாலைந்து பொண்டுகள் மேடையோரத்தில் பரத அபிநயம் பிடித்தார்கள். பாட்டியின் முகத்தைப் பார்த்தால் கிருஷ்ண பக்தி அப்படியே பொத்துக்கொண்டு கொட்டியது.

ரசிகாளைப் பார்த்து கையிரண்டையும் மேலே தூக்கி கைதட்டி பார்த்தார்கள். எவரும் மசிவதாயில்லை.

“துஸ்சாசனன் த்ரௌபதியை துகிலுறிக்கிறான். ருக்மணி க்ருஷ்ணர்கிட்டே கேட்கிறா... இப்படி பண்றானே நீங்க ஹெல்ப் பண்ணக் கூடாதான்னுட்டு... இன்னமும் அவ தன் கை மேலேதான் நம்பிக்கை வச்சுண்டுருக்கா.. தன்னம்பிக்கை இருக்கு... என் மேலே முழு நம்பிக்கை வரலையேன்னுட்டு.. ருக்மணி வண்டு ரூபம் எடுத்துண்டு த்ரௌபதி காதுல போய்.... அடி அசடு... கையிரண்டையும் மேலே தூக்கி அவனைக் கூப்பிடு... காப்பாத்துவான்..அப்டீன்னா... கையை தலைக்கு மேலே தூக்கி வேண்டினாள்... உடனே இருந்த இடத்துலேர்ந்து அள்ளி அள்ளிக் கொடுத்தான்....” என்று நாம பக்தியின் பலனோடு சொன்னதும் கூட்டம் தலைக்கு மேலே கைகொட்டி ”விட்டல.. விட்டல....” என்று ஆர்ப்பரித்து ரசித்தது.

ஃபேஸ்புக்கிற்கென மந்திரித்து விடப்பட்ட புத்தியில் கல்யாணி மார்க்கபந்து என்று லென்ஸ் அருகே தட்டினேன். கண நேரத்தில் அவரது பக்கமும் கிடைத்தது. ஒரு நட்பு அழைப்பு அனுப்பிக் காத்திருக்கிறேன்.

கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமே இறைவனை அடையும் வழியாம்.

“கோவிந்த விட்டல... கோபால விட்டல...”

இது ஒரு இராக்காலம்!

நள்ளிரவுக்கு இன்னும் அரை மணி இருக்கிறது. நிர்ஜனமான வீதி. பத்து வீட்டிற்கு ஒரு தரம் ரோட்டில் பட்டை பட்டையாய் வெள்ளிப் பாதை. இராக்காலத்தில் க்ரில் கேட்டிற்குத் துணையாக அதன் மேல் கை போட்டபடி இப்படி விஸ்ராந்தியாக சாய்ந்து நிற்பது பரமானந்தம். மனசு பந்தாகக் கழன்று எதிரில் வந்து பேசும். நின்ற பொருள் நிற்கவும் அசையும் பொருளும் நிற்பதுமான கசகச நேரம். பாலிதீன் மற்றும் பேப்பர் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் பட்டினத்து மடி சிறுத்தப் பசு மாடு. பக்கத்துத் தெரு ஆர்த்தோ டாக்டர் வீட்டு டாமியின் கட்டுக்கடங்கா “ஊ”ங்காரம். டாமிக்கு ஒரு ஸ்ட்ரீட்டியின் வலுவான “லொள்”ளெதிர்பாட்டு. தொடர்ந்து சிக்குசிக்குசிக்கு என்று மண் தரையைத் தேய்த்துக்கொண்டு பரிவாரங்களோடு விரட்டி எல்லைச் சண்டையில் ஈடுபடும் பைரவர்கள்.

டர்ர்ரும் டிவியெஸ் ஃபிஃப்ட்டியில் சைக்கிள் வேகத்தில் கடையடைத்துச் செல்லும் அண்ணாச்சி. “கிணிங்.. கிணிங்..”. நம்பிக்கையோடு தெருக்குள் நுழையும் குல்ஃபி ஐஸ்காரர். குல்ஃபிப்பானைப் பக்கத்து பேட்டரி லைட்டில் புட்டபர்த்தி சாய்பாபா. குல்ஃபியைக் கடந்து செல்லும் பெடல் தேய்ந்த க்ரீச்..க்ரீச் சைக்கிள். க்ரீச்சிசை தேய்ந்து சன்னமாகக் கேட்டு மௌனமாக அடங்குகிறது. இப்போது தெருவில் யாருமில்லை. ஒன்று.. இரண்டு.. மூன்று.. நிமிடங்கள் கடந்திருக்கும். ஊஹும். யாருமில்லை. கழுத்தை எக்கி இடமிருந்து வலமாக தெருமுழுவதையும் பார்க்கிறேன். ஈ காக்காயில்லை. காலையிலிருந்து உழைத்துக் களைத்த தெரு அமைதியாகத் தூங்குகிறது. அட.. லேசாக காற்று கன்னத்தைத் தடவுகிறது. தலைக்கு மேலே தென்னங்கீற்றுகளின் கிச்சுக்கிச்சு உரசல். ஆஹா... ஆஹா.. இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நிற்கத் தூண்டுகிறது. மீண்டும் இடது கன்னம் தடவி செல்லமாய்த் தலைமுடி கோதுகிறது. சுகமோ சுகம். சரி.... கண்ணை இழுக்கிறது. நான் தூங்கப்போகிறேன். நீங்கள் இந்தத் தெருவைப் பார்த்துக்கொள்ளுங்கள். குட் நைட்!!

உடையாத ரகஸ்யங்கள்

மன்னையில் பாலு சார் வீட்டு டாக்டர் அங்கிள் (முத்து மாமா) தனது இடது கை கட்டை விரலை தானே வலது கையால் பிய்த்து எடுக்கும் மேஜிக் பண்ணுவார். பால்ய பருவத்தில் சுற்றிலும் அரைவட்டமாக உட்கார்ந்து கொண்டு டைனோசரே வாய்க்குள் டைவ் அடிக்கும்படி (。◕‿◕。) பார்த்துக்கொண்டிருப்போம். தாம்புக்கயிற்றால் தனது இரண்டுகையையும் சுற்றிக்கட்டிவிட்டு ஒரு அசால்ட்டான உதறலில் அவிழ்த்து மாயாஜாலம் காட்டுவார். கை தட்டுவோம். சீட்டுக்கட்டை கையொடிய தாறுமாறாகக் குலுக்கி ராஜாவாக மட்டும் படாரென்று உருவுவார். ராணியைக் கேட்டாலும் எல்லா பூவிலும் அதை மட்டும் சரசரவென்று உருவி ராஜாவுக்கு ஜோடியாகத் தரையில் வீசுவார். ”இங்க பார்றா...” என்று எங்கள் அனைவரின் விழிகளும் ஒருசேர மோதிக்கொண்டு பேசும். மீண்டும் கை தட்டல். எப்படி எப்படியென்று மூளை துருதுருவென்றிருந்தாலும் மெய்மறந்து ரசிப்போம். இதெல்லாம் வசீகரிக்கும் ட்ரிக். சரி! இந்தப் பாராவை அப்படியே தொங்கவிடுவோம்.

சனிக்கிழமை போரூரிலும் டிஎல்லெஃப்ஃபிலும் வாகனாதிகள் அதிகம் பயணிக்காமல் கூடு அடைந்திருந்தார்கள். சேப்பாயி சிரமமில்லாமல் ப்ரேக் கழுத்தை நெறிக்காமல் வழுக்கிக்கொண்டு ஓடினாள். நான் சுலபத்தில் வீடடைந்து ஆவி பறக்கும் கள்ளிச்சொட்டுக் காஃபியை சுடச்சுட உறிஞ்சினேன். இடது கை ரிமோட்டால் மூலையோர சோனிக்கு உயிர்ப்பிச்சை அளித்தேன். சானல் சானலாக தாவிக்கொண்டிருக்கும் போது ஏயெக்ஸென்னில் அழகிகள் உலவும் நிகழ்ச்சி கண்ணில் இடறியது. அதிர்ச்சியில் கை தடுமாறி சானல் மாறாமல் நின்றுகொண்டிருக்கும் போது அது ஒரு மேஜிக் ப்ரோக்ராம் என்று தெளிவாகி ஆசுவாசமடைந்தேன். “இது வரவேற்பறை தீதில்லை” என்று மூளை துரித செய்தியனுப்ப கண்ணெடுக்காமல் பார்க்க ஆரம்பித்தேன்.

ஆறடி நீள பொட்டிக்குள் பளபளக்கும் பட்டுத்துணிபோல ஒரு அம்மணியை படுக்க வைக்கிறார்கள். அந்தப் பொட்டியின் மேலே இன்னொரு ஆறடி நீள பொட்டியை சொருகிறார்கள். மேடையைப் பார்த்து உட்கார்ந்திருக்கும் மக்களுக்கு நேரேயிருக்கும் கதவுகளைச் சடார் சடாரென்று திறக்க இரண்டு பெண்கள் ஜெகன்மோகினி போல காலை நீட்டி அமர்ந்துகொண்டு கழுத்தை பெட்டிக்கு வெளியே நீட்டிக்கொண்டு பல்லைக் காட்டுகிறார்கள். மீண்டும் பெட்டியை மூடி மேலே தூக்கிவிட்டு இன்னொரு பெட்டியின் கதவை திறக்க ஏற்கனவே படுத்திருந்த பட்டுக்குட்டி “ஹாய்” சொல்லி கண்ணடித்துச் சிரிக்கிறது.

மேற்படி சீனை மறுபடி போட்டு இந்த மேஜிக்கை நிகழ்த்துவது எப்படி என்று ரிப்பீட் காண்பித்து அசத்தினார்கள். மேலே சொருகும் பெட்டியின் மூடி நாற்பது பாகைக்கு வளைந்திருக்கிறது. கீழே இருக்கும் பெட்டியில் சொருகும் போது கிடைக்கும் ஒரு ஜான் இடைவெளிக்குள் ஏற்கனவே இருந்த பெண்பிள்ளை அடக்கமாகிவிடுகிறது. மீண்டும் தூக்கும் போது தலைகாட்டுகிறது.

இரண்டாவதாக பத்தடி இடைவெளியில் இரண்டு டவர்கள் போட்டிருக்கிறார்கள். ஒன்றில் ஏறி ஒரு பிகினி அழகியைக் கட்டிப்போடுகிறார் மேஜிஷியன். இன்னொரு டவரில் ஏறி அவர் ஒய்யாரமாக நின்று கொள்கிறார். கீழிருந்து வட்டமான ஒரு திரை கூண்டு போல மேலே ஏறி இரண்டு டவர்களையும் மொத்தமாக மூடுகிறது. அடுத்த நொடியில் பொத்தென்று திரை கீழே விழும் போது வலதுபுறமிருந்த டவரில் கட்டிப்போட்டிருந்த பெண்மணி இடதுபுறம் நின்ற மேஜிஷியனருகே கட்டிக்கிடக்கிறது. பார்ப்பவர்கள் திகைத்துப்போகிறார்கள்.

மேற்படி மேஜிக் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று அவர்கள் போட்டுக் காண்பிப்பதற்கு முன்பாக நான் சரியாக யூகித்திருந்தேன். அதுவேதான் நடந்தது. தெரிந்தவர்கள் கமெண்ட்டில் எழுதவும்.

அடுத்ததாக மேடையில் ஆறடி உசர சுவர் எழுப்பினார்கள். முகத்தில் பேய் மாதிரி வரிகள் இட்டுக்கொண்ட அயல்நாட்டு பிசி சர்க்கார் கையிலிருந்த முட்டையை அந்தச் சுவற்றில் விசை கொடுத்து அமுக்கினார். சுவர் லபக்கென்று முழுங்கிவிட்டது. சுவற்றுக்கு அந்தப் பக்கம் சென்று அதைத் தடவி முட்டையை உருவி எடுத்துக்கொண்டார். எடுத்த முட்டையை உடைத்து ஒரு கண்ணாடிக் கோப்பையில் மஞ்சள் கருவைப் போட்டு அந்த முட்டை ஒரிஜினல் என்று நிரூபித்தார். அடுத்து வந்ததுதான் ஹைலைட். அந்த சுவற்றின் ஒரு பக்கத்தில் அவரே நுழைந்து அடுத்த பக்கத்தில் வெளிவந்து சித்து வேலைக் காட்டினார். அவர் சுவற்றினுள் நுழையும் போதும் வெளிவரும் போதும் ஒரு திரை வைத்து லைட் ஃபோகஸ் செய்து நிழலாகக் காண்பித்து வேடிக்கை காட்டினார்கள். திரைமறைவில் நடக்கும் நாடகத்தை கேமிராவின் இன்னொரு கோணத்தில் காண்பித்து அதே மேஜிக்கைப் புஸ்ஸாக்கினார்கள்.

இப்படி காஃபி குடித்துக்கொண்டு வீட்டு சோஃபாவில் விஸ்ராந்தியாக உட்கார்ந்து பார்க்கும் போது இந்த ட்ரிக் புரிகிறது. நேரில் பார்க்கும் போது அந்த பிகினி அழகிகள் மேடையின் இந்தப்புறமும் அந்தப்புறமும் நடந்து கவனத்தைக் கலைக்கும் தருணத்தில் நிழல்மறைவாக சில காரியங்களை முடித்துவிடுகிறார்கள். ஆனால் இதிலும் பங்குபெறுபவர்களின் அசுர சாதகமும் கைதேர்ந்த தேர்ச்சியும் கழுகுப் பார்வையும் தொடர்வண்டி கோச்சுகள் போன்ற ஒருமித்த நிலையும் மிக அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.

தொங்கிக் கொண்டிருக்கும் முதல் பாராவை இங்கே இழுப்போம். அந்த வயசில் லைவ்வாக பார்த்த சின்னஞ்சிறு வித்தைகள் கொடுத்த பொட்டி பொட்டியான சந்தோஷங்கள் இப்படி ஏயெக்ஸென்னின் “ப்ரேக்கிங் மேஜிஷியன்ஸ் கோட்” உடைத்த பொட்டிகள் மாதிரி “பச்” என்று மொச்சு கொட்டும்படி இல்லை. பொட்டி மேஜிக்கில் உள்ளூர நடக்கும் சங்கதிகளைத் தெரிந்து கொண்டால் அந்த ஜோஷ் இருப்பதில்லை. மன்னை கீழப்பாலத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது காடா விளக்கில் காட்டப்பட்ட தெரு மேஜிக்குகளும் அப்படியே கட்டிப்போட்டவைதான். ரகஸ்யங்கள் உடையாத வரையில் எதிலுமே அதீத சுவாரஸ்யமிருக்கிறது. கொண்டாட்ட வாழ்வின் ரகஸ்யமும் இந்த ரகத்தவைதான் என்று தத்துவார்த்தமாக இந்த வ்யாசத்தை முடித்துக்கொள்கிறேன்.

கோவை லோக்கல்

....அந்த சித்தர் தாடி தன்னருகே கூப்பிட்டு ”சிவசிவ” முணுமுணுத்து பிட் நோட்டீஸில் விபூதி மடித்துக்கொடுத்தார். “தம்பி! ஒரு பத்து ரூவா கொடேன்..” என்று கட்டளையாகக் கை நீட்டியவருக்கு இருவதாக திணித்தேன். பணம் உள்ளங்கையில் பட்டதும் மீசை சிரித்து தாடி ஆடியது. அங்கிருந்து வாகனத்தை ந்யூட்ரலில் விட்டால் தானாக இறங்கி நிற்குமிடத்தில் ஸ்ரீலலிதாம்பிகை கோவில். இன்னோவாவும் ஃபோர்ட் ஐகானுமாக ஏற்கனவே வாசல் லெக்ஷ்மி கடாட்சமாக இருந்தது. உள்ளே பஜனை பாடுவதற்கு யாரோ எத்தனித்துக்கொண்டிருந்தது ஸ்பீக்கரில் கரகரத்தது. பஜனைக்கும் ராக தாளம் முக்கியம் என்று கார்த்திகை மாத கன்னி சாமி ஐயப்ப பூஜை அடிக்கடி அட்டெண்ட் செய்பவர்களுக்குப் புரியும். பாட்டுக்குப் பாட்டு சரணத்துக்கு ஐயப்பாவும் ஐயப்பாவுக்கு சரணமும் சொல்லி குருசாமியோடு ஐயப்பனையும் சேர்த்து வெறுப்பேற்றிய ஆசாமிமார்கள் ஏராளம்.

சர்வாலங்கார பூஷிணியாக நேரே காட்சியளித்த லலிதாம்பிக்கை அப்படியே அலேக்காக திருமீயச்சூருக்குத் தூக்கிச் சென்றாள். சுருள் சுருளாய்க் கன்னக் கருந்தாடி விரிய புறமுதுகு காட்டி காவி வஸ்திரம் கட்டி அம்பாளைப் பார்க்க உட்கார்ந்திருந்தவரை “இவர்தான் ஜெகன்னாத ஸ்வாமிகள்...” என்று கேகேயண்ணா Krishnamurthy Krishnaiyerஹஸ்கி வாய்சில் அறிமுகப்படுத்தினார். கீபோர்டு போல எதிரில் கிடந்த ரூல்டு நோட்டிலிருந்து வரி வரியாகப் படித்து “அம்மா...அம்மா..”வை கடைசியாக ஒட்ட வைத்துப் பஜனை பாடிக்கொண்டிருந்தார்.

கோரஸ் பாடிய இரண்டு பெண்கள் அவரோடு பலத்த போட்டி போட்டுக்கொண்டு அவர் ஸட்ஜமத்திலிருந்தால் ரிஷபத்திலும் ரிஷபத்திலிருந்தால் காந்தாரத்திலும் ஒரு படி மேலே பாடி அவரையே மூச்சுத் திணற அடித்தார்கள். இந்த இசைச் சூறாவளியில் சிக்குண்ட கீபோர்ட்காரர் ரெண்டு நொடிக்கொருதரம் கீபோர்டிலிருந்து கையை எடுத்துவிட்டு ஸ்தம்பித்துப்போய் அவர்களின் வாய் பார்த்தார். கடைசியாக ஜால்ராவை எடுத்துக்கொண்டு உட்கார்ந்த ஒரு பக்தர் “ஜிங்..ஜிங்..சக்...” என்று புது ரூட் ஒன்று போட்டார். நரம்புகள் புடைக்க பக்கத்திலிருந்த கட்டையில் ஓங்கி தாளம் போட்டுக் காண்பித்துவிட்டு மீண்டும் கீபோர்டில் கை வைத்தார்.

இந்த சங்கீத அட்டூழியத்தைக் காணச் சகிக்காமல் ஒரு காலை மடக்கி சிவனேன்னு அமர்ந்திருந்த லலிதாம்பிகை எந்நேரமும் எழுந்து வந்து மண்டையில் போடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது கற்பூரத் தட்டைக் காண்பித்து “எடுத்துக்கோங்க...” என்றார் சட்டையணியாத பூசாரி போன்றவர். “உட்காருங்க...” என்று சுவற்றோரமாக இடம் காண்பித்தார். திருச்சுற்று வரும் போது என் இளைய மகள் கேட்டாள் “ஏம்ப்பா... ஒவ்வொருத்தரும் வேற வேறபாட்டை ஒரே சமயத்துல மைக்ல பாடறாங்க?”. “அடிச் செல்லமே!” என்று அவள் கன்னங்களை வழித்து திருஷ்டி கழித்தேன்.

இக்குழு “ஸ்ரீசக்ரராஜ சிம்ஹாசனேஸ்வரி.. ஸ்ரீ லலிதாம்பிகையே...”வைக் கோரஸாக ஆரம்பிப்பதற்கு முன்னர் ”கனவான்களே! சித்த சங்கீதம் பிழைக்கட்டுமே..” என்று அவர்களிடம் கேட்க பயந்துகொண்டு அனுவாவியிலிருந்து கோவையை நோக்கி விட்டோம் சவாரியை.

ஆரெஸ்புரத்தில் அன்னபூரணி, காமாட்சியம்மன் என்று அணிவரிசையாக இரண்டு கோவில்களுக்கு எதிர்புறம் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டது. “இந்த ட்ரிப்ல நாள் பூரா கோவிலில்லாம எண்டர்டெயின்மெண்ட் இடத்துக்கெல்லாம் அழைச்சிண்டு போறேன்னு யாரோ சென்னையிலிருந்து கெளம்பும்போது பீத்திக்கிட்டாங்க..” என்று பெரியவளும் சிரியவளும் கோரஸாக ”ஹுக்கும்”மென்று இருமினார்கள். மருமானும் கச்சேரிக்குப் பக்க வாத்தியம் போல சத்தமாகக் கனைத்துக்கொண்டான்.

கோயிலுக்குள் நுழைவதற்குள் இரண்டு மூன்று பூக்காரிகள் கேகேயண்ணாவைச் சுற்றிக்கொண்டார்கள். அவர்களிடம் வாடிக்கையாம். மல்லி விற்கும் அவசரத்தில் அவர் காதில் ரெண்டு முழம் சுற்றிவிடும் அபாயம் இருந்ததால் நான் நடுவில் புகுந்து விலக்கிவிட்டேன். அன்னபூரணி கோவிலுக்குள் வேதபாட சாலை இருந்தது. குருக்கள் சாந்தசொரூபியாக குங்குமத்தில் ஜொலித்தார். மகா பெரியவா ஒரு ஆற்றுக்கு நடுவில் காலை மடித்து பித்தளை சொம்போடு உட்கார்ந்து பூஜை செய்யும் பிரம்மாண்டமான லாமினேட்டட் படம் அது காஞ்சி மடத்துக்குச் சொந்தமானது என்பதை பறை சாற்றியது. அப்படியே காமாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தால் நேரே ஆஜானுபாகு சுதை சிற்பமாக செக்கச் சிவப்பில் ஆதிசங்கரர். இடதுபுறத்தில் விநாயகர் சன்னிதியில் ஆரம்பித்து வரிசையாக சுப்ரமண்யர், சிவன், காமாட்சியம்பாள், கோதண்டராமர், பாண்டுரங்கர், தத்தாத்ரேயர், ஐயப்பன், குருவாயூரப்பன் என்று you name any Hindu God, அவர் அங்கு அருள்பாலிப்பார். எந்த விசேஷத்திற்கும் கோயில் கோயிலாகச் செல்லவேண்டாம்.

நெற்றி நிறைய பட்டை பட்டையாய் விபூதியும் நடுவில் சாமியாடி போல சதும்பத் தீற்றிய குங்குமமும் அலங்கரிக்க வீடு திரும்பினோம். ப்ரெட் ஒரு பாக்கெட்டும் சில காய்கறிகளும் அன்றிரவு டின்னரை அந்தளவுக்குப் பிரமாதப்படுத்தும் என்பது தேவ ரகஸ்யம். Chitra Krishnamurthy மன்னியின் கை வண்ணம். திரிமூர்த்திகளாக மும்மூன்று ப்ரெட் ஸ்லைஸ்களை ஒன்றன் மேல் ஒன்றாக சீராக அடுக்கி இடையிடையே காப்ஸிகம், வெள்ளரி, தக்காளி, ஆனியன் என்று பச்சையும் சிகப்பும் வெள்ளையுமாகச் சொருகி டோஸ்ட்டியிருந்தார்கள். இட்லி தோசை போன்ற பதார்த்தங்களே இப்பூவுலகில் உன்னதமானவை என்று சதா சர்வகாலமும் பேதம் பாராட்டும் என் போன்றவர்களையே அடித்துப் போட்டது அந்த டோஸ்ட். மூர்க்கமாக ஒரு பிடி பிடித்தவனை “டேய் நிப்பாட்டுடா...” என்று வயிறு முட்டி வாய் “ஏவ்..” என்று அலற கையைத் துடைத்துக்கொண்டு எழுந்தேன்.

காலை எழுந்ததும் ஜன்னலில் மயில் நடனம். கேகே அண்ணா மாதம் ஒரு மூட்டை சோளம் மயில்களுக்காக இறக்குமதி செய்கிறார் என்பது அவரது இரை வீச்சில் தெரிந்தது. பொறுமையாகக் கிளம்பி கோவைக் குற்றாலம் மற்றும் தியானலிங்க ஈஷாவுக்கு செல்லக் கிளம்பினோம். கோவைக் குற்றாலத்தில் நுழையவிடாமல் தடுத்து “இன்னிக்கி மெயிண்டனன்ஸ் டே. போய்டுங்க.....” என்று திருப்பிவிட்டார்கள். இயற்கையாக விழும் அருவிக்கு ஏது மெயிண்டனன்ஸ் டே? என்ற குழப்பத்தில் பக்கத்தில் பொட்டிக்கடை போட்டவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள், குழந்தையை ஆய் போக விட்டு பக்கத்தில் நிற்பவர்கள் என்று கண்ணில் படும் முகங்களிடம் “ஏங்க இன்னிக்கி கிடையாதா?” ஆய் போக விட்டு பக்கத்தில் காவலுக்கு நின்ற இளம் பாட்டி திரும்பவும் “இன்னிக்கி கிடையாதா?” என்று எங்களைப் பார்த்து அதே ராகத்தில் கேட்டது. முகத்தை காருக்குள் இழுத்துக்கொள்ளும் தருவாயில் அது பின்னால் திரும்பி “ஏமிரா?” என்று வெளிக்கிக்குக் குந்தி இருந்தவனை சிடுசிடுத்தது. ”இன்னிக்கி அருவி கிடையாது” என்று முடிவானதும் @chitra krishnamurthy யின் பண்ணை வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஈஷாவுக்குப் போகலாம் என்று தீர்மானித்தோம்.

கேரட் பட்டாணி பரவலாகக் கலந்த விஜிடபிள் புலாவ். வாய்க்கு ஒரு மிந்திரியும் (பாட்டி பாஷையில் முந்திரி என்பதின் திரிபு) நிரடியது. தயிர் சாதம். பார்க்க சிம்பிள் மெனு. பெத்த ருசி. தக்ஷிண்சித்ரா வீடுகள் போல அலங்காரமாகவும் பாரம்பரியமாகவும் அழகாகவும் இருந்தது. சுவர்களில் ஹரிக்கேன் விளக்கு மாடலில் சிஎஃப்ஃபெல் பல்பு சொருகியிருந்தது. ஹாலில் தொட்டி மித்தத்துக்கு நேரே இரண்டு பேர் நெருக்கமாக உட்கார்ந்து ரொமாண்ட்டிக்காக ஆட தோதாக ஒரு குட்டி ஊஞ்சல். ”போற்றிப் பாடடி பொண்ணே.....” என்று தேவர்மகன் கமல் எட்டிப் பார்த்தார்.

மாங்காயைக் கையால் எட்டிப் பறிக்கும் உயரத்தில் மாந்தோட்டமும், குலை தள்ளிய தென்னந்தோப்பும் கொளுத்தும் கோடையிலும் சிலுசிலுவென்று இதமாகக் காற்று வீசியது. தொடுவானத்தில் பசுந்தோல் போர்த்திய மலைகள் தெரிந்தது. கயிற்றுக்கட்டிலும் பக்கத்தில் வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரும் இருந்து வயிறு முட்ட விருந்து சாப்பிட்டுவிட்டு வாய்க்கு வெத்திலையோடு சரிந்தால் இதுதான் சொர்க்கபுரி.

ஈஷாவில்.....

அனுவாவி

”சங்கரா டிவியில் வரும் ஸ்ரீ ட்ராவல்ஸ் Ad மாதிரி நீ எப்போதும் வருஷா வருஷம் கோயில் குளமின்னு உன் இஷ்டத்திற்கு க்ஷேத்திராட டூர்தான் இழுத்துண்டு போவே...” என்கிற ஸ்திரமானக் குற்றப்பத்திரிகையை என் வாண்டுகள் இவ்வருஷத்திய ஏப்ரலில் வாசித்தார்கள். கர்மேந்திரியங்களுக்கு தண்ணி காண்பிப்பதை விட ஞானேந்திரியங்களை புஷ்டியாக வைத்துக்கொள்ள கோயில்குளங்கள்தான் ஒத்தாசையாக இருக்கின்றன என்பது என் கட்சி. இந்த முறை மலை, அருவி, இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் என்று உல்லாஸ் சுற்றுலா போவதாக ஏகமனதாக முடிவெடுத்து என்னையும் கையைப் பிடித்து ராஜபார்வை கமலாகக் கூட்டிக்கொண்டு போனார்கள். கையில் தடியில்லாமல் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றேன்.

சென்ட்ரலுக்குள் செல்வதற்கு யாத்ரிகர்களை வரிசைக் கட்டி ஸ்கேன் செய்தார்கள். யாரைத் தடவினாலும் குட்டி போட்ட பூனை மாதிரி கீச்கீச்சென்று கத்திய மெட்டல் டிடக்டர்களை அதனைப் பிடித்தவர்களே அலட்சியம் செய்தார்கள். பளாட்ஃபாரத்தில் ஆங்காங்கே கோடு கோடாய் ஈரத்தரை. “இழு” பைகளை சப்பரமாக இழுத்தபடி அரைட்ராயர் ஸ்கர்ட் அணிந்த பொடிசுகள். லேஸும் கையுமாக ஒரு பம்ளிமாஸ் சிறுவன். அம்மாவின் கேரியர் இடுப்பில் கையில் பிஸ்கோத்துடன் ஒரு மழலை என்று கோடை விடுமுறையின் கடைசிக் கட்ட ரயிலடி. சதாபிஷேகம் கண்டது போலிருந்த சதாப்திக்கு பச்சைப் பசேல் என்று அப்பரண்டிஸ் பெயிண்டரை விட்டுக் கோணலும் மாணலுமாய் கோச்சுக்கு கோச் body வர்ணம் தீட்டியிருந்தார்கள். ஏறி உட்கார்ந்ததும் ”ரெயில்நீர்” பாட்டிலை முன்சீட்டின் முதுகில் எனக்காகச் சொருகினார் ஐயார்சிடிசி பணியாளர். ஒவ்வொரு சீட்டும் பரோபகார சீட். நமக்குப் வாழ்வியல் படிப்பினை புகட்டும் சீட்.

கோயம்புத்தூரிலிருந்து கோடானுகோடி பேர்களுக்கு ஃபேஸ்புக் வாயிலாக அருள்பாலிக்கும் மகானுபாவர் ஸ்ரீஸ்ரீ கேகே அண்ணாவின் Krishnamurthy Krishnaiyer பிறந்தநாளில் அவரது வீட்டில் தொபகடீர் என்று ஆசிபெறுவதற்காகக் குதித்தோம்.

Chitra Krishnamurthyயின் காஃபியின் அதீத ருசியில் சற்றுக் கிறங்கிப் போய் சதாப்தியின் செல்லக் குலுக்கல்களோடு அமர்ந்திருக்கையில் “ஒரு சீனிக் ப்யூட்டியான இடமிருக்கிறது... போலாமா?” என்று கொக்கி போட்டார் கேகே அண்ணா. செல்ஃபோனை அமுக்கி மந்திரமாய் அவர் பேச மாயாஜாலமாய் அடுத்த செகண்ட் உறுமிய வாகனம் வாசலில் வந்து நின்று ஹாரனடித்ததில் கோவையில் கேகேவின் அக்மார்க் பாட்ஷாத்தனம் தெரிந்தது.

அனுவாவி. கோவையிலிருந்து பெரிய தடாகம் செல்லும் பாதையில் இடதுபுறம் போர்டு வைத்திருக்கிறார்கள். கல்லும் மண்ணும் சரசரக்கத் திரும்பினால் சொற்ப கிமீயில் அமைதியான மலையடிவாரத்தை அடைகிறோம். அகஸ்தியர் கோயிலருகே இருக்கும் நெடுமரத்தின் அடியில் வண்டியை வாகாக நிறுத்தலாம். படிகளின் ஆரம்பத்தில் கடைபோட்டிருந்த குட்டி குட்டி பொம்மைகள் விற்கும் வியாபாரி ஒருவர் சாக்குப்பைக்குள் கரடி, பார்பி, குரங்குகளைப் போட்டுக்கொண்டே “ஆறு மணிக்கெல்லாம் கோயில் மூடிருவாங்க... வெரசாப் போங்க...” என்று நமக்குக் கீ கொடுத்தார்.

ஏறுவதற்கு முன்னர் டீம் கேப்டன் கேகேயண்ணா “இராமாயண காலத்தில்... சஞ்சீவி பர்வதத்தை அனுமன் தூக்கிக்கொண்டு போகும்போது அவருக்கு தாகம் எடுத்ததாம். இந்த மலைப் பிராந்தியத்தைக் கடக்கும் போது முருகப்பெருமானை வேண்டிக்கொண்டாராம். அப்போது அங்கு காட்சியளித்த ஆறுமுகப்பெருமான் தனது வேலால் இம்மலையில் குத்த தண்ணீர் பீறிட்டதாம். அதைக் குடித்து தாகத்தைத் தணித்துக்கொண்டு அனுமன் இலங்கைக்கு விரைந்தானாம். வாவி என்றால் ஊற்று. அனுமனுக்காக ஊற்று உருவாக்கியதால் இதற்கு அனுவாவி என்று பெயர்.. ம்.. வாங்க ஏறலாம்...” என்று பிரசங்கத்தை இரத்தின சுருக்கமாக முடித்துக்கொண்டு முன்னேறினார்.

நாலு படி சிரமப்பட்டு தம் பிடித்து ஏறினால் சரளமாக நடக்கக் கொஞ்சம் சமதளம்... மீண்டும் செங்குத்தாக ஆறு படி... அப்புறம் கொஞ்சம் சமதளம்.. என்று தட்டிக்கொடுத்து தட்டிக்கொடுத்துச் சீராக மலையில் தூக்கிவிடுகிறார்கள். பத்து படி ஏறியபின் “யானையெல்லாம் வருமுங்க... கொளந்தைங்களை கையில் புடிங்க.. சாக்கிரதை...” என்று பொம்மை வியாபாரி பின்னாலிருந்து பூச்சாண்டி காட்டினார். “வரும்.. வரும்..” என்று குணா கமல் வசனநடையில் கேகேயண்ணாவும் தலையையாட்டி அதை ஆமோதித்தார்கள்.

படிகளின் இருபுறமும் மரங்கள் இயற்கைப் பந்தல் போட்டிருக்கிறது. காற்றில் அசையும் மரங்களின் “ஷ்...” ஓசையே அலாதியானது. அந்த “உஷ்..உஷ்”ஷில் பெண்டாட்டிக்கு அடங்கும் புருஷர்கள் போல நம் வாய் கப்சிப்பாக அடங்கிப்போகிறது. ஐந்தே முக்காலுக்கு ஏற ஆரம்பித்தால் சட்டை பொத்தானைக் கழட்டிவிடும் வேகத்தில் மலைக் காற்று வீசுகிறது. தூரத்தில் தெரியும் மலைகள் படுத்திருக்கும் பெரிய கஜராஜனின் முதுகு போலக் காட்சியளிக்கிறது. அரசல்புரசலாக மரங்களுக்கிடையில் பெரிய காது போல அசைந்து தெரிந்ததெல்லாம் திருமூலரின் வாக்கைச் சத்தியமாக்கியது. மரத்தில் மறைந்தது மாமத யானை... மரத்தை மறைத்தது மாமத யானை....

பாதி தூரத்தில் இடும்பன் சன்னிதி வருகிறது. ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிமெண்ட் பால் ஊற்றி வழித்துவிட்ட பென்ச் இருக்கிறது. அதிக வெயிட் போட்டவர்கள் தங்களை அமைதி படுத்திக்கொள்ளலாம். நானும் சின்னவளும் நடை சார்த்திவிடப் போகிறார்களே என்று இரண்டிரண்டு படிகளாகத் துள்ளி ஏறினோம். ”அரோகரா.. அரோகரா...”. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்.

சன்னிதியை அடையும் கடைசிப் படியில் அரபிந்தோ தாடியுடன் உட்கார்ந்திருந்த ஒருவர் யாரிடமோ குசுகுசுவென்று ரகஸியமாகப் பேசிக்கொண்டிருந்தார். இந்த இம்சையைக் கேட்டுக்கொண்டிருந்தவரின் கண்களில் கூரிய ரம்பத்தின் அறுவை வலி தெரிந்தது.

வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கும் சுப்ரமண்யர் சன்னிதியில் யாருமில்லை. குருக்கள் இடதுபுறமிருக்கும் அனுமன் சன்னிதியின் பிரகாரத்தில் உட்கார்ந்து காய்கறி நறுக்க இன்னொருவருக்கு ஒத்தாசை செய்துகொண்டிருந்தார். எங்களது குழுவில் அனைவரும் வந்து சேர்ந்தவுடன் சுருக்கமாக ஒரு தீபாராதனைக் காட்டி ஒரு சிட்டிகை விபூதிப் பிரசாதம் தந்தார். பரந்த நெற்றியுடைய எனக்கு அது யதேஷ்டமாகவில்லை. இன்னும் கொஞ்சம் வாங்கி பட்டையடித்துக்கொண்டேன். திருநீரினால் நெற்றி மணத்தது. பிரதக்ஷிணம் பண்ணினோம். கீழே பொம்மை வீடுகளாய் இரைந்து கிடந்தன. ஒற்றையடிப் பாதையாய் தெரிந்த தார்ரோட்டில் எறும்பு போல வாகனம் ஒன்று நகர்ந்தது. ”இந்த மலையை ஏறி அப்படியே அந்தப் பக்கம் இறங்கினால் மருதமலை” என்று வாயால் வழி காண்பித்தார் குருக்கள் மாமா.

”மேலே இருக்கிறது அருணாசலேஸ்வரர் கோயில். அதுக்கும் மேலேதான் முருகன் வேலால குத்தின அனுமன் சுனை இருக்கு. அதோ இங்க ஒரு இடத்தில அந்தத் தண்ணீ ஓடி வருது பாருங்கோ...” என்று பாறைகளில் கால் இன்ச் பைப்பில் ஒழுகும் நீர் போல ஒரு இடத்தைக் காண்பித்தார். படமெடுத்துக்கொண்டேன்.

“ஸ்ரீராம்.. ஜெய்ராம்.. ஜெயஜெயராம்....” சொல்லி பக்கத்திலிருந்த அனுமன் சன்னிதியையும் வலம் வந்தோம். அனுமன் சன்னிதியில் தீபாராதனைக் காட்ட குருக்கள் வருவார் என்று எதிர்பார்த்த எனக்கு முகத்தில் வெண்ணையைப் பூசினார் ஆஞ்சநேயர். யாரும் டிஸ்டர்ப் பண்ணாத ஆஞ்சநேயர் அற்புத தரிசனம்.

ஏறியதை விட இறங்குவது எளிது. இதுவும் ஒரு வாழ்க்கைத் தத்துவம்தான்.

கடைசிப் படியில் பொம்மைகள் கட்டிய கோணி மூட்டையைக் கட்டி புறப்படுவதற்கு ரெடியாக இருந்தார். “யானை எதுவும் கண்ணுக்குப் பட்டிச்சா?” என்று கொங்கு தமிழின் ஏற்ற இறக்கங்களுடன் கேட்டார். “இல்லை...” என்று நானும் சின்னவளும் சேர்ந்திசையாகத் தலையாட்டினோம். “அப்பா.. மொதல்லெல்லாம் ஏறும் போது ஒண்ணும் தெர்லப்பா.. ஆனா கொஞ்ச தூரத்துக்கப்புறமும் நீ குதிச்சுக் குதிச்சு ஏறினபோது உம்பின்னாடியே ஓடி வந்தேனா.. அப்போ.. “ என்று மௌனமானாள். “அப்போ...” என்று கேட்டு Pauseலிருந்த அவளை மீண்டும் Play செய்தேன்.

“காதுக்குள்ளே டப்...டப்ன்னு ஹார்ட் பீட் கேட்டுச்சுப்பா...” என்று சிரித்தாள்.

மலையடிவார அகஸ்தீஸ்வரர் கோயிலில் இரண்டு மூன்று தாடிகள் சகஜமாகத் தென்பட்டன. கையில் கமண்டலத்துடன் நின்ற திருக்கோலத்தில் அகஸ்தியர் காட்சியளித்தார். பக்கத்தில் கொட்டைப்பாக்களவு லிங்கம் ஒன்று. தேவாரம் பாடுவார் என்றென்னிய என் எண்ணத்தில் திருநீரைப் போட்டுவிட்டு “நமஸ்தே அஸ்து பகவன்...” என்று ருத்ரம் சொன்னார் சின்ன தாடி. சன்னிதியோரத்தில் ஸ்டூலில் சித்தர் தாடியில் அமர்ந்திருந்த இன்னொரு பெரியவர் என்னை அருகே கூப்பிட்டு........

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails