Tuesday, July 29, 2014

முருக நாயனார், ருத்ர பசுபதி நாயனார்

”பூக்காரன் வரலைடா... பஜாருக்குப் போனா ஒரு மொழம் மல்லிப்பூ வாங்கிண்டு வா...இல்லேன்னா கதம்பம் சாமந்தி எது கிடைக்கிறதோ... ஒரு மொழமாவது... மறந்துடாதே... ஸ்வாமிக்கு சார்த்தணும்...”. ஒரு நாள் கூட ஸ்வாமிக்கு புஷ்பமிடாமல் இருந்ததில்லை பாட்டி. எண்பளத்தெட்டு வயசு வரை. மன்னையில் வாசலில் சம்பங்கி கொடி இருந்தது. கும்மென்று மணக்கும். ஊசியில் நூலைக் கோர்த்துத் அடிமேலாய் பூவைக் குத்தித் தொடுத்து மாலைகட்டிக் கொடுத்தால் தண்ணீரில் நனைத்துவிட்டு அன்னபூரணிக்கு போட்டு அழகு பார்ப்பாள். “கஜானனம்... பூதகனாதி...ம்... சொல்லு...” என்று தார்க்குச்சி போடுவாள். ”பாத பங்கஜம்...” சொன்னவுடன் ஒரு சின்னக் கட்டி கல்கண்டும் நாலு கிஸ்மிஸ்ஸும் கையில அழுத்தி “வாய்ல போட்டுக்கோ...”ன்னு பூஜைரூமை விட்டு அனுப்புவாள்.

சாயந்திர வேளைகளில் குளத்தைப் பார்த்து வாசற்படியில் உட்கார்ந்திருக்கும் போது நமக்கு யோகமிருந்தால் எப்பவாது பக்தி கதைகள் சொல்லுவாள். அப்படி சொல்ல ஆரம்பித்தால் பாட்டி வேஷம் போட்டுண்ட ராமகிருஷ்ண பரமஹம்சர் மாதிரி மங்கலாகத் தெரிவாள். “பூ வாங்கிண்டு வாடான்னு... வாங்கிண்டு வாடான்னு தலதலயா அடிச்சுக்கிறேனே... ஒருத்தர் ஈஸ்வரனுக்கு பூ கைங்கர்யம் பண்ணியே அறுபத்து மூவர்ல ஒருத்தராயிட்டார். நோக்குத் தெரியுமோடா?” என்று பீடிகையோடு ஆரம்பிப்பாள். சர்ர்ர்ர்ர்ர்ன்னு ஏழு மணி சோழன்(அரசுப் பேருந்து) ஒன்று நடை தளர்ந்து பஸ் ஸ்டாண்டைப் பார்க்கப் போகும். இப்போது “ம்..” கொட்ட ஆரம்பித்தால் அரை மணி அப்படியும் இப்படியுமாக பல விஷயங்களை அலசி ஒரு கதாகாலட்சேபம் பண்ணுவாள். கையில் சப்ளாக்கட்டையில்லாமல்.

“திருப்புகலூர் சிவன் கோயிலுக்கு பூ பறிச்சுண்டு வந்து மாலை தொடுத்துக் கொடுத்து கைங்கர்யம் பண்ணிண்டிருந்தார் முருக நாயனார். நீங்கெல்லாம் பறிக்கறேளே.. இடது கையில ஒண்ணு.. வலது கையில ஒண்ணு... இலையை பிச்சு.. கிளையை ஒடிச்சு.. அப்படியெல்லாமில்லை. பூ பறிக்கிறதுக்கு நிறையா நேமநிஷ்டைகள் இருக்கு. ஸ்நானம் பண்ணிட்டு பூ பறிச்சு கூடையில போட்டுண்டு வரச்சே நாபிக்குக் கீழே தணிச்சு கொண்டு வரப்டாது. அதுக்கு மேலேயே தூக்கிப் பிடிச்சுண்டு வரணும். நித்யமும் வெடிகார்த்தாலே எழுந்து ஸ்நானம் பண்ணி நித்யகர்மாக்கள் பண்ணிட்டு அப்படியே கூடை நெறைய பூவெல்லாம் பறிச்சுண்டு வந்து பிரகாரத்துல உட்கார்ந்துண்டு அவர் கையாலே தொடுத்து ஸ்வாமிக்கு கொடுப்பாராம். இந்தக் கைங்கர்யம் பண்ணிண்டிருக்கும் போது சுந்தரர் அவருக்கு ஃப்ரெண்ட் ஆயிடறார். ஆச்சாள்புரத்துல சுந்தரர் கல்யாணத்துக்கும் இவர் போறார். அங்க சுந்தரர் கல்யாணத்துக்கு வந்தவா எல்லோரையும் சேர்த்து கைலாயத்துக்கு அழைச்சுண்டு போயிடறார். அதுல முருக நாயனாரும் போயிடறார்.” குளம் காற்றில் சிற்றலைகளை எழுப்புவது தெருவிளக்கின் வெளிச்சம் குளத்தில் விழுந்த இடத்தில் வெள்ளிக் கம்பிகளாகத் தெரியும். அரை நிமிடம் நிசப்தம். மீண்டும் தொடருவாள். “திருப்புகலூர்ல இன்னொரு விசேஷம் நடந்துருக்கு. சுந்தரருக்கு சிவபெருமான் செங்கல்லை தங்கமா மாத்திக் கொடுத்துருக்கார். சுந்தரர் பார்யாள் பரவையார் தான தர்மம் நிறையா பண்ணுவா. அப்படி தர்மம் பண்றத்துக்கு காசு வேணுமோன்னோ... அதுக்காக திருப்புகலூர் வரச்சே சுந்தரர் கிட்டே காசு கேட்டா. அவர்ட்ட ஏது காசு. ஆகட்டும்மா கார்த்தால பார்க்கலாம்னு தலைக்கு ஒரு செங்கல்லை வச்சுண்டு ப்ரகாரத்துல படுத்துண்டார். கார்த்தாலே எழுந்து பார்த்தா தலைக்கு வச்சுண்ட செங்கல் சொக்கத் தங்கமாயிடுத்து. அவருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். உச்சி குளுந்து போய் ஈஸ்வரனைப் பாட்டா பாடித் தள்ளிட்டார்.”

ஈஸ்வரனுக்குப் பூ கைங்கர்யம் பண்ணுவதின் மகத்துவத்தைப் பற்றி அந்த வயதில் புரிந்துகொண்டதில் மனசுக்கு இனம் புரியாத ஒரு திருப்தி இருக்கும். இன்னொரு நாள் ஸ்லோகம் சொல்லும் போது காமாசோமாவென்று அசிரத்தையா இருந்தால் பூஜை ரூமிலேயே உட்கார வைத்துக் கதை சொல்லுவாள். “கஜானனம் சொல்றத்துக்கே உங்களுக்கெல்லாம் வாய் கோணிண்டு அலுத்துக்கறதே... பெரிய்ய்ய ஸ்லோகமான ஸ்ரீருத்ரத்தை தெனமும் ஒருத்தர் ஜெபிச்சு மோட்சத்துக்குப் போனார். அதுவும் சும்மா உட்கார்ந்துண்டு சொல்ல மாட்டார். நம்ம ஹரித்ராநதி மாதிரி ஒரு குளத்துல கழுத்தளவு தண்ணியில இறங்கி நின்னுப்பார்.. கண்ணை மூடிப்பார்... ரெண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டுப்பார்.. கைலாசத்துலேர்ந்து சிவபெருமான் பார்த்தா நன்னா தெரியும்.. நெத்தி நெறையா பட்டை பட்டையா இட்டுண்டு இவர் நிக்கறது... அப்படியே “ஓம் நமோ பகவதே ருத்ராயா...”ன்னு ஜெபிக்க ஆரம்பிச்சுடுவார்.. ஒரு தடவை ரெண்டு தடவை இல்லை... ராத்திரி படுத்துக்கறதுக்கு கரைக்கு வருவார்... ஆத்துல போய் மோருஞ்சாதமா சாப்டுட்டு படுத்துண்டுடுவார்... கார்த்தாலே எழுந்து சந்தியெல்லாம் பண்ணிட்டு திரும்பவும் தொண்டை முழுகிற அளவுக்கு குளத்துல இறங்கி ஸ்ரீருத்ரம் ஜெபிக்க ஆரம்பிப்பார்.. இப்படி தெனம் பண்ணி கைலாசத்துக்குப் போனார்..”

“அவர் பேரென்ன பாட்டி?”

“ருத்ர பசுபதி நாயனார்...”

“நா சின்னதம்பிதானே...பசுபதி இல்லையே...”

“கட்டேல போறவனே... நல்லது சொன்னாலும் பரிகாசம் பண்றே... படவா....”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails