Tuesday, July 29, 2014

கணபதி முனி - பாகம் 1 : அவதாரம்

ஆந்திரபிரதேசம். ஸ்ரீகாகுளம் ஜில்லா. பொப்பிலிக்கு அருகே இயற்கை எழில் சூழும் அமைதியான கலுவராயி கிராமம். சமஸ்கிருதத்தில் கலுவ என்றால் குமுதம். தமிழில் தாமரை; உபலம் என்றால் ராயி. தமிழில் கல். பரம்பரையாக வசிக்கும் உள்ளூர்க்காரர் ஒருவர் சொன்னார் “இந்தூர்ல ஒருத்தருக்கு அதிசயமா கல்லுலேர்ந்து தாமரைப்பூ பூத்திச்சுங்க... அதனால கிராமத்துக்கு பேரு கலுவராயிங்க...”

கல்லில் தாமரைப் பூத்ததோ இல்லையோ; ஒரு அவதார புருஷர் தாமரையாய் பிறந்த புண்ணிய பூமி கலுவராயி. இவரது பூர்வீகர்கள் பதினாறாம் நூற்றாண்டில் கும்பகோணம் பக்கமிருக்கும் வலங்கைமானில் இருந்து கர்னூல் ஜில்லா நந்தியாலுக்குக் குடிபெயர்ந்தவர்கள். பின் நந்தியாலிலிருந்து நத்தபகலாவிற்கு பெயர்ந்தார்கள்.

அய்யலசோமையாஜுலு என்பது இவர்களது குலப் பெயர். இந்த வம்சத்தில் ஜெகன்னாத சாஸ்திரி என்பவர் கலுவராயியைத் தொட்டடுத்த நந்தபலகா கிராமத்திற்கு ஜாகை போனார். கண்டி சர்வப்ப சாஸ்திரி என்பவர் கலுவராயி கிராமத்தின் தலைவர். பெரும் தனவந்தர். நந்தபலகாவில் படிக்க வந்த ஜெகன்னாத சாஸ்திரியின் தேஜஸைக் கண்டு தனது மகளை அவருக்கு கன்னிகாதானம் செய்துவைக்க விரும்பினார். காசிக்கு க்ஷேத்திராடனம் சென்ற சர்வப்ப சாஸ்திரி அங்கேயே பிராணனை விட்டார். உயிர் பிரியும் தருவாயில் மனைவியிடம் “அந்த ஜெகன்னாதனையே நம் மகளுக்கு மணம் முடித்து வை..” என்று தனது கடைசி ஆசையை தெரிவித்தார். ஊருக்குத் திரும்பிய சர்வப்ப சாஸ்திரியின் மனைவி ஜெகன்னாத சாஸ்திரியை தனது மகளுக்கு பாணிக்கிரஹனம் செய்வித்து சர்வப்ப சாஸ்திரியின் சகல சொத்துகளுக்கும் அதிபதியாக்கினார். வருடங்கள் பல உருண்டோடின.

ஜகன்னாத சாஸ்திரியின் ஒரே மகன் பீம சாஸ்திரி. பீம சாஸ்திரிக்கு நரசிம்ம சாஸ்திரி, சர்வேஸ்வர சாஸ்திரி, ப்ரகாஸ சாஸ்திரி என்று மூன்று புத்திரர்கள். நரசிம்ம சாஸ்திரியின் குணமும், கொள்கையும், படிப்பும் மிக்கவர். அக்கிராம மக்கள் அவரிடம் கைகூப்பி வாய்பொத்தும் அளவுகடந்த மரியாதை கொண்டிருந்தார்கள். நரசிம்ம சாஸ்திரி பாரத தேசமெங்கும் க்ஷேத்திராடனம் செய்யப் பிரியப்படுவார். வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை அகவொளி பெருக்கிய மானுடர்களாலேயே காப்பாற்ற முடியும் என்று நம்பினார். அகவொளி பெருக்குவதற்கு ஸ்திர பலமாகத் திகழ்வது வேதங்கள் என்பது அவரது திண்ணம். அப்படி வேதவித்துக்களாக இருந்த ரிஷிகள் போல தனக்கு தெய்வத்தன்மையோடு பிள்ளைச் செல்வம் வாய்க்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார்.

நரசமாம்பாவிற்கு ஆண் மகவு பிறந்தது. பீம சாஸ்திரி என்று பெயரிட்டார்கள். லவலேசம் கூட தெய்வாம்சம் பொருந்தியதாக அக்குழந்தை இல்லை. நரசிம்ம சாஸ்திரி சோர்வுற்றார். பிறந்த குழந்தைக்கு அடிக்கடி சுகவீனம் ஏற்பட்டது. குற்றுயிரும் கொலையுயிருமாக அக்குழந்தை போராடியபோது அரசவல்லியில் இருக்கும் சூரியநாராயணரிடம் மொட்டை போடுவதாக பிரார்த்தனை செய்துகொண்டார்கள். குழந்தை படிப்படியாகத் தேறியது. அரசவல்லிக்குச் சென்று மொட்டை போட்டு அன்று ராத்தங்கினார்கள்.

விடியற்காலையில் ஒரு அழகான தேவதை நரசமாம்பாவிடம் தங்கக் கலசத்தில் கொழுந்துவிட்டெரியும் அக்னியோடு கையில் கொடுத்துவிட்டு மாயமாய் மறைகிறாள். கையில் வாங்கிய அக்னிக் கலசத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது குழந்தையாக உரு மாறுகிறது. அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. கண்ணைத் திறந்தால் அது வெறும்கனவு. வீட்டிற்கு திரும்பும் வழியில் நரசிம்ம சாஸ்திரியிடம் இக்கனவைச் சொல்ல “அக்னியின் அம்சத்தோடு நமக்கு ஒரு பிள்ளை பிறக்கப்போகிறான். சூரியநாராயணரின் சக்தி சொரூபமே அழகான தேவதையாக உருவெடுத்து கலசத்தோடு வந்திருக்கிறது..” என்று கூறினார்.

சில மாதங்களில் நரசமாம்பா கருவுற்று தனது பிறந்தகம் சென்றார். நரசிம்ம சாஸ்திரி காசிக்கு பயணம் மேற்கொண்டார். பெரும்பாலான தூரத்தைக் கால்நடையாகவே கடக்க வேண்டிய காலம் அது. ஒரு மாதத்திற்கும் மேல் பயணப்பட்டு காசியை அடைந்தார். ஒரு தம்பளர் பாலோடு தினமும் துண்டி கணபதி கோயிலில் தியானத்தில் ஈடுபட்டார். ஒரு வாரம் கடந்து ஒரு நாள் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருக்கும் போது துண்டி கணபதியின் மடியிலிருந்து ஒரு குழந்தை சிரித்துக்கொண்டே தோன்றி தவழ்ந்து தவழ்ந்து வந்து இவரது மடியில் ஏறி உட்கார்ந்தது. அந்த க்ஷணம் இவர் சந்தோஷத்தில் திளைத்தார். ஆசையோடு கண்ணைத் திறந்து பார்த்தால் மடியில் அக்குழந்தையைக் காணோம். அவர் தூங்கவில்லை. இதுவும் கனவல்ல. இது நடந்தது 17-11-1878.

ஊரில் தனது மனைவி நரசமாம்பாவிற்கு மகன் பிறந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். துண்டி கணபதியை நமஸ்கரித்து ஊருக்குத் திரும்பினார். ஒன்றரை மாதத்தில் அவரது மாமனாரின் ஊரை அடைகிறார். துண்டி கணபதியின் மடியிலிருந்து தன் மடிக்கு குழந்த வந்த அன்றுதான் தனக்கும் குழந்தை பிறந்தது என்பதையறிந்து மட்டில்லா மகிழ்ச்சியடைந்தார். நரசமம்பாவும் “இவன் பிறந்த போது சிரசைச் சுற்றி ஒளிவட்டத்தைக் கண்டேன்” என்று கூறினார்.

பிறந்த குழந்தைக்கு சூரிய கணபதி என்று நாமகரணம் சூட்டினார்கள்.

பிற்காலத்தில் அந்தக் குழந்தை சூரியவைக் கத்தரித்துவிட்டு கணபதி சாஸ்திரியாக இருந்தது. அய்யலசோமையாஜுலு குல மரபினருக்கு கௌண்டின்யர், மைத்ரவருணர் மற்றும் வசிஷ்டர் போன்றோர் கோத்திர ரிஷிகள். கணபதி சாஸ்திரி வசிஷ்டரை தனது பெயருக்கு முன்னால் சேர்த்து வசிஷ்ட கணபதி சாஸ்திரியானார். பின்னர் அவரது தபஸை அறிந்த பெரியோர் வசிஷ்ட கணபதி முனி என்று ஆக்கினார்கள். இவருடைய குரு ரமண மகரிஷி “நாயனா” (என்றால் தெலுங்கில் அப்பா) என்று அழைத்தார். இவரது சீடர்களும் நாயனா என்றே அழைத்தார்கள்.

இவரே, வசிஷ்ட கணபதி முனி (அ) ஸ்ரீ நாயனா.

[நாளை தொடரும்....]

பின்குறிப்பு: குண்டுரூ லக்ஷ்மிகாந்தம் சுந்தரத் தெலுங்கில் எழுதிய நாயனாவை Dr. ஜி. கிருஷ்ணா என்பவர் ஆங்கிலத்தில் ”Ganapai Muni - Nayana" என்று மொழிபெயர்த்தார். அதை படித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் இந்த திவ்ய சரித்திரத்தை எழுதும் முயற்சி இது. அதன் விளைவே இப்பதிவும். இதன் புத்தக உரிமை யாருக்கேனும் இருந்தால் அதை இதன் மூலம் நான் மீறினால் தயை கூர்ந்து சுட்டிக்காட்டி தடுத்துவிடுங்கள். நிறுத்திவிடுகிறேன். துளிக்கூட வியாபார நோக்கில் இப்பணியில் நான் ஈடுபடவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்புத்தகத்தில் பக்கத்துக்குப் பக்கம் அற்புதங்கள் நிகழ்கின்றன. ஸ்ரீரமணர் என்று திருவண்ணாமலை ப்ராம்மணசாமிக்கு பெயர் சூட்டியவர் கணபதி முனி. என்னை கணபதி முனி பக்கம் திருப்பிவிட்ட Baskaran Sridharan அவர்கட்கு கோடி நன்றி!

#கணபதி_முனி

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails