Tuesday, July 29, 2014

ஒற்றியூருடைய கோவே!

சிவானந்தத்தில் திளைக்க திருக்கழுக்குன்றம் போகலாம் என்று ஒரு வாரமாக முடிவு செய்து நேரெதிர் திசையில் ஒரு ஆகர்ஷன சக்தி கவர்ந்து இழுக்க திருவொற்றியூருக்குக் கிளம்பினோம். ஆல் இண்டியா ரேடியோ வாசலில் குடும்ப சகிதம் காருக்குள் காத்திருந்தார் வீகேயெஸ். சேப்பாயியை செல்லமாக விரட்டிப் போய் சேர்ந்துகொண்டேன்.

பாரீஸ் கார்னரில் கார்ப்போரேட் அலுவலகங்கள் தூங்கும் இன்னொரு ஞாயிற்றுக்கிழமை. கடந்து வட சென்னை சாலையில் ஒடிக்காமல் ஓட்டினால் வலது பக்கம் ”ஹோ..”வென ஆர்ப்பரிக்கும் சமுத்திரம். கரையோற பாறையில் சடார் சடாரென்று ஆக்ரோஷத்துடன் அடித்து வீரம் காண்பிக்கும் ஆண் பெண் அலைகள். ரோட்டுக்கு பார்டர் கட்டியது போல அழுக்குடன் கண்டெய்னர் லாரிகள். உள்ளே குளிக்காமல் ஸ்டியரிங் மேல் தலை கவிழ்த்த ட்ரைவர்கள். பாரம் தாங்காமல் விழுப்புண் பட்ட சாலைகள். பத்திரமாக ரோட்டை விட்டு இறங்காமல் அப்படியே சீராக ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் திருவொற்றியூர் வந்துவிட்டது.

மெயின் ரோட்டிலிருந்து இறங்கி ஒற்றியூருக்குள் நுழையும் போதே பட்டினத்தாருக்குப் பேய்க்கரும்பு இனித்து முக்தியடைந்த தலமாயிற்றே என்று பக்தி தலைக்கேறி மனசு “நமசிவாய... நமசிவாய...நமசிவாய...” என்று பஞ்சாட்சரம் ஓதியது. ”மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில் நடப்பவர்” என்று திருவொற்றியூர் பதிகத்தில் பட்டினத்தடிகள் ஒற்றியூரின் மகாத்மியம் பாடிய இடங்களில் கார் சக்கரங்கள் உருள மாமதில்களைத் தாண்டி நிறுத்தும்போது மணி பத்தே முக்கால். ”பதினோறு மணிக்கு வடிவுடை அம்மனுக்குத் திரை போட்டுடுவாங்க.. அப்புறம் அரை மணி ஆவும்” என்று கோபுரவாசல் தாண்டு போதே அன்புக்கட்டளை விதித்து பக்தி மார்க்கமாக அம்பாள் சன்னிதி பக்கம் விரட்டினார் கோயில் ஊழியர் ஒருவர். வடிவுடையை தரிசித்த சில பக்தர்கள் பரவசம் பொங்க சன்னிதி வாசல் பிரசாத ஸ்டாலை மொய்த்துக்கொண்டிருந்தார்கள்.

அரக்கு கலர் புடவையில் சர்வாலங்கார பூஷிணியாகக் காட்சியளித்தாள் வடிவுடையம்மன். மினுமினுக்கும் மூக்குத்தியும் காதுக்கு அகிலாண்டேஸ்வரி மாதிரி தகதகக்கும் தாடகங்களும் ஜிலுஜிலுவென ஜொலிக்கும் க்ரீடமுமாக ஜெகஜோதியாக காட்சியளித்தாள். ரோஜா சம்பங்கி என்று வெள்ளையும் ரோஸுமாகவும் பல சுகந்தங்களில் மாலை மேல் மாலையென புஷ்பாலங்காரமாக சார்த்தியிருந்தார்கள்.

என்ன ஒரு அழகு! சொக்க வைக்கும் பேரழகு!! காமதகனம் செய்த சொக்கனே மயங்கமாட்டானா? தாழம்பூ குங்கும வாசனை பக்தி சாகரத்தினுள் மூக்கைப் பிடித்து இழுத்து மூழ்கடித்தது. கை கூப்பி கண்ணை மூடி தியானிக்கையில் ஆதிசங்கரர் கர்ப்பக்கிரக ஓரத்தில் தோளில் சார்த்திய தண்டத்துடன் நின்று கொண்டு ”சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்” என்று சௌந்தர்ய லஹரி பாடுவது போல ஒரு கனா. சில நொடிகளில் பின்னணியாக இளையராஜாவின் குரலில் “ஜனனி..ஜனனி..” இறையிசையாகப் புறப்பட்டு வந்தது.

தியாகராஜர் “கன்னதல்லி”யில் நீயிருக்க எனக்கு என்ன குறை? வெண்ணையிருக்க நெய்க்கு யாரேனும் கவலைப்படுவார்களா என்று திருவொற்றியூர் திரிபுரசுந்தரி மீது பஞ்சரத்தினமாக ஐந்து பாடல்கள் பாடியிருக்கிறார். கன்னதல்லியில் ரஜ்ஜு பை என்று வருகிற “பழுதையில் பாம்பு” அர்த்தத்தில் Murthy Subra சமீபத்தில் எழுதிய வெண்பா ஞாபகம் எட்டிப் பார்த்தது. ஞானசக்தி சொரூபமாக காட்சியளித்தவளுக்கு ஒரு குங்குமார்ச்சனை செய்து கொண்டு வலம் வந்தோம்.

திரை போடுவதற்கு முன் தரிசிப்பதற்கு ஒரே தள்ளுமுள்ளு. உட்பிரகாரத்தில் நாலடி உசரத்திற்கு திருவுடை, வடிவுடை, கொடியுடை அம்மன்களின் படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டியிருந்தார்கள். தொட்டுத் தொட்டு அழுக்காக்கிக்கொண்டிருந்த பக்தகோடிகளுக்கு அசராமல் அருள்பாலித்துக்கொண்டிருந்தாள். மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் இம்மூன்றிலும் அருள்பாலிக்கும் திருவுடை, வடிவுடை, கொடியுடை என்கிற தேவிமார்கள் இச்சா, ஞான, கிரியா சக்தி சொரூபமாக ரட்சித்துக்கொண்டு இருப்பதாக ஐதீகம். பௌர்ணமியில் இம்மூன்றையும் தரிசிப்பவர்கள் சொல்லொணா அற்புத பலன்களைப் பெறுவார்கள் என்பது உறுதியாம். கூடவே வந்த தாணுலிங்கம் அம்மன் புகழ் பாடி அடித்துச் சொன்னார். சமரச சன்மார்க்க வள்ளலார் வடிவுடை மாணிக்க மாலையாக கட்டளை கலித்துறையில் 102 பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் சொக்க வைக்கும் ஒரு பாடல். சாம்பிள்.

கடலமுதே செங்கரும்பே அருட்கற்பகக் கனியே
உடல்உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே
அடல்விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே.

கடலோரத்திலிருக்கும் அமுதே (அ) கடலில் கிடைத்த அமிர்தத்த்துக்கு நிகரானவளே என்று ஆரம்பித்து.. உடலுக்குள் இருக்கும் உயிரே.. உயிர்க்குள் உணர்வே... என்று பாடியதோடு நிற்காமல், ஞான ஒளி ஏற்றும் ஞான சக்தியாக இருப்பதால் அந்த உணர்வுக்குள் ஒளியே... ஞானமலரே... என்று தமிழ்ச் சிலம்பு எடுத்து தாராளமாகச் சுழற்றியிருக்கிறார். நூற்றிரெண்டு பாடலும் மாணிக்கப் பரல்கள்!

அம்மன் சன்னிதியிலிருந்து கோயிலை வலம் வரும் போது முதலில் வருபவர் ஸ்ரீசூரியன். வானத்தில் அப்போது மறைந்திருந்தவனை சன்னதியில் பார்த்து சொற்ப பேர் கன்னத்தில் படபடவென்று போட்டுக்கொண்டார்கள். அந்த வரிசை ஓரத்தில் சகஸ்ரலிங்க சன்னிதி. லிங்கத்துள் ஆயிரம் லிங்கம். அப்புறம் நேரே ஸ்ரீதியாகராஜர் சன்னிதி. இங்கிருக்கும் தியாகேசர் உட்கார்ந்த வண்ணம் திருநடமிடுகிறாராம். பக்கத்தில் திரிபுரசுந்தரியும் நடுவில் குட்டியோண்டு பாப்பாவாக ஷண்முகரும். கற்பூரத் தட்டை ஒருமுறை சுழற்றி விட்டு நமக்குக் காண்பித்தார் சிவாச்சாரியார். தியாகேசர் சிரித்தார். சிவஸ்வரூபமாக கௌலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் யோகத்தில் இருப்பது போன்று தியாகரஜாருக்குப் பின்னால் ஒரு சன்னிதி. குருக்களும் யோக நிலை போலிருக்கிறது. கேட்டாலும் யோக நிலையில் ஈசன் என்பதோடு நிறுத்திக்கொண்டார்.

இவர்களை திருவலம் வந்த பின்னர் நாம் நுழைவது ஆதிபுரீஸ்வரர், புற்றிடம் கொண்டார், படம்பக்கநாதர், தியாகராஜர், எழுத்தறியும் பெருமான் என்றெல்லாம் பல திருநாமங்கள் கொண்ட ஈஸ்வரன் சன்னிதி. பிரம்மாண்டமான லிங்கம். சதுர ஆவுடை. சுயம்புத் திருமேனி. தங்கக் காப்பிட்டிருக்கிறார்கள். கார்த்திகை மாதப் பௌர்ணமி சமயத்தில் மூன்று நாட்கள் திறந்து வைத்து பிரம்மா, விஷ்ணு மற்றும் வாசுகி மூவரும் தொட்டு வழிபடுவதாக புராணம். இம்மூன்று நாட்களில் புனுகு, சாம்பிராணி தைல அபிஷேகங்கள் நடைபெறுகிறது. வீகேயேஸ், வல்லபா, வல்லபாவின் தாய் தந்தையார், அஜ்ஜு, ஹரி, வினயா, மானஸா, நான், சங்கீதா எல்லோரும் கோரஸாக “நமஸ்தே அஸ்து பகவன்” என்ற ஸ்ரீருத்ர ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டோம். விடையன்... படையன்... சடையன்...தோடுடையன் என்று சம்பந்தர் தமிழில் தவிடுபொடியாகப் பாடியிருக்கிறார். திருநாவுக்கரசர் பாடிய தேவாரமொன்று இதைப் படிப்பவர்கள் மகிழ...

வெள்ளத்தைச் சடையில் வைத்த (கங்கையை...)
வேத கீதன்றன் பாதம் (வேத கீதன் உந்தன் பாதத்தை..)
மெள்ளத்தான் அடைய வேண்டின் (அடைய வேண்டுமென்றால்)
மெய்தரு ஞானத் தீயாற்
கள்ளத்தைக் கழிய நின்றார்
காயத்துக் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியு மாகும்
ஒற்றியூ ருடைய கோவே

மெய் தரும் ஞானத் தீயால் (நமது) கள்ளத்தைக் கழிக்க நின்றாராம்.. நமது காயத்துக்குள் கலந்து உள்ளத்தில் ஒளியுமான ஒற்றியூரைடைய கோவே என்று பாடுகிறார். பரவசத்தில் ஆழ்ந்து போகிறோம். மாலை சார்த்தி அழகு பார்த்தோம். அர்ச்சனை செய்து ஆரத்தி எடுத்துக்கொண்டு விபூதி நெற்றியை நிறைக்க வலம் வந்தோம்.

பிரகாரத்தில் கலிய நாயனாரின் வரலாற்றைச் சித்தரிக்கும் படமிருந்தது. இந்த இடத்தில் அதைச் சொல்லிவிடுகிறேன். சின்ன கதைதான். கேளுங்கள். ஒரு பிரதக்ஷிணத்திற்குள் ஒரு பாராவில் அடங்கிவிடும்.

முருக நாயனார் புஷ்ப கைங்கர்யம் செய்தது போல விளக்குக்கு எண்ணெய் போடும் கைங்கரியத்தினால் கலிய நாயனாராகியவர். தன்னுடைய செல்வம் அத்தனையும் விற்று விளக்குப் போட்ட பெருமான். கடைசியில் வீதிக்கு வந்தாலும் எண்ணையாட்டும் செக்கில் பிழைப்பு நடத்தி விளக்குக்கு எண்ணெயிட்டார். அந்த தொழிலும் நசிந்து விட வேறு உபாயமின்றி தவித்த போது மனைவியை விற்று விளக்குப் போடலாம் என்று எண்ணி விற்க முற்பட்டார். வாங்குவோர் இல்லை. கடைசியில் திருவிளக்கில் திரிகளை போட்டு கழுத்தை அறுத்து உதிரத்தால் விளக்கேற்ற முற்படும் போது கருணாமூர்த்தியான சிவபெருமான் ரிஷபாரூடராகத் தோன்றினார். அவரது கையைப் பிடித்து நிறுத்தி தனது திருவடி நீழலில் சேர்த்துக்கொண்டார்.

வட்டப்பாறை அம்மன் சன்னிதிக்குள் ஒரு இருபது பேர் கூட்டாக தரிசனம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். வெளியே காத்திருக்கும் வேளையில் அம்மனின் சான்னித்தியத்தை உணர முடிந்தது. “நொம்ப சக்தி வாய்ந்த அம்மன் பார்த்துக்கிடுங்க.. கம்பரு இராத்திரியெல்லாம் ராமாயணம் எளுதுவாராம். அதுக்கு தீப்பந்தம் புடிச்ச அம்மனிது” என்றார். ஸ்தல புராண புத்தகத்திலும் அப்படியே போட்டிருந்தார்கள். தேரெழுந்தூரில் பிறந்த கம்பர் திருவொற்றியூரில் ராமாயணம் எழுதினாரா? எழுத வந்தாராம். சதுரானை பண்டிதர் என்கிற மலைநாட்டு சர்வமொழி வித்தகர் வான்மீகி ராமாயணத்தை பகல் முழுவதும் படித்துக்காட்டி அர்த்தம் சொல்ல இரவில் தமிழில் எழுதினாராம். இதற்கு ஆதாரமாக வடிவுடையம்மன்.ஓஆர்ஜி இணைய தளத்தில் கம்பர் வட்டப்பாறையம்மன் தீப்பந்தம் பிடித்ததை எழுதியிருப்பதாக கீழ்கண்ட பாடலைப் பதிவிட்டிருக்கிறார்கள்.

ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே
வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை - பற்றியே
நந்தாது எழுதற்கு நல்லிரவில் மாணாக்கர்
பிந்தாமல் பந்தம் பிடி

அடுத்து ஆடல்வல்லானின் சபை. குருக்கள் மும்முரமாக ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். சந்தடி கேட்டுத் திரும்பி எழுந்து தீபாராதனை காண்பித்தார். விபூதி தரித்துக்கொண்டு “அது என்ன புத்தகம்?” என்று அக்கறையாக விசாரித்தேன். “தமிழ் வேதத் திரட்டு” எஸ் மகாலிங்கம் என்று மஞ்சள் அட்டையில் எழுதியிருந்தது. தேவாரப் பதிகங்களிலிருந்து பரிகாரம் தரும் தேர்ந்தெடுத்த பாடல்களை குண்டு குண்டாகஅச்சிட்டிருந்தார்கள். பலன்களுடன். மிஷின் அளவு ஆஃபீஸிருக்கும் சிற்றூர் ப்ரிண்டர்ஸ் அடித்தது. தேடிப்பார்த்து வாங்கணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வலம் வந்தோம்.

இப்போது வெளிப்பிரகார சுற்று. தென்மேற்கில் கோசாலை இருக்கிறது. நெருங்கினாலே சாப்பிட ஏதேனும் கிடைக்குமா என்று ஆவினங்கள் நாக்கை மூக்கில் நுழைத்துக்கொண்டு திமிறி வருகிறது. அங்கிருந்த பச்சையிலைகளைக் கொடுத்துவிட்டு வலம் வந்தோம். இதே ஸ்தலத்தில் தான் மகிழ மரத்தினடியில் சுந்தரரையும் சங்கிலியாரையும் சுந்தரேஸ்வரன் மணம் முடித்து வைத்தானாம். அவ்வைபவத்தை இன்னமும் மகிழடி சேவை என்று வருடந்தோறும் மாசி மகத்தில் கொண்டாடுகிறார்கள்.

திருவொற்றியீஸ்வரருக்கு தனிக்கோயில். சன்னிதிக்குள் நுழையும் முன் மண்டபத் தூண்களில் அனைத்து ரிஷிகளும் சித்தர்களும் தவமியற்றுகிறார்கள். பேய்க்கரும்புடன் பட்டினத்தடிகளும் அவரது சீடரான மெய்ஞானப் புலம்பலில் எக்காலம். எக்காலம் என்று பாடிய பத்திரகிரியாரும் ஒரு தூணைப் பகிர்ந்துகொண்டார்கள். தும்புருவும் நாரதரும் ஒரு தூணில் சிவஸ்மரணையுடன் நிற்கிறார்கள். இப்படி இறைத் தமிழுக்கும் சமயத்துக்கும் தூணாக இருந்தவர்களை தூண்களில் சிலையாக வடித்திருந்தார்கள். நத்தவனத்தை பராமரிக்கும் தாணுலிங்கம் தான் பயிரிட்ட வெண்டி, கத்தரிச் செடிகளைக் காட்டினார். பூத்துக் காய்த்திருந்த செடிகளைப் பார்க்கும் போது அப்படியொரு சந்தோஷம் அவருக்கு. நமக்கும்தான். க்ரூப் ஃபோட்டோ பிடித்துக்கொண்டோம்.

பிரதக்ஷிணம் முடிப்பதற்கு முன் இடதுபுறம் பைரவர் சன்னிதி. பூனை ஒன்று ராஜா போல உலாத்திக்கொண்டிருந்தது. அர்ச்சகர் யாருமில்லை. இப்போது வாசலில் நடை சார்த்திவிட்டார்கள். பைரவரைக் கன்னத்தில் போட்டுக்கொண்டு வரும் போது திகில் தொடர்களில் வரும் பிசாசுக் கிழவி போல சடைவார் குழலோடு ஒரு அம்மணி தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். நடுங்கிப் போய் நாலடி தள்ளி ஓடிவந்தாள் மானஸா. ஏகபாத மூர்த்தியின் தரிசனத்தோடு கொடிமரத்தருகில் நமஸ்கரித்தோம். கடைசியில் தாணுலிங்கத்திற்கு டாட்டா காட்டிவிட்டு ”சகல ஐஸ்வரியங்களும் தரும்” வடிவுடையம்மனின் படத்தோடும் இரண்டு பட்டை பிரசாதத்தோடும் வீடு வந்து சேர்ந்தோம்.

பின் சிறுகுறிப்பு: ஆங்காங்கே கட்டுரையில் குறிப்பிடப்பட்ட தாணுலிங்கம் கோயில் ஊழியர். சுசீந்திரத்துக்காரர். தன்னார்வலராக இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஒற்றியூரன் கோயிலில் மகேசன் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

மற்றுமொரு குறிப்பு: இந்தப் பக்கத்துக்கு நீங்கள் புதிதென்றால் இரண்டு போஸ்ட்டுகளுக்கு முன்னர் திருவொற்றியூர் கோபுரம் இட்டிருக்கிறேன். தரிசித்து அருள் பெறவும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails