Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, October 22, 2017

மாய மனம்

சரோவிற்கு விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் பேட்டை. ஒரு பாரா பயோ கீழே.

டிஏவியில் ஐந்தாவது படிக்கும் சுட்டிப் பெண் (சுபா) மூன்றாவது படிக்கும் வால்.பையன் - விஷால்- (Sibling quotaவில் சேர்ந்தவன்). லேசாக மேக்கப் போட்டால் தமிழில் முன்னணி நடிகையர்களின் மார்க்கெட் எகிறிவிடும் அழகோடு ஒரு மனைவி-ரம்யா. காரின் உதிரிபாகங்கள் தயாரித்து விற்கும் பன்னாட்டு நிறுவனத்தில் முதுகு நீண்ட சாய்மான சுழல் நாற்காலி உத்யோகம். தனக்கு கீழ் டை கட்டிய பத்து வெள்ளைக் காலர்களையும் அவர்களுக்கு கீழே ஐந்நூறு நீலக்காலர்களையும் மேய்க்கும் தலையாய பணி. நினைத்தாலே இனிக்கும் பாடல் போல காலையில் ஜப்பானிலும் மாலையில் ந்யூயார்க்கிலும் இரவில் தாய்லாந்திலும்... காஃபிக்காவும் காபரேக்காவும் ஜாலிக்காகவும் சுற்றுபவனில்லை.. தொழிலுக்காகப் பசி தூக்கமின்றிப் பேயாய் அலைந்தவன்.
ஆனால் காரணமே தெரியாமல் ஒரு வாரமாகத் தாடி வளர்த்துச் சோம்பித் திரிகிறான். ஆஃபீஸ் போகக் கசக்கிறது. ஏதோ தகிடுதத்தம் பண்ணியது போலப் பார்வை. தட்டில் தகரம் போட்டாலும் ஐஃபோன் பார்த்துக்கொண்டே உள்ளே தள்ளுபவன் "தக்காளி ரசம் ஏன் வச்சே?" என்று சமீபத்தில் ரம்யாவிடம் பழி சண்டை. கல்யாணம் ஆன புதிதில் "வக்காளி.... உன் தக்காளி ரசத்துக்காகவே ஏழேழு ஜென்மத்துக்கும் உனக்கு தாலி கட்டி உன் காலடியிலேயே அடிமையாக் கிடக்கணும்" என்று ரோமான்டிக் வசனம் பேசி ரம்யாவின் கன்னங்களை ரூஜ் போடாமல் சிவக்க வைத்தவன்.
"ஏன் ஆஃபீஸ் போகலை?"
"பிடிக்கலை"
"எதாவது கார்ப்பரேட் பாலிடிக்ஸா?"
"இல்லையே!"
"டெலிவரி ப்ரஷரா?"
"இல்லயில்ல.."
"உடம்புக்கு எதாவது பண்றதா?"
"ச்சே..ச்சே.. வேலையைப் பாரு..."
முதுகுகாட்டி திரும்பிப் படுத்துவிட்டான்.
மணிரத்ன சுருக்கமாய்ப் படுக்கையறையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசிக்கொண்டதுதான் கடைசி. அதற்கப்புறம் வாழ்க்கை ம்யூட் மோடில்தான் நடக்கிறது. டப்பாக் கட்டுக் கைலியோடு டைனிங்கில் வந்து காலையில் உட்கார்ந்தால் காஃபி. உடனே துண்டை தோளில் போட்டுக்கொண்டு போய்க் குளியல். திரும்பவும் டேபிள். இட்லி or தோசை. போய் மாடியில் படுக்கறையில் தஞ்சமடைந்தால் மதியம் சாப்பாட்டிற்கு இறங்கி வருவான். இரவு எட்டு மணி வாக்கில் டின்னர். பெண் "ப்பா.. கேன் யூ ஹெல்ப் மீ இன் மை ப்ராஜெக்ட்?" என்று தாவாங்கட்டைப் பிடித்துக் கேட்டால் விட்டேத்தியாகப் பார்த்துவிட்டு.. விடுவிடுவென்று எழுந்து சென்று பால்கனி தனிமையில். இந்த செய்கைகளில் ஒரு தொடர்ச்சியும் கிடையாது. சில நாட்கள் காலை டிஃபன் சாப்பிடாமல் மொட்டை மாடியில் உலாத்துகிறான். போன வாரம் ராத்திரி மாடியை விட்டு கீழே இறங்கவேயில்லை.
"யாராவது செய்வினை செஞ்சுருப்பாளா மாமீ?" என்று காம்பௌன்ட் அருகில் காற்றாட நின்றுகொண்டிருந்த பக்கத்து ஃப்ளாட் பரிமளம் மாமியிடம் சன்னமாகக் கேட்டாள் ரம்யா. கண்களில் ஒருவித பயம் தெரிந்தது. முன்னிரவு நேரம். சுற்றியிருந்த வீடுகளில் ஜன்னலுக்கு ஜன்னல் கட்டம் கட்டமாக வெளிச்சம் ஒளிர்ந்தது. சில உப்பரிகையில் 'ஜாக்கி'யும் சுருணைத் துணியும் நிழலாய்க் காய்ந்து கொண்டிருந்தது. பரிமளம் மாமியின் சொற்ப நேர மௌன இடைவேளையைக் கீறி யார் வீட்டிலோ தத்துவமாக "தெய்வம் தந்த வீடு வீதியிருக்க... இதில் நீயென்ன?... ஞானப்பெண்ணே" அலறியது. "நான் கேட்டு தாய் தந்தை..." ஆரம்பிக்கும் முன்னர் மாமீ பேச ஆரம்பித்தாள்.
"என்னடி தத்துப்பித்துன்னு பேசிண்டு... வாட்ஸாப் காலத்துல மையாவது? மாந்திரீகமாவது?.. போ...போ.. ஆஃபீஸ்ல பாஸ் கூட எதாவது இருக்கப்போறது..."
"இல்லே மாமி... வாட்ஸாப் காலத்துல நாம கணபதி ஹோமம் சண்டி ஹோமம் பண்றதில்லையா... அதுமாதிரி அதர்வண வேதமும் வழக்குல இருக்குமே... அவா தெருவுல மலையாள மாந்த்ரீகம் பண்ணி ரெண்டு புள்ள பெத்தவளை சித்தப்பிரமையாக்கிட்டான்னு எங்காத்துல மாமா தாத்தா பழங்கத ஒண்ணு சொல்லுவா..."
"இருக்கலாம்டீ.. கை நிறையா சம்பாதிக்கிறான்... ஒசந்த படிப்பு.. படகு மாதிரி கார் வச்சுருக்கான்... சிட்டில சொந்தமா ரெண்டு ஃப்ளாட்... பார்க்க லக்ஷணமா ரோஜா சினிமால வர்ற அர்விந்த் சாமி மாதிரி இருக்கான்... என்ன.. சரியா?" பரிமளா மாமி கடைசி வரியைச் சொல்லிவிட்டு ரம்யாவைக் கண்ணடித்து ஊடுருவிப் பார்த்தாள்.
"இவர்க்கு எதுக்கு வைக்கணூம்?" தவிப்புடன் கேட்டாள் ரம்யா.
"இவனை லவட்டிண்டு போயிடலாம்னுதான்... காசு.. படிப்பு...பதவி.. அழகு.. இன்னும் என்ன காரணம் வேணும்டீ.. ம்.. சரியா?"
"ஆனா எனக்கு தாலிகட்டிருக்காரே... கல்யாணமாயிடுத்தே..."
"ஹக்காங்... போடி பைத்தாரி... எக்ஸ்பீரியன்ஸ் பீப்பிளுக்குதான் மௌஸு ஜாஸ்தின்னு எங்காத்து கிழம் எப்போதும் ஃபோன்ல கூவிண்டிருக்கும்....கம்பெனிக்கெல்லாம் ஆள் பிடிக்கிற வேலைல இருந்தாரோன்னோ... ஆனாக்க இதோட வொர்க் எக்ஸ்பீரின்ஸ் என்னன்னு நேக்குத் தெரியாதா?" தலையாட்டி வாய் திறந்து சிரிப்பாள் பரிமளம் மாமி.
இதற்கு மேல் பரிமளா மாமிகிட்டே பேசினால் லஜ்ஜையில்லாமல் "அ"ந்த மாதிரியான சமாச்சாரமெல்லாம் சகஜமாகப் பேசுவாள். "சரி மாமி.. உள்ள வேலையிருக்கு.. நான் வரேன்..." என்று கழண்டு கொண்டாள் ரம்யா. பரிமளா விஷமக்காரக் கிழவி. சர்வ சுகங்களையும் ஆண்டு அனுபவித்தவள் என்பது அவளது சுவாரஸ்யமான பேச்சில் புரியும்.
"சாயங்காலமாச்சுன்னா பளிச்சுன்னு மூஞ்சியலம்பி.. நெத்திக்கு இட்டுண்டு... பூஜை ரூம்ல வெளக்கேத்தி... கார்த்தாலேர்ந்து போட்டுண்டிருந்த அழுக்கு நைட்டியை விழுத்துட்டு.. புடவையோ சுடிதாரோ ஜம்முன்னு உடுத்திண்டு... கமகமன்னு யார்ட்லீ சென்ட் தெளிச்சுண்டு... கண்ணுக்குத் தீனியா நிக்கணும்டீ... நாலு இடம் போயிட்டு பேண்ட்டும் ஸ்கர்ட்டும் லோ ஹிப் சாரியுமா பார்த்துட்டு ஆஞ்சுஓஞ்சு ஆத்துக்கு வர்றவன ஏமாத்தக்கூடாதோன்னோ..." என்று பக்கத்தில் சுந்தரவிநாயகர் கோயில் சதுர்த்திக்குப் போய்விட்டு வரும் போது காதில் சீக்ரெட் போல ஹஸ்கி வாய்சில் சொல்வாள்.
இன்றோடு பத்து நாட்கள்ஆயிற்று. "உங்காத்துகாரர் மலைக்கு மாலை போட்டுருக்காரா?" என்று விஷாலின் ஃப்ரென்ட் ஷிவ்வின் அம்மா ஸ்கூல் மரத்தடி லன்ச் டைமில் கேட்டாள். வாயைத் திறக்காமல் இல்லையென்று தலையாட்டி சிரித்துவிட்டு வந்தாள் ரம்யா. சித்த ஸ்வாதீனமில்லாமல் போனது போலவும் தெரியவில்லை. இதுவரை ஃபோனைத் தொடவில்லை. டீவி ரிமோட்டை கையிலெடுக்கவில்லை. வேளாவேளைக்கு சாப்பாடு தூக்கம். அடர் மௌனம். யாரிடமும் வாய்வார்த்தையாகப் பேசவில்லை. மௌனச் சாமியார் வாழ்க்கை. யார்மேலயாவது வெறுப்பா? இல்ல.. உள்ளுக்குள்ளயே பேசிண்டு "நான் யார்?"ன்னு ரமணர் மாதிரி தேடுதலா?
பெரும் ஆச்சரியம் என்னவென்றால் அவனது ஆஃபீஸிலிருந்து ஒரு கால் கூட வரவில்லை. சீட்டைக் கிழித்துவிட்டார்களா? விரக்தியில் பேசாமல் இருக்கிறானா? மொபைலை சார்ஜ் செய்து பத்து நாட்கள் இருக்கும். டேபிள் அலமாரி ஷோ கேஸ் எங்கும் காணவில்லை. சுபா ஒரு ஞாயிற்றுக்கிழமை "அப்பாவுக்கு என்னாச்சுமா? பேய் பிடிச்சா மாதிரி பாக்கறார்?" என்று கேட்டபோது ரம்யாவுக்கு அடிவயிறு கலங்கியது. "அப்பனே...காப்பாத்து.,," என்று திருவேங்கடமுடையானுக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்தாள்.
ரம்யாவிற்கு இதைத் தனியொரு ஆளாய் சமாளிக்கமுடியும் என்று தோன்றவில்லை. ஊர் சுற்றி சம்பாதிப்பது ஒன்றுதான் சரோவின் வேலை. மளிகை, ஸ்கூல் ஃபீஸ், ட்யூஷன் ஃபீஸ், பால் பாக்கெட், வேலைக்காரி, பேப்பர்காரனுக்கு என்று சகலமும் ரம்யாதான். சரோவின் அப்பாம்மாவிடம் இங்கு வரச்சொல்லி கேட்கலாம். அவர்களை இவள் கூப்பிட்டாள் என்று தெரிந்தால் தாம்தூமென்று ஆகாசத்துக்கும் பூமிக்குமாய் குதித்தால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது.
"நன்னிலத்துலேர்ந்து நாங்க எங்கடி அந்தப் பக்கம் வர்றது? இவர்க்கு காலை மடக்கி அரை மணி உட்கார முடியலை...கும்மோணம் வரைக்கும் கூட பஸ்ல போக காலிரண்டும் மறத்த்துப் போய்டறது.. குளிர்ல கொறக்களி இழுக்கறது... ஏழெட்டு மணி நேரம் பஸ்லயோ ட்ரெயின்லயோ எப்டி வருவோம்?" வேகுவேகென்று பேசிவிட்டு ரம்யாவின் மாமியார் ஃபோனை வைத்துவிட்டாள்.
டிஸம்பரில் அரைப்பரீட்சை லீவு விட்டார்கள். பத்து நாளுக்கு துணிமணிகளை மடித்து வைத்துக்கொண்டாள். ட்ராவல்ஸில் ஒரு இன்னோவாவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சரோவுடன் நேரே நன்னிலம் வந்து இறங்கிவிட்டாள். கிராமத்து வீட்டு வாசல்படியில் கால் வைத்ததும் சரோவின் முகம் ப்ரகாசமாகிவிட்டது போல இருந்தது ரம்யாவுக்கு.
"வாடீம்மா.. வா.." தோளில் கிடந்த காசித்துண்டோடு மாமனார்.
"சுபா.. குட்டீ... என்னடீது ஈர்க்குச்சியாட்டம் வத்தலும்தொத்தலுமா இருக்கா.. சாப்பாடு போடுறியா? இல்லையா? "
"கஷ்குமுஷ்குன்னு ஆயிட்டானே விஷால்... அக்காவோடதை பிடிங்கிச் சாப்பிடறயாடா?... படவா..... "
மாமியாருக்கு பரம சந்தோஷம். "ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் வெறிக்க வெறிக்க மூஞ்ச்சியைப் பார்த்துண்டு ஒண்டியா ஒக்காந்திருநதோம்.. எவ்ளோ நாளாச்சு... ஒரு பால் பாயஸம் வச்சுடறேன்...." முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டுச் சுறுசுறுப்பானாள்.
பசங்கள் இருவரும் கொல்லைத் தோட்டத்திற்குள் ஓடினர். சரோவைக் காணோம். வாசலுக்கு ஓடிவந்தாள். திண்ணை காலியாக இருந்தது. பின்னால் தோட்டத்தில் பசங்களிருவரும் கிணற்றை எட்டிப் பார்த்துக் கல்லெறிந்து கொண்டிருந்தனர். கொல்லைக் கடைசி தென்னைமரம் வரை சரோ கண்ணில்படவில்லை. இந்த சந்தர்ப்பத்திலாவது மாமியாரிடம் சொல்லிவிடவேண்டும். அந்தக்கிழவிதான் சரியான ஆள்.
சமையல்கட்டில் பரபரப்பாக ஒரு பெரிய பரங்கிக்கொட்டையை தரையில் போட்டு உடைத்துக்கொண்டிருந்தவள் ரம்யா தலை தெறிந்ததும் "சாம்பாருக்குதான்... நம்மாத்து கொல்லேல காய்ச்சது..."
"அம்மா. உங்களான்ட ஒரு விஷயம் சொல்லணும்.. என் மனசைப் போட்டு குடையறது...."
சட்டென்று அரிவாமனையைத் தள்ளி வைத்துவிட்டு... கண்களில் கங்கை பொங்க நின்றவளிடம்
"என்னாச்சுடீ... எதாவது...." என்று கலவரமானாள்.
நடந்த முழு கதையும் சொன்னாள். ஆழ்ந்த மௌனத்திற்குப் போனாள் ரம்யாவின் மாமியார். சமையல்கட்டு ஜன்னலைத் தாண்டி கண்கள் நிலைகுத்தியிருந்தது. எங்கிருந்தோ இறக்கை சடசடப்பிற்குப் பிறகு ஒரு அனாதரவான "கா..." ஒலி. காற்றில் தென்னைமட்டைகள் உராயும் சர்க்..சர்க்.. சப்தம். பின்னர் பேரமைதி.
"ஐஐடிக்கு படிச்சுண்டிருந்தான். பதினொன்னாவது. ராத்திரி பத்து மணி இருக்கும். வெளில நல்ல காத்தும் மழையுமா பிச்சுண்டு கொட்றது. கரன்ட் கட் ஆயிடுத்து. பொட்டு வெளிச்சம் கிடையாது. இவர் ஆஃபீஸ்ல ஆடிட்னு கோயம்புத்தூர் போயிருந்தார். நானும் சரோவும்தான் ஆத்துல இருந்தோம். சிம்னி வெளக்கு ரேழில ஏத்திவெச்சுட்டு... வாசக்கட்டுல இருந்த ரூம்ல "சரோ... என்னடா பண்றே?"ன்னு எட்டிப் பார்க்கறேன்.... சத்தத்தயே காணும்.."
ரம்யாவுக்கு மாமியார் அடுத்து என்னச் சொல்லப் போகிறாள் என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
"விடுடீ..."
"போட்டுட்டு ஓடிப்போயிடு..."
கொல்லையில் பசங்களின் விளையாட்டுச் சத்தம்.
"ரேழிலேர்ந்து சிம்னி வெளக்கை எடுத்துண்டு வந்து பார்த்தா.. புஸ்தகமெல்லாம் தொறந்து கிடக்கு... பெட்ல போர்வை கலைஞ்சிருக்கு... வாசப்பக்கம் ஜன்னல் கதவு காத்துல படார் படார்னு அடிச்சுக்கிறது.... இவனைக் காணல...எனக்கு பக்குன்னு ஆயிடுத்து.. பத்து மணிக்கு எங்க தேடறது?"
ரம்யாவுக்கு தான் எங்கிருக்கிறோம் என்ற உணர்வு அறுந்துபோனது.
"கொல்லைப்பக்கம் போயிருக்கானோன்னு போய் தேடினேன். ஊஹும். இல்லை.. சடார்னு கொல்லைக் கதவு வாசக்கதவையும் இழுத்துப் பூட்டிட்டு... இவரோட ஃப்ரென்ட் மெயின் ரோடு பக்கத்துல இருக்கார்.. அவாள்ட்ட ஹெல்ப் கேக்கலாம்னு தொப்பலா நனைஞ்சுண்டே ஓடினேன்..."
அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி தண்ணீர் ஊற்றி புளி கரைத்து ஊற்றினாள்.ரம்யா எழுந்து பின்னால் தொடர்ந்தாள்.
"கால் ரெண்டும் பின்றது... வழி நெடுக சேத்திலயும் சகதியிலையும் விழுந்து பெரண்டு... நெஞ்சை அடைச்சுக்கறது... மதுரகாளீ .. காப்பாத்துன்னு... படபடன்னு அடிச்சுக்கறது... முடிகொன்டான் ஆத்துல கரைபுரண்ட வெள்ளமா தண்ணீ ஓடறது... பாலத்தைத் தாண்டும்போது...வலது பக்கம்... கரை ஓரத்துல இருந்த ராட்சச அரசமரத்துக்குக் கீழே எதோ குமிச்சு வச்சா மாதிரி நிழலாத் தெரிஞ்சுது..."
அப்படியே நிறுத்திவிட்டு ரம்யாவைப் பார்த்தாள். ஏற்கனவே சப்த நாடியும் அடங்கி நின்றிருந்தாள் அவள்.
"பக்கத்துல ஓடிப்போய் பார்த்தேன்.. கொட்ற மழையில... அரசமரத்தைப் பொத்துண்டு தாரதாரையா ஊத்தறது.. அதுக்கு கீழே வஜ்ராசன போஸ்ல இவன் உட்காண்டிருக்கான்... ஊரே மழையில வெளில வராம தூங்கறது... ஒரு ஈ காக்கா அங்க இல்லே... கண்ணு ரெண்டும் தொறந்து ஓடற தண்ணியப் பார்த்து நிலைகுத்தி இருக்கு.. எனக்கு அப்டியே திக்குன்னு ஆயிடுத்து.. சரோ... டேய் சரோன்னு அவனை உலுக்கறேன்... திரும்பியே பார்க்காம ஆத்தை வெறிச்சுப் பார்த்துண்டு ஸ்திரமா உட்காண்டிருந்தான்.."
"அம்மா... விஷால் என் ஜடையைப் பிடிச்சு இழுக்கறான்.." என்று உள்ளே வந்தாள் சுபா.
"ஏய்.. போய் சமர்த்தா சண்ட போட்டுக்காம வெளையாடுங்கோ..." என்று துரத்தினாள். நெற்றியில் வேர்த்திருந்தது.
"...முதுகுல ரெண்டு வெச்சேன்... ஊஹும்.. அப்புறமா படித்தொறை புள்ளையார்ட்டே போய்.. க்ரில்குள்ளே கையைவிட்டு கை நிறையா விபூதியை எடுத்துண்டு போய் அவன் நெத்தில பூசினேன்... மழையில மொகம் பூரா வெள்ளையா வழிஞ்சிது... எங்கருந்தோ ஒரு அசுரபலம் எனக்கு வந்துது... அவனோட முதுகுபக்கமா போயி அவனோட கை கஷ்கட்டுல கையை விட்டுத் தூக்கினேன்... எழுந்துண்டான்... அப்படியே தரதரன்னு நம்மாத்துக்கு இழுத்துண்டு வந்தேன்.."
ரம்யாவின் மாமியாருக்கு இப்போது மழையில் சென்று நனைந்து வந்தது போல இரைத்தது.
".. தலையெல்லாம் துடைச்சு விட்டு.. பூஜை அலமாரி முன்னாடி உட்காரவெச்சு... வெளக்கேத்தி... நெத்திக்கு இட்டுவிட்டு... நமஸ்காரம் பண்ணுடான்னு சொன்னேன்...பண்ணினான்.. கடிகாரத்துல மணி பன்னெண்டு அடிச்சுது... சூடா காஃபி கலந்து கொடுத்தேன்... குடிச்சான்.. அஞ்சு பத்து நிமிஷமாச்சு... கொஞ்சம் சாதாரணமாயிருந்தான்... என்னடா பண்ணித்து கொழந்தேன்னு தலையைக் கோதி கேட்டேன்...அப்போ அவன் சொன்னது எனக்கு உள்ளுக்குள்ளே சுரீர்னு இழுத்துது...கேட்டப்போ படபடன்னு வந்துடுத்து... "
"அம்மா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு... முழுசா கேக்கறத்துக்குள்ள மயக்கமே வரும் போல்ருக்கு... ப்ளீஸ்... சீக்கிரம் சொல்லிடுங்கோ..." ரம்யா மாமியாரைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
"ம்மா... எனக்கு ஆத்துல இருக்கவே பிடிக்கலை.. படிக்க பிடிக்கலை.. சாப்ட பிடிக்கலை..."
"ஏன்டா கொழந்தே... அப்பா எதாவது வெசாளா? அம்மா ஏதும் சொல்லலைடா..."
"இல்லம்மா.. படிக்காம... சாப்டாம... தூங்காம... எதப் பத்தியும் யோசிக்காம... அமைதியா ஒரு இடத்துல அப்டியே உட்கார்ந்துடனும் போல்ருக்கு.... சன்யாசி மாதிரி... "
"அதுக்கு ஏன்டா அர்த்தராத்ரிலே ஆத்துக்கு போனே?"
"நம்ம ஆத்துக்குள்ள இருக்க வேண்டாம்னு தோணித்து... .. இன்னும் கொஞ்ச நாழி கழிச்சு..முடிகொண்டான்குள்ள இறங்கிடனும்னு இருந்தேன்... அப்டியே அது இழுத்த இழுப்புக்கு கூட போயிட்டேன்னா... படிக்கவேண்டாம்.. சாப்ட வேண்டாம்... தூங்கவேண்டாம்... சிரிக்க வேண்டாம்... நிம்மதி... பூரண நிம்மதி.. "
ரம்யாவுக்கு என்னவோ போல இருந்தது. செத்துப்போயிடுவானோ? உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
"ஏன்டா அப்டியெல்லாம் யோசிக்கறேன்னு அதட்டினேன்.. நிதானமானான்.. இருந்தாலும் அப்பப்போ பேய் புடிச்சா மாதிரி உத்தரத்தைப் பார்ப்பன்... கொஞ்ச நாள்ல எல்லாம் செரியாப் போய்டுத்து.. ஐஐடில செலகட் ஆனான்... நல்லா படிச்சான்.. நல்ல உத்யோகம்.. ரம்பையாட்டம் பொண்டாட்டி... தங்க ரேக்கா ரெண்டு கொழந்தேள்... மாறிட்டான்னு நினச்சேன்.. இப்ப நீ சொல்றது என் அடிவயத்தைப் பிசையறதேடீ...."
இருவரும் எதுவும் பேசவில்லை. ரம்யா வந்ததன் நோக்கம் அறிந்துகொண்டாள் சரோவின் அம்மா.. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசிவிட்டார்கள்.
"எங்கடி அவன்?" சரோவின் அம்மா கேள்விக்குதான் முழித்துக்கொண்டாள் ரம்யா..
"வந்ததுலேர்ந்து ஆளைக் காணூம்மா"
"அச்சச்சோ.. ஓடுடீ... எங்க இருக்கான்னு தேடு...."
முடிகொண்டான் ஆறு மதிய வெய்யிலில் தண்ணீரில்லாமல் வாழ்விழந்த பாலையாக இருந்தது. ஹோவென்று கிளைவிரித்த அரசமரம் தனியாக நின்றது. இரண்டு கிடா ஆடுகள் முட்டி முட்டி சண்டை போட்டுக்கொண்டிருந்தது. தூரத்தில் கிழவி ஒருத்தி மாட்டுக்கு புல் அறுத்துக்கொண்டு போவது தெரிந்தது.
கரையின் இடதுகோடியிலிருந்து வலது கோடிவரை ரம்யாவின் கண் அலசியது. யாருமில்லை. பாலம் தாண்டி மெயின் ரோடு செல்லும் சாலையில் ஏறினாள். இரண்டு பக்கமும் புளிய மரம் காவலாக நிற்கும் தார்ரோடு. செருப்பை மறந்து ஓடிவந்ததால் வெய்யில் சூட்டில் கால் பொறிந்தது.
ஊரின் பெயர்ப்பலகை தாண்டி யாரோ மேனியெங்கும் பொட்டு துணியில்லாமல் வெறும் கோவணத்துடன் நடந்து போவது தெரிந்தது. தகிக்கும் ரோட்டில் அவரது காலில் செருப்புக்கூட இல்லை. நடையைப் பார்த்தால் சரோ மாதிரிதான் இருந்தது. ரம்யா ஓடிப்போய்ப் பார்க்கலாமா வேண்டாமா என்று நின்றுகொண்டிருந்தாள். தூரத்தில் முடிகொண்டான் ஆற்றின் பாலத்துக்கு அக்கரையில் சுபாவையும் விஷாலையும் இருகையில் பிடித்துக்கொண்டு மாமியார் வேகுவேகென்று வந்துகொண்டிருந்தார்.
மனமென்னும் குரங்கா? ஊஹும். இதை அப்படிச் சொல்லமுடியாது.
சிவன் கோயில் பிரகாரத்தில் நெற்றியில் விபூதிப் பட்டையுடன் வாயில் தமிழ் மணக்க வரும் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு வலம் வந்த போது அவர் சொன்ன தேவாரம் ஒன்று ரம்யாவிற்கு இப்போது நினைவுக்கு வந்தது.
மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது
மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!

ஆசைக்கடலில் தள்ளாடும் மனப்படகை மீட்கும் கயிறு எது? நீளமெத்தனை? என்ன விலை? எவரறிவார்?
சரோ உணர்ந்திருப்பானோ?
(*)
ஏப்ரல் மாத வலம் இதழில் வெளிவந்தது.

Thursday, December 15, 2016

பேய்ச்சுரைத் தோட்டம்

எம் பேரு கலை. கலைச்செல்வியா கலைச்செல்வனான்னு நீங்க பால் தெரிய துடிக்கிறீங்கன்னு தெரியும். ஆம்பிளை வாய்ஸ்ல மேலே படிங்க. கலைவாணன். இப்ப நீங்க பார்த்துக்கிட்டிருக்கீங்களே... மங்கலான வெளிச்சத்துல... பெரிய பெரிய ஸ்டூல்ல உட்கார்ந்து... கைல மதுக்கோப்பையோட... ஆம்பளையும்.. பொம்பளையுமா.. சமதர்ம சமுதாயமா இருக்கிற இந்த இடத்துக்கு போன மாசந்தான் வேலைக்குச் சேர்ந்தேன். இது சென்னையில ஃபேமஸான நட்சத்திர ஹோட்டல். கவர்ச்சியான சினிமா, கோட் போட்ட கார்ப்போரேட், வொயிட் அண்ட் வொயிட் அரசியல்ன்னு பெரும் புள்ளிங்க சகஜமா தள்ளாடற இடம்.

புகழுதான் இங்க வேலைக்குச் சேர்த்துவிட்ட்டான். ஆமா.. இதென்ன பெரிய கம்பேனியில ஜெனரல் மேனேஜர் வேலையான்னு நீங்க சிரிக்கிறீங்க.. ஆனா இந்த வேலைக்குக் கூட தரமான சிபாரிசு தேவைப்படுது. நீங்க நினைக்கிறது சரிதான். ஊரை விட்டு ஓடினேன்... ஜெயில்ல இருந்தேன்... களி தின்னேன்.. உடனே நா ஒரு கயவாளிப்பய.. உதவாக்கரை... ரௌடி... அப்டீஇப்டீன்னு நீங்க நினைச்சுரக் கூடாது.
ஒரு குட்டிக் கதை கேட்க ரெடியா இருக்கீங்களா? இதுவொன்னும் உவேசாவோட என் சரித்திரமோ... காந்திஜியோட சத்தியசோதனையோ இல்லைன்னாலும் எனக்கு மன்சு விட்டுச் சொல்லணும்னு தோணிச்சு. இந்தக் கதையினால சமூகத்துக்கு எதாவது மெசேஜ் உண்டான்னு ஆர்வமா இருப்பீங்க.. இப்படியும் ஒருத்தனோட வாழ்க்கை இருந்ததுன்னு பதிவு பண்றேன்.. அம்புட்டுதேன்.. பார் மூடுற வேளைதான்... அந்தக் கடைசி டேபிள் மேலாக்கு சரிஞ்ச நடிகைக்கு கார் ஏற்பாடு பண்ணியாச்சு... மாஜி கணவரோ இல்லை மாஜி டைரக்டரோ வந்து கூட்டிட்டுப்போவாங்க... அது கிடக்கு... நாம கதைக்கு போவோம்..
ஆடுதுறைக்குப் பக்கத்துல தான் நான் பொறந்து வளர்ந்ததெல்லாம். எண்ணி நாலே தெரு இருக்கிற ஒரு குக்கிராமம். மரம் காய்ச்சு செடி பூத்துக் கொடி குலுங்கிய குக்கிராமம்.. சின்ன வயசுலேயே பாடம் சொல்லிக்கொடுத்தா கப்புன்னு புடிச்சிப்பேனாம். "கற்பூர புத்தி..."ன்னு பொட்டிக் கடை பாக்கியம் ஆத்தா போயிலை வாய் கமகமக்கச் சொல்லும் ..
மரம் சூழ் ஆடுதுறை கவர்மென்ட்டு ஸ்கூல்ல படிச்சேன். பள்ளிக்கூடம் விட்டா நேரா வீட்டுக்கு வந்து பாடப்பொஸ்தகத்தையெல்லாம் தொறந்து வீட்டுப்பாடம் எழுதி முடிச்சுடுவேன். இருட்டின பிறகு அரிக்கேன் விளக்குல எனக்குப் படிக்க புடிக்காது. அப்பாவுக்கு வயல் வேலை தவிர எதுவும் தெரியாது. கவர்மென்ட்டு திட்டத்துல தினக்கூலியா பைசா நெறையாத் தரேன்னு கூப்பிட்டாலும்... "விவசாயம் செய்யறது புனிதமான தொழிலு காந்தி... மண் மாதாவை நாம உதாசீனம் பண்ணிரக்கூடாது...வயிறு ரொம்பாது அப்புறம்..."ன்னு அம்மாகிட்டே உருக்கமா நடிகர் திலகம் மாதிரி தியாக வசனம் பேசுவாரு. நடவு அறுப்புன்னா தெருவிளக்கு வச்சப்புறம்தான் சோர்ந்து போயி வீட்டுக்கு வருவாரு... "நல்லா வாசிக்கிறியா தம்பீ..."ன்னு அசதியில பரிவோட கேட்டுட்டு சுருண்டு படுத்துருவாரு... விவசாயம்தான் அவரோட உலகம். நானு அம்மாவெல்லாம் வேற கிரகம். ஆனா அவரோட கடமையிலிருந்து தவற மாட்டாரு. சத்யவான்.
நா ஏன் ஜெயிலுக்குப் போனேன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருப்பீங்க்க.... ரொம்ப சுத்திக்கிட்டிருக்கேனா? என்னையப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டாதானே நான் பாவியா அப்பாவியான்னு தீர்மானிக்கமுடியும்? சீக்கிரம் முடிச்சுடறேன். மேலே கேளுங்க...
அம்மாவுக்கு எம்பேர்ல கடலளவு பாசம். எதுக்கெடுத்தாலும் கலை கலைன்னு உருகுவாங்க.. ஒரே பையன். பக்கத்து வீட்டுல பசங்க நான் பார்க்க ரொட்டித் துண்டு சாப்டாக்க... கடைத்தெருவுக்கு ஓடிப்போயி.... மூச்சிரைக்க வாங்கியாந்து தருவாங்க... எனக்கு மட்டும் எப்பவுமே சுடுசோறு. தயிர். ராத்திரிக்கு குடிச வாசல்லயே நட்சத்திரத்தை எண்ணிக்கிட்டுப் படுத்துருவோம். என்னிக்காச்சும் தூக்கம் வராம நிலாவப் பாத்துக்கிட்டே மல்லாக்கக் கிடப்பேன்.. பக்கத்துல படுத்திருக்கிற அம்மாவோட முந்தானையை எம் மேலே போர்த்திக்கிட்டு... மோந்து பார்த்தாக்க அதுல அன்னிக்கி வீட்ல ஆக்கின கொழம்போட வாசனையும் அம்மா பூசிக் குளிக்கிற மஞ்சள் வாசனையும் சேர்ந்து கலந்துகட்டி அடிக்கும்.... அப்படியே சொக்கிப்போயி... அது எப்படீன்னே சொல்லத் தெரியல.. .. தூங்கிடுவேன்... ஆனா அந்த வாசனை...ஸப்பா... செத்தாலும் மறக்காது...
ஏழாவது எட்டாவதுன்னு இல்லை.. ஒண்ணாவதுலேர்ந்தே எல்லா வகுப்புலேயும் நாந்தான் முதல் ரேங்க். தமிழய்யா குணசேகரு என்னியக் கூப்பிட்டு மாசில் வீணையும் மாலை மதியமும். கேட்பாரு. சத்தமா கணீர்னு எட்டூருக்கு கேட்கிற மாதிரி சொல்வேன். என் தோள்ல கை போட்டு க்ளாஸைப் பார்த்து.. "டேய் பயலுவலா.. கலை பெரிய கலெக்டரா ஆவப்போறான்... நீங்கல்லாம் மாடு மேய்க்கதான் லாயக்கு..."ன்னு திட்டுவாரு... கணக்கு டீச்சர் கண்மணிக்கு எம்பேர்ல கொள்ளைப் பிரியம்... "கலை.. நூத்துக்கு நூறா வாங்கிக் குவிக்கிறப்பா.... நீ பெரிய ஆளா வருவே" அப்டீன்னு... என்கன்னத்தை வழிச்சு.... அவங்க தலையில எல்லா விரலையும் படக்குன்னு முறியறா மாதிரி சொடுக்கித் திருஷ்டி சுத்திப் போடுவாங்க...
ஊரே எதிர்பார்த்தபடி பத்தாவதுல நாந்தான் மாவட்டத்துலேயே ஃபர்ஸ்ட் வந்தேன். கும்மோணத்துக்கு அழச்சுக்கிட்டுப் போயி அப்பா புது ட்ரெஸ் எடுத்துத்தந்தாரு. அம்மாவுக்கு கனகாம்பரம் வாங்கிக்குடுத்து... வெங்கடரமணாவுல ராத்திரிக்கு டிபன் சாப்டுட்டு சந்தோஷமா வீட்டுக்கு வந்தோம்.. ஆடுதுறையில டவுன் பஸ்லேர்ந்து இறங்கி வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தோம்.. அப்பா வழக்கம்போல கடகடன்னு முன்னாடி போயிட்டாரு.... நானும் அம்மாவும் பின்னாடி மெதுவா நடந்து வந்துக்கிட்டிருக்கோம்... சுத்திலும் நிழலா வயல் பரந்துகிடக்கு.. நிலா டார்ச் அடிச்சு வழி காமிச்சிட்டிருக்கு.... "இன்னிக்கி எம் மனசு நெறஞ்சு இருக்குடா கலை..." அப்டீன்னு குரல் கம்ம அம்மா சொன்னாங்க... திரும்பிப் பார்த்தா கண்ணுல பொலபொலன்னு தண்ணீ.... "அழாதம்மா.. அழாதம்மா.."ன்னு நானும் விக்கிவிக்கி அழுதுக்கிட்டே துடைச்சுவிட்டேன். மனசுக்குள்ளே...ரொம்ப சங்கடமா இருந்திச்சி... மனசு நெறஞ்ச அம்மா ஏன் அழுவணும்? ஃபர்ஸ்ட் மார்க் எடுத்ததெல்லாம் மறந்து போயி.... அம்மாவை ஒரு மாளிகைக்குள்ளே குடி வச்சு மகாராணி மாதிரி அழகு பார்க்கணும்னு சபதம் எடுத்துக்கிட்டேன்.. ஆனா அந்த விதி விதின்னு சொல்லுவாங்களே... அது என் வாழ்க்கையில கபடி விளையாடினது ரொம்ப ஜாஸ்திங்க... சொல்றேன்...
பதினொன்னாவதுக்கு பவித்ரா வந்து சேர்ந்தா... பாவாடை.... சட்டை... குடை ராட்டினம் மாதிரி காதுக்கு ஜிமிக்கி... அன்னபட்சி டாலர் தொங்கும் செயினு... பவுன் வளையல்.. ஜில்ஜில் கொலுசு.. பார்வைக்குப் பளபளன்னு இருந்தா... பணக்கார ரத்தம்னு நடையிலும் உடையிலும் பேசற தோரணையிலும் தெரிஞ்சுது... கிராமத்து ஸ்கூல்ல பளிச்சுன்னு ஒரு பொண்ணு.... கேட்கவா வேணும்... தரை சருக்க ஜொள்ளு விட்டுக்கிட்டு... பல்லிளிக்க ரெண்டு பேரு அவ பின்னாடியே... கண்மையால கோடு போட்டா மாதிரி லேசா மீசை அரும்ப ஆரம்பிச்ச வயசு. ரோட்ல போறப்போ மலையாளப் பட போஸ்டரை நின்னு பார்த்து வாய் பொளந்த வயசு. பசங்க கும்பலா சேர்ந்து அவ பின்னாடி அலைய ஆரம்பிச்சாங்க... என்னையக் கேட்கறீங்களா? நா வழக்கம் போல படிப்ஸ்தான். குனிஞ்ச தல நிமிராத சமர்த்துப் பையன் அப்டீன்னு பேரெடுத்தேன்... வாழ்க்கையில ஜெயிக்கணும்னு ஒரு வெறி... இடைவிடாத வெறி...
பன்னென்டாவதுலேயும் நா மாவட்டத்துலேயே முதலாவதா வந்தேன்.... மாநிலத்துக்கு ஃபர்ஸ்ட் ரேங்க்கா வரமுடியலை.. சின்ன வருத்தம்தான்.. திருச்சி பிஷப்ல சேர்த்துவிட்டாங்க... ஹாஸ்டல். ஸ்காலர்ஷிப் கிடைச்சுது.. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை இல்லைன்னா மாசம் ஒரு தடவை வீட்டுக்கு வருவேன். போன பாராவுல பார்த்த பவித்ராங்கிற பொண்ணை சுத்தமா நான் மறந்து போயிருந்தேன். ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம் தஞ்சாவூர் பஸ்ஸ்டான்ட்ல அரையிருட்டுல நின்னுக்கிட்டிருக்கும் போது "ஹாய்.."ன்னு துள்ளலா ஒரு குரல். ஆமா. நீங்க எதிர்பார்த்ததுதான்.. பவித்ரா.. ஜிலிஜிலுக்கும் ஒரு செகப்பு சுடிதார். துப்பட்டா இருக்க வேண்டிய இடத்துல இல்லாம கழுத்துக்குக்கு பாம்பு மாதிரி சுத்தியிருந்தது. எக்கச்சக்க குஷியில இருந்தா... அவ ஒரே ராத்திரில தளதளன்னு தாராளமா வளர்ந்துட்டா மாதிரி எனக்கு பிரமை.
"கலை எப்படியிருக்கே.."ன்னு பக்கத்துல வந்து கேட்டா...பலவந்தமா என்னோட கையைப் பிடிச்சு இழுத்து ஷேக் ஹான்ட்ஸ் குடுத்தா...எனக்கு கூச்சமா இருந்திச்சி... ஸ்கூல்ல படிச்சது மாதிரி இல்லாம.. உதட்டுக்கு செவப்பா லிப்ஸ்டிக்கெல்லாம் பூசியிருந்தா.. கண்ணை படபடன்னு இமைச்சு இமைச்சு கவனத்தை கவரும்விதமா பேசினா... எனக்குப் படபடப்பாதான் இருந்துச்சு... நான் பதிலுக்கு "ம்.. "அப்டின்னு ஒருஎழுத்தோட சுருக்கமா முடிச்சுட்டேன். "நீ பிஷப்ல சேர்ந்திருக்கேன்னு குணா சொன்னான் .." பேச்சை வளர்க்கிறா.... அந்த குணா இருக்கானே... அவன் விஷமக்காரப்பய. ரோட்ல ரெண்டு பேரு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் எதிரெதிர் திசையில நடந்து போனா.... தோள் மேலே கை போட்டுக்கிட்டு ஜோடியாப் போனாங்கன்னு கத கட்டி விடுவான். அவங்கப்பா கடா மீசையும் புலி நகச் செயினும் மாட்டிக்கிட்டு புல்லட்டுல உலாத்திக்கிட்டிருப்பாரு. அந்தக் கத எதுக்கு? நாம பவித்ரா பத்தி பார்ப்போம்..
"யேய்.. நான் எஸ்ஸார்ஸில சேர்ந்திருக்கேன். பியெஸ்ஸி மாத்ஸ்தான். கம்பைண்ட் ஸ்டடி பண்ணலாமா" அப்டீன்னு கண்ணடிச்சுக் கேட்டா... கண்ணடிச்சா மாதிரிதான் இருந்துச்சு.. ஒருக்கால் தூசி விழுந்திருக்கலாம்.. ஆனா வரம்புமீறி பேசறான்னு புரிஞ்சுது.. இப்போ நீங்க இந்தக் கதையில ஒரு லவ் ட்விஸ்ட் எதிர்பார்க்கிறீங்க... இன்னும் கொஞ்சம் தான் கதை... அப்ப தெரிஞ்சிடப்போவுது..
நா அவளைக் கண்டுக்கல... உத்தமபுத்திரனா பஸ்ஸேறி ஊருக்கு வந்துட்டேன். ரெண்டு மூணு வாரத்துக்குப் பிறகு ஒரு லீவுக்கு பை நிறையா அழுக்குத்துணியோட ஹாஸ்டல்லேர்ந்து ஊருக்கு வந்திருந்தேன்.... பெரிய வீட்டுக்கு கூப்பிட்டு அனுப்பிச்சாங்க... பண்ணையாளு பெருமாள்தான் வந்து "பவித்ராம்மா கூப்பிடறாங்க"ன்னு...வாசல்ல வந்து நின்னான். சைக்கிளை எடுத்துக்கிட்டு போனேன்.
கோயில் மதில் மாதிரி காம்பென்ட் சுவர்க்குப் பின்னால ராட்சத பங்களா. வெள்ளையடிச்சு கம்பீரமா இருந்திச்சி. கோட்டை வாசல் கதவு போல பெரிய க்ரில் கேட். திண்ணைக்கு அந்தப் பக்கம் வைக்கப்போர். ஊஹும். அது போர் இல்லை... வைக்கோல் மலை. நுழையும் போதே இடம் வலமா சேவல் படப்டன்னு பறந்து போச்சு. "ம்மா.."ன்னு கட்டிப்போட்டிருந்த ஏர்மாடு கத்திச்சு.... அவங்க அப்பா. அம்மா யாரும் வீட்ல இருக்கிற சுவடு இல்லை... எனக்கு சுவாதீனமா உள்ள போக பயம். வாசல்ல சைக்கிளை ஸ்டான்ட் போட்டுட்டு... தயங்கித் தயங்கி நின்னுக்கிட்டிருந்தேன். மாடி ஜன்னல்லேர்ந்து... "கலை.. மேல வா.." அப்டீன்னு கூப்ட்டா.. மீசையும் நெஞ்சுல தங்கப் பதக்கமுமா தலை நரைச்சுப்போன முன்னோர்கள் ஃபோட்டோல முறைக்கும் அலங்காரமான ஹாலைத் தாண்டி மாடிப்படி ஏறும் போது அவங்க வீட்டு வேலைக்காரம்மா.. எங்கம்மாவோட ஃப்ரெண்டுதான்.. மாயாக்கா.. என்னைப் பார்த்து "கலை"ந்ன்னுட்டு... ஒருமாதிரியா சிரிச்சாங்க... அதுல பல அர்த்தங்கள்... எனக்கு அது சரியாப் படலை...
ரத்ன கம்பளம் விரிச்சா மாதிரி அறைக்குள்ளே தரையெல்லாம் காஷ்மீர்ப் பாய் விரிச்சிருந்தது. அஞ்சு பேரு சேர்ந்து உருளலாம் போல பஞ்சு மெத்தைப் போட்ட பெரிய படுக்கை. வேலைப்பாடு நிறையா இருந்த படுக்கையோட தலைமாட்டுலேயும் கால்மாட்டுலேயும் முன்னங்கால் ரெண்டையும் தூக்கின யானை செதுக்கியிருந்தது.. டீக் வுட்டாயிருக்கும்.. அந்த படுக்கையில ஓரத்துல பவித்ரா குனிஞ்சு உட்கார்ந்திருக்கா.... ச்சே..ச்சே.. கெட்டத்தனமா நினைக்காதீங்க.. "கலை எனக்கொரு டௌட்.. தீர்த்து வைப்பியா...."ன்னு ஏக்கமாக் கேட்டா.... என்ன அப்டீன்னு கேட்கறத்துக்குக்கூட எனக்கு குரல் எழும்பல....தொண்டைக்குள்ள ரம்பம் விட்டா மாதிரி இருந்திச்சு... பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி ஜாடையாவே என்னான்னு கேட்டேன்..
ஆனா அவளா என்னை ஈஷ ஆரம்பிச்சா... படக்குன்னு படுக்கையிலேர்ந்து எந்திரிச்சு.. என் பக்கத்துல வந்து உரசர மாதிரி நின்னுக்கிட்டு...ம்.... ஹப்பா.. அது என்ன சென்ட்? ஜாஸ்மின்? மல்லிக்கும் மனசுக்கும் இருக்கிற மயக்கற உறவு இருக்கே... ஹா.. கிறக்கமா இருந்திச்சு... இந்த உலகத்துலேர்ந்து விடுபட்டு எங்கயோ பறந்துக்கிட்டிருக்கும்போது "கலை.. உனக்கு இந்த ஸம் தெரியுமா?"ன்னு கேட்டா. அவ்ளோ பக்கத்துல.. அவ்ளோ வாசனையா... ஒரு பொண்ணை.. யம்மா.. எனக்கு உள்ளுக்குள்ள மின்சாரம் பாஞ்சு நரம்பெல்லாம் நீவி விட்டா மாதிரி உதறல்.. ஏன்னா அவ ஊர்ப் பெரியவரோட செல்லப் பேத்தி. எங்க கிராமத்தைச் சுத்தி கண்ணுக்கெட்டின தூரம் வரை எல்லாமே அவங்க நிலம்ந்தான். எங்க அப்பாகூட அவங்களுக்கு ஒரு கூலி. கூலிக்காரனோட பையன் சந்து வழியாக் கொல்லைப்பக்கம் போகலாமே தவிர அவங்க வீட்டு படுக்கையறக்குப் போக ஆசைப்படலாமா? தெரிஞ்சா கூறு போட்ருவாங்க...
கூச்சமா இருந்திச்சு. தள்ளி வந்துட்டேன். அவ என் கையைப் பிடிச்சு இழுத்து.. "கலை எனக்கு சொல்லிக்கொடுத்துட்டுப் போ.."ன்னா.. அவ குரல்ல சாராயம் இருந்திச்சு.. அவ்ளோ போதையான குரல்... நான் கிறங்கித் திமிறினேன்... கையை இருக்கமா பிடிச்சிருந்ததை என்னால விடுவிக்க முடியலை... அவளை அப்படியே தரதரன்னு இழுத்துக்கிட்டு வெளிய வரலாம்னு பார்த்தப்போ... சட்டுன்னு எம்மேலேயே விழுந்துட்டா..வேணும்ட்டுட்தான்.. நா கீழே தரையில.... என் மேலே போர்வை மாதிரி அவ கிடக்கா.. ஒரு செகன்ட் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை... இன்பமான துன்பம்.... உடம்புல பல இடத்துல மெத்து மெத்து அழுத்துது.. முண்டிப்பார்க்கிறேன்.. நா முண்ட முண்ட இன்னும் அமுக்கி நெருக்கிறா.. எந்திரிக்க மாட்டேங்கிறா.. அந்தப் படுக்கயறையோட வாசல்ல அசிங்கமாக் கிடக்கோம்....
நா எந்திரிக்க முயற்சி பண்றேன். அவ என்னை அமுக்கறா.. இந்த காம்ப்ரமைஸிங் நிலமையில... "டேய்.. கலை.. என்னடா பண்ணிக்கிட்டிருக்கே.."ன்னு ஒரு ஆம்பிளைக் குரல்பதறிப்போய்ட்டேன்.. நீங்க வந்தது குணான்னு நினைச்சுட்டீங்க.,... குணா இல்லை.. கட்டக்குட்டக்க கங்காதரன் வந்தான். கங்காதரன் பொடிப்பையன். பவித்ராவோட சிங்கப்பூர் சித்தப்பா மவன். அதிகப்படியான தம்பி. தண்ணி தெளிச்சுவிட்ட கேஸு. இப்போ பத்தாவது மூனாவது வாட்டியா ப்ரைவேட்டா எழுதறான். RO plant வடிகட்டின முட்டாள். அஞ்சும் மூணும் பத்துன்னு மின்னலாச் சொல்லுவான். அதையும் அழுத்தம்திருத்தமாச் சொல்வான்... நாந்தான் தப்பு பண்ணினா மாதிரி என்னைக் குறுகுறுன்னு பார்த்தான். பவித்ரா சுதாரிச்சு எழுந்துட்டா...
அவனுக்கு குணா மாதிரி கெட்ட சகவாசம் அதிகம். படிப்பு ஏறலை..அப்பா ஃபாரீன்ல இருக்காரு.... பாதை தப்பிப் போறத்துக்கு நிறையா சான்ஸ் அவனுக்கு... அக்கா மேலே நாந்தான் பலவந்தமா உழுந்து கெட்டகாரியம் பண்ணிக்கிட்டிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு ரொம்ப அதிகமாப் பேசினான்.. வயசுக்கு மீறிய பேச்சு.. செயல் எல்லாமே... பவித்ராவுக்கும் லேசான நடுக்கம்தான்.. கொஞ்ச நேரம் யாருமே பேசலை.. மௌனமா ஹாலுக்கு வந்தோம்.. அவன் எப்ப வேணா அவங்கப்பாம்மாக்கிட்டே சொல்லிடுவான்ங்கிறது எனக்கும் பவித்ராவுக்கும் தெரியும். நா தப்பே பண்ணலை.இருந்தாலும் என் விதி விளையாட ஆரம்பிச்ச முதல் நாள் அது.
பவித்ரா வீட்ல இப்ப வந்துடுவாங்க.. எனக்கும் வீட்டுக்குப் போவணும்.. பவித்ராதான் அந்த மயான அமைதியைக் கலைச்சு பேச ஆரம்பிச்சா...
"கங்கா... கலை மேல தப்பில்லை.. நாந்தான் சறுக்கி...." அவ சறுக்கியில இழுத்த இழுப்பே சரியில்லை... பச்சக்கொழந்த கூட இத நமபாது... பிஞ்சுலயே பழுத்த.. வெம்பிப்போன கங்கா நம்புவானா?
"நா ரெண்டு கண்ணாலையும் பார்த்தது பொய்யா.. இந்த ஜல்ஸா வேலை எவ்ளோ நாளா நடக்குதுன்னு..." நக்கலா மிரட்டற தொனியில பேச ஆரம்பிச்சான்.. எனக்கு கோவம் சுர்ருன்னு தலைக்குமேலே ஏறிடிச்சு.. "டேய் இப்பா என்னாங்கிரே?..." ன்னு கையை மடிச்சிக்கிட்டு மூக்குமேலேயே குத்த கிளம்பிட்டேன் ... பவித்ரா என்னை சமாதானப்படுத்த ஆரம்பிச்சா... அவன் கேவலமா சிரிச்சான்.. "உங்க ரெண்டு பேரையும் போட்டுக்கொடுக்கறத்துக்கு எனக்கு எத்தனை நாழி ஆவுங்கிறே?"ன்னு நம்பியார்த்தனமா உள்ளங்கையிரண்டையும் பிசைந்தான்....
அவனை சமாதானப்படுத்த.. "கலை... கலை.. கங்காவுக்கு பத்தாவது பரீட்சை எழுதிக்கொடுத்து பாஸ் பண்ண வச்சுடு... அது போதும்..".ன்னு கெஞ்சாத குறையா டீல் பேசினா பவித்ரா... எனக்கு பகீர்னு ஆயிடிச்சு.. ஆள் மாறாட்டம் பண்றச் சொல்றா... அதெல்லாம் முடியாதுன்னு முரண்டு பண்ணினேன்.... உருப்படியா வளந்த ஒரு பையன... நாங்க இதைப் பத்தி பேசிக்கிட்டிருக்கும் போதே வாசல்ல வெள்ளை அம்பாசிடர் வந்து நின்னுச்சு... பட் பட்டுன்னு கார்க் கதவு சாத்தற சத்தத்துக்குப் பின்னாடி... பவித்ராவோட தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லோரும் பட்டுப் புடவை பட்டு வேஷ்டியுமா இறங்கினாங்க... எனக்கு மனசுக்குள்ளே திக். திக்க்னு இருந்திச்சு.. இந்தப் பய போட்டுக்கொடுத்துட்டான்னா உசுரோட விடமாட்டாங்களேன்னு பயம் வந்திடுச்சு....
"என்னங்கடா எல்லோரும் இங்க வந்திருக்கீங்க?"ன்னு பவித்ராவோட அப்பா சந்தேகமாக் கேட்டார். "பொன்னுசாமியோட பையந்தானேடா அவன்?" ன்னு என்னைப் பார்த்து தாத்தா கேட்டாரு. கங்கா என்னையும் பவித்ராவையும் வச்ச கண்ணை எடுக்காமப் பார்த்தான். இன்னிக்கி நமக்கு சங்குதான்... எந்த நொடியும் எங்களைக் காலி பண்ணிடுவான்னு உள்ளுக்குள்ள உதறல் எடுத்த போது... நடுப்பற இருந்த நான் பவித்ராவுக்கும் அவனுக்கும் மட்டும் கேக்கிறா மாதிரி "உன்னோட டெந்த் பரீட்சையை நான் எழுதித்தரேன்"னு பாதி காத்து கலந்த குரல்ல உறுதிமொழி கொடுத்தேன்..... எந்த நேரத்துலேயும் நேர்மையா இருந்த நான் தவறி கீழ விழ ஆரம்பிச்ச தருணம்...
"ஒன்னுமில்லை பெரியப்பா... பவிக்கு ஏதோ டௌட்டாம்.. செமஸ்டர் வருதாம்... அதான் கலையைக் கூப்பிட்டுவரச்சொன்னா.. க்ளீயர் பண்ணிட்டான்.. அவ்ளோதான்."ன்னு திக்கித்திணறிப் பேசிட்டு அந்த இடத்தை விட்டுப் பறந்துட்டான்.
பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சு ஒரு நாள் ஆத்தங்கரை ஓரமா சைக்கிள்ல போயிக்கிட்டிருந்தேன். கங்கா எதிர்த்தாப்ல வந்தான். உன்னோட பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஒண்ணு குடுன்னு உரிமையாக் கேட்டான். ஹால்டிக்கெட்ல ஒட்டறத்துக்காகன்னு எனக்குப் புரிஞ்சுது. வாயைத்தொறக்காம வீட்டுக்குப் போயி என்னோட பொட்டியில இருந்த டைரிலேர்ந்து எடுத்துக் கொடுத்தேன். நாட்கள் ஓடிச்சு... பேப்பர்ல பரீட்சை தேதி போட்டுட்டாங்க... நான் தயார் பண்ண ஆரம்பிச்சேன்... ஃபெயிலாகாமலே பத்தாவது திரும்பப் படிச்சவன் நான் ஒருத்தனாத்தான் இருக்க முடியும்.. விதி.. இதுவும் விதிதானே...
பரீட்சைக்கு கும்பகோணம் சக்ரபாணி படித்துறைப்பக்கத்துல இருந்த கார்போரேஷன் ஸ்கூல்தான் சென்டர். பரீட்சை இருக்கும் நாளெல்லாம் நான் திருச்சிலேர்ந்து கும்மோணம் வந்து எழுதிக்கொடுத்துட்டு திரும்பவும் காலேஜ் போவணும். தமிழ் இங்கிலீஷ் எழுதிட்டேன். சயின்ஸ் பரீட்சையன்னிக்கி பத்து நிமிஷம் லேட். ஸ்கூல் வாசல்லயே கங்கா நின்னுக்கிட்டிருந்தான். முறைச்சுப் பார்த்தான். எனக்கு கடுப்பாயிடிச்சு... இருந்தாலும் வாக்கைக் காப்பத்தனும்னு ஒரு கொள்கையில அன்னிக்கும் நல்லபடியா எழுதிட்டேன்.
மாத்ஸ் பரீட்சையன்னிக்கி பரீட்சை ஹாலுக்குள்ள நுழையும்போதே அந்த இன்விஜிலேடர் என்னை ஒரு மாதிரியா பார்த்தாரு. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயி... நா மாட்னுக்கு என்னோட பெஞ்சுல உட்கார்ந்து கணக்கு போட ஆரம்பிச்சேன்.... பாதி கொஸ்டின் பேப்பர் முடிச்சுட்டேன்.. திடீர்னு பார்த்தா என் பக்கத்துல ரெண்டு பேர் வந்தாங்க.. ஃப்ளையிங் ஸ்குவாட். பிட் அடிக்கறவங்களைப் பிடிக்கறத்துக்கான டீம். எந்திரிச்சு நின்னேன். அவங்க சட்டை பேன்டெல்லாம் பிட் இருக்கான்னு தொட்டுப் பார்க்கலை.... எனக்கே ஆச்சரியமாப் போச்சு... "தம்பி உன் பேப்பரைக் கொடுத்துட்டு அப்படியே ஜீப்ல ஏறு"அப்டீன்னு ஒரு மொட்டையடிச்ச ஆஃபீஸர் சொன்னாரு. "ஏன்?" அப்டீன்னு கேட்டேன். பின்னாடி தாட்டியா இருந்த ஒருத்தரு "எண்பத்தெட்டுல நீ தான் இந்த மாவட்டத்திலேயே பத்தாவதுல முதல் மார்க். உன்னோட ஃபோட்டவெல்லாம் பத்திரிக்கையில வந்திருக்கு. மூணே வருசத்துல திரும்பவும் பத்தாவது எழுதிரியே... இது நியாயமா?"ந்ன்னு என்னை ஜீப்ல ஏத்துனத்துக்காண காரணத்தைச் சொன்னாரு.. நான் உறைஞ்சுபோயிட்டேன்.
என் கண் முன்னாலயே நான் கண்ட கனவெல்லாம் சிதறிப்போயி... ஆள் மாறாட்டத்துல புக் பண்ணி உள்ள தள்ளீட்டாங்க்க.. அப்பாவும் அம்மாவும் ஜெயிலுக்கு வந்து கதறினாங்க... அம்மா மூஞ்சிய என்னால ஏறெடுத்தப் பார்க்க முடியலை... அவங்க அழற சத்தம் என் இதயத்தை அறுத்துப்போட்டுச்சு.. நா தப்பே பண்ணாம இருந்தேன்.. ஆனா அதுக்கு பரிசா ஜெயில் தண்டனை.. சரி இனிமே தப்பு பண்ணீனா என்ன அப்டீன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.. ரெண்டு வருஷத்துல வெளிய வந்துட்டேன்.
பழி தீர்க்க மனசுக்குள்ள கொலவெறி வந்துச்சு... ஆனா நா இயல்பிலேயே சாத்வீகமான ஆளு... அப்படியே அடக்கிக்கிட்டேன். திருச்சிக்குப் போனேன். பிஷப்ல என்னை வெளியே துரத்திட்டாங்க... காலேஜ் படிப்பு ஒரு வருஷத்தோட நின்னுபோச்சு... என்ன பண்றதுன்னு தெரியலை... வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.. தற்கொலை பண்ணிக்கலாமான்னு பார்த்தேன்.. காவேரில உழுந்து போய்ச் சேர்ந்துடலாம்னு நினைச்சு.. பாலத்தோட கட்டையில ஏறி நடுராத்திரி நின்னுக்கிட்டிருந்தபோது.. என் காலைப் பிடிச்சு யாரோ இழுத்தாங்க... "விடுங்க.. நீங்க ஏன் என்னை நிப்பாட்டினீங்க.."ன்னு கோபமாக் கேட்டேன்.. அதுக்கு அவரு... "எப்படி பிறக்கறத்துக்கு நீங்க சுயமா விருப்பப்டலையோ... அதுமாதிரி சாகறத்துக்கும் நீங்களா விருப்பப்படக்கூடாது"ன்னு உபதேசம் பண்ணீனாரு.. கடுப்பாயி "போடா ..யிறு" ன்னு திட்டினேன். அதே பாலக்கரையில.. தலை கோதுற காத்து அடிக்க...பக்கத்துல உட்கார்ந்துகிட்டு ஒரு மணி நேரம் தத்துவார்த்தமாப் பேசினாரு.... அதை அட்வைஸ்னு சொல்றதா.. இல்லை அவரோட அனுபவம்னு சொல்றதான்னு தெரியலை.. ஆனா அந்த நேரத்துக்கு ரொம்பவும் பிடிச்சிருந்திச்சி...
அவருதான் புகழு. ரெண்டு பேரும் பேசிக்கிட்டே நடந்து போனோம். எங்கேன்னு அவருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. என்னோட வாழ்க்கையில நடந்தெல்லாம் அவர்கிட்டே ஒப்பிச்சேன். ரொம்ப வருத்தப்பட்டாரு. ஒண்ணு ஒண்ணா போயிக்கிட்டிருக்கிற பஸ் காரெல்லாம் கூட குறைஞ்சு போய்.. மெயின் ரோடு ஹோன்னு கிடந்தது... "பசிக்குதா?"ன்னு கேட்டாரு. சொல்லமுடியாம சோம்பலா நடந்தேன்... ஒரு ரோட்டோர ராத்திரிக் கடையில முட்டை புரோட்டா வாங்கிக் கொடுத்தாரு.. கையில கையடக்கமா ஒரு இங்கிலீஷ் புக் வச்சிருந்தாரு..."இது என்ன புக்கு?" ன்னு கேட்டேன். "மஹாராஜா" ன்னு சொல்லிட்டு சிரிச்சாரு.. நம்பளை கிண்டல் பண்றாரு போல்ருக்குன்னு நினைச்சு எனக்கு வெட்கமாயிடிச்சு. அப்புறம் அவரே "இது திவான் ஜர்மானி தாஸ்னு ஒருத்தர் எழுதினது.. நம்ம நாட்ல கடைசி காலத்துல வாழ்ந்த ராஜபரம்பரை ஆட்கள் எப்படி இருந்தாங்கன்னு எழுதியிருக்காரு.. நாமதான் ராஜாவா இல்லை.. அட்லீஸ்ட் மக்கள் எப்படி இருந்தாங்கன்னு படிச்சு மனசை தேத்திக்குவோம்ன்னு" புக்கை வானம் பார்க்கத் தூக்கிப்போட்டுப் பிடிச்சு "பஹா.. பஹா.."ன்னு சிரிக்கிறாரு..
வாங்க போங்கன்னு கூப்பிட்டுக்கிட்டிருந்த என்னை மறு நாள் காவிரில குளீச்சுட்டு கரையேறும் போது "என்னை நீ புகழ்னே கூப்பிடலாம்.. உன் வயசுதான் எனக்கும்.."ன்னு தோள்ல கையைப் போட்டாரு... எங்கியோ பாங்க்ல கொள்ளையடிச்சா மாதிரி அவரு பாக்கெட்டுல கரன்ஸி நிறையா புடைச்சுக்கிட்டு இருந்திச்சு... இப்படி ரோட்டுல சுத்திக்கிட்டிருக்கிற ஆளுகிட்டே ஏது இவ்ளோ பணம்னு கேட்க மனசுக்குள்ள எண்ணம் தோனினாலும்... வேண்டாம்னு விட்டுட்டேன்.. திருச்சி மலைக்கோட்டைக்கு போனோம். பக்தர்களும் பார்வையாளர்களும் பருவத்துடன் ஒதுங்கியவர்களூமாக கூட்டம் இருந்தது. நாங்களிருவரும் உச்சிப்பிள்ளையாரைப் பார்த்துட்டு இறங்கி வரும் போது.....
அவதானா?... ம்... அவளேதான்.. பவித்ரா. சகஜமா யாரோ ஒருத்தன் இடுப்பை வளைச்சு கையைப் போட்டிருந்தான்... குலுங்கிச் சிரிச்சுக்கிட்டுப் போனா.. அவனோட கையும் கண்ணும் கெட்ட காரியத்துக்காக துடிக்கறது தெரிஞ்சுது.. அவ என்னைப் பார்த்த மாதிரியுமிருன்ந்தது பார்க்காத மாதிரியும் இருந்தது... அப்போ புகழு என்னைக்கேட்டாரு.. "உன்னோட டாவா அது கலை?"... "இல்லீங்க... அதுதான் உங்ககிட்ட நான் சொன்ன என்னோட கதையின் ஹீரோயின்... நா லவ் பண்ணாத ஹீரோயின்."ன்னு சொன்னேன்..
மனசை கிளறிவிட்டுட்டா... ப்ளேடு போட்டுக் கீறி ரணமாயிருந்த நெஞ்சு எரிய ஆரம்பிச்சிடுச்சு.. என்னவோ அவ மேல கோவம் பொத்துக்கிட்டு வந்திச்சு..... அன்னிக்கி அவ மட்டும் என்னை கீழ தள்ளி மேலே சாயாம இருந்திருந்தா... இப்படி நா ரோடு ரோடா நாய் மாதிரிக் கேவலமா அலையவேண்டியதில்லையேன்னு ஒரு சுயகழிவிரக்கம் என் மேலே படர்ந்திச்சு..,, பழி வாங்கிடலாமான்னு பிபி ஏறிச்சு..... இவதானே அந்த பரீட்சை எழுதற கேவலமான யோசனை கொடுத்தது.. "சரி வா போவலாம்"ன்னு புகழு என் கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுக் கிளம்பிட்டாரு...
அன்னிக்கி ராத்திரி சத்திரம் பஸ்ஸ்டான்ட் பக்கத்துல ஒரு லாட்ஜ்ல புகழோட தங்கினேன். பத்து மணிக்கு மேலே "ஃபேமிலி" கேர்ல்ஸ் நடமாட்டம் ஜாஸ்தியாயிருந்தது. ஹோட்டல் காரிடாரெங்கும் மல்லி வாசனை. ஊர்ல பேச்சியம்மன் கோயில் வாசல்ல திரிஞ்சிக்கிட்டிருக்கும் ஆண்டி ஞாபகம் வந்திச்சி.. அவரு "எத்தனை பேர் தொட்ட முலை.. எத்தனை பேர் நட்ட குழி.. எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்...உய்யடா உய்யடா உய்...."ன்னு சத்தமா பட்டினத்தார் பாட்டைப் பாட்டும் வசனமுமாப் பேசுவாரு .... கவர்மென்ட்ல உசந்த பதவில இருந்தாராம். அவரோட பொண்டாட்டி இவரை விட்டுட்டு ஒரு க்ளார்க்கோட ஓடிடிச்சாம்.... ஊர்ல பல பேரு அவருக்கு மிச்சம் மீதி இருக்கிற சாப்பாட்டை போடுவாங்க... அடிக்கடி "பேய்ச்சுரைத் தோட்டம்.. பேய்ச்சுரைத் தோட்டம்"ன்னு மந்திரம் மாதிரி சொல்லுவாரு.. "சித்தம் கலங்கிப்போச்சு.."ன்னு ஊர்ல பேசிப்பாங்க.. பிஷப்ல சேர்ந்தவுடனே லைப்ரரில பட்டினத்தார் பாடல்கள் எடுத்துப் படிச்சப்போதான் பேய்ச்சுரைத் தோட்டம் புரிஞ்சுது.. இப்போ உய்யடா உய்யடா உய்க்கு அர்த்தம் புரியுது...
எனக்குத் தூக்கம் வரலை. வாழ்க்கையை தொலைச்சவனுக்கு தூக்கம் வருமா? அந்த ஹோட்டல் மொட்டை மாடியில போய் தனியா உட்கார்ந்திருந்தேன். ஊர் மெல்ல அடங்கியிருந்தது. புகழ் பின்னாடி வந்தாரு...கிங்ஸ் எடுத்து உதட்டுல சொருகி பத்த வைக்கும் போது அந்த வெளிச்சத்துல என்னைப் பார்த்தாரு.. கண்லேர்ந்து தண்ணியா வந்துக்கிட்டிருந்ததைப் பார்த்துட்டு... "ஆம்பளை அழக்கூடாது கலை... எல்லார் வாழ்க்கையிலும் வசந்தமும் வரும்.. வறட்சியும் வரும்.. யாருக்கு பாதை மாறிய பயணம் வரும்ன்னு முங்கூட்டியே தெரியும்? மரவட்டை தரையில ஊர்ந்து போயிட்டிருக்கும். ஒரு குச்சியை வச்சு திருப்பி விடு.. திருப்பிவிட்ட திசையில விடுவிடுன்னு போயிட்டிருக்கும்.. எந்த நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்னு போராடரவந்தான் உண்மையான மனுஷன்.. " இப்படி பேச ஆரம்பிச்சு கீழ்வானம் வெளுக்கற வரை.. விடிய விடிய.. நிறையா அட்வைஸ் பண்ணினாரு.... அப்பதான் பவித்ராவை க்ளோஸ் பண்ணிடலாம்னு திட்டம் போட்டோம்.
திருச்சிலேர்ந்து காலையில கிளம்பி தஞ்சாவூர் வந்துட்டோம். சாயந்திரத்துக்கு மேலே ஆடுதுறைக்குப் போகலாம்ங்க்கிறது திட்டம். பெரியகோயில் பிரகாரத்துல கொஞ்ச நாழி படுத்து பொழுதைக் கழிச்சோம். வெள்ளைக்காரங்க சில பேர் காமிராவும் கையுமா கோயிலை படுத்தும் உட்கார்ந்தும் மண்டி போட்டும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டிருந்தாங்க... சிற்பக்கலை ரசிக்க வந்த ஆட்களுக்கு அங்கொரு கலை சீரழிஞ்சு போய் கிடக்கிறது தெரியணும்னு எதிர்ப்பார்க்கிரது நியாயமில்லை... புகழ் விடிய விடிய முழுச்சிக்கிட்டு எனக்கு உபதேசம் பண்ணினதால ட்யர்ட் ஆகி தூங்கிட்டான். எனக்கு க்ண்ணு மூடமாட்டேங்குது.. இப்படி எல்லாத்தையும் இழந்துட்டோமேங்க்கிற துக்கம்...
புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருக்கும் போது வாசல்ல அகழி தாண்டி ரெண்டு பேரு கை கோர்த்துக்கிட்டு போறது தெரிஞ்சுது.. பின்னாடிலேர்ந்து பார்த்தாக்கா.. ஆமாம்.. பவித்ரா மாதிரி தெரிஞ்சுது.. எனக்கு அவதானான்னு பார்க்கணும்னு ஒரு உந்துதல்... புகழை டிஸ்டர்ப் பண்ணாம எந்திரிச்சு தொடர்ந்தேன். முதல்ல கை கோர்த்திருந்த பய.. பழைய பஸ்ஸ்டான்ட் கிட்ட ப்ளாட்பாரம்ல நடக்கும் போது அவனோட கையை தாராளமா அவளோட பின்பக்கமெல்லாம் எல்லா இடத்துலையும் புரள விட்டான்... கொச்ச புடிச்ச பய... கிச்சுகிச்சு மூட்டறா மாதிரி எல்லா காரியமும் செஞ்சான்... நாயினும் கடையன்னு சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன்னை சொல்லிப்பாராம்.... மண்டைக்குள்ள ரெஃபரன்ஸ் எங்கல்லாமோ போவுது... அப்பேர்ப்பட்ட உத்தமமான மகானே நாயினும் கடையன்னு தன்னைச் சொல்லிக்கும்போது.. நாமெல்லாம் எம்மாத்திரம்.. அப்புறம் இந்தப் படுபாவிய என்னான்னு சொல்றது..
இன்னமும் அவளோட முகத்தைப் பார்க்கலை.. ரெண்டு பேரும் ஒரு ஜூஸ் கடையில சர்பத் வாங்கிக் குடிச்சாங்க.. நானு ரொம்ப பக்கத்துல போயி சிகரெட் வாங்கினேன். ச்சே.. ச்சே.. எனக்கில்லை.. புகழுக்கு.. எனக்கு தண்ணி சிகரெட்டு பழக்கமெல்லாம் கிடையாது. "களுக்"குன்னு சிரிச்சிகிட்டே வாயை ஸ்டராவில் வச்சு உறிஞ்சும் போது பக்கவாட்டுல அவளைப் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் மெருகு ஏறியிருந்தா.... உடம்பு ரசமேறிப் போயிருந்தது... தலைக்கு ஜாதியை சரமா தொங்கவிட்டிருந்தா... இப்போ ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டிருக்கணும்... பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த பயல பார்த்தா காட்டான் மாதிரி இருந்தான்... கையில கழுத்துல வடம் வடமாத் தங்கம் மின்னிச்சு. வால் க்ளாக்க கைக்கடிகாரமா சுருட்டிக் கட்டியிருந்தான். உடம்பெங்கும் புசுபுசுன்னு புதர் மாதிரி ரோமம். காதோரத்துல நீட்ட நீட்டமா ரோமம் ராட்சதர்களுக்குதான் மொளைக்கும்ன்னு புகழு எதோ சாமுத்ரிகா லட்சணம் புக்குல படிச்சிருந்ததா பஸ்ல வரும்போது சொல்லிக்கிட்டிருந்தான்.
பின்னாடியே புகழும் என்னைத் தேடிக்கிட்டே அங்கே வந்து சேர்ந்துட்டான். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினோம். அவங்க ரெண்டு பேரும் சாந்தி தியேட்டருக்குப் போனாங்க. மாட்டனீ நாடோடித் தென்றல் ஓடிக்கிட்டிருந்தது. கொஞ்ச தூரம் தள்ளி ஒரு பார்ல உட்கார்ந்திருந்தோம். புகழு பீர் குடிச்சான். "கலை.. பச்சாதாபம் பார்க்காதே... அவளாலதானே நீ சீரஞ்சே... கொன்னுடு..". வேர்க்கடலை கொண்டு வந்து வச்ச ட்ராயர் பையன் காதுல கொன்னுடுங்கிறது கொண்டு வான்னு விழுந்துடுச்சு... "இன்னும் என்ன சார் கொண்டுவரணும்?"நு சிரிச்சான். பதிலுக்கு நாங்களும் சிரிச்சோம்.... ரொம்பவே உபதேசம் பண்ற புகழுக்கு ஏன் இத்தனை கொலை வெறி? எனக்கு ஆச்சரியமா இருந்திச்சு.. கேட்டாக்க யாராவது பொண்ணை லவ் பண்ணி அது கடைசியில "அண்ணா"ன்னு பாசமாச் சொல்லி வேற ஒருத்தனைக் கட்டிக்கிட்டு குடித்தனம் பண்ணப் போயிடுச்சுன்னு அரதப் பழசான ஒரு லவ் துரோகிக் கதை சொல்லுவான்.. வேண்டாம்னுட்டு விட்டுட்டேன்... அப்புறம் என் கதை சொல்லிமுடிக்க லேட் ஆயிடும்...
சூரியன் இறங்கிடிச்சு. தூரக்க இருக்கிறவங்க நிழலாத் தெரியற அரையிருட்டுப் பரவத் தொடங்கின நேரம். கும்பகோணத்துக்கு பஸ் ஏறுவான்னு பார்த்துக்கிட்டிருக்கும் போது ஸ்லோவாத் திரும்பின பாட்டு வச்ச திருச்சி பஸ்ஸைக் கைகாட்டி ரெண்டு பேரும் தொத்தி ஏறிட்டாங்க.. அந்த பஸ்ஸை விட்டுட்டு பின்னால வந்த இன்னொரு அரசாங்க பஸ்ல நாங்க ஏறினோம். தனியார் பஸ் வேகமாப் போவும். பவியை மிஸ் பண்ணிடுவோமோன்னு பயம். இப்போ மிஸ் பண்ணீடுவோமோன்னு எப்படி ஃபீல் பண்றேன் பாருங்க.. கெட்டத்துக்குன்னா மனசு சுலபமா ட்யூன் ஆயிடுது. தமிழ்ப் பல்கலைக் கழகம் வாசல்ல ட்ராஃபிக் ஜாம். ரெண்டு பஸ்ஸும் பின்னுக்குப் பின் நின்னுக்கிட்டிருந்துச்சு. ரெண்டு பேரும் குதிச்சு இறங்கி ஓடிப் போயி பவித்ரா பஸ்ல ஏறிக்கிட்டோம். ஒரு நல்லவன் கெட்டவன் ஆவறத்துக்கான பிரயத்தனமாப் பட்டது என்னோட அந்த நடவடிக்கை.
பஸ்ஸு நெடுஞ்சாலையில உறுமிக்கிட்டே போய்க்கிட்டிருக்கு. என்னோட மனசு ஆடுதுறைக்கு பயணமாயிடிச்சு. ட்ராயர் போட்டுக்கிட்டு கிட்டிப்புல் விளையாடினது.. அம்மாவோட முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு தூங்கினது... அப்பா துன்னூறு இட்டுவிட்டு "நல்லா படி தம்பீ" சொன்னது... ஆத்துல டைவ் அடிச்சு ஆட்டம் போட்டது...பொங்கலுக்கு என் உயரத்துக்கு கரும்பு வெட்டி பல்லால கடிச்சித் தின்னது... இப்படி நல்ல காரியமா வந்துக்கிட்டிருந்தது... கடேசில பவி எம்மேல கிடக்கிற சீன்ல வந்து குத்துக்கிட்டி நின்னுச்சு.. நெஞ்சு வலிச்சுது. பக்கத்துல புகழு தூங்கிக்கிட்டிருந்தான்.
துவாகுடில பஸ் நின்னபோது.... முன்னாடி முண்டியடிச்சுக்கிட்டு ஒரு கும்பல் ஏறிச்சு. வெளிய வேடிக்கைப் பார்த்துட்டு திரும்பறேன்.. ட்ரைவர் சீட்டுக்குப் பின்னாடி பவித்ராவைக் காணலை. "புகழு... அவ இறங்கிட்டா..."ன்னு உலுக்கினேன். ஸ்டாப்லேர்ந்து கிளம்பின பஸ்ஸைவிட்டு ரெண்டு பேரும் அவசராவசரமா இறங்கினோம். ரோட்டுக்கு அந்தப் பக்கம் போயிட்டு இருந்தாங்க... ஆமா.. கையோடு கையை கோர்த்துக்கிட்டு... கண்ணுல படும்படியா இடைவெளி விட்டுத் தொடர்ந்துக்கிட்டிருந்தோம்...
ஒரு சின்ன ஹோட்டல். "அறகள் வாடகைக்கு வீடப்படூம்"ன்னு தப்பான தமிழ்ல அழகா எழுதியிருந்தது. அந்த கட்டிடமே தப்புக்கு துணையா நிக்கும்ங்கிற லக்ஷணத்துல மங்கலான வெளிச்சத்தோட இருந்தது. அவன் அதுக்குள்ள போனான். பவித்ரா சுத்திலும் வேடிக்கை பார்த்துக்கிட்டு சங்கடமா வாசல்லயே நின்னா. புகழு "கலை.. முன்னாடி போ.. உன்னைப் பார்த்ததும் ஆச்சரியப்படுவா... அந்த இடத்துலேர்ந்து அவளை நகர்த்திடு.. அப்புறம் பார்த்துக்கலாம்.."னு என்னை தூண்டிவிட்டான். திடுதிப்புன்னு நான் வந்து முன்னாடி நிப்பேன்னு பவித்ரா எதிர்ப்பார்க்கலை.. "க..க..க.."ந்ன்னு 'க'லேயே கபடி விளையாடினா.. "என்ன பவித்ரா இங்க?"ன்னு ஆச்சரியமாக் கேட்டேன். "என்னோட ஃப்ரென்ட் இங்கே இருக்கா..."ன்னு உளற ஆரம்பிச்சா... "இந்த ஹோட்டல்லயா?"ன்னு கேட்டேன். "ச்சே..ச்சே... இங்கே முருகப்பா நகர்ல.. அவள்ட்ட ஒரு நோட்ஸ் வாங்கணும்னு வந்தேன்". சுதாரிச்சா.... மூச்சு சீரா இல்லை.. பொய்னு அவளோட கண்கள் சொல்லிச்சு..
"நடந்துகிட்டே பேசலாமே"ன்னு அவளை மெதுவா அந்த ஹோட்டல் தாண்டி இடதுபக்கம் அழைச்சுக்கிட்டுப் போனேன். எங்களை புகழ் பின் தொடர்ந்துவந்தான். ஏற்கனவே ராத்திரி ஒன்பது மணி. ஊருக்கு உள்ளே போகும் அனாதையான ஒத்தை ரோடு. ரெண்டு பக்கமும் ராட்சச புளியமரம். யாராவது ஒன்னுரெண்டு பேர் டூவிலர்லயும் சைக்கிள்லயும் க்ராஸ் பண்ணி போயிக்கிட்டிருந்தாங்க... பவித்ரா அவனைத் தவிக்க விட்டு வந்துட்டோமேன்னு வருத்தப்பட்டது கண்ல தெரிஞ்சுது.. நா அதைக் கண்டுக்கலை...
அப்படியே வளைஞ்சு வளர்ந்த ரோட்டுல வலது பக்கம் பெரிய குளம் வந்தது. வட்டமும் சதுரமும் செவ்வகமுமில்லாத வடிவமில்லா ஒரு குளம். கொஞ்சம் பெரிய குட்டைன்னு வச்சுக்கோங்களேன்... பச்சைக் கலர்ல தண்ணி அசையாம இருந்தது. கரையில பாசி ஒதுங்கியிருந்தது. "உன்னோட கொஞ்சம் பேசணும்..." குளத்தாங்கரைக்குக் கூப்பிட்டேன். மறுப்பு சொல்லாம தலையைக் குனிஞ்சுக்கிட்டே வந்தா. நாங்க ரெண்டு பேரும் குளத்தை நெருங்கின இடத்துல விழுதுகளோட ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. மனுஷ நடமாட்டத்துல ஏதோ பறவைங்க சடசடத்து பறந்து போச்சு.
வெளிய தெரியாம இருக்க உள்ள இறங்கி குளத்துப் படிக்கட்டுல பக்கத்து பக்கத்துல உட்கார்ந்துகிட்டோம்.. "இதுமாதிரி ஆவும்னு நினைக்கலல்ல..."ன்னு பவித்ரா ஆரம்பிச்சா. எனக்கு பிபி எகிறிடுச்சு. "ஆமாடீ.. எல்லாம் உன்னாலதான்.." கொஞ்சம் சத்தமா பேச ஆரம்பிச்சேன். தலையைக் குனிஞ்சுகிட்டே உட்கார்ந்திருந்தா... "நா அப்படிப் பண்ணியிருக்கக்கூடாதுதான்... ஆனா உன்னை முதன்முதலா பார்த்தப்பவே ரொம்பவும் பிடிச்சிருந்திச்சு..." என்னன்னவோ பேசினா. எனக்குப் பிடிக்கலை. எப்படி அவளைக் கொன்னுட்டு தப்பிச்சுப் போகலாம்னு திட்டம் போட்டுக்கிட்டிருந்தேன்.
ஒரு பதினைஞ்சு நிமிஷம் போயிருக்கும். என்னை நிமிர்ந்து பார்த்தா. கண்ல தண்ணி குளம் கட்டி நின்னுச்சு... அம்மாவுக்கு அப்புறம் இன்னொரு பொண்ணு...இவ்ளோ பக்கத்துல உட்கார்ந்து தாரைதாரையாய் அழுது இப்பதான் பார்க்கிறேன்.. மனசுக்கு சங்கடமா இருந்திச்சி.. அப்ப அவ ஒரு புது கதை சொன்னா...
"கலை... ஊர்ல என்னோட அம்மாவா இருக்கிறது ஒரு துரோகி...பிசாசு... அவ அம்மாவே இல்ல... அதைவிட அவ ஒரு பொம்பளையே இல்ல...." எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்திச்சி... "என்ன சொல்ற?"ன்னு முறைச்சேன். "ஆமா கலை... சின்ன வயசுல நானு பம்பாய்ல இருந்தேன். பொட்டும் பூவுமா எங்கம்மா சினிமால வர்ற அம்மன் மாதிரி இருப்பாங்க.. அப்பா அங்க ஃபைனான்ஸ் பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தாரு.. இங்க தாத்தாகிட்டே கோச்சுக்கிட்டு சின்ன வயசுலேயே மும்பாய் ஓடிவந்தவரு... லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. ஒரு பெரிய தொகை அங்க ஒருத்தங்கிட்டே மாட்டிக்கிச்சு.. அவனை உருட்டி மெரட்டி காசு வாங்க அப்பா ட்ரை பண்ணிக்கிட்டிருந்தாரு.. அதுலேர்ந்து தப்பிச்சுக்க இவளை ஆசை காமிச்சு மயக்கி எங்கப்பாவுக்கு கட்டி வச்சுட்டாங்க.." புகழு என்ன ஆனான்னு தெரியலை. இப்பவே மணி பத்து மணிக்கு மேலே இருக்கும். இவளை அழைச்சுக்கிட்டு வந்த காட்டானுக்கு என்ன ஆச்சு? இவ கதையை எப்ப முடிப்பா? ஏன் நாம இதைக் கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கோம்? பல கேள்விகள் ஒண்ணு பின்னாடி ஒண்ணா எழுந்து மூளையை நிரப்பிடிச்சு...
"ஒரு நா ராத்திரி எட்டு மணி இருக்கும். அம்மா எனக்கு ஹோம் வொர்க் சொல்லிகொடுத்துக்கிட்டிருக்கும் போது எங்கப்பா மாலையும் கழுத்துமா இவளோட வந்தாரு. நானு அப்போ எட்டாவது படிச்சுக்கிட்டிருந்தேன். வந்தவ எங்கம்மாவை நிம்மதியா இருக்கவிடலை. தெனமும் சண்டை. என்னால ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்த முடியலை.. அப்பா கொஞ்சம் கொஞ்சமா குடிக்கு அடிமையானாரு... எனக்கு வீடே நரகமாயிட்டுது... இந்த சமயத்துல டெல்லியில யார்கிட்டயோ ஃபைனான்ஸுக்கு பணம் வாங்க எங்கப்பா போனாரு. ஒரு மத்தியான நேரம். வெளியே மழை பொளந்துகட்டுது." சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டே போறா.. எப்போ முடிப்பான்னு தெரியலை. இப்ப இவளைக் கொல்ல வந்ததையே நா மறந்துடுவேன் போலருக்கு...
"என்னிக்குமில்லாத திரு நாளா எங்கம்மாகிட்டே குழைஞ்சு பேசினா இவ. காய்கறி மார்கெட் வரைக்கும் போய்ட்டு வரலாம்னு அழைச்சுக்கிட்டு போனா.. எனக்கு பரீட்சைக்காக ஸ்டடி லீவு. மத்தியானம் போனவங்க ராத்திரி ஏழு மணி வரைக்கும் வரலை. ரொம்ப டென்ஷனாயிடிச்சு.. பத்து மணிக்கு இவ மட்டும் திரும்பி வந்தா.. "அம்மா வரலை?.." ன்னு பதபதைப்போட என்னைக் கேள்வி கேட்டா. எனக்கு பகீர்னு ஆயிட்டுது. அவ நாடகம் போடறான்னு புரிஞ்சுது... உன் கூடதானே வந்தாங்கன்னு சண்டை போட்டேன்.. பதிலுக்கு என்னைத் திட்டிட்டு படுத்து தூங்கிட்டா.. அவ மேல எனக்கு சந்தேகம். எங்கப்பா வர்றத்துக்கு ரெண்டு நாளு ஆச்சு.. அம்மாவைக் காணாம அழுது அழுது என் கண்ணுரெண்டும் வீங்கிப் போச்சு... சோறுதண்ணி இறங்கமா அவருக்காகக் காத்திருந்தேன்... வந்தவர்கிட்டே ஏதோ பொய் சொல்லி பசப்பி சபலம் காட்டி எங்கம்மா யார் கூடவோ சேர்ந்து ஓடிப்போயிட்டான்னு கதையை முடிச்சுட்டா.. என்னோட வலி உனக்கு புரியுதா? அப்புறம் அப்பாவுக்கு ஃபைனான்ஸ் நொடிச்சுப் போயி ஊருக்கே விவசாயம் பண்ணலான்னு வந்தபோது.. தாத்தா கூட ராசியாகி.. பதினொன்னாவதுல நா அங்கேயே வந்து சேர்ந்து.. மத்ததெல்லாம் உனக்கும் தெரியுமே"
உணர்ச்சி வேகத்துல அவ பேசி முடிச்சா.. புகழு பவியைக் கொல்லலாம்னு சொன்னதெல்லாம் மறந்து போயி எனக்கு வேற மாதிரி சபலம் தட்டிச்சி... அவளை நான் கட்டிப்புடிச்சு... நெத்தியில முத்தம் கொடுத்து... சினிமாவுல வர்றா மாதிரி பாக்கெட்டுலேர்ந்து தாலிக்கயிறை எடுத்துக் கட்டி... ஒரு சிட்டிகை குங்குமமெடுத்து உச்சித் திலகமிடறா மாதிரி கண்ணைத் தொறந்துக்கிட்டே கனா கண்டுக்கிட்டிருந்தேன். அப்போ எங்கிருந்தோ மின்னல் மாதிரி அந்த காட்டான் வந்தான். இடுப்புல இருந்த பிச்சுவா கத்தியை எடுத்து என் கண்ணு முன்னாலயே.. அதை எப்படி சொல்வேன்.. என் கண்ணு முன்னாலயே... பவித்ராவை சரமாரியா வாயிலேயும் வயித்திலேயும்... "யு பிட்ச்.. யு ஸ்கௌன்ட்ரல்.... என்னை ஏமாத்திட்டியேடீ"ன்னு திட்டிக்கிட்டே.. சதக் சதக்ன்னு சரமாரியாக் குத்தறான்... எனக்கு மூச்சு வாங்குது..ஆடிப்போயிட்டேன்... சுதாரிச்சு "டேய்.. நிறுத்துடா"ந்னு அவனைப் பிடிக்க நா கெளம்பும்போது அவன் கத்தியை குளத்துக்குள்ளே வீசி எறிஞ்சிட்டு ஓட ஆரம்பிச்சான்.
பதினோறு மணிக்கு மேலேயே இருக்கும். அவன் நூறு மீட்டர் முன்னாடி ஓடிக்கிட்டிருக்கான். பின்னால நானு. ரெண்டு தெரு திரும்பினவுடனே ஒரு பாழடைஞ்ச வீட்டு வாசல்ல புகழ் கையில தம்மோட உட்கார்ந்திருந்தான். நா ஓடி வர்றதைப் பார்த்துட்டு அவனும் தொரத்த ஆரம்பிச்சான். அவன் வளைஞ்சு வளைஞ்சு கோகோ விளையாடறா மாதிரி ஓடறான். ஆளில்லா தெருவெல்லாம் தாண்டி மெயின் ரோட்டுக்கு வந்துட்டான். அவனைப் புடிக்கவே முடியலை. காத்தா போயிட்டான்.. ஸ்பிர்ன்டரா இருப்பான் போல்ருக்கு...
"கலை.. வர்ற பஸ்ல ஏறிடு.. நாம மெட்ராஸ் போயிடுவோம்.. இங்க நின்னாக்க மாட்டிப்போம்"ந்ன்னு புகழு தூண்டினான். ஏதோ ஒரு பஸ்ஸு காத்து வாங்கிக்கிட்டு வந்திச்சு. ஏறினோம். தூங்கினோம். விடிய விடிய திருச்சிலேர்ந்து கிளம்பி மறு நாள் மத்தியானம் மெட்ராஸ் வந்துட்டோம். ட்ரிப்ளீக்கேன்ல ஒரு மான்ஷன்ல புகழோட புகலிடம். அவந்தான் அந்த நட்சத்திர ஹோட்டல்ல பார் டென்டர் லீடர். மேனேஜர்ட்ட சொல்லி எனக்கொரு வேலை வாங்கிக்கொடுத்தான். பார்த்தீங்களா? தண்ணியடிக்காதவன், சிகரெட் பிடிக்காதவன்... பொம்பளைங்களை ஏறெடுத்துப் பார்க்காதவன்.. என்ன நிலைமைக்கு ஆயிட்டேன்... திரும்பவும் உய்யடா..உய்யடா..உய்..ன்னு யாரோ இடுப்புல காவித் துண்டோட சூட்சுமமா எதிர்க்க நின்னு கூப்பாடு போடற மாதிரியே இருக்குதுங்க.."
பவித்ரா கொலை கேஸு இன்னும் முடியலை. நேத்திக்கு தந்தியில விசாரணை நடக்குதுன்னு நாலு காலம் நியூஸ் போட்ருக்குது.. இன்னிக்கி உங்க கிட்ட சொன்ன இந்தக் கதையை யார்ட்டேயும் சொல்லிடாதீங்க.. என்னை திரும்பவும் உள்ள போட்டுடுவாங்க.... ஆள் மாறாட்டம் செய்தப்பவும் எம் மேலே தப்பில்லை.. இப்பவும் நானொன்னும் கொலை செய்யலை.. என்னைப் போட்டுக்கொடுக்காம இருக்கிறத்துக்கு மனமார்ந்த நன்றி!
முற்றும்.

நாரதரின் பூலோக பேங்க் அக்கௌன்ட்

”நீங்கள் ஹாயாக சயனித்து பாற்கடலில் தெப்பம் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.. பூலோகத்தில்... பரதக் கண்டத்தில்.... பூராப் பயலும் நாறிக்கொண்டிருக்கிறான்... கரன்ஸியை கலர் ஜெராக்ஸ் எடுத்து மார்க்கெட்டில் விடுகிறான்கள்... ” என்று புலம்பி தம்பூராவின் பிரம்பு அறுந்து போகும்படி மீட்டிக்கொண்டே வைகுண்டத்திற்குள் நுழைந்தார் நாரதர்.
”ஏனப்பா? என்னவாயிற்று?” கண்களில் கவலை மிதக்கக் கேட்டார் நாராயணன். அவருக்குப் படுக்கையான ஆதிசேஷன் இருமுறை நாக்கைத் துருத்தி நாரதரை வினோதமாகப் பார்த்தான்.
“சந்தெங்கிலும் ஏடியெம் வாசலில்... போலீஸ் காவல் காக்கும் வங்கிகளின் வாயிற்படி இடுக்குகளில்... என்று கிடந்து திண்டாடுகிறான்...சாவுறான்கள்..”
“வசவசவென்று நீட்டிமுழக்காமல் விஷயத்தைச் சொல்....”
“எல்லாம் கறுப்புப் பண விவகாரம் ஸ்வாமி.. “
”அதென்ன கறுப்புப் பணம் நாரதா? விளங்கவில்லையே... நீதான் திரிலோக சஞ்சாரியாயிற்றே... சரியாகச் சொல் பார்க்கலாம்..”
”உங்கள் காலடியில் ஒரு தேவி அமர்ந்து கால் அமுக்கி விடுகிறார்கள் அல்லவா? அவர்களிடமே கேளுங்களேன்.. அவர்கள் தானே சர்வசெல்வங்களுக்கும் அதிபதி....வெள்ளைக்கும் கார்மேக வண்ணனாகிய உம்மைப்போன்ற கறுப்புக்கும் வித்யாசம் தெரியும்”
”என் செல்ல ஸ்ரீ... அதென்ன கறுப்புப் பணம் டார்லிங்...”
“கணக்கில் காட்டாத பணம் கறுப்புப் பணம்” என்று ஷார்ட்டாக முடித்துக்கொண்டார் திருமகள். அறிதுயில் ஆளுக்குச் சொல்ல விருப்பமில்லை.
ஊஹும். திருமாலுக்குத் திருப்தியில்லை.
“கணக்கில் என்றால்? யார் கணக்கில்? குபேரனுடைய கணக்கிலா.. உன் கணக்கிலா?.. என் கணக்கிலா?... இல்லை காந்தி கணக்கிலா?” என்று சரமாரியாய்க் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
”இதோ இந்த நாரதனுக்கு மாசம் ஆயிரம் பொன் சம்பளமாகத் தருகிறீர்கள்... அதில் இருநூறு பொன்னை எடுத்து அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு, எண்ணூறுதான் பெற்றுக்கொண்டேன்..... என்று தேவலோக கஜானாக்காரர்களுக்கு கணக்குக் கொடுத்தால்.. அந்த இருநூறு கள்ளப்பணம்.. கறுப்புப் பணம்.”
“யார் கணக்குக் கொடுத்தால்.. கொடுக்கும் நானா... வாங்கும் அவனா”
“இரண்டு பேருமே... யார் செய்தாலும்... ஆயிரம் தருகிறேன் என்று கணக்கெழுதிவிட்டு.. எண்ணூறு கொடுத்துவிட்டு உம் மடியில் இருநூறை நீர் முடிந்து கொண்டாலும்.... அல்லது எண்ணூறுதான் பெருமாள் கொடுத்தார் என்று நாரதன் இருநூறை அழுத்தினாலும்...”
“ஓஹோ... கலகம் செய்வதோடு.. இப்போதெல்லாம் கறுப்புப் பணமும் செய்கிறானா நாரதன்?”
“ப்ரபோ.அபச்சாரம்.. அபச்சாரம்... உங்களுக்குப் புரியவைக்க தேவி கொடுத்த எக்ஸாம்பிள் அது... அஷ்டாக்ஷ்ரத்தை விட பெருஞ்செல்வம் எனக்கேது? ஓம் நமோ நாராயணா.. ” தசாவதார அந்தரத் தொங்கு கமலாக ராகம் இழுத்தார் நாரத்.
“நாரதா.. சீன் போடாதே... நிறுத்து...” நாரதனுக்கு ஏக கடுப்பு. "அடப்போய்யா... கிடக்கு..." என்பது போல தம்பூராவில் ஒரு ஸ்ட்ரம்மிங் கொடுத்தார்.
”தேவி.. கறுப்புப்பணம் என்ற ஒன்று எதற்கு?”
“பொருளீட்டும் அனைவரும் ஒரு பங்கை வரியாக ராஜாங்கம் செய்யும் சர்க்காருக்கு செலுத்த வேண்டும். அதைக்கொண்டு பொதுக்காரியங்கள், சர்வஜன க்ஷேமத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவார்கள்... அந்த வரியைக் கட்டாமல் தங்களது அதீத சுயதேவைக்காக ஏய்த்துக் கறுப்புப் பணம் சேர்க்கிறார்கள்”
”ஏன் வரி கட்ட மறுக்கவேண்டும்? நல்ல காரியங்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டியதுதானே? உரிய நேரத்தில் கணக்கு தீர்த்து அவர்களை நாம் பரமபதம் அழைக்கும்போது கையில் ஒன்றுமில்லாமல்தானே இங்கே வரவேண்டும்?”
இப்போது நாரதன் இடை மறித்தான்.
”ஆம் ஸ்வாமி. இருந்தாலும் பூலோகத்தில் ஜீவித்திருப்பதற்கு எதற்கெடுத்தால் மால் வெட்ட வேண்டும்.. அந்தச் செலவுக்கு தாராளமாக காசு வேண்டுமே... ”
“என்னதுதிது? என்னை வெட்டவேண்டுமா?” திடுமென உருவிவிட்டது போல எழுந்து உட்கார்ந்துகொண்டார் திருமால்.
“ஓஹோ.. தவறாகப் புரிந்து கொண்டீர்கள்... மால் வெட்டுதல் என்றால்.. டப்பு கொடுக்கவேண்டும்.. கில்மா தள்ளவேண்டும்.... என்றும் சொல்வார்கள்...”
நாரதர் "ஹெஹ்" என்று கனைப்பது போலச் சிரித்தார். வைகுண்டபதியின் திருக்கூட்டமும் அந்தச் சிரிப்பில் கலந்து ஐக்கியமானது. திருமால் சிரிமால் ஆனார்.
“டேய் நாரதா!! என்னை வைத்துக் காமடி பண்ணுகிறாயா? ஒரு வார்த்தை தெரியாதென்றால் ஒன்பது வார்த்தைகள் தெரியாதபடிக்கு பேசுகிறாய்...”
“பொருத்தருள வேண்டும் ப்ரபோ... உங்களது வக்காபுலரி ரொம்பவும் வீக்... சரி.. சொல்கிறேன்... கையூட்டு தரவேண்டும்.. அதாவது... எதாவது அரசாங்க அலுவலகம் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்..”
“எதற்கு?”
“உங்களுடன் ஒரே லொள்ளாகப் போச்சு...”
“குரைக்கிறேன் என்கிறாயா?”
“அடச்சே... இக்கால மொழிபுரியாமல்... ஃப்ரீயாகப் பேசக்கூட முடியாத இடமாக வைகுண்டம் ஆயிற்றே...”
“சரி சரி... முணுமுணுக்காதே.. மேலே சொல்.. நான் ஏன் அரசாங்க அலுவலகம் செல்ல வேண்டும்?”
“ட்ரைவிங் லைசன்ஸ்... வீடு ரிஜிஸ்ட்ரேஷன்.. பட்டா வாங்குதல்... திருமணம் பதிவு செய்தல்... ரேஷன் கார்டு புதுப்பித்தல்.... மெட்ரோ வாட்டர் கனெக்ஷன்... கழிவுநீர் இணைப்பு... மின்சார இணைப்பு... கட்டிட ப்ளான்...... ஜாதிச் சான்றிதழ்... வங்கிக் கடன்... அரசுப்பணி... அரசுப் பள்ளிகளில் ஆசிரியப் பணி... சாலை போடும் காண்ட்ராக்ட்... சாக்கடை வெட்டும் காண்ட்ராக்ட்.. சாக்கடை வெட்டியதை மூடும் காண்ட்ராக்ட்.. ஸ்பீட் ப்ரேக்கருக்கு வரி வரியாக வெள்ளையடிக்கும் ஒப்பந்தம். மேம்பாலம் கட்டுதல்... ”
“ஸ்ப்பா... நிறுத்தப்பா.. கண்ணைக்கட்டுதே... போதும்... தேவி.. நாரதனுக்குக் குடிக்க தீர்த்தம் கொடு... ம்.. மெதுவாக.. மெதுவாக ஆசுவாசப்படுத்திக்கொண்டு மேலே சொல்லப்பா... எனக்கே கிறுகிறுவென்றிருக்கிறது... ”
நிமிட நேர நிசப்தம்.
“இப்படியாக நீங்கள் செல்லும் எல்லாவிடத்திலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டத் தொகையை விட எக்ஸ்ட்ராவாக ஒரு தொகை செலுத்த வேண்டும். அந்த தொகை செலுத்தினால்தான் காரியம் ஆகும்.. அதை அவர்கள் கணக்கில் காட்டாமல் “ஈ..ஈ...” என்று இளித்துக்கொண்டே பரிசாக ஏற்றுக்கொள்வார்கள்... ”
“இது அரசாங்க அலுவலகத்த்ல் மட்டுமா?”
“இல்லையில்லை.. எங்குமே... உங்களுக்கு தொழில் இலகுவில் முடியவேண்டுமென்றால்... பைசா தள்ள வேண்டும்... அதைக் கணக்கில் காட்டாமல் மறைத்துக்கொள்பவர்கள்.. அந்தப் பணத்தை உள்ளூர் வங்கியில் போட்டால் மாட்டிக்கொள்வார்கள்.. ஆகையால் படுக்கைக்குக் கீழே கரன்ஸியாகவேப் போட்டுக்கொண்டு தூக்கமில்லாமல் பிராணாவஸ்தைப்படுவார்கள்.......”
“கையூட்டைத் தடுத்தால் கறுப்புப்பணத்தை ஒழித்து விடலாமா?”
“அதெப்படி? வெளிநாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரப்படும் தங்கம்...உள்நாட்டிலேயே அக்ஷய திருதியை போன்ற நாட்களில் நுகரப்படும் தங்கள்... கஞ்சா போன்ற லாஹிரி வஸ்துகள். இத்யாதி.. இத்யாதி...என்று கள்ளப்பணம் பண்ணுவதற்கு பல உபாயங்கள் உண்டு...”
“சரி... உள்ளூர் வங்கியில் போடாமல் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?”
“வங்கியில் சேமித்தால் கணக்குக் காட்ட வேண்டும்... கையில் வைத்துக்கொண்டால்.. அன்றாடச் செலவுகளாகத் தீர்த்து விடலாம்... அதுவே மூட்டை மூட்டையாக வைத்திருந்தால்.. ஹவாலாவில்... வெளிநாட்டுக்குக் கடத்தி.... ஸ்விஸ் வங்கியில் வரவு வைத்துவிடுவார்கள்...”
“ஓ... அதானா சங்கதி!! குபேரனுக்குக் கூட ஒரு தடவை கணக்கு அதிகமாக வந்ததாம்.. யாராவது ஸ்விஸ் வங்கிக்கு வழி தெரியாமல் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்களா?”
ஹா..ஹா.. என்று வைகுண்டமே சிரித்தது.
“இதிலென்ன சிரிப்பு.. குபரேனிடம் கணக்குவழக்குகளைச் சரிபார்க்கச் சொல்... அந்தக் கறுப்புப்பணம் இங்கே வேண்டாம்..”
“பயப்படாதீர்கள் ஸ்வாமி... ஐந்நூறு ஆயிரம் என்று இரண்டு வகையறாக்களை ஒழித்திருக்கிறார்கள்...கையிருப்பில் அந்த நோட்டுகள் இருந்தால் இரண்டரை லட்சம் வரை வங்கிக் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.. வரியெல்லாம் கிடையாது என்று சலுகைக் காட்டி தூண்டில் போடுகிறார்கள்...”
"லட்சியவாதிகள்.. சுத்தமானவர்கள்... யோக்கியதாம்சம் பொருந்தியவர்களுக்குக் கவலையில்லை.. இல்லையா?”
“அடப்போங்க நாராயணா... இரண்டரை லட்சம் என்பது இப்போது ஒரு ஜூஜூபி....”
“ஜூஜூபியா? அப்படியென்றால்... ”
“வேண்டாம் ட்ராக் மாறாதீர்கள். இது உங்களுக்கு ஸ்பெஷல் வேர்ட்ஸ் சொல்லிக்கொடுக்கும் வகுப்பல்ல... இந்த இரண்டரை லட்ச வரம்பை மீறாமல் தன்னிடமிருக்கும் கறுப்புப்பணத்தை எப்படியெல்லாம் வங்கியில் சேர்க்கிறார்கள் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டேன்...”
“எப்படியாம்?”
“தமக்கு நம்பகமானவர்களைத் தேர்ந்தெடுத்து... அவர்களிடம் தலா இரண்டரை லட்ச ரூபாய்களை வழக்கொழிக்கப்பட்ட ஐந்நூறு ஆயிரம் நோட்டுக்களைக் கொடுத்து அவர்களது வங்கிக் கணக்கில் போட்டுக்கொள்ளச் சொல்வார்கள்...”
“ம்.. பின்னர்..”
“அவர்களுடைய இந்த உதவிக்கு பரிசாக ஐம்பதினாயிரம் ரூபாய் வைத்துக்கொள்ளலாமாம்.. “
“சரி...”
“மீதமிருக்கும் இரண்டு லட்ச ரூபாயை செக்காகவோ... இணைய வழி மாற்றாகவோ... கொடுத்தவருக்கே அனுப்பி விடுவார்கள்... இப்படியாக கறுப்பெல்லாம் வெளுப்பாக்கலாமாம்...”
“அடப்பாவமே.. வேறு எதாவது வழி இருக்கிறதா?”
“ஏன் ப்ரபோ?”
“என்னிடம் ஒரு கட்டு ஐந்நூறு.. இரண்டு கட்டுகள் ஆயிரமும் இருக்கிறது.. நேற்றுதான் திருப்பதி உண்டியலில் இருந்து கைச்செலவுக்காக எடுத்துக்கொண்டேன்... உனக்கு பூலோகத்தில் அக்கௌண்ட் இருக்கிறதா நாரதா?”
”ஐயகோ... இதை யாதெனச் சொல்வேன்.....” என்று பாரதியின் வரிகளை உரக்கச் சொல்லி தலைதெறிக்க ஓடிப்போனான் நாரதன்.

Saturday, August 20, 2016

வித்தை


"அறிவு... உன்னோட ஆம்பீஷன் என்ன?"
"இந்த நாட்டுலயே பெரிய கார்டியாலிஜிஸ்ட்டா ஆகணும் சார்..."
"ஏன்?"
"இருதயமே இல்லாதவங்களுக்கு ஆபரேஷன் பண்ணி இருதயம் ஃபிக்ஸ் பண்ணனும்.. இருதயம் பலகீனமா இருக்கறவங்களைத் தேத்தணும்..இருத... "
"போதும்.. போதும்.. இருதயமே இல்லாம பேசினா பரவாயில்லை.. மூளையும் இல்லாம பேசறே... எனக்கு இருதயம் அடைக்குது.... உட்காருப்பா..."
"விகாஸ்... நீ என்னவாகணும்னு ஆசைப்படற?"
"அரசியல்வாதியாகிச் சாக்கடையைச் சுத்தம் செய்யணும் ஐயா"
"அதுக்கு எதுக்கு அரசியல்வாதியாகணும்.. கையில குச்சி ஃபினாயில் எடுத்துக்கிட்டு கோமணத்தோட மேன் ஹோலைத் தெறந்து உள்ள இறங்கினா சுத்தம் பண்ணிடலாமே.... "
" நான் அரசியல் சாக்கடையைச் சொன்னேன் சார்..."
"யப்பாடீ... மணக்குது... சரி..சரி.. உட்காரு... ஏம்பா ரஞ்சித்! உன்னோட வாழ்நாள் குறிக்கோள் என்ன?"
ரஞ்சித் சொன்ன பதிலில் மொத்த வகுப்பறையும் உறைந்துபோனது. "ஏன்டா கேட்டோம்" என்று ஒடிந்து போய் நாற்காலியில் சரிந்த சற்குணம் சார் அப்புறம் அடுத்த மாணவனைக் கேட்கவேயில்லை. பத்தாம் வகுப்பிலேயே இப்படியும் ஒரு பையனா? அவருக்குப் பொங்கிப் பொங்கி வந்தது. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பீரியட் முடிந்தவுடன் வகுப்பறை வாசலுக்கு அழைத்துச்சென்று ஆதூரத்துடன் தோளில் கைபோட்டுக் கேட்டார்...
"நீ சாமியாராகி என்ன பண்ணப் போறே ரஞ்சித்?"
சிறிது நேர மௌனத்தில் காரிடாரில் அவர் ஷுவும் அவன் ஷுவும் டக்கி டக்கி எதிரொலித்தது.
"காசு பண்ணப்போறேன்.."
"டேய்... ரொம்ப பேசாதடா..."
"சார்... கார்டியாலஜிஸ்ட் கிட்டே அப்பாயின்ட்மெண்ட்டுக்கு நிக்காம ஆபரேஷன் பண்ணிக்கலாம், படகு மாதிரி ஏசி கார் வச்சுக்கலாம், பீச்சாங்கரையோரமா ஜிலுஜிலுன்னு ஆசிரம பங்களா கட்டிக்கலாம், உள்ளூர் பக்தைகள் கூட வெளிநாட்டுக்கும்... வெளி நாட்டு சிஷ்யைகளோட உள்ளூருக்கும் டூர் அடிச்சு கத பண்ணலாம்.. இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு.. அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுன்னு அரசியல் பண்ணலாம்.. ஸ்கூல் நடத்தலாம்.. மெடிகல் காலேஜ் வைக்கலாம்.. மகளிரெல்லாம் ஒன்று திரட்டி...."
"சிவ சிவா.." என்று காதிரண்டையும் பொத்திக்கொண்டார் சற்குணம் சார். "ஆஹா... வாத்தியாரையே காதைப் பொத்த வச்சுட்டோம்.. வெற்றி.. வெற்றி.." என்று உள்ளூர சிரித்தான் ரஞ்சித். சற்குணம் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற்று நிரந்தர வீட்டுவாசி ஆகிவிட்டார். ரேஷன், ஈபி பில், பால் கார்டு என்று வாத்தியார் வேலையைக் காட்டிலும் தீவிரமாக வீட்டு வேலை. வருடங்கள் உருண்டன என்கிற க்ளிஷேவை விடமுடியவில்லை. வருடங்கள் உருண்டன.
**
பர்கர்... பீட்ஸா.. பிக்கினி... புழங்கும் அமெரிக்கா. ஒரு இத்தாலியன் ஜெலட்டீரியா ஐஸ்க்ரீம் கடை வாசலில் ஜன சந்தடியான மம்பும் மந்தாரமுமான மத்தியான்ன நேரம். விஷமம் கண்களில் கொப்பளிக்கும் ஒரு சிறுவனை கையில் பிடித்துக்கொண்டு ஒரு பெரியவர் அங்கே வருகிறார். எழுபத்தைந்து வயதில், அகன்ற தோள்களுடன்... திடகாத்திரமாகத்தான் இருக்கிறார். நூறு மீட்டர் ஓடினால் முப்பது செகண்ட் பிடிக்கும்.
“க்ராண்ட்பா... கமான் லெட்ஸ் ஹாவ் ஜெலட்டோ..” என்று கடையைக் காட்டி இழுக்கிறான். ஆனால் அவர் நகராமல் தரையில் நங்கூரம் தட்டி நிற்கிறார். “ப்ளீஸ்.. கமான்..” என்று மேலும் இழுக்கிறான். “வெயிட் ஃபார் சம் டைம். வில் கோ...” என்று சமாதானப்படுத்திவிட்டு விடுவிடுவென்று அங்கே வருகிறார்.
காவியுடையில் இரண்டு சாமியார்கள். இருவருமே முண்டாசு அணிந்திருக்கிறார்கள். கீழே உட்கார்ந்திருக்கும் சாமியார் வலதுகையில் மூங்கில் கம்பைப் பிடித்திருக்கிறார். அதன் மேல் சம்மணமிட்டு இன்னொரு சாமியார் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். சாதாரணமாக இல்லை. மூங்கில் மேலே உட்கார்ந்திருப்பவரின் வலது பக்கம் மட்டுமே மூங்கிலின் மேல் இருக்கிறது. அதுவும் எப்படி? வலது முட்டி மட்டும் அந்தக் கம்பின் மேல்.... போவோர் வருவோரெல்லாம் அதிசயத்துப் பார்த்து டாலர் போடுகிறார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் யாருப்பா?” நிதானமாக நெருங்கித் தமிழில் விஜாரிக்கிறார் அந்தப் பெரியவர்.
அந்நிய தேசத்தில் காது குளிரத் தாய்மொழி. இருவரும் தலையை நிமிர்த்திக் கண் திறந்து பார்த்தார்கள். பின்னர்....
“யோகிகள்” கோரஸாகப் பேசினார்கள்.
“வித்தை காட்டுபவர்கள் மாதிரி தெரியுது” என்றார். இருவருக்கும் சட்டென்று முகம் தொங்கியது.
“இது என்ன ட்ரிக்? எங்கே கத்துக்கிட்டீங்க?”
“ஐயா.. எங்களது குருநாதர் விலாவாரியாகச் சொல்வார்.. வாங்களேன்..”
“அட்ரெஸ் குடுங்க.. நாளை வருகிறேன்.. இது என்னுடைய கார்டு...” என்று அவரது முகவரி அட்டையை எடுத்து நீட்டினார்.
ஜெலட்டோ சாப்பிடும்போது அந்தக் கடையின் ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார். தேசம் கடந்து வந்து... ஹும்... குச்சி ஐஸ் உருகி கை மணிக்கட்டு வரை வழிந்து ஜில்லிட்டதும் சுதாரித்துக்கொண்டு சாப்பிடத் துவங்கினார்.
**
ஊர் எல்லையில் சிறு குன்று. பனிமலை போல பாறைகளால் வெள்ளையாய் இருந்தது. அதன் பின்பக்கம் பர்ணசாலை போன்றதொரு குடில்.மயான அமைதி. அதைக் கிழிப்பது போல எங்கிருந்தோ “க்யூங்...க்யூங்..”. பறவையொலி. உள்ளே நுழைகிறார் இந்தப் பெரியவர். காவலுக்குக் கூட யாருமில்லை. அறை பளிச்சென்று இருக்கிறது. சுவரில் பெரிய சம்ஸ்க்ருத ஓம் போட்ட பதாகைகள் சீன ஷாலின் படங்களில் வருவது போலத் தொங்குகிறது.
"ஐயா...” குரல் கொடுக்கிறார்.
திரைச்சீலைகளுக்குப் பின்னே நெடியதொரு உருவம் நிழலாய்த் தெரிகிறது. திரை விலக நேரே வந்து நின்று கைகூப்புகிறது.
“சற்குணம் சார்.. என்னைத் தெரியுதா?”
கண்கள் சுருக்கிப் பார்க்கிறார்.
“யாருப்பா? தெரியலையே”
“கே.கே.எம் மெட்ரிக் ஸ்கூல். சைதாப்பேட்டை.. பத்தாம் வகுப்பு “ஈ” பிரிவு. ரஞ்சித்...”
“யே.. ரஞ்சித்து?”
“இப்ப நான் வெறும் ரஞ்சித் இல்லே.. ரஞ்சிதானந்தா”
“அடப்பாவி.. சொன்னா மாதிரி நெசம்மாவே சாமியாராயிட்டியா?”
“ம்..” அவரின் கண்களை நேரே பார்க்க ரஞ்சித்துக்கு.. சாரி.. ரஞ்சிதானந்தாவுக்கு குறுகுறுத்தது.
“பெரிய பெரிய மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பாரதம். அதுல பொறந்துட்டு ஏண்டா இப்படி ஊரை அடிச்சுப் பொழைக்கிறீங்க? உங்களுக்கே வெக்கமா இல்லே...” அவரது கூச்சலில் அந்த குடில் தரைமட்டமாகிவிடும் போல அதிர்ந்தது.
“சார்.. உங்கப்பா வாத்தியார். உங்க தாத்தா ஜமீந்தார். வசதியான குடும்பத்துல சகல சௌகர்யங்களோட வாழ்ந்தீங்க.. எனக்கு அப்படியில்லே... குடிகார அப்பன்... ஓடிப்போக.. வாசல்ல யாரையோ பார்த்துக்கிட்டே இருக்கிற அக்கா.. டுபாக்கூர் குடும்பம்.. ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு பிச்சை எடுத்தாங்க.. பத்தாவதுல தொன்னூத்தஞ்சு பர்ஸண்டேஜ்.”.
பக்கத்திலிருந்த ”டீச்சர்ஸ்..” பாட்டிலை ஒரு க்ளாஸுக்குள் ப்ளக்..பளக்கென்று கவிழ்த்து ஐஸ்க்யூப்ஸ் போட்டு மணிக்கட்டை ஆட்டி ஒரு மிடறு குடித்தான். அவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார் சற்குணம் டீச்சர். “ஹா...” என்ற பெருமூச்சுக்குப் பிறகு தொடர்ந்தான்.
“என்ன புண்ணியம்? பதினொன்னு கூட சேர முடியல.. கோயிலுக்குப் போடா... பாவமெல்லாம் கழுவிக்கலாம்னு அம்மா.. பேச்சியம்மன் கோயிலுக்கு தொரத்திவிட்டாங்க... அங்கதான் முனியப்பன் பழக்கம் ஏற்பட்டுச்சு... “. நிப்பாட்டினான். சிரித்தான். “முனியப்பன் யாருன்னு நீங்க கேட்கமாட்டீங்கல்ல.. நானே சொல்றேன்..”
“முனியப்பன் அமாவாசைக்கு அந்தக் கோயில்ல குறி சொல்ற ஆளு. வளமான கற்பனை உண்டு. நகை திருட்டுப்போனது... புருசன் கள்ளத்தொடர்பு.. பொண்டாட்டி ஏமாத்தறான்னு.... வகைவகையா பொய் சொல்லுவாரு.. அப்படி சொல்லிக்கிட்டே.. ஹேய்... ஊய்.... ஆத்தா...ன்னு உடம்பை உதறி கத்திட்டு.. கையை உதறினாக்கா... அப்படியே விபூதி கொட்டும்.. பௌர்ணமி பூஜையப்போ... வாயிலேர்ந்து ஸ்படிக் லிங்கம் எடுப்பாரு.. மொத்த சனமும் மெய்சிலித்துக்கிட்டுக் கன்னத்துல போட்டுக்கும்....”
இன்னொரு ஸ்மால் ஊற்றிக்கொண்டு தொடர்ந்தான் ரஞ்சித்..ச்சே.. தொடர்ந்தார்.. ரஞ்சிதானந்தா..
“பக்கத்துலேர்ந்து எல்லாம் பார்த்துக்கிட்டிருந்தேன்.. ஒரு நா அவரோட குறி ஷோ முடிஞ்சப்புறம் தனியாப் போயி.. முனி சாமி எனக்கும் சொல்லித்தர்றீங்களா?ன்னு கையைக் கட்டிப் பவ்யமாக் கேட்டேன்.. பீடிய வாயிலேர்ந்து எடுத்துட்டு.. ச்சீ போடா நாதாரி..ன்னு திட்டி அனுப்பினாரு... அவரு விபூதி எடுக்கிற ட்ரிக் எங்க கத்துக்கிட்டார்னு தெரியும்...அங்க போயி....”
இதற்கு மேல் சற்குணம் சாருக்கு பொறுமையில்லை. “ச்சே..ச்சே.. என்னோட ஸ்டூடண்ட்... நல்லாப் படிச்சு உத்தமமான மனுஷனா வருவேன்னு நினைச்சேன்.. ச்சீ..ச்சீ... உன்னோட சேர்ந்து....” என்று வசனத்தை முடிக்காமலே வாசலை நோக்கி நடந்தார்.
“டுமீல்”
சற்குணம் சார் அதிர்ச்சியோடு திரும்பினார்.
ரஞ்சிதானந்தா தரையில் குப்புறக் கிடந்தான். அவனைத் தாண்டி ரத்தம் தரையில் கோணல்மாணலாய்க் கோடு போட ஆரம்பித்திருந்தது. பின்னால் அரை நிஜார் போட்ட ஒருவன் துப்பாக்கியுடன் “ஹே... யூ.. மூவ்.. மூவ்...” என்று துப்பாக்கியை ஆட்டியாட்டி சற்குணம் சாரை விரட்டிக்கொண்டிருந்தான்.
“நீயா?” என்ற சற்குணம் சாரின் கண்ணில் தண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.
“அப்பா.. ரொம்ப நாளா நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே.. உன் கம்பெனி பேரென்ன கேட்பீங்க.. வந்த புதுசுல ஒரு க்ளாஸ் தயாரிப்புக் கம்பெனில இருந்தேன். இந்த ரஞ்சித்து சாமியாராயிட்டேன்னு எங்கிட்டே பேசிக்கிட்டிருந்தான். அப்போ.. விபூதி கொடுக்கிறது... லிங்கம் எடுக்கிறதெல்லாம் மக்கள் இப்போ நம்பறதில்லை.. புதுசா எதுவும் பண்ணினா கோடி கோடியா அள்ளிடலாம்ன்னு ஆசைக் காட்டினான். திக்னெஸ் கம்மியா இருந்தாலும்... வஜ்ஜிரம்போல உறுதியா க்ளாஸ் மெட்டீரியல் ஒண்ணு சோதனை முயற்சியில தயாரிச்சாங்க.. அதுல மூணு பக்கம் கால் வச்சு மேலே ஒரு க்ளாஸ் போட்ட முக்காலி ஒண்ணைத் தயாரிச்சோம்.. அதுக்கு மேலே ஒரு க்ளாஸ் ஷீட்டு.. அது மேலே ஒருத்தனை உட்கார வச்சு.. கீழே ஒருத்தனை ஒரு பக்கத்துல சும்மா கம்பு மாதிரி ஒண்ணைக் கொடுத்து பிடிக்க வச்சுக்கச் சொல்லி.. சோதனை முயற்சியா பார்க் ஓரத்துல உட்காரச்சொன்னோம்.. அன்னிக்க்கு மட்டும் இருநூறு டாலர் கிடைச்சுது.. “
“அடப்பாவி. உன்னை கெமிகல் இஞ்சினியரிங் படிக்கவச்சு அமெரிக்கா அனுப்பினா.. இதெல்லாமா பண்றே” அவருக்கு மனசு வலித்தது.
“ப்போ... மாசம் ஆறாயிரம் டாலர்... ஆளுக்குப் பாதி... எக்ஸ்ட்ரா மணி... ரெண்டு பேரு மட்டும் செஞ்சா ஆறாயிரம்.. இதுவே இருபது பேர் செஞ்சா. பத்து மடங்கு கூடுதலா பணம் கொட்டும்... டெக்னாலஜி என்னோடது.. உட்கார ஆள் பிடிக்க வேண்டியது அவன் வேலை.. மாத்தி மாத்தி செஞ்சோம்.. பணம் கொட்டுது... ஆனா நீ இப்படி இங்க வருவேன்னு நினைக்கலை.. ஓம் தொங்கற சுவத்துல நானும் இவனும் இந்த மாதிரி உட்கார்ந்திருந்த ஃபோட்டோவைப் பார்த்துட்டு உங்களோட அரிச்சந்திரன் மனசு போலீஸுக்கு ஃபோன் போடச் சொல்லும்.. சாரிப்பா....அடுத்த பிறவி...ச்சே.. வாட் எ யூஸ்லெஸ் டயலாக்..”
டுமீல்.
பின்குறிப்பு: அஷ்டமா சித்திகள் தெரிந்த ரஞ்சிதானந்தா மஹா யோக்கியர் என்று இதற்கு நல்லத்தனமான க்ளைமாக்ஸ் ஒன்றும் வைத்திருக்கிறேன். நேரமிருப்பின் எழுதுவேன்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails