Sunday, March 27, 2016

தோழா


இயக்குநர் வம்ஷி தொழில் தர்மம் தெரிஞ்ச நியாயவான். இது இண்டச்சபில்ஸ் என்கிற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று படத்தின் முதல் ஃப்ரேமிலேயே கறுப்பு-வெளுப்பில் பிள்ளையார் சுழிபோலப் போட்டுவிட்டுதான் கதையை ஆரம்பித்தார்.

உதயத்தில் சைக்கிள் செயினை உருவிக்கொண்டு உக்கிரமாக சண்டையிட்ட நாகார்ஜுனையும், ரட்சகனில் “கையில் மிதக்கும் கனவா நீ” என்று சுஷ்மிதா சென்-னை அலேக்காகத் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் காதல் வழியத் துள்ளி ஏறிய நாகார்ஷுனையும் பார்த்த ரசிகர்களுக்கு தோழா நாகார்ஜுன் கற்பனைக்கு எட்டாத வேஷம். தெலுகு ரசிகர்கள் இப்படிப் பொட்டிப்பாம்பாக அடங்கிய அ.நாவை ஏற்றுக்கொள்வார்களா?
இருபதடி உசர பெயர் ஸ்டாண்ட் கொள்ளாமல் பட்டியலிடப்பட்ட கம்பெனிகளுக்கு எஜமானனாக வரும் கொழுத்த செல்வந்தரான அக்கினேனி நாகார்ஜுன் பாதி காட்சிகளில் கண்ணாலேயே நடித்திருக்கிறார். பாரா க்ளைடிங் என்றழைக்கப்படும் பாராசூட்டில் விண்ணிலிருந்து மண்ணுக்குப் பறந்து வரும்போது 150அடி உயரத்திலிருந்து அறுத்துக்கொண்டு விழுந்துவிடுகிறார். அதனால் Tetraplegia என்கிற வியாதியால் சக்கர நாற்காலியே கதியென்ற வாழ்வுக்குத் தள்ளப்படுகிறார். இடுப்புக்குக் கீழேயும் கை கால்களும் உணர்வற்றுப் போய்விடுகிறது. அவரை தினப்படி பேணுவதற்கு அக்கறையான ஆள் வேண்டும். அந்த ஆள் கார்த்திக்.
அளவோடு அற்புதமாக நடித்திருக்கிறார் கார்த்திக். குடும்பத்தில் தன்னை உதவாக்கரையாக நினைக்கும் அம்மாவிடமும் தங்கை தம்பிகளிடமும் பேரெடுக்க பாடுபடும் பாசக்கார இளைஞன். பணம் சம்பாதிக்க வழிதெரியாமல் திருடியதாகவும் சித்தியாகிய அம்மாவுக்கு (வயசான ஜெயசுதா...) ஒத்தாசையாக இருக்க சின்ன வயசிலேயே வேலைக்குப் போகப் பாடுபட்டதாகவும் நாக்-கிடம் விவரிக்கும் கார்த்திக் நடிப்பில் மிளிர்கிறார்.
நாகார்ஜுனும் கார்த்திக்கும் திரையில் தோன்றும் காட்சிகளில் நம்மையும் மீறி ஒருவிதமான ஸ்நேகபாவம் தோன்றுவது டீம் தோழாவின் வெற்றி.
சென்ற சில படங்களாக அக்கா மாதிரி வந்து லிங்காவில் பெரியக்காவாகிய அனுஷ்கா ஐந்தாறு சீன்களில் அழகான அம்மாவாக வந்தார். சின்னக் குழந்தைக்கு அம்மாவாக வந்தார் என்று அனுஷ்கா ரசிகர்கள் படித்து இன்புறுக. அனுஷ்கா... அனுஷ்ம்மா....
ஜொள் விடுவது எப்படி என்று விடலைப்பசங்கள் கார்த்திக்கிடம் பாடம் கற்றுக்கொள்ளுமளவிற்கு இந்தப் படம் முழுக்க இளம் பெண்களைக் கண்டால் தியேட்டரில் நாம் சறுக்கி விழுமளவிற்கு ஜொள்... ஜொள்.. ஜொழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்...... வாய் பிளந்து கண்கள் சொருகி... ஜொள் இலக்கணம்.
இசையமைப்பாளரைக் கட்டிப் போட்டு க்ளைமாக்ஸுக்கு முன்னால் பாடல் வாங்கியிருக்கிறார்கள். பாரீஸ் வரைக்கும் கார்த்திக்கையும் தமன்னாவையும் அழைத்துக்கொண்டு போய்விட்டு ஒரு பாடல் இல்லாமல் திரும்பலாமா? ஓ. சென்ற வரியில் தமன்னா என்று சொன்னேனா? ஆமாம். தமன்னாவும் இப்படத்தில் இருக்கிறார். மெழுகு பொம்மையாக ஆங்கிலேய ஸ்த்ரீகளின் மோஸ்தரில் குட்டைப் பாவாடையுடனும் உதட்டைக் குவித்துப் பேசும் “கய்ய்க்குச்சய்ய்ய்...ச்ச்சுச்சுலுல்லூ...” என்று (குழந்தையாக!) கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிக் கொஞ்சத் தூண்டும் பெண்ணாக கார்த்திக்கின் ஜொள் அளவைக் கூட்டுவதற்கு வருகிறார்.
படத்தின் அடிநாதம் அற்புதமானது. கூலிக்கு மாரடிக்காமல் அர்ப்பணிப்போடும் அன்போடும் செய்யப்படும் காரியமானது அமரத்துவத்தை எட்டுகிறது. அந்த அன்பின், பாசத்தின் விஸ்தீரணம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. கார்த்திக்கிற்கும் குடும்பம் உள்ளது என்றுணர்ந்த நாக் அவரை தாயாரிடம் அனுப்புகிறார். குடும்பமாக சந்தோஷமாயிருக்கிறார்கள் என்று மங்களம் பாடுகிறார்கள்.
போக்குவரத்து விதிகளை மீறி பியெம்டபிள்யூவை கன்னாபின்னாவென்று ஓட்டுவதும்... அதைக் கண்டித்து பிடிக்க வந்த காவலர்களை ஏமாற்றும்படியாக நாகார்ஜுனுக்கு உடம்பு சரியில்லை போன்று நடிப்பதும் இப்படியாகப்பட்ட ஃபீல் குட் படத்தின் மாத்தை கொஞ்சம் குறைக்கிறது.
ஏற்கனவே தாராளத்தைக் காட்டும் தமன்னாவை வைத்துக்கொண்டு ”நெமிலி” என்ற பாட்டுக்கு வந்து குத்தாட்டம் போட பம்பாய் சரக்கு போல ஒரு பார்ட்டியை ஆட விட்ட பொட்லூரி (தயாரிப்பாளர் பா... அவரை எழுத வேண்டாமா?) தயாள குணம் மிக்கவர்.
பாடல்கள் எதுவும் மனசில் நிற்கவில்லை என்றாலும் கோபி சுந்தரின் பின்னணி இசை அபாரம். பாரீஸ் வீதிகளில் தமன்னாவோடும் நாகர்ஜுனோடும் கார்த்திக் சுற்றும் போது கிடாரும், ட்ரம்பெட்டும், சாக்ஸும் பட்டையைக் கிளப்புகிறது. படத்தின் ஒளியமைப்பு ரிச்சாக இருக்கிறது. தொழில்நுட்பம் கொப்பளிக்கும் தியேட்டர்களில் இவ்விசைக் கேட்பது செவிக்கின்பம். பிரமாதம்.
நடுவே படம் கொஞ்சம் தொங்கும் போது ப்ளாச்சுக் கட்டி நிமிர்த்துவதற்காக ஒரு கார் ரேஸ் வைத்திருக்கிறார்கள். பாரீஸ் வீதிகளில் பறக்கும் கார்கள். அது இல்லையென்றாலும் ஜனம் இந்தப் படத்தைப் பார்க்கும் என்ற நம்பிக்கையை வம்ஷிக்கு யாரேணும் சொல்ல வேண்டும்.
ம்.. சொல்ல மறந்து விட்டேன். பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். விவேக் ஐந்தாறு சீன்களில் வருகிறார். ரொம்பவும் சமர்த்தாகவும் வசூல் ராஜாவில் பார்த்தது போல அசட்டுச் சிரிப்போடும் பிரகாஷ்ராஜ்ஜும் அரைகுறை தாடியுடன் கார்த்திக்கின் நலம்விரும்பியாக விவேக்கும் சில காட்சிகளில் திரையில் தெரிகிறார்கள். உதறிய பிரஷ்ஷிலிருந்து சொட்டிய சிவப்புப் பெயிண்டிங்கை இருவது லட்சம் கொடுத்து வாங்கும் நாகார்ஜுனைக் காட்டி மார்டர்ன் ஆர்ட்டை கிண்டலடிக்கிறார்கள். அதைவிடக் கொடுமையாக ஐந்தாறு கலரில் கார்த்திக்கைக் கிறுக்கச் சொல்லி அதை இரண்டு லட்சத்திற்கு விற்கிறார்கள். “நீ படைப்பாளி.. நா துடைப்பாளி......” என்று எச்சல் துப்பி கமல் மார்டன் ஆர்ட் செய்யும் காதலா.. காதலா வித்தை கண்ணில் வந்துபோனது.
ஸ்ரேயான்னு ஒருத்தங்க சிவாஜியில ரஜினிக்கு ஜோடியா நடிச்சாங்களாம். அவங்க ஒரு அஞ்சு நிமிஷம் திரையில் தெரியறாங்க. பயம்மா இருந்தது.
பி.எஸ். வினோத்தின் காமிரா அதி அற்புதம். வெள்ளைத் திரையில் வர்ணக் கோலங்களாக காட்சிகள் எழுகிறது. பாரீஸ் நகரத்தையோ வடசென்னையையோ பருந்துப் பார்வையில் காட்டும் போது கண்களுக்கு விருந்து. ஈஃபில் மேலே என்கிற பாடலைப் படம் பிடித்த விதம் மனதைக் கொள்ளையடிக்கிறது.
கார்த்திக்-நாகார்ஜுன் ஃபிசிக்கலான கெமிஸ்ட்ரியைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. நிச்சயமாக ஒரு தபா பார்க்கலாம் தோழா. தப்பில்லை. கேளிக்கை உத்திரவாதம்.

Friday, March 18, 2016

விட்டலாபுரம்

காத்தான் கடையில் ஈஸியாரில் ஏறி சென்னை நோக்கி வரும்போது இடதுபுறமே இரண்டு விட்டலாபுரம் வருகிறது. முதல் விட்டலாபுரத்திற்குள் நுழைந்து ”இங்க விட்டலன் கோயில்..” என்று நாங்கள் கேட்ட நபர் தன்னிலை தவறியிருந்தது “எழ்ன்ன கேழ்ழ?” என்ற வாழைப்பழ வாயோடு கேட்டபோது விளங்கியது. அவரது பழரச மூச்சுக் காற்றுப் பட்டாலே நமக்கும் போதையேறிவிடுமளவிற்கு ஃபுல்லாக “ஏத்தி”யிருந்தார். சேப்பாயி யாரும் சொல்லாமலே மெயின் ரோட்டுக்குத் திரும்பியது.
இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு பிரியாணிக்கடையில் இறங்கி கேட்டேன். “நேரா போனாக்க எஸ்.ஏ கலியாண மண்டவம் வரும்... அங்கினலேர்ந்து அடுத்த லெப்ட்டூ” என்று பரோட்டோ மாவு பிசையப் போய்விட்டார். எஸ்.ஏ மண்டபம் தேடும் பணி துவங்கிய போது “கூகிள் மேப்ஸ் போட்ருக்கேன்.. போங்கோ...” என்று சாதூர்யமாகப் பேசியது யாராக இருந்துவிட முடியும்.. சங்கீதாதான்...
“இதுக்குள்ளதானே...” நுழைவதற்கு முன் தெருவிளக்குகள் இல்லாத கும்மிருட்டாக இருந்த இடத்தில் தயங்கினேன். கிராமத்து மின்மினிப் பூச்சிகளின் சிமிட்டல்கள் கூட கிடையாது. காரின் முகப்பு விளக்கு இறங்கும் வரையில் தார்ரோடு விரித்த ஓர் பாய் போலத் தெரிந்தது. அவ்வளவுதான்.
“கூகிள் இந்தப் பக்கம்தான் காமிக்குது.. தைரியமாப் போங்க..”
ஒன்றிரண்டு கி.மீ உருட்டிய பின்னர்....
மங்கிய வெளிச்சத்திலிருந்த பொட்டிக்கடையில் சோடா குடித்துக்கொண்டிருந்த யூத்திடம் கேட்கலாம் என்று தலையை நீட்டிய போது எதிர் திசையில் செங்கல்பட்டிலிருந்து வந்த தனியார் பேருந்து விட்டலாபுரம் முழுவதற்கும் ரேடியோ வைத்தது போல “நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று.....” பாடிக்கொண்டு வந்து நின்றது. ஒரு பெரியவரையும் கைலியில் அரைக்கைச் சட்டையை மடக்கிய ஒருவரையும் உதிர்த்துவிட்டு ”உலகே அழிஞ்சாலும்.. உன் உருவம்....” என்று பாடிக்கொண்டே கடந்து போயிற்று.
இறங்கிய டப்பாக்கட்டு கைலிக்காரர் “அந்தோ....” கை காண்பித்து அப்படியே அனுப்பிவைத்தார். மெயின்ரோட்டிலிருந்து வலது கைப்பக்கம் நூறு அடியில் கோயில் இருந்தது. ஆனால் அந்தத் தெரு முழுவதும் கும்மிருட்டு. பொட்டு வெளிச்சமில்லை. எந்தக் கோயில் போனாலும் அங்கு வாசலில் விற்கும் பூக்கடையில் தட்டு வாங்குவது என் வழக்கம். கோயில் வாசலில் உட்கார்ந்தால் புண்ணியத்தோடு பொருளும் கிடைக்கும் என்றால் சந்தோஷமடைவார்கள். விட்டலேஸ்வரருக்கு ஒரு முழம் பூ கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சினேன்.
இருட்டில் கடை போட்டிருந்த பெண் மூங்கில் தட்டு நிறைய சம்பங்கியுடன் அந்த பிராந்தியத்துக்கு சுகந்தத்தையும் விற்றுக்கொண்டிருந்தார்.
“துளசிமாலை இல்லைம்மா?”
“வித்துப்போச்சி சாமி. மணமா சம்பங்கி வாங்கிட்டுப் போ....”
உள்ளே சொற்ப கூட்டம் இருந்தது. கர்ப்பக்கிரஹ வாசலில் க்ருஷ்ண ப்ரேமி அண்ணா அபிஷேகம் செய்யும் படம் மாட்டியிருந்தார்கள்.
ஆஜானுபாகுவான விட்டலன். அவரது தோளுக்கு தோளாய் இருபுறமும் ருக்மணி சத்யபாமா. மலர்மாலைகளில் பார்க்கப் பார்க்க பரவசமாயிருந்தது. நீங்கள் நேரே நிற்கும் போது உங்களது உயரத்தில் தரையிலிருந்து சமமாக தெய்வம் நின்றால் எப்படியிருக்கும்? அப்படியொரு தோற்றம். ”பாகவதர் ஃபோன் பண்ணினார்.. நீங்கதானா அது?” என்று விஜாரித்த பட்டர்பிரான் வார்த்தைகளில் கண்டீஷனும் செயல்களில் இளகியமனதோடும் தீபாராதனை காட்டினார். “வலது பக்கத்துல பாருக்கோ... இந்தக் கோயில் மின்னாடி எப்படியிருந்தது.. இப்போ எப்படியிருக்குன்னு படம் போட்ருக்கோம்.. சிவராத்திரி விட்டலனுக்கு விசேஷம்... இவர் ப்ரேமிக விட்டலேஸ்வரர்... ” என்றார்.
பிரதக்ஷிணம் வந்தோம். லக்ஷ்மி சன்னிதி இருந்தது. பின்னர் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு ஒரு தனிச் சன்னிதி இருந்தது. பக்கத்து சன்னிதியில் வரதராஜரும் கடைசியில் விஷ்வக்சேனர் என்கிற சேனை முதலியார் சன்னிதிகளும் ஒரே வரிசையில் இருந்தன. எல்லா சன்னிதியிலும் விளக்கு எரிந்தது. சேனை முதலியார் சன்னிதியிலிருந்து மன்னைக்கு நியாபகம் தாவியது. ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் பங்குனி பிரம்மோற்சவம் போது சேனை முதலியார் ஒரு சுற்று வந்தவுடன் தான் புறப்பாடு ஆகும்.
டயாபடீஸுக்கு ஏற்றவாறு சர்க்கரை பொங்கல் செய்து பிரசாதமாய் விநியோகித்துக்கொண்டிருந்தார்கள். கைக்கு ஒரு தொண்ணை தருகிறேன் என்று இருகைகளிலும் கொடுத்தார் அந்த மூதாட்டி. விட்டலன் சன்னிதியில் அமிர்தமாய் இருந்தது. பெருமாள் பிரசாதத்திற்கே பிரத்தேயகமாக இருக்கும் ஒரு அலாதியான சுவை.
“இது கிருஷ்ண தேவராயர் காலத்து கோயில்.. கி.பி பதினைஞ்சாம் நூற்றாண்டு...” என்றார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார்.
“ம்.. பார்த்தேன்.. வாசல்ல ஆர்க்கியாலஜி போர்டு இருக்கு.. அவரோட பிரதிநிதியாமே.. யாரோ.. கொண்டைய தேவ சோழ மஹாராஜான்னு... சோழர் பரம்பரை ஆளு.. கிருஷ்ணதேவராயருக்கு ஊழியம் பார்த்திருக்கார்... அவர்தான் கட்டினதாம்.. போர்டுல இருக்கு....”
“தேரெல்லாம் இருந்திருக்கு... “ என்று கடைசி வாய் சர்க்கரைப் பொங்கலை வாயில் போட்டுக்கொண்டார்.
வாசலில் பூக்காரம்மா வீட்டுக்கு புறப்படத் தயாராயிருந்தது.
“ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே...” என்று அவசராவசரமாக நெருங்கினார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார்.
”என்ன?”
“இங்க டெய்லி டோலோத்ஸவம் உண்டு. பெரிய பாகவதர் வந்தார்னா... அபங்.. பஜனையெல்லாம் பாடி உங்களை ஆடச் சொல்வார். ஆடாம வீட்டுக்குப் போக முடியாது...”
“அடுத்த தபா ஆடிடுவோம்...”
கடையடுக்கிக்கொண்டிருந்த பூக்காரம்மா “ஒரேயொரு சம்பங்கி மாலதான் இருக்கு.. வூட்டுக்கு வாங்கிட்டுப் போ...” என்று துரத்தியது.
மறுநாள் காலை பூஜையின் போது அந்த மாலையை வெங்கடேசப்பெருமாளுக்கு சார்த்திய போது அந்த ஃப்ரேமுக்குள் ப்ரேமிக விட்டலேஸ்வரர் தெரிந்தார். சம்பங்கியின் வாசனையில் மனஸில் பக்திரசம் பொங்கியது.

நத்தம் - அணைக்கட்டுபரமேஸ்வரமங்கல தரிசனம் முடிந்து கிளம்பும் போது குருக்கள் மாமாவையும் சேப்பாயியில் ஏற்றிக்கொண்டு நத்தம் பயணித்தோம். வானம் நீலம் பூசியிருக்க இருபுறமும் பச்சைப் பசேரென்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடுகள் தெரிய நிர்ஜனமான குட்டி சாலைகள். அவை ஸ்வர்க்கத்தை அடையும் ஓடு பாதைகள்.
"நந்தம் ஜெம்பகேஸ்வரரை தர்சனம் பண்ணிடலாம்... அப்புறமா நீங்க உங்க பிரயாண திட்டப்படி மேலே போகலாம்..."

"அணைக்கட்டு சிவன் கோயிலுக்குப் போய்ட்டு வரும்போது நத்தம் வரலாமே மாமா..." என்று அக்கௌன்ட்ஸ் வெங்கட்ராமன் சார் பின் வரிசையிலிருந்து குருக்கள் மாமாவுக்குக் குரல் கொடுத்தார்.
சௌம்ய தாமோதரப் பெருமாள் கோயில் இன்னும் திறக்கவில்லை. வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சேப்பாயி சுகமாக சென்றது.
"அதென்ன கோயில்?"
"கிராமதேவதைக் கோயில்.... "
கீழே அசுரனைப் போட்டு மிதித்து சூலமேந்திய திருக்கரத்துடன் உக்கிர காளி ரூபத்தில் கோயில் முகப்பில் சுதைச் சிற்பமும் வாசலில் இருந்த விண்ணை முட்டும் அரச மரமும் எந்த கிராமத்தின் காவல் தெய்வத்திற்கும் சாஸ்வதம். பாசி மண்டிய அல்லிக்குளமொன்று கோயிலிலிருந்து புறப்பட்ட ஒரு ஒத்தையடிப் பாதையில் ஐம்பது தப்படியில் அலையடிக்காமல் அசையாமல் அடக்கமாக இருந்தது. அந்த அரசமரத்தடி அருகே அனாதரவாகத் தரையில் கிடத்தியிருந்த சைக்கிளும் அங்கிருந்து பக்கத்துத் தோப்பிற்குக் கிளம்பிய ஒரு பாதையும்... அசந்தால் ஒரு மர்மச் சிறுகதை எழுதிவிடும் அபாயமான நிலை.
ஐந்தாறு இடதுவலது வளைவிற்குப் பின்னர் ஊரைப் பார்க்க இருந்த ஆஜானுபாகுவான நந்தியிருக்கும் கோபுரமில்லாத கோயில் ஒன்று தென்பட்டது. "அதான் ஜெம்பகேஸ்வரர் கோயில்..." சிரித்தார் குருக்கள். அமைப்பிலேயே புராதனக் கோயில் என்று தெரிந்தது.


"இதான் எங்காம். இறங்குங்கோ.... ஒரு வா காஃபி சாப்ட்டுட்டு போகலாம்..." என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கூப்பிட்டார். சூரிய பகவான் வேக வேகமாக மேற்கில் இறங்கிக்கொண்டிருந்தார். வாசலில் ஊஞ்சலாடியது. வயல்காட்டு வேளை முடிந்து அரையாடைப் பெரியவர் பெடலுக்கு எண்ணெய் போடாத சைக்கிளில் க்ரீச்..க்ரீச்சி கடந்து சென்றார்.
"மாமா... அணைக்கட்டு சிவன் கோயிலுக்குப் போய்ட்டு வந்துடலாம். இருட்டிடப்போறது..." மீண்டும் பின்னாலிலிருந்து குச்சி போட்டார் அக்கௌன்ட்ஸ் வெங்கட்ராமன் சார். "ம்.. சரி" என்று கு.மா மசிந்தார்.
அணைக்கட்டு போகும் வழியெங்கும் நிலக்கடலை, கரும்பு, நெல் என்று பரவலாகப் பயிரிட்டிருந்தார்கள். கண்களில் பச்சை ஒட்டிக்கொண்டது. வெய்யில் தெரியாமல் நெஞ்சுக்கு ஜிலீர்.
"எல்லோரும் போர் தண்ணிய நம்பிதானே விவசாயம் செய்யறாங்க? இல்ல வானம் பார்த்த பூமியா?" என்றேன் குருக்களிடம்.
"இங்க ஒரு பெரிய ஏரி இருக்கு. அணைக்கட்டு தாண்டி. இப்போல்லாம் தண்ணியில்லை.. சாகுபடிக்காகதான் அணைக்கட்டு. இப்ப "அணைக்கட்டு"ங்கிறது ஊர்ப் பேரோடு நின்னு போச்சு..."
அணைக்கட்டு ஊருக்குள் சக்கரம் நுழைவதற்குள் ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோ இருந்தது. அதன் பெயர்ப்பலகை முகவரியில் பஜார் வீதி. பக்கத்தில் ஒரு துணிக்கடை. எதிர்புறம் சேவு போட்டுக்கொண்டிருந்த ஒரு பலகாரக் கடை. மன்னையிலிருந்து கோட்டூருக்கு அம்மாவை டூவீலரில் கொண்டு போய் விட்டபோது எதிர்வரும் கிராமங்கள் வரிசையாக கண்முன்னே சுழன்றது.
"இங்க ஒரு கிராமக் கோயில் இருக்கு.. பிடாரின்னு போட்ருக்கு..." என்றேன்.
"திருவிழாவுல வள்ளித் திருமணம்... திரௌபதி சபதம்னு... ஒரு வாரம் கூத்து தொடர்ந்து நடக்கும்... கூட்டம் ஜேஜேன்னு இருக்கும்... இதுதானே எங்க்களுக்கு பொழுதுபோக்கு..." மீண்டும் என்னுள்ளிருந்த கிராமத்தான் மன்னைக்கு மானசீகமாக சென்று வந்தான். மனசுக்குள்ளே அரிச்சந்திரா கூத்து ஈஸ்ட்மேன் கலரில் ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் ஓடியது. சேப்பாயி ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்த போது நினைவுலகத்திற்கு வந்தேன்.
ம். இதோ கோயில் வந்துவிட்டது. கோபுரமில்லை. மதிலில்லை. பெரிய திருச்சுற்று இல்லை. ஆனால் கோயிலில் ஏதோ ஒரு ஈர்ப்பு மட்டும் இருந்தது. மன்னை டி.டி.பி ரோடு மாரியம்மன் கோயில் சுற்றளவு இருந்தது. ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனி கோயில் போன்ற குட்டிக் குட்டிச் சன்னிதிகள். அம்மன் சன்னிதி கோபுரத்தில் கோலூன்றிய ஒரு கிழவரின் சுதைச் சிற்பம் இருந்தது. என் கண் போன திக்கைப் பார்த்து குருக்கள் மாமா "இவர் தான் இந்தக் கோயிலைக் கட்டினவர்... அவர் ஞாபகார்த்தமா ஒரு சுதை.." . சிரித்தார்.
ஸ்வாமி முன் பெரிய நந்தி. இறைவன் அறம்வளர்த்த நாயகர். இறைவி அறம்வளர்த்த நாயகி. "தர்மசம்வர்த்தினி... நம்ம திருவையாத்து அம்மன் நாமகரணம்..." என்றார் அந்த அக்மார்க் காவேரிக்கரைக்காரரான வெங்கட்ராமன். சட்டென்று க்ஷண நேரம் ஐயாரப்பனையும் தர்மசம்வர்த்தினியையும் அந்த பிரம்மாண்ட கோயிலுக்கும் மனம் சுற்றி வந்தது.
ஸ்வாமி சன்னிதி அருகே முளைத்திருந்த எலுமிச்ச மரம் காய்த்துத் தள்ளியிருந்தது. மானஸா ரெண்டு காய் பொறுக்கி கைக்குள் அடக்கிக்கொண்டாள். "ஊஹும்... கீழப் போடு.. சிவசொத்து குல நாசம்..." என்றேன். "இந்தக் கோயிலுக்குன்னு நிலமெல்லாம் எழுதி வச்சுருக்கா.. யாரு படியளக்கிறா? ரெண்டு எலுமிச்சங்கா குல நாசமாக்கும்.." என்றார் அசுவாரஸ்யமாய்.
பத்து நிமிடங்களில் தரிசனம் முடிந்து நத்தம் புறப்பட்டோம். அணைக்கட்டு சிவன் கோயில் எதிர்ப்புறமும் நூறு வயசு கண்ட ஒரு பிரம்மாண்ட அரசமரம். எல் நினோ மழை பெய்தாலும் வேரில் நின்று கொண்டால் சொட்டுத் தண்ணீர் தலையில் விழாதபடி கான்க்ரீட் கூரை போல பருத்த கிளைகள். க்ளிக். ஒரு படமெடுத்துக்கொண்டேன்.
திரும்பும் வழியில் குருக்கள் மாமாவிடம் இன்னும் கொஞ்சம் பேச்சுக்கொடுத்தேன்.
"மாமாவுக்கு நிலமெல்லாம் இருக்கோ?"
"அதெல்லாமில்லை சார். இப்ப எனக்கு என்ன வயசு இருக்கும்ங்கிறேள்?"
"எழுபது?"
"எழுபத்து மூணு. ஐம்பது வருஷமா இதே வேலைதான். சுத்துப்பட்டு கிராமங்கள்ல மூணு நாலு கோயில் பார்த்துக்கிறேன். அறநிலையத்துறை சம்பளம் எப்படி வரும்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். மத்தபடி கோயிலுக்கு வர்ற சேவார்த்திகள் கொடுக்கிற தக்ஷிணைதான்."
"போதுமா? வாய்க்கும் கைக்கும் சரியா இருக்கா?"
"அவனுக்கு கைங்கர்யம் பண்றவாளை அம்போன்னு விட்டுடுவானா? தட்டுல வருமானம் குறைஞ்சுபோச்சுன்னாக்க வேற கோயில் அபிஷேகம் அலங்காரம் கும்பாபிஷேகம்னு கூப்பிட்டு அனுப்புவான் கைலாசம்..." என்றார் நெருங்கிய தோஸ்த் போல ஈஸ்வரனை.
நத்தம் வந்தடைந்தோம்.
திருமகள் சிவபெருமானை நோக்கித் தவமியற்ற இந்த செண்பகவனத்துக்கு வந்தாள். பல வருடங்கள் இடைவிடாத தவம். மனம் குளிர்ந்த சிவபெருமான் அங்கு ரிஷபத்துடன் எழுந்தருளினார். லக்ஷ்மியின் தவத்தை மெச்சினார். நந்தி தேவர் லக்ஷ்மிக்கும் சிவபெருமானுக்கும் பாதுகாப்பாக வெளியே வனம் பார்த்துக்கொண்டு அமர்ந்தார். சக்தியும் அங்கு வரவே "திருமகளே! உன்னுடைய தவத்தினால் சந்தோஷமடைந்தேன். இத்திருத்தலதிற்கு எழுந்தருளிய சௌந்திர நாயகியும் தனது கரங்களில் பாசாங்குசத்திற்குப் பதிலாக தாமரையும் நீலோத்பலத்தையும் ஏந்தி காட்சிதருவாள்" என்று திருவாய் மலர்ந்தார்.
இச்சமயத்தில் ஈசன் திடீரென்று கிளம்பிச் சென்று பாலாற்றிலிருக்கும் ஒரு சிறு குன்றுக்குப் போய் லிங்காவாய் யோகத்தில் அமர்ந்தார். நெடுநேரமாகியும் சிவனார் திரும்பாததால் உமையம்மை அவரைத் தேடி சென்றாள். அங்கே ஒரு பாம்பு அவருக்குக் குடை பிடிக்க பசு ஒன்று பால் சொரிவதைக் கண்டு மகிழ்ந்தாள். அந்த சிறுகுன்றே பரமேஸ்வரமங்கலம்.
சென்ற இரு பாராக்கள் குருக்கள் மாமா நிதானமாகச் சொன்ன ஸ்தல புராணம். நேரம் கருதி உங்களுக்காக இரு பாராக்களில் அடைத்துள்ளேன். அவர் விவரித்த விதம் படு ஜோர். ”கேட்டீங்கன்னா.. ம்.. பார்த்தோம்னா... ஹேஹ்ஹே...அப்டியே......” போன்ற பதங்களைப் போட்டுப் பேசினார். பாட்டி மடியில் படுத்துக்கொண்டு புராணம் கேட்ட சுகம்.
நத்தம் கோயில் அர்த்தமண்டபத்துள் நுழையும் போது யாரோ உள்ளூர்க்காரர் கைலியுடன் சனீஸ்வர பகவானுக்கு தீபம் போட்டுக்கொண்டிருந்தார். அழகிய சிவலிங்கத் திருமேனி. சொக்கி மனமுருகி தரிசித்துக்கொண்டிருக்கும் போது வாசலிலிருந்து "இங்க வாங்கோ..." என்று தீபாராதனைத் தட்டோடு குருக்கள் கூப்பிட்டார்.
"இங்க அம்பாளுக்குதான் முதல் மரியாதை. அர்ச்சனை அபிஷேகமெல்லாம் அம்பாளுக்குப் பண்ணிட்டுதான் சர்வேஸ்வரனுக்கு..."
"திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில்ல கூட இதே வழிபாட்டு முறைதான்..." என்றேன்.
மடிசாரில் சௌந்தர்ய நாயகி அம்மன் திவ்ய சௌந்தர்யத்துடன் காட்சியளித்தாள். தீபாராதனையில் மஞ்சள் பட்டில் ஜொலித்தாள். பக்கத்தில் சுப்ரமண்யர் சன்னிதி. ஆறுமுகனாக அழகுமயில் ஏறியிருந்தான். பின்னர் கடைசியில் ஜெம்பகேஸ்வர ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து தீபாராதனையும் காண்பித்தார். கருவறைக்கு முன்னமிருந்த மண்டபத்தில் உற்சவர்களாக ஸோமாஸ்கந்தர், ஆடலரசன், கணபதி என்று திவ்யரூபமாக பஞ்சலோகத்தில் இருந்தார்கள்.
அர்த்தமண்டபத்தில் அழகிய சீதா லக்ஷ்மண ராமச்சந்திர மூர்த்தியும் அருள்பாலித்தார். "ராமர் எங்கே இங்கே.." என்று கேட்க மனம் வரவில்லை. லக்ஷ்மி சிவனை பூஜை செய்ய வந்திருக்கும் போது ராமன் வந்தால் தப்பா என்ன?
வெளியே இருள் பரவத் தொடங்கியிருந்தது. வாசலுக்கு வந்த பின்னர் கோயிலைத் திரும்பிப் பார்த்தேன். கர்ப்பக்கிரஹத்தில் தொங்கு விளக்கு எரிய திருவாசிக்குப் பின்னர் ஏற்றிய விளக்கு வட்டமாக பல பிம்பமாகி அங்கே ஈஸ்வரன் பிரசன்னமாகியிருந்தார்.
குருக்கள் வீட்டிற்கு சென்று அந்த ஒரு வா காஃபி சாப்பிட்டோம். யத்கிஞ்சிதம் தக்ஷிணை கொடுத்து நமஸ்கரித்தோம். "திருப்பணி நடக்கிறது. எதாவது கொஞ்சம் விளம்பரப்படுத்த முடியுமான்னு பாருங்கோ.. அதுவே பெரிய உபகாரம்..."
"ம்.. நிச்சயமா.. நமஸ்காரம் மாமா... வரேன்.."
சேப்பாயி கிராமத்து சாலைகளில் வளைந்து நெளிந்து ஈஸியாரைப் பிடித்தாள். குறுக்கும் நெடுக்குமாக சில இருசக்கரர்கள் சர்க்கஸ் காண்பித்தார்கள். "பாம்....."மென்று அலறிக்கொண்டே லாரி ஒன்று கடந்து போய் மறைந்தது. யார் மீது மோதுவதற்கு இவ்வளவு வேகம்?
"பாண்டுரெங்கனையும் பார்த்துட்டுப் போடுவோம்..." என்று அக்கௌன்ட்ஸ் வெங்கட்ராமன் சார் சொன்னபோது மணி முன்னிரவு 7:15.
"ஆனா கோயில் ஏழரை வரைத்தான் நடை தொறந்திருக்கும்...." அவரே இதையும் சொன்னார்.
"என்ன பண்ணலாம்? நேரே ஆத்துக்கு...."
"வண்டியை விட்டலாபுரத்துக்கே விடுங்கோ.. எத்தன மணிக்கு நடை சாத்துவான்னு பாகவதருக்குப் ஃபோன் பண்ணிக் கேட்கறேன்.."
இப்போது நாம் விட்டலாபுரம் நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.

பரமேஸ்வரமங்கலம்


மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஈஸியாரில் சாலை வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஒரே வழியில் இருபக்கம் செல்வோரும் போருக்குப் போவது போல் உக்கிரமாகக் கடக்கிறார்கள். ஜாக்கிரதையாக மாயாஜாலுக்கு அப்புறம் செல்வோம். அனுதினமும் கல்யாண வைபோகம் காணும் திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாளை ஏற்கனவே தரிசித்திருப்போம். இன்னும் சற்று முன்னேறி மஹாப்ஸைத் தாண்டி புதுச்சேரி செல்லும் ஈஸியாரைப் பிடிக்க வேண்டும். இன்னும் மேலேறினால் ரோடோரத்தில் கொஞ்சம் பெரியக் கடைத்தெரு போல வருவது புதுப்பட்டினம். நுறுக்கு மேல் பறந்திருந்தால் படிப்படியாகக் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவும். இப்போது காத்தான் கடை என்ற சிற்றூர் வரும். அங்கே வலதுபக்கம் திரும்பினால் வரும் கிராமத்தின் இலக்கணமான டீக்கடை தாண்டி சற்று தூரத்தில் ஆடு மேய்க்கும் பெரியவரையோ தலையில் புல்லுக்கட்டு சுமந்து வரும் சிறுமியோ அல்லது சுள்ளிக்கட்டோடு விரையும் பாட்டியையோ வண்டியின் ஜன்னலிறக்கி “பரமேஸ்வரமங்கலம்.....” என்று கேட்க ஆரம்பித்தால் ”ஓர்வண்டி சாலை”யைக் காட்டி “இப்படியே போவலாம்....” என்று திசை சொல்வார்கள்.

ஊருக்குள் சௌம்ய தாமோதரப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். ”இந்தப் பெருமாள் பிரயோகச் சக்கரம் வச்சுண்டிருக்கிறார்...” என்றார் உடன் வந்த அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார். வெற்றிலைப் பாக்குப் போடாத திருவையாற்றுக்காரர். கவனிப்பாரற்றுக் கிடக்கும் புராதனக் கோயில்களைத் தேடி அலைபவர். எனக்கு இக்கோயில்களுக்கு வழிகாட்டிய பெருமகனார். ஐந்தாறு தெரு கடந்துவிட்டோம். ஊரின் கடைக்கோடியில் வடக்கே ஓடும் பாலாற்றாங்கரையில் அமைந்துள்ளது. பரமேஸ்வரமங்கலம் கைலாசநாதர் கோயில். கரைக்கப்பால் சாகுபடி செய்யும் வயற்பரப்பு பச்சைப் பசேல் என்று கண்ணில் முட்டுகிறது. பறவைகளின் க்ரீச்சொலியை தவிர்த்து நிசப்தமான சூழல். பாலாற்றில் தன்ணீர் வரத்து இருந்தால் கொஞ்சம் ”சல..சல..” சேர்ந்துகொள்ளலாம். மற்றபடி தியானம் செய்யத்தூண்டும் ஒரு தெய்வீக அமைதி கொஞ்சும் இடம். கரையிலிருந்து நூறடி ஆற்றுக்குள் கோயில். கோயிலிலிருந்து கிழக்கே பார்த்தால் எறும்புகளாய் ஊறும் ஈஸியார் போக்குவரத்து தெரிகிறது.

“கோயிலின் வயசு ஆயிரம் வருஷத்துக்கு மேலே இருக்கும். ஒரு கற்பாறையில கைலாசநாதரும் இன்னொரு பாறையில கனகாம்பிகையும் இருந்தா. ரொம்ப நாளா திருப்பணி பண்ணாம இருந்தது. ரவிசங்கர்னு ஒருத்தர் மொத்தமா பண்ணினார். அவருக்கு அப்படியொரு ஈடுபாடு”
“புண்ணியம் பண்ணியிருக்கார் மாமா” என்றேன்.
மூலவர் கைலாசநாதர். லிங்க சிரசில் ருத்ராட்ச மாலையுடன் கிழக்கு பார்த்த திருமேனி. பளபளவென்று பட்டு வேஷ்டியில் மினிக்கினார். எழுபத்து மூன்று வயது சிவாச்சாரியார் ”சிவாய நம:, சிவதாரய நம: சம்புவே நம; சசிசேகராய நம: கட்வாங்கினே நம:....” என்று கொன்றை மலரால் அர்ச்சனை செய்தார். தீபாராதனையின் போது மனசுக்குள் “நமஸ்தே அஸ்து பகவன்...” என்று ருத்ரம் ஓடியது. தெற்கு நோக்கிய கனகாம்பிகை கண் நிறைக்கிறாள். மஞ்சள் நிற மடிசாரில் கொள்ளை அழகு. திருவலம் வருகையில் மேற்கு திசையில் தெரியும் விஸ்தாரமான பாலாற்றில் என்பது சதவிகிதம் வீடு கட்டும் மணலும் பத்து சதவிகிதம் சிற்றோடையாய் நீரும் மீதி பத்து சதவிகிதம் கரையோற நாணலும் மண்டிக் கிடந்தன. வடமேற்கில் சுப்ரமண்யர் சந்நிதி. வடகிழக்கில் நவக்கிரஹ சன்னிதி. வலம் வந்ததும் நமஸ்கரித்து எழுகிறோம். கொடிமரமில்லை தென்முகக் கடவுள் தனி சன்னிதியில் ஊர்பார்க்க பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.

கிழக்கு முகமாக கோயிலின் கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு சிறிதுநேரம் நின்றேன். “போன மழையில கோயில் வாசல் வரைக்கும் தண்ணீ அடிச்சுக்கிட்டு ஓடிச்சு...” என்று அர்ச்சகரின் பிள்ளை சொன்னது காதில் ஒலித்தது. கண்ணை மூடினால் நீரின் சலசலப்பு காதில் கேட்டது. அப்போது எந்தை ஈசன் தோன்றி “என்ன வேணும் ஆர்வியெஸ்?” என்று கேட்டால் ”இந்த பாலாற்றில் கரைதாண்டாத நீரும் முப்போதும் கனபாடமாக ஒலிக்கும் ருத்ரமும் இங்கேயே தங்கும் யோக்யதையும் அருள வேண்டும்” என்று சட்டென்று கேட்கத் தூண்டும் இடம்.
“ஐம்பது நூறு கனபாடிகளைக் கூட்டிண்டு வந்து மஹா அதிருத்ர யக்ஞம் பண்ணினா நன்னாயிருக்கும்” என்ற என் அவாவைக் குருக்கள் மாமாவிடம் சொன்னேன்.
“தோ.. இப்ப வர்ற பங்குனி உத்திரம் கூட விசேஷமா செய்வோமே. ஏற்கனவே ரெண்டு மூணு தரம் ருத்ர ஜபம் பண்ணியிருக்கோம்” என்றார் சலனமில்லாமல். விஸ்ராந்தியாக உட்கார்ந்த போது தொன்னையில் தந்த எலுமிச்சை சாதப் பிரசாதம் தேவாமிர்தம்.
இங்கேயே இருக்கமாட்டோமா என்று ஏங்க வைத்த கோவில்.
அடுத்து நத்தம் ஜெம்பகேஸ்வரர்......

சிவராத்திரி


சில வருடங்களுக்கு முன் வரை மஹா சிவராத்திரியில் அருணாசல கிரிவலம் சென்றுகொண்டிருந்தேன். அது ஒரு அற்புதமான இறை அனுபவம். அமைதியான தனிமையின் அட்டகாசமான பேரானந்தம். சிவக்ருபா.
கிரிவலப் பாதையில் அருள்பாலிக்கும் எல்லா ஈஸ்வர ஸ்வரூபத்தையும் அபிஷேக அலங்காரத்துடன் தரிசிக்கும் பாக்கியம். சில மூர்த்தங்கள் டாலடிக்கும் வெள்ளி நாகபரணம். சிலருக்கு ஜொலிக்கும் தங்க நாகாபரணம். தோளெங்கும் மாலைகளுடன் ”ஏக வில்வம் சிவார்ப்பணம்”. வில்வார்ச்சனை. தேவலோகமாய்ப் பரவும் ஊதுபத்தியோடு கலந்த விபூதி வாசம். சுடலைப்பொடி பூசியவனுக்கு கற்பூரார்த்தி. கப்புன்னு அப்டியே எல்லாத்தையும் விட்டுட்டு ”ஹர ஹர ஹர மஹாதேவா.. தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....”ன்னு உதறிட்டுப் போய்டலாமான்னு கட்டி இழுக்கும் உணர்வு. காலோடு கால் பின்னும் கூட்டமில்லாமல் கதை பேசாமல் பாதையின் விளக்கொளிக்கு விளக்கொளி இடைவெளியில் இறைவனைத் தரிசிக்கலாம். மௌனமாய் மலையாய் கவனிக்கும் அருணாசலேஸ்வரரை தியானித்து அடிக்கொருதரம் ஒரு “சிவா”. ஸ்மரணாத் அருணாசலே.
சென்ற வருடமும் இவ்வருடமும் காஞ்சி கைலாசநாதர் தரிசனம் கிடைக்கும் பேறு பெற்றேன். இம்முறை இன்னும் ஸ்பெஷல். சங்கரநாராயணன் என்னும் சம்ஸ்க்ருத பேராசிரியருடன் அப்பல்லவப் பொக்கிஷத்தைக் கண்டு கண்ணுக்கு இன்பமும், உள்ளே பட்டை லிங்க மூர்த்தியாய் அருள்பாலித்த கைலாசநாதரால் ஆன்ம சந்தோஷமும் அடைந்தேன்.
“இதுதான் தமிழ்நாட்லயே முதல் கோபுரம் என்று ஏழு படி ஏணியில் ஏறி நின்றால் உச்சி தொடுமளவு வாயில் கோபுரத்தைக் காட்டினார் முனைவர் சங்கரநாராயணன். ”கஜசம்ஹாரர்... சோமாஸ்கந்த மூர்த்தி, பிக்ஷாடனர்.. இங்க க்ரூப்பா நிக்றவாளோட தலை எண்ணுங்கோ.. பதினொன்னு இருக்கா? ஏகாதச ருத்ரர்கள்.. அதோ அந்தப் பக்கம் துவாதச ஆதித்யர்கள்.. ” என்று திருவலப்பாதை கோஷ்டங்களில் இருந்த சிவஸ்வரூபங்களையும் சிற்பங்களையும் எனக்கு விளக்கி பிரதக்ஷிணம் வந்தார். அந்தக் கோயில் அவரது ரத்தத்தில் கலந்திருப்பது அவரது கண் போன திக்கில் இருட்டாக இருந்த இடங்களில் இருக்கும் சிற்பங்களைக் கூட எட்ட நின்று விவரித்த தோரணையில் தெரிந்தது.
”பார்வதி கல்யாண..” சிற்பத்தருகே நின்று “சிவனோட குமிழ் சிரிப்பைப் பாருங்க.. கல்யாணம் ஆயிடுத்துன்னு சந்தோஷம் முகத்துல தெரியறது...” என்று சொன்னவுடன் கொஞ்சம் அத்துமீறி ஈஸ்வர உதடுகளைத் தொட்டுப் பார்த்தேன். பிறைசூடிய பெருமானின் உதடுகளும் பிறைச்சந்திர வடிவத்தில் செதுக்கியிருந்தது. தள்ளி நின்று பார்த்தபோது சிவனார் வெட்கி மோகனமாகச் சிரிப்பது போலிருந்தது. “விஷ் யூ ஹாப்பி மேரீட் லைஃப்” சொல்லி நகரவேண்டியதுதான்.
சிவராத்திரியன்று சிவானந்தத்தில் என்னைத் திளைக்க வைத்த ஸ்ரீ.சங்கரநாராயணனுக்கு நன்றிகள் பல. ”கொஞ்சம் சொல்லிக்கொடுங்க பாஸ்” என்று என்னுடைய அஞ்ஞானத்தை அகற்ற வேண்டிக்கொண்டு புறப்பட்டேன். வழிநெடுக சிவ தரிசனம். பேட்டையில் சந்து திரும்பும் முன் கூட்டம் அம்மியது. மெதுவாக ஜன்னல் இறக்கிப் பார்த்தால் தெருவோரத்தில் கொட்டைப்பாக்களவு இருக்கும் ஒரு சிவலிங்கத்திற்கு சொப்புச் சொம்பில் பாலாபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. சுற்றி பத்து பேர். நெற்றியில் குறுக்காக பட்டையாய்ப் பூசிய விபூதி. ஜன்னலை இறக்கினால் நாசியைத் தொட்ட சாம்பிராணி மணம். இருதய குகையின் மத்தியில் ஏதோ ஒரு இனம் புரியாத பரம திருப்தி. இந்த நெஞ்சு நிறைதலைத்தான் ஆன்மா தேடுதல் என்கிறார்களோ? இச்சிறுவனுக்கு எப்போது புரியும்? தேடுவோம்...
ஓம் நமசிவாய!

வைஷ்ணவ் கல்லூரி விருது

காரும் பஸ்ஸும் ராட்ஷசத்தனமாய் விர்ர்ர்ர்ர்ரென்று சீறும் நுங்கம்பாக்க பிரதான சாலை. அங்கிருந்து இருநூறு மீட்டரில் சாந்தமாய் ஒரு இடம் இருக்க முடியுமா என்று நான் அடிக்கடி ஆச்சரியப்பட்டதுண்டு. கலைவாணி நித்ய வாசம் செய்யும் இடம். எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரி. நேற்று கிடைத்த சிறப்பு அழைப்பிற்கிணங்க அக்கல்லூரியின் இருபத்து நான்காம் வருட கல்லூரி தினத்திற்காக மாலை ஐந்தரைக்கு நானும் எனது பாஸாகிய நண்பர் Ravindran Narayanan, மூத்த இளைஞர்Saravanan Manickam மற்றும் Kalpana Naidu ஆகியோருடன் ஆஜராகியிருந்தேன்.
லேசாய்த் தலைகோதும் தென்றல். சூரியன் மேற்கில் சாய்ந்த அந்திவானம் பார்த்த மேடையில் மூன்று நங்கைகள். எதிரே சுமார் ஐநூறு பேர் நிசப்தமாய்க் காத்திருந்தார்கள். ஆண்டுவிழாவின் பிராதன விருந்தினராக பார்க்லேஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் உமா கிருஷ்ணன் வந்தவுடன் சம்பிரதாயமாக விநாயகர் பாடலுடன் விழா அமர்க்களமாகத் தொடங்கியது.
அடு
த்ததாகப் பாடியவர் கடலூர் திரு. சுப்ரமண்யத்தின் ரேவதி ராக க்ருதியான “ஜனனி, ஜனனி.. ஜனனி.. ஜகத்காரணினி..... பரிபூரணி ” பாடலின் பூர்வாங்கமாக ஜெட் வேகத்தில் எடுத்த ஆரோகணத்தில் காதுகொடுத்த ஜனம் மொத்தமும் சொக்கிப் போனது. பிரமாதமாகப் பாடினார். பிருகாக்களில் பிச்சு உதறினார். ”கடைக்கண் பாராயோ.. கருணைப் பொழிவாயோ...”வில் குழுமியிருந்த சக்திகளின் சக்தியைப் பாடலாய்க் காட்டினார்.
முப்பெருந்தேவியவராக அமர்ந்திருந்தவர்களில் கடைசியாகப் பாடியவர் அம்மாலையை இன்னும் அழகாக்கினார். எம்மெஸ் அம்மாவின் “காற்றினிலே வரும் கீதம்” பாடினார். ”நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்...
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்....” என்று பாடும் போது வீசிய காற்றில் மெல்ல இமைகள் மூடி உள்ளே பார்த்தால் கண்ணன் வேங்குழலுடன் நின்றான். குரல்களின் இன்னும் மெருகேற்றி கோரஸாக விட்டல பாண்டுரங்காவின் அபங்கோடு பாடல்களை நிறைவு செய்தார்கள்.


இதர கலை நிகழ்ச்சிகள் ஆரம்பத்திலேயே களை கட்டியது. பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி என்று பல நாட்டிய வகையறாக்களின் கூட்டுப் பங்களிப்பு பார்க்க அபாரமாகயிருந்தது. அவர்களது உழைப்பு பாந்தமான நடன அசைவுகளில் தெரிந்தது. பரதம் ஆடிய பெண் மானென துள்ளிக் குதித்ததை படம் பிடிக்க என்னிடம் இருக்கும் ஐஃபோனின் அடாசு கேமிராவில் முடியாது. கன்னத்தில் முத்தமிட்டாலிலிருந்து “ஒரு தெய்வம் தந்த பூவே...” பாடிய பெண்ணும் நன்றாக பாடினார். முன்பெல்லாம் பேப்பரில் எழுதி காற்றில் படபடக்க மேடையில் பிடித்துப் பாடியவர்கள் இப்போது மொபைலில் ஏற்றிக்கொண்டு பாடுகிறார்கள். கரோகியின் மீட்டருக்கு இம்மியளவு பிசகாமல் குரலில் சின்மயியை எட்டித் தொடும்படி பாடியது பாராட்டத்தக்கது.

கலை நிகழ்ச்சிகள் முடிந்து முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். NAAC என்கிற கல்லூரிகளுக்கெல்லாம் மதிப்பீடு மற்றும் தரச்சான்றிதழ் அளிக்கும் நிறுவனம் எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரிக்கு ”A" கிரேடு அளித்திருக்கிறார்கள். (3.56/4). மாணவிகள் மத்தியிலிருந்து ஒரு “ஓ” கோஷம் விண்ணைப் பிளந்தது. கல்லூரியின் பல்வேறு துறை சாதனைகளை பட்டியலிட்டு விளக்கினார். அவருக்கு இல. கணேசன் கையால் பாரதிய வித்யா பவனின் “படைப்புல சிற்பி” விருது கிடைத்திருக்கிறது. பின்னர் எங்கள் சேர்மேன் ஸ்ரீ. மனோஜ் குமார் சந்தோலியா அவர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றி செம்மையாகப் பேசினார்.

உமா கிருஷ்ணன் தலைமையுரை பெண்களுக்கான எழுச்சியுரையாக அமைந்தது. தனது வாழ்வியல் சம்பவங்களிலிருந்து உதாரணங்களைச் சொல்லி அங்கு குழுமியிருந்த மாணவியர் கூட்டத்தை முடுக்கி விட்டார். கல்லூரியில் விசேஷமான செயல்கள் செய்த மாணவியர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கிச் சிறப்பித்தார்கள். கைவலிக்க வலிக்க ஆறேழு பக்க ஏ4 லிஸ்ட்டில் அடைத்திருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அதோடு சேர்த்து ஏதோ எங்களால் இயன்ற யத்கிஞ்சித வேலைக்கும் ஒரு விருது வழங்கி பெருமைப்படுத்தினார்கள். மகிழ்ச்சி.

”ரோஸரில எனக்கு ஜூனியர் உமா. நாங்க ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் ரேங்குக்கு அவார்ட் வாங்க நிற்கும்போது பார்த்து சிரிச்சிப்போம். பேசிப்போம்” என்று பெருமிதத்துடன் சொல்லும் போது வாழ்க்கையில் அவர்கள் ஏறிய ஏணியின் அளவு தெரிந்தது.
முதல்வர் ஶ்ரீமதி. லலிதா பாலகிருஷ்ணனின் சீரிய தலைமையிலும், எங்கள் சேர்மேன் ஸ்ரீ மனோஜ் குமார் சொந்தாலியாவின் சீர்மிகு வழிகாட்டுதலிலும் எம்.ஓ.பி வைஷ்ணவ் மேன்மேலும் பல சிகரங்களைத் தொடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
பின் குறிப்பு: ஆடிய பாடிய சக்தி ஸ்வரூபங்களின் பெயர்களை மறந்தமைக்கு மன்னிக்கவும்.

புதுசாய் எழுதும் பொது பரீட்சை

அன்று பிள்ளையார் கோவிலில் கூட்டம் அம்மும். மன்னையில் ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகருக்குக் குட்டிக் கொண்டு நெற்றியில் விபூதி மணக்க அட்டையோடு பரீட்சை ஹாலுக்குள் நுழைவோம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தினம் கூட ஆதிகால TNSC பாங்க் விளம்பர ”கவலையின்றி சுற்றித் திரியும்” சிட்டுக்குருவி போல வாழ்ந்த ”நாளை மற்றொருமொரு நாளே..” யதார்த்த ஜி.நாகராஜன்கள் நாங்கள். வினயாவுக்கு இன்று பத்தாம் வகுப்புப் பொதுப்பரீட்சைகள் ஆரம்பம். பள்ளிக்கூட பரீட்சை அறை வாசல் காட்சிகள் என்னை டரியலாக்கிவிட்டது.
நாடு காக்கப் போருக்குப் போகும் மகனுக்கு நறுநெய் தடவி கையில் வேல் கொடுத்து அனுப்புவது போல நெற்றியில் முத்தமிட்டு “ஆல் தெ பெஸ்ட்” சொன்ன அம்மாவுக்கு கண்களில் கனவுக் குளம் தேங்கி நிற்கிறது. தகப்பனுடன் வந்த பெண் குழந்தைகள் தேவலாம். சட்டென்று “பை ப்பா..” சொல்லி சிட்டாய் நகர்ந்துவிட்டார்கள்.
ஒரு அம்மாள் தன் பெண் பள்ளி வாசலில் நுழையும் போதே தன்னை விட்டு புக்ககம் போகும் பெண்ணைப் போல கண்ணீர் சிந்துகிறார். சில அப்பாக்கள் கட்டை விரல் ஒடிந்து ஏகலைவனாகி விடுவார்களோ என்றஞ்சும்படி காற்றை தம்ப்ஸ் அப்பால் கிழித்துக் காண்பித்து பரீட்சைக்கு அனுப்புகிறார்கள்.
“பயப்படாம எழுது. எல்லா எக்ஸாம் போலத்தான். ஆல் தெ பெஸ்ட்” என்றேன். சிரித்துக்கொண்டே உள்ளே ஓடிவிட்டாள். சிறிதுநேரம் விதம்விதமான அப்பாம்மாக்களை வேடிக்கை பார்த்தேன். திரும்பிவிட்டேன்.
பத்தோ, பன்னிரெண்டோ, கல்லூரியோ சுழி முக்கியம். அதைவிட உன்னதமான உழைப்பும் முயற்சியும் அவசியம்.

இசையில் தொடங்குதம்மா....

சில நொடிகளில் உங்களைக் கொள்ளையடிக்கப் போகிறது என்பது தெரியாத அடக்கமான தொடக்கம்தான். பாடலை ஆரம்பிக்கும் ஆண் குரலில் இதமான மிளிர்வு. வார்த்தைகளில் ஏதோ ஒரு நளினம். அஜோய் சக்ரபர்த்தியின் "வசந்தம் கண்டதம்மா..."வில் 'க'வுக்கும் 'ண்'க்கும் இடையில் வரும் ப்ருகாவும் அதை வெண்ணையாய் ஈஷிக்கொண்டே தொடரும் கோரஸுக்குப் பிறகு வரும் அடுத்த ப்ருகாவும் தரையிலிருந்து உங்களை வானத்துக்குப் போட்ட ஒரு எஸ்கலேட்டரில் ஜிவ்வென்று சுகமாக ஏற்றுகிறது. தனிமையில் அமர்ந்து கண்மூடிக் கேட்டால் உள்ளுக்குள் உறைந்தும் கரைந்தும் போய்விடுகிறோம்.
"தேய்ந்து வளரும் தேன் நிலாவில்..."என்று வளைத்து குழைந்து பாட ஆரம்பித்து "வானத்தின்..." என்பதில் உசரக்கப் போய் ஒரு சுகமான நிரவல்... அது சொர்க்கத்துக்குப் போகும் பயணத்தைத் துரிதப்படுத்தும் ஆக்ஸிலரேட்டர்.
இரண்டாவது சரண ஆரம்பத்தில் வரும் தந்தி வாத்தியமும் சக்ரபர்த்தியின் குரலும் அமிர்தத்தையும் தேனையும் குழைத்து நெஞ்சினிக்க காதில் பாகாய் ஊற்றுகிறது. அதன் பின்னர் வரும் "உயிர்களே... உயிர்களே.."வில் ராஜாவின் இந்திரஜாலம் தெரிகிறது. சடசடவென்று ஆரோகணத்தில் பிரயாணித்து அப்படியே அசால்ட்டாக ஒரு அரை வட்டமடித்துத் திரும்பி "இன்பத்தைத் தேடித் தேடி"யில் காட்டருவியாகச் சக்ரபர்த்தியை இறங்கவைத்து நம்மைக் கிறங்கடிக்கிறார். அந்தச் சரண முடிவில் இசை போதையேற்றும் ஒரு குட்டி ஆலாபனை வேறு கொசுறாக. கேரள செண்டை பாணியில் பாடல் முழுக்க பின்னணியில் முழங்கும் தாளவாத்தியம் செவிமடுத்த அனைவரையும் அனிச்சையாக காலாட்ட வைப்பது ராஜாவின் சாகசம்! இசை வழி பொம்மலாட்ட வித்தை!!
ராஜா என்கிற ராக்ஷசன்!!
ஆமாம்.. இசையில் தொடங்குகிறது.... இளையராஜாவின் இசையில் தொடங்குகிறது நமது வசந்தம்!!

சங்கரதாஸ் ஸ்வாமிகள்

யாரோ நெடுநாள் வடை பற்றி பேசப்போறாங்க.. என்று நெடுநெல்வாடை பற்றிச் சொன்னாங்களாம்.... இது அரிமளம் பத்மநாபன் சார்...


“டேய்... அதென்னா யார் கேட்டாலும் நடராஜன் பையன்.. நடராஜன் பையன்னு மரியாதையில்லாமே பேசறே... இனிமே அப்படிச் சொல்லப்படாதுன்னாளாம் ஒரு அம்மா... கொஞ்ச நாள் கழிச்சு அந்தப் பையன்ட்டே யாரோ.. டே தம்பி.. நீ நடராஜன் பையந்தானே....ன்னு கேட்டாராம்... உடனே அந்தப் பய சார்.. அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு
அம்மா சொல்லியிருக்கா...ன்னானாம்...” இது டேக் செண்டர் சாரி சார்....
“ஒரே ஜோக்கை திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டேயிருந்தவர் ஆயிரமாவது தடவை சொல்லும் போது கேட்டுக்கிட்டிருந்த யாருமே சிரிக்காம அமைதியா எழுந்து நின்னாங்களாம்.. ஏன்டான்னா... அந்த ஜோக்கு செத்துப் போயி அதுக்கு மரியாதை செஞ்சாங்களாம்....”
“ஒரு பாடகரை ஒன்ஸ் மோர்.. ஒன்ஸ் மோர்.. ஆடியன்ஸ் கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம்.. ரொம்ப நன்னா பாடறோம்னு அவரும் திரும்பத் திரும்பப் பாடினாராம்.. கடேசில என்னடான்னு பார்த்தா.. ராகம் சுத்தமா வர்ற வரை பாடனும்னுதான் ஒன்ஸ் மோர் கேட்டாங்களாம்...” - கடைசி ரெண்டும் பாலு சார்..
இதெல்லாமே அரிமளம் பத்மநாபன் சார் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பற்றிய Lecdem முடிஞ்ச பிறகு டேக் சென்டர் வாசலில் அடித்த அரட்டை....

**

”ஆர்.டி சாரிக்கு உங்களது பெயரை அனுப்பியிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை டாக் செண்டர் வரவும். அரிமளம் பத்மநாபனின் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பற்றிய லெக்டெம்” என்று இரத்தினச் சுருக்கமான மெயில் மூலம் முதலில் கோபுதான் இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு கொக்கி போட்டார். ஒன்பதரைக்கு நிகழ்ச்சி. எட்டரைக்கு ஆஜராக வேண்டும். முதலில் டிஃபனில் கை நனைத்த பிறகு லெக்டமாக செவிக்கு ஈயப்படும். இதுதான் நிகழ்ச்சி ஃபார்மெட். டாக் செண்டர் மாடியிலிருந்து வீகேயெஸ் பருந்துப் பார்வையில் ”நாரத கான சபா தாண்டியாச்சா... அப்படியே கடைசியில போய் ஒரு யூடர்ன் அடிச்சு வாங்க...”வழிகாட்ட ஒன்பது ஐந்துக்கு ரெண்டாவது மாடிக்கு ஏறிவிட்டேன்.
புஃபே தட்டேந்தியவர்கள் அநேகம் பேர் மெத்தப் படித்தவர்கள் என்பது கிச்சடியும் இட்லியும் தட்டில் சரித்துக்கொள்ளும் போது அகஸ்மாத்தாக காதில் விழுந்த அபார ஆங்கில சம்பாஷணைகளில் தெரிந்தது. ஞாயிற்றுக்கிழமை காலையில் ஷூக்காலோடும் டக்கின் செய்த டீஷர்ட்டோடும் டக்டக்கென்று நடமாடியதில் பாதி பேர் விடுமுறையில் சீக்கிரம் எழுந்து ஷூ பாலீஷ் போட்டுக்கொள்ளும் ஓய்வூதியம் பெறுபவர்கள் என்று ஊர்ஜிதமாகியது. என் போன்ற இளைய தலைமுறைக்கு (?!) விடுமுறையிலும் காலைக் கட்ட சோம்பல்.
மிகச் சரியாக ஒன்பதரைக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. தலைக்கு மேலே ஒரு ஆள் நடக்க ப்ளாட்ஃபார்ம் கட்டி ஃபோட்டோவும் வீடியோவும் எடுக்க அரிமளம் பத்மநாபன் அமர்க்களமாக மேடையேறினார். கோபாலகிருஷ்ண பாரதியின் “இரக்கம் வராமல் போனதென்ன....” பாடலைப் ப்ளேயரில் போட்டு உட்கார்ந்திருந்த அனைவர் தலையும் ஆடிய பின்னர் லெக்டெம் ஆரம்பித்தது என்று எழுதினால்தான் சரியாக இருக்கும். கோபாலகிருஷ்ண பாரதியின் காலம்தான் நாடகக் கலையின் பொற்காலம் என்று சொன்னார் அரிமளம்.

ஆரம்பித்தவுடனேயே பழநி தண்டபாணிப் பதிகத்திலிருந்து ”சீதமது மிகமருவு” என்று கம்பீரமான மோகன விருத்தத்துடன் ஆரம்பித்தார். கணீர்க் குரல். முதுகு தொங்கிப் போனவர்கள் கூட நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். பழநி தண்டபாணிப் பதிகத்தில் கியாதி பெற்ற பாடல் கேபி சுந்தராம்பாள் பாடிய “ஞானப்பழத்தைப் பிழிந்து.....”. உணர்ச்சிகள் ததும்பிய விருத்தங்கள்தான் அக்கால நாடகங்களில் அதிக புழக்கத்தில் இருந்தது. மோகனமா பீம்ப்ளாஸா என்றெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு மதுரை சோமுவிடம் கேட்டால்...”அதெல்லாம் எதுக்கு உனக்கு.. பாட்டை அனுபவி.. ” என்று சொல்லிவிட்டு பாடலின் ஆரோகணம் அவரோகணம் பாடிக்காட்டிவிட்டு போவாராம்.
நாடகம் என்றாலே கூத்து அல்லது ஆட்டம் நிறைந்தது என்று அர்த்தம். நாட்டிய நாடகம் என்று யாராவது சொன்னால் அது கேட்டு கதவு, ஷாப்புக் கடைன்னு சொல்றது மாதிரி என்று ஜோக்கடித்தார். ஊரில் ஏதாவது காலரா, வைசூரி போன்று வியாதிகள் பரவினால் உடனே நாடகம் போடச் சொல்வார்களாம். வியாதியில மனுசன் அவதிப்படும் போது தெம்பூட்டும் விதமாக நாடகம் போட்டுக் குஷிப்படுத்துவார்கள் என்று வீகேயெஸ் என் காதில் ரகஸ்யமாக ஓதினார். இரவு பத்து மணிக்குதான் நாடகம் ஆரம்பிப்பார்கள். விடியவிடிய நடக்கும்.
மன்னையில் திருத்துறைப்பூண்டி ரோடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஹரிச்சந்திரா நாடகம் பார்த்தது நினைவுக்கு வந்தது. ஆம்பிளிஃபையர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு தலைதூக்கிப் பார்க்கும் மேடை உயரத்தில் ”மகனே லோகிதாசா...” என்று சந்திரமதி அலற... மேடைப் பலகைகள் டொம்டொம்மென்று அதிர பயங்கர நடனமாடுவார்கள். ஹார்மோனியப் பெட்டியின் ஊடே குரல் வர பாடல் நடக்கும். மேடையில் சந்திரமதி அல்லலுறும் போதும் அழும்போதும் முதல் மூன்று வரிசை அழும். தாரைதாரையாய் கண்களிலிருந்து ஜலம் கொட்டும். நாத்து நடவு ஜனத்திலிருந்து முப்பது முப்பத்தஞ்சு வயசு இருக்கிற எல்லோருக்கும் குறைந்தது முப்பது ராகமாவது கண்டுபிடிக்க தெரிஞ்சிருக்கும் என்றார் அரிமளம்.
ஐம்பது பாடல்கள் அறுபது பாடல்கள் நிறைந்த படம் என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்து கடைசியில் ஒரு காலத்தில் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம்னு போயிடுச்சு. இசைதான் பிரதானம். சங்கரதாஸ் ஸ்வாமிகளையே ஆட்டமாயிருந்த நாடகத்தை இசையா மாத்திப்புட்டாறுன்னு அவதூறு சொல்றவங்களும் உண்டு. “இப்படியாக.. சத்யவான் சொல்லிவிட்டு...” என்று பீம்ப்ளாஸ்லயே வசனம் பேசிட்டு அடுத்த பாடலுக்குப் போய்டுவாங்க.. என்று நாடகத்தமிழின் பண்டையக் கால இலக்கணத்தை புட்டுப் புட்டு வைத்தார் அரிமளம்.
கிட்டப்பா, சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களின் விருத்த ஸ்டைலைப் பற்றி சிலாகித்தார். கிட்டப்பாவிற்காக பாட்டெழுதிய சங்கரதாஸ் ஸ்வாமிகள் உணர்ச்சிக் குவியல். ”நாடகக் கலை” என்ற புத்தகத்தில் அவ்வை. டி.கே. சண்முகம் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பற்றி எழுதியிருப்பது என் நினைவில் உதித்தது. ஓரிரவில் நான்கு மணி நேர நாடகத்தை அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதும் தெய்வீக ஆற்றல் பெற்றவர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் என்று புகழ்ந்திருப்பார்.
சிலம்பில் வரும் “ஆய்ச்சியர் குரவை” ஒரு அற்புதமான நாடகம். ஸ்வரங்களின் தமிழ்ப் பெயர்களை தோழிகளின் பெயர்களாக வருவதை அற்புதமாக வர்ணித்தார். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு கண்ணகி எழுதும் மடலில் ஒரு சுவாரஸ்யம் வைத்தார். ஆரம்பத்தில் கோவலனைப் போற்றிப் புகழ்ந்து அடக்கமான மனைவியாக ஆரம்பித்து கடைசியில் தலையில் கொட்டு வைத்தது போன்று முடிக்கிறாள் என்று இந்தப் பாடலைப் பாடினார்.
மான்பூண்டியாப் பிள்ளையிடம் லயங்களைக் கற்றறிந்தார் சங்கரதாஸ் ஸ்வாமிகள். சந்தங்களில் சாதித்தார். தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதியார் போன்றோர் தமது பாடல்கள் அவர்கள் பெயர் வருமாறு அமைத்து முத்திரை வைப்பார்கள். சங்கரதாஸ் ஸ்வாமிகளிடம் முத்திரைப் பற்றிக் கேட்டதற்கு... எனது பாடல்கள் எனது முத்திரை.. தனியே எதுவும் தேவையில்லை என்றாராம். ஆஹா.. அபாரம்.
சங்கரதாஸ் ஸ்வாமிகள் ஆனந்தக் களிப்பில் நிறைய பாடல்கள் எழுதியதையும் பாரதியார் அதைப் பின்பற்றி எழுதிய சில பாடல்களையும் விவரித்தார். பாரதியார் பாடல்களை எந்த ராகத்தில் பாடினாலும் சிறப்பாக இருப்பதற்கு பாடர்கர்களைக் காட்டிலும் அவரது சொல்நயமும் காரணம் என்றார்.
கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலிருந்து கனவோ நினைவோவை நகுமோபோலப் பாடினார். ஆஹா.. இந்த ஒரு பாடலுக்கே ஒரு மணி நேர லெக்டெம் சமர்ப்பணம். வெட்ட வெளியில் என்று விஸ்தாரமாகப் பாடும் போது நாமும் வெட்ட வெளியில் பறந்து சிவபெருமானை தரிசப்பது போன்ற ஒரு உணர்வு.
இணையத்தில் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பற்றி மேலும் அறியத் துழாவிக் கொண்டிருக்கும் போது கிடைத்த இன்னொரு அரிய சங்கதி. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முனைவர் சி. சேதுராமன் என்பார் எழுதியது. அப்படியே கீழே தருகிறேன்.
”ஒருமுறை மதுரையில் சுவாமிகள் கோவலன் நாடகத்தினை நடத்திக் கொண்டிருந்தார். அந்நாடகத்தில், "மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு மன்னா!" என்று கண்ணகி கூறுவதாக ஒரு தொடரை அமைத்திருந்தார். மதுரை மக்கள் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவ்வாறு எதிர்த்தவர்களைப் பார்த்து, "மா-திருமகள், பா-கலைமகள், வி-மலைமகள் மூவரும் சேர்ந்து வாழும் மதுரை" என்று விளக்கம் தந்து பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடலை மேற்கோள் காட்டிச் சமாதானப்படுத்தினார் . அங்கிருந்த தமிழ்சங்கப் புலவர்கள், "சுவாமிகளே!நீர் எந்தக் கருத்தில் எழுதியிருந்தாலும் உமது புலமைக்குத் தலைவணங்குகிறோம்" என்று கூறினர். இத்தகைய தமிழாற்றல் வாய்ந்த பெருந்தகையாக சங்கரதாஸ் சுவாமிகள்”
தியேட்டர் பர்சனாலிட்டி மாதவ பூவராக மூர்த்தி, கிஷோர், கோபு, வல்லபா, வீகேயெஸ், ஆர்வி, ராஜாராம், ப்ரைம் நம்பரில் வயது நடந்துகொண்டிருக்கும் (எவ்வளவு என்பது நடிகையின் வயது போல ரகஸ்யம்) குருஜி நகுபோலியன் போன்றோருடன் உருப்படியாய்க் கழிந்த ஒரு உன்னதமான ஞாயிறு. சாரி சார்க்கு அனந்தகோடி வந்தனங்களும் நமஸ்காரங்களும்.
படக்குறிப்பு: லெக்டம் முடிந்ததும் டாக் செண்டர் வாசலில் அடித்த உச்சக்கட்ட அரட்டை! சாரி சார், அரிமளம் பத்மநாமன் சார், மாதவ பூவராகமூர்த்தி சார் மற்றும் ”இளைய சகோதரர்” ஆர்வி. 
smile emoticon

மன்னை 614001
கொஞ்சம் அவன் இவன்னு ஏகவசனத்தில் பேசிப்போம்.. அன்னியோன்யமா இருக்கட்டும்.

”வெங்கிட்டு.. இந்த ஞாயித்துக்கிழம ஃப்ரீயா? உப்பிலிட்ட கலாக்ஷேத்ரா க்ரௌண்ட்ல கிரிக்கெட் விளையாடலாமான்னு கேட்டேன்... ஹெச்சிசி ப்ளேயர்ஸ்லாம்.. என்ன சொல்ற” என்று கோப்லிதான் மெனக்கெட்டு இதை ஆர்கனைஸ் பண்ணினான். ஹெச்சிசி என்பது ஹரித்ராநதி கிரிக்கெட் க்ளப் என்பதன் சுருக்கம். மன்னையின் இங்கிலீஷ் கவுண்டி. ஊரில் பிரதான டீம். பல 5555 ரூ, 4444 ரூ, 3333 ரூக்களைத் தட்டிச் சென்ற வெற்றி அணி.
கோப்லியின் அண்ணன் ரமேஷும் அடியேனும் ஓப்பனிங் பௌலர்கள். ரமேஷ் பேஸர். விர்ர்ரென்று காதருகில் சப்தம் வர பந்து வீசுவார். நான் மீடியம் பேஸர். மிடில் ஆர்டர் மட்டையாளன். அண்ணாமலை பல்கலையில் தற்போது வணிகவியல் பேராசிரியராக இருக்கும் கோபாலும் நானும் தெருத்தெருவாகக் கேப்டன்கள் (அட.. கிரிக்கெட் கேப்டன்தாங்க!!) வீட்டுப் படியேறி, தேவுடு காத்து, ”இன்னிக்கி மத்தியானம் ஒரு மேட்ச் வச்சுக்கலாமா?” என்று மைதானத்துக்கு இழுத்து வந்து பல போட்டிகளில் கெலித்திருக்கிறோம்.
கைப்பிடிக்கு சைக்கிள் ட்யூப் க்ரிப் போட்ட மட்டை, சதை மழித்த கருவேலங் குச்சிகள் ஸ்டம்ப்ஸ், விக்டோரியா க்ளப்பில் கதறக் கதற டென்னீஸ் ஆடிக் கழித்துவிடப்பட்ட பந்து ("ரொம்ப புஸுபுஸுன்னு எடுத்துக்காதடா... காத்துல பட்டமா பறக்கும்... தூக்கி அடிச்சா லாங் ஆன் கையில போயி பிடிச்சுக்கோன்னு லட்டு மாதிரி விழும்...பௌலிங்கலயும் குத்தி ஏத்தி பேஸ் காட்ட முடியாது.." - டென்னீஸ் பால் கிரிக்கெட் தந்திரங்கள் - 101) சகிதம் ஆறேழு சைக்கிள்களில் தொப்பியோடு மே மாத வெயில் பாழாய்ப் போகாமல் ஊர் மைதானங்களில் வாசமிருப்போம்.
கோப்லி எங்கள் தெரு ஸ்ரீகாந்த். எந்த நேரத்திலும் கவுட்டி கிழிந்து, கழுவில் ஏற்றிய தேகம் இருபாகமாகத் தரையில் விழலாம் என்று அபாயகரமாகக் காலைப் பரப்பி வைத்துக்கொண்டு காட்டடி அடித்து ஸ்ரீகாந்த் பெயர் பெற்றவன். "நீ அடிச்சாலும் சரி.. அடிக்காட்டாலும் சரி. நீ ஓப்பனிங்க் இறங்கினாதான் டீமுக்கு ராசி..." என்று அம்மன்னன் புகழ்பாடி மஞ்சள் தண்ணீர் தெளித்து பிட்ச்சுககுள் இறக்கிவிடுவோம். ராசிக்கார பயபுள்ள...
என்னுடைய மன்னார்குடி டேஸ் அத்தியாங்களில் அடிக்கடி வந்து கலாய்த்துப் போகும் ஸ்ரீராம் தன்னை ஜான்ட்டி ரோட்ஸாக இன்னமும் மனதில் வரித்திருக்கிறான். அந்தக்காலமெல்லாம் மலையேறிப் போச்சுது. ஷார்ட் கவர் பகுதியிலிருந்து பந்தை ஃபீல்ட் செய்து ரன் அவுட்டுக்காக விக்கெட் கீப்பருக்கு எறிந்த போது அது ஐந்து தடவை பிட்ச் குத்தி செத்த பந்தாக வந்தடைந்தது. "ஷோல்டர் எறங்கிடுச்சுடா.." என்று முதுகைப் பிடித்துக்கொண்டு மூஞ்சியைச் சுளித்துச் சமாதானம் சொன்னான். கோயில் கைங்கர்யத்தில் இருப்பதால் பஞ்சகச்சத்தோடு களமிறங்கிக் கலக்கினான். தனது புத்ராதிகளுடன் வந்திருந்தான். மட்டையளவு இருந்த இரண்டாமவன் அப்பன் பெயரைத் தக்க வைத்துக்கொள்வான் என்று பிரகாசமாகத் தெரிகிறது. ”யப்பா... நீ ஒண்ணுமே அடிக்கலை.. நான் ஃபோர் அடிச்சேன் பாத்தியா...ம்....” என்று வாய் ஓயாமல் லொடலொடக்கிறான். மிக்க மகிழ்ச்சி.
கோபால் எங்கள் டீமை விட எதிரணிக்காரர்கள் கொண்டாடும் கோலாகலக் கிரிக்கெட்டர். இரசிகைகள் மனதைக் கொள்ளையடிக்கும் லிப்ஸ்டிக் போடாத ரோஸ் உதட்டுக்காரன். அவன் இன்னும் கொஞ்ச நேரம் களத்தில் நின்றால் ஜெயித்துவிடலாம் என்று கும்பலாக நகம் கடித்துக்கொண்டு பெவிலியனில் நெர்வஸாக நின்றுகொண்டிருக்கிறோம். ஒரு அடாசு பௌலர் வீசிய காமாசோமா ஓவரில் எங்கேயோ பிட்ச்சோரக் கல்லில் பட்டு பந்து ஏடாகூடமாக எகிறி ஃப்ரன்ட் ஃபுட்டில் நிற்கும் கோபாலின் இடதுகாலில் படுகிறது. "ஹௌஸாட்..." அலறிய பௌலர் கூட அதை மறந்து அடுத்த பந்து போட திரும்பிவிட்டான். அம்பயர் அங்கே எதுவுமே நிகழாதது போல அசையாமல் சிலையாக நிற்கிறான்.
அப்போது அந்த அதிசயம் நடந்தது. அண்ணன் கோபால் காலையும் ஸ்டம்ப்பையும் திரும்பித் திரும்பி மனமுருகப் பார்க்கிறார். நமக்கு இங்கே வெடவெட. அவரே பிரத்யேக மானசீக ஸ்லோமோஷன் ஓட்டிப் பார்த்து, ஸ்டம்ப் விஷன் காமிராவாக தனது அகக்கண்களை உபயோகிக்கிறார்..... ஐந்தாறு வினாடிகளில் பேட்டை இடதுகைக்கு மாற்றி வலக்கை ஆட்காட்டி விரலை விண்ணுக்கு உயர்த்தி "ஸ்வயம் அவுட்" கொடுத்துக்கொண்டு விடுவிடுவென்று வெளியே வந்துவிடுவார். சத்யசந்தன். "ச்சே,,ச்சே,,, கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம்டா... அவுட்டுன்னு தெரிஞ்சா நாமளா வெளில வந்துடணும்..." என்பது அண்ணனின் உயரிய கோட்பாடு. கேடி(Not KD) குஞ்சுமோன். (ஜெண்டில்மேன்)
உப்பிலி எங்களுக்கு ரெண்டு மூனு செட் சீனியர். அவர் மட்டையை கடாசிவிட்டு ரிட்டயர்ட்டு ஆனப்புறம்தான் நாங்கள் விளையாட ஆரம்பித்தோம். வயலின் வில் பிடித்த கையால் பேட்டும் பிடிப்பார். தற்சமயம் கலாக்ஷேத்ராவில் ஃபிடில் கற்றுத் தருகிறார். மன்னையில் ஹரித்ராநதி கோதண்டராமர் சன்னிதி வாசல் பெஞ்ச் மேடையில்,குன்னக்குடி போல ஜிலுஜிலு ஜிப்பா அணிந்து, வைஷ்ணவராயினும் நெற்றி மறைத்து திருநீறு பத்து போட்டு, முதுகொடிய ஆட்டத்துடன் வயலினில் ”கொட்டாம் பட்டி ரோட்டிலே... பொண்ணு போற ஷோக்கிலே...” வாசித்து எங்களை இன்பமுறச் செய்வார். முப்போதும் கழுத்தருகே வயலின் சாய்த்துச் சாய்த்து சிறு கூன் விழுந்த முதுகோடு ஓடிவந்து அரவணைத்து எல்லோரையும் மைதானப் பிரவேசம் நடத்திவைத்தார்.
கோபாலும் ஸ்ரீராமும் அண்ணன் தம்பி. இது போன்ற மார்க்-ஸ்டீவ் 'வா'க்கள் எங்கள் டீமில் மொத்தம் ஒன்பது. நவரத்தினங்கள்.
1. ரமேஷ் - கோப்லி
2. கோபால் - ஸ்ரீராம்
3. ஸ்ரீதர் - ஸ்ரீராம்
4. சரவணன் - அசோக்
5. சுதர்ஸன் - பாபு
6. ராஜா - நந்து
7. கோபால் - உப்பிலி
8. ராஜா - வாசு
9. ரமேஷ் - ஆனந்த்

பந்தும் பேட்டுமாகத் தெருவெங்கும் கிரிக்கெட் ப்ளேயர்கள் பெருத்து போன சமயத்தில் HCC 'A' டீம் HCC 'B' டீம் என்று பிரித்து மன்னையில் டோர்ணமென்ட் விளையாண்ட காலங்கள் உண்டு.
இதில் கோபால், ஸ்ரீராம், ரமேஷ், கோப்லி, உப்பிலி, ஆர்.வி.எஸ் ஆகியோர் சென்ற ஞாயிற்றுக்கிழமை விளையாடினோம். உடம்பு இதற்கு ஒத்துழைத்தது பகவத் சங்கல்பம். மன்னை ராஜகோபாலனின் அருட்கொடை. கோபால்-ஸ்ரீராமின் அக்கா ராதா ("வெங்குட்டு... புளியோதரை சாப்பிடறயா?.." என்று அன்று அடிக்கடி படியளந்த ராதாக்கா) மகன் கார்த்தி. மன்னையில் நாங்கள் மட்டையோடு அலைந்த போது கால்சட்டையோடு வேடிக்கைப் பார்த்த பையன். இளரத்தம். வெடரன்ஸ் விளையாடுவதைக் கண்டு களிப்புற்றான்.
பன்னிரெண்டாம் வகுப்பிலேயே முன் மண்டை பாதிக்கு மேல் வழுக்கையாகி “ஏண்டா கல்யாணம் வரைக்கும் முடி இருக்குமா?” என்று கவலைப்பட்டு மேலும் முடியிழந்து, இப்போது இரண்டு குழந்தைகளுடன் குடும்பியாக இருக்கும் ஸ்ரீதரும் விளையாட வந்திருக்கலாம். பேட்ச்சில் முதன்முதலில் கல்யாணம் முடித்து இளம் தாத்தாவாக ஆகியிருக்கும் அப்புவையும் கூப்பிட்டோம். பேரனோடு கொஞ்சிக் கொண்டிருந்தானாம். சரி. பரவாயில்லை.. அடுத்த மேட்ச்சில் தேர்ட் மேனில் நிறுத்தி வைத்து தொந்தி கரைய பந்து பொறுக்க விட்டுவிடலாம்.
திங்கட்கிழமை காலையிலிருந்து முட்டிக்கு முட்டி வலிக்கிறது. இரு தொடைகளிலும் யானை ஏறி நின்றார்ப்போல குடைகிறது. தலைக்கு மேலே கையைத் தூக்கமுடியவில்லை. ஒரே பாரமாக இருக்கிறது. க்ளட்ச் போட கால் எழுந்திருக்காமல் ஒத்துழைக்க மறுக்கிறது. பேசினால் குரல் கீச் கீச்சென்று தொண்டையைக் கிழித்துக்கொண்டு வருகிறது. என்னதான் இதுபோன்று சிறுசிறு After effects இருந்தாலும் நெஞ்சு மட்டும் கல்கண்டாய் இனிக்கிறது. மனசுக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம். மூன்று மணி நேரங்கள் முழுசாய் மன்னையில் வாழ்ந்த பரமதிருப்தி!!
இது போதும்... இனிமேல் அடுத்த ஆட்டத்திற்கு அப்புறம்......
பின்குறிப்பு: மேலே குறிப்பிட்டிருந்த தலைப்பில் என்னுடைய மன்னார்குடி கிரிக்கெட் புராணங்கள் எழுதலாம் என்று விருப்பம். முயற்சி செய்கிறேன்.

ஆத்தா நா அவுட்ஸ்டாண்டிங் ஆயிட்டேன்!!

பத்தாவது பரீக்ஷைக்கு எப்படி படித்தேன் என்பது ஈஸ்வரனுக்கே வெளிச்சம். ”வியாக்யானேசா.. ஆண்ட புள்ளையாரே... ஈஸ்வரா.. விஸ்வநாதா.. விசாலாக்ஷி.. கோபாலா... கோபாலா... சுப்ரம்மண்யோம்.. சுப்ரம்மண்யோம்....” என்று நித்திரைக்குப் போகு முன் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு பாட்டி மனமுருகிக் கும்பிட்ட தெய்வங்கள் உண்டென்று நிரூபித்த விஷயம். நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளை வெட்டும் அளவிற்கு அடிமுட்டாளில்லை. அசிரத்தை. விளையாட்டுப் பிள்ளை. “இதான் எனக்குத் தெரியுமே”ங்கிற ஒரு அசால்ட்டு பக்கிரியான தங்கவேலுத்தனம். பன்னிரெண்டு மற்றும் பியெஸ்ஸியில் சுதாரித்துக்கொண்டு எம்சிஏவை ரேங்க்கில் முடித்தேன்.

எவ்ளோ படிச்சாலும் வினயாவுக்கு அடிமனசில் ரவையளவு பயம் பகடையாய் உருள்கிறது. ஆனால் கால்பந்து கணக்கா கண் காட்டுகிறது.
“அப்பா.. ஹயக்ரீவர் கோயிலுக்குப் போயிட்டு வருவமா?”ன்னு பயபக்தியா கேட்டுச்சு. போனோம். கோயில் வாசலில் மாட்டு வண்டியில் பிரபுபாதா சிலையும் அவருக்குப் பின்னே கிருஷ்ணரும் வர “ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா..” என்று பித்துக்குளி முருகதாஸ் குரலில் பாடிக்கொண்டே வந்தார்கள். குடுமி வைத்து ஜோல்னா பையோடு பிரபுபாதாவின் ஐந்தாறு “கிருஷ்ணா”வைக் கைகளில் அடுக்கி விற்றுக்கொண்டிருந்தார்கள். மாட்டுவண்டியின் முன்னே ஒரு கூட்டம் நவீன சகதேவர்களாக எண்ணிக்கொண்டு செல்ஃபோனில் கிருஷ்ணனைப் படம் பிடித்து கட்டிப் போட எத்தனித்துக்கொண்டிருந்தார்கள். சகதேவன் கிருஷ்ணனைக் கட்டிப்போடும் மகாபாரம் உத்யோக பர்வாவில் வரும் சீன் ஞாபகம் வந்தது. மானசீகமாக பரமாத்மாவின் மூலத்திருவடிகளைக் கட்டி வெற்றி கண்டவன் சகதேவன். கிருஷ்ணன் அவனது பக்தியில் அடங்கிப்போனான்.
ஹயக்ரீவர் கோயிலுக்குள் நுழைந்தவுடன் துளசி வாசம் நாசியில் ஏறியது. எங்கு துளசி வாசம் வந்தாலும் எனக்கு மன்னை ராஜகோபால ஸ்வாமி சன்னிதிதான் ஞாபகம் வரும். மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் சிரிப்பான் அந்தக் கண்ணன்.
பரீக்ஷைக்குப் படிக்க என்று எனக்கொரு பாணி வைத்திருந்தேன். ஜ்யேஷ்ட குமாரத்தி வினயாவுக்குச் சொன்னதைச் சின்னதா இங்கே லிஸ்ட் பண்றேன்.
1. பொதுப் பரிட்சை என்பது , “பொஸ்தகத்தையே சேப்பா கறுப்பான்னு பார்க்கமாட்டான்... வெள்ளைப் பேப்பரை நீலப் பேப்பர் ஆக்கிட்டு வந்துவடன் எங்காத்து தம்பி...” என்று என் சாரதாப் பாட்டி தேர்வுகளை வண்ணமயமாக சகஜப்படுத்துவது போன்றது. பயப்பட அவஸ்யமில்லை. இதுதான் நன்றாகப் பரீட்சை எழுதுவதற்கான முதல் படி. பயம் தவிர்.
2. இந்தியக் கல்வி முறைப்படியும் தேர்வுகளின் நிலவரங்களையும் கருத்தில் கொண்டு நம்முடைய அக்கா அண்ணாக்கள் எழுதிய தேர்வு கேள்வித் தாள்களை வாங்கி அசுர சாதகம் செய்யவேண்டும். பயிற்சி செய்.
3. புதுமாதிரியான கணக்குகள், அறிவியல் கேள்விகள் எங்கும் தென்படின் அதை மட்டும் தெரிந்து கொள்ளாமல் அதற்கு தொடர்புடையவைகளையும் ஆர்வமாகப் புத்தியில் ஏற்றிக்கொள்ள வேண்டும். வகையாறக்களை அறிந்துகொள்.
4. ”டீ... நான் நேத்திக்கே கெமிஸ்ட்ரி முடிச்சுட்டேன்.. இன்னிக்கி ரெண்டு தடவை ரிவிஷன் விட்டேன்...கெமிக்கல் ஃபார்முலால்லாம் இப்போ அத்துப்படி” என்று உங்களிடம் உதார் விடும் நண்(ப)பிகளின் பேச்சை நம்பி மெர்சலாகாதே. ஒருத்தருக்கு ரெண்டு தடவை ரிவிஷன் தேவைப்படும்.. நாம பசுமரத்தாணியாக இருக்கலாம். பச்சைக்கற்பூரமாகவும் இருக்கலாம். பிறத்தியார் பிரிப்பரேஷன் நம்மை பிளக்கக்கூடாது. முக்கியமான பாயிண்ட். நம் படிப்பே நமக்குதவி.
5. எந்தப் பாடத்திலும் முக்கியமான பாயிண்டுகளை தனியே மளிகைக் கடை, கையடக்க, ரோக்கா சீட்டு போன்ற ஒன்றில் புல்லட்ஸ் போட்டு எழுதிக்கொள்ள வேண்டும். சாப்பிடும் போதும், வாசலில் பராக்குப் பார்த்து உட்கார்ந்துகொண்டிருக்கும் போதும் ச்சும்மா எடுத்து எடுத்து பார்த்துக்கொள்ளவும். பரீட்சை ஹாலில் அந்த ரோக்கா சீட்டு மனக்கண்ணில் தோன்றும். கண்ணால் படி.
6. இன்னின்னிக்கு இன்னென்ன பாடம் என்று கிரமமாகப் படிப்பது பலன் தரும். மூளை ஃப்ரெஷ்ஷாக இருக்கும் நேரங்களில் கஷ்டமான பாடங்களையும் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும் சமயத்தில் இலகுவானவைகளும் படியுங்கள். அட்டவணை அவசியம்.
7. ”ஏய் இது எப்படின்னு கொஞ்சம் சொல்லேன்...” என்று புஸ்தகம் நீட்டுவோருக்கு ”எனக்கே படிக்க நேரமில்லை...” என்று முறுக்கிக்கொள்ளாமல் மனமுவந்து சொல்லிக் கொடுங்கள். ஒருமுறை சொல்லிக்கொடுப்பது பத்து முறை படிப்பதற்கு சமம். சொல்லிக்கொடுத்தல் படித்தலுக்கு சமம்.
8. சில கேள்விக்கு புஸ்தகத்தில் இருக்கும் சில ஜார்கன்களை அப்படியே எழுதவேண்டிவரும். ஆகையால் பார்க்காமல் ஒன்றிரண்டு முறை புது ஃபார்முலா போல எழுதிப் பழகுதல் நலம். எழுதிப் படித்தால் எண்பது முறை படிப்பது போன்றது.
9. ஏ.ஆர்.ரஹ்மான் போன்று உங்களுக்கும் இரவில் படைப்பூக்கம் பொங்கி வந்தால் அணை போட வேண்டாம். இரவிலேயே படியுங்கள். பிரச்சனையில்லை. விடியற்காலையில்தான் தூங்கிவழிந்துதான் படிக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை.
10. நூறுசதம் முயற்சி செய். கடினமாக உழை. என்றுமே நல்ல முயற்சிக்கு இறைவன் துணை வருவார். தினமும் ”ஹயக்ரீவம் உபாஸ்மஹே..” என்று ஹயக்ரீவர் ஸ்லோகம், ”சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே....” சரஸ்வதிக்கு ஐஸ் வைத்து தியானிக்கிறோம் என்று புஸ்தகம் பிரிக்காமல் பரீக்ஷைக்குப் போனால் கட்டை போட்டுவிடுவார்கள். தெய்வ பலம் உறுதுணை மட்டும்தான்.
எனக்குத் தெரிந்ததை எழுதினேன். பொதுப்பரீட்சை எழுதும் புண்ணியர்களுக்கு வாழ்த்துகள்!! ஆல் தி பெஸ்ட்!! 
smile emoticon

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails