Friday, March 18, 2016

பரமேஸ்வரமங்கலம்


மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஈஸியாரில் சாலை வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஒரே வழியில் இருபக்கம் செல்வோரும் போருக்குப் போவது போல் உக்கிரமாகக் கடக்கிறார்கள். ஜாக்கிரதையாக மாயாஜாலுக்கு அப்புறம் செல்வோம். அனுதினமும் கல்யாண வைபோகம் காணும் திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாளை ஏற்கனவே தரிசித்திருப்போம். இன்னும் சற்று முன்னேறி மஹாப்ஸைத் தாண்டி புதுச்சேரி செல்லும் ஈஸியாரைப் பிடிக்க வேண்டும். இன்னும் மேலேறினால் ரோடோரத்தில் கொஞ்சம் பெரியக் கடைத்தெரு போல வருவது புதுப்பட்டினம். நுறுக்கு மேல் பறந்திருந்தால் படிப்படியாகக் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவும். இப்போது காத்தான் கடை என்ற சிற்றூர் வரும். அங்கே வலதுபக்கம் திரும்பினால் வரும் கிராமத்தின் இலக்கணமான டீக்கடை தாண்டி சற்று தூரத்தில் ஆடு மேய்க்கும் பெரியவரையோ தலையில் புல்லுக்கட்டு சுமந்து வரும் சிறுமியோ அல்லது சுள்ளிக்கட்டோடு விரையும் பாட்டியையோ வண்டியின் ஜன்னலிறக்கி “பரமேஸ்வரமங்கலம்.....” என்று கேட்க ஆரம்பித்தால் ”ஓர்வண்டி சாலை”யைக் காட்டி “இப்படியே போவலாம்....” என்று திசை சொல்வார்கள்.

ஊருக்குள் சௌம்ய தாமோதரப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். ”இந்தப் பெருமாள் பிரயோகச் சக்கரம் வச்சுண்டிருக்கிறார்...” என்றார் உடன் வந்த அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார். வெற்றிலைப் பாக்குப் போடாத திருவையாற்றுக்காரர். கவனிப்பாரற்றுக் கிடக்கும் புராதனக் கோயில்களைத் தேடி அலைபவர். எனக்கு இக்கோயில்களுக்கு வழிகாட்டிய பெருமகனார். ஐந்தாறு தெரு கடந்துவிட்டோம். ஊரின் கடைக்கோடியில் வடக்கே ஓடும் பாலாற்றாங்கரையில் அமைந்துள்ளது. பரமேஸ்வரமங்கலம் கைலாசநாதர் கோயில். கரைக்கப்பால் சாகுபடி செய்யும் வயற்பரப்பு பச்சைப் பசேல் என்று கண்ணில் முட்டுகிறது. பறவைகளின் க்ரீச்சொலியை தவிர்த்து நிசப்தமான சூழல். பாலாற்றில் தன்ணீர் வரத்து இருந்தால் கொஞ்சம் ”சல..சல..” சேர்ந்துகொள்ளலாம். மற்றபடி தியானம் செய்யத்தூண்டும் ஒரு தெய்வீக அமைதி கொஞ்சும் இடம். கரையிலிருந்து நூறடி ஆற்றுக்குள் கோயில். கோயிலிலிருந்து கிழக்கே பார்த்தால் எறும்புகளாய் ஊறும் ஈஸியார் போக்குவரத்து தெரிகிறது.

“கோயிலின் வயசு ஆயிரம் வருஷத்துக்கு மேலே இருக்கும். ஒரு கற்பாறையில கைலாசநாதரும் இன்னொரு பாறையில கனகாம்பிகையும் இருந்தா. ரொம்ப நாளா திருப்பணி பண்ணாம இருந்தது. ரவிசங்கர்னு ஒருத்தர் மொத்தமா பண்ணினார். அவருக்கு அப்படியொரு ஈடுபாடு”
“புண்ணியம் பண்ணியிருக்கார் மாமா” என்றேன்.
மூலவர் கைலாசநாதர். லிங்க சிரசில் ருத்ராட்ச மாலையுடன் கிழக்கு பார்த்த திருமேனி. பளபளவென்று பட்டு வேஷ்டியில் மினிக்கினார். எழுபத்து மூன்று வயது சிவாச்சாரியார் ”சிவாய நம:, சிவதாரய நம: சம்புவே நம; சசிசேகராய நம: கட்வாங்கினே நம:....” என்று கொன்றை மலரால் அர்ச்சனை செய்தார். தீபாராதனையின் போது மனசுக்குள் “நமஸ்தே அஸ்து பகவன்...” என்று ருத்ரம் ஓடியது. தெற்கு நோக்கிய கனகாம்பிகை கண் நிறைக்கிறாள். மஞ்சள் நிற மடிசாரில் கொள்ளை அழகு. திருவலம் வருகையில் மேற்கு திசையில் தெரியும் விஸ்தாரமான பாலாற்றில் என்பது சதவிகிதம் வீடு கட்டும் மணலும் பத்து சதவிகிதம் சிற்றோடையாய் நீரும் மீதி பத்து சதவிகிதம் கரையோற நாணலும் மண்டிக் கிடந்தன. வடமேற்கில் சுப்ரமண்யர் சந்நிதி. வடகிழக்கில் நவக்கிரஹ சன்னிதி. வலம் வந்ததும் நமஸ்கரித்து எழுகிறோம். கொடிமரமில்லை தென்முகக் கடவுள் தனி சன்னிதியில் ஊர்பார்க்க பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.

கிழக்கு முகமாக கோயிலின் கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு சிறிதுநேரம் நின்றேன். “போன மழையில கோயில் வாசல் வரைக்கும் தண்ணீ அடிச்சுக்கிட்டு ஓடிச்சு...” என்று அர்ச்சகரின் பிள்ளை சொன்னது காதில் ஒலித்தது. கண்ணை மூடினால் நீரின் சலசலப்பு காதில் கேட்டது. அப்போது எந்தை ஈசன் தோன்றி “என்ன வேணும் ஆர்வியெஸ்?” என்று கேட்டால் ”இந்த பாலாற்றில் கரைதாண்டாத நீரும் முப்போதும் கனபாடமாக ஒலிக்கும் ருத்ரமும் இங்கேயே தங்கும் யோக்யதையும் அருள வேண்டும்” என்று சட்டென்று கேட்கத் தூண்டும் இடம்.
“ஐம்பது நூறு கனபாடிகளைக் கூட்டிண்டு வந்து மஹா அதிருத்ர யக்ஞம் பண்ணினா நன்னாயிருக்கும்” என்ற என் அவாவைக் குருக்கள் மாமாவிடம் சொன்னேன்.
“தோ.. இப்ப வர்ற பங்குனி உத்திரம் கூட விசேஷமா செய்வோமே. ஏற்கனவே ரெண்டு மூணு தரம் ருத்ர ஜபம் பண்ணியிருக்கோம்” என்றார் சலனமில்லாமல். விஸ்ராந்தியாக உட்கார்ந்த போது தொன்னையில் தந்த எலுமிச்சை சாதப் பிரசாதம் தேவாமிர்தம்.
இங்கேயே இருக்கமாட்டோமா என்று ஏங்க வைத்த கோவில்.
அடுத்து நத்தம் ஜெம்பகேஸ்வரர்......

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails