Tuesday, May 31, 2011

மன்னார்குடி டேஸ் - கீழப்பாலம்


ஒன்னாம் நம்பர் புள்ளத்தாச்சி டவுன் பஸ் பாலத்தில் எதிர்பட்டால் ஏழாம் நம்பர் பெருகவாழ்ந்தான் பஸ் மரியாதையாக ஓரங்கட்டி நின்று வழிவிட்டு பின்னர் பயணத்தை தொடரச் சொல்லும் கண்டிப்பு மிகுந்த பாலம் கீழப்பாலம். பெரிய வாகனம் வருவது தெரிந்தும் அவசரக்குடுக்கையாக சைக்கிள் ஓட்டி பாலத்தின் மதில் சுவற்றோடு பல்லி போல சைக்கிளோடு ஒட்டிக்கொண்டு "போ..போ.." என்று கை காட்டி பஸ்சுக்கு வழிவிடும் அதி புத்திசாலி பிரகிருதிகளும் உண்டு. கொஞ்சம் வயிறு புடைத்த லாரிகள் தடதடத்து கடந்து போகும் போது பாலத்திற்கு குளிர் ஜுரம் கண்டது போல ஒரு சின்ன உதறல் எடுக்கும். பாலத்தின் இக்கரையில் அரசினர் தொடக்கப்பள்ளி. அதன் வாசலில் கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக என்று சகல கட்சிக் கொடிகளும் அரசியல் வாசத்தோடு புழுதிக் காற்றில் பறந்துகொண்டிருக்கும். கொடிக்கம்பத்துக்கு வலப்புறமாக நேர் எதிரே மணி டீக்கடை. அவர் ஒரு தீதிமுக. தீவிர திமுக அபிமானி. டீ பாய்லர் பின்னால் வெந்நீர்ப் புகை ஆவிகளுக்கு நடுவில் கலைஞர் மஞ்சள் துண்டு இல்லாமல் வசீகரப் புன்னகையுடன் படத்தில் இருப்பார்.

மாரியம்மன் கோவில் திருவிழாவிழாவின் போது மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளுக்கு நாலு வீல் மட்டும் நுழையும் ஒரு சந்து விட்டு ரோட்டில் வெள்ளை வேஷ்டி கட்டி திரைப்படம் போடும் இடம் கீழப்பாலத்தை தொட்டடுத்து ஊர் எல்லையில் இருக்கும் டி.டி.பி ரோடு. நான் ஜனித்த இடம். இப்போதும் "அம்ம்ம்ம்மா.. அப்ப்ப்ப்ப்பா... அனைத்தும் வந்துவிட்டது.. அனைத்தும் வந்துவிட்டது..." என்றும் "வித்யாபதி.. மகனே வித்யாபதி" என்று நாகையாவும் சிவாஜியும் உச்சிமோந்து கட்டியணைத்து பரசவசப்பட்ட சரஸ்வதி சபதம் காட்சியை வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டில் போட்டு முதுகில் கயிறு குறுகுறுக்க படுத்துக்கொண்டு பார்த்தது கருப்பு வெள்ளையில் என் நினைவுகளில் ஓடுகிறது. இரண்டு நாட்களாக மன்னைக்குள் சென்று வரும் பஸ்களை பலவந்தமாக நிறுத்தி கை நோக ஒரு தகர டப்பா உண்டியல் குலுக்கி வசூலித்ததை வைத்து ஆத்தாளுக்கு கஞ்சி காய்ச்சி ஊர் மக்களுக்கு ஊற்றுவார்கள். ருசியோ ருசி!

நான் மண் தரையில் தவழ்ந்த இடம் கீழப்பாலம். கைகால் முளைத்து ஓடியாடி வளர்ந்த இடம் மேலப்பாலம்(ஹரித்ராநதி). மன்னையின் இரு முனைகளையும் இரு வீட்டால் இருக்கக் கட்டி முடிச்சு போட்டவன் நான். லக்ஷ்மியும் கண்ணுக்குட்டிகளுமாக ஒரு ஆறு பேர் வீட்டுவாசலில் ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் போட்ட ஹாலில் புல்லுக்கட்டு வைக்கோல் தின்று எங்களுடன் சுக ஜீவனம் நடத்தி வந்தார்கள். "ம்மா..." என்று அடிவயிற்றிலிருந்து என் அம்மா போகும்போதும் வரும்போதும் மணி ஒலிக்க தலையாட்டி வாஞ்சையுடன் கூப்பிடுவார்கள். சிகப்பு லக்ஷ்மிக்கு கருப்பு லக்ஷ்மி நெற்றி நடுவில் வெள்ளை பொட்டோடு பிறந்து எங்களை அளவில்லா சந்தோஷத்தில் ஆழ்த்தினாள்.  "ரொம்ப ராசி!" என்று பூரித்துப் போனாள் என் தாய்!. அன்று "தெருவிற்கே சீம்பால் ஃப்ரீ" என்று மகாராணியாய் இலவசம் அறிவித்தாள்.

என் அம்மா தாடியும் கொம்பும் வளர்ந்த ஒரு முரட்டு ஆடும் வளர்த்தாள். தன் உடலில் எழும் நாற்றத்தையும் மீறி அதன் துறுதுறுப்பால்  நம்மை வசீகரிக்கும் அந்த துடிப்பான கிடா. ஒரே சமயத்தில் கொல்லையில் "ம்மே"வும் வாசலில் "ம்மா"வும் சேர்ந்திசையாக இசைத்த காலங்கள் அவை. கதவை திறந்து போட்டுவிட்டு கீழப்பாலம் தாண்டி பாரி மளிகை சென்று ஓல்ட் சிந்தால் சோப்பு வாங்கி வரலாம். ஒரு பயல் வீட்டினுள் நுழைய முடியாது. தெருவே தன்னை காவல் காத்துக் கொண்டது. தெருவின் உண்மையான பலம் அறியாமல் திருட வந்த பலே திருடர் ஒருவர் மாட்டிகொண்டபின் கரண்ட்டு கம்பத்தில் கட்டி வைத்து விளாசினார்கள்.


ஒற்றை நாடி சரீரமாய் தோல் சுருங்கி வாயில் பீடிப் புகையோடும், தோளில் பூணலோடும் பக்கத்து அய்யனார் பட்டறை பெஞ்சில் காலாட்டி உட்கார்ந்திருப்பார் நாகப்ப ஆசாரி. பட்டை நிமிர்த்தும் பட்டறைக்கு அவர் தான் உரிமையாளர். எந்நேரமும் வேனோ, அம்பாசிடர் காரோ, ட்ராக்டரோ தன் அடிப்பாகத்தை அவிழ்த்துப் போட்டு பட்டையை கழற்றி அவர்கள் கையில் கொடுத்துவிட்டு தேமேன்னு நின்றுகொண்டிருக்கும். ஹரித்ராநதி போன்று ஒன்பது மணிக்கு ஊர் அடங்காமல் பன்னிரண்டு ஒருமணிவரை கொட்டக்கொட்ட விழித்திருக்கும். நாகப்ப ஆசாரியின் தலைச்சன் பிள்ளை பெத்தபெருமாள் அண்ணன் முதன் முதலில் துபாய் சென்று கை நிறைய சம்பாதித்து கிழங்கு கிழங்காக கையிலும் கழுத்திலும் தங்க நகை அணிந்து ஊர்வலம் வந்தார். கரிய மேனியில் தங்கம் எடுப்பாக தெரிந்தது. தெருவில் உதவாக்கரையாக ஊர்சுற்றித் திரிந்த எல்லோரையும் தங்கச் சங்கிலி காண்பித்து வெளிநாட்டுக்கு விரட்டினார்.

பாக்கியம் ஆத்தா கடையில் தேன்மிட்டாய் அமிர்தமாய் இருக்கும். ஒரு கூரைக் கொட்டாயில் முன்புறம் கடையும், பின்புறம் ஒரு ஓலைப்பாய் விரித்த வீடுமாய் ஜீவனம் நடத்தி வந்தது. "ராசா... கார்த்தி! நீங்க வேலைக்கு போயி இந்த ஆத்தாவுக்கு ஒரு சீலை எடுத்துக் கொடுப்பீங்களா.. மவராசா..." என்று கன்னம் இரண்டையும் வழித்து திருஷ்டி விரல் சொடுக்கி ஆசையாய் கேட்டுவிட்டு நான் பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்னரே இறைவனடி சேர்ந்துவிட்டது. "அய்யனார் குட்டை தாண்டி தெனமும் ராத்திரி பன்னெண்டு மணிக்கு மல்லிப்பூ வாசமும், ஜல்ஜல்ன்னு சலங்க சத்தமும் கேக்குது. மோகினின்னு தலையாரி வீட்ல பேசிக்கிறாங்க.. பத்திரமா இரும்மா.." என்று பளயதுக்கு தொட்டுக்க அம்பது காசு எம்ப்ளிச்சை ஊறுகாய் வாங்க கடைக்கு வரும் பெண்மணிகளுக்கு அட்வைஸ் மழை பொழிந்த ஆத்தா தன் எழுபது வயது அல்பாயுசில் உயிர்நீத்தது.

சசி, சின்னாச்சி, திருநாவுக்கரசு, பக்கிரி, கட்டை கார்த்தி என்று ஒரு பெரிய பட்டாளமே உண்டு. மாரி மட்டும் குடும்ப சுமை தாங்குவதற்கு சிறுவயதிலேயே லோடு லாரிக்கு கிளீனராக போய் சேர்ந்தான். கை ரெண்டும் கொட்டி "பிரமாணப் பிள்ளை.. பிராமணப் பிள்ளை.." என்று நான்கு முறை பாடிவிட்டு, "பி.ரா.ம.ண. பி.ள்..ளை" என்று எழுத்துக்கு எழுத்து நிறுத்தி பாடி முடித்து அழகு காண்பிக்கும் மாரி வயதில் பெரிதானாலும் இன்னமும் எனக்கு உயிர் நண்பன். பக்கிரி ஒரு முறை சிங்கப்பூர் சென்று வந்துவிட்டான். கழுத்தில் ஸ்வர்ணம் மினுக்கிறது. சின்னாச்சி சொந்தமாக லாரி வாங்கிவிட்டான். முதலாளி ஆனதற்கு அடையாளமாக தொந்தியும் தொப்பையுமாக பெருத்துவிட்டான். சசி இன்னமும் அய்யனார் பட்டறையில் தன் அப்பாவுக்கு அப்புறம் பட்டை நிமிர்த்துகிறான். திருநாவு சென்னையில் ஒரு டி.வி சானலுக்கு கார் ஒட்டுகிறானாம். நண்பர்கள் அனைவரும் நலம்.

சுப்பையண்ணன் போடும் வெல்லப்பாகு டீ குடிக்காதவர்கள் நாக்கு இருந்தும் வீண். சுப்பையண்ணன் நிர்கதியாக இருந்தபோது எங்கள் வீட்டு வாசல் மாட்டுக்கொட்டாயை கொஞ்சம் சுருக்கி அவருக்கு கடை போட இடம் கொடுத்த மன்னார்குடி வள்ளல் என் அம்மா. மேலப்பாலத்தில் இருந்து கீழப்பாலம் செல்லும் போதெல்லாம் காசு கொடுத்து வெல்லப்பாகு டீ குடித்திருக்கிறேன். இம்முறை மன்னை சென்றபோது சுப்பையண்ணனை பார்த்தேன். டீக் கடை மாரியம்மன் கோவில் குட்டையருகே ஷிப்ட் ஆகியிருந்தது. கொட்டகை குறுகியிருந்தது. முதுகு கூன் விழுந்து, தலை நரைத்து, நடை தளர்ந்து மூப்பு தட்டியிருந்தார். ஆனாலும் ரொம்ப சௌக்கியமாக சுருட்டு குடித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் சென்றதும் இருக்க அணைத்து "கார்த்தி! எப்படியிருக்கே..." என்று சுப்பையண்ணனின் உதடுகள் சிரித்தாலும் கண் தாரைதாரையாய் கண்ணீர் சொரிந்தது. சட்டையில்லாமல் கட்டிக்கொண்ட அவர் மீதிருந்து எனக்கு வெல்லப்பாகு டீ வாடை அடித்தது.


பிறந்த இடமும், கள்ளம் கபடமற்ற வெள்ளந்தி மனிதர்களின் நினைவுகளும் எப்போதும் அழியாத சுவடுகளாய் தீர்க்கமாக நெஞ்சில் நிறைந்திருக்கிறது.

படக் குறிப்புகள்: முதல் படம் கீழப்பாலம் அல்ல. மன்னை-திருவாரூர் சாலையில் கோரையாற்றாங் கரையில் அமைந்துள்ள ஒரு பாலம். இது சற்றேறக்குறைய கீழப்பாலத்தை ஒத்து இருப்பதால் http://balajiworld.blogspot.com/ என்ற முகவரியில் இருந்து எடுத்தேன். இரண்டாவதாக இருப்பது இப்போது அகலம் பெரிதான கீழப் பாலத்தை கூகிள் மேப்பில் இருந்து எடுத்தேன்.

பின் குறிப்பு: மாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும். அது பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்.


-

Monday, May 30, 2011

சேப்பாயி

"ஸார்! உங்க மாருதி ஸ்விஃப்ட் டிஸயர் வண்டி குர்கான்லேர்ந்து லாரியில லோடாயிடுச்சு. ஒரு வாரத்துல இங்க வந்துடும். ஃபண்டு ரெடி பண்ணிக்குங்க.." என்று டீலரிடம் இருந்து கீச்சுக்குரலில் ஒரு எச்சுக்'குட்டி'வ் ஃபோனியதும் என்னுடைய டிஸயர் பூர்த்தியான சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியவில்லை. அந்தத் தொலைபேசி அழைப்பிலிருந்து ரோடில் எத்திசை நோக்கினும் அத்திசையில் ஒரு மாருதி டிஜயர் பண்ணையார் மிடுக்காக நின்றிருந்தது. கொஞ்சம் வெயிட்டான வண்டி.


சமீபத்தில் தென்காசி குற்றாலம் போயிருந்த போது கூட மரக்கிளைகளில் குடித்தனம் பண்ணும் வால் இருக்கும் மாருதிகளை பார்க்கும் போதும் எனக்கு நாலு காலிருக்கும் மாருதி ஞாபகம் தான். ஆடி, பி.எம்.டபிள்யூ என்று தனவான்கள் பவனிக்கும் கார்களை பார்த்தால் கூட மாருதியின் அம்சமாகவே தோன்றியது. நிறமாலை போல கார்மாலை நோய் தாக்கியவனாகப்பட்டேன். சென்னை மாநகரின் காருக்குள்ளிருந்த கா(ர்)ரர்கள் என்னையும் இருகால் மாருதி போலவே பார்த்ததை இங்கே பகிர நான் துளிக்கூட விரும்பவில்லை. பத்தாயிரம் அச்சாரம் கொடுத்து ரெண்டு மாசத்துக்கு முன்னால் ஒரு சுபயோக சுபதினத்தில் பதிவு செய்தேன். (பு)கார்ப் படலமாக பதிவு கூட இட்டிருந்தேன்.

"என்னோட முதல் காரும் மாருதி கம்பெனியார் தயாரித்ததுதான். என்னுடைய விஸ்வாசத்தை பாராட்டி லாயல்டி போனஸ் எதுவும் தருவீங்களா?" என்று ஒன்றும் தெரியாத அப்பாவியாக கேட்டேன். உலகத்திலேயே நான் தான் கடைந்தெடுத்த கேனையன் என்று பார்வையால் பட்டம் கொடுத்து பார்த்த அந்த விற்பனைப் பிரதிநிதி "ஹ்ஹும்" என்று உடம்பு முழுவதும் ஒருவித ஜெர்க் கொடுத்து "டிஜயர் வித்தா எங்களுக்கே இன்சென்டிவ் கிடையாது உங்களுக்கு போயி ஏதாவது தருவாங்களா? அது தன்னால விக்குது சார். அதோட அமைப்பு அப்படி.." சொல்லிவிட்டு அடுத்த வேலை பார்க்க போவது போல "யேய்.... அந்த வளசரவாக்கம் கஸ்டமர் என்ன சொன்னாங்க?" என்று தேடிய ஏதோ ஒன்று கிடைக்காத ஏக்கத்தில் இருந்த பக்கத்து இருக்கை ஃபீல்ட் ஆபீசரைப் பார்த்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆசைப்பட்டு மனம் பறிகொடுத்து விட்ட காதலியை கை பிடிக்க அவள் சர்வாதிகார அப்பா, கண்டிப்பான அம்மா, டிராயர் போட்ட தம்பி, அவள் வீட்டு புசுபுசு ஜிம்மி, "கய்தே" மற்றும் "கஸ்மாலம்" வாய் நிறையச் சொல்லும் வேலைக்காரி என்று யார் அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்வது போல வெட்கம் மானத்தை விட்டு "எவ்ளோ நாள் ஆகும்?" என்று நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு வாய்விட்டு கேட்டேன்.

மறுபடியும் ஒரு அலட்சிய லுக் விட்டார். ஒரு ஈனப்பிறவியாக என்னை பார்த்துவிட்டு "இவ்ளோ நாள் உள்ள இருந்துட்டு வந்தியா?" என்று மானசீகமாக ஒரு  கேள்விக்கணை தொடுத்து, "நாலு மாசம் ஆகும். அஞ்சு மாசம் கூட ஆகலாம். உங்களுக்கு லக் இருந்தா சீக்கிரம் கிடைக்கும்" என்று சொல்லி என் முகத்தில் என் அதிர்ஷ்டத்தை ஆராய்ந்தார். இதற்கெல்லாம் காழியூர் நாராயணிடம் ஜாதகம் பார்க்க வேண்டுமா என்று ஒருமுறை விசனப்பட்டேன். கர்ச்சீப் எடுத்து முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டு "சீக்கிரம்ன்னா ஒரு ரெண்டு மாசத்துல கிடைக்குமா?". விடாப்பிடியாக கேட்ட என்னை "பத்தாயிரம் பணம் கட்டி ரிஜிஸ்டர் பண்ணிக்குங்க. பார்க்கலாம்" என்று வாயிலிருந்து முத்துக்களை உதிர்த்து சம்பாஷணையை கச்சிதமாக முடித்துக்கொண்டார்.

பாடிகாட் முனீஸ்வரனிடம் மனதார வேண்டிக்கொண்டு பணம் கட்டிவிட்டு வந்தேன். மூன்றாவது மாத ஆரம்பத்தில் என் பிரார்த்தனை பலித்து இந்தப் பதிவின் முதல் வரி ஃபோன் கால், வண்டி கிடைக்கப் போவதை அறிவித்தது.

வெள்ளைக் காலர் பாங்குக்காரர்கள் சித்தன் போக்கு சிவன் போக்கு என்று வேலை பார்த்தார்கள். எப்போது கேட்டாலும் "அப்ரூவலுக்கு போயிருக்கு" என்று ஒற்றை வரி பதிலை உதிர்த்தார்கள். அதற்குள் "ஒரு வாரத்துக்குள்ள நீங்க மீதிப் பணம் கட்டி வண்டி எடுக்கலைன்னா வண்டி வேற யாருக்காவது அலாட் ஆயிடும்" என்று கொலை மிரட்டல் விடுத்தார் கார் விற்பனை பிரதிநிதி. எடுக்கும் வண்டிக்கு மாற்றாக எனது காதல் வாகனத்தை அவர்களுக்கு சாசனம் எழுதிக் கொடுத்திருந்தேன். Wagon -R என்பதை எப்போதும் நான் Wagon full of Romance என்று சொல்வது வழக்கம்.

டீலரின் உயரதிகாரியை மொபைலில் பிடித்தேன். விபரம் விசாரித்தேன். "நோ ப்ராப்ளம் சார்! கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணுங்க..." என்று விண்ணப்பித்து என் நெஞ்சில் பாலை வார்த்தார். நாளுக்கு நாலு ஃபோன் கால் வீதம் போட்டு விடாமல் பேங்க் மக்களை குடைந்து திருகி லோனை ரெடி செய்தேன். கல்லும் கரைந்து கடன் அலாட் ஆகியது. டீலர் நேரடியாக வங்கிக்கு சென்று வரைவோலையை பெற்றுக்கொண்டார். இதற்கிடையில் எனது பழைய வண்டியை அவர்களுக்கு தருவதாக எழுதிக் கொடுத்திருந்ததால் பழம் வண்டிகளை வாங்கும் துறையிலிருந்து  ஒரு துரை பேசினார். "ஸார்! ரெண்டு வாரத்துக்கு மேல ஆவுது. இந்த வெள்ளிக் கிளமை நீங்க புதுசு எடுக்கலன்னா... ப்ளீஸ்..." என்று சௌஜன்யமாய் சட்டையை கொத்தாக பிடிக்காமல் கெத்தாக அதிகாரம் செய்தார்.

"வண்டி என்கிட்டே தான் இருக்கு. உங்களுக்கு எப்ப வேணுமோ வந்து தாராளமாய் எடுத்துக்குங்க" என்று நான் தாரை வார்த்துக் கொடுத்த ரதத்தை அழைத்துக் கொண்டு போக சொல்லிவிட்டேன். அந்த பழைய வண்டி வாங்கும் ஊழியர் தன் தயாள குணத்தால் "பரவாயில்லை.. புதுசு வந்ததும் இந்த வண்டியைக் கொடுங்க..." என்று எனக்கு சலுகை கொடுத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை சுபதினத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் பூஜை போட்டு வண்டி எடுத்தேன். வண்டியின் மேனியில் முதல் கோடு விழும் வரை அக்கம்பக்கம் பிலாக்கு பார்க்காமல், ஒட்டாமல் உரசாமல் ஓட்டுவேன் என்று உறுதி கூறுகிறேன். புதிதாக இறக்கிய வண்டிக்கு புது பேன்ட் சட்டையாக சீட் கவர் மாட்டிவிட்டேன். கூலிங் கிளாஸாக சன் கண்ட்ரோல் ஃபிலிம் ஒட்டிவிட்டேன். ஆட்டோ, மாநகர பஸ் போன்ற சென்னை நகரத்தின் சாலை பயில்வான்களை சேவித்து வழிவிட்டு ஓரமாக செல்ல பழகிக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் பழியாய் பக்கத்தில் வந்து சகட்டுமேனிக்கு ஹாரன் அடித்து சீண்டி என்னையும் கோதாவில் இறக்க முயற்சிக்கிறார்கள். சேப்பாயி உன் கற்பை காப்பாத்திக்கோ!

பின் குறிப்பு: வண்டி எடுத்ததும் வானவில் மனிதனை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் விண்ணில் ஏறிப் பறந்தேன்.

-

Wednesday, May 25, 2011

வாயாடி வங்கம்மா

அக்கடான்னு திண்ணையில் உட்கார்ந்து ரொம்ப நாளாச்சு. எலக்ஷன் ஜுரம் முடிந்து தமிழகத்திற்கு மம்மி returned. King Maker என்று கேப்டனுக்கு புகழாரம் சூட்டி கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் ஓரம் அவசரமாக அற்பசங்கைக்கு ஒதுங்கும் சுவற்றில் மணக்க மணக்க போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். திகார் ஜெயில் முக்கியஸ்தர்களால் நிரம்பி வழிகிறது. ஆங்கிலம் தெரிந்தால் கம்பி எண்ண வேண்டும் போலிருக்கிறது. வாட் எ டேஞ்சரஸ் லாங்குவேஜ். தமிழ் வாழ்க! "இங்கு அரசியல் பேசாதீர்கள்" என்று திண்ணையில் சுண்ணாம்பினால் எழுதிய ஒரு போர்டு போட்டிருக்கிறது. வேற சில விஷங்களைப் பார்ப்போம்.

********** வாயாடி வங்கம்மா ************

செல்ஃபோனில் வாய் ஓயாமல் பேசுபவர்களைப் பார்த்தாலே எனக்கு ரொம்ப அலர்ஜி. "ஆ.ஆமாமா..." என்று ஒரு காட்டுக் கத்தல், "ஹலோ.. அலோ..லோ..லோ" என்று ஒரு கூப்பாடு, "ஹாஹ்.ஹா..ஹா.கீ..கீ..கீ." என்று ஒரு அதிர் வேட்டு சிரிப்பு, "ஸ்.சு..சு..ஸ்." என்று கொஞ்சம் குசுகுசு, மளுக்கென்று கழுத்து சுளுக்கும் வரை மண்டையை தலையாட்டி பொம்மை போல ஆட்டுவது என்று பல சேஷ்டைகளுடன் நந்தனம் பஸ் ஸ்டாப்பிலும், சென்ட்ரல் ஸ்டேஷன் ஜன சமுத்திரத்திற்கு மத்தியிலும் இடங்களில் நின்று இவர்கள் வாயாடுவது மகா கொடுமை. சில கனவான்கள் காதுக்கும் வாயுக்கும் போனை துடுப்போட்டி பேசுவார்கள். இக்காலத்தில் செல்போன் இல்லாமல் தெருவில் யாரையும் காண்பதரிது. இந்த அமெரிக்கப் பெண்மணி ரயில் பயணத்தின் போது பதினாறு மணிநேரம் தொடர்ந்து பேசி சாதனை படைத்திருக்கிறார். எப்படி சாப்பிட்டார், எப்படி இன்னபிற காரியங்கள் செய்தார் என்று தெரியவில்லை. சக பயணிகள் காவல் துறைக்கு பிராந்து கொடுத்து பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.






கடைசியில் இந்த அமெரிக்கப் பெண்மணி தான் அவமானப்படுத்தப்பட்டதாக அறைகூவி அங்கலாய்த்தாரம்.

************* 10-10-10-10 ***********


20-20 கிரிக்கெட் மாட்சுகள் இன்னும் கொஞ்ச நாள் கழித்து சலிப்பு தட்ட ஆரம்பித்துவிடும். அடுத்தது என்ன செய்யலாம் என்று விளையாட்டாக பேசியபோது எனது அலுவலக நண்பர் இருபது இருபது போட்டிகளை பத்து பத்து ஓவராக ரெண்டு இன்னிங்க்ஸாக வைக்கலாம் என்றார். முதல் பத்து ஓவர் ஒரு அணி மட்டை பிடிக்கும் அடுத்த பத்து ஓவர் எதிரணி. இப்படி ஆளுக்கு ரெண்டு இன்னிங்க்ஸ் டெஸ்ட் மேட்ச் போல ஆடலாம் என்றார். ஐடியா நன்றாகத் தான் இருக்கிறது, சொன்ன நண்பருக்கு அடுத்த லலித் மோடி ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றேன். சிரிக்கிறார். ஆடுகளத்தில் இன்னிங்க்ஸ் பிரேக்கில் யாத்தே யாத்தேயலாம்.

*********** ஜாம் பஜார் ஜக்கு ************

மனோரமா ஆச்சியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பாடல்.





தில்லானா மோகனாம்பாளில் "ஏன்" என்ற வார்த்தையை அபிநயம் பிடித்து இழுத்து சிக்கலாரிடம் பேசி நடித்தது பார்ப்போர் நெஞ்சை அள்ளும். சென்னை செந்தமிழ் ஆச்சி பேசித் தான் கேட்கவேண்டும்.

********* மண்டையடி ***********



தங்கக் கேச மயில் மீது பால் தாக்க வர்றதை பார்த்தும் கூட ஒருத்தன் கேமராப் புடிச்சான் பாரு அவனை.... அவனை...

********* தாலாட்டுதே வானம் ****************
 கமல் பாட்டுதான் ஞாபகத்திற்கு வந்தது. இயற்கை எனும் அழகசுரனை படம் பிடித்த அந்தக் கைக்கு அயோத்திக் குப்பம் வீரமணி போட்டிருந்தது போல ஒரு ப்ரேஸ்லெட் வாங்கிப் போடணும்.




-

Sunday, May 22, 2011

சிவாண்ணா!


"ஆர்.வி.எஸ் புக் ஃபேர் போலாம் வரீங்களா?" காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நடந்த ஒரு புத்தகத் திருவிழாவிற்கு கை பிடித்து அழைத்துப் போகாத குறையாக கேட்டார் சிவாண்ணா. எங்களது முதல் பரிச்சியதிர்க்கு பின்பு சேர்ந்து போன ஒரு புத்தகக் காட்சி அது. எந்தெந்த பதிப்பகங்களில் யாரார் எழுதியதை வாங்க வேண்டும் என்று கனகச்சிதமாக பட்டியலிட்டு வாங்குவார். புஸ்தகம் படிப்பது சுவாசத்துக்கு நிகரானது என்று சிரித்துக்கொண்டே சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது. கம்ப ராமாயணம், பெரியபுராணம், ஸ்ரீமத் பாகவதம் என்று பல புஸ்தகங்களை அவருக்காக அன்று தூக்கிக் கொண்டு பின் தொடர்ந்தேன். இதுபோன்ற உபசரிப்புகளை ஏற்பதற்கு மிகவும் சங்கோஜப் படுவார். "வேண்டாம் ஆர்.வி.எஸ். எங்கிட்ட கொடுங்க" என்று கையிலிருந்து பிடிங்கியது நேற்றைக்கு போல இருக்கிறது.

திருமுறைத்தலங்கள் என்ற புத்தகத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களின் முகவரிகள் இருக்கிறது என்று சொல்லி என்னை கோயில் பாதைக்கு திருப்பியவர் அவர். எந்த ஒரு புஸ்தகத்தையும் ஓ.சியில் வாங்கி படிக்கக் கூடாது என்ற நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்தார். "ஆளுக்கு ஒரு காப்பி வாங்கினால் தானே எழுதறவங்களுக்கு இண்டரெஸ்ட் வரும்" என்று கேட்பார். அன்றிலிருந்து எந்த ஒரு புஸ்தகமாக இருந்தாலும் கடையில் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறேன். இசை, சினிமா, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரை என்று பல முகங்களில் சிவாண்ணாவை பார்த்திருக்கிறேன்.

இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் வெகு ஜோர் என்று சொன்ன போது "நல்லாத்தான் இருக்கும். ஆனா ஆர்.வி.எஸ். நான் சில பாடல்கள் சொல்றேன்... அப்புறமா சொல்லுங்க..." என்று சொல்லிவிட்டு "படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்.." என்று கனைத்துக்கொண்டு ஆரம்பித்தபோது எஸ்.பி.பி. வந்து எதிர் சேரில் உட்கார்ந்து பாடியது போல இருந்தது. "இது வி.குமார் இசையில் எஸ்.பி.பி பாடியது. இதுல வரும் ரிவர்ஸ் தபேலா இருக்கே... போட்டு பின்னியிருப்பான்.." என்று சொல்லி சிலாகிப்பார். என்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் "அண்ணா" என்று கூப்பிட்டால் திரும்பவும் என்னையும் "சொல்லுங்கண்ணா" என்பார். பாகவத சிரோன்மணியான அவரது தந்தையாரிடம் மராத்திய அபங்கங்கள் பற்றி கேட்க வந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் அவர்களுக்கு தந்தையின் உடல்நிலை காரணமாக பாட முடியாததால் சில அபங்கங்களை பாடியும் அர்த்தம் சொல்லியும் கொடுத்தார்.

பெரியோர் சிறியோர் வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் மதிக்கத் தெரிந்த ஒரு மாமனிதர். தனது இல்லம் எங்கும் மானிடர்களின் படங்களை பிரேம் போட்டு தொங்கவிடாமல் மகான்களின் படங்களும், தெய்வத் திருவுருவங்களையும் ஒரு படக் காட்சி போல சுவர் தெரியாமல் பார்வைக்கு மாட்டியிருப்பார். ஒரு பத்திரிக்கையின் (சினிமா எக்ஸ்ப்ரெஸ் மற்றும் வெள்ளிமணி) ஆசிரியர் பொறுப்பில் பணியாற்றினாலும் படங்களை எடிட் செய்ய உதவும் போட்டோஷாப் என்ற மென்பொருளை இயக்கக் கற்றுக் கொண்டு அதில் மிகுந்த தேர்ச்சி அடைந்தார். அவர் போட்டோஷோப்பில் அலங்கரித்துக் கொடுத்த அண்ணாமலையார் இன்னமும் எங்கள் வீட்டு கூடத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றுவார். விசாரசருமர் என்ற பெயரில் ஆரம்பித்த சொற்பொழிவு "சண்டிகேஸ்வரர்" என்று அபாரமாக முடித்து எல்லோரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்திய நிகழ்வும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது. நான் முதன் முதலில் ஏதோ கிறுக்கி கொண்டு போய் காண்பித்ததும் "வாத்தியார் ஸ்டைல் நிறைய இருக்கு ஆர்.வி.எஸ். கொஞ்சம் மாத்திக்குங்க. அவரை மாதரி ட்ரை பண்ணாதீங்க. ஆனாலும் அங்கங்க உங்களோடு குறும்பு கொப்பளிக்குது" என்று உளமார பாராட்டி தட்டிக்கொடுத்தார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை அவரது மரணச் செய்தியோடு துவங்கியது. ஒரு அரை மணி நேரம் எனக்கு "கிர்..." ரென்று இருந்தது.  நினைவலைகள் முன்னும் பின்னும் சிவாண்ணாவை ஏந்திக்கொண்டு தறிகெட்டு ஓடியவண்ணம் இருந்தது. அவர் தொப்பை குலுங்க சிரித்தது, ஜோக் அடித்தது, "நல்லா இருக்கா" என்று வசீகரப் புன்னகையோடு புது ருத்ராட்ச ப்ரேஸ்லெட் போட்டுக்கொண்டு கேட்டது, "சட்டை எப்படி?" என்று கேட்டதற்கு "தேங்காய் சீனிவாசன் மாதிரி இருக்குண்ணா.." என்று சொன்னதும் தே.சீனிவாசன் போலவே பேசிக் கிண்டலாய் சிரித்தது, "எந்த வீட்ல இருக்கீங்க?" என்று கேட்டு என்னை விஷமமாக கலாய்த்தது, "ஆர்.வி.எஸ் ஒரு படம் வச்சிருக்கேன் பார்த்தீங்கன்னா அசந்துடுவீங்க.." என்று கூப்பிட்டு பல ஊர் கோவில்களின் அற்புதப் படங்களை காட்டியது இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் என்னை புரட்டி புரட்டி அடித்தது.

வீட்டிற்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். உறவினர்கள் வரும் வரை அண்ணா காத்திருக்க வேண்டுமாம். சிதையூட்டுவதர்க்கு முன்னர் குளிரூட்டி வைத்திருக்கிறார்கள். அவரது ஆறாவது படிக்கும் மகள் வீட்டில் நடப்பது தெரியாமல் அங்குமிங்கும் நடமாடும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. நாளைக்கு அவரை மின்சார மார்க்கமாக......... வேண்டாம்...

இந்தப் பதிவை முடிப்பதற்கு முன்னால்.... ஓரிரு மாதங்களுக்கு முன்னர் "அவர் ஜெயிலுக்கு போயிருக்கார்" என்ற ஒரு உன்னத படைப்பை எழுதி தனது தகப்பனார்க்கு எனது வலைப்பூ மூலமாக அஞ்சலி செலுத்தினார். அவர் பெயரை போடக்கூடாது என்று அன்புக் கட்டளையிட்டார். "ஏன்?" என்று நான் கேட்டதற்கு "ச்சே.ச்சே. அப்பாவைப் பற்றி நான் ஏதோ ரொம்ப கதை விட்டதா யாராவது நினைச்சுப்பாங்க.. வேண்டாம் ஆர்.வி.எஸ். அது அப்பாவுக்கு நல்லா இருக்காது" என்றார். நினைக்கையில் எனக்கு கண்களில் நீர்க் கோர்க்கிறது......

ரொம்ப ஜாலி மூடில் இருக்கும் போதெல்லாம் "எஸ் ஷிவா ஹியர்..." என்று அமெரிக்க ஆக்செண்டில் ராகமாக செல்போனில் பேசியது இன்று முழுவதும் என்னைச் சுற்றி சுற்றி வருகிறது. காதுகளில் ரீங்காரமிடுகிறது. சிவாண்ணா!!!!!!!!!!


-


Friday, May 20, 2011

வெல்வதில் வேட்கை


அது ஒரு இரும்புத் தொழிற்சாலையின் மாலை நேரம்.
"ஏன் இப்படி?" என்று முகம் சுளித்தார் அந்த தொழிற்சாலையின் தலைமை அதிகாரி.

"தெரியலை.." தலையை குறுக்குமடுக்காக பெண்டுலமாக ஆட்டினார் அத்தொழிற்சாலையின் இந்த சிக் யூனிட்டின் மானேஜர். தலையாட்டலில் கழுத்தில் டை தாண்டவமாடியது.

"உன்னைப் போல திறமை மிக்க மேலாளராலேயே உற்பத்தியை பெருக்க முடியவில்லை என்றால்...ஹெ..ஹ்..ஹே..." பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே கேட்டார் தலைமை அதிகாரி.

"என்ன செய்வது. தோள் மேல் கை போட்டு தோழமையோடு கேட்டேன். மரியாதையாக வேண்டுகோள் விடுத்தேன். அதிகாரப்பூர்வமாக மிரட்டினேன். அசிங்கமாக திட்டினேன். ஓட ஓட விரட்டினேன். ஒருவரும் எதற்கும் மசியவில்லை." சோகத்தோடு சொன்னார் அந்த மேனேஜர்.

இந்த சம்பாஷனை நடந்தது மாலை ஆறு மணிக்கு. இரவு நேர தொழிலாளர்கள் இன்னமும் வேலைக்கு ஃபாக்டரிக்குள் நுழையாத காலம். "காலையிலிருந்து இதுவரை இன்றைக்கு எவ்வளவு இரும்பு துண்டுகள் உற்பத்தி செய்தார்கள்?" என்று மேனேஜரிடம் கேட்டார் முதலாளி. "ஆறு" என்று சோகமாக சொன்னார் மேனேஜர். அவரிடம் ஒரு சாக்கட்டி கேட்டார். அந்தத் தொழிற்சாலையின் உற்பத்தி நடக்கும் பிரதான கூடத்திற்கு வந்து தரையில் பெரிதாக "6 என்று எழுதினார்.  வேறு ஒன்றும் பேசாமல் காரேறி சென்றுவிட்டார்.

இரவு நேரப் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அந்தப் பெரிய எழுத்தில் ஹாலில் நடுநாயகமாக வீற்றிருந்த 6 என்ற எண்ணை பார்த்தார்கள். "என்ன இது?" என்று பகல் நேரப் பணி முடிந்து செல்லும் சக தொழிலாளிகளிடம் கேட்டார்கள். "காலையில் பெரியவர் வந்தார். எவ்வளவு உற்பத்தி செய்தோம் என்று சொன்ன நம்பரை இவ்வளவு பெரியதாக நடு ஹாலில்  எழுதிவிட்டு சென்றுவிட்டார்" என்று பதிலளித்தார்கள்.

மறுநாள் காலையில் பகல் நேரப் பணிக்கு வந்த பணியாளர்கள் "7" என்று கொட்டை எழுத்துக்களில் இருந்ததைப் பார்த்து வெகுண்டார்கள். ஆவேசத்துடனும் முழு ஆர்வத்துடனும் உழைத்து இரவு நேரத் தொழிலாளிகள் வேலைக்கு வருவதற்கு முன்னர் அந்த 7 ஐ அழித்து விட்டு "10" என்று குண்டாக எழுதிவைத்து விட்டு போனார்கள்.

தொழிலாளர்களிடம் இது ஒரு தொற்றுவியாதி போல பீடித்தது. மிகக் குறைந்த நாட்களிலேயே அந்த யூனிட் படிப்படியாக முன்னேறி ஏனைய எல்லா யூனிட்டைக் காட்டிலும் உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்தது. 

இது நடந்தது ஒரு காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனமான பெத்லஹெம் ஸ்டீல் கம்பெனியில். அந்த அதிகாரி Charles Michael Schwab ஆவார். சக தொழிலாளிகளிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியை தூண்டுவதன் மூலம் அந்த உற்பத்தியற்றுக் கிடந்த யூனிட்டை முன்னேற்றிக் காட்டினார். இவரது அந்தரங்க வாழ்க்கை முதற்கொண்டு இவரைப் பற்றி பல தகவல்களை விக்கிபீடியா சொல்கிறது. இருந்தாலும் ஒரு வார்த்தை யாருடனும் பேசாமல் அவர்களை திறம்பட வேலை செய்ய வைத்த வித்தை என்னை மலைக்க வைக்கிறது. இந்த உத்தியை வேறு தொழிற்சாலைகளில் உபயோகிக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்றாலும் இதன் உட்கருத்தை புரிந்துகொண்டால் சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?

பின் குறிப்பு: படமும் விஷயமும் எடுத்த தளம் http://schwabmethod.com/

-

Thursday, May 19, 2011

தில்லு


வாசலில் சைக்கிளை மெயின் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். வீட்டுக் கதவை தட்டுவதற்கு முன்னால் பக்கத்து சந்தில் யாரோ ஓடியது போலிருந்தது. கண் இரண்டையும் கூர்ப்பாக்கி காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் அலையவிட்டான். "சர ..சர.. பர.. பர... சரக்..சரக்.." என்று காய்ந்த பூவரசு இலைச் சருகுகள் மிதிபடும் ஓசை.
 
வலது கைக் கடிகாரம் மணி இரவு பதினொன்று நார்ப்பத்தைந்து என்று காட்டியது. தூரத்தில் தெருவிளக்கு மினுக்கிக் கொண்டிருந்தது.

வீடும் தெருவும் நிம்மதியாக தூங்கிகொண்டிருந்தது. மயான அமைதி. நிர்ஜனமான தெரு. தலை கோதும் காற்று. தலையாட்டும் மரம். தக்கினியோண்டு நிலா. ஒரு நாய் "ஊ...." என்றால் தீர்ந்தது.

நிசப்த வேளையில் திடீரென்று வேகமாக தெருமுனை திரும்பிய வெற்று லாரி ஒன்று "பாம்" என்று ஹாரனால் அலறிக்கொண்டே அதன் அங்கங்கள் தடதடக்க ஓடியது. அவனுக்கு உள்ளுக்குள் படபடத்தது. வெளியே வியர்த்தது. அந்த நேரம் பார்த்து தெருவிளக்குகள் ஒட்டுமொத்தமாக சட்டென்று அணைந்து மொத்த தெருவையும் இருள் கவ்விக்கொண்டது. மீண்டும் காம்பவுண்டு ஓரம் "சரக்..சரக்.. பரக்..பரக்..".

தைரியலட்சுமி உள்ளே தூங்கிக்கொண்டிருந்தாள். அவன் சம்சாரம்.

போனவாரம் ஐம்பது வயதாகும் பக்கத்து வீட்டு அம்முக்குட்டி பாட்டியிடம் ஜன்னல் வழியாக செயின் பறிப்பு. அதுக்கு முதல் வாரம் வாசலில் கிடந்த தாத்தா காலத்து கர்ண பரம்பரை சேர் கொள்ளை போயிருந்தது. நேற்றைக்கு இரவு தெரு முக்கில் ஒதுங்கப் போன பக்கத்து வீட்டு புது மாப்பிள்ளை கணேசனை மிரட்டி ப்ரேஸ்லெட் திருடப்பட்டது. கழுத்து செயினை எடுத்து பேன்ட் டிக்கெட் பாக்கெட்டில் சொருகிக்கொண்டான்.

திரும்பவும் "சரக்..சரக்..பர்க்..பர்க்..". அவனுக்கு திக்.திக்.திக்.

மெதுவாக பதுங்கி பம்மி நடந்து சென்று காம்பவுண்டு தாண்டி தில்லாக எட்டிப்பார்த்தான் வீரக்குமார். ச்சே! குட்டிப் போட்டு புதுசா அம்மாவான பெண் நாயும் ஒரு கடுவன் பூனைக் குட்டியும் ஒன்றின் மேல் ஒன்று ஏறி சருகு சரசரக்க கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தன. 

நிம்மதியாக கதவை தட்டினான். ஐந்து நிமிடங்கள் கழித்து கொட்டாவியோடு தைரியம் கதவைத் திறந்தது. சிரித்துக்கொண்டே "குட்டிப் போட்ட நாயும் பூனையும் ஒண்ணா சேர்ந்து சந்துல என்னமா வெளயாடுது. பயமே இல்லாம!"

"அப்படி..." என்ற கேள்வி தைரியம் வாயிலிருந்து கொட்டாவியோடு கலந்து கடைசியாக "யா?" என்று வெளியே வந்தது.
 
"ம்... என்ன மாதிரி!" என்று நெஞ்சைத் தட்டி சொன்னான்.

தைரியம் அர்த்தபுஷ்டியாக சிரித்தது.

பட உதவி: http://www.unprofound.com/

பின் குறிப்பு: முன்னூறு வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கதை எழுத ஆசை. தீர்த்துக்கொண்டேன்.

-

Tuesday, May 17, 2011

இயற்கைவசப்பட்டு...

செண்பகாவில் நாங்கள் குளித்து முடித்து ஈரத் தலையை உதறிக் கரையேறும் சமயம் ஒரு வாலிபப் பட்டாளம் "ஹீய்.....உய்...ஏய்..." என்று வானர சேனையாய் அருவிப் பகுதியில் சூறாவளி போல களம் புகுந்தது. கொளுத்தும் வெய்யிலிலும் அருவியின் ஜில்லிப்பில் மெய்மறந்து சிலிர்த்துக்கொண்டு பட்டாளத்திடம் பயந்து செண்பகாவை விட்டு வெளியே வந்தோம். சட்டையை கழற்றி தலைக்கு மேலே விசிறி போல சுழற்றி வீசிக்கொண்டே அருவியின் இரைச்சலையும் மீறி "ஹோ..." என்று எக்காளமிட்டுக்கொண்டு ஓடிய ஒரு இளரத்தம் அருவிப் பொழிவின் நட்ட நடுபாகத்திற்கு வந்து ரப்பர் பந்து போல எகிறி முன்னால் தேங்கியிருந்த குட்டை போன்ற தண்ணீரில் செங்குத்தாக குதித்து முங்கி எழுந்து ஆட்டம் போட்டது. குதித்த வேகத்தில் எதிரருவி கிளம்பியது. பேரலைகள் சலசலத்து எழுந்து அமுங்கியது. இந்தப் பயமறியா இளங்கன்றுகளின் அதிரடி வரவால் அருவி சற்றே அடங்கியது போலத்தான் இருந்தது.

அருவியில் நீராடப் போகும்போது கொக்குக்கு அருவியே மதியென சென்றதால் வரும்போது செண்பகாதேவி அம்மனை தரிசிக்கலாம் என்று கோவில் உள்ளே சென்றோம். பூசாரியைக் காணவில்லை. கம்பி போட்ட கதவுக்குள் விளக்கேற்றி அம்மனை அடைத்து வைத்திருந்தார்கள். பிரகாரத்தில் யாரோ பக்தி மணம் கமழ ஏற்றிய அகல் விளக்கில் இருந்து திரி பொசுங்கிய தீஞ்ச வாசனை அடித்துக் கொண்டிருந்தது. வெளியே இருந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு வந்த வழி திரும்பினோம்.

"இன்னும் எவ்ளோ தூரம்?" என்று கேட்டுக்கொண்டே ஒரு டிராயர் போட்ட பொடிசும் தொங்கும் நரைத் தாடி வச்ச பெரிசும் ஏறினார்கள். அடர்ந்த தாடியின் பின்னே ஏதோ ஒரு சித்தர் ஒளிந்திருந்தார். ஏறும் போது ரொம்ப தூரமாக இருந்த வழிப்பாதை இறங்கும் போது அதில் அரையளவு குறைந்திருந்தது. மாங்காய்க் கடைக்காரருக்கு கஸ்டமர்கள் கணிசமாக அதிகரித்திருந்தனர். அஞ்சு பீஸ் பத்து ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார். சத்தியத்திற்கு கட்டுப் பட்டது போல குரங்குப் படை அவரை அணுகாமல் அலகாமல் ஒரு எல்லையில் நின்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.

shenbagaway

காதலனை காற்றுப்புகா வண்ணம் ஆரத் தழுவிய பதினாறு வயது பருவக் காதலி போல மரத்தோடு இரண்டற பின்னிப் பிணைந்த இளந்தளிர் கொடிகளை தாண்டி வேகமாக இறங்கினோம். ஒரு சில இடங்களில் கரும் பாறைகளைக் கூட பல பசுங்கொடிகள் கட்டிப்பிடித்து கலப்பு மணம் செய்திருந்தன. உசரக்க ஏறுவதைக் காட்டிலும் கீழே இறங்குவதில் அதிக கவனம் தேவை என்பதை என் பெரியவளை சறுக்க வைத்து உணர வைத்தது சரளைக்கல் நிறைந்த அந்த மலைப்பாதை. உச்சிக் குளிர குளித்ததும் உடம்பில் இருந்து உஷ்ணம் பரிபூரணமாக விலகி பெரும் பசிப் பிணியை கிளப்பிற்று. மண்டபத்தில் "மத்தியான்னம் சாப்பாடு பேஷா உண்டே" என்று காலையிலேயே தொந்தி சரிந்த சட்டை போடாத குண்டு மாமா மூச்சு இறைக்க இறைக்க தோளுக்கு அங்கவஸ்த்திரம் போட்டிருந்த பல்லிபோல இருந்த ஒல்லி மாமாவிடம் சொல்லியது மூளையில் பளிச்சென்று ஃப்ளாஷ் அடித்தது. வயிறு "டிங்கிடிங்கி" என்று அவசர மணி அடிக்க பசித் தீ அணைக்க வேகமாக ஓடினோம்.

*

மாயாபஜார் எஸ்.வி.ரெங்காராவுக்கு கட்டை விரல் உயர்த்தி சவால் விடும்படியாக  காய்கறிகளுடன் சாப்பாட்டை மூக்கில் பருக்கை வர ஒரு கட்டு கட்டியபின்னர் மூன்றரை மணி சுமாருக்கு அச்சன்கோயில் ஆரியங்காவு திருத்தலங்களுக்கு பிரயாணித்தோம். மஹிந்திரா டூரிஸ்டர் வண்டியை மேலே ஒரு லகரம் கொடுத்து உள்ளே பிரமாதமாக ஜோடித்து மூலைக்கு மூலை பாக்ஸ் ஸ்பீக்கர் கட்டி 5:1 டிவிடி போட்டு அமர்க்களமாக வைத்திருந்தார் சக்திவேல். அவரே மொதலாளி அவரே தொழிலாளி. வேனில் குடும்பம் நடத்தலாம் போல அதி சுத்தமாய் இருந்தது. சென்னையில் எக்மோருக்கு ட்ராப் செய்த வேன் இதைப் பார்த்தால் தானாக திரிசூலம் மலை மேலே ஏறி தற்கொலை செய்து கொள்ளும். அஃறினை செய்து கொண்ட முதல் பிராணஹத்தி என்ற மங்காப்புகழ் பெற்றிருக்கும்.

achan1
அச்சன்கோயில் தென்காசியில் இருந்து மலை மார்க்கமாக கேரளா செல்லும் பாதையில் உள்ள சாஸ்தா கோயில். மலையில் ஏறியவுடன் டிரைவர் கை இரண்டும் பின்னிக் கொள்ளும்படி அமைந்த ஏழு கொண்டை ஊசி வளைவுகள் கடந்தவுடன் கேரளா செக் போஸ்டில் இருபது ரூபாய் கொடுத்தார். முறுக்கிக்கொண்ட கை காசு கொடுப்பதற்கு விடுதலை பெற்றது. மேலும் இரண்டு கொ.ஊசி வளைவு தாண்டி அச்சன் குடியிருந்த ஒரு பஹூத் அச்சா கோயிலை அடைந்தோம். மலைகள் சூழ்ந்த இடம் ஆதலால் பார்க்க ரொம்ப கவர்ச்சியாகவே இருந்தது. ஐந்து மணிக்கு தான் கோவில் நடை திறப்பார்கள் என்றார்கள். பேன்ட் சட்டையுடன் ஒரு பெண் தன் கிழத் தாயுடனும், நிறைமாதமாக கர்ப்பகாலத்தில் பெண்டாட்டி பட்ட கஷ்டத்தை vicarious suffering போல  இப்போது தன் மடியில் சுமந்த ஒரு நாற்பது வயது கணவர் பிள்ளைப் பாரம் இறக்கிய தன் மனைவியுடனும் கோவில் வாசலில் அமர்ந்திருந்தனர்.

கேரளக் கோவில்களின் இலக்கணத்தை துளிக்கூட மீறாமல் கே.ஜே. ஜேசுதாஸ் மலையாளத்தில் செண்டையுடன் தன் குரல் வளத்தால் போட்டியிட்டு பாடிய ஒரு பாடலை ஒலிக்கவிட்டு கதவு கிரீச்சிட திறந்தார்கள். திறக்கும்போதாவது நிச்சயம் பக்தர் கூட்டம் வந்து நம்மை நெட்டித் தள்ளும் என்ற எனது எண்ணத்தில் சாஸ்தா அரவணைப் பாயசம் அள்ளிப் போட்டார். எல்லோரும் உள்ளம் திருக்கோயில் ஊன் உடம்பு ஆலயம் என்று திருமூலத்தனமாக இருந்துவிட்டார்கள் போலிருக்கிறது. கிரீம் கலரில் சிகப்பு பட்டையடித்த கேரளா அரசாங்கத்தின் சோகையான பஸ்ஸில் வந்திறங்கிய சொற்ப பயணிகளில் ஒருவரும் கோவிலுக்கு வந்ததாக தெரியவில்லை. தாடி வைத்த மோகன்லால் டிரைவர் பீடியை வாயில் கடித்துக்கொண்டு சாயா குடிக்கப் போனார். கோவில் முகப்பில் மலையாளம் மற்றும் நல்ல தமிழில் போர்டு வைத்திருந்தார்கள். மரம் நிறைந்த மலை சூழ் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் சாஸ்தா நமக்கு அருள் புரிய வீற்றிருந்தார். வானுயர்ந்த மரத்தில் இருந்து பறவைக் கூட்டத்தின் "ஊ ..உய்.." என்ற கீதத்துடன் மனதுக்கு நிறைவான தரிசனம்.

திரும்பவும் தென்காசி வரும் வழியில் பயணித்து அடுத்த பக்கம் இருக்கும் இன்னொரு மலையில் ஏறி ஆரியங்காவு சென்றோம். "அண்ணே! எங்கயாவது டீக்கடை தென்பட்டா நிறுத்துங்க.." என்று நா வறட்சியில் கோரிக்கை வைத்த ஒட்டுமொத்த வேனையும் புறக்கணித்து அசராமல் வண்டி ஓட்டினார் முதலாளி. "அண்ணே!" என்று பத்து நிமிடம் கழித்து நினைவூட்டிய என்னிடம் "கோயில் சீக்கிரம் மூடிடுவாங்க. அதப் பார்த்துட்டு குடிக்கலாம்" என்று மலை ஏறும்போது மனதில் தோன்றியதை இப்போது என்னிடம் திருவாய் மலர்ந்தார். "அதுவும் சரிதான்" என்று வண்டியில் இருந்த பக்திப் பழமான நாலு பெரியோர்கள் கோரஸாக அவருக்கு "ஓ" போட்டார்கள்.

கொல்லம், சபரிமலை செல்லும் அந்த மலைரோடு முழுக்க சேர நாட்டு லாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தார்ப்பாய் போர்த்தியும் bare பாடியோடும் சென்ற லாரிகளின் "டர்ர்ர்ர்..." என்ற டயர் சத்தம் பாறையில் மோதி நம் காதையும் அறுத்தது. வண்ண வண்ண கைலி அணிந்து பீடி வாயோடு ஆரியங்காவு கோவிலுக்கு பக்கத்து டீக்கடையில் லாரியை ஓரமாகப் பார்க் செய்துவிட்டு "எந்தானு?" என்று ராகமாக பறைந்து கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள் செல்வதற்கு நூறு படிகளாவது இறங்க வேண்டியுள்ள ஒரு பாதையை பேவர் ப்ளாக் போட்டு சறுக்குப் பாதையாக மாற்றி புண்ணியம் கட்டிக்கொண்டார்கள். அச்சன்கோவிலை விட இது சற்றே பெரிய கோவில். நிச்சயம் சாஸ்தா தரிசனத்திற்கு கூட்டம் இருக்கும் என்று நினைத்தேன். அச்சன்கோவிலில் எங்களுடன் பார்த்த அதே திருக்கூட்டம் தான் இங்கேயும்.

ஸ்வாமி பார்த்த கையோடு வெளியே பெட்டிக் கடை போட்டிருந்த முண்டணிந்த சேச்சியிடம் சாயா வாங்கி குடித்தோம். தலை விரிகோலமாக சந்தனப் பொட்டிட்டு அரைக்கை சட்டைப் பாவாடையில் இருந்த அவரின் பெண்குட்டி ஸ்லேட்டில் கணக்குப் போட்டு எங்களிடம் காசு வாங்கிக்கொண்டது. சேர நன்நாட்டிளம் பெண்கள்!

*

kaaraiyaaru1
மணிமுத்தாறு மற்றும் முண்டந்துறை செல்வதாக மறுநாள் கிளம்பினோம். சூரியன் தலைக்கு மேலே ஸ்ட்ரா போட்டு உற்சாகத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தான். நம்மை வதைப்பதாக இருந்தாலும் நாம் சொல்வது "நல்ல(!?) வெய்யில்!". மணிமுத்தாறு ரோடு வேலைகள் நடைபெறுவதாகவும் அங்கே செல்ல முடியாது என்றும் அந்தப் பக்கமாக பறந்து வந்த ஒரு பட்சி சொல்லிற்று. காரையாறு அணைக்கட்டு வரை போய் திரும்பலாம் என்று மொதலாளியை அழைத்துக்கொண்டு கிளம்பினோம். மலையேறும் அலங்கார வளைவில் செக் போஸ்ட் ஒன்று இருந்தது. அதன் பக்கத்தில் இருந்த குளிர்பானக் கடை பையன் வேனின் எல்லா ஜன்னலிலும் பின்வருமாறு மிரட்டல் விடுத்தான். "சாப்பிட, குடிக்க இங்கயே எல்லாம் வாங்கிக்குங்க. உள்ள ஒன்னும் இருக்காது".

இது ஒரு பயங்கர வனவாசம் போல இருக்குமோ என்று எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் எழ பயமூட்டினான். அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஸ்ப்ரைட், கென்லே என்று குடிப்பதற்கு வாங்கிக்கொண்டு ஏறினோம். நல்ல காட்டுப் பிரதேசம். ஆங்காங்கே புலி வளர்ப்பு பற்றிய போர்டுகள். ஒரு மலைக்கிராமத்தில் வீட்டு வாசலில் வனமோகினிகள் போல இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஜெகன்மோகினி படத்தில் வருவது போல முட்டிக்கு கீழ் வரை கார்மேகக் கேசம் வளர்ந்திருந்தது. காரையாறு அணைக்கு அரை கிலோ மீட்டர் முன்னாலையே வண்டிக்கு அணை போட்டார்கள். ஓரங்கட்டி நடந்து போகச் சொன்னார்கள். இந்த ஏழைக்காக பெரியபதவியில் இருக்கும் ஒரு சில நல்ல இதயங்கள் ஃபோன் போட்டு வன இலாகா அதிகாரிகளிடம் வண்டியோடு மேலே செல்ல பரிந்துரைத்தார்கள்.

kaaraiyaaru

தடுப்பை தாண்டி வண்டியில் செல்லும் எங்களை நடந்து சென்றவர்கள் உளமார சபித்தார்கள். அணைக்கட்டிற்கு வந்து பார்த்தால் அதல பாதாளத்தில் ஐயனார் குட்டை போல தண்ணீர் தேங்கி இருந்தது. படகு குழாம் சிறு கடுகு போல தெரிந்தது. நடந்தோ உருண்டோ கீழே இறங்குவது அவரவர் சாமர்த்தியம். அப்படி இறங்கி அந்தப் படகேறி எதிர்முனை சென்றால் அங்கே இருப்பது பான தீர்த்தம். கொளுத்தும் வெய்யிலில் படகில் பயணித்துப் போக பெருசுகள் ஆட்சேபிக்க சிறுசுகள் (என்னையும் சேர்த்துதான்) ஆர்ப்பரிக்க ஒரு சின்ன துவந்த யுத்தம் நடந்தது. கடைசியில் பெரியவர்கள் வென்றார்கள். சிறியவர்கள் மனஸ்தாபத்தோடு இறங்கினார்கள்.

manimuthaar

இறங்கி வரும் வழியில் அந்த அணைக்கட்டில் இருந்து ஓடை போன்ற ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் வண்டியை இரண்டு பெருமரங்களுக்கு இடையே நிறுத்தி சிறுசுகள் போய் குளித்தோம். ஒரு சிகப்பு நாய் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்தது. விறகு பொறுக்கி தலை மேல் சுமந்து கொண்டு போன காட்டுச் சிறுக்கி ஒருத்தி சிரித்துக்கொண்டே ஒய்யாரமாக நடந்தாள். தண்ணீர் கொஞ்சமாகத் தானே ஓடுகிறது என்றெண்ணி காலை வைத்தால் முதலை போல வெடுக்கென்று இழுத்தது. நல்ல கரெண்ட். ஜாக்கிரதையாக அடி மேல் அடி வைத்து ஓடையின் நடுவே சென்று குளித்தோம். பான தீர்த்தம் போக முடியாத கோபத்தை ஓடையின் ஜில் அடித்து விரட்டியது. நுரைத்து ஓடிய தண்ணீரில் முகம் புதைத்து புத்துணர்ச்சி பெற்றோம்.

manimuthaar1

"நேரமாச்சு" என்று ஒரு பெரியவர் தார்க்குச்சி போட வேனில் ஏறினோம். அடுத்து நேரே நெல்லையப்பருக்கு சலாம் போட திருநெல்வேலி போவதாக ப்ளான். வழியில் அம்பையில் கௌரிஷங்கர் என்ற போர்ட் வெளுத்துப் போன (அ)உயர்தர சைவத்தில் புசித்தோம். சாப்பாட்டுக்கு உட்கார்ந்த நேரம் மின்சாரம் தடைப்பட்டு உழைத்து ஓடாய்த் தேய்ந்த சர்வர்கள் வேர்வையும் சேர்த்து எங்களுக்கு பரிமாறினார்கள். ஐயோடின் கலக்காத உப்பாக அதை பாவித்து உண்டோம். பாலம் ஏறி தக்குடு அவதரித்த புண்ணிய க்ஷேத்ரமான கல்லிடை வழியாக அவரை மனதார நினைத்துக் கொண்டு திருநெல்வேலி சென்றேன். காந்திமதியும், நெல்லையப்பரும் தம்பதி சமேதராக அற்புத தரிசனம் தந்து அருள்புரிந்தார்கள். நெல்லையப்பர் சன்னதி வாசலில் தூணைத் தட்டி இசை எழுப்ப முயன்றேன். ஓங்கி குத்தியதில் கை கன்னிவிட்டது.  ஸ்வாமி பார்த்துவிட்டு தூங்குவதற்கு நேரே மேலகரம் குபேரனை நோக்கி விரைந்தோம்.

*

முக்கியமான இரண்டு விசேஷங்களும் நடந்த நாள். மதியம் வரை இருந்து சாப்பிட்டோம். மாலை ஸ்ரீவில்லிப்புத்தூர். தமிழக அரசு சின்னத்தை அலங்கரித்த கோபுரத்தை கீற்று போட்டு மறைத்து வைத்திருந்தார்கள். உள்ளே "ஏன்?" என்று கேட்டதில் தங்கக் காப்பு போடுகிறார்களாம். அசந்துவிட்டேன். நேரே தாயார் சந்நிதி சென்றோம். எந்தத் தலத்திற்கும் இல்லாத சிறப்பாக பெருமாள் ரெங்கமன்னார் உடன் வலப்புறத்தில் ஆண்டாளும் இடப்புறத்தில் கருடாழ்வாரும் சேவை சாதித்தார்கள். கோபுரவாசலில் அழுக்குச் சட்டையுடன் துரத்தி வந்து அந்த சின்ன ஆண்டாள் விற்ற துளசி மாலையை சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்கு சாற்ற கொடுத்தோம். "எந்த ஊர்லேர்ந்து வரேள்!" என்றார். என் அப்பா "ராஜ மன்னார்குடி" என்றும் நான் "சென்னை" என்றும் ஒருசேர பதிலளித்தோம். "களவாணி" என்று கூறி சிரித்தார் பட்டர். ஆண்டாள்  பெருமாளுடன் ஐக்கியமான ஆனந்தத்தில் எங்களை மன்னித்தாள். அப்புறம் ஆண்டாளை கண்டெடுத்த பிருந்தாவனத்தை பார்த்துவிட்டு வடபத்ரசாயி சந்நிதிக்கு சென்று சேவித்தோம்.

Tenkasi Temple
வந்ததிலிருந்து தென்காசி காசி விஸ்வநாதர் லோகநாயகி அம்மனை தரிசிக்கவில்லையாதலால் நேராக தென்காசிக்கு வண்டியை விட்டோம். வழியில் மடவார் விளாகத்தில் இருந்த வைத்தியநாதர் கோபுரம் சிவசிவா என்று அழைத்தது. ஹரியும் சிவனும் ஒன்னு. அறியாதவன் வாயில மண்ணு. தரிசனம் முடித்து தென்காசி விஸ்வநாதரை தரிசித்து விடலாம் என்ற நம்பிக்கையில் வண்டி ஏறிய எங்களை மொதலாளி பழிவாங்கினார். ஐம்பது தாண்டாமல் ஓட்டினார். ஆட்டோ காரருக்கு கூட வழிவிட்டு இடது புறம் ரசமட்டம் பிடித்தது போல சீராக ஓடினார். சின்னவளுக்கு பசியெடுத்தது. எப்படியும் போய் தென்காசியில் ஸ்வாமி பார்த்து சாப்பிடலாம் என்றால் ஒன்பது மணிக்கு கோயில் வாசலில் இறக்கி விட்டு சிரித்தார். தெய்வீக சிரிப்பு.

ஆளை அலேக்காகத் தூக்கும் காற்று அடித்தது. நம்மூர் பீச்சுக் காற்று பிச்சை வாங்க வேண்டும். கோயில் பூட்டி விட்டார்கள். எதிரே புராணா லாலா கடையில் சுடச்சுட ஹல்வா போட்டார்கள். சர்க்கரைவியாதிக்காரர்கள் காத தூரம் ஓடிப்போய்விடும் அளவிற்கு அந்தப் பகுதியில் காற்றே இனிக்கிறது. நூறு ஐம்பது என்று டாஸ்மாக் வாசலில் கட்டிங் அடிப்போர் போல அல்வா சுவைக்கும் கும்பல் வாழ்க. கணையம் நன்றாக சுரக்க தென்காசி விஸ்வநாதர் அருள்புரிவாராக! கொஞ்ச நேரம் காற்று வாங்கிவிட்டு குபேரனிடம் தஞ்சம் புகுந்தோம்.

*

ilanji koil

மறுநாள் காலையில் நேரே சித்திர சபை கண்ட குற்றாலநாதரை தரிசித்தோம். குரங்கையும் எங்களையும் தவிர்த்து கோவிலில் ஈ காக்காய் இல்லை. பத்து செண்பகப்பூ பத்து ரூபாய் என்று பேரம் பேசாமல் வாங்கி அர்ச்சனைக்கு கொடுத்தோம். சாஸ்தாவிர்க்கும் ஒரு அர்ச்சனை செய்தோம். வெயிட்டிங்கில் நின்ற ஆட்டோ ஏறி இலஞ்சிக் குமரன் கோவில் சென்றோம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். வள்ளி தெய்வானையுடன் கம்பீரமாக வேலேந்தி நின்றிருந்தார். பக்கத்தில் இருவாலுக ஈஸ்வரர் அருள் புரிந்தார். அம்மன் பெயர் இருவாலுகவர்க்கினியாள். அகஸ்த்தியர் வெண்மணலில் பிடித்து வைத்த லிங்கமாம். கொள்ளை அழகு.

ilanji scene
வாசலில் காத்திருந்த ஆட்டோ ஹாரன் அடித்து கூப்பிட்டார். கரும்புத் தோகைகளுடன் விளையாண்டுகொண்டிருந்த குட்டியானைக்கு ஒரு வணக்கம் போட்டு ஏறினோம். நேராக காசி விஸ்வநாதர் தரிசனம். நல்ல பெரிய மூர்த்தம். அம்பாளையும் வணங்கி வெளியே வரும் மதிய நேரத்திலும் காற்று சிலுசிலுவென அடித்தது. அதோடு சேர்ந்து பறந்துவிடமாட்டோமா என்றிருந்தது. வேகமாக வீசினாலும் மயிலிறகால் தடவுவது போல முகத்தில் தவழ்ந்தது அந்த சிறப்புக் காற்று.

மாலையில் அதே ஆட்டோவில் தென்காசி ஸ்டேஷன் வந்தடைந்தோம். கைலி விளம்பரப் பையன் மீண்டும் சிரித்தான். "ஹோ...." என்று இருந்தது பிளாட்ஃபாரம். செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் ஏறும் போதே கரை வேட்டிகள் நிறைய ஏறினார்கள். "அண்ணே! அம்மா! தூள்!" போன்ற வாசகங்கள் பரவலாக காதில் விழுந்தது. ஐயாவிடமிருந்து அம்மாவசம் வந்த தமிழகத்தின் தலைநகரத்திர்க்கு ரயில் கூவி புறப்பட்டது.

காலை ஸ்டேஷனில் இருந்து வெளியே வரும் போது "ஐயே! கஸ்மாலம்" என்று ஒரு கிழவி கதறிய போது சென்னையின் வாசத்தை அறிந்தேன். திங்களில் இருந்து திரும்பவும் ஆபிஸ், சிக்னல், ட்ராபிக்.........

பின் குறிப்பு: இன்னமும் ஐந்தாறு பதிவுகள் எழுத சரக்கு உள்ளது. உங்களை ரொம்பவும் படுத்தாமல் இத்தோடு முடிக்கிறேன். நன்றி.

படக் குறிப்பு: அனைத்தும் அடியேன் க்ளிக்கியது.

-

Sunday, May 15, 2011

பொதிகை மலைச் சாரலிலே...


egmoreஏழு பெருசு, ரெண்டு சின்னஞ் சிறுசு, ஒரு பதின்மம், ஒரு மத்திம வயசு ஜோடி, இன்னொன்று கிருதாக்களில் வெள்ளி முளைத்த உயர் மத்திம ஜோடி என்று மஹிந்திரா வேன் திணறத் திணற அடைத்து எக்மோருக்கு வந்து சேர்ந்தபோதே இடுப்பு பாதி கழன்றுவிட்டது. நாங்கள் வாடகைக்கு அமர்த்திக்கொண்ட லொடலொட வேன், ஓனர் தன்னை ஷெட்டில் விடாததால் வசமாக மாட்டிக்கொண்ட எங்களிடம் வஞ்சம் தீர்த்துக் கொண்டது. மியூசிக் இல்லாமல், பெரியோர் சிறியோர் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இடுப்பொடிய ஒரு மணிநேரம் குலுக்கல் நடனம் ஆடினோம். அவ்வப்போது சரக்.. சரக்.. என்று வேனின் பிருஷ்ட பாகத்திலிருந்து கிளம்பிய அந்தச் சத்தம் அடிஷனல் Percussion.

லோக்கல் ட்ரிப் வேன் என்று முத்திரை குத்தி இந்தியன் தாத்தாவுக்கு தெரியாமல் ஆர்.டி.ஓ ஆபிசுக்கு பின் பக்க மூ.சந்தில் எஃப்.சிக்கு விட்டு ஃபிட்னஸ் சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறார்கள். எந்த கவுண்டமணி "செல்லும் பேப்பர்" வைத்து எந்த பன்னிசெல்வத்திடம் கையெழுத்து வாங்கிக் கொடுத்தார் என்று தெரியவில்லை. இருட்டில் குருட்டுத்தனமாக தேடுவது போல இடது கையால் துழாவித் துழாவியும், செல்லமாக ரெண்டு தடவை தலையில் குட்டியும் கியர் போட்டபோது ஒரு கன்னுக்குட்டியை தாய்ப்பசுவிடம் ஓட்டிப்போகும் லாவகம் அந்த ஓட்டுனரிடம் தெரிந்தது. "ஸ்டேஷன் போய் சேருங்களா?" என்று விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு உடைந்த துருப்பிடித்த கதவு கையில் கீறாமல் சர்வ ஜாக்கிரதையாக ஏறும்போது சந்தேகமாக கேட்டேன். பதிலுக்கு மந்தகாசப் புன்னகை பூத்தார் டிரைவர் அண்ணன். தென்காசிக்கு நான்கு நாள் பயணம். (தென்)காசிக்கு சந்நியாசியாகப் பயணப்படமால் பரிசுத்த சம்சாரியாக மூட்டை முடிச்சு காவடியாகத் தூக்கி சென்றுவந்தேன்.

வேன் சத்தம் தவிர்த்து பத்து நிமிட வாய்ப்பேச்சு மௌனத்தைக் கலைத்து "இது லாங்கே போவுது தெரியுங்களா..." என்று எஞ்சின் பெட்டியைத் தட்டிச் சொன்னார். "திருவண்ணாமலைக்கா?" என்று ஒரு அனுமானமாகக் கேட்டேன். சைதாப்பேட்டை கலைஞர் வளைவு ஓரத்தில் நின்றிருந்த வெள்ளைச் சீருடை டிராஃபிக் ஐயாவை ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டே "ஆமாம்.." என்றார். "வண்டியில விளக்கு இல்லையா?" என்றேன். இது பகல்ல பசுமாடு கேசு போலருக்கு என்று நினைத்து "ஏன்" என்று கேள்வி கேட்டார். "இல்ல... பௌர்ணமிக்கு திருவண்ணாமலை போகும் போது பாதிப்பு ஒன்னும் இல்லை.." என்றேன்.  அவர் சிரிக்காமல் பெடல் போட் போல வண்டியை ரெண்டு தடவை மிதித்து "உர்..உர்.." என்று உறும வைத்தார். நான் அடங்கிப்போய் லாரி துடைக்கும் கிளி போல் பதவிசாக அமர்ந்து ஜன்னல் வழியாக ஆபிஸ் விட்டு வீடு திரும்பும் எனதருமை கொத்தடிமை கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு வயதான சேனையை அழைத்துக்கொண்டு ஷேத்ராடம் போவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று எனக்கு அந்த மண்ணுக்கும் விண்ணுக்குமாய் நின்ற எக்மோர் ஸ்டேஷன் மாடிப்படியை பார்த்ததும் தான் புரிந்தது. எட்டாவது பிளாட்பாரத்தில் பொதிகை. தோளில் ஒரு பையை தூக்கிக்கொண்டு நின்ற வயோதிகக் கூட்டத்தில் ரெண்டு பேர் இந்த இமாலயப் படியை பார்த்தவுடன் மலைத்துப் போய் பெருமூச்சு விட்டது நீராவி ரயில் தூங்கி எழுந்து ஃப்ரெஷ்ஷாக கூவியது போல இருந்தது. எஸ்கலேட்டரில் போகலாம் என்று வேறு இரண்டு பேரைக் கூப்பிட்டத்தில் படிக்கிடையில் கால் மாட்டிக்கொள்ளுமோ என்ற மரண பீதியில் "ஸாமியே.....ய் சரணம் ஐயப்பா" மனதிற்குள் சொல்லி படியேற ஆரம்பித்தார்கள். அவரே தூக்கியும் ஏற்றியும் விட்டார்.


பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம். உட்கார்ந்தவுடன் இந்தியத் திருநாட்டின் தெரு மூலைகளில், தேர் முட்டிகளில், ட்ரான்ஸ்ஃபார்மர் அடியில், தொலைதொடர்பு பெட்டிகள் பக்கத்தில், சுரங்க நடைபாதை ஓரத்தில், குடித்தனம் இல்லாத வீட்டு வாசலில் என்று எங்கெங்கும் நீக்கமற நிறைந்து வியாபித்து இருக்கும் 'அந்த' துர்கந்தம் வீசியது. ஒவ்வொருமுறையும் காற்று புகுந்து வெஸ்டர்ன் ஸ்டைல் உள்ளேயிருந்து நாற்றத்தை இழுத்துவந்தது. மெல்லத் திறந்திருந்த கதவை இழுத்து சார்த்தியவுடன் பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு குறைந்தது. ஜல்ப்பு பிடித்துக்கொண்ட மூக்குகள் வாழ்க! சளி நல்லது.

நெட்டில் புக் செய்ததால் கோச்சுக்கு நாலு பேராய் எங்களைப் பிச்சுப் போட்டிருந்தார்கள். அப்பரும் லோயரும் சுந்தரத்தையும் சம்பந்தத்தையும் நெருங்கி அண்டவிடாமல் அட்டகாசம் செய்திருந்தது. ஒவ்வொருவரிடமும் பேசி கெஞ்சி கூத்தாடி எங்கள் கூட்டணியை தக்கவைத்துக் கொண்டோம். தாம்பரம் தாண்டியதும் இட்லி, தயிர்சாதம் கொடுத்து எல்லோரையும் தூங்கவைத்ததும் ரயில் வேகம் பிடித்தது. நிறைய பேர் கைலி மாற்றிக்கொண்டும், காற்றுத் தலையணையை ஊதி அடைத்துக்கொண்டும் மற்றுமொரு சுகமான நித்திரைக்கு தயாரானார்கள். SUBH NITHRA! சட்டையை கழற்றி விட்டு இடுப்பில் கைலியும் மேலுக்கு முண்டா பனியனுடன் நின்ற அந்த பிரஷ் மீசை ஆம்பிளை தூங்குவதர்க்கே ரயில் ஏறியது போல இருந்தார். ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்ட சந்தோஷத்துடன் கீழே இருந்த யாருக்கோ "குட் நைட்" சொல்லி கையாட்டிக்கொண்டே அயல் நாட்டு தூதுவர் போல அப்பர் பர்த் ஏறினார்.

tenkasi windmill

நெடுநாட்களுக்கு பிறகு ஜன்னலோரத்தில் உட்கார்ந்து முட்புதர்களையும், ஒற்றையடிப் பாதைகள் முடியும் மரங்களையும், கிராமந்திர படியில்லாக் குட்டைகளையும், குறுகிய ரோடுகளில் இருட்டைக் கிழித்து டூ வீலரில் செல்லும் கிராமத்து ஜோடிகளையும் பார்த்தேன். நடு நடுவே சிற்றூர்களின் மச்சு வீடுகளும், 1984 என்று நெற்றியில் ஒட்டிய மாடி வீடுகளும், வைக்கோல் வேய்ந்த குடிசைகளும் வந்து வந்து போயின. சிறு சிறு ஸ்டேஷன்களில் அழுது வடியும் ஒற்றை விளக்கோடு பச்சைக் கொடியசைக்கும் காக்கி யூனிஃபார்ம் ஊழியரும், வாலையாட்டி நிற்கும் ஒரு நாயும், நிமிர்ந்து திடகாத்திரமாய் வளர்ந்த புன்னை மரமும், எப்போதோ வந்து நிற்கப்போகும் பாசஞ்சர் ரயிலுக்காக பழக்கூடையுடன் சிமென்ட் பெஞ்சில் காத்திருக்கும் கிழவியும் வேக வேகமாக பின்பக்கமாக பறந்தார்கள். இந்த காட்சிகள் ஓராயிரக்கணக்கான கதைகளின் வித்துக்களின் பிறப்பிடம். "தடக்..தடக்"கும் நடுநடுவே ரயில் எழுப்பும் "கூ..கூ.."வும் கற்பனையில் எழும் காட்சிகளை தடம் மாற்றிக் கொண்டுபோகும் காரணிகள்.

"எலேய்! அங்கிட்டு நிக்காத!" என்ற முரட்டுக் குரல் என் காதைக் குடைந்து எழுப்பிய போது ராஜபாளையத்தில் அந்த தாராளமாக வளர்ந்த பாட்டி சிரமத்துடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். எலேய் கூப்பிட்டவர் ஏறிக் கொண்டிருந்தார். கண்ணுக்கெட்டும் தூரத்தில் முண்டு முண்டாக குறிஞ்சி நிலங்கள் தெரிந்தது. தண்டவாளங்கள் பக்கத்தில் காலைக் கடன் கழிப்பது நம் நாட்டின் தேசியப் பழக்கம் போலிருக்கிறது. ரயிலுக்கு மரியாதை கொடுத்து அசிங்கத்து மேலேயே எழுந்து சிங்கம் போல மீசை முறுக்கி நின்றார்கள். அவர்கள் வீட்டு விருந்தாளியை பார்ப்பது போல நம்மை பார்த்தார்கள். தென்காசி நெருங்குவதை ராட்சத வெள்ளை இறக்கைகளுடன் வயற்காடுகளுக்கு மத்தியில் நின்றிருந்த காற்றாலைகள் தெரிவித்தன.

agasthiyar


பொதிகை மலைக் காற்று முகத்தை வருட கைலி விளம்பரத்துடன் வரவேற்றது தென்காசி. நீலக் கலர் கட்டம் போட்ட கைலியும், சதுரம் வரைந்த சட்டையும் அணிந்த தென்னகத்து இளைஞன் அந்த விளம்பர தட்டியில் கைகூப்பி சிரித்தான். ஒரு பூணூல், ஒரு சதாபிஷேகம் என்ற இரு சாக்குகள் வைத்துக்கொண்டு நெல்லை மாவட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இரண்டுமே மேலகரத்தில் நடைபெறுபவை. மலைராஜனின் நேரடிப் பார்வையில் இருப்பது மேலகர அக்ரஹாரம். அதனருகே பீட்டர் அல்போன்ஸ் திறந்து வைத்த சமுதாய நலக்கூடத்தில் தான் இரண்டு விசேஷங்களும்.

எங்களைப் போன்ற ஏழைபாழைகள் தங்குவதற்கு குபேரன் லாட்ஜில் ஏற்பாடாகியிருந்தது. கோமதி நெல்லை சிரிப்பில் எங்களை வரவேற்றார். "கோமதி?" என்ற என் கேள்வியை ஷன நேரத்தில் பிடித்து "கோமதி நாயகம்" என்று சொல்லி சிரித்தார். கேரள எல்லையாதலால் இரண்டு மாத தாடியுடன் கைலி அணிந்து மல்லுத்தமிழனாக குட்டையாக இருந்த கோமதி நான்கு அறைகளையும் விசாலமாக திறந்து விட்டார். மேலகரத்தில் பார்க் ஷெரடானை எதிர்பார்க்காமல் குபேரனில் முத்து, பவளம், வைரம் என்று பெயிரடப்பட்ட பெயரளவில் சொகுசு உள்ள அறைகளில் பெட்டிபடுக்கைகளை மூலையில் கோபுரமாக அடுக்கினோம். கலைஞரின் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி அறைக்கு ஒன்றாக அந்த மூலைகளை அலங்கரித்தது.

திரும்பினால் முட்டி இடிக்கும் குளியலறையில் களைப்பு தீர குளித்தோம். அடுத்த அரை மணி நேரத்தில் செண்பகாதேவி அருவி செல்ல ஆயத்தமானோம். "இப்ப சீசனே இல்ல... தண்ணியே இல்ல... தனியாளாப் போவாதீங்க.. களுத்துல கைல இருக்கறதை பிடிங்கிகிடுவானுங்க..." போன்ற வசனங்கள் திருநெல்வேலி தமிழில் சரளமாக அருவியாய் வந்து விழுந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு அடைந்தால் செண்பகாதேவி இல்லையேல் மரணதேவி என்று கிளம்பினோம். கல்லால் ஆன ஒரு மருந்துக் குடுவையில் அகத்தியர் பச்சிலை அரைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சிலைவாயிலில் கொண்டு வந்து தள்ளினார் ஆட்டோக்கார். சென்னை, மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் என்று எங்கெங்கு காணினும் அதே ஆட்டோ. அதே ஓட்டம். அதே கட். அதே நெளிவு சுளிவு. அதே ஹாரன். அதே டர்ர்ர்ர்ர்.......

shenba1

வழிநெடுக பருத்தும் சிறுத்தும் நின்றிருந்த காட்டு மரங்கள் பாஸ்கரனின் சுட்டெரிக்கும் கிரணங்களை உள்ளே விடாதபடி கிளைபரப்பி இலை விரித்து போராடி எங்களை தடுத்தாட்கொண்டது. பச்சை மண்ணின் மனமும், மரத்தின் பச்சை வாசனையும் என் உள்ளுக்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த அந்தப் பச்சை கிராமத்தானை கிள்ளி எழுப்பிவிட்டது. ஆலம் விழுதுகளுடன் ஊஞ்சலாடி கிளிக் கூட்டம் மெல்லிசை பாடியது. காற்றில் படபடக்கும் இலைகள் அதற்கு கைதட்டி பாராட்டியது. கொஞ்சமாக ஓடிய சிற்றருவியின் தண்ணீர் பாறைகளை குளிர்வித்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தன. இயற்கை படைப்புகள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக பேதம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

shenba2
கொஞ்ச தூரம் ஏறியதும் எப்போது நமக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி அயர்சியாகத் தெரியுமோ அந்த இடத்தில் ஒரு குற்றாலத்தான் மாங்காய்க் கடை போட்டிருந்தார். அண்ணாச்சி பழமும், மாங்காயும் "வாங்கித் தின்!" என்று திண்ணென்று இருந்தது. அறுத்து மிளகாய்ப்பொடி போட்டு இரண்டு கையாலும் கசக்கி கொடுத்தார்.  கையில் ஏறியக் காரப்பொடியை அழுக்குத் துணியில் துடைத்துக்கொண்டு கைலியை சரிசெய்து கொண்டார். கையை சரியாக துடைத்துக் கொண்டிருக்க வேண்டுமே என்று தெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.

அமிர்தமாக இருந்த அந்த மாங்காயைத் தின்று, உதட்டோரத்தில் மிளகாய்ப்பொடி காரம் "உஸ்..உஸ்..." என்று உஸக்க வைக்க செண்பாவை நோக்கி ஜரூராக நடைபோட்டோம். இரண்டு வானரங்கள் மரக்கிளைகளின் பின்னால் இருந்து எங்கள் கை மாங்காயை பறிக்கும் ஆவலில் எட்டிப் பார்த்தது. பாவம்! மசக்கையோ என்னமோ. கையை பிராண்டிவிடுமோ என்ற பீதியில் ஒரேடியாக வாய்க்குள் அடைத்துக்கொண்டோம். அவரைத் தாண்டியதும் ஆளரவம் இல்லாத பிரதேசம் போலத்தான் தோன்றியது. செண்பகாதேவி அருவிக்கு அருகில் செல்லச் செல்ல வானரம் ஆயிரம்!

"ஷ்...ஷ்..." என்று செல்லமாக அதட்டி எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தது செண்பகா. சூரிய ஒளியில் வெள்ளிக்கம்பிகளாய் மினுமினுத்தாள். இயற்கையின் ஷவரில் எண்ணி ஐந்து பேர் மட்டுமே குளித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு அரைமணி செண்பகாவோடு ஆட்டம் போட்டோம். அந்தக் கம்பி வேலியை கையில் பிடித்துக்கொண்டு தலை குனிந்து சரணாகதி அடைந்தபோது அந்த அருவித் தண்ணீர் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. ஏறிய களைப்பு இரண்டு நிமிடத்தில் தீர்ந்தது. முதுகில் விழுந்த அருவித் தண்ணீர் மசாஜ் கிளப் இளம்பெண் போல டம்டம்டம் என்று செல்லமாக குத்தியது. அதற்கு எங்கள் தேகத்தை அர்ப்பணம் செய்து பிரேதம் போல நின்றோம். ஒரு பரிபூரண புத்துணர்ச்சி கண்டது எங்கள் மேனி.

அன்று மாலை நாங்கள் சென்ற இடங்களை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

படக் குறிப்புகள்: எழும்பூர் படம் இவர் கொடுத்தார் http://www.flickr.com/photos/myriadity/ பெரிய குரூப்பாக சென்றதால் கிளிக்க முடியவில்லை. நமீதா படம் கிடைத்த இடம் http://a2zcinenews.blogspot.com/. போன பதிவில் B&W படம் போட்டதால் இந்த பதிவில் கலர்புல்லான நமீதா படம். இதைவிட டீசென்டான நமீதா படம் இணையத்தில் யாராவது எடுத்துப் போட்டால் அவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும். தென்காசி காற்றாலைகள் படம் இங்கே கிடைத்தது http://www.flickr.com/photos/52313113@N07/. ஏனைய படங்கள் என் கை வண்ணம்.

பின் குறிப்பு: அடுத்த பதிவில் முற்றுப்பெறும். பின்ன நாலு நாள் டூராச்சே!


-

மன்னிக்க வேண்டுகிறேன்

கொஞ்சம் உங்ககிட்ட சொல்லிக்காம கொள்ளா(ல்லா)ம தின்னவேலி, தென்காசி, குற்றாலம் அப்படின்னு போயிட்டேன். ஸாரி. இலக்கியப் பணிகளுக்கு மத்தியில ஒரு சின்ன ட்ரிப். வெய்யில் கொளுத்தினான். காற்று சட்டையை கழற்றினான். இன்னும் நிறைய இருக்கு. சிலிகான் காதலி வேற காத்துகிட்டு இருக்கா. இப்பதான் ரயிலைவிட்டு இறங்கி வீட்டுக்கு வந்தேன். எழுத்தார்வத்துல பொட்டியத் தொறந்து அடிச்சுகிட்டு இருக்கேன். ஆடியகாலும், சொரிஞ்ச கையும் சும்மா இருக்காதாம். மீதிய பதிவுக்கு வைத்துக்கொள்கிறேன்.

எனக்காக பத்மினி உங்களை கேட்டுக்கிறாங்க. அவரை கேட்க விடாம சிவாஜி கட்டி கட்டி பிடிக்கிறாரு. பார்த்துகிட்டே இருங்க.... இனி புல்லெட் ஸ்பீடில் பதிவுகள்.




பின் குறிப்பு: இந்த பதிவுல ப்ளாக் அண்ட் வொயிட் பாட்டு போட்டாலும் பசுமையான பதிவுகள் பின்னால வருது. நன்றி.
-

Thursday, May 5, 2011

இனி கிரிக்கெட்டும் சினிமாவே!


முதலில் ஒரு கொசுவர்த்திச் சுருள் ஏற்றி வைத்து பதிவை தொடங்குவோம். என்னுடைய பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடிய ஒரு ஆட்டம் சென்னை சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. வீரர்களும் பார்வையாளர்களும் 83ல் கோப்பை கெலித்த சூட்டில் இருந்தார்கள். நவ்ஜோத் சிங் சித்து வானளாவிய ஆறுக்கள் அடித்து 'சிக்சர்' சித்து என்று பட்டம் பெற்று புகழ் பெற்றிருந்த சமயம். என்னுடைய அருமை சிற்றப்பா ஒரு மஞ்சள் கலரில் ரயில்வே பாஸ் போல இருந்த ஒரு அட்டை காகிதத்தை காண்பித்து "டேய்! அடுத்த வாரம் மேட்ச். உனக்கு மட்டும் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கியிருக்கேன். வந்து பார்!" என்று சொன்னதும், மெட்ராசுக்கு பஸ்ஸேரி ஓடோடி வந்து பார்த்தேன். வரும் வழியில் அப்போதும் விக்கிரவாண்டியில் பேருந்தை நிறுத்தி கூட்டாக 'நம்பர் ஒன்' போன நாற்றத்தில் டீ குடித்தார்கள். இந்த விஷயங்கள் இந்தப் பதிவுக்கு வேண்டா. இருந்தாலும் இன்றுவரை நாறுவதால் எழுத நேர்ந்தது.

எண்பதுகளில் மைக் மோகன் புகழேணியின் உச்சாணிக் கொம்பில் ஏறி தலையாட்டி ரம்மியமாக பாடிக் கொண்டிருந்தார். ஒரு ஓரமாக நோஞ்சானாக போட்டி பார்க்க நடந்து சென்ற என்னைக் கடந்து எல்லோருக்கும் கையசைத்துக் கொண்டே உற்சாகமாக நடுரோட்டில் ஒரு புடை சூழ ஊர்வலமாகச் சென்றார். பக்கத்தில் மஞ்சள் பனியனில் ஒரு பேரிளம்பெண் சென்றதாக பசுமையான ஞாபகம். விக்கெட்டுகளின் நடுவில் டென்னிஸ் பார்க்கும் அமைப்பாக ஒரு இடம் கிடைத்தது. கிரிக்கெட் பார்க்க குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தலைகளில் தொப்பி அணிந்து சின்னதாக என்னுதும் ஒன்னு. பக்கத்தில் ஒரு ஹிப்பி மாமா மேட்ச் முழுக்க ஸ்டேடியத்தில் புகைவண்டி விட்டார். எனக்கு ஒரே கமறல். எல்லோரும் "ஹோ" என்று கத்தும் போது நானும் அந்த அகண்ட கோஷ பஜனையில் கலந்து கொள்வேன். மட்டையில் பட்ட பந்து மைதானத்தில் எங்கே போகிறது என்று முதல் ஒரு மணி நேரம் தேடித் பார்த்து கண்கள் பூத்து களைத்துவிட்டேன்.

அதன் பின்னர் கூட்டத்தோடு கோவிந்தா போட கற்றுக்கொண்டேன். எல்லோரும் "ஹோ" என்றால் நானும் "ஹோ". எல்லோரும் "ஓ....." என்றால் நானும் "ஓ...". எல்லோரும் "ச்சே!" என்றால் நானும் "ச்சே!". ஏழெட்டு மணி நேரம் கண் நோக பார்த்துக் களைத்து உடலெங்கும் புழுதியுடன் வீடு திரும்பினேன். இந்தியா வெற்றியின் பார்டர் வரை வந்தது. ஒரு ரன்னில் ஆலன் பார்டர் இந்தியாவை ஜெயித்தார். மனீந்தர் சிங் என்று பந்து வீச மட்டும் தெரிந்த மாமனிதர் நமது கிரிக்கட்டை புனிதப் படுத்திக்கொண்டிருந்த இந்தியாவின் பொற்காலம் அது. கொசுவர்த்தி அணைந்து விட்டது. கலர்க் கலர் காலத்திற்கு வருவோம்.

திடீரென்று நேற்று முற்பகல் நேரத்தில் என்னுடைய அலுவலக நண்பர் "RVS" என்று வாஞ்சையுடன் அழைத்து "IPL போறியா?" என்று கேட்டார். கிரிக்கெட்டில் நேரடி பார்வையாளனாக இருந்த எனது எண்பத்தேழாம் வருட மைதான அனுபவம் ஒரு முறை என்னை பதில் பேச விடாமல் வாய்க்குப் பசை போட்டது. அப்புறம் நண்பர் டிக்கெட்டின் தரத்தை பற்றி பிரஸ்தாபித்ததும் சட்டென்று ஒத்துக்கொண்டேன். கரும்பு தின்ன அலவன்சா? கோடீஸ்வரர்கள், பெரிய மனிதர்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஸ்டைலாக கோக் உறிஞ்சி வேடிக்கை பார்க்கும் இடத்தில் இந்த ஏழையும் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம் என்று அச்சடித்த அனுமதிச் சீட்டு கொடுத்தார்.

உடனடி பம்பர் போல டிக்கெட் கிடைத்ததால் என்னுடைய நாற்கால் ரதத்தை நிறுத்துவதற்கு பார்க்கிங் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் அன்பளிப்பாக கொடுத்த அன்பரின் ஆலோசனையின் பேரில் நேற்று மாலை மட்டும் எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகத்தை கார் நிறுத்துமிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அங்கிருந்து ஒரு ஆட்டோ அன்பரை சேப்பாக்கத்தில் என்னை கொண்டு சேர்க்கப் பணித்தேன். வழக்கம் போல பேரம் பேசி ரெண்டு தெரு திரும்புவதற்கு நாற்பது ரூபாய் அவருக்கு வெட்டினேன். ஒரு நப்பாசையில் மீட்டர் எவ்வளவு காண்பிக்கிறது என்று பார்க்கலாம் என்று குனிந்து பார்த்தேன். அது கண்ணை மூடி தூங்கிக்கொண்டிருந்தது. தற்காலிக உறக்கமா அல்லது நிரந்தரமா என்று தெரியவில்லை. வெளியே ஆட்டோ பின்புறம் "எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது" என்று RTO-வுக்கு வாசகம் எழுதியிருந்தார்கள். சரிதான் பொருத்தப் பட்டிருந்தது வேலை செய்கிறது என்று யாரும் சொல்லவில்லையே. வாழ்க தமிழ்நாடு!


விக்டோரியா ஹாஸ்டல் பெவிலியன் முனையில் நுழைவதற்கு அனுமதி இருந்தது. நான் போவதற்கும் வீரர்கள் ஏசி கோச்சில் வந்து இறங்குவதற்கும் மிகச் சரியாக இருந்தது. ஒரு இரும்பு சுழற் கேட்டில் ஒரு தடவை சுற்றி விட்டு உள்ளே விட்டார்கள். உள்ளே நுழைந்ததும் எனக்கு மிகவும் ஆச்சர்யம். கண்களை ஒருமுறை கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன். படியேறி காலரி செல்லும் வழியில் ஜெட் மற்றும் கிங்பிஷர் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்கள் போல வெள்ளை சட்டை, நீல ஸ்கர்ட் அணிந்து தேவதைகள் நின்று கொண்டிருந்தார்கள். "Welcome Sir!" என்று ராகமாக சொன்னார்கள். குழலினிது யாழ் இனிது. பிளாஸ்டிக் அட்டையில் இந்திய ஜனங்களுக்கு கடன் வாங்க சொல்லித்தந்த முன்னோடி, Citibank நிறுவனத்தார் ஒரு காகிதப் பையில் ஸ்கெட்ச், நீண்ட குச்சி பலூன், பேப்பர் முதலான ஐட்டங்கள் போட்டுக் கொடுத்தார்கள்.

அதையடுத்து உள்ளே நுழைந்ததும் ஒரு சிறிய வரவேற்பறை போல இருந்தது. அது ஒரு குளிரூட்டப்பட்ட ஏசி அறை. அங்கே முன்பு பார்த்ததைவிட இன்னும் கொஞ்சம் அழகாக ஒரு அப்சரஸ் தட்டு நிறைய செண்ட் அடித்த வெள்ளை நிற ஜிலீர் துணியுடன் வரவேற்றது. அந்தப் பெண்ணின் திருமுகத்தை பார்த்தாலே பார்ப்போர் முகம் மலர்ந்துவிடும். இருந்தாலும் அப்பெண்ணின் மனம் நோகாமல் அதையும் வாங்கி முகத்தை துடைத்துக் கொண்டேன். எனக்கு முன்னால் நின்றிருந்த அந்த குறுந்தாடி குறும்புக் கிழவர் அந்தக் குட்டைப் பாவாடை குமரியை பார்த்துக்கொண்டே வாய்க்கு கீழே தாவாங்கட்டையை அழுத்தி துடைத்தார். ஜொல்ளோ? எனக்கு அவருடைய தாடி கையோடு வந்துவிடுமோ என்ற பயம். சந்தனக் கலர் துணி பரப்பி மேஜை போட்டிருந்தார்கள். "திண்பதற்கு எல்லாம் கொடுப்பார்கள்" என்று டிக்கெட் கொடுத்த புண்ணியவான் சொன்னது அசரீரியாய் ஞாபகம் வந்தது. Sprite  கேட்டேன். பதிலுக்கு 7 UP கொடுத்தார்கள். "இவங்க தான் ஸ்பான்சர்" என்று இளித்தான் கொடுத்த பையன். தானம் கொடுத்த கூல்ட்ரிங்கை பிராண்ட் கேட்டு படுத்தக்கூடாது என்று நாகரீகமாய் குடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் படியேறி இருக்கைகள் இருக்கும் இடத்திற்கு வந்தேன்.


உள்ளே நுழைந்ததும் டிஸ்கோதே பார் போன்று பாட்டு அலறிக்கொண்டிருந்தது. "நாக்க மூக்க" உள்ளே நுழையும் எல்லோரையும் "அட்ரா.. அட்ரா..." என்று வரவேற்றது. மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு செட்டு கட்டியது போல ஒரே சத்தம். எல்லாமே டம்மு டும்மு என்று சங்கீத அடிதடி பாடல்கள். முதல் நான்கு வரிசைகள் வெள்ளைக்கார ஆட்டக்காரர்களின் வூட்டுக்கார அம்மணிகளுக்கு என்று அங்கே நின்றிந்த இன்னொரு சிட்டு சொன்னது. அது காட்டிய திசையை சிரமேற்கொண்டு ஏற்று எட்டாவது ரோவில் பவ்யமாக உட்கார்ந்தேன். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அரை டிராயர் வெள்ளை டி. ஷர்ட்டில் கோதுமை நிறத்தில் ஒரு அம்மணியும், ஜீன்ஸ் பேன்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் டி ஷர்ட் போட்ட ஒரு கனவானும் வந்தனர். எனக்கு பின்னால் இருந்த வரிசையில் உட்கார்ந்து போட்டி துவங்குவதற்கு முன்னரே கன்னாபின்னாவென்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். முதுகுக்கு பின்னால் இருந்து ஒரே "யா.யா..யா.." என்று யாயலை பேயலையாக அடித்தது.

என்னுடைய வரிசையில் எனக்கு பக்கத்து சீட்டில் உட்காருவதற்கு இரண்டு பருவச் சிட்டுகள் வந்தது.  ஒன்று பேன்ட் போட்டு மேலுக்கு ஒரு அலங்கார பனியன் அணிந்து பின்னால் குண்டலினி எழும்பும் இடத்தில் அந்த பனியனை நாடாவால் இழுத்து ஒரு கட்டுப் போட்டிருந்தது. சுண்டினால் ரத்தம் வரும் சிவப்பு. இன்னொன்று ஜீன்ஸ் அணிந்து டாப்ஸ் போட்டிருந்தது. மா நிறம். என்னருகில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்த சு.ர.வ. சிவப்பு என்ன நினைத்தது என்று தெரியவில்லை வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சி போல விருட்டென்று எழுந்து சென்றுவிட்டது. ஐந்து நிமிடத்தில் கருகருவென்று ஒரு ஆடவனை அழைத்து வந்தது. என் பக்கத்தில் அவனை உட்கார வைத்துவிட்டு பின் சீட்டில் ஆங்கிலம் பேசிய அந்த ஜோடிக்கு பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டது.


மேட்ச் ஆரம்பித்தது. IPL பானர் மியூசிக் ட்ரம்பெட் போடும் போதெல்லாம் "ஹோ..ஹோ.." என்று கோஷ்டியாக இரைந்தார்கள். பந்துக்கு பந்து இடைவெளி சந்தில் பாட்டு போட்டார்கள். அடுத்த முறை IPL போட்டிகளில் மியூசிக் நிரம்ப பிடித்த ஆட்டக்கார்கள் மைதானத்தின் நடுவில் குத்தாட்டம் போடுவார்கள் என்று நினைக்கிறேன். காது கிழியக்கிழிய அந்த மியூசிக் சத்தம். மேட்ச் ஆரம்பிக்கும் போதே இனிய தமிழில் பேசிய ஒரு கள வர்ணனையாளர் "இன்னிக்கி மேட்ச்ல CSK தான் ஜெயிக்கும்" என்று ஆணித்தரமாக அடித்துச் சொன்னார்.


இன்னிங்க்ஸ் இடைவேளையில் மீண்டும் அந்த ஏசி அறை ரெஸ்டாரெண்டில் முழு வெண்டக்காயை கடாயில் இட்டுப் பொரித்தெடுத்த செமி பஜ்ஜியும் செமி வருவலும் கலந்த ஒரு செமி பதார்த்தம், உப்புமாவுக்கு முந்திரி போட்டு ராஜ மரியாதை செய்து அடுப்பேற்றி இறக்கியிருந்தார்கள். சுடச் சுதா முந்திரி அல்வா. மல்லிப்பூ மிஸ்ஸிங். அப்புறம் ஐஸ்க்ரீம், கடைசியாக நம்மை எழுப்புவதற்கு ஒரு ஏழு அப்பு என்று ஒரு பிடி பிடித்தேன். உணவு உபசரிப்பு பார்க் ஷெரடானாம். பஃபே என்றாலும் குறுக்கு நெடுக்காக உள்ளே நுழைந்து பாய்ந்து அள்ளினார்கள். வாய்க்குள் அடைத்துக்கொண்டார்கள். ட்ராஃபிக்கில் நிறுத்தக் கோட்டுக்கு முன்னே நாலடி சென்று நிறுத்தும் நமது சராசரி சென்னை மனப்பான்மை அங்கே மட்டும் இருக்காதா என்ன? சிவமணியோடு ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். மனிதர் தோளோடு அணைத்து போஸ் கொடுத்தார்.

இடைவெளிக்கு பின்னர் ஆடிய சென்னையை ராய்னா, ஹஸ்சி ஜோடி இலகுவாக வெற்றிக்கு இட்டுச் சென்றது. ரொம்ப நேரத்திற்கு பக்கத்தில் இருந்த மா நிறம், கருப்பு பையன், பின்னே உட்கார்ந்த சு.ர.வ.சிவப்பு கேர்ள் மூவரையும் காணவில்லை. ஒரு ரோவில் எட்டு சீட்டு பிடித்து கடைசியாக ஆறு அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்த பெண்மணி ஒருவர் கடைசி வரை கண்களில் நீர் வர சிரித்து சிரித்து பக்கத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். சீட்டு பிடிப்பதில் இவ்வளவு நேர்த்தி இருக்கும் இவர் ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து கொண்டால் பிழைப்பு நன்றாக ஓடும். இத்துனை இடையூறுகளுக்கு இடையில் நான் ஒரு பந்து விடாமல் மேட்ச் முழுவதும் பார்த்தேன் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். பாட்டு, கூத்து, ட்ரிங்க்ஸ் இன்டர்வெல் என்று சினிமா போலவே மூன்று மணி நேரம் நடக்கும்  IPL  இன் வெற்றி எதனால் என்று எனக்கு நன்கு விளங்கியது. இனி கிரிக்கெட்டும் சினிமாவே!

பின் குறிப்பு: என்னது IPL மேட்ச் பற்றியே எழுதலையா? அதான் டி.வில பார்கரோமே. அப்புறம் நான் என்ன எழுதறது. நான்கு நாட்கள் அயராத பணிக்கு ஒரு அற்புதமான ரிலாக்ஸ். அடுத்த பதிவில் சிலிகான் காதலி தொடரும். ஓடாதீங்க. நில்லுங்க..

படக் குறிப்பு: அனைத்தும் என் கையால் கிளிக்கியவை. பெவிலியன் பக்கத்தில் இருந்ததால் "தோனி..தோனி" என்று பல தொனிகளில் அழைத்துப் பார்த்தேன். ஆனால் அண்ணன் திரும்பிப் பார்க்கவில்லை. சிவமணியும் நானும் தோளோடு தோள் சேர்த்த போட்டோவை நான் இங்கே சேர்க்கவில்லை.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails