ம மா மி மீ மோ மொ மௌ போன்ற மகாரத்திலோ, க கா கி கீ கூ கு கெ கே போன்ற ககாரத்திலோ, த தா தி தீ போன்ற தகாரத்திலோ பெயர் சூட்டினால் இவ்வையகம் போற்ற உங்கள் தவப்புதல்வன் சிறந்து விளங்குவான் என்று டிவிக்கு டிவி மூலைக்கு மூலை இப்போது கூவும் நேமாலஜி அவ்வளவு பிரபல்யம் அடையாத ஒரு வருஷத்தில் நான் பிறந்ததால் பெற்றோருக்கு இதுபோல விஞ்ஞானத்தனமாக யோசித்து பெயர் வைக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்கவில்லை. வைத்தபிறகும் சுயம்புவாக முன்னாடி எம் சேர்த்தால் மன்னனாகிவிடலாம் என்று நம்பர் கணக்கு பார்த்து அதையும் வைத்துக்கொள்ளவில்லை. வைத்த பெயர் வைத்தபடி வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
என்னுடைய சித்தப்பா மாமாக்களுக்கு மற்றும் ஒன்று விட்டு ரெண்டு விட்டு மூணு விட்ட சொந்தபந்தங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் திருப்பெயர்; ஒரே திருநாமம் வெங்கட்ராமன். சில சமயங்களில் வெங்கட்ராமன் இன்று சென்னை வருகை என்று செய்தித்தாளில் உரக்கப் படித்தால் கூட என் பாட்டி என் சித்தப்பாவை ஜனாதிபதி ஸ்தானத்திற்கு உயர்த்தி "எப்படா இஞ்ச வரான்?" என்று கேட்காத தன் காதை தீட்டிக் கொண்டு கேட்பாள். சித்தப்பாவிற்கு ஏன் வெங்கட்ராமன் என்றால் தாத்தாவின் அப்பா வெங்கட்ராமன். பிற்கால சந்ததியினர் பாட்டன் முப்பாட்டன் பெயர்களை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் அவர்கள் பெயரை பிள்ளைக்கு சூட்டி மகிழ்ந்தால் தீர்ந்தது. பிள்ளைகள் அந்தப் பெயரைக் காப்பாற்றுமா என்று தெரியாது ஆனால் எப்படியும் மறக்கமாட்டார்கள். இப்போது உங்கள் பொது அறிவை சோதிக்கும் ஒரு கேள்வி. பெயரைக் காப்பாற்றுதல் என்றால் என்ன?
இந்த அப்பா தாத்தா பெயர்களை வைக்கும் பாணியில் உச்சம் தொட்ட ஒரு சங்கதி. முன்பு என்னுடன் வேலை பார்த்த நண்பர் பெயர் பழனியப்பன். பழனியப்பனில் பிரச்சனையில்லை. அவர் அப்பாவின் பெயரும் அதுதான். அதையும் சரியென்று பொறுத்துக்கொள்ளலாம். அவருக்கு பிறந்த, அதாவது அப்பா பழனிக்கு பிறந்த பிள்ளை பழனியின் பிள்ளையின் பெயரும் பழனியப்பன். பயந்து போய் பீதியில் நான் கேட்ட கேள்வி இதுதான். "உங்க பையனுக்கு ஒரு பொண்ணு ப்ரியமுள்ள பழனிக்குன்னு லவ் லெட்டர் எழுதி கவர் மேல பழனியப்பன்னு உங்க வீட்டு அட்ரெஸ் எழுதி போஸ்ட் பண்ணி.. பையனை தவிர்த்து மிச்சம் இருக்குற உங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் பிரிச்சி படிச்சா அந்தப் பொண்ணோட கதி என்னவாகும்.". பதிலுக்கு கேவிக்கேவி சிரித்தார். பதில் இயம்பவில்லை. இது இப்போது ஏற்பட்டிருக்கும் ஈமெயில் புரட்சிக்கு முன்னர் நான் கேட்ட கேள்வி. ஆனால் ஔவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் இருந்தார்களாம். இருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பத்தில் ஒரு அட்ரஸில் ஒரு கதவிற்குள் இல்லை என்றும் காலங்கள் வேறு வேறு என்றும் அறிகிறோம்.
உன் பேரைப் பற்றி சொல்லுப்பான்னா ஏன் ஊர் பேரைப் பற்றி சொல்கிறாய் என்று நீங்கள் புருவம் நெரிப்பது புரிகிறது. முதல் பாராவில் வெங்கடசுப்பிரமணியன் என்ற என்னுடைய முழ நீளப் பெயரின் அரை முழத்தை அளந்தேன். கொள்ளுத்தாத்தாவின் பெயரை என் பெயருக்கு பாதியாக்கிய என் தாத்தா தன்னை விட்டுக்கொடுப்பாரா? தாத்தாவின் பெயர் சுப்ரமணியன். அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. காலிரண்டும் வெள்ளைக்காரனிடம் வாங்கிய அடியில் நொடித்துவிட கம்போடு நாற்காலியில் உட்கார்ந்தபடியே பல காரியங்கள் சாதித்தவர். தன் தகப்பனார் பெயரில் பாதியும் தன் பெயரில் மீதியையும் சேர்த்து என்னை வெங்கடசுப்ரமணியனாக்கினார். வெங்கடராமனும் சுப்பிரமணியனும் வாழ்க்கையில் செய்ததை, சாதித்ததை நான் ...தித்தேனா ...திப்பேனா என்பது தெரியவில்லை.
இப்படி ஒரு கூட்ஸ் ரயில் நீளப் பெயரை இட்டு என் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிட்டால் "யன்.." என்று முடிக்கும் போது நிச்சயம் தெருமுனையை கடந்திருப்பேன். ஆகையால் உலகமக்களின் பயனைக் கருத்தில் கொண்டு ஆறாம் வகுப்பில் ஆர்.வி.எஸ்.எம் ஆனேன். பஞ்சம் பிழைக்க துரித கதியில் இயங்கும் சென்னைக்கு வந்த பிறகு அந்த நான்கெழுத்தும் இங்குள்ளோருக்கு பெரியதாகப்பட்டதால் அன்பு, அழகு, அறிவு மற்றும் கடமை போன்ற மூன்றெழுத்து வரிசையில் சுருக்கி ஆர்.வி.எஸ் ஆக்கப்பட்டேன். ஊத்துக்காடு வேங்கடகவியின் இயற்பெயர் வெங்கடசுப்ரமணியன் என்று வரலாறு சொல்கிறது. என் வரலாறு எவர் சொல்லுவார்? (இந்த தேவையில்லாத இடைச்செருகலை மக்கள் மன்னிக்க மற்றும் மறக்க வேண்டுகிறேன்!!)
ஆங்கிலத்தில் அழைப்பது பிடிக்காமல் என் தெருவில் வசித்த தமிழ் தீவிரவாதிகளின் அழைப்பிற்கு 'வெங்கிட்டு'வானேன். அதிதீவிர முருக பக்தையான என் அம்மா என்னை கார்த்தியாக்கினாள். செல்லத்தில் வெல்லக்கட்டியாக என்னை சின்னதம்பி என்று என் குடும்பம் என்னை அழைத்த சில வைபவ தினங்களும் என் நாட்காட்டியில் உண்டு. இதே சின்னதம்பி வக்கீல் பாலு சார் வீட்டு ராதாக்காவிர்க்கு "ஸ்மால் ப்ரதர்." கோபத்தில் திட்டும் போது "சுப்பிரமணியா கொப்பரவாயா" என்றும் பொளந்து கட்டிக்கொண்டு புதுப் பெயர்கள் என்னை வந்து அடைந்ததுண்டு. அப்போது அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்ததால் ராமு சார் என்னை "வாடா ஹார்ட் அட்டாக்கு" என்று அட்டாக்கிங்காக கூப்பிடுவார். நல்லவேளை சின்டூ பிண்டு ஜில்லு கொள்ளு என்ற நாலுகால் பிராணிகளின் பெயர்கள் அப்ராணியான என்னை வந்து சேரவில்லை. சுற்றமும் நட்பும் வாழ்க!
எனை அழைத்த எல்.கேவிற்கு ஒரு சல்யூட் அடித்து இந்த ரிலே ரேஸ் விளையாட நான் அழைக்கும் அன்பர்கள் பட்டியல் கீழே..
தக்குடு
மோகன்ஜி
மாதவன்
இளங்கோ
பாலாஜி சரவணா
வெங்கட்நாகராஜ்
ராஜி
அப்பாதுரை
கூப்பிட்ட எல்லோரும் எழுதுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
என் பெயரை சேர்ப்பதற்கு தோதாக படமளித்த புண்ணியவான் http://www.stanford.edu/
-