Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Friday, August 19, 2016

அறிவுஜீவிகளுக்கான அடையாளங்கள்

முட்டாள்கள் எடுத்த யாவற்றிலும் ”மூணே கால்” என்று ஸ்திரமாக இருப்பதும் அறிவுஜீவிகள் ”இதுவா? அதுவா? எதுவோ?” என்று சந்தேகத்தில் தள்ளாடுவதுமே இந்த நவீன யுகத்தில் பலவிதமான சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது - என்கிற புகழ்பெற்ற பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் உதிர்ந்த முத்துவிலிருந்து ஆரம்பிக்கிறது அந்த கட்டுரை.

அறிவுஜீவி என்று இனம் காண அவர்களிடம் பதினைந்து அடையாளங்கள் லட்சணங்களாகத் தென்படுமாம். நீங்களும் அறிவுஜீவியா என்று கீழ்காணும் பதினைந்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.
1. அறிவுஜீவிகள் போதிய அளவு நேரத்தை நானாவிதமான துறைகளில் செலவழித்து, நன்கு படித்து தங்களை எப்போதும் உரமேற்றிக்கொள்வார்கள். (நம்மில் எவ்ளோ பேர்?)
2. இணையமே கதியென அதன் காலில் விழுந்து கிடப்பார்கள். (அப்படியென்றால் நாமெல்லாம் அ.ஜீக்களே)
3. இராக்கோழியாக திரிவார்கள். (ரஹ்மான் நினைவுக்கு வரலாம். கால் செண்டரில் கடமையாக அகோராத்திரி வேலை செய்து ஜீவனம் நடத்துபவர் இதில் அடங்கா!! )
4. சொற்ப நேரமே மின்னணு உபகரணங்களை உபயோகிப்பார்கள். இல்லையேல் ஏகப்பட்ட செய்திகளினால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டுவிடுமாம். (நமக்கு ஒத்து வராது. அஷ்டபுஜ அனுக்ரஹம் கிடைத்தாலும் அனைத்துக்கும் ஒரு கருவி சொருகி உபயோகிப்போம்)
5. சங்கீதம் பயிலும் குழந்தைகள் பூரணமான ஞானம் பெறுகிறார்கள். (சங்கீதம் இரசிக்கும் பெரியவர்கள் என்றும் எழுதிக்கொள்வோம்.)
6. லாஹிரி வஸ்துகள் சரித்துக்கொண்டு மிதப்பார்கள். (கண்ணதாசனைக் காரணம் காட்டி பைசாவுக்குப் பிரயோஜனமில்லாமல் குடித்துக் கெட்டவர்கள் அநேகம்)
7. எவ்விதமாகவும் தங்களை வளைத்துக்கொள்ளும் விசால மனது படைத்தவர்களாகவும் இருப்பார்கள். (”நல்லத்துக்கு” என்று இந்த வரியின் முதலில் சேர்த்துக்கொள்ளவும்)
8. இது சரியா தவறா என்கிற நீண்ட மனப்போரட்டத்துக்குப் பிறகு தர்க்கரீதியாக அலசி ஆராய்ந்து அறிந்துகொண்டே எதையும் ஏற்பார்கள். (எந்தவொன்றுக்கும் நன்மை தீமை இரண்டு தெரிவதால்... அது ஆளை அலைக்கழிக்கும். “அனுபவிக்கணும்.. ஆராயக்கூடாது...” என்கிற வசூல் ராஜா கமல் தத்துவம் பலரை இயல்பாய் வாழ வைக்கும் மந்திரம்)
9. எதையும் தெரிந்துகொள்ளும் அதீத ஆர்வத்துடனும் பொசுக் பொசுக்கென்று கேள்விக் கணைகளைத் தொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். (வணிகவியல் மாணவன் இயற்பியல் வகுப்பிற்குச் சென்று குவாண்டம் மெக்கானிக்ஸ் கேட்டுக் குடைவது போல...)
10. சிந்தனைக்குத் தார்க்குச்சி போடும் வினாக்களை எழுப்பி அனைவரையும் மலரச் செய்வார்கள்.
11. வாழ்வில் சறுக்கி விழுந்தத் தங்களது தவறுகளிலிருந்து புதிய பாடங்களைப் படித்து ஏற்றம் கொள்ளும் பக்குவமடைந்திருப்பார்கள்.
12. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாக இருப்பார்கள்.
13. பேசப்படும் பொருள் மீதான தனது அறியாமையை நானூறு/நாலாயிரம் பேர் முன்பு லஜ்ஜையின்றி ஒத்துக்கொள்ளும் மகாத்மாக்களாக இருப்பர்.
14. ஒரு பொருளின் சத்யத்தின் அடிப்படையாகவே தங்களது கருத்துக்களை முன்வைப்பரே அன்றி அவை பற்றிய நம்பிக்கைகளின் பேரில் அல்டாப்பாக கருத்துரைக்க மாட்டார்கள்.
15. உணர்ச்சிப் பிழம்பானர்வகள். வெகு எளிதில் பிறத்தியாரிடம் கருணையோடும் அனுசரணையோடும் நடந்துகொள்வார்கள்.
மூலத்திற்கு குந்தகம் வராமல் மொழி மாற்றியிருக்கிறேனா என்று அறிந்துகொள்ள கீழே கொடுத்திருக்கும் சுட்டியைக் க்ளிக்கவும்.

Sunday, January 1, 2012

நலந்தானா...


தலைப்பிலிருந்து ஆரம்பித்தால் அடுத்த வரி உடலும் உள்ளமும் நலந்தானா. இந்த ப்ளாக் சரித்திரத்தில் இவ்வளவு நாள் கடையை மூடிவிட்டு நான் வனாந்திரம் சென்றதில்லை. சிட்டுக்குருவி தலையில் எட்டு மூட்டை அரிசியை ஏற்றிவிட்டாற் போல இருபது நாட்களாக வேலை அதிகம். வீட்டில் இருக்கும் ஒரே ஒரு அடாசு கணினிக்கு ஒன்பது பேர் இழுபறி போட்டி. ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுந்தும் ஆசுவாசமாய் உட்கார்ந்து எழுத நேரம் வாய்க்கவில்லை. மிக்ஸர், ஓமப்பொடி வகையறா ”வாய்மூடா” தீனியைக் கொரிப்பது போல இந்த ஃபேஸ்புக் வேறு பிசாசாய் பிடித்துக்கொண்டது.

அவ்வப்போது மனதில் எழும் எண்ணங்களையும், க்ஷேம லாபங்களையும் ஓரிரு வரிகளில் சுளுவாக முகப்புஸ்தக சுவரில் கிறுக்கி நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள ”உரித்த வாழைப்பழம்” சாப்பிடும் சௌகரியத்தில் இருப்பதால் பிறவிச் சோம்பேறியான நான் அங்கேயே கொட்டாய் போட்டு குடியிருந்துவிட்டேன். 2012-ல் நிறைய எழுத வேண்டும் என்று சத்தியப் பிரமாணம் எடுத்திருக்கிறேன். பயப்படவேண்டாம். உங்களுக்கும் எனக்கும் ஆண்டவன் துணையிருப்பார்.

சென்ற ஆண்டும் பம்பரமாக சுற்றி பல வேலைகள் பார்க்கவேண்டியதாயிற்று. வழக்கம் போல வீட்டிலும், ஆபீஸிலும் என்னை ஸகித்துக்கொண்டவர்களுக்கு ஒரு தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். வருஷாரம்பத்தில் இன்னென்ன இப்படியிப்படி செய்யவேண்டும் என்று திட்டமிட்டுச் செய்தாலும் ஜெட் வேகத்தில் காலம் இறக்கை கட்டிப் பறக்க நிறைய மனோரதங்களை செயல்படுத்த முடியவில்லை. சென்னையில் இருபுறமும் ஆவேசமாகக் கட்டியணைத்து வரும் வண்டிகளுக்கு முத்தமிடாமல் சென்றுவருவது கம்பி மேல் நடக்கிற காரியம். 2011-ல் அந்த கழைக்கூத்தை செம்மையாக நிறைவேற்றியது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

செடன் ஜாதிக் கார் வாங்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறியது. மாருதி கம்பெனிக்காரர்கள் மூலைக்கு ஒரு சர்வீஸ் செண்டர் ஓப்பன் செய்தும், இந்திய ரோடுகளின் தர நுட்பங்கள்  அறிந்தவர்கள் என்பதாலும் அவர்களிடமே டிசையர் வாங்கி என் டிசையரை பூர்த்திசெய்துகொண்டேன்.

சென்ற ஆண்டின் இறுதியில் சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றது இன்னும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது. முகப்புஸ்தக நண்பர்கள் பழக்கம் அதிகரித்திருக்கிறது. புத்தகப் புழுவாக இருப்பவர்களின் சங்காத்தம் கிடைத்திருக்கிறது.

இதற்கு மேல் எழுத இப்போது நேரமில்லை. பிரம்மமுஹூர்த்ததில் எழுந்து மாங்காடு காமாக்ஷி தரிசனம். இப்போது கண்ணைச் சுழற்றுகிறது. இந்த வருடத்தில் நிறையவும் நிறைவாகவும் எழுத முயல்கிறேன். கருத்துரைத்து ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என் நெஞ்சுக்கினியவர்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

WISH YOU A HAPPY & PROSPEROUS
NEW YEAR


பின் குறிப்பு: இப்பதிவின் பூர்வாங்கத்தில் இருப்பது அடியேன் கிளிக்கிய 2011-ன் கட்டக் கடைசி சூரிய அஸ்தமன வானம். ”தானே” புயலடித்து ஓய்ந்து எட்டிப் பார்த்த நீலவானத்தை வரிக்குதிரையாக்கிய மேகக் கூட்டம்.

கடைசி பட உதவி: http://www.stunningmesh.com

-

Tuesday, July 12, 2011

இளசுகளுக்கு இனியவை பத்து


இருபத்தோரு வயசுக்கு முன்னால் ஓடியாடி துள்ளித்திரியும் சின்னஞ்சிறுசுகள் என்னவெல்லாம் உருப்படியாக செய்யலாம் என்று நாட்ய வ்ருக்‌ஷா என்ற நடனப் பள்ளியின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் கீதா சந்த்ரன் ”இனியவை பத்து” ஒன்று பட்டியலிட்டுள்ளார். சண்டே ஸ்டாண்டர்ட் ஆங்கில வாரப் பத்திரிக்கையை ஐந்து நிமிடம் புரட்டியதில் கண்ணில் பட்ட செய்தி. ஒவ்வொன்றையும் ஒரு கிளான்ஸில் படிக்கும்படி சிக்கனமாக சிந்திக்கும்படி சொல்லியிருந்தார். அதற்கு அங்கே இங்கே கொஞ்சம் அலங்காரம் பண்ணி, சீவி சிங்காரித்து  நம்ம ஸ்டைலில் வாய் மூடா வளவளா லிஸ்டாக கீழே.

1. கிராமத்தில் விவசாயிகளுடன் ஒரு வாரம் குடியிருந்து அந்த வியர்வைத் துளியின் மகத்துவத்தை, உழைப்பின் மேன்மையை, மகோன்னதத்தை உணருங்கள். #லீவு விட்டால்  பாட்டி தாத்தா ஊருக்கு செல்லும் கலாச்சாரம், காலம் எல்லாம் மலையேறிப் போயாச்சு. இதில் கிஸானுடன் கீத்துக் கொட்டாயில் காலம் கழிப்பார்களா?

2. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டாமல், எப்பவும் கொடைக்கானல், ஊட்டி என்று லோக்கலாக ஊர் சுற்றாமல் সুপ্রভাত என்று சொல்லி வணங்கும்; நம் பாரத தேசத்தில் இருக்கும் பிற மாநிலத்திற்கும் ஒரு டூர் அடியுங்கள். (மேல் கோட்டில் வௌவால் போல தொங்கும் எழுத்துக்களை translate.google.com என்ற ஸைட்டில் கொடுத்து எந்த ஊர், எந்த பாஷை என்று தெரிந்துகொள்ளவும்.)

3. இருநூறு ரூபாய்க்கு ஒரு ஆறிப் போன ஜில் காஃபியும், மவுண்ட் ரோடு எக்ஸ்பிரஸ் மாலில் ஏதாவது ஒரு ஜில்ஜில் மாலு கண்ணாவை சைட் அடித்துக்கொண்டும் இல்லாமல் இயற்கையின் அரவணைப்பில், எழில் கொஞ்சும், மயில் ஆடும், குயிலும் பாடும் ஏதாவது ஒரு வனப் பிரதேசத்தில் ஒரிரு நாட்கள் முகாமிடுங்கள்.

4. போலிச் சாமியார்களின் ஊரை அடித்து உலையில் போடும் அகாசுகா திருட்டுத் தனத்திற்கு “ஸ்வாமிஜி” என்று கைக் கோர்த்துக் கொண்டு ஒத்துழைக்காமல், சாமானியர்களுக்கு சமூகத் தொண்டாற்றும் லாபம் பார்க்காத அமைப்பில் ஒரு வாரம் உங்களைப் பரிபூரணமாக சமர்ப்பித்து தன்னார்வலராக பணிபுரியுங்கள்.

 5. கிருஸ்துமஸ், ஹோலி, பக்ரீத், தீபாவளி போன்ற நம் நண்பர்களின் வீட்டுப் பண்டிகைக் காலங்களில், “என்னங்க ஸ்பெஷல் கேக் கிடையாதா?”, “என்ன பாய். பிரியாணி எங்கே? கண்டிப்பா லெக் பீசும் இருக்கணும்” “தீவாளி ஸ்வீட் இல்லையா?” என்று வயிறு மட்டும் வளர்க்காமல் அவர்களது வழிபாட்டுக் கூடத்தையும் ஒரு நடை போய் பாருங்கள்.

6. அரசியல்வாதிகள் தலையில் குல்லாவோடு வருஷா வருஷம் இஃப்தார் நோன்புக் கஞ்சி வோட்டுக்காக குடிப்பது போலல்லாமல், பிற மத நண்பர்களுடன் அவர்கள் கிரஹத்திர்க்கு சென்று ஒரு வேளை சகோதரத்துவத்துடன் உங்களுக்குப் பிடித்ததை அவர்களுடன் சேர்ந்து வயிறார உணவருந்துங்கள்.

7. நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை அது இல்லாதோருக்கு பரிசளித்து மகிழ்தல். இதைக் கொஞ்சம் விஸ்தாரமாக பார்ப்போம். நாட்டில் நான்கிற்கு மூன்று பேர் டாஸ்மாக்கில் ’சரக்கு’ சாப்பிடும் போதும் ரோடோரப் பொட்டிக் கடையில் ’தம்’ பற்ற வைக்கும் போதும் தாராள ப்ரபுக்களாக இருப்பார்கள். “இந்தா மச்சி! இந்தா மாமா” என்று உறவின்முறையில் பாந்தமாக வாயில் சொருகி கொளுத்திவிடுவார்கள். தன் கைக் குழந்தைக்கு சோறூட்டும் ஒரு தாயின் பரிவு அந்தச் செயலில் தொக்கி நிற்கும். இப்படியில்லை, இதுவல்ல. ஒரு நல்ல புஸ்தகம் நமக்கு மிகவும் பிடித்தால் அதைப் படிக்கும் ஆர்வத்துடன் ஏங்கி நிற்கும் யாருக்காவது அதை பரிசளிக்கலாம். அல்லது நம்மிடம் இருக்கும் ஆதிகால கம்ப்யூட்டரை அதுகூட இல்லாத மக்களுக்கு சாதாரண விஷயங்கள் தெரிந்து கொள்வதர்க்கு தானமாக கொடுக்கலாம். இது போன்ற நற்செயல்களை குறிப்பிடுகிறார்.

8. ”கநாகளைகக்ககு கபீகச்கசுகக்ககு கலகவ் கபகண்கண கபோகலாகமா?” போன்ற சர்வதேசத் தரம் வாய்ந்த cryptic “க”னா மொழி போன்ற கண்ட கபாகஷைகயை கற்றுக் கொள்வதற்கு பதில் பத்து இந்திய மொழிகளில் கீழ் கண்டவற்றை பேசக் கற்றுக் கொள்ளுதல்.  அடிப்படை உறவுகள் பற்றியும் மற்றும் அத்தியாவசியமான சில வார்த்தைகள்.

மாதா/பிதா
சோதரன்/சோதரி
கணவன்/மனைவி
மாமா/மாமி
பசிக்குது/ பசிக்கலை
தண்ணீர், பால்
தயவுசெய்து எனக்கு உதவ முடியுமா?
நான் தொலைந்துவிட்டேன்.
நன்றி

அடுத்தவர்களது பாஷையில் கெட்ட வார்த்தைகள் மட்டும் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொள்ளும் ப்ரஹஸ்பதிகளும் இம் மண்ணுலகத்தில் உண்டு.

9. ஐந்து விதமான கலாப்பூர்வமான நடன நிகழ்ச்சிகளை நாட்டியமாடும் சபாக்களுக்கு சென்று ரசித்துவிட்டு ”இது அப்படி, அது இப்படி” என்று வித்தியாசத்தை உணருங்கள். பரதம், குச்சிப்புடி, கதகளி போன்ற குடும்பத்தோடு பார்க்கும் “U" சான்றிதழ் பெற்ற டான்ஸ் ப்ரோகிராம்கள் மட்டும். #அவர் ஒரு நடனப் பெண்மணி. அவரின் தேர்வு அது. நீங்கள் ஏதாவது அறிவு ஜீவிக்கள் நடத்தும் ஒரு பக்க வசனம் மட்டுமே இருக்கும் ஓரங்க நாடகங்கள் பார்க்கலாம். தப்பில்லை.

10. ஐந்து வகையான சங்கீத கச்சேரிகளை நேரடியாகக் கண்டு களியுங்கள்.

ஒன்பதும், பத்தும் கொஞ்சம் இலகுவாக செயல்படுத்தக்கூடிய அறிவுரைகள்.

சமீபத்தில் மஹாராஷ்ரா அரசாங்கம் சாராயம் குடித்து 'தாக சாந்தி' செய்பவர்களது வயசு குறைந்தது இருபத்தைந்து ஆக இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை பிறப்பித்ததற்கு எதிர்ப்பு/ஆட்சேபம் தெரிவித்த பாலிவுட் நடிகர் இம்ரானுக்காக எழுதியதாம் இது. இம்ரானின் வாதம் என்னவெனில், “இதன் மூலமாக நீங்கள் சிகையைக் கூட பிடுங்க முடியாது. போலிச் சான்றிதழ்களும், போலீசுக்கு மாமுலும் தான் கிடைக்குமே தவிர பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது” என்கிறார். குடிகாரனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது. லாஜிக்தான். இதுவும் சரியாகத் தான் படுகிறது.

படக் குறிப்பு: லிஸ்ட் என்பதால் இந்தப் படம். தத்வார்த்தமாக ஒரு சிறு குழந்தையின் கையை ஒருவர் பிடித்திருப்பது போல இருப்பதால் கூடத்தான்.

-

Thursday, August 26, 2010

எளியதும் வெல்லும் காலம்

tim tailorவலியது வெல்லும் என்ற கோட்பாட்டை மாற்றி எளியதும் வெல்லும் என்ற புதிய சித்தாந்தத்தை மானுட இனம் கொண்டு வந்தது டெக்னாலஜியால் என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர். இந்த லோகத்தில் உலவும் ஆண் பெண் எல்லோரும் செயற்கையாக தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட வாலில்லா மனிதக் குரங்குகள் என்கிறார். ரத்தினச் சுருக்கமாக நாமெல்லாம் டெக்னாலஜி சிறை பிடித்து உருவாக்கிய "செயற்கை மனிதக் குரங்கு" என்பது இவர் கருத்து. இப்படி போட்டுத்தாக்கும் இவர் பெயர் டிமோதி டெய்லர். UK வில் உள்ள பிராட்ஃபோர்ட் பல்கலைகழத்தில் தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளராகவும், மனித இன ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார். இவர் எழுதிய The Artificial Ape:How technology changed the course of human evolution என்ற புத்தகம் இந்தமாதம் பெங்குவின் வெளியீடாக சந்தைக்கு வருகிறது. இவர் newscientist.com என்ற வலைத்தளத்துக்கு இந்த புத்தகத்தை பற்றி அளித்த நேர்காணலிருந்து சில பகுதிகள்.

டார்வின் என்னுடைய ஆதர்ஷ ஹீரோ தான். ஆனால் மண்டை பெருத்த  ஆடவர்கள் தான் ஆதிகால மகளிருக்கு கவர்ச்சிக் கண்ணனாக தோன்றினர் என்ற டார்வினின் கூற்றுக்கு நான் எதிரி. இருகால் கொண்டு நேராக நிமிர்ந்து நடக்கும் எந்த விலங்கினத்திற்கும் இயற்கையின் உந்துதலில் மண்டை சிறுத்துப் போகும். ஆகையால் டார்வினின் பெருத்த மண்டை கூற்றை ஏற்பது சரியாக இல்லை. அதேபோல் நாம் எப்போதுமே முழுவதும் உயிரியர்ப்பூர்வமாக இருந்ததில்லை. எப்போதும் ஒரு டெக்னாலஜியை அல்லது கருவியை சார்ந்தே அதன் துணைகொண்டே மனிதன் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறான்.  இருக்கிறான் என்கிறார்.

கல்லால் ஆன கூர் ஆயுதங்கள் மற்றும் கருவிகள் தோன்றிய காலம் இன்றிலிருந்து சற்றேரக்குறைய 2.5 மில்லியன் வருடத்திற்கு முன்பு என்று ஆராய்ந்து கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஆதிகால ஹோமோ செபியன்கள் ஜனித்தது 2.3 மில்லியன் வருடத்திற்கு முன்புதான் என்றும் கணக்குபோட்டு கண்டுபிடித்திருக்கிறார்கள். (அது என்ன க்ருத யுகமா? த்ரேதா  யுகமா? யார் கண்டார்?)  இதுவே 300,000 வருடங்கள் வித்தியாசம் வருகிறது. ஆகையால் கல் ஆயுதங்கள் கருவிகள் ஹோமோ செபியன்கள் காலத்திற்கு முன்னரே இருந்திருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

ஒரு ஆளைக் கொல்வதற்கு கூரான கல் ஆயுதங்கள் தான் தேவை என்பது இல்லை. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டால் போதும். ஆள் காலி. ஆனால் இந்த கூரான கற்க் கருவிகள் வேறு சில தேவைகளுக்கு உபயோகப்பட்டிருக்கின்றன. ஒரு கருவி கொண்டு மற்றொரு கருவி தயாரிக்கலாம்.

ஆதிகாலப் பெண்களுக்கு பாலூட்டுவதைவிட குழந்தையை தூக்கிக் கொண்டு கற்களிலும் புற்களிலும் காடுமேடுகளிலும் நடந்து போவது ஒரு பெரும்பாடாக இருந்திருக்கிறது. (இப்பவும் வெளியிடங்களில் ஆண்களை தூக்கவிட்டு ஒய்யாரமாக கூடத்தானே வருகிறார்கள்-இது நம்ம சரக்கு) ஆகையால் ஏதோ ஒரு காட்டு விலங்கின் தோலை எடுத்து தூளி மாதிரி கட்டி போட்டிருக்கிறார்கள். (இப்போ எல்லா கோயில் மரங்களிலும் மினியேச்சர் மரத் தொட்டில் கட்டுகிறார்கள் - இதுவும் நம்ம சரக்கு) இப்படி தூளி செய்வதற்கு இந்த கற்க் கருவிகள் உதவி தேவைப்பட்டிருக்கலாம். இப்படி ஒரு தூளி தொங்கும் வசதி வாய்த்தவுடன் மக்கள் மனித கங்காருவாக மாறி நிறைய பிள்ளை பெற்றுத் தள்ளி பல்லாண்டு காலமாக மனித இனம் பதினாறு பெற்று  பெரு வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்க்கு மூலாதாரம் அந்த கல் கருவி மற்றும் தோல் தூளி என்ற இரு அடிப்படை கருவிகள். இதற்க்கப்புறம் நமது இனத்தின் தேவையின் அடிப்படையில் டெக்னாலஜி துணை கொண்டு பல்லாயிரக்கணக்கான விதவிதமான கருவிகள் தயாரித்து புழக்கத்தில் விட்டு விட்டோம்.

எதையும் ஒட்ட நறுக்கும் கருவிகள் பல வந்ததால் கூரிய நகம் வளர்ப்பதை விட்டுவிட்டோம். கூழாக அரைத்து நொருக்குவதற்கு அரவை மிஷின் வந்ததால் நல்ல தெம்பான உறுதியான தாடைகளை இழந்துவிட்டோம். தொழில்நுட்பங்களால் உடலுருப்புகளின் சக்தி குறைபாடுகள் யுகம் யுகமாய் ஜென்மாந்திரங்களாக இன்னும் தொடர்ந்து குறைந்த வண்ணம் இருக்கிறது. 10,000 வருடத்திற்கு முன் இருந்த அந்தக் கூரிய கழுகுப் பார்வை இப்போது நம்மிடத்தில் இல்லை. மூளையின் அளவு சிறியதாகிக்கொண்டே வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 30,000 வருடத்திற்கு முன் இருந்த மூளை அளவு இப்போது கிடையாது. இதுபோல உடற்க் குறைபாடுகள் இருப்பினும் டெக்னாலஜி கொண்டு கண்டுபிடித்த வஸ்த்துக்களின் உதவியால் ஒப்பேற்றிக்கொண்டு இருக்கிறோம். உடல் திடகாத்திரம் மற்றும் பலமே பிரதானமாக இருந்த காலம் மலையேறிப்போய் பலவீனமான ஆட்கள் கூட பல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் உடலெங்கும் பொருத்திக் கொண்டு காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பம்பரமாக சுற்றுவதை பார்க்கிறோம், வலியது எளியது என்ற வேறுபாடு இல்லாமல். Survival of the Fittest போய் தற்போது Survival of the Weakest. இப்போது இயந்திரங்களிடம் நம் ஒட்டுமொத்த அறிவையும் ஒப்படைத்துவிட்டு அதனிடம் இருந்து கிரெடிட் கார்ட் போல தேய்த்து தேய்த்து கடன் வாங்கி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

உயிர் + டெக்னாலஜி = மனிதன் என்று முத்தாய்ப்பாக சொல்கிறார்.

இப்படி இந்த நேர்காணல் முழுக்க விவரங்களாக கொட்டி இறைத்தது மூச்சு முட்ட வைக்கிறார் இந்த மனுஷன். இன்னும் நிறைய இருக்கிறது. என்னோட இந்த சகிக்க முடியாத மொழிபெயர்ப்பைக்காட்டிலும் நல்லா படிக்கணும்ன்னா கீழே கொடுத்துள்ள முகவரிக்கு சென்று படியுங்கள். அவசியம் புக் வாங்கி படிக்கணும். நன்றி.

படஉதவி: www.newscientist.com

Wednesday, August 25, 2010

ஜாம் ஜாம் ட்ராஃபிக் ஜாம்

தரை மார்க்கமாக எங்கே போனாலும் கூட்டம் அம்முகிறது. வழுக்கை மண்டை தெரியாமல் இருக்க பாலுமகேந்திரா கேப் போட்டு அது கீழே விழுந்தால் ஷன நேரத்தில் நாலு வண்டி ஏறி இறங்கும் அளவிற்கு ட்ராஃபிக். ஒரு மாநில மாநாடு மாவட்ட பேரணி என்று கட்சியினர் கொடி பிடிக்கும் போது ஒரு மணி ரெண்டு மணி நேரம் நம்மளை ரோட்ல தேமேன்னு ஓரமா நிக்க வச்சா ஏக டென்ஷனாகி ஒட்டு மொத்த அரசு இயந்திரங்களை புழுதி வாரி ஏக வசனத்தில் சபிப்போம். ஒரு சின்ன பக்கத்து ரோடிலிருந்து மெயின் ரோடிற்கு இப்ப போய்டலாம் என்று பிரயாசைப் பட்டு வருபவர்களின் ஆசையை நிராசையாக்கி அந்த காரை ஒரு இன்ச் நகர்த்த விடாமல் உடஞ்ச சைக்கிளில் ஆரம்பித்து, உயர் ரக இம்போர்டேட் கார் வரை இஞ்சி தின்ன குரங்கு போல கார்க் கைதியாக உள்ளேயே உட்காரவைத்து ரோடோரத்தில் சுற்றி சுற்றி வந்து கும்மியடிப்போம். வண்டியில் உட்கார்ந்தால் நேரே போகவேண்டிய இடத்திற்கு செல்லவேண்டும். "ஊட்ல சொல்லிட்டு வன்ட்டியா?.. சாவு கிராக்கி..." என்று வண்டியில் இருந்து எட்டிப்பார்த்து தூய தமிழில் நல்ல கிராக்கியிடம் அர்ச்சனை கிடைத்தாலும் ஹாரன் அடித்து விலகாத யமதர்மராஜா வாகனம் போலவும் கார்ப்பொரேஷன் லாரி போலவும் கண்டுக்காம அப்படியே "போய்க்கினே" இருப்போம். எங்கேயும் நிற்கக்கூடாது. இது தான் தலையாய கொள்கை.

நாட்டு மக்களின் நன்மைக்காக ஒரு பாலம் கட்டினாலோ, ரோடு அகலப்படுத்தினாலோ கொஞ்சம் அந்த ஏரியாவில் நெரிசல் ஏற்ப்படுவது இயற்கையே. "இவனுங்க வருஷம் பூரா கட்டுவானுங்க... நாம கிடந்து சாவனும்..." என்று அலுத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை நொட்டை சொல்லிக்கொண்டு அதே ரோடு வழியாக அலுவலகம் சென்று வந்துகொண்டிருப்போம்.

நம்மோட சுதந்திர தினத்திற்கு முதல் நாளிலிருந்து சீனாக்காரர்கள் ரோடிலேயே ஒன்றுக்கு இரண்டுக்கு போகும் இயற்கை உபாதையிலிருந்து சாப்பாடு வரை தின்றுவிட்டு ராப்பகல் அகோராத்திரியாக ரோடிலேயே தவம் கிடக்கிறார்கள். விஷயம் என்னன்னா சீனாவின் ஹெயபின் ப்ராவின்சிலிருந்து பெய்ஜிங் உள்ளே செல்லும் வழியில் நடக்கும் ஒரு கட்டுமானப் பணியினால் ஏற்ப்பட்ட சிறு போக்குவரத்து தேக்கமானது ஒருத்தர் வண்டி முன்னாடி இன்னொருத்தர் மூக்கை நுழைத்து போக ட்ரை பண்ணி பாடியோட பாடி உரசி இடித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ட்ராஃபிக் பில்ட் அப் ஆக ஆரம்பித்து இப்போது நூறு கிலோ மீட்டர் தூரம் வரை வண்டி நிக்குதாம். இந்த ஜாம் சரியாக இன்னும்  ஒரு மாசம் கூட ஆகலாம் அப்படின்னு 'சாலைத்துறை' வல்லுனர்கள் கருத்து சொல்றாங்களாம். கருத்து கந்தசாமிகளுக்கு எந்த நாட்டிலேயும் பஞ்சம் இல்லை. ஆனா இந்த ட்ராஃபிக் ஜாம் அந்த ஏரியாவில இருக்கிற மக்களுக்கு ஒரு புது பிசினஸ் கொடுத்துருக்காம். சீடை, முறுக்கு பட்டாணி சுண்டல், நூடுல்ஸ் அப்படின்னு எல்லா தின்பண்டங்களும் விக்கறாங்கலம். ஆனா என்ன விலை தான் தியேட்டர் உள்ள சாப்பிடுற சமோசா மாதிரி யானை விலை குதிரை விலையாம்.

என்னத்த சொல்ல.. இனிமே பத்து நிமிஷம் இருவது நிமிஷத்திற்க்கெல்லாம் யாரையும் வையாதீங்க. அமைதியா நின்னு ஊடு போய் சேருங்க...

செய்தியும் படமும் இங்கே: http://newsfeed.time.com/2010/08/23/epic-traffic-jam-in-china-enters-its-9th-day/

Tuesday, August 24, 2010

ஃபுல் மப்புல.....

drunkதண்ணி அடிச்சா  தல கால் புரியாம இருக்கலாம் அதற்காக  "டா....ய்..." என்று ஒரு ரயில் ஹார்ன் மாதிரி தெரு முழுவதும் கொடுத்துகொண்டே போவார்கள். இது கொஞ்சம் ஓவர்தான். இப்படி ஏன் என்று போதைப் பிரியர்களுடன் கூடிக் குலவி கும்மியடிக்கும் ஒரு நண்பனிடம் கேட்ட போது, "அது ஒன்னும் இல்ல மாமா... பொதுவா ராத்திரி கடையை பூட்டிட்டு, வாந்தி எடுத்து விழுந்து கிடந்தவனை ஒரு மிதி மிதிச்சு விரட்டி விட்ருவாங்க. ராத்திரி பதினொன்னு பன்னெண்டு மணிக்கப்புறம் நாயும் நரியும் உலவுற டயத்ல தனியா ஊட்டுக்கு வரணும். நாய் குரைச்சு கடிச்சு வச்சுரப் போவுதுன்னு... நாய் மாதி குரைக்க ட்ரை பண்ணி நா...ய்...ன்னு கத்தறத்துக்கு பதிலா டா....ய்... அப்புடின்னு குரல் உட்டுக்குனு போறானுக. இதெல்லாம் ஒரு தெம்புக்கு குடுக்குற சவுண்டு. வேற ஒன்னும் இல்ல" என்று கட்டிங் அடிப்பவர்களை கடையிலிருந்து வீடுவரைக்கும் கொண்டு போய் விட்டது மாதிரி சொன்னான்.

இந்த ஃபுல் மப்புல ரோடுல "ஆட்ரா ராமா.." ஆடிக்கிட்டு போற மக்கள்ல நிறைய வகையறா இருக்கு. சிலது எங்கோயோ பார்த்திகிட்டே முன்வரிசை பல் எல்லாத்தையும் காமிச்சுகிட்டே போய்கிட்டு இருக்கும். விவரம் தெரியாம திருப்பி சிரிச்சி வச்சா. போச்சு. சிரிப்பை நிறுத்திட்டு மறைவாய் இருக்கும் உடலுறுப்புகளை சொல்லி திட்ட ஆரம்பித்துவிடும். இன்னும் சில மப்பு மன்னார்சாமிகள் தான் திட்ட வேண்டிய அல்லது குஸ்தி போட வேண்டிய ஆள் எதிரில் நிற்பது போல அவர்களுடைய முழு சண்டையையும் எல்லா விவரங்களுடன் கையை எதிரே ஆட்டி சொல்லி திட்டிக்கொண்டே செல்வார்கள். இந்த தண்ணி வண்டிகளில் சில அமுக்குணி ஆட்களும் உண்டு. வாயே திறக்காமல் ஒரு சிந்தனா சிற்பி போல எதையோ தீவிரமாக சிந்தித்திக்கொண்டே தெரு ஒரமாக சிறிய தள்ளாடல்களுடன் நடையை கட்டுவார்கள். கல்யாணத்திற்கு பிறகு தண்ணி அடித்துவிட்டு வந்து வீட்டு வாசலில் நின்று கொண்டு பொண்டாட்டி பெயரை சத்தமாக கூப்பிட்டு விட்டு விழுந்த பூசையில் அப்புறம் கள்ளுக் கடை வாசலை மிதிக்காத சில உன்னத புருஷர்களும் எனக்கு தெரிந்து இருக்கிறார்கள்.

அதெல்லாம் கிடக்கு. இங்கே இருக்கிற இந்த ரஷிய ஆளைப் பாருங்க. அரையில போட வேண்டிய அன்ட்ராயரை தலை வழியா டி ஷர்ட் மாதிரி போட ட்ரை பண்றாரு. இதுக்கு தான் நம்ம ஆளுங்க கைலி இல்லைனா வேஷ்டி கட்டிக்கிட்டு தண்ணி அடிக்க போயிடறாங்க. கழண்டு விழுந்திருச்சுன்னா வடிவேலு மாதிரி எடுத்து தலையில கட்டிக்கிட்டு சொகமா வீடு வந்து சேர்ந்துறலாம்.



இவருக்கு ஒரு ஆளு ஹெல்ப் பண்ணினாரே அவரும் மப்புல இருக்காரோ? போதையான உலகம்டா சாமி.

அரை டிக்கெட்டின் ஆங்கில கட்டுரை

vin1சின்ன வயசில் "வாழைமரம் பற்றி ஒரு பக்க கட்டுரை வரைக" என்று தமிழில் கேட்டாலே நமக்கு ததிகினதாம் போடும். வீட்டு கொல்லைப்புறத்தில் அவசரத்துக்கு ஒதுங்கும் போது பார்த்த வாழைமரத்தை ஞானக் கண்ணால் பரீட்சை எழுதும்போது அண்ணாந்து மேற்கூரையை பார்த்துட்டு தார் போடும், பூ, காய், கனி என்று எல்லாவற்றையும் சாப்பிடலாம், வாழையடி வாழை அப்படின்னு ஏதோ எழுதி வெள்ளை பேப்பரை நீலமாக்கி ஒப்பேற்றி கொடுத்துவிட்டு வருவோம். கட்டுரை எழுதுதல் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் (புலிநகக் கொன்றை) தன்னுடைய அக்ரகாரத்தில் பெரியார் (காலச்சுவடு வெளியீடு) புஸ்த்தகத்தில் சிறுவயதில் அவர் எழுதிய ஒரு ஆங்கில கட்டுரையில் A thief stolen my Bicycle என்று வந்த ஒரு வாசகத்தை பார்த்து அவர் அப்பா "திருடன் தான் சைக்கிளை திருடிண்டு போவான்,வேற யாரு வந்து திருடுவா?  தீஃப்ங்கற வார்த்தை தேவையே இல்லைன்னு சொல்லி சிரிச்சார்" அப்படின்னு எழுதியிருப்பார். நம்ம வாத்தியார் சுஜாதா கூட அப்பப்ப சிறந்த ஆங்கில கட்டுரைகளின் தொகுப்பு வெளிநாடுகளில் வெளியிடுவது போல் நாமும் வெளியிடவேண்டும் என்று சொல்வார். வாஸ்த்தவம்தான். பேசும்போது சுலபமாயிருக்கிற விஷயங்கள் வாசகமாய் எழுதும்போது முட்டிக்கும். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதியதாய் சரித்திரமே இல்லை. சில நேரங்களில் வார்த்தை தேடி தேடி எண்ணங்கள் சிதைந்து சிதறிப் போகும். எழுது. அடி. திருத்து. எழுது.....

Photobucketரொம்ப நீட்டி முழக்க வேண்டாம். என்ன சொல்ல வந்தேன்னா என்னுடைய சீமந்த புத்ரி ஐந்தாவது படிக்கும் ஒரு அரை டிக்கெட்டு. அவர்கள் பள்ளியில் ஒரு டாபிக் சொல்லி ஐந்து நிமிடத்திற்குள் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதச் சொல்லியிருக்கிறார்கள் . அப்படி அவசரகதியில் காமா சோமாவென்று அவள் எழுதிய இரண்டு கட்டுரைகளை கீழே தந்திருக்கிறேன்.

1. Happenings at Home (Last Sunday)
-----------------------------------------
Last Sunday my father my mother went out in the evening to buy for our house function and in my home me, my sister and my friends were playing and we ate delicious food and we were happy playing computer and my mother bought me chocolates and for me she bought pencil box. I was very excited in that day then I played carom board. And finally we went to sleep at night. Thank You!

2. Autobiography - Umbrella
Hi! I am umbrella people use me when it is hot and rainy and I have pink spots on me. I am made of rexin cloth and I am foldable. I am made in factory and I protect people from rain and my hand is made out of plastic. When grandma wants to go to the temple in a hot sun they also take me in that time. I worship god and I am used as granspa's walking stick and I am sold in shops. Please people buy me I will be useful for you everywhere and everytime in summar and in rainy days and even I come in designs and shape. Childrens open and sit on me in that time I cry but they enjoy it even for playing the children use me. Thank You!
மேற்கண்ட இந்த இரண்டு கட்டுரையிலும் நிறைய and போட்டு எழுதினாலும், தன்னுடைய பிஞ்சு நினைவோடையில் வந்ததை ஓரளவுக்கு மற்றவர்களுக்கு புரியும்படி எழுதியவளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக எனக்குப் பட்டது. ஏனென்றால் வீட்டில் முழுக்க முழுக்க தமிழில் சம்பாஷித்து பள்ளியில் மட்டும் ஆங்கிலம் பயில்வதால் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

Sunday, August 22, 2010

ஞாயிற்றுக்கிழமைகளில்.....

avvai shanmugi

சோம்பேறித்தனமாக லேட்டாக எழுந்திருந்து நித்யப்படியைவிட கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாக கோழித்தூக்கம் போட்டுப் பார்த்தால் பாழாய்ப்போற மணி ஏழு அடித்துவிடுகிறது. சரி இன்று லீவுதானே என்று கொஞ்சம் அசால்ட்டாக இருந்தால் கொஞ்ச நாழி கழித்து வயிற்றில் டாண்னு மணி அடிக்க ஆரம்பிக்கிறது. வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. மணி அடித்த வயிற்றுக்காக ஒரு காப்பிக்கு ரெண்டு காப்பி குடிக்கலாம் என்றால் இரண்டாம் தர காப்பி தான் இரண்டாம் தடவை கிடைக்கிறது. "இப்டி காப்பியே... குடிச்சுண்டிருங்கோ ..." என்று ராகம் பாடி ஒரு இடி இடிப்பாள் தர்மபத்தினி. "காலா காலத்ல எழுந்துண்டு சுருசுருப்பா குளிச்சுட்டு.. சாப்பிட்டுட்டு.. ஆத்து காரியம் எவ்ளோ இருக்கு. அதைப் பார்க்காம... மசமசன்னு.. நின்னுன்டே இருடா..." இது என்னைப் பெற்ற மகராசியின் பின்பாட்டு. இந்த ராகத்திற்கும் பாட்டுக்கும் எதிர்பாட்டு பாட நினைத்தீர்கள் நிச்சயம் அங்கே ஒரு கொலை விழும். நம்மை இடிப்பதில் அதிகம் வெற்றிபெறுவது தாயா? தாரமா? என்று ஒரு வழக்காடு மன்றம் வைக்கும் அளவிற்கு நிகராகவும் நிறைவாகவும் செய்வார்கள்.

க்ரஹஸ்த்தாஸ்ரமத்தில் வெற்றிகண்டு கோலோச்சுவதின் பலனாக எனக்கு வாய்த்த என் இரண்டு வெற்றிச்சின்னங்களையும் இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சி மகிழ்ந்தால் தான் உண்டு. வார நாட்களில் அலுவலகத்தில் இருந்து ஜூஸ் பிழியப்பட்ட ஆலைக் கரும்பாக அர்த்தஜாமம் முடிந்து முருகன் கோயில் நடை சாத்தும் நேரத்தில் திரும்புகையில் ஒருத்தி ஒருக்களித்தும் இன்னொருத்தி குப்புறவும் படுத்து சயனித்திருப்பார்கள். பால்கனியில் உட்கார்ந்து ஒரு அரைமணி மன்மோகன், சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், ஒபாமா,  ஒசாமா போன்றோர் பற்றியும், கள்ளக்காதலனுடன் ஓட்டம் எடுத்தவர்கள், தாயை கொன்று சொத்தை அபகரித்த பஞ்சமா பாதகர்கள், டீச்சர் திட்டியதால் அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டு ப்ராணஹத்தி செய்துகொண்ட பள்ளி பயிலும் சிறுமி, ஒரு கிலோ தக்காளி நாற்பது ரூபாய் எட்டியது, விளையாட்டுப் போட்டி ஒப்பந்தங்களில் முறைகேடாக நடந்து கொண்டு எசக்கேடாக மாட்டிக்கொண்டவர்கள் என்று பலப்பல செய்திகளை அவரவர் இஷ்டத்திர்க்கு பொதுஜனங்களுக்கு விளம்பும் 'நடுநிலை' நாளேடுகளை சற்று மேய்ந்துவிட்டு செல்வங்களை எழுப்பி, படுக்கையில் உம்மா கொடுத்து, கிச்சு கிச்சு பண்ணி சீண்டி விளையாடி அவர்களை எழுப்பி நாமும் குளித்தால் ஆச்சு மணி பத்து ஆகிவிடும். அப்புறம் ஐந்தாறு இட்லி சாம்பார் பசிக்கும் ருசிக்கும் ஏற்ப ஊற்றி தின்று பசியாறிவிட்டு "அப்பாடா.." என்று உண்ட களைப்பில் ஊஞ்சலில் உட்காரும் போது, "ஏண்டா.. எல்.ஐ.ஸி கட்டின ரசீதெல்லாம் அங்கங்க கெடக்கு. எடுத்து உள்ள வை. பெட்ரூம் முழுக்க புஸ்த்தகமா இருக்கு. அதெல்லாம் எடுத்து புக் ஷெல்ஃப்ல வை. கொல்ல குழாய்ல தண்ணீ சொட்டு சொட்டா வரது, அந்த செல்வராஜை கூப்பிட்டு ரிப்பேர் பண்ணு.." என்று சரமாரியாக அடுத்த கட்ட வீட்டுப் பணிகள்  பற்றிய கட்டளைகள் பிறப்பிக்கப்படும். கட்டளை இடும் ராஜாங்க பொறுப்பில் என்னைப் பெற்ற தெய்வம்.

இட்ட கட்டளையை செவ்வனே நிறைவேற்றி, கொஞ்சம் அப்படியே உட்கார்ந்து டாம் அண்ட் ஜெர்ரி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் டி.வியில் பெண்களிடம் கெஞ்சி ஒரு ஸ்லாட் வாங்கி ஏதாவது பார்க்கலாம் என்றென்னும் சமயத்தில், "ஏன்னா.. உங்க பீரோவை கொஞ்சம் அடுக்கப்டாதா. ஆபிஸ் போகும் போது ஒன்னு எடுத்தா ரெண்டு சரியறது.. மேட்சா எடுத்து போட்டுக்க முடியலை.. சித்த செய்யுங்கோளேன்... எப்ப பார்த்தாலும் கொழந்தேளுக்கு போட்டியா டி.வி. முன்னாடி உட்கார்ந்துண்டு...." என்று இம்முறை மனைவியின் அன்பு ஆர்டர். வீட்டில் மதுரையோ சிதம்பரமோ, எந்த ஆட்சியாயிருந்தாலும் இந்த ஏவலுக்கு அடிபணிந்தே ஆகவேண்டும். இதற்க்கு கீழ்ப்படியாமல் இருந்தால் இதன் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும். ஒரு வாரத்திற்கு கிட்ட அண்ட முடியாது. மொத்த ஆணினமும் இந்த பூச்சாண்டிக்கு அடிமை. "டாய்... நா யார் தெர்மா.. ச்சும்மா... வகுந்துருவேன்.." என்று முண்டு தட்டும் வஸ்தாது ஆணிலிருந்து சிக்கலான கொலை வழக்கிற்கு தீர்ப்பு வழங்கும் மாண்புமிகு நீதியரசர்கள் வரை இந்த பொட்டை மிரட்டலில் பயந்து படிந்துவிடுவார்கள். மறு பேச்சு பேசாமல் எல்லாவற்றையும் அழகாக அடுக்கி, முடிந்தால் வாமபாகத்தின் துணிகளையும் கர்மசிரத்தையாக பிளவுஸ் மேட்சிங் பார்த்து அடுக்கினால் அதைவிட சிறந்த பணி ஒன்று உங்களுக்கு ஞாயிற்றுக்கிழைமையில் இருக்க வாய்ப்பே இல்லை.

கொடுத்த பணிகளை கடமையாய் செய்து வீட்டில் உள்ளோர் அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமான பின்னர் ஒரு இரண்டு மணி அளவில் மதியான்ன சாப்பாடு கிடைக்கும். மேல் சட்டை இல்லாமல் வேஷ்டியோடு கீழே சம்மணமிட்டு உட்கார்ந்து பொறுக்க ஒரு ஃபுல் கட்டு கட்டியபின்னர் ஒரு மூனு மணியளவில் கட்டையை கீழே சாய்க்கலாம். அப்போது பார்த்து பொண்ணு ரம்மி விளையாட கூப்பிட்டால் அதுவும் காலி. ஒருமணிநேர  சிரமபரிகாரத்திர்க்குப் பின்னர், அடுத்த வாரம் குடும்ப வண்டி ஓடுவதற்கு தேவையான காய்கறிகள், பிள்ளைகளின் ஸ்நாக்ஸிர்க்கான பழங்கள் பிஸ்கட்டுகள், தலை க்ளிப், கால் செருப்பு போன்ற அத்தியாவசிய பொருட் சேர்க்கையில் ஈடுபடவேண்டும். தலையே போனாலும் ஏழிலிருந்து ஏழரைக்குள் வீட்டிற்க்குள் வந்து அடைகாத்துவிட வேண்டும். எட்டரைக்கு சாப்பிட்டுவிட்டு ஒரு ஒன்பதரை வாக்கில் தூங்கினால் தீர்ந்தது சண்டே, இருக்கவே இருக்கிறது மறுநாள் மன்டே. ட்ராஃபிக்.... ஆபிஸ்...... மீட்டிங்..... டென்ஷன்..... இத்யாதி..... இத்யாதி......
பட விளக்கம்: லீவு நாட்களில் வீட்டு வேலைகள் அதிகம் இருப்பதால், பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேலை என்று பாடிய அவ்வை ஷண்முகியின் படம். ஆம்பளையா இருக்கும் ஆம்பளைக்கும் வேலை வேறொன்றுமில்லை.
பட உதவி: yuvansuniverse.blogspot.com 


Friday, August 20, 2010

மழை கடலோடியும் திரவியம் தேடு

rainroadசென்னையில் மழை செய்யும் கோளாறுகள் மிக அதிகம். மாரிக்காலங்களில் மணக்க மணக்க சுத்தமான செருப்புக்காலோடு ரோடில் காலெடுத்து வைத்தால் நாறிப்போன சாக்கடைக்காலோடு துர்நாற்றத்துடன் தான் வீடு திரும்ப முடியும். லேசாக ஒரு தூற்றல் போட்டாலே மழையும் சாக்கடையும் ஒன்றாக திரிவேணி சங்கமமாக ஒரு வாரத்திற்கு வற்றாத ஜீவநதியாக சாலை ஓரங்களில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும்.  சுழி அதிகம் உள்ள இடங்களில் சென்றால் உள்ளே இழுத்துவிடும். வலது கையில் குட்டி பட்டன் குடையோடு, இடது கையில் கணுக்கால் தெரிய லேசாக தூக்கிய சேலையுடன், தோளில் ஹான்ட்பாக்கோடும் எந்த குண்டு குழியிலும் கால் இடறி கீழே விழாமல் கம்பி மேல் நடக்கும் லாவகமாக இங்குமங்கும் ஆடியாடி நடந்து செல்லும் பாதசாரிப் பெண்டிரை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். இவர்களில் சிலபேர் ஆர்டர் செய்து தயாரித்த ஸ்டூல் போல் இருக்கும் அவர்கள் செருப்பின் மீது வேறு ஏறி நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த ஸ்டூல் செருப்பை மிஞ்சி கிஞ்சித்தும் மழைத்தண்ணீர் காலில் ஏறாது. மழைக்காலத்தில் எப்போது வெளியே நடந்து போய் உலாத்தி விட்டு வந்தாலும் செருப்புகளிலும், பாண்ட்டின் அடிபாகத்திலும் ஒரு வண்டி சேற்றோடுதான் வீடு திரும்புவது வழக்கம். வாசல் படி அலம்பி கோலம் போட்ட இடங்களில் சேறையும் சகதியையும் வீட்டிற்குள் கொண்டுவந்து விட்டுவிட்டு "வாசல் பூரா மாடு கன்ணு போட்டாப்ல ஆக்கிப்டான்..." என்று அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொள்வது வாடிக்கை.

இரண்டு நாட்களாக தவணை முறையில் இரண்டிரண்டு மணிநேரம் விடாமல் "சோ.." என்று காட்டடி அடித்த மழை சென்னையை ஜோஜோ குளிப்பாட்டி ரோடுகளில் தெப்போற்ச்சவம் நடத்தி காட்டியது. சிறு சிறு குட்டைகளாக போகும் வழியெங்கும் மழைநீர் தேங்கிய சாலைகளில் ஸ்கூல் பசங்க இருகால் தூக்கிப்  பரப்பி  "ய்....ய்.ய்...." சொல்லி தண்ணீர் மேல் சைக்கிள் விட்டு பழகுவது போல சில கட்டிளம் காளையர்கள் பல்சர் விட்டு பரவசமடைந்தார்கள். ஒரு பெருங்கூட்டம் வடபழனியிலிருந்து கோயம்பேடு வரை அடுத்த வண்டி 'கப்'படிக்க வண்டியோடு வண்டி உரசியபடி நின்றது. இப்படி இந்த நெரிசலில் வண்டி ஓட்டுவதற்கு ஒரு அபார திறமையும் கடவுள் அனுக்ரஹமும் வேண்டும். சென்னையில் ஒருவர் கார் ஓட்டி பழகினால் இந்த உலகத்தில் எந்த துருவத்திலும் சென்று அனாயாசமாக கண்ணை மூடிக்கொண்டு ஓட்டலாம். அவ்வளவு மேம்பட்ட காரோட்டுவதற்க்கான தொழில் ரகசியங்கள் இங்கே நாம் கற்கலாம்.

முன்னால் செல்லும் வண்டிக்கு ஒரு இரண்டடி இடைவெளி விட்டு தொடரும் நாம் இரண்டாவது கியர் மாற்றலாம் என்றென்னும் அந்த கணப்பொழுதில் ஒரு மோட்டார் சைக்கிள் சரக் என்று குறுக்குவெட்டாக நின்று நமக்கு "அடடா மழை டா அடை மழை டா..." என்று கார்த்தி போல ஆட்டம் காட்டுவார். கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேக் அடித்து பொறுப்பாக அவரை நாம் காப்பாற்றவேண்டும். தெரியாமல் லேசாக அவர் டூவீலர் பின்னால் கட்டியிருக்கும் ட்ரங்க் பெட்டியிலோ அல்லது Dont Kiss Me மட்கார்டிலோ ஒரு அரைகுறை முத்தம் கொடுத்து விட்டால் திரும்பிப் பார்த்து முறைத்து கையை தூக்கி மேலும் கீழும் ஆட்டி நமக்கு ஒரு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்வார். மிகவும் கவனத்துடனும் ஒரு ஏ.கே 47வை பிடித்து எதிரே நிற்கும் தீவிரவாதியை எதிர்கொள்ளும் ஜாக்கிரதையுடனும் கார் ஓட்ட வேண்டும். சில சமயங்களில் பிரேக், அச்செலேரடோர், க்ளட்ச் என்று அங்கிருக்கும் அனைத்து பெடல்களையும் அழுத்தும் ராகுகால வேலைக்கு தள்ளப்படலாம். ஐம்புலன்களையும் ஒருசேரக் குவித்து கவனம் கலையாத ஒரு டீப் மெடிடேஷன் செய்யும் சிரத்தை இதற்க்கு தேவைப்படுகிறது.

இதற்கிடையில் இசையை தன் உயிர் மூச்சாக பாவிப்பவர்கள் இரு காதிலும் ஹெட் ஃபோன் சொருகி ஆனந்தமாக இசையுலகில் சஞ்சாரித்து தனது டூவீலரை பிளைட்டின் Auto Mode போல போட்டுவிட்டு இவ்வுலக ஒட்டு உறவே இல்லாமல் அதன் போக்கில் வண்டியை விடுவர். இவர்களை பார்த்து நாம் நான்கடி இடைவெளி விட்டு நிதானமாக செல்லவேண்டும். ஓரத்தில் அலைமோதும் சாக்கடை நீரினால் நாம் அடித்து செல்லப்படுவோமோ என்றஞ்சி நடுரோட்டில் ராஜநடை நடந்து சிலர் செல்வார்கள். ஹார்ன் அடித்தால் போச்சு. திரும்பி ஒரு முறை முறைத்து இன்னும் மெதுவாக நடந்து காருக்குள் நம்மை வைத்து ஒரு மினி ஜானவாசம் நடத்துவர். டூவீலரில் பில்லியனில் ஒருவர் இருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக செல்லவேண்டும். ஓட்டுபவர் அவர் விருப்பத்திற்கு வண்டியை செலுத்த பின்னால் உட்கார்ந்து கொண்டு இருகையையும் மாறி மாறி ஆட்டி துடுப்பு போடுவது போல இவர்கள் செய்யும் விஷமத்திர்க்கு அளவேயில்லை. எந்தப் பக்கம் போனாலும் அந்தப்பக்கம் படபடவென்று கையை போடுவர். தண்ணீர் லாரி க்ளீனருக்கும் இவர்களுக்கும் ஒன்றும் வித்தியாசமே இருக்காது.

இவ்வளவு பிரம்ம பிரயத்தனத்திற்கு பிறகு வருவதுதான் ரியல் டெஸ்ட். இப்போது முழங்கால் அளவிற்கு மேல் பாதி சாலை வரையில் தேங்கிநிற்கும் புனித தீர்த்தத்தில், ஓபன் மேன்ஹோல் எங்கிருக்கிறது என்று அனுமானித்து முன் செல்லும் வாகனங்களின் டயர் தடத்தை பார்த்தும், தண்ணீர் எங்கு அலைமோதுகிறது எங்கு சுழித்து ஓடுகிறது என்பதை வைத்தும் அது ஆழம் இருக்கும் இடமா இல்லையா என்பதை ஒரு மீனவரின் நுட்பத்தோடு கணித்து வண்டி ஒட்டவேண்டும். இப்படி நாம் ஒரு தீர்மானத்திற்கு வருவதர்க்கு முன் பின்னால் வரும் மாநகர பஸ்காரர் ஹாரனில் வைத்த கை எடுக்காமல் நமக்கு இடப்புறத்தில் ஏறி அப்படியே ஒரு கப்பல் கடலில் மிதப்பது போல மிதந்து நமக்கு முன் கரை ஏறி போய்விடுவார். அவர் சென்ற டயரடி தண்ணீரை தீர்த்தமென ப்ரோஷ்ஷித்துக் கொண்டு அப்படியே முன்னேறி நாமும் கரை ஏறவேண்டும். இல்லையேல் அவருடைய சுற்றத்தார்களான மற்ற ரூட்காரர்களும் உங்களை நடுவீதியில் கட்டை போடவைத்து ஏறியேறி செல்வார்கள். இந்த சமயத்தில் எக்காரணம் கொண்டு கார் கண்ணாடிகளை திறவாது இருப்பது நன்று. இல்லையேல் புனித நன்னீராட்டு விழா உங்களுக்கு நிச்சயம்.

இவ்வளவு பாடுபட்டு நீந்திக் கரையேறி ஒருவாராக அலுவலகம் சென்றடையும் போது மதிய சாப்பாடு வேளை ஆகிவிடுகிறது. என்ன  ஆனால் என்ன, மழை கடலோடியும் திரவியம் தேடு.

பட உதவி: http://www.mustseeindia.com

Monday, August 16, 2010

இன்று தமிழக பிரபலத்தின் பிறந்தநாள்

தமிழ் நாட்டின் பிரபலம் ஒருவருக்கு இன்று பிறந்தநாள். நமது நிருபர் 'நேர்மை' நாராயணின் நேரடி பிறந்த நாள் ரிப்போர்ட்.

happybirthday

பிறந்த நாள் கொண்டாட்டம்
ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரே அதிர்வேட்டும் வானவேடிக்கையுமாக இருந்தது. காலையில் இருந்து சின்னஞ் சிறுசுகளில் இருந்து பல் போன பெருசுகள் வரை  மக்கள் வெள்ளம் அலைகடலென திரண்டு கியூவில் நின்று அவரை தரிசித்துவிட்டு வாழ்த்துப்பெற்று/சொல்லி  சென்றது. அந்த வழியாக ஒரு ஈ காக்கா அவர் இல்லம் தாண்டி பயணிக்கமுடியாமல் போக்குவரத்து தடைபட்டு அந்த ஏரியாவே அல்லோகலப்பட்டது. அனைத்து கோயில்களிலும் விசேஷ பிரார்த்தனைகளும், அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. அடையார் ஆனந்த பவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற முன்னணி இனிப்புக் பலகாரக்கடைகள் இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முற்றுகையிடப்பட்டு மொத்தக் கொள்முதல் செய்யப்பட்டு ஊருக்கே இனாமாக வழங்கப்பட்டது. காலையில் ஸ்நானம் செய்து பயபக்தியுடன் பெருமாள் பிரசாதம் போல் ஸ்ரீ கிருஷ்ணா மைசூர் பாக்கு கால் கிலோ சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்லும் ஆராவமுதன் "சார். நா இன்னிக்கி நினைச்சே பார்க்கலை. கால் கிலோ யார் சார் ஃப்ரீயா தருவா. அவர் பேரை சொல்லி வாங்கி குடுத்துட்டு போனா. அவர் நன்னா இருக்கணும். பகவான் அவருக்கு ஒரு குறையும் இல்லாமா வைக்கணும்" என்று கண்களில் நீர் தளும்ப நம்மிடம் கூறினார்.

அசம்பாவிதம்
அவர் வசிக்கும் தெருவின் கோடியில் "அகவை ---ல் அடியெடுத்து வைக்கும் அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்", "உடல் மண்ணுக்கு உயிர் உனக்கு" மற்றும் "எங்களின் காட்ஃபாதரே" போன்ற ஆளுயர கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவரிடம் ஆசி வாங்கும் கூட்டத்தின் தள்ளுமுள்ளு அதிகம் காரணமாக ஒருவரோடொருவர் முட்டி மோதி அந்த கட்அவுட்டுகள் சரியத்தொடங்கின. நல்லவேளையாக அங்கு ரோந்துப்பணியில் நின்றிருந்த ஸி.ஆர்.பி.எஃப் காவலர்கள் தாங்கிப்பிடித்து உதவிக்கரம் நீட்டினார்கள்.

கலை நிகழ்ச்சிகள் 
புலி வேஷம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கரகாட்டம் என்று அவரது சொந்த ஊரிலிருந்து வேன் பிடித்து வந்து ஒரு ஆட்டம் ஆடினார்கள். இதற்கென்று பிரத்தியேகமாக போடப்பட்டிருந்த சேர் மேல் ஏறிநின்று இதை இரண்டு மணிநேரம் வேடிக்கை பார்த்து ரசித்தார். அவ்வப்போது கையை அசைத்தும், சிரித்தும் தன்னுடைய முழு ஈடுபாட்டை காட்டினார். சினிமாக் கவிஞர் சிந்தன் இவரை வாயார புகழ்ந்து பாடி பரிசல் பெற்று சென்றார்.
விருந்து
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த அனைத்து மக்களுக்கும் தெருஒரத்தில் அகழி போன்று பள்ளங்கள் தோண்டி ஆளுயர அடுக்குகளில், பாத்திரங்களில் ஆஜானுபாகுவான சமையல்காரர்கள் விருந்து சமைத்தார்கள். அசைவப் பிரியர்களுக்காக இவர்கள் அறுத்த ஆடுகளின் சத்தம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.  ரத்த ஆறே ஓடியது. கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு காய்கறி லாரி திருப்பிவிடப்பட்டு சமையல் நடந்தது. சாப்பிடுவதற்கு பசியூட்டியாக கிரேட் கிரேட்டாக டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டன.

பரிசுகள்
பிறந்தநாள் பரிசாக ஆடு, கோழி போன்ற பலதரப்பட்ட ஜந்துக்களும் தரப்பட்டன. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அன்பர் ஒருவர் அங்கே அவர் எதிரே நின்று தலையை மொட்டை அடித்துக்கொள்ள ஆரம்பித்ததும் அங்கே சிலநேரம் பரபரப்பு நிலவியது. பக்கத்தில் இருந்த பந்தோபஸ்த்து அதிகாரிகள் அவரை அங்கு அப்புறப்படுத்தினார். பின்னர் விசாரித்ததில் அவர் கொப்பனாம்பட்டு கண்டராதித்தன் என்றும், சற்று மனநிலை சரி இல்லாதவர் என்றும் தெரியவந்தது.

விழா நிறைவு
வருகை தந்து சிறப்பித்த அனைத்து பொதுமக்களுக்கும் தன்னுடைய நன்றியை அந்தப் பிரபலம் தெரிவிக்க, பி.நாள் விழா இனிதே நிறைவுற்றது. பேட்டிக்காக நாம் அவரை நெருங்கியபோது பிறந்த நாள் வேலைப் பளு அதிகம் உள்ளதால் பின்னொருநாளில் சந்திக்கலாம் என்று அன்புடன் கூறி அன்பளிப்பு கொடுத்து வழியனுப்பிவைத்தார்.

எல்லாம் சரி... யாரு சார் அந்த பிரபலம் அப்படின்னு கேட்கறீங்களா..... கீழே உள்ள பாக்ஸ் உள்ளே மௌஸ் கொண்டு செலக்ட் செய்து பாருங்கள் தெரியும்.


ஹி.... ஹி... அது நான் தான். இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள்..


வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

பட உதவி: www.pagalguy.com

Friday, August 13, 2010

எல்லா ஃபோனும் ஃபோனல்ல....

pagerநாங்கள் எல்லோரும் மடியில் செங்கல் மாதிரி பேஜரை கட்டிக்கொண்டு திரிந்தபோது எங்களோடு வேலைபார்த்த ஒரு விஷயாதி அளப்பரை பேர்வழி ஒருவர் மட்டும் தான் ரோடோர போலீஸ்காரர்கள் சைவ வைணவ ஆச்சார்யர்கள் கையிலிருக்கும் தண்டம் போல் எப்போதும் பாலிதீன் கவர் மாட்டி வைத்திருக்கும் வாக்கி டாக்கி மாதிரி ஒன்றை தூக்கமுடியாமல் தூக்கி வந்து பந்தா விட்டுக் காட்டினார். எப்போதும் அதை சுமந்திருக்கும் கையை ஆட்டி ஆட்டி எல்லோருக்கும் அந்த ஃபோன் தெரிய பேசுவார்.  சில சமயங்களில் தூரத்தில் இருந்து பார்க்கும் போது செவென் ஹில்ஸ் கோவிந்தா கையில் இருக்கும் சங்கு போலவே தோன்றும் அந்த பீஸ். எப்போதும் கையிலேயே வைத்திருந்ததும் நாங்கள் "அண்ணே கை வீங்கி ஆப்பரேஷன் செய்யப் போறாங்க பார்த்துக்கோங்க... கொஞ்சம் அடக்கி வாசிங்க.." என்று பணிவன்புடன் சொன்னவுடன் ஒரு பெல்ட்டில் சொருகி முடிக்கும் பை வாங்கி அதில் போட்டு பத்திரமாக வைத்துக்கொண்டார். ஒரு நாள் அண்ணன் அவசரமாக ஆபிஸில் மாடிப்படி ஏறுகையில் அதன் வெயிட் தாங்காமல்  அது பெல்ட்டோடு அறுந்து விழுந்தது. பெல்ட் அறுந்தவுடன் ஃபோனை பிடிப்பதா அல்லது அவிழும் பேண்ட்டை பிடிப்பதா என்று தெரியாமல் திணறிவிட்டார் பாவம். அதற்க்கப்புறம் அதை பேண்ட் பையில் வைத்துப் பார்க்கும் விஷப்பரிட்சையை அவர் செய்து பார்க்கவில்லை. நாள்தோறும் அதை உள்ளங்கையிலேயே தாங்கி இருப்பதால், கை களைப்பு நீங்க அரை மணிக்கொருதரம் விரல்களை சொடுக்கு எடுத்துக்கொள்வார்.

அது ஒரு சீமன்ஸ் கம்பனியாரின் தயாரிப்பு. அதற்க்கு ஒரு கொம்பு வேறு இருக்கும். ஆண்டெனா. சட்டைபாக்கெட்டுக்கு மேல் அது துருத்திக்கொண்டு நின்று இவர் பெரிய ஆள் என்று காண்பிக்கும். ஃபோன் அரைக்கிலோ என்றால் அதன் சார்ஜர் ஒரு கிலோ.  இரண்டையும் தூக்கி வருவதற்கு ஒரு மஞ்சள் கலர் துணிப்பை தேவைப்படும். இதை ஆபிஸிற்கு கொண்டுவருவதே அவருக்கு நல்ல ஒரு தேகப்பயிற்சி.  ஜிம்முக்கு சென்று டம்பெல்ஸ் எல்லாம் தூக்கவே வேண்டாம்.  நான்கு கால்களுக்கு எடுத்து காதில் வைத்து பேசினால் போதும். உடல் களைத்து வயிற்றுக்கு பசி எடுத்துவிடும். எங்களுக்கெல்லாம் பேஜர் வந்தால் ஒரே பேஜாரு. எங்காவது டெலிபோன் பூத் பார்த்து அற்பசங்கைக்கு பேண்ட்டை பிடித்துக்கொண்டு ஒதுங்கும் அவசரத்தோடு ஓடுவோம். அவர் "கை"பேசி வைத்திருந்த சமயம் உள்ளே வரும் காலுக்கு கூட காசு கேட்டு  பில் போட்டு தீட்டினார்கள். அந்தகாலத்தில் அது ஒரு ஸ்டேடஸ் சிம்பல். அவருக்கு மட்டும் பேஜர் கொடுக்காமல் அந்த அலைபேசி நம்பரில் கூப்பிட்டு "ஒண்ணுமில்லை சும்மாதான்"  என்று அழும்பாக பேசி அவர் பர்ஸுக்கு வேட்டு வைப்போம்.

nokia 3310இந்த மாதிரியான ஃபோன் கூத்துக்கள் முடிந்து என் போன்ற தினக்கூலி சாமானியர்களும் மொபைல் வைத்துக்கொள்ளலாம், தயிர் சாதம் சாப்பிடுவோர் கூட தூக்குவதற்கு எளிதானது  என்ற நிலை வந்தபோது தான் என் மச்சினி என்னுடைய இந்த கலியுக அவதாரத்தை பாராட்டும் விதமாகவோ அல்லது அவளது அக்காவை நான் மணம் முடித்து சாதனை படைத்த நாளுக்கோ நோக்கியாவின் 3310 மொபைல் போன் வாங்கி பரிசளித்தாள். அதை இப்போது எங்காவது அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைத்திருக்கலாம். ஒன்னாவது படிக்கும் என் இளைய மகள் அந்த 3310 ஃபோனை  அக்கக்காக பிரித்து மொபைல் ஃபோன் ரிப்பேர் பயின்று கொண்டிருக்கிறாள். அதன் முதல் ஸ்க்ரீனில் பச்சை கருப்பு வெள்ளை கலர்களின் கலப்பில் ஒரு சிறிய கையை பெரிய கை பற்றிக்கொள்ள கூப்பிடும். இனிமேல் இதை உபயோகித்தால் என்போன்ற சிறியகைகள் கூட பெருங்கை போல ஆகலாம் என்பதன் உள்ளர்த்தம் நிறைந்த படம்தான் அது என்று நினைக்கிறேன்.

மடியில் கனம் இருந்ததால் வழியில் பயமில்லை. இரவில் தனியாக வரும்போது அதுதான் நம்முடைய லைசென்ஸ் இல்லா துப்பாக்கி. பாதுகாப்பு கருவி. யாராவது கிட்ட வந்து பயமுறுத்தினால் தெம்பாக  தூக்கி அடித்தால் எதிராளியின் கை கால்களில் பட்டால் நிச்சயம் ஃபராக்ச்சர் ஆகிவிடும்.  நெஞ்சில் பட்டால் ஆள் அவுட். ஃப்ரீயாக குடுத்தால் பினாயிலைக் கூட குடிக்கும் நாம் கிஃப்ட் ஆக வந்ததென்று அந்த ஃபோனை வாங்கி வைத்திருந்தது, தெம்புக்காக இரவில் ஒரு அரை டம்பளர் பால் கூடக் குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டேன்.  தானம் கொடுத்த ஃபோனை வெயிட் போட்டு பார்க்கக் கூடாதுதான். ஸாரி. ரொம்பவும் கருப்பு/வெள்ளை/பச்சை பார்த்து பார்த்து அந்த மூன்று கலர்களும் பழைய தமிழ் சாமிபடங்களில் கே.ஆர்.விஜயா பின்னால் தோன்றும் கலர்கள் போல் கண்களில் ஆடிக்கொண்டே இருந்ததால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு இன்னொரு நோக்கியா கைக்காசு போட்டு வாங்கினேன். இப்போது கூட எனக்கு அந்த மாடல் நம்பர் சொல்வது கொஞ்சம் கஷ்டம். முன்பெல்லாம் நம்பர் மட்டும் வைத்தவர்கள் இப்போது ஆல்பா நியூமரிக்கில் பெயர் சூட்டுகிறார்கள். அந்த ஃபோனில் கொஞ்சம் கலர் தெரியும், எடை கம்மி, பாக்கெட்டில் தைரியமாக வைத்துக்கொள்ளலாம், பாக்கெட் கிழியாது, தம்மாதூண்டு ஃப்ரிகுவன்சி சேர்த்து ஏதோ காது கொடுத்து கேட்கலாம் போல இருக்கும் சங்கீதம் பாட வைத்திருந்தார்கள்.

அதற்க்கப்புறம்தான் நாட்டில் எவ்வளவு ஃபோன்களடா ஒவ்வொன்றிலும் எவ்வளவு மாடல்களடா மடக்கி, நிமிர்த்தி, திறந்து, மூடி என்று பலவகைகளிலும் பேசும்படியாக. எவ்வளவோ மாடல்கள் ஃபோன் வந்தாலும் "அப்புறம்.. என்ன சாப்டாச்சா?" "பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாளா? தங்கமணி என்சாய்..." "சும்மாதான்.. போரடிக்குதுன்னு..." "பக்கத்து வீட்டு நீலு அந்த பேக்கரிக்காரனோட ஓடிப் போய்ட்டாளாமே" "மாமியாரை காசி பக்கம்  ஷேத்ராடம் அனுப்பிட்டேன். பதினஞ்சு நாளைக்கு கொசுத்தொல்லை இல்லை" "ஐயோ. அவன் சரியான போர். போனை எடுத்தா வைக்க மாட்டான்டா." என்று இது போன்ற பேச்சுக்கள் மட்டும் மாறவேயில்லை.

பட உதவி: www.electroschematics.com, www.robertandrews.com

Saturday, August 7, 2010

லார்டு லபக்குதாஸ்கள்

hotbossபெரிய பெரிய கார்பொரேட் கம்பனிகளில் உயர்ந்த நிலையில் இருக்கும் சில உயரதிகாரிகளின் போக்குகள் பார்க்க படுவித்தியாசமாக இருக்கும்.  உதாரணமாக, நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓடுவது போல நடந்து தங்களது சுறுசுறுப்பை காண்பிப்பார்கள். சாதாரண கடைநிலை ஊழியர்களுக்கு அவர் கடவுள் மாதிரி. பாதுகாப்பதில் இல்லை, தரிசனம் கொடுப்பதில். அவ்வளவு எளிதாக அவர்களை பார்க்கவோ, அவர்களிடம் பேசவோ முடியாது. கடிகாரத்தின் நொடிமுள்ளின் ஒவ்வொரு அசைவிற்கும் அவர்களுக்கு படி தரப்படுகிறது. இப்பூலோகத்தில் கர்ணனின் கவச குண்டலங்கள் போல் டை கோட்டுடன் உயரதிகாரியாகவே அவதாரம் எடுத்தவர்கள் அவர்கள். அதிசய அபூர்வ பிறவிகள். அலுவலக காரிடாரில் நடக்கும் பொழுது வேகமாக நேராகப் பார்த்துக் கொண்டே நடப்பார்கள். ஆனால் எதிரில் யாராவது வந்தால் அவர்களை பார்த்து புன்னகைக்கவோ, தலையாட்டவோ செய்ய மாட்டார்கள். 

இதுபோன்ற லார்டு லபக்குதாஸ்களின் பத்து பொது குணாதிசயங்கள் சிலவற்றை கீழ்காணுமாறு பார்ப்போம்.

1. ஒட்டுமொத்த அலுவலகத்தின் ஒரே சட்டாம்பிள்ளையான இவர்கள் தங்கள் நாற்சக்கர ரதத்தில் உள்ளே நுழைந்தவுடன், ராணுவ கொடி அணிவகுப்பு சமயத்தில் செய்வது போல காலை ஓங்கி தரையில் உதைத்து செக்யூரிட்டி சல்யூட் அடிப்பார். அந்த காலடி ஓசை ஏற்படுத்திய அதிர்ச்சியில்  ஐயா உள்ளே வருகிறார் என்று அனைத்து ஊழிய சமூகமும் அறிந்து தலை தாழ்த்தி வேலை செய்யும்.

2. கார் அலுவலக கட்டிடத்தின் முன்னே நின்றவுடன், ஒரு தடி ஆள், ஒரு பொடி ஆள் என்று பல வேலையாட்கள் சென்று ஒருவர் கதவையும், மற்றொருவர் அவர் தூக்க முடியாத நூறு இருநூறு கிராம் எடை கொண்ட ஒரு ஃபைலோ அல்லது இரண்டு மூன்று காகிதங்களையோ தங்கள் கையில் ஏந்திக்கொண்டு "வாராய்.. நீ வாராய்..." என்று வழிநெடுகிலும் பூ தூவி வரவேற்காத குறையாக உள்ளே அழைத்துச் செல்ல வேண்டும்.

3. உள்ளே அவர் அறைக்கு செல்லும் வழியெங்கும் நடப்பவர்கள் இருமருங்கிலும் ராஜாவை சேவித்து வழிவிடும் பிரஜைகள் போல ஒதுங்கி பவ்யமாக நின்று வழிவிட வேண்டும். அவர் நேராக நெஞ்சு நிமிர்த்தி தொண்ணூறு பாகையில் தலையை வைத்து வேர்க்க விருவிருக்க நடந்து அவர் அறைக்கு செல்வார். அப்போது யாரை பார்த்தும் (புன்னகை) பூக்கவோ, (தலையை) ஆட்டவோ மாட்டார். அப்படி ஆட்டி பூத்தால் அவரது நிலைக்கு அகவுரவம் வந்துவிடும் என்று சிந்தனாசிற்பியாக அலைபேசியை காதுக்கு கொடுத்து கணநேரம் கூட அலுவலக சிந்தனை இல்லாமல் இருக்க முடியாது போல "எஸ் .. யா.. ஓ.கே...  ஷ்யூர்... ஷ்யூர்.... டெஃபனட்லி.." என்று பல்வேறு வியாபார தந்திர வார்த்தைகள் உபயோகித்து பேசிக்கொண்டே காரிடார் கடப்பார்கள்.

4. அவரைச் சுமந்து வந்த காரை குறைந்தது நாலைந்து பேராவது ஒன்றுகூடி துடைத்து மொழுக வேண்டும். செல்வச்சீமான்கள் வீட்டு டாமி, ஜிம்மியை சோப்பு போட்டு  குளிப்பாட்டி சாம்பிராணி போடுவது போல, இரண்டு பேர் நாக்கால் நக்கி துடைக்க, இரண்டு பேர் உள்ளே வெளியே இருக்கும் அழுக்குகளை சோப்பு கொண்டு சுத்தமாக களைய வேண்டும். எப்போதும் அவருடைய க்ரவுண்ட் வாங்கிய தலை போல பள பள என்று கார் இருந்தால் தான் ஐயாவிற்கு பிடிக்கும்.

5. பின்சீட்டில் உட்கார்ந்து பயணித்த களைப்பு நீங்க அலுவலகம் வந்த உடன் ஆப்பிள் சாப்பிடுவார். சாப்பிட்ட ஆப்பிள் செரிமானம் ஆவதற்கு ஒருமுறை அலுவலகம் முழுவதும் சுற்றி வருவார். அவர் ஆபிஸ் வலம் வரும்பொழுது யாராவது வெட்டிப்பொழுது கழிப்பதாக தென்பட்டால் எதிர்க்கட்சியை திட்டும் அரசியல்வாதியாகிவிடுவார். சும்மா புகுந்து லெப்ட் ரைட் வாங்கிவிடுவார். நேற்று நேராக வை என்று சொன்ன டேபிளை இன்று ஒருக்களித்து வை என்று கீழ்ப்பாக்கத்திலிருந்து தப்பி வந்தது போல படுத்துவார். இதுபோல வியத்தகு மாறுதல்கள் செய்து விட்டு அனுதினமும் அவர் கேட்கும் "இது தானே நல்லா இருக்கு..." என்னும் பதத்திர்க்கு இரண்டு பேர் அருகில் நின்று "ஆமாம் ஆமாம்" என்று அவர் மனம் மகிழும் வண்ணம் ஆடவேண்டும். அதை அவர் சபாஷ் போட்டு ரசிக்க வேண்டும்.

6. இப்படி ஒரு சுற்று முடிந்தவுடன் இப்போது ஐயாவிற்கு வருவது ஒரு தேநீர் ஒய்வு. எல்லோரும் பருகும் தேநீர் அவருக்கு பிடிக்காது. ஆகையால் அவருடைய பிரத்தியேக பாண்ட்ரியில் தயாரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா ஸ்பெஷல் டீ பரிமாறப்படும். டீ குடித்தபின் அவருடைய மூடுக்கு ஏற்ப ஒன்றிரண்டு மின்னஞ்சல்களுக்கு பதில் போடுவார். அப்புறம் அவருடைய சொந்தபந்தங்களின், சுற்றங்களின் மின் கடிதங்கள், ஜோக்குகள் இதுபோல் இன்னபிற அதிமுக்கிய காரியங்களை கர்மசிரத்தையுடனும் ஆத்மசுத்தியுடனும் செய்து முடிப்பார்.

7. ஒருவழியாக மதிய சாப்பாட்டு வேளை வந்து இடை மறித்து அவருடைய முக்கிய பல அலுவல்களை பிரேக் போட்டு நிப்பாட்டும். பியூன் வந்து இலையோ, தட்டோ போட்டு உணவு பதார்த்தங்களை பரிமாற்ற அண்ணன் வயறார பசியாருவார். பசிக்காகவும், ருசிக்காவும் மூக்கிலிருந்து ஒரு பருக்கை வர தின்று தீர்த்துவிட்டு உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு, தலைவனுக்கு இருக்காதா. கொஞ்சம் ஒரு power nap எடுத்துக்கொள்வார். 

8. அலுவலகத்தில் நடைபெறும் விளையாட்டு விழாக்களில் அவர் பங்குபெற்றால் மொத்த ஆபிஸ் ஜனமும் கூடி நின்று அவர் பின்னால் கும்மி அடிக்க வேண்டும். "ஐயா அப்படி அடிச்சாரு.. லெக் சைடுல காலைத் தூக்கி அடிக்கும் போது டெண்டுல்கர் மாதிரியே இருந்துதுப்பா..." என்று கரகாட்டக்காரன் செந்தில் காசு கொடுத்து கவுண்டமணி காதில் விழுவதுபோல சொல்லச் சொன்னதுபோல அவர் காதுபட பேசவேண்டும். அவர் உள்ளம்குளிர்ந்து அடுத்த முறை பாராட்டு பத்திரம் படித்தவரை நன்கு கவனிப்பார்.

9. ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் மூன்று நான்கு நொடிகள் நேரம் கொடுத்து ஸ்லோ மோஷனில் பேசுவார். அப்படி அவர் பேசுவது மிகவும் அதிமுக்கிய காரியம் என்றும் அதற்க்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும் அர்த்தம். அனைத்து விஷயங்களையும் பரிவர்த்தனை செய்ய யோசித்து மூளையை கசக்கி பிழிந்து அவர் தரும் அருட்பாடங்கள் அனைத்தும் பொன்னெழுத்தில் பொறித்து பெட்டகமாக பாதுகாக்கப்படவேண்டும். அவ்வளவு கருத்து செறிவுள்ள ஐடியாக்கள்.

10. மிகவும் முக்கியமாக, எழுதப்படாத விதி, என்னவென்றால் ஐயாவை யாரும் கைபேசியிலோ அல்லது நில போனிலோ கூப்பிட்டு பேசக்கூடாது. வெற்றிலை, பாக்கு பழத்துடன் கையில் தாம்பூலத் தட்டோடு, நேரே சென்று, அவரது வாயில்படியில் இருக்கும் சேரிலோ, சோபாவிலோ அல்லது ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து, அவர் தன்னுடைய அனைத்து அன்றாட அலுவல்களை பார்த்து, நேரமிருப்பின், நமக்கு உத்தரவு தருவார். உத்தரவு கிடைத்தவுடன், அவர் உட்கார் என்றால் உட்கார்ந்து, நில் என்றால் நின்று நம்முடைய வேலையை முடித்துக்கொள்ள வேண்டும். 

அடியில் காணும் நௌக்ரி விளம்பரம் ஒரு தூக்கலான ஒன்று.


மேலே குறிப்பிட்டது கடலில் ஒரு துளி போல. மக்கள் தங்கள் அனுபவங்களை, அல்லது சந்திக்க நேரிட்டதை பின்னூட்டமாக தெரிவித்து மகிழலாம். நன்றி.

பட உதவி: http://www.corbisimages.com

Thursday, August 5, 2010

காட்டு யுத்தம்

ஒரு ஏரியாப் பெண்ணை இன்னொரு ஏரியாப் பையன் சைட் அடித்தான் என்பதற்காக ஒரு கும்பலாக திரண்டு "டேய். என்ன தைரியம்டா அவனுக்கு.. நம்ம ஏரியாப் பொண்ணை சைட் அடிக்கறான். ஃபாலோ பண்றான். துரத்தி வெட்டுங்கடா.." என்று கூச்சலிட்டு ஒரு சேனையாய் பறந்து என்னமோ அவர்கள் பகுதிப் பெண்களை அவர்கள்தான் சைட் அடிக்க லைசென்ஸ் எடுத்தது போலவும் மற்றவர்கள் செய்தால் அது தெய்வக் குத்தம் போலவும் பாவித்து பாய்ந்து தாக்குவதை ஊர்ப்புறங்களில் நகர்ப்புறங்களில் என்று எங்கும் வாடிக்கையாக நடப்பதை பார்த்திருக்கிறோம். நிஜமாகவே அப்பெண்களை பெற்றவர்கள் அதே பேட்டையில் இருக்கும் சைட் அடிச்சான் குஞ்சுகளை தான் வெறித்து பார்ப்பார்கள். அவர்கள் குணாதிசயங்கள் தெரிந்ததால் அவ்வளவு பயம். எது எப்படியோ, இந்த லுக் விடும் மேட்டரில் வயசுப் பெண்களின் இசட் பிரிவு காவலர்கள் தான் இந்த கட்டிளம் காளைகள். பெற்றோர் தைரியமாக இருக்கலாம். நோ ஹார்ம்.

மே தின கபடி விளையாட்டு காலிழுப்பு பிரச்சினை, பொன்னுராசு தங்கச்சியை பழித்த தன்ராசு, தாறுமாறாக வரப்பு வெட்டிய வரதராசன், டவுனில் பருத்திவீரன் கடைசி ஆட்டம் முடிந்து திரும்புகையில் பஸ் நிறுத்தாமல் போன டிரைவர் கண்ணையன், அக்கரை மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு ஐந்து பத்து டொனேஷன் கொடுக்காமல் லொட்டை பேசிய குட்டை பாண்டி, குட்டிச்சுவரில் உட்கார்ந்திருக்கும் போது வெட்டி ஆபீசர் என்று கிண்டலடித்த சைக்கிள் கடை சேகர் என்று சகலரையும் ஒரு கை பார்க்கும் நேரம் ஊர்த் திருவிழாக்கள். ஒத்தை ஆளாய் இருக்கும்போது சாதுவாக இருக்கும் மக்கள் இரண்டு பேர் செட்டு சேர்ந்ததும் பிடரி மயிர் கிளப்பிக் கொண்டு திரிவது இயல்பு. கரகாட்டமும், மயிலாட்டம் ஒயிலாட்டங்களும் நிறைந்த வீதிகளில் கூட்டத்தின் ஊடே அணி பிரிந்து சென்று துரத்தி துரத்தி தாக்குதல் நடைபெறும். திருவிழா தேதிகள் தான் சண்டைக்கான கால அட்டவனை போல தேதி வாரியாக பழி தீர்த்துக் கொள்வார்கள்.

நாட்டுப்புற சண்டைகள் இதுபோல இருக்க, காட்டுப்புற சண்டை பற்றிய ஒரு வீடியோ கிடைத்தது. இதை சண்டை என்று சொல்வதைவிட யுத்தம் என்று சொல்வது தான் சாலச் சிறந்தது. தென் ஆப்பிரிக்க சஃபாரி என்ற பிரபலமான சுற்றுலாவில் பயணிகளை ஜாக்கிரதையாக ஒரு ஜீப்பில் உட்காரவைத்து மிருகங்களுக்கு மத்தியில் வண்டி நிறுத்து பூச்சாண்டி காட்டி பயமகிழ்ச்சி காட்டுவார்கள். க்ருகர் என்று இடத்தில் அப்படி ஒரு பயணத்தின்போது நடந்த மோது போர் தான் இந்தக் காட்சி. ஹாலிவுட் படங்கள் போல துரத்தல்களும், உருலல்களும் நிறைந்தது.

காட்டெருமைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஒரு ஆற்றங்கரை ஓரம் சென்று கொண்டிருக்கிறது. ஒரு அணியாக நாலைந்து சிங்கங்கள் பதுங்கிப் பாயத் தயாராக உட்கார்ந்திருந்தது. கிட்டத்தில் வந்துதான் இதைப் பார்த்த காட்டெருமைகள் வாலைத் தூக்கிக்கொண்டு உயிர் பிழைக்க ஓடுகிறது. சிங்கங்களின் இந்த துரத்தலில் ஒரு குட்டி காட்டெருமை மாட்டிகொண்டது. நான்கு சிங்கம் அதை இழுத்து ஆற்றில் போட்டு குதற ஆரம்பிக்கிறது. ஆற்றோரமாக இருந்ததால், கஜேந்திர மோக்ஷத்தின் போது கஜேந்திரனின் காலை இழுத்தது போல ஒரு முதலை அந்த குட்டி காட்டெருமையை கவ்வி உள்ளே இழுக்கிறது. ஒரு குழு முயற்சியாக அந்த சிங்கங்கள் காட்டெருமையை இழுத்துக் கொண்டு, திரும்பினால்......... ஓடிய எல்லா எருமையும் ஒரு அணியாய் திரண்டு ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்காட்டி சிங்கங்களை முட்டித் துரத்தும் காட்சி, ரசிக்க வேண்டிய ஒன்று. தைரியமாக முழு வீடியோவை  பார்க்கலாம்.  அகோரமாக எதுவும் இருக்காது.


ஆறறிவு படைத்த, விஞ்ஞான முதிர்ச்சி அடைந்த, மனித ஜென்மங்களில் எட்டப்பன்கள் பலர் இருக்கும் போது, ஐந்தறிவு படைத்த மிருகம், "எருமை மாடே" என்று நாம் வைவதர்க்கு பயன்படும் எமனேறும் வாகனம், தனது எருமைக் குடும்பத்தில் மாட்டிக்கொண்ட ஒரு கன்றுக்காக, அனைவரும் திரண்டு நின்று சிங்கத்தை எதிர்க்க துணிந்தார்கள். விரட்டி வெற்றியும் அடைந்தார்கள். இத்தகைய ஒன்று திரளும் உணர்ச்சி நமக்கு ஒரு பத்து சதவீதம் இருந்தாலே போதும். எதிலும் ஜெயம் உண்டாகும்.

பட உதவி: http://www.pictures-of-cats.org/

Wednesday, August 4, 2010

வானவேடிக்கை

fireworksதீபாவளிக்கு ஒரு மாதம் முன்னரே முக்குக் கடை கற்பகம் ஸ்டோர்சில் ஒரு ரூபாய்க்கு ஒத்தை வெடி வாங்கி வெடிப்போம். ஒன்று ஒன்றாக, ரோட்டில், விட்டு படிக்கட்டில், வாசலோரத்தில் இருக்கும் மின்கம்ப ஓட்டையில், ஒதியமரப் பொந்துகளில், கொட்டாங்குச்சியின் கண்ணில் துளை போட்டு அதில் என்று சகல இடத்திலும் வைத்து வெடிப்பது வழக்கம். சிறு பிராயத்தில் சரம் போன்ற வெடிகளில் அவ்வளவு நாட்டம் இல்லை. ஒன்று விலை அதிகம், மற்றொன்று ஒரே நேரத்தில் அனைத்து வெடிகளும் வெடித்து தீர்ந்து விடும். அப்புறம் யார் வெடிப்பதையாவது பார்த்துக் கொண்டு அக்கடா என்று உட்கார்ந்திருக்க வேண்டும்.

அப்புறம் கொஞ்சம் வயது ஏறஏற ஒத்தை வெடியிலிருந்து ரெட்போர்ட் செங்கோட்டா சரம், 1000 மற்றும் 2000  வாலாக்கள் என்று ஒரே வெடிச்சர மழையில் நனைந்தோம். யார் விட்டு வாசலில் வெடித்த வெடிகளின் குப்பை நிறைய இருக்கிறதோ அவரே அந்த ஏரியாவின் பெருமைக்குரியவர். சாலையில் வலதும் இடதும் செல்லும் பேருந்துகள் மற்றும் லாரிகள் வெடிக்குப்பைகளை வீடு மாற்றி வீடு புரட்டி போடும். நாம் வெடித்த குப்பை அடுத்தவன் வீட்டிற்கு போகும்போது மனசு விட்டுப்போய்விடும். வீட்டு வாசலில் நிறைய குப்பை சேர வேண்டும் என்பதற்காக நண்பர்கள் சிலர் உலக்கை வெடி என்று ஒன்று வாங்கி வந்து வெடிப்பர். ஒரு வெடியில் ஒரு வண்டி குப்பை வரும். அதிலும் சில துரதிர்ஷ்டசாலிகள் வெடிப்பது "புஸ்" ஆகி அப்படியே செக்கொலக்கை மாதிரி அப்படி நடுரோட்டில் நிற்கும். எங்கயாவது வெடித்து குப்பை நிறைய வந்துவிடப் போகிறதே என்று வெடியை புட்பால் ஆடி தள்ளி விடுவர். 

ராஜகோபால சுவாமி கோயில் திருவிழாக்களில் வெட்டுங்குதிரை வாகனம் அன்று வானவேடிக்கை உண்டு. வெட்டுங்குதிரை மண்டகப்படிதாரர்கள் வஞ்சனம் இல்லாமல் வான் பட்டாசுகள் வாங்கித் தந்து ஒரு ஐந்து பேரை பிடித்து நிறுத்து, ஒவ்வொன்றாக மேலே வீசி எறிந்து வேடிக்கை காண்பிப்பார்கள். குளக்கரையில் நின்று அவர்கள் மேலெறிந்து வீசுவதும், அக்கரையில் நின்று நாம் வேடிக்கை பார்ப்பதும் ஒரு சுகானுபவம். கடையில் பாராசூட் என்று ஒன்று விடுவார்கள். அது மிக உயரத்தில் சென்று ஒரு குடை போல கலராக விரிந்து, ஆடி ஆடி கொஞ்சம் கொஞ்சமாக அணையும்.

மேற்கண்ட பாராக்களில் சொன்னது நம்மோட தீபாவளி ராமாயணம். இங்கே 15000 வெடிகளை ஒன்றாக பிடித்து கட்டி, ஒரு பீச்சோரத்தில் வண்டி கட்டி நிறுத்தி பற்ற வைக்கிறார்கள். பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. இரண்டு நிமிடத்தில் அவ்வளவு காசையும் கரியாக்கிவிட்டார்கள்.




பட உதவி: epicfireworks.com

Wednesday, July 28, 2010

ஆடி அடங்கும் பூமியடா...

"பூமி சுற்றுவது நின்று விட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை, புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் பெண் வாழ்வில் எந்நாளும் ஏற்றங்கள் இல்லை" இது நம்ம வைரமுத்து பம்பாய் படத்துக்காக எழுதிய "குச்சி குச்சி ராக்கம்மா" பாடல். இவர் எழுதியதை ஒருவர் கணினி கொண்டு சுற்றும் பூமியை நிறுத்திப் பார்த்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிள்ளார்.

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவை தலைமையகமாகக் கொண்ட Esri என்ற புவியியல் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் புவித் தகவல் தொழில்நுட்பங்கள் நிறுவனத்தில் அலுவலராக குப்பை கொட்டும் Witold Fraczek (தமிழில் எழுதுவதற்கு கொஞ்சமும் முயலவில்லை! மனிதர் மெத்த படித்திருக்கிறார்) என்பவர் ஜாக்ராபிக் இன்போர்மஷன் சிஸ்டம் துணை கொண்டு சுற்றும் பூமி தனக்கு தானே சுற்றுவதை ஒரு நன்னாளில்(?) நிறுத்திக்கொண்டு விட்டால் என்னென்ன மாற்றங்கள் இங்கு நிகழும் என்று விவரிக்கிறார். நமது தூக்கத்தை கெடுக்கும் பல அதிசய அறிய தகவல்கள் அவரது இந்த வித்தியாசமான ஆராய்ச்சியின் முடிவு. இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் முன்னரே "இதுதான் நம்முடைய எதிர் காலமல்ல, இது ஒரு அறிவியல் புனைவும் அல்ல, அண்டம் அபாண்டமாக ஒரு நாள் அப்படியே நின்றுவிட்டால் என்ற கற்பனையை ஒரு GIS-ன் திறன் கொண்டு செய்து பார்த்ததின் விளைவுகள் தான் இக்கட்டுரையில்" என்கிறார். ArcGIS என்பதன் வழியாக பூமியை இவர் நிறுத்திப் பார்த்தது கண்டுபிடித்ததை என்னவென்று ஒரு அறிவிலியின் (Lay Man Point Of View) பார்வையில் இருந்து ஒரு சில துளிகள்....

பூமி தன்னைத் தானே சுற்றி வரும்பொழுது அதற்க்கு ஒரு மையவிலக்கு விசை இருக்கும். ஆங்கிலத்தில் Centrifugal Force என்று பெயர். இந்த மைய விலக்கு விசை தான் நம் அனைவரையும் மற்றும் நம் வீடு, நாடு, நகரம் எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில்  இருக்குமாறு இப்புவியில் அப்படியே கட்டிபோட்டு இருக்கிறது. சமுத்திரங்களின் மட்டமானது நம்முடைய இப்புவியின் ஈர்ப்பு விசை மற்றும் இந்த மையவிலக்கு விசை என்ற இந்த இரண்டோடும் மிகவும் நெருக்கமான தொடர்புடையது. இந்தப் பூமி சுற்றுவதால், மையவிலக்கு விசை ஏற்படுவதால் இந்தக் கடல் மட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 சில பில்லியன் வருடங்கள் சுற்றிய பிறகு, கோள (sphere) வடிவாக இருந்த இப்புவி, சற்றே தட்டைக்கோள(ellipsoidal) வடிவிற்கு உருமாறியிருக்கிறது. இதன் விளைவாக வடதென் துருவங்களை காட்டிலும் பூமத்தியரேகை பகுதிகளில் புவியின் மைய நிறை (Center of Mass) அதிகமாக இருக்கிறது. துருவங்களைவிட பூமத்திய ரேகைப் பகுதிகளில் பூமியின் மைய நிறை கடல் மட்டத்தைவிட 21.4 கி.மி அதிகம் உள்ளது.

பூமி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றுவதை நிறுத்தி விட்டு, சூரியனை அதனுடைய அச்சிலும், அதே சாய்மானத்திலும் சுற்றிவந்தால் என்ன ஆகும்?  வருடத்தின் கால அளவு இப்போது உள்ளது போல 365 நாட்களாக இருந்தாலும்,  ஒரு நாள் ஒரு பொழுது ஒரு வருடம் என்ற வித்தியாசமே இல்லாமல் ஒரு வருடம் நீ......ண்டு இருக்கும் என்கிறார். இரவே இல்லை என்றால், கவிஞர்கள் எப்படி காதல் கவிதை எழுதுவார்களோ? ஆந்தைகள் எப்போது விழிக்குமோ? கரண்ட் செலவு மிச்சம் தான் ஆனால் வெய்யில் கொளுத்துமா என்று தெரியவில்லை. ஒரு வருடம் முழுவதும் ஆபிசில் இருக்க வேண்டும். கொடுமையடா சாமி.

தட்ப வெப்ப நிலைகளும், பருவ காலங்களும் தடம் மாறிப் புரண்டு போகும் என்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பூமியை ஒரு நிலை கொள்ள விடாமல் சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்படும். பூமியின் புவி ஈர்ப்பு விசை மட்டுமே கடலின் எல்லைகளை அதற்க்கு மேல் மீறி நிலப் பகுதிக்கு வரவிடாமல் தடுக்கும் அரணாக இருக்கும்.
lands2

அப்புறம், இந்தப் புவியின் சுற்று நின்ற நிலைமையால், கடல்கள் துருவங்களுக்கு நகர ஆரம்பித்து பூமத்திய ரேகை பகுதியில் இருக்கும் கடல் பரப்புகளை நிலம் கொண்டு நிரப்ப ஆரம்பிக்கும். துபாய், அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர்  போன்ற நாடுகளுக்கு தரை வழிப் போக்குவரத்து ஆரம்பித்து நம்மாட்கள் வால்வோ பஸ் விடுவார்கள். இருபது நாள் உல்லாச சுற்றுலா சொகுசு பயண பஸ் விட்டு பன்னாட்டு தரைவழி டூர் கூட ஏற்ப்பாடு செய்யப்படும். எவர் கண்டார்? நினைக்கவே நெஞ்சு ஆச்சர்யத்தால் மூழ்குகிறது அல்லவா? தற்போது இருக்கும் கடல்கள் இரு துருவத்திலும் சேர்ந்து இந்த புவிக்கே இரண்டே இரண்டு சமுத்திரங்களை உருவாக்கிவிடும். சென்னைக்கு மெரீனா இருக்காது, தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் வாங்கி திங்க முடியாது.

இந்த பூமி தன்னை சுற்றுதலின் வேகக்குறைவு காரணமாக, நம் புவியின் அணுக்கடிகாரத்தில் ஒரு நொடியை அவ்வப்பது சேர்த்து நாட்களின் அளவை சரிசெய்து கொண்டே வருகிறோம். இந்த நொடிக்கு பெயர் லீப் நொடி(Leap Second). நிறைய அறிவியல் ஆராச்சியாளர்கள் நம்முடைய பகல் பொழுது நீண்டு கொண்டே வருவதை உறுதிபட தெரிவிக்கிறார்கள். நானூறு மில்லியன் வருடங்களுக்கு முன்பு, நாற்பது மடங்கு அதிகமாக அல்லது வேகமாக சுற்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இந்தப் புவியின் சுற்று வேகத்தை பொறுத்துதான் அதனுடைய வடிவமும், சமுத்திரங்களின் மட்டங்களும், அளவுகளும் இருக்கின்றன.

இப்போதைய குறையும் வேகத்தின்படி, இந்தப் புவி தன்னுடைய சுழலும் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னமும் குறைந்தது நான்கு பில்லியன் வருடங்களாவது பிடிக்கும். ஆகையால் அதைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தது ஆக வேண்டிய காரியத்தை பாருங்கள் என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.

மேலதிகத் தகவல்களுக்கு: http://www.esri.com/news/arcuser/0610/nospin.html

Tuesday, July 27, 2010

அஞ்சாநெஞ்சன் ஜூலியன் அசாஞ்

julian2006 - ல் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் (www.wikileaks.org) என்ற இணைய தளத்தின் டைரக்டர் ஜூலியன் அசாஞ் ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர். இந்த விக்கி கசிவு தளத்தில் இதற்க்கு முன்னர் கென்யா நாட்டின் முன்னாள் தலைவர் டானியல் அரப் மோய் அவர்களின் சொத்துக்குவிப்பு மற்றும் அவரது குடும்ப அன்பர்களின் அட்டகாசங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.  இது தி கார்டியன் பத்திரிக்கையில் 2007-ம் வருடம் வெளிவந்தது. இம்முறை இந்தக் கசிவுத் தாக்குதலுக்கு ஆளானோர் பெரிய இடம் ஆகையால் இந்த உலகமே ஜூலியன் அசாஞ் பக்கம் திரும்பியிருக்கிறது. 2004-09 வரை அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் அடித்த லூட்டியை ஒன்று விடமால் 92,000 ஆவணங்களில் வரிசைக்கிரமமாக ஏற்றி பாரில் உள்ளோர் பார்வைக்கு விட்டிருக்கிறது. பெண்டகன் கட்டிடம் தீ பிடித்தாற்போல் சூட்டோடும், பரபரப்போடும் இந்த பத்த வைத்த ஆளை பிடிக்க தீவிர முனைப்போடு ஈடுபட்டிருக்கிறது. பராக் ஒபாமா இது ஒரு தேசத்தின் பாதுகாப்பிற்க்கு வைக்கும் ஆப்பு என்று வர்ணித்துள்ளார். ஆப்கனில் சாதாரண குடிமக்கள் மீது நடத்திய தாக்குதல்களின் வீடியோ காட்சி உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிட உள்ளாதாக அஞ்சாநெஞ்சன் தெரிவித்துள்ளார்.  


2007-ல் தீவிரவாதிகள் அல்லது ஊடுருவல்காரர்கள்  என்று நினைத்து ஆப்கன் போலீசார் மீதே வான்வழித்  தாக்குதல் நடத்தி கொன்றது போன்ற அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களின் குறிப்புகள் கூட இதில் அடங்கியுள்ளது.  எந்த நாடோ எந்த ஊரோ எந்தப் பாவமும் அறியாத அப்பாவி மக்கள் பாவிகளால் வதைபடுவதும், கொலையாவதும் தடுக்கவேண்டிய தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதானே?

உலகில் உள்ள ஒட்டு மொத்த பத்திரிகை சமுதாயம் செய்ய மறுப்பதை, மறைப்பதை, தான் செய்வதாக மார் தட்டி ஆரம்பித்த ஜுலியனின் இந்த கீழ்காணும் பேட்டி அமெரிக்க பத்திரிக்கையாளர் க்றிஸ் ஆண்டேர்சனுக்கு ஜூலை 19-ம் தேதி அளித்தது. மேலும் தனக்கு இதுபோன்ற அத்துமீறல்களை தெரிவிப்பதற்க்கும், அநியாய அக்கிரமங்களை எதிர்த்து சங்கு ஊதுவதற்கும் நிறைய பேர் இருப்பதாகவும், அவர்கள் இணையம் வழியாக மிகவும் பத்திரமாக தனக்கு ஆவணங்களை சேர்ப்பிக்க ஏதுவாக சங்கேத பாஷையில் குறியீடாக்கி ஏற்றவும் அதை சகல ஜாக்கிரதையாக தரவிறக்கம் செய்யவும் வசதிகளை ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டார் ஜூலியன். 

இந்தப் பேட்டியின் இடையிடையே  சில முக்கியமான விஷயங்களை கசிவாக அம்பலப்படுத்தியதை போட்டுக் காண்பிக்கிறார்கள். முக்கியமாக இராக் போர் நேரத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாக்தாத் நகரில் சாலையில் நின்று பெசிக்கொண்டிருப்போரை வம்படியாக பொழுதுபோகாமல் துப்பாக்கியை இடது புற தோளிலிருந்து வலது புற தோளுக்கு சுட்டுக்கொண்டே மாற்றுவது போல, தீபாவளி துப்பாக்கி கொண்டு சுடுவது போன்ற செயலை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியது ஒரு துணிச்சலான அசாத்தியப் பணி,அந்த காட்சியும் இந்த பேட்டி வீடியோவில் உண்டு. 

அந்தப் பேட்டி கீழே..



நம்ம நாடு இவர்களிடம் என்றைக்கு கசியுமோ? எப்படி கசியுமோ? ஜூலியன் கூறுவது போல Whistle Blowers நம்ம ஊரில் இல்லையா?
 
க்றிஸ் ஆண்டர்சன் இந்தப் பேட்டியை நிறைவு செய்யும் தருவாயில் சொன்னதை ஒரு முறை நம் சார்பாக நாமும் ஜுலியனுக்கு சொல்வோம், "ஜாக்கிரதை ஜூலியன்!".

ஆப்கன் வார் டைரி: http://wardiary.wikileaks.com
Twitter முகவரி: http://twitter.com/wikileaks
 பட உதவி: 2012changesarenow.blogspot.com

Monday, July 26, 2010

மீசைகள் பலவிதம்

நம்ம ஏரியாவில் சைக்கிள் வீலுக்கு பெண்டு எடுக்கும், பஞ்சர் ஒட்டும் கடை வைத்திருக்கும் வேலு ஒரு கருப்பு புல்லேட்டில் "டம் டம் டம்" என்று வந்து தான் கடை திறப்பார். புஜங்கள் தெரிய கை மடித்த வெள்ளை சர்ட்டும், ஒரு காக்கி பேண்டும் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து அந்த என்பீல்டில் வரும் பொழுது நம்ம பேட்டைக்கு வந்திருக்கும் புது சப் இன்ஸ்பெக்டர் என்று தோன்றும். எல்லாவற்றையும்விட தூக்கலாக இருப்பது அவர் நறுநெய் தடவி வளர்க்கும் ஒரு காட்டான் மீசை. யாராவது புது ஆள் தெருவிற்கு வந்தால், வேலு வந்திறங்கும் தோரனையை பார்த்தவுடன் சல்யூட் அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை. அப்படி ஒரு களை அந்த மீசையால் வந்தது வேலுவிற்க்கு. 

தி.நகர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாசலில் காவல் பணியில் ஈடுபடும் அந்த அரை அடி நீல மீசைக்காரை பார்த்து காவலர்களுக்கே வெட்கம் வரும். அவ்வளவு பெரிய மீசை, கேஷுவலாக அவரிடம் விசாரித்த போது நன்றாக நிமிர்ந்து நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அவர் மீசை வளர்ப்பில் ஈடுபட்டது பற்றி விலாவாரியாக பேசுவதற்கு முற்ப்பட்டபோது நாம் அங்கிருந்து எஸ்கேப். அருகில் சென்று பார்த்த நமக்கே சற்று உதறல் எடுத்துவிட்டது. 

கல்லூரி காலங்களில் நாங்கள் பயணிக்கும் வாடிக்கையான பேருந்தில் வரும் டிரைவர் அச்சு அசப்பில் ஊர் எல்லையில் காவல் காக்கும் வீரனார் மாதிரியே தோற்றமளிப்பார். உடற்கட்டிலும் கூட.  ஒரு நாள் கூட அவரது மீசை தொங்கியதே கிடையாது. வீட்டு மின்சாரத்திற்கு கரண்டு கம்பத்தில் இருந்து ஒயர் எடுத்து கட்டும்போது ஸ்டே வயர் கொடுத்து கட்டுவோம். அது கூட ஓரிரு மாதங்களில் தழைந்து கொடுத்து விடும். ஆனால் நம்ம டிரைவர் அண்ணன் மீசை கீழே இரும்பில் வளைத்து கம்பி கட்டி நிற்க வைத்தார் போல அப்படியே ஸ்ட்ராங் ஆக நிற்கும். மீசை அன்னிக்கு டூட்டிக்கு வரவில்லை என்றால் நமது மனசு தொங்கி விடும். அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி முளைக்க தொடங்கிய காலத்தில் அவரது மீசை அழகில் மயங்கி "மீசை டிரைவர் ஆசை மன்றம்" என்று ஒரு ரசிகர் மன்றமே தொடங்க உத்தேசித்து இருந்தோம்.  அந்த மீசையுடன் ஸ்டீரிங் பிட்த்தால் நமக்கே ஒரு தெம்பு வரும். ஆனால் பேசினால் அவ்வளவு தங்கம். இளகிய மனசு டிரைவருக்கு.

நவீன கால இலக்கியங்களுக்கு வித்தாக, சுதந்திர தாகத்திற்கு கவிதை தண்ணீர் ஊற்றி வளர்த்த, முண்டாசுக் கவியின் மீசை ஒரு தனி ரகம். இந்தியா ஆங்கிலேய அடிமைத் தனத்தில் ஊறிக் கிடந்த அந்தக் காலத்தில் புரட்சிகரமான மீசை பாரதியுடையது. ஒரு குங்குமப் பொட்டும் அந்த உதட்டு மேல் மேல்நோக்கி நிற்கும் கரு நிற மீசை ஒன்றுமே போதும் பாரதியின் அடையாளத்திற்கு. அதை மிக அழகாக வரைந்தவர் எழுத்தாளர் ஞானி. பேட்டன்ட் வாங்காததால் எல்லோரும் உபயோகிக்கிறார்கள். பரவாயில்லை, அது கூட தமிழுக்கு ஆற்றும் தொண்டுதான்.

தமிழர்களுக்கு மீசை தான் ஆண்மையின் அடையாளம். மீசை இல்லாமல் இருந்தால் பொம்பளை மாதிரி இருக்கான் என்று தூற்றுவார்கள். அப்பாஸ், குணால் என்று சுத்தமாக மழித்த நடிகர்களை களத்திலிருந்து வெளியே எறிந்து விட்டார்கள். ரிடயர்ட் ஆன போலீஸ் அதிகாரி தேவாரம், சர்வீசில் இருக்கும் சைலேந்திர பாபு, வி.சி.கவின் தொல்.திருமா, முன்னால் அ.தி.மு.க தற்போது தி.மு.கவில் கழகப் பணியாற்றும் KKSSR ராமச்சந்திரன், முன்னால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பூன் மற்றும் மேர்வ் ஹுக்ஸ், என்று வெட்டரிவாள் மீசைக்காரர்கள் நம்மைச் சுற்றி ஏராளம். ஆனால், நாம் கணினியில் உபயோகப்படுத்தும் font ஸ்டைல்களை வைத்து மீசை வரைந்து ஒரு ரகளை செய்திருக்கிறார்கள் சுவாரஸ்யம் மிகுந்த சில கலாட்டாக்காரர்கள். அதைப் பிரிண்ட் போட்டு வேறு விற்கிறார்கள்.  ஒவ்வொரு மீசையும் தனி முறுக்கு மற்றும் ஒவ்வொன்றும் தனித்தனி நெய் தடவிய அட்டகாசம். ஒவ்வொரு font மீசையும் தனி அழகோடும் நேர்த்தியாகவும் செதுக்கி வரைந்து வளர்த்திருக்கிறார்கள் கணினியில். கொடுவா மீசைகளை பார்ப்போம்.
meesai
 

தேவர் மகன் படத்தில் வரும் கமல் வைத்திருக்கும் மீசையும், சிவாஜியின் மீசையும், மாயத்தேவன் நாசர் மீசையும் பற்றி சொல்ல முற்படுவதற்கு நம் வீரத் தமிழின் எந்த வார்த்தையிலும் அடங்காது. விருமாண்டி கமல ஹாசனும், பசுபதியும், வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜியும் நம் மனதை விட்டு இறங்குவதற்கு சண்டித்தனம் செய்கிறார்கள்.


வழக்கம் போல் ப்ளாக் முடிக்கும் தருவாயில் வெள்ளித்திரையோடு நமக்கு இருக்கும் பந்தம் காரணமாக மைக்கேல் மதன காமராஜனில் நம்ம ராஜ் கமல்ஹாசன் மீசை எடுக்கச் சொல்லும் மதன் கமலிடம் சிணுங்கும் காட்சி கீழே. காட்சியின் பின்புலத்தில் ஹிட்லர், பாரதி போன்ற மீசை வைத்தோர் பட்டியல் மாதிரி சுவற்றில் காட்சியளிப்பது இந்த சீனுக்கு பக்கபலம்.  ஓவர் டு வீடியோ.


எல்லாம் சரி, உங்களோட மீசை எந்த வகையறா? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
 
பட உதவி: http://torweeks.blogspot.com/2009/10/i-made-poster-for-you.html, www.outlookindia.com, http://videolife.tk/magan/

Friday, July 23, 2010

சந்திரனுக்கு ஓர் பயணம்

armstrongஇரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தத் தளத்தில் வெளியிடவேண்டிய வீடியோ இது. சற்று தாதமதமாக இன்று. 1969 ம் ஆண்டு ஜூலை திங்கள் பதினாறாம் நாள் நிலாவைப் பிடிக்க மனிதன் மேற்கொண்ட முதல் தேனிலவுப் பயணம் பற்றிய வீடியோ இது.  ஜூலை மாதம் இருபதாம் தேதி சந்திரனை அடைந்தார்கள். இந்த மாதத்தோடு ஆம்ஸ்ட்ராங் நிலாவில் கால் பதித்து 41 ஆண்டுகள் நிறைவடைகிறது. அபோல்லோ பதினொன்று விண்கலத்தில் ஆம்ஸ்ட்ராங் வானுடையோடு ஏறுவது முதல், சந்திரனில் இறங்குவது வரை காண்பித்திருக்கிறார்கள். அப்போதைய வீடியோ அனிமேஷன் மூலம் பூமியின் ஆர்பிட்டிலிருந்து ராக்கெட் தன்னுடைய ஒவ்வொரு பாகமாக கழற்றிக் கொண்டு எப்படி சந்திரனை சென்றடைகிறது என்ற கூடுதல் விளக்கம் வானறிவியல் தெரியாத என் போன்ற கைநாட்டிற்கு பார்க்கப் பரவசமாக உள்ளது. ஒரு நாட்டின் திருவிழாவாக, கோலாகலமாக அவர்கள் கொண்டாடி மகிழ்ந்த நிலாப் பயணத்தின் ஆறு வீடியோ தொகுப்பையும் கண்டு களித்து மனிதனின் இந்த மகத்தான வெற்றியை நாமும் கொண்டாடுவோம்.









என்ன நிலவுக்கு போய் வந்தாச்சா? சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா....இல்லை நான் தானே.. என்று வைரமுத்து ரஹ்மானின் இசையில் பாட வைக்கிறார். சந்திரனை கீழிருந்து பார்த்தாலும் அதனுள் பார்த்தாலும், எங்கிருந்து பார்த்தாலும் பரவசம்தானே.

பின் குறிப்பு:  சந்திரனில் தண்ணீர் மற்றும் ஒரு குகை கண்டிபிடிக்கபட்டபோது நான் எழுதிய குப்புசாமி C/O சந்திரன் என்ற பதிவையும் முடிந்தால் ஒரு முறை கண்டுக்கவும். இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்த போது நான் எழுதிய சிக்ஸர் இது. அதாவது ஆறாவது பதிவு.

Photo courtesy: http://www.movieeye.com/

Thursday, July 22, 2010

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

duplicateஎங்கு பார்த்தாலும் ஒரே போலி மயம். அசல் எங்கே போனது. அதுவும் டப்பாக்குள்ளே தான் போனது என்று அஜீத் படம் பார்த்து சொல்பவர்கள் நிற்க. சமீப காலங்களில் என்னென்ன போலி வருகிறது என்று பட்டியலிடலாம் என்ற உண்மையான ஆசையில் இந்த பதிவு.  ஒவ்வொரு உபதலைப்பிற்க்கும் போலி முன்னால் சேர்ப்பது வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் போளி அடுக்குவது போலிருக்கும் என்பதால், இங்கே ஒரே போலியோடு ஆரம்பிப்போம். இனி வரும் உபதலைப்பிற்க்கெல்லாம் முன்னால் போலி சேர்த்து படிக்கவும்.

மார்க் ஷீட்: கல்லூரிகளில் சேர்வதற்கு எங்காவது 420 ஆள் பிடித்து காசு கொடுத்து தேத்திக் கொண்டு வரும் பொய்யான மதிப்பெண் பட்டியல். தேர்ச்சி சதவிகிதத்தில் முதலிடத்தில் இருக்கும் பெண்கள்தான் போலி மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிப்பதிலும் முதலிடம் வகிப்பதாக இன்றைய செய்தித்தாளில் படித்தேன். பெருமையாக இருந்தது. அனைத்து துறைகளிலும் அவர்களுக்கே வெற்றி.

பட்டம்: காற்றில் பறப்பது அல்ல, கல்லூரி படிப்பு வெற்றிகரமாக நிறைவு செய்கையில் கையில் வாங்குவது. பல பேர் போலி பட்டத்தில் ஆகாயத்தில் பறப்பதாக நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கிறது. பாஸ் செய்து பட்டம் பெற்றவனை விட பரீட்ச்சையில் கோட் அடித்து போலிப்பட்டம் பெற்றவர்கள் மிக உயர்ந்த நிலையில் சில நிறுவனங்களை தூண் போல் தாங்கிக் காப்பதாக இரண்டு மூன்று சிநேகிதர்கள் தெரிவித்தார்கள். இது பரவாயில்லை, பாகிஸ்தானில் நாடாளுமன்ற எம்.பி க்கள் சில பேர் போலி பட்டச் சான்றிதழ் கொடுத்திருப்பதாக தெரிய வந்து ஒரே அமளி துமளியானது.  அதற்க்கு அந்நாட்டின் மதியூக அமைச்சர் ஒருவர் போலியாக இருந்தாலும் அதுவும் பட்டச் சான்றிதழ்தானே என்று பேட்டியளித்தாராம். எம்.பி என்ற சுருக்கத்திற்கு முட்டாப் பயல் என்று விரிவு வந்துவிடுமோ என்று ஒரே கலக்கமாக இருக்கிறது. அப்புறம் நாட்டின் இறையாண்மைக்கும் மாட்சிமைக்கும் பங்கம் வந்துவிடும்.

ஜாதிச் சான்றிதழ்: எந்த ஜாதிக்கு சலுகைகள் நிறைய கிடைக்கிறதோ அந்த பேர் போட்டு ஒன்று அடித்துக்கொண்டு அந்த சலுகைகளை அனுபவிக்க ஆசைப்படுவது. இப்படி எல்லோரும் சலுகைகளுக்காக போட்டுக்கொண்டால் நிஜமாகவே அதனால் பயனடைய வேண்டியவர்களுடைய சலுகை மறுக்கப்படுகிறது. ஆனால் இதில் ஒன்று சர்வ நிச்சயம், எல்லோரும் ஓர் குலம் என்று நிரூபணமாகிறது. இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில்  சுடுகாட்டு கொட்டகை ஊழல் வெளிக்கொணர்ந்த புகழ் உமாஷங்கர் ஐ.ஏ.எஸ் வேலைக்கு சேரும் போது போலி ஜாதி சான்றிதழ் கொடுத்ததற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஐயையே ஐ.ஏ.எஸ்.

சாமியார்: மாரிக்கால மதராசப்பட்டினத்தின் சாலைப் பள்ளங்களை எண்ண முடியுமா என்று கேட்டால் என்ன பதிலோ அதுதான் இன்றைய போலிச்சாமியார்களின் எண்ணிக்கை. எங்கு பார்த்தாலும் ஒரு ஆஷ்ரம் அமைத்துவிடுகிறார்கள். ஒரு 'ஜி', 'ஸ்ரீ ஸ்ரீ', '...ந்தா' என்று எதையாவது முன்னாலே அல்லது பின்னாலே போட்டுக்கொண்டு விடுகிறார்கள். இவர்களுக்கு செல்வச் சீமான்கள், கதர் சட்டைகள், கார்போரேட்டுக்கள் என்று ப்ரமோட்டர்கள் வேறு. பல நிறத்தில் இருக்கும் கைக்காசை வெள்ளையாக மாற்றி வெள்ளையும் சொள்ளையுமாக நடமாடுவதற்கு கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் யோகா, கொஞ்சம் கீதை, போன்ற கொஞ்சம் கொஞ்சம் மொத்தமாக தெரிந்தவர்களை மேடையேற்றிவிட்டு அவர்களையும் பணக்காரர்களாக்கி தாங்கள் பெரும் தனவான்கள் ஆகி விடுகிறார்கள். அப்புறம் எல்லாம் கொஞ்சம் தெரிந்த, காசு பெருத்த போலிச் சாமியார்கள் யாராவது நடிகையை பார்த்து கொஞ்சப் போய்விடுகிறார்கள். சாமியாரின் இன்ப வெறி என்று இதுவரையில் ஒரு மலையாளப் படம் வெளிவராதது ஆச்சர்யமாக இருக்கிறது.

அப்புறம் சில உதிரி போலிகளாக அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் போலி முடி(Wig), முன்னழகை கட்டழகாக காண்பிப்பதற்காக போலி ஸ்தன மூடிகள், போலிச் சிகப்பாக அதரங்களை காண்பிப்பதற்காக உதட்டுச் சாயங்கள், தும்பைப்பூ போன்ற தலைக் கேசத்தை கார் முகிலென காண்பிக்கும் தலைச் சாயங்கள். (யாரும் ஆண்டி என்றோ அங்கிள் என்றோ கூப்பிடாமல் அண்ணா, அக்கா என்று கூப்பிடுவதற்க்காகவாம்.) ஐநூறு ருபாய் ஆங்கில புத்தகத்தை பக்கத்துக்கு முப்பத்தி இரண்டு காசு கொடுத்து நகலகங்களில் தயாரிக்கும் போலிப் புத்தகம், போலி நண்பர்கள், போலிக் காதலிகள் (கள்ளக் காதலி வேறு, போலிக் காதலி வேறு என்று வித்தியாசம் அறிக), போலிக் கணவன், போலி பொண்டாட்டிகள், போலி சினிமா சி.டிக்கள், போலி முகங்கள், போலி மருந்துகள், போலி ரூபாய் நோட்டுகள், போலி அன்பு, போலி பாசம், போலி அக்கறை, போலி தலைவன், போலி தொண்டன், போலி பாஸ்போர்ட், போலி ரேஷன் கார்ட், போலி போலிகள் என்று இந்த அசல் போலி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


யார் மாதிரி வேண்டுமானாலும் மேற்கண்ட முகமூடியை கொண்டு உருமாறலாம். ஒபாமா மாதிரி, ரஜினி மாதிரி, கமல் மாதிரி, தமண்ணா மாதிரி என்று. இதில் உள்ள பெரிய அபாயம் என்னவென்றால் ஏதாவது ஒரு வங்கி மேலாளர் மாதிரி இதை வடிவமைத்து ஒரு நாளின் அன்றைய கல்லா கட்டிய கலெக்ஷன் முழுவதையும் யாராவது ஒரேடியாக அடித்துக்கொண்டு போய்விட்டால்? இன்னும் நிறைய இதுபோல உபயோகமான பயன்பாடுகளை அவரவர்க்கு ஏற்ப கண்டுபிடித்து அனுபவிப்பார்கள். எதிர் காலத்தில் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.

இவ்வளவு போலிச் சொற்கள் கொண்டு இந்தப் பதிவை அடித்தது ஆர்.வி.எஸ்ஸா அல்லது போலி ஆர்.வி.எஸ்ஸா என்று ஒரு போலி இல்லாத போலிஸ் ஆபிசரிடம் சொல்லி கண்டுபிடிக்கணும்.

பட உதவி: http://lawyermarketing.attorneysync.com/

Saturday, July 17, 2010

ஐம்பதுகளில் அமெரிக்கா

1925லேயே அமெரிக்க நகரங்கள் 1950களில் எப்படி இருக்கும் என்று ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த அமெரிக்க சிற்பி, இருபதுகளின் (அட வருஷம்பா... ) பிரபலமான கட்டிடக் கலைஞர் கோபார்ட் வடிவமைத்த சில மாதிரிகளை 1925ம் வருடம், ஆகஸ்ட் மாதம் வெளிவந்த பாபுலர் சயின்ஸ் மன்த்லியிலிருந்து எடுத்து நெட்டில் விட்டிருக்கிறார்கள். 1925லேயே இந்த மனிதருக்கு என்ன ஒரு கற்பனா சக்தி. 2050ல் இப்படித்தான் இருக்குமோ?

usa1


usa2

நம்மூர்ல  எப்ப இப்படி எல்லாம் கட்டுவாங்க. ஒரு ரயில் பாதை போடறத்துக்கே அஞ்சு வருஷம் ஆவுதே... இப்படி சீட்டுக்கட்டு மாதிரி மேலே மேலே கட்டிகிட்டே போறாங்களே.. யப்பப்பா சூப்பர்.. 
பட உதவி: http://www.sadanduseless.com/image.php?n=658

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails