Monday, October 23, 2017

தெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...

ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷிணம் செல்லலாம் என்று சன்னிதி வாசலில் முதல் ஆளாய் நின்றுகொண்டிருந்தேன். இடதும் வலதுமாய் ஜெய விஜயர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கதவு திறக்கும்வரை குருவாயூரப்பனை ஐந்து நிமிடமாவது மனதில் சிறைப்பிடிக்க எண்ணினேன். பாரதத்தில் சகாதேவன் க்ருஷ்ணனின் காலைக் கட்டிவிடுவேன் என்று சொன்னது போல் கண் மூடி மனசுக்குள் நிறுத்திப்பார்த்தேன். ஊஹும். அரைவிநாடி நேரமாவது கலையாமல் நிற்பேனா என்கிறது. குரங்கு மனம் அங்காடி நாயாக திரிந்து எதையெதையோ மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.

பட்டென்று கண்ணைத் திறந்துவிட்டேன். ஜெயவிஜயர்களைப் பார்க்கும் போது இவர்கள்தானே ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபுவாக ராக்ஷச அவதாரம் செய்து... ஸ்ரீமன் நாராயணன் நரசிம்மாவதாரம் எடுத்து வதம் செய்தார் என்று பகவத் சிந்தனை கிடைத்தது. கண்ணை மூடி மனதை ஒருமுகப்படுத்துவதை விட இப்படி சிலா ரூபமாகப் பார்த்துக்கொண்டே நற்சிந்தனை மலர்வது மகிழ்ச்சியாக இருந்தது.
பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் தனது ஸ்ரீமத்பாகவத சப்தாகத்தில்... “இங்க இருக்கானா... அங்க இருக்கானா... இந்த தூண்ல இருக்கானான்னு ஹிரண்யகசிபு ஆடியாடி ராஜ்யசபைலே கேட்டப்போ... எந்த தூண பிரஹ்லாத ஸ்வாமி காட்டுவார்னு நினைச்சு... காமிக்கற தூண்ல இல்லாட்டா பக்தனை ஏமாத்தினா மாதிரி ஆயிடுமேனு பயந்து.... எல்லாத் தூண்லயும் வந்து அணுப் பிரவேசம் பண்ணி உக்காண்டுண்டு .... இந்த தூணாடான்னு அஹம்பாவமா உதைச்ச ஹிரண்யகசிபுவை.. படீர்னு தூணைப் பிளந்து வெளில வந்து... ஆகாசம் தொடற மாதிரி விஸ்வரூபத்தோட.. தெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்.. விரல்களெல்லாம் நீள நீள நகமாம்...சிம்ம முமகாம்... மனுஷ்ய உடம்பாம்.. உர்ர்...உர்ர்ர்ருன்னு கர்ஜிச்சிண்டு.. வந்து அவனோட துவந்த யுத்தம் போட்டாளாம் பெருமாள்..”
கண் திறந்த சிந்தனை. இன்னும் தீக்ஷிதர் தொடர்கிறார்
”நரசிம்மனுக்கு ஹிரண்யகசிபுவை உடனே வதம் பண்ணத் தெரியாதா? ஏன் துவந்த யுத்தம் பண்ணினார்?.. பிரஹ்லாத ஸ்வாமி ஹிரண்யகசிபு பண்ணின களேபரத்துல பயந்து போய் அவசரத்துல சாயரட்சை நாலு மணிக்கே ஸ்வாமியை பிரார்த்தனை பண்ணி கூப்டாளாம்.. பிரதோஷ வேளை வரட்டும்னு சித்த நாழி சண்டை போடற மாதிரி விளையாடினாளாம் ஸ்வாமி... அவனும் ஒருகாலத்துல இவருக்கு வைகுண்டத்துல காவல் காத்த பிரகிருதிதானே... பிரதோஷ வேளைல... மனுஷனும் இல்லாத மிருகமும் இல்லாத சரீரத்தோட..உக்கிர நரசிம்மனாய்... பகலும் இல்லாத இரவும் இல்லாத நேரத்தில.. உள்ளேயும் இல்லாத வெளியேயும் இல்லாத வாசற்படியில...உசிர் இருந்தும் இல்லாம இருக்கிற நகத்தை வச்சு... வயித்தைப் பூரி....குடலை எடுத்து மாலையா போட்டுண்டு.. வதம் பண்ணினானாம் பகவான்....”
என்ற அவரது வார்த்தைகள் காதுகளில் கணீர் கணீரென்று ஒலித்துக்கொண்டேயிருந்த போது அருகில் சங்கு ஊதினார்கள். டாங் டாங்கென்று கண்டாமணி அடித்தார்கள். கதவு திறக்கப்போகிறார்கள்.. கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.. குருவாயூரப்பா... கதவு படாரென்று திறந்து ஆரத்தி காண்பித்தார்கள்....
ஆ.... என்ன அது....
நரசிம்மர்.......... மா...... தி.....ரி.... இருக்கே.......
ஆஹா... குருவாயூரப்பனுக்கு நரசிம்ம அலங்காரம். திரிநூல்களைத் தாடியாயும் பிடறி மயிறாகவும் ஒட்ட வைத்து... வாயில் சிறிது கூடுதலாக இரத்தச் சிவப்பை சேர்த்து... .ரத்ன க்ரீடமும்.. முத்துமணி மாலைகளும்.. பச்சைப் பட்டு பளபளக்க பஞ்சகச்சமும்...கழுத்தில் சம்பங்கியும் சாமந்தியும் துளசி மாலைகளும்... காலுக்கடியில் ஏராளாமான மல்லி, அரளி உதிரி புஷ்பங்களும்.. பச்சைப் பசேலென்று தரைமுழுவதும் துளிசிதளமுயாய்... உச்சியிலிருந்து இரண்டு புறமும் மூன்று மூன்று சரவிளக்குகள் ஐந்து முகம் ஏற்றி தொங்க... தரையில் இரண்டு பக்கமும் தண்டு குத்துவிளக்குகளில் தீபம் ஆட...கண்ணாரக் கண்டு ரசித்தேன்.
இன்னமும் கண்ணை விட்டு அகலாமல்... நரசிம்மமாய்.. நாராயணாய்.. சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியாய்... குருவாயூரப்பனாய்... கோடி சூர்யப் பிரகாசனாய்... பக்தஜன ரட்சகனாய்... ஆதியுமாய்... அந்தமுமாய்....

முருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்

நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை. தென்றல் வீசும் இளம் மாலைப் பொழுது.

பரத்தையர்களின் காமவாசம் தொலைத்து பரம்பொருளான முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதர் விஸ்ராந்தியாக மலையடிவாரத்தில் அமர்ந்திருக்கிறார்.
திருப்புகழ் மனதில் ஊற கண்களில் ஞானச்சுடர் ஒளிர இருப்பவரை நோக்கி கல்யாண சீர் எடுத்துச் செல்வது போன்று விதம்விதமான தட்டுக்களில் பழங்களும் பல வகையான இனிப்புகளும் பொற்காசுகளும் பட்டாடைகளுமாக தோள்களில் தூக்கிக்கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் கூட்டமாகச் சிலர் வந்தார்கள்.
அருணகிரிநாதர் “எங்கு வந்தீர்கள்?” என்று இதழ்களில் புன்னகை ததும்ப வினவினார்.
ஊர்வலத்தை தலைமையேற்று வந்திருந்த தலைவர் தோரணையில் இருப்பவர் “ஐயா, நாங்கள் உங்களை நமஸ்கரிக்கிறோம். உங்களுக்குக் கிடைத்த கந்தன் கருணையையும் அவனின் திருவருளையும் நீங்கள் எங்களுக்கும் அருள வேண்டும். பணிந்து நிற்கிறோம்” என்றார் கைகூப்பியபடி.
“இதெல்லாம் என்ன?” என்று தன் முன்னால் பரப்பி வைக்கப்பட்ட தட்டுக்களைப் பார்த்துக் கேட்டார்.
“திருவருளைப் பெற குரு தட்சிணையாகக் கொண்டு வந்தோம்” என்று மரத்தடியில் நின்றவர்கள் கோரஸாகச் சொன்னார்கள்.
விண்ணைத் தொட்ட அருணாசலேஸ்வரரின் கோபுரத்தை அங்கிருந்தே நிமிர்ந்து பார்த்தார். முருகப்பெருமானை சிறிது நேரம் மனதில் நிறுத்தினார். அவர்களைக் கூர்ந்து நோக்கினார்.
“இவற்றையெல்லாம் வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். பின்னர் வாருங்கள், முருகன் அருள் பெரும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார்.
வள்ளிமணாளனின் அருள் கிடைக்கப்போகும் அவாவில் ஓடிப்போய் எல்லாவற்றையும் வீட்டில் வைத்துவிட்டு மீண்டும் உடனே மலையடிவாரத்திற்குத் திரும்பினார்கள். அடிவானம் தங்கமாக ஜொலித்துக்கொண்டிருந்தது. அருணகிரி திருவாய் திறந்தார். உன்னத அனுபவத்திற்கு அங்கிருந்தவர்கள் தயாரானார்கள்.
“முதல் மந்திரம் சொல்கிறேன். தடுங்கோள் மனத்தை...”
புரிந்தவர் சிலர். புரியாதவர்கள் பலர். அலைபாயும் மனத்தை தடுக்கவேண்டும். பட்டினத்தடிகள் ”அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே” என்று அங்காடி நாயாக மனதை உருவகப்படுத்தி பாடினார். பலவகையான பொருட்கள் விற்கப்படும் அங்காடிகள் இருக்கும் வீதியில் செல்லும் நாய் எப்படி கடை கடையாய் ஏறி இறங்குமோ அதுபோன்றது மனம் என்பார் பட்டினத்தார்.
ஒரு வாரம் சென்றது.
“ஐயனே! எங்களால் முடியவில்லை. வேறு எதாவது சுலபமான வழி...” என்று இழுத்தார்கள்.
“விடுங்கோள் வெகுளியை.....”.
அனைவரும் கலைந்தனர்.
ஆசாபாசங்களை வென்ற ரிஷிகளே தோற்றுப்போகும் கோபத்தை அவ்வளவு எளிதில் வெல்லமுடியுமா? சட்டென்று விடமுடியுமா? முயற்சி செய்து பார்த்தார்கள். ஊஹும். ஒரு வாரத்தில் திரும்பவும் வந்தார்கள். அவர்களது முகங்களைப் பார்த்தே அருணகிரியார் அறிந்துகொண்டார். இவர்களால் இதையும் செய்யமுடியவில்லை.
“சரி.. மூன்றாவதாக ஒரு உபாயம் சொல்கிறேன். தானம் என்றும் இடுங்கோள்..”
பிறர்க்கு தர்மம் செய்வது சுலபமா? ஒரு வீடு இருப்பவர்கள் இரண்டாக்கவும் நூறு சவரன் இருப்பவர்கள் இருநூறு சவரனாக விருத்தி செய்யவும் விரும்பும் உலகில் தனது பொருளீட்டலில் இருபது சதம் தர்மம் செய்ய வேண்டும் என்று தெரியுமா? செய்வதற்கு மனசு வருமா?
“சம்பாதித்ததை தர்மமாக செலவழிப்பதற்கு மனது இடம் கொடுக்கமாட்டேன் என்கிறது ஐயனே! என் செய்வோம். எங்களால் இதுவும் இயலவில்லையே... முருகன் அருள் கிடைக்க மிகச் சுலபமான உபாயம் சொல்லுங்களேன்.” என்று பணிந்தார்கள்.
தொங்கு தாடியும் மீசையுமாக அமர்ந்திருந்த அருணகிரியார் வெடிச்சிரிப்பு சிரித்தார். சிறிது மௌனம் காத்தார்.
“இருந்தபடி இருங்கோள்...” என்று சொல்லிவிட்டு எழுந்து விடுவிடுவென்று கிரிவலப்பாதையில் கிளம்பிவிட்டார். ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டார்கள். அவர் கூறிய மூன்றையும் அனுசரிக்க முடியாததால் இப்படியே இருந்தபடி இருக்கோள் என்று கோபத்துடன் அருணகிரியார் செல்கிறார் என்று பின்னால் செல்லப் பயந்து புரியாமல் விழித்தார்கள். சாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று துரத்திச் சென்று கேட்டார்கள்.
”எதுவும் உபயோகமில்லாமல் பேசாமல் மௌனமாக இருந்தபடி இருப்பது யோக நிலை. அப்படி இருங்கோள். முருகன் அருள் வீடு தேடி வரும்”
முன்பு சொன்னதையெல்லாம் தொகுத்து ஒரு பாடலாகப் பாடினார். திரும்பிப்பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார்.
முருகப்பெருமானின் அருள் பெற...அவனுக்கு அர்ச்சனை செய் அபிஷேகம் பண்ணு.. காவடி எடு என்றெல்லாம் அருணகிரிநாதர் சொல்லவில்லை. மனசைத் தடு... கோபத்தை விடு.. தானம் செய்.. அமைதியாய் இரு.. என்று மானுடம் வளர்க்கும் பண்புகளை பின்வரும் கந்தரலங்காரப் பாடலில் பகர்ந்தார்.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் துளைக்க வைவேல்
விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.


பின்குறிப்பு: பேராசிரியர் திரு. இரா. செல்வகணபதி அவர்களின் பெரியபுராணச் சொற்பொழிவில் கேட்டதை எனது பாணியில் ஜோடித்து எழுதினேன்.

நாராயணன் என்னும் நாமம்

இரவு ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. சாம்பு மாமாவும் கோபுவும் வெறிச்சோடிக்கிடந்த தெருவின் அமைதியைக் கிழித்துத் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கோபுவின் கையில் காது மடிக்கப்பட்ட மாத்ஸ் புத்தகம் இருந்தது. நாளைக்கு க்ளாஸ் டெஸ்டாம். சிறிது நேரத்தில் தெருமுனையில் நுழைந்த கடலை வண்டிக்காரன் இரும்பு சட்டியில் தோசைக் கரண்டியால் வாசிக்கும் "டட்டிட்டாங்.. டடாங்.." அவர்களது பேச்சுக்கு பின்னணி இசையாக அமைந்தது.

"உங்க க்ளாஸ்ல எவ்ளோ சரவணன் இருக்காங்க?"
"ரெண்டு பேர் மாமா..."
"ரெண்டு பேரும் உனக்கு முன்னாடி போய்க்கிட்டிருக்காங்க... நீ பின்னால நடக்கிற... சரவணா... அப்டீன்னு கூப்பிடறே... அப்ப யார் திரும்பி பார்ப்பா?"
"ரெண்டு பேரும்.."
"ஏன் ரெண்டு பேரும் பார்க்கணும்?"
"ரெண்டு பேரும் சரவணன்.."
"நான் சொன்ன கதையும் அந்த மாதிரிதான் கோபு.."
கோபு சமாதானம் ஆகாமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான்.
"கோபு லேட்டாச்சே! ஆத்துக்கு கிளம்பலை.. " என்று உள்காரியமெல்லாம் முடித்துக்கொண்டு வந்த ஜானகி மாமி கேட்டாள்.
"மாமா ஒரு கதை சொன்னார். எனக்கு சாமாதானம் ஆகலை.. அதான்..."
"என்ன கதை?" கேட்டுக்கொண்டே ஜானு மாமி திண்ணையின் அடுத்த தூணில் வந்து அக்கடான்னு சாய்ந்துகொண்டாள். வாசல் மாடத்தில் ஏற்றி வைத்திருந்த அகல் தீபம் காற்றில் ஆடியது.
"ஜானு... சொல்றேன் கேளு..." கதைக்கு இரண்டாவது நேயர் சேர்ந்து கொண்ட சந்தோஷத்தில் சாம்பு மாமா சுறுசுறுப்பானார்.
"அவன் ஒரு பாபி. கல்யாணம் பண்ணிண்ட பொண்டாட்டியை விட்டுட்டு பல துஷ்ட ஸ்த்ரீகள்கூட அவனுக்கு சகவாசம். பத்து பிள்ளை பெற்றுப்போட்டுவிட்டு இன்னொருத்தனோட பொண்டாட்டியை அபகரிச்சுண்டு போனவன்...”
“ணா.. ரொம்ப விகாரமான கதையா இருக்கே.. இதுவா கொழந்தைக்கு சொன்னேள்..”
“இல்லே. இவ்ளோ விஸ்தாரமா சொல்லலே... கேளு.. இப்படி ஆயுசு பூரா அற்ப சுகங்கள்ல கழிச்சவன் ஒருத்தனுக்கு பத்து புள்ளைக்கு அப்புறமும் ஒரு ஆண் குழந்தை பொறந்தது.... சும்பன், நிசும்பன்னு, சண்டன், கிண்டன்னு எல்லாக் குழந்தைக்கும் பேர் வச்சவன் கடைசியா பொறந்த ஆண் பிள்ளைக்கு அவனை அறியாமலேயே நாராயணன்னு பெருமாளோட பேரை வச்சான். அந்த கொழந்தை மேலே இவனுக்கு கொள்ளைப் பிரியம். எப்பப் பார்த்தாலும் நாராயணா.. நாராயணான்னு அதை மடில வச்சுக் கொஞ்சிண்டிருப்பான்... சாதம் ஊட்டுவான்... முட்டிப்போட்டு குனிஞ்சு அதை முதுகுல ஏத்திண்டு ”யானேயானே.. யானேயானே” விளையாடுவான். இப்படி நாட்கள் சௌகரியமா ஓடறது..”
“சமர்த்தாயிட்டானோ?”
”அந்தக் கொழந்தை கூட விளையாடிண்டு இருந்தப்ப.. ஒரு நாள் மூனு நாலு எமதூதர்கள்... குண்டு குண்டா.. கறுப்பு வஸ்திரத்தோட இவனை தூக்கிண்டு போக வந்துட்டா... இவன் பயந்துபோயி.. என்ன செய்யறதுன்னு தெரியாம... நாராயணா...ன்னு வாசல்ல விளையாடிண்டு இருந்த பையனை கூப்பிட்டு அலறினான். ஆனா கூப்ட மாத்திரத்தில விஷ்ணு தூதர்கள் நாலஞ்சு பேர் வைகுண்டத்துலேர்ந்து நேரா வந்து இறங்கிட்டா...எமதூததர்கள் பயந்து போய் ஓரமா ஒடுங்கி.. நீங்கல்லாம் ஏன் வந்தீங்க.. இந்தப் பாபியை நாங்க அழைச்சுண்டு போகணும். தடுக்காதீங்க..ன்னாங்களாம்..”
“அதானே... வாழ்நாள் முழுக்க கெட்ட காரியம் பண்ணிட்டு கடேசில நாராயணா சொன்னா போறுமா?”
“நீ கேட்கிறது சரிதாம்மா... ஆனா இப்ப இவன் நாராயணான்னு கதறினானே.. இதுக்கப்புறம் இவன் பாபம் செய்யறத்துக்கு அவகாசமில்லே... இவந்தான் சாகப்போறானே! தப்பு பண்ணி.. நாராயணா சொல்லி.. பாவக்கணக்கைத் தீர்த்துட்டு.. திரும்பவும் பாபம் பண்றத்துக்கு இவன் உயிரோட இருக்கமாட்டான். சாகற நேரத்துல பகவான் பேர் நியாபகம் வர்றத்துக்கே இவன் புண்ணியம் பண்ணியிருக்கணும்..”
“சாகற டயத்துல சங்கராவோ நாராயணாவோ சொன்னாப் போறும். என்ன வேணா பண்ணலாமா?”
“ச்சே...ச்சே.. இதுக்கு அர்த்தம் அது கிடையாது.... சாகற நேரத்துல நாராயணா சொல்றத்துக்கு வராது... நெஞ்சு கிடந்து பல ஆசாபாசங்களுக்கு அடிச்சுக்குமே தவிர தெய்வத்தோட நினைப்பே வராதாம். அது வந்துட்டதாலே விஷ்ணு தூதர்கள் வந்து காப்பாத்திட்டாளாம்.. நாராயணீயம் எழுதின பட்டத்திரி நாராயணனோட நாமத்தைச் சொல்லும்போது சகஸ்ரகோடி ஜென்மமா பண்ணின பாபமெல்லாம் கரைஞ்சுடும்ங்கிறார்...”
“கோபு கேட்டதையே நானும் கேட்கிறேன். நாராயணான்னு சொன்னதும் ஓடி வர்றானே பெருமாள்.. இவனோ பாபி.. இவன் கூப்பிட்ட உடனே ஏன் ஓடி வரணும்?”
தனக்கு சப்போர்ட்டாக மாமி பேசுவதைக் கேட்டதும் திண்ணை தூணுக்கு முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருந்த கோபுவிற்கு உற்சாகம் பிறந்தது. நிமிர்ந்து கொண்டான்.
“கோபுவும.. நீயும் லாஜிக் திலகங்கள். நல்ல கேள்வி.. பகவானோட நாமாவை பழிக்கற மாதிரி சொன்னாலும் சரி... பஜனையா சொன்னாலும் சரி... ரெண்டுமே அவனுக்கு ஒண்ணுதானாம்.. . எப்டீன்னா... இப்போ கொல்லேல வைக்கப்போர் பத்திண்டு திகுதிகுன்னு கொழுந்து விட்டு எரியறது.. நான் தெரியாம அதுகிட்டக்கே போயி கையை நீட்டிட்டேன்... சுட்டுடுத்து.. ஸப்பா.. நெருப்பு என்னை சுட்டுடுத்துன்னு அதும் பேர்ல யாராவது கம்ப்ளெயிண்ட் பண்ணுவோமா? மாட்டோம். ஏன்னா சுடறது அக்னியோட ஸ்வபாவமான குணம். அதுமாதிரி நாராயணான்னு கூப்பிட்டுட்டோம்னா காப்பாத்தறது அவனோட ஸ்வபாவம். நாம கூப்பிட்ட கணத்துலேர்ந்து அவன் ஓடி வந்து காப்பாத்துவானாம்.”
கோபுவும் மாமியும் சிரித்துக்கொண்டார்கள்.
“ம்..இப்போ கொஞ்சம் தெளிவா புரியறது.. அப்ப அந்த பாபி சாகவேயில்லையா?”
”அடுத்த பத்து நாள் கழிச்சு.. அதே விஷ்ணு தூதாள் கீழே வந்தா.. இந்த சரீரத்தை கங்கையில விட்டுட்டு.. நீ மட்டும் இந்த திவ்ய விமானத்துல ஏறி ஸ்வர்க்கத்துக்கு வந்துடுன்னு...அவனை அழைத்துக்கொண்டு போனார்கள்... ”
“அவன்..பாபின்னு சொல்றேளே தவிர.. அவன் யாருன்னு சொல்லலையே...”
“அவன் தான் அஜாமிளன். இது ஸ்ரீமத் பாகவத கதை....”
“மாமி.. நீங்க வந்து புரியவச்சேள்.. ரொம்ப தேங்க்ஸ்” என்று வீட்டுக்கு கிளம்பினான் கோபு.
திண்ணையிலிருந்து திருப்தியாக எழுந்து... சோம்பல் முறித்து... ”ஹே நாராயணா..” என்று கையிரண்டையும் வானத்தைப் பார்த்துத் தூக்கிச் சத்தமாகக் கூப்பிட்டார். நாலு வீடு தாண்டி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த கோபு நாராயணன் நாமம் கேட்டுத் திரும்பியவுடன் “குட் நைட்” என்று சிரித்தார் சாம்பு மாமா!

குத்துக்கல் ஏறி பிச்சை கேட்காதே!

பட்டினத்துப்பிள்ளை ஒரு மண்டலம் மத்தியார்ஜுனம் என்று அழைக்கக்கூடிய திருவிடைமருதூரில் தங்கி.. சிவநாமா சொல்லி... தபஸ் பண்ணினார். தினமும் மனதை ஒருமுகமாகக் குவித்து மகாலிங்கத்தைத் துதிப்பார். அப்புறம் கொஞ்ச நாழில அப்படியே சமாதி நிலைக்குப் போய்விடுவார். இப்படி தினமும் நடக்கும். அப்போதைய ராஜா ஒருத்தன் நித்யமும் பட்டினத்துப்பிள்ளையிடம் ஆசீர்வாதம் வாங்க ஆவலா வருவான். முக்கால்வாசி நேரம் அவர் சமாதி நிலையிலே இருப்பார். பக்கத்துலேயே பொறுமையா நின்னு பார்த்துட்டு அரண்மனைக்கு போய்டுவான்.

ஒரு நாள் அவன் வர்ற வேளையில இவர் கண்ணைத் தொறந்துண்டு தேமேன்னு உட்கார்ந்திருந்தார். ராஜாவும் வந்து பக்கத்துலேயே நின்னுண்டிருந்தார். திரும்பி நம்பளைப் பார்த்து ஆசீர்வாதம் பண்ணுவார்னு நிக்கறான்..நிக்கறான்... அவர் கண் பார்வை எங்கேயோ நிலைகுத்தி இருக்கு. இவனைக் கடைசி வரைக்கும் திரும்பிப் பார்க்கவே இல்லை. ராஜாவுக்கு தான்னு அகங்காரம். மூக்கு மேலே கோபம் வந்தது. “இந்த தேசத்து ராஜா நா... இவ்ளோ நேரம் நிக்கறேன்.. என்னைத் திரும்பி பார்க்கலை. நீரும் உருப்படியா எதுவும் செய்யறா மாதிரி தெரியலை..இப்படி என்னையும் பார்க்காமே.. ஆசீர்வாதமும் பண்ணாமே.. என்னத்தை நீர் கண்டீர்?”ன்னு சுள்ளுன்னுக் கேட்டான். பட்டினத்துப்பிள்ளை “நான் உட்கார நீ நிற்கக் கண்டேன்”ன்னு மந்தகாசமாச் சிரிச்சாரம்.
இப்படி பல நாள் தபஸ்ல ஒரு நாள் அர்த்தஜாமத்துல சமாதிலேர்ந்து விழிப்பு வந்தது. சரீரத்துக்கு பலம் வேண்டி... சாப்பிடணும்னு தோணித்தாம். பிக்ஷை எடுத்து சாப்பிடலாம்னு வீதிக்கு போனார். அமாவாசை மாதிரி தெருவே இருண்டு கிடக்க... ஒரே ஒரு வீட்ல மட்டும் வெளக்கு எரிஞ்சது. கடகடன்னு குத்துக்கல் ஏறி படிதாண்டி ரேழி வரைக்கும் போயிட்டார். அங்கே தூண்ல சாஞ்சிண்டு கையை ஏந்திண்டு பிக்ஷைக்கு நின்னார். திடீர்னு அப்படியே சமாதிக்கு போயிட்டார். அந்த வீட்ல அப்பதான் திருடன் கொள்ளையடிக்க கன்னம் வச்சுட்டானு கொல்லைப்பக்கமா அஞ்சாறு பேர் துரத்திண்டு ஓடியிருக்கான். வாசல் திண்ணையில தூக்கம் வராம படுத்திண்டிருந்த பசங்களும் கிளம்பி கிழக்கு மேற்கா ஓடினான்கள்.
அப்படி ஓடிண்டிருந்த பசங்கல்ல ஒருத்தன் ரேழியைப் பார்க்கும் போது பட்டினத்துப்பிள்ளையைப் பார்த்துட்டான்கள். கையை நீட்டிண்டு சமாதில நின்னவரைப் பார்த்ததும் “டேய் எல்லோரும் ஓடிவாங்கோ... திருடன் ஆம்புட்டுனுட்டான்.. வந்து அடிங்கோடா...”ன்னு கூப்பாடு போட்டான். எல்லாருமா சேர்ந்து அடிச்சான்கள். அவர் வாயே பேசலை. எல்லாத்தையும் வாங்கிண்டார். கை ஓஞ்சு போனப்புறம் நிறுத்தலாம்னு சுத்தி நின்னு அடிச்சிண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்துல விவேகி ஒருத்தன் “டே.. இவ்ளொ அடி அடிக்கிறோம்.. அப்படியே நிக்கறானே.. யோகியா இருப்பானோ...”ன்னு சந்தேகம் கிளப்பினான். எல்லோரும் பயந்து போயி உடனே நிறுத்தினான்கள்.
தலையைக் குனிஞ்சுண்டே “எல்லாரும் அடிச்சு முடிஞ்சாச்சா?”ன்னு கேட்டார். ஒரு பயலும் வாயைத் திறக்கலை.
தனது வலதுகையால இடது முதுகுல பொளேர் பொளேர்னு அஞ்சாறு தடவை அறைஞ்சுண்டார். எல்லோரும் வச்ச கண் வாங்காம அவரையே பார்த்துண்டிருந்தான்கள்.
“இவ்ளோ வருஷத்துக்குப்புறமும்.. இந்த அர்த்தராத்திரிலே... மகாலிங்கம் எனக்கு என்ன பாடம் சொல்லிக்கொடுக்கறான்னா.. இனிமே குத்துக்கல் ஏறி பிச்சைக்கேக்காதேடா பாபின்னு....”ன்னு சொல்லிண்டே வீதியில இறங்கி விடுவிடுன்னு நடந்து போயிட்டாராம்.
பின்னால ஒரு நாள் அதே மகாராஜா அவரைத் தேர் கொண்டு வந்து அரண்மனைக்கு அழைச்சானாம். “நா இனிமே குத்துக்கல் ஏற மாட்டேன். வேணும்னா என் காலைக் கேட்டுக்கோ”ன்னு திரும்பி தபஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாராம்.
உள்ளுக்குள்ள சத் வஸ்துவைப் பார்க்கணும்னு வைராக்கியம் வந்தவனோட சரீரத்துக்கு சாப்பாடுன்னு ஒண்ணு வேணுமா?ன்னு ஆத்ம கேள்வியை எழுப்பிக் கொண்டு.... விடை தேடும்முன் சமாதி நிலையில் சிலையானார்.

அடிக்குறிப்பு: Inspired by Sri Anantharama Deekshithar's Discourse on Bhagavatha Sapthaagam!

ஓம் நமோ வாசுதேவாய:

”நீர்க்க ஒரு டம்பளர் குடும்மா” என்று இரவு டிஃபனுக்குப் பிறகு சாம்பு மாமா தன் தாயாரிடம் கேட்டு வாங்கி மோர் குடித்தார். “இன்னுமா கோபு வரலே...” என்று கேட்டுக்கொண்டே சமையல் உள்ளிருந்து வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக தெருவிளக்குகள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. தூங்கி வழிந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு பேர்களோடு அரசுப் பேருந்து கடமுடாவென்று கடந்து போனது.

”மாமா.. சாப்டாச்சா?” சரக்கென்று சைக்கிளிலிருந்து ப்ரேக் போட்டு நேரடியாக திண்ணையில் இறங்கினான் கோபு.
“வெத்தலை வாங்கிண்டு வந்தியாடா?”
“இதோ....” ந்யூஸ்பேப்பர் சுற்றிய பாக்கெட்டை நீட்டினான்.
ஈர வெற்றிலையை வேஷ்டியில் துடைத்து காம்புகளைக் கிள்ளி எறிந்துவிட்டு உள்ளங்கையில் வைத்துச் செல்லமாகப் புரட்டினார். ஆட்காட்டி விரலில் கொஞ்சமாக வாசனைச் சுண்ணாம்பு எடுத்து மை போல பாங்காகத் தடவினார். ஸ்பெஷல் சீவலையும் கொஞ்சம் பாக்கையும் அள்ளிப் போட்டு மடித்து வாய்க்குள் தள்ளிய பின்னர் அவர் கண்களில் சொர்க்கம் தெரிந்தது.
“மாமா.. இன்னிக்கி எதாவது கத இருக்கா?”
“ம்...நீ ஓடிப்போயி வெத்தலை வாங்கிண்டு வர்றத்துக்கு கூலியே கதைதானேடா... சொல்றேன்..”
“இண்ட்ரெஸ்ட்டிங்கா ஒண்ணு சொல்லுங்கோ”
“உத்தானபாதன் சுநீதின்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஒரு தடவை கல்யாணம் ஆகியும் பொட்டிப் பாம்பா அடங்காம சுருசின்னு இன்னொருத்தியையும் இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டான்...”
“உத்தானபாதன் யாரு மாமா?”
“அவன் ஒரு ராஜா. ஸ்வாயாம்பு மனுவோட பையன்... சுநீதி கர்ப்பமானாள். பின்னாலயே சுருசியும் கர்ப்பம் தரித்தாள்... உத்தானபாதனுக்கு இளையாள் மேலே பிரியம் ஜாஸ்தி... அவளோட அந்தப்புரத்திலேயே கிடந்தான். அப்படி கிடக்கும்போது ஒரு நாள் சுருசி கேட்டா... ராஜா.. இப்போ சுநீதியும் புள்ளையாண்டிருக்கா.. அவளுக்கு பிள்ளை பொறந்துதுன்னா அவ பையனைக்குதானே ராஜ்ஜியம்?”
“பொறக்கறது ஆம்பிளையா பொம்பளையான்னு அந்தக்காலத்துலேயே முன்னாடியே தெரியுமா மாமா?”
“இல்லடா... அதெல்லாம் தெரியாது.. சுருசி வம்பா கேட்டப்புறம்.. ராஜா என்ன பண்ணினான்... பொறக்கறத்துக்கு முன்னாடியே ஏன் நாம்ப அதைப் பத்திக் கவலைப்படுவானேன்னு... சுநீதிக்கு ஆம்பிளையாப் பொறந்தா காட்டுக்கு விரட்டி அடிச்சுடலாம்ன்னு சுருசிக்கு சமாதானம் சொன்னான்...”
“ஆம்பிளையே பொறந்திருக்குமே?”
“ஆமாம். சுநீதிக்கு துருவன் பொறந்தான்... பச்சக்கொழந்தைன்னும் பார்க்காமே.. உத்தானபாதன் ரெண்டு பேரையும் நாட்டி விட்டு அடிச்சுத் துரத்திட்டான். ரெண்டு பேரும் அழுதுண்டே காட்டுக்கு வந்து சில வருஷங்கள் இருந்தாங்க...”
“துருவன்னா? நட்சத்திரமா இருக்கான்னு சொல்லுவாளே.. அவனா?”
“ஆமாம். மேலே கேளு. துருவன் வளர்ந்து அஞ்சு வயசாச்சு. காட்டுல பசங்க கூட விளையாடிக்கிட்டே இருந்தான். தீபாவளி வந்தது. பசங்களெல்லாம் பட்டுக் கட்டிண்டு பட்டாசு வெடிச்சுது...”
“அப்பவே தீபாவளியெல்லாம் உண்டா?”
“ஒரு விசேஷம் வந்தது. தீபாவளின்னு வச்சுப்போமே..கதைக்கு இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்..”
“சரி சொல்லுங்கோ..”
“அப்போ... துருவன் அம்மாக்கிட்டே ஒடிப்போயி.. எல்லோரும் பட்டு கட்டிக்கறா எனக்கும் வேணும்னு கேட்டான். உடனே சுநீதி.. அப்பா எங்கிட்டே பட்டு வஸ்திரம் வாங்க காசு இல்லேடா.. ஆனா உன்னோட அப்பாதாண்டா இந்த நாட்டுக்கு ராஜா.. அவர் கிட்டே போனா கிடைக்கும்னு சொன்னாளாம்..”
“பையன் நாட்டுக்கு ஓடினானா?
“ஆமாம். ஆனா அரண்மனைக்குள்ளே விடமாட்டேன்னு காவலாளியெல்லாம் தடுத்தானுகள். ராஜ சிசுன்னு அதோட முகக்களை சொல்லித்து. ஒரு வயசான காவலாளி.. டேய் இதைப் பார்த்தா ராஜகளையோட இருக்கு. இதுவே நாளைக்கு நமக்கு ராஜாவானாலும் ஆகும். உள்ளே அனுப்பிடுவோம். பின்னால பார்த்துக்கலாம்னு எல்லார்ட்டேயும் நைச்சியமாப் பேசி அரண்மனையோட சபா மண்டபத்துக்குள்ளே துருவனை அனுப்பிட்டான் ...”
“துருவன் போய் அப்பா ராஜாவைப் பார்த்தானா?”
“பிரம்மாண்டமான மண்டபத்துக்குள்ளே நுழைஞ்சான். உத்தானபாதன் பக்கத்துல சுருசி. ரெண்டு பேரும் பட்டு பீதாம்பரம் கட்டிண்டு பிரமாதமா உட்கார்ந்துருக்கா.. நடுவுல சோமாஸ்கந்தர் மாதிரி அவா பையன் உத்தமன் உட்காண்டிருந்தான். துருவன் இதைப் பார்த்துட்டு இருபது முப்பது படியேறி ராஜா பக்கத்துல உட்கார்ந்துக்க ஓடினான். உடனே சுருசி அவனைப் பிடிச்சு கீழே தள்ளினா... டமடமன்னு பதினைஞ்சு படி உருண்டு கீழே விழுந்தான் துருவன். எழுந்து நின்னுண்டு அப்பா பக்கத்துல நா உட்காந்துக்கணும்னு அதிகாரமா கேட்டான்...”
“பாவம் மாமா! சின்னப் பையன்..ச்சே... அவளும் ஒரு அம்மாதானே!”
“கேளு... துருவன் கேட்டத்துக்கு சுருசி.. காட்டுக்கு போயி நாராயணனை ஸ்தோத்ரம் பண்ணு. அவன் காட்சி கொடுத்தா.. என்னோட வயத்துல நீ புள்ளையா பொறக்கணும்னு வேண்டிக்கோ.. அப்ப பார்க்கலாம்னு விரட்டினாள்”
“கொழந்தை காட்டுக்கு வந்து அம்மாட்ட அழுதான். நாம என்ன தப்பு பண்ணினோம். என்னை ஏன் அரண்மனையிலிருந்து விரட்டினா?ன்னு விக்கி விக்கி அழுதான். அதுக்கு சுநீதி அழாதேப்பா.. நீ என் வயத்துல பொறந்து என் பாலைக் குடிச்சியோன்னா.. அந்தப் பாபம்டா இது.. நான் எந்த ஜென்மத்துல எந்த குடும்பத்தை பிரிச்சோனோ.. அது தொடர்ந்து வருதுடான்னு சொல்லிட்டு மூஞ்சில அறைஞ்சுண்டு அழுதா...”
“ரொம்ப வருத்தமா இருக்கு.. மாமா..”
“நான் என்ன பண்ணனும் இப்போ.. அந்த நாராயணன் எப்ப வருவார்னு கேட்டான் துருவான்.. அதுக்கு சுநீதி.. கொழந்தே நீ நிர்ஜனமானக் காட்டுக்குப் போயி தபஸ் பண்ணினா நாராயணன் வருவார்னு சொன்னா.. உடனே விறுவிறுன்னு நிர்ஜனமான காட்டுக்குள்ளே புகுந்து இப்ப எப்படி நாராயணனைக் கூப்பிடறதுன்னு யோசிச்சுண்டு நின்ன துருவனுக்கு நாரதர் காட்சிகொடுத்தார். அவர்கிட்டே துருவன் நாராயணனை எப்படிப் பார்க்கலாம்னு கேட்டார்... நாரதர்.. ஓம் நமோ வாசுதேவாய:ன்னு மூல மந்திரத்தை உபதேசம் பண்ணினார். அடுத்த கணமே தபஸை ஆரம்பிச்சானாம் துருவன்”
“அவ்ளோ குட்டிக் கொழந்தையா இருந்தாலும் பயமில்லையா துருவனுக்கு?”
“ஊஹும்.. அவம்மா பயப்பட்டாளாம். அவள்ட்ட நாராயணன் நாமம் சொல்லும் போது புலி சிங்கம் கரடியெல்லாம் என்னை நெருங்கிக் கடிக்குமான்னு தைரியம் சொல்லிட்டு தபஸை ஆரம்பிச்சார்... நாலு மாசமா பண்ணினார். அஞ்சாவது மாசத்துலேர்ந்து தபாக்கினி மேல் லோகத்தை சுட்டுப் பொசுக்க ஆரம்பிச்சது. எல்லோரும் நாராயணன் கிட்டே ஓடினாங்க.. யாரும் பயப்பட வேண்டாம். துருவனோட தபம்தான் இப்படி சுடறதுன்னு விஷ்ணு அபயம் அளிச்சார்..”
“தவம் பண்ணினா மேல்லோகம் பத்திக்குமா மாமா?”
“ஊஹும். வீரியம் அவ்ளோ பெரிசு. கால் அமுக்கி விட்டிண்டிருந்த லக்ஷ்மி விஷ்ணுவை ஏன் சுடறத்துன்னு கேட்டா. அதுக்கு நாராயணன் என்னோட பக்தன் ஒருத்தன் தபஸ் பண்றான். அதுதான் இவ்ளோ சூடா இருக்குன்னார். உங்க பக்தன் அங்கே பூஜை பண்ணும்போது உங்களுக்கு இங்கே என்ன வேலைன்னு கேட்டாள் லக்ஷ்மி. திருமால் விழிச்சார். தேவி மேலும் அவனுக்கு எவ்ளொ வயசாகறதுன்னு கேட்டாள். நாராயணன் சிரிச்சுண்டே அஞ்சு வயசுன்னார். லக்ஷ்மிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து அஞ்சு வயசேயான உம்ம பக்தன் அங்கே தபஸ் பண்றான்.. நீர் இங்க வந்து ஒய்யாரமாப் படுத்துண்டு பொழுதைக் கழிக்கிறேள்னு... திட்டினாள். “
“தாயார் தாயார் மாதிரிக் கேட்ருக்கா...”
“ஆமாம். அதுக்கு நாராயணன் அங்கே தபஸ் பண்றவன் ராஜாவோட பையன். நான் உடனே ஓடிப்போயி கவனிச்சா ஸ்வாமி கூட பணக்காரனா இருந்தா உடனே வரார்னு ஊர்மக்கள் நினைக்குமே...”
“கெட்டுது.”
“தாயார் சிரிச்சாளாம். புறப்படுங்கோன்னு பெருமாளை விரட்டினாள். அவர் வந்து துருவனுக்கு நெடுநாள் பூமியை ஆளும் வரம் கொடுத்தார்.”
“கதை முடிஞ்சுதா?”
“இப்பதான் சுவாரஸ்யமே இருக்கு.. தவத்தை முடிச்சிண்டு காட்டுலேர்ந்து வர்ற புத்ரனை வரவேற்க உத்தானபாதனும் சுருசியும் கூட எல்லையிலே காத்திருந்தாளாம். அவம்மா சுநீதியும் இருந்தாளாம். தவம் முடிஞ்சு வர்ற பையனைக் கட்டிக்கணும்னு வந்த சுநீதியை உதறினானாம் துருவன். தூக்க வந்த அப்பா உத்தானபாதனையும் தள்ளிவிட்டு..நேரே சுருசியின் கால்ல போயி விழுந்தானாம். அம்மா நீ என்னை பிடிச்சுத் தள்ளாட்டா.. எனக்கு நாராயணன் தரிச்னம் கிடைச்சிருக்குமான்னு அழுதானாம் துருவன்...”
“இப்படி சோதிச்சு ராஜாங்கம் குடுக்கறத்துக்கு பதிலா அப்பவே கொடுத்துருக்கலாமே”
”பக்தி எந்த வயசுலையும் வரலாம்.. அப்படி வந்து ஸ்வாமியை வேண்டினா... தாயார் குச்சிப் போட்டு அவரை நம்மகிட்டே அனுப்பி அருள்பாலிப்பாள். ”
கடைசி பஸ் அமைதியாக பஸ்டாண்ட் சென்றது. கோபுவிற்கு கண்ணில் லேசாகத் தூக்கம் எட்டிப்பார்த்தது. மாமா மொத்தமாக வெற்றிலையை வெளியே துப்பிவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த சொம்பிலிருந்து ஜலமெடுத்து வாய் கொப்பளித்தார்.
“குட் நைட் கோபு. நாளைக்கு வேற கதை.. சரியா?”
“தாங்க்ஸ் மாமா!”
பின் குறிப்பு: இன்னும் விஸ்தாரமாகச் சொல்லலாம். நேரமில்லை. மன்னிக்கவும்.

பாதி குடிச்ச சுருட்டு

ஒரு ஓட்டு வீடு பத்திக்கிச்சாம். வீடு பூரா எரிஞ்சு சாம்பலாயிடிச்சு. வீட்டோட ஓனர் வாசல்ல நின்னு ஓன்னு அழுதுக்கிட்டிருந்தானாம். அவனோட குடும்பமும் சேர்ந்து அழுதுச்சாம். சம்பந்தமே இல்லாம ஒருத்தன் அங்க வந்து நின்னு கேவிக்கேவி அழ ஆரம்பிச்சானாம். நீ ஏம்பா அழுவுற? இது உன்னோட வீடுமில்ல... அழறவங்க உன்னோட ரிலேடிவ்ஸ்ஸும் இல்ல.. ஸோ நீயும் சேர்ந்து ஏன் அழுவுற...ன்னு கேட்டாங்களாம்... அதுக்கு அவன் சொன்னான்..
இல்லே... அந்த வடக்குக் கூரை ஓடோட கடைசி வரிசைல என்னோட பாதி குடிச்ச சுருட்டு ஒண்ணு சொருகி வச்சிருந்தேன்.. அதுவும் சேர்ந்து மொத்தமா எரிஞ்சு போச்சேன்னு துக்கத்துல அழுவறேன்னு சொன்னானாம்...
அடி செருப்பால..ன்னு துரத்திக்கிட்டு போய் எல்லோரும் போட்டுச் சாத்துணாங்களாம்....
”அச்சச்சோ பெரிய ப்ராப்ளமா இருக்கே”ன்னு நினைச்சு நாம வருத்தப்பட்டுக்கிட்டிருக்கும் போது பக்கத்தில் வந்து நின்று கொண்டு பிசாத்து ப்ராப்ளத்துக்கெல்லாம் நொந்து போயி பினாத்துபவர்களைக் கண்டதும் மேற்கண்டவைகள் நியாபகம் வந்தது. என்னுடைய நண்பர் சுரேஷ் இதை ஒரு தெலுங்கு பழமொழியாக அறிமுகம் செய்தார்.

ஊட்டி விடும் ஆப்

ஈக்காட்டுதாங்கல் அருகே வந்துகொண்டிருந்தேன். மை டியர் சேப்பாயியை உரசுவதுபோல இருவீலர் ஒன்று புயலாய்க் கடந்தது. படுத்து எழுந்து கழைக்கூத்தாடி வித்தைக் காட்டி முன்னால் சென்றவர் ஸ்விக்கி என்கிற ”வீட்டுக்கு வீடு உணவு விநியோகம்” செய்யும் ஆப்காரர்.
வீட்டில் சமைக்காமல் ஹோட்டலில் சாப்பிடுவது சோம்பேறித்தனம் என்றால் அந்த ஹோட்டலுக்கு கூட செல்லாமல் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து வீட்டு.. டிவியை அணைக்காமல்... சோஃபாவை விட்டிறங்காமல்... வயிற்றை நிரப்புவது கனிந்த வாழைப்பழ சோம்பேறித்தனம். WFH, பிக்பாஸ்கெட்டில் மளிகை சாமான், ஸ்விக்கியில் உணவு, நெட்ஃப்ளிக்ஸில் சினிமா என்று படிதாண்டா பத்தினிகளாகவும் பத்தினர்களாகவும் வாழ ஆரம்பித்துவிட்டால்.... எப்பவாவது யாராவது அவசரமாகத் தெருமுனையில் இறக்கிவிட்டால்கூட வீட்டுக்கு வழிதெரியாமல் தொலைந்து போய்விடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஜாக்கிரதை!
வாழைப்பழம், ஸ்விக்கி, திண்ணையில் பல் குத்திக்கொண்டு வாங்கியாரச் சொல்லி சாப்பிடுவது போன்ற தொடர் சிந்தனையில் இருந்தபோது...
“தம்பி ரெண்டு வாழைப்பழம் வாங்கிட்டு வா...” கேட்ட கவுண்டமணியிடம் ஒன்றைத் தின்றுவிட்டு மற்றொன்றைக் கொடுத்து.... பேய் முழி முழித்து.... “இன்னோன்னு எங்கடா?” என்று அவரைக் கதற வைத்து.... “அதாண்ணே இது...” என்று விழி பிதுங்க அசால்ட்டாய்ச் சொன்ன டகால்டி செந்தில்கள் இல்லாத ஸ்விக்கிதானே... என்று நண்பருக்கு டெலிவரி செய்த ஸ்விக்கியாள் ஒருவரிடம் கேட்டது ந்யூரான்களில் நீந்தி நினைவுக்கு வந்தது.
”எங்களிடம் பிரியமான உணவை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வாங்கி வந்து ஊட்டி விடுவோம்” என்ற தாரக மந்திரத்திடன் இன்னொரு ஆப் வரும்வரை இந்த ஸ்விக்கியை வாயாரவும் வயிறாரவும் ஆதரிப்போம்! 

நியோகம்

ஐந்தாவது வேதமாகிய மஹாபாரதத்தை விதம்விதமான நடையில் கோணத்தில் பலர் எழுதியதைப் படித்திருக்கிறேன். எந்த புத்தக சந்தையிலும் தேடித் தேடி வாங்குகிறேன். மஹாபாரதம் எப்பவுமே விழி விரியச் செய்கிறது. துவாபர யுக மனிதர்களின் வாழ்வும் சமுதாய தர்மங்களும் அவைகள் காட்டும் வழிமுறைகளும் வாழ்வியலின் எழிலையும் அவலத்தையும் ஒருசேர பிரதிபலிக்கிறது. இன்று வரையில் எதனோடும் ஒப்புமைப்படுத்திப் பார்க்கும்படியான இளமையோடு இருப்பது இந்த இதிகாசத்தின் பெருமை. இப்படியெல்லாம் வாழலாமா? என்று நினைப்பதை விட ”இப்படியெல்லாமா வாழ்ந்தார்கள்!” என்ற நுட்பமும் நுணுக்கமும் லேசாகப் புரிகிறது.
புராண காலத்தில் காட்டிலும் நாட்டிலும் நாம் நடமாடினால் சந்திக்கும் மாந்தர்களைப் போல பீஷ்மர், கிருஷ்ண த்வைபாயணர், துரோணர், அஸ்வத்தாமன், பீமன், யுதிஷ்டிரன், அர்ஜுனன், திருதிராஷ்டிரன், கர்ணன், குந்தி, கிருஷ்ணன், பலராமன், ஜராசந்தன், கம்சன் என்று மஹாபாரதத்தின் அனைத்து கதாபாத்திரங்களையும் பக்கங்கள் எங்கும் எழுத்துரூபத்தில் உலவவிட்டிருக்கிறார் எஸ்.எல். பைரப்பா. 928 பக்க தலைகாணி சைஸ் பருவத்தில் 675ல் இருக்கிறேன். 110 வயதில் பீஷ்மர்108/109 வயதில் காட்டிலிருக்கும் ஆஷ்ரமத்தில் வசிக்கும் வியாசரைப் பார்த்து “நியோக முறை” தருமமா? அதர்மமா? என்று போர் துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு விஜாரிக்க வருகிறார்.
"நீதானே என்னைக் கூட்டி வந்து நியோகத்தின் விதிமுறைகள் சொல்லி பணிய வைத்தாய்?” என்று வியாசர் கேட்டுவிட்டு நியோகத்தின் விதிமுறைகளாக பீஷ்மர் சொன்னவற்றை எழுதியிருக்கிறார். இப்படி ஒரு முறை வியாசரின் முப்பாட்டன் வசிஷ்டர் கல்மாஷபாதன் என்ற அரசனின் மனைவிக்கு நியோக முறையில் வீரியதானம் செய்தார் என்கிற உபகதையும் வருகிறது. நியோக முறைக்கு பீஷ்மர் வியாசருக்கு நியமமாகப் பின்பற்ற வேண்டியவைகளை மட்டும் இப்போது பட்டியலிடுகிறேன். மொத்த புத்தகத்தையும் முடித்துவிட்டு என்னுடைய பார்வையை எழுதுகிறேன்.
1. நள்ளிரவு நேரமாக இருக்கவேண்டும்.
2. ஆண், பெண் இருவரும் உடல் முழுக்க நெய் தடவியிருக்கவேண்டும்.
3. இருவரிடையேயும் பேச்சு வார்த்தை ரொம்பவும் குறைவாக இருக்க வேண்டும்.
4. முழுக்க உணர்ச்சி வசப்படாமல், மருத்துவர் நோயாளியின் வாயைத் திறந்து மருந்தைப் புகட்டுவது போல இருந்துவிட்டு திரும்பவேண்டும்.
5. அவன் அவளையோ, அவள் அவனையோ திரும்பிப் பார்க்கக் கூடாது.
6. நியோகம் நடந்த பிறகு மனதில் கிஞ்சித்தும் மகிழ்ச்சியின் எண்ணம் இருக்கக்கூடாது.
7. ஒருவேளை அப்படி மனத்தில் ஏதாவது ஒரு எண்ணம் இருக்குமேயானால் அது அருவருப்பாக மட்டுமே இருக்க வேண்டும். 
8. தன் புலன்களையெல்லாம் ஆண் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும்.

ராஜா இல்லாத ஒரு தேசத்தைக் காப்பாற்றும் பொருட்டு க்ஷத்திரியர்களின் பழக்கமாக இருந்த நியோக முறையில் சந்ததி உற்பத்தி செய்துகொள்ளும் முறையை வெகு சுவாரஸ்யமாகவும் அழகாகவும் பைரப்பா எழுதியிருக்கிறார்.
அற்புதமான அபாரமானப் படைப்பு!!

தெப்போற்சவம்


இன்று கோபாலனுக்கு ஹரித்ராநதியில் தெப்பம். பிரத்யேகமாக மன்னையை ஆளும் மன்னவன், ஸ்ரீகோபாலன், ஆனி மாசத்தில் பத்து நாள் அவன் கோபிள கோபிரளய முனிவர்களுக்கு தனது 32 சேவைகளையும் நிகழ்த்திக்க்காட்டிய ஹரித்ராநதி கரைக்கு ஹாயாக வந்துவிடுவான். அங்கு கோபியர்களுடன் ஜலக்ரீடை கூட நிகழ்த்திக் காட்டினானாம்.
தெற்குத் தெரு மண்டபத்தில் அலங்காரம் ஆகி நான்கு கரையும் வலம் வந்து திருமஞ்சன வீதி வழியாக கோயிலில் பள்ளிக்கொள்ள செல்வான் அந்த அழகன். பாட்டியும் பாட்டியின் ஸ்நேகித பாட்டிகளும் வாசல் படியில் ஊர்வம்பு பேசிக்கொண்டு தவம் கிடப்பார்கள். வடக்குத்தெரு மூலையில் மணி டீக்கடை தாண்டும் போது பவானி சித்தி நடுரோட்டில் தண்ணீர் தெளித்து கோலமிடுவாள். தினமும் கோபாலனுக்கு தேங்காய் பூ பழத்தோடு வீட்டு வாசலில் ஒரு அர்ச்சனை.
தீவட்டி வெளிச்சத்தில் சிரிக்கும் கோபாலனைப் பார்க்கும் போது நாம் அவனுடன் ஸ்வர்க்கத்தில் இருப்பது போல இருக்கும். காற்றடித்து தீவட்டியில் பொறி பறக்கும் போது பாட்டி தன்னிலை மறந்து வலம் வருவாள். “கோபாலன் இருக்கும்போது இத்துணூண்டு தீவட்டிப் பொறி என்னடா செய்யும்?”. பின்னால் வேத பாராயணமும் முன்னால் கோஷ்டியும் வருவார்கள். சில நாட்களில் பெட்ரோமாக்ஸ் விளக்கும் வரும். பாதி நாள் அது முழுவதும் பத்திக்கொண்டு சரியாக எரியாமல் ஓரத்தில் பழுது பார்த்துக்கொண்டிருப்பார்கள். “தீவட்டி வெளிச்சத்துலதாண்டா கோபாலான் கொள்ளை அழகு” என்று சாரதா பாட்டி சமாதானப்படுத்திக்கொண்டு சிலாகிப்பாள்.
ஆனி மாச பௌர்ணமி தெப்பம். முதல் நாளிலிருந்து தகர டின்களும் மூங்கிலும் கொண்டு வந்து தென்கிழக்கில் போட்டு தெப்பம் கட்டுவார்கள். வணிகர் சங்க மண்டகப்படி. தெப்பத்தன்று முன்மாலைப் பொழுது மூன்று மணியிலிருந்து வளவிக் கடையும், சொப்பு பாத்திரங்களும், மண் பொம்மைகள், பொரிகடலை, ஜவ்வு மிட்டாய் என்று வீதியில் விரித்திருப்பார்கள். ஏதாவது சிறப்புக் கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். காளையர்கள் கன்னியர்களை எதிர்பார்த்து நான்கு கரையையும் சுற்றிச் சுற்றி வருவர். ஏதோ ஒரு தெப்போற்சவத்தின் போது ஈசான்ய சிவன் கோவில் வாசலில் இருகுழுக்கள் இடையே அடிதடி நடந்தது. புஜபலம் மிக்கவர்கள் ஜெயித்தார்கள். தோற்றவர்கள் வேஷ்டி அவிழ அரை அம்மணமாய் ஓடினார்கள். “அடிச்சான் பாருடா..” என்று விடிகாலை வரை பேசிக்கொண்டார்கள்.
சீரியல் விளக்குகள் மாட்டி ஜிகுஜிகுவென்றிருக்கும் தெப்பம். ஜெனரேட்டர் ஒன்றை உபரியாகச் சின்னத் தெப்பத்தில் இணைப்பாக கட்டி இழுத்துவருவார்கள். ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீவித்யா ராஜகோபாலன் கிருஷ்ணர் அலங்காரத்தில் சேவை சாதிப்பார். கொள்ளைச் சிரிப்போடு. மொத்தம் மூன்று சுற்று. ஒரு தடவை நடுவளாங்கோயிலுக்கு சென்று வருவர். தெப்பத்தின் உள்ளேயே கச்சேரி நடக்கும். மங்கம்மா படித்துறைக்கு முன்னால் பிள்ளையார் கோயில் படித்துறையில் நானும் பாட்டியும் பவானி சித்தியும் ஏறுவோம். தென்கிழக்கு மூலையில் இறங்கிக்கொள்வோம். முன்னதாக தெப்பத்தில் பெருமாள் ஏறும்போதே ஒரு முறை தரிசித்துவிட்டு வீட்டிற்கு வருவோம். சுற்றுப்புற கிராமத்திலிருந்து தெரிந்தவர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு வருவார்கள். “தொப்பம் பார்க்க வந்தோம்...” என்று ஆதிச்சபுரம் மரியதாஸ் ஒரு முறை பெரிய வாழைத்தாரோடு வந்திறங்கினார். மறுநாள் சீப்புசீப்பாகத் தெருமுழுக்க விநியோகித்தாள் பாட்டி.
தெப்பத்தன்று மட்டும் இராத்திரி பத்து மணி வரைக்கும் ஆத்தில் சுடச்சுட ஃபில்டர் காஃபி கிடைக்கும். விருந்தாளிகள் வந்தவண்ணம் இருப்பதால் ஒன்றுக்கு மேல் ஒன்றாக காஃபி இறங்கும். ஐந்தாறு முறை டிகாக்ஷன் இறக்கி இறக்கி.....ஆஹா.. நண்பர்கள் கோஷ்டி வீதியிலேயே திரிவார்கள். நிறைய வீடுகள் விடிய விடிய திறந்திருக்கும்.
இன்றைய தெப்பத்தை Vijay Ram நேரலையாக ஃபேஸ்புக்கில் காட்டினார். தொழில்நுட்ப வளர்ச்சியால் வர்ச்சுவலாக தெப்பத்தில் மிதந்தேன். மிக்க நன்றி. இத்துடன் இணைத்திருக்கும் ராஜகோபாலன் படம் இன்றைய தெப்பத்தில் அந்த அழகனின் அலங்காரம். பட உதவி மற்று அலங்காரம் Sriramman Sriraman. நண்பன் Rajagopalan Rengarajanஐ காணலை! கோஷ்டியில் இருப்பான் என்று நம்புவோமாக!! 

காலுக்குதான் வயசாறது....

காலையில் சாம்பு மாமா “சங்கீதா இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் வந்தார். பத்து வருஷ பழக்கம். பூஜைக்கு ஏற்றி வைத்த CHAMPA வத்தி மணக்க நாஷ்டா பண்ணிக்கொண்டிருந்தேன். கந்த சஷ்டி ராம நவமி இரண்டிற்கும் எங்களது நன்கொடை கட்டாயம் உண்டு. பணி ஓய்வு பெற்ற பின்பு பதினெட்டாய் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுபவர். சத்காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உழைக்காமல் உண்ணலாகாது என்ற கொள்கைப் பிடிப்பு கொண்டவர்.
அரைமணியில் எங்களூர் மன்னை ஆனந்தவிநாயகரில் ஆரம்பித்து மத்திய கைலாஷ் ஆனந்த விநாயகர் வரை சுவாரஸ்யமான சங்கதிகள் பேசுவார். நேரம் போவதே தெரியாது. “மாமா..மாடி ஏற வேண்டாம்.. சிரமப்படாதேள்” என்றால் “யே.. எனக்கொன்னும் வயசாகலை கேட்டியா.. காலுக்குதான் வயசாறது...” என்று அலட்சியமாக.... சிரமப்பட்டு.... மாடிப்படி ஏறுவார். வலுக்கட்டாயமாக வாயில் புன்னகையை வரவழைத்துக்கொண்டே! 
“என்ன... ரொம்ப வாட்டமா இருக்கே.. வொர்க் ப்ரஷரா?”
“ரெண்டு நாளா ஜுரம் மாமா...அடிச்சுத் தாக்கிடுத்து..”
“உம்.. ஒரு கைப்பிடி மாத்திரை அள்ளி வாயில போட்டுண்டிருப்பியே...”
“ம்...”
“எந்த வியாதியுமே மருந்துனால தீர்றதுகிடையாது தெரியுமோ?”
வாயில் போட்ட தோசையோடு சிரிப்பது கஷ்டமாக இருந்தது.
“சிரிக்கிறியா? இங்க பாரு.... மூணு நாளுக்கு மாத்திரை தர்றானா?” சுண்டி விரலையையும் கட்டை விரலையும் மடக்கி மீதமிருக்கும் மூன்று விரல்களை பைல்ஸ் இல்லாத கிரிக்கெட் ஸ்டம்ப்ஸ் மாதிரி என் கண்ணுக்கு அருகில் நீட்டினார்.
“ஆமா..”
“அப்புறம்தானே சொஸ்தமாகறது?.. அதுக்கு மின்னாடி சரியாயிடுத்தா?”
“அதெப்படி.. ஒரு கோர்ஸ் சாப்பிடணுமே.. அதைப் போடலைன்னா குணமாகாதே மாமா”
“ச்சீ..ச்சீ.. அதில்லை கணக்கு... அந்த மருந்துக்கு பதிலா... சீரகத் தண்ணீர்.. நெத்திக்கு மிளகுப் பத்து போடணும்... வெந்நீர் சொம்பு சொம்பா குடிக்கணும்.. முக்கியமா கண்ணை மூடிண்டு கிருஷ்ணா ராமான்னு இருக்கணும்.... ரெஸ்ட் வேணும்... நிலவேம்பு குடிக்கலாம்... தன்னால மூனாவது நாள் சரியாயிடும் தெரியுமா?”
”அப்ப மருந்து சாப்பிடறதெல்லாம்....”
“அது என்ன தெரியுமா? பால் பொங்கிவரும் போது கொஞ்சம் தண்ணி தெளிப்பாளே.. அது மாதிரி... பொங்கினது அடங்கும்.. அவ்ளோதான்.. ஆனா வைரஸ்ஸோ எதுவோ.. அதோட ஆட்டம் காட்டாம போகாது... வேணுமின்னா அந்த பால்ல ஊத்தற தண்ணி மாதிரி... மருந்துனால ஆட்டம் கொஞ்சம் அடங்கலாம்... ஆனா மொத்தமா ஆட்டத்தை நிறுத்தமுடியாது..”
“எல்லா வியாதிக்கும் சொல்லமுடியுமா?”
“என்ன வியாதிக்கெல்லாம்.. கேளு...”
“ஷுகர்...” நமக்கு டக்குன்னு வர்ற வியாதி பெயர் அதுதான்.
“நாக்கை அடக்கு. சாப்பாடுதான் மருந்து.. உணவே மருந்து... நெறையா இயற்கை மருந்துகள் இருக்கே... சரியாயிடுமே... எக்ஸர்சைஸ்...”
நேரமாகிவிட்டது. வாயாடவில்லை. கையலம்பிவிட்டு நகர்ந்தேன். ஆஃபீஸுக்கு கிளம்பும்போது சாம்பு மாமா சொல்வதில் ஜுரத்துக்கு நியாயம் இருப்பது போலதான் இருந்தது. மற்ற வியாதிகளுக்கு மேப் செய்து பார்க்க வேண்டும்.

ஜுரக் கனா

ஜுரம் உச்சத்தில் இருந்தால் வாய் பிதற்றும். கண் திறந்தபடி இருக்க திடீர்க் கனாக்கள் வரும். சில்க், அனுராதா, டிஸ்கோ சாந்தி தோன்றி ஜிகுஜிகு அண்ட்ராயரில் மிரட்டும் இன்பக்கனா அல்ல. (எண்பதுகளில் வயசுக்கு வந்தவர்களான இப்போதைய பெருசுகளுக்கு மேற்கண்ட உதாரணம் சமர்ப்பணம்) ஜுரமடித்தால் சலனமே இல்லாமல் ஜடம் போல கிடப்பது சிலருக்கு அபூர்வமாய் வாய்க்கும். புண்ணியம் செய்த பிரகிருதிகள். என்னுடையது இரண்டாவது வகை. கனா. அதைக் கனா என்று சொல்லமுடியாது. ஏதோதோ காட்சிகள் தோன்றித் தோன்றி மறையும்.
சில காட்சியில் யாருமே இல்லாத நெடும் சாலையில் தனியே மொட்டை வெயிலில் நடந்துகொண்டிருப்பேன். சில காட்சியில் மரங்கள் சூழ் அடர்காட்டில் சொட்டச் சொட்ட நனைந்துகொண்டிருப்பேன். சிலவற்றில் கூட்டத்தில் சிக்கி முழி பிதுங்கி திருவிழாவில் காணாமல் போன பையன் போல விழித்துக்கொண்டிருப்பேன். சிலது ரொம்ப கொடூரம்...ஏதோ ஒரு சிகரத்தின் உச்சியில் இருந்து தலைகீழே வேகமாய் விழுந்துகொண்டிருப்பேன். தலை நச்சென்று தரையில் பட்டு சிதறுகாயாக உடையும் இடம் வந்ததும் மேனி மொத்தமும் தூக்கிப் போடும்.
இந்த முறை ஜெகதாம்பாள் சிரார்த்தத்தின் போது என்னுடைய அம்பாள் பாட்டிகள் நினைவில் உருகியிருந்தேனல்லவா... இரு கிழவிகளும் புகையாய்க் கிளம்பி பக்கத்தில் வந்துவிட்டார்கள். அதிலும் அந்தச் சாரதாக் கிழவி என் கன்னத்தில் இடித்துக்கொண்டே “இத்துனூண்டு கண்டந்திப்பிலி... அரிசித்திப்பிலி.. ஓமம்...துளசி ரெண்டு...சுக்கு.. ரெண்டு கும்மோணம் வெத்தலை..செத்த மிளகும் சேர்த்துக்கோ.. நன்னா அரைச்சு கொதிக்க வச்சு.. நீர்க்க ஒரு டம்ளர் குடிக்கக் குடு.. சரியாப்போயிடும்.. ஊர் சுத்தியிருப்பன்.. கண்டதைத் தின்ருப்பான்.. படுவா...” என்றாள்.
எப்போதும் போல ஜெகதா “டாக்டரைப் பார்த்தியோடா.. ஊசியும் ரெண்டு மாத்திரையும் வாங்கிப் போட்டுக்கோ.. கார்த்தாலே ரெண்டு இட்லி சாப்பிட்டா எல்லாம் சரியாப்போயிடும்... தெம்பு வந்துடும்..” என்று தலையைக் கோதி ஆறுதல் கூறினாள். இருவரும் தலைமாட்டில் உட்கார்ந்து தொடர்ந்து வசவசவென்று பேசிக்கொண்டிருந்ததால் நடக்கவே முடியாத நிலையிலும் மாடியிலிருந்து இறங்கி என் அம்மா அலமேலம்மாவைப் பார்த்து விட்டு “என்னடா?”.. “ச்சும்மாம்மா...” “ரொம்ப சுடறதா?” “இல்லேம்மா..” சொல்லிவிட்டு தூத்தம் குடித்துவிட்டு மேலே வந்தேன்.
சென்னையில் வசிப்போருக்கு ஞாயிற்றுக்கிழமை நோவு வந்துவிடக்கூடாது என்று தன்வந்திரி பகவானை வேண்டிக்கொள்கிறேன் அன்று லோக்கல் மருத்துவர்களுக்கு விடுமுறை. பாவம் அவர்களுக்கும் குடும்பம் குட்டி உண்டே! லேசான ஜுரம் என்றால் கூட ”ஆளைக் கண்டதும் அட்மிஷன் போடு” ஸ்லோகனுடன் இயங்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளுக்குதான் போக வேண்டும். எனக்கு அடிப்பதோ காட்டு ஜூரம். தெர்மாமீட்டர் பாதரசம் வெளியில் வந்து ஊற்றும் அளவிற்கு காட்டு காட்டு என்று காட்டுகிறது.
ஊபர் வரச்சொல்லி போகலமா என்று எண்ணும் போது ஹாஸ்பிடல் அட்மிஷன் பயம் வந்தது. பேசாமல் பாராசிடமால் மற்றும் தொண்டைக் கரகரப்பு இருந்ததால் அஸித்ரோமைஸின் வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்று சுயமருத்துவத்துடன் பக்கத்து மருந்துக்கடையில் வாங்கிப் போட்டுக்கொண்டேன். அரை மணிக்கொரு தரம் மிதமான வெந்நீர் முன்னூறு மி.லி லோட்டாவில் தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தேன். பாவம் சங்கீதா. கால் பிடித்து தண்ணீர் கொடுத்து ஒன்றரை மணி வரை கண்கொட்டாமல் எனக்கு சிஷ்ருஷை. இப் பாவிக்கு கிடைத்த பாக்கியம்.
இரண்டு மணி. நெற்றியில் வேர்த்துவிட்டது. கால் இரண்டும் ஜில்லிட்டுப்போய் வெலவெலவென்றாகி ஷுகர் லெவல் இறங்கியது தெரிந்தது. தூரத்தில் அது சொர்க்கமா நரகமா என்று தெரியாத ஒரு மேலோக ஊர் மசமசவெனத் தெரிந்தது. இரண்டு தேக்கரண்டி சர்க்கரைப் போட்டு ஹார்லிக்ஸ் கலந்து குடித்து... சாக்கோஸ் ஒரு கப் மென்று தின்று... அரை மணியில் மீண்டு திரும்பவும் பூலோகம் வந்தடைந்தேன். ஃபேஸ்புக் கடமையாற்ற வேண்டியிருக்கிறதே!
ஜூரம் விட்டதற்கு அந்த மாத்திரைகள் மட்டும் காரணமல்ல. என்னுடைய நண்பர்களாகிய உங்களுடைய “Get Well Soon" மெசேஜ்ஜுகளும், பிரார்த்தனைகளும், அக்காக்கள் அண்ணாக்கள் தம்பிக்களின் பிரத்யேக செல் அழைப்பு விஜாரிப்புகளும் மற்றும் உங்களுக்கும் எனக்கும் இடையே இனம் காண முடியாத அன்பின் பிணைப்பும் துரிதகதியில் வேலைக்குத் திரும்பும் திராணியைக் கொடுத்திருக்கிறது.
என்னுடையது அன்பு சூழ் உலகு. ஃபேஸ்புக் எனக்களித்த வரமான ஸ்நேகிதர்களின் பிரியத்தின் சக்தி இது. அனைவருக்கும் பிரத்யேகமாக நன்றி சொல்லமுடியாததற்கு மன்னித்தருளும்படி வேண்டிக்கொண்டு............
என்றும் அன்புடன் ஆர்.வி.எஸ்.

சாதம் போட்ட அன்னபூரணிகள்

எனது பாட்டிகள் இருவருமே அம்பாள்கள். சாதம் போட்ட அன்னபூரணிகள். வித்தை கற்க உதவிய சரஸ்வதிகள். அப்பாம்மா ஜெகதாம்பாள். அம்மம்மா சாரதாம்பாள். ஜெகதாவிற்கு ”குழந்தே... சாப்டியோ... பசிக்குமேடா...”என்று வாஞ்சையோடு தலை தடவிக் கேட்கத் தெரியும். எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் போது அரை பரீட்சை லீவில் “இன்னும் உனக்கு எவ்ளோ நாள் ஸ்கூலு..” என்று கேட்பாள். “நாலு வருஷம் பாட்டி...” என்றால் “நாலு மணியா... என்னடா பேத்தறே..”ன்னு கேட்பாள். காது சுத்தமாகக் கேட்காது. செவிக்கருவிகளுக்கெல்லாம் சவால் விடும் காது. தாத்தா கைலாய பதவி அடைந்த பிறகு தலையை முண்டனம் செய்துகொண்டு நார்மடியோடு காலத்தை தள்ளினாள்.
சாரதாம்பாள், ஜெகதாவின் சாப்டியோ.. பசிக்குமேடா கூட “படிக்கறதே இல்லை.. கட்டேல போறவன்... தோசைக்கல்லை அடுப்புல போட்டதும் தட்டைத் தூக்கிண்டு வந்துடறான்.. போய்ப் படிச்சுட்டு வாடா.. அப்பதான் தோசை...” என்று விரட்டுவாள். கையில் பிரம்பிருக்கும் ஹெட் மிஸ்ட்ரஸ் போல இருந்தவள். அவளிடம்தான் வளர்ந்தேன். மடி ஆசாரம் என்பது உயிர் மூச்சு. ”என்ன பாட்டி.. காலேல குளிச்சுட்டியே... ஏன் இப்போ திரும்பவும் இப்போ மத்தியானம் ஸ்நானம் பண்றே?” என்று கேட்டால் “வயறு சரியில்லேடா... கொல்லப்பக்கம் போய்ட்டு வந்தேன்... கால் அலம்பினா போறுமா? ஸ்நானம் பண்ணிட்டேன்... கொடில மடியா புடவை ஒனத்தியிருக்கேன்.. “ என்று கூன் விழுந்த முதுகோடு கொல்லைக் கிணற்றிலிருந்து டங்குடங்கென்று வேகமாக நடந்து உள்ளே செல்வாள்.
சமையற்கட்டிலிருந்து “கையிலே.. கதை புஸ்தகம் போல்ருக்கேடா தம்பி...” என்று ரேழியில் படித்துக்கொண்டிருக்கும் என்னை கேட்பாள். ரஸ்க் தடிமனுக்கு கண்ணாடி போட்டிருந்தும் என்னுடைய அசையாத ஸ்ரத்தையான படிப்பைப் பார்த்து அது பாடபுஸ்தகமல்ல என்பதைக் கண்டுபிடித்துவிடுவாள். வெளி ஆட்களிடம் நியாய தர்மங்கள் விவாதிப்பாள். “இப்டி நடக்குமோடி இந்த லோகத்துலே...” என்று அதிசயித்து வலது கையால் தாவாங்கட்டைக்கு முட்டுக் கொடுத்து பேசுவாள்.
எண்பத்தேழு வயது வரை எங்கள் மன்னை ஹரித்ராநதியின் நான்கு கரையையும் பிரதக்ஷிணம் வந்து நடுவளாங்கோயில் வேணுகோபாலஸ்வாமியை கும்பிட்டு வீட்டுக்குள் வருவாள். தானே இருபது படி இறங்கி ஹரித்ராநதி மங்கம்மாள் படித்துறையில் ஸ்நானம் செய்வாள். தன் துணியை தானே துவைத்து மடியாக தானே கொம்பு பிடித்து உத்தரத்தில் தொங்கும் கொடியில் உலர்த்தி... “ஒரு சொம்பு பால் குடுடீ பவானி.. ஹரித்ராநதித் தாயாருக்கு விட்டுட்டு வேண்டிண்டு வரேன்...” என்று இருநூறு மிலி பாலை குளத்தில் ஊற்றி அதைத் தெய்வமாக மதித்து வேண்டிக்கொள்வாள். ஏதோ நம்பிக்கை. ”கார்த்தாலே வேண்டிண்டு பால் விட்டுட்டு வந்தேன்.. சாயரக்ஷை தொலைஞ்சு போன மோதரம் கிடைச்சுடுத்து...”. இந்த சாரதாம்பாள்தான் என்னுடைய மன்னார்குடி டேஸ் தொடரில் பாட்டி பாத்திரத்தை நிரப்புபவள்.
*
தேகாரோக்கியத்தோடு இருந்தவரையில் ஜெகதா உழைப்பின் சிகரம். கைகால்கள் விழுந்த பிறகு, அலமேலம்மா அவளை மகாராணி போல பார்த்துக்கொண்டாள். சாரதாவைவிட ஜெகதாவிற்கு சரீரம் பெருசு. ரேழி நடுவில் முக்காடுத் தலையோடு உட்கார்ந்திருக்கும் போது யார் வீட்டில் நுழைந்தாலும் “பாட்டீ... நமஸ்காரம் பண்ணிக்கிறேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ...” என்று நெடுஞ்சான்கிடையாக விழத் தோன்றும். ஆரோக்கியத்தோடு இருந்த ஜெகதா ஆயிரம் பேருக்கு சமைப்பாளாம். அவள் அருகில் சென்று கறுப்பு லக்ஷ்மியைத் தடவி கொடுத்து “விருந்தாளியெல்லாம் வந்துருக்காடி.” என்று சொன்னதும் அரை லிட்டர் பால் கூடக் கறக்குமாம். ஜெகதாவின் நடமாட்டம் கண்டவுடன் தொழுவத்தில் இருக்கும் மாடுகள் தலையை அசைத்து கழுத்தில் கட்டியிருக்கும் மணி அடித்து ஜாடையாய்ப் பேசும். வைக்கோல் பிரி உருவி போட்டுவிட்டு கழுத்தில் தடவிக்கொடுத்துவிட்டுச் செல்வாள்.
”ஸ்கூலுக்கு போலயாடா?”
“லீவு விட்ருக்கா”
“ஏன்?”
“தோ... இந்த கிரிக்கெட் மேட்ச் பார்க்கறத்துகாக..”
என்று டிவியைக் காட்டி இப்படிச் சொன்னால் நம்பிவிடுவாள். “ஓ... சர்தான்... சாப்ட வரியா?” என்று கேட்டு போட்டுவிட்டு பின்கட்டுக்குச் சென்றுவிடுவாள். லீவா? படிக்கவேண்டாமா? என்கிற கேள்விகள் அவளுக்கு கேட்கத் தெரியாது! அன்னபூரணிக்கு சரஸ்வதி டிபார்ட்மெண்ட் பற்றித் தெரியாது. ஒரு சமயம் பஸ்ஸ்டாண்ட் பக்கம் சர்க்கஸ் நடந்துகொண்டிருந்தது. வடக்கத்தியர்கள். ஜெகதாவோடு நானும் அக்காவும் சென்று பார்த்தோம். நடுவில் ஜெகதாவும் பாடிகார்டு போல இருபுறமும் நானும் கீர்த்திகாவும். உயரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடிய பெண்களைச் சிலர் ஆச்சரியத்தோடும் சிலர் ஆனந்தத்தோடும் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஜெகதா என் காதில் “பாவம்டா.. ஒரு ஜான் வயித்துப்பாடுக்காக அந்தரத்துல தொங்கறாள்கள்.. நமக்கு பகவான் நிறைய கொடுத்துருக்கான்.”
நடை தடுமாறியபோது கூட தொழுவம் எட்டிப்பார்த்து மாட்டுக்கு வாளியில் தீவனம் கலந்து வைத்து பார்த்துக்கொண்டாள். ”தட்டை அலம்பிண்டு வரியா? சாதம் போடறேன்” என்று தள்ளாத வயதிலும் கேட்டவள். ஊரிலிருந்து அகாலத்தில் யார் வந்து கதவைத் தட்டினாலும் ஜீரா ரசம் மோர் சாதமாவது கிடைக்கும். ஜெகதாவை நினைக்கும் போதெல்லாம் அன்னதானப் பிரபுவான இளையான்குடி மாற நாயனார் கதை நியாபகத்துக்கு வரும்.
இன்று ஜெகதாவின் ஸ்ரார்த்தம். சாப்பிட்டுவிட்டு கண் அயரும் நேரத்தில் சட்டென்று நினைவு அடுக்குகளிலிருந்து எழுந்திருந்த இரு பாட்டிகளும் என்னை இவ்வியாசம் எழுதச் சொன்னார்கள். இதுபோன்ற அம்பாள் பாட்டிகளின் சாம்ராஜ்யமாக வீடுகள் இருந்தபோது கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் அமைதியும் குன்றாத சந்தோஷமும் குடியிருந்தது.

Sunday, October 22, 2017

விஜயவாடா கனக துர்க்கா

குன்றுப் பாதை செப்பனிடும் பணி நடப்பதால் மின்தூக்கியில் ஏழு மாடி தூக்கிச் சென்று தேவியிடம் விட்டார்கள்.
சட்டென்று தேவலோகத்தில் நுழைந்தது போலிருந்தது. சந்தனக் காப்பில் சிரித்த முகத்துடன் அருளினாள் கனக துர்க்கா. ஸ்வயம்பு என்கிறார்கள். பொன் மஞ்சளும் அரக்குக்கலர் பார்டரும் போட்ட பட்டுப் பாவாடையில் ஜெகஜோதியாய் பார்த்தேன். அற்புதமான தரிசனம். மனசுக்குள் இனம் புரியாத நிம்மதி. அம்மாவாரு அன்பின் ஸ்வரூபமாக காட்சியளிக்கிறாள். நமது கன்னம் கிள்ளி "செல்லக் கண்ணா" என்று கொஞ்சி மடியில் இருத்திக்கொள்ளும் நம் தாய் போன்றதொரு தோற்றம்.
காஞ்சி காமாட்சி கர்ப்பக்ரஹத்தினுள் வீசும் தாழம்பூ குங்கும வாசனை கனக துர்க்கை சன்னிதியிலும் மணத்தது. ஐந்து நிமிடங்களுக்கு மேலே அவளின் அழகைக் கண்டு ரசித்து அனுபவித்ததில் பிறவிப் பயன் அடைந்தேன். பிரசாதமாகத் தந்த குங்குமத்தை நெற்றியில் தரிக்கையில் மெய் சிலிர்த்தது. சுக்ரவாரத்தில் கிடைத்த அம்மன் தரிசனத்தில் உள்ளம் பூரித்தது. ஜெகமாளும் சக்திக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
யா தேவி சர்வ பூதேஷு லக்ஷமி ரூபனே சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


கொல்கத்தா: காளியின் நகரம்


கொல்கத்தாவின் சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். “மிஷ்டர் ஆர்பியெஷ்” என்ற இன்முகத்துடன் வரவேற்ற டாக்ஸி ட்ரைவரின் காரேறித் திரும்பும் போது கண்ணில் பட்ட காம்பௌண்ட் சுவரின் காலில் பட்டை பட்டையாய் சிகப்பு வர்ணம். பான் ராஜாங்கத்துக்குள் நாம் நுழைவதை உணர்த்தும்விதமாக, மாடர்ன் ஆர்ட் போல கலைநயமாகத் துப்பியிருந்தார்கள். கிழக்கிந்திய கம்பனியார் வாணிபம் செய்ய வந்திறங்கிய இடம். அந்தக்கால பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த நகரம் என்ற எண்ணங்களுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சாலைகள் ஒன்றும் ராஜபாட்டையாக இல்லை. ஒரு முதிய நகரம் என்பது அதன் வீதிகளின் அமைப்பில் தெரிந்தது. கார்
 ஒரு சிக்னலில் நின்றது. ரோட்டோர ப்ளாட்ஃபார்மில் சுழல் நாற்காலி போட்டுக் காம்பௌண்ட் சுவரில் A4 சைஸ் கண்ணாடி மாட்டியிருந்தார்கள். தாகூர் தாடியுடன் ஒருவர் இளைஞன் ஒருவனுக்கு மீசை மழித்துக்கொண்டிருந்தார். பாதையோர டீக்கடை போல பாதையோர சலூன். கட்டிங் போது பறக்கும் முடி எங்கே போகும்...தரையில் சிதறும் முடி எங்கே பறக்கும் என்ற ஆதார ஐயம் எழுந்தது. சுத்தமான நகரமா? அதேபோல இன்னும் இரண்டு சேர்கள் அதே சாரியில் போட்டிருந்தது. மழைக்கு லீவு விடும் கடைகள்.
அடுத்தடுத்த சிக்னலில் மேலும் சில ஆச்சரியங்கள் கண்ணில்பட்டன. கை ரிக்ஷா இழுத்துக்கொண்டு தேசலான ஒருவர் நின்றிருந்தார். நான் ஃபோட்டோ எடுப்பதைக் கண்டு சிரிப்புடன் ஃபோட்டோவுக்கு நின்றார். கண்களில் அசதியையும் மீறி உழைக்கும் வைராக்கியம் தெரிந்தது. தமிழகத்தில் கை ரிக்ஷாக்கள் எப்பவோ ஒழிக்கப்பட்ட நிலையில் சிவப்பு ஆளும் பிரதேசத்தில் இன்னும் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. அடுத்து No Refusal என்று மேனியில் எழுதிய வாசங்களுடன் ஓடும் டாக்ஸிக்கள். விஜாரித்ததில், நம்மூரில் “இல்ல வராதுப்பா...” என்று கழன்று கொள்ளும் ஆட்டோ ஆசாமிகள் போலில்லாமல் கூப்பிட்டால் எங்கும் வருவார்களாம்.
மாலை வேளையில் பேலூர் ராமகிருஷ்ண மடம் சென்றேன். ஆறரைக்கு மேல் ராமகிருஷ்ணருக்கு ஆரத்தி நடக்கும். ரொம்பவும் விசேஷம் என்று உள்ளூர் நண்பர் சொன்னார். சாரதா தேவிக்கும் ராமகிருஷ்ணருக்கும் தனித்தனி சன்னிதிகள். கோயில்கள் என்றும் சொல்லலாம். பிரம்மாண்டமான க்ரில் கதவைத் தாண்டியதும் இருபக்கங்களும் மரங்கள் சூழ்ந்திருக்கும் நடைபாதை. தூரத்தில் கொல்லைப்புற வேலிக்கப்பால் ஹூக்ளி நதி ஓடுவது தெரிகிறது. கங்கையின் மேற்குக் கரை அது. புனிதம் நிரம்பியது. காசிக்கு இணையாக புகழப்படுவது. சுற்றுப்புற அமைதியில் நாமும் வாயைத் திறக்காமல் நுழைகிறோம்.
சந்திர பிரபை போன்ற மாடங்கள் வைத்து பத்து படி ஏறி நுழைய வேண்டிய ஒரு அரண்மனை போன்ற தோற்றம். ராஜதர்பார் நடக்கும் இடம் போல உள்ளே இருந்தது. அந்தப் பெரிய அறை முழுவதும் நிரம்பியிருந்தது. கால் மடக்க முடியாதவர்களுக்காக தூணோரங்களில் பிளாஸ்டிக் முக்காலிகள் கிடந்தன. வயதானவர்கள் கீழே அமர்ந்திருக்க வாலிப வயசில் சிலர் முக்காலி மேல் இருந்தார்கள். எதிரே வெண் பளிங்கு சிலையில் ராமகிருஷ்ணர் தெரிந்தார். ஆரத்தி ஆரம்பிக்கவில்லை. கையில் சிலர் கையடக்க தோத்திர புத்தகங்களோடு அமர்ந்திருந்தார்கள். என் பக்கத்தில் கூன் போடாமல் கண் மூடி நிமிர்ந்து அமர்ந்திருந்த இளைஞன் விவேகாநந்தரால் ஈர்க்கப்பட்ட நரேந்திரனாக இருக்கக்கூடும்.
ஆறரை மணிக்கு காவியுடையில் தலைமை சன்னியாசி வந்து ஆரம்பித்தார்கள். அதுவரை கோரஸாக பாடியதில் “ராம... கிருஷ்ணா....” மட்டும் எனக்கு புரிந்தது. ஆனால் அந்த தர்பார் போன்ற அறையில் அத்துணை பேர் குழுமி ஸ்ரீ ராம கிருஷ்ணரின் முன் தியான நிலையில் இருப்பதைப் பார்க்க மிகவும் ஆனந்தமாக இருந்தது. பஜனை கால் மணி நேரம் நடந்தது. பத்ம பீடம் போன்ற இடத்தில் அவரின் சிலாரூபம் அமைந்திருந்தது. அங்கும் சன்னிதி படியிலும் எதிரிலிருக்கும் பூந்தோட்டத்திலும் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டாடிய பிரகிருதிகளும் இருந்தார்கள்.
ஆற்றுக்குள் இறங்க அனுமதிக்கவில்லை. எட்டிப் பார்த்து கால் நனைத்து கங்கையின் தங்கை ஹூக்ளியின் புனிதநீரை கையில் அள்ளி ப்ரோக்ஷணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். தக்ஷிணேஷ்வரத்தில் செய்துகொள்ளலாம். அக்கரையில் உள்ளது தக்ஷிணேஷ்வரம் என்று உடன் வந்த உள்ளூர் நண்பர் ஆறுதல் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் எல்லா கிளைகளிலும் ஒரு ஒழுங்கு காணப்படுகிறது. மடத்தின் உள்ளே சுத்தமும் சுகாதாரமும் பேணப்படுகிறது.
(*)
தக்ஷிணேஷ்வரம் கோயிலின் உள்ளே மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு செல்லக் கூடாது என்று இறங்கியதும் சொன்னார்கள். உடன் வந்த சாரதியிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம். ஸ்ரீராமகிருஷ்ணர் சாரதா தேவியைச் சந்தித்த இடம். பவதாரிணியாக ஸ்ரீமாதா அருளாட்சி செய்யுமிடம். கோயிலின் அருகிலேயே போலீஸ் பூத் இருக்கிறது. உள்ளே நுழையும் போது மெட்டல் டிடக்டெர் வாசலுக்குப் பிறகு பைரவர்கள் படுத்திருந்தார்கள். மிதிக்காமல் உள்ளே நுழைந்தோம்.
ஏழு தாண்டிய முன்னிரவு நேரம். தூரத்தில் பஜனை ஒலி கேட்டது. வங்காள கோரஸுக்கு இதமாக ஜால்ராவும் டோலக்கியின் லயமும் என்னை என்னவோ செய்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் பவதாரிணியின் சன்னிதியின் எதிரே தியானத்தில் மூன்று நாட்கள் அமர்ந்திருந்தார் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. தனது சொந்த ஊரிலிருந்து நடந்து வந்த சாரதா தேவி தக்ஷிணேஷ்வரத்திற்கு அருகில் வரும்போது ஜுரம் வந்து ஒரு மரத்தடியில் சாய்ந்துவிட்டார்களாம். வயதான மூதாட்டி ரூபத்தில் வந்த பவதாரிணி ஆறுதலாகத் தலையை வருட ஜுரம் விட்டு விடுவிடுவென்று தக்ஷிணேஷ்வரம் வந்தார்களாம்.
நெடிய வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது ஒவ்வொரு கதையாக நினைவில் முட்டியது. யாரும் குறுக்கே புகாமல் நகர்ந்த வரிசை. வரிசையில் நின்று கொண்டிருக்கும் போதே சன்னிதியின் எதிரே இருந்த மண்டபத்தில் பஜனை பாடிக்கொண்டிருந்த குழுவின் மேல் கண்பார்வை படர்ந்தது. எட்டு ஒன்பது பேர் இருப்பார்கள். அனைவரும் சன்னிதி நோக்கி அமர்ந்திருந்தார்கள். குழுவின் எதோ ஒரு ஓரத்திலிருந்து பாடல் எழுந்து பின்னர் அனைவரும் லாவணி பாடினார்கள். நடுவில் அமர்ந்திருந்தவர் வேறொரு உலகத்தில் இருந்தார். கண்கள் சொருகி அவர் கோரஸோடு சேரும் போது இந்த வரிசையை விட்டு நடந்து சென்று அவருடன் அமர்ந்துவிட மாட்டோமா என்ற ஆவல் பிறந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி நிலைக்கு சென்றதன் பின்னணி விளங்கியது. ஆகர்ஷணம் நிறைந்த சன்னிதி. நிற்க. இதுவரை நான் பவதாரிணியை தரிசித்ததில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்த க்யூ அப்படியே நிற்காதா இன்னும் செவியில் அந்த பஜனாம்ருதம் பாயாதா என்ற எண்ணம் மேலோங்கியது. சன்னிதியை நெருங்கிவிட்டோம். என் முன்னால் சென்ற நண்பர் “ம்... திரும்பிப் பாருங்க...” என்றார். சன்னிதி உள்ளே பார்வை நுழைந்ததும் மேனி சிலிர்த்தது. கறுத்த தேகத்தில் சிகப்பு வஸ்திரத்துடன் மூன்றடியில் நின்ற திருக்கோலம். இரத்த நிறத்தில் வெளியே தொங்கும் நாக்கு. காலடியில் சிவன். அவருக்கும் கீழே ஆயிரம் இதழ் கொண்ட வெள்ளித் தாமரை. கரத்துக்கு ஒரு ஆயுதத்துடன் தசபுஜங்கள். உள்ளே நிற்கும் பாண்டாக்கள் கண்ணில் படவில்லை. சன்னிதியின் வெளிச்சம் தெரியவில்லை. நேரம் காலம் தெரியவில்லை. அந்த உருவத்துக்கு முன்னால் உங்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. நம்முள் ஏதோ ஒரு இனம் புரியாத அதிர்வு உண்டாகி பரவச நிலையை அடைகிறோம். நாற்பது விநாடிகளுக்கு மேல் நம்மால் தொடர்ந்து பார்க்க இயலவில்லை.
வெளியே வந்ததும் ஒரு பெரும் விடுதலை உணர்ச்சி. சுற்றி வரும் பிரகாரத்தில் அதே காளியை ஆளுயர படமாக்கி ஃப்ரேம் போட்டு வைத்திருக்கிறார்கள். பக்தர்கள் தொட்டுத் தொட்டு கும்பிடுகிறார்கள். மண்டபத்தில் பஜனை இன்னமும் தொடர்ந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் கால் இழுத்தது. சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பவளாம் இந்தக் காளி. என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவா இவ்வளவு தூரம் வந்தாய்? என்று கேட்ட ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இல்லை.. உங்களுடன் சேர்ந்து இம்மனித குலத்திற்கு சேவை புரிய வந்தேன் என்று சாரதாதேவி பதிலளித்த இடமாம். தன் அண்ணனிற்குப் பிறகு ராமகிருஷ்ணர் பணிபுரிந்த கோயில் அது.
பிரகாரத்தில் சிறு சிறு சன்னிதிகளில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. அதன் ஓரத்தில் ஹூக்ளி நதியின் கிழக்குக் கரை. ஒரு சின்ன பாதை வழியாக ஹூக்ளிக்கு வருகிறோம். சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. கங்கையுடனான எனது முதல் ஸ்பரிஸம். முதலில் காலை நனைப்பதற்கு பதிலாக குனிந்து ஒரு கை நீரை அள்ளி புரோக்ஷணம் செய்து கொண்டேன். ஜிலீர் என்றிருந்தது. ஒரு படி இறங்கி நின்றபோது மனசு நிறைந்துபோனது.
தக்ஷிணேஷ்வர் கோயில் வாசலில் இரண்டு உணவு விடுதிகள் இருக்கிறது. பக்தர்களைச் சாப்பிடக் கூவி அழைக்கிறார்கள். பெங்காலியில் அவர்களது கூப்பாடு விசித்திரமாக இருக்கிறது. Autobiography of a Yogi யில் பரமஹம்ஸ யோகானந்தா எழுதிய ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவரது சகோதரியின் கணவர் சதீஷ் இறை நம்பிக்கையில்லாதவர். அவரை தக்ஷிணேஷ்வர் கோயிலுக்கு அழைத்துச் சென்றால் மாற்றம் நிகழலாம் என்பது அனைவரது விருப்பமும். அப்படியே அழைத்துச் சென்றார்கள். அவர் கோபத்தில் கூச்சலிட்டார். மேலும் “எனக்கு மதிய உணவு வேண்டும். இல்லையென்றால்...அவ்வளவுதான்..” என்று எச்சரித்தார். “அன்னை காளி அருளுவாள். கவலையில்லை. வாருங்கள்” என்று அழைத்துச்சென்றார் யோகானந்தா.
யோகானந்தா தியானத்தில் மூழ்கிவிடுகிறார். கோயில் நடை சார்த்தும் வேளை வந்துவிட்டது. சதீஷ் குதியாக் குதிக்கிறார். நிஷ்டையில் யோகானந்தா. கடைசியில் கண் விழித்துப் பார்த்த போது சதீஷ் எதிரில் நின்று “கோயிலும் சார்த்திவிட்டார்கள். என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போட்டுவிட்டாய்.. உன்னோடு கோயிலுக்கு வந்ததன் பலன்” என்று எகிறினார். அப்போது அக்கோயிலின் பாண்டா பொறுமையாக பரமஹம்ஸ யோகானந்தரிடம் வந்தார். “உங்களிடம் ஒரு தீட்சண்யம் இருக்கிறது. உங்களைப் பார்த்தவுடனேயே நான் உங்கள் குடும்பத்திற்கான உணவை தனியே எடுத்து வைத்திருக்கிறேன். இது அன்னைக் காளியின் அனுக்ரஹம்” என்றார். சத்தமிட்ட சதீஷின் முகம் வெளிறியது.அவர் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்.
(*)
தக்ஷிணேஷ்வரத்தில் ஏற்கனவே மணி எட்டரை ஆகியிருந்தது. அன்று அமாவாசை. காலிகட்டில் பதினோறு மணி வரை கோயில் திறந்திருக்கும் என்று அழைத்துச் சென்றார் நண்பர். இந்த காலிகட் என்ற பெயரை வைத்துதான் இந்த நகரம் கல்கத்தா என்றழைக்கப்பட்டதாம். கங்கையின் கிளை நதியான ஹூக்ளி (பாகீரதி என்றும் அழைக்கப்படுகிறது)யின் கரையோரத்தில் அமைந்த கோயிலாதலால் காலிகட். நாட்கள் செல்லச் செல்ல நதி ஓரம் போனது என்று சொல்கிறார்கள். இப்போது ஒரு சின்னக் கால்வாய் போல ஒன்று ஓடி ஹூக்ளியில் கலக்கிறது. இதற்கு ஆதி கங்கா என்று பெயர். ஒரு சீனியர் பாண்டாவுக்குச் சொல்லி வைத்திருந்தார். கோயில் என்றால் நீங்கள் நினைப்பது போல பெரிய கோபுரமெல்லாம் இல்லை.
கோயிலைச் சுற்றிலும் கடைகள். எல்லாக் கடைகளிலும் பேடா விற்கிறார்கள். நம்மூர் பெருமாள் கோயில்களில் கல்கண்டு நெய்வேத்யம் செய்வது போல இங்கே பேடா நெய்வேத்யம். சீனியர் பாண்டாவுக்கும் ஒரு கடை இருந்தது. சன்னிதிக்கு பின்னால் இருந்தது அந்தக் கடை. ஒரு தெருநாய் ஈ மொய்க்கக் காலைப் பரப்பி படுத்திருக்க பக்கத்தில் நான்கு பேர் மும்முரமாகச் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். மணி ஒன்பதரை. கோயிலென்ற புனிதத்தலத்திற்கான அறிகுறியெல்லாமில்லை. சிவப்பு அரளி போன்ற மாலை ஒன்றை வாங்கிக்கொண்டோம். சீனியர் பாண்டா உள்ளே அழைத்துச்சென்றார். ஒரு மரத்தடியில் காளியின் திருமுகம் காட்சியளித்தது. விழிகளும் நெற்றியில் பொட்டும் சிவப்பாக இருந்தது. நாக்கு தங்கத்தில் வெளியே தொங்கியது. கிட்டத்தட்ட மயிலை முண்டகக்கண்ணியம்மன் போல ஒரு சொரூபம்.
என் கையில் மலர்களைக் கொடுத்து ”ஸர்ப்ப...” என்று ஆரம்பித்த பாண்டாவை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் போதே “மங்கள...” என்றார். புரிந்துகொண்டேன். “ஸர்வ மங்கள மாங்கல்யே...”வை நானே தொடர்ந்தேன். நான் ஆரம்பிக்க அவர் நிறுத்திக்கொண்டார். மந்திரம் சொல்லி அந்த புஷ்பங்களை ஜெகன்மாதாவின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்தேன். ஹோமகுண்டத்திலிருந்து எடுத்த கருஞ்சாந்தை என் நெற்றியில் தரித்துவிட்டார் பாண்டா. குனிந்து அதை ஏற்றுக்கொள்ளும் போது காளியை ஓரக்கண்ணால் பார்த்தேன். ஹப்பா! ஒரு படபடப்பு வந்தது. அருட்கடாக்ஷம் மிகுந்த தெய்வம் என்பதை உணர்ந்தேன்.
காளிக்குப் பின்னால் சிவன் சன்னதி ஒன்று இருந்தது. கண்ணப்ப நாயனார் கட்டிப் பிடித்துக் களித்தது போல ஒரு பெண்மணி லிங்கத்தைக் கட்டிப்பிடித்தபடி இருந்தார். அவரை நகர்ந்துகொள்ளச் சொல்லி ஸ்வாமி கும்பிடுவதில் எனக்கு இஷ்டமில்லை. கன்னத்தில் போட்டுக்கொண்டு நகர்ந்தேன்.
வெளியே சீட்டுக்கச்சேரி இன்னமும் தொடர்ந்துகொண்டிருந்தது. நாயின் உறக்கம் கலையவில்லை. இன்னமும் சில கடைகள் திறந்திருந்தன. காலைத் தட்டி பிச்சை கேட்பவர்கள் சிலர் இன்னமும் விழித்திருந்தார்கள். மூடிய கடையின் வாசலில் அடுப்பு மூட்டி உணவு தயார் செய்துகொண்டிருந்த புல்லாக்கு அம்மணிக்கு இரண்டு பிள்ளைகள் போலிருக்கிறது. கட்டாந்தரையில் சேலையை விரித்து தலைக்கு முண்டாசு போல சுருட்டியிருந்தார். இரண்டும் கைகோர்த்து அதன் மேல் தலைவைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. தாயே

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails