Sunday, October 22, 2017

சாப்பாட்டு பவன்கள்

”மாவடு இருக்கா?”
“இத்வா ஜி?”
“ஊஹும். இது கட் மாங்கோ... மாவடு கேட்டேன். முழுசு முழுசா இருக்குமே...”
அப்படி முழுசா இருக்குமே என்று விரல்களால் மோத்தா கோலி உருட்டிக் கேட்ட மாமாவுக்கு சதாபிஷேகம் ஆகியிருக்க வேண்டும். படிய வாரிய கேசம். பேண்ட்டிற்குள் சர்ட்டை இன் செய்து மிடுக்காக இருந்தார். தீர்க்க சுமங்கலியாக வகிட்டில் உச்சிக் குங்குமத்தோடு மாமியும் பக்கத்தில் தோளுரசி நின்றிருந்தார்கள்.
“உனக்கு தமிழ் தெரியுமா?”
நெற்றியில் நீறு பூசியிருந்த ஏடூபி ஆள் கண்ணிரண்டும் கோலிக்குண்டு போல விழித்தார்.
“தெரியாது சார்...” என்றேன் அருகிலிருந்து வேடிக்கைப் பார்த்த நான்.
“பக்கத்துல ஒருத்தண்ட்ட கேட்டேன். அவனும் முழிக்கறான். யார்க்காவது தமிழ் தெரியுமா? ஏம்பா உனக்கு ஹிந்தியும் தெரியலையே.. நீ யாரு?”
“நான் பெங்காலி சார்...” இதை தூய தமிழில் செப்பிக் காவிக் கறை படிந்த பல்லைக் காட்டினார் அந்த பணியாளர். ஆனால் வேலை செய்யும் அனைவருக்கும் நம்பர்கள் நல்ல தமிழில் தெரிந்திருக்கிறது. அரைக் கிலோ கால் கிலோ மிக்சர் விலை சொல்வதற்கு எண்கள் அவசியம். கூட்டல் கழித்தல் பெருக்கல் எல்லாமே தமிழில் வாய்விட்டு சொல்லிக்கொண்டே கணக்கு பார்க்கிறார்கள். பேஷ்.
மாவடு வாங்க வந்த மாமாவிற்கு நாடு தாண்டி எல்லை கடந்துவிட்டோமோ என்கிற மன உளைச்சல். மேலும், கர்ப்பஸ்திரீக்கு புளிப்பு மிட்டாய் போல மாவடு இல்லாமல் வீட்டுக்கு செல்வதில்லை என்று சங்கல்பம் செய்துகொண்டு வந்திருக்கிறார். திரும்பவும் ஒரு தடவை “ஏம்ப்பா அந்த மாவடுங்கிறது....” என்று செமினார் எடுக்க ஆரம்பித்தார். நான் அவர் துணைக்குச் சென்றேன். “Tender mango dipped in salt and spicy water..." என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டேன். அவனுக்கு தமிழே தகராறு.
“இல்லேன்னா...வுட்டுட்டு... மல்லுக்கு நிக்காம வாங்கோளேன்...” மாமி முதல்முறையாக வாய் திறந்து முத்தை உதிர்த்தார். மாமாவைத் தோளில் செல்லமாக இடித்தது எனக்கு வலித்தது.
“நேரா இருக்கிற பாட்டில் அப்படிதானே இருக்கு...” விடாக்கொண்டனாக கையை நீட்டிக் கொண்டு நின்றார் மாமா. வேண்டுதல் நிறைவேறாமல் அங்கிருந்து நகர்வதாக இல்லை. சபல நாக்கு சப்பு கொட்டுவதற்கு துடித்தது.
“சூப்பர்வைசர் யாராவது நிச்சயம் தமிழ் இருப்பாங்க.. “ என்று என் பங்கிற்கு கஸ்டமர் சப்போர்ட்டில் இறங்கினேன். அவரது கண்களில் நம்பிக்கை பிறந்து புத்தொளி வீசத் தொடங்கியது. நான் சூப்பர்வைசர் என்று சொன்னதும் ஹிந்தியிலேயே இன்னொருவர் உள் பக்கம் பார்த்து “மேனேஜர் ஜி” என்று குரல் விட்டார்.
கண நேரத்திற்குள் “என்ன சார் வேணும்?” சஃபாரி சூட்டில் சிரித்த முகமாக வந்தார் சூ.
“மாவடு இருக்கா?” ரெண்டில் ஒன்று தெரிஞ்சாகணும் தொனியில் தீர்மானமாகக் கேட்டார் மாமா. ஆட்காட்டி விரல் கொன்னுடுவேன் காட்டிக்கொண்டிருந்தது. மாமியின் முகத்தில் கொஞ்சம் எரிச்சல் படர்ந்திருந்தது. மாவடுக்காக தேவுடு காக்க வைத்தது மாமியின் சுள்னெஸ்ஸுக்கு காரணம்.
“இல்ல சார்.. ஆவக்காய் இருக்கு.. கட் மாங்கோ இருக்கு...”
ஏடூபி சூப்பர்வைஸருடன் பேச்சை நறுக்கிவிட்டு “வேணாம். வாடி போகலாம்...” என்று மாமிக்கு கட்டளையிட்டுவிட்டு விடுவிடுவென்று கடையிறங்கிவிட்டார். நடையில் வேகமிருந்தது. கோபம்.
இப்படி வாய்க்கு ரொம்பவும் வக்கணையாக கேட்டால் “அப்டியென்ன வாயீ உனக்கு. கேட்கற நாக்கை இழுத்து வச்சு அறுடி...” என்று என் சாரதா பாட்டியிடம் வசவு வாங்க வேண்டியிருக்கும். தட்டுல விழறதைச் சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடுவேன்.
பெங்காலிப் பையன் இன்னமும் காவிக்கறை படிந்த பல்லைக்காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தான்.
சென்னையின் அநேக பவன்களில் வடக்கத்திய ஆதிக்கம் நிறைந்துவிட்டது. தமிழ், கூலி நிறைய கேட்கிறதாம். ஹிந்தி அரசியல் செய்யும் திராவிடத் தமிழர்கள் கூட சரவண பவனோ அடையார் ஆனந்த பவனோ சென்றால் “ஏக் ப்ளேட் இட்லி தீஜியே” என்று கேட்டு வாங்கி சாப்பிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று இன்று புரிந்தது.

1 comments:

ஸ்ரீராம். said...

நாம் கூட இந்தியோ, பீஹாரியோ கற்றுக்கொண்டு விடுவோம். இங்கு வாழும் அவர்கள் தமிழ் பேச மாட்டார்கள். எனக்குத் தெரிந்து தமிழ் பேசும் புகழ்பெற்ற வடக்கத்தி ஆள் நம் எல்லோருக்கும் அலைபேசி நமது ஏ டி எம் கார்ட் நம்பர் கேட்பவர்தான். "பாங்க் மானேஜரு பேஸறேன்..."....!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails