Sunday, October 22, 2017

நால்வர் மாயம்

நள்ளிரவு நெருங்கும் நேரம். தனிமையாகக் காற்று வாங்கும் கடற்கரை. உச்சியில் முழுநிலா. எழுந்து அடங்கும் வெள்ளி அலைகள். மேல் சட்டையில்லாத நான்கு சிறுவர்கள் அலை பார்த்தபடி அண்ட்ராயரோடு அமர்ந்திருக்கிறார்கள்.
”டேய்... வீட்டுக்கு ஓடுங்கடா.. மணி எத்தினியாவுது?”
அமைதி.
“டேய்... சொல்றேனில்ல..”
மீண்டும் அமைதி.
“அடிங்.. ரெண்டு போட்டேன்னா தெரியுமா?”
“ஏட்டு.... போன நாயித்துக்கிளமதானே கடையாண்ட வந்து ஒரு கிலோ மீனு வாங்கிட்டுப் போனே....”
“அதனால இன்னாடா... ரொம்ப தெனாவெட்டா?.... சுளுக்கெடுத்துடுவேன்.. பார்த்துக்க.”
“சும்மா எகிறாத ஏட்டு... அடுத்த தபா உனக்கு மீனு வாணாமா?” வளர்த்தியானவன் நெஞ்சு நிமிர்த்திக் கேட்டான்.
“ஹாங்.. திமிரா பேசுறே நீயி.. உன்னிய என்ன பண்றேன் பாரு”
“விஷ்...விஷ்”. காற்றைக் கிழித்து அவர்கள் மேல் படாமல் லத்தி சுழன்றது.
நால்வரும் ஒன்றும் பேசாமல் அமைதியாகக் கலைந்தனர். அங்கே கீழே கிடந்த காகிதத்தின் மேல் டார்ச் அடித்துப் பார்த்தார் ஏட்டு சண்முகம்.”பொட்டலம் கிட்டலம் விக்கறானுங்களா?” நினைத்துக்கொண்டார்.
ஒளி வட்டத்தில் தெரிந்த அந்த தினசரியில் “மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நால்வர் மாயம்”. தலைப்பிட்டச் செய்தியை மேய்ந்தார். நிமிர்ந்து பார்த்தார். தூரத்தில் அந்த நால்வரும் தளர்நடையில் சென்றுகொண்டிருந்தார்கள்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails