Thursday, April 28, 2011

ஜானகி மந்திரம்!

ரொம்ப சீரியஸா நான் சயின்ஸ்ல சிலுத்துக்கிட்டு சிலிகான் காதலி எழுதிகிட்டு இருந்த போன வாரம் ஜானகியம்மாவின் பிறந்தநாள் வந்துட்டு போச்சு. எண்பதுகளில் கடைசியில் என்னுடைய கொப்புளிக்கும் இளம் பிராயத்தில் எஸ்.பி.பி யுடன் சேர்ந்து அவர் பாடிய பல டூயட்டுகள் நிறைய பேரை காதலிக்க வைத்தது. பல பேரை பித்தம் பிடிக்க வைத்தது.

என்னுடைய பள்ளி/கல்லூரி நாட்களில் நிறைய தாவணி போட்ட பெண்கள் வெள்ளித்திரையில் ராதா "ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு" என்று ஏங்கிப் பாடியது போல இந்தப் பாட்டை பாயில் படுத்து பாடிக்கொண்டு இன்பக் கனா பல கண்டார்கள். அப்படி பாடியவர்கள் பார்ப்பதற்கு ராதா போலும் இல்லை குரலிலும் ஜானகி போலும் இல்லை என்பது என் இளமைக்கு ஒரு வருத்தமான செய்தி தான்.

"இச்.இச்." என்று அனு கன்னத்தில் ரெண்டு வைத்து பாக்கியராஜ் தனது கட்டிலை ரோட்டுக்கு மேலே ஒரு இராப்பொழுதில் பறக்கவிட்டு இந்த பாட்டு சீனை ஆரம்பித்திருப்பார். படம் சின்ன வீடு. பாட்டு ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் தனது உடற்பயிற்சிகளை அவர்பாட்டுக்கு கடமையாய் செய்துகொண்டிருப்பார். இதில் ஒரு குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால் கூட ஆடும் அனுவிற்கு ஆடத்தெரிந்தால் கூட ஜோடியாக எக்செர்சைஸ் தான் கட்டாயமாக பண்ணவேண்டும். ஸ்டெப்ஸ் வைத்து பார்க்கும் போது புலியூர் சரோஜா அக்காவாகத்தான் இருக்கணும். அக்கா ஒரு ஃபிட்னெஸ் சென்ட்டர் வைத்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும். எஸ்.பி.பி வழக்கம் போல அற்புதமாக பாடி நமக்கும் ஒரு சின்ன வீடு செட் பண்ணும் ஆசையை கிளப்பியிருப்பார். ராஜாவின் ஆளை இழுக்கும் இசை. நடுநடுவே வரும் தக்.தக்..தக்.தக். ரசிக்கும் நமக்கு ஒரு அழகிய திக்.திக்.திக்.திக்.

பாவம். எவ்வளவு நல்லா நடிச்சாலும் வினீத் ஒரு ராசியில்லாத நடிகர் அப்படின்னு முத்திரை குத்தி ஓரங்கட்டி வைத்துவிட்டார்கள். வினீத் நடித்த ஆவாரம் பூ ஒரு அற்புதமான படம். ஏ படம் தான். ஆனாலும் ஒரு மனநிலை பிழன்றவனின் உள்ளத்தை ஓவியமாக காண்பித்த படம். வினீத் உடன் நடித்த நந்தினியும் மிக நன்றாக நடித்திருப்பார். என்னுடைய கல்லூரிக் காலங்களில் வந்த படம் இது. பாதி பேர் இதை இளமைக்கு விருந்தாக பார்த்தார்கள். இந்தப் படத்தில் ஜேசுதாஸ் பாடிய மந்திரம் இது மந்திரம் எனும் பாடல் இளையராஜாவின் ஒரு உன்னத படைப்பு. நன்றாக படமாக்கப் பட்டிருக்கும். இப்பதிவின் நாயகி ஜானகி ஆதலால் அம்மையாரும் எஸ்.பி.பி யும் சேர்ந்து பாடிய சாமிகிட்ட சொல்லிவச்சு..


சுகமான சுமையாக சௌந்தர்யாவை உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு கார்த்தி பாடுவதை நான் கல்லூரியில் பயிலும் காலத்தில் மெட்ராசுக்கு வந்த போது குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் கொசுக்கடியோடு தியேட்டர் ரொம்ப ரிலீஸ் ஆன ரெண்டாம் நாள் பார்த்தேன். படத்தில் ஆர்.வி.உதயகுமார் மாமா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், லவ்வர் செண்டிமெண்ட் என்று ஓராயிரம் செண்டிமெண்ட் வைத்து பொளந்து கட்டியிருப்பார். என்ன இருந்தாலும் மனதைரியத்தோடு அத்தனை கடியிலும் (கொசு..கொசு..) விடாப்பிடியாக கடைசி வரை அந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது யாரோ ஓடிவந்து எனக்கு 'ரசிகபூஷன்' விருது கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். உஹும்.. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும் பாடிய நெஞ்சுக்குள்ள இன்னாரென்று ஒரு சூப்பெர்ப் ஹிட். எனக்கு இன்னொரு பேர் கார்த்திக் என்று இந்த பதிவு படிப்போர் அறிக. அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன் என்றும் அறிக.


ரஞ்சிதா சாமியாரிடம் மாட்டிக்கொள்வதற்கு வெகு காலத்திற்கு முன்பு நடித்த கர்ணா படத்தில் வரும் மலரே மௌனமாவும் நல்ல பாடல். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரிப் பெண் ஒருத்தி பேருந்து பயணத்தில் பெண்கள் பக்கத்தில் அமர்ந்து மௌனமாக வந்த போது என்னுடைய ஒரு அராத்து நண்பன் கட்டை குரலில் "மலரே... மௌனமா" என்று பாடியதும் அந்தப் பெண் அலறியடித்துக்கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விடுவிடுவென்று நடையை கட்டியது. பயத்தில் பத்து நாள் யாரிடமும் பேசியிருக்காது என்பது திண்ணம். இதை விட அவமானம் சைட் அடிக்கும் பிராயத்தில் ஒருத்தனுக்கு இருக்க முடியாது. இருந்தாலும் ரொம்ப நாளைக்கு அவன் ம.மௌ மௌனமாக பாடிக்கொண்டே இருந்தான். "மாப்ள நல்லவேளை கால்ல கிடக்கறதை கயட்டி அடிக்காம விட்டாளே!" என்று நாங்களும் ரொம்ப நாள் அவனை சத்தமாக ஓட்டிக்கொண்டிருந்தோம். பாடலில் ஜானகியம்மாவின் அந்த கொஞ்சல் ததும்பும் ஏற்ற இறக்கங்கள் ரஞ்சிதாவிற்கு நடிக்கும்(?!) போது நிச்சயம் பக்க பலமாக இருந்திருக்கும்.

அண்ணனும் தம்பியும் தன் மாமன் மகளை லவ்வும் படம் சின்னத் தம்பி பெரிய தம்பி. நதியா வழக்கம் போல இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த படம். இக்காலத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் கவனிக்கவும். சுடிதார், ஸ்கர்ட் போன்று அந்தக் காலத்தில் அதி நவீன உடைகள் அணிந்து நடித்து நதியா வளையல், நதியா புடவை, நதியா பொட்டு, நதியா ஸ்கர்ட்டு என்று சகலத்திர்க்கும் தன் பெயரை சார்த்திக்கொண்ட பெருமை பெற்றவர். நல்லவேளை எந்த கொலை வெறி ரசிகனும் பித்தம் தலைக்கேறி தன்னை பெற்றவர்களை நதியா அப்பா, நதியா அம்மா என்று அழைக்கவில்லை. குஷ்பு அலைக்கு முன்னர் நதியாவின் நதியலை தமிழக ரசிக நெஞ்சங்களை இழுத்துச் சென்றது.


நல்ல குளிரில் பிரபுவையும் ராதாவையும் ஓடவிட்டு எடுத்த இந்த பாடல் நம் செவிகளுக்கு ஒரு அற்புதமான விருந்து. கைராசிக்காரன் என்ற இந்தப் படம் ராசியாக போணியானதா என்று தெரியவில்லை ஆனால் இந்தப் பாடல் ஒரு அமிர்தம். ஒரு நூறு வயலின்கள் ஒரு சேர இழுஇழு என்று இழுக்கும் போது நாயகனும் நாயகியும் ஓடிவருவது முதல் டெம்போ. அப்புறம் எடுத்த வுடனேய அண்ணன் எஸ்.பி.பி. ஆரம்பிக்கும் நிலவொன்று கண்டேன்... அடாடா.. ஒரு ரெண்டு மூணு தடவை அந்த ஆரம்பத்தை மட்டும் கேட்டுவிட்டு தான் பாட்டிர்க்குள்ளேயே செல்வேன். கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம் என்று ஆரம்பிக்கும் ஜானகியின் குரல் குற்றாலமாக வரும்.

பின் குறிப்பு: சிலிகான் காதலி குறுந்தொடராக எழுதலாம் என்று நினைத்தேன். நீள்கிறது. அதனால் இந்தப் பதிவு அதற்கு ஒரு இடைவேளையாக இங்கே. அப்பாடி என்று நாலு பேர் பெருமூச்சு விடுவது கேட்கிறது. விடாது கருப்பாக உங்களை விடாது சிலிகான்.

பட உதவி: us.7digital.com
-

Wednesday, April 20, 2011

ஐவர்

Thirumazhapadi

ஊர்: திருமழபாடி
இடம்: வைத்தியநாதர் சுவாமி சன்னதி
மனுஷன்: ஈர்க்குச்சி ராஜ்கிரண்

புது சொக்காய் புது பேண்ட்டுடன் திருஷ்டிப்பொட்டு கலரில் கருகருவென்று அழகாய் கொழுக்கு மொழுக்காய் இருந்தது அந்தக் குழந்தை. தலையில் சந்தனம் கரைத்து இருகையாலும் குழைத்து மொட்டையடித்த எரிச்சல் தெரியாமல் இருக்க சதும்ப பூசியிருந்தார்கள். அந்தக் கருப்பனின் அம்மாவும் அம்மாவைப் பெற்ற புண்ணியவதியும் அர்ச்சனைக்கு கொடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த எண்ணெய் தேய்த்துக் குளிக்க தயாராய் இருந்த தூணில் சாய்ந்து காத்திருந்தவுடன் ஐந்து நிமிடத்தில் ஒல்லியான ஒரு ராஜ்கிரண் மாமா அடியாள் நடையுடன் வந்தார். கீழே குனிந்து குப்பையை பொறுக்கச் சொன்னால் ராமர் ஒடித்த சிவதனசு போல இரண்டாக ஒடிந்து விடுவார். அவ்வளவு Fragile. கட்டம் போட்ட தூக்கி கட்டிய கைலியுடன், கருங் கழுத்து வேர்வைக்கு ஒரு கசங்கிய அழுக்கு கர்ச்சீப். அக்குளில் வேர்த்து அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மக்களை மூக்கின் மேல் விரல் வைக்கத் தூண்டியது. வைத்தியநாதர் சன்னதிக்கு வந்தவுடன் "சொல்லுடா" என்று கேட்டுவிட்டு கெக்கெக்கே என்று விகாரமாக சத்தம் போட்டு சிரித்தார். காதோடு மொபைலை சேர்த்து வைத்து தைத்தது போல ஒட்டவைத்துக்கொண்டு அளவில்லாமல் அளவளாவினார். இதைப் பார்த்து வெகுண்ட அந்த குட்டி மொட்டை மொபைல் வேண்டும் என்று கைகாட்டி அழுததும் "விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்..." என்று ஒரு பாட்டை அதில் தட்டிவிட்டு சுவாமி சன்னிதியில் அனைவரையும் காதலாகி கசிந்துருக வைத்தார் அந்த மாமனிதர். குருக்கள் ஒரு வார்த்தை கேட்காமல் "சக குடும்ப ஷேம..." என்று சங்கல்பம் செய்து வாழ்த்தி அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுத்தார். ஈ.ராஜ்கிரணுக்கு அர்ச்சனை செய்தவர் அவருடைய பிரண்டு குருக்களாம்.

*

ஊர்: திருமழபாடி
இடம்: கொள்ளிடக்கரை ஆற்றங்கரை அரசமர நிழல்
மனுஷி: புளியாத்தா

எந்த துணி சோப்பாலும் வெளுக்க முடியாத, பல லட்சம் பறந்து கிடந்த முடியில் ஒன்று கூட கருப்பு இல்லாத பளீர் மின்னலடிக்கும் வெள்ளை கேசம். வெள்ளைத் துணியில் தொள தொளா ரவிக்கை. நீலக்கலர் கண்டாங்கி சேலை. வருடக்கணக்கில் இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்த தோல்கள் அயர்ச்சியடைந்து இறுக்கம் தளர்ந்து தளர்வாக இருந்த ஒரு கிழவி தரையில் படுதா விரித்து கடை பரப்பி புளி விற்றுக்கொண்டிருந்தாள். அருகாமையில் மேலே மூடி போட்டிருந்த தள்ளுவண்டிக் கடைக்கும் அவள் தான் ஓனர். துணைக்கு உட்கார்ந்திருந்த இருபது ஆணி அடித்தது போல அசையாமல் உட்கார்ந்திருக்க இந்த எண்பது சேவாக் போல பம்பரமாய் சுற்றி அடித்து ஆடியது. புளி கிலோ அறுபது ரூபாய்க்கு சல்லிக்காசு குறைக்க முடியாது என்று கறாராக சொன்னாள்.
"எடை சரியா இருக்குமா?"
"சரியா இருக்கும். வேணும்னா வெளிய அளந்து பாத்து காசு கொடுங்க."
"கொஞ்சம் குறைச்சுக்க கூடாதா?"
"குறைச்சுக்கலாம். ஆனா அளவும் குறையும்"
"பாட்டி நீங்க சென்னை வந்துடறீங்களா"
"எதுக்கு. விலையைக் கூட்டி அளவை குறைச்சு விக்கறதுக்கா?"

ரெண்டு கிலோ புளி வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறியபோது தள்ளுவண்டியில் நாலு பேருக்கு நன்னாரி சர்பத் கலக்கிக்கொண்டிருந்து. கிளாசில் "டிக்..டிக்..டிக்.டிக்.." என்ற ஸ்பூன் எழுப்பிய சப்தம் எங்களைத் தொடர்ந்தது.

*

ஊர்: கும்பகோணம்
இடம்: வெங்கட்ரமணா ஹோட்டல்
மனுஷர்: சர்வர் ரசம்

கத்தரிக்காய் சாம்பார் ஊற்றிய கறை படிந்த வெள்ளை வேஷ்டி. கும்பகோணம் வெற்றிலையின் காவி படிந்த பற்கள். நெற்றியில் மெலிதாய் ஒரு விபூதிக் கீற்றல். அர்த்தநாரி போல இரண்டாக பிளந்தால் சரிபாதியாய் பிரியும் ஒரு செ.மீ விட்டம் கொண்ட குங்குமம். முழங்கை முட்டி வரை மடித்துவிடப்பட்ட கசங்கிய வெள்ளை சட்டை. அந்தப் பெரிய சாப்பாட்டு அறையின் இடது வலது கோடியை நிமிஷத்திற்கு நூறு தடவை அளக்கும் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேக நடை. தலையின் நரை காலுக்கு பூட்டு போடவில்லை. எந்நேரமும் ஆளை அசத்தும் புன்னகையை தாங்கிய நீள முகம். கனிவான பரிமாறல்.

"இந்தா பாப்பா அப்பளம்"
"ரெண்டு அப்பளம் வேண்டாம் மாமா"
"பரவாயில்லை. பிடிக்கும்தானே சாப்பிடு"
"சார்! வேண்டாம்" அவசராவசரமாக நான்.
"அட! நீங்க போங்க சார்! குழந்தை சாப்பிடட்டும். யப்பா சாருக்கு பொரியல் போடு." என்று தொலைவில் நாற்கின்னத்துடன் இருக்கும் சோகையான பொரியலுக்கு சொல்லிவிட்டு ரசம் உறிஞ்சிக்கொண்டு கோடியில் உட்கார்ந்திருந்த பவுடர் மாமாவுக்கு பரிமாற விரைந்தார்.

சாப்பிட்டு முடிக்கும் வரை தனியொரு ஆளாய் அங்கே பசியாறிக்கொண்டிருந்த சகலரையும் அவர்கள் இலையறிந்து சாப்பிடுவோர் நிமிர்ந்து கேட்கும் முன் பரிமாறிய வித்தையும் விதமும் அவ்வளவு இலகுவாக யாருக்கும் வராது. எல்லாவற்றிற்கும் மனசு வேண்டும்.

இன்னமும் அவரை எங்கள் வயிறு வாழ்த்துகிறது!

*

ஊர்: நீடாமங்கலம்
இடம்: சூடான வெங்காய மெதுபக்கடோ மணத்துக் கொண்டிருந்த தென்னங்கீற்று வேய்ந்த டீக்கடை
மனுஷர்: ரிடையர் ஆன வாத்தியார்

உள்ளே போட்டிருந்த கோடு போட்ட அண்ட்ராயரை மறைக்க சக்தி இல்லாமல் வெளியே காட்டிக்கொண்டிருந்த ப்ரீமியம் வொயிட் வேஷ்டி. வண்ணான் போட்ட R மார்க் ஓரத்தை தூக்கி வலது கையில் பிடித்திருந்தார். மொட மொடா சட்டையின் இஸ்த்திரி மடிப்பில் தோளுக்கு கீழே புடைத்துக்கொண்டு புஜபலம் மிக்கவராக காண்போருக்கு மாயத் தோற்றம் அளித்தார். தலையில் ஆங்காங்கே சில வெள்ளை முடிகள். கண்ணுக்கெட்டியதூரம் வரை கருப்பு கலரில் முடிகள் இல்லை. வெள்ளை முடிகள் இல்லாத பிரதேசங்கள் அந்த மதிய வெய்யிலில் கண்ணைப் பறித்தது. புறநானூற்று பாட்டுடைத் தலைவன் போல தலையில் நறுநெய் பூசியிருக்கலாம். இடுப்பில் இருந்த அரைக்கிலோ எடையுள்ள பச்சை பெல்ட்டில் சில்லரையாக குறைந்தது ஐம்பது ஒரு ரூபா காயின். ஒரு ஆபத்துசம்பத்திர்க்கு பெல்ட்டே ஆயுதமாக எடுத்து சுழற்றினால் எதிராளி சர்வ நிச்சயமாக அப்பீட். மேலோகத்திர்க்கு டிக்கெட் வாங்கிக்கொள்வான்.

"தம்பி டீ சாப்பிடுங்க...(கடை உள்ளே பார்த்து) அஞ்சு டீ போடுப்பா. டீச்சர், பாப்பால்லாம் சாப்பிடுவாங்க இல்ல.."
"சார்! வெய்யிலா இருக்கு பிள்ளைங்களுக்கு ஏதாவது கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி குடுத்துட்டு வரேன்"
"இருங்க தம்பி. நம்ம ஊருக்கு வந்துட்டு. போன் பண்ணிட்டு வந்திருந்தீங்கன்ன இளநி வெட்டச் சொல்லியிருப்பேன். இப்டி திடுதிப்புன்னு வந்து நிக்கிறீங்க."
"பரவாயில்ல சார்!" எதிர் கடைக்கு விரைந்தேன்.
எனக்கு முன் புயலாய் விரைந்து சென்று
"சேகரு... ப்ரிட்ஜில என்ன சில்லுன்னு இருக்கு.."
"பவண்டோ.. மிரண்டா..." என்று வெய்யில் கசகசப்பிர்க்கு சட்டை உரித்து அரையாடையில் இருந்த சேகரு.
"மிரண்டா குடு... பெரிய பாட்டில் இருக்கா?" அதட்டிக் கேட்டார் சார்.
"பவண்டோல கெமிக்கல் கிடையாது.. அதுதான் நல்லது இந்தாங்க..." என்று திடீர் விஞ்ஞானி ஆன சேகரு பாட்டிலை கையில் திணித்தார்.

அரை மணிநேரம் போனதே தெரியாமல் பேசிவிட்டு கைகுலுக்கி கிளம்பினோம்.

ஆனியன் மெதுபக்கோடாவும், ஏ கிளாஸ் டீயும், பவண்டோவும் அவரிடமிருந்து விடைபெற்று வந்த நெடுநேரம் வரை அவர் காட்டிய அன்பால் கற்கண்டாக இனித்தது.

*

ஊர்: மன்னார்குடி
இடம்: கீழப்பாலம் அய்யனார் குட்டை அருகில்
மனுஷி: பட்டக்கா

பெயரில் பட்டக்காவாக இருந்தாலும் அது ஒரு பக்காக் கிழவி. பட்டாக இல்லாமல் கரடுமுரடாக இருக்கும் கார்மேகக் கிழவி. வரும் ஐப்பசியில் தொண்ணூறாம். லபோதிபோ என்று கத்திக்கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பார்த்தது. உடம்பில் ஒரு புடவையை சுற்றிக்கொண்டு நின்றது. ஜாக்கெட் இல்லாமல் விறகுக் கரியாய் இருந்த பட்டக்கா ஒரு வயதான கருஞ் சிலை போல ஓரத்தில் சாய்ந்திருந்தது. கண்ணும் காதும் அவள் போட்ட சாப்பாட்டிற்கு வஞ்சனை செய்யாமல் இன்னமும் உழைத்துக் கொண்டிருந்தன. என்ன ஒரு தீர்க்கமான பார்வை! இரண்டாம் முறை "ஆ" என்று வாய்க்கு வேலை வைக்காத காது.

"என்னக்கா? எப்படி இருக்கே" இந்தக் குசலம் விசாரித்தது என் அம்மா.
"ஒரு கொறவும் இல்லம்மா" என்று நொண்டியடித்துக்கொண்டே சொன்னது பட்டக்கா.
"மவன் ஒழுங்கா பார்த்துக்கரானா?" பக்கத்தில் நின்ற மாரியைப் பார்த்து வம்பு வளர்த்தது என் அம்மா.
"நீங்கெல்லாம் ஊரை விட்டு போயிட்டீங்க..." என்று கண்களில் நீர் முட்ட கையை விரித்து ஆரம்பித்ததை பார்த்து மாரி முறைத்தான்.
இதற்கு முன்னர் லாரி கிளீனர் மாரிக்கு தனியாக காசு கொடுத்திருந்தேன். பட்டக்கா நிலைமையறிந்து பர்சுக்குள் கையை விட்டதும் முட்டிக்கொண்டிருந்த நீர் தாரை தாரையாய் வழிந்தது. வேண்டாம் என்று சொன்னாலும் கையை பிடித்து பணத்தை திணிக்கையில் கட்டிப் பிடித்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதது.

"ஏ..க்கே...ஏ...ஹே..ஹே.." என்று குச்சியை தரையில் அடித்து ஆடு மேய்த்துக்கொண்டு ஓடிய பட்டக்கா ரெண்டடிக்கு நாலடி இடத்தில் சருகு போல மடிந்து சரிந்திருந்தது ரொம்ப நேரம் என்னை தொந்தரவு செய்தது.

பின் குறிப்பு: இந்த முறை மன்னை சென்றபோது சந்தித்த சில மனிதர்கள்.

பட குறிப்பு: கொள்ளிடக்கரையில் இருந்து திருமழபாடி கோயிலின் கம்பீரத் தோற்றம் 

-

Monday, April 18, 2011

பெண்ணெழுத்து பொன்னெழுத்து

eppodhum penபெண்ணெழுத்து எப்போதும் கொள்ளை அழகு. குண்டு குண்டாக மணி மணியாக சீராக பார்ப்போரை வசீகரிக்கும்படி எழுதுவார்கள். எதிலும் பொறுமையும் சிரத்தையும் மனம் ஒருமித்து உள்ளவர்களால் மட்டுமே அதுபோல சிறப்பாக எழுத முடியும். ஔவையார் பெண்ணெழுத்துகளின் தானைத் தலைவி. Don. பக்தி இலக்கியம் மற்றும் நிறைய நன்னெறிகள் நயமாக நச்சென்று போதித்தவள். இந்தக் கிழவி ஒரு தொந்திக் குழந்தையுடன் கொஞ்சியது என்றால் ஒரு குமரி தலையில் மயிற்பீலி சொருகிய ஒரு கள்வனோடு குலாவியது. ஆண்டாள் எழுதிய திருப்பாவை பெண்ணினத்தின் காதல் வெளிப்பாடுகள். நான் பொதுவாக எழுத்துக்களில் HE SHE வித்தியாசம் பார்ப்பதில்லை. பெண்கள் கைப்பட எழுதினால் தான் அது பெண்ணெழுத்து என்று நான் எடுத்துக்கொள்வதில்லை. பெண்மையை போற்றும் எதுவும் பெண்னெழுத்தே. எப்போதுமே Macho ரசம் மிகும் எந்த எழுத்துமே பெண் எழுதினாலும் ஆண்மை மிளிரும் தன்மை உடையதாக மாறுகிறது. எழுத்தில் நளினம் வந்துவிட்டால் அது பெண்பாற் எழுத்தாக உருமாறி விடுகிறது. நான் படித்த வரையில் தி.ஜா, லா.ச.ரா போன்ற நிறைய பழம்பெரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் கதைகளில் நாவல்களில் அது உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்பட்டிருக்கிறது.

இந்தப் பெண் எழுத்துக்களில் இரண்டு ஆடவர்களை நான் இங்கே சேர்த்துக்கொள்வேன். ஒருவர் முண்டாசுக்கவி பாரதி. இரண்டாமவர் சுஜாதா. சுஜாதாவின் "எப்போதும் பெண்" ஆண் எழுதிய ஒரு அற்புதமான பெண்ணிலக்கியம். பெண்களின் நட்பு, காதல், பொறுப்புணர்ச்சி, பாசம், கடமை, மடமை, விவாகரத்து என்று சகலத்தையும் அக்கக்காக அலசிய கதை. சின்னு என்ற பெண் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை படும் பாடுதான் கதை. நடு நடுவே வரும் பாட்டிகளும், சிநேகிதிகளும், அம்மாக்களும், புதியதாய் கல்யாணம் கட்டியவர்களும், புள்ளைதாச்சிகளும் என்று எப்போதும் பெண்ணில் எங்கெங்கும் பெண். தி.ஜாவின் 'சிலிர்ப்பில்' ஒரு ஏழைப் பெண் குழந்தையின் மனமொருமித்த வேலைக்குணம் பற்றி எழுதி கண்களில் நீரை வரவழைப்பார். என்னைப் பொறுத்த வரையில் அதுவும் பெண் எழுத்தே! லா.ச.ரா கல்யாணம் ஆகி கணவனைப் பிரிந்து தனியாளாக இருப்பவள் கணவனுக்கு எழுதும் கடிதமாக 'பாற்கடல்' எழுதியிருப்பார். அது ஒருவகையில் ரசனையான பெண் எழுத்து.

சிவசங்கரி, வாஸந்தி, லக்ஷ்மி என்று தமிழில் நிறைய ஜாம்பவானிகள் உண்டு. கரண்டி பிடித்த பல கைகள் பேனா பிடித்து சங்கப்பலகை பார்த்ததுண்டு. சங்க இலக்கியங்களில் காக்கை பாடினியார் நச்செள்ளை, வெள்ளிவீதியார் போன்ற பெண்பாற்புலவர்கள் பலர் பாடல் பாடியது உண்டு. நம்மில் அவர்கள் வெகு பரிச்சயம் என்பதால் நான் படித்த ஒரு சில வங்காளப் பெண் எழுத்தாளர்களின் கதைப் புஸ்தகத்தில் இருந்து ஒன்றிரண்டு உதாரணங்கள் தருகிறேன்.

Three Sides of Life

தௌலி - மஹாஸ்வேதா  தேவி
தாழ்ந்த ஜாதிப் பெண் ஒருத்தியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டிய இந்தச் சிறுகதை பெண் இலக்கியத்தில் ஒரு வரலாறு. மாமனார் மாமியார் நாத்தனார் என்று ஒரு வட்டத்திற்குள் அடங்கும் கதைகளுக்கு இடையில் இது போன்ற எழுத்துக்கள் என்னை வெகுவாக ஈர்க்கிறது. ஒரு உயர்ந்த ஜாதி பண்ணையாரின் கடைசி மகனை லவ்வினாள் தௌலி. எல்லாப் பெரியமனுஷன் வீட்டுப் பிள்ளைகளைப் போல அவள் வயிற்றை நிரப்பி விட்டு தந்தையின் பேச்சை மீற முடியாமல் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு நகரத்திற்கு போய் விடுகிறான். வயிறு வளர்பிறையாக வளர்ந்து மடிகனத்தை ஊருக்கு காட்டிகொடுகிறது. அவள் தாய் அக்கருவை அழிக்கச் சொல்லுகிறாள். மறுதலித்த இவள் தைரியமாக பெற்றுப் போடுகிறாள். இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்டு கடைசியில் நகரத்தில் ஒரு விலைமாதாகிப் போகிறாள். தனி ஒருத்தியாக போராடிய ஒரு பெண்ணின் ஆசாபாசங்களை புட்டுபுட்டு வைத்திருக்கிறார் கதாசிரியர். தௌலி என்றால் அழகான பெண் என்று அர்த்தம்.

தி காயக் -  நபனீத தேவ் சென்
காயக் என்றால் ஒருவர் மட்டுமே செல்லும் படகு என்று அர்த்தமாம். கெளஷிகி என்ற பேத்தி அமேரிக்கா செல்கிறாள். இந்தியாவில் தனியாக விட்டு விட்டு வந்த அவளின் பாட்டியை பற்றிய நினைவலைகள் தான் கதை. அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு நண்பியின் வீட்டில் அவளுடைய பாட்டியை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பார்த்து மனம் பதபதைக்கிறாள். ஒரு பாட்டி-பேத்தி உறவை அதி அற்புதமாக கதைப்படுத்தியிருப்பார். பாட்டியை பற்றிய இடங்களில் பெண்களின் பல பரிமாணங்களை தொட்டிருப்பார் இக்கதாசிரியர். இக்கதையின் தலைப்பை பாட்டியின் வாழ்க்கையுடன் சேர்த்துப் படிக்கவேண்டும். இதுவும் ஒரு அக்மார்க் பெண்ணெழுத்து.


ஹாரி பாட்டர் - ஜே.கே ரவ்லிங்  
துடப்பக்கட்டையை இரு கால்களுக்கு இடையே சொருகி கேரக்டர்களை பறக்கவிட்டு சிறார்களையும் அவர்கள் கூடவே சிறகடிக்க வைத்த பெருமை இந்த வெள்ளைக்கார ரவ்லிங் அம்மையாருக்கு உண்டு. அண்டமெங்கும் இருக்கும் பாலகர்களை மயக்கிய பெருமைக்கு உரிய எழுத்து அது. எப்போதுமே தாத்தா கதைகளை விட பாட்டி சொல்லும் கதைகளுக்கே மவுசு அதிகம். இந்தப் பாட்டியின் அதீத கனவுகள் எல்லா வயதினரையும் கவர்ந்திழுத்த எழுத்தானது இவ்வுலகிற்கு பாக்கியமே.

கடைசி பத்து பக்கங்கள் கிழிந்த ஒரு புஸ்தகத்தை படிக்க மாட்டேன் என்று மறுத்த நண்பரிடம் அவரது உறவினர் "அறுநூறு பக்க புஸ்தகத்தில் கடைசி பத்து பக்கங்கள் இல்லை என்று 590 பக்க சுவாரஸ்யத்தை ஏன் வேண்டாம் என்று இழக்கிறீர்கள்" என்று கேட்டாராம். அதுபோல ஆண்/பெண் பேதம் பிரித்துப் பார்க்காமல் பெண்ணினத்தை சிறப்பிக்கும், தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் எந்த எழுத்தும் பெண் எழுத்தே என்று வாசிப்போம்.

இந்தத் தொடர் பதிவிற்கு அழைத்த ராஜிக்கு நன்றி சொல்லிக் கீழ் கண்ட பதிவர்களை அழைக்கிறேன்.
பத்மநாபன்
கக்கு-மாணிக்கம்
அறிவன்
மோகன்ஜி
சுந்தர்ஜி
மாதங்கி மாலி 
இப்படிக்கு இளங்கோ

பின் குறிப்பு: மேற்கண்ட இரு வங்காளக் கதைகளும் படித்த கதைத் தொகுதி.
Three Sides of Life - Short stories by Bengali Women Writers.
Oxford University Press
Price: Rs. 350

பட உதவி: thehindu.com மற்றும் uyirmmai.com
-

Sunday, April 17, 2011

சென்னை டூ மன்னை

Haridhra Nadhi


ஆறு மாதத்திற்கு ஒரு முறை தஞ்சைத் தரணியின் ஞாபகங்கள் பதினைந்து வருடங்களுக்கு முந்தைய காவிரி போல என் நெஞ்சில் சுழித்துக் கொண்டு ஆறாக ஓடும். அந்த ஆற்றுக்கு அணையாக ஆபிஸ் வந்து குறுக்கே நின்று பல்லைக் காட்டி சிரிக்கும். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ரெட்டை மாட்டு வண்டியாய் குடும்பத்தை சிரமமில்லாமல் இழுக்கிறோம். ஒருவருக்கு லீவ் கிடைத்தால் மற்றொருவருக்கு இருபத்து நான்கு மணிநேரம் ஆணி பிடுங்க அவசியம் இருக்கும். அம்பேத்கர், மகாவீரர் மற்றும் என் அலுவலக நண்ப மேலாளர் போன்றோரின் ஆசியால் போன வாரம் எனக்கு இயந்திரம் வைத்து போரடிக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் நெற்களஞ்சியத்திர்க்கு செல்லும் பெரும் பேறு கிடைத்தது. இந்நாளில் வெள்ளையடித்த எல்லைக்கல் நட்டு நிறைய தரிசுகள் நகர்களாக ப்ரமோஷன் பெற்றிருந்தன.
 
சொந்த வண்டியில் போனால் டங்குவார் கிழிந்துவிடும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் தேசிய கீதம் பாட வாடகைக்கு கார் அமர்த்தி மன்னைக்கு புறப்பட்டோம். வெள்ளைச் சீருடையில் வந்த பார்த்தசாரதியை வண்டியை முதலில் நேராக புள்ளிருக்குவேளூருக்கு விடச் சொன்னேன். போகும் வழியில் ஸ்ரீகாழியிலிருந்து சமுத்திரக் கரையில் இருக்கும் திருமுல்லைவாசல் என்ற சம்பந்தர் பாடல் பெற்ற சிவஸ்தலம் சென்றேன். கோயிலுக்கு நேர் எதிரே கூப்பிடும் தூரத்தில் வங்காள விரிகுடா. சுனாமியின் போது அந்த முல்லைவனேஸ்வரர் கோவிலைத் தாண்டி அலையரக்கன் ஊருக்குள் நுழைய முடியவில்லையாம்.

vaitheeswaran koil

சீர்காழியில் இருந்து மாயவரம் செல்லும் பாதையில் வரும் ஹேர் பின் பெண்டு திரும்பியதும் மேலக் கோபுரவாசலில் வழக்கம் போல ஏதோ ஒரு மாநில டூரிஸ்ட் வண்டி நின்றுகொண்டிருந்தது. அதன் பின்பக்க டயர் அடியில் அதில் வந்திருந்த பக்தர்களின் குழந்தைச் செல்வங்களின் சுச்சா கக்கா சமாஜாரங்கள் போராட்டமில்லாமல் சகஜமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. Incredible India! நாடி ஜோஸியக்காரர்கள் நிராதரவாக கொளுத்தும் வெய்யிலில் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் பெருமக்களுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்தார்கள். அதை இருவர் வாய் பிளந்து கேட்டு நம்பிக்கைச் சாறு பருகிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து தட்டி போர்டில் அகத்தியர் கமண்டலத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்.

அம்மன் சன்னதி கோபுரவாசலில் தனியாக சில்லறைக் காசு எண்ணிக்கொண்டு திருவோட்டுடன் உட்கார்ந்திருக்கும் காவி உடை பிச்சைக்கார பெருமகனைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி. பாசி ஆடையை களைந்த சுத்தமான திருக்குளம். துர்நாற்றம் இல்லாமல் பாடி ஸ்ப்ரே அடித்திருந்தது. படித்துறையில் உட்கார்ந்திருந்த பொரிக்கடைக்காரருக்கு லாபம் சம்பாதித்து தரும் "வா..வா..வா.." என்று ஆகாரத்திற்கு தண்ணீர் மட்டத்திற்கு வந்து கோயிலுக்கு வருவோர் போவோரைப் பார்த்து வாயைப் பிளக்கும் நிறைய கெண்டையும் கெளுத்தியும் வாங்கி விட்டிருக்கிறார்கள். இறங்கி தலையில் நீரை ப்ரோக்ஷனம் செய்துகொண்டோம். எக்க விடாமல் குனிய விடாமல் கசங்க விடாமல் கர்ப்பக்ரஹத்தில் இருந்து வைத்தீஸ்வரன் அருள் புரிந்தார். அடியார்களின் திருக்கூட்டம் இல்லை. நெற்றியை பரபரவென்று தூணில் தேய்த்தால் பட்டை இட்டுக் கொள்ளும் அளவிற்கு மக்கள் குங்குமத்தாலும் விபூதியாலும் தூணுக்கு அபிஷேகம் செய்திருந்தார்கள். தையல்நாயகி சன்னதி வாசலில் "அம்பாள் அருள் புரிந்தால் தான் இந்த இடத்தை விட்டு நகருவேன்" என்று சபதம் செய்து அழிச்சாட்டியமாக யாரையும் பார்க்கவிடாமல் அந்தாதி படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சமீப காலத்தில் பாட்டியான அந்த அம்மணியை தாண்டி தரிசித்துக் கொண்டு வெளியே வந்தோம். இரண்டு பேர் காலால் எத்தியதில் முட்டியை தேய்த்துக்கொண்டே ஏக கடுப்பில் இருந்தார். அங்காரகன் சந்நிதியில் நிறைய பேர் சிகப்பு வஸ்த்திரம் கொடுத்து செவ்வாயிடம் வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டார்கள். நிமிஷத்தில் கருப்பு அங்காரகன் ஒரே செக்கச் செவேலென சிகப்பானார்.

திருவாரூரில் முதல்வர் வந்த தடம் நன்றாக தெரிந்தது. இரவில் வண்டியின் தலை விளக்கில் ரோடு ஃபேசியல் போட்டது போல பளபளத்தது. அலுங்காமல் குலுங்காமல் சென்றதில் என் சிறிய பெண் சௌகர்யமாக உறங்கினாள். ரோடோரங்கள் குண்டு குழியில்லாமல் செம்மண்ணால் மட்டமாக நிரவியிருந்தன. சைக்கிள்காரர்கள் தைரியமாக ரோட்டை விட்டு இறங்கி பஸ் கார்களுக்கு மனமுவந்து வழிவிட்டார்கள். யார் முதல்வர் ஆனாலும் ஒரு முறை தேசாந்திரம் போய் வந்தார்கள் என்றால் பொதுமக்கள் முதுகு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி பாராட்டும். செல்வியில் சாப்பாடு போடுகிறார்களா என்று கேட்பதற்கு முயலவில்லை. பஸ் ஸ்டாண்ட் ஓர பிரபலமான வாசன் வாசனை இல்லாமல் போட்ட டிஃபன் ஜீரணம் ஆவதற்கு ரோட்டில் கடகடா கிடுகிடு நடுவிலே பள்ளம் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். சவளக்காரன் தாண்டும் போது அந்தப் பனைமர இடைவெளியில் தூரத்தில் பெரிய கோவில் கோபுரத்தின் விளக்கு நிலாவுடன் போட்டியிட்டுக் கொண்டிருந்தது. தூக்கத்திலும் மன்னை அற்புதமாக இருந்தது. ஊரில் நான் கால் வைத்தவுடன் நிச்சயம் குறைந்தது ஒரு நூறு பேருக்காவது நித்திரையில் புரை ஏறி இருக்கவேண்டும்.

இன்னும் இரண்டு நாட்கள் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரம் சுற்றி ஐந்தாறு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பார்த்தேன். எல்லாவற்றையும் எழுதினால் இந்தப் பதிவு குமுதம் பக்தி மற்றும் சக்தி விகடன் போன்ற ஆன்மீக பத்திரிக்கைகளுக்கு போட்டியாகிவிடும் என்று இத்தோடு இப்போது நிறுத்திக்கொள்கிறேன். அவ்வப்போது திண்ணையில் நிறைய பகிர்கிறேன்.

கடைசியாக போன வருஷத்தில் கும்பாபிஷேகம் கண்ட எங்களூர் முதல்வன் ஸ்ரீவித்யா ராஜகோபாலனை தரிசித்தேன். சிறுவயதில் நானும் என் சித்தியும் மட்டும் ஏகாந்தமாக சுற்றிவந்த விண்ணை முட்டும் மதிலெழுந்த பிரகாரங்கள் இப்போது மக்களால் நிறைந்து வழிகிறது. மன்னை மக்கள் பக்தியில் திளைக்கிறார்கள். வாசலில் என்னுடன் படித்த ராஜகோபால் "செங்கமல"த்துடன் உட்கார்ந்து பற்கள் தெரிய சிரித்தான். "சௌக்கியமா?" கேட்டதற்கு என் பெண்ணிற்கு இலவசமாக ஆசீர்வாதம் செய்யச் சொன்னான். தும்பிக்கையாழ்வாரிடம் கடன் இல்லாமல் மாமூல் இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டேன். தும்பிக்கையில் இருந்து அவன் கைலிக்கு காசை லாவகமாக மணி ட்ரான்ஸ்பர் செய்தது செங்கமலம். தூண்களில் புதிது புதிதாக நிறைய ஸ்வாமிகள் முளைத்திருக்கிறார்கள். தனது வயதான அன்பு மனைவியை துவஜஸ்தம்பம் அருகில் மங்கலான வெளிச்சத்தில் நிறுத்திவைத்து 1 MP மொபைல் கேமராவில் பத்தடி தள்ளி நின்று தோராயமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். அத்தனை வயதிலும் பக்கத்தில் நிற்க அப்படி என்ன பயமோ? அம்பாள் சன்னதி சுற்றி நிறைய ஸ்வாமி படங்கள் வரைந்திருக்கிறார்கள். ஏலுகொண்டலவாடாவை பார்ப்பது போல செம்பகலக்ஷ்மி தாயார் சந்நிதியில் "பார்த்தவங்க வெளிய வாங்க.... பார்த்தவங்க வெளிய வாங்க..." என்று இழுத்து தள்ளாத குறையாக விரட்டினார்கள். அந்தக் கூட்டத்திலும் "என்ன டீச்சர் சௌக்கியமா?" என்று என் சித்தியை நிறுத்தி விசாரித்தார் பட்டர்.

Rajagopalan

ஸ்வாமி சன்னதி நுழையும் போதே ராஜகோபாலனுக்கு கல்யாண அலங்காரம் செய்துகொண்டிருந்த என்னுடன் தெரு கிரிக்கெட் விளையாடிய பிரசன்னா "வாய்யா ஆர்.வி.எஸ்.எம்? சௌக்கியமா?" என்று எங்களூர் பாணியில் விசாரித்து "மூலவரை தரசிச்சுட்டு வா..." என்று உள்ளே அனுப்பினான்(ர்). ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் பரவாசுதேவப் பெருமாள் தங்கக் காப்பில் ஜொலித்தார். நடுவில் மாடு கன்றுகளுடன் சந்தான கோபாலன் சேவை சாதித்தார்.  வெளியே வந்து மீண்டும் கோபாலனை கண்ணார தரிசித்தேன். சிரித்த முகத்துடன் கல்யாண அவசரத்தில் இருந்தார் கோபாலன். மனமார வேண்டிக்கொண்டு "பிரசன்னா... ஒரு போட்டோ எடுத்துக்கட்டா?" என்று உரிமையுடன் கேட்டு "தாராளமா..." என்று சொல்லிவிட்டு அந்த நீல மேக ஷ்யாமளனுக்கு பின்னால் நீல ஸ்க்ரீன் போட்டான் மகானுபாவன். அசையாமல் சிரித்துக்கொண்டே எனக்கு போஸ் கொடுத்தார் ராஜகோபாலன்.

Thiruvizha Night

பின் குறிப்பு: ஐந்தாறு பாகமாக எழுதவேண்டிய மூன்று நாள் டூரை ஒரே பதிவில் வெளியிட்ட எனக்கு "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் பாரட்டிக்கொள்கிறேன்.  இப்பதிவில் வெளிவந்த படங்கள் நானே என் கண்களால் பார்த்து கைகளால் கிளிக்கியது. எடுத்துக்கொள்ள விரும்பும் நண்பர்கள் என்னுடைய வலைக்கு ஒரு தொடர்புச் சுட்டி கொடுத்து உபயோகித்துக் கொண்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.


படக் குறிப்புகள்:  
  1. ஒரு சாயுங்கால நேர ஹரித்ராநதியின் தோற்றம். 
  2. வைதீஸ்வரன் கோவிலின் சுத்தமான குளம். 
  3. ராஜகோபாலனின் எழில் மிகு கல்யாணத் திருக்கோலம்.
  4. பெரிய கோவிலின் திருவிழாக்கால இரவுக் காட்சி.
-

Wednesday, April 13, 2011

ஜனநாயகக் கடமை

snehaகாலை ஏழு மணிக்கு வாசலில் வந்து எட்டிப் பார்த்தால் தெரு வெறிச்சோடி போயிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையின் சோம்பேறி வேளையை நினைவுபடுத்தியது. நேற்றிரவு கோயம்பேடு தாண்டுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. க்ளட்சுக்கும் ஆக்சிலேட்டருக்கும் கால் நர்த்தனம் ஆடி களைத்து ஓய்ந்துவிட்டது. இன்றைக்கு தேர்தல் விடுமுறை, நாளைக்கு அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் நம்பியவர்களுக்கு தமிழ் வருடப் பிறப்பு, சனிக்கிழமை மகாவீர் ஜெயந்தி அப்புறம் சன்டே. நடுவில் வெள்ளி மட்டும் ஆபிசுக்கு பங்க் அடித்தால் ஐந்து நாட்கள் விடுமுறை என்ற லாபக் கணக்கு வைத்துக்கொண்டு குழந்தை குட்டியோடு பொட்டி படுக்கையுடன் ஆயிரம் ஆயிரம் பேர் ஒரு சேனையாய் அந்தக் குட்டியோண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தை நேற்றிரவு முற்றுகையிட்டார்கள். காலையில் இருந்து கை காண்பித்து சலித்துப் போன போ.போலிஸ் "போங்கடா போக்கத்துவனுகளா.." என்று ஒதுங்கி சிக்னல் கம்பத்தில் சாய்ந்து நின்று வேடிக்கை பார்த்தது.

பிளாட்பாரத்தில் இருசக்கர வாகனாதிகள் ரேஸ் போனார்கள். ஆட்டோ அன்பர்கள் வளையத்திற்குள் நுழையும் கழைக் கூத்தாடி பெண்டிர் போல முரட்டுத்தனமாக ஸெல்ப் டிரைவிங் வண்டிகள் பின் சென்று "உர்.உர்"...என்று உறுமி மிரட்டி மூர்க்கத்தனமாய் இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேறினார்கள். வண்டி நிறைய துருபிடித்த முறுக்குக் கம்பி ஏற்றிக்கொண்டு நுனியில் சிகப்பு கட்டாமல் பனியன் போட்ட கிளி டோர் தட்டி மிரட்டி பின்னால் வருவோரை அலகு காவடியில் சொருகும் லாவகத்தோடு கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சடன் பிரேக் அடித்து சேதாரம் ஆகாத ஏமாற்றத்தில் ஆமை வேகத்தில் கிளப்பி இன்ச் இன்ச்சாக நகர்ந்தார்கள். இந்த சென்னை மாநகரின் ரோடுகளுக்கு ஏகபோக உரிமையாளர்களான மாநகர பேருந்து ஓட்டுனர்கள் அக்கம் பக்கம் மற்றும் கீழே பார்ப்பது அகௌரவமான செயல் என்று பாரதியின் நேர்கொண்ட பார்வையுடன் எதைப் பற்றியும் கவலைப்படமால் கூட்டத்திற்குள் வண்டியை விட்டு அடித்தார்கள். இவ்வளவு இன்னல்களையும் நடுச் சாலை கொடுஞ் செயல்களையும் மீறி எங்கள் குல தெய்வம் வெங்கடாசலபதி புண்ணியத்தில் இரவு பன்னிரண்டரைக்கு வாகனத்திற்கும் எனக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நலமாக வீடு வந்து சேர்ந்தேன். 

காலையில் முதல் ஓட்டு என்னுடையதாக இருக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்த கடமை வெறியில் சீக்கிரம் எழுந்திருந்த போது நான் கண்ட காட்சி தான் இந்தப் பதிவின் முதல் இரண்டு வரிகள். "ரிப்பன் வெட்டி போலிங் பூத் திறக்க உங்களைத்தான் கூப்பிடறாங்க" என்ற வீட்டு லேடிசின் கேலிப் பேச்சையும் மீறி நமது பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் ஜரூராக கிளம்பினேன். மனைவியும் அம்மாவும் எனக்கு இசட் பிரிவு பாதுகாவலர்கள் போல என்னுடன் தோளுக்கு ஒருவராய் வந்தார்கள். ஒரு தேர்தலில் நடிகர் திலகம் சிவாஜி ஓட்டுப் பறிபோன மாதிரி என்னுடையதும் களவு போவதற்கு முன்னர் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு மிகவும் அவசரப்பட்டேன். கட்சி சின்னம் அச்சடித்து வீடுவீடாக ஸ்லிப் கொடுக்கும் ஒரேயொரு உபயோகமான வேலையைக் கூட இந்த முறை தேர்தல் ஆணையம் கழகங்களிடம் இருந்து பிடிங்கிக் கொண்டது. கருப்பாகவும் வெள்ளையாகவும் நம்மை அச்சடித்து அடையாளம் தெரியாத அகோர முகத்துடன் தோராயமாக அது நாம் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு சீட்டை முன்பே வீடு தேடி வந்து கொடுத்திருந்தார்கள்.

ஓட்டுப் போடும் அரசினர் பள்ளியின் வகுப்பறை வாசல்களில் நோஞ்சான் போலீசார் சிலர் திடகாத்திரமான லத்தியுடன் நின்றிருந்தார்கள். இயந்திரப் துப்பாக்கி ஏந்திய வடநாட்டு காவலர்கள் சிலரும் ஆங்காங்கே நின்றுகொண்டு "ஹை..ஹை" என்று ஹிந்தியில் பேசி ஃபிலிம் காட்டிக் கொண்டிருந்தார்கள். "இருபத்து ரெண்டு அங்கே இருக்கு" என்று உள்ளே நுழைந்தவர்களிடம் வலுக்கட்டாயமாக பிடுங்கி ஒருத்தர் ஓட்டுப் போட வந்த கும்பலை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். என்னைவிட மிகவும் சிரத்தையாக ஒரு பத்து பேர் கியூவில் எனக்கு முன்பாக வரிசையில் கதை பேசிக் கொண்டு நின்றிருந்தார்கள். கூன் விழுந்த ஈர்க்குச்சி போல இருந்த ஆறடி தாத்தா வாத்தியாரை நினைவுப்படுத்தினார். "சீனியர் சிடிசன்லாம் தனி கியூ  சார்" என்று ரெண்டு பேர் அவரை வரிசையில் இருந்து கிளப்பி விட்டார்கள். கிளம்பி சரியாக தவறான இன்னொரு கேட்டில் நேராக நுழைந்தார் கூன் பெரியவர். அனுகூலமாக சொல்லி எங்கள் கதவுக்கு அவரை திருப்பி விட்டார்கள்.

அசராமல் கடமையை ஆற்றி விட்டு வெளியே வந்தவருக்கு பெண்கள் சைடில் இருந்து அழைப்பு வந்தது. "அங்கே உக்காருங்கோ" என்ற கட்டளைக்கு கீழ்ப் படிந்து ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சிரமபரிகாரம் செய்துகொண்டார். பிள்ளைகளுக்கு ஃபாரின் சாக்லேட் கிடைத்த சந்தோஷம் போல ஓட்டுப் போட்ட மகளிர் சில பேர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்கள். இவர்களை எல்லாம் போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போட மாட்டார்களா? "உம்... ராணியம்மா.. " என்று கை தட்டி கூப்பிட்ட பெண்மணியும் கூப்பிடப் பட்ட பெண்மணியும் ராஜ வம்சம் போல நிச்சயம் தோன்றவில்லை. ராணியின் அம்மா என்று பதம் பிரித்து தெரிந்து கொண்டேன். "புள்ளைக்கு மொட்டை போட்டோம். குமாரு நல்லா இருக்கா? உங்களுக்கு சுகரு இப்போ இறங்கியிருக்கா ஏறியிருக்கா" என்று குடும்பத்தின் ஷேமலாபங்கள் விசாரிக்க ஆரம்பித்தார். கதவருகே பெண்பால் ஈர்க்குச்சிக்கு காக்கி மாட்டியது போல இருந்தவர்  "அம்மா... நவுருங்க.. இங்க நின்னு கத பேசாதீங்க..." என்று ஸ்ட்ரிக்ட் டீச்சர் தோரணையில் விரட்ட ராணி அம்மா முறைத்தார்கள். முகம் சுணங்கி நகர்ந்தார்கள்.

நான்கு அரசுத்துறை ஊழியர்கள் வரிசையாக பெஞ் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். நான் ஸிலிப் கொடுத்தவுடன் சரசரவென்று பக்கம் புரட்டி டிக் அடித்துக் கொண்டார் ஒரு பெண்மணி. அடுத்தவர் இன்னொரு புத்தகத்தில் குறித்துக்கொண்டு "சார்! வெங்கடசுப்ரமணியன்" என்று ஒரு மூலையைப் பார்த்து குரல் கொடுத்தார். திரும்பி பார்த்தால் நான்கு பேர் கையில் வாக்காளர் புத்தகத்துடன் கரை வேஷ்டியுடன் அலர்ட்டாக உட்கார்ந்திருந்தார்கள். பூத் ஏஜெண்ட்ஸ். அவர்களும் தன் பங்கிற்கு குறித்துக் கொண்டார்கள். அப்புறம் இன்னும் ஆறு மாதத்தில் ரிடையர் ஆகப் போகும் ஒரு கண்ணாடி போட்ட பெரியவர் நோட்டு ஒன்றில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு இடது கை ஆட்காட்டி விரலில் நீலக் கலர் நெயில் பாலிஷ் அடித்து ஒரு ரோஸ் ஸ்லிப் கொடுத்தார். அதை நான்காமவரிடம் கொடுக்க அவர் ஒரு மறைவிடத்தை காண்பித்தார். அவர் அழுத்த நான் அழுத்த "பீப்" கேட்டவுடன் எனது வாக்கை உறுதி செய்து கொண்டு நகர்ந்தேன். அந்தக் கரை வேஷ்டி நான்கும் என் முகத்தை ஒருதடவை ஏற இறங்க பார்த்துக் கொண்டது.

பெண்கள் தரப்பு வரிசை வழக்கம் போல வேகவேகமாக முன்னேறி தாயும் தாரமும் வெளியே எனக்காக காத்திருந்தார்கள். குடிமாற்றி வேறு தெரு போனவர்கள் இருவர் "உங்களுக்கு இருக்கா.. எனக்கு இல்லை.." என்று அங்கலாய்த்து பேசிக்கொண்டிருந்தார்கள். லத்தி சுழற்றி "இங்க நிக்காதீங்க.. போங்க... போங்க..." என்று விரட்டினார் ஒரு கடா மீசை போலீஸ். "எங்கள விரட்டுங்க.. அராஜகம் பண்றவங்களை உட்டுடுங்க..." என்று காத தூரம் வந்த பிறகு முனுமுனுத்துக்கொண்டே சென்றார். வீட்டிற்கு வந்தவுடன் முதலில் தலை முழுகினேன். ச்சே.ச்சே. தினமும் ஸ்நானம் பண்ணுவதைத் தான் சொன்னேன்.

பட உதவி: தனக்கு ஓட்டு போடும் வயதுதான் என்று நிரூபித்த ஸ்னேஹா படம் கிடைத்த இடம். http://nkdreams.com

-

Monday, April 11, 2011

மன்னார்குடி டேஸ் - ஸ்ரீராம நவமி

Lord Rama

ஓய்வொழிச்சல் இல்லாமல் வெய்யில் புயல் மழை சிரமம் பார்க்காமல் சதா சர்வகாலமும் நாங்கள் அசராமல் உட்கார்ந்து உலகளாவிய சத் விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கும் மதில் கட்டைக்கு கீழே இருப்பது அ/மி கோதண்டராமர் திருக்கோவில். எங்கள் எல்லா பேச்சுக்கும் அவர் தான் சாட்சி. மார்கழி மாதக் குளிரில் சாரங்கன் மாமா மூலம் எங்களுக்கு சுடச்சுட வெண்பொங்கல் படி அளந்த பிரான். வேப்பமர நிழற்காற்றில் ஏகாந்தமாக சேவை சாதித்திக் கொண்டிருப்பவருக்கு ஹாப்பி பர்த் டே கொண்டாடும் திருநாள் ராம நவமி உற்சவம். கிரிக்கெட் ஆனாலும் சரி ராம நவமி ஆனாலும் சரி எங்களுடையுது ஒரு டீம் வொர்க். ஒரு அணியாக திரண்டு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வோம். அந்த ராமர் கோவிலுக்கு நவமி இன்சார்ஜ் எங்கள் ரவி சார். ரவி சார் ஒரு அற்புதமான மனிதர். நான் படித்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வொகேஷனல் பிரிவில் ஆசிரியர். இடுப்புக்கு மேலே ஷர்ட்டை டக் செய்த பேன்ட். நாள் கிழமைகளில் நெற்றியில் திருமண். பெடலுக்கு வலிக்காமல் சைக்கிள் ஓட்டுவார். விடுமுறைகளில் வெளியூர் செல்லும் போது கொத்துச் சாவியுடன் வீட்டை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும் எங்களுடைய நெருங்கிய தோஸ்த். குளக்கரை கோதண்டராமர் ஒரு இருபது டிகிரி இடது பக்கம் திரும்பி அம்பு விட்டால் அது ரவி சார் வீட்டை தாக்கும். 

ராம நவமிக்கு ரெண்டு நாள் முன்னால் மணி டீக்கடை மூலையில் இருந்து தொடங்கும் எங்கள் வசூல் பணி. நானும் ஸ்ரீராமும்தான் நவமி கலெக்ஷன் நிரந்தர ஏஜெண்ட்ஸ். ஸ்ரீராம் கக்கத்தில் இடுக்கிக்கொள்ளும் இனாமாக வந்த ஒரு பையும், அடியேன் கையில் ஒரு ரசீதுப் புஸ்தகமுமாய் களப்பணி ஆற்றுவோம். திருவிழாக் கமிட்டி பொருளாளர்கள். ஸ்ரீராம் தனது ஹாஸ்யப் பேச்சால் நிறைய வசூல் செய்வான். ஒரு வீட்டிற்குள் நன்கொடை வசூலிக்கப் போனால் குறைந்தது பத்து பதினைந்து நிமிடம் ஆகும். 
"என்ன மாமி சௌக்கியமா இருக்கேளா? அடையாளமே தெரியாம மெலிஞ்சுட்டேளே!"
"ஆமா. ஆமா.. ரொம்ப சரி.."
"எல்லாம் கோபாலன் பார்த்துப்பான்"
"குளத்த சுத்தி பிரதக்ஷிணம் இப்போ போறதில்லையோ"
"ச்.ச்.ச்.சோ..முடியலன்னா டாக்டர்ட்ட காமிக்கப்படாதோ"
"உங்காத்து காப்பிக்கு உங்கள்ட்டே ஆயுசு பூரா அடிமையா இருக்கலாம் "
"இந்த ராமனுக்கா தரேள். இல்லையே. பில் வச்சுண்டிருக்கிற எனக்கா தரேள்! கையில வில் வச்சுண்டிருக்கிற பகவானுக்குன்னா தரேள்!"
"நிச்சயமா பாருங்கோ.. வர வாரத்திலேர்ந்து மதில்ல யாரும் உக்கார்ந்து அரட்டை அடிக்கமாட்டோம்"
"நீங்க யாரு... ஒரு ராம நவமி உற்சவம் மொத்தமாவே நீங்க பண்ணலாம்"
"உங்க தாராளம் இந்தத் தெருவில யாருக்கு வரும்."
மேற்கண்ட வகை வசனங்கள் சர்வ சாதாரணமாக அவன் வாயிலிருந்து பிரவாகமாக கொட்டும். இடம் பொருள் ஏவல் அறிந்து சாதுர்யமாக பேசி துட்டு கேட்டு வாங்குவதில் சர்வ வல்லமை படைத்தவன். 

கிழக்கு தெருவிற்கும் வடக்கு தெருவிற்கும் சேர்த்து மொத்தம் இரண்டு ராமநவமி கொண்டாட்டங்கள் உண்டு. கிழக்கு தெருவில் ராதாக்ருஷ்னைய்யர் வீட்டில் காலையில் வருவோருக்கு டிபனுடன் உஞ்சவிருத்தியில் ஆரம்பித்து மாலையில் ராம மடத்தில் திவ்ய நாம அகண்ட பஜனையில் மங்களம் பாடி பூர்த்தி செய்வார்கள். உஞ்சவிருத்தியில் தியாகராஜரை ஒத்த முக தீட்சண்யம் மிக்க பெரியவர் ஒருவர் கச்சலான தேகத்துடன் அரிசி பருப்பு பிக்ஷை வாங்கி சப்ளாக் கட்டை ஜலஜலக்க வீதியில் பஜனை வருவார். ஆனால் சாயந்திரம் பஜன் நன்றாக களை கட்டும். தெருவின் சங்கீதப் பிரியைகள் கூட்டம் அன்று மடத்தில் கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருக்கும். கிழக்கு தெருமுனையில் இருக்கும் ராம மடத்தில்தான் அந்த விசேஷ பஜனை நடக்கும். வடக்குத் தெரு கோபால் அண்ணா மிருதங்கம். அவர்தான் அந்த மடத்தின் ஆஸ்தான இசை வாத்தியக் கலைஞர். ஒன்று அந்த மிருதங்கம் இருக்கவேண்டும் இல்லை தன் கை இருக்கவேண்டும் என்று இரண்டில் ஒன்று பார்ப்பது போல உக்கிரமாக வாசிப்பார் கோபால். அண்ணன் தாளத்தில் மடம் தவிடுபொடியாகும். கட்டம் போட்ட பிரேம் கொண்ட பாக்கியராஜ் கண்ணாடி. மீசை அதன் வாழ்நாளுக்கு கத்தரி பார்த்திருக்காமல் காடாக மேலுதட்டை மூடியிருக்கும். குடிக்கும் காப்பியை ஃபில்ட்டர் செய்து வாய்க்குள் இறக்கும். ஆனால் கோபால் அண்ணா சிகரெட்டும் நிஜாம் பாக்கும் கலந்த வாசனையுடன் பஜனை மேடை ஏறும் ஒரு மிருதங்க வித்வான். அவருக்கு மிருதங்கம் என்ற தாள வாத்தியம் வாசிக்கும் பழக்கம் தவிர்த்து 'வெண்'குழல் ஊதும் பழக்கமும் இருந்தது. பிரச்சனைகளை ஊதித் தள்ளுவதற்கு.

"ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு" என்ற மேடையின் பிரதான பஜனை பாடகரின் குரலுக்கு மடம் முழுக்க கோரஸாக "ஜெய்!" போடும். அந்த பக்திக் கடலில் சிறுதுளியாய் என்னுதும் ஈனஸ்வரத்தில் ஒரு சோனி "ஜெய்". நான்கிற்கு ஆரம்பித்தால் ஆறு மணி வரை கை சிவக்க மேனி முழுவதும் வியர்வை ஆறாய் பெருக்கெடுத்து ஓட வாத்தியத்தை தட்டி எடுத்துவிடுவார் கோபால் அண்ணா. தலையை ஆட்டி ஆட்டி ஆவேசத்துடன் கழுத்து சுளுக்கு பிடித்துக் கொள்ளுமோ என்று பார்ப்பவர் அஞ்சி பதற பதற வாசிப்பார். காண்போருக்கு அவர் அதனுடன் ஒரு யுத்தம் புரிந்து கொண்டிருப்பது போல தோன்றும். சில சமயங்களில் பாடுபவர் கூட விக்கித்துப் போய்விடுவார். அவரிடம் தாளம் தப்பாது ஆனால் வாசிப்பு அபிநயங்களில் பக்கத்தில் உட்கார்ந்து பாடுபவருக்கு பயத்தில் நா எழாது. அந்த மடத்து சுவற்றில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் பஜனை பாடும். கூட்டத்தின் காதுகளில் ராம நாமம் நிறையும். பஜனை முடிந்ததும் மிக முக்கியமான ஐட்டமான பொங்கல் பிரசாதம் கட்டாயம் உண்டு. அங்கே செவிக்கும் வயிற்றுக்கும் சேர்த்து ஈயப்படும்.

ராம மடம் பஜனை முடிந்து கோபால் அண்ணா மிருதங்கத்துக்கு அந்த "ஒரு வண்டி" அழுக்கு உள்ள 'வாசனை' உறை போடும் வேளையில் வடக்குத் தெரு ராமர் மணியொலி எழுப்பி வா..வாவென்று அழைக்க அவரைப் பார்க்க பறந்து போவோம். போகிற வழியில் நீர் மோரும், பானகமும் எனது கிரஹத்தில் வாங்கி  மிச்சம் மீதி இடம் இருக்கும் வயிற்றில் ரொப்பிக் கொண்டு ஓடுவோம். கோதண்டராமர் கோயிலில் அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப் படுத்துவார்கள். அன்றைக்கு ராமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல ஏகப்பட்ட விசிட்டர்ஸ் வரிசையில் காத்திருப்பார்கள். ஏனைய நாட்களில் ராமருக்கு நாங்களும் எங்களுக்கு ராமரும்தான் ஜோடி. கடைத்தெருவிற்கு போய் அபிஷேக சாமான்கள் மற்றும் ஏனைய பொருட்கள் வாங்கி வந்ததால் ஸ்ரீராம் நடுவில் நின்று அலம்பல் விட்டுக்கொண்டிருப்பான். விழாவிற்கு கடைசி நேரத் தேவைகள் எதுவும் இருப்பின் திசைக்கு ஒருவராய் சைக்கிளில் ஏறிப் பறப்போம்.

எட்டு மணி வாக்கில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்வோம். முக்கால் வாசி எங்கள் தேசிய மேல் நிலைப் பள்ளி தமிழ் வாத்தியார் ஜெம்பகேச தீட்சிதரின் ராமாயணம் உபன்யாசம். எதிர்த்தாற்போல் ராமன் அண்ணா வீட்டில் இருந்து ரெண்டு பெஞ்ச், ஏ.ஆர்.ஆர். கோப்லி வீட்டில் இருந்து ரெண்டு பெஞ்ச், ஸ்ரீராம் வீட்டு பென்ச் என்று உருவி சேர்த்து மேடையமைப்போம். குளத்துப் படித்துறையில் உட்கார்ந்து அந்த ஜகம் புகழும் ராமனின் புண்ணிய கதையை கேட்போம். எல்லா வருஷமும் ஜெம்பகேசன் சார் ராமாயணம் கேட்டு பழகியிருந்தது அந்த படித்துறை. தேங்காய் மூடி பிரசாதமும் சொற்ப சம்பாவனையையும் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளும் பக்குவத்தை ராமர் அவருக்கு கொடுத்திருந்தான். கலெக்ஷனை பொறுத்து சில வருடங்கள் கலை நிகழ்ச்சிகள் மாறும். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்களும் சாத்தியங்களும் மிக மிகக் குறைவு. ஒரு முறை தஞ்சையிலிருந்து என்று நினைக்கிறேன், ஒரு பொம்மலாட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். ராமர் தன் சந்நிதியிலிருந்து நேராக கண்டுகளிக்கும் வகையில் குளத்தோரத்தில் மேடை அமைத்திருந்தோம். நிழலாக ஒரு மெல்லிய வாயில் புடவைத் திரைக்கு பின்னால் அமர்ந்துகொண்டு ரெண்டு பேர் ராம-ராவண யுத்தம் கைகளால் ஆட்டிக் காட்டிக்கொண்டிருந்தார்கள். ஆர்வக் கோளாறில் பொம்மலாட்ட டெக்னாலஜி பற்றி தெரிந்து கொள்வதற்கு மேடைக்கு பின்னே சென்று செமத்தியாக வாங்கிக் கட்டிகொண்டோம்.

ஒன்பதரை வாக்கில் பெருமாளின் அருள் பெற்று எல்லோரும் விடை பெற்ற பின்னர் பெஞ்ச் எடுத்த வீட்டில் எல்லாம் கொண்டு போய் சேர்பித்துவிட்டு ஜமக்காளம் சுருட்டி பிரசாதங்களை எல்லோரும் பங்குபோட்டு சாப்பிடுவோம். அன்றைக்கு மதில் இரவு ஒரு மணிவரை விழித்திருக்கும். காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளின் ஹைலைட்ஸ் ஒலிச்சித்திரமாக ஓடிக்கொண்டிருக்கும். யார் வழுக்கி விழுந்தா, யார் யாரை பார்த்தார்கள், யார் யாரை முறைத்தார்கள், யார் யாரைப் பார்த்து சிரித்தார்கள், யாருக்கு யார், யாரோடு யார் போன்ற பல யார்கள் விஸ்தாரமாக விவாதிக்கப்படும். கூத்தடிக்கும் அந்த கெக்கெக்கே சிரிப்பில் விழாக் கொண்டாடிய ராமருக்கு தொந்தரவாக இருக்கும் என்ற பட்சத்தில் சங்கத்தை கலைக்கும் அந்த அகால வேளையில்..
"வெங்குட்டு, ஸ்ரீராம் ரெண்டு பேரும் நாளைக்கு காலயில வந்துடுங்கோ. ராமநவமி அக்கௌண்ட்ஸ் பார்த்துடலாம்" என்று அவசரமாக அற்பசங்கைக்கு எழுந்திருந்த ரவி சார் ஜெனரல் பாடி மீட்டிங்கிற்கு அழைப்பு விடுப்பார்.

பின் குறிப்பு: நாளை ஸ்ரீராம நவமி. தசரத மஹாராஜா அப்பாவான நாள்.

பட உதவி: in.ygoy.com

-

Friday, April 8, 2011

கிராமத்து தேவதை - இறுதி அத்தியாயம்

முன்கதை சுருக்கம்.
ஆற்றங்கரை ஓரம் அரச மர நிழலில் இந்தக் கதை ஆரம்பித்தது. 
எழில்-சிவா என்ற ஜோடி இந்த பாகத்தில் லவ்வினார்கள்.
மேற்படி ஜோடியின் காதலுக்கு வில்லனாக ஒரு அவதாரம் இங்கே தோன்றியது.

*********************** இறுதி அத்தியாயம் **********************

அரிவாள் உருவும் ஓசை காதை கரகரவென்று அறுக்க கழுத்தை திருப்பினான் பாலு. பண்ணையாள் பரமன் முண்டாசுடன் முண்டா தட்டி ஐயனார் போல கையில் வீச்சருவாளுடன் வீசுவதற்கு தயாராய் நின்றுகொண்டிருந்தான். அவன் ஆறங்குல மீசை அரையங்குலம் துடித்தது. பிசாசு உலவும் இரவு நேரங்களில் மது, மவுக்கும் துவுக்கும் நடுவில் கால் போட்டது போன்ற லாஹிரி வஸ்த்து சப்ளைகளில் பாலுவின் தேவை அறிந்து அவன் மனம் நோகாமல் அந்த இச்சைகளை நிறைவேற்றி வைப்பவன். குடியிரவுகளில் முதல் கோப்பைக்கு காலுக்கு கீழேயும் மூன்றாம் கோப்பைக்கு எதிர் சேரில் அட்டானிக்கால் போட்டும் ஆறாம் கோப்பைக்கு "ழேய் பாழு.." என்று இடுப்பிலிருந்து வேஷ்டி நழுவ எழுந்திருந்து தோளில் கைபோட்டும் உரிமையுடன் கட்டி அழைப்பவன். பரமன் பாலுவுக்கு பாங்கான வேலையாள் ரூபத்தில் இருக்கும் கையாள்.
"டேய்.. எங்க கிளம்பிட்ட.."
"தம்பி.. இதைக் கேட்டுட்டு என்ன சும்மா இருக்க சொல்றீங்களா.." என்று பரம விசுவாசத்துடன் கேட்டான் பரமன்.
"என்ன பண்ண போரே!"
"அந்தப் பயல ரெண்டு கூரா வகுந்துடறேன்.."
"உம்... நீ போய் வெட்ற வரைக்கும் அவன் கை பூப்பறிக்க போகுமா?"
"என்ன தம்பி இப்படி கேட்டுப்புட்டீங்க. இந்தப் பரமன் அருவாளுடன் ஓங்கின கையை கால்,கை, தலை பார்க்காம கீல இறங்கினதில்லை." என்று ஆவேசப்பட்டான்.
"ச்சே.ச்சே.. இப்ப இதுக்கு நாம அருவாள் தூக்கறது சரிப்படாது" என்று விஷமமாக உள்ளர்த்தத்தோடு பார்த்தான் பாலு. எஜமானன் ஏதோ புதுத் திட்டம் தீட்டியிருக்கிறான் என்று அந்த பார்வையிலேயே புரிந்து கொண்டான் பரமன்.

"க்கும்.." என்று ஒரு தொண்டை செருமலுடன் வேஷ்டி மேல் ஜான் அகல பச்சை பெல்ட்டை சுற்றி கட்டியவாறே நிலை வாசலை தாண்டி வெளியே வந்தார் தங்கராஜ். மாமா டவுனுக்கு கிளம்புகிறார். வெளியே வரும் போது கனைப்பது மகன் பாலுவுக்கு சிக்னல். திண்ணையில் உட்கார்ந்து பீடி சிகரெட்டு பிடித்துக்கொண்டிருந்தால் நான் வரும்போதாவது ஓரமாக ஒதுங்கிக்கொள் என்பதற்காக. அவனிடம் தன் சுயமரியாதையை தக்க வைத்துக்கொள்வதர்க்காக மிகவும் பிரயத்தனப்பட்டார். பரமன் கண்ணிமைக்கும் நேரத்தில் கையிரண்டையும் பின்னால் கட்டி அருவாளை மறைத்துக்கொண்டான்.
"ஏலே.. பாலு.. டிபன் திங்க வரலையா." என்று கடமையாய் வீட்டினுள் அழைத்தாள் அவனைப் பெற்ற புண்ணியவதி. புல்லட் அடியில் படுத்திருந்த ராஜபாளையம் காதை தூக்கி எஜமானனை நிமிர்ந்து பார்த்துவிட்டு திண்ணையில் ஏறி வாலை சுருட்டிப் படுத்துக்கொண்டது.

"பரமா மத்தியானம் சாப்பாட்டை லாட்ஜுக்கு கொண்டு வந்துடு" என்று உத்தரவு பிறப்பித்து ராஜா மோஸ்தர் செருப்பணிந்த காலால் ஓங்கி உதைத்து புல்லட்டை உயிர்ப்பித்தார். உதைத்தபோது விலகிய வேஷ்டியை இழுத்து கசங்காமல் முன்னே சொருகிக்கொண்டார். வெள்ளைக் கதர் சட்டையின் மொடமொடப்பு "விஷ்..விஷ்" என்று காற்றைக் கிழிக்க தெரு திரும்பி வண்டியை முடுக்கி பறந்தார். டவுனில் சேக்காளி கருப்பனின் P.K.R லாட்ஜ்ஜில் ரூம் நம்பர் 101-ல் தான் நித்யமும் பகல் முழுவதும் வாசம். சாயந்திரம் ஆறேழு மணிக்குமேல் டவுன் ரத்னா ஸ்வீட்ஸ் கடையில் ஸ்பெஷல் தூள் பக்கோடா வாங்கிக்கொண்டு வீடு வந்து சேருவார். டி.வி, நாடகம், சினிமா, பாட்டு போன்ற கேளிக்கைகைகளை அவர் சிறுவயதிலாவது அனுபவித்து இருப்பாரா என்பது சந்தேகம்தான். அவருக்கு எப்போதும் பேச்சுதான் மூச்சு. அதுவும் ஒன்றுக்கும் உதவாத அரசியல் பேச்சு.

அந்த வாரம் முழுவதும் இயற்கைக்கு எந்த பங்கமும் இல்லாமல் சூரியனின் உதயமும், அஸ்தமனமும் சுமூகமாக நடந்தது. பாலு வழக்கம் போல இரவுகளில் மூக்கு முட்டக் குடித்து வாந்தி எடுத்து திண்ணை விளிம்பில் மல்லாக்க படுத்து மட்டையானான். டவுனில் பல ரகசிய இடங்களில் எழில்-சிவா காதலர் சந்திப்பு நடந்தது. காதலும் திருமணமும் பற்றி பாப்பையா வைத்து பட்டிமன்றம் போடும் அளவிற்கு இருவரும் காரசாரமாக விவாதித்தார்கள். தினமும் தங்கராஜ் மாமா தவறாமல் P.K.R போய் வந்தார்.  பெரிய பண்ணையில் நாலு வேலி நாற்று நட்டார்கள். சிறிய பண்ணையில் இரண்டு வேலி களை பறித்தார்கள். ஊரில் சிலர் வயலுக்கு உரமிட்டார்கள். பலர் திருப்தியாக மூக்கைப் பிடிக்க சாப்பிட்டார்கள். எல்லோரும் தூங்கினார்கள். ஆனால் சாப்பிடுவதும், தூங்குவதும் எழிலுக்கு மட்டும் வெறுத்தது. சாப்பாடு வேப்பங்காயாக கசந்தது. முகம் பறித்து மூன்று நாள் ஆன ரோஜாப் பூ போல வாடியது. கவலையினால் கண் மூடாமல் கனவுகளில் மட்டுமே தூங்கினாள்.

பாலு எந்த நேரமும் குடித்துவிட்டு வீட்டு வந்து நடு வீதியில் நின்று ரகளை செய்யலாம். அப்பாவின் காதுகளுக்கு விஷயம் எட்டலாம். வீட்டில் நம் காதல் அம்பலம் ஆகி அமர்க்களப்படலாம். "நீ ஓடிப்போனா ஓடுகாலி தங்கச்சிய எவன்டீ கட்டிப்பான்" என்று தன்னை சுவற்றில் முட்டி மூக்கை உறுஞ்சி அழுதுகொண்டே அம்மா கேள்வி கேட்கலாம். சகோதரப் பாசத்தில் அம்மா போய் தன் அண்ணன் தங்கராஜிடம் அவர் பிள்ளையை மாப்பிள்ளையாய் கேட்கலாம். அந்தக் கேடுகேட்டவனும் வெட்கம் மானத்தை அடமானம் வைத்து விட்டு தனக்கு தாலி கட்டலாம். சிவா இளமையிலே சோக தாடி வளர்க்கலாம். குடித்து குடித்து தேவதாஸ் ஆகலாம். வாழ்வே மாயம் பாடலாம். ரோடில் புழுதியில் புரளலாம். 'ஃபுல்'லானாலும் புருஷன் என்று நமக்கிட்ட பத்தினி தர்மப்படி நாமும் பாலுவுடன் குடும்பம் நடத்தலாம். இதயம் செத்த சதைப் பிண்டமாக அவனோடு படுத்து ஆசைக்கும் ஆஸ்த்திக்கும் புள்ளை  குட்டி பெத்துப் போட்டு நடைப்பிணமாக வாழலாம். இப்படி பல 'லாம்.."களில் லயித்து இருந்தவளை
"ஏ எழில்" என்று தொட்டுக் கலைத்தாள் தமிழ்.
"........"
"ஏய் உன்னத்தான்டி.."
பதிலேதும் பேசாமல் தண்ணீருக்குள் முகம் பார்த்துக்கொண்டு அந்தச் சிறிய வாய்க்கால் கல்வெர்ட் மேல் உட்கார்ந்திருந்தவளை தோளைப் பிடித்து திருப்பினாள். கீழே வாய்க்கால் அவள் கண்களில் குளம்.
"எவ்ளோ நேரமா தேடிக்கிட்டு இருக்கோம். இங்க உக்காந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கே. இன்னிக்கி கடைசி நாள் திருவிழா. வா போயிட்டு வரலாம்."
வானத்தில் இவள் சோகம் தெரியாத முழுநிலா தள்ளி நிற்கும் மேகத்தை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. கீழே வாய்க்காலில் தண்ணீர் சலசலத்து கும்மாளமடித்தது. வாய்க்கால் ஓர நாணல் அந்த கும்மாளத்துக்கு வளைந்து ஆடி டிஸ்கோ நடனம் ஆடியது. எதையும் ரசிக்க மனமில்லாமல் அரைமனதாய் அந்த ஆத்தாளை தரிசிக்க எழுந்தாள்.

*
அரை மைல் தூரத்திலேயே "டட..டம்...டட..டம்..." என்ற அந்த உடுக்கையடி விண்ணைப் பிளந்தது. தமிழகத்தின் பிரதான தாளம். கோயில் வாசல் அரசமரத்தடி ஊர் ஜனங்களின் ஆக்கிரமிப்பில் ஜேஜேவென்று இருந்தது. ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் காடா விளக்கில் தகர டப்பாக்குள் கட்டை சுற்றி ராஜா, ராணி மேல் வைத்து காலிக் கைலிகள் சூழ அஞ்சுக்கு பத்து, பத்துக்கு இருபது சூதாட்டம் கனஜரூராக நடந்தது. பத்து ரூபா அஞ்சு ரூபா பிளாஸ்டிக் சாமான்கள் கடையில் டீ வடிகட்டியும், சோப்பு டப்பாவும் விற்பனையில் முதலிடம் பிடித்தன. சைக்கிளில் கட்டிய ஜோக்கர் பொம்மையின் வயிற்றிலிருந்து ரப்பர் போல இழுத்து இழுத்து கடிகாரமும், தேளும் ஜவ்வு மிட்டாயில் செய்து குழந்தைகள் கையில் கட்டிக்கொண்டிருந்தார் மிட்டாயினால் கை ரோஸ் கலரான ஒரு முதியவர். குருவி காக்கா இதய வடிவ சிகப்பு பலூன்களும், குரங்கு வால் பலூனும் அமோகமாக விற்பனையாயின. பலூன் தனக்கு கிடைக்காத ஒரு பொடிப் பயல் "வீல்...வீல்" என்று அழுது அதகளப் படுத்திக் கொண்டிருந்தான். மரத்தடி தாண்டி இரவு இன்னிசை விருந்திற்கு "ஹலோ.ஹலோ." என்று மேடை மேலே நின்று அமைப்பாளர்கள் மைக் டெஸ்ட் செய்துகொண்டிருந்தார்கள். நாலு பெட்ரோமாக்ஸ் விளக்கு ஆற்றோரம் கரையில் வைத்து "புஸ்.புஸ்." என்று ஊதி ஒழுங்காக பற்றவைக்க சீர் செய்து கொண்டிருந்தார்கள். தீ மிதிக்கு இரண்டடி அகலம் இருபதடி நீளம் பள்ளம் வெட்டி தணல் போட்டிருந்தார்கள். ஐந்தாறு பேராய் அதனருகில் நின்று தீப்பொறி பறக்க விசிறிக் கொண்டிருந்தார்கள். பூசாரி சுறுசுறுப்பாய் கோயிலின் உள்ளே வெளியே காரணமின்றி எதற்கோ திரிந்தார்.  நண்பிகள் புடை சூழ எழிலும், தமிழும் திருவிழா கூட்டத்திர்க்குள் இரண்டற கலந்தார்கள்.

orchestra

சிவாவும் கதிரும் மைக் செட் கட்டிய இடத்திற்கு அருகில் நின்று ஊர்க் கதை பேசிக்கொண்டிருந்தார்கள். எழிலுக்கு முதுகு காட்டி சிவாவைப் பார்த்து நின்றுகொண்டிருந்த கதிருக்கு சிவா கண்ணில் எழில் வழிந்தது. கரடியாய் இருக்க விரும்பாமல் "நா வரேன்டா..." என்று பெருந்தன்மையாய் ஒதுங்கினான்.
"ஏய்.இங்க பாரேன்..." என்று எழிலின் கையைப் பிடித்து சட்டென்று இழுத்துக் கொண்டு ஆர்கெஸ்ட்ரா மேடை பக்கம் போனாள் தமிழ். போகும் வழியில் சற்றே திரும்பி சிவாவை பார்த்து அழகாகச் சிரித்தாள் தமிழ். இந்த திடீர் பளீர் புன்னகையால் சிவா ஒன்றும் புரியாமல் குழம்பினான். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அச்சுவெல்லக் கட்டி மொய்க்கும் சிற்றெறும்பு போல அதிகரித்தது. மாட்டுவண்டிகளும், சைக்கிள்களும், மோட்டார் சைக்கிள்களும் சாலையின் இருமருங்கும் சாரைசாரையாய் குவிந்தன. பட்டணத்து ஆர்க்கெஸ்ட்ரா இசைப் பிரியர்கள் அவ்வளவு பேரையும் காந்தம் போல இழுத்திருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு ஆத்தாள் புஷ்பாலங்காரத்தில் சிவனேன்னு இருந்தாள்.

"இன்னும் சரியாக அரை மணி நேரத்தில் ஸ்ருதியும் லயமும் ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிக்கப் போகிறது. அனைவரும் திரளாக வந்திருந்து இன்னிசையை ரசித்து ஆத்தாளின் அருளைப் பெற அழைக்கிறோம்" என்று புதிதாக முதன்முறை மைக் பிடித்த ஒருவன் ஆர்க்கெஸ்ட்ரா கேட்டால் அம்பாளின் அருளைப் பெறலாம் என்ற ரீதியில் தத்துபித்தென்று உளறினான்.

"இங்க கொஞ்சம் வரீங்களா..."
தனியாக தமிழ் மட்டும் வந்து சிவாவை ஒதுக்குப்புறமாக அழைத்தாள். மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல வாயைத் திறக்காமல் தமிழைப் பின்தொடர்ந்தான்.
ஆர்க்கெஸ்ட்ரா மேடை தாண்டி இருநூறு முன்னூறு அடிகளில் இருந்த ஒரு வளர்ந்த நெடிதுயர்ந்த தென்னைமரத்தின் பின்னால் அழைத்துச் சென்றாள். தென்னை மரத்தின் தலை மேலே நிலா காய்ந்தது. எழில் அங்கே தனக்காக காத்திருக்கிறாள் போலிருக்கிறது என்ற ஆசையில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு தமிழ் பின் சென்றான். தீ மிதி தொடங்கிவிட்டதற்கான அறிகுறியாய் உடுக்கடியும், பெண்கள் குலவை இடும் சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. மரத்திற்கு பின்னால் வந்ததும் ஒருவரையும் அங்கே காணாமல்
"என்ன?" என்று சந்தேகமாய்க் கேட்டான் சிவா.
"எனக்கு சுத்தி வளச்சு பேசத் தெரியாது. உங்க கிட்ட நேரடியாவே கேக்கறேன். நீங்க எழில லவ் பண்றீங்களா?" பொட்டில் சுட்டார்ப் போல டப்பென்று கேட்டாள் தமிழ்.
"ஆமாம்."
"கல்யாணம் கட்டிப்பீங்களா?"
"நிச்சயமா. அதிலென்ன சந்தேகம்"
"அதுக்கப்புறம் என்னையும் கட்டிப்பீங்களா?"
அதிர்ச்சியில் உறைந்தான் சிவா.
"எ....எ.....என்ன சொல்றீங்க?" கேட்க நா எழவில்லை.
"வார்த்தையில அதிர்ச்சி இருந்தாலும் மனசுக்குள்ள மகிழ்ச்சியா இருக்குல்ல... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா... இல்ல.."
"நீங்க என்ன சொல்றீங்க.. எனக்கு ஒன்னும் புரியலை.."


"புரியும்படியா சொல்றேன் கேட்டுக்குங்க. எங்க வீட்ல துரதிர்ஷ்டமா பொறந்த ரெண்டாவது பொண்ணு நான். எப்பவும் எனக்கு எழில் உபயோகப்படுத்தின பழைய பொருள் தான் கிடைக்கும். அப்பாவுக்கு அவங்க தங்கைகளுக்கு கல்யாணம் கட்டுன கடன் இருந்ததால ஒரே பணக் கஷ்டம். எனக்கு மனக் கஷ்டம். இதை சொல்ல வெக்கப்படலை. சில சமயம் அவளோட கரை படிஞ்ச ஜட்டி கூட உபயோகிச்சிருக்கேன். சின்ன வயசில இதைப்பத்தி எனக்கு மனசுல ஒன்னும் பெருசாப்படலை. ஆனா நாள் ஆக ஆக எனக்கு ரொம்ப வெறுப்பா வந்திச்சு. வாழ்க்கையில நமக்குன்னு புதுசா ஒண்ணும் கிடைக்காதான்னு ஏங்க ஆரம்பிச்சேன். என்னோட ஃபிரண்ட் கீதாவோட அண்ணன் கல்யாணத்துல உங்களைப் பார்த்துட்டு முதல் பார்வையிலேயே என் மனசை பறி கொடுத்தேன். உங்க கிட்ட என்னோட லவ்வ சொல்ல விடாம இந்த பாழாப் போற வெட்கம் இவ்வளவு நாளா தடுத்துச்சு. போன வாரம் ஒரு நாள் பஸ்சுக்கு போகும் போது எங்க மாமாப் பையன் உங்களோட லவ்வ என் கிட்ட போட்டு உடைச்சுட்டான்.  இனியும் தாமதிக்கக் கூடாதுன்னு நினச்சு டவுன்ல பஸ் ஸ்டாண்ட் முக்குல நான் உங்க கிட்ட என் காதலை சொல்ல வந்தப்ப எங்க அக்காகூட காதல் ரசம் சொட்ட சொட்ட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தீங்க. இதிலையும் நாம ரெண்டாவாதா அப்படின்னு நினைச்சு மனசுடைஞ்சு வெறுத்துப் போயிட்டேன். இப்ப சொல்றேன். நான் வாழ்ந்தா அது உங்க கூட தான். அப்படி இல்லைனா உங்க விருப்பம் போல எழில நீங்க கட்டிக்கலாம். அவ உயிரோட இருக்கிற வரைக்கும் நா உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுக்காக நா கிழவியா ஆகிறவரைக்கும் வெயிட் பண்றதுலையும் அர்த்தம் கிடையாது. இப்ப நினச்சா கூட எங்க மாமாகிட்ட உங்களை போட்டுக் கொடுத்து உங்க காதலுக்கு வேட்டு வைக்க முடியும். உங்களையும் காலி பண்ண முடியும். ஆனா நீங்க எனக்கு முழுசா வேணும். அதனால இவ்ளோ சொன்னதையும் மீறி நீங்க எழிலை கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா அக்கான்னு கூட பார்க்காம...என் கையாலையே அவளை...ஏதாவது செய்ய வேண்டி வரும்.." என்று இழுத்தவளை கண் கொட்டாமல் பார்த்தான் சிவா. கண்ணெதிரே கல்யாண பூதம் நிற்பது போன்று உணர்ந்தான்.

"என்னடா பதினொன்னாவது படிக்கிற சின்னப் பொண்ணு இப்படி பேசறாளேன்னு பார்க்கறீங்களா. காதலுக்கு கண் இல்லை. அக்காவும் இல்லை. இல்லைனா நான் பன்னெண்டாவது முடிச்சதும் நீங்களே பெருந்தன்மையா எங்க வீட்ல வந்து என்னை பொண்ணு கேளுங்க. அட்லீஸ்ட் என்னோட வாழ்க்கையில இந்தக் கல்யாணமாவது எனக்கு புதுசாக் கிடைக்கட்டும்" என்று முத்தாய்ப்பாக முடித்தாள் தமிழ்.

சிவாவிற்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. காதலில் காற்றில் அலையும் நூலறுந்த பட்டம் போல தவித்தான். இவ்வளவு உறுதியோடு இருக்கும் இந்தப் பெண் எதையும் செய்வாள் என்று எண்ணினான். சவம் போல நடந்து ஆர்கெஸ்ட்ரா மேடை சமீபம் அடைந்தான். நான்காவது வரிசையில் குத்த வைத்து முட்டிக்கு முகம் கொடுத்து உட்கார்ந்திருந்தாள் எழில்.
"வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ளே.." என்று ஜேசுதாஸ் கேட்டால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஒருவர் மேடையில் ராகமாக கத்திக் கொண்டிருந்தார். பக்கவாத்தியம் வாசிப்பதற்கு கஷ்டப்பட்டுக்கொண்டு  பத்து பேர் மேடையில் பிரசவ வேதனையில் வீற்றிருந்தனர். சங்கீதம் தெரிந்து பார்ப்பவர்கள் மரண அவஸ்த்தையில் இருந்தனர்.

இசை கேட்க மனம் இசையாமல் சிவா ஒத்தையாக அந்த ரோடில் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தான். தேவதையாக அக்காளும் பிரம்ம ராட்ஷசியாக தங்கையும் அவன் கண்ணுக்குள் காதல் போர் புரிந்து கொண்டிருந்தார்கள். "டம்.டம்.டம்." என்று ஆர்க்கெஸ்ட்ரா ஒலி தூரத்திலிருந்து மெலிதாக அவனை இடித்துக்கொண்டிருந்தது.

முற்றும்.
பட உதவி: http://www.travelblog.org/

-


Thursday, April 7, 2011

கிராமத்து தேவதை - III

ஒரு கிராமத்து ஆற்றோரக் கோயிலில் இங்கே துவங்கிய கதை சிவா-எழில் காதல் எபிசோடு வரை நகர்ந்துள்ளது.

********************* மூன்றாம் அத்தியாயம் *********************
mini bus

"கொக்கரக்கோ" என்று எதிர் வீட்டுக் கூரை மேலிருந்து கழுத்தை எக்கி எழில் வீட்டு சேவல் கூவியபோது காலை சரியாக ஏழு மணி. தகதகவென்று கிழக்கில் பொன்னிறமாக கதிரவன் புறப்பட்டிருந்தான். மாடுகள் தங்களின் அன்றாட கடமைக்கு தயாராக எழுந்து நின்று மொய்க்கும் ஈக்களை வாலால் ஓட்டிக்கொண்டிருந்தன. குட்டி ஆட்டை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு கீதாரி மேய்க்க கிளம்பிவிட்டார். கறவை மாட்டை ஐயனார் குட்டையில் குளிப்பாட்ட இரண்டு சிறுவர்கள் டிராயருடன் விரட்டிக்கொண்டு போனார்கள். பின்னாலையே பிறந்து ஐந்து நாளான கிடேரி கன்னுக்குட்டி துள்ளிக்குதித்து ஓடிற்று. நிறைய வீட்டு வாசலில் பசுஞ்சாணி தெளித்து இரண்டு இழை அரிசிமாவுக் கோலம் போட்டாயிற்று. பெரிய பண்ணையின் பங்கில் இன்று நடவு என்று ஐந்தாறு ஜனம் கோஷ்டியாக வெற்றிலை போயிலை பொட்டலத்துடன் ரோட்டோரம் வரிசையாக போனார்கள். இரண்டு மூன்று ஃபாக்டம்பாஸ் உர மூட்டையை சைக்கிள் கேரியரில் கோபுரமாகக் கட்டி பாரம் தாங்காமல் ஆட்டி ஆட்டி பாலன்ஸ் செய்துகொண்டு சட்டை போடாத பண்ணையாட்கள் போனார்கள். உழவு இயந்திரத்தை பின்னால் பொருத்திய சிகப்பு டிராக்டர் ஒன்று இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கும் எஞ்சிய கிராம மக்களை "டட்....டட்.....டட்....டட்....." என்று உறுமி எழுப்பிக்கொண்டு களத்திற்கு குதித்தோடியது.

நேற்று இரவு மழையில் நனைந்ததில் எழிலுக்கு ஜல்பு பிடித்துக் கொண்டது. "ஹச்..." என்று தும்மிக்கொண்டே துயிலெழுந்தாள் எழில். இரு கை மேலே தூக்கி சோம்பல் முறிக்கும் போது கை கால்களில் வலி குடைந்தது. யாரோ அடித்து துவைத்து காயப் போட்டாற் போல சோர்வாக இருந்தது. எழில் பக்கத்தில் தமிழ் அழகாக தூங்கிக் கொண்டிருந்தது. தமிழ் மீது கொண்ட தீராக் காதலினால் தன் வாரிசுகளுக்கு "ழ"கரம் கொண்ட சுத்த தமிழ்ப் பெயர்கள் சூட்டினார் முருகேசு. வீட்டில் பாட்டிப் பெயர்கள் பெயர்த்திகளுக்கு வைக்கவில்லை என்று பெரிய ரகளை நடந்தது. கடைசியில் அவரது தமிழ் மொழிப் பற்று வென்றது. ஆனால் அவர் பெண்டாட்டி உள்பட முக்கால்வாசிப் பேர் "எளிலு" "தமிலு" என்று சுந்தரத் தெலுங்கில் அழைத்தார்கள். எழிலரசியும், தமிழரசியும் இணைபிரியா சகோதரிகள். முதல் வருடம் எழில் படித்த புத்தகங்களை அடுத்த வருடம் புது காக்கி அட்டை போட்டு லேபிள் ஒட்டி தமிழ் படிப்பாள். எழிலின் கிழியாத யூனிஃபார்ம், கணுக்காலுக்கு மேலே தூக்கிப் போன பாவாடை, இறுகிப் பிடிக்கும் மேல் சட்டை, உடையாத ஹேர் கிளிப், சாயம் போகாத ரிப்பன் என்ற எல்லாம் இனாமாக இரண்டாவதாக தமிழுக்கு கிடைக்கும். தமிழுக்கு இரண்டாவது மரியாதை. அம்மா சமையல் கட்டில் புகையோடு போராடிக்கொண்டிருந்தாள். கட்டம் போட்ட கைலியும் தோளில் துண்டு, கையில் சோப்பு டப்பாவோடு ஆற்றங்கரைக்கு குளிக்க  சென்றார் முருகேசு வாத்தியார். இப்போது மொத்த கிராமமும் கண் விழித்து பல் தேய்த்திருந்தது ஒருத்தியைத் தவிர.

"தமிழு..ஏ தமிழு.. " தூங்கிக்கொண்டிருந்தவளை உலுக்கினாள் எழில்.
"ம்..ம்.." என்று கண்களைத் திறக்காமல் ஏதோ இன்பக் கனாவில் இருந்த தமிழ் மெல்ல முனகினாள்.
"ஏய்..எழுந்திருடி..தடிமாடு.. "
"என்ன..."
"எழுந்திரு.. ஸ்கூல் போலையா..."
"ச்சே.. ஒரே ரோதனையாப் போச்சு..என்னடி.."
"ஸ்கூலுக்கு லேட் ஆயிருச்சு.."
அதற்கு பதில் சொல்லாமல் "நேத்திக்கி கோயில்லேர்ந்து எப்படீ வந்தே" என்று கேள்வியாய் கேட்டாள் தமிழ்.
"பத்து ஆயிருச்சு"
"எப்டி வந்தே"
"......"
"நடந்து வந்தியா?"
"......"

மேலே இருக்கும் ரெண்டு "......"க்கும் தலை சாய்த்து பதில் பேசாது தங்கையைப் பார்த்து புன்னகைத்தாள் எழில்.

"ஏண்டீ.. ஒருத்தியும் இன்னிக்கி பள்ளிக்கூடம் போவலியா..." என்று அரிசி களைந்த கையோடு அடுக்களையிலிருந்து கேட்டுக்கொண்டே வந்தாள் எழிலம்மா.

சோம்பலாக எழுந்திருந்து சுறுசுறுப்பாக கிளம்பினார்கள். கை கால் வலி எடுத்தாலும் சிவாவைப் பார்க்காமல் இருந்தால் இதயம் வலிக்கும் என்று எழிலும் பள்ளிக்கு கிளம்பினாள். நீலப் பாவாடை வெள்ளை ஹாஃப் சாரி உடுத்திக்கொண்டார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவியாய் ஜடை பின்னிக்கொண்டார்கள். நீல ரிப்பன் சுயமாய்க் கட்டிக்கொண்டார்கள். அடுப்படி வாசலில் நின்றுகொண்டே மல்லிப்பூ இட்லி பிய்த்து தேங்காய்ச் சட்னி தொட்டு வாயில் போட்டுக்கொண்டார்கள். தயிர் சாதமும் எலுமிச்சை ஊறுகாயுமாய் மூடி அதுங்கிய வட்ட வடிவ எவர்சில்வர் டிபன் பாக்ஸில் அள்ளி போட்டுக்கொண்டு "வரேம்மா..." என்று உள்ளே பார்க்காமல் சொல்லிக்கொண்டு வாசற்படி கடந்து மறைந்தார்கள்.

தெருமுனை திரும்பும் வரை அக்காளும் தங்கையும் எதுவும் பேசாமல் மௌனமாக நடை பயின்றார்கள். இரண்டு தெரு திரும்பி மினி பஸ் நிற்கும் ஸ்டாண்ட் போகும் வழியில் தங்கராஜ் மாமா வீட்டு திண்ணையின் ஓரத்தில் அடுக்கியிருந்த நெல்லு மூட்டையோடு மூட்டையாய் பாலு மர நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். மாமாவின் வாரிசு. தவப் புதல்வன். குலக்கொழுந்து. பரட்டை தலையும் முண்டா பனியனும் மடித்துக் கட்டிய கைலியும் அவனை பற்றி தன்னிலை விளக்கம் அளித்தன. கண்கள் இரண்டும் மிளகாய்ப் பழமாக சிவந்திருந்தது. நேற்றைய கள்ளின் உபயம். வீட்டு வாசலில் நடுநாயகமாக புல்லட் இருந்ததில் மாமா உள்ளே இருக்கிறார் என்று தெரிந்தது. புல்லட்டுக்கு காவலாக அதனடியில் ராஜபாளையம் படுத்திருந்தது.

"ஏய். எளிலு..." என்று கூப்பாடு போட்டான் பாலு.
குனிந்த தலை நிமிராமல் நடையின் வேகத்தை கூட்டினாள்.
"ஏய்..உன்னத்தான்.. எளிலு..." அடித்தொண்டையில் இருந்து சத்தம் போட்டு கூப்பிட்டான்.
இந்த முறை நின்றாள். அவர்கள் பாலு வீட்டின் திண்ணையைத் தாண்டியிருந்தார்கள். தமிழ் பேசினாள்.
"என்ன வேணும் உனக்கு..." என்று கறாராய்க் கேட்டாள்.
"நா உன்னிய கூப்ட்டேனா. நீ உன் வேலையைப் பாரு.. ஏ எளிலு.."
"உம்..." என்றாள் எழில்.
"நேத்து உன்னிய நான் பார்த்தேன்."
அதனால் என்ன என்பது போல அனாயாசமான பார்வை ஒன்றை உதிர்த்தாள் எழில்.
"கோயிலுக்கு போயிருந்துது.." என்று பதிலுக்கு பேசினாள் தமிழ்.
"நான் கோயில்ல வச்சு பார்க்கலை..." என்று பீதியை கிளப்பினான் பாலு. எழில் கலவரமானாள். கண்கள் துடி துடிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"எங்க பார்த்தே.." என்று சின்னது வாயாடியது.
"சொல்லட்டா...." என்று குறும்புடன் எழிலைப் பார்த்து சிரித்தான் பாலு.
கண்கள் தவிக்க, நாக்கு வரள, ஒரு தடவை எச்சில் விழுங்கி இவன் நம்மை பார்த்திருப்பானோ என்று நினைக்கும் போது
"நேத்து கொட்ற மழையில இறுக்க கட்டிப் பிடிச்சிகிட்டு வந்து இறங்கினியே... அத நான் பார்த்தேன்."
பாலுவின் இந்த பதிலில் அதிர்ந்து போனாள் தமிழ். எழிலின் மறுப்புரைக்கு அவளை பார்த்தாள்.
"யாரு?" என்று இருவருக்கும் மையமாக ஒரு கேள்வி கேட்டாள்.
"நேத்து படிச்சு முடிச்சு இன்னிக்கி இன்ஜினியரிங் காலேஜ் வாத்தியாரு. மேலத் தெரு சி....வா...." வில்லன் பார்வையில் மற்றும் மொழியில் சொன்னான் பாலு.
தமிழ் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். காலை டவுனுக்கு செல்லும் மினி பஸ் குளத்தோரம் ஹார்ன் அடித்து புறப்படுவதாக சைகை காட்டியது.

பதில் சொல்லாமல் இருவரும் பஸ்ஸை நிறுத்தச் சொல்லி கைகாட்டி பாவாடை தடுக்க ஓடினார்கள். அவர்கள் ஓடிய திக்கைப் பார்த்துக்கொண்டு பாலு நின்றுகொண்டிருந்தான்.

பின்னால் பாலு வீட்டு திண்ணையில் இறங்கியிருந்த ஒட்டுக்கூரையின் சரிவில் உத்தரத்தில் பத்திரமாக சொருகியிருந்த திருப்பாச்சி அருவாளை சர்...ரென்று உருவிப் புறப்பட்டது ஒரு உருவம்.

தொடரும்...

பட உதவி: http://www.trekearth.com/

-

Wednesday, April 6, 2011

கிராமத்து தேவதை - II

கதையோட என்ட்ரி பாகம் இங்கே.
*********************** இரண்டாம் பாகம் *********************

"எளிலு..." என்ற காத்திரமான பாரதிராஜாக் குரல் புல்லெட் டப்டப்பை கீழே அமுக்கி மேலெழுந்து எழில் காதில் துளைத்து அவளது லப்டப்பை துரிதப்படுத்தியது.
"என்ன மாமா?" என்ற எழிலின் கேள்வியின் கடைசி "மா" அவர் காதை அடையும் முன் காற்றில் கரைந்தது.
"இங்க என்ன பண்றே?"
காற்றில் பறந்த தாவணியை கையால் இழுத்து பிடித்து அடக்கிக்கொண்டு "கோயிலுக்கு வந்தேன்." என்றாள்.
"தனியாவா?" போன பதிலின் "ன்" முடிக்கும் முன் அவர் வாயிலிருந்து வெடித்து வெளி வந்த கேள்வி இது.
"இல்ல.. ஃபிரண்ட்ஸ் கூட.."
"சரி.சரி.. நல்லா இருட்டுடிச்சு. சாயந்தரமே கிளக்கால ஒரே மூட்டமா இருந்துச்சு. மல வாரதுக்குள்ள சீக்கிரம் வீட்டுக்கு வர வளியப் பாரு. குறுக்கால வாறதா இருந்தா சோமுத்தேவர் பங்கு வளியா வா. அங்கின வெளக்கு இருக்கும்" என்று அதட்டலுடன் சொல்லிவிட்டு புல்லட்டின் காதைத் திருகி டப்டப்டபை அதிகப்படுத்தி விரைந்தார் தங்கராஜ் மாமா. இப்போது எழிலின் லப்டப் வேகம் குறைந்து சமநிலை பிடித்தது. வண்டி பின்னால் தொங்கிய ஏதோ ஒரு திராவிட கட்சி சின்னம் வரைந்த மட் ஃப்ளாப் ஓசியில் தரை பெருக்கியது. அதன் வேகத்தில் நடுரோட்டில் கிடந்த சில வைக்கோலும் யாரோ பொட்டலம் தின்று போட்ட எண்ணெய் திட்டுதிட்டாய் ஊறிய பேப்பரும் பறந்து ரோடோரத்தை அடைந்தன. செம் புழுதி பறந்து அடங்கியது.

rainy day
எழில் திரும்பிப் பார்க்க "யப்பாடி!" என்று பெருமூச்சோடு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தான் சிவா.
"ஏய்.. எதுக்கு இருட்டுல என் பின்னால வரே! யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?"
"ஆக்காங். யார் என்ன நினச்சா என்ன? நான் உன்ன நினச்சேன். நீ என்ன நினச்சே..." என்று ராகமாக பாடினான்.
"ஐயோ! நிறுத்து. நிறுத்து. அதான் டவுன்ல பாக்கிற இல்ல. இப்ப என்ன வந்திச்சு."
எங்கிருந்தோ கிளம்பிய காற்று இங்கே வந்து காதலுக்கு கொஞ்சம் ஒத்தாசை செய்தது. போகிற போக்கில் வெட்கம் இல்லாமல் அவள் மேலாடையை சிறிது கலைத்தது. ஓரஞ்சாரம் தெரிந்த அந்த இருட்டில் ஆந்தை ஆனான் சிவா.
"இல்ல. இந்தப் பச்சயில உன்ன பார்க்கும்போது என் பச்ச மனசு பருத்திக் காடா பத்திக்கிச்சுடா. அதான்."
"சரி..சரி.. பக்கத்துல வராதே. யாராவது பார்த்தாங்க எங்க வீட்ல வத்தி வச்சுடுவாங்க. அப்புறம் உன்னையும் என்னையும் சேர்த்து ஈ.பி கம்புல கட்டி நிஜமாவே பத்த வச்சிடுவாறு எங்க மாமா. நாளைக்கி டவுன்ல பார்க்கலாம். இப்ப கிளம்பு"  என்று பரபரத்தாள் எழில்.
"ஐ! உன்னையும் என்னையும் சேர்த்து ஒண்ணா கரண்டு கம்பத்துல கட்டுவாங்களா... இது நல்லா இருக்கே. அப்ப யாராவது பார்க்கட்டும்..." என்று சிரித்துக் கொண்டே அவளை நெருங்கினான்.

தங்கராஜ் மாமா புல்லட்டில் போன திக்கிலிருந்து ஒரு சின்ன வெளிச்சப் பொட்டு இவர்களை பார்க்க வருவது தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக விட்டம் அதிகமான வெளிச்சப் பொட்டு பெரிதாகி கண்களை கூசி மறைத்தது. எட்டு மணி மினி பஸ் "சீனிவாசா" எண்ணி மொத்தமாக பத்து பேரை இறக்கி விட்டது. அந்த பத்து பேரில் டவுனிலிருந்து கடைக்கு மளிகை சாமான் வாங்கி வரும் பாய், வெண்ணை விற்று வீடு திரும்பி வரும் இரண்டு பெண் வியாபாரிகள், இரண்டு கல் தொலைவில் ஒரு ஸ்டேஜ் டிக்கெட் வாங்கி மாரியம்மனை பார்க்க வந்த ரெண்டு விவசாயக் குடும்பம் ஆகியோர் அடக்கம். இன்றைக்கு முதல் நாள் திருவிழாதான். கடைசி மூன்று நாட்கள் தான் கூட்டம் அம்மும். கோயிலுக்கு பின்புறம் இருக்கும் விசாலமான இடத்தில் வண்டியை போட்டுவிட்டு டிரைவர் பெத்தபெருமாள் அண்ணாச்சி சாமி கும்பிட்டு தான் திரும்பவும் கிளப்புவார். இதுதான் சீனிவாசா ஊருக்குள் வரும் கடைசி ட்ரிப். 

இந்தக் கோடையிலும் அந்த இடம் ஜிலீர் என்று குளுகுளுத்தது. திடீரென்று காற்றின் வேகம் அதிகரித்து வேட்டி புடவைகளை உடம்போடு ஒட்ட வைத்து அங்கங்களின் அவுட்லைன் காண்பித்தது. மழை வரும் அறிகுறி தென்பட்டது. சிவா பார்த்த விழி பார்த்தபடி சொக்கி நின்றான். பார்வையால் அவளை அள்ளி சாப்பிட்டான். அவனது பார்வையில் கிறங்கிய எழில் மௌன மொழி பேசினாள். மனசுக்குள் காதல் ஊற்று பொங்கியது. தூரத்தில் குலை தள்ளிய  வாழைமரம் இந்த காற்றை எதிர்க்க தெம்பில்லாமல் இலைத் தலையை விசிறி அல்லாடியது. பக்கத்தில் ரெண்டு கன்னும் தாய் வாழையை தாங்கி ஆதரவுடன் நின்றது. ஒன்றிரண்டு தூறல்கள் மண்டையில் விழ ஆரம்பித்தன. உயிர்த்து எழுந்து இருவரும் ஓடிப் போய் ஆத்தா சந்நிதிக்கு எதிர்த்தாற்போல் எதிரும் புதிருமாய் நின்றார்கள். இன்னமும் ஓரப் பார்வையால் அவனை மேய்ந்து கொண்டிருந்தாள் எழில். பளீரென்று அடித்த மின்னல் விளக்கின் உதவியால் அவள் பார்வைப் பின்னல்களை பார்த்தவனுக்கு விறுவிறுவென்று உடலில் மின்சாரம் ஏறியது. சடசடவென்று பெருந்தூறல்கள் விழ ஆரம்பித்தது. "படார்...." என்று வானத்தை பிளந்துகொண்டு பெரும் இடி ஒன்று இறங்கியது. எழில் அச்சத்தில் ஒரு முறை குலுங்கினாள். பயமுறுத்திய இடியை சபித்தான் சிவா. மரக்குடைக்குள் பாதி பேரும் கோயிலுக்குள் மீதி பேரும் தஞ்சம் அடைந்தனர். "சோ...." என்ற பெருமழை பொழிய ஆரம்பித்தது. தூரத்து வயற்காடுகளில் ஆங்காங்கே ஒன்றிரண்டு போர்செட்டு விளக்குகள் தண்ணீர்த் திரையின் பின்னால் மங்கலாக தெரிந்தன.

கதிருக்கு அவன் அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒரு ஜவ்வுத் தாளை எடுத்து தலைக்கு சுற்றிக்கொண்டு "டேய்.. வரேண்டா... நாளைக்கு பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டே சைக்கிளில் பறந்தான். எழில் கூட வந்த பரிவாரங்கள் தெரிந்தவர்கள், அண்ணி, அத்தை, ஆத்தா என்று வருவோர் போவோரிடம் குடையில் ஒண்டிக்கொண்டு "வரேண்டி.." என்று கைகாட்டிவிட்டு போனார்கள். சிறிது நேரத்தில் கோயில் காலி. பூசாரி, சிவா, எழில் மற்றும் ஓரிரண்டு சொற்ப பேர்களுடன் அந்த கோவில் கோர மழையின் பிடியில் சிக்கியிருந்தது. கோடை மழை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியது. ரோட்டின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு தண்ணீர் வழிந்தோடி பக்கத்தில் இருக்கும் ஆற்றுக்கு கிளை போல சிற்றாராக ஓடியது.

தூரத்து கிராமத்தில் இருக்கும் சர்க்கரை ஆலை சங்கு ஒன்பது மணிக்காக ஊதியபோது சடார் என்று மின்சாரம் தடைபட்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காரிருள் படர்ந்தது. மழையின் தாக்குதல் குறையவில்லை. கோயிலை சுற்றி சுவர்க்கோழிகள் கிரிக்கிரிக் என்று பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. உள்ளே அம்மனுடைய கருவறை தொங்கு விளக்கில் மங்கிய வெளிச்சம் கிடைத்தது. வாவ்! சற்றுமுன் அடித்த மின்னலில் எழில் கொஞ்சும் எழிலை பார்த்தான் சிவா. ஒரு அடை மழை. ஆற்றங்கரையோர அம்மன் கோவில். அவ்வப்போது அடிக்கும் மின்னலின் இயற்கை வெளிச்சத்தில் காதலி. காணக் கிடைக்காத அபூர்வமான நேரம்! எவ்வளவு நேரம் அப்படி நின்றார்கள் என்று அவர்களுக்கு தெரியாது.

"நா வரட்டுமா.." என்று உதவிக்கு கேட்டான் சிவா.
"உஹும்.. வேண்டாம்.. நா அப்படியே குறுக்கால நடந்து போய்டுவேன்."
"மழையில வரப்பு வழுக்கும். காலை நண்டு கிண்டு ஏதாவது கடிச்சிடப் போகுது"
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது... நா கிளம்பறேன்..."
"ஏய் மழை கொஞ்சம் நிக்கட்டும்.."
"இப்போதைக்கு விடற மாதிரி இல்லை.. அப்பா தேடும். அம்மா வையும்."
"நா வேணா வண்டியில கொண்டு வந்து விடட்டா?"
"அச்சோ.. போதும் போ. தோலை உரிச்சுடுவாங்க."
"இல்ல. அக்ரஹாரம் முனையில எறக்கி விட்டுடறேன்... அப்டியே போய்டு.."
"வேணாம். யார்னா பார்த்தா வம்பாயிடும். நா போறேன்.."

மழையில் தன்னிடம் இருந்து பிய்த்துக்கொண்டு நடந்தவளை துரத்தி தனது ஹீரோ ஹோண்டாவில் ஏறச் சொன்னான். அவன் தோளைத் தொடும் ஆசையில் "வேண்டாம்.. யாராவது பார்த்துட்டா..." என்று உதடுகள் சொல்ல உடம்பு தானாக பில்லியனை நிரப்பியது. கொட்டும் மழையில் காதல் சொட்ட சொட்ட நனைந்தார்கள். முதல் கியர் மாற்றி க்ளட்சை விடும் போது முதுகில் ஏற்பட்ட சிறு மோதலில் ஜிவ்வென்று விண்ணில் பறந்தான். அத்தனை குளிரிலும் சிவாவிற்கு உடம்பு சுட்டது. தோள் பற்றிய கரங்களை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். அவன் தொடும்போது இம்முறை அவள் ஆகாயத்தில் பறந்தாள். இருவரும் மனத்தேரில் வானத்தில் பறக்க வண்டி ரோடில் நடைவண்டியாய் ஊர்ந்தது. தோள் தொடுதலும், சிறுசிறு உரசலும், குட்டிகுட்டி மோதலுமாக இந்த நிமிடம் இன்னும் கொஞ்சம் இப்படியே நீளாதா என்றிருந்தது சிவாவிற்கு. மழை, சிவா, எழில் இம்மூவரைத் தவிர ரோடில் ஈ காக்கா காணவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக மழை விட ஆரம்பித்தது. ஊருக்குள் நுழைந்து ஆர்ச் தாண்டினான். மழையில் நனைந்த கிடா ஆடு ஒன்று தலையாரி வீட்டு திண்ணையில் இருந்து கனைத்தது. அவர் வீடு தாண்டி தெருவோரம் இருந்த மாட்டுக்கொட்டாய் அருகில் லைட்டை அணைத்து வண்டியை நிறுத்தினான். கொட்டாய்க்குள் இருந்த லக்ஷ்மி பார்த்தது. தலையாரி வீட்டு சுவர்க்கடிகாரம் பத்து அடித்து ஓய்ந்தது. மின்சாரத் தடை நீங்கி தெருவிளக்கு எரிந்தது. வலதுகைப் பக்கம் திரும்பி சிவா வண்டியில் பறந்தான்.

சொட்டச் சொட்ட உள்ளாடை வரை நனைந்த எழில் இறங்கி அவள் வீடு நோக்கி நடந்ததை ஒரு ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது.

தொடரும்.
பட உதவி: carolinaparrothead.blogspot.com

-

Tuesday, April 5, 2011

கிராமத்து தேவதை

arasa ilai



இந்த ஆற்றங்கரையோர அரச மரத்திற்கு ஏறக்குறைய இருநூறு வயதாவது ஆகியிருக்கும். ஒரு சில கிளைகளில் தளிர் பச்சையில் துளிர் விட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த இலைகள் இன்னமும் அது இளசுதான் என்று ஊருக்கு சொல்லிக்கொண்டிருந்தன. தன் பெயருக்கு ஏற்றார்போல ஒரு அரசன் போல கம்பீரமாக நெடிதுயர்ந்து அந்த கிராமத்து வாசலில் ஸ்திரமாக நின்றிருந்தது. மர அடிவாரத்தில் இருந்து மேலே அண்ணாந்து பார்க்கும் போது மன்னன் அதிகாரமாக இடுப்பில் கை வைத்துக்கொண்டு தன் சேனையை நோக்கும் கோலத்தில் இரண்டு பெருங் கிளைகள் இருந்தது. மானிடப் பதர்களுக்கு வயசானால் தள்ளாமை வந்து உடல் லொடலொடத்து தளர்ந்து விடுகிறது. வருஷங்கள் உருண்டோட உருண்டோட மரம் அசாத்திய வலிமை பெறுகிறது. இந்தக் கிராம குடும்பங்களின் ஐந்தாறு தலைமுறைகளின் சுக துக்கங்களை கண்ட அரசமரம் அது.

அரசமரமும் பக்கத்தில் கொலுவீற்றிருக்கும் மாரியம்மனும் அந்த கிராமத்தின் தனிப் பெரும் விசேஷ அடையாளங்கள். அந்த அரசமர நிழலில் இருந்த ஆத்தாளை கமிட்டி அமைத்து இரு வருடங்கள் வசூலுக்கு அலைந்து கோயில் கட்டியது அந்த ஊர்க்காரர்கள் தான். க்ரில் கதவு போட்டு சிறிய கோபுரத்தில் மாயவரம் ஸ்தபதியின் சுதை வேலைப்பாடுடன் அமைந்த லக்ஷணமான கிராமத்து கோயில். மரத்தின் அடிவேர் எட்டித் தொடும் தூரத்தில், காய்ந்து விழுந்த இலையை கடத்திக்கொண்டு போகும் எத்தனப்பில் சுழித்து ஓடும் பாமணியாற்றின் சலசலப்பில், அரசமர இலைகளின் சரசரப்பு உரசல்களில், மரத்தில் மறைந்து உட்கார்ந்து வலியன் குருவிகள் எழுப்பும் "கீச்..கீச்..கீச்.." சப்தங்களும், எதிரே  இருக்கும் "ஹோ..." என்ற பச்சை வாசனை கிளம்பும் வயற் பெருவெளியில் இருந்து வீசும் "ஸ்..ஸ்..ஸ்.." என்ற பெருங்காற்றும் அந்த மாரியாத்தாளுக்கு மதிய நேர இன்னிசைக் கச்சேரி.

சுட்டெரிக்கும் மண்டை காயும் வெய்யிலுக்கும், உடம்பு குளிர அடித்துப் பெய்யும் மழைக்கும் பலரும் ஒதுங்கும் பிரம்மாண்டமான இயற்கை அளித்த பச்சைக் குடை அது. கிராமங்களுக்கு இடையில் ஒற்றையடிப் பாதையில் சைக்கிளில் சென்று "பாபு" குச்சி ஐஸ் விற்கும் வியாபாரி, அலுமினிய அண்டா குண்டான் விற்கும் டி.வி.எஸ். 50, வயல் வரப்புகளில் அறுத்த புல்லுக்கட்டை தலையில் சுமந்து கொண்டு வீடு திரும்பும் ஜாக்கெட் போடாத தோல் சுருங்கிய ஆத்தா, ஐந்தாறு மாடுகளை ஒருவனாய் மேய்க்கும் தலைக்கு முண்டாசு சுற்றிய சின்னப் பயல் என்று சகலரும் காற்றாட ஓய்வெடுக்கும் இடம்.

"சிலுசிலுன்னு அப்படியே ஆள கிறங்க அடிக்கற காத்துப்பா.." என்று தினமும் ஆற்றிற்கு அக்கரையில் இருக்கும் தன் பங்கிற்கு வெள்ளாமை பார்க்க வரும் தலையாரி சுப்பண்ணன் சிலாகிப்பார். மாரியாத்தாளை கன்னத்தில் போட்டுக்கொண்டு வெளியே எலும்பிச்சம் பழம் குத்தி காய்ந்து இருக்கும் சூலத்தின் அருகில் இருக்கும் துன்னூரை அள்ளியெடுத்து முன்நெற்றியில் வெள்ளையடித்துக் கொண்டு தோள் துண்டை உதறி புடைத்திருக்கும் அரசமர வேரில் ஐந்து நிமிடமாவது உட்கார்ந்து இளைப்பாறிய பிறகுதான் பயணிப்பார். இன்றைக்கு இந்த இடம் அல்லோகலப்படுகிறது. இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு அந்த அரசமர மாரியம்மனுக்கு சித்ரா பௌர்ணமி திருவிழா. காவடியும், கஞ்சி காய்ச்சுதலும், தீமிதியும், கரகமும், ஆர்க்கெஸ்ட்ராவும் அமர்க்களப்படும். கலர் கலர் சீரியல் விளக்கு சுற்றி மரத்தை பல்பு நெக்லஸால் அலங்கரித்திருந்தார்கள். கிளைகளுக்கும் இலைகளுக்கும் நடுவே ஊடுருவிப் போன விளக்குகள் பல வர்ணங்களில் ஜொலித்தது. "ராஜா" என்று தனது வாயில் எழுதிய இரண்டு பெரிய கூம்பு ஸ்பீக்கர்கள் காதில் மாட்டும் தொங்கட்டான் போல மரத்தில் தொங்கின. "மாரியம்மா..எங்கள் மாரியம்மா..." என்று எல்.ஆர்.ஈஸ்வரி அதன் வழியாக சுத்துப்பட்டு கிராமங்கள் எங்கும் பக்தி மணம் பரப்பி பாடிக்கொண்டிருந்தார். அது ஒரு ரம்மியமான இரவும் பகலும் சேரும் சந்தியாக்கால நேரம்.

திருவிழாக் காலங்களில் ராத்திரி எட்டு மணிக்குப் பிறகு தான் சினிமாப் பாட்டுக்கு அனுமதி. அதற்கு முன்னர் "சாமி பாட்டுதான் போடணும்" என்று ஊரார் கண்டீஷனாக சொல்லியிருக்கிறார்கள். போன வருஷம் சரியாக ஆறு மணிக்கு சந்திகால ஆரத்தி எடுக்கும் போது "மாசி மாசம் ஆளான பொண்ணு" பாட்டு போட்டு ஊர்ப் பெருசுகளிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். முருகேசு வாத்தியார் பெரிய மவ எழில் வந்தாக் கூட காதல் பாட்டு எதுவும் போட்டு மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நிதானமாக இருந்தான் சிவா. 

"சிவா.. ஏலே சிவா!" என்று எல்.ஆர்.ஈஸ்வரியை விட சத்தமாக கத்திக் கூப்பிட்டான் அவன் நண்பன் கதிர்.
கோயில் வாசலில் நின்றிருந்தவனை என்ன என்பது போன்ற முகபாவத்துடன் திரும்பிப் பார்த்தான். அங்கிருந்த படியே கண்ணை பரதநாட்டிய தாரகை போல இடம் வலமாக அபிநயித்து கோயிலை வலம் வரும் பாவாடை தாவணி கூட்டத்தை காண்பித்தான். எழிலும் எழில் சார்ந்த நண்பிகள் குழாமும் கும்மாளமாக சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

பச்சை தாவணியில் பளபளவென்று எழில் வழிய இருந்தாள் எழில். எழிலரசி என்ற பெயருக்கு வஞ்சனை செய்யாமல் ஏற்ற இறக்கங்களுடன் அம்சமாக தெரிந்தாள். ரெட்டை ஜடை பின்னல் போட்டு ஒரு முழம் மல்லியை குறுக்குத் தோரணமாக பின்னந்தலையில் சூடியிருந்தாள். கைகளில் கண்ணாடி வளையல்கள் க்ளிங்க்ளிங். கால்களில் வெள்ளிக் கொலுசுகள் ஜல்ஜல். வரும் ஜூன் மாதம் டவுன் ஸ்கூல் படிப்பை முடித்துக்கொண்டு காலேஜ் சேரப் போகிறாள். அந்த கிராமத்திலேயே அந்த சிகப்பு கலரில் அவள் மட்டும்தான். அழகுக்கு எப்பவுமே திமிர் உண்டு. அவளிடத்தில் அது கொஞ்சம் கூட இல்லாததுதான் ஆச்சர்யம். குளத்தாங்கரையில் அவள் குளிக்கப் படியிறங்கும் போது ஆண்கள் படித்துறையில் பலர் சறுக்கி விழுவார்கள். ராமராஜன் பாட்டும் ரஜினிகாந்த்தின் ஸ்டைலும் பிடித்த வித்தியாசமான வாலிபி.

சட்டையில்லாத சிகப்பு வேட்டி பூசாரி துண்ணூறு குங்குமம் கொடுத்துக் கொண்டிருந்தார். கன்னங்கரேல் தேகத்தில் நெற்றியில் மட்டும் குங்குமத்தை பெரிய தீற்றலாக இட்டிருந்தது பார்க்க கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருந்தது. தீபாராதனை எடுத்து வரும் போது அந்த ஒளியில் நிழலாக தெரியும் முகம் இன்னும் கொஞ்சம் பயமுறுத்தியது.
"ஆத்தா வரலியா?" என்று கரகரத்து குங்குமம் கொடுக்கும் போது விசாரித்தார்.
"இல்லீங்க.." என்று இரத்தின சுருக்கமாக முடித்துக்கொண்டாள்.
விபூதி குங்குமப் பிரசாதம் வாங்கிக்கொண்டு மீண்டும் ஒரு முறை வலம் வந்தாள். இந்தச் சுற்றுக்கு கோவில் பின்னால் அரையிருட்டில் காத்திருந்தான் சிவா. வலதுகைப் பக்கம் இருந்த ஒரு பஸ் மட்டும் செல்லும் அகலம் இருந்த தார் சாலையில் ஒரு புல்லட் படபடத்தது. அருகேயிருந்த மரத்தின் பின்னே ஓடி ஒளிந்துகொண்டான் சிவா.

அவன் நினைத்தது சரியே!

யார் அது?

தொடரும்...
பின் குறிப்பு: கொஞ்சம் விவரங்கள் கொடுத்து எழுத ஆரம்பித்தால் குறுந்தொடரில் போய் முடிகிறது.

பட உதவி:http://images-mediawiki-sites.thefullwiki.org/

-


Monday, April 4, 2011

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

எல்லோரும் எழுதி அலுத்த பிறகு இப்போது இதை எழுதினால் பழைய கஞ்சி தான், இருந்தாலும் கை எழுது எழுது என்று அரித்ததாலும், இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றதாலும் இதை எழுதுகிறேன். போரடிக்காமல் எழுதலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.



இந்தியாவை ஜெயிக்க வைக்க படாத பாடு  பட வேண்டியிருக்கிறது. ஒரு முக்காலியில் குத்த வச்சு உட்கார்ந்திருக்கும் போது பந்து பவுண்டரியை தாண்டி போயிருந்தால் அடுத்ததாக ஒரு அசம்பாவிதம் நடக்கும் வரை வி.ஜி.பி கடற்கரை மனிதச் சிலை போல அப்படியே உட்கார்ந்திருக்கவேண்டும். என் துர்பாக்கியம் இந்த முறை பாகிஸ்தானுடன் இந்தியா செமியில் விளையாடிய போது இது நடந்தது. கொஞ்சம் காலை நகர்த்தினால் "மாமா! கொஞ்சம் அசையாமல் அப்படியே உட்காரு. இப்பதான் ஒரு ஃபோர்  போயிருக்கு. அபசகுனமா அசைஞ்சு உட்கார்ந்து யாரையும் அவுட் ஆக்கிடாதே" என்று வைதான் என் மருமான். எனக்கு இப்போது கிலி பிடித்துக் கொண்டது. இன்னும் எவ்வளவு நேரம் இப்படி உட்காருவது என்று. "காலெல்லாம் மரத்துப் போச்சுடா. கொஞ்சம் இறக்கி வச்சுக்கறேன்" என்றேன். "கால் மரத்துப் போச்சுன்னு கவலைப்படறியே இந்தியாவுக்காக இது கூட பண்ண மாட்டியா? உனக்கு பேட்ரியாட்டிஸமே இல்லையா?" என்று ஆரம்பித்து ஒரு அரை மணி அசராமல் லெக்சர் கொடுத்தான். நல்லவேளை தேசப்பற்று இந்தியாவில் அட்லீஸ்ட் கிரிக்கெட்டில் வாழ்கிறது. கார்கில் போரில் LOCயில் உட்கார்ந்து மணிக்கணக்கில் காவல் காத்த இராணுவ வீரர்கள் போல கால் கடுக்க மரமரக்க குத்துக்க உட்கார்ந்து நமது தேசத்தை ஜெயிக்க வைத்த புண்ணியம் என்னை வந்து சேரக் கடவது. ஒரு நண்பனின் இரண்டாவது குட்டிப் பயல் சுச்சா போவதற்கு ஜட்டியை கழட்டியிருக்கிறார்கள். அப்போது பாக்.கிற்கு ஒரு விக்கெட் விழுந்திருக்கிறது. பாக். இன்னிங்க்ஸ் முடியும் வரை அவனுக்கு ஜட்டியே போடவில்லை என்ற தகவல் வந்து என்னைப் பிடித்து உலுக்கிவிட்டது. நல்லவேளை அந்த நேரத்தில் நண்பன் டாய்லெட் பக்கம் போய் மாட்டிக்கொள்ளாமல் இருந்தானே என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

தோனி தண்ணியில் ஆடாத ஒரு சிறந்த கேப்டன். முன்பெல்லாம் நமது ஆசாமிகள் பந்து வீச வந்தால் ஒரு ஸ்பெல் முழுக்க போட்டுவிட்டு தான் போய் பவுண்டரி லைனில் நின்று தாகசாந்தி செய்துகொள்வார்கள். போட்டு உரி உரி என்று உரித்தாலும் அசராமல் ரவி சாஸ்த்ரி பாரி, பேகன் ரேஞ்சுக்கு போட்டுக்கொடுத்து நமது இந்திய டீமிற்கே சவால் விடுவார். பத்து பந்துகளில் ஒரு பௌலர் சோபிக்கவில்லை என்றால் கழற்றி விட்டு விட்டு அடுத்தாளை வீச அழைத்துவிடுகிறார் தோனி. முனாஃப் படேல் அப்துர் ரசாக்கை ஆஃப் ஸ்டம்பை அசக்கி அவுட்டாக்கிய பந்து ஒரு அசாதாரணமான டெலிவரி. கோப்பை ஜெயித்த பின்னர் இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் படேலை தழுவி உச்சி மோந்து தனது பாராட்டுதல்களை தெரிவித்தது அந்த ஒரு பந்திர்க்காக கூட இருக்கலாம். அதே போட்டியில் ஓவர் தி விக்கெட் போட்டுக்கொண்டிருந்த ஹர்பஜனை கோணம் மாற்றி ரவுண்ட் தி விக்கெட் போடச் சொன்னார். இரண்டு சிக்ஸர்களுடன் தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்திருந்த உமர் அக்மல் கோணம் மாறி புறப்பட்டு வந்த ஹர்பஜனின் தூஸ்ராவில் கிளீன் போல்ட். கேப்டன் விக்கெட் கீப்பராக இருப்பதின் சௌகரியம் இது. ஒவ்வொரு பந்தையும் பேட்ஸ்மன் எப்படி விளையாடுகிறார்கள் என்ற நுட்பம் அறிந்து பந்து வீச டிப்ஸ் கொடுக்கிறார்.

முன்னதாக விளையாடிய இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்தது நம்ம சேவாக். ராமர், அர்ஜுனன் போன்றவர்கள் வில்லிலே நானேற்றினால் தொடுக்காமல் விட மாட்டார்களாம். அதுபோல சேவாக் மட்டை சுழற்ற ஆரம்பித்தால் அடிக்காமல் இறக்க மாட்டார். அதுவே அவரது பலம் மற்றும் பலவீனம். உமர் குல்லை சாத்து சாத்தென்று சாத்தி ரணகளப் படுத்தியவர் இன்னும் கொஞ்சம் நேரம் ஊன்றி ஆடியிருந்தால் முன்னூறு சுலபமாக கடந்திருப்போம். சச்சின் ஒரு gifted ஆட்டக்காரர். இந்த முறை ஜெயித்ததற்கு டெக்னாலஜிக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும். ரிவ்யுவில் எல்.பி.டபிள்யு மற்றும் ஸ்டெம்ப்டு இல்லை என்று தெரியவைத்த அந்த தொழில்நுட்பம் வாழ்க. நான்கு கேச்ட்சுகள் பாக் வழிந்த போதே நமது வெற்றி நிச்சயமாகியது. அன்றைக்கு ஒருவர் அறுவராகி விளையாடினார் சச்சின். அன்றைய தினம் பாராட்டப்பட வேண்டிய மற்றுமொரு மட்டையாளர் சுரேஷ் ரெய்னா. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று விளையாடாமல் நிதானமாக விளையாண்டு இந்தியா நல்ல ஒரு நிலை செல்வதற்கு பேருதவி புரிந்த வீரர் அவர்.

எதேச்சையாக எட்டு மணி அளவில் தி.நகர் சென்றபோது ஏதோ 144 பிறப்பித்து ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பது போன்று தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தது. சரவணா ஸ்டோர்ஸ் சிப்பந்திகளுக்கு அன்று ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை. வாசலில் நின்று மனதார சிரித்துக்கொண்டிருந்ததை அன்று பார்த்தேன். வாழ்க பாகிஸ்தான். தி.நகர் என்பதற்கு அடையாளமாக ஒரு ஆட்டோ கூட வீதிகளில் திரியாதது கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டேன். அடுத்த முறை இந்தியா-பாக் போட்டியின் போது நிச்சயம் தி.நகர் சென்று ஷாப்பிங் புரிய சங்கல்பம் செய்து கொண்டேன். ரிலைன்ஸ் குழுமம் பொது விடுமுறை அளித்ததும், கோடி கோடியான தமிழர்கள் வேலைகளை போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஓடிப் போய் மேட்ச் பார்த்தது பலன் அளித்தது. இந்தியா வென்று இறுதியை அடைந்தது.

டெண்டுல்கரின் கேட்ச்களை நழுவவிட்டதற்கு அஃப்ரிடி பணம் வாங்கிவிட்டார் என்று அவதூறு பேசினாலும் இறுதி பார்க்க இந்தியா தயாரானது. சனிக்கிழமையில் மேட்ச் அமைந்தது பற்றி ஒரு சில ஜோசியக்காரர்கள் சனியின் ஆதிக்கத்தில் இந்தியா ஜெயிக்குமா என்று சந்தேக ஆருடம் சொன்னார்கள். 

ஸ்ரீலங்கா இந்தத் தொடரில் ஒரு குழுவாக தோளோடு தோள் சேர்ந்து நின்று நன்றாக விளையாடினார்கள். பௌலிங், பீல்டிங், பாட்டிங் போன்ற மூன்று துறைகளிலும் சிறந்து கொடிகட்டி பறந்தார்கள். இந்தியா கோப்பையை ஜெயிக்கும் என்று முகரக்கட்டை புத்தகத்தில் முன்னரே தீ.வி.பி போன்ற தெருக் கிரிக்கெட் வீரர்கள் "ஜெயிச்சிட்டோம்" என்று நாக்கமுக்க பாட்டு போட்டதாலும் இந்தியா கெலித்தது. அரையிறுதியில் பாக். பிரதமர் வந்தபோது பாக். தோற்றது அது போல ராஜபக்ஷே இறுதிப் போட்டிக்கு வருவதால் ஸ்ரீலங்காவும் அப்பீட் ஆகி மண்ணைக் கவ்வும் என்று எனது சக கிரிக்கெட் தோழர்கள் அறுதியிட்டு கூறினார்கள். அபசகுனமாக ரெண்டு முறை காசை சுண்டியதும் பக்கென்று இருந்தது. சங்கக்கார சதி செய்கிறார் என்று மக்கள் கூறினாலும் எதையும் நாம் ஸ்போர்டிவ்-ஆக  எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில் போட்டியை பார்க்க உட்கார்ந்தோம்.

வழக்கம் போல் ஒருபக்கம் நிலையில்லாமல் ஸ்ரீசாந்த் ரன்களை வாரி வழங்கினாலும் பொறுமையாகவும் தனது அனுபவத்தாலும் ஜாகீர் அற்புதமாக பந்து வீசினார். ஒவ்வொரு பந்தும் பிட்ச்சில் குத்தி பேட்ஸ்மேனுக்கு முன் ஆட்டம் காண்பித்தது. ஒப்பனர்கள் இருவரும் ஜாகீர் பந்து மூலம் வெடிகுண்டை சந்தித்தார்கள். என்னதான் அடக்கி போட்டாலும், மஹேலா ஜெயவர்தனே நின்று நிதானமாகவும் சில மோசமான பந்துகளை அடித்தும் ஆனந்த நர்த்தனமாக ஆடி விளையாடினார். காலரியில் அவருடைய சம்சாரம் முகத்தை மறைத்துக்கொண்டு புருஷன் விளையாடுவதை அவ்வப்போது பார்த்து சந்தோஷப் பட்டுக்கொண்டிருந்தார். ஐம்பது அடித்ததும் "ஸ்டே தேர்.. ஸ்டே தேர்." என்று சமிக்கை காண்பித்தார். பொஞ்சாதி பேச்சை கேட்டு நடக்கும் உத்தமான கணவனாக நின்று நிதானமாக நூறு அடித்தார். கடைசி ஸ்பெல்லில் தொடர் முழுக்க நன்கு வீசிய ஜாகீர் 18 ரன்களை வாரி வழங்கி 274 அடைந்தனர்.

முதல் ஓவரில் அதிரடி நாயகன் சேவாக் அவுட். அடுத்த சில ஓவர்களில் சச்சின் காலி. இப்படி இந்திய தொடக்க ஆட்டக்காரர்களை துவம்சம் செய்து மும்பையில் குழுமியிருந்த ரஜினி, ஆமிர், முகேஷ் அம்பானி மற்றும் நிறைய பாலிவுட் நடிகைகள் மற்றும் நட்சத்திரங்களின் இதயத்தை நொறுக்கிய லசித் மலிங்காவை சபித்தேன். சிரிக்கும் நடிகைகளையும் அழகு தேவதைகளையும் ஆனந்தமாக பார்க்கும் வாய்ப்பை கொடுக்காமல் "அச்சச்சோ..." போஸில் பார்க்க வைத்த மலிங்கா ஒழிக என்று வாயார திட்டினேன். மேற்கண்ட இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததும் மொபைலில் எனக்கு என் மருமானிடம் இருந்து அழைப்பு. "ஏய் மாமா! உனக்காக வீட்டில் முக்காலி ரெடி. எப்படியாவது எங்க வீட்டில் வந்து மேட்ச் பார்த்து இன்னிக்கி இந்தியாவை ஜெயிக்க வை. சமத்து இல்ல.." என்று அன்புக் கட்டளை பிறப்பித்தான். என் கால் ரெண்டும் கெஞ்சியது.

இனி வேறு வழி இல்லை. என்னை கருங்காலி என்று திட்டுவதற்கு முன் என் அக்கா வீட்டை அடைத்தேன். விராட் கோலியையும் கம்பீரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ஒன்று இரண்டாக பொறுக்கியும் அவ்வப்போது நான்கு அடித்தும் மிக நிதானமாக விளையாண்டு அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். அப்புறம் தோணி வந்ததும், அவரும் கம்பீரும் விளாசியதையும் நாடு கண்ணுற்று இன்பம் அடைந்தது எல்லோருக்கும் தெரிந்தது. கடைசியில் ஒன்று சொல்ல வேண்டும். ஐந்து ரன்களில் வெற்றி என்ற கடைசி நேரத்தில் ஒரு ரன் அடித்து மறுமுனைக்கு சென்று, தோனி வெற்றி ரன்கள் அடிக்க தோது பண்ணிக் கொடுத்த யுவராஜ் என் நெஞ்சில் சிம்மாசனம் ஏறி உட்கார்ந்துவிட்டார். போட்டியின் முடிவில் இது டெண்டுல்கருக்கு சமர்ப்பணம் என்று சொல்லி இன்னும் ஒரு படி மேலே உயர்ந்தார். இந்த தொடர் முழுவதும் பட்டையை கிளப்பிய ஆள் என்றால் அது யுவராஜ் தான்.

ஆறு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இதற்கு மேல் அடுத்த உலகக் கோப்பை ஆட முடியாது என்கிற பட்சத்தில் டெண்டுல்கர் விளையாடும் இந்த முறை இந்தியா வென்றது நிச்சயமாக அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. அணி வீரர்களின் கண்ணில் அந்த ஆனந்தக் கண்ணீரைக் கண்ட போது நம் கண்களிலும் ரெண்டு சொட்டு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு 20-20 மற்றும் 50-50 இரண்டிலும் உலகக் கோப்பை வென்று வெற்றிக்கனியை சுவைக்க வைத்த தோனி நமது இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு தலைசிறந்த கேப்டன். நமது தேசத்தில் கிரிக்கெட் ஒரு கலாசாரம். கிரிக்கெட் ஒரு மதம். சில பேர் பழித்தாலும்,  மத மாச்சர்யங்களை தவிர்த்து "நாம் இந்தியர்" என்று அனைவரும் கிரிக்கெட்டால் ஒன்றுபடுவோம். நன்றி.

பட உதவி: www.espncricinfo.com

-


Saturday, April 2, 2011

ஒரு அறிவிப்பு

இந்த ப்ளாக் எழுதுபவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்(பார்ப்பதற்கு) மும்முரமாக இருப்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்கில் ஏதாவது கிறுக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (செமி மற்றும் ஃபைனல் பற்றிய கட்டுரையாக இருக்கலாம்!)

அதுவரை உங்களுக்கு தற்காலிக விடுதலை!

இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்ற கனவுகளுடன்......

தென் தமிழ் நாட்டின் ஒரு மூலையில் கிரிக்கெட் விளையாடிய...

தீராத விளையாட்டுப் பிள்ளை.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails