Tuesday, November 30, 2010

அமர்க்களமான ஐந்து பாடல்கள்

எம்.எஸ்.வி ஒரு நேர்காணலில் "பாதர் இன் லா சன் இன் லா டாட்டர் இன் லா தவிர்த்து எல்லா லாவும் வைத்து கண்ணதாசன் எழுதிய பாடல் இது" என்றார். எவ்ளோ லா. அந்த வயலின் நம்மை படுத்தும் பாடு இருக்கிறேதே. அப்பப்பா...



பஸ் கழுவுவது போல ஸ்ரீப்ரியாவை முதலில் முதுகில் தண்ணீர்த் தடவி ஆரம்பிக்கும் இந்தப் பாடல் ஒரு வேங்குழலின் இசையில் முடிந்து பல்லவி ஆரம்பிக்கும். ராஜா ராஜாதான். இடைதானோ நூல்தானோ என்று ஸ்ரீப்ரியாவை பார்த்து பாடுவது ஒன்றுதான் இந்தப்ப்பாடலின் குறை.


அந்த ஆரம்ப வயலின் பிட் அப்படியே நம்மையும் இந்த நடிகர்களுடன் கையை பிடித்து ஆட வைக்கிறது. சில பாடல்கள் கேட்க மட்டும் தான் பிடிக்கும். கீழே இவர்கள் ஆடுவதை பார்த்த பிறகு உங்களுக்கும் இனிமேல் இதைப் பார்க்க பிடிக்குமா என்று தெரியவில்லை.


மன்மதன் வந்தானா சங்கதி சொன்னானா என்று எஸ்.பி.பி குரலை அசைத்து அசைத்து பாடுவது என்ன ஒரு அற்புதம். ஊரு விட்டு ஊரு வந்து நீ இன்றி போவேனோ சம்போ..


இந்த நாகம் மாதிரி நடுவில் படம் எடுத்து படுத்துவதை தவிர இந்தப் பாடல் கொஞ்சம் பார்க்கும் ரகம் தான். ஆனால் கேட்பதற்கு நல்ல இனிமையான பாடல். மீண்டும் எஸ்.பி.பி. அட. இப்பத்தான் பார்க்கிறேன். போட்ட எல்லா பாடலும் அண்ணன் எஸ்.பி.பியோடது.


அம்புட்டும் அருமையான பாடல்கள். மீண்டும் இன்னொருமுறை வேறு கலக்ஷனோடு வந்து பதிகிறேன்.

-

ஹேப்பி ஹவர்ஸ் வித் பரமசுகர்

முன் குறிப்பு: இந்த ப்ளாக் ஆரம்பித்த போது நான் எழுதிய முதல் சிறுகதை. அப்போது நாடே, தமிழ் நாடே சாமியார் விவகாரத்தில் பற்றி எரிந்துகொண்டிருந்தது. அதைக் கதைக்களனாக வைத்து எழுதியது. நேரமின்மையால் மீள்பதிவு.

ashram
 ==========1===========
அடர்த்தியான மரங்களையுடைய அந்த கல்லூரி மைதானம் நிரம்பியிருந்தது. வழிநெடுக துணியில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை வண்ண பதாகைகளும், ப்ளெக்ஸ் பேனர்களும் 'வருக' மற்றும் 'வணக்கம்' சொல்லிற்று. வெள்ளை சுடிதார், வாயில் புடவை, பட்டு புடவை, குழந்தையை இடுப்பில் தூக்கியபடி, தள்ளாத வயதாதலால் மரத்தின் அடியில்  உள்ள  பெஞ்சியில் உட்கார்ந்து கண் மூடி என இள, மத்திம, வயதான பெண் பக்தைகளும், நைக்கி ஷூ ரேபான் கூல்ஸ், பெரிய கருப்பு எழுத்தில் சமஸ்கிருத ஓம் போட்ட மஞ்சள் டிஷர்ட் நீல ஜீன்ஸ், வெள்ளை வேட்டி மற்றும் சர்ட் என நிறைய ஆண் பக்த கோடிகளும் சாமியை தரிசிக்கும் பரவசத்துடன் மதியம் இரண்டு மணி முதல் குழுமியிருந்தார்கள். சரியாக மாலை ஆறு மணிக்கு 'ஹேப்பி ஹவர்ஸ் வித் பரமசுகர்' ஏற்பாடாகியிருந்தது.
"காவி கட்டின ஆசாமியெல்லாம் சா....மி...கன்றாவிடா .." எள்ளலாக குரல் வந்த திக்கில் அங்கே காவலுக்கு இருந்த இரண்டு தொப்பைகள் திருப்பி பார்த்தது. கன்னங்கள் ஒட்டி, கண் உள்ளே சென்று, பரட்டையுடன், சவரமே காணாத முகமுமாக ஒரு அழுக்கு சட்டையும், இடுப்பில் துண்டா வேட்டியா என்று புரியாத ஒன்றை சொருகிக்கொண்டு அது நின்றிருந்தது.
"சாமி சாமின்னு இவனே மாலையை மாட்டிகிறான்... இவன் ஏன் சாமியை கும்புடறான்.."
"ஏய்... போ அன்னாண்ட...." என்றது ஒரு காக்கி.
"பரம சுகம்னா .. எல்லா சுகமும் இவனுக்கா இல்லை மத்தவங்களுக்கு பல சுகங்கள் தருவானா..."
"யோவ்.... இங்கேருந்து போமாட்ட..." என்று லத்தியை சுழற்றியது இன்னொரு காக்கி.

"குருவே சரணம்! பரமசுகரே சரணம்!!" "ஜெய் குருநாதா! உயிரே...திருவே..பரமே சரணம்!!" என்ற சரணகோஷங்களுக்கிடையே யானை நிற ஹோண்டா சிவிக்லிருந்து சாமியார் காவியுமாய் சிஷ்யைகள் வெள்ளையுமாய் இறங்கினார்கள். அவரின் வருகையால் அந்த இடமே ஒளி நிறைந்து காணப்பட்டது. காமிராக்களின் உபயம். எட்டுத்திக்கிலும் பார்த்து சிரித்துக் கொண்டே சிகப்பு கலர் ராஜா ஆசனம் போடப்பட்ட மேடை நோக்கி அந்த சந்நியாசி நடந்தார். அவரது திருவடிகள் மலர்ப்பாதையின் மேல் நடந்தன. காலில் அவருக்கென்று  பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மரக்கட்டை போல் இருக்கும் ஹவாய் பாதரட்சைகள். ஆசிரம பாத்ரூமிலிருந்து வந்திறங்கிய  கார் வரை குளிரூட்டப்பட்டிருந்ததால் ஒரு பிரிட்ஜில் இருக்கும் ஆப்பிள் போல் பிரகாசமாக புத்தம்புதுசாக இருந்தார். அவருடைய கண்களில் ஒரு மகா ஒளி தெரிவதாக ஒரு அறுபது வயது ஆந்திரா பக்தர் பக்கத்தில் இருப்பவரிடம் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார்.

"ஒரு பத்து நாள் வெளியில இருக்கிற தூசி துரும்பு படாம வெய்யில படாம வீட்டுக்குள்ள ஏசி போட்டுகிட்டு  இருந்து பாரு... ஒன் கண்லயும் ஒளி தெரியும்......" இப்படி ஒரு அறிவு பிட்டை கேட்ட அந்த ஆந்திரா அன்பர் "அபசாரம் அபசாரம்" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார். இதை கேட்டபடியே முன்னேறிய அது அவர் உபன்யாசம் செய்யும் மேடை அருகே அவருடைய கருணைப் பார்வை படும்படி மைக்செட் கட்டியவர் பக்கத்தில் போய் அமர்ந்தது.

சொற்பொழிவு ஆரம்பித்த பரமசுகரும் அவருடைய பரம 'பக்தையும்' பரம துக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

===========2===========
பஸ் ஸ்டாண்ட் அருகில் இருட்டு சந்தில் கஞ்சா விற்பான். ஒரு தெரு தள்ளி இருக்கும் லாட்ஜுக்கு ஐட்டம் அழைத்து வருவான். பைக் ரிப்பேர் செய்யும் பாண்டி அண்ணன் இரவில் சரக்கு போடும் போது சைடு டிஷ் வாங்கி வருவான். பகலில் அக்கம் பக்கம் இருக்கும் எல்லா கடைகளுக்கும் டீ வாங்கி கொடுப்பான். பசங்களோடு மட்டும் விளையாடுவது எப்படி என்று அவனுக்கு தெரியாது. பாலகனாக இருக்கும் போதே பைசா எண்ணி சம்பாதிக்க கற்றுக்கொண்டான். 
"டேய்.. அதைக் குடுடா..."
"மாட்டேன்...."
"பரமேசு... வேணாம் எங்கப்பா கிட்ட சொல்லுவேன்..."
"சொல்லு... அவன் என்ன பெரிய பருப்பா..."
"வேணாம்..குடுத்துரு... "
"போடா....ங்...க.... உங்கப்பன்ட்ட வேணா சொல்லு இல்ல உங்காத்தாட்ட வேணுன்னாலும் சொல்லு...எனக்கென்ன... ஏதாவது எவனாவது கேட்டான் சொருவிடுவேன்...."
"எங்கப்பனையேவா...."
"ஆமா.... டெய்லி பாருல சரக்கு நான் தான் வாங்கியாறேன்....முட்ட முட்ட குடிச்சிட்டு வெளியே வந்தப்புறம் அப்படியே ஒரே சொருவு... அவ்வளோதான்.. கதை முடிஞ்சிரும்..  "

அப்படி பால்ய பருவத்திலேயே சொருவிட்டு ஓடிய பரமேசு பதினெட்டு வயதுக்கப்புறம் ரிலீஸ் ஆனான். வெட்டியாக சில பல நாட்கள் திரிந்தான். வயிற்று பிழைப்புக்கு வழி தெரியாமல் திண்டாடிய ஒரு மாலை நேரத்தில் ஒருவனை கத்தியால் கடைத்தெருவில் குத்தி மற்றவனிடம் ஆயிரம் ருபாய் பணம் பெற்றான். அந்தப்பணம் ஒரே நாளில் செலவானதால் நிறைய சம்பாதிக்க ஒரு உபாயம் தேடினான்.  நல்ல 'குரு'  ஒருவரின்  ஆசியால் விபூதி வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, ஓடிப்போன புருஷன் திரும்ப எப்போ வருவான் என்று குறி சொல்வது, பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை கரைத்து குடித்து எப்படி பணம் சம்பாதிப்பது என்று கற்றுக்கொண்டான்.  அமாவாசை அன்று லிங்கம் எடுக்கும் போது ரத்தம் கக்கி அந்த குரு சாவதற்கு அவர் முழுங்கிய லிங்கத்தில் விஷம் வைத்தான். பரமேசு பரமசுகர் ஆனான். 
===========3===========
மூன்று அடுக்கு மாடி, பத்து கார் நிறுத்துவதற்கு இடம், ஸ்விம்மிங் பூல் என்று சகல வசதிகளும் கொண்ட வீடு அது. முதலாளியம்மா வீட்டில் இல்லாத நேரம் அந்த வீட்டின் எஜமானனுக்கு ஒரு அரவணைப்பு தேவைப்பட்டது. அரவணைக்க சென்றவளுக்கு எஜமானி ஆகவேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஒரு ஆனந்த விகடன் முடிந்து மறு ஆ.வி் வீட்டு வாசலில் விழும் போது இவள் புதிய எஜமானி ஆனாள். பழையதை எஜமானன் செக்யூரிட்டிகளிடம் சொல்லி வாசற்படி மிதிக்க விடாமல் விரட்டினான். முப்பது நாளைக்குள்  முன்னூறு கோடி சொத்தையும் அபகரித்துக் கொண்டு எஜமானனை வீட்டை   விட்டு  துரத்தினாள். அப்படி ஒரு பதிபக்தி. மிக சௌகரியமாக வாழ்ந்தாலும் இன்னும் தேவை என்று நினைத்தாள். புகழ், பொருள் ஈட்ட ஆகச்சிறந்த மிக சுலபமான வழியை எதிர்பாத்து காத்திருந்தாள். தனிமையும் இளமையும் தன்னை வாட்ட, வெளி வட்டாரங்களில் வளைய வந்தாள். ஒரு ஹாப்பி ஹவரில் பரமசுகரை சந்தித்தாள். அந்தரங்க சிஷ்யை ஆனாள். அவருக்கு ஆதியும் அந்தமும் ஆனாள்.
=========4===========
நிஜமான  சாமிக்கு கூட பயப்படாத அந்த சாமியார் அதுக்கு பயப்பட்டார். ஆறு மாதம் முன்பே அந்தரங்க சிஷ்யையின் ஆசைக்கு இணங்க அவளின் மாஜி எஜமானனை ஆள் வைத்து தூக்கியிருந்தார். எல்லோருக்கும் உபன்யாசம் மூலம் காண்பிக்கும் சொர்கத்திற்கு அவனை நேரேயே அனுப்பியிருந்தார். ஆனால் அது வந்து இப்போது இவர்கள் முன் அமர்ந்திருக்கிறது. எப்படி என்று புரியாமல் பயந்துகொண்டே உபன்யாசத்தை ஆரம்பித்த வேகத்தில் முடித்து மக்களின் வாழ்வியல் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொடங்கினார்.  முடிக்கும் அவசரம் பதிலில் தெரிந்தது. மேடையை விட்டு இறங்கும் போது பொதுச்சேவையில் இருக்கும் தன் அடியார் கூட்டத்திடம் அவரை தன்னிடம் அழைத்து வருமாறு கட்டளை இட்டது. சிவிக்கில்  நடைபெற்ற சம்பாஷனை
"என்ன வேணும் உனக்கு..."
"நீ என்னை மேலே அனுப்பலாம்ன்னு பார்த்தே... நா உன்னை உள்ளே தள்ளலாம்ன்னு...."
"என்ன பண்ணுவே?" 
"......."
"என்ன பண்ணுவே?" 
"............"
"வாய திறக்க மாட்டியா.. "
"நான் திறக்க வேண்டாம்... ஊரே இன்னும் கொஞ்ச நேரத்தில...."
"என்ன மிரட்டிரியா... வெளியிலதான் நான் பரமசுகர் ஆனா நான் என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்... விளையாடாத... சொல்லு"
"நான் ஏன் விளையாடனும்... நீனும் என் ரெண்டாவதும் விளையாடினதை.... "
"விளையாடினதை?"
"ஹி....ஹி"
"படம் பிடிசிருக்கையா... யாரும் நம்ப மாட்டங்க... எந்த T.V. காரனும் போடா மாட்டன், ஒவ்வொருத்தனுக்கும் 'கவர்' போவுது."
"நான் எதுக்கு இன்னொருத்தனை எதிர்பார்க்கனும்... "
"ஏன் நீயே சொந்தமா பிச்சை T.V ன்னு ஏதாவது வச்சிருக்கியா...திருவோடு லோகோவோட ஹா... ஹா... ஹா.... ஹா  ....."  
இந்த வெடிச்சிரிப்பில் பரம பக்தையும்  கலந்து கொண்டாள்.
1.............2....................3....................4.......................5................ நிமிட மௌனத்திற்கு பிறகு அது பேசியது 
"உன்னோட www.paramasugar.com வெப்சைட்ட  கொஞ்சம் உன்னோட லேப்டாப்ல திறந்து பாரு. புரியும்"
பரமுவும் பக்தையும் பதபதைத்து பார்த்தால்...... அருகருகே இப்போது காரில் உட்கார்ந்திருந்த இருவரும் ஒருவராய்  ஆசிரம படுக்கையில் இருந்தார்கள். ஒருவர் மீது ஒருவர் ஏறி காதல் சண்டையில் ஈடுபட்டார்கள். விளக்கை அணைத்து போட்டு , போட்டு அணைத்து டே அண்ட் நைட் கேம் ஆக நடந்ததை உலகமே பார்த்து  ரசித்தும் அதிர்ச்சியும் கொண்டு இருந்தது. அன்றைக்கு மட்டும் www.paramasugar.com பில்லியன் ஹிட்ஸ் கண்டது என்று கூகிள் அனலிடிக்ஸ்ம் அலேக்சாவும் சான்றிதழ் வழங்கியது. கார் ஆசிரமத்தை நெருங்கும் போது ஒரு கும்பல் தீ வைத்துக்கொண்டிருந்தது. அதில் ஆக்ரோஷமாக ஒரு இளைஞன் "....த்தா. இவன்லாம் ஒரு சாமியாரு.. போலிச் சாமியாரு... செக்ஸ் சாமியாரு... மூஞ்சிய பாரு... முகரையை பாரு... கையில மட்டும் கிடைச்சான்னா... " என்று சொல்லி கீழே கிடந்த போஸ்டர் பரமசுகரின் முகத்தில் ஏறி மிதித்து கிழித்துக் கொண்டிருந்தான். காருக் குள்ளிரிந்து இதை பார்த்துக்கொண்டிருந்த பரமசுகரும் பரம பக்தையும் முகம் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
பின் குறிப்பு: இது நான் எழுதியிருக்கும் முதல் சிறுகதை. இலக்கிய தரத்தில் இல்லாவிட்டாலும் ரசிக்கும்படியாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. இதை சமீபத்திய சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பார்த்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

பட உதவி: travelpod.com

Sunday, November 28, 2010

காதல் இளவரசி

ராணிக்கு ஒரே சங்கடமாக இருந்தது. காலையில் இருந்தே அந்த செய்தி மனதை பிசைந்தது. மன்னனிடம் எப்படி இதை தெரிவிப்பது என்று மிகவும் பயந்தாள். நாலைந்து தேசங்களை வென்றவன், போர்க்களத்தில் எதிரிகளின் தலைகளை பூப்பந்தாடுபவன்,  வீர கேசரி, ராஜாதி ராஜன், ராஜ மார்த்தாண்டன் இந்தச் செய்தியை எப்படி ஜீரணிப்பான் என்று தெரியாது. பெருங்கோபிஷ்டன். ரேகைகள் அழிய கையை இருக்க பிசைந்து கொண்டு அந்தப் பெரிய அந்தப்புரத்தில் தனியொரு ஆளாய் சேடிப்பெண்கள் புடைசூழ குறுக்கும் நெடுக்குமாக அலைந்துகொண்டிருந்தாள். தூண்களில் சொருகியிருந்த தீப்பந்தங்கள் விஷயத்தின் அனலை கூட்டுவது போல ஜ்வாலையுடன் திகுதிகுவென்று எறிந்து கொண்டிருந்தது. இரண்டு தாதிகள் பஞ்சனை பக்கத்தில் ஏவலுக்கு உட்கார்ந்து இருக்க, நான்கு இளம் பெண்கள் வளைந்த வாசலில் காவலுக்கு நிற்க அந்த முன்னிரவு நேரம் முக்கி முக்கி மெல்லமாக நகர்ந்துகொண்டிருந்தது.

முதல் ஜாமம் முடிந்ததும் மன்னர் நிச்சயம் இங்குதான் வருவார். மணிமுடிக்கு அப்புறம் அவர் காதல் கொள்வது ராணியின் தலை முடியைத்தான். பஞ்சணையில் படுக்க வைத்து தலை கோதிக்கொண்டே சாய்ந்து இருப்பார். கண்கள் சொருகி "அலை அலையாய் அலை அலையாய்.." என்று வாய்கள் முனுமுனுக்க அப்படியே தூங்கியும் போவார். அவர் என்ன கட்டிளம் காளையா? வயதாகிறதல்லவா? அதான். கதை தொடங்கிய இடத்திலிருந்து வேறிடத்திற்கு நகர்ந்து விட்டது. அந்தப்புர உப்பரிகைக்கு வந்தாள் ராணி. மார்கழி மாத குளிர்ந்த காற்று மேனியெங்கும் தடவி மனதின் உஷ்ணத்தை குறைக்க முயன்றுகொண்டிருந்தது. பனிச்சாரல் அடித்தது. நந்தவனத்து பவிழமல்லி செடிகளும் முல்லைக் கொடிகளும் நந்தலாலா பாடி ஆடிக்கொண்டிருந்தன. அவர்கள் ஆட்டத்திற்கு நிலா விளக்கடித்து பொதுச்சேவை புரிந்துகொண்டிருந்தான். எங்கிருந்தோ சுவர்க்கோழிகள் "கிர்..கிர்க்..கிர்க்.." என்று ஒரு புதிய பின்னணி இசையை அந்த நேரத்திற்கு அளித்துக்கொண்டிருந்தது. மீண்டும் நேற்று நடந்த நிகழ்சிகளின் நினைவலைகளில் மூழ்கினாள்.

மன்னரின் சமீப வெற்றிகளை கொண்டாடும் பொருட்டு நேற்று விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு. பட்டத்தரசி வருகிறாள் என்று ஊர்கூடி ஏற்பாடு செய்திருந்தார்கள். சங்காபிஷேகம் மஹாருத்ர ஜபம் என்று வெகுவிமரிசையாக பலவிதமான பூஜைகள் நடத்தப்பட்டன. வழிபாட்டை முடித்துக்கொண்டு அரண்மனைக்கு பல்லக்கில் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில்தான் அதைக் கவனித்தாள் மகாராணி. கூதிர்க்காலமாகையால் மக்கள் அதிசீக்கிரம் தங்கள் இருப்பிடங்களுக்குள் முடங்கிப் போயிருந்தார்கள். ஊர் அடங்கியிருந்தது. குளிரின் கை ஓங்கியிருந்தது. பல்லக்கு தூக்கிகள் "ஹோ.ஹோ.ஹோ.ஹோ" என்று ஒலிஎழுப்பி ஒரே சீராக சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். சற்றைக்கெல்லாம் முன்னால் ஒரு சிறு சலசலப்பு ஏற்ப்பட்டது. திரை விலக்கி ராணி மெல்ல எட்டிப்பார்க்கையில் வெண்ணிற புரவியில் இளவரசி மட்டும் தனியாக பறப்பது தெரிந்தது.

பக்கத்தில் கைகட்டி நடந்து வந்துகொண்டிருந்தவரை "தேவரே.. என்னவென்று கொஞ்சம் பாருங்கள்." என்று அந்த வயோதிக ஊர்க்காவல் தலைவனுக்கு கண்களால் சைகை காண்பித்து அரண்மனைக்கு சென்றுவிட்டாள் மகாராணி.

****************

full moon

குதிரை நேராக ஊருக்கு வெளியே இருந்த ஒரு பாழுங்கிணறு பக்கத்தில் நின்று கனைத்தது. இடம் பழகிய குதிரை போல. இரவு ஆடையில் அதிக அலங்காரமற்று இருந்த இளவரசி குதிரையில் இருந்து குதித்து இறங்கி அந்தக் கிணற்றுக்குள் இறங்கினாள். சிலுசிலுவென்று அடித்த ஊதற்காற்று இவள் அங்கம் உரசி தன்னை சூடேற்றிக்கொண்டது. ஏற்கனவே நிலவை தன்னுள் சிறை பிடித்து வைத்திருந்த பாழுங்கிணறு கால்முளைத்து வந்த இரண்டாவது முழு நிலவு உள்ளுக்குள் இறங்கியதும் தடுமாறியது. இறங்கும்போது காலில் இடறி கல் விழுந்ததில் கிணறு வரிவரியாக அலைஎழுப்பி கலங்கியது. கிணற்றின் உள்ளே கடைசிப் படியில் உட்கார்ந்திருந்த அவன் அண்ணாந்து மேலே பார்த்தான். எங்கேயோ ஒரு இரவுப் பறவை ஏதோ ஒரு வினோத சப்தம் எழுப்பி இறக்கைகள் சடசடத்து பறந்தது.

"தாங்கள் வந்து நீண்ட நேரமாயிற்றா?" என்றாள் இளவரசி.
"உன் நினைவுகளில் ஆனந்தமாக மிதந்தபடி இன்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இப்படியே ஏகாந்தமாக உட்கார்ந்திருப்பேன்" என்று பளீர் பற்கள் தெரிய சிரித்தான்.
"உம். சரி சரி. காதலிக்க ஆரம்பித்துவிட்டால் அனைவரும் கவிஞரே, புலவர் பெருமக்களே, பொய்யுரைப்பவர்களே..." என்று புன்னகை பூத்தாள் இளவரசி.
அவன் உட்கார்ந்திருந்த படியை தாண்ட முயல்கையில் மன்மதனின் விளையாட்டால் லேசாக கால் தடுமாறினாள். சட்டென்று இடையில் கையை கொடுத்து தாங்கி தூக்கி நிறுத்தினான் அவன். கருந்தேக்கு மரத்தில் தொழில்நுட்பம் தெரிந்த தச்சன் மிக நேர்த்தியாக செய்த நிலைவாசல் போன்று இருந்தன அவனது கைகள். சற்றைக்கெல்லாம் கன்னியை அவன் கை பிடித்த இடம் கன்னிவிட்டது. அவன் கரம் பட்டு சிவந்த இடம் அந்த நிலவொளியிலும் தெளிவாக தெரிந்தது. அவன் இப்படி ஒரு உடும்புப்பிடி பிடிப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை இளவரசி. எதிர்பாராத ஆண் தீண்டலில் துணுக்குற்றவள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு
"என்ன! கோவூராரே! எல்லை மீறுகிறீர்கள். தங்கள் கை கட்டுப்பாட்டில் இல்லையா?" என்றாள் இளவரசி.
"இந்தப் பாழாய்ப் போன கிணற்றுக்கும் உங்கள் மேல் காதல் இளவரசி. எங்கே உங்களை தன்னோடு ஆலிங்கனம் செய்ய உள்ளே இழுத்துகொண்டு விடப் போகிறது என்றுதான்..." என்று இழுத்தான்.
"நீஞ்சுவதில் மீனுக்கு சரியான போட்டி நான். சரி.சரி. அது கிடக்கட்டும். இப்போது அங்கு என்ன நிலவரம்.."
"மன்னனின் பிள்ளை சரியான போகி! மதுவும் மாதுவும் இல்லாமல் அவன் தினமும் காலைப் பொழுதுகளில் கண் விழிப்பதில்லை. மன்னவன் அதற்க்கும் மேல். போன பௌர்ணமி அன்று பதினாறு வயதில் ஒருவளை அந்தப்புரத்து ஆசைநாயகியாக அழைத்து வந்திருக்கிறான். ஆனந்தம் அளிப்பதற்கு காமக்கிழத்தியர்கள் மிகுந்து விட்டார்கள். நாட்டில் மக்களுக்கு நிம்மதி இல்லை. யதா ராஜா ததா பிரஜா. எல்லோரும் மன்னர்மன்னனைப் போல இரண்டு மூன்று என்று போட்டி போட்டுக்கொண்டு மணம் முடிக்கிறார்கள். கள்ளுன்னுகிரார்கள். பெண் சுகம் தேடி அலைகிறார்கள். மந்திரிகள் நாட்டு நலப்பணிகளில் ஊழல் புரிகிறார்கள். படை வீர்களும் சதா சர்வகாலமும் குடித்து கும்மாளமடிக்கிரார்கள். சேடிப் பெண்களை கையை பிடித்து இழுத்து வம்புக்கிழுக்கிரார்கள். குல ஸ்திரீகளுக்கு கூட பாதுக்காப்பு இல்லை."
மூச்சு விடாமல் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருப்பவனை இமைக்காமல் பார்த்தாள் இளவரசி. சற்று நேரம் அமைதியாக இருந்தாள். அவள் மௌனம் அந்த இருளைக் கிழித்தது. அவளது கரிய விழிகளை ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.


"முந்தாநாள் தங்கள் குதிரை இந்த பகுதியில் மேய்ந்ததைப் பார்த்ததாக எனக்கு தகவல் வந்ததே!" என்று மௌனத்தை கலைத்தாள் இளவரசி.
"உங்கள் தேசத்திற்கு வந்தால் உங்களையன்றி நான் வேறு யாரை பார்க்கபோகிறேன்" என்று கள்ளத்தனமாக சிரித்தான்.
"இல்லை. அந்த கருவூல அதிகாரி மகள் இதே கிணற்றுக்கரையில் நேற்று யாருக்கோ காத்திருந்ததாக வேறு கேள்வி" என்று அவனை துருவும் கண்களோடு பார்த்தாள்.
"நீங்கள் என்னை சந்தேகிக்கிரீர்கள். நான் ஸ்திரீலோலன் என்று நினைக்கிறீர்கள் அல்லவா." என்றான் நெஞ்சு படபடக்க.
"உஹும்.. நினைக்கவில்லை. உண்மை அதுதான். சத்யம் அதுதான்."
"என்ன சொல்லுகிறீர்கள். உங்கள் மீது உள்ள அன்பினால், அபிமானத்தால் என் நாட்டைப் பற்றி கூட சகலத்தையும் உங்களிடம் ஒப்பிக்கிரேனே. உளவு சொல்கிறேன்"
"அதெல்லாம் என்னை மயக்க ஒரு சாகச நாடகம்." என்று சொல்லிவிட்டு சத்தமாக கைதட்டினாள்.
மெல்லிய வெள்ளை ஆடையில் கிணற்றுக்கு மேலே ஒருத்தி வருவது நிழலாடியது.
"வாருங்கள். மேலே சென்று அந்தப் பாவாடை பாவை யார் என்று பார்ப்போம்." என்று அவனை கைப்பற்றி அழைத்தாள். அவன் கைகள் மெல்ல நடுங்கியதும் அதில் வியர்வையின் ஈரமும் அவன் குற்றவாளி என்று இளவரசிக்கு உணர்த்தியது.
மேலேறி அவளைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனான் அவன். கருவூல அதிகாரியின் மகள் அனைத்தையும் இளவரசியிடம் ஏற்கனவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தாள்.
"என்ன? இவளை யாரென்று தெரிகிறதா?" என்று வினவினாள் இளவரசி.
 "இல்லை.. உங்களைப் பற்றிதான் இவர்களிடம் நேற்று விசாரித்தேன்.." என்று தடுமாறினான்.
"அவள் வளைக்கரம் பற்றி இழுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டு என்னைப் பற்றி விசாரித்தீர்கள். அப்படித்தானே. ஒத்துக்கொள்கிறீர்களா? இல்லை.." என்ற இளவரசியின் லேசான அதட்டலுக்கு சற்று தலையை குனிந்து பார்த்தவன் ஒரு சுதாரிப்புக்கு வந்தவனாய், இடுப்பிலிருந்த ஒரு சிறிய பிச்சுவா கத்தியை உருவி காண்பித்தான்.
"இளவரசி. நீ புத்திசாலி. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் என்னைப் போல் சக்திசாலி இல்லை." என்று இளித்தான்.
இதை முன்னமே எதிர்பார்த்த இளவரசி கொஞ்சம் கூட பதட்டப்படாமல் இருந்தாள். அதிகாரியின் பெண் கண்கள் மருள மிரண்டாள். சிரித்துக்கொண்டே முன்னேறி வந்த இளவரசி அவனை அணைக்கும் தூரத்தில் நெருங்கினாள். அவளது அருகாமையும் அவளின் மேனியிலிருந்து எழுந்த அந்த ராஜ சுகந்தமும் அவன் சித்தத்தை கொஞ்சம் நிலை தடுமாற வைத்ததது. இரு கால்களுக்கு இடையில் தன் காலை நுழைத்து இடறி விட்டாள். கிணற்றின் பாறையிலான படிக்கட்டுகளில் தலை இடித்து சிதறி "ஆ.ஆ..ஆ..." என்ற மரண ஓலத்துடன் மல்லாக்க கிணற்றினுள் சாய்ந்தான்.

*******************

அரைகுறையாக தேவர் பின்தொடர்ந்து சென்று வந்து கக்கியதை வைத்துக் கொண்டு ராணி என்னசெய்வதன்று தெரியாமல் முழித்தாள். அவளுடைய கவலைக்கான காரணமும் அதுதான். சாரையும் சர்ப்பமுமாக ஒரு இளைஞனுடன் பட்டத்து இளவரசி பாழுங் கிணற்றில் சல்லாபிக்கிறாள் என்று சொல்லிவிட்டார் அவர். அவன் வேற்று தேசத்தவன் என்றும் விளக்கி சொல்லியிருந்தார். இன்னமும் உப்பரிகையிலேயே நின்று கொண்டிருந்தாள் பட்டத்தரசி. முதல் ஜாமம் முடிந்து இரண்டாம் ஜாமம் துவங்கியிருந்தது. குளிர்க் காற்றை கிழித்து வந்தது புரவி ஒன்று. துள்ளிக் குதித்து இறங்கி வந்தவன் ராணிக்கு வந்தனம் தெரிவித்தான்.

"வணக்கம். மகாராணி!"
"உம். என்னாயிற்று.."
"மகாராணி ஊர்க் குளத்தில் ஒரு பிரேதம் மிதக்கிறது. தலை சிதறி ரத்த வெள்ளத்தில் கிணற்றில் கிடக்கிறான் ஒருவன். தேவரிடம் விசாரித்ததில் இவனைத் தான் நேற்று இளவரசியோடு பார்த்ததாக கூறுகிறார்."
மிக்க மகிழ்ச்சியோடு இளவரசியின் அரண்மனைக்கு சந்தோஷ நடை போட்டாள் மகாராணி. சேடிப் பெண்கள் ராணியின் வரவை இளவரசியிடம் சொல்வதற்கு உள்ளே சென்றபோது தான் கவனித்தாள் மன்னன் ஏற்கனவே அங்கு இருப்பதை.
"சபாஷ். நீ புலிக்குட்டி என் ராஜாத்தி!!" என்று தோல் தட்டி தன் மகளைப்  பாராட்டினான்.
"அப்பா! நிச்சயம் இது நாம் படை எடுப்பதற்கான சரியான நேரம். நீங்கள் இப்போதே நம் படையை தயார் செய்ய ஆரம்பித்தால் வெற்றி நமக்கு தான்! ஆயுத்தமாகுங்கள். அந்த நாடும் நமதேயாகட்டும்!! "

இருவரின் சந்தோஷத்தில் தானும் போய் கலந்துகொண்டாள் மகாராணி. அந்த இருளிலும் அரண்மனை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஒளிர்ந்தது. கண்டவனை காதலித்த இளவரசி நாட்டைக் காத்த இளவரசியானாள்.


பின் குறிப்பு: ஒரு வரலாற்றுப் புனைவு எழுதவேண்டும் என்பது என்னுடைய நெடுநாளைய அவா. இத்தோடு முடிந்தததா தொடருமா? பார்க்கலாம்.

பட உதவி: http://www.anitasgarden.com
-

Friday, November 26, 2010

குறையொன்றுமில்லை


mumoorththi


மார்கழி கச்சேரி சீசன் இன்னும் கொஞ்ச நாளில் களை கட்டத் தொடங்கிவிடும். சுப்புடுக்கள் அதிகம் தலைப்பட ஆரம்பித்துவிடுவார்கள். நிரவல் சரியில்லை கேண்டீனில் வறுவல் சரியில்லை என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் வரும். பத்திரிக்கைகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு சிறப்பு பக்கங்களில் வளர்ந்த மற்றும் வளரும் கலைஞர்களைப் பற்றி பத்தி பத்தியாக கமெண்டு எழுதுவார்கள். அழகழகான சங்கீத பூஷனிகள் வைர வைடூர்ய ஜிமிக்கிகள் போட்டுக்கொண்டு உடம்பெல்லாம் பட்டாக ஜிலுஜிலுவென்று பாட வருவார்கள். சாரீரம் மற்றும் அந்த வார்த்தையின் துணைக்கால் எடுத்தது போக மீதி வரும் வார்த்தை என்று எல்லாவற்றுக்கும் சேர்ந்து கூட்டம் அம்மும். சபாக்கள் திமிலோகப்படும். தெரிந்தோ தெரியாமலா அறிந்தோ அறியாமலோ கையை திருப்பி திருப்பி தொடை சிவக்க தாளம் போடுவர். திருமனும் பட்டையும் போட்டுக்கொண்டு நிறைய மாமாக்கள் தங்கள் இல்லத்தரசிகளுடன் சபாக்களில் ராப்பகல் அகோராத்திரியாக குடியிருப்பர். இந்த மாதிரியான விசேஷ சந்தர்ப்பங்களிலாவது மாமியின் உப்பில்லா ரசஞ்சாத்திலிருந்து ஒரு பெரிய எஸ்கேப்.

ஆரம்பிக்காத சீசனுக்கு இப்போ என்ன பில்டப் என்ற உங்கள் மானசீக கேள்வி நியாயமானதே. எங்கள் தெருவில் நீங்கள் குடியிருந்தால் இந்த பதிவின் கோலாகல ஆரம்பம் உங்களுக்கு என்னவென்று புரியும். மொத்தம் ஒரு நாற்பதடியே உள்ள தார் சாலை அது. "உன் தலையில எவ்வளவு பேன்?" என்று எதிர்த்தவீட்டு மாமி தன் தலைவிரி கோலப் பெண்ணிடம் பல்லைக்கடித்துக்கொண்டு வாரிக்கொண்டே கேட்டால் அது எங்கள் வீட்டு சமையலறை வரை மிகத் தெளிவாக காது கேட்கும். இப்படியான ஒரு அன்யோன்ய சென்னை வாழ்க்கையில் காலை ஐந்தரை மணிக்கு முழுவாய் பிளந்து வாய்ப்பாட்டு கச்சேரி ப்ராக்டீஸ் செய்தால் எப்படி இருக்கும். மிகவும் புரியும்படியாக விளம்ப வேண்டும் என்றால் ஒரு மண்வெட்டியை எடுத்து தார் ரோட்டில் போட்டு இப்படியும் அப்படியும் கரண்டினால் எப்படி இருக்குமோ அதுபோல ஒரு அசாத்திய குரல் வளம் அந்த  மாமிக்கு.

ஒரு பக்கம் ஆடியோ சிஸ்டத்தில் பாம்பே ஜெயஸ்ரீயோ, சுதா ரகுநாதனோ வர்ணம் இழுத்துக் கொண்டிருப்பார்கள். பின்னாலேயே மாமியும் கொஞ்சம் கொஞ்சமாக "உ...ஆ...." என்று இழுக்க ஆரம்பிப்பார்கள். ஏரியா  தாண்டி வந்த சக பைரவரை பார்த்து ராகம் பாட ஆரம்பிக்கும் உள்நாட்டு பைரவர் போல. நேரம் ஆகஆக சூடு ஏறும். எவ்வளவு நாழி சங்கீதப் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள்? உட்கார்ந்து பாடுவார்கள்? இது போன்ற மேலான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லவேண்டும். கடமைப்பட்டுள்ளேன். முதலில் இப்படி பாடுவார்கள் என்று நீங்கள் கேட்பதே தவறு. கத்துவார்கள். காட்டு கத்தலாக கத்துவார்கள். கீழ் ஸ்தாயியில் போகும்போது ஒரு வளர்ந்த பூனையின் வித்தியாசமான மியாவ் போல இருக்கும். இது போன்ற அசாதாரணமான சமயங்களில் மாமியின் பெண்ணும் பையனும் கண் காணாத காது படாத இடத்திற்கு ஓடிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். எப்போது அந்த அம்மணி பாட ஆரம்பித்தாலும் அந்தப் பையன் அவர்கள் மேல் உள்ள ஆத்திரத்தில் வண்டியை ஒரு ஜென்மாந்திர எதிரி போல ஓங்கி மிதித்து எங்கோ பறந்துவிடுகிறான். ஒரு மகளிர் நூறு மீட்டர் பந்தயம் ஓடும் வேகத்தில் அந்தப் பெண் பையை தோளில் மாட்டிக்கொண்டு கல்லூரிக்கு பின்னங் கால் பிடரியில் அடிக்க ஓடுகிறது. சில சமயங்களில் அந்தப் பெண் மூச்சிரைக்க பிடிக்கிறது ஓட்டம். அந்த மாமா, தாலி கட்டிய புண்ணியவான் ஆள் அட்ரசே காணோம். அவருக்கு தான் ஆயுள் தண்டனை.

என்றைக்காவது அந்த மாமியின் சத்தம் கொஞ்சம் குறைச்சலாக இருக்கும். இரண்டொரு நாள் காது தீட்டி கவனித்ததில் தான் எனக்கு அந்த மர்மம் விலகியது. என்னவென்று பார்த்தால் அன்றெல்லாம் நித்யஸ்ரீ மகாதேவன் சிடியில் பாடுகிறார். அவரின் குரலுக்கு ஈடாக நம்ம லக்ஷ்மன் சுருதி மாலதி கூட "மன்மத ராசா" எட்டிப் பிடித்து பாட முடியாது. எட்டெட்டும் பதினாறு கட்டை. இந்தக் காலத்தில் கூட மைக் இல்லாமல் ஒருவர் ஆயிரம் பேருக்கு கச்சேரி செய்யவேண்டும் என்றால் அது நித்யஸ்ரீயால் நிச்சயம் முடியும். நான் நித்யஸ்ரீயின் பரம ரசிகன். பாட்டு காதை துளைத்து மூளையை திருகி இதயத்தில் நுழைந்துவிடும். அவ்வளவு ஒரு காத்ரம். அவர் பாடும் போது வேறு எங்கும் கவனிக்க முடியாது. மேளமும் நாதஸ்வரமும் பக்க வாத்தியங்களாக கொண்டு நித்யஸ்ரீயின் ஆல்பம் ஒன்று கேட்க நேர்ந்தது. "அதரம் மதுரம்.." கிருஷ்ணாஷ்டகம். நிச்சயம் வேறு எந்த பிஞ்சுக் குரலும் பக்கவாத்திய மேளத்திற்கு பாட முடியாது. வயலினுக்கே எகிறாத சாரீரங்கள் இருக்கும் இந்தக் காலத்தில் இவர் நாதசுரத்திற்கு பாடுகிறார். நல்ல கெட்டியான குரல்.

முந்தாநாள் சாயங்காலம் வெளியே விளையாட சென்ற என் பெண்ணை கூப்பிட்டு "நான் எப்படி பாடறேன்?" என்று கருத்து கேட்டிருக்கிறார் மாமி. அலறியடித்துக் கொண்டு மேலே ஓடிவந்த என் பெண் ஏதோ பேயறைந்தது போல என்னிடம் "அந்த மாமி.. மாமி.. " என்று சுரம் பாடினாள். "என்ன சொல்லு" என்று பயந்து கேட்டதற்கு அவர்கள் கேட்டதை சொல்லி சொல்லி சிரிக்கிறாள். அவர்கள் ஆர்வம் பாராட்டக்கூடியதே. மறுப்பதற்கில்லை. ஆனால் ரோடில் ஒரு ஈ காக்கா போக விடாமல் இப்படி படுத்துவது நியாயமா? ஏ.சி. நீல்சன் மாமிக்கு ஒரு கருத்துக் கணிப்பு நடத்திக் கொடுத்தால் தேவலை.

இன்று காலை வண்டி துடைத்துக் கொண்டிரும்க்கும்போது மீண்டும் சிடி ஆன். மாமியும் பாட்டும் ஆன். இந்த முறை எம்.எஸ். பாட்டு "குறையொன்றுமில்லை... மறை மூர்த்தி கண்ணா... " மாமி மனமுருகி எம்.எஸ் பாடுவதை பீட் செய்வதற்கு முயன்றுகொண்டிருந்தார்கள். ஒரு டூ வீலர் காரர் அவர்கள் வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்தது போல திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே போனார். மாமி பாட்டு அவரை காவு வாங்கிவிடப் போகிறதே என்று பயம் எனக்கு. விடாமல் சிடி தேயும் வரை இரண்டு மூன்று முறை பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனுக்கு கேட்கும் வரை "குறையொன்றுமில்லை.." என்று பாடிவிட்டார்கள். கேட்ட எனக்கும் அந்த பரம்பொருளுக்கும் தானே தெரியும்...

ஸ்யாமா சாஸ்த்ரி, முத்துஸ்வாமி தீக்ஷிதர், தியாகப் ப்ரம்மத்திர்க்கே வெளிச்சம்.

பட உதவி: http://picasaweb.google.com/esridhar

பின் குறிப்பு: சீசனில் இன்னொரு முழு பதிவு உண்டு. ஜாக்கிரதை!!

-


Wednesday, November 24, 2010

தீர்த்தக்கரையினிலே.....

பள்ளி விட்டு நடு ரோடில் சைக்கிளை தாங்கி நின்றுகொண்டு "அடியே... வாடி.. போடி... " என்று இரைந்து பேசி அளவளாவும் பள்ளியில் பயிலும் பெண் பிள்ளைகள் பேச்சே அலாதியானது. போன வாரத்தில் இதை கூர்ந்து கவனித்ததில் மிஸ், பசங்க, சினிமா, வீடு, ஆன்செர் ஷீட் என்று மூச்சுவிடாமல் இருபது நிமிஷம் பேசியிருக்கிறார்கள். அதுபோல இதுவும் ஒரு திண்ணைக் கச்சேரி....

பெண்களுக்கு நாயுடு ஹாலில் வம்பு.
பயபுள்ள சூர்யா சரியான வயமான்பா..
தேறல் குடிச்சா நீ தேறமாட்டே..
சேக்கையில் மன்மத சேர்க்கை
குருவம்மா சரியான கருப்பு குரூஉ


இவைகளைப் பற்றி அறிய எப்பாடுபட்டாவது கீழ்வருவனவற்றை எல்லாம்  படித்துவிட்டு கட்டக்கடைசிக்கு வருக.

**********நோய்நாடி ***********

பல் தேய்த்து, காபி குடித்து, வாக்கிங் போய், குளித்து டிபன் சாப்பிட்டு கச்சேரிக்கு கிளம்பினால் இரவு ஒன்பது மணிக்கு வீடு திரும்பல். இப்படி இந்த நித்யப்படி வாழ்க்கையில் கொஞ்சம் மாற்றம் நிகழ்ந்தால் போச்சு. போன வாரத்தில் முதலில் தொண்டை உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தது. உப்புத்தாள் வைத்து பரபரவென்று தேய்த்துவிட்டா மாதிரி முதலில் கரகரத்தது. கொஞ்சம் அலட்சியம் செய்ததில் இன்பெக்ஷன் அதிகமாகி நேரே ஜுரத்தில் கொண்டு வந்து இறக்கியது. வாய் பேச முடியாமல் மௌனத்தில் அலைபாயும் மனசு மட்டும் உள்ளுக்குள்ளேயே சத்தமாக பேசினால் எப்படி இருக்கும். பொறுக்க முடியலை. பால்கனியில் தொங்கு சேரில் இரண்டு காலையும் மேலே தூக்கி வைத்து உட்கார்ந்து கொண்டு மோட்டுவளை பார்ப்பது எவ்வளவு பெரிய கொடுமை. மாலை குடும்ப டாக்டரிடம் உடம்பை காண்பிக்க போனால் அவர் மடியில் நாலு பேர் ஏறி உட்கார்ந்திருந்தார்கள். அவ்வளவு கூட்டம். சிரித்துக்கொண்டே ரெண்டு பாரசிடமால் ரெண்டு அண்டிபயாடிக் என்று எழுதிக்கொடுத்து இரத்தின சுருக்கமாக ப்ரிஸ்க்ரிப்ஷனை முடித்துக்கொண்டார். இந்த வாரத்தில் தான் ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்தது உடம்பு. இன்னமும் தொண்டை கர கர....


************மார்னிங் ராகா ***********
ஷபனா அஸ்மியின் பிரமாதமான நடிப்பு. மஹா கணபதிம்... இந்தப் படத்தில் ஏற்கனவே தாயே யசோதா வெளியிட்டிருந்தேன் என்று நினைக்கிறேன். ஒரு மியூசிகல் ஃபீஸ்ட் இந்தப் படம். இசைப்பிரியர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய படம்.  இந்தப் பாடலின் கடைசி இருபது வினாடிகள் கட்டாயம் பாருங்கள். சுதா மாமி பாடியிருக்கிறார்.




********* நெடுநல்வாடை**********
இலக்கியத்திற்கும் நமக்கும் எஸ்கலேடர் வைத்தாலும் எட்டாமல் இருந்துவந்தது. சங்க கால இலக்கியங்களை கற்று அறிந்து நாமும் ஒரு தீவிர இலக்கியவாதி ஆக வேண்டும் என்று என்னுள் எழுந்த தமிழ்க் கனல் ஜுரவேகத்தில் பற்றிக்கொண்டு கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது. அதன் முதல் முயற்சியாக வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் இயற்றிய ஆராய்ச்சி உரையுடன் இருந்த நெடுநல்வாடை பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன். பிரிந்து வருந்தும் தலைவிக்கு நெடிதாகத் தோன்றும் வாடையை கூறுவதால் நெடுநல்வாடை. இதை இயற்றியவர் "நீயே முக்கண் முதல்வனாவும் ஆகுக..." என்று பொற்றாமரைக்குளத்தில் சிவனாரிடம் வம்பு பண்ணிய நக்கீரன். கூதிர்க்க்காலத்தை பற்றிய வர்ணனைகள் மிக்கதாகும் இந்த பத்துப்பாட்டில் உள்ள இத்தொகுப்பு. ஐப்பசி கார்த்திகை மாதங்களை கொண்ட காலம் கூதிர்க்காலம். பதிவின் ஆரம்பத்தில் இருக்கும் அசால்ட் வார்த்தைகளுக்கான பொருள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வம்பு - கச்சு, வயமான் - சிங்கம் , தேறல் - கள்,  சேக்கை - படுக்கை , குரூஉ - நிறம்

******** தீர்த்தக்கரையினிலே..... ********
ஆற்றங்கரைகளில் தோன்றிய நமது நாகரீகங்கள் மனிதனின் ஒழுங்கான வாழ்வியலுக்கு ஒரு உன்னத ஆரம்பம். கீழே இந்தக் கால்வாய்க் கரையில் இருக்கும்  வீடுகளும், கோயிலும், ஆர்ப்பாட்டமில்லாத அந்த நீர்நிலையும் மனதுக்கு ஒரு ரம்மியமான தோற்றத்தை தருகிறது. பார்க்க பார்க்க கொள்ளை இன்பம். படம் எடுத்த கைகளுக்கு தங்கக் காப்பு செய்து போடவேண்டும்.  கவிதைப் படம் கீழே...

kalvaai nagareegam



****** மன்மதன் அம்பு ************
கமல் கவிதை என்ற தலைப்பில் வெளியான மன்மதன் அம்பு பாடல் ஒன்றை சமீபத்தில் கேட்டேன். கவிதை ஒன்றை கமல் படிக்கிறார். எழுதியது கமல் தான். நல்ல கணவன் வேண்டும் என்று ஒரு பெண் ஸ்தோத்திரம் செய்வது போல எழுதப்பட்ட கவிதை. வழக்கம் போல் தன்னுடைய நோ சாமி கருத்துக்களை கமல் புகுத்தியிருந்தாலும் வார்த்தை பிரயோகங்கள் அமோகம். பாடலில் இரண்டு நிமிடங்களுக்கு பிறகு தன் திருவாயால் கவிதை படிக்கிறார் கமல். கவிதைக் காது இருப்பவர்கள் கொஞ்சம் கேளுங்களேன்.. மூளை மடிப்புகள் அதிகம் இருக்கும் மேதாவிகள் வேண்டும் என்கிறார்.



********** தட்டிக்கொடுத்த பிரதமர் *************
அலை ராசா
அலைக் கற்றை கேசில்
அலையாய் அலைந்தார் போன வாரத்தில்.
நாடாளுமன்றத்தில் முரசொலி மாறன் நினைவு தினத்தில் தி.மு.க கட்சி அலுவலகம் பக்கம் சென்ற பிரதமர் மன்மோகன் ராசா முதுகில் ஆறுதல் தட்டு ஒன்று கொடுத்தாராம். பா.ஜ.க மக்கள் இந்த நிகழ்ச்சியை எடுத்து வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் தையா தக்கா வென்று ஆடோ ஆடென்று ஆடுகிறார்களாம். அலையடிக்குது விவகாரம்.

பின் குறிப்பு பாடல்:
தலைப்பை வைத்துவிட்டு இந்தப் பாடல் போடாவிட்டால் பந்திக்கு இலையை விரித்து பதார்த்தம் பரிமாராதது போல. ஆகையால்..... பாரதியை சொல்வதா... பாடிய எஸ்.பி.பி யை சொல்வதா... இசை அமைத்த எம்.எஸ்.வியை சொல்வதா.. நடித்த கமல், ஸ்ரீதேவியை சொல்வதா... இயக்கிய பாலச்சந்தரை சொல்வதா...



-

Tuesday, November 23, 2010

பாகுகன்?

அவன் ஒரு பயங்கர சூதாடி. எதிர்ப்படும் எதையும் வைத்து ஆடுவான். அப்படித்தான் அன்றும் சூதில் அனைத்தையும் வைத்து ஆடினான். மனைவி மக்களை தவிர அனைத்தையும் மொத்தமாக இழந்தான். அவனது மனைவி தங்களின் குழந்தைகளின் நிலை காண சகிக்காமல் தன் தந்தை தேசத்திற்கு அவர்களை பத்திரமாக அனுப்பிவைத்தாள். சூதாடிகள் காலநேரவர்த்தமானங்களுக்கு அப்பார்ப்பட்டவர்கள். ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாவற்றையும் இழந்து விட்டு தேசத்தை துறந்து வெறுங்கையோடு வீதியில் நடக்கலானான். பார் புகழும் சக்கரவர்த்தியாக இருந்த கணவன் கட்டிய துணியுடன் தெருவில் போவதைப் பார்த்து நெஞ்சம் பதைத்த அவளும் அவனுடன் அப்பொழுதே நடையை கட்டினாள்.

"வேண்டாம். நீ என்னுடன் வராதே" என்றான்.
"வுஹும்.. மாட்டேன். உங்களுடன் தான் வருவேன்"
"நீ உன் தந்தையிடம் போய் சேர். நலமாய் வாழ்வாய்" என்று குரல் கம்ம வேண்டினான்.
அவன் சொல் பேச்சு கேட்காமல் அவனைப் பின் தொடர்ந்தாள். உடம்பில் தெம்பு இருக்கும் வரை காட்டில் வெகுதூரம் நடந்தே பிரயாணப்பட்டார்கள். அடர்ந்த காட்டில் ஒரு இடத்தில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று இருவரும் அமர்ந்தனர். அப்போது பக்கத்தில் நெடிது வளர்ந்திருந்த ஒரு மரத்தின் கிளையில் ஒரு அதிசயக் குருவிக்கூட்டத்தை கண்டான். வாடிய அவன் முகம் பிரகாசமடைந்தது. அங்கே உட்கார்ந்திருந்த குருவிகள் அனைத்தும் தங்கத்தில் தகதகவென ஜொலித்தது. குருவியின் தங்க ரெக்கைகள் தன்னுடைய வறுமையையும் அதை தீயில் வாட்டி எடுத்து சாப்பிட்டால் தன்னுடைய பசியையும் போக்கிக்கொள்ளலாம் என்றெண்ணி  இடுப்பில் தான் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை உருவி அந்தக் குருவிகளைப் பிடிப்பதற்காக அதன் மேல் எறிந்தான். உடனே அந்த வஸ்திரத்தோடு மேலே எழும்பி பறந்த அந்த குருவிகள் ஆச்சர்யமாக அவனைப் பார்த்து பேசின...
"ஏய்.. மூடா.. உனக்கு இப்போது ஏழரைச் சனி நடக்கிறது. உன்னிடம் இந்த உயர்ந்த வஸ்திரங்கள் கூட இருக்க்கக்கூடாது என்பது விதி. அதற்காகவே நாங்கள் தங்க உரு எடுத்து வந்தோம். " என்று கூறி அந்தத் துணியுடன் பறந்து சென்றன.

மிகவும் நொந்து போன அவன் விதியை எண்ணியவாரே கால் போன திக்கில் காட்டில் மீண்டும் நடக்கலானான். அவளும் அவனை நிழலெனப் பின் தொடர்ந்தாள். மிகவும் சோர்ந்து போய் இருவரும் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு பாழடைந்த மண்டபத்தை கண்டனர். அதில் தங்கி சற்று இளைப்பாறலாம் என்று உள்ளே நுழைந்தனர்.  அந்த நிலைமையிலும் அவன் அவளிடம் "இங்கே பார். அந்தோ செல்லும் அந்த பாதை உன் தந்தை தேசத்திற்கு செல்கிறது. போய் பிழைத்துக்கொள்" என்றான்.
"ராஜ்ஜியம் போய், நம் பிள்ளைகள் போய், உங்கள் வஸ்திரம் போய், ஒன்றுமே இல்லாத உங்களைப் போய் எப்படி நான் விட்டு விட்டு போவேன்" என்று கதறினாள் அவள். மேலும் "நீங்களும் என்னோடு வாருங்கள். நாம் என் தந்தையிடம் போவோம். உங்களை தன் சொந்த மகன் போல நடத்துவார்" என்று அழைத்தாள்.
"உனக்கு ஞாபகம் இருக்கிறதா. உன் பிறந்த வீட்டில் நடந்த ஒரு திருமண வைபவத்திற்காக நாம் சென்றது. பத்தாயிரம் குதிரைகள் முன்னாலும் பின்னாலும் அணிவகுப்பாக வர அலங்காரமாக போனோம். அப்படிச் சென்ற நாம் இப்போது எப்படி ஆடைகூட இல்லாமால் உன் தந்தை தேசத்திற்கு வரமுடியும்? நீ மட்டும் போ. நம் பிள்ளைகளை பார்த்துக்கொண்டு சந்தோஷமாக இரு." என்று துக்கம் தொண்டையை அடைக்க சொன்னான் அவன்.

bagugan

பசி, களைப்பு ரெண்டும் சேர்ந்து இருவருக்கும் தூக்கம் வந்தது. தன்னுடைய சேலையின் தலைப்பை கணவனுக்கு கீழே விரித்து அவளும் அவனருகில் படுத்துக்கொண்டாள். கணவன் பக்கத்தில் இருக்கும் அரவணைப்பில் படுத்த சில கணங்களில் தூங்கிப் போனாள். அவனுக்கு தூக்கம் வரவில்லை. தனக்கு விரித்த அளவுவுக்கு உள்ள புடவையை அப்படியே கத்தரித்து தனது இடையில் சுற்றிக் கொண்டு அவளை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டான். ஒரு ஐந்தாறு மைல் சென்றதும் மீண்டும் அவள் நினைவு வர அந்த பாழும் மண்டபத்திற்கு திரும்பவும் ஓடி வந்தான். இன்னமும் அப்படியே நித்திரை கலையாமல் படுத்துக் கொண்டிருந்தாள்.  கொஞ்ச நேரம் அவள் அருகில் மண்டிபோட்டு விக்கி விக்கி அழுதான். கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் அவளை விட்டு ஓட்டம் பிடித்தான்.

நடு இரவில் கண் விழித்துப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. சேலையின் பாதியை நறுக்கி எடுத்துக் கொண்டு பர்த்தா பிடித்த ஓட்டம் அவளை வாய் திறந்து ஒப்பாரி வைக்க விட்டது. நன்றாக ஒரு குரல் அழுது தீர்த்த பின் மனச் சோர்வோடு தனியாக கால்விட்ட திக்கில் நடந்து ஒரு தேசத்தை அடைந்து அங்கு ஒரு பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்து கொண்டாள். கணவன் எப்படி இருப்பானோ, எங்கு இருக்கிறானோ, என்ன சாப்பிடுகிறானோ என்று வருந்தி வேலை மட்டும் செய்துவிட்டு சாப்பிடக்கூட முடியாமல் காலத்தை சபித்தவாறே பிடித்து தள்ளினாள் அவள்.

அவளை நடுக்காட்டில் தவிக்க விட்டு ஓடிய கணவன் செல்லும் வழியெங்கும் அவள் நினைவாகவே காடுகளில் திரிந்தான். நீலோத்பல மலர்கள் மழை நீரில் மறைந்ததைப் பார்த்தும் அழகிய அவள் கண்களை நினைவு படுத்தும் மலர்களை கூட என்னைக் காண விடாமல் இந்த தெய்வம் செய்கிறதே என்றும் முழு வெண்மதியை மேகங்கள் மறைப்பதை கண்டு அவள் முகமொத்த நிலவினைக் கூட காணவிடாமல் செய்கிறதே என்றும் புலம்பினான். இப்படி அழுது புலம்பியவண்ணம் சென்றுகொண்டிருந்தவன் காதில் "யாராவது காப்பாற்றுங்களேன்... உதவி..உதவி.." என்ற ஒரு அபயக் குரல் கேட்டது. குரல் வந்த திசையில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.  அதில் கார்கோடகன் என்ற பாம்பு சிக்கி தவித்துக்கொண்டிருந்தது. இவன் ராஜா ஆகையால் வீரதீரத்துடன் பாய்ந்து சென்று கார்கோடகனை மீட்டான். கார்கோடகன் "என்னை கொஞ்சம் தூரம் தூக்கிக் கொண்டு போய் விடேன்" என்று கெஞ்சிற்று. அவனை தூக்கிக் கொண்டு பத்தடி போவதற்குள் கார்கோடகன் காப்பாற்றியவனை கடித்துவிட்டான். கடித்ததில் ராஜ சரீரம் போய், உடம்பெங்கும் கருப்பாகி, கை கால்கள் சிறுத்துப் போய், முடி செம்பட்டையாகி, பார்க்க விகாரமாகிப் போனான். "ஏன் என்னை இப்படி செய்தாய்?" என்று கேள்விக்கு கார்கோடகன் "இந்த ராஜ சரீரத்துடன் உன்னால் எங்கும் வேலை பார்க்க முடியாது. இப்போது உனக்கு கஷ்ட காலம் நடக்கிறது. இதிலிருந்து நீ விடுபடும் போது இப்போது நான் தரும் இந்த பட்டு வஸ்த்திரங்களை அணிந்து கொள். மீண்டும் ராஜ தேஜஸ் பெறுவாய்" என்று வாழ்த்திவிட்டு விடைபெற்றான் கார்கோடகன்.

அப்படியே நடந்து அயோத்தி நகரைச் சென்றடைந்தான். அங்கே ருதுபர்ணன் என்ற ராஜா அரசாண்டான். இவன் அவனிடம் போய் வேலை கேட்டான்.  இவனுடைய ரூபத்தை கண்டு வேலை ஒன்றும் இல்லை போ என்று விரட்டினான் அந்த ராஜா. எனக்கு சமைக்க தெரியும் என்று சொல்லி விதவிதமாக பட்சணம் செய்து காண்பித்தான். அதை வாங்கி ருசித்துப் பார்த்த ருதுபர்ணன் உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று வேலைக்கு வைத்துக்கொண்டான்.  அப்புறம் அவனுக்கு தேரோட்டிக் காண்பித்தான். இந்த உலகத்தில் இப்படி ஒரு தேரோட்டியா என்று வியந்து அவனை ரொம்ப பாராட்டி சீரும் சிறப்பாக வைத்துக்கொண்டான்.

இங்கே வேறு ஒரு நாட்டு அரண்மனையில் வேலை பார்த்துவந்தாள் அந்த பத்தினி. விதர்ப்ப நாட்டில் தகப்பன் வீட்டில் பிள்ளைகள், எங்கோ புருஷன் என்று காலத்தை கழித்துவந்தாள் அவள். அப்பா அம்மா இல்லாமல் தவித்த பிள்ளைகளுக்காக தன் மகளையும் மாப்பிள்ளையையும் கண்டுபிடிப்பதர்க்காக அவள் தகப்பன் நிறைய பிராமணர்களுக்கு காசு கொடுத்து ஊர் ஊராக சென்று தேடச்சொனான். அப்படி ஒரு பிராமணன் இவள் வேலை பார்க்கும் அரண்மனைக்கு வந்தான். இவள் அன்னம் பரிமாறுகையில் அடையாளம் கண்டுகொண்டு தேம்பி அழுதான். பதிலுக்கு இவளும் அழ இதை அந்த அரண்மனை இளவரசி தன் தாயிடம் போய் சொல்லிற்று. அவள் ஓடி வந்து அந்த பிராமணனை பார்த்து "ஏனப்பா இந்தப் பெண்ணை பார்த்து அழுகிறாள். பதிலுக்கு அவளும் அழுகிறாளே என்ன விஷயம்?" என்று வினவினாள்.  அந்தப் பிராமணன் அவள் யார் என்று சொன்னான். அதை உறுதி செய்ய அவள் புருவங்களுக்கு இடையில் இருந்த குங்குமத்தை அழித்துப் பார்த்தாள் அந்த ராணி. ஆச்சர்யமடைந்தாள். இரு புருவங்களுக்கு மத்தியில் ப்ரம்மா பிரத்தேயகமாக சிருஷ்டித்த சிகப்பு மச்சம் இருந்தது. அவள் யாரென்று அறிந்துகொண்டாள். தக்க மரியாதையோடு அவளது தகப்பனது விதர்ப்ப தேசத்திற்கு மேளதாளத்தோடு மரியாதை செய்து அவளை அனுப்பி வைத்தாள்.

தகப்பன் தேசம் சென்றடைந்த அவள் தன் கணவனைத் தேடும் பணியில் அதே பாணியில் பல பிராம்மணர்களை பல தேசங்களுக்கு அனுப்பினாள். அவர்களிடம் "உன்னையே நம்பி இருந்த பத்தினியை தவிக்க விட்டாயே... இது தர்மமா.. இது சத்தியமா..." என்ற கேள்வியை எல்லா இடத்திலும் கேட்கச் சொன்னாள். "யார் பதில் சொல்கிறார்களோ என்னிடம் வந்து சொல்லுங்கள்"  என்று சொல்லியனுப்பினாள். பல தேசத்தில் பதில் கிடைக்காமல் அயோத்தியில் ருதுபர்ணன் அரண்மனையில் விருந்துண்டவன் வெளியில் வந்து சொன்னதும் அங்கே குதிரை லாயத்தில் இருந்தவன் அந்த கேள்விக்கு "எவ்வளவு கஷ்டத்தையும் பதிவிரதைகள் பொறுத்துக்கொள்வார்கள், கஷ்ட காலம் நீங்கி கணவன் வந்ததும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்று பதில் சொன்னான். அந்தப் பிராமணன் நேரே வந்து இதுபோல் ஒரு குதிரை லாயக்காரன் சொன்னதாகச் சொன்னார். அவளுக்கு சந்தேகம் வந்து என்ன செய்வது என்று தன் தாயை கேட்டாள். அதற்க்கு தாய் "உனக்கு சுயம்வரம் " என்று சொல்லி அந்த தேசத்து ராஜாவை கூப்பிடுவோம். உன் பர்த்தா அங்கிருந்தால் நிச்சயம் வருவான் என்று சொல்லி சுயம்வர செய்தி சொல்லி அனுப்பினாள்.

அயோத்தியில் இருந்து விதர்ப்ப தேசம் நூறு யோஜனை தூரம் இருந்தது. ருதுபர்ணன் பாகுகனை(அதுதான் நம்ம ஹீரோவோட வேலைப்பார்க்குமிடம் பெயர்) தேரோட்டச் சொல்லி சுயம்வரத்துக்கு விரைந்தான். மறுநாள் காலையில் சுயம்வரம் என்று கேள்விபட்டதும் ஒரு பத்து வினாடிகள் அப்படியே உறைந்து போனான் பாகுகன். "ஏன் இப்படி மலைத்து நின்றுவிட்டாய்?" என்ற கேள்விக்கு "எவ்வளவு மணியில் போகலாம் என்று யோசித்தேன்" என்று சொல்லிவிட்டான். பறந்து செல்கிறது ரதம். அதைவிட தன் மனைவிக்கு சுயம்வரம் என்ற செய்தியில் அவனது மனம் பறந்தது. விதர்ப்ப தேசத்தை அடைந்தனர். அங்கு ஒன்றும் விழாக்கோலமே இல்லை. ருதுபர்ணன் துணுக்குற்றான். பாகுகன் குதிரையை லாயத்தில் கட்டிவிட்டு ஓய்வெடுக்க போய்விட்டான்.

தாய் வீட்டில் இருக்கும் பாகுகன் மனைவி சேடிப் பெண்ணிடம் அந்தப் பிராமணர்களிடம் சொல்லி விட்ட கேள்வியை சொல்லி அந்த குதிரைக்காரனிடம் கேட்கச் சொன்னாள். அவனும் அதே பதிலை சொன்னான். இருந்தாலும் அவனது உருவம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அடுத்து சேடிப்பெண்ணிடம் ஈர விறகை அவனிடம் கொடுத்து சமைக்கச் சொன்னாள். ஈர விறகு அவன் அடுப்பில் வைத்ததும் பற்றிக்கொண்டது. இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அக்னி தேவன் அவனுக்களித்த வரம் அது. இருந்தாலும் அவன் தோற்றம் அப்படி இருந்தது. மூன்றாவதாக தன் இரு பிள்ளைகளை அவன் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போகச் சொன்னாள். அவர்களை கண்டதும் இருக்க கட்டி உச்சிமோந்து ஒரு மணி அழுது தீர்த்துவிட்டான். சேடிப்பெண் அவனிடம் ஏன் அப்படி செய்தாய் என்று கேட்டாள். எனக்கும் இதுபோல் இரு குழந்தைகள் உள்ளது என்று சொல்லிவிட்டான். இதை வந்து சொன்னதும் உறுதியாக வந்திருப்பது தனது கணவன் என்று கண்டுபிடித்துவிட்டாள். இருந்தாலும் அந்த தோற்றம்.. அவனை சுயம்வரம் காணப் போகும் இளவரசி கூப்பிடுகிறாள் என்று கூட்டிவா என்றாள்.

வேண்டாவெறுப்பாக பட்டாடையும் பகட்டுமாக தன்னை விட்டு இன்னொரு மனம் புரிய இருப்பவளை பார்ப்பதா என்று எரிச்சலுடன் அங்கே வந்த பாகுகன் அதிர்ச்சியடைந்தான். அவளை எந்தக் கோலத்தில் நடு காட்டில் விட்டு விட்டு சென்றானோ அதே கோலம் கலையாமல் நின்றால் அவள். அப்படியே உடைந்து போனான். நின்று நிலைதடுமாறி ஓவென்று அழுதான். கடைசியாக கார்கோடகன் கொடுத்த பட்டு வஸ்த்திரத்தை எடுத்து அணிந்துகொண்டான். ராஜ தேஜஸ் வரப்பெற்றான். அனைவரும் இணைந்து சந்தோஷமாக வாழந்தனர்.


பின் குறிப்பு: இது ஒரு பெருங்கதை. நான் என்னால் ஆனவரைக்கும் சுருக்கியிருக்கிறேன்.  இதில் ஒரு கேள்வி இருக்கிறது. யார் அந்த பாகுகன்? அவன் மனைவி யார்? பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். சரியான விடைகளை தாங்கிய பின்னூட்டங்களை கடைசியாக வெளியிடுகிறேன். நன்றி.

பட உதவி: ராஜா ரவி வர்மா

-

Monday, November 22, 2010

45

குப்பை அள்ளும் ஹைடெக் வால்வோ கோச்சுகள் வரிசையாக வாசனையுடன் வாசலில் நின்றிருந்தன. ஐந்தடுக்கு மாடியுடன் கண்ணாடி பளபளக்க பளீரென்று இருக்கும் திருவல்லிக்கேணி மாநகராட்சி அலுவலக வாசலில் காரை நிறுத்தினான் நாராயணன். வெள்ளை உடை சிப்பந்தி ஓடோடி வந்து ஒரு எலெக்ட்ரானிக் அட்டையை கையில் திணித்து வேலேட் பார்க்கிங் செய்வதற்கு காரை ஓட்டிச் சென்றான். அதல பாதாள பார்க்கிங். சாலை ஓரங்களில் ஒரு சின்னூண்டு குழந்தை சைக்கிள் கூட நிறுத்த தடை. ஒரு நிமிடத்திற்கு இந்த சாலையை என்பது வண்டிகள் கடந்து சென்றதாக அந்த மாநகராட்சி மாடி எல்.சி.டி டிஸ்ப்ளே அணைந்து அணைந்து தெரிவித்தது. அத்துமீறி வாகனங்களை நிறுத்தினால் ரோடோர Anti-Parking சென்சார்கள் போக்குவரத்து போலிசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிடும். அடுத்த ஐந்து நிமிடத்தில் லிஃப்ட் வேன் வந்து வண்டியை கபளீகரம் செய்து கொண்டு போய்விடும்.


future

முழு ஸ்கேன் நிலைவாசலில் முடிந்து "பீம்..பீம்..பீம்..." என்று அலறியது அலாரம். உட்கார்ந்திருந்த கேபினிலிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான் செக்யூரிட்டி. "எத்தனை தடவை சார் சொல்றது எல்லாருக்கும். ப்ளுடூத் டிவைஸ் ஏதாவது வச்சுருக்கீங்களா. எடுத்து கொடுங்க." என்றான். நானு கையில் பையில் என்று தன் மேனியெங்கும் வியாபித்திருந்த நீலப்பல் சாதனங்களை கழற்றிக் கொடுத்துவிட்டு நிராயுதபாணியாக உள்ளே சென்றான். ஒவ்வொரு துறை வாசலில் ஒரு கண்ணாடி கதவு. கதவின் நடுவே சென்சார் பூட்டு நீலமும் சிகப்புமாய் சிரித்தது. யாரைப் பார்க்க வேண்டும் என்ன காரியத்திற்காக எவ்வளவு நிமிடம் என்ற முழு விவர சமர்பித்தலுக்கு பிறகு வெளியே கிடைத்த அந்த அனுமதி அட்டை போகவேண்டிய இடத்திற்கு மட்டும் அசைந்து கொடுக்கும்.  அலுவலகம் எங்கும் கண்காணிப்பு கமெராக்கள். கார்டில் உள்ள ஆர்.எஃப். ஐடிக்கள் காரிடாரில் செல்ல வேண்டிய துறையின் வழியை சுவற்றில் அம்பிட்டு காட்டியபடியே கூட வந்தது. பிறப்பு சான்றிதழும் ஆயுசு ஊசியும் என்ற துறை நோக்கி சென்றுகொண்டிருந்தான் நானு.

கதவில் கார்டை காட்ட உள்ளே அனுமதித்தது இயந்திரக் கதவு. உள்ளே நுழைந்ததும் வழுக்கிக்கொண்டு சார்த்திக்கொண்டது.
"ஐ அம் நாராயணன்"
"உங்க ஐ.டி?"
கோடுபோட்ட முழுக்கை சட்டையின் மணிக்கட்டு பட்டன்களை தளர்த்தி மெல்லிய சில்லில் ப்ரோக்ராம் செய்யப்பட்டு கையில் டாக்டர் நாடி பிடித்து பார்க்கும் பகுதியில் பதித்து வைக்கப்பட்டிருந்த இடத்தை அந்த ஸ்கேனருக்கு நேரே காண்பித்தான்.
"92537456190" என்று படித்துக்கொண்டது அந்த நீல நிற மானிட்டரில் ஒவ்வொரு எழுத்தாக ஓடியது.
"உங்க பார்ட்னர் பெயர்?"
"சரஸ்வதி"
"அவங்க ஐ.டி?"
"டிஜிடல் சிக்னேச்சருடன் உங்கள்  இ மெயிலுக்கு நேற்றே அனுப்பியாயிற்று"
"இரண்டு நிமிடங்கள் காத்திருக்கவும்"

கூச்சலற்ற, கையூட்டு அற்ற, ஏஜெண்டுகள் அற்ற அரசுத்துறை அலுவலகங்கள். மனதையும் இருப்பிடத்தையும் குளிர வைக்கும் ஏ.சி. ஆங்காங்கே கவனித்தால் வேலையாகும் என்ற நிலை மாறி ஐடியை காட்டினாலே அரசாங்க வேலைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய மணித்துளிகளில் நிறைவேறிக்கொண்டிருந்தன. சரியாக இரண்டு நிமிட இடைவெளியில்

"இந்தாருங்கள்... சான்றிதழும் ஆயுசு ஊசியும்" என்று சா. ழைக் கவரிலும், ஊசியை ஒரு காகித டப்பாவிலும் போட்டு நீட்டினாள்.

"எவ்வளவு வருஷம்?"
"உங்கள் கேள்வி புதிதாக உள்ளதே! எவ்வளவு என்று தெரியாதா?"
"தெரியும் இருந்தாலும்..."
"45"
"ஒரு ஐம்பத்தைந்தாவது... "
"மிஸ்டர் என்ன கேள்வி இது. தலைமைக்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா?"
"1020 செக்டாரில் ஏர்வே 45 ல் போன வாரத்தில் ஒரு 55 போடப்பட்டிருக்கிறது"
"நிரூபிக்க முடியுமா?"
கடிகாரக் காமெராவில் படம்பிடித்து வைத்திருந்ததை அந்த ஓய்யாரிக்கு ஒட்டிக்காண்பித்தான் நானா. வியர்வை கொஞ்சம் முத்துமுத்தாக நெற்றியில் தோன்ற..
"இதெப்படி..."
"எனக்கு தெரியும்.. வேண்டுமானால் அவர்கள் தந்தது போல் நானும் என்னுடைய ஆயுள் கேளிக்கை முழுவதும் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்."

பணமாகவோ, பொருளாகவோ எதையுமே லஞ்சமாக வாங்கமுடியாதவாறு அரசாங்கம் கிடுக்கிப்பிடி போட்டிருந்தது. ஒவ்வொரு அசையும், அசையா சொத்துக்களும் அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. பிரஜைகளுக்கு அவர்களின் தொழிலைப் பொறுத்து ஆங்காங்கே வீடுகளும் குடும்பம் நடத்த தேவையான பொருட்களையும் அரசே அளிக்குமாறு பார்த்துக்கொண்டார் கண்டத் தலைவர். ஆம். நாட்டுக்கொரு தலைவர் போய், கண்டத்திற்கு ஒரு தலைவர் இப்போது. ஒவ்வொரு பிரஜைக்கும் மொத்த ஆயுள் 45 என்று வரையறுக்கப்பட்டது. அதற்க்கான பிரத்யேக ஊசி நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்த ஊசியால் 45 வயது வரை எந்த வைரஸ் தாக்கினாலும் ஒன்றும் நேராது. நிர்ணயிக்கப்பட்ட வயது வரை அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருப்பர். அரசாங்க அலுவலில் உயர்த்தட்டு வேலையில் இருப்போருக்கு மட்டும் "ஆயுஷ்-55" ஊசி. தன்னுடைய பிள்ளைக்கு இன்னொரு பத்து வருடங்கள் கூட்டி ஆ.55 வாங்குவதற்கு தன்னுடைய ஆயுளில் கேளிக்கை என்று அரசாங்கம் விதித்திருந்த அத்துணை சலுகைகளையும் லஞ்சமாக அந்த ஊழியரிடம் தத்துக் கொடுத்துவிட்டு நின்றது அந்த தியாக உள்ளம் படைத்த தகப்பன்.

எவ்வளவு விதிமுறைகள் இருந்தாலும் லஞ்சம் வாங்கத் தெரியாதா நமக்கு என்ற அந்த அரசுத்துறை ஊழியரும், என்ன கொடுத்தேனும் தன் வாரிசுக்கு நன்மை செய்வோம் என்ற பெற்றோரும் காலாகாலத்திர்க்கும் நிற்கும் மனிதர்களின் இலக்கணங்கள்.

பின் குறிப்பு: இந்த சிறுகதை சமீபத்திய ஆண்டிபயாடிக் தந்த போதையில் எழுதியது.

பட உதவி: http://picasaweb.google.com/democracyphotochallenge

-

Saturday, November 20, 2010

காய்ச்சல்

ஜுரம்...
காய்ச்சல்...
ஹை ஃபீவர்....
கன கனன்னு இருக்கு.....
கண்ணெல்லாம் ஜிவ்வுன்னு எரியுது....
உடம்பு மேலேர்ந்து தீப்பொறி பறக்குது....
அன்னம் தண்ணி உள்ளே செல்லமாட்டேங்குது.. (காதல் ஜுரத்திலும் இது இருக்குமாம்)
படுத்தா உட்காரச் சொல்லுது உட்கார்ந்தா படுக்கச் சொல்லுது...
கால்ல தண்ணி பட்டா உடம்பு குளிர நடுங்குது...


கீழ் லோகத்தில் இருந்து மேலோகம் தெளிவா தெரியுது. ஏதோ ஆயிரம் கிலோ மீட்டர் ஓடினா மாதிரி ரெண்டு காலும் "ப்ளீஸ்.. கழற்றி கீழே வச்சுடேன்" என்று கெஞ்சுகிறது. கண் இமைகள் மேல அரிசிமூட்டையை வச்சா மாதிரி கனக்கிறது. முட்டிக்கு முட்டி போலீஸ் லத்தியால் தட்டின மாதிரி ஒரு வலி. நாக்குக்கு எச்சில் கூட எதிரியாகிப் போனது. உள்நாக்கு முதற்கொண்டு கசந்தது. க்ரோசின், கால்பால் போன்ற பாராசிடமால் போட்டு அடக்கப் பார்த்தால் அடங்க மறுத்து இன்னும் பூதாகாரமாய் வளர்ந்துவிட்டது.

மிகவும் கஷ்டப்பட்டு தத்தி தடுமாறி டாக்டர் ஐயாவிடம் ( நான் வைத்தியம் பார்க்கும் மருத்துவரை மரியாதையாக அழைத்தேன்) சென்று காண்பித்து நான்கு மாத்திரைகள் வாங்கி உள்ளே விழுங்கினேன். நாலு வேளை விழுங்கிய பிறகு இன்று சற்று தேவலாம். உடம்பு சரியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்.. ப்ளாக் எழுதவேண்டும். அதுதான் நம்முடைய தலையாய கடமையல்லவா? அதான் இது.
பதிவு எழுதறதை தாய் தடுத்தாலும் விடேன்.. என்ற வைராக்கியத்தில் இப்பதிவு..
நூற்றி நான்கு பேர் பாலோவேர் இருப்பதால் நூற்றி நான்கு இருந்தது போலிருக்கிறது..

திரட்டிகளில் என்னை இணைத்துக்கொள்ளாமல் தனியாவர்த்தனமாய் நான் எழுதிய ஒரு பதிவை இங்கே மீள் பிரசூரம் செய்கிறேன்.  படித்து இன்புறுக.. முற்றிலும் தேறினதும் வந்து முழு கதைய வச்சுக்கறேன்.


ஆட்டோ ராஜாக்கள்


கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் வாசலில் எப்போதும் 'ஜே ஜே' என்று தேர் கூட்டம் திருவிழா கூட்டம் போல இருக்கும். ரேஸ் கோர்ஸ் எதிரில் கிண்டி தொடர்வண்டி நிலையம் உள்ளதால் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடம். இந்த ஜென்மமே ரேஸ் விளையாட எடுத்தது போல கர்ம சிரத்தையாக ஒரு கூட்டம் எப்போதும் அங்கே சுற்றி அலைவதுண்டு. ரேஸில் தோற்ற பாபப்பட்ட ஆத்மாக்கள் நாளை எப்படி ஜெயிப்பது என்ற நினைப்பிலும், ஜெயித்த கோஷ்டியினர் நாளை எப்படி இன்னும் அதிகம் கெலிப்பது என்று அந்தரத்தில் பறந்தும் சாலையை கடந்த வண்ணம் இருப்பர். இருசாராரிலும் ஒரு சிலர் கார், பஸ் மற்றும் சைக்கிளைக்கூட இருபக்கமும் போக விடாமல் ரோடில் நின்று லாப நஷ்ட கணக்குளையும் அன்றைய செலவாணியையும் பற்றி தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதை காணலாம். இதற்கிடையில் ஒரு காரின் இடது பக்க கண்ணாடியில் தனது முகம் பார்க்க வருவதுபோல் வந்த ஒரு ஆட்டோ அப்படியே அதன் முன் சென்று பிள்ளையாரை வலம் வரும் பக்தன் போல் இடமிருந்து வலம் திரும்பி, வலது பக்கத்தில் பல இடையூறுகளை கடந்து வந்து கொண்டிருந்த எம்.டி.சி பேருந்தை நிற்க வைத்து வலது கோடி ரேஸ் கோர்ஸ் சுவர் பக்க ஓரத்தில் இருந்த தனது "xxxx xxxx சங்க ஸ்டாண்டு" வில் நின்றது. அதன் ஓட்டுனர் ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தார். கணேஷ் பீடி பிடிப்பது ஒன்றுதான் இப்புவியில் இந்த தருணத்தின் அதிமுக்கியமான வேலை என்று ஒரு பஸ், கார் போன்றவற்றை நிறுத்திய வெற்றியின் களிப்பு அவர் முகத்தில் தெரிந்தது. இவ்வளவு நடந்தது ஒன்றுமே தெரியாததுபோல தன்னுடைய சக நண்பருடன் தினத்தந்தியில் வந்த அன்றைய முக்கிய கள்ளக்காதல் சம்பவங்கள் பற்றிய விவாதத்தை தொடர்ந்தார்.

இது போல் நிகழ்ச்சிகளை சென்னையில் பலரும் எதிர்கொண்டிருக்கலாம். சில பல நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கீழ்வரும் ஆட்டோ வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. அச்சம் தரும் (அச்சமற்ற)ஆட்டோ
ஏதோ ஒரு எப்.எம் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். முன் சீட்டில் காக்கி சட்டைக்கு பதில் கலர் சட்டை உட்கார்ந்திருக்கும். ஒட்டுபவருக்கு முன் பகுதி முடியில் சிகப்பு வண்ண சாயம் பூசியிருக்கும். சீட்டில் இடம் இருந்தால் கூட எப்போதும் ஓவர்லோடு அடிக்கும் போது ஒருவரை பக்கத்தில் உட்கார்த்தி சவாரி அடித்த பழக்கத்தால் இடம் விட்டு ஒரு 45 டிகிரி சாய்வாக ரோடை பார்க்க உட்கார்ந்திருப்பார். ஆட்டோவின் பின் புறம் சிவப்பு/மஞ்சள் வண்ணத்தில் ஆங்கில எக்ஸ் குறி அல்லது ஒன்னாம் நம்பர் மிக பெரியதாக இரண்டு அல்லது மூன்று முறை போட்டிருக்கும் . இதுதான் அச்சமற்ற ஆட்டோவின் அடையாளங்கள். இவர்கள் லெப்ட்ல இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கையை காட்டி, நேராக நகைச்சுவை நடிகர் விவேக் சொன்னது போல் செல்வார்கள்.

2. தக்ஷிணாமூர்த்தி ஆட்டோ
கைலி அல்லது லுங்கி உடுத்தியிருப்பார். எப்போதும் கண்கள் வெளியே எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு காலை மடக்கி சிவன் கோவிலில் கோஷ்ட தக்ஷிணாமூர்த்தி அமர்ந்த திருக்கோலத்தில் இருப்பார். பின்புறம் ஒபாமாவே வருவதாக ஓசை வந்தாலும் தன்னை வருத்திக் கொள்ளமாட்டார். ஆட்டோ இருபது கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அது அதிசயம். அவர் மட்டும் சாலை  வரி செலுத்துபவர் போல நடு சாலையில் செல்வார்.

3. சவாரி ஆட்டோ
ரோடில் மையமாக இருபது கி.மீயில் இம்மியளவும் வலது இடது திரும்பாமல் ரசமட்டம் பிடித்தாற்போல் ஒரே நேர்கோட்டில் சென்றால் அது சவாரி ஆட்டோ.

4. சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ
சாலையின் இடது ஓரத்தில் இருந்து பத்து அடி உள்ளே மித வேகத்துடன் சென்று கொண்டிரு, மனைவி பிள்ளைகளுடன் அவதியுடன் நிற்கும் கணவர்களை பார்த்தோ, யாரையோ எதிர் நோக்கும் உதட்டு சாய புஷ்டியான இளம் பெண்ணிடமோ, தேமேன்னு ஓரமாக நிற்கும் தேசல் பாட்டியையோ சாலையின் இருமருங்கிலும் பார்த்தால் சடாரென்று எந்த பக்கமாக இருந்தாலும் திருப்பி தலையை வெளியே நீட்டி "எங்க போணும்?" என்றால் அது சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ.

5. "டர்" ஆட்டோ
ஒரு தகர டப்பாவில் கயிறு கட்டி, தார் சாலையில் கட்டி வேகமாக இழுத்தால் வரும் சப்தம் கேட்டால் அது ஒரு நவீன யுக சப்த ஆட்டோ. ஊர் திருவிழாக்களில் மரணக்கிணறு என்று ஒரு ஐட்டம் உண்டு. கிணறு போன்ற ஒரு பள்ளத்தில் ஒரு மோட்டார்பைக்கில் காது குடையும் சப்தத்துடன் வேகமாக மேலும் கீழும் ஒட்டுவர். அதுபோன்று "டர்ர்ர்ர்ர்ர்ர்ர்................................." என்ற ஒலியுடன் ஒளி என சென்று கேட்டவர்களின் காதை கே. காதாக மாற்றும் ஒலி மாசு ஆட்டோ.

6. "ஷேர்" ஆட்டோ
ஆண் பெண், மணமானவர் ஆகாதவர், கிழவன் கிழவி, குளித்தவர் குளிக்காதவர், உடலுக்கு/சட்டைக்கு நாற்ற மருந்து அடித்தவர் அடிக்காதவர், ஒல்லி பெண் குண்டு பையன், ஒல்லி பையன் குண்டு பெண்மணி, மொபைலில் சதா சிரித்து பேசிக்கொண்டே பயணம் செய்பவர், வெளியே வேடிக்கை பார்த்து உள்ளே பக்கத்து பெண்ணின் பேச்சை கேட்பவர்கள், நடுத்தர வயது, முடி உள்ளவர் அல்லாதவர், மஞ்சள் துணிப்பை வைத்திருப்பவர் ஆபீஸ் பேக் சுமப்பவர், இளவயது ஜோடி, சில்லரை வைத்திருப்பவர் இல்லாதவர், அரசுப் பணி தனியார் பணி சொந்த 'தொழில்' செய்பவர், சேலை அணிந்திருப்பவர் சுடிதார் போட்டவர், கண்ணாடி அணிந்தவர் அணியாதவர், ஹிந்தி பேசுபவர் 'தமிலில்' பேசுபவர்கள் என பால், மொழி, இன, மத வேறுபாடுகளின்றி ஒரே சவாரியில் அரை பஸ் கூட்டத்தை ஏற்றி பயணத்திற்கு பத்து ரூபாய்க்கு வருவது இந்த பங்குச்சந்தை(ஷேர்) ஆட்டோ.

இந்த பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட நல்ல உள்ளம் படைத்த ஆட்டோகாரர்கள் இப்பட்டியலுக்காக என்னை மன்னிப்பார்களாக!


பின் குறிப்பு: இதை எழுதும் போது வெகு தொலைவிலிருந்து எஸ்.பி.பி "நான் ஆட்டோக்காரன்.... ஆட்டோக்காரன்..... நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்"  என்று ரஜினிக்காக பாடிக்கொண்டிருப்பது மெலிதாக காதில் விழுந்தது.

-

Wednesday, November 17, 2010

மன்னார்குடி டேஸ் - மன்னை டாக்கீஸ்

வருஷம்-16 ரிலீஸ் ஆகி தாய்க்குலங்கள் குழந்தை குட்டிகளுடனும் மற்றும் இளவட்ட காதலர்களின் பேராதரவோடும் மெயின் ரோடு வரைக்கும் இருக்க அணைத்துக்கொண்டு வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி பார்க்கும் கூட்டமாக சாந்தி தியேட்டரில் அமோகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு மொத்தம் மூன்று காட்சி. மதியம் ரெண்டு மணிக்கு வெட்டிப்பொழுது போக்குவோர்க்கு மாட்னி, சாயந்திரம் ஆறு மணிக்கு குடும்ப இஸ்திரிகளுக்கு முதல் ஆட்டம், இரவு ஒன்பதரைக்கு எங்களைப் போல தண்ணீ தெளிச்சு விட்ட கேஸ்களுக்கு இரண்டாம் ஆட்டம். அன்றைக்கு ராத்திரியும் ஒரு சினிமா ஆப்பரேட்டரின் கர்ம சிரத்தையுடன் 'ஆந்தை' ராஜா இரண்டாம் ஆட்டம் வ.16 பார்க்க கிளம்பினான். (ஆந்தை பற்றிய குறிப்புகள் வேறு ஒரு பதிவில் பதியப்படும்) "என்னடா டெய்லி இந்தப் படம் பார்க்கிறியே எதுவும் வேண்டுதலா?" என்ற நண்பர்களின் விசாரணைக் கேள்விக்கு அப்போது அவன் கொடுத்த விளக்கம் கேட்டு ரெண்டு பேர் அவனை மிதியடியை கழட்டி எடுத்துக் கொண்டு அடிக்க கிளம்பிவிட்டார்கள். ஒரு அரைமணி கரகாட்டக்காரன் வண்டி தள்ளும் கவுண்டமணி செந்திலாரை நினைத்து நினைத்து அடிப்பது போல் சுற்றி சுற்றி விரட்டினார்கள். என்னவென்று மதிலிலிருந்து அவனை தனியாகத் தள்ளிக் கொண்டு போய் விசாரித்தால் சொன்னான்  "இல்லைடா.. படம் பேர் வருஷம் 16 அதனால பதினாறு தடவை பார்க்கலாம்ன்னு.." என்று இழுத்தானே பார்க்கலாம். "நல்லவேளை உனக்கு நூறாவது நாள் படம் பிடிக்கலை.. அப்படி பிடிச்சுருந்தா உன்னாலையே தியேட்டர் ஓனர் லாபம் பார்த்திருப்பான்.." என்ற ஸ்ரீராமின் கிண்டலுக்கு லாவனியாக "அப்ப ஆயிரத்தில் ஒருவன் பிடிச்சிருந்தா.." என்றான் இன்னொருவன்.


காலையில் பெரும்பாலான மன்னை கொட்டாய்களில் "பக்தி" படம் போடுவார்கள். காலைக் காட்சி என்பது கட்டிளம் காளையர்க்கு என்பது போய் பல்லு போய், வீட்டில் சொல்லு போய் திண்ணையில் எழுந்திருக்காமல் படுத்திருக்கும் காலத்தில் இருப்பவர்கள் கூட வரிசையில் முதல் ஆளாய் நின்று செருப்பு அறுந்துபோக தியேட்டருக்குள் நுழைவார்கள். இவர்களை கண்ணுற்ற ஆப்பரேட்டருக்கே படம் போடுவதற்கு மூட் அவுட் ஆகிவிடும். ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக ஒரு மணியிலிருந்து ஒன்னரை மணி டாக்குமண்டரி படம் போல ஓடும். இப்படத்தின் 'ஆட்ட' நுணுக்கங்கள் தெரிந்த சில விவரமான 'கலா'ரசிகர்கள் மிகச் சரியான தருணத்தில் உள் நுழைந்து வெளியே வந்து விடுவார்கள். யார் கண்ணிலும் படமால் ஓரமாக உட்கார்ந்து கன்னம் சிவக்கும் வெட்கத்துடன் படம் பார்ப்பார்கள். சாந்தி திரையரங்கில் ஆங்கிலம், லக்ஷ்மி தியேட்டரில் மலையாளம் என்று மொழிவாரியாக பிரித்து இப்படங்கள் வெளியிடப்படும். ஆங்கிலப் பிரியர்களுக்கு சாந்தியும் சேரநாட்டில் நாட்டமுடையவர்களுக்கு லக்ஷ்மியும் தாகம் தணிக்கும் ஆதர்ஷ கொட்டாய்கள். முதல் நாள் முதல் ஷோ கடைசி வரிசையில் யாருக்கும் தெரியாமல் பார்ப்போரும் உண்டு. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பிரமீளா, அபிலாஷா (அந்த காலத்தில்) போன்ற முன்னணிகளின் சிறப்பு திரைப்படங்கள் பிரத்யேக காலை காட்சியாக ரிலீஸ் செய்யப்படும்.

night time
தியேட்டருக்கு செல்லும் பாதையின் இரவு நேரத் தோற்றம்?


காளவாக்கரை போகும் வழியில் யானை விழுந்தான் குளத்தின் கரையில் இருப்பது விஜயா தியேட்டர். இதிலும் 'அந்த' சமாச்சார படங்கள் திரையிடப்படும். ரஜினியின் மனிதன் திரைப்படம் பார்த்தது ஒரு வரலாறு. எப்போதும் இரவுக்காட்சிகள் தான் எங்களுக்கு இஷ்டம். சைக்கிளில் டபுள்ஸ் திரிபில்ஸ் என்று இரண்டு மூன்று பேராக ஜோடி சேர்ந்து தியேட்டரில் போய் களமிறங்குவோம். ஒரு படையாக கிளம்பி அதே போல் விஜயா சென்றடைந்தோம். ஸ்ரீராம் வாமன ரூபம். ஆனால் அவனுடைய வாய் விஸ்வரூபம். மிக நன்றாக நகைச்சுவையோடு கோர்த்து கோர்த்து பேசுவான். ஐந்து ரூபாய் டிக்கெட்தான் கிடைத்தது. நம்பரில்லா சீட்டுகள். நபரில்லாமல் இருந்தால் உட்கார்ந்துகொள்ளலாம். படம் ஆரம்பிப்பது வரையில் சீட்டை கையில் கெட்டியாக பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கவேண்டும். அபான வாயு வெளியேற்றக் கூட லேசாக ப்ருஷ்ட்டத்தை தூக்க முடியாது. சீட்டைப் பிடித்து விடுவார்கள். படம் ஓட ஆரம்பித்துவிட்டால் அப்புறம் எல்லாம் சுபம். இரண்டாம் ஆட்டத்திற்கு எப்போதுமே சொற்ப மகளிர் கூட்டம்தான் கூடும். பெண்கள் ஆண்கள் தனித்தும் கலந்தும் உட்காருவதற்கு ஏதுவாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

தியேட்டரின் உச்சாணி கொம்பில் கட்டியிருந்த "விஜயா" கூம்பு ஸ்பீக்கர் "மாங்குயிலே பூங்குயிலே" பாடுவதை நிறுத்தினால் படம் ஓட ஆரம்பித்துவிட்டது என்று உலகத்திற்கு உணர்த்துவார்கள். சைக்கிள்களை கீற்றுக்கொட்டகை ஷெட்டில் விட்டு ஐம்பது பைசா டோக்கென்களை வாங்கிக் கொண்டோம். அரையடிக்கு அரையடி இருக்கும் மரணத்தின் டிக்கெட் நுழைவாயிலுக்கு ஸ்ரீராமனை அனுப்பினோம். குள்ளமாக இருப்பதால் பெரிய அண்ணாக்களின் இருதொடைகளுக்குள் நுழைந்து வெளியே வந்து வாங்கிவிடுவான். நம் ஜனம் ஒரே சமயத்தில் நான்கு கை கவுண்ட்டருக்குள் விட்டு டிக்கெட் கொடுப்பவரை திணறடிக்கும். எந்தக் கை, எந்தக் குரல், எவ்வளவு டிக்கெட் என்று நினைவு வைத்துக்கொண்டு வெண்டிங் மிஷின் போல டிக்கெட் கொடுக்க வேண்டும். ஏதோ சொர்க்கத்திர்க்கு டிக்கெட் வாங்கியவன் போல வெற்றிப் புன்னகையில் கவுண்ட்டரை விட்டு வெளியே வந்தான் ஸ்ரீராம். ஒரு நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓடி இருக்கைகளை கப்பென்று பிடித்துக்கொண்டோம். ஆயிரம் அடிக்கு மேலே அறுந்த நூலேனியைப் பற்றிக் கொண்டு தொங்குவது போல வைராக்கியத்துடன் கால்களை பரப்பியும், கால் மேல் கால் போட்டுக்கொண்டும் ஆக்கிரமித்தோம். படம் ஆரம்பிக்க ஐந்து நிமிடம் முன் குளிர்காலம் உடம்பை பாடாய் படுத்தியதால் இயற்க்கை அழைப்பிற்கு ஸ்ரீராம் வெளியே சென்றான்.

உட்கார்ந்த ரோவின் கடைசி சீட் அவனுது. நாங்கள் ஒருவருக்கொருவர் உலகம் மறந்து அரட்டைக் கச்சேரி செய்துகொண்டிருந்தோம். அப்போது ஒருவர் பூலோகம் மேலோகம் தெரியாமல் வாயை திறந்தால் வழியும் வரை சரக்கு அடித்துவிட்டு ஸ்ரீராம் இருக்கையில் வந்து பொத்தென்று சரிந்துவிட்டார். திரையில் படம் ஆரம்பிக்கும் முன் இங்கே கிளைமாக்ஸ் ஆரம்பித்தது. ஸ்ரீராம் வந்தால் இந்தாளை எப்படி எழுப்புவது என்ற சிக்கலான கேள்வி. அவன் போன வேலையை திருப்தியாக முடித்துக்கொண்டு வந்து பார்த்தால் அங்கே ஒரு மன்னை நகரின் மகா குடி மகன். ஸ்ரீராமும் நாங்களும் எடுத்து சொன்னோம், பணிந்து சொன்னோம், கெஞ்சி கேட்டோம் ம்.ஹூம் பலனில்லை. "இவர் என்ன கூறுகிறார் என்றால்..." என்று ஹிந்தியில் பேசிய விவசாயிக்கு தமிழ் குரலில் பேசிய டாக்குமெண்டரி திரையில் ஓட ஆரம்பித்துவிட்டது. இன்னும் இரண்டு நிமிடங்களில் படம் தான். "டேய்.. எழுந்துருடா..." என்று ஒரு சிம்ம கர்ஜனையுடன் ஸ்ரீராம் கூச்சலிட ஆரம்பித்தான். அவன் போட்ட காட்டுக் கத்தலில் ஸ்மரணை வந்த அந்த மகானுபாவன் தியேட்டர் நாற அவன் வாயைத் திறந்து "எழ்ன்ன சொழ்ல நீ யாழ்ர்டா.." என்று கேட்க அதற்க்கு ஸ்ரீராம் "மனிதன்..." என்று ரஜினி ஸ்டைலில் ரஜினி ராகத்தில் பாடி சொன்னான். ஸ்ரீராம் ஜாதக விசேஷம் சொன்ன வாய் மூடும் முன் பொளேர்ன்னு ஒரு அறை அவன் கன்னத்தில் விழுந்தது. உடனே எங்கள் படை எழுந்தது. டூப் இல்லாமல் ஒரு சண்டைக் காட்சி அங்கே ஆரம்பமானது. தியேட்டர் மனேஜர் பஞ்சாயத்துக்கு வந்து பார்த்தபோது என்னை உத்துப் பார்த்து "xxxxx பையனா நீ.." என்று என் கை குலுக்கி குசலம் விசாரித்ததும் அடித்தவனுக்கு போதை தெளிந்தது. பிடரியில் ரெண்டு தட்டு தட்டி வேறு இடத்தில் கொண்டுபோய் உட்காரவைத்தார். படம் முடியும் வரை திரையை விட அதிக நேரம் அந்த குடிகாரனைத் தான் பார்த்தான் ஸ்ரீராம். சினிமா பார்க்கவும் ப்ராப்தி வேணுமோன்னோ.

பஸ்ஸ்டாண்டை ஒட்டி இருக்கும் தியேட்டர் செண்பகா டாக்கீஸ். பச்சை கலர் இரும்பு பலகையில் வெள்ளையில் எழுதியிருக்கும். இப்போது அந்த தியேட்டர் உயிரோடில்லை என்று நினைக்கிறேன். அங்கு தரை டிக்கெட் உண்டு. தரை டிக்கெட்டின் இரண்டு பக்கங்களிலும் மூங்கிலால் துளி போன்று சட்டம் அடித்து சிகப்பு கலர் இரும்பு வாளிகளில் "தீ" என்று எழுதி ஆற்று மணல் நிரப்பி வைத்திருப்பார்கள். உயரம் குறைவானவர்கள் மணலை சிறுகுன்றாக குவித்து அதன் மேல் அமர்ந்து சினிமா பார்ப்பார்கள். பக்கத்து கிராமங்களில் இருந்து வந்தவர்கள் பேருந்தின் ஹாரன் சத்தம் கேட்டு அவர்கள் பஸ் கிளம்பினால் கிளைமாக்ஸ் கூட பார்க்காமல் பின்னால் தட்டிக்கொண்டு போய்விடுவர். இந்த திருத் தியேட்டரில் எப்போதும் நல்ல படங்களையே வெளியிடுவர். கண்டிப்பாக கெட்ட காரிய படங்கள் எதுவும் திரையிடப்பட மாட்டா. இதில் நான் பார்த்த திருப் படம் "சம்பூர்ண ராமாயணம்".

இப்படி சாந்தி, லக்ஷ்மி, விஜயா, செண்பகா என்று பொம்பளை ராஜ்ஜியமாக இருந்த தியேட்டேர் கும்பலுக்கு போட்டியாக ஆம்பளை சிங்கமாக வந்த கொட்டகை தான் சாமி. சாமி தியேட்டரிலிருந்து நேரே போய் இடது கை பக்கம் பஸ் ஸ்டாண்ட் போவதற்கு திரும்பினால் வலதுகைப் பக்கத்தில் ஐந்தாவதாக இருப்பது சாமி. வந்த புதிதில் சக்கை போடு போட்டது.  நல்ல வசூல். எல்லாம் புதுப் படங்கள். சாமியில் பார்க்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் சினிமாத் தவம் இருந்தவர்களும் உண்டு. சாமி தியேட்டர் இரண்டாம் மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகள் வாங்கினால் கட்டாயம் ஒன்றாம் சங்கதியின் நாற்றம் மூக்கை துளைக்கும். இடைவேளையின் போது அந்த துர்கந்தத்தோடு கோன் ஐஸ் க்ரீம் வாங்கி சாபிடுவது அலாதியான ஒன்று. அதையெல்லாம் அனுபவித்தால் தான் தெரியும். கல்யாணம் ஆன புதிதில் பட்டணத்து பெண்டாட்டியை அழைத்துக்கொண்டு முதல்வன் படம் சாமி தியேட்டரில் தான் பார்த்தேன். முதல் வகுப்பு டிக்கெட் என்று பெருமையாக சொல்லிக்கொண்டே காதலர்களின் வரிசை என்று பெருமையாக அழைக்கப்படும், மேலிருந்து முதல் வரிசைக் கோடியில் காலரை தூக்கி விட்டு பெருமையாக உட்காரவைத்தேன். இரண்டே நிமிடங்களில் கொஞ்சம் நெளிந்தவள் சீட்டுக்கு அடியில் இருந்து கருப்பாக பெரிய உடைக்காத உளுத்தம் பருப்பு சைசுக்கு ஒன்றை எடுத்து என் கையில் கொடுத்தாள். உயிருள்ள மூட்டைப் பூச்சி. அடுத்த முறை கையை துழாவி இரண்டு பிரி சனல் எடுத்து திரித்து என் கையில் திணித்து "குஷன் சீட்டு..." என்று சொல்லி சிரித்தாள்.

இரவுக்காலத்தின் இந்த அற்புதத்தை படம் பிடித்த பெருமைக்குரியவர் இங்கே http://picasaweb.google.com/abhishek.voip

-

Tuesday, November 16, 2010

ரஸவாதம்

pebble beachபழங்காலத்தில் ஒரு ஊரின் மிகப் பெரிய நூலகம் மொத்தமாக தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த அத்தனை அறிய புத்தகங்களும் பற்றி எரிந்து சாம்பலானது. ஒரே ஒரு புத்தகம் மட்டும் காப்பாற்றப்பட்டது. அது ஒன்றும் சுவாரஸ்யம் இல்லாத புத்தகம். கேட்பாரற்று அந்த சாம்பலில் கலந்து ஒன்றாக கிடந்தது. ஏதோ கொஞ்சம் எழுத்துக்கூட்டி படிக்கும் திறமை மட்டும் உள்ள ஒரு சாமானியன் அந்த புத்தகத்தை கையில் இருந்த சில்லறையை கொடுத்து வாங்கிச் சென்றான்.

அதைக் கொண்டுபோய் வீட்டில் உட்கார்ந்து பொறுமையாய் ஒவ்வொரு பக்கமாக திருப்பி தனக்கு தெரிந்த வரையில் படித்துப் பார்த்தான். சில பக்கங்கள் புரட்டிய பிறகு ஒரு சின்ன சிட்டில் "ரஸவாதம்" என்று எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்தது. ஆர்வம் தாங்காமல் அந்த சின்ன பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பித்தான். அதில் அந்த ஊரின் கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல்லின் அதிசயத்தக்க ஆற்றல் பற்றி குறிப்பிட்டிருந்தது. அந்த கல்லின் மகத்துவம் என்னவென்றால் அந்த குறிப்பிட்ட கூழாங்கல்லை கொண்டு எந்த உலோகத்தை தொட்டாலும் அது ஸ்வர்ணம் ஆகிவிடும். அந்த கூழாங்கல்லை கையில் எடுத்தால் கொஞ்சம் மிதமான சூட்டோடு வெதுவெதுப்பாக இருக்கும் என்பது தான் அந்தக் குறிப்பின் அதிமுக்கியமான கவனிக்கவேண்டிய விஷயம்.

அப்படியே புளகாங்கிதம் அடைந்து தன்னிடம் உள்ள சில தட்டுமுட்டு சாமான்களையும் இன்ன பிற சொத்துக்களையும் விற்றுவிட்டு கையோடு வேலைக்கு ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு கடலோரத்தில் ஒரு பர்ணசாலை அமைத்துக்கொண்டான். தினமும் காலையில் இருந்து மாலை கதிரவன் மறையும் நேரம் வரை கூழாங்கல்லை கையில் எடுத்துப் பார்ப்பான். ஜில்லென்று இருந்தால் எடுத்து கடலில் வீசி எறிந்துவிடுவான். மீண்டும் மற்றொன்றை எடுப்பான். ஜில்லென்று இருந்தால் சமுத்திரத்தில் வீசிவிடுவான். இப்படியே நாட்கள் வாரங்களானது வாரங்கள் மாதங்களானது மாதங்கள் கரைந்து ஒரு வருடம் நெருங்கியது.  காலை முதல் மாலை வரை பொறுக்கி எடுத்து கடலில் தூக்கி எறிவது என்பது அவனது அன்றாட வாடிக்கையானது. ஒரு நாள் கையில் எடுத்த கூழாங்கல் வெதுவெதுப்பாக இருந்தது. ரஸவாதக் கல்லின் அணைத்து குணங்களையும் அது பெற்றிருந்தது. மாதக்கணக்காக கூழாங்கல்லை கையில் எடுத்தால் கடலில் வீசி எரிவதையே தொழிலாக கொண்டிருந்தவன், இதையும் எடுத்து வீசி எறிந்துவிட்டான்.

இதனால் விளங்கும் நீதி என்னான்னா.. (இது ஒரு நீதிக்கதை. இதை முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் படிச்சிருக்க மாட்டோம்!! சை..)... வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு என்பது ஒரு முறை தான் வந்து நம்ம வீட்டு கதவை தட்டும். தட்டிய வாய்ப்பை நழுவ விடாமல் கதவைத் திறந்து இறுகப் பற்றிக் கொள்பவனே புத்திசாலி.

இந்த நீதிக்கதை எனக்கு மின்னஞ்சல் மூலமாக ஒரு உருப்படியான நண்பர் அனுப்பியது.

-

பட உதவி: http://picasaweb.google.com/superior.north.region

Monday, November 15, 2010

ஸம்ஸார ஸாகரம்

இது திண்ணைக் கச்சேரியின் மூன்றாவது எடிஷன். இணைய நண்பர்களின் ஏற்றமிகு பார்வைக்கு...

********** பத்து பேர் **********
"பணக்காரன் பின்னாடி பத்து பேர் பைத்தாரன் பின்னாடி பத்து பேர்" அப்படின்னு நான் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் என் பாட்டி என்னை தோளில் தட்டி பாராட்டியதாக ஞாபகம். இப்போது என்னுடைய ப்ளாக்ஐ தொடர்ந்து நூறு பேர். 10x10=100. பாட்டி சொன்ன சொல்லில் நிச்சயம் நான் முதலாவது இல்லை. இரண்டாவது என்று நிரூபணம் செய்வதற்கு பத்து பத்தாக பத்து முறை செய்துவிட்டார்கள். அனைவருக்கும் அனேக கோடி நன்றி.


மேலே இருப்பது என்னுடைய நூறு. சொரூபமாகவும் அரூபமாகவும் என்னை பின்தொடர்பவர்களுக்கு நன்றி.

********* சாக்லேட் வாங்கி கொடுத்தார்களா? ********
childrens day
மேலே சொடுக்கி பெரிதாய் பார்க்கவும்
சாச்சா நேரு போல சட்டையில் ரோஜா குத்தி ஊரில் இருக்கும் மழலைகளை கொஞ்சி மகிழாவிட்டாலும் இந்த குழந்தைகள் தினத்தில் நான் பெற்ற செல்வங்களுக்கு மட்டுமாவது சாக்லேட் வாங்கி கொடுத்து குஷிப் படுத்தினேன். "எப்ப பார்த்தாலும் இத வாங்கி கொடுத்து கெடுங்க.." என்று மக்களை பெற்ற மகராசியிடம் செல்ல(?) குட்டுப்பட்டேன். குழந்தைகள் தினத்தில் நம் அன்பை குழந்தைகளுக்கு புரியும் படி வேறு எப்படி காட்டுவது? யோசித்தேன். பதில் கிடைக்கவில்லை. இப்படி ஸ்வீட் எடு கொண்டாடு செய்து விட்டு காலார நடந்து வரும்போது சாயந்திரம் கடைத்தெருவில் காய்கறி விற்கும் அம்மாவுக்கு ஒத்தாசையாக ஒரு கிலோ எடைக்கல்லை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். நான்காவது ஐந்தாவது படிப்பான். அவனுக்கு இன்றைக்கு குழந்தைகள் தினம் என்று தெரியுமா? யாராவது அவனுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்தார்களா? தெரியவில்லை.

**************  ஸம்ஸார ஸாகரம்***********
ரொம்ப நாள் கழித்து கையிலும் இடுப்பிலும் தூக்கிக் கொண்டு குடும்ப பாரம் மொத்தத்தையும் சுமந்து வந்த என் நண்பன் ஒருவனை வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஈஷிக்கொண்டு போகும் பிசியான கடைத்தெரு சந்திப்பில் பார்த்தேன். "டேய்... எப்படி இருக்கே.." என்று கேட்டதற்கு "பார்த்தா தெரியலை.. ரொம்ப நல்லா இருக்கேன்" என்றான். அந்த "ரொம்ப" அவன் அழுத்தியதில் நொறுங்கி போயிருக்கும். காலேஜ் படிக்கும் போது ரெண்டு புஸ்த்தகமே ஜாஸ்தி என்று தூக்கிக் கொண்டு வரமாட்டான். இடுப்பிலும் கையிலும் பார்க்கும் போது சடாரென்று அது நினைவுக்கு வந்துபோனது. "அப்புறம்... எப்படி போயிகிட்டு இருக்கு வேலைலாம்" என்ற சம்ப்ரதாய கேள்விக்கு "வீட்ல ஆபிஸ்ல ரெண்டுத்துலயும் நான் தான் சிட்டி" என்றான்! சுட்டித்தனமாக பேசியதில் சம்சாரத்தின் ஒரு அனல் பார்வைக்கு அடங்கிப்போனான். "அப்புறம்.. உனக்கு எப்படி" என்று சாதுர்யமாக பேச்சை திசை திருப்பினான். அமைதியான கொஞ்ச நேர அளவலாவலுக்கு பிறகு விடை பெற்றான். ஒரு மணி கழித்து வீட்டில் புத்தக அலமாரியில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து  "அண்ணா" உரை எழுதிய  "உபநிஷத்ஸாரம்" புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டும் போது கிடைத்த ஒரு உரையின் சாரம் கீழே..
அனவரதமும் ஏதோ ஒன்றை மற்றொன்று போல் எண்ணி மயங்குதலும், பசி, தாகம், சோகம், மோஹம், மூப்பு, மரணம் என்ற இவை எல்லா பிராணிகள் இடத்தும் பற்றி கடலலைகள் போல் இரவு பகல் பாராது மாறி மாறி வந்து அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவே  ஸம்ஸாரம் எனப்படுவது. 
மேற்கண்ட சம்ஸார ஸாகர  மேட்டர் இருப்பது பிருஹதாரண்யக உபநிஷத்து. இப்போது ஸம்ஸாரம் என்றால் என்ன என்று புரிந்ததா? கடலலை அடிப்பது போலாம்.

********** பழைய பேப்பர் *********
ஞாயிறு மதியம் ஒரு அரை மணி தூங்கி எழுந்ததும் "பழைய பேப்பர்லாம் கொண்டு போய் போடணும்.. அவன்ட சொல்லிட்டு வாங்க.." என்று பின்னால் தார்குச்சி போட்டார்கள். சிரமத்துடன் எழுந்து மூஞ்சி துடைத்துக்கொண்டு போய் ஒரு தடவை அவன் கடைக்கு போய் அழைப்பு வைத்துவிட்டு வந்தேன். "பொம்பளையா போன ஆம்பளைக்கும்  வேலை" அப்படின்னு ஷண்முகி கமல் படத்துல பாடினாலும் ஆம்பளையா இருக்கும் ஆம்பளைக்கும் வேலை ஜாஸ்த்திதான். ஒரு மணி நேரம் கையை பல விதங்களில் ஆட்டி, தலையை சுளுக்கு வரும் வரை அசைத்து, வாய் சுழித்து பேசும் தொகுப்பாளினிகளின் பேச்சுக்கிடையில் சயனித்துக் கொண்டே பாட்டு கேட்டேன். மீண்டும் "இன்னும் வரலையே...எப்ப வருவான்..." என்று இன்னும் அழுத்தி தார்குச்சி போடப்பட்டவுடன் "ஐயா தயவு செய்து கொஞ்சம் வாருங்கள்.." என்று சகல மரியாதையுடன் அழைத்து வந்தேன். மேளம் நாதஸ்வரம் வைக்காததுதான் பாக்கி. பின்னாலேயே போய் எடை பார்க்கும் சமயத்தில் பழைய புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த ஷெல்ஃப் கண்ணை ஈர்த்தது. அங்கே க.நா.சுவும் கு.பா.ராவும் உட்கார்ந்திருந்தார்கள். எஸ்.ராவின் பழைய பேப்பர்காரரின் சிநேகிதம் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லாம் ஏன் இப்படி பொக்கிஷமான புத்தகங்களை வாங்குகிறார்கள்? கற்பூரமும் கழுதையும் நியாபகத்திற்கு வந்தது.

******** எழுத்துக் கவிதை ********
இணைய தைரியசாலிகள் பட்டியலில் ஏற்க்கனவே இருக்கும் கக்கு-மாணிக்கம், கே.ஆர்.பி செந்தில் போன்றோருடன் சமீபத்திய சேர்க்கை R.Gopi. தன்னுடைய எடக்கு மடக்குவில் உ.பி களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அண்ணனை எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லும் பொருட்டு பின்னோட்டம் எழுதப் போய் அது ஒரு கவிதை மாதிரியில் முடிந்தது. அவரது கவிதை அங்கே. அந்தப் பின்னூட்டக் கவிதை மாதிரி இங்கே.

அடி உதை என்ற இரண்டெழுத்துக்கும்
குத்து வெட்டு என்ற மூன்று எழுத்திருக்கும்
சாக்கடை என்ற நான்கெழுத்திர்க்கும்
அரசியல் என்ற ஐந்தெழுத்திர்க்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால்
ஜாக்கிரதை என்ற ஐந்தெழுத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்

 "ஆ" என்று வாய் பிளக்க வைத்த ஊழல் தொடர்பாக ராஜினாமா செய்திருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். சமீப காலத்தில் தேர்தல் நெருங்குவதால் அரசியலில் கொள்ளை அடித்தவர்களை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். ஒரு கேனத்தனமான கேள்வி. வேண்டியவரை முடிந்தவரை பங்கு போட்டு சுருட்டியபிறகு இப்படி ராஜினாமா செய்யச் சொல்கிறார்களே, இவர்கள் கொள்ளை அடித்ததையும் கொண்டு வந்து திரும்ப கொடுக்கச் சொல்வார்களா?

******* கருப்பு வெள்ளையில் சுசீலா ********
சுசீலா அம்மாவுக்கு பிறந்தநாள் சொன்ன பதிவில் கருப்பு வெள்ளை சேர்க்கவில்லை என்று பல 'பெரிய' மனிதர்களுக்கு கோபம். ஆகையால் அவர்கள் ஆசையை பூர்த்தி செய்யும் பொருட்டு... இங்கே...


அப்பாதுரை சார் பதிவில் குச்சி தட்டி ஒருவர் ஆடும் நடனம் போட்டிருந்தார். இங்கே ஷு கால் தட்டி கம்பு சுழற்றி(?!!) புரட்சித் தலைவர் கன்னடத்து பைங்கிளியோடு ஆடும். அன்று வந்ததும் அதே நிலா...


இப்போது திருப்திதானே?

கேள்விக் கணைகள் என்று இல்லாமல் ஒவ்வொரு உபதலைப்பின் கீழேயும் சில கேள்விகள். விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் பதிலளிக்கலாம். சிறந்த பதிலுக்கு பரிசெல்லாம் கிடையாது. நன்றி.

குழந்தைகள் பட உதவி: http://www.amitbhawani.com/
-

Saturday, November 13, 2010

ஒரு நாள் முதல்வரின் சவால்

mudhalvan petti


முதல்வனில் ஒரு நாள் முதல்வராக இருக்க சம்மதமா என்று அர்ஜுனிடம்  கை சொடுக்கி சவால் விடும் ரகுவரன் பேட்டி நமக்கெல்லாம் தெரிந்ததே. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட சில பெருமக்கள் மிமிக்கிரி செய்து இந்த கீழ்கண்ட வீடியோ தயாரித்திருக்கிறார்கள். ரகுவரன் சவால் விடும் கட்டங்களில் அவரின் வாயசைப்பும் இவர்களின் வசனமும் எவ்வளவு அழகாக ஒத்துப்போகிறது. நிச்சயம் பாராட்டத்தக்க முயற்சி. என் பேச்சை குறைத்துக் கொண்டு ஓவர் டு வீடியோ. இந்த சனி இரவிற்க்காக...



ஃபிகர் மடித்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் பேயடித்து சாவார்

அப்படின்னு வள்ளுவரே தன்னுடைய காமத்துப்பாலின் ஃபிகர் மடிக்கும் அதிகாரத்தில் சொல்லியிருக்காராம். மேலும் நூல் விடுதல், கடலை போடுதல் போன்ற செயற்கரிய செயல்கள் பற்றிய விசேஷ குறிப்புகளும் நிறைய உள்ளதாக தகவல். நேற்று என் கனவில் தாடியை நீவி விட்டுக்கொன்டே வந்து ப்ளாக் உலக மக்களிடம் எடுத்தியம்ப சொல்லியிருக்கிறார். விரைவில் உங்கள் தீ.வி.பியில் ஃபிகர் குறள். படிக்க தவறாதீர்கள்!

-

இன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

p suseelaஇன்று எழுபத்தாறாவது பிறந்தநாள் கொண்டாடும் பின்னணி பாடகி "இன்னிசை அரசி" பி. சுசீலா அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சுசீலா கானம் பாடி எனக்கு பிடித்த சில டூயட் பாடல்களை இங்கே பதிவிடுகிறேன். ரஜினி அப்புறம் ஒரு விஜயகாந்த் அப்புறம் ஒரு ராஜேஷ் அப்புறம் ஒரு பிரதாப் போத்தன் திரும்பவும் ரெண்டு ரஜினி அப்புறம் ஒரு சந்திரசேகர் நடித்த மீடியம் ஹிட் பாடல்கள். பழைய கருப்பு வெள்ளை படப் பாடல்களை பதிவிட்டால் ஆர்.வி.எஸ். ஒரு வயோதிகன் என்று எல்லோரும் எண்ணக் கூடும் என்பதால் என்பது தொன்னூறுகளில் எஸ்.பி.பி மற்றும் ஜேசுதாஸ் உடன் ஜோடி சேர்ந்து பாடிய காதல் ரசம் ததும்பும் பாடல்களை இங்கே தருகிறேன். இது ஒரு முடிக்க இயலா பட்டியல். இருந்தாலும் இருகையையும் இருக்க கட்டி முடித்துக்கொண்டேன்.



விடிய விடிய சொல்லித் தருவேன்..

மாலையில் மல்லிகை.. அந்தியில் பஞ்சனை.. ஊரெல்லாம் பார்க்குதே... உன்னிடம் கேட்கிறேன்... என்று சரணத்தில் ஆரம்பிக்கும் சுசீலா ஒரு மந்திரம் போட்டது போல பாட்டிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். எஸ்.பி.பி யையும் ராஜாவைப் பற்றியும் சொல்லவேண்டிய தேவை இல்லை. ஒரு காதல் பாடலுக்கு எங்கு குழைய வேண்டுமோ அங்கு குழைந்து சிணுங்கி எல்லாம் செய்வார் எஸ்.பி.பி. இப்பாடலிலும்...




முத்து மணி மாலை...


ஒரு வயலினில் ஆரம்பித்து இழு இழு என்று இழுத்து குழலில் முடித்து பல்லவி ஆரம்பிக்கும் இளையராஜாவுக்கு என்ன பரிசு கொடுப்பது. யாரோடும் ஜோடி சேரும் எஸ்.பி.பி. இந்தப் பாடலில் பி.சுசிலாவின் தேன் குரலுக்கு ஜோடியாய்...



ஆவாரம் பூவு... ஆறேழு நாளா...

இந்தப் பாடலில் முதலில் வரும் பி. சுசீலாவின் ஹம்மிங்கும் அடுத்து வரும் ஆலாபனையும் அப்படியே  தன்னாலேயே நம் காதை இழுத்துவிடும். அந்தப் பெரிய பொட்டு வச்சுகிட்டு சரிதா மரத்தை பிடிச்சி பிடிச்சி ஏன் ஆடறாங்க தெரியுமா? ராஜேஷை பிடிச்சி ஆடறதும் அந்த மரத்தை பிடிச்சி ஆடறதும் ஒண்ணுன்னு டைரக்டர் சொன்னாராம். சும்மா ஜோக்குக்கு.. பின்னால எஸ்.பி.பி வருவாரு. அதுக்கப்புறம் பாட்டு களை கட்டும்.  அம்சமான பாடு.



பூவண்ணம் போல நெஞ்சம்...

இந்த பசி ஷோபாவை ஏனோ ரொம்ப பிடிக்கும். மூக்கை ஒரு மாதிரியா வச்சுகிட்டு முகத்தை சுருக்கி சிரிப்பாங்க. ரொம்ப நல்லா இருக்கும். இவங்களும் சரிதாவை சொன்ன மாதிரி பெரிய பொட்டு கேஸ். பளிச்சுன்னு இருக்கும் முகம். பாவம் அல்ப ஆயுசுல போய்ட்டாங்க. நிழல்ல ஷோபாவை சிரிக்க  விட்டு எடுத்துட்டு ஒரு வாய்க்காலுக்கு அந்தப் பக்கம் தலைப்ப ஒத்தைல போட்டுக்கிட்டு ஜோடியை விட்டுட்டு ஒத்தைல சிரிச்சுகிட்டே ஓடி வரும்போது பின்னால பி.சுசீலா குரல்.. அடடா.. அருமை..



பேசக்கூடாது.... (தக்குடுக்கு ரொம்ப புடிச்ச பாட்டு... ஏன்னா இதுல சிலுக்கு ஆடறா...)

இது தான் என் மொபைலோட காலர் டுயூன். நிறைய கால் வர்றதால எடுத்ததுடன் இப்படி சொல்லிட்டா சில பேர் மொபைல வச்சிடுவாங்க அப்டீங்கற நப்பாசைல வச்சேன். இப்பதான் கால் நிறைய வருது. எனான்னு கேட்டா பாட்டு நல்லா இருக்காம். பாட்டோட ஆரம்பித்தில பேசக்கூடாதுன்னு எஸ்.பி.பி ஆரம்பிச்சதும் சிலுக்கு ரஜினியை விட்டு சினுங்கிகிட்டே மான் போல துள்ளி ஓடுவாங்க. அப்பப்பா... இதிலும் எஸ்.பி.பி யின் ரகளை அதிகம். இருந்தாலும் பி. சுசீலாவின் காதல் ததும்பும் குரலும் அருமை.



காத்தோடு பூ உரச... பூவ வண்டுரச...

இது ராஜாவின் மணிமகுட பாட்டு. பல்லவி ஆரம்பிக்கும் முன் ஒரு காற்றில் இலை பறந்து கீழே எப்படி விழுமோ அதுபோல ஒரு வேணுகானம் கிளம்பும் பாருங்கள். கொஞ்சம் கேளுங்களேன். அதற்க்கப்புறம் சுசீலாம்மா ஆரம்பிப்பாங்க. தூள். "உன்னோடு நான்.. என்னோடு நீ.. பூவா காத்தா உரச..." டாப்.  தலைவரோட முரட்டுக்காளை படம்.  சூப்பெர்ப். 



ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்....

செகப்பு சட்டை சந்திரசேகர் ஓடி வந்து சிரிச்சதுக்கப்புறம் சுசீலாம்மா ஒரு "தன தன தன்" ஒன்னு குடுப்பாங்க. கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கும். சங்கர் கணேஷ் இசையமைப்பில் வந்த பாட்டு இது. அற்புதமான பாடல்.



இன்னும் நிறைய இருந்தாலும்... இந்த பாடல் தொகுப்பை பி. சுசீலாவின் பிறந்த நாள் பரிசாக உங்களுக்கு அளித்ததில் பெருமை அடைகிறேன். நன்றி.

பின் குறிப்பு: லட்சோபலட்சம் பழைய பி.சுசீலா பாடல்களை தங்களுடைய இளமைக் காலத்தில் கேட்டு அகமகிழ்ந்த அன்பர்கள் பின்னூட்டமாக பகிரலாம்.

பட உதவி: beta.thehindu.com

-

Friday, November 12, 2010

பொதுவாழ்வு

என் ஏழுயிர் நண்பன் "என்ன தருமா? போலாமா டயம் ஆவுது.." என்று மணிக்கட்டில் வாட்சைத் தட்டி வாஞ்சையுடன் அழைத்தான். சௌகார்பேட்டையில் ரெண்டு, சைதாப்பேட்டையில் ரெண்டு, அண்ணா நகரில் ஒன்று, அமிஞ்ஜிக்கரையில் ரெண்டு மொத்தம் ஏழுபேரை எனக்காக போட்டுத் தள்ளியவனை ஏழுயிர் நண்பன் என்று அழைப்பதுதானே சாலச் சிறந்தது. எனக்காக பிறர் உயிர் எடுக்கும் என் உயிர் நண்பன். என்னுடைய இடுக்கண் களைய அவன் எடுத்துக்கொள்ளும் எதிர்நோக்கும் சாகசங்கள் வார்த்தையில் வடிக்கமுடியாது. "போலாம்... எந்த வண்டிய ரெடி பண்ணின...". கேள்விக்கு பதில் அடுத்த செய்கையில் காண்பிப்பான் அவன். "நீ சொல்லு பார்த்தி.. ராஜாதான் வண்டி செலெக்ட் பண்ணனும்.." என்று கஞ்சாப் பல் தெரிய சிரித்தான். "ஸ்கார்பியோல போவமா" என்ற கேள்விக்கு கேனத்தனமா இருக்கே என்பது போல் பார்வை பார்த்தான். "ஏன் வேண்டாமா?" என்று திரும்ப நெற்றி சுருக்கி கேட்டபோது "மூத்திர சந்து மாதிரி இருக்கும் அந்த இடம்.. அங்ககூட ஸ்கார்ப்பியோல போவியளோ..." என்று எகத்தாளமாக கேட்டான். நான் பதில் பேசாமல் மடிப்பு கலையாத மினிஸ்டர் ஒயிட் சட்டையும் ஒரு காந்தியவாதி போல கதர் வேட்டியும் கட்டிக்கொண்டு கைகட்டாத குறையாக மாடியில் இருந்து இறங்குபவனை பின்பற்றி நடந்தேன். கொஞ்சம் காலச் சக்கரத்தில் ஏறி பின்னாடியும் நடந்தேன்.

man
ஊரில் வீட்டில் நடந்த ஒரு கள்ள உறவு களேபரச் சண்டையில் கத்தி எடுத்து "வாலா"ட்டியவனை கதறக் கதற ஒட்ட நறுக்கி காக்காய்க்கு வீசி எறிந்து விட்டு ஓடிவந்தவன் நான். அந்த திருட்டு உறவில் ருசி கண்ட எங்கள் குடும்பத்து பெண் பூனையை என் மாமனே மேலோகத்திர்க்கு அருவாள் டிக்கெட் வாங்கி அனுப்பிவிட்டு ரத்தம் சொட்டும் ஆயுதத்துடன் போலீசில் சரண்டர் ஆகி எனக்கு தியாகியும் ஆனான். அவன் குருதி சொட்ட அருவாளுடன் நடந்து போனது வாய்க்கால்கரை அய்யனார் போலவும் அந்தக் ரத்தக்கறை வீதியெங்கும் ஒரு மாதம் வரைக்கும் மண்ணோடு கலந்து செம்மண்ணாக இருந்ததாகவும் பிறிதொருநாள் நான் நல்லவனாக ஊருக்கு உழைக்கும் உத்தமனாக போனபோது பேசிக்கொண்டார்கள். அப்படி போன போது அனாதரவாக இருந்த மாமன் பொண்ணுக்கு தாலி என்ற தாம்புக் கயிறு கட்டி என்னோடு இழுத்து வந்துவிட்டேன். திடகாத்திரமான குட்டி அது. சின்ன வயசில் குளக்கரை அரசமரத்தடியில் விளையாடும்போது சூட்டாங்காய் தேய்த்து தொடையில் சூடு வைத்தது இன்னமும் எனக்கு போலீஸ் ஸ்டேஷன் அடையாளமாய் இருக்கிறது. வாய் அசராமல் "டேய்.. தருமு..." என்று அழைத்தவள் இப்போது "ஏங்க..ஏங்க..." என்று ஏங்குகிறாள். கருப்பழகி. காந்தலே ருசி. சிகப்பு கண்ணாடி வளையல் அணிந்தவளை இப்போது தங்கத்தால் இழைத்திருக்கிறேன். கருப்புக்கும் தங்கத்துக்கும் தான் என்ன பொருத்தம். பள பளவென்று மின்னுகிறது.

இங்கே பட்டணத்தில் கால் வைத்து முதன் முதலில் குடிபுகுந்தது கூவம் வாசமும் கருவாட்டு மணமும் வீசும் பேட்டை ஒன்றில்தான். நான் நிர்கதியாக பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தபோது ரெண்டு இட்லி டீ வாங்கிக் கொடுத்து ஆதரித்தவன் இவன்தான். இவனை எனக்கு முன்னப் பின்ன தெரியாது. ஒருக்கால் இவனும் யாரையாவது இருகூறாக வகுந்துவிட்டு ஓடியிருப்பான். வேறு யாரோ இவனுக்கு பொறையும் டீயும் இதுபோன்று வாங்கிக் கொடுத்திருப்பார்கள். "என்ன பிரச்சன?" என்று என் கொலைக் கண்களை பார்த்தே கண்டுபிடித்துவிட்டான். வாங்கித் தந்த ரெண்டு இட்லியும் டீயும் வஞ்சனை இல்லாமல் என்னை ஒன்று விடாமல் அவனிடம் சொல்ல வைத்தது. நவீன பாஞ்சாலியாக ஐந்தாவது புருஷனாக ஒருவனை  தேர்வு செய்து ஓடிய அவன் அம்மாவின் சரித்திரம் போலிருந்தது என்று என்னை ஆதரவுடன் கட்டி அணைத்துக்கொண்டான். அவனுக்கு தெரியாது இதுவும் அதே போன்று ஒரு கதை என்று. ஒரு ஆட்டோ வைத்து என்னை அவன் பேட்டைக்கு அழைத்துச் சென்றான். நாலைந்து உடைந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், "எங்கள் பாசமிகு அண்ணன்" என்று தலைவர் இளித்தபடி விளிக்கும் வினையில் போஸ்டர் போன்ற உபகரணங்களால் உண்டாக்கப்பட்டது அவன் குடிசை. "என்ன பேட்டரி... புச்சா யாரையோ இட்டாந்திருக்க..." என்று சென்னையின் குப்ப ராகத்தில் நீட்டி முழக்கி கேட்ட செல்வி அக்காதான் நான் சென்னையில் பார்த்த முதல் பெண். "எல்லாம் நம்ம கூட்டாளிதான்.." என்று குப்பத்து வாசலில் நட்டிருந்த கட்சி கொடி பார்த்து சொன்னான். அப்போதுதான் எனக்கும் அவன் பெயர் பேட்டரி என்று தெரியும்.

இரண்டு நாட்கள் கூடி வாழ்ந்ததில் தெரிந்து கொண்ட சங்கதி. எரிசாராயம் காய்ச்சும் தயாரிப்பாளர்களுக்கு பழைய பேட்டரி சப்பளை அளிப்பது எனக்கு ஆதரவளித்த அனாதை ரட்ஷகன் தானாம். அதான் பேட்டரி என்ற நாமகரணம். எப்பவும் "ஃபுல்" சார்ஜிலேயே இருந்தது. செல்வி அக்காவோட பொண்ணு பூரணி. செல்வி அக்கா கஷ்டப்பட்டு நாலு வீட்டில் வேலை செய்து பொண்ணை படிக்க வைத்து புருஷனுக்கும் "தண்ணீ" ஊற்றிக்கொண்டிருந்தது. செல்வி அக்கா குடும்பத்திற்கு அவர் தான் கேப்டன். எப்போதும் ரத்தச் சிகப்பேறிய கண்கள். பன்னிரெண்டாவது படிக்கும் பருவச் சிட்டான பூரணி ஆங்கிலத்தில் சந்தேகம் கேட்க வெள்ளைக்கார துரைமார் போல நான் சொல்லிக்கொடுக்க குப்பம் என்னை இங்கிலீசு வாத்தியாராக அடையாளம் கண்டு கொண்டது. ஷெல்லியும் கம்பனும் மாறி மாறி என்னுள் வந்து போனார்கள். கல்லூரியில் பாடம் எடுத்த பேராசிரியர்களுக்கு அனேக கோடி நமஸ்காரம். அவ்வப்போது பேட்டரியின் குடிலுக்கு வந்து போன பூரணிக்கு என்னால் காதல் சார்ஜ் கிடைக்கப்பெற்றாள். "யே..த்தோடி..எப்பபாரு வெறிக்க பாத்துகினே இருக்கியே.. மென்டளு ஆயிட்டியா.." என்ற தாயாரின் வசவுகளுக்கு பல்லைக் காட்டி சிரிக்க ஆரம்பித்தாள். 

போன ரெண்டு பாரா பட்டண வாழ்வுக்கு அப்புறம் ஒரு நாள் சொட்டையும், வெள்ளையும் சொள்ளையுமா இருந்த ஒரு பெரிய மனிதரிடம் அழைத்துப் போனான் பேட்டரி. "அண்ணே... இவன் நம்ம ஃபிரண்டு. நல்ல படிப்பாளி.. கிரகம் நம்ம கூட வந்து சேர்ந்துட்டான்.. உங்க கூட இருந்தா உபயோகப்படுவான்.." என்று என்னைப் பற்றி நல்லது சொல்லி சேர்த்துவிட்டான். தலைவர் பார்த்துவிட்டு.. "எந்தூரு..." என்று திருவாய் மலர்ந்தருளினார். ஊர் பேரைச் சொன்னேன். "டேய் சந்தானம்... க்காளி... அந்த வயத்தரிச்ச பார்ட்டி பலனிவேலு ஊருதானே..." என்ற தலைவர் கேள்விக்கு தவறாமல் தலையை ஆட்டினான் அந்த அல்லக்கை. அறுபதாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் தலைவருக்கு போஸ்டர் வாசகம் ரெடி பண்ணிக்கொண்டிருந்த கோஷ்டியிடம்



தமிழக அரசியலின் புது அவதாரமே..
அரசியல் சாசனமே.....உனக்குத்தான் அரியாசனமே..
சாமான்யனின் சன்னதியே..
வேற்றுக்கிரகவாசியிடம் கூட வேற்றுமை பாராட்டாத பண்பாளரே..

போன்ற போஸ்டர் வாசங்களை அள்ளி வீசுவதைப் பார்த்த தலைவர் அகமகிழ்ந்து அவருடைய கட்சியில் இலக்கிய அணியில் என்னை சேர்த்துக்கொண்டார்.  தலைவரின் அறுபத்து ஓராவது பிறந்த நாளில் பஞ்ச பூதம் என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை என்னை மாநில இலக்கிய அணி செயலாளர் ஆக்கியது. அந்தக் கவிதை உங்கள் மேலான பார்வைக்கு இங்கே...

நீ எதிரிக்கு சுடும் நெருப்பு
ஏழைக்கு கருணை மழை 
இகழ்வாரையும் தாங்கும் நிலம் 
எங்களின் சுவாசக் காற்று 
அண்ணாந்து பார்ப்போருக்கெல்லாம் ஆகாயம்  


இப்படி கவிதையாய் ஆரம்பித்த என் பொதுவாழ்வுப் பயணம் இப்போது என்னை ஒரு மாநில மந்திரி அந்தஸ்த்துக்கு உயர்த்தியிருக்கிறது. நேற்றுக் கூட இரண்டு ஸ்தாபனங்கள் திறப்பு விழாக்கள், ஒரு திருமணம், ஒரு கருத்தரங்கம் என்று சூறாவளியாய் சுற்றுகிறேன். நான் தான் எதிர்கால முதல்வராம். எதிரி கோஷ்டியில் இருக்கும் எட்டப்பன்கள் கூட "அண்ணே.. நீங்கதான் அடுத்து.." என்று ஒத்துக்கொள்கிறார்கள். கட்சியில் எழுபது சதவிகிதம் பேர் என்னை அடுத்ததாக தலைவர் பதவிக்கு போட்டியிட சொல்கிறார்கள். இது ஜனநாயக கட்சி. நல்லவேளை தலைவருக்கு வாரிசுகள் யாரும் இல்லை. நான் செய்த புண்ணியம் மூன்றாவது நான்காவது பொண்டாட்டிக்கு கூட பிள்ளைச் செல்வம் வாய்க்கவில்லை. அடுத்த தலைவர் பதவிக்கு என்னை தகுதிவாய்ந்தவனாக மேம்படுத்திக்கொள்ள அணைத்து முயற்ச்சிகளையும் எடுத்துவிட்டேன். எதிர்த்தால் போட்டுத் தள்ளுவதற்கும் கட்டை பஞ்சாயத்துக்கள் செய்து காசு பார்ப்பதற்கும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து பேட்டரியை பக்கத்தில் வைத்துக் கொண்டேன். எந்தெந்த வழிகளில் பிறர் கண்ணில் மணல் தூவி பணம் அடிக்கலாமோ அதையெல்லாம் சொல்லித் தருவதற்கு டை கட்டிய விசுவாசமான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை வலதுகையாக அமர்த்திக் கொண்டேன். பல மாநிலங்களில் பறந்து விரவி கிடக்கும் என் எல்லா அசையும் அசையா சொத்துக்களையும் பாதுகாப்பாக அந்தத் தலை எடுத்த தியாகி மாமாவும் இன்ன பிற பந்துக்களும் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் என் பினாமிக்கள் என்று சுனாமியில் வீடிழந்தவர்கள் போல் என் அரசியல் எதிரிகள் மைக் பிடித்து கதறினார்கள்.

உன் பழங்கதை போதும். எல்லாம் சரி நேரமாச்சு என்று பேட்டரி அழைத்து இப்போது எங்கே போகிறேன் என்று கேட்கிறீர்களா. தலைவரானால் வேலைப்பளு மனஅழுத்தம் ஆகியவற்றை சமாளிப்பதற்கும் என்னை அவ்வப்போது ஆசுவாசப்படுத்தி தேற்றிக் கொள்வதற்கும் குறைந்தது மூன்று பெண்டாட்டிகள் தேவை. என் மாமன் மகளும், பூரணியும் முதல் இரண்டு இடத்தை நிரப்பி விட்டார்கள். மூன்றாவதை தேடித்தான் இன்று என் பயணம். அது என் வசமாக போகின்ற காரியம் கைகூட நான் தர்மகர்த்தாவாக இருக்கும் எல்லாம் வல்ல கொசப்பேட்டை திரௌபதி அம்மனை வேண்டி புறப்படுகிறேன் உங்கள் வாழ்த்துக்களுடன். தலைவர்ன்னா சும்மாவா?


பட உதவி : all-free-download.com

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails