Saturday, October 30, 2010

எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி

முண்டாசும் ஆளை அரட்டும் மீசையும் இருந்தாலும் காதலில் கண்டமேனிக்கு குழைவது அவனது வாடிக்கை. கண்ணனாகட்டும் கண்ணம்மாவாகட்டும் காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதுவது அவன் இயல்பு. மனம் ஒத்த இருவர் கூடி நின்று இந்த பாடலை கேட்டாலே காதல் மோகம் தலைக்கேறி திண்டாடி போய் விடுவர். கேட்க கேட்க திகட்டாத தெள்ளமுது. இந்த வாரக் கடைசி நாளுக்காக.

இந்தப் பாடலை கேட்பதற்கு கீழ்கண்டவற்றை கடைபிடித்தால் அது ஒரு சுகானுபவம். நிச்சயம் மறுப்பதற்கில்லை.

ஒன்று:- ஆளில்லாத ஃபேன் சடசடக்காத அமைதியான அறை.
இரண்டு:- எவர் எவர்க்கு என்னென்ன பானம் ப்ரியமோ அந்தந்த பானம் ஒரு கையில்.
மூன்று:- தங்கு தடையில்லாத இணைய வசதி. முழுவதும் இறங்கியபின் கேட்க ஆரம்பிப்பது உசிதம்.
நான்கு:- ஒரு முறை கண் திறந்து திரையில் ஓடும் அந்தப் படம் பார்த்து கேட்ட பின், மறுமுறை கண் மூடி மனதில் உருவேற்றலாம்.

பல்லவி முடிந்து சரணம் ஆரம்பிக்கும் முன் புல்லாங்குழல் ஆளை வசியப்படுத்தி இழுத்து பாடலில் உள்ளே விட்டுவிடுகிறது. தந்தி வாத்தியமான வயலின் தொடர்ந்து இசைக்க ஆரம்பித்து மீண்டும் வேணுகானம் மூன்று முறை கூகூ சொல்லி யேசுதாஸை பாட அழைக்கிறது. "இந்த நேரத்திலே... மலைவாரத்திலே.. நதி ஓரத்திலே உனைக்  கூடி..." அந்த முடிக்கும் கூடி ஒரு விசேஷ கமக கவனிப்பு பெறுகிறது கானகந்தர்வன் குரலில். இப்படியே பாடல் ஓடி "நெஞ்ஜாமாரத் தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன்..." என்ற முதல் சரண முடிவில் இந்த இசையில் நாமும் ஆத்மார்த்தமாக சரணம் புகுகிறோம். 

இரண்டாவது சரணம் முதல் சரணத்தை அடிபற்றி அப்படியே தொடர்ந்தாலும், "முத்தமிட்டு, பல முத்தமிட்டு, பல முத்தமிட்டுனை  சேர்ந்திட வந்தேன்... " என்ற வரிகளில் பாரதி எவ்வளவு இறுக்கமாக காதலிக்கு முத்தமிட வேண்டும் என்று சொல்லியிருப்பான் என யேசுதாஸ் நாவழுந்த அழுத்தம் கொடுத்து உச்சரித்து பாடுவது காதலர் மனதில் நிச்சயம் சஞ்சலம் ஏற்ப்பட வழிவகை செய்யும். காதலர்களாக கேட்பதென்றால் இரண்டடி இடைவெளி அவசியம் தேவை. மேற்படி காரியங்கள் ஏதும் நடந்தால் இந்த வலைப்பூ பொறுப்பல்ல!

இதைத் தவிர மற்ற மாயாஜாலங்கள் பாரதியின் கைவண்ணம் தானாக பார்த்துக்கொள்கிறது. புரட்சி எழுதும் பாரதி பேனா காதல் மை கொண்டு நிரப்பி தீட்டியிருக்கும் காதற்ப்பா.  பாடலும் எழில் கொஞ்சும் இசையும் மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. பொதுவாக இணையத்தில் "காக்கை சிறகினிலே... நந்தலாலா..." என்ற ஏழாவது மனிதன் பாடல் தான் பிரபல்யம். இந்தப் பாடல் நம்ம நெஞ்சார்ந்த விருப்பம்.

படம் : ஏழாவது மனிதன்.
இசை: எல். வைத்தியநாதன்.
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்.




எப்படி? சொக்கிப் போனீர்களா? ஹாப்பி வீக் எண்டு.

-

Friday, October 29, 2010

செலுத்தப்பட்ட கால்கள்

dark cloudsமூளைக்குள் இருந்து "போ.. போ.." என்று விடாமல் யாரோ விரட்ட விலுக்கென்று உடம்பு உதற எழுந்தேன். தெருவில் ஜன நடமாட்டம் இல்லாத அந்த பொழுதில் சத்தம்போடாமல் இறங்கி அப்படியே அந்த தார்ச்சாலையின் மேல் நடக்க ஆரம்பித்தேன். மழை விட்டு சுத்தமாக அலம்பிவிடப்பட்ட அந்த ரோடில் செருப்பில்லாத வெறுங்கால் பட "ச்சீலீர்" என்று உடம்பிற்குள் பாய்ந்தது. பாம்பு போல விறுவிறுவென வேகமாக ஏறி நரம்பு மண்டலத்தை தாக்கி மூளையில் போய் இறங்கியது. குண்டலினி சக்தி பாய்ந்தது போலிருந்தது. இரண்டொரு நிமிட அவகாசத்தில் அந்தக் குளிர் தோற்றுப்போனது. ஜெயித்த மேனி பழகிக்கொண்டது. அப்படியே அந்த கருவானம் தரை இறங்கிய திக்கில் நடக்க ஆரம்பித்தேன். மூளைக்கும் காலுக்குமான தொடர்பு இப்போது முற்றிலும் விடுபட்டிருந்தது. கால் அது போக்கிற்கும் மூளை அதன் விருப்பத்திற்கும் தத்தம் கடமையை கடனே என்று செய்துகொண்டிருந்தன. மழைக்கு ஈரத்துணியை இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆடை நனைந்த இரண்டு வாளிப்பான பெண்கள் எதிரே கடந்து போகையில் கண் மட்டும் தானாக அவர்கள்பால் சென்று திரும்பியது. மூளையை தூண்டில் போட்டு இழுக்கும் பெண்மை அது. பச்சை நரம்பு படரும் பாதங்களும், பளீர் என்ற நெற்றியும், பளபளக்கும் கண்ணும், வாயை திறந்தால் மனதை மயக்கும் சுகந்தமும் நிறைந்தவளை எங்கோ தூரத்தில் தெறிக்கும் மின்னல் பின்னல்கள் அவளை நினைவுக்கு கொணர்ந்தது. அந்த மின்னல் வெளிச்சத்தில் வானம் என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டது. மாரிக்கால கருமேகங்கள் இது இரவா பகலா என்று தெரியாத ஒரு அரைப்பகல் பொழுதை பூமிக்கு வழங்கியிருந்தது. நினைவு தப்பி நிஜத்துக்கு வருகையில் அதை சரி பார்த்துக்கொள்ளலாம். இப்போது ஒரே இலக்கு. போ போ இன்னும் போ. சீக்கிரம் போ. மூளை அதிகாரமாக விரட்டியது.

வானம் விட்டும் தூவானம் விடாமல் லேசாக தூறிக் கொண்டிருந்தது. ஐப்பசியில் அடை மழையாம். ஒவ்வொரு மழைத்துளியும் முகத்தில் பட்டு கீழே தெறிக்கும் போதும் அவளுடைய தேஜஸான முகம் தரையெங்கும் பரவி இருந்தது. சொட்ட சொட்ட நனைந்த தேகத்தில் முகத்தின் தண்ணீரை வழித்து  தரையில் தெளிக்கும் போது என் உள்ளங்கைத் தண்ணீரில் பன்னீராய் சிரிக்கிறாள். இப்போது மழை கொஞ்சம் கொஞ்சமாக வலுக்கிறது. புவி மீது தொடுக்கும் படையெடுப்பு போல பெரும் தூற்றலாக போடுகிறது. பக்கத்து குடிசையில் இறங்கிய மழை படபடத்தது. மேகத்தில் உள்ளே மறைந்தது சூரியனா அல்லது முழு நிலவா என்று தெரியவில்லை. கருத்த அனாதை மேகங்கள் வானத்தில் போக்கற்று திரிந்தது. பாவம் காற்றின் பிடியில் அவர்கள். இது இரவா அல்லது இது பகலா. அண்ணாந்து பார்த்து நடக்கும் போது ஒவ்வொரு மழைத்துளியிலும் வந்து வந்து கையால் வாய் பொத்தி பிம்பமாக சிரிக்கிறாள். காலம் காலமாக என் போன்ற ஒற்றையர்கள் நடந்து போய் உருவாக்கிய அந்த ஒத்தையடிப்பாதை ஆரம்பமாகியது. மழையில் நனைந்த ஆட்டுக்குட்டிகள் உடலை சிலுப்பி உதறிக்கொண்டு அந்த பூவரசு மரம் கீழ் நின்றிருந்தன. குட்டியும் பெரிதுமாய் நிற்கும் இதுகள் என்ன ஒன்றுக்கொன்று உறவுகளா? யார் அப்பா யார் அம்மா. ஆட்டுக்கு காதல் உண்டா.  அன்பிற்கும் உண்டோ ஆடும் மாடும். அன்பும் காதலும் எல்லா ஜீவராசிக்கும் பொதுவன்றோ.

முகத்தை தடவும் லேசான காற்று இப்போது மழையோடு சேர்ந்து பிடித்துக்கொண்டது. காற்று மழையுடன் ஒட்டி உரசி சரசமாடி சல்லாபம் செய்துகொண்டு வெட்கமில்லாமல் வெட்ட வெளியில் திரிகிறது. பூமியில் சேர்ந்த தேங்கிய நீரை தொட்டு அசைக்க முற்பட்டு தடவி கொடுத்து குட்டி அலை எழுப்பிக்கொண்டிருந்தது காற்று. பார்க்க பார்க்க மனதில் நினைவலைகள் ஓடியது. எவ்வளவு தேர்ச்சியாக கண் தொடும் பொழுதும் கை தொடும் பொழுதும் வரையறுத்திருந்தேன். மாட்டுக் கொட்டகை பின்னால் ஆளரவமற்று இருந்த மாமர மறைவு கைதொடவும், வாசலில் நூறு ஜோடிக் கண்கள் மத்தியில் கண் தொடவும் அல்லவா பழக்கியிருந்தேன். கால் ஒரு முள் குத்தியும் கவலையொழித்து யாதொன்றையும் பற்றி பற்றில்லாமல் நடையை கட்டியது. அந்தப் பாதை ஆற்றை நோக்கி போனதாகதான் நினைவு. எனக்கு நினைவு அழிந்து வெகு நாட்கள் ஆகிறது. வெளிச்சமற்ற கருத்த அறையில் கருவறை போல பலதினங்கள் இருந்தாயிற்று. எவ்வளவு பகல் எவ்வளவு இரவு கடந்திருக்கும் என்று தெரியாது. உத்தரத்தில் என்னைப்போல் அம்போ என்று தனியாக அடித்துவிடப்பட்டு உட்கார்ந்திருந்த அந்த திருகாணிக்கு தெரிந்திருக்கலாம் தினங்களா வருடங்களா என்று. 

rainஆற்றின் அருகில் வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆஹா. அணையிலிருந்து வெளியேறும் புதுப்புனலின் "ஹோ....." என்ற பேரிரைச்சல் காற்றில் கேட்கிறது. சட்டையின் பட்டன்களை காற்று ஏற்கனவே திறந்துவிட்டிருந்தது. ஒத்தையடிப் பாதையில் ஏதோ அரவம் போன்ற ஒன்று காலில் ஏறி அந்தப் பக்கம் ஊர்ந்து சென்றது. இப்போதும் காலைப் பற்றிய பிரக்ஞையே இல்லை மூளைக்கு. கால் விரல் இடுக்களில் புகுந்த சேறு ஐவிரல்களையும் இறுக்கமாக ஒன்று சேர்த்திருந்தது. தவளை ஒன்று பாதத்திற்கு அடியில் மிதிபட்டிருக்கலாம். என் காலடியில் விழுந்து தற்கொலை பண்ணிக்கொண்டதோ? காலுக்கும் மூளைக்குமான உறவு தான் எப்போதோ விட்டுப்போய் விட்டதே. இப்போது அதுபற்றி நமக்கென்ன கவலை. போ போ போ இன்னும் போ. இந்த விரட்டும் வேலையை மட்டும் செவ்வனே செய்கிறது மூளை. ஆற்றங்கரை அரசமரத்தின் இலைகள் பழுத்தது பழுக்காதது என்ற வேறுபாடின்றி ஒவ்வொன்றாக மரத்தின் அடிமைத் தனத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக காற்றில் பறக்கின்றன. சுதந்திரக் காற்று கொடுத்த சுகமான விடுதலை. "சட...சட.... சட..." என்று கிளைகள் அசைந்தும்  ஆடியும் விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் அரசமரத்தில் இருந்து இரண்டு காகங்கள் நனைந்து மழையில் கரைந்து பறந்தன.

கரையேறி மேலே நின்று பார்க்கிறேன். முழு ஆறும் நிரம்பியிருந்தது. இப்போது காற்று இன்னும் பலத்துடன் தாக்கியது. பாதி கழன்ற சட்டையை அபகரித்து. சட்டசபை காரியம் போல் வேஷ்டியையும் உருவியது. எதையும் அடக்கவில்லை. பிடிக்கவில்லை. அடக்கிய அப்பாக்களிடம் இருந்து தன்னை முண்டியடித்து விடுவித்துக் கொண்டு கலப்பு மனம் புரிய எத்தனிக்கும் பெண்களைப் போல அணைத் தண்ணீர் அடங்கா வெள்ளமாக பீரிட்டு பாய்ந்துகொண்டிருந்தது. ஆற்றுக்கு அப்பால் அந்தக் கரையில் எதிர்காற்றிலும் மழையிலும் போராட முடியாமல் சைக்கிளை தள்ளிக் கொண்டு ஒரு கிழவன். அணை மேலே ஏறியாயிற்று. ஆங்காங்கே காரை பெயர்ந்து மஞ்சள் வர்ணப்பூச்சு போயிருந்த அணைச் சுவர்களில் காதல் காவியங்கள் கண்ட கண்ட கிறுக்கல்களாய். சிரிப்பு வருகிறது. மதகு மீறி வரும் அந்தத் தண்ணீர் போல பொங்கி பொங்கி வருகிறது. சிரிக்கிறேன். தண்ணீரின் "ஹோ.." என்ற பாட்டிற்கு எதிர் பாட்டாய் என் சிரிப்பொலி. இன்னும் சத்தமாய் சிரிக்கிறேன். காற்றை கிழித்து ஊடுருவுகிறது என் ஒலி. அங்கே ஒரு ஒலி யுத்தம் மூண்டது. இவ்வளவு நேரம் வெறுமே வேடிக்கை பார்த்த வானம் அதன் பங்கிற்கு இடியாய் சேர்ந்து கொண்டது. ஆடைகள் இல்லா ஆதி மனிதனாக இருந்த என்னை இயற்கை ஜெயித்தது. என் சப்தம் அந்த சத்தக் கூட்டணியில் தோற்றுப்போனது.

தோற்றுப்போனது அந்த சப்தம் மட்டும் அல்ல. எவ்வளவு காதல், எவ்வளவு நட்பு, எவ்வளவு ஆசை, எவ்வளவு மணித் துளிகள், எவ்வளவு சிரிப்பு, எவ்வளவு சந்தோஷம், எவ்வளவு ஸ்பரிச சுகம், எவ்வளவு பொருள், எவ்வளவு வாழ்க்கை, எவ்வளவு கோபம், எவ்வளவு உறவுகள் இன்னும் இன்னும் எவ்வளவோ எவ்வளவு. இதில் நான் தோற்கக் கூடாது. சிரி. இன்னும் சத்தமாய் சிரி. இவ்வளவு நேரம் காலுக்கு கட்டளை இட்ட மூளை இப்போது வாய்க்கு வேலை கொடுக்கிறது. இந்த ஊர் அறிய சிரி. அண்டம் அதிர சிரி. சிரி. அந்தக் கடவுள் அறிய சிரி. அந்தப் பிசாசு அறிய சிரி. சிரித்தேன். ஆளுயர சாவி கொண்டு திறக்கும் அணைப் பூட்டின் மேலேறி அடித்த காற்றுக்கு ஆடாமல் கை பரப்பி நின்றேன். மழை விட்டிருந்தது. தலை காய்ந்து முடி பறந்தது. வானத்திற்கும் எனக்குமான தூரம் இன்னும் சற்று குறைந்தது. திரும்பவும் மூளை கட்டளையிட்டு சிரிக்கச் சொன்னது. சிரி. கண்ணை மூடி சிரித்தேன். கண் திறக்க மறுபடியும் குட்டி மூளை எட்டிப்பார்த்தது. அந்த வெள்ளக்காடான ஆற்றை பார்த்ததும் குளிப்பதற்கு பாட்டி சொல்லிக்கொடுத்த ஸ்லோகம் சொல் என்று கட்டளை.
விஸ்வேசம்  மாதவம் துண்டிம்
தண்ட பானிஞ்ச பைரவம் 
வந்தே காசிம் குஹாம் கங்காம்........
வாய் சத்தமாக ஜெபித்தது. எதிர்க்கரை சைக்கிள் கிழவர் வாய் பிளந்து என்னை பார்த்ததில் வேகமாய் சென்ற லாரிக்காரன் மழை நீரோடு சேற்றையும் வாரி அவர் வாயில் அடித்தான். அவர் வாயிலும் மண். அடுத்த முறை நிமிர்ந்து அவர் என்னை பார்ப்பதற்குள்........... மீண்டும் போ போ என்று கோஷமாக கேட்கத் துவங்க.....

கீ
.
.
.
ழே

கு
தி
த்
தி
ரு
ந்
தே
ன்.....

காவிரி நதி புனித கங்கை போல என்னை ஆரத்தழுவி அணைத்துக் கொண்டது. மூளை அதற்குமேல் கட்டளை இட முடியாமல் அடங்கியது. காவிரி  தன் விருப்பத்திற்கு என்னை உடல் பிடித்து இழுத்து அழைத்துக்கொண்டு போயிற்று.  அதோடு கலந்து புனிதமடைந்த நான் அது போகும் இடமெல்லாம் போய்க்கொண்டே இருக்கிறேன். எங்காவது ஒரு கரையில் என் காவேரி தென்படுவாளா என.........

பட உதவி: http://www.morguefile.com/archive/display/539743 மற்றும் web.ncf.ca

-

மன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்

இது மன்னார்குடி டேஸுக்கே இறுதி ஆட்டம் போலருக்கே என்று "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்" பாடல் பாடி துள்ளி வரும் என் அருமை ப்ளாக் மக்களே நிற்க. அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுக்கு விடுதலை கிடையாது. இங்கேயே எண்ணெய் சட்டியாம். வறுத்துவிட்டுதான் மேலே அனுப்புவேன்.

இதுவும் விளையாட்டில் நிகழ்ந்த சம்பவம்தான்.. ஆனால் மாநில அளவிலான போட்டியில் நிகழ்ந்ததல்ல.. எங்கள் ஊர் அருகில் நடந்த மாவட்ட அளவிலான ஒரு கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்தது.. அவ்வளவு சுவாரசியமானதுமல்ல..

என்னடா இது சேப்புல ஆரம்பிக்குது. இது நான் எழுதியது அல்ல. இப்படி சுவாரசியமானது அல்ல என்று சுவாரஸ்யமாக ஆரம்பித்திருப்பவர் மன்னையில் எங்கள் தெரு அஷ்டாவதானி. நகைச்சுவை அரசர் என்று என்பத்தி ஒன்பதாவது ஃபாலோயராக என்னுடன் இந்த வலைப்பூவில் சேர்ந்திருக்கிறார். இவரைப் பற்றி நிச்சயம் மன்னார்குடி டேஸில் எழுதுவதற்காக வைத்திருந்தேன். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று அனைத்தையும் பிரித்து மேய்ந்து தெரு நாடகம் போட்டவர். ஊரில் அடிக்காத லூட்டி இல்லை. ஒரு லாங் சைஸ் வரி போட்ட நோட்டில் வசனம் எழுதி எங்களை மேடையில் பேசப் பழக்கியவர். ரெண்டு மூனு டிராமா போட்டதாக ஞாபகம். நீங்கள் இப்போது துன்புறுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். எங்களுக்கு கலையார்வத்தை கன்னாபின்னா என்று தூண்டி விட்டவர். அண்ணனே வந்து வசமா மாட்டிக்கிட்டார். அண்ணன் "பதிந்தால் தான் பார்க்கலாம்" (Registration is needed) என்றிருக்கும் முத்தமிழ்மன்றம் என்கிற வலை மன்றத்தில் (Forum) "வெங்கிட்டு" ஆகிய நான் இணைந்த கரைகளுக்கு அப்புறம் விளையாடிய தொடர்போட்டி ஒன்றை பற்றி எழுதியிருக்கிறார். அவரது கைவண்ணத்தில் அப்படியே தருகிறேன். டைட்டில்ல ஒரு கிரிக்கெட் படம்.

அது ஒரு தொடரின் இறுதிப்போட்டி..

டாப் ஹாஃபில் இருந்து நாங்கள் முறைப்படி வென்று இறுதிப்போட்டிக்கு வந்திருந்தோம்.. பாட்டம் ஹாஃபில் இருந்து போட்டியை நடத்தும் அணி போங்கு அடித்து இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது.. எங்களை வெல்லவல்ல அணிகளையெல்லாம் "தோற்கடித்து" முன்னேறியிருந்தனர். முதல் பரிசு ரூ. 3333. 2ம் பரிசு ரூ.2222.

போட்டி தொடங்கும்போதே மற்ற அணியினர் ( 3வது, 4வது இடம் பிடித்திருந்தவர்கள்) எங்களை எச்சரித்திருந்தார்கள்.. "உங்களுக்கு 2ம் பிரைஸ் தாம்ப்பா.. இது அவனுக ஊரு.. அம்பயரும் அவனுக ஆளுக..ஒண்ணும் பிரச்சனை பண்ணாம நீட்டா ஆடிட்டு கொடுக்கறத வாங்கிட்டு வந்து சேருங்க..!"

அம்பயரிங் அவர்கள் சொன்னது போலதான் இருந்தது.. டாஸ் வென்று எங்களை பேட் செய்யச் சொன்னார்கள். அவர்கள் போட்ட பந்துகள் எதுவும் பேட்டிங் கிரீஸ்க்குள்ளேயே வரவில்லை.. அம்பயர்கள் "வைட்" கொடுக்கவேயில்லை.. எங்கள் பேட்ஸ்மன்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துப்போய் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டியிருந்தது. கனெக்ட் ஆனால் ரன்.. இல்லையென்றால் கீப்பர் அவுட் கேட்பார்... காத்திருந்தவர்போல அம்பயர் கையைத் தூக்கி அவுட் கொடுப்பார். அதுமட்டுமல்ல.. அப்படி விலகிச்செல்லும் பந்துகளை காலில் வாங்கினால் எல்பிடபிள்யூ கொடுக்கும் கொடுமையும் நிகழ்ந்தது. நான் ரன் அவுட்.. பந்தை கீப்பர் வாங்கி ஸ்டம்பில் அடிப்பதை நான் கீப்பர் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்..

அவுட் ஆவதுகூட கொடுமையல்ல.. எங்கள் விக்கெட் விழும்போதெல்லாம், லோக்கல் வர்ணனையாளர் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பார்.. " ஆஹா.. அற்புதமான பந்து.. மட்டையாளர் ஏமாந்துவிட்டார்.. பந்து காப்பாளர் கையில் தஞ்சம் புகுந்தது.. ஆலங்கோட்டை அணியின் புய்ல் வேகப்பந்துவீச்சில் ஹரித்திராநதி அணி 6 விக்கெட் இழந்து பரிதாபமாகத் தடுமாறுகிறது..!" அதைக்கேட்டு பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரித்தது கண்டு நொந்துவிட்டோம்.. 20 ஓவர் மேட்சில், நாங்கள் 7 ஓவருக்கு ஆல் அவுட்.. எங்கள் கணக்கில் 46 ரன்..

அடுத்து எங்கள் தாக்குதல் திட்டத்தை வடிவமைக்கக்கூட நேரம் தராமல், பந்துவீச அழைத்தார்கள்.. "ஆட்டம் முடிந்தபிறகு பரிசளிப்பு விழா நடக்க இருப்பதால் 'ஹரித்திராநதி அணியினர் உடனடியாக வியூகம் அமைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என மைக் முழங்கியது. இத்தனைக்கும் 13 ஓவர் முன்னாலேயே எங்கள் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. மற்ற அணியினர், தண்ணியக் குடி என்று வடிவேலு சொல்வாரே.. அதுபோல எங்களுக்கு தேறுதல் சொல்லி அனுப்பி வைத்தனர்.

எங்களை 46க்குள் சுருட்டிவிட்டாலும், எதிர் அணியினருக்கு எங்கள் பந்துவீச்சின் மீது அபார கிலி இருந்தது. தொடர் முழுதும் எங்கள் துவக்க வீச்சாளர்களின் மிரட்டலை அவர்கள் பார்த்திருப்பார்கள்தானே..? துவக்க ஓவர்களை, வெங்கட சுப்பிரமணியன் (வெங்கிட்டு), ரமேஷ் என்ற இருவர் வீசுவார்கள். இப்போதுபோல பவர்ப்ளே எதுவும் அப்போது இல்லை. ஆளுக்கு 3 ஓவர் வீசிவிட்டு 1 ஓவரை ரிசர்வில் வைத்திருப்பார்கள். அந்த 6 ஓவரிலேயே எதிரணி பாதி காலியாகிவிடும்.

வெங்கிட்டுதான் என் வாழ்வில் நான் அறிந்த முதல் ஆல் ரவுண்டர். தற்போது சென்னை ***** ******ல் பணிபுரிகிறான். நல்ல உயரம். அலறவைக்கும் வேகத்துடனும், அப்பழுக்கில்லா துல்லியத்துடனும் வீசுவான். ஆனால் அவனிடம் ஒரு குறை.. அவன் பந்தில் கிளம்பும் கேட்ச்களை எப்பாடுபட்டாவது பிடித்துவிடவேண்டும். பிடித்துவிட்டால், அடுத்தடுத்த பந்துகளை இன்னும் உற்சாகமாக வீசுவான். நழுவவிட்டால் டென்ஷன் ஆகி, கன்னாபின்னாவென்று வீச ஆரம்பித்துவிடுவான். பேட்டிங்கிலும் சூரப்புலி.. (நாங்கள் 46 எடுத்ததே அவனால்தான்.. ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே விழும் பந்துகளை அள்ளி மிட் விக்கெட்டிலும் கண்ட்ரியிலும் போட்டு அவர்களை வெறுப்பேற்றினான்.) இன்னொரு வீச்சாளர் ரமேஷ், வெங்கிட்டு அளவில் இல்லையாயினும், குட் லெங்த்தில் ஸ்டம்புக்கு நேராக வீசுவான். வெங்கிட்டு பந்தில் அடிக்க முடியாததால், இவன் வீச்சில் அடிக்க முற்படுபவர்கள் ரிஸ்க் ஷாட் ஆடும்போது, விக்கெட் கிடைக்கும். சரி.. விஷயத்துக்கு வருகிறேன்..

வெங்கிட்டு வீசிய முதல் பந்து அட்டகாசமான யார்க்கர்.. மேட்சின் முதல் பந்தை யார்க்கராக வீசுவது அவ்வளவு எளிதல்ல.. மிடில் ஸ்டம்பை அடியில் இருந்து குத்திக் கிளப்பவே, அது கீப்பரைத் துரத்திக்கொண்டு பறந்தது. இந்த விக்கெட் விழுந்த அதிர்ச்சியில் அடுத்த பேட்ஸ்மன் வர நேரமெடுத்தது.. ஆனால் வந்த பேட்ஸ்மனைப் பார்த்து நாங்கள் அதிர்ந்தோம்.. பேட்டை விடச் சற்றே உயரமான ஒருவர்..! அவரை நாங்கள் மற்ற ஆட்டங்களில் பார்த்திருந்தோம். டிஃபென்ஸில் பக்கா.. வாசிம் அக்ரமே வந்து வீசினால்கூட பந்தை அழகாகத் தடுத்து வெறுப்பேற்றக்கூடியவர்.. ஆனால் அவரிடம் ரன் எதிர்பார்க்க முடியாது.. ஒன்றும் இரண்டுமாகப் பொறுக்குவார்..

அவர்கள் திட்டம் புரிந்து போயிற்று..

( ஆட்டம் தொடரும்..)

இப்படித்தான் ட்ரிங்க்ஸ் பிரேக் விட்டுவிட்டார். அடுத்த பதிவாகத் தான் அவரும் அதை வெளியிட்டார் ஆகையால் அண்ணனின் பாதையை பின்பற்றி நானும்.... இதை.. அடுத்த பதிவில் முடிக்கிறேன்...


பட உதவி: http://northpenninegallery.wordpress.com/
-

Thursday, October 28, 2010

வேடிக்கை மனிதர்கள்

water walk


மேலே இருக்கும் படத்தை பார்த்தாலே சிலுத்துக்குதா.. அப்ப கீழே இருக்கும் வீடியோவையும் பாருங்க அப்புறம் பேசலாம்.


சினிமா பார்த்து முடிச்சப்புறம் வீட்டுக்கு வர்ற வரைக்கும் அதைப் பற்றி எதையாவது பேசிக்கொண்டே வருவது போல.....

நமக்கெல்லாம் கால் தரையில பாவாம கொஞ்சம் உசரக்க போனாலே "ஞை...."ன்னு காதை அடைச்சுண்டு தலை "கிர்....கிர்..."ன்னு மாசமா இருக்குற பொண்ணு மாதிரி சுத்தறது. இவர்கல்லாம் அட்லீஸ்ட் அம்பது அடிக்கு கீழேயே இறங்க மாட்டேன்றாங்களே.

பாட்ஷா ரஜினி மாதிரி ரெண்டு எல்.ஐ.சி பில்டிங் உயரத்துக்கு நிக்கிற பில்டிங் ஒட்டுல சேர் மேல சேர் போட்டு கால் மேலே கால் போட்டு உட்கார்றது என்ன ஸ்டைல். ரொம்ப ராவடி பண்றாங்கப்பா.

ஸ்விம்மிங் பூல் நம்ம வீட்டு கொல்லைப்புறம் தண்ணீ தொட்டி மாதிரி தெரியறவரைக்கும் ஏணி மேலே ஏணி போட்டு அசராம ஆகாச மார்க்கமா ஏறி தொபுகடீர்ன்னு தலைகீழா தண்ணிக்குள்ள குதிக்கறதே இந்த அபிஷ்டு, லேசா கரணம் தப்பினா கபால மோட்ஷம் கிடைச்சிடும் போலருக்கே. இன்னொரு ஆள் டார்ஜான் கணக்கா கயித்துல தொங்கி நேரா போய் தண்ணியில லான்ட் ஆரான். வேறொரு ஆள் சைக்கிள்ள போய் சைக்கிளோட குதிச்சு ஸ்நானம் பண்றான்.

குத்து விளக்கை வீட்டுக்கு வந்த குடும்ப விளக்கு வாயால ஊதி அணைச்சா லக்ஷ்மி வீட்டை விட்டு கோச்சுண்டு வெளில ஓ...ஓ...டி போய்டுவாளாம். மெழுகுவர்த்திக்கு அது கிடையாதுன்னு தெரியாம ஒரு பொண்ணு ஷார்ப்பா மடிச்ச பேப்பரை தூக்கி போட்டு என்னா ஸ்டைலா அணைக்குது.

சித்தர்கள் மாதிரி சடசடன்னு தண்ணீ மேல நடக்கறாம்ப்பா ஒருத்தன். நானும் உத்து உத்து பார்த்துட்டேன் கீழே ஒன்னும் கிளாஸ் படி எதுவும் இல்லை. யாரும் போய் ஆத்துல குளத்துல ட்ரை பண்றேன்னு விழுந்துராதீங்க. அதற்க்கு கம்பெனி பொறுப்பேற்காது.

பாஸ்கெட் பால கூடையில போட்டு பார்த்துருக்கோம். பாஸ்கேட்ல பூ மாதிரி இருக்குற ஒரு பூவையை நாலஞ்சு பேரா கூடைக்குள்ள பந்து மாதிரி போட்டு கீழே வரும்போது கேட்ச் புடிக்கறான்கள். படாத எடத்துல பட்டுட்டா யார் கல்யாணம் பண்ணிப்பா. தூக்கி போட்டு கேட்ச் புடிக்கரார்களே அவங்கள்ள யாரவது கட்டிப்பானா. ராஸ்கல்ஸ். ஒரு சின்ன இது. கூடையில் என்ன பூ குஷ்பூ அப்படின்னு ரஜினி பாடினா மாதிரி குஷ்பூவை இந்தக் கூடையில் போட்டு எடுக்கணும்ன்னா ஒரு ஸ்ட்ரக்சுரல் எஞ்சினியர் வச்சு டயாமீட்டர் பார்த்து தான் கூடை செய்யணும் போலிருக்கு. குஷ்பூவிற்கு கோயில் கட்டியவர்கள் மன்னிப்பார்களாக.

திருட்டுப் பய புள்ள மொட்டை மாடியிலிருந்து அடுத்த முடி வச்ச மாடிக்கு என்னமா பாயுது. மொட்டை மாடியில நுனில நின்னா பின்னால வந்து யாராவது  "பே" சொன்னாலே நாம ஆள் அம்பேல்.

கால்ல சக்கரத்தை கட்டிண்டு சுத்தறான் அப்படின்னு இந்த ஸ்கேட் போர்ட்ல சுத்தறவங்களை காட்டி நிச்சயம் சொல்லலாம்.  மண் ரோடு, செமின்ட் ரோடு, கிரவுண்டு, மாடிப் படி, மாடி மேல, மாடி டு மாடி, கைப்பிடி கம்பின்னு எங்கெல்லாம் அந்த சக்கரம் உருளுமோ அங்கெல்லாம் அந்த வீலு கழண்டு போற அளவுக்கு சுத்தராங்கப்பா.

மொதெல்ல கூடைக்குள்ள பொண்ணை தூக்கிப் போட்டு புடிச்சாங்க. அதுக்கப்புறம் குட்டிக்கரணம் அடிச்சுகிட்டே போயி ரெண்டு காலால அலேக்கா பந்தை தூக்கி நேரா பாக்கெட் பண்றான். ரொம்பவே அநியாயம் இது. எல்லாருமே கழைக் கூத்தாடியாயிட்டானுங்கோ.

பந்தை பின்னாடி விட்டு கவுட்டிக்குல ராக்க்ட்டை விட்டு எதிர் சைடு அனுப்பறாங்க. அது என்ன டென்னீஸா இல்ல கவுட்டீஸா? அசந்து போய் ஆப்போசிட்ல மத்திய தூக்கவே இல்லை.

"கைய கால வச்சுண்டு சும்மாவே இருக்க மாட்டன். எதையாவது நோண்டிட்டு அப்புறம் இங்க பட்டுது அங்க பட்டுதுன்னு வந்து நிப்பன். என் அப்பன். ராப்பூரா வலி அவனுக்கு அவஸ்த்தை நமக்கு" என்று டிராயர் போட்டுண்டு விஷமமா சுத்திண்டு இருந்தப்ப பாட்டி சொல்லுவாள். இவங்களுக்கு இது போல பாட்டி இல்லையோ? ரொம்பவே வேடிக்கை காண்பிக்கிராங்க. வித்தை காட்ரதுல மன்னர்கள்.


பின் குறிப்பு: மன்னார்குடி டேஸ் நாளை வழக்கம் போல இல்லாமல் வெளிவரும். (உன்னை யார் இப்ப அதை கேட்டா என்று யாரும் என்னை அடிக்க வராமல் இருந்ததற்கு நன்றி.)

-

Wednesday, October 27, 2010

தாலாட்டி பாராட்டி சீராட்டி

joyful
பிள்ளை வளர்ப்பிற்கு தற்போது நிறைய புத்தகங்கள், அகராதிகள், அட்டவணைகள். தியரிக்கு சரி ப்ராக்டிகல் நாமதானே செய்யணும். கையில் கைக்குழந்தையுடன் குனிந்து நிமிர்ந்து மணிக்கணக்காக சிரமப்பட்டு அலசி ஆராய்ந்து புக் தேடும் நவீன அம்மாக்கள் பலரை லாண்ட்மார்க்கில் பார்த்திருக்கிறேன். தோளில் ஒரு தூளி கட்டி மாட்டிவிட்டு அமர்க்கள சென்ட் வாசனையுடன் ஒவ்வொரு புத்தகங்களாக பார்த்துக் கொண்டே வந்தது அந்த புதிய அம்மா. பிள்ளைக்கு நல்ல மார்க்கட்டு சளி. "கர்.கர்.." என்று மூக்கால் உருமிக்கொண்டிருந்தது. இது பிள்ளை வளர்ப்பு புத்தகங்களாக பிரித்து பிரித்து பார்த்தவண்ணம் இருந்தது. அங்கேயே படித்துவிட்டு போகலாம் என்ற என்னமா என்று தெரியவில்லை. ஒரு முறையாவது அந்தப் பிள்ளைக்கு மூக்கு துடைத்து விட்டிருக்கலாம். ரொம்ப எழுதினால் "நீ லான்ட்மார்க்குக்கு புக் வாங்க போனாயா அல்லது புக் வாங்க வரும் அம்மாக்களை பார்க்க போனாயா. இது தான் நீ புக் வாங்கும் லட்சணமா" என்று சகட்டு மேனிக்கு என் நண்பர் வட்டாரம் கமென்ட் "அடித்து" என்னை கண்டதுண்டமாக்கி கசாப்பு கடைக்கு வீசுவார்கள் என்று பயந்து, தொடங்கிய மேட்டருக்கு வருவோம். கொஞ்ச நாள் முன்பு ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வடநாட்டில் பல வல்லிய வைத்தியர்களை பேட்டி கண்டு பிள்ளை வளர்ப்பது எப்படி என்று ஒரு கட்டுரை போட்டிருந்தார்கள். மைய சரக்கு அவர்களது அதிகப்படி சரக்கு என்னுது. பாரா பாராவா பார்ப்போம்.

முத்தே மணியே வைரமே வைடூரியமே ஜில்லு சின்ட்டு பப்பி குப்பி என்று செல்லப் பெயர் வைத்துக் கூப்பிட்டு மூக்கால் மோந்து பார்த்தால் மட்டும் போதாது அவர்களிடம் ஆத்மார்த்தமான அன்பை வெளிப்படுத்த வேண்டும். செயலில் காட்ட வேண்டும்.

அன்பை பாசத்தை செயலில் காண்பிக்கிறேன் பேர்வழி என்று செல்லமாக கேட்டுவிட்டான் என்பதற்காக அந்தக் கடையில் அவன் கைகாட்டிய திக்கில் உள்ள அணைத்து வகையான தீனியையும் வாங்கிக் கொடுத்து கெடுத்துவிடாதீர்கள். அது அன்பு அல்ல. மறுபடியும் சொல்கிறார்கள் அல்வா வாங்கித்தருவது அன்பு அல்லவாம். அல்வா போல நாம் நடந்துகொள்வது தான் அன்பாம். இதோட இந்த கருத்தை முடிச்சுப்போம். பிள்ளை வளர்ப்பிலிருந்து பாதை கொஞ்சம் விலகுது. அப்புறம் மல்லிப்பூவிற்கு போய்விடப் போகிறது.

உங்க கண்ணெதிர்க்கவே ஒரு ஐநூறு ரூபா நோட்டை கிழிச்சு கப்பல் பண்ணி விளையாடுதுன்னா "ஆ"ன்னு வாய் பாத்துக்கிட்டு அன்பா மலைச்சு போய் நிக்கக்கூடாது. டப்பின் அருமையை உழைப்பின் பெருமையை உணரவைக்கணும். முடிஞ்சா நம்மோட இளமைக்கால கொண்டாட்ட திண்டாட்ட தினங்களை வெட்கம் பார்க்காமல் சொல்லி உணரவைக்கலாம் என்கிறார்கள்.

வீட்டில் விஸ்ராந்தியா ஒன்னா ஹால்ல உட்கார்ந்து இருக்கும் போது "நேத்திக்கு இந்த ஷேர் ஏறிச்சே.. இது இறங்கிச்சே. டைப்பிஸ்ட் கீதா ஏன் பச்சை கலர் நெயில் பாலிஷ் போட்ருக்கா. அந்த ஹீல்ஸ் அவளுக்கு சகிக்கலையே. பெர்ஃபுயூம் கொமட்றதே" என்று மனசை மாறுவேஷம் போட்டு அலைபாயவிடாமல் பசங்களுடன் ஒன்றி இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் பக்கத்தில் இருந்தால் மட்டும் போதாது அவர்களின் பாக்கெட்டோடு நெஞ்சருகில் இருக்கவேண்டும்.

தொட்டதுக்கெல்லாம் "செல்லம்.. அப்பா இருக்கேண்டா... நீ ஒன்னும் கவலைப்படாதே" என்று அவர்களுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு சோம்பேறியாகவும் உதவாக்கரை ஆக்கி விடக்கூடாது. "அப்பா. ஒரு டம்ளர் தண்ணீ கொண்டுவா" என்று கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமட்டும் வாண்டை பார்த்து சிரிக்காதீர்கள் என்கிறார்கள். சின்ன சின்ன விதிமுறைகள் வைத்து அதைக் கடைபிடிப்போம். புஸ்தக அலமாரியில் பலூன், டெடி போன்றவைகள் இடம் பிடிக்க கூடாது. தரையில் குப்பை போடக் கூடாது. போன்ற சில ரூல்ஸ் அவர்களுக்கு மட்டும் அல்ல நாமும் அதைப் பின்பற்றுவது நல்லது.

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் கறாராக சொல்லி விடுவது நல்லது. பொண்டாட்டியிடம் பேசுவது போல வழவழா கொழ கொழா என்று பேசாதீர்கள். தண்டிக்கவேண்டும் என்று முடிவெடுத்தால் டி.வி. பார்ப்பது, வெளியே நண்பர்களுடன் விளையாடுவது போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு சின்னத் தடை விதியுங்கள். கொஞ்ச நேரம் ஆனதும் லேசாக திருந்திய அறிகுறி தென்பட்டாலே நீங்களும் இறங்கி வாருங்கள். மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு சுவற்றையே பார்த்து வெறிக்காதீர்கள்.

"நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார். பின்னிப்புடுவேன் பின்னி" என்று ஜம்பம் பேசி கம்பத்தில் கட்டி போட்டு தோலை உரிக்காதீர்கள். அழகான அம்மாக்கள் அடியாள் சொர்ணாக்கா பாணியில் "டா.....ய்" என்று குரல் விட்டு குழந்தைகளின் மென்னியை முறிக்காதீர்கள். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடை பிடியுங்கள். அன்பு ஆட்டத்தை அடக்கும். சமாதானம்  தான் அடக்குவதற்கு கை கொடுக்கும். தந்தைமார்கள் தேசத் தந்தையையும் தாய்மார்கள் அன்னை தெராசாவையும் குழந்தையை கை நீட்டி அடிக்கும் முன் கண் மூடி நினைத்துக்கொள்ளுங்கள். ஆங்காரம் அடியோடு பனிபோல் விலகிவிடும். ரொம்ப பிஞ்சு மனசு என்பதால் சின்ன காயங்கள் கூட ஆழமாய் பதிந்துவிடும்.

மனைவியிடம் எவ்வளவு மரியாதையாக பேசுவோமோ அதே மரியாதை குழந்தைகளுக்கும் கொடுங்கள். அதற்காக காலில் எல்லாம் விழுந்து மரியாதை தர வேண்டாம். நாலு பேருக்கு முன்னால் திட்டாதீர்கள். பசங்க திரும்ப திட்டினால் உங்கள் மானம் விமானம் ஏறி விடும். எவ்வளவு நாள் தான் கப்பலேரிடும் அப்படின்னு சொல்றது. நாலு சுவற்றுக்குள் உட்காரவைத்து பேசி தீருங்கள். பஞ்சாயத்துக்கு நாலு பேரை வைத்துக் கொள்ளாதீர்கள். நடப்பது ஒன்னும் ஊர் விவகாரம் இல்லை, யாரும் பிராந்து கொடுக்கவும் இல்லை. நண்பர்கள், அசலார் எதிரில் அவர்களுக்கு மரியாதை முக்கியம். நமக்கும் தான். இதுவே நல்வழி படுத்துவதற்கு நல்ல வழி ஆகும்.

நிறைய உற்சாகப் படுத்துங்கள். "பேஷ். நல்லா பண்ணிருக்கியே. அப்பனை மாதிரியே புத்தி உனக்கு" என்று தோளில் தட்டுங்கள். (போன வாசகம் அம்மாக்கள் ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டியது). அது பல மாயாஜாலங்கள் செய்யும். அதற்காக குழந்தை சாக்பீசால் கோடு போட்டாலே "ஏய்.. இங்க பாரேன் எம்பையன் ரோடு போடறான்" என்று ரொம்ப ஏத்தி விடாதீர்கள். அடக்கமான ஊக்கம் அமரருள் வைக்கும்.

"அந்த அனுஷா சுத்த மோசம். அவ ஒரு சோம்பேறி. அவ கூட சேர்றியே..நீயும்.. " என்று எப்போது பார்த்தாலும் அவர்களது நண்பர்களை அவமானப் படுத்தாதீர்கள். அவர்களையும் பாராட்டுங்கள். பக்கத்து வீட்டு பசங்களை பாராட்டினா தன் வீட்டு பிள்ளைக்கு தானே கிடைக்கும் பாராட்டு அப்படின்னு சிக்மன்ட் ஃபிராய்ட் சொல்லலை. இந்த சின்னதம்பி தான் சொல்றேன். "கேஷவ் கணக்குல சென்டம். நீயும் தான் இருக்கியே... முட்டை முட்டையா வாங்கி முட்டையில செஞ்சுரி போடுவே.. " போன்ற கம்பேரிசன் மேலும் பல வாத்து முட்டைகள் தான் வாங்க வைக்கும். இப்படி திட்டும் பெற்றோர்கள் கொஞ்சம் அவர்கள் எடுத்த மதிப்பெண்களையும் நினைத்துப் பார்க்க சொல்கிறார்கள். நிச்சயம் தொண்ணூறு சதவிகதம் பேர் திட்டமாட்டார்கள் என்று டேபிளை அடித்து சத்தியம் பண்ணி சொல்கிறார்கள்.

"எனக்கு 'நித்யஸ்ரீ' பிடிக்கும் நீயும் நித்யஸ்ரீ மாதிரி பாடனும். அதை நான் இந்த காது கொடுத்து கேட்கணும்" அப்படின்னு குயிலப் பிடிச்சு கூண்டில் அடைச்சு பாடச் சொல்லாதீங்கள். அதுக்கு மயில் போல ஆட விருப்பம் இருக்கலாம். தோகை விரித்து ஆட விடுங்க. நம்ம விருப்பு வெறுப்புகளை பசங்க கிட்ட காட்டக் கூடாது. எப்படி மனைவியிடம் காட்ட முடியாதோ அதே மாதிரி குழந்தைங்ககிட்டயும் அடக்கி வாசிக்க சொல்றாங்க.

உங்களிடம் இருந்தே குழந்தைகள் கற்கிறார்கள். நீங்களே உங்கள் பிள்ளைகளின் முதல் ஆசிரியர். உங்களிடம் இருந்தே அவர்கள் எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்கள்.  உங்களால் உத்தமோத்தமராக இருக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் எதிரில் கெட்ட  பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். அட்லீஸ்ட் அவர்கள் எதிரில் "அப்பாவா! ஆடுதுறை போயிருக்கா" என்று  அட்லீஸ்ட் அவர்களையே உங்களுக்கு எதிரில் ஃபோனில் பொய் சொல்ல வைக்காதீர்கள்... அப்புறம்.. அப்புறம்...

எந்தக் குழைந்தையும் நல்லா குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்....... ஐயோ போதும் நிப்பாட்டு.. நிப்பாட்டு.. போதும்... பாட வேற ஆரமிச்சுட்டியா.. என்று எல்லோரும் அலறுவது காதில் விழுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸில் போட்டிருந்த மையக் கருவிற்கு கொஞ்சம் எனது பாணியில் பவுடர் அடித்து தலை சீவி சிங்காரித்து இங்கே உலவ விட்டேன்.  மேக்கப் ஓவரா போய்டிச்சு. ஸாரி!

பட உதவி: kingskidonline.com என்ற சைட் படம் சுட்டுக்கச் சொல்லி உதவியது. இந்த அக்கா தம்பியின் கண்ணில் பொங்கும் அந்த மகிழ்ச்சி வாழ்க்கையில் நிலைத்து இருக்க வேண்டிக்கொள்வோம்.

-

Tuesday, October 26, 2010

வார்த்தை சவால்

words

பரிசல் நடத்தி முடிச்சா மாதிரி இது ஒன்னும் சவால் சிறுகதை போட்டி இல்லை. அகில உலகிலும் ஆணி அடித்து வியாபித்து இருக்கும் நம் நண்பர் வட்டாரம் ஓயாமல் மெயிலில் எதையாவது அணுப்பிக்கொண்டே இருக்கிறது. எழுபது சதவிகிதம் வெட்டி மெயில் தான் பரிமாறிக்கொள்ளப்படுகிறதாம். இந்த அட்ரெசுக்கு மெயில் பண்ணுங்க நான் ஒரு பில்லியன் டாலர் தரேன் போன்ற வெறுப்பேற்றும் ஸ்பாம் மெயில்கள் விடாமல் கொசு மாதிரி நம் இன்பாக்ஸை மொய்த்தாலும் சில நேரம் அபூர்வமாக இது போல அறிவார்ந்த விஷயங்களும் வருகின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அதுவும் நம்மை நோக்கி வருகின்றன.  இங்கே கீழ் காணும் வார்த்தைகளை பாருங்கள். இந்த பட்டியலிடப்பட்ட வார்த்தைகள் எல்லாவற்றிக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. எல்லாம் ஒரு நியதிக்கு உட்பட்டவை.
 
Banana
Dresser
Grammar
Potato
Revive
Uneven
Assess


என்னவென்று கண்டு பிடித்தாயிற்றா? அல்லது நீங்களும் என்னை போலவா. விடை தெரிய வேண்டுமா...











எல்லா வார்த்தைகளிலும்  இரண்டு இரண்டு முறை சில எழுத்துக்கள் வந்திருக்கிறது என்பது உங்களது விடையா. அது இல்லை... என்ன வென்று தெரிய வேண்டுமா? கீழே பாருங்கள்....





எல்லா வார்த்தைகளிலும் முதல் எழுத்தை எடுத்து பின்னால் சேர்த்தால் மீண்டும் அதே வார்த்தையே மிஞ்சும். எப்படி. இப்படி ஒரு அறிவார்ந்த பதிவு போடாமல் என் பிளாக் ஜென்மம் ஈடேறாது அல்லவா. நன்றி.

இதை மெயிலில் அனுப்பிய தோழனுக்கு நன்றி.

பட உதவி: dehats.com
-

மன்னார்குடி டேஸ் - சை.சிகா - எக்ஸ்ட்ரா பிட்

wheelingஇந்த அண்ட சராசரத்திலேயே சைக்கிளுக்கு டிரைவர் வைத்த ஒரு ஒரே மாதிரிக் குடும்பம் எங்களதுதான். ஐந்தாம் வகுப்பிலிருந்து தேறிய என்னை மேல்படிப்புக்கு தேசிய மேல் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு இங்கிலீஷ் மீடியம் சேர்த்து விட்டார்கள். இப்போது போல் பிள்ளைகளை வீடுவீடாக கலெக்ட் பண்ண ஸ்கூல் பஸ் கிடையாது. ஆகையால் நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரிந்த ஒரு அன்பரை எனக்கு பைலெட்டாக ஏற்பாடு செய்தார்கள். இடையில் ஒரு அழுக்கு வேஷ்டி. கடைசி ரெண்டு பட்டன் மட்டும் கடனுக்கு என்று போட்ட கட்டம் போட்ட சட்டை. நாற்பதிலிருந்து நார்ப்பத்தைந்து தாண்டாத இளங்கிழவர். தலையின் முன் பாகத்தில் கால் கிரவுண்டு சொத்து சேர்த்து வைத்திருந்தார். வாய் மட்டும் ஒன்னும் இல்லாமலேயே மாவு மிஷின் போல அரைத்து கொண்டிருக்கும். சில சமயம் நமக்கு அர்ச்சனை நடக்கிறதோ என்று கூட தோன்றும். இந்த லட்சனங்களுக்கு சொந்தக்காரர் கோவிந்து. எனக்கு சைக்கிளோட்டி.  போய் வர ஸ்கூல் தூரம் ஜாஸ்தி என்பதால் இந்த வாகன ஏற்பாடு. தினமும் ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு வருவார். காலையில் ஸ்கூல் வாசலில் இறக்கிவிட்டு விட்டு மாயமாய் மறைந்து விடுவார். மாலை பள்ளி விட்ட உடன் திருவிழா கூட்டத்தில் தவறிய குழந்தை போல பேபே என்று பேய் முழி முழித்துக்கொண்டு தேடினால் பள்ளிக்கு வெளியே ஒரு மூலையில் சைக்கிளை சுவற்றுக்கு முட்டுக்கொடுத்து சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பார். "எங்க மாமா போய்ட்டீங்க?" என்றால் "எவ்வளவு நாளி உன்ன தேடறது?" என்று வாய் அரவைக்கு கண நேரம் ஒய்வு கொடுத்து முகத்தை சுளுக்கி கேள்வி கேட்பார். அப்படியே பயந்து டிராயர் நனைவதற்குள் ஏறி உட்கார்ந்து விடவேண்டும்.

அவர் ஒரு வாடகை சைக்கிள் எடுத்து வரும் வாடகை டிரைவர் ஆகையால் பல குறுக்கு வழிகளில் வீட்டிற்கு அழைத்து வருவார். நேரே பந்தலடி வந்து உடுப்பி கிருஷ்ண பவன் தாண்டி பால் சொசைட்டி சந்து வந்து திரும்பி மீன் மார்க்கட் வாசனையுடன் தாமரைக்குளம் வடகரை அடைந்து உப்புக்கார தெரு மாரியம்மன் கோயில் வழியாக சின்ன கான்வென்ட் தாண்டி வீட்டில் வந்து இறக்குவார். நடுவில் நோ பேச் மூச். கப் சிப். சில சமயம் பெல் அடிக்காத சைக்கிள் என்றால் மாட்டு வண்டி போல வாயாலே விரட்டிக்கொண்டு வருவார். தெருவில் பலபேரது வித்தியாசமான பார்வை எங்கள் மேல் விழும். ஆனால் மனிதர் எதையும் பொருட்படுத்த மாட்டார். கருமமே கண்ணாயினார்.

ஒரு நாள் மாலை கேரியர் வைத்த சைக்கிள் வாடகைக்கு கிடைக்காமல் முன்னால் பாரில் உட்காரவைத்துக்கொண்டு புறப்பட்டார். புறப்படும் போதே புத்தக மூட்டை ரெண்டு மூன்று முறை அவர் காலில் தட்டிற்று. "ச்... ச்..." என்று சொல்லிக்கொண்டே ஓட்டிக்கொண்டு வந்தார். வீட்டுக்குளிருந்து யாராவது கேட்டால் நடு சாலையில் சத்தமாக கிஸ் அடிக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். பால் சொசைட்டி சந்திலிருந்து மீன் மார்க்கெட் வருவது ஒரு நாலடி அகல சந்துதான். மிகக் குறுகிய ஒன்று. எதிரே ஷகீலா நடந்து வந்தால் சைக்கிளை பின்னால் எடுத்து அவர் போனபின்பு தான் நாம் போக முடியும். அதற்குள்ளே ஒரு வளைவு வேறு. எல்லோர் வீட்டிலிருந்தும் கழுவியது குளித்தது என்று சகல தீர்த்தங்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு சிற்றாறு போல சாக்கடை ஒன்று அரையடிக்கு ஓடிக்கொண்டிருக்கும். நீங்கள் கணக்கில் கெட்டி என்றால் இப்போது மீதமிருப்பது மூனரை அடி என்று நான் இங்கே சொல்ல வேண்டியதில்லை. அப்போது தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. எங்களைப்போல் குறுக்கு வழி தெரிந்த இரண்டு பேண்ட் போட்ட பெரிய கிளாஸ் அண்ணாக்கள் நம்ம பைலட்டை ஒரு கட் கொடுத்து முந்தி சென்றார்கள். ஏற்கனவே புத்தக மூட்டை வேறு இடித்ததால் அவ்வப்போது ஆட்டி ஓட்டியவர் பிட்ஸ் வந்தவர் ஹாண்டில் பார் பிடித்த கணக்காக ஆட்டி ஆட்டி மிகச் சரியாக நேரே கொண்டு போய் அந்த புண்ணிய தீர்த்தத்தில் என்னை "தொப்" என்று இறக்கினார். அதென்னவோ என்ன மாயமோ தெரியலை ஒட்றவங்களுக்கு எதுவுமே ஆகறதில்லை. பொறுமையாய் என்னை மீட்டெடுத்து ஒரு அதீத வாசனையுடன் என்னை வீடு வந்து சேர்த்தார்.  "ஏண்டா தம்பி ஸ்கூல்ல ஒழுங்கா படிக்கலைன்னு பனிஷ்மென்ட்டோ" என்று வழக்கம் போல் எகத்தாளத்துடன் முன் பல் தெரிய சிரித்தாள் என் பாட்டி.

வெளிச் சேர்க்கை: சைக்கிளை நேரே ஓட்டுவதர்க்கே ததிகினத்தோம் போடும் நிறைய மகானுபாவர்கள் நிறைந்த இன் நன்னாட்டில், நம்மூர் திருவிழாவில் விடியவிடிய சைக்கிள் ஒட்டும் வீரர்கள் செய்யும் சாகசங்கள் போல கீழே ஆட்டம் போடும் இந்த வெள்ளைக்காரனை பாருங்கள்.  அதுவும் ஒரு சைக்கிளில் இருந்து இன்னொரு சைக்கிளுக்கு தாண்டி அதை ஓட்டிச் செல்வான் பாருங்கள். காண கண் கோடி வேண்டும்.



அது சரி. இந்த வீடியோவை நம்ம கோவிந்து பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பார்? யோசியுங்கள்! நானும் திங்க் பண்றேன். அடுத்த பதிவில் சந்திப்போம்.

பட உதவி: மேலிருக்கும் சைக்கிள் வீலிங் படத்தில் இருப்பது நான் என்று இந்நேரேம் நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. அந்தப் படம் cycling.bikezone.com என்ற இடத்தில் இருந்து சந்தோஷமாக எடுத்தது.

-

Monday, October 25, 2010

மன்னார்குடி டேஸ் - சைக்கிலோட்டிய சிகாமணிகள்

மன்னையில் பிறந்த வெள்ளையன் அவன். வாமன ரூபம். அதிரூப சுந்தரனாய் இல்லாவிட்டாலும் பார்த்தாலே அசால்ட்டாக சொல்லிவிடலாம் அவன் ஒரு அம்மாஞ்சியான வெகுளி என்று. அனந்தபத்மநாபன் எப்போது அப்புவானான் என்று சரியாகச் சொல்ல என் ந்யூரான்கள் இப்போது ஒத்துழைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. காலை எக்ஸாக்ட்டா 8:45 'துப்பாக்கி' மணிக்கு (Gun Time) "கிணிங்.கிணிங்." என்று வீட்டு வாசலில் சைக்கிள் பெல் கதறினால் நிச்சயம் அது அப்புதான். "வெள்ளக்காரன் தோத்தான் போ" என்று ராகம் பாடுவாள் பாட்டி. அப்படி ஒரு டைமிங். புத்தக மூட்டையை காரியரில் வைத்து நன்றாக இழுத்து ஒடிய ஒடிய கிளிப் போட்டு 8:46க்கு முன் வாசலில் இறங்கிவிடவேண்டும். இல்லையென்றால் இன்னும் நான்கு முறை ஓயாமல் மணி அடித்து படுத்துவான். எனக்கு இந்த சைக்கிள் எப்படி கிடைத்தது என்ற அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை இப்போது நான் கட்டாயம் சொல்லவேண்டும். வீட்டில் நட்ட நடு ஹாலில் குறுக்கால படுத்து தர்ணா, காலையில் டிபன் மட்டும் சாப்பிடாமல் உண்ணாவிரதம், எது கேட்டாலும் "உம்..உம்.." மட்டும் கொட்டி ஊமையான உம்மணா மூஞ்சி போன்ற எண்ணற்ற அறப்போராட்டங்களுக்கு பிறகு எட்டாம் கிளாஸ் முடித்தபின் ஒரு ஹெர்குலஸ் சைக்கிள், டயரின் ரெண்டு பக்கம் வெள்ளை கலரோடு கிடைத்தது. இத்தனைக்கும் நான் குரங்கிலிருந்து பாருக்கு ரெண்டே வாரத்தில் முழுத் திறமை காட்டி மாறி விட்டேன் என்று முக்கு சைக்கிள் கடை பூபதி நற்சான்றிதழும் பாராட்டு பத்திரமும் எல்லோருக்கும் தெரியும்படி வழங்கியிருந்தான். மேடை போட்டு கோட்டு மாட்டி தலையில் கருப்பு குல்லா அணியாத குறையாக நான் பெற்ற 'பெஸ்ட் சைக்கிளிஸ்ட் ஆப் தி இயர்' பட்டத்தை எல்லோரிடமும் பெருமையாக அவன் வாயாலேயே சொன்னான்.

haridhranadhi

அப்பு ஐந்தடிக்கும் ஓரங்குலம் ரெண்டங்குலம் கொஞ்சம் உயரமாக இருப்பான். ஆள் கட்டையாக இருந்தாலும் கட்டை சைக்கிள் ஓட்டுவது மரியாதைக் குறைவு என்றும் இந்த தேசத்திற்கே இழுக்கு என்றும் நினைத்தான். அவனை பொறுத்தவரையில் அது ஒரு அவமானகரமான செயல். ஒரு ஹை ஜம்ப்பில் ஏறி சீட்டில் உட்காரும் அளவிற்கு இருக்கும் ஒரு பெரிய சைக்கிள் வைத்திருந்தான். ஹாண்டில் பார் பிடித்து சைக்கிளை பரபரவென்று காலால் உந்தி தள்ளி எகிறி அவன் உட்காரும் போது எங்காவது பாலன்ஸ் தவறி கீழே விழுந்து மூஞ்சி முகரை எகிறி விடப்போகிறது என்று எதிரே வருவோர் சகல மரியாதையோடு சாலையை விட்டு இறங்கி வணங்கி வழி விடுவர். சின்னக் கவுண்டர், எஜமான்,சட்டை போடாத விஜயகுமார் நாட்டாமை போன்றோருக்கு மக்கள் இருமருங்கும் பக்தியோடு நின்று குலவை இட்டு மரியாதை தருவது போல தனக்கும் தருகிறார்கள் என்று அவன் அப்போது நினைத்துக்கொள்வான். எட்டாத பெடலை எட்டித் தொட சீட்டில் உட்கார்ந்துகொண்டே வலது இடது கால்களை கீழே இறக்கி ஏற்றும் போது பிரபு தேவா இவனை குருநாதராக வைத்து பிரேக் டான்ஸ் கற்றுக்கொள்ளலாம். இப்படி ஒட்டுவதால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சைக்கிள் சீட்டும் நிஜாரும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது வாஸ்த்தவம்தான்.

இப்போது சாமியாகிய என் அப்பா சைக்கிள் வரம் கொடுத்தாலும் பூசாரியாகிய கடைக்காரர் எப்போது கொடுத்தார் என்று சொல்ல வேண்டிய கட்டம். மேல ராஜ வீதியில் முருகப்பா சைக்கிள் மார்ட்டில் சைக்கிள் ஆர்டர் கொடுத்தோம். கடைத்தெருவில் கிருஷ்ணா பிஸ்கட் பாக்டரிக்கு நேரெதிர் கடை. பெயர் கிருஷ்ணா என்று இருந்தாலும் பகுத்தறிவு பகலவன்கள் கூடும் இடம் அது. கோபால் ரெடிமேட் கடைக்கு நாலு கடை பீச்சாங் கை பக்கம் இருந்தது. இன்னென்ன ஸ்பேர் பார்ட்ஸ் போட வேண்டும் என்று மெனு சொல்லிவிட்டால் அதை அவர்கள் ஒன்றாக கோர்த்து தருவார்கள். ரிஃப்ளெக்டர் வைத்த பெடல், மஞ்சள் கலர் வெல்வட் துணி போட்டு மூடிய ஹெட் லைட், முன்னால் பாருக்கு குஞ்சலங்கள் வைத்த ஒரு கோட்டு, அடங்கிய ஆட்களை சுமக்க தோதாக ஒரு கேரியர், பிருஷ்டத்தை பாதுகாக்க குஷன் வைத்த சீட், "கிளிங்.கிளிங்" என்று ஓல்ட் பாஷனாய் அடிக்காத "ட்ரிங்...ட்ரிங்..." மணி, பின்னால் உட்காருபவர் கால் வைக்க ஃபுட் ரெஸ்ட் என்று எல்லா பாகங்களுக்கும் ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. காலையில் ஊரான் சைக்கிளில் ஸ்கூலுக்கு ஓ.சி சவாரி செய்யும்போதே டெலிவரி பற்றி கல்லாவில் விசாரித்ததில் "சாயந்திரம் வந்து எடுத்துக்கோங்க தம்பி" என்று பதவிசாக சொல்லி ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டார்கள். அன்றைக்கு படிப்பை கெடுத்தார்கள். பின்ன என்ன. நாள் முழுவதும் சாயந்திரம் வரப்போகும் புது சைக்கிள் ஞாபகம் வாட்டி எடுத்துவிட்டது. ஆள் மெலியாதது தான் குறை. ஸ்கூல் விட்டு சாயந்திரம் வந்து ஆசையில் வாய்பிளந்து கேட்டபோது, ஒரு சகடையில் ரிம்மை மாட்டி வைத்து உடுட்டி விளையாண்டு கொண்டிருந்தவரை காண்பித்து "உங்களுது தான் பார்த்துக்கிட்டு இருக்காரு. புது வீலு கோட்டம் எதுவும் இருக்கக் கூடாதுல்ல.." என்று பாந்தமாக சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டிற்கு போய்விட்டு திரும்பவும் ஓட்டமும் நடையுமாக கடைக்கு வந்து இரவு பத்து மணிக்கு கடை அடைக்கும் வரை உட்கார்ந்திருந்து டெலிவரி எடுத்த சைக்கிள் அது. எவ்வளவு பேர் சீட்டு வாங்கினார்கள், டயர் டியூப், மட் பிளாப், பிரேக் கம்பிக்கு நய்லான் சட்டை என்று சகல சாமான் வாங்கினவர்களும் கடையில் நானும் ஒரு ஆள் என்று நினைத்திருப்பார்கள். மறு நாள் காலையில் ஒத்தைத் தெரு பிள்ளையார் கோயிலில் மல்லிப்பு மாலை போட்டு ரெண்டு வீலுக்கும் எலுமிச்சை பழம் வைத்து சைக்கிள் பூஜை. பூஜைக்கு முன்னாடியே ரெண்டு நாளைக்கு முன்னால் ஒரு புது சைக்கிள் திருட்டு போய்விட்டது என்று ஒரு நலம்விரும்பி என் காது பட கூறியதால் துள்ளிக்குதிக்கும் காளைக் கன்னுக்குட்டியை கயிறு கட்டி கையில் பிடித்திருப்பது போல ஹாண்டில் பாரில் வைத்த கையை எடுக்காமல் ஒரு கையால் சூடம் எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டேன்.

டெலிவரி எடுத்த ரெண்டாவது நாளே எனக்கு இடுப்பளவு உயரம் இருக்கும் பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் தூக்கி ஏற்ற முடியாமல் செயின் கவரில் ஒரு டங்கு விழுந்து அமுங்கியது. நம்மை விட உயரத்தில் கம்மியான அப்பு எப்படி சமாளிக்கறான் என்று அந்த தேவ ரகசியத்தை அறிய முற்ப்பட்டபோது தான் தெரிந்தது அவன் பள்ளியின் பெரிய அண்ணாக்களின் தயையில் வண்டிக்கு அடிபடமால் பார்த்துக்கொள்கிறான் என்று. சைக்கிள் வந்ததிலிருந்து கால் ரெண்டையும் பப்பரக்கா என்று பரத்தி ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டது தான் சைக்கிள் மேனியாவின் உச்சக்கட்டம். "முக்கு கடையில் போய் சீயக்காய் பொட்டலம் வாங்கிண்டு வாடா" என்று பாட்டி சொன்னால் உடனே ஜிங் என்று பாய்ந்து வந்தியத் தேவன் குதிரை போல ஏறி ஆரோகணித்து பறந்து போய் வாங்கிக்கொண்டு வருவேன். "நதியா டைலர் ஜாக்கெட் தச்சுட்டானான்னு பாரு" என்றால் மறுபடியும் ஜிங், வ.குதிரை, பற. இப்படி எல்லாவற்றிற்கும் ஜிங், வ.குதிரை, பற என்று இருந்ததால் "எங்காத்து தம்பி விஸர்ஜனத்துக்கு கொல்லைப் பக்கம் போறத்துக்கு கூட சைக்கிள்ல தான் போவன்" என்று தன் உற்ற தோழி பக்கத்தாத்து கோபி பாட்டியிடம் உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள்.

இப்படி வாழ்க்கையில் சைக்கிள் போக்குவரத்து வந்ததும் தெருவிலிருந்தும் பள்ளி திசையிலும் செல்வோர் "சைக்கிளில் பள்ளி செல்வோர் சங்கம்" என்று எதுவும் ஆரம்பிக்காமல் ஒன்று கூடினோம். தினமும் காலையில் நான், கோபிலி, அப்பு மூன்று பெரும் ஒன்றாக செல்வோம். நான் ஸ்கூல் கிரிக்கெட் அணியில் இருந்ததால் மாலையில் ஒண்டியாக வீட்டிற்கு வருவேன். காலையில் மூவரும் சேர்ந்து ஒரு ஆறு கால் வாகனம் போல ரோடை அடைத்து  சேர்ந்து செல்வோம். எங்கள் தெருவிலிருந்து ஃபயர் சர்வீஸ் தாண்டி தேரடி தொடாமல் தாலுக்காபிஸ் ரோடில் திரும்பி தாமரைக்குளம் வந்தடைந்து குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடைக்கு நேரே பெரிய கடைத்தெருவை பிடித்து நேரே ஜீவா பேக்கரி தாண்டி பந்தலடி வந்து அழகப்பா தாளகம் தாண்டி ஸ்கூலுக்கு வந்து இறங்குவோம். சைக்கிளின் புது டயர் வாசனை இருக்கும் வரையில் யாரையும் ஒட்டாமல் உரசாமல் மிகவும் ஜாக்கிரதையாக ஓட்டினேன் என்று நினைவு.

சாயந்திரம் 05:30 மணிக்கே டைனமோவை தட்டி விட்டு ஹெட்லைட் போட்டு கையை முன்னாடி நீட்டி கையில் வெளிச்சம் அடிக்கிறதா தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே ஓட்டியதில் சீக்கிரத்தில் டயர் தேய்ந்து விட்டது. டைனமோ பக்கம் புள்ளைத்தாச்சி வயறு போல டயர் வீங்கியது தெரியாமல் மேலும் மேலும் ஏறி ஏறி அழுத்தி ஓட்டியதில் தாமரைக்குளம் முடியும் இடத்தில் "படார்" என்று பலத்த ஓசையுடன் வெடித்து உயிரை விட்டது. தீபாவளியின் போது நான் வெடித்த லெக்ஷ்மி வெடியை விட ஒரு மடங்கு சத்தம் அதிகம். அங்கே குளத்தோரம் நின்றுகொண்டே அற்பசங்கைக்கு ஒதுங்கிய ரெண்டு பேர் நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல திரும்பி பார்த்தார்கள். நிச்சயம் கையை ஈரம் பண்ணிக்கொண்டிருப்பார்கள். மாலை முரசில் செய்தி வராதது தான் பாக்கி. அப்படியே தள்ளிக்கொண்டு பக்கத்தில் இருந்த சை.கடைக்கு வந்தால் டயர் மற்றும் டுயூப்தான் மாற்றவேண்டும் என்று சொல்லிவிட்டான். நின்று டயர் மாற்ற லேட் ஆகும் என்பதால் கடை வரை உருட்டிக்கொண்டு வரும் வரை பொறுமையாக இருந்த அப்பு "வெங்குட்டு.. மாத்திகிட்டு வா..." என்று ரெண்டே வார்த்தையில் என்னை அறுத்து விட்டு விட்டு அந்தக் கூட்டத்திலும் அவன் பாணியில் சைக்கிள் ஏறி பறந்தான். ஸ்கூல் லேட்டாக போனால் பல பீரியட்கள் முட்டி போடுவது, உட்கார்ந்திருக்கும் சக மாணவர்களுக்கு ஜட்டி தெரிய பெஞ்சில் ஏறி நிற்பது போன்ற படுபயங்கர கொடுந்தண்டனைகளுக்கு நான் ஆளாக நேரிடும் என்று புரியும்படி எடுத்துச் சொன்னதில் "சரி.. அப்பாவிடம் வாங்கிக்கொள்கிறேன்...மாத்துப்பா..." என்று தயாளமூர்த்தியாக டயர் மாற்றிக்கொடுத்தார் அந்த புண்ணியவான்.

மிதிக்கும் போது அவ்வப்போது அப்பு பெடலை விட்டு விடுவான். உயரமின்மையால் ஸ்லிப் ஆகிவிடும். அந்த சமயங்களில் கத்துக்குட்டி சைக்கிள் ஓட்டுவது போல அப்புக்குட்டி ஹாண்டில் பாரை இப்படி அப்படி ஆட்டுவான். ஒரு நாள் இதே போல பள்ளி செல்லும் போது தாமரைக்குளம் ரோடில் ராஜா டிம்பர் டெப்போ அருகில் அவ்வளவாக கூட்டம் இல்லை. முன்னால் நானும், கோபிலியும் செல்ல அப்பு பின்னால் வந்தான். கோபிலி ஒரு தனி ரசனையாக சைக்கிள் ஒட்டுவான். அன்றைக்கு சாலையின் இடது கோடிக்கும் வலது கோடிக்கும் எஸ் போட்டு ஓட்டிக்கொண்டே வந்தான். பின்னால் வந்த கொடுவா மீசை வைத்த ஒரு பெருசு "ஏய்.. என்ன ரோடை அளக்குரீங்களா?" என்று அதட்டல் போட்டது. உடனே நம்மாளு "ஆ.. டயர்ல இன்ச் டேப்பு கட்டியிருக்கோம். அதான் அளக்குறோம்." என்றான். லெஃட்டு ரைட்டு என்று ஒரு பிடி பிடித்தார் கொ.மீசை. ஹாண்டில் பாரை பிடித்து சீட்டை விட்டு மரியாதையாக எழுந்து நின்று மாங்கு மாங்கென்று பெடலை அழுத்தி நாங்களும் ஒரு பிடி பிடித்தோம். பந்தலடி வந்து தான் திரும்பி பார்த்தோம். மணிக்கூண்டு பள்ளியின் முதல் மணிக்கு இன்னும் ஐந்து நிமிடம்  இருப்பதாக காட்டியது. அப்பு சொன்னான் "இப்படி தினம் யாராவது நம்மளை துரத்தினா நாம கரெக்டா டயத்துக்கு ஸ்கூலுக்கு வந்துருவோம்ல?" என்று அப்பாவியாக கேட்டான்.

பாவிகள் நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம்.

பட விளக்கம்: மனதை மயக்கும் ஒரு மாலை வேளையில் மேல் கரையில் அன்றைய டூட்டி முடித்து இறங்கும் மிஸ்டர் பாஸ்கரனோடு ஹரித்ராநதியின் எழில்மிகு தோற்றம். ஊர்ப் படங்கள் கிடைப்பதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. அடுத்த பதிவுகளுக்கு எப்படியாவது ஏற்ப்பாடு செய்து பதிகிறேன்.

பட உதவி: panoramio.com

-

Saturday, October 23, 2010

தக தக தக....

லக லக லக தானே நம்ம தலைவர் சொல்லி கேட்ருக்கோம் இதென்ன புதுசா தக தக தக அப்படின்னு இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறவர்களின் மேலான கவனத்திற்கு. இது நம்ம ஆசுகவி மகாகவி பாரதியின் கூத்துப் பாடல். பாரதியின் சிவசக்தி கூத்து. நித்யஸ்ரீ மகாதேவனின் ஸ்ட்ராங் ஆன அமுதக் குரலில் கேட்டேன். சில நாட்களில் புத்துணர்வு பெற மனசை ஒரு கிள்ளு கிள்ளி முறுக்கேற்ற அவ்வப்போது கேட்ட பாடல் தான். இந்த ஷணத்தில் மீண்டும் கேட்டபோது மீசைக்காரனின் பாட்டில் நித்யஸ்ரீயின் குரலில் பாரதி வலது பக்கத்திலும் சிவனும் சக்தியும் இடது பக்கத்திலும் நேரே வந்து கம்ப்யூட்டர் டேபிளின் மானிடர் பக்கத்தில் வந்து ஒரு ஆட்டம் போட்டுவிட்டு போனார்கள். எவ்வளவு சக்தி மிகுந்த வரிகள். "குகைக்குள் அங்கே  இருக்குதடா தீப்போலே. அது குழந்தையதன் தாயடிக் கீழ் சேய் போலே ". தீந்தமிழ் எழுதிய அவன் கைகளில் இருந்து சர்வ நிச்சயமாக தீப்பொறி பறந்திருக்க வேண்டும். எப்படி தாள் பத்திக்காம இருந்தது?

sakthi koothu

இதை அப்படியே நித்யஸ்ரீயின் திவ்யமான  குரலில் கீழே...


பின் குறிப்பு: நன்றாக இருந்ததா? இதுபோல சில பக்கா  பாடல்களின் களஞ்சியம் கைவசம் உள்ளது. அதுகள் அவ்வப்போது தீடீரென்று மின்னல் போல தலையை நீட்டி இந்த வலைப் பூவில் வந்து எட்டிப் பார்க்கும். இந்தப் பக்கம் மறுபடியும் வந்தால் காதை தீட்டிக் கொண்டு வாருங்கள். கேட்டு இன்புறுங்கள். நன்றி.

-

கவர்ச்சி கண்ணர்கள்

கண்ணுக்கு மை தீட்டி கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்து மொட்டை அடிப்பதற்குள் காடாய் வளர்ந்த முடியை ஜடை பின்னி  ஃப்ராக் மாட்டி விட்டு அஞ்சு வயசு ஆவதற்குள் ஆசையாய் அழகு பார்த்திருப்பார்கள்.  

ஊரில் திருவிழாக்களில் குறவன் குறத்தி ஆட்டங்களில் குறத்தி வேடம் இட்டிருப்பது சுத்தமான ஆம்பிளை தான் என்று நண்பர்கள் உண்மையை எடுத்து இயம்ப அந்த ஆட்டம் அதற்க்கு மேல் ரசிக்கும் படியாக இல்லை.

புஜபலம் மிக்க பெண்கள் அவ்வளவாக நம்மை கவர்வதில்லை. ஆனால் சுத்த யவ்வன புருஷர்கள் மேக்கப் ஆட்களின் கை வேலையில் ஆளை கிறங்கடிக்கும் அழகுடன் மாற்றப்படுகிறார்கள். அவ்வாறு மாறியதில் இந்த வரிசைக்கிரமாக இவர்கள் தத்தம் இடத்தை பிடிக்கிறார்கள்.

முதலிடம்  ஷண்முகி மாமிக்கு தான். வயசானாலும் மணிவண்ணன், ஜெமினி கணேசன் போன்ற எல்லோரையும் மயக்கியவர். மடிசார் கட்டிண்டு ஆடும் இந்த பரத நாட்டிய முத்திரையை பாருங்கள். பரத முனிவருக்கே கற்றுத் தருவார் நம்ம காதல் இளவரசன். கமலுக்கு ஒரு பதிவு நான் தனியா போடணும்ன்னு இருக்கேன். பார்க்கலாம்.


இரண்டாவதாக ஆணழகன் படத்தில் பேரழகியாக நடித்த நம்ம பிரசாந்த். இதே வேஷத்தில் இன்னும் கொஞ்ச படங்களில் அடவு கட்டியிருந்தார் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் திரிஷா, தமண்ணா போன்ற முன்னணி ஹீரோயினிக்கள் மார்க்கட் நிச்சயம் அதல பாதாளத்திற்கு போயிருக்கும்.  கீழே அந்தப் பார்வையை பாருங்களேன். அப்படியே சொக்கிப் போய் விடுவீர்கள்.

prashanth - aanazhagan

மூன்றாவதாக நம்ம சூப்பர் ஸ்டார். பணக்காரனில் ஒரு பாட்டுக்கு மட்டும் வேஷம் போட்டு வந்தாலும் தலையை குலுக்கு குலுக்கி ஆடும் போது மனசை பிடித்து ஒரு உலுக்கு உலிக்கிடுவார்.
rajini-panakkaran
நான்காவதாக இந்த ரேசில் சமீபத்திய சேர்க்கை அண்ணன் விக்ரம். கந்தசாமி எப்படியோ ஆனால் இந்த 'கன்னி'சாமி எப்படி இருக்கிறார் பாருங்கள். கல்லடி பட்டாலும் இந்த சாமியின் கண்ணடி பட்டால் ஆள் நிச்சயம் க்ளோஸ். காதுல அந்த லாங் இயர் ரிங் நல்லா இருக்கு இல்ல. அதுக்கு மேச்சா நெக்லஸ் வேற.


vikram-kandasamy

கவுண்டரும் சத்யராஜும் மாமன் மகளான மீனாவிடம் பண்ணும் அழும்பு. சத்யராஜ் இங்கிலீஷ் பேசுவார் பாருங்க இந்த சீன்ல. அடாடா. அசப்புல நம்ம நமீதாவுக்கு அக்கா மாதிரி இல்லை நம்ம சத்யராஜ். கவுண்டர் தான் பாவம். வேடிக்கை பார்க்க விட்டுட்டாங்க.

sathyaraj - maman magal



கீழே குளக் குளியல் சீனில் வரும் விவேக் படிக்காதவனில் அடிக்காத கொட்டமே இல்லை. ஏக்கத்தோடு வெட்க லுக் விடும் விவேக் நாயகிகை பிரதான சப்ஜெக்ட்டாக வைத்திருக்கும் எந்த டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் கண்ணிலும் படாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் தமிழ்கூறும் நல்லுலகிர்க்கு ஒரு நாயகி உதயமாகிறாள்.

vivek


எல்லோரையும் பார்த்தாயிற்றா.... ஓ.கே. முடிவாக வானிட்டி ஃபேர்  என்ற இணைய தளத்தில் வெளியிட்டிருந்த ஒரு கவர்ச்சியான காலேண்டர் அட்டைகளைதான் இப்போது பார்க்கப் போகிறீர்கள். வெள்ளைக்கார...ரிச்சி.. மூச்சடைத்துப் போய் விடாதீர்கள். இந்த முன்னச்செரிக்கை மூலமாக உங்களை கொன்ற பாவத்திலிருந்து நான் தப்பித்துக் கொள்கிறேன்.

என்னா  போஸு... அடாடா... 
kavarchi2

என்னா  லூக்கு......

kavarchi1


பின் குறிப்பு:
இந்தப் போஸ்டர் உங்களது 2011 ம் வருடத்திய காலண்டரை அலங்கரிக்க வேண்டுமென்றால் தயவு செய்து என்னை தொடர்புகொள்ள வேண்டாம் என்று பயபக்தியுடன் கேட்டுக்கொள்கிறேன்.  கீழ்கண்ட முகவரியில் போய் விசாரித்தால் உங்களுக்கு தக்க பதில் கிடைக்கலாம். நன்றி.
http://www.vanityfair.com/hollywood/features/2010/11/zach-galifianakis-slide-show-201011#slide=1

படஉதவி: விவேக் படம் hindia.in, கமல் படம் boddunan.com, மற்றவை வீடியோவில் இருந்து வீக் என்டிர்க்காக மக்கள் சந்தோஷத்திற்க்காக இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ப்ளாக் பதிந்த உங்கள் ஆர்.வி.எஸ் சுட்டது.

-

Friday, October 22, 2010

மன்னார்குடி டேஸ் - இணைந்த கரைகள்

ஒரு நாள் பொழுது விடிந்ததும் காலையிலேயே ஜனதா கட்சியின் சின்னம் போல உழவுக்கு ஏர் கலப்பை எடுத்துச்செல்லும் உழவர் பாணியில் தோளில் மட்டையை சாய்த்து ஆனந்த் வந்தான். அன்று வெய்யில் பாழ் போகாமல் முழு நேரமும் விளையாட எங்கள் கிரிக்கெட் கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கனவே விளையாண்டுகொண்டிருந்த காசி விஸ்வநாதர் கோவில் பாலைவன நந்தவன மைதானம் தெருவில் தீடீரென்று சிவானுக்ரஹம் பெற்ற புண்ணியாத்மாவின் காரியத்தால் நிஜமாகவே செம்பருத்தியும், நந்தியாவட்டையும், பவழமல்லியும் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாக ஆக்கப்பட்டிருந்தது. தெருவில் விளையாடலாம் என்றால், காலை மடக்கி ஒரு திருப்பு திருப்பினால் பந்து குளத்துக்குள் போய் விழுந்துவிடும். ஒவ்வொரு கல்லாக பந்திற்கு அப்பால் எறிந்து பந்து கரைக்கு ஒதுங்கியதும் எடுப்பதிற்குள் தாவு தீர்ந்துவிடும். பல லோடு கருங்கல் செங்கல் உள்ளே இறக்கியிருப்போம். விளையாடும் நேரத்தை விட குளக்கரை ஓரம் நின்று கல் எறிவதில் அதிக நேரம் செலவழிப்பதாகப்பட்டது. ஒரு சில நாளைக்கு கிரிக்கெட் விளையாடுகிறோமா அல்லது எரி கல் ஆடுகிரோமா என்றே தெரியாமல் விளையாண்டோம். நாட்கள் செல்ல செல்ல தெருவில் உள்ள கற்கள் எல்லாம் குளத்தில் இறங்கி, தண்ணீர் தாகமடைந்த காகம் கதை போல, குளம் ஒரு படி மேலே வந்தது. இன்னும் கொஞ்ச நாள் எறிந்திருந்தால் குளத்தில் இருந்து தண்ணீர் வழிந்து ஹரித்ராநதி நிஜமாகவே ஒரு நைல் நதியாக தெருவில் ஓடியிருக்கும். அது மீன் பிடி குளமாகவும் இருந்தபடியால், ஏலதாரர் குஞ்சு பிள்ளை கண்டமேனிக்கு ஏசி விரட்டியதில் மைதானம் தேடும் படலம் மிகத்தீவிரமாக தொடங்கியது.

தெரு ஓரத்தில், சிவன் கோவில் தாண்டி, ஒரு கருவேலி முள் காடு ஒன்று உண்டு. பகல் வேலையிலும் பசங்களை பயமுறுத்தும் ஆள் அரவம் இல்லாத வனாந்திரம். வடக்குத்தெருவின் கீழண்டை முனையில் கடைசி வீடு, சேதுபவா சத்திரம் வழியாக வரலாம். அந்தக் காலத்தில் பலபேர் படுத்துறங்கவும் பசியாறவும் கட்டிய பெரிய திண்ணையில் இப்போது மேலிருந்து ஓடுகள் விழுந்து உதவாக்கரை திண்ணையாய் மாற்றியிருக்கும். ஓடுகள் உடைந்து விழுந்த இடத்தில் இருந்து பதினொரு மணி வெயில் மணி பட பி.ஸி ஸ்ரீராம் கேமரா போல ஆங்காங்கே வெளிச்சம் அடித்து திண்ணையில் வெள்ளையாய் கேலடியாஸ்கோப் டிசைன் போட்டிருக்கும். தூசிகள் உடைந்த மேற்கூரை ஓட்டிற்கும் திண்ணைக்கும் இடையில் உள்ள தூரத்தை புகையாய் பறந்து நிரப்பும். அந்த டிசைன் ஒளியில் திண்ணையில் ஏறி நின்று யாரவது ஊர் பேர் தெரியாத சாந்தி அங்க அவயங்களை கட்டாமல் ஆடினாலே டிஸ்கோ சாந்தி என்று அழைக்கப்படுவர். சத்திரத்தை மேற்பார்வை மற்றும் கீழ்ப்பார்வை பார்த்து வந்த ரேவதி மாமியின் அதிரடி தோற்றத்தைக் கண்டு அச்சப்பட்டே அந்த வழியாக கருவேலக் காட்டுக்கு போகும்  எண்ணத்தை கைவிட்டோம். ஒருத்தி இருவராய் தோற்றமளிப்பாள். கண்ணுக்கு மை அழகு என்று எழுதியவர் வாழ்வாங்கு வாழ வேண்டும். காருக்கு ரெண்டு ஹெட்லைட்டுக் கீழ் ஃபாக் லைட் இருப்பது போல மையால் கண்ணுக்கு கீழே இன்னொரு மாறு கண் வரைந்துகொள்வாள். நானிலம் அதிர அவள் நடந்து வரும் பொழுதே நமக்கு கிரிக்கெட் ஆசை போய் உயிர் மேல் ஆசை வந்துவிடும். ஆயிரம் ரஜினி சேர்ந்து "ச்சும்மா அதிருதில்லை.." சொன்ன எஃபெக்ட் இருக்கும். மற்றொரு வழி, சிவன் கோவில் நந்தவனத்திற்க்குள் நுழைந்து, சுவர் ஏறி தாண்டி குதித்து அதனுள் செல்ல வேண்டும். நீங்கள் எதிர்பார்த்தது போல் நாங்கள் இரண்டாவதான சுவர் ஏறி குதிக்கும் வழியை தேர்ந்தெடுத்தோம்.
shutters

சுவர் தாண்டி குதிக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கருவை முள் காலை எடுக்க விடாமல் பூமியோடு சேர்த்து தைத்துவிடும். அந்த காலகட்டத்தில் பூக்களின் படுக்கையாக இல்லாமல் Cricket is the path way of thorns எங்களுக்கு. ஹரித்ராநதிக்கு அரையளவு இருக்கும் அந்த இடம். ஆற்றின் குறுக்கே இருக்கும் சட்டரஸுக்கு(அணையை அப்படித்தான் அழைப்போம்) குர்க்கால நேர் எதிரே அமைந்த காடு அது. சுற்றிலும் அடர்ந்த கருவேலி காட்டான்கள். நன்றாக கொழுத்து வளர்ந்த டெல்லி எருமையை முழுசாக மறைக்கும் அளவிற்கு வளர்ந்த காட்டான்கள். எருமை மேலே எமன் ஏறி நின்றாலும் மறைக்கும் அளவிற்கு தழைத்து வளர்ந்த தாவரங்கள். அந்த காட்டிற்கு நடுவே ஒரு ஓங்கி உயர்ந்த ஒற்றை புளியமரம். "ஹோ..." என்ற பாமணி ஆற்றங்கரையின் காற்று கொடுத்த வெறுமையின் சப்தம். யாரோ அனானி அந்த மரத்தின் உச்சாணியில் ஒரு சிகப்பு கலர் கொடியை மூங்கிலில் சுற்றி கட்டியிருந்தார்கள். அந்தக் கொடி கிழிந்து காற்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது இஷ்டத்திற்கு ஆடும். மரத்தில் என்னைப்போல் ஒரு மாங்கா மண்டை நுழையும் அளவிற்கு பொந்தும் அதில் சில பெயர் தெரியா பறவைகளும் இருந்தது. பேய்ப் படங்களில் வருவது போல ஆந்தை ஒன்று அந்த மரத்தின் முதல் கிளையில் உட்கார்ந்திருக்கும். பெண்ணை பெற்ற அம்மா திருவிழா கூட்டத்தில் பெண்ணுக்கு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்து பார்த்து பாதுகாத்து பார்த்துக்கொண்டே இருப்பது போல தலையை அங்குமிங்கும் திருப்பிக் கொண்டே இருக்கும். ஆள் அரவமற்ற பகுதியில் அவ்வப்போது ஏதோ பறவைகளின் "க்ரீச் க்ரீச்" என்ற சப்தங்களும், "சட சட சட" என்று இறக்கை பட படக்கும் ஓசைகளும் கேட்ட வண்ணம் இருந்தது. ஆங்காங்கே சில உடைந்த வளையல்களும், கிழிந்த துணிகளும் கிடந்தன. உலகெங்கும் காணப்படுவது போல ஜோடி மாறிய ஒற்றை செருப்புகளும் இதில் அடக்கம். ஒரு கருப்பு நிற நாய் காலை நொண்டியபடி ஓடியது. மதிய வேளைகளில் முனி அங்கேதான் வாக்கிங் போவதாக வேறு பேச்சு. விளையாட இடம் தேவை ஆகையால், மட்டை பிடித்த கைகள், அரிவாள் பிடிக்க வேண்டியதாயிற்று. ஒரே நாளில் காடு அழிக்க முடிவானது. இப்போது சா.கந்தசாமியின் சாயாவனம் நினைவுக்கு எனக்கு வருகிறது. இரண்டு நாட்கள் எல்லா முட்புதர்களையும் வெட்டிய பின் சிலர் அடுப்புக்கு எடுத்து போனார்கள். நாங்கள் நாட்டுக்கு செய்த ஒரே உபயோகமான காரியம்!!!

விளையாட்டு ஆரம்பமாகியது. பக்கத்தில் இருக்கும் ரோஹினி வீட்டில் இருந்து தாக சாந்திக்கு தண்ணீர் அண்டா வைத்துக் கொண்டு ஓரிரு நாட்கள் ப்ராக்டீஸ் ஆட்டத்திற்கு பிறகு, பத்து தன் சிங்கப் பற்கள் தெரிய சிரித்து 
"நமக்கு நாம்பளே விளையாடறத்துக்கு, வடக்கு தெருவோட மேட்ச் கொடுக்கலாம்" என்றான்.
 "நமக்கு அவ்வளவு ஆள் இல்லையே" என்று ஸ்ருதியை குறைத்தான் ஆனந்த்.
"திருமஞ்சன வீதியில என் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க, அவங்களையும் சேர்த்துண்டு நாம விளையாடலாம்" என்று மடக்கி பேசினான் பத்து.
தனக்கு விளையாட மட்டை கிடைக்காது என்ற பயத்தில், “மாட்ச் எல்லாம் வேண்டான்டா" என்றான் ஆனந்தின் தம்பி ஒரு கண்ணில் எப்போதும் வழியும் பூளையை துடைத்துக்கொண்டே.
அதுவரையில் தேசிய மாட்ச்கள் மட்டும் விளையாடிய எங்கள் அணி சர்வதேச மாட்ச் போல வடக்கு தெருவுடன் அந்த வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாட்ச் விளையாட எங்கள் பொதுக்குழுவில் முடிவானது. 

வடக்கு தெரு அணியில் வேகப் பந்து வீசும் சுதர்ஷன் அவன் தம்பி பாபு, ஓப்பனர் கோபால், மிடில் ஆர்டர் விளையாடுவதற்கு இரண்டு ஸ்ரீராம்கள் போன்று பல திறமையான முன்னணி வீரர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு வடக்கு தெருவில், சேதுபவா சத்திரத்திற்கு முன்னால், புங்க மரங்கள் அடர்ந்த 'மியூச்சுவல்' ஆரம்ப நிலை ஆங்கில பள்ளியின் மைதானம் இருந்தது. மரங்கள் அடர்ந்த பகுதியாதலால், களைப்பு தெரியாமல் எப்போதும் வலைப் பயிற்ச்சியில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு "மொக்கு"(moggu) என்கிற மோகன் "கிரிக்கெட் துரோணாச்சாரியாராக" இருந்தார். இடுப்பில் ஒரு கைலி, மேலே ஒரு வெள்ளை கலர் காசித் துண்டு இதுதான் அவரது காஸ்ட்யூம். அவரோடு மிகவும் நெருங்கி பழகியவர்கள் அவர் கீழே கூட உள்ளாடை உடுத்தாமல் ஃப்ரீயாகத் தான் மட்டை பிடித்து விளையாடுவார் என்று ரகசியமாய் சொல்ல கேள்வி. அவர்கள் அவர் காலடி மண் எடுத்து நெற்றியில் பூசாது விளையாட களம் இறங்க மாட்டார்கள். அவ்வளவு பயபக்தி குருவிடம் அவர்களுக்கு. ஒரு பெரிய கிரில் கதவின் பின்னால் நின்று அவர்களின் விளையாட்டு பயிற்சியை வேடிக்கை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் வெளியே நிற்கும். காகாஜி(இவர் தனியாக ஒரு பதிவில் வருவார்) ஆத்து ராஜா, நந்து போன்ற அண்ணாக்கள் அவர்களுடைய சிறப்பு உள்நாட்டு பயிற்சியாளர்கள். அவர்கள் அணி "ஹரித்ராநதி கிரிக்கெட் கிளப் - நார்த்" என்பது. சுருக்கிய பெயர் ஆங்கிலத்தில் HCC-NORTH.

சுதர்ஷன், பழம் பெரும் நடிகை, கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி நடையே ஓட்டமாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் ஓடி வந்து பௌலிங் செய்வான். அவன் தம்பி பாபு கால் சட்டையா அல்லது ஜட்டியா என்று தெரியா வண்ணம் நம் கண்ணை எமாற்றும் ஒன்றை அணிந்து கொண்டு குனிந்து நின்று பேட் செய்வான். ஆஃப் திசையில் ஸ்ரீதர் எப்போதும் தலையை தடவிக்கொண்டும், ஸ்ரீராம் லெக் திசையில் இலந்தை மரத்தடியிலும் நின்று ஃபீல்டிங் என்ற பெயரில்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாதி நேரம் ஸ்ரீராம் வாய் இலந்தையை சப்பிக் கொண்டு இருக்கும். ஸ்லிப்பில் நிற்கும் கோபால், இரு கையையும் ஒன்று சேர்த்து, முழங்கால்களை கொஞ்சமாக மடக்கி, கண்களை சிமிட்டி சிமிட்டி சற்றே குனிந்து சுமோ மல்யுத்த வீரர்களின் ஆயத்த நிலையில் நிற்பான். புங்க மரத்தின் கிளையின் மேலேறி ஓரிருவர் அமர்ந்து ஆரவாரம் செய்து உற்சாகமூட்டியபடி இருப்பர். ஆறடி ரெண்டங்குல சரவணன் மட்டையை பிடித்துக்கொண்டு ஃபிரன்ட்ஃபுட்டில் ஸாஷ்டாங்கமாக தரையில் தெண்டம் சமர்பித்து நமஸ்கரித்து விளையாடுவான். பந்து பிடிக்க நிற்கும் ஃபீல்டர்ஸுக்கு உபய குசலோபரி சொல்லாதது தான் பாக்கி. நரி என்கிற திருஞானம், ரமேஷ், ரமேஷ் தம்பி கோபிலி, ராஜா, வாசு, சரவணன் தம்பி அசோக் என பெரிய பட்டாளமே உண்டு. நான்குக்கும், ஆறுக்கும், விக்கெட்டுகள் விழும் போதும் அவர்கள் "ஓ...ஓ..." என்று கோஷமிடும் போது நான்கு கரையும் திரும்பி பார்க்கும். ஹரித்ராநதி சுனாமி போல நிமிர்ந்து கடல் அலை எழுப்பும்.

மாட்ச் கேட்பதற்கு ஒரு தூதுவர் போய் முறைப்படி கேட்கவேண்டும். தட்டு, பழம் எல்லாம் வேண்டாம். எனக்கு வடக்கு தெருவின் நண்பர்களிடம் நல்ல தொடர்பு இருந்ததால் போட்டி கேட்கும் தூதுவராக அடியேனை  நியமித்தார்கள். மொத்த வடக்கு தெருவே, அத்தெருவின் நடுவில் குளக்கரையின் ஓரமாக இருக்கும் கோதண்டராமர் கோவிலின் பக்கத்தில், காற்று வீசும் வேப்பமர நிழலில் இருக்கும் மதிலில் நிறைந்து இருக்கும். படித்துறைக்கு குளிக்க இறங்கும் இடத்தில் இருக்கும் மதிலில் குழந்தைகள், சிறியவர், பெரியவர் என "ஜே ஜே" என்று எப்பவும் ஆட்கள் இருப்பார்கள். மிக பயங்கர கத்திரி நாட்களில் கூட 'சிலு சிலு' என குளத்தின் மேலிருந்து வீசும் காற்றிர்காகவே வீட்டை துறந்து மதிலில் குடியேறலாம் என்ற எண்ணம் வரும். வானப்ப்ரஸ்த்தம் போல் மதில்ப்ரஸ்தம். ஒரு சந்தியாகாலத்தில் அயல் நாட்டு தூதுவராக என் இரு சக்கர வாகனமேறி வடக்குத்தெரு சென்று எங்களுடன் மாட்ச் விளையாடுவதற்கு அழைத்தேன். பாபு கேட்டான்
"பதினோரு பேர் இருக்காங்களா?" என்று நக்கலாக
"எட்டு பேர் இருக்கோம், மீதி திருமஞ்சன வீதி பசங்க"
பாபு, "எங்கே ஆடலாம்" என்றான்.
"உங்க கிரௌன்ட்லயே வச்சுக்கலாம்" என்றேன். அப்போது அதுதான் மெல்போர்ன் கிரவுண்டு எங்களுக்கு. அதில் ஆட எங்கள் எல்லோருக்கும் ரொம்ப ஆசை.
"சரி, சண்டே கார்த்தால எட்டு மணி"
என்று பாபு ஃபிக்ஸ் செய்தான்.

அவர்கள் ஹெச்சிசி நார்த் ஆகையால், நாங்கள் ஹெச்சிசி ஈஸ்ட் ஆனோம். ஞாயிறு காலை 8.00 மணியளவில் ஆட்டம் தொடங்கியது. ஈஸ்ட் கேப்டனாகிய நான் டாஸ் கெலித்து, நார்த் கேப்டன் பாபுவிடம் மட்டை பிடிப்பதாக அறிவித்தேன். நாங்கள் விளையாடும் ரப்பர் பந்தை விட ஒரு படி உசத்தியான பழைய டென்னிஸ் பந்து மாட்ச். அது ஒரு இருபது ஓவர் ஆட்டம். நாங்கள் அப்போதே ஆடிய 20-20. ஆனந்தும் அவன் தம்பியும் ஸ்டீவ், மார்க் வாக் சகோதரர்களைப் போல் களமிறங்கினர். சுதர்ஷன சரோஜாதேவியின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் பந்தை வாரி ஸ்ரீதர் கையில் கொடுத்து ஆனந்த் வெளியேறினான். பத்து பொன் முட்டை போடும் "தங்க வாத்து" ஆனான். சுதர்ஷன் பல பேரை வீழ்த்தியதின் பின்னணியை ஆராய்ந்ததில் அவனுடைய ச.தேவி ஓட்டத்தில் தான் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஒற்றை இலக்கத்திலேயே ஐந்து பேர் அவுட்டானார்கள். நானும் கோபியும் சேர்ந்து முப்பத்து ஐந்து ரன்கள் சேர்த்தோம். இடையில் கோபி வானம் கிளப்பிய பந்தை தட்டி தட்டி தவற விட்ட ஸ்ரீதர் மொக்கு இடம் இருந்து "ராமர் கோவிலில் இருந்து உண்ட கட்டி வாங்கத்தான் லாயக்கு" என்ற உயர்ந்த பாராட்டை பெற்றான்.
பதினைந்து ஓவர்களில் நாற்பத்தி சொச்சம் ரன்களுக்கு அணியின் இன்னிங்சை முடித்துக்கொண்டோம்.

அடுத்து ஆடிய அவர்கள் அடித்து ஆட முற்பட்டு, நானும் பத்துவும் பந்து வீசியதில் திணறினார்கள். அவ்வப்போது திருஞானம் ஒன்றிரண்டு ரன்கள் ஸ்கோர் புக்கில் அவர்கள் அடிக்காதபோதே ஏற்றியும் முப்பத்தி சொச்சம் ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்கள். ஆட்ட நாயகனாக கோபி தேர்ந்தெடுக்கப்பட்டான். ஸ்கோர் புக்கில் இரு கேப்டன்களும் இரு நாட்டு அதிபர்களின் ஒப்பந்தம் போல கையெழுத்திட்டோம். தோற்றவர்கள் கையெழுத்திடுவது மிகவும் அவமானகரமான செயல். "இதுக்கு பேசாம நாண்டுகிட்டு செத்துபோலாம்" என்று வடகரை டீமை பற்றி சட்டை அணியாத துரோணர் கருத்து தெரிவித்தார். மூக்கையும் வாயையும் ஒருகையால் பொத்திக்கொண்டு நார்த் கேப்டன் பாபு கையெழுத்திட்டான்.  நார்த் போஷகர் மொக்கு என்கிற மோகன் அவர்களுடைய தோல்விக்காக அவர்களை 'தெரு பிரஷ்ட்டம்' செய்துவிடும் நிலைக்கு போய் "எல்லோரும் உண்ட கட்டி வாங்கத்தான் லாயக்கு" என்று குறைந்தது 108 தடவை சொல்லி விரட்டினார். வெறுப்பேற்றினார். வெற்றிக் களிப்பில், ரோஹினி வீட்டு கொள்ளையில் உள்ள மாமரத்தில் மாங்காய் அடித்து, ரோஹினி அம்மா, கோமா மாமியிடம் திட்டு வாங்கி கொண்டு இருக்கும் போது தோல்வியை கண்டு துவளாத பாபு திரும்பவும் வந்து அன்று மாலை மூன்று மணிக்கு ஒரு மாட்ச் கேட்டான். மூன்று மணி மாட்சிலும் நார்த் தோல்வியை தழுவியது.

அன்று இரவு ஏழு மணி அளவில், சேது பவா சத்திரம் எதிரே, குளக்கரை ஓரமாக, கிழக்கும் வடக்கும் சந்திக்கும் மூலையில் பிள்ளையார் கோவில் ஒன்று உண்டு. அன்றைக்கு சதுர்த்தி. மேல்கரை சதாசிவ மாமா வீட்டு மண்டகப்படி. சுண்டலும், சர்க்கரைப் பொங்கலுமாக பிள்ளையாரை ஏகத்திற்கு குஷிப்படுத்திக்கொண்டிருந்தார். அவருடைய மாட்டுப்பெண் மடிசார் கட்டி எல்லோரையும் கூப்பிட்டு கூப்பிட்டு ப்ரசாதம் வாரி வழங்கிக்கொண்டிருந்தாள். வடகரை ஆட்ட நாயகர்கள் வந்தார்கள். நாங்களும் அங்கே பிள்ளையார் பார்த்து சுண்டல் வாங்கி திங்க சென்றபோது, மொக்கின் ஆலோசனையின் பேரில் பாபு என்னிடம் வந்து
"நம்ப ரெண்டு டீமும் ஒன்னாயிடலாமா?" என்றான்.
"பா..ம்.." என்ற காதைக் கிழிக்கும் சத்தத்துடன் சாலையில் சென்ற காரினால் அனைவரின் காதும் டமாரமானதால் 
"என்ன?" என்று இரைந்தேன்.
"ஹெச்சிசி நார்த்ம் ஈஸ்ட்ம் சேர்ந்து ஹெச்சிசி ஆயிடலாமா?" என்று கைலாயத்தில் இருக்கும் பிள்ளையாருக்கே கேட்கும்படி சத்தமிட்டான் பாபு.
"ம்" என்று மணி பட வசனமாய் அடக்கமாக நான்.
பக்கத்தில் நின்ற ஆனந்த் ஆவலுடன் கேட்டான்
"என்னடா?"
"ஹெச்.சி.சி" என்றேன் நான்.ஹரித்ராநதி கிரிக்கெட் கிளப் என்ற யார்க்க்ஷைர் கவுண்டி டீமிற்கு நிகரான ஒன்று அங்கே உதயமானது. ஊரையே கலக்கிய ஒரு டீம்.

கிழக்கும், வடக்கும் ஈசான்ய மூலையில் இணைந்தது.
-
பதிவுக் குறிப்பு: ஏகோபித்த ஆதரவினால் (நாமளே சொல்லிக்கவேண்டியது தானே) இரவு கொட்ட கொட்ட முழிந்திருந்து நடு நிசி தாண்டி அடித்து முடித்தேன். காலையில் வலையேற்றுகிறேன். ஒரு இன்ச் அளவிற்கு பெரிய ஆணி எல்லாம் ஆபிஸில் ரெடியா இருக்கு. போய் பார்க்கறேன். சிலசமயம் அடிக்கனுமா கழட்டனுமான்னு கூட சொல்ல மாட்டேங்கறாங்கப்பா!! என்ன கொடுமை!

-

Thursday, October 21, 2010

ஆபிஸில் ஆணி

ஆபிஸில் கூடை கூடையாய் ஆணி அடித்தும் பிடிங்கிக் கொண்டும் இருப்பதால் தற்போதைக்கு பதிவு ஏதும் பதிய முடியவில்லை. கீழே புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் போல முயன்று பார்க்கிறேன் "வேலை" ஆவேனா என்கிறது.  வேலையில் ஆணியா அல்லது ஆணியில் வேலையா என்று தெரியவில்லை.  எனக்கு எதிரே மலை போல் ஆணி அதை இச்சிறுவன் எப்படி ரசிக்கிறான் பாருங்கள்.


பின் குறிப்பு: ஆணி இல்லாதவர்கள் இதைப் பார்த்து ரசித்ததற்கு நன்றி. இது ஒரு வயதுப் பையனின் யோகா என்று வைத்துக்கொள்ளலாம், வயது போன காலத்தில் இதுபோன்று யாரும் முயற்ச்சிக்க வேண்டாம் என்றும் பின் விளைவுகளுக்கு இந்த வலைப்பூ பொறுப்பல்ல என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். முயற்ச்சிக்காததற்க்கு நன்றி!!

ஆணி பிடுங்குவதை பொறுத்து மன்னார்குடி டேஸ் வழக்கம்போல் நாளை வெளிவரலாம். 
-

Wednesday, October 20, 2010

மன்னார்குடி டேஸ் - பாட்டி! ஐ லவ் யூ

hari2சென்ற பதிவில் பார்த்த அந்த 'ஹிட் அண்ட் ரன்' நிகழ்ச்சிக்கு பிறகு, ஒரு பதினைந்து இருபது நாளைக்கு பேட்டையும் பந்தையும்  கண்டாலே அடிபட்ட மாமியும் அடிக்க வந்த மாமாவும் நினைவுக்கு வர நாலு கால் பாய்ச்சலில் எல்லோரும் அலறி அடித்து  ஓடினார்கள். அந்த மாமி வீட்டிற்கு பத்து மீட்டர்  சுற்றளவிற்கு 'எலெக்ட்ரிக் ஃபென்ஸ்' போட்டது போல, அவர்கள் வீட்டை கடக்கும் போதெல்லாம் கால் கடுக்க சுற்றி சுற்றி  பயணித்தார்கள். மற்றொருநாள், பெ.கி.மாமாவும் மாமியும் வாசலில் நின்று ஆசையாக அளவலாவிக்கொண்டு நிற்க குளத்தின்  மதில் சுவருக்கு பக்கத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் மங்கம்மா படித்துறை வழியாக இறங்கி தலையை குனிந்து கடன் வாங்கி சேட்டுக்கு காசு கொடுக்காமல் தப்பிப்பது போல பெ.கி.மாமாவிற்கு தெரியாமல் நடந்து, அவர்கள் வீட்டை கடந்ததும் பத்து வீட்டுக்கு எதிர்புறம் உள்ள படித்துறையில் கரையேறி கடை கன்னிக்கு போய் வந்தார்கள். அப்படியே நேரே போனாலும் கழுத்து சுளுக்கியது போல அவர்களுக்கு எதிர்திசை பார்த்துக்கொண்டே "வ்ருட்.." என்று சைக்கிளில் பறந்தார்கள். 

என்னதான் உயிரற்ற அஃறினை பொருளாக இருந்தாலும் எங்கள் லூட்டியின் பெரும் பங்கு அந்த நாயக்கர் ராசா வெட்டிய நீர்நிலைக்கும் உண்டு. என்பதுக்கு மேல் வயதான என் பாட்டி நாலு கரையையும் ப்ரதக்ஷிணம் என்று புண்ணிய யாத்திரையாக சொல்லிக்கொண்டு வாக்கிங் வருவாள். 'வாக்'கும்போதே பார்த்த பேருடன் 'டாக்'குவாள். தென்கரை ஸ்வாமி மண்டபம் வரை ரெண்டாம் கியரில் போவாள், அதற்க்கப்புறம் மூன்று நான்கு என்று வேகத்தை கூட்டுவாள். மேல்கரை நளபாகம் பிச்சுமணி ஐயர் சமையல்காரர் வீட்டிலிருந்து கிட்டுப் பிள்ளையின் குளத்தோர "மீன் பிடி குழுமத்தை" டாப் கியரில் கடந்து பச்சைக்கல் ஐயங்கார் வீட்டருகில் கொஞ்சம் மெதுவாக வருவாள். வடகரையில் மணி டீக்கடை தாண்டி பாட்டியின் அபிமானிகள் ஜாஸ்த்தி. கொஞ்சம் பேச்சுக் கொடுத்து அப்புறமாகத்தான் அனுப்புவார்கள். இந்தச் சுற்றில் யார் வீட்டு பெண் திரண்டது, மெட்ராஸ்லேர்ந்து பாமாவாத்துக்கு யார் வந்தா, கோபால கிருஷ்ணன் மாட்டுப்பொண்னுக்கு எப்போ பிரசவம் என்று பல அரிய தகவல்கள் அவளுக்கு கிடைக்கும். Information is Wealth!! இங்கே வித் ஹெல்த்.

hari3அந்தக் குளத்தின் மதில் சுவற்றில் அழகாக விளக்கு மாடங்கள் இருக்கும். கார்த்திகை தீபத்தின் போது எல்லாக்கரையிலும் என்போன்ற ஊருக்கு உழைக்கும்(?!) சமூக சேவகரை அடையாளம் கண்டு விளக்கு ஏற்றுவதற்கு பொறுப்பு கட்டுவார்கள். வாலிப வயதில் மிகவும் பொழுதுபோக்கான "வாலிப விளையாட்டு" இது. எவ்வளவு மின் விளக்குகள் இருந்தாலும் ஒரு யுவதியின் முகத்தை மூச்சுக்காற்று படும் கிட்டத்தில் அகல் விளக்கில் பார்ப்பது இதயத்தின் நிமிஷத்துக்கு என்பது என்பதை நூற்று என்பது என்று அதிகரிக்கும் அல்லவா? "எண்ணெய்" எடுத்துக் கொடுக்கும் சாக்கில் "என்னை பார். என் கண்ணைப் பார்" என்று கொஞ்சம் ட்ரை பண்ணலாம். மங்கிய வெளிச்சத்தில் நாம் கூட மன்மதன் போல் தெரியலாம். அதிர்ஷ்டசாலிகளுக்கு குளக்கரையில் மீன் சிக்கும். வீதியில் விளக்கேற்றியவள் நாளைக்கு வீட்டில் விளக்கேற்ற வரலாம்.

வானிலே முழுநிலா 
பக்கத்தில் ஒரு தேனிலா 
அதன் நெருக்கத்திலா 
யாருமில்லா ஏகாந்தத்திலா
அந்த அகல் வெளிச்சத்திலா
இந்த குளக்கரையிலா
என் மனதின் இன்ப உலா 
யேய். போதும். நிறுத்து நிறுத்து நிப்பாட்டு....
"என்ன லா". என்ன கவுஜையா? நிப்பாட்டு.  போன பாரா எண்டுலேர்ந்து ஒரு மாதிரியா எழுதரியேன்னு பார்த்தேன்.அதையும் நாரடிக்காத. உட்டுட்டு..அடுத்த பாரா போ.

இந்த மினி எமெர்ஜென்சி காலத்தில் பல 'உள் அரங்கு' விளையாட்டுகளை விளையாட முடிவு செய்தோம். அப்படி வீட்டிற்குள் விளையாடுவதற்கு உள் அரங்கு தேர்வு செய்வது மிகவும் கடினமான ப்ராசெஸ்ஸாக இருந்தது. பத்து வீட்டில்  விளையாடலாம் என்றால் அவன் அக்காள் மகன் கார்த்திக் மகா விஷமி. வன்முறையாளன். விஷமத்தில் தீவிரவாதி. கார்ரோம்போர்டை கம்மோடாக பயன் படுத்திவிடுவான். சுச்சா, கக்கா என்று சகல இயற்கை உபாதைகளையும் அதன் மேலேயே கழிப்பான். செஸ் கொண்டு போனால் பாதி விளையாட்டில் குதிரையை எடுத்துக்கொண்டு L மாதிரி ஓடி, நமக்கு ஆட்டம்  காட்டி விளையாட்டிர்க்கே 'செக்மேட்' வைப்பான். ஆனந்த் வீட்டு திண்ணையில் விளையாடலாம் ஆனால் பக்கத்து  வீட்டு, காது அசுத்தமாக கூட கேட்காத சோனாம்பா பாட்டி  எங்களை "சத்தம் போடாதிங்கோடா" என்று கூம்பு  ஸ்பீக்கர் 'full volume'ல் கத்தி படுத்தி, தன் PWD கிளார்க் மகனை வைத்து விரட்டுவாள். கோபி வீட்டு திண்ணை  அவ்வளவு பேர் கொள்ளாது. இப்படி அரங்கம் தேடி அலைந்தபோது கிடைத்தது, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்காக சிக்கியது நம்பர் பத்து, ஹரித்ராநதி கீழ்கரை.

ஒரு குழந்தைகள் மாநாட்டு கூட்டமாக இவ்வளவு பேரை பாட்டி எதிர்பார்க்கவில்லை. ஆனால் வெய்யிலில் இல்லாமல் கூரைக்குள்  விளையாடுவது அவளுக்கு மகிழ்ச்சியே. கூட்டம் அதிகம் சேர்ந்ததால் உள் விளையாட்டுகள் வீட்டுக்குள்ளேயே ஓடி  ஆடும் விளையாட்டுகளாகியது. முதல் ஓரிரு நாட்கள் தாக்கு பிடித்த பாட்டி, எப்போதும் மீன் மார்க்கெட் போலவும்,  செவ்வாய் சந்தை போலவும் பசங்கள் கூவுவதை பார்த்து ஒரு சுபயோக சுபதினத்தில் "அடாடா...குழந்தைகளா  கோட்டான்களான்னு தெரியலையே!!" என்று எங்கள் ஜென்டரையே கேள்விக்குறியாக்கி அனைவரையும் வெளியே  தள்ளி கதவை சார்த்தினாள். விளையாட்டா அலைந்தது போய் விளையாட்டுக்காக அலைய வேண்டியதாயிற்று.  நோமேடியன்கள் போல கரைகரையாகவும் வீடு வீடாகவும் வெளிய உலவ ஆரம்பித்தோம்.

hari1காலாண்டு பரீட்சை வந்து, 'தேர்வு ஜுரம்' கண்டு, புத்தக மூட்டையை திறந்து, புது வாசனை மாறாத புத்தகத்தை   கொஞ்ச நாள் எல்லோரும் படிக்கும் தருணத்தில், பாட்டி தனது தோஸ்த் கோபி பாட்டியிடம் "எங்காத்து தம்பி,  புஸ்தகத்தை திருப்பி சேப்பா கருப்பான்னு கூட பார்க்கறதில்லை" என்று அங்கலாய்த்துக்கொள்வாள். நான் தேமேன்னு பாடம் படித்தாலும், "தம்பி...தூங்கறா மாதிரி இருக்கே" என்று கூறி கலாய்ப்பாள். ஒருவாராக வெள்ளை தாள்களை  நீலமாக்கிய பரீட்சைகளை முடித்தபின் வந்த அந்த விடுமுறையில் மறுபடியும் எல்லோருக்கும் 'கிரிக்கெட் ஜுரம்'  காண்பதற்கு முன்னால் நவராத்திரி வந்தது.  நவராத்திரியின் ஆண்டாள் கோபால் பற்றிய பதிவு இங்கே.


நவராத்திரி முடியும் தருவாயில் துக்கம் தொண்டையை அடைக்கும். சின்ன வயசில்  பல வீட்டு சுண்டல்கள் பெரிய வயசில் பல வீட்டு பெண்டுகள். பொடியனாக இருந்தபோது வாய்க்கு ருசியாக பல வீட்டு சுண்டல் சாப்பிட்டு வயிற்றை ரொப்பினோம். கொஞ்சம் தடியனாக வளர்ந்தபிறகு கண்ணுக்கு ருசியாக நம் வீட்டுக்கு வெத்திலை பாக்கு பழம் வாங்க வரும் பெண்டுகளைப் பார்த்து ரசித்தது. "ஏண்டிம்மா.. ஒரு பாட்டு பாடேன்.. எங்காத்து கொலுவுக்கு" என்று பாட்டி கேட்டால் தட்டாமல் "ஹிமகிரி தனயே ஹேமலதே.." என்று பாடுகிற பெண்களை காட்டிலும் "அலைபாயுதே கண்ணா..என் மனம்.." என்று ஊத்துக்காடு தமிழ் கீர்த்தனை பாடும் கீதுக்களை தான் ரொம்ப பிடிக்கும். அப்படியே கதவில் சாய்ந்துகொண்டே ஒரு கனவு சீன் முடித்து வாசல் வரை கொண்டு வந்துவிட்டு "போய்ட்டு வாடீம்மா"ன்னு வழியனுப்பலாம். பெயர் சொல்லாமல் சொல்லுகிறேன், ஒரு முறை கொலுவிற்கு வந்த பொண்குழந்தை சமர்த்தா வெத்தலை பாக்கு வாங்கிண்டு போகாம உள்ளே சுண்டல் மடிக்க உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருந்த என்னை கூப்பிட்டு "ந்நா...நா போய்ட்டு வரேன்..." என்று நளினமாக தலை ஆட்டி சொல்லிவிட்டு குஞ்சலம் வைத்து கட்டியிருந்த பின்னல் ஆட ஒரு சாயந்திரம் அவள் வீட்டுக்கு சென்றதர்க்கப்புறம் கொலு காலத்தில் மாலை நேரங்களில் நான் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டேன்.

குளக்கரை ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருக்கும். அந்தக் காலத்தில் எங்களுடைய மெர்சிடஸ் பென்ஸ் எங்கள் சைக்கிள் தான். சுத்தமாக கழுவி, சந்தனம் குங்குமம் இட்டு "ஹோய்..." என்று பெரும் சத்தமிட்டு கும்பலாக ரவுண்டு வருவார்கள். பொதுவாக சாயந்திரம் நடக்கும் கூத்து இது. ஒரு புண்ணிய ஆயுத பூஜை தினத்தன்று ஆர்.வி.எஸ். சைக்கிளை நன்றாக பளீரென்று துடைத்தான். அப்புறம் ஈர்க்குச்சி கொண்டு வண்டி முழுக்க மைகேல் அஞ்சேலோ போன்று ஓவியம் தீட்டலானான். ரொம்ப நாழியாக இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்க்காமல் கை கால் கடுக்க வண்டியை அலங்கரித்தான். வாசலில் நடைபெற்ற இந்த சைக்கிள் அலங்காரம் வெகு நேராமாக யாராலும் கவனிக்கப் படாமல் இருந்தது. கைக்காரியம் ஒழிந்து பாட்டி உள்ளேயிருந்து வாசலுக்கு வந்தாள். சைக்கிளை பார்த்து "என்னடா.. இது... என்னமோ கச்சா முச்சான்னு சைக்கிள் பூரா கிறுக்கி இருக்கே" என்றாள். ஒரு மணி நேரமாக அசராமல் ஆட்டின் வரைந்து அம்பு விட்டிருந்தேன். கிறுக்கி இருக்கே என்று சொன்னவுடன் அடக்கமுடியாமல் "ஐயோ பாட்டி! ஐ லவ் யூ!" என்று அடிவயிற்றில் இருந்து கத்தி சொன்னேன். அதே சமயம் வாசலில் பவனி வந்து கொண்டிருந்த மகா, ஜெம்பா போன்ற நம் வயதை ஒத்த பெண்கள் "களுக்" என்று ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

இந்த ஐ லவ் யூவும், பெண்கள் கேலிச் சிரிப்பும் நடந்த போது எட்டிப் பார்க்கவா வேண்டாமா என்று எனக்கு மீசை கொஞ்சம் அரும்பியிருந்தது.


பின் குறிப்பு: ஹரித்ரா என்றால் மஞ்சள், மஞ்சள் பூசி கோபியர்கள் கிருஷ்ண  பரமாத்மாவுடன் இங்கே ஜலக்க்ரீடை செய்ததால் ஹரித்ராநதி என்ற பெயர். அடுத்த பதிவில் ஹரித்ராநதி விட்டு கொஞ்சம் வெளியே செல்வோம்.

பட உதவி: rajamannargudi.blogspot.com
-

Tuesday, October 19, 2010

மன்னார்குடி டேஸ் - 'கிளி'மஞ்சாரோ மாமி


ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ண பரமாத்மா போல, நான் வளர்ந்த இடம் ஹரித்ராநதி கீழ்கரை. ஏரி, நதி போன்ற பெரிய நீர் நிலையை குளமாக வெட்டியது முதலாம் குலோத்துங்க சோழன்.  அதற்கு நாலு பக்கமும் மதில் எழுப்பி, ஊரார் குளிக்க வசதியாக நான்கு கரையிலும் படித்துறை கட்டியது  நாயக்கர் வம்ச ராஜாவாகிய விஜயராகவ நாயக்கர். அசோகர் ஏன் குளங்களை வெட்டினார்? மரங்களை நட்டார் என்ற கேள்விக்கு குளங்கள் குளிக்கவும், குளிப்பதை ஏறி நின்று வேடிக்கை பார்க்க மரங்கள் நட்டார் என்ற பதில் போலல்லாமல் குள ஓரத்தில் நிறைய மரம் இல்லாமல் ஆயிரம் வருடங்களுக்கு பிறகு அழிச்சாட்டியம் செய்யப்போகும் எங்களுக்காக ராஜாக்கள் அமைத்து கொடுத்தது. வீட்டிற்க்கு பின்னால் ஆடிப்பெருக்கு அன்று மன்னையின் அணைத்து மகளிரும் குழுமி கும்மியடிக்கும் பாமணி ஆறு. வீட்டிற்கு முன்னால் குளம் பின்னால் ஆறு என்று அப்போதே தண்ணியில் இருந்தேன். கும்பகோணத்திலிருந்து மன்னார்குடிக்குள் வரும் அனைவரும் ஊருக்குள் ஓடி வரும் பாமணி ஆற்றங்கரையின் ஓரமாக வரும் பொழுது, அந்த ஈரக் காற்றில் தூங்காமல் சற்றே தலையை தூக்கினால் தெரியும் ராஜகோபாலனின் பதினோரு  நிலை ராஜகோபுரத்தை முதலிலும், பாமணி ஆற்றின் குறுக்கே உள்ள மேலப்பாலத்தில் ஏறி இறங்கினால் தெரியும் கடல் போன்ற ஹரித்ராநதியையும் சேவித்த பின்னர் தான் ஊருக்குள் நுழைவர். முதல் முறை அந்தக் குளத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் ஒரு ஈ பூந்த பின்தான் வாயை மூடுவார்கள்.

முதலில் வரும் வடகரை திரும்பி ஈசான்ய மூலையில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில் தாண்டியபின் வருவது கீழ்கரை. கோபில, கோபிரளய முனிவர்களுக்கு காட்சி கொடுத்த முப்பத்தி இரண்டாவது சேவையில், முப்பதாயிரம்  கோபிகைகளோடு ஹரித்ராநதியில் ஜலக்ரீடை செய்து ஏக வஸ்திரத்தை இடையில் அணிந்து, மாடு மேய்க்கும் கண்ணனாக  சேவை சாதிக்கும் ராஜகோபாலனுக்கு பிரியமான ஹரித்ராநதியின் கிழக்கு கரையில் இருக்கும் பத்தாவது வீடு என்னது.  வடக்குகரை வைஷ்ணவர்களை பெரும்பான்மையாக கொண்ட அக்ரஹாரம். கீழ்கரை சைவர்களை கொண்ட  அக்ரஹாரம். விடுமுறை நாட்களிலும் கூட சாயங்காலம் நான்கு மணிக்குமேல் தான் வெளியே விளையாட விட  கதவை திறக்கும் பாட்டி என்னுடைய அம்மாவின் அம்மா, என்னை வளர்த்தவள். பக்கத்து ஆத்து ராமாயண சாஸ்திரிகள் பேரன், கண்ணன் காட்சி கொடுத்த முனிவர்களின் ஒருவர் பெயரை கொண்ட,  கோபி, TNSC  பாங்க் விளம்பர சிட்டுக்குருவி போல எல்லோருடனும் குதுகலமாக எப்போதும் வெளியே துள்ளி திரிந்தாலும் பாட்டி  எதிரே வர பம்முவான். கிரிக்கெட்டை வெய்யிலில் விளையாடக்கூடாது என்று ஏதோ ஐசிசி ரூல்ஸ் மாதிரி போட்ட அவள் கண்ணுக்கு யார் எதிரே மட்டை எடுத்து வந்தாலும் ஜெஃப்ரி பாய்காட் கமெண்டரி போல வாயார வாங்கி கட்டிகொள்வார்கள்.

அன்று கோபி வெளியிலிருந்து வந்து ஜெயிலுக்குள் இருக்கும் ஒரு ஆயுள் கைதியை பார்ப்பது போல என்னை எட்டி பார்த்தான்.

"விளையாட வரியா" என்றழைத்தான்.
"பாட்டி பார்த்தா, திட்டுவா. நீ போடா"
கோபி, "பார்த்தா தானே, விளையாடிட்டு வந்தப்புறம் திட்டினா என்ன? வாடா.." என்று புரட்சிகர லாஜிக் சொன்னான்,  ஹனுமார் கதை போல பேட்டை தோளில் சாய்த்துக்கொண்டு, அரை நிஜார் அணிந்து கிரிக்கெட் காப் இல்லாததால்  கௌபாய் காப் அணிந்து நின்ற கோபி. இரண்டு உதட்டை மட்டும் பிரித்து அடிக்கடி ஒரு கள்ளச் சிரிப்பு சிரிப்பான்.

"இல்லடா, பாட்டி திட்டுவா, நான் அப்புறம் வரேன்" என்றேன். வீட்டிற்கு ரொம்ப அடங்கிய பையன் நான்.

என்னை 'பந்தாட' அழைத்துக்கொண்டுதான் போவேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு வந்தாற்போல, "பாட்டியை  அப்பறம் சமாளிச்சிக்கலாம், பத்து, ஆனந்த், ஆனந்த் தம்பி, வெங்கடேஷ், எல்லோறும் ரெடியா இருக்காடா. இப்பவே  வந்தா ரெண்டு மூணு மேட்ச் போடலாம்" என்று என்னை 'மேட்ச் பிக்சிங்' செய்துகொண்டிருக்கும் போது நாலு கட்டு தாண்டி கொல்லையில் இருந்து வந்து கொண்டிருந்த பாட்டியின் லேசர் பார்வையில் 'கேப்ட்சர்' ஆனான்.

"யார்டா அது, தம்பியை விளையாட கூப்டுறது?...வெயில் பாழாப் போகாம நிக்கனுமா?..கட்டேல போக...", என்று ஆரம்பித்து திட்டிய பாட்டியின் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு தெருவில் சென்ற ஒருவரை பார்க்க விட்டுவிட்டு  பறந்து விட்டான் கோபி.

வழக்கம் போல சாயந்திரம் நாலு மணிக்குமேல் பாட்டி விறகடுப்பில் வார்த்து தந்த இரண்டு தோசைகளையும் ஒரு லோட்டா ஃபில்ட்டர் காபியும் குடித்து  விட்டு பசங்களுடன் விளையாட சென்ற போது ஆள் குறைச்சலில் அவதிப் பட்டுக்கொண்டிருந்த எல்லோரும் சேர்ந்து சத்ரு தேசமான பாகிஸ்தான் போல என்னை பார்த்து வெறித்தார்கள். பந்து ஓடினால் பொறுக்க ஆள் வேண்டுமே.

பத்து என்கிற பத்மநாபன், "பாட்டி சொல்ற படிதான் இருக்கணும்னா ஏண்டா எங்ககூட விளையாட வரே" என்றான்.  ஆனந்த் அவன் பங்கிற்கு "பாட்டி கூடயே போய் பல்லாங்குழி விளையாடவேண்டியதுதானே" என்று கால் சட்டை  அணிந்த கருஞ்சிறுத்தை போல சீறினான். கொஞ்சம் மா நிறமாக இருப்பான். இப்படி எல்லோரிடமும் வாங்கி  கட்டிக்கொண்டு ஏவிஎம் சரவணன் போல கையை கட்டி, கவுண்டமணியின் முன்னாள் நிற்கும் செந்தில் போல்  தலையை குனிந்து சமர்த்தாக இருந்தாலும், பந்தே வராத இடத்தில் உப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை  மாதிரி நிற்கவைத்துவிடுவார்கள். அன்றைய பந்திற்கு நிறைய காசு போட்ட பங்குதாரர் (எழுபத்தைந்து பைசா)  என்கிற  முறையில் போனால் போகட்டும் என்று அன்றைய, வில்லங்கமாகப்போகிற, eventful ஆட்டத்திற்கு  சேர்த்துக்கொண்டார்கள்.

அதிலும் கிரிக்கெட் ஆடும் போது கோபி அடிக்கிற லூட்டிக்கு அளவே இருக்காது. இரண்டு ரூபாய் சிகப்பு கலர் ரப்பர்  பந்தில் விளையாடுகிற அழகிற்கே கிறிஸ ஸ்ரீகாந்த் மாதிரி, அந்தரத்தில் மத்து கடைவது போல பேட்டை  வுருட்டிக்கொண்டும், 'சர் சர்' என்று ஜலதோஷமே இல்லாத மூக்கை உருஞ்சிக்கொண்டும் நிற்பான். நொடிக்கொருதரம் கார்ட் எடுப்பான். லெக் அண்ட்  மிடில் கார்ட் எடுத்து லெக் ஸ்டம்ப்க்கு வெளியே எல்லா விக்கெட்டையும் எல்லோரையும் பார்க்க விட்டுவிட்டு காலை பப்பரக்கா என்று பரப்பிக் கொண்டு நிற்பான். நிற்பான் என்று சொல்வதை விட பேட்டை அணைத்து படுப்பான் என்று சொல்வது தான் சரி. ஒரு கிரௌண்ட்(2400 sq.ft) அளவுள்ள சிவன் கோவில் நந்தவனத்தில் ஒரு பந்துக்கும் அடுத்த பந்துக்கும் இடையில்  தலையை ஆஃப் சைட் லெக் சைட் திருப்பி திருப்பி ஃபீல்ட் செட்டப்பை அவ்வப்போது பார்த்துக்கொள்வான். எல்லாம் தூர்தர்ஷன் படுத்திய பாடு. பேட்டை பிருஷ்டத்திற்க்கு சீட்டாக்கி எல்லா  பக்கமும் லுக் விடுவான். பாதி நேரம் விக்கெட்டுக்கு முன்னாடியும் பாதி நேரம் விக்கெட்டுக்கு பின்னால் கிரண்  மோர் மாதிரி கீப்பராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். பத்துவோட இடது கை வேகப்பந்து வீச்சை  விளையாட முடியாதபோது அவன் ஓடி வர ஓடி வர டிராஃபிக் போலீஸ் மாதிரி இடது கை 'நில்' சிக்னல் காட்டி அவன் உயிரை எடுத்து அவன் தெம்பில்லாமல் போகும் போது ஒரு லொட்டு வைத்து ஒரு ரன் எடுத்து எதிர் முனைக்கு  போய் விடுவான்.

அன்றைக்கு விளக்கு வைத்த நேரம் வரை விளையாடியும், ரப்பர் பந்து கிழிந்தாலும் இன்னும் இரண்டு பேருக்கு பேட்டிங் கிடைக்காததால், தெரு விளக்கையே flood light ஆக்கி விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது தான்  அந்த சம்பவம் நடந்தது. அவனுடைய இன்னிங்க்ஸ்ன் கடைசி பந்தை, நான் பௌல் செய்ததை, out of the ground  சிக்ஸர் அடிக்க கோபி முயன்று, அது நேராக ஸ்கட் ஏவுகணை போல் ரோட்டில் கோயிலுக்கு வந்து கொண்டிருந்த 'பெரிய கிட்டு' மாமாவின் ஆத்துக்காரியை, ஒன்பது கஜ புடவை மடிசாரும், காதில் மாட்டலும் வைர மூக்குதியுமாக ஒரு மொபைல் நகைக் கடையாக, அன்னமே நேரில் நடந்து வருபதுபோல வந்தவளின் முகத்தில் "நச்" என்று இறங்க, அங்கே ஒரு சிவப்பு பந்து உருவானது.

மாமி லோலாக்கு அதிர திரும்புவதற்குள் ஸ்டம்புகள் நட்டது நட்ட படி இருக்க ஒரே சமயத்தில் எல்லோரும் அஷ்ட சித்துகளில் அணிமா சித்து கை  வரப்பெற்ற சித்தர்கள் போல காற்றில் மாயமாய் மறைந்து கரைந்து போனார்கள். சித்து கை வராத தெரியாத ஒரே ஆள் அடியேன் தான்.

மாமி மன்னார்குடி நாகம் போல சீறிக்கொண்டு அகப்பட்ட என்னிடம் வந்து , "யாருடா அடிச்சா?"
என் அடிவயிற்றில் அட்ரிலின் சுரந்தது.
"நான் இல்லை மாமி"
"வேற யாரு, சுத்திலும் யாருமே இல்லை. பந்து தானா பொறப்பட்டு வந்துதா"
"தெரியாது மாமி" கிட்டத்தட்ட குரல் கம்மி... அழும் நிலையில்....
"டீச்சர் கிட்ட சொல்லட்டாடா"
மேலே மாமி குறிப்பிட்ட டீச்சர் என்னுடைய பள்ளி ஆசிரியைகள் இல்லை. என்னுடைய சித்தி.  என் அம்மாவின் கூடப்பிறந்த சகோதரிகள்.
"வேண்டாம் மாமி! நான் அடிக்கலை"
"என்னடா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லறே, கிளிப்பிள்ளை மாதிரி" என்று கையை பிடித்து திருகினாள்.
உண்மையிலேயே மாமிதான் பந்து பட்டதில் முகமெல்லாம் வீங்கி மூக்கு சிவந்து கிளி மாதிரி ஆகி, பெரிய கிட்டு  மாமாவிற்கு 'கிளி' போல ஆத்துக்காரி ஆகியிருந்தாள். அதை சொல்ல முடியாமல்
"மாமி நான் அடிக்கல்லே! சொன்னா நம்புங்கோ" என்று புரியவைக்க பகீரதப் பிரயத்தனப் பட்டேன். ஊஹூம். ஒன்னும் ஆகிற கதையாக இல்லை.
மாமி அடுத்த கட்டமாக விசாரணையை சிபிஐயிடம் (பெ.கி மாமாவிடம்) ஒப்படைக்கும் தீர்மானத்தை  அறிவித்தாள்.
"ஏண்ணா.... சித்த அந்த பித்தளை அண்டாவை எடுங்கோளேன்" என்ற மாமியின் ஆஞ்ஞைக்கு கட்டுப்பட்டு பரண் மேல் இருக்கும் அண்டாவை ஸ்டூல் போடாமல் அனாயாசமாக எடுத்து தருவார். அவ்வளவு நெடிதுயர்ந்த சரீரம். 9.30 மணிக்கு பேங்குக்கு போனால் சாயந்திரம் சந்தியாவந்தனம் பண்ண டான்னு அஞ்சு மணிக்கு ஆத்துல ஆஜராயிடுவார். சட்டை போடாமல் வலது கையில் வாட்ச் கட்டி திண்ணையில் உட்கார்ந்திருக்கும் போது பூணூல் தெரியாத மாதிரி பொசுபொசுன்னு மார்ல ரோமம். ஒரு காசித் துண்டும் டப்பா கட்டு மயில்கண் வேஷ்டியுமாய் குளத்திற்கு குளிக்க வரும் போது தோல் சிகப்பும் முடி கருப்புமாக ஆடி அசைந்து வருவார். பரீட்சை டயத்ல இவர் தான் தெருவோட எக்ஸாம் கீப்பர். கண்ணை உருட்டி "போய்ப் படிங்கோடா.. இல்லைனா மாடு தான் மேய்க்கணும்..." என்று விரட்டுவார். "கிருஷ்ணர் கூட மாடு தான் மேய்ச்சார்" என்று எவனோ நாஸ்டி பாய் பின்னால் இருந்து விட்ட டர்ட்டி குரலுக்கு ரொம்ப நாள் என்னை அந்த மோத்தா கோலி சைஸ் கண்ணால உருட்டி உருட்டி முறைச்சிண்டே இருந்தார்.


"மாமாவை கூப்பிடறேன் இப்ப. அப்பத்தான் சரிப்படும்" என்று மிரட்டினாள் மாமி. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நான் வள்ளுவரின் வாய்மை அதிகாரம் அப்போதுதான் நினைவுக்கு வந்தவனாய் முழுதாய்  நடந்ததை HIGHLIGHTS போல ஓட்டி காண்பித்து என்னுடைய அப்பாவி நிலைமையை விளக்கினேன். அதோடு விட்டிருக்கலாம்.  அரிச்சந்திர மகாராஜாவின் தாயாதி பங்காளி போல, கோபி அடித்து மாமி கிளி ஆனதை கிளி ஆன மாமியிடம் உண்மை உரைக்க விளம்பினேன். ஏற்கனவே "பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது" என்று பாட்டி வேறு சிலசமயங்களில் திட்டியிருக்கிறாள்.

மூக்கறுபட்ட சூர்ப்பனகை போல அவசரகதியில் வீட்டிற்கு சென்று, சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த  மாமாவிடம் புகார் கொடுக்க, பெ.கி மாமா "108 காயத்ரியை "அவசர அவசரமாக ஜெபித்துவிட்டு அடுத்த அரை கணத்தில் கோபி வீட்டில் ஆஜர்.

அப்பறம் பெரிய கிட்டு மாமா கோபியை இரைந்து பேசியதும், பதிலுக்கு அவன் என்னை அந்த சண்டையில் இழுத்து பேசியதும், பெ.கி.மாமா, கோபி அப்பா, அடி பட்ட மாமி, கோபி அம்மா என்று மாறி மாறி WWF மிக்ஸ்டு ரெஸ்ட்லிங் மேனியா ஆகி, தெருவே ரெண்டுபட்டு கோபியின் உச்சபட்ச கோபத்திற்கு நான் ஆளான போது பதின்மங்களின் ஆரம்ப விளிம்பில் இருந்தேன்.

பின் குறிப்பு: விடலை பருவம் எட்டாததர்க்கு முன்னால் ஆர்.வி.எஸ். வி.ப. அடைந்த ஆர்.வி.எஸ் என்று இரு பகுதிகளாலும் மன்னார்குடி முழுக்க சுற்றியதை உங்களுக்கும் காண்பிக்கிறேன். பொறுமையாக என் பின்னால் சைக்கிள் கேரியரில் ஏறி உட்காருங்கள். வலம் வருவோம் மன்னார்குடியை. 
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails