Showing posts with label தபால். Show all posts
Showing posts with label தபால். Show all posts

Tuesday, October 9, 2012

தூதஞ்சல்


இன்று உலக அஞ்சல் தினமாம். கணநேரத்தில் பட்டுவாடா ஆகும் மின் அஞ்சலின் பிரவேசத்திற்குப் பிறகு ஸ்நைல் மெயில் என்று பழித்து தொழித்து அஞ்சலுக்கு எப்போதோ அஞ்சலி செலுத்திவிட்டார்கள். வாலெட் நிரம்ப கிரெடிட் கார்டுகள் அடைத்து வைத்திருந்தால் அதற்கான ஸ்டேட்மெண்ட்டுகளும் ஈ ட்ரேடிங் அக்கௌண்ட்டில் கரடியா எருதா என்று தினமும் லாகின் செய்து நொடிக்கொருதரம் ப்ரௌஸரை ரிஃப்ரெஷ் செய்யும் பழக்கமிருக்குமளவிற்கு பங்குகள் வைத்திருந்தால் அது சம்பந்தமான தஸ்தாவேஜுகளும் கூரியரில் வீடு வந்து சேர்கின்றன. சேர்ப்பித்துவிட்டு மறக்காமல் கையெழுத்து வாங்காமல் செல்கிறார்கள். 

சிப்பங்கள் என்றால் பார்ஸல்கள் போலிருக்கிறது. கூரியருக்கு தூதஞ்சல் என்ற பதத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்தேன். கருத்தொருமித்த காதலர்கள் தூதஞ்சல் என்பதற்கு புறாவிடு தூது போன்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. துரித அஞ்சல் என்றால் எக்ஸ்பிரஸ் டெலிவரி. “வேணும். அநேக நமஸ்காரம். ஆசீர்வாதம். சென்ற முறை வந்த போது புவனா போட்ட காப்பி சூடாகயில்லை” என்றெல்லாம் தபால் கார்டில் ஊரே தெரிந்துகொள்ள நடந்த விஷயப் பரிவர்த்தனைகள் நின்றுவிட்டது.

1.55 லட்சம் அஞ்சலகங்கள் மூலம் உங்களை உலகுடன் இணைக்கிறது என்கிறது இந்திய அஞ்சல் துறையின் விளம்பரம். அவ்வளவு அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும் நிரந்தர பணி செய்வதற்காகவும் அவர்களுடைய குடும்ப ஜீவிதத்திற்கும் ஆதரவாக இப்பொழுதும் கடிதப் போக்குவரத்து வைத்திருப்பவர்கள் யாரேனுமிருந்தால் அவர்களை மனதாரப் பாராட்டி கை குலுக்கலாம். இலவசமாகக் கிடைத்த ஒரு மெயில் ஐடியில் அண்டசராசரத்துடன் அனானியாகக்கூட அப்பொழுதே பேசுகிறார்கள். விண்ணப்பிக்கிறார்கள். ச்சேட்டுகிறார்கள். சீண்டுகிறார்கள். திட்டிக்கொள்கிறார்கள். களவுமணம் புரிகிறார்கள். 

கால் கடிதாசு எழுதும் வழக்கம் என்றோ வழக்கொழிந்துவிட்டது. லவ் ப்ரபபோஸ் பண்ணுவது கூட ஒரு வரி SMS அல்லது நாலு வரி ஈமெயிலில் முடிந்துவிடுகிறது. ”காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா....” என்று ஆனந்தபாபு சேரன் பாண்டியனில் பாடி நடித்ததை இப்போது பார்க்கும் போது நகைப்புக்குரியதாக இருக்கிறது. கடித இலக்கியங்கள் இப்போது ஈமெயிலிலக்கியங்களாகப் பாராட்டப்படுகின்றன. ஈமக்கிரியைக்கு நாற்பது பேருக்கு தனித்தனியாக கருப்பு மசியில் கையொடிய லெட்டர் எழுதியது இப்போது மெயில் மெர்ஜ்ஜில் சாதரணமான காரியமாக பேனாவுக்கு இங்க் நிரப்பும் சிரமமில்லாமல் முடிந்துவிடுகிறது. இந்த எஸ்ஸெம்மெஸ் யுகத்தில் தந்திக்கென்ன அவசியம்? உங்கள் ஏரியா போஸ்ட்மேனைப் எப்போது கடைசியாகப் பார்த்தீர்கள்? உங்கள் பேட்டையிலுள்ள போஸ்ட்டாபீஸ் முகவரி தெரியுமா?

மணியார்டரை எதிர்பார்த்து போஸ்ட்மேனுக்காக அமர்ந்திருக்கும் வயதானவர்களை வைத்து எவ்வளவு சினிமா சீன்கள் வைத்தாயிற்று. கை நடுங்கி கோணலாகக் கையெழுத்துப்போட்டு காசு வாங்கி தபால்காரருக்கு டிப்ஸ் கொடுக்கும் முதியவர்களைப் பார்க்க முடியவில்லை. இப்போது வயர் ட்ரான்ஸ்ஃபரா? மணியார்டர் என்ற ஒன்று இருக்கிறதா? அரசாங்கமே பென்ஷனை பேங்கில் போட்டுவிட்டு கையில் கார்டை சொருகிவிட்டு போய்விடுகிறார்கள். ப்ளாஸ்டிக் மணி.

கீழத் திருப்பாலக்குடி என்றொரு குக்கிராமம். எனது சிறிய பாட்டனாரது முள்வேலி போட்ட ஓட்டு வீடுதான் அக்கிராமத்திற்கு அஞ்சலகம். அவருக்கு வெளியே டவுனில் வேலையிருந்தால் குடும்பத்து நபர்கள்தான் யூனிஃபார்ம் போடாத அஞ்சலக சிப்பந்திகள். ஜன்னல் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு கல்லாவில் காசை வாங்கிப் போட்டுக்கொண்டு காந்தி படம் போட்ட ஸ்டாம்ப் விற்றிருக்கிறேன். அஞ்சலகம் இல்லா குக்கிராமங்களில் இது போல சிலரைத் தேர்ந்தெடுத்து இந்திய அஞ்சல் துறையே அதிகாரப்பூர்வமாக ஸ்டாம்ப், போஸ்ட் கார்டு, கவர் விற்பதற்கு அங்கீகரித்திருந்தார்கள். ஜன்னலை எட்டிப் பார்த்து ”மிட்டாயெல்லாம் விக்கறதில்லையா?”ன்னு அழுக்கு ஸ்கர்ட் போட்ட ஒரு சிறுமி கேட்டதாக மங்கலாக ஞாபகம் இருக்கிறது.

இவ்வளவு தொழில்நுட்ப மாற்றங்களுக்கிடையே நிகழும் அதிசயம் என்னவென்றால் இன்னமும் கருவாழக்கரை காமாக்ஷியம்மன் கோயில் முருகன் பூசாரியிடமிருந்து தனுர் மாதக் கட்டளை அர்ச்சனை மற்றும் அபிஷேகத்திற்கு
இப்பவும் இங்கு தனுர் மாத பூசை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தாங்கள் இந்த முறையும் ரூ 250 அனுப்பி காமாட்சி அம்மனின் பரிபூரண கடாட்சத்திற்குப் பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
முருகன் பூசாரி

என்று கைப்பட எழுதிய போஸ்ட் கார்ட்தான் எங்கள் கிரஹத்திற்கு வருகிறது. அடுத்த வருடம் பூசாரி செல்ஃபோனில் தட்சிணைக் கேட்கலாம். ஆனால் “சார் போஸ்ட்!” என்ற குரல் கேட்டு வருஷாந்திரம் ஆகிறது.

#அஞ்சலி..அஞ்சலி.. அஞ்சலுக்கு புஷ்பாஞ்சலி...

பட உதவி: stampboards.com

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails