Thursday, September 27, 2012

தேடிக் கண்டுகொண்டேன்

உலக மக்கள் அனைவருக்கும் மௌனகுருவாகவும், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாகவும், அறிவுச்சுடர் ஏற்றிவைக்கும் அணையா தீபமாகவும், கேட்டவர்க்கு கேட்டதை அருளும் வள்ளலாகவும், படிக்காத மேதைகளாக மக்களை மாற்றும் ஆக்க சக்தியாகவும், வையக மாந்தர்கள் பதுக்கி வைத்த ஞானச்சுரங்கங்களைத் தோண்டியெடுத்து கையேந்தி நிற்கும் அஞ்ஞானிகளுக்கு அனாயாசமாக விநியோகிக்கும் டானாகவும் திகழும் கூகிள் இன்று பதினான்காவது அகவையில் அடியெடுத்து வைக்கிறதாம். 

கோயிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்கிற முதுமொழியை இப்போது கூகிளில்லா இணையத்தில் குப்பை கொட்ட வேண்டாம் என்று மாற்றுமளவிற்கு கூகிளின் ஆதிக்கம் மக்களிடையே பரவிக் கிடக்கிறது. டிஜிடலில் எதாவது இல்லையென்றால் “கூகிள் பண்ணிப் பார்த்தியா?” என்பது கேட்டவரின் முதல் கேள்வி. சீனியர்களிடம் அவர்களது அனுபவத்திற்கு மரியாதை கொடுத்துக் கேட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்களெல்லாம் இப்போது விசைப்பலகையின் ஒரு தட்டுதலில் கிடைக்கிறது. “எக்ஸ்பீரியன்ஸுக்கு மதிப்பு இல்லாம போச்சு” என்று ஒரு “பச்” சொல்லி சலித்துக்கொள்பவர்களை காணமுடிகிறது. லட்சோபலட்சம் FAQs என்னை எடுத்துக்கோ என்று பரந்து விரிந்து இணையத்தில் கிடக்கிறது. கிடைக்கிறது.

எனக்குத் தெரிந்து கூகிளைத் தினம்தினம் சரணாகதி அடையும் மக்களில் பெருவாரியான பேர் பதிலுக்கு விஷயதானம் அளிப்பதில்லை. கூகிள் மூலமாகத் தேடி செய்திகளைச் சாப்பிட்டு ஜீரணம் பண்ணிக்கொள்வதில் காட்டும் ஆர்வம் பதிலுக்கு இணைய அன்னமளிப்பதில் அவ்வளவு சுரத்தாக எவரும் ஈடுபடுவதில்லை. ”அஞ்சும் மூணும் எட்டுன்னு கூடத் தெரியாதா?” என்று கேலியாக் கேட்பார்கள். இப்போது தெரியவில்லையெனினும் கூகிளைத் தலைவாசலாக தனது ப்ரௌசர்களில் வைத்திருப்பவர்கள் 5+3= என்று கேட்டு கூகிளைத் தேடு என்று தட்டினால் இப்படி வரும்.

பரீட்சையில் ரேங்க் ஹோல்டராக இருந்தால் பெருமிதமாக ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்வதைப்போல தங்களது சைட்கள் பெருவாரியான இணையவாசிகளை கவர்ந்திழுக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக கூகிளின் ட்ராஃபிக் ரேங்க்கை வைத்து பெருமையடித்துக்கொள்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். கூகிள் ஆட்ஸ் மூலமாக வீட்டிலிருந்தே சுய தொழில் புரிந்து சம்பாதிப்பவர்கள் பெருகி வருகிறார்கள். யோசிப்பதை எல்லாம் கூகிளிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம். இரண்டு நிமிடம் இணைய இணைப்பு கிடைக்காவிட்டால் உடனடியாகத் தேவைப்படும் சங்கதிகளுக்கு ததிங்கினத்தோம் போடும்படியாக ஆகிவிடுகிறது.  

கோடெழுதத் தெரியாதவர்களைக் கூட சாஃப்டேர் இஞ்சினியராக தொழில் பார்க்க விட்டிருக்கும் கூகிளின் மாண்பு அளப்பறியது. இன்னமும் என் நெற்றியும் உங்கள் முதுகிலும் மட்டும்தான் கூகிளின் வரிவிளம்பரங்கள் வராத இடங்களாக இருக்கிறது. தேடல் உள்ள வாழ்வினிலே தினமும் ருசியிருக்கும் என்பது உறுதி. சர்ச் என்ஞ்சினாக மெஷினில் அவதாரமெடுத்தது பூலோகத்தில் வாழும் மானுட இனத்திற்கே ரிசர்ச்சுக்கு பயன்படுவதிலிருந்து அதன் பலம் நமக்குத் தெரியும்.

எதிலும் எங்குமிருக்கும் ஆதியந்தமில்லாத இறைவனைப் போல இணையத்தின் அனைத்து தொழில்நுட்பத்திலும் மூக்கோடு தன்னுடைய ஆஜானுபாகுவான உடலையும் சேர்த்து நுழைத்து  அதன் ஆட்சியை மாட்சியோடு நடத்தும் கூகிளரசருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் ஏழேழு ஜென்மத்துக்குத் தொடரும் இந்த பந்தம்.

HAPPY BIRTHDAY

கூகிள் தேடலினால் மனித மூளைகள் நினைவாற்றலை இழந்து மழுங்கிவிட்டன என்று ஒரு அமெரிக்க சர்வ கலாசாலையில் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள் என்று படித்தேன். மறந்து விட்டேன். கூகிளில் தேடிவிட்டுச் சொல்கிறேன்.

#ஃபேஸ்புக்கிற்கு சென்று குறுகிப்போன என் எழுத்துப் பழக்கத்தை எப்படியும் சீர் செய்து திரும்ப கொண்டுவரும் சீரிய பணியில் ஈடுபட்டிருப்பதால் இதுபோல முணுக்கென்றால் பதிவெழுதுவது என்று தடாலடியாகத் தீர்மானித்திருக்கிறேன். :-)


23 comments:

அப்பாதுரை said...

55/100

RVS said...

@அப்பாதுரை
மார்க்கா.. என்னான்னு புரியலையே பாஸு!! :-)

Yaathoramani.blogspot.com said...

பிறந்த நாள் வாழ்த்தை மிக மிக அருமையான
பதிவாகக் கொடுத்தது மனம் கவர்ந்தது
உண்மையில் கூகிளார் படித்தால் அதிகம்
சந்தோஷம் கொள்வார்
வாழ்த்துக்கள்

RVS said...

@Ramani
நன்றி சார்! :-)

வரதராஜலு .பூ said...

nice

//கூகிள் தேடலினால் மனித மூளைகள் நினைவாற்றலை இழந்து மழுங்கிவிட்டன என்று ஒரு அமெரிக்க சர்வ கலாசாலையில் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள் என்று படித்தேன். மறந்து விட்டேன். கூகிளில் தேடிவிட்டுச் சொல்கிறேன். //

:))

RVS said...

@வரதராஜலு.பூ
சிரிப்பானுக்கு நன்றி. இந்தாருங்கள் பதில் சிரிப்பான்கள் :-)))))))))

ரிஷபன் said...

கூகிள் தேடலினால் மனித மூளைகள் நினைவாற்றலை இழந்து மழுங்கிவிட்டன என்று ஒரு அமெரிக்க சர்வ கலாசாலையில் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள் என்று படித்தேன். மறந்து விட்டேன். கூகிளில் தேடிவிட்டுச் சொல்கிறேன்.

நல்லவேளை.. இந்த வரியை ரசித்து விட்டு மறக்காமல் போட்டு விட்டேன்..

RVS said...

@ரிஷபன்
மறக்காமல் கமெண்ட் போடுவதற்கு கூகிள் சொல்லிக்கொடுத்ததா சார்? :-)

வெங்கட் நாகராஜ் said...

//ஃபேஸ்புக்கிற்கு சென்று குறுகிப்போன என் எழுத்துப் பழக்கத்தை எப்படியும் சீர் செய்து திரும்ப கொண்டுவரும் சீரிய பணியில் ஈடுபட்டிருப்பதால்.... //

வரவேற்கத்தக்க மாற்றம்!

உங்களை வலையுலகம் ரொம்பவே மிஸ் பண்ணுது மைனர்!

RVS said...

@வெங்கட் நாகராஜ்

நன்றி தலைநகரமே! :-)

Anonymous said...

எமது கூகிளாண்டவர் ஜெயந்தி நாளை வெகுவிமர்சையாக கொண்டாடுவோம் ... !!!

ஸ்ரீராம். said...

//இதுபோல முணுக்கென்றால் பதிவெழுதுவது என்று தடாலடியாகத் தீர்மானித்திருக்கிறேன். :-)//

வாங்க.. வாங்க...

"ஆறாம் வட்ட அறிவுக் கொழுந்து சார்பாகவும், பதின்மூன்றாம் வட்டம் பரிதாபவல்லி சார்பாகவும் அண்ணன் கூகிளாருக்கு இந்நன்னாளில் அவருடைய பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு 'எங்கள்' பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறோம் என்று தெரிவித்துக் 'கொல்லும்' அதே நேரம், அப்பாதுரையார் பின்னூட்டங்களுக்கும் மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்றும் பணிவுடனும் அன்புடனும் கேட்டுக் கொண்டு.. விடைபெற யோசிக்கும் இவ்வேளையிலே...

RVS said...

@இக்பால் செல்வன்
கொண்டாடுங்கள் உற்சாகமாய்... :-)

RVS said...

@ ஸ்ரீராம்.
கவலையேபடாதீங்க ஸ்ரீராம். இந்தப் பதிவை விட உங்களோட கமெண்ட் நூறு மதிப்பெண்கள் நிச்சயம் பெறும்.

சாந்தி மாரியப்பன் said...

//கூகிள் தேடலினால் மனித மூளைகள் நினைவாற்றலை இழந்து மழுங்கிவிட்டன என்று ஒரு அமெரிக்க சர்வ கலாசாலையில் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள் என்று படித்தேன். மறந்து விட்டேன். கூகிளில் தேடிவிட்டுச் சொல்கிறேன்.//

:-))))

Rathnavel Natarajan said...

கூகிள் தேடலினால் மனித மூளைகள் நினைவாற்றலை இழந்து மழுங்கிவிட்டன என்று ஒரு அமெரிக்க சர்வ கலாசாலையில் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள் என்று படித்தேன். மறந்து விட்டேன். கூகிளில் தேடிவிட்டுச் சொல்கிறேன்.

அருமை சார். வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

கூகுளாண்டவருக்கு வாழ்த்துக்கள்...

RVS said...

@ அமைதிச்சாரல்
இந்தப் பதிவிற்கு அந்தக் கடைசி ஒரு வரி போதும்னு நினைக்கிறேன். :-)

RVS said...

@Rathnavel Natarajan

நன்றி சார்! :-)

RVS said...

@ திண்டுக்கல் தனபாலன்
ஆண்டவருக்கே வாழ்த்துச் சொன்ன தனபாலன் வாழ்க! :-)

சிவகுமாரன் said...

ஆரம்பத்தில் யார் அந்த ஆண்டவன் என்று குழம்பிப்ப் போனேன்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் - கூகிளுக்கு

அப்பாதுரை said...

சீக்கிரம் முணுக்குங்க.

தக்குடு said...

//ஃபேஸ்புக்கிற்கு சென்று குறுகிப்போன என் எழுத்துப் பழக்கத்தை எப்படியும் சீர் செய்து திரும்ப கொண்டுவரும் சீரிய பணியில் ஈடுபட்டிருப்பதால்//

அப்பாஆஆஆஆடி! இப்பவாவது நல்ல புத்தி வந்ததே!! :)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails