Showing posts with label படிப்பு. Show all posts
Showing posts with label படிப்பு. Show all posts

Tuesday, July 29, 2014

ஏபிசி நீ வாசி

"இந்தப் பக்கம் க்ராஸா ஒரு கோடு. அந்தப் பக்கம் க்ராஸா ஒரு கோடு. ரெண்டுத்தையும் சேர்க்கிறா மாதிரி நடுப்பற ஒரு கோடு”

“.......”

“மேலேயிருந்து கீழ நேரா ஒரு கோடு. அந்த கோட்டை ஒட்டினா மாதிரி மேலையும் கீழையும் இப்படி ரெண்டு வளைவு..”

“.......”

“மூன்ல பாதிய பெருசா போடுங்க...”

“.......”

“ஒரு முட்டை போட்டு.... பின்னால வாலு போடுங்க...”

“......”

“ஒரு கோடு போட்டு அடியில ஒரு முட்டை இப்படி போடுங்க....”

“.....”

“மூன்ல பாதிய சின்னதா இங்க போடுங்க..”

”.......”

“ஆன்ட்டி. இப்ப சொல்லிக்கொடுத்ததை இந்த பேஜ்ஜிலையும் அடுத்த பேஜ்ஜிலையும் வரிசையா எழுதிடுங்க... இதுதான் கேப்பிட்டல் அண்ட் ஸ்மால் ஏபிசி....”

பெரியவள் வினயாவிற்கு ஸ்கூல் ஹாலிடே ஆக்ட்டிவிட்டியில் ஆங்கிலம் கல்லாத ஒருவருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கவேண்டுமாம். வசமா அகப்பட்டாங்க வீட்டு வேலை தாயம்மா.

“வேலைக்கு அரை மணிநேரம் முன்னாடி வந்தாப் போரும்...” என்று க்ளாஸ் டைமிங்கெல்லாம் குறித்துக் கொடுத்தாகிவிட்டது. தாயம்மாவும் சந்தோஷமாக முறைசாராக் கல்வியில் சேர்ந்தாகிவிட்டது. நாலு வரி நோட்டும் கையுமாக மாலை வேளைகளில் வேலைக்கு முந்தி படிக்கவேண்டும்.

”அப்பா... தாயம்மா ஆன்ட்டி பாவம்பா... ஆசையாக் கத்துக்கறாங்க... எனக்கும் படிக்கணுமின்னு ஆசதான் புள்ள.. வூட்ல படிக்க வைக்கலே..ன்னு பாவமாச் சொன்னாங்க...”

ஐம்பது வயதில் தாயம்மாவின் ஆர்வம் வியக்க வைக்கிறது. வாசலில் சிக்குக் கோலம் போடும் இழை போல “c" யிலும் சின்ன “a"யிலும் சுழித்து வரைந்திருக்கிறார்.

“அப்பா... லீவுல இந்த க்ளாஸ் முடியும் போது தாயம்மா ஆன்ட்டி கூட நின்னு நானு ஃபோட்டோ எடுத்துக்கணும். ஓகேவா?”

கல்லாதவர்க்கு சொல்லிக்கொடுக்கும் சந்தோஷம் என் பெண்ணின் கண்களிலும் அவளின் மகிழ்ச்சி என் உள்ளத்திலும் பொங்கியது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails