Monday, February 1, 2016

கணபதி முனி - பாகம் 38: கடவுளின் புத்திரன்

மகேந்திரகிரியில் தவமியற்ற சித்தமாயிருந்தார் நாயனா. கொடும் விலங்குகள் அவர் மீது பாய்ந்தால் அவரை எப்படிக் காப்பது? அவருக்கு அதற்கும் ஒரு துணை தேடி வந்தது. தேவவிரதன் தைரியசாலி. தேகமும் வைரம் பாய்ந்த கட்டை. குருவிற்கு ஒத்தாசையாகவும் விலங்குகளைத் துரத்தியும் சேவை புரிவான். இருந்தாலும் மந்தேசா ராஜா நாயனாவிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடுமோ என்று சித்தம் கலங்கினார். சிவராத்திரி தினத்தன்று ஊர் மக்கள் ஒன்று கூடி மலையேறும் நேரத்தில் நாயனா, தேவவிரதன், விசாலாக்ஷி மற்றும் மந்தேசாவின் திவான் எல்லோரும் சேர்ந்து மலையுச்சியை அடைந்தார்கள்.

கோகர்ணத்திலிருக்கும் கோகர்ணேஸ்வரரின் சிலை பசுவின் காது போன்ற சாயலில் இருக்கும். மகேந்திரகிரியில் பசுவின் காது என்பது உள்ளீடு. இதைக் கண்டு மகிழ்ந்த கணபதி அம்மூர்த்தியைப் போற்றி சில பாடல்களை உடனே பாடினார். அந்த ஸ்லோகங்களில் “தஹர கோகர்ணேஸ்வரா” என்று பதங்கள் போட்டு எழுதியிருந்தார். கோகர்ணேஸ்வரர் வடிவுடைய ஒரு பிரம்மாக காட்சியளிப்பது போல தஹர கோகர்ணேஸ்வரர் வடிவில்லாத பிரம்மமாக அருள்பாலித்தார்.

தஹர கோகர்ணேஸ்வரர் ஆலயத்தின் பக்கத்தில் ஒரு விஷ்ணு ஆலயமும் உண்டு. பரசுராமர் கோவிலாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்ட நாயனா இரு கோயிலுக்கும் நடுவில் இருக்கும் ஒரு மண்டபத்தைத் தவமியிற்ற தேர்ந்தெடுத்தார். அப்போது அந்த மலையின் அமைப்பை ஒரு முறை பார்த்தார். கீழே படுத்திருக்கும் பசுவின் ஒரு காது மட்டும் தூக்கிக்கொண்டிருக்கும்படி அந்த மலை இருந்தது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்தக்கால ரிஷிகள் தவம் செய்யத் தகுந்த இடங்களைக் கண்டறிந்ததின் மகத்துவத்தை எண்ணி பிரமித்தார்.

சில நாட்களில் மந்தேசாவின் திவானுடன் விசாலாக்ஷி மலையிறங்கிவிட்டார். நாயனாவும் தேவவிரதனும் தவத்தை தொடர்ந்தார்கள். மந்தேசா ராஜா மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாலும் பூரிகளும் மேலே அனுப்பினார். 

இருபது நாட்களுக்கு நாயனா இடைவிடாமல் தவமியற்றினார். தேவவிரதனுக்கு இந்நாட்கள் தேவப்பிரசாதம். தவமியற்றக் கற்றுக்கொள்ளவும் குருவிற்கு சிஷ்ருஷைகள் செய்வதற்கும் ஆண்டவன் அளித்த வரம். இருபதாம் நாள் இரவு நாயனா அந்த நிசப்தமான மலையில் கண்கள் திறந்து அமர்ந்திருந்தார். அப்போது ஜடாமுடியும் தாடியுமாக ஒருவர் எதிரில் தோன்றினார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று நினைவுகளைத் தட்டி எழுப்பிப் பார்த்த நாயனாவுக்கு விடை கிடைத்தது. ஆம். அவரை படைவீடு ரேணுகாதேவி ஆலயத்தில் சந்தித்திருக்கிறார். 

முனிசிரேஷ்டர் போல இருந்த அவரை நாயனா பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவரிடமிருந்து எழுந்த ஜோதிர்மயமான ஏதோ ஒன்று நாயனாவை மின்சாரக் கம்பி போல சூழ்ந்துகொண்டது. ஆச்சரியமடைந்த நாயனா கண்களை மூடிக்கொண்டார். அந்த தெய்வீக ஒளி சூட்சுமமாக அவருக்குள் சென்று அடங்கியதை உணர்ந்தார். கண்களைத் திறந்த போது அந்த ஜடாதாரி அங்கே இல்லை. அடுத்த நாள் காலையில் இருவரும் மலையிலிருந்து இறங்கி மந்தேசா வந்தடைந்தனர்.

*

ஜூன் 1917ல் கணபதி முனி திருவண்ணாமலை சென்றார். விசாலாக்ஷி, வஜ்ரேஸ்வரி மற்றும் தேவவிரதாவும் அவருடன் இருந்தனர். அருணைக்குச் செல்லும் வழியில் விஜயவாடாவில் சங்கர சாஸ்திரியுடனும் மதராஸில் சுதான்வாவுடனும் சில நாட்கள் தங்கினர். சுதான்வா இப்போது ஊரில் பெரிய வக்கீலாகியிருந்தார்.

அருணகிரியில் மாமரக் குகையில் தங்குவதாக நாயனா தீர்மானித்தார். குகை புழங்குவதற்கு ஏற்றதாக இல்லை. சிஷ்யர்கள் அதைச் செப்பனிட ஆரம்பித்தார்கள். விசாலாக்ஷியும் நாயனாவும் எச்சம்மாளுடன் தங்கினர்.

மாமரக் குகை ஸ்ரீரமணர் உறையும் ஸ்கந்தாஸ்ரமத்திற்கு சற்றே கீழே இருந்தது. ஸ்ரீரமணரின் உபதேசங்கள் அடங்கிய ஸ்ரீரமண கீதையை எழுத சரியான இடம் இதுவே என்று முடிவு செய்தார். ஹ்ருதய குஹார மத்யே என்கிற ரமணரின் ஸ்லோகத்தையும் சேர்த்துவிட வேண்டும் என்று விரும்பினார். ஸ்ரீரமணர் தனது நேரடி அனுபவத்தால் பரம்பொருள், பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள் பற்றிய அவரது உபதேசங்கள் பல தளங்களைத் தொட்டு ஞானம் ஊட்டியது. 

கோடைக்காலம். தினமும் ஸ்காந்தஸ்ரமம் ஏறி இறங்குவது நாயனாவுக்கு சிரமமாகயிருந்தது. இருந்தாலும் ஸ்ரீ ரமண கீதையை பூர்த்தி செய்வதில் மும்முரமாக இறங்கினார். முதல் அத்தியாயத்தில் தனது கேள்விகளுக்கு ரமணரின் பதில்களைத் தொகுத்தார். இரண்டாவதில் மகரிஷியின் ஹ்ருதய குஹர மத்யே ஸ்லோகத்தின் பொழிப்புரை வழங்கினார். மூன்றாவது அத்தியாயத்தில் தேவவிரதரின் கேள்விக்கு பகவான் அளித்த பதில்கள். நான்காவது அத்யாயத்தில் ஞானம் மற்றும் விபூதி பற்றி நாயனா கேட்டதற்கு ஸ்ரீரமணரின் பதில்கள் இடம்பிடித்தன. 

நாட்கள் செல்லச் செல்ல சிஷ்யர்கள் நிறைய பேர் குவிய ஆரம்பித்தனர். நாயனாவும் விசாலாக்ஷியும் விரூபாக்ஷிக் குகையில் தங்கினால் சிஷ்யர்களுக்கும் தோதாக இருக்கும். மேலும் அனைவரும் ஸ்கந்தாஸ்ரமத்திற்கு சமீபமாகவும் தங்கியிருப்பார்கள். கிரஹஸ்தாஸ்ரமக்காரர்கள் விரூபாக்ஷியில் தங்கக்கூடாது என்பது எழுதப்படாத விதி. கணபதி வானப்ரஸ்தத்தில் இருந்தார். ஆகையால் விசாலாக்ஷியுடன் தங்கலாம் என்று எச்சம்மாள் மற்றும் வஜ்ரேஸ்வரியுடன் விரூபாக்ஷிக்கு வந்தார்கள். குகை பூட்டியிருந்தது. பழனி ஸ்வாமிகள் நாயனாவின் மகிமை தெரியாமல் தங்குவதற்கான ஏற்பாடு எதுவும் செய்யாமல் விரூபாக்ஷிக்குள் அனுமதிக்கவில்லை. 

நாயனா நேரே ஸ்கந்தாஸ்ரமம் சென்றார். பகவான் ஸ்ரீ ரமணர் பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். நாயனாவைப் பார்த்தவுடன் அப்படியே நிறுத்திவிட்டு...

“கணபதி... பழனி ஸ்வாமிகள் குகையை தயார் செய்துவிட்டாரா?”

நாயனா பதிலுரைக்காமல் மகரிஷியை ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

பழனி ஸ்வாமிகளும் அந்த பக்தர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். பகவான் மீண்டும் கேட்ட பொழுது நாயனாவுடன் வந்தவர்கள் நடந்ததைக் கூறினார்கள்.

“பழனி.... ஏன் நீ விரூபாக்ஷிக் குகையை நாயனாவுக்காகத் தயார் செய்யவில்லை?” என்று கேட்டார் ரமணர்.

“நாம குடும்பிகளுக்கு குகை கொடுக்கறதில்லையே சாமி...” என்று எகத்தாளமாகப் பதிலுரைத்தார் பழனி ஸ்வாமி. கணபதிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே கடகடவென்று ஒரு ஸ்லோகம் சொன்னார். 

அத்ய க்ரோதம் விமோக்ஷயாமி காண்டவேக்னிமிவர்ஜுன:
புவனே ப்ராணிபி: பூர்ணே பரிதோபி ச விஸ்த்ருதே
ஸைலம் க்ஷ்பதஸ்சாபி துன்வதஸ்சாபி பர்வதான்
யதஹேந்த்ரஸ்ய ததேஷஸ்ய புத்ரஸ்ய மம வை மஹ:

அர்த்தம்: காண்டீபத்தால் காண்டவ வனத்தை பொசுக்கிய அர்ஜுனனைப் போல எனது கோபாக்கினியை பரவவிடுகிறேன். மலைகளையே உருட்டும் மழையை வர்ஷிக்கும் இந்திர தேஜஸுடன் நான் ஒளிர்கிறேன், ஏனென்றால் நான் கடவுளின் புத்திரன். 

உடனே கணபதி முனி தன்னுடைய சிஷ்யர்களுடன் கடகடவென்று இறங்கி விரூபாக்ஷி குகைக்கு சென்றுவிட்டார். குவை வாயிலில் இருக்கும் மரத்தடியில் யோக நிலையில் அமர்ந்தார். கீழே பூமி வெப்பத்தால் காய்ந்துகொண்டிருந்தது. அவரது மனசும் கொதித்தது. ரிக்வேதத்திலிருந்து இந்திரனை வரவழைக்க சில சூக்தங்களை ஜெபித்தார். வறண்ட பூமியை மழை கொண்டு வருடச்செய்ய எத்தனத்தார்.

அன்றிரவு ஆகாயமெங்கும் பளீர் பளீரென்று மின்னல் வெட்ட பயங்கர இடியுடன் மழை பொத்துக்கொண்டு கொட்டியது. நனைந்து கொண்டிருந்த கோயில் தேரில் சில பாகங்கள் பொசுங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமில்லை. ”நான் கடவுளின் புத்திரன்...” என்று கணபதி முனி பழனி சுவாமிகளிடம் கர்ஜித்தது இப்போது உங்கள் நினைவுக்கு வரலாம்....

அடுத்தது...... சேஷாத்ரி ஸ்வாமிகள் கண்டு ரசித்த நாயனாவின் தசமஹா வித்யா உபன்யாசங்கள்....

அம்பாளப் பார்க்கணுமா?

அது ஆயிரத்திதொள்ளாயிரத்தி எழுபத்தஞ்சாம் வருஷம். வலது தோள்ல டோலக்கு. இடது தோள்ல தொங்கு பை. தலையில இருமுடி. பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒரு கையில. அப்படிதான் சபரிமலை போவோம். மலைக்கு போறத்துக்கு நமக்கு எப்பவுமே பெருவழிதான். எங்க க்ரூப்ல மெண்ட்டல் சாமின்னு ஒருத்தர். பாவம்.. மோட்டுவளையப் பார்த்து பேசிப்பார். எப்பவுமே ஏதோ தீவிர சிந்தனை. கண்ணு ரெண்டும் அரையாய்ச் சொருகி எதுலயோ லயிச்சுப் போயிருப்பார். வாய்ல மந்திரம் மாதிரி சதா என்னத்தையோ முணுமுணுன்னு ஜெபிச்சிண்டேயிருப்பார். நல்ல மனுஷன். நாந்தான் அவர்கூடவே ஒட்டிண்டு வருவேன்.

அப்போ சந்தியாக்கால வேளை. இன்னும் சித்தநாழில இருட்டிடும். பெரியானைவட்டம் கிட்டே இருக்கோம். ஒருத்தொருக்கொருத்தர் பார்த்துக்கறா மாதிரி வளையமா உட்கார்ண்டு ”ஐயப்பா...ஐயப்பா...”ன்னு பஜனை பிரமாதமா போயிண்டிருக்கு. டோலக்கு.... ஜால்ரா... ஜமாய்... என் பக்கத்துல மெண்டல் சாமி.

ஆனந்த பரவச நிலைம்பாளே... அப்படியொரு பரமானந்த நிலையில பாட்டுப் பாடிண்டு இருக்கோம். கலியில பகவன் நாமா சொன்னாப் போறுமாம்... பக்கத்துலேர்ந்து அந்த சாமி என் தொடையில ’பட்’டுன்னு தட்டினார். பஜனை பாடிண்டே “என்ன?”ன்னு ஜாடையாப் பார்த்தேன். “உனக்கு அம்பாள பார்க்கணுமா?”ன்னு காதுல கேட்டார். சரின்னும் சொல்லாம மாட்டேன்னும் சொல்லாம இருந்தேன். கையைப் பிடிச்சு இழுத்தார். கடேசில உட்காண்டிருந்தோம். அப்படியே எழுந்துண்டேன்.

என் கையைப் பிடிச்சு இழுத்துண்டு விறுவிறுன்னு காட்டுக்குள்ளே போனார். எனக்கு ஒண்ணுமே புரியலை. சின்னப் பையன் வேற... வாயைத் தொறக்காம அவர் இழுத்த இழுப்புக்குப் புதரெல்லாம் தாண்டி போயிண்டிருக்கேன். நாலாபக்கத்துலேயும் பெரிய பெரிய மரம். வழியில்லாத வழியில செடிகொடின்னு கால்ல என்னமோல்லாம் சதக்பதக்ணு மிதிபடறது. கொடி முள்ளெல்லாம் அப்பப்போ காலைக் கிழிக்கிறது. ஆனா ஒங்கேயும் நிக்காம வேகமாப் போறோம்.

கொஞ்ச தூரத்துல ஒரு பாறைக்குப் பக்கத்துல அஞ்சு பேரு வரிசையா தபஸ் பண்றா மாதிரி யோக நெலையில உட்கார்ந்திருக்கா. இருட்டுல மங்கலா மசமசன்னு நிழல் உருவமா தெரியறது. அவா தலைக்கு மேலே சின்ணோண்டு தட்டிக்கூரை. அவா சப்ளாங்கால் போட்டு உட்கார்ந்திருக்கதுனால அந்த உடம்பை மேலேயிருந்து மறைக்கிறா மாதிரியான அளவோட கூரை அது. கிட்டக்க நெருங்கினா அஞ்சு பேரும் செகப்பு வஸ்திரம் கட்டிண்டிருக்கா. செகப்பு கலர்லயே அவா முன்னாடி இருமுடி. சின்னச் சின்ன அகல் வெளக்கு. அப்போல்லாம் மேல்மருவத்தூர் ஃபேமஸ் இல்லே. ஐயப்பனுக்கு செகப்பு வஸ்திரம் யாரும் கட்டிக்கறது கிடையாது. எனக்கு ரொம்ப புதுசா இருந்தது.

எனக்கு அவா பக்கத்துல போகப் போக ஏதோ ஒருவித பயம். ஆனா ஏதோ ஒரு அசட்டு தைர்யம் கூட இருந்தது. இவர் அவா முன்னாடி போய் சப்ளாங்கால் போட்டுண்டு சகஜமா உட்கார்ந்துண்டார். நானும் சங்கோஜமா அவர் பக்கத்துல ஒட்டிண்டு உட்கார்ந்தேன். ஏதோ குனிஞ்சு அவாள்ட்ட நடுப்பற ஒருத்தர்கிட்டே இவர் பேசினார். ரொம்ப நாள் பழகினவா மாதிரி மனஸு விட்டு ரொம்ப நாழி பேசிண்டிருந்தா. எனக்கு ஒவ்வொரு செகண்ட்டும் ஒரு வருஷம் மாதிரி நகர்ந்தது. நா அப்படியே ஆடாம அசங்காம உட்கார்ந்திருந்தேன். அப்போ நடுவில இருக்கிற ஒருத்தர் தன் முன்னாடி இருந்த பித்தளைத் தட்டைக் கையில எடுத்தார்.

தட்டு முழுக்க குங்குமம் பரவி இருந்தது. கையில அந்த தட்டை எடுத்துண்டவர் திடீர்னு தன்னோட தலையைக் குனிஞ்சு அந்தத் தட்டுல மடார்னு மோதினார். எனக்குப் படக்குன்னு தூக்கிவாரிப் போட்டது. என்னன்னு நான் மலங்கமலங்க பார்த்துண்டே இருக்கும் போதே முன்னாடி ஜடாமுடி விழ தலையைத் தூக்கினார் பாருங்கோ... ப்பா....ப்பா... ஐயப்பா... ப்பா....

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. சப்தநாடியும் அடங்கிப்போச்சு. முகம் முழுக்க குங்குமம் அப்பிண்டிருந்தது. செக்கச்செவேல்னு தகதகன்னு முகம் மின்றது. அவளாக்குப் பக்கத்துல இருந்த அகல் விளக்கு வெளிச்சமே அத்தனை பிரகாசமா இருந்தது. கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுண்டு பார்த்தேன். கருவிழி ரெண்டும் மேலே போயி கண்ணெல்லாம் பூ விழுந்தா மாதிரி வெள்ளையா தெரியறது. பாக்கி முகமெல்லாம் ஒரே ரெத்த செகப்பு.

வாயிலேர்ந்து நாக்கு முழுக்க வெளியில வந்துடுத்து. அந்த நாக்குல ஒரு இன்ச்சுக்கு குங்கும் ஏறிப்போயிருக்கு. காத்துல ஆடற அகல் வெளிச்சத்துல மொகம் முழுக்க குங்குமத்தோட நாக்கை வெளியில தள்ளிண்டு உக்ரரூபமா காளிகாதேவி போல அம்பாளப் பார்த்தேன். எத்தனை நாழி பார்த்திருப்பேன்னு தெரியலை. அந்த மெண்ட்டல் சாமி கையைப் பிடிச்சுண்டு காட்டுலேர்ந்து வெளியில வந்துண்டிருக்கும்போதுதான் எனக்குப் பிரக்ஞை வந்தது. ”அம்பாள பார்த்ததை யார்ட்டேயும் சொல்லாண்டாம்.... கேட்டியா?” என்றார் பாலக்காட்டு தமிழில். ம்.. என்று தலையை ஆட்டிக்கொண்டேன். எல்லாமே சொப்பனம் போல நடந்தது. மந்திரிச்சு விட்டது போல அவர் பின்னாடியே வந்துட்டேன்.

”என்னடா? எங்கே போயிருந்தே?”ன்னு குருசாமி தட்டிக் கேட்டார். அவரைப் பார்த்துட்டு மௌனமா இருந்துட்டேன்.அப்புறம் மலையேறினோம். ஐயப்பன் தரிசனம் ஆச்சு. இறங்கற வழிக்கிட்ட எல்லோரும் உட்கார்ந்திருக்கோம். நான் உட்காண்டிருக்கிற இடத்துக்கிட்ட நெடுநெடுன்னு ஒருத்தர் வந்தார். நல்ல உசரம். நல்ல ஆகிருதி. ஏதோ ஒண்ணு பொறி தட்டித்து.. என்னன்னு... பார்த்தா அவர் செகப்பு வஸ்திரம் கட்டிண்டிருக்கார். செகப்பு இருமுடி. என் பக்கத்துல வந்தார். "நேத்திக்கி ராத்திரி அம்பாளப் பார்த்தியா?”ன்னார் சிரிச்சுண்டே. நான் அப்படியே உறைஞ்சு போய்ட்டேன். நான் சொப்பனம்னு நெனைச்சுண்டு இருந்ததை சத்தியமா நடந்ததுன்னு சொல்றத்துக்கே அவா வந்தா மாதிரி இருந்தது. திரும்பவும் வாயைத் திறந்து நான் எதுவும் கேட்கறத்துக்கு முன்னாடி மாயமாய் மறைஞ்சு போய்ட்டார்.

இப்ப நெனைச்சாலும் மெய் சிலிர்க்குது!! இப்படி சபரிமலையிலே ஒவ்வொண்ணும் சத்யமா இன்னிக்கும் நடக்கிறது....

மோகன் ஜி சொன்ன கதை, என்னுடைய புரிதலுக்கேற்ற எழுத்தில்!!

நோயிற் கிடவாமல்... நொந்து மனம் வாடாமல்...

........நோயிற் கிடவாமல், நொந்து மனம் வாடாமல், பாயிற் கிடவாமல் பாசக்கயிறு வந்து விடுமோ என்ற பயங் கொள்ளாமல்....

காலங்கார்த்தால ஸ்நானம் பண்ணிட்டு வழக்கம்போல பூஜை பண்ணினார். பார்த்தாக்க எண்பது வயசுன்னு சொல்லமுடியாது. திடகாத்திரமா இருந்தார். இருமல் சளி ஜலதோஷம் ஆஸ்துமா ஜுரம் ஷுகர் பிபின்னு ஒரு உபாதையும் கிடையாது. ஹேல் அண்ட் ஹெல்தி. அன்னிக்கு பூஜையை முடிச்சுட்டு சமையல் கட்டைப் பார்த்து "ரெண்டு இட்லி போறும்”னார். நிறைய ஐயப்பசாமிகளுக்கு குருசாமி அவர். எத்தனைன்னு எண்ணிக்கையெல்லாம் வச்சுக்காம பலதடவை சபரிமலை போயிருக்கார். எல்லாம் பெருவழி. இட்லி சாப்ட்டு எழுந்துண்டார். பொண்ணைக் கூப்ட்டார். எல்.ஐ.சி பாலிஸியெல்லாம் எங்கே இருக்கு... பாஸ்புக் எங்கேயிருக்கு... அந்த மாச கணக்கு வழக்கல்லாம் என்னென்னனு சொல்ல ஆரம்பிச்சார்... ”இது என்ன இன்னிக்கு என்னிக்கும் இல்லாத திருநாளா.... புதுசா இருக்கு...”ன்னா மாமி... அவர் எதையும் கேட்டுக்கலை.. எல்லாத்தையும் ஒண்ணுவிடாமச் சொன்னார்...

”மாடியில.. அந்த பழம் பொட்டிக்கு பக்கத்துல ஒரு பாய் இருக்கும் பாரு எடுத்துண்டு வா”ன்னு மாமியைக் கேட்டார். கொண்டு வந்து கொடுத்தா. நடு ஹால்ல வடக்கு தெற்கா விரிச்சார். “யே.. அந்த பொட்டியில ஒரு பழைய வேஷ்டி இருக்கும்.. அதையும் தாயேன்”னார். “என்னப்பா இதெல்லாம்... ஏதோ புதுசுபுதுசா பண்றே”ன்னா பொண்ணு. அந்த வேஷ்டியை வாங்கி விரிச்ச பாய்க்கு மேலே போட்டார். விடுவிடுன்னு போய் ஒண்ணுக்குப் போய்ட்டு காலை அலம்பிண்டு வந்து அந்தப் பாயில உட்கார்ந்துண்டார்.

“எல்லோரும் சமர்த்தா இருங்கோ... சந்தோஷமா இருங்கோ.. க்ஷேமமா இருங்கோ... நான் புறப்படறேன்.”ன்னு பளீர்னு சிரிச்சுண்டே எல்லோரையும் பார்த்துச் சொல்லிண்டார். தெற்கைப் பார்க்க தலையை வச்சுண்டு வடவண்டைப் பக்கம் காலை நீட்டிச் சட்டுன்னு படுத்துண்டார். என்னடாதிது.. என்னமோ மாதிரி பேசறாரே.... ஏதாவது ஆயிடுத்தோன்னு... ஆத்துல இருக்கிறவால்லாம் சுதாரிச்சுண்டு கிட்ட ஓடி வந்து பார்க்கிறா.... பொண்ணு அப்பா..அப்பான்னு தோளை உலுக்கறா... ஊஹும்.. பேச்சு மூச்சு இல்லே... ஏதோ பக்கத்து ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போறா மாதிரி பரலோகம் போய்ச்சேர்ந்துட்டார். புண்ணியாத்மா!

........நோயிற் கிடவாமல், நொந்து மனம் வாடாமல், பாயிற் கிடவாமல் பாசக்கயிறு வந்து விடுமோ என்ற பயங் கொள்ளாமல்......

**முதல் வரியும் மேலேயிருக்கும் வரியும் என்னுடையதல்ல. கதை சொல்லும் போது மோகன் அண்ணா மேற்கோள் காண்பித்தார்.**

”ஆ”(ன்மிக) கதைகள் தொடரும்....
அடுத்த கதை ட்ரெயிலர்:- //சாமி தொடையில ’பட்’டுன்னு தட்டினார். பஜனை பாடிண்டே “என்ன?”ன்னு பார்த்தேன். “உனக்கு அம்பாள பார்க்கணுமா?”ன்னு காதுல கேட்டார். சரின்னும் சொல்லாம மாட்டேன்னும் சொல்லாம இருந்தேன். கையைப் பிடிச்சு இழுத்தார். கடேசில உட்காண்டிருந்தோம். அப்படியே எழுந்துண்டேன்.
என் கையைப் பிடிச்சு இழுத்துண்டு விறுவிறுன்னு காட்டுக்குள்ளே போனார். எனக்கு ஒண்ணுமே புரியலை. சின்னப் பையன் வேற... வாயைத் தொறக்காம அவர் இழுத்த இழுப்புக்குப் புதரெல்லாம் தாண்டி போயிண்டிருக்கேன். நாலாபக்கத்துலேயும் பெரிய பெரிய மரம். வழியில்லாத வழியில செடிகொடின்னு கால்ல என்னமோல்லாம் சதக்பதக்ணு மிதிபடறது. கொடி முள்ளெல்லாம் அப்பப்போ காலைக் கிழிக்கிறது. ஆனா ஒங்கேயும் நிக்காம வேகமாப் போறோம். //

ஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ:

"சுதா! இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்து...” என்று தோசை சுட்டுப் போடும் “ரமா”வைப் பார்த்து குரல் விட்டால் தீர்ந்தது கதை. தோசைத்திருப்பியை பழுக்கக் காய்ச்சி நாக்கில் இழுத்துவிடுவார்கள். ரமா வைஃப். சுதா வேறவொரு மகானுபாவரோட வைஃப்.
இது ஒரு சீன்.

மனசு மொத்தமும் ஒரு காரியத்தில் லயித்துக் கிடக்கும் போது எதிரில் யாராவது வந்து வாயைப் பிடுங்கினால் ”ம்ம்ம்ம்”மென்று வாய்மூடி நிமிஷ நேரம் ஸ்கூட்டர் விடுவது என்னைப்போல அநேகருக்கு இருக்கும் பழக்கம். அப்போது அவர்களின் பெயர்களைத் தப்பிதமாகக் கூப்பிடும் வியாதி எனக்குண்டு. வினயா என்பதற்கு பதிலாக மானஸா என்றோ, சங்கீதாவை கீர்த்திகா என்றோ கூப்பிட்டு மெர்சல் ஆக்குவேன். (மானஸாவும் வினயாவும் என் புத்ரிகள், கீர்த்திகா என் சோதரி)
இது இன்னொரு சீன்.

இதுபோல டங் ஸ்லிப் கேஸ்களை Freudian Slips என்பார்கள். ஆழ்மன துவாரத்தில் அவர்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் ஒன்றாக இருக்கலாம் அல்லது அவர்கள் இருவரையும் இணைக்கும் ஏதோ ஒன்று நமக்கு பிரியமானதாக இருக்கலாம் என்று உளவியல் காரணங்கள் உள்ளன.
இது போல அகஸ்மாத்தாக மாற்றிக் கூப்பிடும்போது கூட “மனசுல இருக்கிறது தானே வெளியில வரும்?” என்று முகத்தைத் தோள்பட்டையில் களுக்கென்று இடித்து நம் காலை வாரிவிடுவார்கள். இப்படி மனசுல இருக்கிறதுதானே வாயில வரும் என்பதற்கு ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்வாள் உபன்யாசத்தில் கேட்ட கதை. என்னோட கை விஷமத்தோட சேர்த்து... இதோ....

*

ஒரு உஞ்சவிருத்தி ப்ராம்மணர். தெனமும் வீதிவீதியாப் போயி “ஹரே ஸ்ரீ கிருஷ்ணாயை நமஹ”ன்னு ஒவ்வொரு ஆத்து வாசல்லயும் நிப்பார். கெடைக்கற பிக்ஷையை வாங்கிண்டு வந்து சமைச்சு சாப்பிடுவார். ஒரு நாள் ஒரு ஆத்துல வெள்ளி கிண்டி வாசல் திண்ணையில இருந்தது. இந்த மனுஷருக்கு கொஞ்சம் கை நீளம். வெள்ளியைப் பார்த்ததும் இன்னும் பெருசா நீண்டுடுத்து. லவட்டிப்புட்டார்.

அதுக்கப்புறம் ஒரு மாசம் அந்தத் தெரு பக்கமே போகலை. பயம். திரும்பத் திரும்ப ஒரே தெருல பிக்ஷை. என்னடா இந்த ப்ராம்மணர் தெனம் வந்து நிக்கறாரேன்னு ஒருத்தரும் வாசல் பக்கம் எட்டிப் பார்க்கல்லே. பிக்ஷை சுலபமா கிடைக்கல்லே. சரி.. அதான் ஒரு மாசமாச்சேன்னு திரும்பவும் கிண்டி திருடின அதே தெருவுக்குப் போனார். அதே ஆத்து வாசல்ல நின்னார்.

”யாரு”ன்னு அவாத்துல மாமி உள்ளேருந்து கேட்டுண்டே வாசலுக்கு வந்தவுடனே... வாய் தப்பிப் போய்..

“ஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ”ன்னு உளறிக்கொட்டினார்...

ஆஹா.. திருடன் ஆம்புட்டுன்னுட்டான்னு... அவாத்துல கடோத்கஜன்களா இருந்த நாலஞ்சு பசங்களா ஓடி வந்து வளைச்சுப் புடிச்சிப்புட்டான்கள்..
மனசுல இருக்கிறதுதானே வாக்குல வரும்?

தாத்தாவின் சந்தோஷம்

நான் அமைதியாகக் காத்திருந்தேன்.

”இன்னும் கொஞ்சம் நவுருங்க... அப்படி...அப்பிடி..” என்று ஒரு பெரியவர் முன்னும் பின்னும் ஓடியாடிக் கெஞ்சியதையும் மிஞ்சி எனக்கு முன்னால் அடாவடியாகக் கோணலாக சூப்பர்ப்பை நிறுத்திய இளைஞனுக்கு முப்பது தாண்டியிருக்காது. குபேரனின் கொள்ளுப் பேரன் என்பது அவனது நடையுடை பாவனையில் தெரிந்தது. காரிலிருந்து ஸ்டைலாக இறங்கி அவன் கையைக் கோர்த்த யுவதிக்கு ஏகத்துக்கு துணிப் பஞ்சம். காசிருந்தும் வஸ்திர செல்வம் சேரவில்லை. நேராகப் பார்ப்பவர்கள் கட்டாயம் பக்கத்தில் முட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. அவர்கள் நகர்ந்தவுடன் என் முறை. 

அவர் கருநீலக் கலரில் சட்டையும் பேண்டும் அணிந்திருந்தார். தும்பைப்பூவாய் வெளுத்த தலை. நெற்றியில் மணக்கும் சந்தனம். அதன் கீழே முப்பாத்தம்மன் குங்குமம். வீட்டு நிலைமை இந்த வயதில் அவரை வேலைக்கு நெட்டித் தள்ளியிருக்கவேண்டும். எழுபது வயது என்று சொல்வது கூட குறைச்சலாக இருக்கலாம். மாயமந்திரத்துக்கு கட்டுண்டது போல அவர் காட்டிய திக்கெல்லாம் சென்றேன். வலது ஓர சுவற்றை ஒட்டி சேப்பாயியைப் போட்டு ஒடுக்கிக்கொண்டு இறங்கினேன். “பரவாயில்ல.. லெஃப்ட்ல இன்னும் கொஞ்சம் வாங்க...” என்று சிரித்தார். அவருக்கு பரம திருப்தி. அவரது வேலைக்கு நிபந்தனையின்றி ஒத்துழைத்து நிறுத்திவிட்டு பாட்டா படியேறினேன்.

ஷூ வாங்கிக்கொண்டிருக்கும் போதும் கண்ணாடி தாண்டிய பார்வை வெளியே அவர் மீதே விழுந்தது. நுழையும் கார்களுக்கும் செல்லும் கார்களுக்கும் முன்பின் சைகை காண்பித்து மாடாக உழைத்துக்கொண்டிருந்தார். ”அந்த மாடல் எடுங்க...” என்று அலமாரியைக் காண்பித்தேன். அங்கே அவருக்குக் கால் இடறியது. புது ஷூக்குள் என் கால் நுழைய மறுத்தது.

எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து காரை எடுக்கும் முன் அவரிடம் ஓடினேன். கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்தேன்.

“ஹாப்பி பொங்கல்!” என்றதும் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து “என்ன?” என்பது போல ஆட்டினார். காது கேட்கவில்லை. “ஹாப்பி பொங்கல்” என்று கொஞ்சம் வால்யூம் கூட்டினேன்.

“தாங்க்ஸ்” என்று பல் தெரிய சிரித்தார். ரிவர்ஸ் எடுத்து மீண்டும் சாலையில் வண்டியைத் திருப்பி நேரே செல்லும் வரை ரியர்வ்யூவில் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். உதட்டிலிருந்து புன்னகை கழலவில்லை.

“அந்தத் தாத்தா ஏன் உன்னைப் பார்த்து சிரிச்சுண்டே இருந்தார்?”

“அவரை க்ரீட் பண்ணினேன்”

“என்னான்னு?”

“ஹாப்பி பொங்கல்!!”

கையில் காசு அழுத்தியதைச் சொல்லவில்லை. பணமில்லாமல் அன்பான அனுமுறையிலும் இன்சொல்லும் பிறத்தியாருக்குச் சந்தோஷம் தரமுடியும் என்று குட்டிக்குத் தெரியட்டும்.

பூலோக சொர்க்கம்

”வுடமாட்டேன்.... ”

ஓடிவா... சாத்திட்டேன்.... ”

“ஓடிவா... இப்ப வா... ”

“ஊஹும்.. சார்த்திட்டேன்....ஹெஹ்ஹே...ஹா..ஹா..”

மொட்டை மாடிக் கதவை திறந்து... மூடி.... திறந்து.... மூடி.... சீண்டிச் சீண்டி விளையாடிக்கொண்டிருந்தாள் சின்னவள்.

“என்னைத் தாண்டி உள்ளே வந்துடு பார்ப்போம்...”

மொட்டை மாடியிலிருந்து ஓடி வரும்போது கதவை சார்த்திவிட்டு மறுபக்கத்திலிருந்து எக்காளமான சிரிப்பு. எனக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது. பால்யத்தில் இதுபோல இன்ஸ்டண்ட் விளையாட்டுகள் ஏராளம்.

திரும்பவும் கதவு திறந்தாள். மிதமான மொட்டை மாடிக் காற்று. தூரத்தில்முதுகைக் காண்பித்து நின்றிருந்தேன்.

“ஒன்..டூ...த்ரீ...ஃபோர்...” பாக்ஸிங் நடுவர் தோரணையில் அவள் சப்தம் கேட்டது.

எண்ணிக்கொண்டே இருக்க விட்டேன். வேண்டுமென்றே வெளியே ஆகாயத்தை வேடிக்கைப் பார்த்தேன். வாய்கொள்ளாச் சிரிப்பு.

”ட்வண்டீ...... போப்பா... வெறுப்பேத்தற...” என்று அசால்ட்டாய் நிற்கும் போது திபுதிபுவென்று ஓடி கதவைத் திறந்து வீட்டிற்குள் புகுந்துவிட்டேன்.

அவள் உடனே நேரே உள்ளே ஓடிப்போய் இன்னொரு கதவின் பின்னால் இருந்து எட்டிப் பார்த்து...

“இப்ப இங்க வா பார்ப்போம்... இது செகண்ட் லெவல்... ஃபர்ஸ்ட் லெவல்ல ஜெயிச்சுட்டே...”

முறுக்கிக்கொண்டு திரும்பவும் மொட்டை மாடிக்கே சென்று விட்டேன். ஆனால் போகும் போது ரகஸியமாக மொட்டை மாடிக் கதவின் உள்பக்க மேல் தாழ்ப்பாளை தூக்கிவிட்டேன்.

திரும்பவும் ஓடிவந்து முதல் கதவருகே நின்று ”இந்த லெவலை திரும்பவும் நீ தாண்டணும்.. அப்பதான் நீ வின்னர்... ஸ்டார்ட்... ஒன்.. டூ..த்ரி...ஃபோர்.... ஃபைவ்...”

அவள் சிரித்துக்கொண்டே நிற்குமிடம் சொர்க்கத்தின் கதவு.

ஓடிவந்தேன். கதவைச் சார்த்துவதற்கு எத்தனித்தாள். மேல்தாழ்ப்பாள் மூட விடமால் தடுத்ததால் நானும் உள்ளே வந்துவிட்டேன். அடுத்த லெவலான ரூமை நோக்கி ஓடினாள். பின்னாலேயே நானும் நுழைந்து இரண்டாம் லெவலையும் முடித்தேன்.

“யூ வொன் தெ மாட்ச்”

மகராசி... கழுத்தை இருக்கக் கட்டிக்கொண்டு சிரித்தாள்.

இதுவல்லவோ பூலோக சொர்க்கம்.

(இப்போது இருவரும் சமர்த்தாகக் கம்ப்யூட்டர் ஸயின்ஸ் படிக்கிறோம். நாளைக்கு பாழாய்ப்போற எக்ஸாம்.. )

சாக்கடை சாகசங்கள்

”வேஷ்டியோடயா?”

எனக்கு தூக்கிவாறிப்போட்டது. பதறிப்போய் இடுப்பில் ஒரு காசித்துண்டைச் சுற்றிக்கொண்டேன். கையில் கரும்பிருந்தால் பட்டினத்தடிகள். தண்டாயுதபாணி ஸ்வாமியின் அப்க்ரேடட் வர்ஷன். மிகவும் முக்கியமான ஒரு வேலை. சாக்கடை அடைத்துக்கொண்டது.

எல்லைக்காவல் படை ஆயுதங்கள் போல தேவையானவை எப்பவுமே அவசரகதியில் தயார் நிலையில் இருக்கும். சின்ன கடப்பாரை. இரண்டு சட்டி மணல். அரைச் சட்டி சிமெண்ட். ஒரு பாட்டில் ஃபினாயில். அர்ஜுனனுக்குக் காண்டீபம் போல முக்கியமான ஆயுதமாக இருபது அடி நீளத்தில் ஒரு மத்திம வயது ட்யூப். வயசாகித் தொங்கிப்போனாலோ இளமை முறுக்கோடு இருந்தாலோ அந்த ட்யூபைக் காவாய்க்குள் விட்டுக் குத்த தோதுப்படாது. கார்ப்பரேட்டுகளில் லோல்படும் மத்திம வயது எக்ஸிக்யூட்டிவ் போல என்ன அடித்தாலும் தாங்கும் தன்மை வாய்ந்த ட்யூப் அது. பாதி வழியில் தடையேற்பட்டு முட்டினால் அதுவாகவே கொஞ்சம் வளைந்து கொடுக்கும். இளமை முறுக்கோடு நிமிர்த்திக்கொண்டு திரிந்தால் வேலைக்கு ஆகாது. 

இறுதியில் மூடியிருக்கும் சேம்பர்களைக் கடப்பாரையால் கொஞ்சம் நெம்பி எடுத்து தூக்கிவைத்துவிட்டு காண்டீபத்தைக் கையிலெடுத்தேன். ட்யூபின் தலையை வாகாக நுழைத்துவிட்டு வால்பாகத்தைப் பிடித்துக்கொண்டு கையொடியக் குத்துக் குத்தென்று குத்தினாலும் தலையை சேம்பர் பக்கம் வெளியே நீட்டாமல் உள்ளேயே முட்டிக்கொண்டது. இன்சென்டிவ்வாக இரண்டு பக்கெட் தண்ணீர் ஊற்றினேன். கொஞ்சம் இளகிக் கொடுத்து இருபுறமும் மாற்றி மாற்றிக் குத்த அடைப்பு நீங்கியது. 

நாமே ஸ்வயமாகக் களமிறங்கி அடைப்பெடுத்த பின் பிரவாகமாக ஓடும் சாக்கடையைக் காணும் போது ஜிவ்வென்று விண்ணுக்குப் பறப்பது போன்ற ஒரு உணர்வு. இதுவேதான் தீர்க்கமுடியாமல் பனை முடிச்சுப் போட்டுக்கொண்ட ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும் போதும் ஏற்படும் திருப்தி. ஆனந்தம்.

பாகம் 2: பழையனூர் நீலி

அந்த வயதானவர் மெதுவாகப் படிதாண்டி கோயிலை விட்டு கண்ணிலிருந்து மறையும் வரைக் காத்திருந்தார். பின்னர் தொடர்ந்தார்....

"அடுத்த ஜென்மத்துல அந்த பிராம்மணப் பொண்ணு ஒரு வணிகர் வீட்ல பொறந்தது. நம்மளை மோசம் பண்ணிக் கைவிட்டு கொலை பண்ணினவனை பழிதீர்க்கணும்னுங்கிற ஆவேசத்துல அந்தாளோட குலத்துலேயே பொறந்துச்சு.. ஆரம்பத்திலேர்ந்தே அதோட நடவடிக்கையெல்லாம் அமானுஷ்யமாவே இருந்துச்சு.. அதோட பேச்சு சரியில்லை.. ஏடாகூடமா எதாவது செய்யும்... வீட்ல ரொம்ப பயந்தாங்க... ருதுவாயிட்ட பிற்பாடு ஒரு நா... தற்செயலா எச்சியை முளிங்கிட்டு.... அதனால.... கருத்தரிச்சிருச்சு....”

சுற்றி நின்று கதை கேட்டவர்களுக்கு ஒரு சின்ன ஜெர்க். தழுவக்கொழுந்தீஸ்வரர் சன்னிதி மூடியிருந்தது. அணைந்த திரியின் பொசுங்கும் வாசம். தூரத்தில் தெரிந்த தென்னை பேய்க்காற்றுக்கு பிசாசாய் தலையசைத்தது. கோபுரத்துக்கு வெளியே சத்தமாய்க் கேட்டு எதிரொலித்த “ஹேய்க்...க்க்...”கைத் தொடர்ந்து ஒத்தை மாட்டுவண்டி ஒன்று மெதுவாய்க் கடந்தது. கதை சொல்லிக்கொண்டிருந்தவர் எச்சில் முழுங்கி ஆரம்பிக்கும் வரை அடர் நிசப்தம்!

“எச்சில் முழுங்கியா?” என்னவோ மாதிரியா இருக்கே என்று நான்.

“ம்... ஆமா.... ஏற்கனவே நொம்ப பயந்து போன அதோட அப்பாம்மா வீட்டை விட்டு துரத்திட்டாங்க... அது ஊர் ஊரா நீலியா அலைய ஆரம்பிச்சுட்டுது.. இப்படி திரிஞ்சிக்கிட்டிருந்த அதுக்கு பத்து மாசத்துல ஒரு புள்ளையும் பொறந்திச்சு... அந்தப் புள்ளை யாரு தெரியுமா?”

தடதடவென்று அருவியாய்க் கதைக் கொட்டிக்கொண்டிருக்கும் போதே திடீர் திருப்பங்கள் வச்சு... நிறுத்தி நிறுத்திச் சாகடித்தார் அந்த மனுஷர்.. “யாரு?”ன்னு கேட்காவிட்டால் வாயைத் திறக்கமாட்டார் போலத் தோன்றியது. நெற்றியில் சுடர்விட்ட குங்குமமும் அவரது முகவெட்டும் எனக்கு யாரையோ நினைவு படுத்தியது. மூளையைச் சல்லடையாக அலசிப் பார்த்தாலும் அகப்படவில்லை.

கதை கேட்டுக்கொடிண்டிருக்கும் கூட்டத்திலிருந்து ஒரு “யாரு?” ஈனஸ்வரத்தில் வந்தது.

“அந்தப் புள்ளைதான் அதோட மொதோ ஜென்மத்துல கூடப்பொறந்த தம்பியா இருந்தவன்... இந்த ஜென்மத்துல புள்ளையா பொறந்திருச்சாம்.....”

இப்படி பல ட்விஸ்ட்டுகள்...... யாரும் நின்ற இடத்தை விட்டு அசையாமல் கதை கேட்டார்கள்.

“ஆனா... அப்போ பொறந்த பச்சப்புள்ளையைக் தன் கையாலேயே கழுத்தைத் திருகி குளத்தோரமா வீசிட்டு... இந்தம்மா போன ஜென்மத்துல தன்னைக் கொன்ன ஆளை தேடிக்கிட்டு இந்தப் பக்கமா வந்திச்சு.... இந்த நீலி யாரைத் தேடிச்சோ.... அவரு பெரிய வணிகருக்கு மகனாப் பொறந்து.. கைலையும் காதுலையும் கழுத்துலயும் வைர வைடூர்யமா பூட்டிக்கிட்டு மின்னுறாரு.. தகதகன்னு சாயந்திர வெய்யிலு பட்ட தங்க மலை மாதிரி டாலடிச்சுக்கிட்டு இருக்காரு... பட்டு கட்டிக்கிட்டு... அத்தரு பூசிக்கிட்டு ஷோக்கா... மைனர் கணக்கா.... வியாபாரத்துல வேற பெரிய ஆளா.... இப்படி ஊர் ஊரா போய்க்கிட்டிருந்தாரு.. பல ஊருக்கு வாணிபம் செய்யப் போனவரு இந்த வழியா வரும்போது... பழி வாங்க சுத்திக்கிட்டிருந்த அந்தம்மா இவரைப் பார்த்துட்டுது.. ”

பார்த்துட்டுதுன்னு சொல்லிட்டு நெற்றி சுருக்கி மெலிதாய்ச் சிரித்தார். பற்களில் காவி. திரும்பவும் என் மூளையில் ஒரு மின்னல் வெட்டு. ஊஹும். இதே சாயலில் யாரோ... யாரோ.. யாரையோ.. சமீபத்தில் பார்த்திருக்கிறேன்.. யாரென்று தெரியவில்லை... போகட்டும்.. எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் நெருங்குகிறது. பார்வையாளர்கள் பரபரப்படைந்தார்கள். 

“உடனே ஓடிப்போய்.... நாந்தான் உங்க பொண்டாட்டின்னு கையைப் பிடிச்சுக்குது... அவருது இது கிட்டேயிருந்து அவுத்துக்கிட்டு ஓடறாரு... இது விடாம விரட்டுது.. ஊர் வீதியிலெல்லாம் ஒரே ஓட்டமா இருக்கு.. ஊர்க்காரவங்கள்ல நிறையா பேரு வேளாளருங்க.. வாணிபம் செய்யறவங்க.. இவருக்குத் தெரிஞ்சவங்க.. இவர்கிட்டே போய்... ஏங்க பொண்டாட்டியை தனியா விடலாம்ங்கலான்னு மத்யஸ்தம் பேசறாங்க....அவரு.. இல்லையில்லை.. இவ என் பொண்டாட்டி இல்லைன்னு வாதாடிப்பார்க்கிறாரு.... ஊஹும்.. ஒண்ணும் வேலைக்காவலை.. இது பொம்பளையில்லீங்களா... அளுது ஆர்ப்பாட்டம் பண்ணி அவர் கூட சேர்ந்துருது..... ஆனா பாருங்க அவரை ஒண்ணுமே அதால செய்யமுடியிலை....”

இப்போ யாராவது ”ஏன்?” கேட்டால்தான் இந்தக் கதை மேலும் நகரும். கிராமப்புறங்களில் கதைசொல்லியின் உத்தி இது. கதையை கூர்ந்து கவனிக்கிறார்களா என்று அறியும் முறை. கதையில் ஈடுபாடு கூட்டும் தந்திரம். காற்றில் வெளியே மரத்தின் இலைகள் சலசலத்தது.

“ஏன்?” அவருக்கு முதுகுக்குப் பின்னாலிலிருந்து ஒரு குரல். அவருக்குத் திருப்தி. முகத்தில் தெரிந்தது.

“ஒரு சோசியக்காரரு அவர் பொறந்தப்பியே பூதபைசாசங்களினால ஆபத்து வரும்னு கணிச்சு... ஒரு மந்திர வாளைக் கையில கொடுத்திருந்தான்... அது இருக்கிற வரையில அவரை ஒண்ணும் பண்ணமுடியாது பார்த்துக்கோங்க...இந்தப் பொம்பளை ஆர்ப்பாட்டம் பண்ணித் திரும்பவும் ஊரைக் கூட்டிச்சு....என்னம்மா உங்கூட ஒரே விவகாரமாப் போச்சுது.. என்ன வேணும்னு ஊர்ப்பெரியவங்க கேட்டாங்க... அதுக்கு அந்தப் பொம்பளை... நீங்களே இந்த நியாயத்தைக் கேளுங்க... பொண்டாட்டியோட தங்கும் போது இவர் கையில அந்த வாள் எதுக்குங்க? எனக்கு பயமாயிருக்கு...ன்னு கேட்டிச்சு...”

என்ன ஆகுமோ என்று அனைவரும் தவிக்கும் முக்கியமான தருணத்தில்... ”ஹேய்..” என்று கோயிலுக்குள் நுழைந்த ஒரு ஆட்டுக்குட்டியை விரட்டினார். ”ம்மே”. துள்ளிக்கொண்டு ஓடியது. ”அந்த வாளை அவர் தூக்கிப்போட்டுடுவாரா?” என்ற கேள்வி எல்லோர் மூளையையும் அரித்தது. 

“அப்போ பஞ்சாயத்து பண்ணின பெருசு ஒண்ணு... யேம்ப்பா.. உன் பொஞ்சாதி அவ்ளோ சொல்லுதே... அந்த வாளை தூக்கிப்போடுப்பான்னாரு.. அதுக்கு அவரு.. ஐயா... நா பொறந்தப்பவே ஒரு சோசியக்காரரு மந்திரம் செஞ்சு இந்த வாளைக் கொடுத்தாரு.. இதை எங்கினியாவது மறந்து வச்சுட்டு நீ தூரக்க போயிட்டன்னா... உன்னிய பேய் அடிச்சுரும்னு சொல்லியிருக்காங்க.. அதனால...ன்னு அந்தாளு இழுத்தாரு.. அதுக்கு அந்த பொம்பளை.. பாருங்க.. பெரியவங்க நீங்க சொல்லிக் கூட இவரு கேட்கமாட்டேங்கிறாரு...ன்னு வம்பு பண்ணுது...யப்பா.... நீ ஒண்ணும் கவலைப்படாதே.. உனக்கு ஒண்ணும் ஆவாது... இங்க பாரு.. இந்த சாட்சிபூதேஸ்வரர் சாட்சியா சொல்றோம்.. உன்னோட உயிருக்கு ஏதாவது ஆச்சின்னா.. நாங்க எல்லோரும் தீயில பாஞ்சு உசுரை மாய்ச்சுக்கிறோம்.. அதுக்கு இந்த சாட்சிபூதேஸ்வரர் சாட்சி..ன்னு பஞ்சாயத்து பண்ணினவங்க உணர்ச்சிகரமா பேசினாங்க....”

தோளில் தொங்கிய துண்டால் வாயைத் துடைத்துக்கொண்டார். இவரை எங்கேயோ பார்த்த ஞாபகம். எங்கே என்று பிடபடவில்லை. ஆகட்டும். கதையை கவனிப்போம்...

“அவரும் இதை நம்பி ஊர்ப் பெரியவங்க கிட்டே வாளைக் கொடுத்துட்டு அந்தம்ம்மா கூட போயிட்டாரு.. அவ்ளோதான்.. அன்னிக்கி ராத்திரியே அந்த நீலி இவரைக் கொன்னு போட்டுட்டு.... இந்த ஊரை விட்டு ஓடிப்போச்சு... காலையில இவரு செத்துப்போயி கிடக்கிறதைப் பாத்த எல்லோருக்கும் அதிர்ச்சி... நீங்க ஊருக்குள்ள வரப்போ ஒரு மண்டபம் பார்த்தீங்கல்ல...சாட்சிபூதேஸ்வரர் கோயிலுக்கு எதிர்த்தாப்ல.. அந்த மண்டபம் இருக்கிற இடத்துல விறகுக் கட்டையை கும்பாரமா அடுக்கி.... தீ மூட்டி.. அறுபத்து ஒம்போது பேரும் உள்ள குதிச்சிட்டாங்க.. இன்னும் ஒருத்தர் பாக்கி... “

“ஐயா.. எழுபத்திரண்டுன்னு சொன்னீங்க.. இப்ப எழுபது பேருதான் கணக்கு வருது...”

“சிலபேர் எழுபதுங்கிறாங்க.. சில பேர் எழுபத்திரண்டுன்னு சொல்றாங்க.. நமக்கு கதைதானே முக்கியம்....மிச்சமிருந்த ஒருத்தரு... வயல்ல ஏர் உழுதுகிட்டிருந்தாரு... ஒரு ஆளு ஓடிப்போயி.. நீலியினால அந்த வியாபாரி கொலையானதையும்... அறுபத்தொன்பது வேளாளர்கள் தீப்பாய்ந்ததைச் சொன்னாரு...அவ்ளோதான்.. அவருக்கு எங்கிருந்தோ ஒரு ஆவேசம் வந்து... அந்த ஏர் கலப்பையைத் தூக்கி தன்னோட வயித்துல குத்திக்கிட்டி அங்கினெயே செத்துப்போயிட்டாரு....”

பெருமூச்சு விட்டுக்கொண்டார். அதே ஜென்மத்துக் கதை ஒன்று இருப்பதாக சொல்லியிருந்தார். எனக்கு அதைக் கேட்கவும் ஆசை..

”பெரியவரே...அதே ஜென்மத்துலேயும் இவரைக் கொல்றதா ஒரு கதை இருக்குன்னு சொன்னீங்களே... அது...” 

கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார்.

“அது ஒண்ணுமில்லை.. இவரு கொன்னு போட்டப்புறம் அது நீலியா மாதிரி இவரு பின்னாலையே ஊருக்குள்ள வந்துடுது.. அப்புறம் ஊரார் கிட்டே பேசி இவரு பொண்டாட்டி மாதிரி பக்கத்துல வந்து... கொன்னு போட்ருது.. அதான் அதே ஜென்மத்துக் கதை.. அது அவ்ளோ சுவாரஸ்யமில்லை பார்த்துக்கோங்க....”

கதை முடிந்தவுடன் கோயிலுக்குள் பேய் சினிமா பார்த்த எஃபெக்ட்டுடன் வெளியே வந்தோம். கோயிலுக்கு வெளியே விசாலமான அடிபெருத்த மரம். என்ன மரம் என்று நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்னர் நீலியும் அந்த ஆளும் இங்கேயெல்லாம் ஓடியிருப்பாங்களோ... இந்த மரத்து மேல அந்த நீலி குடியிருந்துருக்குமோ என்றெல்லாம் சில்லரைத்தனமான எண்ணங்கள் சத்தமில்லாமல் ஓடியது. யாரும் பேசவில்லை. கார் ஏறிவிட்டோம்.

காருக்குள்ளும் அமைதி. ஆரம்பத்தில் ஊருக்கு வழிகேட்ட இடத்துக்கு வந்தோம். தாராளமாக தலைவிரித்திருந்த வேப்பமரம் அங்கேயே நின்றிருந்தது. வலதும் இடதுமாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு நிமிஷம். ஆ....ஆ... கதை சொன்னவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று மின்னல் வெட்டிக்கொண்டே இருந்ததல்லவா? கண்டுபிடித்துவிட்டேன். இப்போது எங்கே என்று தெரிந்துவிட்டது. அதெப்படி? சிலிர்த்துவிட்டது. எண்ணங்கள் உறைந்து போய் ஏஸி காருக்குள் குப்பென்று வியர்த்தது.

நான் ஊருக்குள் செல்லும்போது வழிகேட்டவரும்.. அங்கே கதை சொன்னவரும் ஒரே ஆள். ஒரே ஆளாக இருக்கமுடியாது என்றால் ஒரே சாயல். இரட்டைப் பிறவி? சொந்தம்? ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லுவார்களே.. அந்த ஏழில் இருவர்? மண்டையைக் குடைந்தது. முன்னால் சென்ற வண்டியிலிருந்து டீஸல் புகை சுருள் சுருளாக மேலே எழுந்தது. ரோட்டிலிருந்து விண்ணுக்கு எழும்பிய அந்த புகையிலிருந்து நீலி சிரிப்பது போலிருந்தது.

(முற்றும்)

பாகம் 1: பழையனூர் நீலி

"பழையனூர்க்கு இந்த வழிதானுங்களே?” என்று காரிலிருந்து எக்கி கழுத்து ஒடிய வழி கேட்டேன். எங்கோ கிராமத்திற்குள் தலைதெறிக்க ஓடும் அந்த தார்ரோடுமில்லாத மண்ரோடுமில்லாத ரெண்டுங்கெட்டான் பாதையின் நடுவில் குத்தி வைத்திருந்த வழிகாட்டும் பலகை துருப்பிடித்து கால்கள் வலுவிழந்து இத்துப்போயிருந்தது. அதில் பெயிண்ட் போன மண்ணூர் என்று கேள்விப்படாத, ஐந்தாறு தெருக்கள் சப்தமில்லாமல் சௌஜன்யமாகக் குடியிருக்கும் குக்கிராமத்தின் பெயர் சொரிசொரியாகத் தெரிந்தது. சாலையோரத்தில் தாராளமாகத் தலைவிரித்திருந்த வேப்பமரத்திற்கு கீழே தோளில் துண்டோடு நின்ற எழுபது வயது பெரியவரிடம் இந்த ஓபனிங் சீன் கேள்வி சென்று சேர்ந்தது. 

”எங்கியும் திரும்பாமே நேரே மெயின்ரோட்லயே போங்க...” என்று கை நீட்டிய பெரியவர்க்கு கிராமத்துக்கே உண்டான வஜ்ரம் போல தேகம். தோள்பட்டை முட்டை உழைத்த கட்டை என்று காட்டியது. நரைத்த தலை. நெற்றியில் லேசான குங்குமத் தீற்றல். கண்களில் ஒளி. அவர் சொன்ன மெயின் ரோட்டில் எதிரில் இன்னொரு பெரிய நாற்சக்கர வாகனம் வந்தால், இருவரும் ரியர் வ்யூ மிரரை மடக்கி ஷாலின் படங்களின் சண்டை நாயகர்கள் போல குனிந்து பரஸ்பரம் மரியாதை கொடுத்து பவ்யமாக உருட்டி முன்னேற வேண்டும். 

உள்ளே செல்லச் செல்ல கொஞ்சம் விசாலமான பாதை. ஒண்றரை கிலோ மீட்டருக்குள், கொண்டையில் டிஷ் ஆண்டனா சொருகி, உதிரியாய் இருந்த வீடுகளுக்கு இடையிடையே நவ கன்னிகள் (சப்தகன்னிகள் இல்லையோ?) ஆலயம், சாட்சிபூதேஸ்வரர் கோயில், தீப்பாய்ந்த அம்மன் ஆலயம் என்று இடதும் வலதுமாய் வரிசையாய் சின்னச் சின்னதாய் கிராமத்துக் கோயில்கள் வந்து போயின. பழையனூரிலிருந்து திருவாலங்காட்டுக்கு திருவுலாவாகத் திரும்பும் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியைப் போற்றி வரவேற்று ஒவ்வொருவரும் வீட்டு வாசலிலும் பிரம்மாண்டமானக் கோலமிட்டிருந்தார்கள். கோலக் கலை விற்பன்னர்கள் கலரில் கண் நிறைத்தார்கள்.

எதிர்புறம் வாகனம் வராத புண்ணியத்தில் வாய்க்கா வரப்பில் இறங்காமல் பழையனூர் அடைந்தோம். பழையனூரில் தழுவகொழுந்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் கிளம்பினார் இரத்தின சபாபதி. செங்குத்தாக விண்ணுக்கு உயர்த்திய காலைக் கண்டு களிப்புற்று மனமார தரிசித்துக்கொண்டு அரையிருட்டில் இருந்த ஆனந்தவல்லி கோயிலுக்குள் சென்றோம். 

தழுவகொழுந்தீஸ்வரர் கண்ணப்பனைப் போல தழுவிக்கொள்ளும் எழிலோடு இருந்தார். தரிசித்து திரும்பியபோது அர்த்த மண்டபத்தில் ஒரு பெரியவர். ஊர்க்காரர் என்பது அவரது நெற்றியில் அச்சடித்து ஒட்டியிருந்தது. அவர் நின்றிருந்த தூணோரம் ஒதுங்கி “ஐயா... இந்த எழுபத்திரண்டு வேளாளர்கள் தீப்பாய்ந்த கதை ஒண்ணு சொல்றாங்களே...” என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.

கண்களில் ஆர்வம் மிதக்க கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார்.

“அது ஒரு பிராம்மணாள் வீட்டுப் பொண்ணுங்க..” 

எது? என்கிற கேள்வி என்னோடு வந்த அனைவருக்கும் ஒரு சேர எழுந்து அவரைத் தூணோடுக் கட்டிப்போட்டு கதை சொல்ல வைத்தது.

“நம்மூரைச் சேர்ந்த ஒரு வணிகருங்க... கல்யாணமானவரு.. காசிக்குப் போறாரு.... அங்க ஒரு பிராமணர் வீட்டுல தங்கறாரு... அவருக்கு அழகா ஒரு பொண்ணு இருக்கு.. இவருக்குப் பார்த்தவுடனே புடிச்சுப்போயிடுது.... தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சுன்னு உண்மையைச் சொல்லாம.. அந்தப் பொண்ணையும் கட்டிகிடறாரு..”

அண்ட்ராயர் பையன் ஒருவனும் இப்போது அவருக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டான். ஆனந்தவல்லியைத் தரிசிக்க வந்த இன்னொரு கோஷ்டியும் இந்தக் கதை கேட்பதில் சேர்ந்துகொண்டார்கள்.

“கலியாணம் முடிஞ்சு அந்த பிராமணப் பொண்ணும் அதோட தம்பியும் இவரோட ஊருக்கு வாராங்க..... இங்க பழையனூறு பக்கத்துல வந்துட்டாங்க....”

”அப்பவும் இந்த ஊரு பழையனூறு தானோ...”

“ஆமாங்க.. அது திருவாலங்காடு... இது பழையனூரு....அப்போ அது காடு.. இப்போ அது ஊரு....அப்போ இது ஊரு...” என்று அது-இது-எது விளையாண்டார். திடீரென்று விழிகள் வாசலுக்குத் தாவ, அவசரத்தில் வேஷ்டிக் கட்டியிருந்த ஒரு இளைஞனைக் கூப்பிட்டு... “பித்தாள தாம்பாளத்து எடுத்துப்போடா... நா பின்னால வரேன்....” என்று கழுத்து நரம்புகள் புடைக்க கூம்பு ஸ்பீக்கர் டெசிபலில் கூப்பாடு போட்டார்.

“அது காடு.. இது ஊரு... நல்லாயிருந்துதுங்க...” என்று விட்ட இடத்தை எடுத்துக் கொடுத்தேன்.

“காரைக்கால் அம்மையார் இங்க வந்து கொழுந்தீஸ்வரரைப் பாடிட்டு... தலையாலையே நடந்து ஆலங்காடு போனாங்க....”

“ம்... “

“ஆமா... காரைக்கால் அம்மையார் தலையாலயே நடந்து போனதால தேவார மூர்த்திகள் யாருமே நம்ம கால் சுவடு பட்டா பாவமின்னு ஆலங்காட்டுக்குப் போயி வடராண்யேஸ்வரரைப் பாடலை.. இங்கேயிருந்தே அவரைப் பாடிட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க...”

“அவ்ளோ சிறப்பும் பெருமையும் வாய்ந்த தலம்...”

“நாம நீலி கதையில இருக்கோம்..” என்று அவரே தொடர்ந்தார்...

”இப்போ தான் அந்த வணிகருக்கு உதறல் எடுக்குதுங்க... ஏற்கனவே கட்டிக்கிட்ட பொண்டாட்டி இது யாரு புதுசான்னு கேட்டா என்னா சொல்றது?ன்னு பயம்... மச்சினனைப் பார்த்து “ரொம்ப தாகமா இருக்குது... தண்ணி எடுத்தா...”ன்னு குளத்துக்கு அனுப்புறாரு... அந்தம்மாவை ஒரு மரத்து ஓரத்துல உட்காரச்சொல்லிட்டு... பின்னாடியே வந்து மச்சினனை தள்ளிக்குள்ளாற வச்சி அழுத்திக் கொன்னுப்புட்டாரு..”

திகில் இசை இல்லாமல், பெப் ஏற்றாமல் பொசுக்கென்று ஒரு கொலை. சின்னப்பையன் கொலை சீன் வந்ததும் கொஞ்சம் மிரண்டான். என்னோடு கதை கேட்க நின்ற சிலர் கையில் பிடித்திருந்த குட்டிப் பசங்களுடன் வேறு கதை பேசிக்கொண்டு சிவசிவாவென்று கோயில் பிரதக்ஷிணம் சென்றனர்.

”...,கொன்னுப்புட்டு திரும்பவும் மரத்தடிக்கு வந்து பொண்டாட்டி கூட உட்கார்ந்து கதை பேசிக்கிட்டிருந்தாரு... ரொம்ப நாழியா தம்பி ஆளையேக் காணோமேன்னு அந்தம்மா பதறிப்போய் ’வாங்க ரெண்டு பேரும் போயி பார்ப்போம்’னு இவரைக் கூப்பிடறா... இவரும் அந்தம்மா கூட குளத்தாங்கரைக்குப் போறாரு... ரெண்டு பேருமா குளத்துல இறங்கி கொஞ்ச நேரம் தேடறாங்க..... அப்போதான் இவரு அந்தம்மாவையும் குளத்துல குப்புற அழுத்தி கொலை செஞ்சுடறாரு....”

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் இன்னொரு கொலை. ரெட்டைக்கொலை கேட்ட பசங்களின் கண்களில் பீதி. கதை சொன்னவரின் ஏற்ற இறக்கமும் சில இடங்களில் நிறுத்தி.... சில நொடிகள் கழித்து... மீண்டும் மெதுவாக ஆரம்பித்து.... சப்தம் கூட்டி.... என்று கதைச் சிலம்பம் சுழற்றினார். கிராமத்துப் பெரியவர்களுக்கென்றே இருக்கும் கதை சொல்லும் த்வனி.. 

“இதோட அந்தம்மாவோட ஜென்மம் முடிஞ்சுடுது..... அப்போ சாவுற போது அடுத்த ஜென்மம் எடுத்து உன்னைப் பழிவாங்கறேன்னு சபதம் போட்டிச்சு..ன்னு சில பேர் சொல்றாங்க.. இன்னும் சில பேரு இந்த வணிகரோட பின்னாடியே நீலியா வந்து உசிரை எடுத்துடுச்சின்னும் சொல்றாங்க... இப்போ நானு மறுஜென்மக் கதை சொல்றேன்”

கோயில் வாசலில் நிழலாடியது. அவருடைய சொந்தமாகக் இருக்கக்கூடும். அழுக்கில்லாத வேஷ்டியும் மேலுக்குத் தும்பைப்பூ நிற துண்டு மட்டுமே போர்த்தியிருந்தார். “நீயி... ஆலங்காட்டுக்கு வரலை... சாமி போயிட்டிருக்கு.....” என்றார். “நீலி கதை கேட்டாரு... பாதி சொல்லிட்டேன்.. மீதியை சொல்லிட்டு வாரேன்... நீங்க போங்க முன்னாடி.. ” என்று அனுப்பிவைத்தார்.

நீலியின் மீதி அடுத்த பாகத்தில்.....

வடகிறுக்குப் பருவமழை

இப்போதான் இதை எழுத கை ஒழிஞ்சுது. 

மூன்று தினங்களுக்கு முன்னர் ஆஃபீஸில் உக்கிரமான வேலை. எட்டு மணி வாக்கில் வெளியே எட்டிப் பார்த்தால் கும்மிருட்டு. சாரல் திருவிழா மாதிரி மழை பிசுபிசுவென்று பூமியைக் கிச்சுக்கிச்சு மூட்டித் தரையிறங்கிக்கொண்டிருந்தது. உள்ளங்கைகளைப் பரபரவென்று தேய்த்துக் கன்னத்தில் வைத்து சூடுபடுத்திகொள்ளத் தூண்டும் ஜிலீர் சீதோஷணம். உள்ளுக்குள் மனசு பூத்திருந்தது. ”நாலு நாலரை மணி வாக்குல சரி போடு போட்டுச்சு...”. பேசிக்கொண்டே எங்கள் பேட்டையாட்கள் இரண்டு மூன்று பேரோடு எட்டரை மணிக்கு சேப்பாயியைக் கிளம்பினேன். 

டீஸல் முள் தரையைத் தொட்டிருந்ததால் சேப்பாயியின் வயிற்றுக்கு விருந்தளித்து அ. எஸ்டேட்டிலிருந்து பயணமானோம். எப்பாடு பட்டேணும் பூந்தமல்லி நெடுஞ்சாலையைப் பிடித்து கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் பில்லர், கத்திப்பாரா, நங்கை மார்க்கமாக நான் கூடடைய வேண்டும். நேர் வழி.

எரிபொருள் நிலையத்திலிருந்து வெளியே வந்த போதே ரோட்டோரங்களில் ஆங்காங்கே சலசலப்பு. சிற்றாறுகள் அடக்கமாக ஓடிக்கொண்டிருந்தன. 

“சாயங்காலம் நல்ல மழை... வானம் பொத்துக்கிட்டு ஊத்திச்சு...” என்று சத்யா சொல்லிக்கொண்டிருக்கும் போது சிற்றாறு இன்னும் நாலைந்து தோஸ்த் ஆறுகளோடு சங்கமித்து வற்றாத ஜீவநதி போல நடுரோட்டில் அலையடித்துக்கொண்டிருக்க முண்டா பனியனோடு கைலி கட்டிய ஒரு பரோபகாரி “லெப்ட்ல போங்க சார்...” என்று ஒரு குட்டிச் சந்தைக் காட்டினார். அவர் பின்னால் பாதாள சாக்கடைத் திறக்கப்பட்டு நம் தேசத்தவர்கள் ப்ரேக் டவுன் அடையாளமாகக் கையாளப்படும் மரக்கிளை இலைகளோடு செருகியிருந்தது. அக்கிளையின் நாற்புறமும் ஊற்று போல குபுகுபுவென்று தண்ணீர். கொஞ்சம் கறுப்புத் தண்ணீர். கறுப்பா தண்ணீ இருக்குமா? ம்.. சரி.. அது SKT. [கமெண்ட்டில் ”அதென்ன எஸ்கேடி?” என்று நீங்கள் ஆர்வமாகத் தலையை நீட்டுவதற்கு முன்னர் எஸ்ஸுக்கும் டீக்கும் அர்த்தம் சொல்லிவிடுகிறேன். S= ஸர்வ, T=தீர்த்தம், K= ? ]

காரின் இரண்டு பக்கமிருந்த ரியர் வ்யூ மிரரிலிருந்து இரண்டு விரற்கடை இடைவெளியில் இல்லங்களின் சுவர் முட்டும் சந்து. கீழே அரை சக்கரங்கள் மூழ்குமளவிற்கு ஜலம் இருக்கிறது என்று எதிரே கணுக்கால் வரை புடவையை உயர்த்திக்கொண்டு வந்த பெண்மணி வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த சமுத்திரத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று அலறி ஆக்ஸிலை அழுத்தினால் பக்கவாட்டில் திறந்திருந்த ஜன்னலிலிருந்து ”மேல தண்ணி அடிச்சுட்டுப் போறாம் பாரு பேமானி..” என்று ஹஸ்கி வாய்ஸில் அர்ச்சனை செய்தால் கூட நமக்குக் கேட்டுவிடும். 

“முருகா காப்பாத்து..” என்று ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு திரும்பிவிட்டேன். முன்னால் போன குட்டி யானை (டாட்டா ஏஸ்) தப்பாக முட்டிக்கொண்டு பிருஷ்ட பாகத்தை ஆட்டும் நிஜ குட்டியானை போல ஆட்டியாட்டி திரும்பிக்கொண்டிருந்தது. அதுவரை தண்ணீரில் காத்திருக்கும்போது தற்காலிக வெனிஸாக மாறியிருந்த அந்தத் தெருவில் வசிக்கும் ஒரு பொடியன் நேரே வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து, முகம் பிரகாசிக்க, நீல ட்ராயர் தூக்கிச் சர்வ சுதந்திரமாகப் பிஸ்ஸினான். அவன் பங்குக்கு 0.00000000000001 மடங்கு ரோட்டுத் தண்ணீரை உயர்த்தினான்.

இரண்டு லெப்ட், இரண்டு ரைட், ஒரு ஷ்ட்ரெயிட் என்று கார் ஸ்டியரிங் கார்ட் வீலாகச் சுழல தலைசுத்தும் அளவிற்கு சந்துகளுக்குள் சிந்துபாடிக்கொண்டிருக்கும் போது திரும்பவும் பூ.நெடுஞ்சாலையை அடையவேண்டும் என்ற ஞாபகம் திடுமென வந்தது. “சார்... பூந்தமல்லி ஹை ரோடு..” என்று இழுத்தவுடன் ”நேரே லெஃப்டு... அப்புறம் ஒரு ரைட்டு.. கொஞ்சம் வளைஞ்சாப்ல போய்ட்டு....ஷ்ட்ரெயிட்டு.. அப்புறம் ஒரு லெஃப்ட்டு...” என்று இன்னமும் முன்னால் கையை சுளுக்கும் வரை ஆட்டியாட்டி நீட்டி திசைகள் எட்டையும் ஆகாயத்தில் வழி போட்டுக் காட்டிக்கொண்டிருந்தவரிடம் பவ்யமாக நன்றி சொல்லிவிட்டு தோராயமாக சோத்தாங்கைப் பக்கமாகவே வளைத்துக்கொண்டு போய் பூ.நெடுஞ்சாலை அடைந்துவிட்டோம். 

இதற்குள் இரண்டு முறை கைகால் அலம்பிக்கொண்டாள் சேப்பாயி. கூகிள் மேப்ஸால் வழி கண்டுபிடித்து தப்பிக்கலாம் என்றால், பிரளய வெள்ளக் காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்கள் காட்டுமளவிற்கு அதற்கு திறமை இன்னும் புகட்டப்படவில்லை. நம்மூரு சுந்தர் பிச்சை இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு கூகிள் மேப்களில் தண்ணீரடித்துக் காண்பிக்க ஆவன செய்யுமாறு திடீர் வெள்ளத்தில் மிதப்போர் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

சாமர்த்தியமாக கோயம்பேடு பாலம் ஏறியாகிவிட்டது. இடதுபுறம் திரும்புவதற்கு வாகன பேதமின்றி நமது பிராந்தியத்தின் பிரதான பழக்கமான “ஒருவர் மீது... ஒருவர் ஏறி....” ஒய்யாரமாக நின்றுகொண்டிருந்தார்கள். சீட்டுக்கட்டை ஒன்றன் மீது ஒன்றாக தரையில் சார்த்தி வைத்தது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகன வரிசை. அந்த வழியில் சென்றால் திரும்ப முடியாது என்று இன்னும் கொஞ்ச தூரம் நேரே சென்று கோயம்பேடு பக்கம் திரும்பும் இன்னொரு சந்தில் வண்டியை விட்டோம். “நேரே போ... சின்னோண்டு லெஃப்ட் வரும் பாரு...” என்ற வழிகாட்டி சத்யாவிடம் “நாம... இப்ப மட்டும் என்.ஹெச் 45 ல வரோமா?”ன்னேன். சிரித்தேன். இதுவரை பயணத்தில் கொஞ்சம் சிரிப்பு இருந்தது. 

கண்ணைக் கட்டிக் கடத்துவது போல இடது வலதாக அழைத்துக்கொண்டு போய் “அதோ பாரு... வந்திடுச்சு..” என்று மெயின் ரோட்டை தூரத்தில் நிலா காண்பித்து குழந்தைக்குச் சோறு ஊட்டுவது போலக் காட்டினார் சத்யா. அங்கு ஒரு சவால். அந்த மெயின் ரோடு அடைவதற்கு சேப்பாயியின் கழுத்தளவு நீரில் நீஞ்சிக் கடக்கவேண்டும். போனெட்டில் அடித்து கார்க் கண்ணாடியைக் கழுவுமளவிற்கு தண்ணீர். நெஞ்சுரம் மிக்க ஓட்டுனர்கள் மட்டுமே களம் காண முடியும் என்கிற போராளி நிலைமை. அதைக் கடப்பதற்கான சவால்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. தொடை வரை வேஷ்டியைத் தூக்கிக்கொண்டு செக்ஸியாக வரும் மாமாவின் மேல் தண்ணீர் தெளிக்கக்கூடாது

2. அயராது உழைத்துக்கொண்டிருந்த போலீஸ் மேல் நீர் பாய்ச்சக்கூடாது. ஏழேழு ஜென்மத்துக்கும் பாவம். 

3. தோண்டி வைத்திருக்கும் பள்ளத்தில் விழுந்து ஸ்டியரிங்கில் அடிபட்டு பல்லு மொகரை பேந்தாலும் கெட்டியாகப் பிடித்த ஸ்டியரிங்கை விடக்கூடாது, 

4. மூளையும் கண்களும் சேர்ந்து உழைத்து காம்பஸின் திறன் கொடுத்து வாய் பிளந்த சைஃபன் இருக்கும் திசை அறிய வேண்டும். ஓடும் தண்ணீரில் சுழி பார்க்கத் தெரிந்தால் தப்பித்துவிடலாம்.

ஏக் தம். க்ளட்சை அழுத்தி ஒரு முறை ”ர்ர்ர்ர்ர்ர்ர்ரூம்ம்ம்ம்ம்”மென்று உறுமினேன். ஃபர்ஸ்ட் கியர். ஆக்ஸிலேட்டரில் ஏறி உட்கார். உடையும் வரை மெறி. ஆறு செகண்டுகளில் வண்டியில் இருந்த அனைவருக்கும் புனர் ஜென்மம் கிடைத்தது போல மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி சொன்னேன்.
திரும்பியதும் தெரிந்துவிட்டது. வாகன சமுத்திரம். ”விடியும்போது வீட்டுக்கு பால் வாங்கிக்கொண்டு போகலாம்...” என்று ஃபோனில் சத்யாவின் கிண்டல் வேறு. “பாய்ங்.. பாய்ங்..” என்ற ஆம்புலன்ஸ் சத்தம்தான் என்னை மிகவும் இம்சை செய்தது. வண்டிக்குள் தவிப்பவருக்குக் காலனின் காலக்கெடு எதுவரையோ? 

ஷுகர் குறைய ஆரம்பித்ததில் க்ளட்ச் மிதத்த கால் கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்தது. அடுத்த இலக்கு ஏதோ ஒரு ஆகாரம் வேண்டும். தேடு. சுற்றிலும் தேடு. இரை தேடு. மணி இரவு 9:45. அரும்பாக்கம் ஸ்டேஷன் மூலையில் தெரிந்தது. இடதுபுறம் குளிருக்கு இதமாக டாஸ்மாக்கில் ஹாட் விற்பனை நடந்துகொண்டிருந்தது. பக்கத்தில் பொட்டிக்கடை. மிச்சர் பாக்கெட்டும் கடலை மிட்டாயும் காரக் கடலையும் கட்டாயம் விற்பனையாகும் இடம். ”நாலைஞ்சு பாக்கெட் கடலை மிட்டாய் வாங்கிக்கோங்க... வண்டி நகர்ந்தாலும் நீங்க நடந்து வந்து பிடிச்சுடலாம்...” என்று ஒருவரை தைரியமூட்டிக் கடலை மிட்டாய் வாங்க இறக்கிவிட்டேன்.

பத்தடி நகர்வதற்குள் அன்னநடை நடந்து வந்து ஏறிக்கொண்டார். ஷுகர் பிரச்சனை தீர்ந்தது. வயிற்றுக்கும் ஈந்தாகிவிட்டது. நோ ப்ராப்ளம். ரெண்டு கடலை மிட்டாயில் இருண்ட கண்களுக்கு ஒளி வந்தது. அரும்பாக்கம் ஸ்டேஷன் தாண்டி பெரியார் பாதையில் வெள்ளம். இரண்டு பாடிகளை ஒட்ட வைத்த ஒரு நீண்ட பஸ்ஸின் பின்னால் வால் பிடித்துக்கொண்டு இன்ச்சிக்கொண்டிருந்தேன். ஆட்டோவாலா ஒருவர் இண்டு இடுக்கில் புகுந்து எங்கள் தொடர்பை அறுத்தார். சட்டென்று ஆட்டோ ரைட்டில் ஜகா வாங்க என் முன்னே “ஹோ...”வென்று சமுத்திரம் போல தண்ணீர். பஸ்ஸும் போய்விட்டது.

முன்னால் செல்பவர்கள் அதைப் பார்த்துவிட்டு “நேரே போகமுடியுமா? இல்லை.. மேலே போய்விடுவோமா?” என்று தடுமாறி திக்குத் தெரியாமல் திணறி நின்றார்கள். இந்த அமளிதுமளியில் டவேராவை இடதுபுறம் ஓரங்கட்டி ஒய்யாரமாக ட்ரைவர் சீட்டில் சாய்ந்து கொண்டு ஜன்னல் அனைத்தையும் ஏற்றிவிட்டு ஒருவர் சினிமா பார்த்துக்கொண்டிருந்தார். கீதையில் சொன்ன ஸ்திதப்ரக்ஞன். பராக்கு பார்க்காமல் சாலையைப் பார்த்தேன். நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை சேப்பாயிக்கு துணிச்சலான வேலை. மனதில் ஆஞ்சநேயரை துணைக்காக நிறுத்திக்கொண்டேன். இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் மீடியேட்டர் வரை ஒரு ஆர்க் அடித்து திரும்பினேன். ”பளக்... பளக்...” என்று தண்ணீர் வண்டியின் ஜன்னல்களிலும் கண்ணாடியிலும் மோதும் சப்தம் பயங்காட்டியது. 

வெற்றிவீரனாக இரண்டாவது கடலையும் தாண்டியபிறகு சாலை வெறிச்சென்று இருந்தது. வடபழனி சிக்னலில் வலம் இடமாக பெருக்கெடுத்து ஓடியது வெள்ளம். அவைகளை இலகுவில் கடந்து அசோக் நகர் சிக்னலில் சுமாராக இழுப்பு இருந்தது. காசி தியேட்டர் தாண்டியவுடன் வரும் அடையாறு பாலத்தில் கொட்டும் மழையில் நின்று கொண்டு வெள்ளம் ரசித்த ஆள் இதுவரை தண்ணியில்லாக் காட்டில் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனின் கிருபையினால் கத்திப்பாராவை அடைந்தோம். பாலமும் ஏறி இறங்கியாச்சு. உதிரியாய் ஒன்றிரண்டு வாகனங்கள். சந்தோஷம். இன்னும் பத்து நிமிஷத்தில் வீடு சேர்ந்து டாங்க் க்ளியர் செய்துவிடலாம். ஆத்திரத்தை அடக்கினாலும்..... என்கிற ஃபேமஸ் வசனம் உங்களுக்கு இப்போது ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியாது. மணி இரவு பதினொன்று.

வாழ்க்கையில் இன்பதுன்பங்கள் மாறிமாறி வரும் என்பதற்கு அடையாளமாக அடுத்த நூறு மீட்டரில் மீண்டும் மழை வெள்ளத்தைத் தோற்கடிக்கும் வாகன வெள்ளம். சின்னக் குழந்தை ஒன்றை ட்யூஷன் பேக்கோடு நனைய நனைய பின்னால் உட்கார்த்தி வைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் அப்பாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மீண்டும் “ஹொய்ங்..ஹொய்ங்...” என்று ஆம்புலன்ஸ் சப்தம். ஊஹும். ஒரடி விலகி இடம் கொடுக்க முடியாது. திடீரென்று மின்னலென மழை நின்றுவிட்டது. கோபாலன் கோவர்த்தனகிரியைப் பிடித்துவிட்டானா? என்று ஆச்சரியப்பட்ட போது மெட்ரோவிற்காகப் போடப்பட்ட பாலமே கோவர்த்தன கிரி என்று புரிந்தது.

மீண்டும் வானத்தைப் பொத்துக்கொண்டு மழை கொட்டத் துவங்கியபோது சாலையின் எதிர்புறத்திலிருந்து கணுக்கால் அளவு இந்தப் பக்கம் கால்வாய் போல நீர்ப் பாயத்துவங்கியது. சுற்றிலும் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனாதிகள் வண்டி உருட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். யாராவது சங்கிலித் திருடர்கள் ஓடிவந்து கழுத்திலிருந்து அறுத்துக்கொண்டு போனால் கூட அவர்களைக் கண்டு கொள்ளாமல் இன்னும் இரண்டு அடி நகர்ந்துவிடுவோமா என்பதைப் பற்றிய தீவிரச் சிந்தனையோடு காத்திருந்தார்கள். மழையின் ”தொரதொர....”த்தவிர வேறு சப்தமில்லை. பிரளய கால இராத்திரி போல இருந்தது. எரிபொருள் தீர்ந்துபோன நான்கு சக்கரங்களை சாலையோரத்திலேயே விட்டிருந்தார்கள்.

இராப்பூரா கோயம்பேட்டிலிருந்து கிண்டி வரை முட்டியளவு தண்ணீரில் நின்றிருந்த போலீஸ்காரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். தண்ணீரிலும் மழையிலும் ஒரு சிங்கிள் டீக்குக் கூட வழியில்லாமல் மணிக்கணக்காக ரெகுலேட் செய்தது நெக்குருக செய்தது. நங்கைநல்லூர் சப்வேயில் நுழைந்துவிட்டால் பண்ணின பாவத்திற்கான கருடபுராண தண்டனை அனுபவித்தாகிற்று என்று நினைத்திருந்தது வீணாய்ப் போனது. “மீனம்பாக்கம் கேட் வழியாப் போயிடுங்க...” என்று ரெயின் கோட் போட்டும் முழுவதும் நனைந்திருந்த நற்காவலவர் ஒருவர் கைகாட்டினார். அப்போது மணி நடுநிசி 12:00. 

அங்கிருந்து ரொம்ப தூரத்தில் (< 1 KM) இருந்த மீனம்பாக்கம் கேட் திரும்பி வெள்ளக்காடாய் மிதந்து கொண்டிருந்த நங்கையைத் தாண்டி வீடு வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்தும் சத்யா ”கெக்கக்கே”கென்றது காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் சொன்னது இந்த பதிவின் கடைசி வாக்கியம்.

“மாமா... புயலையெல்லாம் விட பருவமழை நல்லா பிடிச்சுக்கிச்சு... மும்மாரிக்கு பதிலா முப்பது மாரி பொழிஞ்சுடுச்சு...”

“என்ன பருவமழை?” (”என்ன கையைப் பிடிச்சு இழுத்தியா?” வடிவேலு தோரணையில்...)

“இல்லை மாமா.. நார்த் ஈஸ்ட் மான்சூன்.... வடகிழக்குப் பருவமழை ( மேஜர் மாதிரி இங்கிலீஷிலும் தமிழிலும் புரட்டிப் புரட்டிப் பேசினேன்)

“போய்யா.... இது... வடகிழக்கு இல்லை.... வடகிறுக்குப் பருவமழை.....”

கொட்டும் மழை இரவுகளில்......

பொழுது புலர்ந்தது. கரையோர மரங்களுக்கு மத்தியில் அவர் நதியை நோக்கி கமண்டலமும் கையுமாக நடந்து வந்துகொண்டிருந்தார். அருகில் வந்தவுடன் அவர் மனு என்று தெரிந்தது. ஆற்றில் இறங்கி கனுக்கால் அளவு நீரில் நின்று கொண்டு கைகளைத் தண்ணீரில் அலசினார். அலம்பிய கைகளில் மீன் குஞ்சு ஒன்று சிக்கியது. கைகளில் சிக்கிய அந்த மீன் மனுவிடம் பேசியது.

”ஐயனே! என்னைக் காப்பாற்றுங்கள்.. தக்க சமயத்தில் நான் உங்களுக்கு உதவுவேன்”

“உனக்கு யாரால் ஆபத்து?”

“பெரிய வலுவுள்ள மீன்கள் என்னைச் சாப்பிட்டுவிடும்.”

“ஆகையால்..”

“என்னை முதலில் ஒரு ஜாடிக்குள் போட்டுவிடுங்கள்... கொஞ்சம் வளர்ந்தவுடன் பாதுகாப்பான ஒரு குளத்தில் விடுங்கள்.. பின்னர் என்னை சமுத்திரத்தில் சேர்த்துவிடுங்கள்... தயைகூர்ந்து எனக்கு இந்த ஒத்தாசை செய்யுங்கள்... உங்களுக்கு என்னால் இயன்றவைகளைக் கட்டாயம் தக்க தருணத்தில் செய்வேன்.....” மீன் குஞ்சு வாய் படபடக்கக் கெஞ்சியது.

மனு அவ்வாறே செய்தார்.

ஒருநாள் அந்த மீன் மனுவிடம்
“பெரிய வெள்ளம் ஒன்று அதி சீக்கிரம் வரும். ஆகையால் தப்பிப்பதற்கு ஒரு படகைத் தயார் செய்துகொள்ளுங்கள்.”

காலம் ஓடியது. குறிப்பிட்ட வேளையில் வெள்ளம் பெருகியது. மனு தயார் செய்திருந்த படகில் தாவி ஏறினார். அவருக்கு முன்னால் அந்த மீன் வந்து நின்றது. படகு நுனியில் கட்டியிருந்த கயிறை அந்த மீனின் கொம்பில் மாட்டினார். வடக்கே விந்திய மலைச்சாரலை நோக்கி அந்த மீன் படகை வேகமாக இழுத்துச் சென்றது.

மலையுச்சியை அடைந்த மனு படகை ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு காத்திருந்தார். வெள்ளம் வடிந்தது. மனு நடந்து வந்ததால் அந்த இறக்கத்திற்கு மனுவின் அவதரணம் (அ) மனோரவதரணம் என்று பெயர் வந்தது.
மூவுலகமும் அழிந்து மனு மட்டுமே ஜீவித்திருந்தார்.

*

ஆதி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றி சதபத ப்ராமணா என்கிற வேதத்தின் பகுதியில் இருந்ததை John Keay தன்னுடைய INDIA - A History புஸ்தகத்தில் எழுதியிருந்தார்.

சமீபத்திய மழை இரவுகளில், மின்சாரம் இல்லாத ஒரு நாள் பால்கனியில் நின்று கொண்டு நிர்ஜனமான வீதியில் பிரளய வெள்ளமாய்ப் பெருகி ஓடி வந்த தண்ணீரைப் பார்த்த பொழுது எனக்கு ஞாபகம் வந்த கதை இது.

வாசல் மின்கம்பத்தில் என்னுடைய படகைக் கட்டிவிட்டு வெள்ளம் வடிய மனுவாக நான் உப்பரிகை மலையுச்சியில் காத்திருப்பதாக தோன்றியது.

”தொர்ர்ர்ர்ர்” ரென்று கொட்டும் மழை சப்தத்தில், உலகில் அனைத்து ஜீவராசிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரேயொரு ஆளாக நான் மட்டும் எஞ்சியிருப்பதாக அஞ்சிய முதல் திக்..திக்.. இரவு....

மழையாலஜி‬

1. பக்தஜனங்களுக்கு மெடிடேட் ரமணர்னா இஸ்கோல் பசங்களுக்கு மெட் ரமணர். முன்னவர் அருட்கடல். பின்னவர் மழைக்கடல்.

2. மசாலா டீயோடும் வெங்காய பக்கோடாவோடும் வாய்க்கும் கொட்டும் மழை சாஸ்வதமில்லை. இதை அறியாமல் புலன் இன்பம் கொடுக்கும் டீ-பக்கோடாவில் மதி மயங்கியவன் அஞ்ஞானி!

3. ”கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர்...” என்பது புயல்மழைக் காலங்களில் சென்னை சாலைகளின் ஆழம் அகலம் தெரிந்த வண்டியோட்டிக்கு செல்லுபடியாகாது.

4. நீரடிச்சு நீர் விலகாது என்பதின் மறைபொருள் ”மரத்தில் மறைந்தது மாமத யானை...மரத்தை மறைத்தது மாமதயானை” போல என்கிற திருமூலர்த்தனமான சிந்தனை எழுந்தால் நீயும் என்னைப் போல் சென்னைவாசியே!

5. ”வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்....” என்று கவுந்தி அடிகள் கேபி.சுந்தராம்பாள் ரூபத்தில் தடியுடன் திரையில் தோன்றிப் பாடியது இக்கால சென்னையர்கள் நெகிழித் தாள் உபயோகித்து ”புசல் மயல காவாலாம் அட்ச்சுக்கிச்சுபா... கவ்ருமெண்டு கண்டுக்கமாட்டேங்கிறாங்கப்பா...”ன்னு புலம்பாமல் ”தவறிழைத்தால் நடு ரோட்டில் ஓடத்தில்தான் போக வேண்டும்” என்று பாடம் புகட்டியப் பாடல் என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்பவன் புத்திசாலி!

வயதான பையன்

நேற்று வேணியின் காதலனோடு, ஏர்போர்ட் காம்பௌண்ட்டை ஒட்டி கங்கை போல ஓடிக்கொண்டிருந்த மழை நீரை லாவகமாகத் தாண்டி, அப்பாவுக்காக ஆர்.ஏ.புரம் ஏவிஎஸ் க்ளினிக் சென்றிருந்தேன். ஏவிஎஸ் புகழ்பெற்ற ந்யூரோ. சென்னையில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ந்யூரோ வித்தகர்களில் ஒருவர். சாய் பாபா டிவோட்டி. பிரதி வியாழக்கிழமை மருந்து மாத்திரைகளோடு பொருளாதாரத்தில் தீனமானவர்களுக்கு இலவச மருத்துவம் பார்ப்பவர். “RVS... எப்பவுமே Pity, Beauty, Memory are short lived" என்று ஆசானாக வாழ்வின் சூட்சுமங்கள் பேசுவார்.

முதுகில் ஸ்டீல் ராடு போட்டு நான்கு நான்காகக் கட்டிப்போட்டிருந்த இருபது ஸ்டீல் சேர்களில் பெரும்பாலும் காலியாகக் கிடக்க அப்பாவோடு உள்ளே நுழைந்தேன். ஏவிஎஸ் பர்ஃபெக்‌ஷனிஸ்ட். ஏனோதானோன்னு பார்க்கமாட்டார். சப்ஜாடாக விஜாரிப்பார். முதல் தரம் உள்ளே நுழைபவர்களுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டு கேஸை அலசி ஆராய்வார். சமுத்திரத்தை விட சின்னதாக பொறுமை இருப்பவர்களுக்கு சௌகரியமான இடம். க்ளினிக்கில் கண்படும் இடங்களிலெல்லாம் ஸ்ரீநிவாசப்பெருமாள், நடராஜர், பாபா, மஹா பெரியவா... தங்க ஃப்ரேமுக்குள் தரிசனம் தருவார்கள்.

இருக்கையில் சாய்ந்து கொண்டு வாத்தியாரின் வேணியின் காதலனைப் புரட்டிக்கொண்டிருந்தேன். “வாராந்திரி ராணி”யில் தொடராக வந்தது என்றும் இக்கதையில் வரும் வேணியை எங்கும் பார்த்திருக்கலாம் என்ற முன்னுரையில் பெப் கொடுத்து கதையை மின்னலென நகர்த்தியிருந்தார். பக்கங்கள் பறந்துகொண்டிருக்க என் கால் முட்டியைப் பதம் பார்த்து யாரோ பக்கவாட்டில் நகர நிமிர்ந்தேன். இப்போது எங்கும் தலை தெரிய எல்லா சேர்களும் நிறைந்திருந்தன.

எதிரில் ஒரு பையன்?..... இல்லை..... ஆள்?... இல்லையில்லை... சரியாக கணிக்கமுடியாதபடி வித்தியாசமான குள்ள உருவம். அமைதியாக கையில் மொபைலை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. தலை சொட்டை. நெற்றியில் விபூதிக் கீற்று. மேட்ச்சிங்கில் சிரத்தை காட்டாத பாண்ட் ஷர்ட். கேண்டி க்ரஷ் விளையாடுவதற்கு என்ன வயது? எட்டிலிருந்து எண்பது வரை ஆட்காட்டி விரல் அரை இன்ச் தேய விளையாடுகிறார்கள். மேய்ந்த கண்ணை இழுத்து புஸ்தகத்தில் விட்டு மீண்டும் சுஜாதாவின் வரிகளுக்குள் மூழ்கினேன். வேணி குடிகார அப்பனுடன் தனது குட்டித் தங்கையான குட்டியின் படிப்புக்காக படாதபாடு படுகிறாள். ”இஸ்கோலுக்கு போயி நல்லா படிக்கணும்டி... நா என்னா வேணா ஒனக்காவ செய்வேண்டி...” என்று உளம் உருகினாள்.

மீண்டும் தலையைத் தூக்கும் போது அந்த குள்ள உருவம் இன்னமும் மொபைலில் மூழ்கியிருந்தது. வெள்ளையும் சொள்ளையுமாக பக்கத்தில் இளமை ததும்ப அமர்ந்திருந்தவர் தகப்பனார் போலிருந்தார். கை நிறைய ஃபைல் ஃபைலாய் ரிப்போர்ட்டுகள். ”அடுத்தது கிரீஷ் போலாம்...” என்று அவர்களை உள்ளே கூப்பிட்டார்கள். என்னைக் கடந்து போகும் போது அந்த வித்தியாசத்தைப் பார்த்தேன். முகத்தில் யௌவனம் அழிந்து போய் எழுபது வயது கிழக்களை கட்டியிருந்தது. ஆனால் நடவடிக்கையிலும் நடக்கையிலும் ஃபைவ் ஸ்டார் காட்டினால் பட்டென்று கை நீட்டும் குழந்தைத்தனம் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

ஏதோ பொறி தட்டியது. சிந்தனையைச் சிதற விடாமல் மீண்டும் வேணியின் வாழ்வியல் போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டேன். வாத்தியார் தன்னுடைய பாணியில் பரபரப்பாக நகர்த்தியிருந்தார். பெங்களூருவின் நிறைய இடங்களில் வேணி பவனி வந்து கதை பறந்தது. எங்களது முறை வந்து உள்ளே நுழைந்தோம். அப்பாவிற்கு பேசிக்கொண்டிருந்த போது 

“உங்களுக்கு முன்னாடி ஒரு பையன் வந்தான்ல ஆர்விஎஸ்?... “ என்றார் கேள்வியாக....

“அது பையனா சார்?”

“ஆமாம். அவனுக்கு progeria,,,,,"

"அப்டியா? அப்டின்னா?”

“ஹிந்தி படம் ‘பா’ல அமிதாப்க்கு இருக்கிற வியாதி..... அபிஷேக் தூக்கி அமிதாப்ல இடுப்புல வச்சுண்டிருப்பானே.... ”

“ஓ.. சின்ன வயசுலேயே வயசான மாதிரி ஆயிடுமே... அதுவா...”

“ஆமாம். எக்ஸாக்ட்லி... சுருங்கின தோலைப் பிடிச்சு இழுத்தா ஒரு ஜான் அளவுக்கு வெளியே வரும்.. இங்க பாருங்க.. இந்த மாதிரி.....” மொபைலில் காட்டிய ஃபோட்டோவில் கையில் கிள்ளி இழுத்த சதை சாரதா பாட்டியின் சாஃப்ட் ஸ்கின் மாதிரி எலாஸ்டிக்காய் அந்தப் பையனின் தோல் இழுபட்டிருப்பது தெரிந்தது.

“பையனுக்கு பதினாலு வயசு... ஆனா இப்போ அவனுக்கு அறுபது வயசு மாதிரி.. அதாவது அவனோட அங்க அவயங்களுக்கு அறுபது வயசு... மனசுல டீன்.. வயசுல டீன்... ஃபிஸிக்கலா ஓல்ட்..”

“அச்சச்சோ.. அப்ப ஷுகர்.. பிபி.. நெர்வ்ஸ் ப்ராப்ளம்.. இப்படி வயசான வர்ற வியாதியெல்லாம்....”

“ம்.. கிட்னி ஃபெயிலியர், கண் பார்வை மங்கிப்போய்டும், ஏற்கனவே தோல் சுருங்கிடிச்சு... இப்படி வரிசையா வயசானப்புறம் வரும் வியாதியெல்லாம் வரும்.... அவனுக்கு ஃபிட்ஸ் வருதுன்னு என்கிட்டே வந்தாங்க.. நாந்தான் ட்ரீட் பண்ணினேன்.. இப்போ அவனுக்கு ஃபிட்ஸெல்லாம் இல்லை... ஆனா. ப்ரோஜெரியா.... சீக்கிரம் போய்டுவான்...”

”இதுக்கு ட்ரீட்மெண்ட்?”

“ஊஹும்... ஒண்ணும் கிடையாது.... மெடிகேஷன்ல கொஞ்ச நாளைக்குத் தள்ளிப் போடலாம்.. அவ்ளோதான்...” சொல்லிவிட்டு ஆதரவாக சாய்பாபாவைப் பார்த்துக்கொண்டார்.

குழந்தைத்தன்மை எவ்ளோ பெரிய வரம். ”இப்பவே வாங்கிக்கொடு”ன்னு உருண்டு பெரண்டு அடம் பிடிச்சது.. வெயில் மழை பார்க்காமல் ஆட்டம் போட்டுச் சுற்றியது... அந்த சாந்தசொரூபியானப் பையனை ஒரு முறை நினைத்துப்பார்த்துக்கொண்டேன்... பாவம். அவனை விட அவன் பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய வேதனை. வலி. 

மனிதப் பிறவி எடுத்து ஒவ்வொரு பருவமும் க்ரேஸ்ஃபுல்லாகக் கழிப்பது எத்தனை கடினம். 

குழந்தைகளைப் போற்றுவோம். கொண்டாடுவோம். குழந்தையாய் வாழ விடுவோம்.

மழையைத் திட்டாதீர்!

Knight Rider ன்னு ஒரு புராதன சீரியல். மாமியார்க் கொடுமை, நாத்தனார் பழி தீர்க்கும் வஞ்சம் போன்ற மசாலாக்களில் சிக்கி இக்காலத் தமிழர்கள் தவிப்பதற்கு முன்னர் ஜொலிக்கும் நீலக்கண்ணர் ஒருவர் ”வாழ் ஷ் திஸ்” என்று வழவழா கொழக்கொழான்னு ஆங்கிலத்தில் பேசி நடித்திருப்பார். நான் ஏழாவது எட்டாவது படிக்கும்போது ”ஆய்பவன்” சொல்லும் ஸ்ரீலங்கா ரூபவாஹிணியில் ஒளிபரப்புவார்கள். விண்ணை முட்டும் ஆண்டெனாக்களின் மூலம் யூயெம்மெஸ் பூஸ்டர் தூர்தர்ஷனை விட ரூபவாஹினியை அள்ளிக்கொண்டு வந்து தரும். வீட்டுக்கு வீடு லைட் ஹௌஸ். ”நம்ம வீட்டு ஆண்டென்னா மேலே ஏறி நின்னாக்க ஸ்ரீலங்காவே தெரியுமேடா” என்று எம்மாரெஸ் சார் ஜோக்கடிப்பார். 

அந்த நீலக்கண்ணரிடம் ஒரு amphibian கார் இருக்கும். நீரிலும் நிலத்திலும் சக்கைபோடு போடும். கொள்ளையர்களையும் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பவர்களையும் விரட்டிக்கொண்டு வரும் போது அப்படியே சர்ர்ர்ரென்று தண்ணீரில் இறக்கி அவர்களது ஸ்ட்ரீம் போட்டை துரத்தும்.

ஆடி, பியெம்டபிள்யூ, ஜாகுவாரெல்லாம் சென்னைக்குத் தேவையில்லை. தற்போதைய தேவை ஒரு தவக்களைக் கார். அது கொஞ்சம் பெரிய மாடலாக இருந்து தேரையாக இருந்தால் கூட தேவலை. தில்லை கங்கா நகர் கடக்கலாம்.

”நிலத்திலும் நீரிலும் பயணிக்கும்படியான அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்” என்று அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள் கூட தேர்தல் அறிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம். பெருவாரியான தாழ்வான பகுதிவாசிகளின் மேலான ஓட்டுகள் கிடைக்கும்.

மழையைத் திட்டாதீர்! பழிக்காதீர்! பழகிக்கொள்வீர்!!

யாரேனும் ஸ்ட்ராங்கான மழைக் கவிதை எழுதினால் விடிந்துவிடும்!

எனக்கு இருட்டுன்னா பயம்....

சரி.. சின்னதாவே முடிச்சுக்கிறேன். ஸ்ரீராமன் சிருங்கிபேரபுரத்தில் சீதா லக்ஷ்மணனுடன் முகாமிட்டிருக்கிறான். வேடர்குல குகனின் ராஜாங்கத்துக்குட்பட்ட இடம். இரவு சீதையும் ராமனும் சயனித்திருக்க லக்ஷ்மணன் வில்லோடு காவல் காக்கிறான். “உங்களுக்கும் சிரமம் வேண்டாம்.. தாங்களும் நித்திரைக்குப் போகலாம். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று குகன் வலிய வந்து வற்புறுத்துகிறான். ”இல்லையில்லை.. எனக்கு தூக்கம் வரவில்லை.. அண்ணாவுக்கு நான் காவல் நிற்கிறேன்...” என்று லக்ஷ்மணன் மறுத்து “நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்..” என்று குகனை போகச் சொல்கிறான்.

குகனும் அந்த இடத்தைவிட்டு நகர்வதாயில்லை. இருவரும் குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டுக்கொண்டு விடிய விடிய காவல் புரிகிறார்கள். [கடைசியில் பரதன் தேடிக்கொண்டு வந்தவுடன் அவனிடம் “இமைப்பிலன் நயனம்” என்று லக்ஷ்மணனின் புகழ்பாடுகிறான் குகன் என்பது வேறு கதை.]

ராமன் பதினான்கு வருடங்கள் காடாள வந்தவுடன்... பரதன் சக்கரவர்த்தியாக பட்டம் கட்டிக்கொண்டு அவனின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த குகனிடம் ராமனைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கலாம் என்று லக்ஷ்மணனுக்குச் சந்தேகம். பரதன் லக்ஷ்மணனிடம் சொல்லி ராமனை வேலை தீர்க்கச் சொல்லியிருக்கலாம் என்பது குகனின் ஐயம்.

மேற்கண்ட இந்த காட்சிக்கு சேங்காலிபுரம் ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்வாள் நகைச்சுவையாகச் சொல்லும் திருஷ்டாந்தம் கீழே...

“ஒருத்தன் பாம்பேலேர்ந்து வந்த வைர வியாபாரி. இன்னொருத்தன் மெட்ராஸ் ஆளு. ரெண்டு பேருமா ஹோட்டல்ல ரூம் போட்டு உக்காண்டு வியாபாரம் பேசறான்கள். பாம்பே ஆள் முன்னாடி வைரம் வைரமா குமிச்சுக் குமிச்சுக் ஏழெட்டுக் கூறு கட்டி வச்சுருக்கான். மெட்ராஸ் ஆள் நிறையா முத்துக் கல்லு, சேப்புக் கல்லு, மரகதக் கல்லுன்னு பத்து கூறு கட்டி குமிச்சு தன் முன்னாடி வச்சிருக்கான்.

ரெண்டு பேருமா ”உங்களைப் போல உண்டா?” ஆஹா... நீர் அப்படி.. நீர் இப்படி..ன்னு உம்மைப் போல நியாயஸ்தன் லோகத்துல உண்டா? நீரே சத்தியசந்தன்...ன்னு புகழ்ந்து பேசிண்டு வியாபாரம் பண்ணிண்டிருக்கான்கள். திடீர்னு லைட்டு போயிடுத்து. கும்மிருட்டு. முன்னாடி யாரு இருக்கான்னே தெரியல... ரூம்ல இவனுங்க ரெண்டு பேர் மட்டும்தான். உடனே ரெண்டு பயலும் என்ன பண்ணினான்கள் தெரியுமோ? படக்கன்னு ஒருத்தொனக்கொருத்தன் அடுத்தவனோட ரெண்டு கையையும் கெட்டியமாப் பிடிச்சுண்டுட்டான்.

”என்னடா? இப்படி பிடிச்சிக்கிறியேன்னு கேள்வி கேட்டுண்டு.. ரெண்டு பேருமே எனக்கு இருட்டுன்னா பயம்னு சேர்ந்தே சொல்றான்கள்.... இந்தப் பயல்களுக்கு இருட்டா பயம் அங்க... முன்னாடி குமிச்சிருக்கிறதில ஒண்ணு ரெண்ட எடுத்து பாக்கெட்ல போட்டுண்ட்டா என்ன பண்றதுங்கிற பயம்... அந்த மாதிரி இருக்கு லக்ஷ்மணனும் குகனும் சேர்ந்து காவல் காத்தது.....”


‪#‎இராமாயணம்‬

இரா முருகன் - முத்துக்கள் பத்து - ஔவை

ஔவை என்று சிறுகதையின் பெயர் இருந்தால் ஒன்று ஆத்திச்சூடி சொல்வது போல அறம் உரைக்கும் கதையாக இருக்கும் இல்லையேல் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைச் சாடி முதுமையில் போராடும் பாட்டியின் கதையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஔவை பெயரில் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதுவது இக்கால முருகனால்தான் முடியும். 

காகிதப் பேப்பரைத் தண்ணீரில் கரைத்துச் செடிக்கு உரமாக ஊற்றும் டெக்னாலஜி முதிர்ந்த காலத்தில் டிஜிடல் குழந்தை என்று தயாரிக்கப்பட்டதிற்கு ஔவை பெயரைச் சூட்டி அழகுபார்த்திருக்கிறார் ஸ்ரீ.முருகன். ”ஒரு வயசுக் குழந்தையா கான்ஃபிகர் பண்ணியிருக்கேன்” என்று அதன் உரிமையாளர் ராம் சொன்னதில் இதுவரை நான் செய்த சகலவிதமான கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் ஹார்ட்வேர் கான்ஃபிகரேஷன்களும் conf, .cf, .ini என்று நினைவுக்கு வந்து படம் காட்டிவிட்டு போனது. வீட்டு வேலை பார்க்கும் ஹுமனாய்ட் வகையறா சர்வெண்ட் மெய்ட்க்கு கூட மனோகரின்னு பேர். 

டிஜிடல் குழந்தையை பேணி வளர்ப்பது அந்த மனோகரி ரோபோ. உலக காசு என்கிற சர்வலோக பண பரிவர்த்தனையில் ஈ ஆர்டரில் அந்த டிஜிடல் குழந்தையை வாங்குகிறார்கள். ஆமாம்.. மனோகரிக்கு அந்தக் குழந்தை மேல் உயிர். மனோகரியை தனக்கு குற்றேவல் புரியவே தயாரித்ததால் இந்த டிஜிடல் குழந்தையை வைத்துக்கொண்டு மனோகரி அடிக்கும் கூத்து ராமிற்குச் சுத்தமாகப் பிடிக்கவிலை.

அதை அக்கக்காக கழட்டி விடும் எண்ணத்தில் அதை நெருங்கும் போது டிஜிடல் குழந்தையை தூக்கின்க்கொண்டு தெருவில் ஓடுகிறது மனோகரி... க்ளைமாக்ஸ் சொல்லட்டுமா? வேண்டாம்.. அம்ருதா வெளியிட்டுள்ள ”இரா. முருகன் - முத்துக்கள் பத்து” என்கிற சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சிறுகதை. வாங்கிப் படியுங்கள்.

பி.கு: இரா. முருகனின் அரசூர் வம்சம், விஸ்வரூபம் என்று மேஜிகல் ரியலிஸ நாவல்களை இதுவரை படிக்காமல் இருப்பவர்கள் இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள “பானை” சிறுகதையைப் படிக்கலாம். அரசூர், விஸ்வரூபம் என்கிற இரு பெருஞ் சோற்றுக்கு இந்த ஒரு ”பானை” பதம்.

குரு... தி போலீஸ்...

குருக்ஷேத்திரத்தில் துரியோதனனின் பதினோறு அக்ஷௌஹிணி சேனை போல வெளியூர் பஸ்கள் மதுரவாயல் பைபாஸில் படைதிரட்டி நின்று கொண்டிருந்தன. ஆகாயத்தில் மழைப் போர் மேகங்கள். திருவண்ணாமலை.. விழுப்புரம்...திண்டிவனம்... கும்பகோணம்.. இராமநாதபுரம்... சேலம்... மயிலாடுதுறை....திருச்சி.. வெளியூரிலிருந்து கோயம்பேடு உள்ளே நுழைய இமாலய வரிசை. கக்கத்தில் தோல் பையோடு சில கண்டக்டர்கள் கீழே இறங்கி கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

நசநசவென்று மழைத் தூத்தலில் கையில் துணிப்பையோடும் இடுப்பில் குழந்தையோடும் தலைவிளக்கு அணைத்து நிறுத்திய பஸ்ஸிலிருந்து இருட்டில் இறங்கி தீபாவளி கொண்டாட சிலர் கரை ஒதுங்கிக்கொண்டிருந்தார்கள். குழந்தைக்குப் பதில் மூட்டையை இடுப்பில் சுமந்தவர்கள் சில தெம்பான ஸ்த்ரீகள். ஆண்கள் கைவீசி பௌருஷம் ததும்ப கம்பீரமாக பீடுநடை போட்டு நடந்து ரோடு கடந்தார்கள். குறைந்தது ஐம்பது போலீஸார் அந்த சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்துப் பணியில் மும்முரமாக இருந்தார்கள். 

அம்பத்தூரிலிருந்து போரூர் அடைவதற்கு அந்த மதுரவாயல் பைபாஸுக்குப் பக்கத்தில் பத்தாறு வேஷ்டிக்கு அங்கவஸ்திரம் போல ஒரு குட்டி பைபாஸ். காரில் எண்பத்தெட்டு போட்டு அந்தகரணம் அடித்துக் காண்பித்து ஆர்டிஓ அசர லைசன்ஸ் எடுத்திருந்தாலும் இங்கே ஓட்டுவதற்கு கைதேர்ந்த ஞானம் வேண்டும். பகவத் கிருபை அவசியம். கால் செண்டருக்கு செல்லும் ஜீப்புகள் அலைகடல் படகாய் ப்ரேக்குக்கும் ஆக்ஸிலேட்டருக்கும் அல்லாடும். ஆயிலி ஐட்டம் சாப்பிட்டவர்கள் வாமிட் எடுத்துவிடும் அபாயம் நிரம்பிய பயணம். கூரிய பார்வையோடு “என்னை முத்தமிடாதே” ஸ்டிக்கரை முத்தமிடாமல் இருக்க நமது ப்ரேக் செயல்படும் தூரத்தில் வந்து கொண்டிருந்தேன்.

அரை கிமீ தூரத்திற்கு அனைவரும் இடது ஓரமாக நிற்க, ”என் வழி தனி வழி” என்று ஒரு ஆட்டோ வலதுபுறத்தில் மின்னலாய்ப் பறந்தது. கண்ணிலிருந்து மறைந்தாலும் உலகமதிர ”டொர்ர்ர்ர்ர்”ரியதில் காது படபடவென்று உதறியது. எதிர்சாரியிலிருந்து சென்னைக்குள் சங்கமிக்கத் துடிப்பவர்கள் ஆட்டோவைக் கடந்து உள்ளே செல்ல அனிமா சித்தி (ராதிகா அல்ல!) வாய்த்திருக்கவேண்டும்.

மழைக்காலத்தில் சென்னையில் கார் ஓட்டுபவர்களுக்கு தினம் தினம் ஜானுவாசம். நூறு மீட்டருக்கு பத்து நிமிஷம். இருநூறு மீட்டரில் ரோட்டுக்கு நடுவில் போலீஸ் தொப்பி தெரிந்தது. “L" ஒட்டி தடம் அழியாமல் பிரிக்கப்பட்ட “L"க்குப் பின்னால் சேப்பாயி தரையில் தவழ்ந்து அப்போலீஸை அடைந்ததும் உட்கார்ந்துவிட்டது. 

கார் ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த அவர் மார்பில் “குரு” என்று பேட்ஜ் குத்தியிருந்தார். சின்ன வயசு. இருபத்தாறு இருபத்தேழு இருக்கும். மழை இன்னமும் ஊசித் தூத்தல் போட்டது. எப்போது வேண்டுமானாலும் கடப்பாரை இறங்கும் என்ற நிலை. ஜன்னலை இறக்கிக் கேட்டேன்

“எவ்ளோ நாழியா நிக்கிறீங்க?’

விகல்பமாய் சிரித்தார்.

“எவ்ளோ நாழியா?”

“மத்தியானம் ஒரு மணிலேர்ந்து. கொஞ்சம் கூட குறையவே மாட்டேங்குது.....”

“இப்பவே மணி எட்டாவுது? எப்போ கிளம்புவீங்க?”

“ஒன்பது... பத்தாயிடும்.....சொல்லமுடியாது....”

“ஒன்வே பண்ணிட வேண்டியதுதானே?”

“கிழிஞ்சுது... அப்புறம் போரூர் சிக்னல்லயே தேங்கி நிக்கும்....”

என்னுடன் பேசிக்கொண்டே இரண்டு கையையும் துடுப்பாக்கி அந்தப் பக்கத்தில் வண்டிகளை துரிதப்படுத்தித் துரத்திக்கொண்டிருந்தார். என்னுடைய பக்கமும் க்ளியராகி நகர்த்தப் போகிறேன். ஏதோ தோன்றியது. கியருக்கு இடது கையை கொண்டு போவதற்குள் வலது கையை வெளியே நீட்டி “அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள் சார்...”

திரும்பி வலது கையை நீட்டி “தேங்க்ஸ் சார்... உங்களுக்கும் தீபாளி வாழ்த்துகள்..” சந்தோஷமாகக் குலுக்கினார்.

மனசுக்கு நிறைவாக இருந்தது. இன்னும் இரண்டு மணி நேரமாவது தெம்பாக வேலை செய்வார். இப்பவும் எனக்கு அவரது துறுதுறு முகம் கண்முன்னே வருகிறது.

நரகாசுரனை கிருஷ்ணர் வதம் பண்ணியதற்கான காரணம் புரிகிறது. அடுத்தவர்களுக்கு சேவை செய். உதவிபுரி. இன்பமாக இரு. பரோபகாரார்த்தம் இதம் சரீரம்.

லா... லா.. லா... நிலா...

”பிரதர் இன் லா... சிஸ்டர் இன் லா.... மதர் இன் லா.. ஃபாதர் இன் லா.. தவிர பாக்கி எல்லா லாவும் போட்டு கவிஞர் இந்தப் பாட்டை எழுதியிருப்பார்”னு வயலின் ஒழுகும் வான் நிலா பாட்டு பற்றி எம்மெஸ்வி எஸ்பிபியிடம் சொன்னாராம். வேற ப்ரோக்ராம்ல பாடும் நிலாவே அதைச் சொன்னது. விஜய்யில் இன்று இளமைத் துடிப்போடு எஸ்பிபி வான் நிலா பாடினார். மனசுக்கு வயசில்லை போல அவரின் குரலுக்கும் வயசில்லை. தேவகானம். காதுகளுக்கு மோட்சம்.

வான் நிலா..நிலா..அல்ல வாசித்த அமல் நரம்பு வாத்தியங்கள் வாசிக்கும் போது நமது நாடி நரம்புகளில் இசை ஊறுகிறது. “வான் நிலா...நிலாவல்ல.. எஸ்பிபி கொல்றான்....” என்கிற சத்யாவின் குறுஞ்செய்தி வந்து பாதி பாட்டில் குத்தியது. சரண “லா..”க்களுள் நுழைந்த எஸ்பிபி தேனை வாயில் தேக்கி வைத்திருந்தார். காதுக்குள் பாய்ந்த அது கள்வெறி ஏற்றியது. சரணங்களின் இறுதிகளில் செவி வழியாக நெஞ்சுக்குக் கொக்கி போடும் ஸோலோ வயலின் ஸோல் டச்சிங். எம்மெஸ்விக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.

எஸ்பிபியின் வழுக்கும் குரலில் பாட்டு நம்மை அப்படியே மலர்கள் சூழ்ந்த ஒரு சோலைக்குள் கொண்டுச் செல்ல செல்ல...பரிமளமான புஷ்பக விமானத்தில் அலேக்காகத் தூக்கிக்கொண்டு பறக்கிறது.... ஒரு வித மயக்கம் ஏற்பட்டுக் கிறக்கத்துடன் சொக்கி கண் மூடுகிறோம்... அப்போது வீசு தென்றலாய் அமல் வயலின் வாசிக்கிறார். திரும்பவும் பூமிக்கே திரும்பக்கூடாது...கூடாது..கூடாது... என்று கண் மூடி மேகத்தினுள்ளே புகுந்து....புகுந்து....மேனிக்கு ஜில்..ஜில்..இன்னும் மேலே..இன்னும் மேலே...பஞ்சாய் பறந்து கொண்டிருந்தபோது... ஒரு வயலின் இழுப்பில்.... பட்டென்று கண் திறந்தால்..... கண்ணெதிரே ஸ்வர்க்கம்... கல்பதருவின் கீழே அமர்ந்திருக்கும் எஸ்பிபியைச் சுற்றி கந்தர்வர்கள் கோஷ்டியாய் நின்று கானத்தைக் கேட்டுச் சுகிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவனாய் நானும் எட்டிப்பார்க்கிறேன்...... இதைப் படிக்கும் நீங்களும்.. .

”வண்ணம் கொண்ட...” பாடிய பையன் கட்டையெல்லாம் சரியாக எடுத்து ஸ்ருதி பிசகாமல் அக்ஷர சுத்தமாகப் பாடினாலும்.....“ஏதோ.. சரியில்லை.. ஸ்ருதியெல்லாம் இருக்கு... கமகம் இருக்கு... ஆனா.. ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்....” என்று புதிராய்ப் பார்த்த சங்கீதாவிடம் சொன்னேன் “எஸ்பிபி.. ஜேசுதாஸ்.. பாடினதை யார் பாடினாலும் அந்தப் பாட்டு ஒரு மாத்து குறைஞ்சா மாதிரிதான் தெரியும்.... சின்னோண்டு கமகம் விட்டுப் போனாலும் பழகின காதுக்குப் பாட்டு ருசிக்காது... அவங்களோட பன்ச் அப்படி....” என்றேன்.

அமலை திரும்பவும் ஃபிடில் வாசிக்கச்சொல்லிவிட்டு பாட்டுத் தலைவன் பாடினான் அந்தப் பாட்டைத்தான்.....

“வண்ணம் கொண்ட வெண்ணிலவே... திரும்பவும் கொல்றான்...” என்று நான் சத்யாவிற்கு மறு ஓலையாக எஸ்ஸெம்மெஸ் தட்டிவிட்டேன்.

சங்கீதத்தை ரசிக்கத் தெரியாதவர்கள் வாலும் கொம்பும் இல்லாத விலங்கினங்கள் என்று பர்த்துரு ஹரி சொன்னாராம். எஸ்பிபியை ரசிக்கத் தெரிந்தவர்கள் யாவரும் மனுஷ்யர்களே!

‪#‎பாடும்_நிலா_பாலு‬

இதோ.. இதோ...

ஆளைச் சக்கையாய்ப் பிழிந்த கெடுபிடியான நாள். லேசாகத் தலை கலைந்து இன் ஷர்ட் அவுட் ஆகி டொய்ங்... என்று தொங்கிப் போய் உள்ளே நுழைந்து, முகம் கை கால் அலம்பி....... டைனிங் ஹாலுக்கு வந்தால் சின்னத்திரையில் எஸ்பிபி அவரது ட்ரேட் மார்க் புன்னகையில் தெரிந்தார். அவர் பாடியது செவி புகுந்ததும் மேனி கொண்ட அலுப்பெல்லாம் அலறியடித்துக்கொண்டுக் காத தூரம் ஓடிவிட்டது. ஜிலீரென்று கரையடைத்துச் சுழித்து ஓடும் காவிரியில் தொப்பென்றுக் குதித்து, தலை தூக்கி நீல வானம் பார்த்தப் புத்துணர்ச்சி. யுகக் கலைஞன்.

சிகரம் அவரது இசையின் சிகரம். ”இதோ... இதோ.. என் பல்லவி...” கேட்ட மாத்திரத்திலேயே சிங்கிளாக வாழ்க்கையை நகர்த்திவிடலாம் என்று அலட்சியமாக நினைப்பவர்களுக்குக் கூட இன்ஸ்டண்ட்டாக டபுளாகி கிரஹஸ்தாஸ்ரமம் புகத் தூண்டும். எஸ்பிபியின் காதல் கொஞ்சும் குழைவு அப்படி. இது வெளியான வருஷத்தில் கட்டிளம் கல்லூரிக் காளையாக (இப்பவும்தான்) சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்தப் பாடல் கொக்கேன் அபின் கஞ்சா போன்ற லாஹரி வஸ்துகள் சேர்த்து ஊட்டும் போதை. ”கள்”கண்டு சுவை. இதோ.. இதோ.. என்று எஸ்பிபி வெல்லப் பாகாய்ப் பாடும் போது அப்படியே ஓடிப்போய் அந்த மனுஷனை இறுக்கக் கட்டிப் பிடித்துக்கொள்ளலாம் போல இருக்கும். அவர் ”காட் ப்ளஸ் யூ” சொல்லும் போது கூட பாடுவது போலவே இருக்கிறது.

”இதோ.. இதோ..” பாடும் போதெல்லாம் பின்னால் ”உம்....உம்...” என்று கேட்டுக்கொண்டு வரும் ஒரு இழுப்பு வயலின் போதாதா.... உயிரை உறிஞ்சுவதற்கு?

இந்த இதோ...இதோ....வை இதே ராக்ஷசன் பாடிய பாடலின், முதல் வரியின் கடைசியில் போட்டால், முதல் வார்த்தையில் வருமே........ அது... எது? தெரிந்தவர்களுக்கு காயகல்பம் தேவையில்லை. அந்த வார்த்தையை இங்கே கமெண்ட்டிட்டால் போதும்.

‪#‎க்விஸ்‬

கணபதி முனி - பாகம் 37: கன்னிப் பெண்ணின் திருமண வயது

பிருந்தாவனில் பண்டிதர்கள் மாநாடு தர்பங்கா மஹாராஜா தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விசாலாக்ஷிக்கு பயம். மாநாட்டை எட்டிப் பார்த்தால் நாயனா புனித யாத்திரையை மறந்துவிடுவார். என்ன செய்வது? என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் நாயனா...

“விசாலாக்ஷி... தர்பங்கா மஹாராஜா இருக்கும் எவ்விடத்திலும் பண்டிட் சிவகுமாரும் இருப்பார். அவர் எனது ஆப்தர். எப்படியும் அவரைச் சந்திக்க வேண்டும்.. ” என்று கண்களில் ஆவல் பொங்க தெரிவித்தார். 

”நீ சற்று நேரம் இங்கேயே இரு....” என்று மாநாடு நடக்குமிடத்திற்கு விடுவிடுவென்று தனியாகச் சென்றார். வாசலில் வாழை மரமும் மாவிலைத் தோரணம் கட்டி திருவிழாக் கோலம் பூண்டிருந்த மாநாட்டு மண்டபத்தில் நல்ல கூட்டம். வித்வத்திலும் செல்வத்திலும் நிரம்பியவர்கள் நடமாட்டம் அதிகமிருந்தது. கதவோர தூணில் சாய்ந்துகொண்டு வாசல் காவலில் இருப்பவன் கணபதி உள்ளே நுழையும் போது கையை நீட்டி மறித்தான். ”பண்டிதர் சிவகுமார் உள்ளே இருக்கிறாரா?” என்று உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டே கேட்ட நாயனாவை அவன் கண்டுகொள்ளவேயில்லை. ”சிவகுமார் இருக்கிறாரா?” என்று மீண்டும் அவனைக் கேட்டார். 

“நீர் பண்டிதரா?” என்று வாசலை மறைத்துக்கொண்டு எகத்தாளமாகக் கேட்டான் வாயிற்காப்போன். கணபதிக்கு கோபம் வந்தது. பொறுத்துப் பார்த்துவிட்டு “அப்பனே! நீ சொல்.. யார் பண்டிதர்?” என்று கேட்டார்.

“தலையில் டர்பன் கட்டியிருப்பவர்களே பண்டிதர்கள்.. உங்களிடம் அது இல்லையே” என்று கிண்டலாகச் சிரித்தான். பதிலுக்கு அவர் பேச மீண்டும் அவன் குதர்க்கமாகப் பேச வாக்குவாதம் வலுத்தது. நாயனாவும் வாயிற்காப்போனும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டவுடன் வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டம் கூடியது. வாசலுக்கு நேரே மேடையில் மஹாராஜாவுக்குப் பக்கத்து இருக்கையில் பண்டிதர் சிவகுமார் அமர்ந்திருந்தார். 

வாசலில் நடக்கும் இந்த ரகளையால் அவர் கவனம் அங்கே திரும்பியது. அங்கே காவ்யகண்டர் சூடாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார். மேடையிலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாக நாயனாவைப் பார்க்க விரைந்தார். வாயிற்காப்போனை கடிந்து கொண்டு நாயனா பக்கத்தில் சென்று கட்டியணைத்துக்கொண்டார். “சௌக்கியமா?” என்று குசலம் விசாரித்து அவரை உள்ளே அழைத்துச்சென்றார். மேடையில் ஏற்றி மஹாராஜாவுக்கும் மற்றும் அங்கிருந்த கனவான்களுக்கும் “இவரே நவத்வீப நாயகன்... காவ்ய கண்ட பட்டம் பெற்ற கணபதி முனி” என்று பிரமாதமாக அறிமுகம் செய்தார்.

மாநாட்டீன் அன்றைய தலைப்பு “கன்னிப்பெண்களின் திருமண வயது என்ன?”. நமது தேசத்தின் பல மாநிலங்கள் பல திக்குகளிலிருந்து வந்த மஹா பண்டிதர்கள் அவர்களது வாதங்களை முன் வைத்துப் பேசினார்கள். மண்டபத்தில் பார்க்குமிடமெல்லாம் டர்பன் கட்டிய பண்டிதத் தலைகளாக இருந்ததால் ஒவ்வொருவருக்குமான கால அவகாசம் மூன்றே நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. விவாதத்தில் தீப்பொறி பறந்தது. இறுதியில் தர்பங்கா மஹாராஜா கணபதி முனியின் அரும்பெருமைகளை எடுத்துரைத்து அங்கு குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். 

“இவர் காவ்ய கண்ட கணபதி முனி. சொல்லாற்றலும் கவித்துவமும் நிரம்பியவர். தவ சிரேஷ்டர். இப்போது இவர் இதற்கான முடிவை அறிவிப்பார்” என்றதும் கூட்டத்திலிருந்து கரகோஷம் கிளம்பியது. 

”ஹிந்து சமுதாயத்தில் திருமணம் என்பது இயற்கையிலேயே சம்பிரதாயமான சடங்கு. ஆனால் இஸ்லாமியர்களின் படையெடுப்புகளினால் இந்தச் சடங்கில் மாசு படிந்துள்ளது. கறைப்பட்டுள்ளது. எட்டு வயது நிரம்பிய சிறுமிக்கு திருமணம் செய்யவேண்டும் என்று நமது முன்னோர்களின் சமுதாய சட்டங்களில் எங்குமே இல்லை. நாம் மீண்டும் இதை புராதன முறைக்கே மாற்ற வேண்டும். ஒரு பெண் புஷ்பவதியான பின்னர் அதிலிருந்து மூன்று வருடங்கள் கழித்து திருமணம் நடத்துவது ஹேதுவாக இருக்கும். அதுவே உசிதம்.”

ஏனைய பண்டிதர்கள் போல மூன்று நிமிடங்களே பேசி தீர்ப்பளித்தார். அங்கு குழுமியிருந்த பண்டிதர்கள் அனைவரும் அதை ஒருமனதாக ஆமோதித்தனர். இதுவே இனி சட்டமாக இருக்கும் என்றும் அங்கீகரித்தனர்.

நிகழ்ச்சி நிரலில் அடுத்தது இலக்கிய விவாதம். மஹா மஹோ உபாத்யாய ஹரிப்ரஸாத சாஸ்திரி தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அனைவரும் காவ்யகண்டரை தலைமை நாற்காலியை அலங்கரிக்க கை கூப்பினார்கள். பண்டிதர்கள் காவ்யகண்டரின் இலக்கிய புலமையை நுகர விரும்பினார்கள். அன்று அவர் ஆற்றிய சொற்பொழிவு பண்டிதர்களின் நீங்கா நினைவுகளில் ஒன்றானது. 

விழா நிறைவுற்ற போது கணபதியி இறுதியுரை ஆற்றினார். நவத்வீப பரீஷத்தற்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை சுவையாகத் தொகுத்தார். தனது பழைய நண்பனின் நினைவுகூறலை இரசித்துக் கேட்டார் பண்டிட். சிவகுமார். 

விசாலாக்ஷியுடன் 1916ம் ஆண்டு மார்ச் மாதம் நாயனா மந்தேசா திரும்பினார். மந்தேசா ராஜா இன்னும் கொஞ்ச நாள் அங்கே தங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கணபதி மட்டும் மந்தேசாவில் இன்னும் கொஞ்ச நாள் தங்க தீர்மானித்தார்.

*

மந்தேசாவில் தங்கியிருந்த கணபதி முனி தீவிரத் தபஸில் இருந்தார். வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டார். நாட்கள் வேகமாக நகர்ந்தது. திருமணம் பற்றிய கணபதியின் கருத்துக்கு எதிராக அவரது உறவினர்கள் எட்டு வயது மகளான வஜ்ரேஸ்வரிக்கு மணம் முடிக்க முடிவு செய்தார்கள். கொல்லாடி கிராமம் கண்டி சிரஞ்சீவியின் புத்திரன் சோமயாஜுலுவிற்கும் வஜ்ரேஸ்வரிக்கும் பொருத்தம் கச்சிதம் என்று விசாலாக்ஷியும் ஒத்துக்கொண்டார். மந்தேசாவில் முகாமிட்டிருக்கும் கணபதிக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் இதை எதிர்க்கும் மனோ நிலையில் அப்போது இல்லை.

பெற்றோரின் தலையாய கடமையான பெண்ணின் திருமண வைபவத்தை சீக்கிரம் முடித்துவிட்டால் தன்னுடைய தவத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என்று எண்ணிய விசாலாக்ஷியின் ஏற்பாடாக இருந்ததால் கணபதி எதுவும் வாயைத் திறக்கவில்லை. 1916ம் வருடம் மே மாதம் அவர்களது திருமணம் நடந்தது. பின்னர் பெண்ணும் மாப்பிள்ளையும் பகவான் ஸ்ரீ ரமணரின் ஆசீர்வாதத்துக்காக திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருவண்ணாமலை செல்லும் வழியில் நெல்லூரில் நாயனா இறங்கிக்கொண்டார். அங்கே பி.என். சர்மாவின் தலைமையில் ஆந்திரர்களுக்கான மாநாடு நடந்துகொண்டிருந்தது. அம்மாநாட்டின் ஒரு அங்கமாக டி.ஆர். ராமச்சந்திரைய்யா பிரதான இருக்கையில் அமர்ந்து நெறிப்படுத்த சனாதன தர்மம் பற்றியும் பண்டிதர்களுக்கிடையே ஒரு மகா கலந்துரையாடல் நடைபெற்றது. 

சனாதன தர்மம் பற்றியும் சம்பிரதாயங்கள் பற்றியும் நாயானா அக்கூட்டத்தில் பேசினார்.
“இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் சம்பிரதாயங்கள் மாறுகின்றன. இதனை மறுத்து கோபமடைதல் கூடாது. ஆணி வேரான அமரத்துவம் வாய்ந்த வேத தர்மம் பாதுகாக்கப்படுவது போதுமானது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் “வேத சாஸ்திர சம்பிரதாயம்” என்று தலைப்பிடப்பட்டிருப்பது தவறாகப்படுகிறது. எப்பொழுதும் மாறும் தன்மையுடைய சம்பிரதாயத்தை ஸ்திரமான வேத தர்மத்தோடு சேர்ப்பது நியாயமாகாது” என்றும் இன்னும் நிறைய விஷயங்கள் அதைப்பற்றியும் விஸ்தாரமாகப் பேசினார்.

தீர்மானங்களை தொகுத்து ”வேத சாஸ்திர சம்பிரதாயம்” என்று பெயரிட்ட அந்தப் பண்டிதர் நாயனாவின் ஆலோசனைகளை ஏற்க மறுத்தார். தலைமை தாங்கியவர் நாயனாவின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். பழமைவாதிகளான சில பண்டிதர்கள் நாயனாவின் புரட்சிகரக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை. சாதூர்யமில்லாததால் அவர்களால் நாயனாவின் முன் வந்து விவாதம் செய்யவும் துணிவில்லை. ஆகையால் நாயனா சனாதன தர்மத்தை எதிர்க்கும் கலகக்காரர் என்று பண்டிதர்களிடையே வதந்தி பரப்பினார்கள். ஆனால் நாயனா இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

நாயனா மந்தேசாவுக்குத் திரும்பி வேத ஆராய்ச்சியையும் ஸ்ரேயஸான தவத்தையும் தொடர்ந்தார்.

மூன்று வருடங்களாக தனது குருவைச் சந்திக்கவேண்டும் என்று தவித்துக்கொண்டிருந்த தேவவிரதன் அக்டோபர் 1916ம் ஆண்டு மந்தேசா வந்தார். நாயனாவைக் கண்டவுடன் அமைதியும் அகவொளியும் கிடைக்கும் என்று மகிழ்ந்தார். மந்தேசா ராஜாவுக்கு சந்தோஷம். தேவவிரதன் மீது அவருக்கு அளவில்லா பாசமும் மரியாதையும். தேவவிரதனும் நாயனாவும் சேர்ந்துகொண்டு பரசுராமர் விஜயம் செய்த இடத்திற்கு சென்றார்கள். மந்தேசாவின் அருகில் இருக்கும் மகேந்திரகிரிதான் பரசுராமர் தவமியற்றிய இடம். 

மகேந்திரகிரியில் அருள்பாலிக்கும் தெய்வத்தின் பெயரும் கோகர்ணேஸ்வரர்தான். கோகர்ணத்தில் கணேசர் பிரதிஷ்டை செய்தது போல இங்கு பரசுராமர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். 

நாற்புறமும் அடர்ந்த காட்டுக்கு மத்தியில் இருந்தது மகேந்திரகிரி. ஒவ்வொரு வருட சிவராத்திரியின் போது ஊர்மக்கள் கால்நடையாக மலையேறி சிவ தரிசனம் செய்வார்கள். மற்ற நாட்களில் சிவன் சிவனேன்னு தனியாக இருப்பார். காட்டு விலங்குகள் நடமாடும் என்பதால் கூட்டமாக இல்லாமல் தனியாக செல்ல அச்சப்படுவார்கள். பாறைகளுக்கும் நெடிதுயர்ந்த மரங்களுக்கும் நடுவில் ஓடும் ஒரு ஒத்தையடிப் பாதையை சிவராத்திரிக்கு முன்னதாக மந்தேசா மஹாராஜா செப்பனிடும் கைங்கர்யம் செய்வார். மேலும் ஆயுதமேந்திய சில வீரர்களை காவலுக்கும் அமர்த்தி சேவார்த்திகளுக்குத் திருப்பணி செய்வார்.

அந்த மகேந்திர மலையில்....

பக்தன் Vs பக்தன்

பக்தன் Vs பக்தன்
================
மண்டியிட்டு பீஷ்மர் யுத்தபூமியில் அமர்ந்திருக்க தேர்சக்கரத்தை கையில் ஏந்தியவண்ணம் பரந்தாமன் அவரைக் கொல்ல உக்கிரமாக நின்றிருந்தான். ஹிந்தி வாயசைவுக்கு தமிழ் வார்த்தைகள் பட்படாரென்று தெரித்தன. விஜய் மஹாபாரதம். 

அனந்தராம தீக்ஷிதரின் ஸ்ரீமத் பாகவத சப்தாக உபன்யாசத்தில்...
”நாளை கிருஷ்ணனை ஆயுதம் ஏந்த வைக்கிறேன்” என்று பீஷ்மர் சூளுரைத்ததற்காக தன்னுடைய பிரதிக்ஞையையும் உதறிவிட்டு ஆயுதம் ஏந்தி நின்றான். பீஷ்மர் வாசுதேவனின் பரமபக்தர். பக்தனின் சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ஆயுதம் ஏந்தி நின்றான்.

தன்னுடைய உயிர் நண்பனும் இன்னொரு பரம பாகவதனுமான அர்ஜுனனை அன்று சரமாரியாய் அம்பு மழை பொழிந்து அடித்துக் காயப்படுத்திக்கொண்டிருந்தார் பீஷ்மர். ஆகையால் அர்ஜுனனைக் காக்கும் பொருட்டும் சக்கரம் ஏந்தி பீஷ்மரைச் சும்மா மிரட்டினாராம்.

பக்தன் Vs பக்தன் சண்டையில் இரண்டு பேருக்குமே கட்சி கட்டி கிருஷ்ணர் நின்றதை ரொம்ப அழகாக விளக்கியிருந்தார் தீக்ஷிதர்வாள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails