Monday, February 1, 2016

அம்பாளப் பார்க்கணுமா?

அது ஆயிரத்திதொள்ளாயிரத்தி எழுபத்தஞ்சாம் வருஷம். வலது தோள்ல டோலக்கு. இடது தோள்ல தொங்கு பை. தலையில இருமுடி. பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒரு கையில. அப்படிதான் சபரிமலை போவோம். மலைக்கு போறத்துக்கு நமக்கு எப்பவுமே பெருவழிதான். எங்க க்ரூப்ல மெண்ட்டல் சாமின்னு ஒருத்தர். பாவம்.. மோட்டுவளையப் பார்த்து பேசிப்பார். எப்பவுமே ஏதோ தீவிர சிந்தனை. கண்ணு ரெண்டும் அரையாய்ச் சொருகி எதுலயோ லயிச்சுப் போயிருப்பார். வாய்ல மந்திரம் மாதிரி சதா என்னத்தையோ முணுமுணுன்னு ஜெபிச்சிண்டேயிருப்பார். நல்ல மனுஷன். நாந்தான் அவர்கூடவே ஒட்டிண்டு வருவேன்.

அப்போ சந்தியாக்கால வேளை. இன்னும் சித்தநாழில இருட்டிடும். பெரியானைவட்டம் கிட்டே இருக்கோம். ஒருத்தொருக்கொருத்தர் பார்த்துக்கறா மாதிரி வளையமா உட்கார்ண்டு ”ஐயப்பா...ஐயப்பா...”ன்னு பஜனை பிரமாதமா போயிண்டிருக்கு. டோலக்கு.... ஜால்ரா... ஜமாய்... என் பக்கத்துல மெண்டல் சாமி.

ஆனந்த பரவச நிலைம்பாளே... அப்படியொரு பரமானந்த நிலையில பாட்டுப் பாடிண்டு இருக்கோம். கலியில பகவன் நாமா சொன்னாப் போறுமாம்... பக்கத்துலேர்ந்து அந்த சாமி என் தொடையில ’பட்’டுன்னு தட்டினார். பஜனை பாடிண்டே “என்ன?”ன்னு ஜாடையாப் பார்த்தேன். “உனக்கு அம்பாள பார்க்கணுமா?”ன்னு காதுல கேட்டார். சரின்னும் சொல்லாம மாட்டேன்னும் சொல்லாம இருந்தேன். கையைப் பிடிச்சு இழுத்தார். கடேசில உட்காண்டிருந்தோம். அப்படியே எழுந்துண்டேன்.

என் கையைப் பிடிச்சு இழுத்துண்டு விறுவிறுன்னு காட்டுக்குள்ளே போனார். எனக்கு ஒண்ணுமே புரியலை. சின்னப் பையன் வேற... வாயைத் தொறக்காம அவர் இழுத்த இழுப்புக்குப் புதரெல்லாம் தாண்டி போயிண்டிருக்கேன். நாலாபக்கத்துலேயும் பெரிய பெரிய மரம். வழியில்லாத வழியில செடிகொடின்னு கால்ல என்னமோல்லாம் சதக்பதக்ணு மிதிபடறது. கொடி முள்ளெல்லாம் அப்பப்போ காலைக் கிழிக்கிறது. ஆனா ஒங்கேயும் நிக்காம வேகமாப் போறோம்.

கொஞ்ச தூரத்துல ஒரு பாறைக்குப் பக்கத்துல அஞ்சு பேரு வரிசையா தபஸ் பண்றா மாதிரி யோக நெலையில உட்கார்ந்திருக்கா. இருட்டுல மங்கலா மசமசன்னு நிழல் உருவமா தெரியறது. அவா தலைக்கு மேலே சின்ணோண்டு தட்டிக்கூரை. அவா சப்ளாங்கால் போட்டு உட்கார்ந்திருக்கதுனால அந்த உடம்பை மேலேயிருந்து மறைக்கிறா மாதிரியான அளவோட கூரை அது. கிட்டக்க நெருங்கினா அஞ்சு பேரும் செகப்பு வஸ்திரம் கட்டிண்டிருக்கா. செகப்பு கலர்லயே அவா முன்னாடி இருமுடி. சின்னச் சின்ன அகல் வெளக்கு. அப்போல்லாம் மேல்மருவத்தூர் ஃபேமஸ் இல்லே. ஐயப்பனுக்கு செகப்பு வஸ்திரம் யாரும் கட்டிக்கறது கிடையாது. எனக்கு ரொம்ப புதுசா இருந்தது.

எனக்கு அவா பக்கத்துல போகப் போக ஏதோ ஒருவித பயம். ஆனா ஏதோ ஒரு அசட்டு தைர்யம் கூட இருந்தது. இவர் அவா முன்னாடி போய் சப்ளாங்கால் போட்டுண்டு சகஜமா உட்கார்ந்துண்டார். நானும் சங்கோஜமா அவர் பக்கத்துல ஒட்டிண்டு உட்கார்ந்தேன். ஏதோ குனிஞ்சு அவாள்ட்ட நடுப்பற ஒருத்தர்கிட்டே இவர் பேசினார். ரொம்ப நாள் பழகினவா மாதிரி மனஸு விட்டு ரொம்ப நாழி பேசிண்டிருந்தா. எனக்கு ஒவ்வொரு செகண்ட்டும் ஒரு வருஷம் மாதிரி நகர்ந்தது. நா அப்படியே ஆடாம அசங்காம உட்கார்ந்திருந்தேன். அப்போ நடுவில இருக்கிற ஒருத்தர் தன் முன்னாடி இருந்த பித்தளைத் தட்டைக் கையில எடுத்தார்.

தட்டு முழுக்க குங்குமம் பரவி இருந்தது. கையில அந்த தட்டை எடுத்துண்டவர் திடீர்னு தன்னோட தலையைக் குனிஞ்சு அந்தத் தட்டுல மடார்னு மோதினார். எனக்குப் படக்குன்னு தூக்கிவாரிப் போட்டது. என்னன்னு நான் மலங்கமலங்க பார்த்துண்டே இருக்கும் போதே முன்னாடி ஜடாமுடி விழ தலையைத் தூக்கினார் பாருங்கோ... ப்பா....ப்பா... ஐயப்பா... ப்பா....

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. சப்தநாடியும் அடங்கிப்போச்சு. முகம் முழுக்க குங்குமம் அப்பிண்டிருந்தது. செக்கச்செவேல்னு தகதகன்னு முகம் மின்றது. அவளாக்குப் பக்கத்துல இருந்த அகல் விளக்கு வெளிச்சமே அத்தனை பிரகாசமா இருந்தது. கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுண்டு பார்த்தேன். கருவிழி ரெண்டும் மேலே போயி கண்ணெல்லாம் பூ விழுந்தா மாதிரி வெள்ளையா தெரியறது. பாக்கி முகமெல்லாம் ஒரே ரெத்த செகப்பு.

வாயிலேர்ந்து நாக்கு முழுக்க வெளியில வந்துடுத்து. அந்த நாக்குல ஒரு இன்ச்சுக்கு குங்கும் ஏறிப்போயிருக்கு. காத்துல ஆடற அகல் வெளிச்சத்துல மொகம் முழுக்க குங்குமத்தோட நாக்கை வெளியில தள்ளிண்டு உக்ரரூபமா காளிகாதேவி போல அம்பாளப் பார்த்தேன். எத்தனை நாழி பார்த்திருப்பேன்னு தெரியலை. அந்த மெண்ட்டல் சாமி கையைப் பிடிச்சுண்டு காட்டுலேர்ந்து வெளியில வந்துண்டிருக்கும்போதுதான் எனக்குப் பிரக்ஞை வந்தது. ”அம்பாள பார்த்ததை யார்ட்டேயும் சொல்லாண்டாம்.... கேட்டியா?” என்றார் பாலக்காட்டு தமிழில். ம்.. என்று தலையை ஆட்டிக்கொண்டேன். எல்லாமே சொப்பனம் போல நடந்தது. மந்திரிச்சு விட்டது போல அவர் பின்னாடியே வந்துட்டேன்.

”என்னடா? எங்கே போயிருந்தே?”ன்னு குருசாமி தட்டிக் கேட்டார். அவரைப் பார்த்துட்டு மௌனமா இருந்துட்டேன்.அப்புறம் மலையேறினோம். ஐயப்பன் தரிசனம் ஆச்சு. இறங்கற வழிக்கிட்ட எல்லோரும் உட்கார்ந்திருக்கோம். நான் உட்காண்டிருக்கிற இடத்துக்கிட்ட நெடுநெடுன்னு ஒருத்தர் வந்தார். நல்ல உசரம். நல்ல ஆகிருதி. ஏதோ ஒண்ணு பொறி தட்டித்து.. என்னன்னு... பார்த்தா அவர் செகப்பு வஸ்திரம் கட்டிண்டிருக்கார். செகப்பு இருமுடி. என் பக்கத்துல வந்தார். "நேத்திக்கி ராத்திரி அம்பாளப் பார்த்தியா?”ன்னார் சிரிச்சுண்டே. நான் அப்படியே உறைஞ்சு போய்ட்டேன். நான் சொப்பனம்னு நெனைச்சுண்டு இருந்ததை சத்தியமா நடந்ததுன்னு சொல்றத்துக்கே அவா வந்தா மாதிரி இருந்தது. திரும்பவும் வாயைத் திறந்து நான் எதுவும் கேட்கறத்துக்கு முன்னாடி மாயமாய் மறைஞ்சு போய்ட்டார்.

இப்ப நெனைச்சாலும் மெய் சிலிர்க்குது!! இப்படி சபரிமலையிலே ஒவ்வொண்ணும் சத்யமா இன்னிக்கும் நடக்கிறது....

மோகன் ஜி சொன்ன கதை, என்னுடைய புரிதலுக்கேற்ற எழுத்தில்!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails