Monday, February 1, 2016

பாகம் 1: பழையனூர் நீலி

"பழையனூர்க்கு இந்த வழிதானுங்களே?” என்று காரிலிருந்து எக்கி கழுத்து ஒடிய வழி கேட்டேன். எங்கோ கிராமத்திற்குள் தலைதெறிக்க ஓடும் அந்த தார்ரோடுமில்லாத மண்ரோடுமில்லாத ரெண்டுங்கெட்டான் பாதையின் நடுவில் குத்தி வைத்திருந்த வழிகாட்டும் பலகை துருப்பிடித்து கால்கள் வலுவிழந்து இத்துப்போயிருந்தது. அதில் பெயிண்ட் போன மண்ணூர் என்று கேள்விப்படாத, ஐந்தாறு தெருக்கள் சப்தமில்லாமல் சௌஜன்யமாகக் குடியிருக்கும் குக்கிராமத்தின் பெயர் சொரிசொரியாகத் தெரிந்தது. சாலையோரத்தில் தாராளமாகத் தலைவிரித்திருந்த வேப்பமரத்திற்கு கீழே தோளில் துண்டோடு நின்ற எழுபது வயது பெரியவரிடம் இந்த ஓபனிங் சீன் கேள்வி சென்று சேர்ந்தது. 

”எங்கியும் திரும்பாமே நேரே மெயின்ரோட்லயே போங்க...” என்று கை நீட்டிய பெரியவர்க்கு கிராமத்துக்கே உண்டான வஜ்ரம் போல தேகம். தோள்பட்டை முட்டை உழைத்த கட்டை என்று காட்டியது. நரைத்த தலை. நெற்றியில் லேசான குங்குமத் தீற்றல். கண்களில் ஒளி. அவர் சொன்ன மெயின் ரோட்டில் எதிரில் இன்னொரு பெரிய நாற்சக்கர வாகனம் வந்தால், இருவரும் ரியர் வ்யூ மிரரை மடக்கி ஷாலின் படங்களின் சண்டை நாயகர்கள் போல குனிந்து பரஸ்பரம் மரியாதை கொடுத்து பவ்யமாக உருட்டி முன்னேற வேண்டும். 

உள்ளே செல்லச் செல்ல கொஞ்சம் விசாலமான பாதை. ஒண்றரை கிலோ மீட்டருக்குள், கொண்டையில் டிஷ் ஆண்டனா சொருகி, உதிரியாய் இருந்த வீடுகளுக்கு இடையிடையே நவ கன்னிகள் (சப்தகன்னிகள் இல்லையோ?) ஆலயம், சாட்சிபூதேஸ்வரர் கோயில், தீப்பாய்ந்த அம்மன் ஆலயம் என்று இடதும் வலதுமாய் வரிசையாய் சின்னச் சின்னதாய் கிராமத்துக் கோயில்கள் வந்து போயின. பழையனூரிலிருந்து திருவாலங்காட்டுக்கு திருவுலாவாகத் திரும்பும் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியைப் போற்றி வரவேற்று ஒவ்வொருவரும் வீட்டு வாசலிலும் பிரம்மாண்டமானக் கோலமிட்டிருந்தார்கள். கோலக் கலை விற்பன்னர்கள் கலரில் கண் நிறைத்தார்கள்.

எதிர்புறம் வாகனம் வராத புண்ணியத்தில் வாய்க்கா வரப்பில் இறங்காமல் பழையனூர் அடைந்தோம். பழையனூரில் தழுவகொழுந்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் கிளம்பினார் இரத்தின சபாபதி. செங்குத்தாக விண்ணுக்கு உயர்த்திய காலைக் கண்டு களிப்புற்று மனமார தரிசித்துக்கொண்டு அரையிருட்டில் இருந்த ஆனந்தவல்லி கோயிலுக்குள் சென்றோம். 

தழுவகொழுந்தீஸ்வரர் கண்ணப்பனைப் போல தழுவிக்கொள்ளும் எழிலோடு இருந்தார். தரிசித்து திரும்பியபோது அர்த்த மண்டபத்தில் ஒரு பெரியவர். ஊர்க்காரர் என்பது அவரது நெற்றியில் அச்சடித்து ஒட்டியிருந்தது. அவர் நின்றிருந்த தூணோரம் ஒதுங்கி “ஐயா... இந்த எழுபத்திரண்டு வேளாளர்கள் தீப்பாய்ந்த கதை ஒண்ணு சொல்றாங்களே...” என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.

கண்களில் ஆர்வம் மிதக்க கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார்.

“அது ஒரு பிராம்மணாள் வீட்டுப் பொண்ணுங்க..” 

எது? என்கிற கேள்வி என்னோடு வந்த அனைவருக்கும் ஒரு சேர எழுந்து அவரைத் தூணோடுக் கட்டிப்போட்டு கதை சொல்ல வைத்தது.

“நம்மூரைச் சேர்ந்த ஒரு வணிகருங்க... கல்யாணமானவரு.. காசிக்குப் போறாரு.... அங்க ஒரு பிராமணர் வீட்டுல தங்கறாரு... அவருக்கு அழகா ஒரு பொண்ணு இருக்கு.. இவருக்குப் பார்த்தவுடனே புடிச்சுப்போயிடுது.... தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சுன்னு உண்மையைச் சொல்லாம.. அந்தப் பொண்ணையும் கட்டிகிடறாரு..”

அண்ட்ராயர் பையன் ஒருவனும் இப்போது அவருக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டான். ஆனந்தவல்லியைத் தரிசிக்க வந்த இன்னொரு கோஷ்டியும் இந்தக் கதை கேட்பதில் சேர்ந்துகொண்டார்கள்.

“கலியாணம் முடிஞ்சு அந்த பிராமணப் பொண்ணும் அதோட தம்பியும் இவரோட ஊருக்கு வாராங்க..... இங்க பழையனூறு பக்கத்துல வந்துட்டாங்க....”

”அப்பவும் இந்த ஊரு பழையனூறு தானோ...”

“ஆமாங்க.. அது திருவாலங்காடு... இது பழையனூரு....அப்போ அது காடு.. இப்போ அது ஊரு....அப்போ இது ஊரு...” என்று அது-இது-எது விளையாண்டார். திடீரென்று விழிகள் வாசலுக்குத் தாவ, அவசரத்தில் வேஷ்டிக் கட்டியிருந்த ஒரு இளைஞனைக் கூப்பிட்டு... “பித்தாள தாம்பாளத்து எடுத்துப்போடா... நா பின்னால வரேன்....” என்று கழுத்து நரம்புகள் புடைக்க கூம்பு ஸ்பீக்கர் டெசிபலில் கூப்பாடு போட்டார்.

“அது காடு.. இது ஊரு... நல்லாயிருந்துதுங்க...” என்று விட்ட இடத்தை எடுத்துக் கொடுத்தேன்.

“காரைக்கால் அம்மையார் இங்க வந்து கொழுந்தீஸ்வரரைப் பாடிட்டு... தலையாலையே நடந்து ஆலங்காடு போனாங்க....”

“ம்... “

“ஆமா... காரைக்கால் அம்மையார் தலையாலயே நடந்து போனதால தேவார மூர்த்திகள் யாருமே நம்ம கால் சுவடு பட்டா பாவமின்னு ஆலங்காட்டுக்குப் போயி வடராண்யேஸ்வரரைப் பாடலை.. இங்கேயிருந்தே அவரைப் பாடிட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க...”

“அவ்ளோ சிறப்பும் பெருமையும் வாய்ந்த தலம்...”

“நாம நீலி கதையில இருக்கோம்..” என்று அவரே தொடர்ந்தார்...

”இப்போ தான் அந்த வணிகருக்கு உதறல் எடுக்குதுங்க... ஏற்கனவே கட்டிக்கிட்ட பொண்டாட்டி இது யாரு புதுசான்னு கேட்டா என்னா சொல்றது?ன்னு பயம்... மச்சினனைப் பார்த்து “ரொம்ப தாகமா இருக்குது... தண்ணி எடுத்தா...”ன்னு குளத்துக்கு அனுப்புறாரு... அந்தம்மாவை ஒரு மரத்து ஓரத்துல உட்காரச்சொல்லிட்டு... பின்னாடியே வந்து மச்சினனை தள்ளிக்குள்ளாற வச்சி அழுத்திக் கொன்னுப்புட்டாரு..”

திகில் இசை இல்லாமல், பெப் ஏற்றாமல் பொசுக்கென்று ஒரு கொலை. சின்னப்பையன் கொலை சீன் வந்ததும் கொஞ்சம் மிரண்டான். என்னோடு கதை கேட்க நின்ற சிலர் கையில் பிடித்திருந்த குட்டிப் பசங்களுடன் வேறு கதை பேசிக்கொண்டு சிவசிவாவென்று கோயில் பிரதக்ஷிணம் சென்றனர்.

”...,கொன்னுப்புட்டு திரும்பவும் மரத்தடிக்கு வந்து பொண்டாட்டி கூட உட்கார்ந்து கதை பேசிக்கிட்டிருந்தாரு... ரொம்ப நாழியா தம்பி ஆளையேக் காணோமேன்னு அந்தம்மா பதறிப்போய் ’வாங்க ரெண்டு பேரும் போயி பார்ப்போம்’னு இவரைக் கூப்பிடறா... இவரும் அந்தம்மா கூட குளத்தாங்கரைக்குப் போறாரு... ரெண்டு பேருமா குளத்துல இறங்கி கொஞ்ச நேரம் தேடறாங்க..... அப்போதான் இவரு அந்தம்மாவையும் குளத்துல குப்புற அழுத்தி கொலை செஞ்சுடறாரு....”

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் இன்னொரு கொலை. ரெட்டைக்கொலை கேட்ட பசங்களின் கண்களில் பீதி. கதை சொன்னவரின் ஏற்ற இறக்கமும் சில இடங்களில் நிறுத்தி.... சில நொடிகள் கழித்து... மீண்டும் மெதுவாக ஆரம்பித்து.... சப்தம் கூட்டி.... என்று கதைச் சிலம்பம் சுழற்றினார். கிராமத்துப் பெரியவர்களுக்கென்றே இருக்கும் கதை சொல்லும் த்வனி.. 

“இதோட அந்தம்மாவோட ஜென்மம் முடிஞ்சுடுது..... அப்போ சாவுற போது அடுத்த ஜென்மம் எடுத்து உன்னைப் பழிவாங்கறேன்னு சபதம் போட்டிச்சு..ன்னு சில பேர் சொல்றாங்க.. இன்னும் சில பேரு இந்த வணிகரோட பின்னாடியே நீலியா வந்து உசிரை எடுத்துடுச்சின்னும் சொல்றாங்க... இப்போ நானு மறுஜென்மக் கதை சொல்றேன்”

கோயில் வாசலில் நிழலாடியது. அவருடைய சொந்தமாகக் இருக்கக்கூடும். அழுக்கில்லாத வேஷ்டியும் மேலுக்குத் தும்பைப்பூ நிற துண்டு மட்டுமே போர்த்தியிருந்தார். “நீயி... ஆலங்காட்டுக்கு வரலை... சாமி போயிட்டிருக்கு.....” என்றார். “நீலி கதை கேட்டாரு... பாதி சொல்லிட்டேன்.. மீதியை சொல்லிட்டு வாரேன்... நீங்க போங்க முன்னாடி.. ” என்று அனுப்பிவைத்தார்.

நீலியின் மீதி அடுத்த பாகத்தில்.....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails