Showing posts with label தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு. Show all posts
Showing posts with label தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு. Show all posts

Sunday, July 10, 2011

அந்த மூன்று விஷயங்கள்

three monkeys 1



கையில் இருக்கும் பட்டனைக் கொடுத்து நான்கைந்து பேராய் அணியாக ஒரு இலக்கை நோக்கி ஜெயிப்பதற்காக ஓடும் ரிலே ரேஸ் போல இந்தத் தொடர் பதிவுகள். இலக்கு தலைப்புகள். பதிவுலகத்தில் ஆரோக்கியமான தலைப்புகளில் தொடரப்படும் சங்கிலிப் பதிவுகள் வெற்றிலை பாக்கோடு ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டிய ஒரு நல்ல விஷயம். முன்னுரைகளைப் பற்றி எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் போன மாதம் அழைப்பு விடுத்து நான்கு பேர் அவருக்கு பின்னால் பின்னுரையாக எழுதினோம்.

முன்னுரைகள் ஒரு சிறப்பான டாபிக். ஒரு புஸ்தகத்தை வாங்குவதற்கு முன் புரட்டிப் பார்க்கும் இரண்டு நிமிடங்களில் வாசகனைக் கவரும் வகையில் முன்னுரைகள் இருக்க வேண்டும். இம்முறை பிரபலங்களிடம் பேட்டி போல ஒரு தொடர் பதிவு. இம்முறை தொடுப்புக் கொடுத்தது கல்லிடையின் காதல் நாயகன் தக்குடு. முடிந்த வரையில் கேள்விக்கு நேரடியான பதில் அளித்திருக்கிறேன், படிப்போர் ரசிக்கும் வகையில்.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

இன்னொரு பால்யம் இப்பிறவியில் அமைந்தால் மீண்டும் அதே ’கெட்ட’ சகவாசங்களுடன் வடக்குத் தெரு மதில் கட்டையில் ராப்பூரா அரட்டையும், ராஜகோபாலன் உற்சவங்களும், கிரிக்கெட் போட்டிகளும் திணறத் திணற நிரம்பிய மன்னார்குடி வாசம்.

பசிக்கும் போது சூடான இட்லி, தேங்காய் சட்னியுடன் வயிறாற சாப்பிட்டவுடன் கண்கள் சொருக போதையேற்றும் கள்ளிச்சொட்டு ஸ்ட்ராங்காய் ஃபில்டர் காஃபி.

மேல் சட்டை போடாமல் bare body-யுடன், கையில் பேய்க் கரும்பு இல்லாமல் வேஷ்டி மட்டும் இடுப்புக்கு மேலே பட்டினத்தார் போல சுற்றிக்கொண்டு சிவனேன்னு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருத்தல்- சில நேரங்களில்.

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

ஒலியெழுப்பக் கூடாத பிரதேசமான ஆஸ்பத்திரி வாசலில் கூட ”டர்...டர்”ரென்று காதைக் கிழிக்கும் ஆட்டோ சத்தம். “பாம்..பாம்” என்று பஸ்கள் இரையும் ஏர் ஹார்ன்கள். ஆண்டவன் சன்னதியில் ”மாட்டுப்பொண் ஊருக்கு போயிருக்காளா” போன்ற கடைந்தெடுத்த கண்ணியம் இல்லாத செயல்கள்.

கோயிலில் “என்ன கோயிலுக்கா?”என்றும் சினிமாக் கொட்டாயில் “சினிமாவுக்கா?” என்றும் பீச்சில் “பீச்சுக்கா?” என்றும் அப்பாவியாகக் கேட்கப்படும் அச்சுப்பிச்சான சம்பிரதாயக் கேள்விகள். நல்லவேளை இறுதி ஊர்வலத்தில் கொள்ளி தூக்கிக்கொண்டு முன்னால் செல்பவரிடம் “என்ன சுடுகாட்டுக்கா?” என்று கேட்காமல் இருக்கிறார்கள்.

அருள் புரிவதற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பாராட்டாத ஏடு கொண்டல வாடாவிர்க்கு பல டினாமினெஷனில் டிக்கெட் அச்சடித்து வசூல் செய்து ‘பணக்கார சாமியாக’ க்யூ கட்டிப் பார்க்க விடுவது.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

இந்த லோகாயாத வாழ்வில் ”நீங்களே பார்த்து நல்லதா வாங்கிட்டு வாங்க” என்று அஸைன் ஆகும் சில பல கிரகஸ்தாஸ்ரம வேலைகள்.

புள்ளைகுட்டிகளுக்கு வீட்டுப் பாடங்கள் மற்றும் பரீட்சைக்கு சொல்லிக் கொடுப்பது. வெரி டேஞ்சரஸ். ‘அவளுக்கு கொஞ்சம் மேத்ஸ் பாருங்க’ என்று மிஸ்ஸஸ் சொன்னால் உள்ளுக்குள் உதறல் எடுக்கிறது.

மக்கள் சமுத்திரமான தி.நகரில் கடை விரித்திருக்கும் பல அடுக்கு மாடி ஷாப்கள் மற்றும் ஸ்டோர்களில் திருகாணியில் இருந்து தீபாவளிப் பட்டு வரை எல்லாரையும் ஒட்டி உரசி ஈஷிக்கொண்டே மூச்சு முட்ட சகட்டு மேனிக்கு சாமான்கள் வாங்கும் அசாத்திய தைரியசாலிகளைப் பார்த்து. அந்தக் கடைகளைப் பார்த்தும் தான்.

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் அட்டெண்ட் செய்த யாரோ ஒருவரின் கல்யாண ரிஷப்ஷன் ஆடை அலங்காரங்களை இப்போதும் எப்போதும் ராத்திரி தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் நினைவில் வைத்திருக்கும் மாதர் குல மாணிக்கங்கள். - #எப்படி இவ்ளோ ஞாபகம் இருக்கிறது என்று சுத்தமாகவும் அழுக்காகவும் கூட புரியவில்லை.

அடுப்பில் கொதிக்கும் போதே வாசனை பார்த்து ”ரசத்துக்கு உப்பு பத்தாது” என்று ஹாலிலிருந்து அடுக்களை பார்த்து சத்தமிடும் மூக்கை நாக்காக வளர்த்த சில வாசனாதிப் பெரியோர்கள்.

ஆஸ்ரமங்களில் நித்யமும் ’ஆனந்த’ சாமியார்கள் ‘கட்டிப் பிடி வைத்தியம்” தான் செய்கிறார்கள் என்ற நிஜம் தெரிந்தும் கூட்டம் கூட்டமாய்க் குவியும் பக்தைகள் கூட்டம்.

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

ரகுநாதனின் ‘ரஸிகன் கதைகள்’

நாலு வயசு கௌதம்மின் பர்த் டே பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பிய மானஸா போட்டிருந்த ரோஸ் கலர் ஜிகுஜிகு கோமாளி கேப்.

இந்த நவீன உலகத்தின் இரக்கமில்லாத எஜமானன் - செல் ஃபோன்.

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

கல்யாண ரிஷப்ஷனில் கோட் சூட்டோடு சிரித்துக் கொண்டு எதிர்கால பயமின்றி போஸ் கொடுத்து நிற்கும் மாப்பிள்ளை. (பெண் சிங்கங்கள் சண்டைக்கு வரக் கூடாது. அப்படி வந்தால் ஆண் சிங்கங்கள் எனக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)

”போதா பதவா.. தாஸ்கல்.. மூக்க அதுத்துதுவேன்” என்று என்னைத் திருப்பித் திட்டும் மழலைகள்.

எல்லாம் தெரிந்த ஆல் இன் ஆல் அழகுசாமி போல ”ஹார்ட் டிஸ்க்ன்னா ரொம்ப ஹார்டா கெட்டியா இருக்கும். லேசுல உடையாது. எங்க கீழ போட்டுப் பாருங்க”ன்னு சம்பந்தா சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைத்து உளறுபவர்கள்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

வாகனம் ஓட்டிக்கொண்டு, ரோட்டில் பிலாக்கு பார்த்துக் கொண்டு, யாருடனாவது நீலப் பல்லில் பேசிக்கொண்டும் வீடு திரும்பும் அசாத்திய திறன் எனக்கு உண்டு. வலையில் உலவும் உலாவி போல நான் ஒரு மல்ட்டி டாஸ்க்கிங் மென்பொருள்.

தமிழ்மண நட்சத்திர வாரத்தின் கட்டக் கடேசிப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

”லேட்டாயிடுத்து சாப்பிட வரியா” என்று என்னைக் கூப்பிட்ட அம்மாவிற்கு ”இதோம்மா..” என்று பதில் கூறுகிறேன்.

”ஸிஸ்டம் குடு” என்று என் கையை தட்டிவிட்டு என்னிடமிருந்து பிடுங்கும் என் செல்லங்களிடம் இருந்து கெஞ்சிக் கூத்தாடி தப்பித்துக் கொண்டிருக்கிறேன்.

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

வேறென்ன? இலக்கியத் தரத்தில் இல்லையென்றாலும் நாலு பேர் படிக்கும் விதமாகவாவது. அட்லீஸ்ட் புரட்டும் விதமாகவாவது  ஹி ..ஹி.. ஒரு புஸ்தகம் போட வேண்டும்.

பாதியில் விட்ட மிருதங்கத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்து “தத்.தி.தொம்.நம்” மிலிருந்து ஆரம்பித்து முழுக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

இன்னொரு முறை மண்டையை பிளக்கும் கொளுத்தும் வெய்யிலில் மன்னையில் கிரிக்கெட் டோர்ணமெண்ட் ஒன்று விளையாட வேண்டும்.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

இருபத்து நான்கு மணி நேரமும் அன்னம் தண்ணீர் ’அரசியல்வாதி சோடா’ போன்ற தேவைகள் இல்லாமல் வாய் மூடாமல் பேச முடியும்.

மனசொடிஞ்சு போய் நிர்கதியாக யாராவது வந்தால் “அதோ பாரு நிலா! அந்தக் கறை அதுக்கு எப்படி வந்துச்சு தெரியுமா? கறை இருந்தாலும் நிலா அழகு தானே”ன்னு பக்கத்துல உட்கார்த்தி வச்சு கதை சொல்லி மூடை மாற்றத் தெரியும்.

ஓராயிரம் ஆட்டோக்களுக்கு மத்தியில், சாலையெங்கும் வாகனங்கள் விரவியிருந்தாலும் மனோதிடத்துடன் நாற்சக்கர வாகனம் ஓட்ட முடியும். பத்து வருஷ ’வண்டியோட்டி சர்வீஸ்’ பேசுது.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

மார்கழி மாத சபாக் கச்சேரிகள் கேட்டுவிட்டு  நானும் கச்சேரி செய்கிறேன் பார் என்று வாயைப் பிளந்து தெருவே கேட்கும்படி கதறும் புதிய உத்வேகப் பாடகர்கள் பாடும் எ(ச்)சப்பாட்டுகள்.

நான் படிக்கும் போதும் சரி இப்போது என் பெண்கள் பாடசாலையில் வாசிக்கும் இந்தக் கர வருஷத்திலும் சரி, ”பவி தேர்ட் ரேங்க். உங்க பொண்ணு எத்தனாவது ரேங்க்?” என்ற தேவையற்ற ஒப்பீட்டுக் கேள்வி. இதையே கிரேட் வைத்தும் கேட்பார்கள் என்று அறிக.

நுனி கூராக உள்ள மண்வெட்டியை மணல் இரைந்து கிடக்கும் தார் ரோட்டில் போட்டு “டர்..டர்.” என்று கரண்டும் ஓசை. அந்த மண்ணின் நரநர ஓசை காது வழியாக உள் புகுந்து உடம்பெங்கும் அரித்துக் கொண்டு பரவும். Oh God!

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

ஓயாமல் லொடலொடவென்று Chatter Box போல பேசாமல் தேவைக்கு மட்டும் வாயைத் திறப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாநகரப் போக்குவரத்தில் வண்டி ஓட்டும் போது கடிவாளம் கட்டியது போல ரோட்டை மட்டும் பார்த்து ஓட்டுவது எப்படி என்று கற்றுக் கொள்ள நெடு நாள் பிடிக்கும் போலிருக்கிறது.

கமகமவென்று தெருவே மணக்கும் வண்ணம் வாசனை மூக்கைத் துளைக்க சமைக்க (கரண்டி பிடிக்க) கற்றுக்கொள்ள வேண்டும்.

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

365 நாட்களும் இரவும் பகலும் இட்லி தோசை  அதன் இணை பிரியாத ஜோடி சட்னி சாம்பாருடன். ஸ்டார் ஹோட்டலுக்கு போனால் கூட இட்லி தோசைக்கு ஆளாய்ப் பறக்கும் இட்லி விசிறி நான். சாக்கடை கசியும் பிளாட்பார தட்டுக்கடை மல்லிப்பூ இட்லி போல கமகமக்கும் ஸ்டார் ஹோட்டல் குஷ்பூ இட்லி அவ்வளவு சுகம் இல்லை.

ரொம்பவும் தளர்ந்து இல்லாமலும், கெட்டியாகவும் இல்லாமலும் தொட்டுக்க மாவடு அல்லது விழுதுடன் ஊறிய ஊறுகின்ற ஊறப்போகும் ‘வினைத்தொகை’ ஆவக்காயுடன் தயிர் சாதம். பகாசுரன் போல பத்து நிமிடத்தில் ஒரு படி சாதம் உள்ளே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஈவினிங் டிஃபனுக்கு வெங்கலப் பானையில் கிண்டும் தேங்காய் துறுவலுடன் அரிசி உப்புமா வித் மவுத் வாட்டரிங் நீர்க்க இருக்கும் கத்திரிக்காய் கொஸ்த்து. ரவையூண்டு புளி அதிகமாய் இருந்தால் கொஸ்துக்கு உப்புமா தொட்டுக்கலாம்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

அவ்வப்போது டைனமிக்காக மாறும் பட்டியல் இது. இப்போது கீழே கொடுக்கும் லிஸ்ட், சென்ற ‘ட்’ அடித்த பிறகு டக்கென்று நினைவில் வந்தது.

என் கண்மணி என் காதலி... இளமாங்கனி....
படைத்தானே பிரம்ம தேவன்....
குருவாயூரப்பா... நான் கொண்ட காதலுக்கு நீ தானே சாட்சி.

எல்லாம் எஸ்.பி.பியாக முணுமுணுத்தாச்சோ!

14) பிடித்த மூன்று படங்கள்?

கிளாஸிக்
தேவர் மகன்
மகாநதி
குணா

காமடி
மைக்கேல் மதன காமராஜன்.
பஞ்ச தந்திரம்
பம்மல் ‘உவ்வே’ சம்பந்தம்.

படையப்பா
முத்து
பாட்ஷா

அண்ணாமலை......

Pursuit of Happiness என்று வாழ்க்கையில் கஷ்டப்படும் விற்பனைப் பிரநிதி ஒருவனின் கதை. ஆங்கிலத்தில் ஆக்‌ஷன் படங்கள் மட்டும் பார்த்த நான் கண்ணீர் வரவழைக்கும் படமாக பார்த்த சினிமா இது. ரியலி சூப்பர்ப். எவ்ளோ நாள் தான் கமல்/சிவாஜி படத்துக்கு மட்டும் ’ஓ’ன்னு அழறது.

....ஓ! மூன்று தான் சொல்லவேண்டுமோ? மும்மூன்றாய் நிறையச் சொல்லலாம். படமும் பாடலும் மூன்றில் நிறுத்தி முக்கோணமிட முடியுமா?

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?

ரொம்ப சொகுசுக்கு உடம்பு பழகிடிச்சு.

பற்கள் கிடுகிடுக்கும் குளிர் காலத்திலும் இருவது டிகிரியில் இயங்கும் காரியர் ஸ்பிளிட் ஏ.ஸி.

முகத்தை மூடும் புழுதி, குளிப்பாட்டும் சாக்கடைப் புனித நீர், ஹார்ன் மாணிக்கங்களிடம் இருந்து செவிப்பறையை காப்பாற்றிக் கொள்ள என்று மூன்றுக்கும் சேர்த்து ஜன்னலேற்றிய ஒரு ஏ.ஸி கார்.

அட்லீஸ்ட் தினமும் ஒரு வேளையாவது ஒரு கவளமாவது தயிர் சாதம். யொகர்ட்டின் குண விஷேஷங்கள் பற்றி வெள்ளைக்காரர்கள் ஏகத்திற்கும் சிலாகிக்கிறார்கள்.

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

பதிவுலக சூறாவளி ராஜராஜேஸ்வரி
எழுத்தை ஆயுதமாய் வைத்திருக்கும் ஏ.ஆர்.ராஜகோபாலன்
தில்லியில் பதிவாட்சி செலுத்தும் வெங்கட் நாகராஜ்



பின் குறிப்பு: இதுவரை தமிழ்மணத்திலும் தொடர்ந்து வந்து படித்த அனைத்து அப்பாவி ஜீவன்களுக்கும் மிக்க நன்றி.

பட உதவி: http://journeyforth.wordpress.com/. நடு நாயகமாக  உட்கார்ந்திருக்கும் அந்தக் குரங்கு என்னை மிகவும் கவர்ந்தது. பாடுதா? பேசுதா?

-

Friday, July 8, 2011

மன்னார்குடி டேஸ் - ஸ ரி க ம ப த நி


அது ஒலிநாடாக்கள் கோலோச்சிய காலம். எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் முதற் பாதியிலும் வட்டுத் தட்டை தட்டி கீழே இறக்கி தள்ளிவிட்டு நாடா படுவேகமாக முன்னேறியது. மீண்டும் நாடாவை உருவி வெளியே இழுத்து விட்டு தட்டு முன்னேறியது. ஆதி காலத்தில் பெருந் தட்டு. இப்போது குறுவட்டு. எகோ, மெல்ட்ராக் நிறுவனங்கள் டப்பா டப்பாவாக விற்று தீர்ந்து கொண்டிருந்தன. "இப்படத்தின் பாடல்களை ECHO கேசட்டுகளில் கேட்டு மகிழுங்கள்" என்று மஞ்சள் கலரில் டைட்டிலில் போடுவார்கள். மோவாய்க்கு புறங்கையை முட்டுக்கொடுத்து இசைச் சின்னங்களின் பின்னணியில் நிழல் (silhouette) இளையராஜாவின் அரை மொட்டைத் தலை ஒரு பக்கம் இசையாக சாய்ந்திருக்கும்.

குனிந்து பார்த்தால் முகம் காட்டும் கண்ணாடியாய் சில்வர் கலர் "ஷார்ப்" என்ற விதேசி டேப்ரெக்கார்டர் எங்கள் வீட்டு ஹாலை ஒரு மரப்பெட்டிக்குள் சிம்மாசனமிட்டு அலங்கரித்தது. அன்றைய காலத்தின் ஹீரோ. நம் கண்ணைக் குத்தும் படியாக ஏரியலை ஒடித்து திருப்பினால் சிலோன் ரேடியோ தெளிவாக பன்னிசைக்கும். எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் "சுப்ரபாதமும்", சூலமங்கலம் சகோதரிகளின் "கந்த ஷஷ்டி கவசமும்", நாகூர் ஈ.எம். ஹனிபாவின் "இறைவனிடம் கையேந்துங்கள்"லும்  பாடியது போக மீதமிருக்கும் நேரத்தில் காதலாய் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாடும். நாம் தினமும் மேலுக்கு குளிப்பது போல அப்பா அதை ஸ்ரத்தையாய் மஞ்சள் வெல்வட் துணியால் துடைத்து படு சுத்தமாக வைத்திருப்பார். விபூதி இட்டுவிடாததுதான் பாக்கி.

விஷமக்கார சிறுவர்கள் கையில் கேசட் சிக்கினால் நடுவில் விரலை விட்டு நாடாவை உருவி எடுத்து நரசிம்ம மூர்த்தி ஹிரண்யகசிபுவை குடலை உருவி கழுத்தில் போட்டுக்கொண்டது போல நாடாவை மாலையாக போட்டுக் கொண்டு விடுவார்கள். சில சமயங்களில் டேப் ரெக்கார்டரின் ஹெட்-இல் நாடா சிக்கிக்கொண்டு மக்கர் பண்ணும். "இத்தத்தத்.தத். .....து ... சா.ஆ யும்..." என்று "இது சாயும் காலமா"வை வலிப்பாக இழுத்தால் அது அந்த நொடியில் சாய்ந்து விட்டது என்று அர்த்தம்.  தொழில் கீர்த்தி பெற்ற ஒரு சிற்பியின் லாவகத்தோடு ஸ்க்ரூ டிரைவர் அல்லது டெஸ்டர் துணையோடு டேப் அறுந்து போகாமல் நோண்டி வெளியே எடுத்தால் நீங்கள் ஒரு டேப் மாஸ்டர்.

புழுதி தேசமான இந்தியாவில் பிரஜைகளின் மர்ம ஸ்தானம் தவிர தூசி அடையாத இடம் எது. "டேய் ஸ்டீரியோ சரியா எடுக்கலை.ஹெட்ல தூசி படிஞ்சிருக்கு. ச்சில்லிங் எஃபெக்ட் இல்லை. உங்க வீட்டு வண்டிலேர்ந்து பெட்ரோல் கொஞ்சம் எடுத்து பஞ்சுல நனச்சுண்டு ஹெட்டை லேசா தேச்சா பிரமாதமா பாடும்" என்று என்னைவிட வயதில் சிறியதெல்லாம் அட்வைஸ் கொடுத்து அதன் தலையை பெட்ரோல் தேய்த்து ஸ்நானம் செய்வித்து கெடுத்துவிட்டார்கள். "ஒண்ணுத்தையும் உருப்படியா வச்சுக்க யோக்கிதை இல்லை." என்ற பாராட்டு பத்திரமும் "லாயக்கத்தவன்" என்ற பட்டமும் கொடுத்து வீட்டில் என்னை கௌரவித்தார்கள்.

வாசல் தூணிலும் ஷட்டர் கதவிலும் R - என்ற ஆங்கில எழுத்துக்கு மேலே ராஜாவின் கிரீடம் வரைந்தது ராஜ் மியூசிக்கல்ஸ். அவர்கள் உள்நாட்டு தயாரிப்பு கேசட்டுகள் உலகத்தரம் வாய்ந்தது. கொடுத்த காசிற்கு வஞ்சனை இல்லாமல் ஒரு மாதம் கியாரண்டியாக பாடும். பஸ் ஸ்டாண்ட் வடவண்டை பக்கம் அனைத்து இந்தியப் பிரஜைகளின் ஜீன்களில் இருக்கும் ஒரே நல்ல பழக்கமான பொதுவெளியில் "நம்பர் 1" இருக்கும் இடத்திற்கு நேராக உள்ள ஆடியோக் கடை. கருகருவென்று நீக்ரோவின் சுருட்டை முடியும், உதடோடு முடியும் அளவெடுத்து வளர்ந்த மீசையும் உள்ள கருப்பு ராஜா நம் ராஜ். ராஜ் மியூசிக்கல் உரிமையாளர். எங்களூர் ஆடியோ ஜாக்கி. கட்டம் போட்ட கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டு ஏறிக்குதித்து ரெக்கார்டிங் செய்வதற்கு கடையின் உள்பக்கம் போய்விட்டால் நாதப் பிரம்மம் ஆகிவிடுவார். ஒரு கேசட்டின் 'A' மற்றும் 'B' பக்கம் முழுக்க எனக்கு "கீதா.. சங்கீதா..." என்ற ரசமான பாடலை பதிவு செய்து கொடுத்து காதல் பயிர் வளர்த்து சிறகு முளைத்த "தந்தன...தந்தன" தேவன் ஆனார்.

விடலைகளுக்கே உரித்தான அந்த வயசு ஹார்மோனின் தேவையான "லவ்வு" பாடல்கள் தொகுப்பு கேட்டால் கைவசம் பதிந்து வைத்திருக்கிற ஒரு மாஸ்டர் கேசட்டின் பாடல்கள் சிட்டை தூக்கிக் காண்பிப்பார். பெரும்பாலான அரும்புமீசைக்காரர்களுக்கு பார்த்ததும் நிச்சயம் பச்சென்று பிடிக்கும் பாடல் பட்டியல் அது. பானைக்குள் ஸ்பீக்கர் வைத்து, சத்தமாக "மல்லு வேட்டி கட்டியிருக்கு அதுமேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சு.." பாடும் போது வேட்டியோடு வீட்டு வாசலில் நின்று கொண்டு ஃபிகர் வெட்டுவார்கள். ஃபிகர் வெட்டுதல் என்ற நுண்கலை வட்டார வழக்குகளில் பலவிதமாக பேசப்படுகிறது. கலர் பார்த்தல், சைட் அடித்தல், நூல் விடுதல், கரெக்ட் பண்ணுதல் போன்ற சில கலைச் சொற்களாலும் இது அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் காலத்திலிருந்து வழிவழியாக வரும் அருங்கலை.

பெயர்ப் பலகையில் டைனோசர் படம் போட்டு ஜுராசிக் பார்க் என்ற ஒரு ஆடியோ கேசட் கடை "இன்று முதல் பெரிய போஸ்ட் ஆபிஸ் எதிர்ப்பு'ர'ம் உதயமாகிறது" என்று நோட்டீஸ் அடித்து தெருத்தெருவாக விநியோகித்து ஆரம்பித்தார்கள். ஐயிரு பூஜை போட்டுவிட்டு போனவுடன் கலர் உடைத்துக் குடிக்கக் கொடுத்தார்கள். நான் உட்பட ஊரில் வெகுஜனத் தொடர்பு இருப்பவர்களுக்கு சர்வ மரியாதை செய்தார்கள். கல்யாணத்திற்கு தாம்பூலப் பை கொடுப்பது போல அன்றைய லேட்டஸ்ட் ஹிட்ஸ் பதிந்து ஒரு லோகல் கருப்பு கேசட் கொடுத்தார்கள். ஐந்து நாட்கள் பாடிவிட்டு அது உயிர் நீத்தது. கடை வெற்றிகரமாக அறுபது நாட்கள் திறந்திருந்தது என்று என் ந்யூரானின் சிறிய முடிச்சு சொல்கிறது.

பிறந்தால் தாலாட்டு, கட்டையை நீட்டினால் ஒப்பாரி, காதலித்தால் டூயட், ஆத்ம விசாரத்திர்க்கு கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள், நாற்று நட களை பறிக்க நாட்டுப்புறப் பாடல்கள், காலையில் எழுந்தால் "துதிப்போர்க்கு துன்பம் போம்" என்று வாழ்க்கையின் எல்லா நேரங் காலத்திற்கும் பாட்டு இருப்பது போல பஸ்ஸில் பயணத்தால் "டேப்பு பாடுமா?" என்று கேட்டுக்கொண்டே ஏறுவோர் பலர் அப்போது வாழ்ந்தார்கள். காதுகளில் சொருகிக்கொண்டு அலைந்து திரிவது வழக்கத்தில் இல்லை. யாராவது பரவாக்கோட்டை,மூவாநல்லூர் பார்ட்டி சிங்கப்பூர் போய்விட்டு வந்தால் ராஜா திரைப்பாடல் ரெகார்டிங் செய்வதற்கு காதில் மாட்டிய ஹெட் ஃபோன் சைஸில் ஒன்றை மாட்டிக்கொண்டு இடுப்பு பெல்ட்டில் ஒரு கிலோ எடைக்கு வாக்மன் சொருகியிருப்பார்கள். எடை தாங்காமல் பெல்ட் அறுந்து பேன்ட் அவிழ்ந்து விழும் அபாயத்தில் ஊர் சுற்றுவார்கள்.

பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு தாங்கள் பதிந்த அரும்பாடல் தொகுப்பை ப்ரைவேட் பஸ் டிரைவர்களிடம் கொடுத்து காது குளிர கேட்டுக்கொண்டு பயணிப்பார்கள். "லோக்கல் கேசட்டு கொடுக்காதீங்க.. ஹெட் போயிரும்" என்று பிகு பண்ணிகொள்ளும் டிரைவர்களை தாஜா செய்ய அவர்களை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். 'எட்டு' என்ற சனியின் நம்பர் கொண்ட பஸ் வயற்காட்டை தாண்டி எங்கள் கல்லூரிக்கு உள்ளே கொண்டு போய் சேர்க்கும். அதை மிஸ் பண்ணும் சமயங்களில் வரும் ப்ரைவேட் பஸ் டிரைவர் "வேலு" க்ளோஸ் பிரண்ட் ஆனார். சின்னக்கவுண்டர் விஜயகாந்த் போல தலையை தூக்கி சீவி சந்தனப் பொட்டு வைத்து அசத்துவார். "முத்து மணி மாலை...என்னத் தொட்டு தொட்டுத் தாலாட்ட" பதிந்த எந்த வீணாப்போன கேசட் கொடுத்தாலும் அண்ணன் தயங்காமல் தொடையில் தட்டிப் போடுவார்.

கல்லூரி விட்டு அந்தியில் தொந்தி கண்டக்டர் வரும் கணேசாவிலும் இந்தச் சிறப்பு வசதி உண்டு. "ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே" என்ற ஆந்திர தேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு "டமக்கு டமக்கு" பாடலைப் போட்டு படுத்துவான் ஒரு நண்பன் என்கிற இசைத் துரோகி. பாடலைக் கேட்காமல் நாம் ஜன்னல் வழியாக வேறுதிசையில் எரிச்சலோடு பார்த்துக்கொண்டு வந்தால் வலிய வந்து தாவாங்கட்டையைப் பிடித்து தலையைத் திருப்பி "எப்படியிருக்கு?" என்று தாளகதிக்கு தலையை ஆட்டிக்கொண்டே கேட்பான். நமக்கு அப்படியே கதிகலங்கி போய்விடும். நம் கடித்த பற்களின் இடையே "சூப்பர்" வழியும்.

எக்கோ ரெகார்டிங் என்று ஒரு ஸ்பெஷல் பாடல் ஒலிப்பதிவு முறை கொஞ்ச காலம் பிரசித்தி பெற்றது. நிர்ஜனமான கோயில் பிரகாரங்களில் "அம்புலு"ன்னு கூப்பிட்டால் கடைசியில் சுந்தரத் தெலுங்கில் "லு..லு..லு..." என்று பிரகாரம் பேசி அடங்குமே அதைப் போல் பாடலை ரிகார்ட் செய்வார்கள். இந்தக் கால ரீமிக்சுகளுக்கு முன்னோடி. அது போல ஏதாவது ஒரு கேசட் பஸ் பயணத்தில் கொடுத்துவிட்டார்கள் என்றால் ரொம்ப சந்தோஷம். தலை, உடல், கால் என்று மூன்று இடங்களில் ஸ்பீக்கர் பொருத்தி இருக்கும் பஸ்களில் முதல் ஸ்பீக்கரின் எக்கோ இரண்டாவதில் பட்டு அப்புறம் முதலிரண்டும் ஜோடியாக கைகோர்த்து மூன்றாவதில் மோதி ஒரு இசைப் பிரளயமே அந்தப் பேருந்தில் நிகழும். ஒரு பொன் மாலைப் பொழுதில் பிறந்ததிலிருந்து அறுபது எழுபது வருடங்களாக இசை கேட்ட காதை குளிர் காலத்தில் ஸ்கார்ஃப் சுற்றிக்கொள்வது போல காதைச் சுற்றி இறுகக் கட்டிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டார் ஒரு வெள்ளைச் சட்டை பெரியவர். இறைவன் அவரை ஆட்கொண்டு விடக்கூடாதே என்று நான் கவலைப்பட்டேன்.

"தாலாட்டும் பூங்காற்று நானல்லவா..." பாடலில் முதல் நாற்பத்து நான்கு வினாடிகளில் அந்தரத்தில் சுழன்று பறந்து கார்த்திக் கைக்குப் போய் டேப்பில் சங்கமமாகும் கேசட் போல இது இன்னும் ஐந்தாறு பதிவுகள் தாங்கும் குதூகல கச்சேரி. முடிந்தால் பிறகு வேறொரு பதிவில் மிச்சம் மீதி....

-

Thursday, July 7, 2011

ப்ரியமுள்ள ஷஷிக்கு

ப்ரியமுள்ள ஷஷிக்கு,

நான் பூரண நலம். நீயும் அங்கே நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன். இந்த மடல் உன்னை வந்தடையும் போது எனக்கு இங்கே அண்டசராசரங்களுக்கும் இணையும் இணைப்பு. ச்சே. இணையும் என்றா சொன்னேன். ஸாரி. இணைய கனெக்ஷன் கிடைத்துவிடும். கிடைத்தால் மட்டும் என்ன உனக்கு ஒரு ஜங்க் மெயில் ஃபார்வர்ட் செய்ய முடியுமா அல்லது உன்னோடு உளமாற அரை மணி சாட் எனும் நவீன கடலைத் தான் போட முடியுமா? மெயில் ஐ.டி, கூகிள், யூடுயூப், ஃபேஸ்புக் என்று மிகச் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாத வனாந்தரத்தில் நீ வசிக்கிறாய் என்பது எவ்வளவு கேவலமாக இருக்கிறது தெரியுமா?

இங்கிருந்து உனக்கு நான் லெட்டர் எழுதி நாக்கால் எச்சில் படுத்தி ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் செய்யும் போது நான் அடையும் அவமானங்களுக்கு அளவே இல்லை. கையால் எழுதி உனக்கு கடிதாசி போடுவதற்கு இங்கே அலுவலகத்தில் இருக்கும் காரியதரிசி என்னைப் பார்த்து கேவலமாக சிரிக்கிறாள்.  நான் ஏதோ கற்கால மனிதர்களோடு தொடர்பு வைத்திருப்பது போல "சார்! நீங்கள் ஏன் மசியும் தூரிகையும் கொண்டு ஒரு பேப்பிரஸ்ஸில் எழுதி அங்கே ராக்கெட் கூரியர் அனுப்பக்கூடாது" என்று  கேலி பேசுகிறாள்.

நாடுகளுக்கு மத்தியில் வலைப் போராட்டமும், சர்வர் போரும் இல்லாமல் இருந்திருந்தால் நம் எல்லோருக்கும் பூலோக வாழ்வு சுகமளித்திருக்கும். யு.எஸ். தனக்கு வேலை தரவில்லை என்று சைனாக்காரன் அவன் சர்வருக்கு உலை வைத்தால் அவன் உலகமெங்கும் அதையே எடுத்து பற்ற வைத்துவிட்டான். நாமெல்லாம் சோம்பேறியாக வேலை செய்யாமல் மெஷினிடம் சரணாகதி அடைந்து சொந்த மூளையை துரு பிடிக்க விட்டுவிட்டோம். முடிவைப் பார்த்தாயா.

மக்களை மண்ணோடு மண்ணாக்க இதோடு சேர்ந்து கொண்டது குளோபல் வார்மிங். வெய்யில் காலத்தில் அசுர மழை. மழைக் காலத்தில் கொளுத்தும் வெய்யில். கண்ணுக்கு எட்டாத ஓசோன் பாதுகாப்புப் படலத்தை வாகனம் ஓட்டியே நார்நாராய் கிழித்து விட்டார்கள். ஆளையே சுட்டுப் பொசுக்கும் வெய்யில், அறுபது நாள் தொடர் மழை, அடிக்கடி சுனாமியோடு தோள் சேர்த்து ஊருக்குள் விசிட் அடிக்கும் சமுத்திரராஜன் என்று இயற்கை சீற்றத்தால் அல்லோகலப்படுகிறது.

சரி அதை விடு, இன்னும் கொஞ்ச நாள் தானே இந்தக் கஷ்டம் எல்லாம். பேசி என்ன பிரயோஜனம். இந்த மாதம் ரேஷன் கடைக்கு சென்று வந்தாயா? தயவு செய்து உன் புள்ளையாண்டானை ரேஷன் கடைக்கு அனுப்பாதே! தறுதலை மின்சாரம் வாங்கி யாராவது அரைகுறை ஆடை சிகப்பழகிக்கு தானம் கொடுத்துவிடுவான். இந்த முறை மாதத்திற்கு ஐந்து கிலோ வாட் மின்சாரம் கூடுதலாக தருவார்கள் என்று எழுதியிருந்தாயே, கொடுத்தார்களா? ரேஷன் மின்சார பாட்டரிக்கு ஒரு சனல் பை இலவசம் என்று அறிவித்தார்களே. நிறைவேற்றினார்களா? இப்போது தெருவில் இரவு பனிரெண்டுக்கு மேல் மண்ணெண்ணெய் விளக்கு எரிகிறதா இல்லை திகுதிகுவென்று பற்றி எறியும் தீவிட்டு கொளுத்தி வைத்திருக்கிரர்களா?  சுத்தத் தண்டமான மாநகராட்சி. இனி எந்த ஆட்சியில் இதை திருந்தச் செய்வார்கள்? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

பொது அங்காடியில் தண்ணீர் அளந்து ஊற்றும் போது லிட்டர் குவளை கீழே நூறு எம்.எல்லுக்கு தகரம் அடைக்காமல் இருக்கிறார்களா? அந்தக் காலத்தில் கிருஷ்ணாயில் என்றும் மண்ணெண்ணெய் என்றும் அடுப்பெரிக்க பயன்படும் எரிபொருளுக்கு அப்படித் திருட்டுத்தனம் செய்வார்களாம். தயவு செய்து சிந்தாமல் சிதறாமல் ஜாக்கிரதையாக எடுத்து வா. நல்ல தண்ணீர் கோயம்பேடு கள்ள மார்க்கெட்டில் அதிகப்படி விலைக்கு கிடைக்கிறதாம். அரசாங்க நீரேற்று மையத்தின் கடல் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது குளிப்பதற்கு ஓ.கே. தயவுசெய்து கூவத்தில் இருந்து பிரித்தெடுக்கும் எந்தத் தண்ணீரும் நமக்கு வேண்டாம். நமக்கு ஒத்துக்காது. காசுக்கு பார்த்து உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உன்னிடம் ஜோக்காக சொல்வேனே அந்த "சர்வ குxடி தீர்த்தம்". அது தான் அந்த நீர்!

ஷுலக்ஷி எப்படி இருக்கிறாள்? ஷுஷன் ஊர் சுற்றிக்கொண்டு போக்கிரிகளோடு அரட்டையடித்துக் கொண்டு  சௌக்கியமாக இருக்கிறானா? எல்லோரும் "ஷ்" "ஷி", "ஷா" என்று மாடர்னாக வாயில் பசை போல ஈஷிக்கொள்ளும் ஷகரத்தில் பெயர் வைத்து இப்போது "ஷ" என்றாலே அங்கே "உஷ்" என்கிறார்களாமே ஆட்சியாளர்கள். வருகைப் பதிவு எடுக்கும் போது மாணவச் செல்வங்களின் பெயர்களைக் கூப்பிட்டால் "ஷ்..ஷ்.." என்று பாம்பு சீறுவது போல ஓசை கேட்டது என்று ஊரார் ஒரு பள்ளிக்கு கம்பு எடுத்துக் கொண்டு அடிக்க ஓடினார்களாம். கேள்விப்பட்டேன். நேற்று தான் அங்கேயிருந்து ஒரு வாட்டசாட்டமான பயல் வேலைக்காக இங்கு வந்து இறங்கினான்.  தேறுவான் போல தெரிகிறது. நம் சுலக்ஷிக்கு பார்த்து முடித்துவிடலாம்.

இன்னொரு முக்கியமான சேதி. இங்கே பிளாஸ்டிக் பைகள் எடுத்து வந்தால் ஆயிரம் கசையடிகள் தருவார்களாம். ஆயிரம் ஆணி பதித்த இருப்பு பெல்ட்டால் ஆன கசை. நம்மூரில் இந்தப் பைகளின் ராட்சஷ உபயோகம் தானே இரண்டு வருடத்துக்கு முந்திய கடும் புயல்மழையில் உருவான வெள்ளத்தை பூமியில் தேங்க விடாமல் செய்தது. ரோடை துடைத்து மொழுகி விட்டது போல ஒரு பொட்டுத் தண்ணீர் தேங்காமல் அனைத்தும் கடலில் ஓடிப் போய் சங்கமமானது உனக்கு தெரியாததல்ல.

அப்புறம் வேறென்ன விஷயம். ஒரு கிரௌண்ட் விளை நிலம் கிடைக்குமா என்று புறநகர்ப் பகுதியில் பார்க்கச் சொன்னேனே! பார்த்தாயா? 'விவசாயி' என்ற பெருமைமிக்க சமூக அந்தஸ்து நமக்கு கிடைத்துவிட்டால் நாம் மிகவும் மகிழ்ச்சியாக காலம் தள்ளலாம். ஊரார் நம்மைப் போற்றுவர். தலை மேல் வைத்து கொண்டாடுவார்கள். பெரிய இடத்து சகவாசம் எல்லாம் கிடைக்கும். இப்படி நான் ஒரு இடம் நீ ஒரு இடம் என்று வாழ்க்கையில் திண்டாட வேண்டாம். கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி என்றாகி விடுவோம். ஷுஷனை அட்லீஸ்ட் ஒரு அக்ரிகல்ச்சுரல் டிப்ளமோ படிக்கச் சொல். நாற்று நடுவதில் இருந்து களை பறிப்பது கதிர் அறுப்பது வரை நடைமுறைப் பாடம் எடுக்கும் நல்ல இன்ஸ்டிடுயூட்டில் சேர்த்து விடு. குருவி போல சேர்த்த பணத்தை இதுபோல எதற்காவது உபயோகமாக செலவிடலாம். கம்ப்யூட்டர், மெக்கானிகல் என்று ஏதாவது ஒன்று தான் படிப்பேன் என்றால் அந்தத் தறுதலையை அப்படியே விரட்டி விட்டுவிடு. நான் ஒன்றும் அவனுக்கு சொல்வதற்கில்லை.

ஆறடி உயர ஆஜானுபாகு ஆளின் நடுவிரல் உயரமும் குழந்தையின் உள்ளங்கை அளவிற்கு அகலமாக இருக்கும் ஒரு ஆழாக்கு அரிசி எழுநூறு ரூபாய் இருபத்தைந்து பைசாவாம். இப்போது புழக்கத்தில் இருக்கும் பீட்ஸா சாப்பிட்டு செத்த நாக்குகளை அடக்கம் பண்ணிவிட்டு அந்தக் காலம் போல ஈயச் சொம்பு மைசூர் ரசம் வைத்து உள்ளங்கையில் வாங்கி "சர்..சர்.." என்று உறிஞ்சி குடிக்க வேண்டும் என்ற அவா எழுந்துள்ளது. இந்த பர்கர், பீட்சா, பாஸ்தா, ஹாட் டாக் போன்ற கொடிய அரக்கர்களை தேசத்தை விட்டு உடனடியாக வெளியேற்றவேண்டும். இட்லி என்றவொரு பதார்த்தம் அவ்வளவு அருமையாக இருக்குமாம். இங்கே இருவர் பேசிக்கொண்டார்கள். இப்போது நான் சேர்ந்த இந்த அலுவல கான்டீனில் நாளைக் காலை ஸ்பெஷல் மெனுவில் இட்லி இடம் பெற்றிருக்கிறது. நாளை இட்லி சாப்பிடப் போகிறோம் என்று நினைத்தாலே இப்போதே நெஞ்சில் சந்தோஷம் பற்றிக்கொள்கிறது. கூடவே சாம்பாரும் ஊற்றுவார்களாம். உன்னைத்தான் நினைத்துக்கொண்டேன். ஸாரி!

உம். அப்புறம். ஒன்று கேட்க மறந்துவிட்டேனே! 'சுடுகோட்' வாங்கி மாட்டிக் கொண்டீர்களா? வெப்பம் எழுபது டிகிரி வரை செல்கிறதாமே! "நூதன முறையில் கொலை!" என்று தினமணியில் பெட்டி செய்தி ஒன்று படித்தேன். மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறதே! தன்னை ஒரு பெண் காதலிக்கவில்லை என்று உயிரோடு  எரித்துவிட்டானாமே ஒரு மா பாவி. அதுவும் எப்படி. ஒரு பெரிய பித்தளை அண்டா அடிப்பாகம் விட்டமுள்ள பூதக்கண்ணாடியை நண்பகலில் மொட்டை மாடியில் இருந்து அந்தப் பெண் வீதியில் அழகுப் பரிசோதனைக் கூடத்திற்கு நடந்து செல்லும் போது சூடான சூரியக் கிரணங்களை ஒன்று திரட்டி குவித்து குழந்தைகள் விளையாட்டிற்கு பேப்பரை பொசுக்குவது போல அந்தப் பெண்ணை பொசுக்கி விட்டானாமே! ஐயகோ! என்ன கொடூரமான செயல். 

நம் நகரெங்கும் ரோடுக்கு மேலே சிலிகான் ரப்பர் கூரை போடும் மெகா ப்ராஜெக்ட் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதா? சென்றமுறை நான் அங்கு வந்திருந்த போது பந்தல் கால் நட ஒருவனுக்கும் கூரை வேய இன்னொருவனுக்கும் கூரைக்குள் சிறு சிறு ஏ.சி மாட்ட மூன்றாவமனுக்கும் என்று பிய்த்து பிரித்து பலருக்கு டெண்டர் கொடுத்திருந்தார்கள். அந்த வேலை உருப்படியாக முடிந்ததா? சைக்கிளுக்கு காற்றடித்து வைத்துக் கொள். திடீரென்று அவசரமாக உன் அப்பா அம்மாவை பார்க்க மயிலாப்பூரில் இருந்து மணப்பாக்கம் செல்ல உபயோகப்படும். ஐம்பது பைசா ரோடு வரி கட்டி சைக்கிள் உபயோகிக்கலாம். ரொம்ப ஈசி. அடுத்த வருடமாவது செல்போன் இணைப்புகளை ஏற்படுத்துவார்களா என்று தெரியவில்லை. ஈஸ்வரன் தான் காப்பாற்றவேண்டும். தன்னுடைய இரண்டு பங்களாக்களை விற்று ஒரு ப்ரஹஸ்பதி வீம்புக்கு ஒரு மாதம் "நான் பெட்ரோல் கார் ஒட்டுகிறேன் பார்" என்று பீத்திக்கொண்டு ஓட்டிவிட்டு திவாலாகி சாமான் செட்டோடு வீதிக்கு வந்துவிட்டதைப் பற்றி இங்கே வம்பு பேசி சிரிக்கிறார்கள். இந்த 2300ல் இப்படியும் சில மனிதர்களா!

ஏதோதோ எழுதிவிட்டேன். நிறைய கேள்வி கேட்டிருக்கிறேன். சாவகாசமாக பதில் போடு. குட்டி எழுத்துக்களில் எழுது. அப்போதுதான் பக்கம் குறைவாக கடிதம் குறைந்த எடையில் இருக்கும். காசு குறைச்சலாக ஆகும். நான் இங்கே செட்டில் ஆனவுடன் நிச்சயம் உங்களை என்னுடன் அழைத்துக் கொள்கிறேன். பச்சைப் பசேல் மரங்களும், ஏரிகளும், குளங்களும் என்று இந்த இடம் நிஜமாகவே சொர்க்கபுரியாக இருக்கிறது.

அன்பு முத்தங்களுடனும் ப்ரேமையுடனும்,

ஷிவன்.
கேம்ப் செவ்வாய் கிரகம்.

current place

P.S: இத்துடன் இணைத்துள்ள படத்தில் இருக்கும் அந்த வானுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றில் தான் நான் பணிபுரிகிறேன்.அந்த முன்னால் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட அந்தக் கூரை வீட்டில் தான் நான் குடியிருக்கிறேன். சமூக ஏற்றத்தாழ்வுகள் இங்கேயும் இருக்கிறது. எல்லா இடத்திலும் மனிதர்கள் தானே வாழ்கிறார்கள். Men are from Mars, Women are from Venus என்று முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. 


To

திருமதி ஷஷி ஷிவன்,
டோர் நம்பர். 12 , காலனி நம்பர் 78 , ஸ்ட்ரீட் நம்பர் 46 ,  ஏரியா நம்பர் 65 , ஊர் நம்பர் 18 (பழைய பெயர்: மயிலாப்பூர் ), எட்டாவது நகரம், ஏழாவது நாடு, பரதக் கண்டம், மூன்றாவது கிரகம்.


பட உதவி: http://fantasyartdesign.com/
-

Wednesday, July 6, 2011

பாட்டியின் பரிசு!

என்னுடைய இலக்கிய அறிவு அப்படி ஒன்றும் பிரமாதமாக சொல்லிக்கொள்ளும்படி கிடையாது. நட்சத்திரமாக எழுதச் சொல்லுகிறார்களே நமக்குத் தெரிந்த சில இலக்கியங்களைப் பற்றி லேசாக கண்ணடிக்கலாம் என்று ஒரு அல்ப அவா சொல்பமாக எனக்குள் முளைக்கிறது. கொஞ்சம் வளர்ந்து தொண்டையைக் கூட இப்போது முட்டுகிறது! சின்னஞ் சிறிய வயதில் நான் அறிந்ததெல்லாம் எங்கள் ஊர் பெரிய கோவில் திருவிழாவில் நடைபெறும் பட்டிமன்ற இலக்கியங்கள் தான். இப்போது முக்குக்கு முக்கு டிவிக்கு டிவி பண்டிகைக்கு பண்டிகை நடக்கும் "பொண்டாட்டியிடம் தர்ம அடிவாங்குவது கணவனே! அம்மாவிடம் மண்டகப்படி பெறுவது பிள்ளைகளே! மருமகளிடம் சாத்துப்படி வாங்குவது மாமியாரே!" என்று புரட்சிகரமான தலைப்பு அணிந்த; பக்கத்துக்கு ரெண்டு பேர் உட்கார்ந்து பங்கேற்கும் வெட்டி பட்டிமன்றங்கள் அல்ல. எல்லாமே கொட்டும் மழையிலும் கூட அக்மார்க் இலக்கியத் தமிழ் சொட்டும் விவாத அரங்கங்கள். வழக்குகளுக்கு "கணம் நீதிபதி" அவர்கள் தீர்ப்பு சொல்லும் வரை உட்கார்ந்து கைதட்டும் ஆர்வலர்கள் நிறைந்த தமிழ் பேசும் வழக்காடு மன்றங்கள்.

"செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதில் முதன்மையானவன் கர்ணனா! கும்பகர்ணனா!" போன்ற தலைப்புகளில் இதிகாச நாயகர்களை தெரிவு செய்து எட்டரை ஒன்பது மணிக்கு தொடங்கி விடிய விடிய ஸ்பீக்கர் அசர தமிழ் பேசுவார்கள். ஒல்லியான கே.பி.சுந்தராம்பாளாக நெற்றியில் விபூதிக் கீற்றோடு காந்திமதியம்மாவும், பேராசிரியர் செல்வகணபதியும் தான் சட்டென்று நினைவுக்கு வருகிறார்கள். பாதிப் பேச்சில் தொண்டை கரகரக்கத் தண்ணீர் கொஞ்சம் சாய்த்துக்கொண்டு மீண்டும் சொற்போர் தொடருவார்கள்.

"எங்களோடு வந்துவிடேன்" என்று கெஞ்சிக்கேட்டவன் கண்ண பரமாத்மா, "அர்ஜுனன் மேல் ஒரு முறைதான் நாகாஸ்திரம் தொடுக்கவேண்டும்" என்று இறைஞ்சியது தன் தாய் குந்தி, எதிர்க்கப்போவது தன் உடன்பிறந்த தம்பிகளை என்று தெரிந்தும் அறிந்தும் ஒருவன் "எடுக்கவோ.. கோர்க்கவோ" என்றவனுக்காக உயிர் நீத்தானே அது தான் செஞ்சோற்றுக் கடன் என்று அம்மாவும், தன் அண்ணன் செய்வது தவறு என்று தெரிந்தும், நியாய அநியாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் அணி தோற்கும், தாம் இறப்போம் என்று தெரிந்தும், அண்ணனுக்காக, ஆறாறு மாதங்கள் அவனிடத்தில் உண்டு உறங்கியதர்க்காக களம் புகுந்து வீரமரணம் அடைந்தவன் கும்பகர்ணன். ஆகையால் அவனே அத்தர்மத்தில் சிறந்தவன் என்றும் கட்சி பிரித்து "நீதிபதி அவர்களே!" என்று அடிக்கடி உரிமையாகவும், செல்லமாகவும், கிண்டலாகவும், அதிகாரமாகவும், ஆக்ரோஷமாகவும் விளித்து வாதாடுவார்கள்.

அரை டிராயரை இடுப்புக்கு மேலே இழுத்துப் போட்டுக் கொண்டு என் சின்னம்மாவின் கையோடு கைகோர்த்து ராஜகோபாலசுவாமி கலையரங்கில் காற்று கவரி வீச மணலில் உட்கார்ந்து கேட்ட அற்புதமான இலக்கிய இரவுகள் அவை. கலையரங்கத்திர்க்கு எதிரே ராஜகோபாலன் ஏகாந்தமாக 'குளுகுளு' காற்று வாங்கிக்கொண்டு புன்னகைத்துக் கொண்டே சேவை சாதிப்பார். அன்று வானில் பௌர்ணமி என்றால் மனமகிழ்ச்சிக்கு கேட்கவே வேண்டாம்! கூடுதல் சந்தோஷத்தில் உள்ள உவகை பொங்கி வழியும்.



ரெண்டாவது படிக்கும் என் இளைய வாண்டு ஒப்பிக்கும் "அறம் செய விரும்பு, ஆறுவது சினம்" எழுதிய 'ஆத்திச்சூடி' ஔவையார் நானனறிந்த நாடறிந்த இலக்கியத் தமிழுக்கு இலக்கணமான பாட்டி. குழந்தைகள் சிலபசுக்கு பாடல் எழுதிய முதல் குழந்தைக் கவிஞர் அவர். சிறார்களை நல்வழிப்படுத்தினால் நாட்டை சீர்திருத்த முடியும் என்று மனதில் நிறுத்தி அவர்கள் மேம்பாட்டுக்கு எழுதியவர். கலாமின் ஆதர்சமாகக் கூட இருக்கலாம். சங்ககாலத்தில் மொத்தம் மூன்று ஔவையார் இருந்தார்கள் என்று ஆள் கணக்கு ஒன்று சொல்கிறார்கள். ஒரே ஒளவையாருக்கு இறைவன் மூன்று அவதாரம் கொடுத்தாரோ என்னமோ.

பாரி, அதியமான் போன்ற மன்னர் பெருமக்களோடு கை குலுக்கி நண்பியாகவும், சபை நாற்காலியில் அமர்ந்து ஆலோசகர் போலவும் நெருங்கிப் பழகி தமிழ்த் தொண்டாற்றிய ஒரு ஔவையார் சங்ககால எள்ளுப்பாட்டி. அந்தக்காலத்தில் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு மவுசு என்று புரிகிறது. கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர் பெருமக்களோடு வார்த்தை ஜாலம் செய்து கவிச் சண்டை போட்டு விளையாடியவர் ஒரு கொள்ளுப்பாட்டி ஔவையார். கடைசியாக விநாயகர் அகவல், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் எழுதியவர் பாட்டி ஔவையார் என்று ஔவை பரம்பரையை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். நான்காவதாக நாம் அறிந்த ஔவையார் 'திருவிளையாடல்' மற்றும் 'ஔவையார்' படப் புகழ் "ஔவை" கே.பி. சுந்தராம்பாள். என்னது அவ்வை ஷன்முகியா? அது கமல் படம்ங்க. இன்னும் சில தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்தக் காலத்தில் தமிழில் தேர்ச்சியுடன் வெண்பா பாடிய அனைத்து பெண்பாற் புலவர்களுக்கும் ஔவை என்ற மரியாதை அடைமொழி இருந்ததோ என்றும் சந்தேகிக்கிறார்களாம்.

எது எப்படியோ. அவ்வையின் தமிழ் விசேஷ அழகு. சம காலத்தில் இயற்றப்பட்ட கம்பராமாயணம் போன்றவைகள் பல்லை உடைக்கும் தமிழில் இருந்தாலும் மிக எளிமையாக புரிந்துகொள்ளும் படி எழுதிய ஔவைக்கு ஒரு சல்யூட். அந்தக் காலத்தில் இது ஒரு "பின் நவீனத்துவ" எழுத்தோ?. ஒரு ஐந்து தலைப்புகளில் ஒளவையின் தனிப் பாடல்களை தொகுத்து இங்கே தருகிறேன்.

1. அழகு.
சிலருக்கு தமன்னா அழகு, சிலருக்கு நமீதா, சிலருக்கு இந்தக் கால சரோஜாதேவி, இன்னும் சிலருக்கு மல்லிகா ஷெராவத். ஷாரூக், ரஜினி, கமல், அஜித், விஜய் என்று பெண்பாலருக்கு ஹாண்ட்சம் ஆண்கள் பலர். ஆனால் சான்றோருக்கு அழகு எது என்று ஔவையார் சொல்வதை இந்தப் பாடலில் பாருங்களேன்.

சுரதந்தனில் இளைத்த தோகை; சுகிர்த 
விரதந் தனில் இளைத்த மேனி; - நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்அபிரா மம்.
கணவனுடன் கூடி சந்தோஷம் சுகித்துக் களைத்த மனையாளும், சொட்டுத் தண்ணி உள்ளே போகாமல் பரிசுத்தமான  விரதம் இருந்து இளைத்த பக்தர் மேனியும், "வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது" என்கிற ரீதியில் செல்வங்களை வாரி வாரிக் கொடுத்து இளைத்தவர்களும் (இவர்கள் தான் அக்காலத்தில் தாதா, இக்காலத்தில் அடி கொடுப்பவர்கள் தான் ஏரியா தாதா), உக்கிரமான போரில் அடிபட்டதனால் ஏற்பட்ட விழுப்புண் வடுவும், அதில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடப்படும் நடுகல்லும் சான்றோருக்கு அழகு.



2.பிறவிக் குணம்.
அவ்வப்போது கமறிக்கொண்டு கனைப்பது, கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, அசிங்கமான பெண்களை பார்த்தாலும் பழக்க தோஷத்தில் ஒற்றைக் கண் அடிப்பது, சதா காலாட்டிக்கொண்டே இருப்பது, எதையெடுத்தாலும் "ஹும்.ஹும்" என்று மோந்து பார்ப்பது, இருட்டிய பிறகு வேஷ்டியை தூக்கிக்கொண்டு தெரு முக்கில் அற்ப சங்கைக்கு ஒதுங்குவது என்று பல விஷயங்கள் "அது அவரோட பளக்கம்" என்றும் "அவரோடைய கூடப் பொறந்த குணம்" என்றும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றது. எதெது நடைமுறை பழக்கத்தில் வருகிறது, எதெது பிறவியிலிருந்தே குணமாக இருக்கிறது என்பதை பற்றிய ஒரு அற்புதமான பாடல் கீழே.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

மெருகேறிய ஆளை அசத்தும் உயிர்ப்பான ஓவியங்கள் கைப் பழக்கத்தாலும், பேசப் பேச, பாடப் பாட அனைவரையும் கவர்ந்து இழுக்கும் செந்தமிழ் நாப் பழக்கம், கவனமுடன் கூர்ந்து படிக்கும் கல்வி எப்போதும் மனப் பழக்கம் என்றும் சாதாரணமாக நடப்பது கூட நடைப் பழக்கம் என்றும் சொன்ன ஔவை பிறரிடம் நட்பு பாராட்டுதல், ஐயோ பாவம் என்று இரக்கம் காட்டுதல் மற்றும் இல்லையென்று சொல்லாத வள்ளல் தன்மை இம்மூன்றும் பிறவிக் குணம் என்று போற்றுகிறார்.

நட்பு, தயை, கொடை இம்மூன்றுக்கும் மஹாபாரதத்தில் வரும் கர்ணன் பொருத்தமாக இருக்கிறான் அல்லவா?

3.பெரியார் சிறியர் கயவர்:
அறுத்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்க மாட்டான் என்று சிலரை எங்கள் பக்கத்தில் சொல்வார்கள். நகர வாழ்வு கூட அப்படிப்பட்டதுதான். காக்கா வலிப்பு வந்து ரோட்டில் விலுவிலுக்கென்று இழுத்துக்கொண்டு கிடந்தாலும் மணிக்கட்டை திருப்பி மணியை பார்த்து விட்டு "அச்சச்சோ. லேட் ஆயிடிச்சு" என்று ஆபீசுக்கு ஓடிவிடுவார்கள். சில பரோபகாரிகள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று உதவி செய்து விட்டு தான் இடத்தை விட்டு நகர்வார்கள். "ஏம்பா. இதைக் கொஞ்சம் எனக்காக செய்யக்கூடாதா?" என்று கேட்டால் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் பாங்குடையவர்கள். வலிய வந்து தானாகவும் செய்யாமல் தாவாங்கட்டையைப் பிடித்து கெஞ்சி கேட்டாலும் செவி சாய்க்காமல் அவர்கள் போக்கில் திரிபவர்கள் சிலர். இந்த மூவரைப் பற்றி ஒளவையின் பாடலும் விளக்கமும் கீழே.

சொல்லாம லேபெரியார் சொல்லிச் செய்வர்சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல 
குலாமாலை வேற்கண்ணாய் கூருவமை நாடில் 
பலாமாவைப் பாதிரியைப் பார்.
நல்ல குலத்தில் தோன்றிய வேல் போன்ற விழியாளே, நம்மை ஒரு ஆபத்தில் பார்த்தவுடன் தாமாகவே முன்வந்து உதவிக்கரம் நீட்டுபவர்கள் உன்னதமான பெரியோர்கள். நாம் சென்று "உதவி" என்று கேட்டவுடன் ஓடோடி வந்து உதவுபவர்கள் நற்பண்பு சிறிதேனும் உள்ள சிறியோர்கள், உதவி கேட்டும் செய்யாமல் இருப்பவர்கள் கயவர்கள். இம்மூவரையும் அடையாளம் காண உனக்கு உவமை வேண்டுமா? பெரியோர்கள் பலாமரம் போன்றவர்கள். பூக்காவிட்டாலும் காய்த்துவிடுவர். சிறியவர்கள் பூத்து பின்னர் காய்க்கும் மாமரம் போன்றவர்கள். பூத்தாலும் காய்க்காத பாதிரியைப் போன்றவர்கள் உதவி கேட்டாலும் உதவாத கல்நெஞ்சக் கயவர்கள்.

4. யாரோடு எது போம் 
பக்கத்து பிளாட்டில் குடிவந்து, இரண்டு வருடத்தில் காலி செய்த காதலியான நண்பியை இழந்தவுடன் தாடியுடன் சோகராகம் பாடுபவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஆபீஸ் நட்புகளை இழந்து வேறோர் இடம் செல்லும் போது "வலிக்குது" என்று துன்புறுவர். இன்னும் சிலர் "மச்சான்! வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா" என்று அல்ப விஷயத்திற்கெல்லாம் அலுத்துக் கொள்வார்கள். யாரோடு எது போகிறது என்ற ஒளவையின் எளிதான பாடல் கீழே.
தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம் 
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு
உற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம் 
பொற்றாலி யோடெவையும் போம்.
பெற்ற தாயோடு அறுசுவையான உணவு போய்விடும்; தந்தை இறந்துவிட்டால் கல்வி கற்பதற்கான பொருளாதாரம் இழந்து அதுவும் போம்; தான் பெற்ற மக்கள்  இறந்தபின் செல்வம் அனைத்தும் சென்றுவிடும்; உறவினர்களுடன் மாய வாழ்வு நலம் மரிக்கும்; குடும்பத்தை சுமக்கும் தோள் வலிமை உடன்பிறப்புடன் சென்று விடும், பொன் தாலி அணிந்த மனைவி மறைந்துவிட்டால் எல்லாமே போம். என்கிறார் ஔவை.

5. பேஷ் பேஷ்
புகழுரைக்கு மயங்காதவர் எவரும் இலர். "சூப்பர்டா" என்று ஒரு வார்த்தை சொல்லி பல ஆயிரத்திற்கு ட்ரீட் வாங்கிக் கொண்டவர்கள் ஏராளம். "நீங்க நல்லா பண்றீங்க... அடி வெளுத்துட்டீங்க.. இதுல நீங்க தான் ராஜா உங்களை அடிச்சுக்க ஆளே இல்ல.." என்று வகைவகையாய் பாராட்டுரைகள் இவ்வையகத்தில் உண்டு. இருந்தாலும் யார் யாரை எங்கே புகழவேண்டும் என்று ஔவை கொடுக்கும் இந்த லிஸ்ட் நிச்சயம் கவனிக்கப் படவேண்டிய ஒன்று.

நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல் 
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச 
மனையாளைப்  பஞ்சணையில் மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலைமுடி வில்.
நண்பர்களை அவர்கள் முகத்துக்கு நேரே புகழக் கூடாதாம். அவர்கள் இல்லாதபோது புகழவேண்டும். நாம் படித்த குருவின் புகழ் எப்போதும் பாட வேண்டும். மனைவியை பஞ்சணையில் புகழ வேண்டும். நம் குலக்கொழுந்துகளை நெஞ்சுக்குள்ளேயும், நம்மிடம் வேலைப் பார்க்கும் வேலையாட்களை அவர்களது பணி முடிந்தவுடனும் வாயாரப் புகழ வேண்டும் என்கிறார் ஔவை. இந்த பட்டியல் அனைத்துமே இன்றும் அப்பட்டமான உண்மையல்லவோ.

காலம் கடந்து நிற்கும் ஒளவையின் பாடல்கள் இலக்கியம் தானே!

பின் குறிப்பு: இது என்னுடைய முதல் இலக்கிய ஜல்லி. பிடித்திருந்தால் பாராட்டுங்களேன், தொடர்ந்து அடிப்போம் இ.ஜல்லியை. இல்லையேல் "பேஷ் பேஷ்"ஷில் நண்பர்களுக்கு ஔவை சொன்னது போலவாவது செய்யுங்கள். நன்றி.

பட உதவி: http://www.manithan.co


இந்த ஜல்லியடிப்பதற்கு உந்துகோலாகவும் ஒளவைப் பாட்டியின் ஊன்றுகோலாகவும் இருந்த நூல், ஔவையார் தனிப்பாடல்கள். தெளிவுரை புலியூர்க்கேசிகன். பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்.

-


Monday, July 4, 2011

பதிவிலக்கியம்

blogpayanam


இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் உழைத்துக் களைத்து அலுவலகத்தில் இருந்து வாரி சுருட்டிக்கொண்டு கிளம்பினால் வீடு போய்ச் சேர பத்து பத்தரை ஆகிவிடும். லாரி சூழ் திருமங்கலத்தில் பதினாறு கால் லாரிகளின் பேரேட் வெள்ளத்தில் நீந்தி, ஈருடல் ஓருடலாக வண்டி ஓட்டிக் கதறடிக்கும் சென்னை நகரின் 'மிட்டா மிராசு' மாநரக பேருந்துகளைச் சமாளித்து, "வாடா..வா... நீயா நானா பார்க்கலாம் ஒரு வீல்" என்று அவர்கள் வண்டிச் சக்கரம் நம் வாகனச் சக்கரத்தில் உரசித் தேய்க்க வரும் அன்பின் ஆட்டோ அன்பர்களுக்கு இடிக்காமல் டிமிக்கி கொடுத்துவிட்டு இல்லாளுடன் இல்லத்தை அடையும் போது கீழ்வானம் விடிந்து விடுகிறது. சில வீடுகளில் வாசல் பெருக்கி கோலம் போட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

எழுதும் கனல் உள்ளத்தில் ஜிகுஜிகுவென்று ஜ்வாலையாய் தகிக்க தலை தூக்காமல்; டீ.வியில் அகாலத்தில் வரும் சீரியல்கள் எதுவும் பார்க்காமல்; அரக்கபரக்க அள்ளிப்போட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு தணியாத எழுத்தார்வத்தில் கணினி முன்னால் தஞ்சமடைந்தால் பின்னாடியே விரட்டிக்கொண்டு வந்த வீட்டம்மாவின் "இனிமே.. எழுதப் போறீங்களா?" என்ற ஆச்சர்யம்+மிரட்டல் கலந்த அக்கறையான வினாவிற்கு "இல்ல..இல்ல... ஒரு பத்து நிமிஷம்" என்று கல்யாணமான ஆடவர்க்கே உரித்தான ட்ரேட்மார்க் "ஹி ஹி"யுடன் கெஞ்சித் தமிழ்த் தொண்டாற்ற உட்காரும் போது சுஜாதா, தி.ஜா, லா.ச.ரா, கி.ரா, பாரா போன்ற ஆளுமைகள் அலமாரியில் இருக்கும் புத்தகங்களிலிருந்து தலையை எக்கி ஒரு ஏக்க லுக் விடுவார்கள். ச.ச்சே. இப்படி ஒரே வரியில ஒரு பாரா எழுதுறது அழகா?

சமாதானப்படுத்த யாராவது ஒருவரைத் தூக்கி மடியில் உட்கார்த்திவைத்துக் கொண்டு அரை மணி அமைதியாக தாலாட்டிப் புரட்டினால் அடுத்த நாள் விடிவதற்கு இன்னும் 45 மணித்துளிகளே பாக்கி இருக்கும். என்னைப் போன்ற ஆனா, ஆவன்னா தெரிந்த அரிச்சுவடி அறிஞர்கள் கூட சகட்டுமேனிக்கு தனது கருத்துக்களை அள்ளித் தெளிக்க, பொளந்து கட்ட; ஏதுவாக கூகிள் கம்பெனியாரின் தரமான தயாரிப்பான ப்ளாக் என்ற சாதனத்திற்குள் நுழைந்து அரைமணி மூச்சுவிடாமல் தட்டு தட்டென்று தட்டி எடுத்தால் ஒரு பதிவிலக்கியம் சுடச்சுட ரெடி. எழுதி முடித்ததும் நாடி சமநிலைக்கு வந்து மனசுக்குள் ஒரு நிம்மதி பிறக்கும். ஸ்வாசம் அமைதி பெறும். ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் படங்களுக்கு உலாவியில் உலகமெங்கும் துழாவி (இதுதான் கௌரவமான மின்சாரப் பிச்சை) பதிவுக்கு சற்றேரக்குறைய பொருந்தும் படம் ஒன்று கிடைத்துவிட்டால் அந்த அர்த்தராத்திரியில் உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்த ஆனந்தம். மனதில் உற்சாக பூரிப்பு.


முகப்புத்தகத்தில் மனுஷ்யபுத்திரன் "எழுத்தாளன் ஒரு விளையாட்டு வீரனைப் போல ஆரோக்கியம் பேண வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இணையத்தில் நடக்கும் சில கொடுஞ் சமர்களைப் பார்த்தால் எதற்கு என்று புரியும். "சங்கு அறுப்பது எங்கள் குலம்" என்று ஏ.பி நாகராஜனின் திருவிளையாடல் வசனத்திற்கேற்ப வார்த்தைப் போர் புரிகிறார்கள்.

சென்னை நகர சாலைகளின் வழியே ஒரு அரை மணி இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனம் உருட்டி தேர்ப்பவனி வருவதன் மூலம் ஜிம்மில் ஒரு மணி வியர்க்க விருவிருக்க உடற்பயிற்சி செய்ததன் பலனைப் பெறலாம். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் (பண்டிகைக்காலங்களில் வடபழனி மற்றும் கோயம்பேடு சிக்னல்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூடுதலாய் சேர்க்க) வீதிகளில் கார்க் குடும்பம் நடத்தும் என்போன்ற ஜீவன்களுக்கு வியாஸ பகவான் சொல்லச் சொல்ல கொம்பொடித்து எழுதிய விக்னராஜன் வேண்டாம் அட்லீஸ்ட் ஸ்பீச்-டு-டெக்ஸ்ட் (தமிழில்) மென்பொருள் இரவலாகக் கிடைத்தால் நான் பாக்கியவான். பதிவெழுதப் போதுமானது.

நான் எழுதுவதற்கு எனக்கு எந்த எழுத்தாளப் பின்புலமும் இருப்பதாக தெரியவில்லை. இதற்கு முன்ஜென்ம தொடர்பு எதுவும் உண்டா என்பதற்கு ஆவி அமுதா அல்லது விக்கிரவாண்டி ரவிசந்திரன் உதவுவார்களா என்று கேட்டுப் பார்க்கலாம். எனக்கு நினைவு தெரிந்து நிறைய கிறுக்கியிருக்கிறேன். புதுப் பெயின்ட் வாசம் மாறாத பளீர் சுவற்றில், புது ஃபவுண்டன் பேனா வாங்கி பிட்டுப் பேப்பரில், புது விடைத்தாள் வாங்கி பரீட்சை பேப்பரில். நேர்கோடும், வளையங்களுமாய் நெளிநெளியாய்த் தெரியுமே ஒழிய கண்ணில் ஒற்றிக்கொள்ளும் லக்ஷ்ணமான எழுத்தாக என்றுமே எழுதியதில்லை. ரிசர்வ் பேங்க் கவர்னர் போல ஐந்து ரூபாய்த் தாளில் கிறுக்கி அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவமும் உண்டு. நான் எழுதும் தேர்வு எண் சுமாராக திருத்துபவர்களுக்கு புரிந்ததால் எக்ஸாமில் பாஸ் செய்தேன் என்று என் மாதாவின் மாதா தனது ஸ்நேகிதாளிடம் சிலாகித்ததுண்டு. இன்றும் பேனா பிடித்து பேப்பரில் எழுதவேண்டும் என்றால் நிச்சயம் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுத்திருக்க மாட்டேன்.

சரி, எதற்காக எழுதுகிறேன். இந்தக் கேள்வி விடாமால் சுற்றிச் சுற்றி என் நெஞ்சை அரிக்கிறதா என்று கேட்கிறீர்களா? இல்லையில்லை. சமூக அக்கறையுள்ள சுற்றமும் நட்பும் பொதுநலன் கருதி நைநையென சதா என்னிடம் குடையும் கேள்வி இது. குட்டியில கழுதை கூட அழகா இருக்கும் என்று அடிக்கடி என்னைப் பார்த்து என் பாட்டி இளமையில் கூறிய கூற்றுக்கு ஏற்ப முதலில் நான் கிறுக்கிய கன்னி எழுத்திற்கு "ஓ.. பிரமாதமாயிருக்கே" என்று பின் விளைவுகள் தெரியாமல் சுற்றியிருந்த நண்பர்கள் விளையாட்டாகச் சொல்லித் தொலைத்துவிட்ட புகழுரையில் என்னை மறந்து எழுதுகிறேன்.

எழுதுவதன் மூலம் 'ஏ'க்கு அப்புறம் 'பி', 'பி'க்கு அப்புறம் 'சி' என்று சீராக வரிசைப்படுத்துதல் இலகுவாகிறது. அடுத்தவரை பிடிங்கித் திங்கும் பேச்சு குறைந்திருக்கிறதா என்று என்னை சுற்றியிருக்கும் பெருமக்களுக்குத் தான் தெரியும். ஏற்கனவே சோம்பேறியாய் கட்டிக்கிடந்த கற்பனைக் குதிரை இன்னும் அசுரத்தனமாய் நான்கடி வளர்ந்து அடங்காமல் துள்ளிக்குதித்து தறிகெட்டு ஓடுகிறது. பிழையின்றி நன்றாகத் தமிழ் எழுதும்/பேசும் நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இவ்வளவு வருடங்களுக்கு பிறகு தாய்மொழித் தமிழின் அபார வீச்சு புரிகிறது.

அசைந்தாடிவரும் எருமைமாட்டிற்கு ஒதுங்கி இடது பக்கம் டாஸ்மாக் பாரில் முட்ட முட்டக் குடித்துவிட்டு களைத்து திரும்பும் உற்சாகபானப் பிரியனைப் இடிக்காமல் அவனுடைய ஸ்ட்ரிப் டீஸ் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கும் போதோ, கோயம்பேடு பேருந்துநிலையம் தாண்டி மூத்திரச் சித்திரச் சுவர் அருகே அரையிருட்டில் 'கஸ்டமருடன்' ஒதுங்கி பேரம் பேசும் சோரம் போனவளைப் பார்க்கும்போதோ, ஆட்டோரிக்ஷாவில் டிரைவர் சீட்டில் தொங்கிக்கொண்டு அப்பாவின் டாக்டர் கனவைச் சுமந்துகொண்டு வாரயிறுதி விடுமுறையின் கனவைக் கண்களில் ஏந்திக்கொண்டு கூட்டமாக பள்ளி செல்லும் டிராயர் சிறார்களைக் கண்ணுரும்போதோ, பதின்மவயதின் எல்லையில் இருக்கும் பெண்பிள்ளைகள் பருவ எல்லைத் தாண்டி உல்லாச இளைஞனுடன் 'பில்லியன் பல்லி'யாக பறக்கும்போதோ, உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன பொண்டாட்டி ஹெல்மெட்டுக்குள் அடைபட்டிருக்கும் காதுக்கு கேட்கும்படி பின்னால் இருந்து சமாதானமாக ஓதியும் சத்தமாக ஏசியும் ஏற்ற இறக்கங்களுடன் கணவனுடன் குடும்பப் போர் நிகழ்த்தும் போதும் நிறையக் கதைகள் எழுதக் களன் கிடைக்கும். "பாம்..." என்று முதுகில் ஹாரன் அடித்து கனவைக் கலைத்து வண்டியை விரட்டுவார்கள். வீட்டிற்கு வருமுன் கரு அல்பாயுசில் கலைந்துவிடும்.

கடந்த சில பாராக்களில் பார்த்தது உழைக்கும் தின எழுத்தார்வக் காட்சிகள்.

வார இறுதியிலோ அல்லது விடுமுறை தினங்களில் இரண்டு பதிவெழுதலாம் என்று ஆர்வ மிகுதியில் உட்கார்ந்தால் பாசம் இருகையையும் இருக்கக் கட்டிப் போட்டுவிடுகிறது. "அப்பா! பீச்சுக்கு போலாம்ப்பா..." என்று ஒரு வாரம் படித்துக் களைத்த குழந்தைகள் கேட்கும் போது கிளம்பவில்லை என்றால் "நீ எல்லாம் ஒரு அப்பனா?" என்று அவர்கள் ஏசக் கூடும் என்றஞ்சி ஜீன்ஸ் மாட்டிக் கொண்டு ஓடவேண்டியிருக்கிறது. சக எழுத்தாள சம்சாரிகளும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டிருக்கக் கூடும். எண்ணத்தின் ஊற்றுக்கண் பிளந்து விஷயங்கள் மண்டையிலிருந்து வார்த்தை வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் போது "சுண்டல் வேணுமா சார்?" என்பார் தே.மா.பட்டாணி சுண்டலார். மென்டலாகிப் போனேன் நான்!

பீச்சாங்கரையில் குல்ஃபி ஐஸ் வாங்கிக் கொடுத்து அரை மணி செலவிட்டு "வீட்டுக்கு திரும்ப நாம் அவசரப்படுகிறோம்/ எழுதுவதற்கு கை அரிக்கிறது" போன்ற முகாந்திரங்கள் தெரியாமல் நாசூக்காக அவர்களை தாஜா செய்து வீடு திரும்பும் போது இரவு மணி ஒன்பது. "நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும் சீக்கிரம் சாப்ட்டு படு" என்று செல்வங்களை படுக்கையறைக்கு விரட்டி, "அப்பாடா.."ன்னு கணினி முன்னால் உட்கார்ந்தால் "நாளைக்கு ஆபீஸ் உண்டு. மீட்டிங் இருக்கு. நா சீக்கிரம் போகணும். சீக்கிரம் வந்து படுக்கற வழியைப் பாருங்க" என்று கண்களையுருட்டி எஜமானியம்மாவின் ஆர்டர் பறந்து வரும்.

இப்போது மணி ராத்திரி பதினொன்னரை. இன்னொருமுறை தூங்குவதற்கு அழைப்பு வருவதற்குள் படுக்கையில் போய் சாய்ந்துவிடுகிறேன். நாளைக்கு ஆபிஸ் உண்டு!

பின் குறிப்பு: இது தமிழ்மணத்திற்காக என் புகழ் மணம் பரப்ப எழுதப்பட்ட அனுபவக் கட்டுரை. பதிவெழுதும் சம்சார பதிவர்களின் தினசரி நாட்குறிப்பாகக் கூட இதை பாவிக்கலாம். தவறில்லை.


பட உதவி: http://www.flickr.com/photos/tomthrop/

படக் கருத்து: படிப்படியாக எழுத்தாளனாக முன்னேறவேண்டும் என்ற நோக்கில் போடப்பட்ட படம் இது.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails