
இந்த மாதிரி ஆடல் கலையில் வல்லவர்... முதலிடம் பிடிப்பவர்... நம்ம முருங்கைக்காய் இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள். நிறைய பாடல்களில் அவருடைய உடற்பயிற்சி திறமையை காண்பித்தபோதும் இந்த கீழ்கண்ட பாடலில் அவரது அபார திறமை நமக்கு நன்கு விளங்கும். இவ்வளவு தேகப்பயிற்சி மேற்கொண்டும் உடம்பு ஒன்றும் தேறவில்லை. இதில் அதிக விசேஷம் என்னவென்றால் அவருடைய அந்த கூலிங் க்ளாஸ். பாடல் ஆரம்பத்தில் உடற்ப்பயிற்ச்சிக்கு ஆயத்தமாக நிற்கும் டான்ஸ் பாக்கியராஜை பார்க்கும் போதே நமக்கு சிரிப்பு வந்துவிடும். பார்க்க பார்க்க மனதை கொள்ளை கொண்டு போகும் ஹோலி ஹோலி.. ஹோலி... ஒரே ஆறுதல் எஸ்.பி.பி பாடியது.
அடுத்ததா நாம பார்க்கப்போறது புலியூர் சரோஜாக்காவின் நடன இயக்கத்தில் பிரபு அம்பிகா கையை சொடுக்கி சொடுக்கி ஆடும் ஓ. மானே மானே.. மானே.. உன்னைத்தானே.. இந்தப் பாடல் எடுத்து முடித்தவுடன் அம்பிகாவும், பிரபுவும் விரல்களுக்கு பாண்டேஜ் போட்டுக்கொண்டதாக ஒரு உபரி தகவல். எவ்வளவு முறை பார்த்தாலும் கை சொடுக்கி அவர்கள் இருவரும் கூப்பிடும் அந்த விரலைத் தவிர்த்து மனசு எங்கேயும் செல்லாமல் அடம்பிடிக்கிறது. பாடல் பூராவும் அதிரடி உடற்பயிற்ச்சிகள் உத்தரவாதமாக இருக்கும்.
மேலே பார்த்த இரண்டு ரகளைக்கு பின்னர் போட்டி பாட்டு. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்.. இல்லைனா ஆம்பளிக்கும் ஆம்பிளைக்கும்.. இதை விட காமடி சீன் படத்தில யாராலும் வைக்கவே முடியாது. ஆம்பளைக்கும் போம்பளைக்கும்ன்னா ஆம்பளை சட்டைய கழட்டி போட்டுட்டா பொம்பளை கழட்ட முடியாது உடனே அவங்க தோத்துட்டாங்கன்னு அர்த்தம். ஆம்பளைக்கும் ஆம்பளைக்கும்ன்னா ஒருத்தர் வழுக்கி கீழ விழுந்துட்டா இல்லைனா கால் சுளுக்கிபோற அளவுக்கு நெளிக்க முடியலைனா இன்னொருத்தர் ஜெயித்ததா அர்த்தம். ரெண்டுக்கும் ரெண்டு சாம்பிள் கீழே.. முதல்ல ரஜினியும் பூர்ணிமா பாக்கியராஜும். நம்ம ட்ரில் மாஸ்டரோட திருமதி... டார்ஜான் கணக்கா நம்ம சூப்பர் ஸ்டார் கயித்துல தொங்கி வந்து குதிச்சு ஆடுற பாட்டு..
அடுத்ததா... கல்லூரி வாசல் படத்தில் பிரசாந்த் குடுமி வச்சுகிட்டு காலேஜுல போட்டி டான்ஸ் ஆடுறது. இந்தப் பாட்டை பிரசாந்த் ஆடி முடிக்கும் போது பூஜா பட் ஒரு பார்வை பார்ப்பாங்க பாருங்க.. அதுக்கே அவ்வளவு டான்சும் போச்சு... இந்த படத்துல ஹிட் ஆன பாட்டு என் மனதை கொள்ளை அடித்தவளே... நல்லா இருக்கும்...
அடுத்ததா நம்ம கேப்டன்... வாயை சுழிச்சி... "ஹா.ம்ம்..." சொல்லி சண்டையையும், ஆட்டத்தையும் ஒன்றாக பாவிப்பவர். அண்ணனுக்கு சொல்லிக் கொடுத்த நடன இயக்குனர்களுக்கு ஒரு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம். ஷோபனா ஒரு உலக மகா நாட்டிய மங்கை... அவரோடு பொன்மனச் செல்வனில் ஆடும் கேப்டன் இந்தியக் கொடி பிடித்து ஒரு கையை நேராக வைத்து நடந்து செல்லும் இராணுவ சிப்பாய் போல செய்யும் நடன அசைவுகள் திரை நாட்டிய உலகில் ஒரு உச்சம். ஆனால்... பாட்டு சூப்பர். ராஜாவின் இசை.
இன்னும் வேற யாரு... நம்ம தகடு தகடு சத்யராஜ்... நக்மா கூட வில்லாதி வில்லனில் வித்யாசாகரின் அதிவேக டியூனுக்கு ஒரு ஃபாஸ்ட் ட்ரில். ஆடும் போது மூஞ்சியை சீரியசாக வைத்துக்கொள்ளும் சத்யராஜ் ஒருக்கால் டான்ஸ் மாஸ்டரை மனதில் திட்டிக்கொண்டு டான்ஸ் ஆடுகிறார் போலும். விதி யாரை விட்டது. அதையும் பார்ப்போம்.
கடைசியாக.. இருதய பலகீனம் உடையவர்கள் இதைப் பார்க்காமல் தவிர்ப்பர்களாக.. தங்கச்சிக்காக நம்ம டி.ஆர் ஆ..ஆ...ஆ..டிய பாட்டு. அப்பப்பா.. ஒரு ஐந்து நிமிடம் முழு காமடி விரும்புவோர் பார்க்கவேண்டிய பாடல்... தயவு செய்து யாரும் இதுபோல் கழுத்தை ஆட்டி ஆட வேண்டாம் என்று ஒரு டிஸ்கி போட்டிருக்கலாம் படத்தில். இந்த படம் வந்த புதிதில் ஐந்தாறு பேருக்கு இதுபோல் கழுத்தை ஆட்டி மூளைக்கு செல்லும் நரம்பு பிசகி, லூஸ் ஆகிவிட்டதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தஞ்சாவூரு மேளம்... தாலிகட்டும் நேரம்... கீழே கண்ட டியோவில் வரும் டைட்டிலை கவனிக்கவும். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்...
எப்படி இந்த டான்சு உடான்சு.... கலக்கலா?
பட UDHAVI: mundanestuff.wordpress.com