Showing posts with label திருவான்மியூர். Show all posts
Showing posts with label திருவான்மியூர். Show all posts

Monday, May 13, 2013

உலகம்மை உமையம்மை

அன்னையர் தினத்தில் உலகனைத்துக்கும் அம்மையான உமையம்மையைத் தரிசிக்க திருவான்மியூர் சென்றிருந்தேன். காரை நிறுத்துவதற்குள் “சார் 20 ரூபா கொடுங்க..” என்று எங்கிருந்தோ மாயமாகப் பறந்து வந்தவன் பச்சையில் பார்க்கிங் சீட்டை முகத்துக்கு நீட்டினான். உள்ளே நுழைந்தவுடன் பிள்ளையாருக்குக் குட்டிக்கொண்டு மருந்தீஸ்வரரைக் காண நுழைந்தோம். தாத்தாவும் பாட்டியுமாக பக்தர் கூட்டம் பிரகாரத்தில் லோகக்ஷேமங்களை பேசிக்கொண்டிருந்தது.

இரும்பு கேட்டு காவலுக்குள் தியாகராஜா ஏகாந்தமாக இருந்தார். பார்த்துக்கொண்டே சொற்ப பக்தர்கள் கைக் கூப்பி நிற்கும் மருந்தீஸ்வரர் சன்னிதி அடைந்தோம். திருவாசியைச் சுற்றிலும் அகல் ஏற்றி அரைவட்டமாய் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. புஷ்பங்களாலும் வில்வத்தினாலும் மாலைகள் அணிந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தார். 'க்'கில்லாமல் எழுதியிருந்த கோஷ்ட துர்காவைத் தரிசித்தோம். எண்ணையால் தங்களது இஷ்டங்களை எழுதி அம்மனுக்குத் தூது விட்டிருந்தார்கள்.

சண்டிகேஸ்வரர் எந்த சிவன் கோவிலிலும் வீற்றிருக்கும்படி விளக்கில்லாமல் இருட்டில் சிவயோகத்தில் இருந்தார். ஆனால் அவருக்கு விசேஷமாக வெள்ளியில் சட்டை மாட்டிவிட்டிருந்தார்கள். அவரைத் தொந்தரவு செய்யாமல் மனதில் வேண்டிக்கொண்டு வலம் வந்து தெற்கத்திக் கடவுளை “குருவே ஸர்வ லோகாணாம் பிஷஜே பவரோகிணாம்...” ஜெபித்து தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து வெளிப்பிரகாரத்திற்கு வந்தோம்.

பசுமடத்தில் ஆரோக்கியமான பசுக்களுக்கு அகத்திக்கீரைக் கட்டு கொடுத்துக்கொண்டிருந்த மூதாட்டியைப் பார்த்ததும் ”கடைத்தெருலேர்ந்து வரும் போது ஆத்திக்கீரைக் கட்டு ஒண்ணு வாங்கிண்டு வாடா.. வாசல்ல வர்ற லெக்ஷ்மிக்கு கொடுக்கணும்”ன்னு கேட்ட பாட்டியின் குரல் காதுகளில் ஒலித்தது.

வால்மீகி மற்றும் அகத்தியருக்கு ஈஸ்வரன் காட்சிகொடுத்த வன்னிமரத்தை வலம் வந்தோம். அகத்தியருக்கு தரிசனம் கொடுத்து மூலிகை மற்றும் வைத்தியங்களை மருந்தீஸ்வரர் கற்றுக்கொடுத்த இடமாம். வன்னி மரத்துக்கு திருநீற்றுப்பட்டை இட்டு பக்தியில் திளைக்க விட்டிருந்தார்கள்.

திரிபுரசுந்தரி சன்னிதிக்கு வெளியே சரபேஸ்வரர் தூணைச் சுற்றி ஏகக் கூட்டம். பக்தர் ஒருவர் கல்கண்டு பிரசாதம் பிடிபிடியாக அள்ளி அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தார். உள்ளே மடிசார்க் கட்டோடு திரிபுரசுந்தரி அனைவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருந்தாள். குங்குமம் கொடுத்து ”நகருங்க... நகருங்க” என்று வாயால் நகர்த்தினார் குருக்கள். அம்மன் சன்னிதி திருச்சுற்று வருகையில் கடப்பா கல்லில் எழுதியிருந்த அபிராமி அந்தாதியைச் சிரத்தையோடு சட்டைப் பாவாடையணிந்த பெண் படித்துக்கொண்டிருந்தது.

அம்மன் சன்னிதி வெளியே இன்னமும் கல்கண்டு பிரசாத விநியோகம் நடந்துகொண்டிருந்தது. கோபுரவாசல் தாண்டி வெளியே வரும் போது வழியில் இருந்த டாக்டர் க்ளினிக் வாசலில் கோபுரத்தைப் பார்த்துக் கண்ணத்தில் போட்டுக்கொண்டே நுழைந்த வெள்ளைச் சட்டைப் பெரியவருக்கு மருந்தீஸ்வரர் அருள்புரிவாக!!

(இதைத் தட்டச்சு செய்யும்போது சுதாவின் “எப்போ வருவாரோ.. எந்தன் கலி தீர..”யை ஜோன்பூரியிலும், ஆபேரியில் “பித்தன் என்றாலும் பேயன் என்றாலும் சித்தமெல்லாம் அவன் பால் செல்லுதம்மா”வும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அண்டங்கள் நடுங்கிட அணிந்தவர் அரவமாலை... நீலகண்டனை... மங்கை சிவகாமி மணாளனை... காமனைக் கண்ணால் எரித்த மகேசனை... கமகங்களில் உருக்கிக்கொண்டிருக்கிறார்)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails