அந்தக்காலத்தில் இராத்திரி
கிளம்பும் வெளியூர் பேருந்துகள் அதிகாலையில் மவுண்ட்ரோடை அடைத்துக்கொண்டு சென்னையின் பிரதான
சாலைகளில் வழியே ஓடி பாரீஸ் கார்னரில் ரெஸ்ட் எடுக்கும்.
மன்னையிலிருந்து சீட்டுக்கு நம்பர் போட்ட திருவள்ளுவரில் ஏறி தேனாம்பேட்டையில் இறங்கி ”இன்னாபா... மேலே ரெண்டு ரூவா போட்டு குடுப்பா” கைலியின் பீடி நாற்றத்துடன் பேசும் மொழியையும் வியந்துகொண்டே ”டர்ர்ர்ர்ர்ர்..ர்ர்..ர்ர்ர்”ரென்று பயணித்து எல்டாம்ஸ் ரோடு பாலசுப்ரமணியர் கோயில் வழியாக நுழைந்து ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் தாண்டி இஸபெல்லைக் கடந்து சான்ஸ்க்ரீட் காலேஜ் பிள்ளையாரையும் எதிரே அப்பர் ஸ்வாமியையும் தரிசித்துக்கொண்டு வலது ஒடித்து ஆவின் இறங்கிக்கொண்டிருக்கும் லஸ் சிக்னலுக்கு நேரே நுழைந்து “கையிலையே மயிலை மயிலையே கயிலை”யைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டால் நமது பட்டினப் பிரவேசம் பூர்த்தியாகிவிடும். அப்படியே இன்னும் கொஞ்ச தூரத்தில் இடது திரும்பி காய்கறிக்கடையில்லாத ஃபண்ட் ஆஃபீஸும் தினசரி கையோடு தினசரிகளை அளவளாவும் காளத்தி ஸ்டோர்ஸுக்கு முன்னால் ரைட் எடுத்து சித்திரக்குளத்தைத் தாண்டி வருவது கேஸவபெருமாள் கோயில்.
ஆட்டோ ”படபடபட”க்க வாசலில் நின்றவுடன் கலகலவென்று “வாடா...வாடா..வாடா....” என்று அழைத்து பல் தேய்த்தோமோ இல்லையோ கவலையில்லாமல் கையில் காஃபி டம்ப்ளரைத் திணித்துவிடுவாள். அத்தை. அண்ட்ராயர் வயசில் லீவுக்கு என்று ஊரை விட்டுக் கிளம்பினால் மெட்ராஸ்தான் டெஸ்டினேஷன். ஒரு வாரமோ ரெண்டு வாரமோ மெரீனா பீச், பட்டாணி சுண்டல், சுதந்திரமாக கைக் கோர்த்துத் திரியும் காதல்ஜோடிகள், கற்பகாம்பாள் உடனுறை கபாலி, குடையளவு அரிசி அப்பளாம் விற்கும் தீவுத் திடல், தேவி பாரடைஸில் ஒரு படம், லோக்கல் காமதேனுவில் ஒரு படம், பாரீஸ் கார்னர் அகர்வால் பவனில் SKC என்று ஊர் சுற்றிவிட்டு மன்னைக்கு ரிட்டர்ன். ”அடுத்த வருஷமும் கட்டாயம் வாடா” என்று வாஞ்சையாக கூறிவிட்டு பாரீஸ் கார்னர் மூ.நாற்ற பஸ்ஸ்டாண்டில் கமகமவென்று பாசம் மணக்க ஏற்றிவிடுவாள். அத்தை.
ஸ்கூல் டீமில் செலக்ட் ஆகிவிட்டு எட்டாவது வேகேஷன் ஹாலிடேவில் சென்னை வந்திருந்த போது BDM ஆயில் பேட் வாங்கிக்கொடுத்து “அத்த...உன்ன டீவியில பார்க்கணும்” என்று ஆசீர்வதித்தாள். ஊருக்கு வந்து ஹாண்டில் பக்கத்தில் தேங்காயெண்ணை ரெண்டு சொட்டு போட்டு ராத்திரி எறும்பு மொய்க்க வைத்துவிட்டு மறுநாள் ப்ராக்டீஸில் “லைட்டா க்ளான்ஸ் பண்ணினாலே பிச்சுக்கிட்டு ஃபோர் போகுதுடா.. சூப்பர் பேட்டு..” என்று சக கிரிக்கெட்டர்கள் சொல்லும்போது மெட்ராஸிலிருந்து “அத்த உன்ன டீவியில பார்க்கணும்” டயலாக் என் காதுக்கு மட்டும் ரகஸியமாகக் கேட்கும். அத்தை.
வயசாக வயசாக லீவுக்கு மெட்ராஸ் வருவது நின்று போனது. சொந்த ஊர் பொறுக்கவே நேரம் போதவில்லை. பந்துக்களின் திருமணம் காதுகுத்து சீமந்தம் கிரேக்கியம் என்று சுகதுக்க நாட்களில் மண்டபத்தின் கடைசி சேர்களில் அமர்ந்து கட்டிப் பிடித்துக்கொண்டு “எப்படிடா இருக்கே! பெரிய மனுஷா” என்று கடவாய்ப்பல் சொத்தை தெரியச் சிரிப்பாள். அத்தை.
”ஏசி எடுக்கவே மாட்டேங்கிறதுடா.. யார்ட்டயாவது சொல்லேன்”க்கு ஆள் அரேஞ் பண்ணி அனுப்பிவிட்டு “சரியாச்சுன்னா சொல்ல மாட்டியா?” என்று சண்டை போட ஃபோனை எடுத்தால் “Lalitha Athai calling.." என்று செல்பேசி சிணுங்கும். “சரியாயிடுத்துடா... இப்படியாவது அத்தைக்கிட்ட பேசிண்டிருக்கியே.” என்ற திருப்திப்பட்டுக் கொண்டாள். தீபாவளி, சங்கராந்தி போன்ற பண்டிகை நாட்களில் தம்பதியாய் போய் பார்த்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு வருவதற்குதான் சமீப காலங்களில் நேரமிருந்தது. அத்தை.
கேன்சர் என்று தெரிந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடிருப்பாள் என்று நம்பினோம். நேற்று மாலை திடீரென்று ஹிந்து மிஷனில் ஐஸியூவில் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது. ஓடினோம். ஆக்ஸிஜன் ஏறிக்கொண்டிருந்தது. தேகமெங்கும் ஒயர்கள். தலைக்கு மேல் மானிட்டரில் பல்ஸ் ரேட்ஸ் தாறுமாறாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வாய் கொஞ்சம் கோணி விலுக் விலுக்கென்று இழுத்துக்கொண்டிருந்தாலும் எனக்கு “உன்ன டீவியில பார்க்கணும்”தான் நினைவுக்கு வந்தது. சலைனுக்கு குத்தியிருந்த கையைத் தொட்டேன். ஜிலீர் என்றிருந்தது. உறைந்து போனேன். பிஸ்கெட் கேட்கும் வாண்டுகள் முட்டி மடக்கவியலாத வயதானவர்கள் என்று ஐசியூ வாசலில் உற்றார் உறவினர் கூட்டம். “இங்க கூட்டம் போடக்கூடாது” என்று மீசைக்கார செக்கியூரிட்டி எங்களை விரட்டி தனது கடமையைச் செய்தார்.
ஹிந்து மிஷன் வாசலில் கட்டிப் போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தனியாக அமர்ந்துகொண்டேன். இதுபோன்ற துக்க காலங்களில் பேசாமல் தனித்து அமர்வது மனசுக்கு நிம்மதியாக இருந்தது. டிவியில் ஏதோ பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. கண் டிவியில் நிலைகுத்தி இருந்தாலும் மனசுக்குள் அத்தை சிரிப்பது, தலையை ஆட்டியாட்டி பேசுவது, பருப்பு போட்டு சாதம் பிசைவது, மெரீனாவுக்கு கையைப் பிடித்து அழைத்துப்போவது, “காளத்தி ஸ்டோர்ஸ்ல ரோஸ் மில்க் குடிடா” என்று கையில் காசு திணிப்பது, கவரோடு பிடியெம் பேட் கொடுப்பது என்று அலை அலையாய் மனசுக்குள் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் ”டிவியில் உன்னைப் பார்க்கணும்” நியாபகம் வந்தது. ஒரு வருஷத்துக்கு முன் சத்தியம் டிவியில் காமாசோமாவென்று நாம் பேசியதை சொல்லியிருக்கலாமோ என்று இப்போது மனசு அடித்துக்கொண்டது.
திபுதிபுவென்று ராஜாதான் ஓடிவந்தான். “யே... அடங்கிடுத்து...” என்றான். ”ஃப்ரீஸர் பாக்ஸுக்கும் பாடியைக் கொண்டு போக ஆம்புலன்ஸுக்கும் சொல்லிடு” என்றான். துக்கம் தொண்டையை அடைக்க கேஷ் கவுண்டரில் விசாரித்தேன். “வாசல்கிட்ட சூபர்வைசர் இருப்பாரு. அங்க கேளுங்க சார்” என்று கம்ப்யூட்டர் தட்டப்போய்விட்டது ஷிஃப்ட் முடியும் தருவாயில் இருந்த அம்மாது. செக்யூரிட்டிகளின் பக்கத்தில் நெடிதுயர்ந்து சூப்பர்வைசர் இருந்தார். அட்ரெஸ் கொடுத்து எல்லாவற்றையும் முடித்தேன். திரும்பவும் ஐசியூவிற்கு செல்வதற்கு திரும்பும் போது செக்கியூரிட்டி கேபினிலிருந்து காற்றோடு கலந்து வந்து அது என் காதில் விழுந்தது. தேகமெங்கும் மயிர்க்கூச்சலெடுத்தது.
“அத்தைமடி மெத்தையடி.. ஆடிவிளையாடம்மா..... ஆடும்வரை ஆடிவிட்டு அல்லிவிழி மூடம்மா....”.
அத்தை கண் மூடிவிட்டாள்.