Showing posts with label இறைவி. Show all posts
Showing posts with label இறைவி. Show all posts

Thursday, June 1, 2017

இறைவி

இறைவி என்றொரு காவிய கொலைப் படம் பார்த்தேன். சாயங்காலம் விளக்கு வைக்கும் நேரத்தில் ஜெயா டிவி ஒளிபரப்பு. ”மது குடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்” என்ற எச்சரிக்கை வாசகத்தை ’வாட்டர்’மார்க்காக முக்கால் திரைப்படம் காட்டத் தகுதியான படம். வன்முறை ஏராளம். குடி கொலை இரண்டையும் சம பங்கில் கலந்து எடுக்கப்பட்ட சமூகத் திரைப்படம். ரஜினிகாந்த் படத்தின் சண்டைக் காட்சிகளில் குரூரம் இருக்காது. சந்துகளில் சைக்கிளில் துரத்தும் ஜாக்கிசான் படங்களைப் போல கிச்சுகிச்சு மூட்டுபவை. துரோகமும் அநியாயமும் ஆணுக்கு ஆண் நேருக்கு நேர் செய்யும் நேர்மையான துரோகம்!
சிலைகடத்தும் தொழில் நேர்த்தி கொண்டவனை ஜெயிலில் தள்ளி அவன் பெண்டாட்டியை அபகரிக்க நினைக்கும் கூட்டாளியொருவனின் துரோகத்தைக் காட்டியதும் எனக்கு எங்கோ பொறி தட்டியது. இது வாத்தியாரின் கதை போலவே இருக்கிறதே... ஆங்.. கடைசியில் பெயர் போடும் போது “Partially inspired by Sujatha's Jannal Malar" என்று ஸ்க்ரால் கடந்து போயிற்று. ஜன்னல் மலரில் அந்த கேரக்டருக்கு எந்தப் பூட்டையும் லாவகமாகத் திறக்கத் தெரியும். தைரியமாக ஜன்னல் மலரை உசாத்துணையாகப் போட்ட கார்த்திக் சுப்புராஜின் நேர்மையைப் பாராட்டலாம்.
கதையில் யாரையுமே உருப்படியாக வாழவிடாமல், படம் முடிந்ததும் ஒரு விரக்தி நமக்கு ஏற்படுவது இயக்குனரின் வெற்றியாக இருக்கலாம். அளவுக்கதிகமான போதையுடனும் குடும்ப அக்கறையில்லாத ஆம்பிளையுடனும் வாழ்க்கை நகர்த்தும் பெண்களின் நரக நாட்களைத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்குள் இப்படியொரு நடிப்பு ஜோதி அடங்கியிருந்தது கா.சு.வுக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. தலை திருப்பவிடாத நல்ல திரைக்கதை.
கொலை, கொள்ளை, குடி என்று சமுதாயத்தின் அவலமான பக்கங்களை அழகியலோடு வெளிச்சம் போட்டுக் காட்டுவது வளரும் தலைமுறைக்கு நல்லதல்ல என்று சொல்லி நிறைவு செய்கிறேன்.
பின் குறிப்பு: தாமதமாக இறைவியைப் பற்றிய சிறுகுறிப்பு வரைந்ததால் குலேபகாவலிக்கு நாளை விமர்சனம் எழுதுவேனா என்று என்னைக் குடையக்கூடாது. நன்றி! :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails